Tuesday, February 26, 2008

சரியும் அமெரிக்கப் பொருளாதாரம், உலகம் அமைதியை நோக்கி..

ஏழை, நடுத்தர நாடுகளின் பொருளாதாரத்தைப் பல்வேறு வழிகளிலும் சுரண்டி அதன் மூலம் தனது இராணுவம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொண்டு இன்று உலகின் மிகப்பெரிய தலைவலியாக மாறியிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரம் கடந்த ஓரிரு வருடங்களில் மிகப் பெரியச் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே! பொருளாதாரத்தின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு உலகின் ஏழை மற்றும் நடுத்தர நாடுகளைப் பயமுறுத்திக் கொண்டிருந்த அமெரிக்கா இன்று சிறிது சிறிதாக அதே பொருளாதாரத்தின் மூலம் அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகின் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரத்தை அமெரிக்க டாலர்கள் ஆக்ரமித்து வந்ததற்கு 21 ஆம் நூற்றாண்டு விடை கூற நெருக்கிக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் ஏகாதிபத்தியச் செயல்பாடுகளுக்கு ஊக்கம் கொடுத்த அமெரிக்கப் பொருளாதாரம், உலக வர்த்தகத்தின் பெரும்பங்கு அமெரிக்க டாலரை அடித்தளமாகக் கொண்டு இயங்குவதின் மீதே கட்டமைக்கப்பட்டிருந்தது. 2000 நூற்றாண்டின் 80, 90கள் வரை உலக வர்த்தகத்திற்கு மற்றொரு நாணயத்தைக் குறித்து உலகம் சிந்திக்காமல் இருந்ததே அமெரிக்காவின் இடைப்பட்ட கால இமாலய எழுச்சிக்கு அடிப்படைக் காரணமாகும்.

இதற்கு யூரோவின் மூலம் முதல் அடியைக் கொடுத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். உலக வர்த்தகத்திற்கு மற்றொரு நாணயம் என்பதே அப்பொழுது வரை எவரும் மனதில் நினைத்துக் கூடப் பார்க்காத விஷயமாக இருந்தக் கால கட்டம் அது. அன்று விழுந்த முதல் அடியிலிருந்து எழுந்து நிற்க "தீவிரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பொய்யான முகமூடியுடன் களமிறங்கிய அமெரிக்காவிற்கு அதுவே நினைத்துப் பார்க்காத பதிலடியைத் திரும்பக் கொடுத்தது எனலாம்.

இப்பொழுது வரை பின்னணியில் இயங்கியது யார்? என்பதில் எவ்விதத் தெளிவான முடிவுக்கும் வர இயலவில்லை. வெள்ளை மாளிகையின் தற்போதையக் காவலாளி ஜார்ஜ் புஷ் கூட இதன் பின்னணி கதாநாயகனாக இருக்கலாம். 2001 செப்டம்பர் 11 நிகழ்வைக் காரணம் காட்டி, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் எண்ணெய் வளம் மிக்க நாடுகளைக் கபளீகரம் செய்வதோடு, இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாடுகளையும் சின்னாபின்னப்படுத்துவதுமே அதன் முக்கியக் குறிக்கோளாய் இருந்தது. அதன் பின்னணியில் சரிந்து வரும் தனது பொருளாதாரத்தைக் குவிந்துக் கிடக்கும் அரபு எண்ணெய் வளம் மூலம் நிமிர வைப்பதைத் தனது மறைமுக நோக்கமாகவும் கொண்டு, தான் வளர்த்து விட்ட உசாமா, சதாம் போன்றவர்களை எதிரிகளாகச் சித்தரித்துக் களமிறங்கிய புஷ்ஷின் அமெரிக்காவிற்குத் தற்பொழுது அதுவே தாங்கவொண்ணாச் சரிவைப் பரிசாக அளித்துள்ளது.

சரிந்த அமெரிக்கப் பொருளாதாரத்தால் மத்தியக் காலகட்டத்தில் அமெரிக்க டாலரை அடித்தளமாக வைத்துத் தங்களின் நாணய மதிப்பையும் வியாபாரத்தையும் அமைத்துக் கொண்ட நாடுகளுக்கு இப்பொழுது அமெரிக்க டாலர் மிகப்பெரிய தலைவலியாகவும், தாங்கவொண்ணா சுமையாகவும் மாற ஆரம்பித்துள்ளது.

இதனை நன்றாக உணர்ந்து கொண்ட அமெரிக்காவின் ஏகாதிபத்தியக் கழுகுக் கண்களுக்கு இரையாகக் குறிவைக்கப்பட்டிருக்கும் வெனிசுவேலா, ஈரான் போன்ற நாடுகள் நிலைமையைப் புரிந்துக் கொண்டு உடனடியாகத் தங்களின் அனைத்துப் பண்டமாற்று, உலக வர்த்தக முறைகளையும் அமெரிக்க டாலரிலிருந்து 90-களில் மாற்றாக வெளிவந்த யூரோவிற்கு மாற்றி விட்டன. அத்தோடு அமெரிக்காவின் சுரண்டலுக்கு இலக்கான அனைத்து நாடுகளையும் தங்கள் வர்த்தகப் பரிமாற்றத்தை டாலரிலிருந்து மாற்றக் கோரிக்கை விடுத்தன.

எனினும் அப்பொழுது அதன் அவசியத்தை உணர்ந்துக் கொள்ளாத கத்தர், சவூதி, அமீரகம் போன்ற அரபு நாடுகள் கடந்த 6 மாத கால அளவில் வரலாறு காணாத அளவில் தங்களின் நாணயமதிப்பில் வீழ்ச்சியையும், வளைகுடா நாடுகளில் கேள்வியே பட்டிராதப் பெரும் பணவீக்கத்தையும் சந்தித்தன.

கடந்த இரண்டு வருடங்களில் அமெரிக்க டாலரின் மூலதனம் 16.2 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலர் எவ்வளவு வீழ்ச்சியைச் சந்தித்ததோ, அதே அளவிற்கான வீழ்ச்சியை அமெரிக்க டாலர் மூலம் வர்த்தகம் அமைத்துக் கொண்ட மற்ற நாடுகளின் நாணயங்களும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

இந்நிலையில் உலக கரட்டு எண்ணெய் (Crude Oil) வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஓபெக் தற்பொழுது ஈரான் மற்றும் வெனிசுவேலாவின் அழைப்பை ஏற்றுக் கொண்டுத் தங்களின் வர்த்தகத்தை அமெரிக்க டாலரிலிருந்து மாற்றுவதற்கான ஆலோசனை செய்ய முன் வந்துள்ளன.

ஈரான் மற்றும் வெனிசுவேலாவின் கோரிக்கையைக் குறித்து விவாதிக்க ஓபெக் உறுப்பினர் நாடுகளின் நிதி அமைச்சர்களின் மாநாடு உடன் கூடும் என ஓபெக் தலைவர் ஷகீப் கலீல் கூறியுள்ளார். உலக எண்ணெய் வியாபாரத்தில் 40 விழுக்காடு பங்கு வகிக்கும் ஓபெக்கின் இம்முடிவு நினைத்தது போல் அமெரிக்க டாலரிலிருந்து மற்றொரு நாணயத்திற்குத் தனது வியாபாரத்தை மாற்றும் எனில் அது அமெரிக்காவை எழுந்து நிற்க இயலாத நிலைக்குத் தள்ளிவிடும் என்பதில் மாற்றமில்லை.

ஏற்கெனவே அமெரிக்க டாலர் மூலமான தனது அனைத்து உலக வியாபாரத்தையும் மாற்றியிருந்த ஈரானைப் பின்பற்றி இன்னும் ஆறு மாத காலத்தில் கத்தரும் தனது எல்லாவிதமான வணிகப் பரிமாற்றத்தை மற்றொரு நாணயத்திற்கு மாற்றும் என கத்தர் பிரதமர் ஷேக் ஹமத் பின் ஜாஸிம் அல்-தானி கூறியிருந்தார். அதே போன்று குவைத்தும் அமீரகமும் இதே திசையில் பயணிக்கவிருப்பதைக் குறித்த அறிகுறிகளைத் தெரிவித்திருந்தன.

உலக வர்த்தகத்தின் மிகப் பெரும்பங்கை நிர்ணயிக்கும் அரபு நாடுகளும் உலக எண்ணெய் உற்பத்தியின் 40 விழுக்காட்டை நிர்ணயிக்கும் ஓபெக்கும் தங்களின் இம்முடிவுகளில் எவ்வித மாற்றமும் இன்றி அமெரிக்க டாலரிலிருந்து மாறும் எனில் அது அமெரிக்கப் பொருளாதாரத்தில் சீரழிவை ஏற்படுத்துவதோடு உலக நலனுக்குத் தீங்கான அதன் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதும் நிச்சயம். அது உலகின் தற்போதைய உறுதியற்ற நிலையையும் மாற்றியமைக்கும் என்பதில் ஐயமில்லை.

நன்றி: சத்தியமார்க்கம்.காம்