Monday, October 31, 2005

ரமளான், தீபாவளி வாழ்த்துக்கள்!

ரமளானை வாழ்த்தி வழியனுப்புவோம்.


நோன்பு, ஹஜ் இரு பெருநாட்கள்.


நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், புரைதா (ரலி) நூல்கள்- திர்மிதி, தாரகுத்னீ.

நபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் ஒற்றைப்படையாக பேரீத்தப்பழத்தை உண்ணுவார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத்.

தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறான வழியை நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்- அபூதாவூத்.

நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளை (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்கு சென்று தொழுவார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளையும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். (அன்றைய தினம்) முதலில் தொழுகையைத் துவங்குவார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஸயீத் (ரலி) நூல்- புகாரி.

இன்றைய தினம் நாம் முதலில் தொழுகையை துவங்குவோம் பின்னர் அறுத்துப்பலியிடுவோம் இவ்வாறு செய்பவர் நபிவழியில் இருப்பவராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், பரா (ரலி) நூல்- புகாரி.

இரு பெருநாள் தொழுகைகளை நபி(ஸல்) அவர்களுடன் பல முறை தொழுதிருக்கிறேன் அவற்றில் பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை. அறிவிக்கும் நபித்தோழர், ஜாபிர் பின் சமூரா(ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், திர்மிதி.

நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை தொழுதால் அதற்கு முன்னும் பின்னும் எந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்- புகாரி.

நபி (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 7 தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 5 தக்பீர்களும் கூறுவார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்- அபூதாவூத்.

நபி (ஸல்) ஏழு - ஐந்து என்று பெருநாள் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் தக்பீர் சொல்வார்கள் அதன் முன்னும் பின்னும் எதையும் தொழ மாட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல்- அஹ்மத்.

இரண்டு பெருநாள்களிலும் ஜூம்ஆவிலும் நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா...' என்ற (87வது) அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் 'ஹல் அதாக்க ஹதீஸூல் காஷியா..' என்ற (88வது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள். அறிவிக்கும் நபித்தோழர், நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்கள்- முஸ்லிம், திர்மிதி.

இரு பெருநாள் தொழுகைகளில் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' என்ற (50வது) அத்தியாயத்தையும் 'இக்தரபதிஸ்ஸாஅத்' என்ற (54வது) அத்தியாயத்தையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள். அறிவிக்கும் நபித்தோழர், உமர் (ரலி) நூல்- திர்மிதி.

நபி(ஸல்) அவர்களும் அபூபக்கர் - உமர் போன்ற நபித் தோழர்களும் (மக்களுக்கு) பிரச்சாரம் செய்யும் முன்பு பெருநாள் தொழுகைகளைத் தொழுவார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ.

உரை நிகழ்த்துவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்தவாறு அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறும் அவனுக்கு கட்டுப்படுமாறும் கட்டளையிட்டார்கள். தர்மத்தை வலியுறுத்திப் பேசினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஜாபிர் (ரலி) நூல்- முஸ்லிம்.

புஆஸ் (எனும் போர்) பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை இரண்டு சிறுமிகள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர்(ரலி) அவர்கள் இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா... என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அபூபக்கரே! அந்த சிருமிகளை விட்டுவிடும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாட்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும் என்றார்கள் இது பெருநாள் தினத்தில் நடந்தது. அறிவிக்கும் அன்னை, ஆய்ஷா (ரலி) நூல்- புகாரி.

தப்ஸ் அடித்து பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர்(ரலி) அதட்டினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அந்த சிறுமிகள் பாடுவதை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குரிய தினமாகும் என்றார்கள். அறிவிக்கும் அன்னை, ஆய்ஷா (ரலி) நூல்- புகாரி.

அனைத்து சகோதரர்களுக்கும் என் மனம் நிறைந்த நோன்புப் பெருநாள், மற்றும் தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!

அன்புடன்,
அபூ முஹை

Wednesday, October 19, 2005

பெருநாள் தர்மம் - பித்ரு ஸகாத்.

பெருநாள் தர்மமும் அதன் நோக்கமும்.

பித்ரு ஸகாத் நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதனால் ஏற்படும் பாவத்தைத் தூய்மைப் படுத்துவதாகவும், ஏழைகளுக்கு உணவுக்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது, யார் அதனை தொழுகைக்கு முன்பே கொடுத்து விடுகிறாரோ அதுதான் ஒப்புக் கொள்ளப்பட்டப் பெருநாள் தர்மமாகும் யார் பெருநாள் தொழுகைக்குப்பின் அதனை வழங்குகிறாரோ அது (பெருநாள் தர்மமாகாது மாறாக அது சாதாரண) தர்மமேயாகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்- அபூதாவூத், இப்னுமாஜா, தாரகுத்னீ. ஹாகீம்.

பித்ரு ஸகாத் என்பது நோன்பு வைத்திருக்கும்போது நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளின் (அன்றைய) உணவுக்கு வழியாக இருப்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்- அபூதாவூத், இப்னுமாஜா, தாரகுத்னீ, பைஹகீ.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி ''இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்'' என்றும் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்-பைஹகீ, தாரகுத்னீ.

பெருநாள் தர்மம் எப்போது வழங்க வேண்டும்..?

பித்ரு ஸகாத்தை பெருநாள் தொழுகைக்கு மக்கள் புறப்படுமுன்பே வழங்கிவிட வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்-புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவுத், திர்மிதீ.

நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஒருநாள் முன்பாக அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாக இத்தர்மத்தை வழங்குபவர்களாக இருந்தனர். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்- புகாரி.

பெருநாள் தர்மத்தின் அளவு எவ்வளவு..?

முஸ்லிமான ஆண்கள் பெண்கள், பெரியவர் சிறியவர், அடிமை சுதந்திரமானவர் ஆகிய அனைவருக்கும் பேரீத்தம்பழம் அல்லது கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தர்மம் தலா ஒரு 'ஸாவு' என்று நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தனர். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவுத், திர்மிதீ, இப்னுமாஜா.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் உணவுப் பொருட்களில் ஒரு ஸாவு பித்ருத் தர்மம் வழங்குவோம் அன்றையதினம் எங்களின் உணவாக கோதுமையும் உலர்ந்த திராட்சையும் இருந்தது. அறிவிக்கும் நபித்தோழர், அபூஸயீத் (ரலி) நூல்- புகாரி.

அனஸ் (ரலி) என்ற நபித்தோழரிடம் ஒருவர் ஸாவு (அளவைப்) பற்றிக் கேட்டபோது இந்த அளவையே கூறினார்கள், கேள்வி கேட்டவர் நீங்கள் அபூ ஹனீஃபா எனும் பெரியாருக்கு மாற்றமாகச் சொல்கிறீர்களே, என்று கேட்டார் இதைக்கேட்ட அனஸ் (ரலி) அவர்கள் கடும் கோபம் கொண்டு பல நபித்தோழர்களிடம் இருந்த 'ஸாவு' என்னும் அளவைக் கொண்டுவரச் செய்து அதை மக்களிடம் காட்டி 'இதில்தான் நாங்கள் அளந்து பெருநாள் தர்மம் செய்வோம்' என்று கூறினார்கள் அவர்கள் காட்டிய 'ஸாவு' என்பது அவர்கள் கூறிய அளவைக் கொண்டதாகவே இருந்தது. நூல்கள்- தாரகுத்னீ, பைஹகீ.

(இருகைகளையும் சேர்த்து ஒரு பொருளிலிருந்து நான்குமுறை அள்ளி அளந்து போடுவதே ஒரு 'ஸாவு' என்பதன் அளவாகும்)

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கோதுமை - பேரீத்தப்பழங்கள் பெருநாள் தர்மமாக கொடுக்கப்பட்டதால் நாமும் அதையே கொடுக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இன்றைக்கு நம்முடைய உணவு முறை எதுவாக இருக்கிறதோ அதைத்தான் உணவாக கொடுக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அவர்களின் உணவுப் பொருள்கள் எதுவோ அதுவே பெருநாள் தர்மமாக வழங்கப்பட்டது நாம் மேலே எடுத்துக்காட்டியுள்ள அபூ ஸயீத் (ரலி) அவர்களின் செய்தியிலிருந்து இதை விளங்கலாம்.

இன்றைக்கு நமது உணவு முறையில் அரிசியே பெரும்பங்கு வகிப்பதால் நாம் அரிசியை ஒரு ஸாவு தர்மமாக வழங்கலாம். இதர உணவுப் பொருள்களுக்கும் இதுதான் பொருந்தும். உணவுப் பொருளாக இல்லாமல் பணமாக கொடுக்கலாமா.. என்றால் அவ்வாறு கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என்றே தோன்றுகிறது.

அலட்சியமின்றி அனைவரும் பெருநாள் தர்மத்ததை செய்பவர்களாக ஆக வேண்டும்.

Tuesday, October 11, 2005

இஸ்லாம் வழங்கும் இறைத்தூது -1

(இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கிய கோட்பாடுகளில் ஒன்று இறைத்தூதர்களை ஏற்று அவர்கள் வாழ்ந்த வழியில் நாமும் வாழ்வதாகும். இஸ்லாம் அல்லாத இதர மதங்களில் இறைவன் புறத்திலிருந்து செய்திகளை கொண்டு வரும் இறைத்தூதர்கள் பற்றிய உண்மை நிலைகள் கண்டறியப்படவே இல்லை. ஆனால் இஸ்லாம் தனது கொள்கையின் அஸ்திவாரங்களில் ஒன்றாக இறைத்தூதர்களையும் அவர்களை அறிந்து கொள்வதின் அறிவு நிலையையும் ஆக்கியுள்ளது. அந்த தூதுத்துவத்தின் நிலைப்பாடு என்ன? அது உலகில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன? அதை ஏற்காமல் போனால் ஏற்படும் விளைவுகள் என்ன? இறுதித் தூதராக வந்த முஹம்மத் அவர்களின் பணியின் எல்லைகள் என்ன? இது போன்ற வினாக்களுக்கு அறிவார்ந்த - தர்க்க ரீதியாக விளக்கமளிக்கிறது இந்தக் கட்டுரை. மறைந்த நல்லறிஞர் அபுல் அஃலா அவர்களின் இக்கட்டுரையின் வழியாக உங்கள் அறிவுக்கு தூது விடுவதில் மகிழ்கிறோம்.)

அனைவரும் அறிவுறுத்திய ஒரே நெறி.

(1) துவக்கத்திலேயே ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்தி விடுவது அவசியமெனக் கருதுகிறேன். அதாவது மனித வரலாற்றில் முதன் முறையாக முஹம்மது (ஸல்) அவர்களால் வழங்கப் பட்ட வாழ்க்கை நெறி (தீன்) இஸ்லாம் என்பதும் இக்கருத்தின் அடிப்படையில் அவர்கள்தாம் இஸ்லாத்தை நிர்மானித்தார் என்று கூறுவதும் சரியான கருத்தாகாது.

இறைவனுக்கு மனிதன் முழுமையாக அடிபணிதல் எனும் ஒரே நெறியினைத்தான் தொடக்க காலத்திலிருந்து மனித இனத்துக்கு இறைவன் தொடர்ந்து முறையாக வழங்கினான் என்ற உண்மையை இறைமறை தெளிவாகவும் விரிவாகவும் வலியுறுத்திக் கூறுகிறது இந்நெறியினையே அரபி மொழியில் இஸ்லாம் எனக்கூறப்படுகிறது நூஹ் (அலை) இப்றாஹீம் (அலை) மூஸா (அலை) ஈஸா (அலை) ஆகியோரும் இன்னும் பல இறைத்தூதர்களும் பல்வேறு காலங்களில் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப் பட்டார்கள்!

அவர்கள் எல்லோரும் எடுத்துரைத்தது அந்த ஒரே நெறியினைத்தான் அதை விடுத்து வேறு எந்த நெறியினையும் அவர்களில் எவரும் சுயமாக வழங்கியதில்லை. எனவே அத்தூதர்கள்தாம் அந்நெறியினை வழங்கியவர்கள் எனக் கருதுவதும் அக்கொள்கைக்கு கிறிஸ்தவம் மோஸஸ்த்துவம் எனப்பெயரிடுவதும் சரியானதல்ல. அவர்கள் ஒவ்வொருவரும் தமக்கு முன் வந்த இறைத்தூதர்கள் வழங்கிய நெறியினை தம்முடைய காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு தெளிவுபடுத்திப் போதிக்க வந்தவர்கள்தாம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பம்சங்கள்.

(2) அவ்வாறிருந்தும் ஏனைய நபிமார்களை விட முஹம்மது(ஸல்)அவர்களின் பணியில் பல சிறப்பம்சங்களை காணலாம் அவை பின்வருமாறு:

(அ) அவர்கள் இறைவனின் இறுதித்தூதர் ஆவார்கள்.

(ஆ) எல்லா இறைத்தூதர்களும் அறிவுறுத்திய அதே நெறியைத்தான் பெருமானார்(ஸல்) அவர்களின் மூலமாக இறைவன் மீண்டும் புதுப்பித்தான்.

(இ) பல்வேறு காலங்களிலும் வாழ்ந்த மக்கள் இடைச்செருகல் செய்தும் சுயக்கருத்துக்களைப் புகுத்தியும் மூலக்கொள்கையில் கறைபடுத்தி விட்டனர் இதனால் அது பல்வேறு மதங்களாக உருவெடுத்தது. மூல நெறியான இஸ்லாத்தைக் கறைபடுத்திய இந்த பிற்சேர்க்கைகள் யாவற்றையும் களைந்து அதனைத் தூய்மையான மூலவடிவில் மனித குலத்துக்கு வழங்க இறைவன் முஹம்மது(ஸல்) அவர்களை அனுப்பினான்.

(ஈ) முஹம்மது(ஸல்) அவர்களுக்குப் பின்பு எந்த நபியும் அனுப்பப் படமாட்டார்கள் என்பதால் அவர்களுக்கு வழங்கப் பட்ட இறைவேதம் எல்லாக் காலத்திற்கும் நின்று வழிகாட்டும் வண்ணம் வார்த்தைக்கு வார்த்தை அதன் மூலமொழியில் பாதுகாக்கப் பட்டுள்ளது. எக்காலத்திலும் மனிதன் அதன் மூலம் அறிவுறை பெறலாம். முஹம்மது(ஸல்) அவர்கள் மூலம் இறைவன் அளித்த அல்குர்ஆன் அன்று முதல் இன்று வரை எவ்வித்ததிலும் ஓர் எழுத்துக்கூட மாற்றமின்றி அப்படியே இருக்கின்றது எனும் உண்மையில் சந்தேகத்துக்கு அறவே இடமில்லை.

குர்ஆன் வசனங்கள்(வஹியாக) அறிவிக்கப் பட்டவுடன் நபி(ஸல்) அவர்கள் அதை எழுத வைத்து விடுவார்கள். இப்பணி அவர்களுடைய இறுதிமூச்சுவரை நீடித்தது. இவ்வாறு நபி(ஸல்) அவர்களின் வாழ் நாளிலேயே தோழர்களில் சிலர் குர்ஆன் முழுவதையுமோ அதன் பகுதியையோ எழுதி வைத்திருந்தார்கள். பிறகு முதல் கலீஃபாவான அபூபக்கர்(ரலி) அவர்கள் எழுதி வைக்கப்பட்டிருந்த அச்சுவடிகளை சேகரித்து குர்ஆனை மனனம் செய்திருந்த ஹாபிஸ்களின் உதவியுடன் அவற்றை சரிபார்த்து ஆதாரப்பூர்வமான முழுக் குர்ஆனையும் தொகுக்கச் செய்தார்கள்; பிறகு மூன்றாம் கேந்திரங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அன்று முதல் இன்றுவரையுள்ள பதிப்புகளை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் அச்சடிக்கப்பட்ட குர்ஆன் பிரதிகளை ஆராய்ந்தால் அவற்றின் எந்தவொரு பிரதியிலும் எவ்வித மாற்றமும் இல்லாதிருப்பதைக் காணலாம்.

இதைத் தவிர பெருமானார்(ஸல்) அவர்கள், தொழுகைக் கடமையாக்கப்பட்ட நாளன்றே தொழுகையில் குர்ஆன் வசனங்களை ஓதவேண்டும் எனும் உத்தரவைப் பிறப்பித்து விட்டிருந்தார்கள். ஆகவே நபித்தோழர் பலர் முழுக் குர்ஆனையோ அதன் சில பகுதிகளையோ நபி(ஸல்) அவர்கள் வாழ்நாளிலேயே மனனம் செய்திருந்தனர்;. எனவே அக்காலம் முதல் இன்று வரை ரமளான் மாத இரவுத்தொழுகையில் முழுக் குர்ஆனையும் மனனம் செய்து ஓதும் பழக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது.

அகவே வார்த்தைக்கு வார்த்தை குர்ஆன் முழுமையையும் மனனம் செய்திருந்தோர் (ஹபிஸ்கள்) ஆயிரக்கணக்கில் ஒவ்வொரு காலத்திலும் இருந்து வருகின்றனர். இவ்வாறு வேறு எந்த வேதமும் ஏடுகளில் பொறிக்கப்பட்டும். உள்ளங்களில் பதிக்கப்பட்டும். இருக்கவில்லை எனவே குர்ஆன் சிறிதளவும் மாற்றப்படாமல் அதன் அசல் வடிவத்தில் இன்றளவும் பாதுகாக்கப்படடிருக்கிது. என்பதில் இம்மியளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

(உ) மேலும் நபி(ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லும் செயலும் அவர்களுடைய தோழர்களாலும் அவர்களுக்குப் பின்னால் வரலாற்று ஆசிரியர்களாலும் நிகரற்ற முறையில் பதியப்பட்டு பாதுகாக்கப்பட்டன இவ்வளவு நுணுக்கமாக வேறு எந்த ஒரு நபியின் சரிதமோ ஒரு சரித்திர நாயகரின் வரலாறோ யாராலும் பதிக்கப் படவில்லை;. நபி(ஸல்) அவர்களின் காலத்திற்குப்பின் இது நபி(ஸல்) அவர்களின் சொல் அல்லது செயல் அல்லது அங்கீகாரம் என்று ஒருவர் கூறினால் அதனை அவர் எவரிடமிருந்து கேட்டறிந்தார் என்ற விபரத்தைக் கட்டாயமாக சொல்ல வேண்டியிருந்தது.

இவ்வாறே எந்த ஒரு சம்பவத்தை எடுத்துக் கொண்டாலும் இவ்விபரத் தொடர்ச்சி நபி(ஸல்) அவர்களிடம் நேரில் கண்டவர் அல்லது நேரில் கேட்டவர் வரை சென்று முடியும். பின்னர் அதனைக் கூறிய ஒவ்வொருவரின் உண்மை நிலை விரிவாக ஆராயப்படும். அவர் முழுமையான நம்பிக்கைக்கு உரியவர்தானா என்று தீர்மானிக்கப்படும். இத்தீர்மானத்தின் அடிப்படையில்தான் அது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் என்றே ஏற்றுக்கொள்ளப்படும். இம்முறையில் தான் நபி(ஸல்) அவர்களின் அறிவுறைகள் (ஹதீஸ்கள்) தொகுக்கப்பட்டன. அவற்றை அறிவித்தவர்களின் வரலாறும் எழுதப்பட்டன. இத்தகைய உன்னத முறையில் தயாரிக்கப்பட்ட நபி(ஸல்) அவர்களின் வரலாறுதான் நம்மிடையே உள்ளது. இத்தகைய ஆதாரப்பூர்வமான தொகுப்புகளிலிருந்து அண்ணல் நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள். அவர்களுடைய சொல் செயல் அங்கீகாரம் எப்படியிருந்தன என்பதனையும் அவர்கள் அளித்த அறிவுறைகள் எவையெவை என்பதனையும் நாம் இன்று தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

(ஊ) இவ்வாறு பாதுகாக்கப்பட்ட குர்ஆனும் நபி(ஸல்) அவர்களுடைய சொல் செயல் அங்கீகாரமும் ஒருங்கிணைந்த இணையாக்கம்தான் இறைவன் மனிதனுக்கு வகுத்துத் தந்த அசல் நெறியான இஸ்லாம் என்பது எது, அது நமக்கு எத்தகைய வழிகாட்டுதலை வழங்குகிறது, அது நம்மீது சுமத்துகின்ற கடமைகள் யாவை என்பனவற்றையெல்லாம் அறிந்து கொள்வதற்கு நம்பத்தக்க அறிவின் ஊற்றாய் அமைந்துள்ளது.

முஹம்மது நபி(ஸல்) அவர்களே வழிகாட்டி.

(3) முஸ்லிம்கள் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன் சென்று போன நபிமார்கள், அவர்கள் குர்ஆனில் குறிப்பிடப்பட்டவர்களாகயிருந்தாலும், குறிப்பிடப்படாதவர்களாகயிருந்தாலும் சரியே அவர்கள் அனைவரின் மீதும் நம்பிக்கை கொண்டேயாக வேண்டும். இது நமது நம்பிக்கையோடு (ஈமானோடு) பின்னிப் பிணைந்த ஓர் அம்சமாகும். இதனைக் கைவிட நேர்ந்தால் நாம் முஸ்லிம்கள் என்னும் தகுதியை இழந்தவர்களாவோம் ஆனால் வழி காட்டுதல் பெறுவதற்கு முஹம்மது(ஸல்) அவர்களை மட்டும் ஏன் பின்பற்றவேண்டும் என்பதற்குப் பின்வரும் காரணங்களே அடிப்படையாகும்:

(அ) அவர்கள் இறைவன் அனுப்பிய இறைத்தூதர்களுள் இறுதியாக வந்தமையால் இறைவனின் இறுதியான சட்டதிட்டங்களைக் கொண்டு வந்தார்கள்.

(ஆ) முஹம்மது(ஸல்) அவர்களின் மூலமாக நமக்கு எட்டிய இறைமொழி தூய்மையானதாகும் மனிதர்களால் கறைப்படுத்தப்படாமல் அதன் மூலவடிவில் அப்படியே பாதுகாக்கப்பட்டதுமாகும். மேலும் அது உயிருள்ள வாழும் மொழியாகும். கோடிக்கணக்கான மக்கள் பேசி, எழுதி புரிந்து கொள்ளும் மொழியாகும். அதன் இலக்கணமும் சொல் வளமும் மரபமைப்பும் உச்சரிப்பும் எழுத்துவடிவமும் அது வெளிப்பட்ட நாளிலிருந்து இதுநாள்வரை எவ்வித மாற்றத்திற்கும் உள்ளாகவில்லை.

(இ) நான் முன்பே குறிப்பிட்டபடி முஹம்மது(ஸல்) அவர்களின் குணம் நடத்தை வாக்கு செயல் ஆகிய வாழ்வின் அனைத்து அம்சங்களும் முழுமையான வரலாறாக பதிவு செய்யப்பட்டு அதிகக் கவனுத்துடனும் சிறப்பான முறையிலும் பாதுகாக்கப்பட்டுள்ளன.

மேற்சொன்ன அம்சங்களை ஏனைய நபிமார்களின் வரலாற்றில் காண முடியாது எனவேதான் நாம் அவர்களின் மீது நம்பிக்கை வைக்கிறோம் ஆனால் செயல் ரீதியாக பின்பற்ற முடிவதில்லை.

(வளரும்)

Friday, October 07, 2005

நோன்பின் நோக்கமும், சிறப்பும்.

நோன்பின் நோக்கம்.

பசி எப்படிப்பட்டது என்பது உணரப்படுகிறது, உடலின் ஆரோக்கியம் பேணப்படுகிறது என்றெல்லாம் காரணங்கள் கூறினாலும் நோன்பினால் இந்தப் பயன்கள் இருக்கலாம். இந்தப் பயன்களைக் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நோன்பு நோற்க வேண்டுமா? நிச்சயமாக இல்லை. நாம் பக்குவப்படுவதும், இறையச்சமுடையவராக ஆவதும்தான் நோன்பின் பிரதான நோக்கம். திருக்குர்ஆன் 2:183வது வசனம் இதனைத் தெளிவுப்படுத்துகிறது.

''பொய் சொல்வதையும், பொய்யான அடிப்படையில் செயல் படுவதையும் எவர் விடவில்லையோ அவர் தனது உணவையும் பானத்தையும் விட்டிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை,'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜா.

தவறான நடவடிக்கைகளிலிருந்து விடுபடாமல், பட்டினிக் கிடப்பதோ, தாகித்திருப்பதோ இறைவனுக்குத் தேவையில்லை. என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கலாம்.

நோன்பின் சிறப்பு!

நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து எவர் ரமளானில் நோன்பு வைக்கிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்: புகாரி முஸ்லிம் திர்மிதி.

ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழு நூறு மடங்குவரை கூலி கொடுக்கப்படுகின்றது. ''நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்'' என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும் நோன்பாளியின் வாய் நாற்றம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்: திர்மிதி.

சுவர்க்கத்தில் ரய்யான் என்றொரு வாசல் உள்ளது, அவ்வழியாக நோன்பாளிகள் (மட்டுமே) அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஸஹ்ல் பின் ஸாஃது (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

''நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்: திர்மிதி.

இரத்தம் குத்தி எடுத்தல்.

ஆரம்பத்தில் ஜாஃபர் பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது அவரைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் இரத்தம் கொடுத்தவரும், எடுத்தவரும் நோன்பை விட்டு விட்டனர் என்றார்கள். பிறகு நோன்பாளி இரத்தம் கொடுப்பதற்கு அனுமதியளித்தார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் (ரலி) நூல்: தாரகுத்னீ.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பாளி இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுப்பவர்களாக இருந்தீர்களா? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ''பலவீனம் ஏற்படும் என்பதனாலேயே அதனை வெறுத்தோம்.'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர், ஸாபித் அல் புன்னாணி நூல்: புகாரி.

(மருத்துவ சோதனைக்காக நோன்பாளி இரத்தம் கொடுத்தால் நோன்பு முறியாது என்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்)

கடமையல்லாத - சுன்னத்தான நோன்புகள்.

ஷவ்வால் மாதத்தில் நோன்பு.

யார் ரமளான் மாதத்தில் நோன்பிற்கு பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை வைக்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூ அய்யூப் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

ஹஜ் மாதத்தில் அரஃபா நோன்பு (ஹாஜிகள் அல்லாதவருக்கு)

அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் ''அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கும் என நான் ஆதரவு வைக்கிறேன் என்று கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை.

அரஃபா தினத்தன்று, அரஃபா மைதானத்தில் (கூடியிருப்போர்) நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹுரைரா (ரலி) அபூதாவூத், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா.

முஹர்ரம் மாத நோன்பு

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக ஆஷுரா நாளின் முந்திய (ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும் நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்.

மாதத்தில் மூன்று நோன்புகள்.

மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும், ரமளானில் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோன்பு நோற்பதாக அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்.

''நீர் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்றால் அதை பதிமூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நாட்களில் நோற்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூதர் (ரலி) நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்.

மாதத்தில் மூன்று நோன்புகள் நோற்கும் மற்றொரு நபிவழி.

நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தனர். அறிவிக்கும் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா.

ஒவ்வொரு வியாழனும், திங்களும் அமல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும் போது என் அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹீரைரா (ரலி) நூல்கள்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா.

நபி (ஸல்) அவர்கள் மாதத்தில் மூன்று நோன்புகளை மாதத்தின் ஆரம்பவார திங்கட்கிழமை, அடுத்து வரக்கூடிய வாரம் வியாழக்கிழமை, அதற்கு அடுத்து வரக்கூடிய வியாழக்கிழமை என்று நோற்பார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: நஸயீ.

வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கலாமா?

நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம் வெள்ளிக்கிழமை நோன்பை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்களா? என்று வினவினேன் அதற்கு ''ஆம்'' என்றார்கள். அறிவிப்பாளர், முஹம்மது பின் அப்பாத் நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

''உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமைக்கு முந்திய பிந்திய நாள் நோன்பு நோற்றாலன்றி வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹுரைரா (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா.

சனிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கக்கூடாது.

உங்கள் மீது கடமையாக்கப்பட்டு இருந்தாலே தவிர சனிக்கிழமை நோன்பு நோற்க வேண்டாம், (சனிக்கிழமைகளில் உண்பதற்கு) திராட்சைத்தொலி அல்லது மரக்குச்சியைத் தவிர வேறு ஏதும் கிடைக்காவிட்டால் அதையாவதுமென்று விடட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ளும்மாயி பின்த் புஸ்ர்(ரலி) திர்மிதி, அபூதாவூத்

இரு பெருநாட்களில் நோன்பு இல்லை.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பதை தடை விதித்துள்ளார்கள் அவை ஃபித்ரு பெருநாள் மற்றும் குர்பானி பெருநாள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஸயீதில் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

அய்யாமுத் தஷ்ரீக் (ஹஜ் பெருநாள் அடுத்த மூன்று) நாட்களும் உண்பதற்கும், பருகுவற்கும் உரிய நாட்களாகும். அந்நாட்களில் நோன்பு ஏதும் இல்லை என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

தொடர் நோன்பு கூடாது.

''நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ''நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே? என்று நபித்தோழர்கள் கேட்டனர் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''நான் (எல்லா விஷயத்திலும்) உங்களைப் போன்றவனல்லன் நிச்சயமாக நான் உண்ணவும், பருகவும் வழங்கப்படுகிறேன் என்றோ உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவு பொழுதை கழிக்கிறேன் என்றோ கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பீராக என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியபோது, இதைவிட எனக்கு அதிக சக்தியுள்ளது என்றேன். முடிவில் நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டு விடுவீராக அதுதான் நோன்புகளில் சிறந்ததாகும், என் சகோதரர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்கவே இல்லை. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

மேலும் அடுத்த பகுதியில்..

Thursday, October 06, 2005

வஹி: இறைச்செய்தியும்- அறிவியலும்-14

இரும்பைப் பொழியும் வானம்! -14


ஏ.கே.அப்துர் ரஹ்மான்

மானிட சமுதாயம் முதலாவதாகப் பயன்படுத்திய உலோகம் எது என்ற வினாவிற்கு 'தங்கம்' என்ற வியப்பிற்குரிய பதிலைத்தான் நாம் பெறுகிறோம். ஏனைய உலோகங்களைப் போன்று தங்கம் பிற உலோக தாதுக்களுடன் (Minerals) இணைந்து விடாமல் சுத்த நிலையில் கிடைப்பதால் அதைத் தாதுக்களிலிருந்து பிரித்தெடுப்பது எளிது. எனவே முதலாவதாக மானிடப் பயன்பாட்டிற்குள் தங்கம் குடியேறிவிட்டது.

இதற்கடுத்தபடியாக செம்பும், அதன் கூட்டுப் பொருளாகிய (Alloy) வெண்கலம் மற்றும் பித்தளை ஆகியவை மானிடப் பயன்பாட்டிற்கு வருகின்றன. இதற்கு அடுத்த படியாகத்தான் இரும்பை பயன்படுத்த மனிதன் கற்றுக் கொள்கிறான்.

திருமறை இறங்கிய கால கட்டத்தில் இரும்பின் பயன்பாடு மிகக் குறுகிய எல்லைக்குள் அடங்கியிருந்தது. வெட்டு வாட்கள், ஈட்டிகள், அம்புமுனைகள், போன்ற பண்டைக்கால மக்களின் படைக் கருவிகளும், வெட்டுக் கத்திகள், ஏர்முனைகள் போன்ற விரல்விட்டு எண்ணக் கூடிய விவசாயக் கருவிகள் போன்றவற்றுக்குமே இரும்பைப் பயன்படுத்த மனிதன் அறிந்திருந்தான்.

இப்படிப்பட்ட கால கட்டத்தில் இந்த உலகம் அடையப்போகும் இரும்பின் பயன்பாட்டைப் பற்றி வியக்கத்தக்கதோர் முன்னறிவிப்புடன் இறங்கி வருகிறது வான்மறை குர்ஆன். குர்ஆன் கூறுகிறது:

'இரும்பையும் நாமே இறக்கினோம். அதில் மனிதர்களுக்கு பெரும் பயன்பாடுகளும் மிக்க வலிமையும் உண்டு' (அல்-குர்ஆனின் 57வது அத்தியாயம் ஸூரத்துல் ஹதீத் 25வது வசனத்தின் ஒரு பகுதி).

ஒரு கட்டை வண்டியாவது இருந்திருந்தால் அதற்குச் சக்கரப் பட்டைகளும், இருசுகளும் செய்வதற்காவது இரும்பு பயன்பட்டிருக்கும். ஆனால் அன்றைய அரேபிய மக்களின் பொருட்களைச் சுமந்தது கழுதைகள், குதிரைகள், ஒட்டகங்கள் போன்ற விலங்குகளின் முதுகெலும்பாகும். கேவலம் ஒரு கட்டை வண்டிகூடக் காணக் கிடைக்காத கால கட்டத்தில் பிறந்து வளர்ந்த ஒரு மனிதரால் இன்றைய உலகம் அடைந்திருக்கும் இரும்பு எனும் உலோகத்தின் மாபெரும் பயன்பாட்டையும், அதனால் நாம் பெற்றிருக்கும் வியத்தகு பேராற்றலையும் கற்பனை செய்து பார்த்திருக்க முடியுமா?.

அன்றைய உலகமும், இன்றைய உலகமும் அடைந்திருக்கும் இரும்பின் பயன்பாட்டையும், வலிமையையும் ஒப்பிட்டுக்காட்ட மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் எனக் கூறப்படும் அலகெல்லாம் நமக்குப் போதவில்லை. இரண்டு கால கட்டங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு இதனினும் பெரிது!. அப்படியென்ன பெரிய பயன்பாடும் வலிமையும் இந்த அற்ப உலோகத்தால் நாம் அடைந்து விட்டோம் என்று எந்த நபராலும் வினா எழுப்ப இயலாத அளவிற்கு இந்த அற்ப உலோகம் அனைத்துப் பயன்பாடுகளிலும், வலிமைகளிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதாரப்பட்டு நிற்கிறது.

சான்றாக இக்கட்டுரையை டைப் செய்து கொண்டிருக்கும் கம்யூட்டரின் கீ போர்டு, அதனை பதிந்து கொண்டிருக்கும் ஹார்டு டிஸ்க், அது பதிவதற்கு துணையாக இருக்கும் கம்யூட்டர், அமர்ந்திருக்கும் ஆசனம் போன்ற எந்த ஒன்றுமே இரும்பின் உதவியின்றி தயாரிக்கப்படவில்லை. இக்கட்டுரையை டைப் செய்த பின் - அது 'அல்ஜன்னத்துக்குப் போய்ச் சேரும்வரை இதனோடு தொடர்புடைய அனைத்திலும் இரும்பு. இதைப் படிப்பதற்காக அமர்ந்திருக்கும் உங்களைச் சுற்றி நோட்டமிடுங்கள். அவைகளின் எந்த ஒன்றின் தயாரிப்பிலாவது இரும்பு நேரடி மூலப்பொருட்களாகவோ (Raw Mayerials) அல்லது அவைகளைத் தயாரிக்கும் கருவிகளாகவோ (Tools and Equipments or its Plants) பயன்படாமல் பெறப்பட்டுள்ளனவா?.

சமையல் கட்டுகளில் கூட மண்பாத்திரங்கள், மரப் பாத்திரங்கள், தோல் துருத்திகள் போன்றவை பயன்பட்டு வந்த காலத்தில் இறங்கிய அருளாளனின் வார்த்தைகளை நிரூபிக்கும் பொருட்டு இன்றைய நாட்களில் நமது சமையற்கட்டுகளை அலங்கரிக்கும் பொருட்கள்தாம் எத்தனை?. அடுப்பிலிருந்து குளிர்சாதனப் பெட்டிவரை அனைத்திலுமே இரும்பு குடியேறிவிடவில்லையா?.

கிணறு என்ற பெயரில் குழி தோண்டிக் கொண்டிருந்த (Wells with very shallow depth) கடப்பாரைகள் துளையிடும் இயந்திரங்களாக (Rigs) மாறியவுடன் பாறை துளைத்து, பாதாளம் கண்டு, எண்ணெய் பெற்று நாம் அடைந்திருக்கும் பயன்பாடும், வலிமையும்தான் எத்தனை? எத்தனை?.

ஏர்முனைக்கு பயன்பட்ட இரும்பு, டிராக்டர்களாகி, மண்வெட்டிகள் புல்டோஸர்களாகி, அணைக்கட்டுகளாகி, மின்சாரம் பெற்று நாம் அடைந்திருக்கும் பயன்பாடுகளும், வலிமைகளும் எவ்வளவு பிரம்மாண்டமானவை?.

ஒரு மிதிவண்டியைக் கூட பெற்றிருக்காத மனிதர்களைக் காட்டிலும், சூப்பர்சானிக் விமானங்களில் பறக்கும் நாம் வலிமை பெற்றவர்கள் அல்லவா?. ஒரு அச்சு இயந்திரத்தைக் கூட கற்பனை செய்யாதவர்களைக் காட்டிலும், கம்யூட்டர்களை கைப்பைகளில் கொண்டு செல்லும் நாம் எவ்வளவு பெரிய வலிமையைப் பெற்று விட்டோம்!. புறாவிடு தூதுகளை நடத்திக் கொண்டிருந்தவர்களைக் காட்டிலும், செயற்கைத் துணைக் கோள்களின் துணையுடன் இணையங்களையும் (Internet) இணையங்களின் துணையால் வலைமனைகளையும் (Web Sites) மின்னஞ்சல்களையும் (e-mail) பெற்றிருக்கும் நாம் அடைந்துவிட்ட பயன்பாடுகளையும் வலிமைகளையும் எண்ணித் தொலையக் கூடுமா?.

இப்பட்டியலை இத்துடன் நிறுத்தாவிட்டால் வார்த்தைப் பஞ்சமும், காகிதப் பஞ்சமும் ஏற்படும் அளவிற்கு இரும்பின் பயன்பாடும், அதனால் நாம் பெற்றிருக்கும் வலிமையும் பற்றிய செய்திகளை எழுத வேண்டியிருக்கும். எனவே பட்டியலிடும் வேலையை வாசகர்களிடம் விட்டு விடுவோம். சுருங்கக் கூறினால் தெருவோர சோதிடனின் கிளிக் கூண்டுகளிலிருந்து, பிரதமர்களின், அதிபர்களின் ரப்பர் ஸ்டாம்புகள் வரை பயன்பட்டிருப்பது இரும்பு. பட்டாக்கடை செருப்புத் தொழிலாளியின் எந்திரத்திலிருந்து, டாட்டாக்களின் தொழிற்சாலைகள் வரை அனைத்தும் இரும்பினால் வலிமை பெற்றவைகளே!.

படைக்களத்திலும், வயல்வெளிகளிலும் மட்டுமே பயன்படக் கூடிய வெறும் கைக்கருவியாக இரும்பு பயன்பட்டு வந்த காலத்தில் கற்பனைக் கண்களால் கூட கற்பிதம் செய்ய முடியாத அளவு இரும்பின் பயன்பாடுகளையும், வலிமைகளையும், முன்னறிவித்த தூய குர்ஆனுடைய வசனத்தை நிரூபிக்க வரலாற்றுப் பேருண்மைகள் அரங்கேறிக் கொண்டிருக்கையில் இதையெல்லாம் விழுங்கிவிடும் வகையில் இதனோடு போட்டியிட வருகின்றன அறிவியல் நிரூபணங்கள். அறிவியல் அன்பர்களே! அந்த அற்புத சாட்சியத்தின்பால் தங்களது கவனத்தை ஒரு கணம் திருப்புங்கள்!.

நாம் ஆய்விற்கெடுத்துக் கொண்ட அதியற்புத வசனத்தை மீண்டும் ஒருமுறை ஆழமாகக் கவனியுங்கள்! அது 'இரும்பையும் நாமே இறக்கினோம்' என்று கூறுகிறது.

வியப்புக்கு மேல் வியப்பை ஆழ்த்தும் வசனம் இது! மழையைப் பற்றிக் கூறப்படுகின்ற இடங்களில் எல்லாம் மழையை இறைவன் இறக்குவதாகக் கூறுகிறான். மழை மெய்யாகவே பூமிக்கு இறங்கி வரக் கூடிய ஒன்று என்பது அறிவியல் ஆய்வு தேவைப்படாத வகையில் அனைவராலும் பார்த்து அறியப்படுகிறது! ஆனால் இரும்பையும் அவனே இறக்கியதாக இந்த வசனத்தில் கூறுகிறான்! அப்படியானால் இரும்பையும் ஆகாயம் பொழிகிறதா?. அதென்ன இரும்பைப் பொழியும் வானமா?.

எங்கள் அதியற்புத இரட்சகனே! இன்னும் என்னென்ன அற்புதங்களையெல்லாம் உன்தூய வசனத்தை நிரூபிக்கும் வகையில் நீ நிகழ்த்திக் கொண்டிருக்கிறாய்?. இன்னும் என்னென்ன அற்புதங்களையெல்லாம் உன் திருவசனங்களில் நீ கொட்டி விதைத்திருக்கிறாய்?. எங்கள் செவிகளிலும், கண்களிலும், இதயக்கமலங்களிலும் மேலும் மேலும் உன் பேரொளியால் நிரப்புவாயாக!.

நவீன வானியல் வல்லுனர்களே! புவி இரசாயணவியலாளர்களே! எங்கிருக்கிறீர்கள் நீங்கள்?. இரும்பும் இறக்கப்பட்டதாக இப்பேரண்டத்தின் ஏகாதிபதியான அல்லாஹ்(ஜல்) கூறிய பிறகும் பல நூற்றாண்டுகளாக எந்த விஞ்ஞானியாலும் கூட இந்த அற்பப் பேருண்மையை கண்டுபிடிக்க முடியவில்லையே! நீங்கள்தாம் நவீன உலகின் விங்ஞானிகளாயிற்றே! உள்ளதை உள்ளபடி காட்டும் உங்கள் சோதனைக் கூடங்களில் குடுவைகளில் இத்தூய வசனத்தை நிரூபிப்பதற்குரிய சாட்சியாக நீங்கள் எதைக் கண்டீர்களோ அதனைப் பாரறியப் பறைசாற்றுங்கள்!.

இரும்பும் இறக்கப்பட்டதாகக் கூறிய இத்தூய வசனம் பொய்க்கலப்பற்ற அறிவியல் பேருண்மையே எனப் பறைசாற்றுகிறது நவீன விஞ்ஞான உலகின் புவி இரசாயணத்துறை (Geo Chemistry)! எப்படி என்ற வினாவிற்கு விளக்கமளிக்க சாட்சி கூண்டை நோக்கிப் பேருவகையோடு ஓடோடி வருகிறார் நமது பழைய நண்பர் 'விண்கல்' (Meteorite) அவர்கள்!.

நமது முன்னோர்கள் பயன்படுத்திய போர்க் கருவிகளைத் சோதனைச் சாலைகளில் பகுப்பாய்வு செய்து பார்த்த விஞ்ஞானிகள் ஒரு வியக்கத்தகு விஷயத்தைக் கண்ணுற்றார்கள். அதாவது அவர்கள் பயன்படுத்திய கருவிகளில் இரும்புடன் (Iron) நிக்கலும் (Nickel) கோபால்டும் (Gobalt) கலந்திருப்பதைக் கண்டார்கள். ஆனால் பூமியில் இயல்பாகக் கிடைக்கும் தாதுப் பொருட்களில் இரும்புடன் மேற்கண்ட உலோகங்கள் கலந்திருப்பதில்லை. பூமியில் கிடைக்காத இப்பொருள் நமது பண்டைக்கால மக்களுக்கு எப்படிக் கிடைத்தது? வேற்றுக் கிரகங்களுக்குச் சென்று கொள்முதல் செய்து வந்திருப்பார்களோ? அப்படியெல்லாம் இல்லை. அதற்குரிய விடை எனக்குள் இருக்கிறது எனக் கூறுகிறது நவீன விஞ்ஞான உலகின் விண்கல் அறிவியல் (Meteoric Astronomy).

விண்கற்களின் தோற்றத்தைச் சுருக்கமாகப் பார்ப்போம். ஆகாயத்திலுள்ள பருப்பொருட்கள் உருவாவதற்கு முன் ஆகாயமெங்கும் ஒரே தூசுப் படலத்தால் நிரம்பிய புகை மண்டலமாக இருந்தது. இப்புகை மண்டலத்தின் மிக மிகச் சிறிய துகள்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து சிறுகச் சிறுகப் பெரிதாகி விண்ணிலுள்ள நட்சத்திரங்கள் ஈறாக அனைத்துப் பருப் பொருட்களையும் உருவாக்கின. இந்த நிகழ்ச்சிப் போக்கு நடைபெற்று வரும்பொழுது சிறுகச், சிறுகப் பெரிதாகி கோலி (Pebble) அளவோடு நின்றுவிட்ட பொருட்களும் உண்டு. வேறு சில பொருட்கள் கையளவு பொருட்களாக, மேலும் சில பெரும் பெரும் பாறாங்கல், குன்றுகள், மலைகள் அளவிற்குப் பெரிதாகி விண்ணில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களும் உண்டு. இவைகளே விண்கற்கள் என்பது விஞ்ஞானிகளிடம் உள்ள கருதுகோள்.

ஒழுங்கான பாதையில் சுழன்று வரும் பெரும் பெரும் கோள்கள் வெடிப்பதாலும், மிகவும் சிக்கலான பாதைகளில் (Very Complicated Orbit) சுழன்றுவரும் குறுங்கோள்களின் மோதல்களிலிருந்தும் விண்கற்கள் உருவாகின்றன என்பது மற்றொரு கருதுகோள். வால் நட்சத்திரங்களின் சிதைவுகளிலிருந்து இவை உருவாகின்றன என்பது மேலும் ஒரு கருதுகோள். இம்மூன்று கருதுகோள்களுக்கும் ஆதாரங்கள் இருப்பதால் இம்மூன்று வழிமுறைகளிலும் அவை உருவாகி வருவதாக மற்றும் ஒரு கருதுகோள்.

இங்கு கூறப்பட்ட நான்கு கருதுகோள்களில் எது உண்மையாயினும் சரி, அல்லது இவையல்லாத ஐந்தாவது ஒன்றே கண்டு பிடிக்கப்பட்டாலும் சரி, விண்கற்களின் அனைத்து வகைகளையும் பூமி பெறுகிறது என்பது மட்டும் நிரூபிக்கப்பட்ட உண்மை.

ஒழுங்கான பாதையின்றி விண்ணில் சிதறி ஓடும் சிற்றுருவம் கொண்ட விண்கற்கள் 'பல்சேஷன் தியரிக்குக்' (Pulsation Theory) கட்டுப்படாமல் சூரியனை நோக்கிச் செல்வதால் அவை பூமிக்கு வருவதில்லை என முன்னர் கண்டோம். ஆனால் இம்மாதிரிச் சிற்றுருவம் கொண்ட பொருட்களும் பூகோளம் பெற வேண்டும் என்பதற்காக இதன் வடிவமைப்பில் வேறு ஒரு நிகழ்ச்சிப் போக்கு நடைபெற்று வருகிறது.

அதாவது கொட்டிய மூட்டையிலிருந்து சிதறி ஓடும் நெல்லிக்காய்களைப்போல விண்கற்களின் அருவிப் பிரவாகங்கள் மிக நீண்ட முட்டை வடிவ (Ellips) பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவைகளின் பெயர்ப் பட்டியலும், அவைகள் பூமியைத் தாக்கும் தேதிகளும் இத்துடன் இணைத்துள்ளோம்.

1. லயரிட்ஸ் Lyrids ஏப்ரல் 21
2. அக்வாரிட்ஸ் Aqarids மே 06
3. ட்ராகோனிட்ஸ் Draconids ஜூன் 06, அக்டோபர் 10.
4. பெர்ஸிட்ஸ் Perseids அக்டோபர் 10
5. ஒரியோனிட்ஸ் Orionids அக்டோபர் 18
6. டாரிட்ஸ் Taurids நவம்பர் 11
7. ஆன்ட்ரமெடிட்ஸ் Andromedits நவம்பர் 14


இவற்றில் மணற்துளியிலிருந்து, கோலி வரையிலான சிற்றுருவங்கள் அடங்கியுள்ளன. இந்த அருவிப் பிரவாகம் பல்லாயிரம் கி.மீ.பருமன் கொண்டவை. இவைகள் தங்களது பாதையிலிருந்து விலகி பூமியை நோக்கி வருவதில்லை. ஆனால் இந்த பூமி தானும் சூரியனைச் சுற்றி வரக்கூடிய கோளாக இருப்பதால் பூகோளத்தின் சூரிய வலம் இந்த விண்கற்களின் பாதையில் குறுக்கிடுகிறது. உடனே இந்த பூகோளம் ஒரு மாபெரும் கல்மாரியைப் பெறுகிறது. எனவே இக்கல்மாரியின் வாயிலாகச் சிற்றுருவம் கொண்ட விண் கற்களையும் பூகோளம் பெற்று விடுகிறது.

பேருருவம் கொண்ட விண் கற்கள் இப்போது பெருவாரியாக பூமியின் மீது விழும் நிலை இல்லையென்றாலும் சில மில்லியன் வருடங்களுக்கு முன்னால்வரை தொடர்ந்து பூமியில் விழுந்து கொண்டிருந்தன. எனவே விண்கற்கள் வாயிலாக இதுவரை எண்ணற்ற இரும்பு மழைகளை பூமி பெற்றுள்ளது.

இதற்கு சமீபத்திய உதாரணமாக 1947ஆம் வருடம் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி அன்று ரஷ்யாவின் சிக்கோத்தே அலின்ஸ்கில் (Sikote - Alinsk) விழுந்த கல்லை எடுத்துக் கொள்ளலாம். இக்கல்லும் இரும்பு வகையைச் சார்ந்த விண்கல்லேயாகும். (விண்கற்களில் மற்றொரு வகையும் உண்டு. அது இரும்புக்குப் பதில் சிலிக்கனை (Silicon) கொண்ட விண்கற்களாகும்.)

இக்கல் பூமியில் விழும்பொழுது ஏனைய விண்கற்களைப் போன்று காற்று மண்டலத்தில் மோதியவுடன் துண்டு துண்டாகச் சிதறி விடுகிறது. சிதறிய துண்டுகள் மீண்டும் காற்று மண்டலத்தில் ஊடுருவி வரும்பொழுது ஒரே ஒரு துண்டைத் தவிர ஏனைய யாவும் முற்றாக எரிந்து விடுகிறது. எஞ்சிய ஒரு துண்டு மட்டும் பூமியை நெருங்கி அதன் மிக வலிமைமிக்க மாறா வெப்ப நிலை மண்டலத்தில் (06வது கட்டுரையை பார்க்கவும்) மோதியதும் அத்துண்டு சிதறுண்டு பல துண்டுகளாக பூமியைத் தாக்கியது. இதனால் பூமியின் மீது 75 அடி விட்டம் கொண்ட 120 பள்ளங்களைத் (Craters) தோற்றுவித்தது.

இப்பள்ளங்களில் கவனமாகத் தேடியெடுத்ததில் கிடைத்த பொருட்களில் 4 சதவீதம் நிக்கலும், சிறிதளவு ஏனைய உலோகங்களும் எஞ்சிய பெரும்பகுதி இரும்பாகவும் இருந்தன. எனவே விண் கற்கள் வாயிலாக பூமிக்கு ஏராளமான இரும்பு இறக்கப்பட்டது. இப்போதும் இறக்கப்பட்டு வருகின்றது என்று கூறி நவீன வானவியல் மற்றும் புவி இரசாயணத் துறையைச் சார்ந்த அறிவியல் பேருண்மைகள் தூய குர்ஆன் மிக மிக நிச்சயமாக மானிட சக்திக்கு அப்பாற்பட்ட வேதமே என நிரூபித்து நிற்கின்றன.

நவீன விஞ்ஞான உலகின் அறிவியல் அன்பர்களே! கட்புலனுக்கு அப்பாற்பட்ட எந்த விஷயத்தையும் நம்ப வேண்டுமாயின் அதற்கு அறிவியல் ஆதாரம் உண்டா எனப் பகுத்தறியும் பண்புடைய அறிவுசால் ஆன்றோர்களே! நாம் சிந்திக்க வேண்டாமா? நவீன விஞ்ஞான யுகத்தின் ஆய்வகச் சோதனைக் குடுவைகளில் மட்டுமே கருவுற்ற புவி இரசாயணத்தின் இரகசியங்களெல்லாம் தொன்மை மிக்க 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த படிப்பறிவில்லா பாலைவன வாசிகளின் வாயிலிருந்து ஜனனமெடுத்திருக்க முடியுமா?.

கருவுறும் முன்னே பிறப்பது சாத்தியமா?

சாத்தியம் எனக் கூறக் கூடிய எந்த நபரும் கீழ்ப்பாக்கத்தில் குடியிருக்க வேண்டியவர்களல்லவா?.

கருவுறும் முன்பே பிறக்கவில்லை என்றிருந்தும் கூட நவீன புவி இரசாயணம் கருவுறும் முன்னே அதன் இரகசியங்கள் திருமறைக் குர்ஆனில் பிறப்பெடுத்தது எப்படி?. இதற்கு மேலும் இத்தூய மறையை மானிட சக்திக்குட்பட்டது எனக் கூறுவது அறிவியலையும், அறிவியலாளர்களையும் இழித்துரைக்கும் செயலாகும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டாமா?. சிந்திக்க வேண்டாமா நண்பர்களே! நீங்கள்?.

---------------------------
வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் முந்தைய பகுதிகள்.

பேரண்டப் படைப்பின் துவக்கம் -1

வாழத் தகுந்த கோள்-2

ஓசோன் -3

விண்ணகத்தின் பரப்பெல்லை -4

பேரண்டத்தின் ஈர்ப்பு விசை -5

விண்ணடுக்குகள் -6

உருண்ட பூமி -7

சுழலும் பூமி(1) -8

சுழலும் பூமி(2) -9

சுழலும் பூமி(3) -10

சுழலும் பூமி(4) -11

சுழற்றும் பூமி -12

ஈர்ககும் பூமி -13

Saturday, October 01, 2005

ரமளான் சிந்தனைகள்!

ரமளானை வரவேற்போம்!

ஒவ்வொரு வருடமும் ரமளான் மாதத்தை சந்திக்கும் முஸ்லிம்களுக்கு, அந்த ஒவ்வொரு ரமளான் மாதத்தையும் புதிதாக எதிர்கொள்வது போலவே உவகையுடன் - களிப்புடனும் வரவேற்பார்கள். வருடத்தில் பதினோரு மாதங்கள் பகல் பொழுதில் உண்ணுவதையும், பருகுவதையும் வழக்கத்தில் கொண்டிருந்தவர்கள், இதற்கு நேர் எதிர்மறையாக பகல் பொழுது முழுவதும் - உண்ணுவதையும், பருகுவதையும் கைவிட்டு - ஏக இறைவனின் திருப்திக்காக மட்டுமே உண்ணா நோன்பைப் பூர்த்தி செய்வார்கள்.

வணக்க வழிபாடுகள் அனைத்துமே அல்லாஹ்வுக்குரியது. அனைத்து வழிபாடுகளிலும் ''நோன்பு'' என்ற வணக்கத்திற்குத் தனிச் சிறப்பு உண்டு. ஒருவர் மற்ற வணக்கங்களை தாம் தனித்தே செய்தாலும் அதைப் பிறர் காணும் வாய்ப்புகள் இருக்கிறது, ஆனால் உண்ணா நோன்பிருக்கும் வணக்கத்தில் அவர் உண்ணவில்லை, பருகவில்லை என்பதை மற்றெவரும் காண வாய்ப்பில்லை. தனிமையில், எவரும் அறியாமல் உண்ணவும், பருகவும் செய்துவிட்டு நான் உண்ணா நோன்பிருக்கிறேன் என்று பிறரிடம் சொல்லிக்கொள்ள முடியும்.

தனிமையில் இருந்தாலும் உண்ணாமல், பருகாமல் இருப்பது இறைவனுக்காக மட்டுமே என்பதால், அடியான் நோன்பென்ற வணக்கத்தைத் தனக்காகவேச் செய்கிறான் என்று அல்லாஹ் சிலாகித்துக் கூறுகிறான். ரமளான் மாதத்ததை வரவேற்று உண்ணா நோன்பை எதிர்கொள்ளவிருக்கும் முஸ்லிம்களுக்கு ரமளான் மாதத்திற்கான சில சட்டங்கள் இங்கே..

புனித மாதத்திற்கான சட்டங்களின் தொகுப்பு

அல்லாஹ் கூறுகிறான்..

விசுவாசிகளே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (நோன்பு) விதிக்கப்பட்டுள்ளது, (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)

(இவ்வாறு விதிக்கப்பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும், எனினும் (கடுமையான நோய் முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்கு பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும், எனினும் எவரேனும் தாமாக அதிகமாகக் கொடுக்கிறாறோ அது அவருக்கு நல்லது, ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்) நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும், (என்பதை உணர்வீர்கள்- அல்குர்ஆன் 2:184)

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது, ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும், எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ, (அவர் அக்குறிப்பிட்ட நாடகளின் நோன்பைப்) பின் வரும் நாட்களில் நோற்க வேண்டும், அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதையே நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை, குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே. (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்- அல்குர்ஆன் 2:185)

நோன்பு கால இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவியுடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது, அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள், நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொணடிருந்ததை அல்லாஹ் நன்கறிவான், அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான். எனவே இனி (நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைத் தேடிக்கொள்ளுங்கள், இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள், பின்னர் இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள், இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள், இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும், அந்த வரம்புகளை (த் தாண்ட) முற்படாதீர்கள், இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக் காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகிறான். (அல்குர்ஆன் 2:187)

பிறை பார்த்து நோன்பு..

நீங்கள் பிறை பார்த்தால் நோன்பு வையுங்கள், அடுத்த பிறையைப் பார்த்தால் நோன்பை விட்டு விடுங்கள், மேகம் (பிறையை) உங்களுக்கு மறைத்து விடுமானால் (ரமளானையும் ஷாஃபானையும்) முப்பது நாட்களாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ, தாரகுத்னீ, இப்னுஹிப்பான், இப்னுகுஸைமா, ஹாகீம்.

தகவலறிந்து நோன்பு..

மக்கள் எல்லாம் பிறை பார்க்க முயன்றார்கள், நான் நபி (ஸல்) அவர்களிடம் 'நான் பிறையைப் பார்த்தேன்' என்று கூறினேன், நபி (ஸல்) அவர்கள் தானும் நோன்பு நோற்றுதுடன் மக்களையும் நோன்பு நோற்கக் கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- அபூதாவூத், தாரமி, இப்னுஹிப்பான், ஹாகீம், பைஹகீ, தாரகுத்னீ.

ரமளானின் கடைசி நாள் பற்றி மக்கள் முடிவெடுக்கக் குழம்பினார்கள், (பிறை தென்படாததால் நோன்பும் நோற்றனர்) இரண்டு கிராம வாசிகள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று இரவு நாங்கள் பிறைப் பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள், உடனே நபி (ஸல்) அவர்கள் மக்களை நோன்பை விட்டு விடுமாறு கட்டளையிட்டார்கள், பெருநாள் தொழுகைக்காக மறுநாள் தொழுமிடம் வருமாறு கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ரிப்யீ இப்னு கிராஷ் நூல்கள்- அபூதாவூத், அஹ்மத்.

நோன்பு வைக்கும் எண்ணம் வேண்டும்..


ஃபஜ்ருக்கு முன்பே நோன்பு வைக்க எவர் எண்ணவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ, தாரகுத்னீ, இப்னுஹிப்பான், இப்னுகுஸைமா.

ஸஹ்ர் செய்வதில் பரகத் உண்டு..

நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள் ஏனெனில் ஸஹ்ரில் பரகத் உண்டு, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் இப்னு மாலிக் (ரலி) புகாரி, முஸ்லிம், நஸயீ, அஹ்மத், திர்மிதீ, இப்னுமாஜா.

வேண்டுமென்றே நோன்பு திறப்பதைத் தாமதித்தல் கூடாது..

என் அடியார்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர் (சூரியன் மறைந்தவுடன்) விரைந்து நோன்பு துறப்பவர்களாவர், என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- திர்மிதீ, அஹ்மத்.

இரவு முன்னோக்கி பகல் பின் சென்று சூரியன் மறைந்தால் நோன்பாளி நோன்பு துறப்பார், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

நோன்பு துறத்தலை (தாமதமின்றி) விரைந்து செய்யும் வரை மக்கள் நன்மையைச் செய்தவர்களாகிறார்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஸஹ்ல் இப்னு ஸஹ்து (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

பிரயாணத்தில், மற்றும் கர்ப்பிணி, தாய்மார்களின் நோன்பு..

அல்லாஹ்வின் தூதரே! பிரயாணத்தின் போதும் நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது, அப்போது நோன்பு நோற்பது குற்றமாகுமா? என்று நான் கேட்ட போது ''இது அல்லாஹ் வழங்கிய சலுகை இதை யார் பயன் படுத்திக் கொள்கிறாரோ அது நல்லது, யார் நோற்க விரும்புகிறாரோ, அவர் மீது குற்றமில்லை'' என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஹம்ஸா இப்னு அம்ரு அல் அஸ்லமீ (ரலி) நூல்கள்- முஸ்லிம், நஸயீ.

(நான்கு ரக்ஆத் தொழுகைகளில்) பாதியைக் குறைத்துக் கொள்ளவும், நோன்பை தள்ளி வைக்கவும் அல்லாஹ் பிரயாணிகளுக்கு சலுகை வழங்கியுள்ளான், கர்ப்பிணி, பால் கொடுக்கும் தாய், ஆகியோரும் நோன்பிலிருந்து விலக்களித்துள்ளான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் இப்னு மாலிக் (ரலி) நூல்கள்- அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.

சக்தி பெற்றவருக்கே நோன்பு..

யார் சக்தி பெறுகிறார்களோ அவர்கள் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும், என்ற வசனம் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிடும் போது இந்த வசனம் மாற்றப் படவில்லை, நோன்பு நோற்க சக்தியற்ற முதியவர்கள் விஷயத்தில் இந்தச் சட்டம் இன்னும் உள்ளது, என்றார்கள் அதாவது அவர்கள் ஒவ்வொரு நோன்புக்கும் பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிப்பார்கள், என்றார்கள். அறிவிப்பாளர், அதாவு, நூல்- புகாரி.

நோன்பாளி மறந்து விட்டால்..

நோன்பாளி மறந்து விட்டு உண்ணவோ, பருகவோ செய்தால் (நினைவு வந்ததும்) தன் நோன்பை தொடரட்டும், அவரை அல்லாஹ்தான் உண்ணவும், பருகவும் செய்திருக்கிறான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா.

நோன்பாளி என்று கூறி விட வேண்டும்..

உங்களில் ஒருவர் நோன்பு வைத்திருக்கும் போது தீய பேச்சுக்கள் பேசலாகாது, வீண் சண்டைகளில் ஈடுபடலாகாது, எவரேனும் அவரை ஏசினால் அல்லது சண்டைக்கு அழைத்தால், நான் நோன்பாளி என்று கூறிவிட வேண்டும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

பொய் சொல்லலாகாது..

(நோன்பு வைத்திருக்கும் போது) பொய் சொல்வதையும், பொய்யான அடிப்படையில் செயல் படுவதையும் எவர் விடவில்லையோ அவர் தனது உணவையும் பானத்தையும் விட்டிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா.

தண்ணீர் தூய்மைப் படுத்தும்..

உங்களில் ஒருவர் நோன்பு துறக்கும் போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு துறக்கவும், அது கிடைக்கா விட்டால் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கவும், ஏனெனில் தண்ணீர் தூய்மைப் படுத்தக் கூடியதாகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஸல்மான் இப்னு ஆமிர் (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத்.

உணவிற்கே முதலிடம்..

இரவு உணவு வைக்கப்பட்டால், மஃக்ரிப் தொழுவதற்கு முன் சாப்பாட்டிற்கு முதலிடம் கொடுங்கள், உணவு உட்கொள்வதைத் தாமதிக்க வேண்டாம், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் இப்னு மாலிக் (ரலி) நூல்- புகாரி.

இமாம் தொழுகையைத் துவங்கி குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பதை செவியுற்றாலும் இப்னு உமர் (ரலி) சாப்பாட்டை முடித்து விட்டே தொழுகையில் கலந்து கொள்வார்கள். நூல்- புகாரி.

விடுபட்ட நோன்புகள்..

ரமளானில் சில நோன்புகள் (மாதவிடாய் போன்ற காரணங்களால்) எனக்கு விடுபட்டு (களாவாகி) விடும், (11 மாதங்கள் கழித்து) ஷாஃபானில் தவிர அதை என்னால் நோற்க இயலாது, நபி (ஸல்) அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளே இதன் காரணம். அறிவிக்கும் முஸ்லிம்களின் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத். திர்மிதீ, இப்னுமாஜா.

நோன்பாளி தன் மனைவியிடத்தில்..

நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கும் போது தம் மனைவியரை முத்தமிடுபவர்களாகவும், கட்டி அணைப்பவர்களாகவும் இருந்தனர், எனினும் நபி (ஸல்) அவர்கள் உங்களையெல்லாம் விட தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தனர். அறிவிக்கும் முஸ்லிம்களின் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜா.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் நோன்பாளி மனைவிகளைக் கட்டி அணைப்பது பற்றிக் கேட்டார், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள், பின்பு மற்றெருவரும் வந்து கேட்ட போது, அவருக்குத் தடை விதித்தார்கள், நபி (ஸல்) அவர்களால் அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், தடுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தார். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்- அபூதாவூத்.

(இளைஞர்- இள மனைவி இருவருமே சுலபத்தில் உணர்ச்சி வசப்பட்டு இறை வரம்பை மீறி விடுவார்கள் என்பதால் அனுமதி மறுக்கப் படுகிறது)

நோன்பாளி தன் மனைவியுடன் கூடிவிட்டால்..?

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! நான் நாசமாகி விட்டேன்' என்றார்,

''என்ன நாசமாகி விட்டீர்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது,

'ரமளானில் (பகல் பொழுதில்) என் மனைவியுடன் சேர்ந்து விட்டேன்' என்றார்,

''ஒரு அடிமையை விடுதலை செய்யும் அளவிற்கு உம்மிடம் செல்வம் இருக்கிறதா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் 'இல்லை' என்றார்,

''தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் 'இல்லை' என்றார்,

அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு இயலுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் 'இயலாது' என்றார்,

பின்பு நபி (ஸல்) அவர்கள் சற்று நேரம் (அமைதியாக) உடகார்ந்திருந்தார்கள் பதினைந்து ஸாவு கொள்ளவுள்ள பாத்திரத்தில் பேரீத்தம் பழம் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது,

(அதை அவரிடம் வழங்கி) ''இதை தர்மம் செய்வீராக'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அதற்கு அவர் 'என்னை விட ஏழைக்கா தர்மம் செய்யச் சொல்கிறீர்கள்..? இந்த மதீனா முழுவதும் எங்களை விட ஏழைகள் எவருமில்லை..' என்று அவர் கூறியதும், தனது கடைவாய் பற்கள் தெரியும் அளவுக்கு நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள், பின்பு ''இதைக் கொண்டு சென்று உமது குடும்பத்தினருக்கு வழங்குவீராக'' என்று கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகார், முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா.

''அப்படியானால் நீர் முறித்த நோன்பிற்குப் பதிலாக ஒரு நோன்பு நோற்று விடுவீராக'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், என்று மேலதிக விளக்கமாக இப்னுமாஜா, அபூதாவூத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா..?


நபி (ஸல்) அவர்கள் உடலுறவு கொண்ட பின் அதிகாலையில் குளிப்புக் கடமையானவர்களாக ரமளான் நோன்பை நோற்பார்கள். அறிவிக்கும் முஸ்லிம்களின் அன்னைகள், ஆயிஷா (ரலி) உம்மு ஸல்மா (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

மேலும் சில ரமளான் சட்டங்கள் அடுத்தப் பகுதியில்..