Thursday, October 06, 2005

வஹி: இறைச்செய்தியும்- அறிவியலும்-14

இரும்பைப் பொழியும் வானம்! -14


ஏ.கே.அப்துர் ரஹ்மான்

மானிட சமுதாயம் முதலாவதாகப் பயன்படுத்திய உலோகம் எது என்ற வினாவிற்கு 'தங்கம்' என்ற வியப்பிற்குரிய பதிலைத்தான் நாம் பெறுகிறோம். ஏனைய உலோகங்களைப் போன்று தங்கம் பிற உலோக தாதுக்களுடன் (Minerals) இணைந்து விடாமல் சுத்த நிலையில் கிடைப்பதால் அதைத் தாதுக்களிலிருந்து பிரித்தெடுப்பது எளிது. எனவே முதலாவதாக மானிடப் பயன்பாட்டிற்குள் தங்கம் குடியேறிவிட்டது.

இதற்கடுத்தபடியாக செம்பும், அதன் கூட்டுப் பொருளாகிய (Alloy) வெண்கலம் மற்றும் பித்தளை ஆகியவை மானிடப் பயன்பாட்டிற்கு வருகின்றன. இதற்கு அடுத்த படியாகத்தான் இரும்பை பயன்படுத்த மனிதன் கற்றுக் கொள்கிறான்.

திருமறை இறங்கிய கால கட்டத்தில் இரும்பின் பயன்பாடு மிகக் குறுகிய எல்லைக்குள் அடங்கியிருந்தது. வெட்டு வாட்கள், ஈட்டிகள், அம்புமுனைகள், போன்ற பண்டைக்கால மக்களின் படைக் கருவிகளும், வெட்டுக் கத்திகள், ஏர்முனைகள் போன்ற விரல்விட்டு எண்ணக் கூடிய விவசாயக் கருவிகள் போன்றவற்றுக்குமே இரும்பைப் பயன்படுத்த மனிதன் அறிந்திருந்தான்.

இப்படிப்பட்ட கால கட்டத்தில் இந்த உலகம் அடையப்போகும் இரும்பின் பயன்பாட்டைப் பற்றி வியக்கத்தக்கதோர் முன்னறிவிப்புடன் இறங்கி வருகிறது வான்மறை குர்ஆன். குர்ஆன் கூறுகிறது:

'இரும்பையும் நாமே இறக்கினோம். அதில் மனிதர்களுக்கு பெரும் பயன்பாடுகளும் மிக்க வலிமையும் உண்டு' (அல்-குர்ஆனின் 57வது அத்தியாயம் ஸூரத்துல் ஹதீத் 25வது வசனத்தின் ஒரு பகுதி).

ஒரு கட்டை வண்டியாவது இருந்திருந்தால் அதற்குச் சக்கரப் பட்டைகளும், இருசுகளும் செய்வதற்காவது இரும்பு பயன்பட்டிருக்கும். ஆனால் அன்றைய அரேபிய மக்களின் பொருட்களைச் சுமந்தது கழுதைகள், குதிரைகள், ஒட்டகங்கள் போன்ற விலங்குகளின் முதுகெலும்பாகும். கேவலம் ஒரு கட்டை வண்டிகூடக் காணக் கிடைக்காத கால கட்டத்தில் பிறந்து வளர்ந்த ஒரு மனிதரால் இன்றைய உலகம் அடைந்திருக்கும் இரும்பு எனும் உலோகத்தின் மாபெரும் பயன்பாட்டையும், அதனால் நாம் பெற்றிருக்கும் வியத்தகு பேராற்றலையும் கற்பனை செய்து பார்த்திருக்க முடியுமா?.

அன்றைய உலகமும், இன்றைய உலகமும் அடைந்திருக்கும் இரும்பின் பயன்பாட்டையும், வலிமையையும் ஒப்பிட்டுக்காட்ட மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் எனக் கூறப்படும் அலகெல்லாம் நமக்குப் போதவில்லை. இரண்டு கால கட்டங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு இதனினும் பெரிது!. அப்படியென்ன பெரிய பயன்பாடும் வலிமையும் இந்த அற்ப உலோகத்தால் நாம் அடைந்து விட்டோம் என்று எந்த நபராலும் வினா எழுப்ப இயலாத அளவிற்கு இந்த அற்ப உலோகம் அனைத்துப் பயன்பாடுகளிலும், வலிமைகளிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதாரப்பட்டு நிற்கிறது.

சான்றாக இக்கட்டுரையை டைப் செய்து கொண்டிருக்கும் கம்யூட்டரின் கீ போர்டு, அதனை பதிந்து கொண்டிருக்கும் ஹார்டு டிஸ்க், அது பதிவதற்கு துணையாக இருக்கும் கம்யூட்டர், அமர்ந்திருக்கும் ஆசனம் போன்ற எந்த ஒன்றுமே இரும்பின் உதவியின்றி தயாரிக்கப்படவில்லை. இக்கட்டுரையை டைப் செய்த பின் - அது 'அல்ஜன்னத்துக்குப் போய்ச் சேரும்வரை இதனோடு தொடர்புடைய அனைத்திலும் இரும்பு. இதைப் படிப்பதற்காக அமர்ந்திருக்கும் உங்களைச் சுற்றி நோட்டமிடுங்கள். அவைகளின் எந்த ஒன்றின் தயாரிப்பிலாவது இரும்பு நேரடி மூலப்பொருட்களாகவோ (Raw Mayerials) அல்லது அவைகளைத் தயாரிக்கும் கருவிகளாகவோ (Tools and Equipments or its Plants) பயன்படாமல் பெறப்பட்டுள்ளனவா?.

சமையல் கட்டுகளில் கூட மண்பாத்திரங்கள், மரப் பாத்திரங்கள், தோல் துருத்திகள் போன்றவை பயன்பட்டு வந்த காலத்தில் இறங்கிய அருளாளனின் வார்த்தைகளை நிரூபிக்கும் பொருட்டு இன்றைய நாட்களில் நமது சமையற்கட்டுகளை அலங்கரிக்கும் பொருட்கள்தாம் எத்தனை?. அடுப்பிலிருந்து குளிர்சாதனப் பெட்டிவரை அனைத்திலுமே இரும்பு குடியேறிவிடவில்லையா?.

கிணறு என்ற பெயரில் குழி தோண்டிக் கொண்டிருந்த (Wells with very shallow depth) கடப்பாரைகள் துளையிடும் இயந்திரங்களாக (Rigs) மாறியவுடன் பாறை துளைத்து, பாதாளம் கண்டு, எண்ணெய் பெற்று நாம் அடைந்திருக்கும் பயன்பாடும், வலிமையும்தான் எத்தனை? எத்தனை?.

ஏர்முனைக்கு பயன்பட்ட இரும்பு, டிராக்டர்களாகி, மண்வெட்டிகள் புல்டோஸர்களாகி, அணைக்கட்டுகளாகி, மின்சாரம் பெற்று நாம் அடைந்திருக்கும் பயன்பாடுகளும், வலிமைகளும் எவ்வளவு பிரம்மாண்டமானவை?.

ஒரு மிதிவண்டியைக் கூட பெற்றிருக்காத மனிதர்களைக் காட்டிலும், சூப்பர்சானிக் விமானங்களில் பறக்கும் நாம் வலிமை பெற்றவர்கள் அல்லவா?. ஒரு அச்சு இயந்திரத்தைக் கூட கற்பனை செய்யாதவர்களைக் காட்டிலும், கம்யூட்டர்களை கைப்பைகளில் கொண்டு செல்லும் நாம் எவ்வளவு பெரிய வலிமையைப் பெற்று விட்டோம்!. புறாவிடு தூதுகளை நடத்திக் கொண்டிருந்தவர்களைக் காட்டிலும், செயற்கைத் துணைக் கோள்களின் துணையுடன் இணையங்களையும் (Internet) இணையங்களின் துணையால் வலைமனைகளையும் (Web Sites) மின்னஞ்சல்களையும் (e-mail) பெற்றிருக்கும் நாம் அடைந்துவிட்ட பயன்பாடுகளையும் வலிமைகளையும் எண்ணித் தொலையக் கூடுமா?.

இப்பட்டியலை இத்துடன் நிறுத்தாவிட்டால் வார்த்தைப் பஞ்சமும், காகிதப் பஞ்சமும் ஏற்படும் அளவிற்கு இரும்பின் பயன்பாடும், அதனால் நாம் பெற்றிருக்கும் வலிமையும் பற்றிய செய்திகளை எழுத வேண்டியிருக்கும். எனவே பட்டியலிடும் வேலையை வாசகர்களிடம் விட்டு விடுவோம். சுருங்கக் கூறினால் தெருவோர சோதிடனின் கிளிக் கூண்டுகளிலிருந்து, பிரதமர்களின், அதிபர்களின் ரப்பர் ஸ்டாம்புகள் வரை பயன்பட்டிருப்பது இரும்பு. பட்டாக்கடை செருப்புத் தொழிலாளியின் எந்திரத்திலிருந்து, டாட்டாக்களின் தொழிற்சாலைகள் வரை அனைத்தும் இரும்பினால் வலிமை பெற்றவைகளே!.

படைக்களத்திலும், வயல்வெளிகளிலும் மட்டுமே பயன்படக் கூடிய வெறும் கைக்கருவியாக இரும்பு பயன்பட்டு வந்த காலத்தில் கற்பனைக் கண்களால் கூட கற்பிதம் செய்ய முடியாத அளவு இரும்பின் பயன்பாடுகளையும், வலிமைகளையும், முன்னறிவித்த தூய குர்ஆனுடைய வசனத்தை நிரூபிக்க வரலாற்றுப் பேருண்மைகள் அரங்கேறிக் கொண்டிருக்கையில் இதையெல்லாம் விழுங்கிவிடும் வகையில் இதனோடு போட்டியிட வருகின்றன அறிவியல் நிரூபணங்கள். அறிவியல் அன்பர்களே! அந்த அற்புத சாட்சியத்தின்பால் தங்களது கவனத்தை ஒரு கணம் திருப்புங்கள்!.

நாம் ஆய்விற்கெடுத்துக் கொண்ட அதியற்புத வசனத்தை மீண்டும் ஒருமுறை ஆழமாகக் கவனியுங்கள்! அது 'இரும்பையும் நாமே இறக்கினோம்' என்று கூறுகிறது.

வியப்புக்கு மேல் வியப்பை ஆழ்த்தும் வசனம் இது! மழையைப் பற்றிக் கூறப்படுகின்ற இடங்களில் எல்லாம் மழையை இறைவன் இறக்குவதாகக் கூறுகிறான். மழை மெய்யாகவே பூமிக்கு இறங்கி வரக் கூடிய ஒன்று என்பது அறிவியல் ஆய்வு தேவைப்படாத வகையில் அனைவராலும் பார்த்து அறியப்படுகிறது! ஆனால் இரும்பையும் அவனே இறக்கியதாக இந்த வசனத்தில் கூறுகிறான்! அப்படியானால் இரும்பையும் ஆகாயம் பொழிகிறதா?. அதென்ன இரும்பைப் பொழியும் வானமா?.

எங்கள் அதியற்புத இரட்சகனே! இன்னும் என்னென்ன அற்புதங்களையெல்லாம் உன்தூய வசனத்தை நிரூபிக்கும் வகையில் நீ நிகழ்த்திக் கொண்டிருக்கிறாய்?. இன்னும் என்னென்ன அற்புதங்களையெல்லாம் உன் திருவசனங்களில் நீ கொட்டி விதைத்திருக்கிறாய்?. எங்கள் செவிகளிலும், கண்களிலும், இதயக்கமலங்களிலும் மேலும் மேலும் உன் பேரொளியால் நிரப்புவாயாக!.

நவீன வானியல் வல்லுனர்களே! புவி இரசாயணவியலாளர்களே! எங்கிருக்கிறீர்கள் நீங்கள்?. இரும்பும் இறக்கப்பட்டதாக இப்பேரண்டத்தின் ஏகாதிபதியான அல்லாஹ்(ஜல்) கூறிய பிறகும் பல நூற்றாண்டுகளாக எந்த விஞ்ஞானியாலும் கூட இந்த அற்பப் பேருண்மையை கண்டுபிடிக்க முடியவில்லையே! நீங்கள்தாம் நவீன உலகின் விங்ஞானிகளாயிற்றே! உள்ளதை உள்ளபடி காட்டும் உங்கள் சோதனைக் கூடங்களில் குடுவைகளில் இத்தூய வசனத்தை நிரூபிப்பதற்குரிய சாட்சியாக நீங்கள் எதைக் கண்டீர்களோ அதனைப் பாரறியப் பறைசாற்றுங்கள்!.

இரும்பும் இறக்கப்பட்டதாகக் கூறிய இத்தூய வசனம் பொய்க்கலப்பற்ற அறிவியல் பேருண்மையே எனப் பறைசாற்றுகிறது நவீன விஞ்ஞான உலகின் புவி இரசாயணத்துறை (Geo Chemistry)! எப்படி என்ற வினாவிற்கு விளக்கமளிக்க சாட்சி கூண்டை நோக்கிப் பேருவகையோடு ஓடோடி வருகிறார் நமது பழைய நண்பர் 'விண்கல்' (Meteorite) அவர்கள்!.

நமது முன்னோர்கள் பயன்படுத்திய போர்க் கருவிகளைத் சோதனைச் சாலைகளில் பகுப்பாய்வு செய்து பார்த்த விஞ்ஞானிகள் ஒரு வியக்கத்தகு விஷயத்தைக் கண்ணுற்றார்கள். அதாவது அவர்கள் பயன்படுத்திய கருவிகளில் இரும்புடன் (Iron) நிக்கலும் (Nickel) கோபால்டும் (Gobalt) கலந்திருப்பதைக் கண்டார்கள். ஆனால் பூமியில் இயல்பாகக் கிடைக்கும் தாதுப் பொருட்களில் இரும்புடன் மேற்கண்ட உலோகங்கள் கலந்திருப்பதில்லை. பூமியில் கிடைக்காத இப்பொருள் நமது பண்டைக்கால மக்களுக்கு எப்படிக் கிடைத்தது? வேற்றுக் கிரகங்களுக்குச் சென்று கொள்முதல் செய்து வந்திருப்பார்களோ? அப்படியெல்லாம் இல்லை. அதற்குரிய விடை எனக்குள் இருக்கிறது எனக் கூறுகிறது நவீன விஞ்ஞான உலகின் விண்கல் அறிவியல் (Meteoric Astronomy).

விண்கற்களின் தோற்றத்தைச் சுருக்கமாகப் பார்ப்போம். ஆகாயத்திலுள்ள பருப்பொருட்கள் உருவாவதற்கு முன் ஆகாயமெங்கும் ஒரே தூசுப் படலத்தால் நிரம்பிய புகை மண்டலமாக இருந்தது. இப்புகை மண்டலத்தின் மிக மிகச் சிறிய துகள்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து சிறுகச் சிறுகப் பெரிதாகி விண்ணிலுள்ள நட்சத்திரங்கள் ஈறாக அனைத்துப் பருப் பொருட்களையும் உருவாக்கின. இந்த நிகழ்ச்சிப் போக்கு நடைபெற்று வரும்பொழுது சிறுகச், சிறுகப் பெரிதாகி கோலி (Pebble) அளவோடு நின்றுவிட்ட பொருட்களும் உண்டு. வேறு சில பொருட்கள் கையளவு பொருட்களாக, மேலும் சில பெரும் பெரும் பாறாங்கல், குன்றுகள், மலைகள் அளவிற்குப் பெரிதாகி விண்ணில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களும் உண்டு. இவைகளே விண்கற்கள் என்பது விஞ்ஞானிகளிடம் உள்ள கருதுகோள்.

ஒழுங்கான பாதையில் சுழன்று வரும் பெரும் பெரும் கோள்கள் வெடிப்பதாலும், மிகவும் சிக்கலான பாதைகளில் (Very Complicated Orbit) சுழன்றுவரும் குறுங்கோள்களின் மோதல்களிலிருந்தும் விண்கற்கள் உருவாகின்றன என்பது மற்றொரு கருதுகோள். வால் நட்சத்திரங்களின் சிதைவுகளிலிருந்து இவை உருவாகின்றன என்பது மேலும் ஒரு கருதுகோள். இம்மூன்று கருதுகோள்களுக்கும் ஆதாரங்கள் இருப்பதால் இம்மூன்று வழிமுறைகளிலும் அவை உருவாகி வருவதாக மற்றும் ஒரு கருதுகோள்.

இங்கு கூறப்பட்ட நான்கு கருதுகோள்களில் எது உண்மையாயினும் சரி, அல்லது இவையல்லாத ஐந்தாவது ஒன்றே கண்டு பிடிக்கப்பட்டாலும் சரி, விண்கற்களின் அனைத்து வகைகளையும் பூமி பெறுகிறது என்பது மட்டும் நிரூபிக்கப்பட்ட உண்மை.

ஒழுங்கான பாதையின்றி விண்ணில் சிதறி ஓடும் சிற்றுருவம் கொண்ட விண்கற்கள் 'பல்சேஷன் தியரிக்குக்' (Pulsation Theory) கட்டுப்படாமல் சூரியனை நோக்கிச் செல்வதால் அவை பூமிக்கு வருவதில்லை என முன்னர் கண்டோம். ஆனால் இம்மாதிரிச் சிற்றுருவம் கொண்ட பொருட்களும் பூகோளம் பெற வேண்டும் என்பதற்காக இதன் வடிவமைப்பில் வேறு ஒரு நிகழ்ச்சிப் போக்கு நடைபெற்று வருகிறது.

அதாவது கொட்டிய மூட்டையிலிருந்து சிதறி ஓடும் நெல்லிக்காய்களைப்போல விண்கற்களின் அருவிப் பிரவாகங்கள் மிக நீண்ட முட்டை வடிவ (Ellips) பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவைகளின் பெயர்ப் பட்டியலும், அவைகள் பூமியைத் தாக்கும் தேதிகளும் இத்துடன் இணைத்துள்ளோம்.

1. லயரிட்ஸ் Lyrids ஏப்ரல் 21
2. அக்வாரிட்ஸ் Aqarids மே 06
3. ட்ராகோனிட்ஸ் Draconids ஜூன் 06, அக்டோபர் 10.
4. பெர்ஸிட்ஸ் Perseids அக்டோபர் 10
5. ஒரியோனிட்ஸ் Orionids அக்டோபர் 18
6. டாரிட்ஸ் Taurids நவம்பர் 11
7. ஆன்ட்ரமெடிட்ஸ் Andromedits நவம்பர் 14


இவற்றில் மணற்துளியிலிருந்து, கோலி வரையிலான சிற்றுருவங்கள் அடங்கியுள்ளன. இந்த அருவிப் பிரவாகம் பல்லாயிரம் கி.மீ.பருமன் கொண்டவை. இவைகள் தங்களது பாதையிலிருந்து விலகி பூமியை நோக்கி வருவதில்லை. ஆனால் இந்த பூமி தானும் சூரியனைச் சுற்றி வரக்கூடிய கோளாக இருப்பதால் பூகோளத்தின் சூரிய வலம் இந்த விண்கற்களின் பாதையில் குறுக்கிடுகிறது. உடனே இந்த பூகோளம் ஒரு மாபெரும் கல்மாரியைப் பெறுகிறது. எனவே இக்கல்மாரியின் வாயிலாகச் சிற்றுருவம் கொண்ட விண் கற்களையும் பூகோளம் பெற்று விடுகிறது.

பேருருவம் கொண்ட விண் கற்கள் இப்போது பெருவாரியாக பூமியின் மீது விழும் நிலை இல்லையென்றாலும் சில மில்லியன் வருடங்களுக்கு முன்னால்வரை தொடர்ந்து பூமியில் விழுந்து கொண்டிருந்தன. எனவே விண்கற்கள் வாயிலாக இதுவரை எண்ணற்ற இரும்பு மழைகளை பூமி பெற்றுள்ளது.

இதற்கு சமீபத்திய உதாரணமாக 1947ஆம் வருடம் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி அன்று ரஷ்யாவின் சிக்கோத்தே அலின்ஸ்கில் (Sikote - Alinsk) விழுந்த கல்லை எடுத்துக் கொள்ளலாம். இக்கல்லும் இரும்பு வகையைச் சார்ந்த விண்கல்லேயாகும். (விண்கற்களில் மற்றொரு வகையும் உண்டு. அது இரும்புக்குப் பதில் சிலிக்கனை (Silicon) கொண்ட விண்கற்களாகும்.)

இக்கல் பூமியில் விழும்பொழுது ஏனைய விண்கற்களைப் போன்று காற்று மண்டலத்தில் மோதியவுடன் துண்டு துண்டாகச் சிதறி விடுகிறது. சிதறிய துண்டுகள் மீண்டும் காற்று மண்டலத்தில் ஊடுருவி வரும்பொழுது ஒரே ஒரு துண்டைத் தவிர ஏனைய யாவும் முற்றாக எரிந்து விடுகிறது. எஞ்சிய ஒரு துண்டு மட்டும் பூமியை நெருங்கி அதன் மிக வலிமைமிக்க மாறா வெப்ப நிலை மண்டலத்தில் (06வது கட்டுரையை பார்க்கவும்) மோதியதும் அத்துண்டு சிதறுண்டு பல துண்டுகளாக பூமியைத் தாக்கியது. இதனால் பூமியின் மீது 75 அடி விட்டம் கொண்ட 120 பள்ளங்களைத் (Craters) தோற்றுவித்தது.

இப்பள்ளங்களில் கவனமாகத் தேடியெடுத்ததில் கிடைத்த பொருட்களில் 4 சதவீதம் நிக்கலும், சிறிதளவு ஏனைய உலோகங்களும் எஞ்சிய பெரும்பகுதி இரும்பாகவும் இருந்தன. எனவே விண் கற்கள் வாயிலாக பூமிக்கு ஏராளமான இரும்பு இறக்கப்பட்டது. இப்போதும் இறக்கப்பட்டு வருகின்றது என்று கூறி நவீன வானவியல் மற்றும் புவி இரசாயணத் துறையைச் சார்ந்த அறிவியல் பேருண்மைகள் தூய குர்ஆன் மிக மிக நிச்சயமாக மானிட சக்திக்கு அப்பாற்பட்ட வேதமே என நிரூபித்து நிற்கின்றன.

நவீன விஞ்ஞான உலகின் அறிவியல் அன்பர்களே! கட்புலனுக்கு அப்பாற்பட்ட எந்த விஷயத்தையும் நம்ப வேண்டுமாயின் அதற்கு அறிவியல் ஆதாரம் உண்டா எனப் பகுத்தறியும் பண்புடைய அறிவுசால் ஆன்றோர்களே! நாம் சிந்திக்க வேண்டாமா? நவீன விஞ்ஞான யுகத்தின் ஆய்வகச் சோதனைக் குடுவைகளில் மட்டுமே கருவுற்ற புவி இரசாயணத்தின் இரகசியங்களெல்லாம் தொன்மை மிக்க 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த படிப்பறிவில்லா பாலைவன வாசிகளின் வாயிலிருந்து ஜனனமெடுத்திருக்க முடியுமா?.

கருவுறும் முன்னே பிறப்பது சாத்தியமா?

சாத்தியம் எனக் கூறக் கூடிய எந்த நபரும் கீழ்ப்பாக்கத்தில் குடியிருக்க வேண்டியவர்களல்லவா?.

கருவுறும் முன்பே பிறக்கவில்லை என்றிருந்தும் கூட நவீன புவி இரசாயணம் கருவுறும் முன்னே அதன் இரகசியங்கள் திருமறைக் குர்ஆனில் பிறப்பெடுத்தது எப்படி?. இதற்கு மேலும் இத்தூய மறையை மானிட சக்திக்குட்பட்டது எனக் கூறுவது அறிவியலையும், அறிவியலாளர்களையும் இழித்துரைக்கும் செயலாகும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டாமா?. சிந்திக்க வேண்டாமா நண்பர்களே! நீங்கள்?.

---------------------------
வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் முந்தைய பகுதிகள்.

பேரண்டப் படைப்பின் துவக்கம் -1

வாழத் தகுந்த கோள்-2

ஓசோன் -3

விண்ணகத்தின் பரப்பெல்லை -4

பேரண்டத்தின் ஈர்ப்பு விசை -5

விண்ணடுக்குகள் -6

உருண்ட பூமி -7

சுழலும் பூமி(1) -8

சுழலும் பூமி(2) -9

சுழலும் பூமி(3) -10

சுழலும் பூமி(4) -11

சுழற்றும் பூமி -12

ஈர்ககும் பூமி -13

No comments: