Thursday, June 30, 2005

இம்ரானா - நூர் இலாஹி.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு பெண்மணி தொழுவதற்காகப் புறப்பட்டார். அவரை ஒரு ஆண் கண்டு போர்வையால் போர்த்தி அவரைக் கற்பழித்து விட்டார். அவள் சப்தமிட்டதும் அவன் ஓடி விட்டான். வேறொரு ஆடவர் அவளருகே வந்தார் இந்த மனிதன் என்னைக் கெடுத்துவிட்டான் என்று அப்பெண் கூறினாள். முஹாஜிர்களில் ஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்ற அப்பெண் ''இந்த மனிதன் என்னைக் கெடுத்து விட்டான்'' என்ற கூறினார். யார் அவளைக் கெடுத்ததாக அப்பெண் அடையாளம் காட்டினாளோ அவரைப் பிடித்து வந்தனர். ''அவன்தான்'' என்று அப்பெண் அடையாளம் காட்டினாள். நபி (ஸல்) அவர்களிடம் அவர் கொண்டு வரப்பட்டு கல்லெறியுமாறு உத்தரவிடப்பட்டதும் அப்பெண்ணை உண்மையிலேயே கெடுத்தவர் எழுந்து ''அல்லாஹ்வின் தூதரே நான்தான் அவளைக் கெடுத்தவன்'' என்று கூறினார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் நீ செல்! அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான்'' என்று கூறினார்கள். (தவறாகப் பிடித்து வரப்பட்ட) மனிதரிடம் அழகிய வார்த்தைகளைக் கூறினார்கள். அப்பெண்ணைக் கெடுத்தவரைக் கல்லெறியுமாறு ஆணையிட்டார்கள். ''மதீனாவாசிகள் அனைவரும் எந்த அளவு தவ்பா - பாவமன்னிப்புக் கேட்டால் ஏற்கப்படுமோ அந்த அளவு இவர் தவ்பா - பாவமன்னிப்புக் கேட்டு விட்டார்'' என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர், வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) திர்மிதீ, அபூ தாவூத் )

//*எனக்கு தெரிந்து கற்பழிப்பு குற்றங்களை செய்த எந்த ஆணும் சாகும்வரை கல்லால் அடிக்கப்பட்டதாக தெரியவில்லை. வறலாற்றில் கூட நான் கேள்விபடவில்லை.*//
ரோஸா வசந்த் அவர்களுக்கு மேற்கண்ட செய்தியில் விளக்கம் கிடைக்குமென்று நம்புகிறேன்.
1. கற்பழிக்கப்பட்டப் பெண், கற்பழித்தவனை அடையாளம் காட்ட வேண்டும்.
2. பலவந்தமாகக் கற்பழிக்கப்பட்டப் பெண் குற்றவாளி இல்லை - அதனால் அவளுக்கு தண்டனை கிடையாது.

3. கற்பழித்தவனுக்கே மரண தண்டனை.

4. கற்பழிக்கப்பட்டப் பெண், கற்பழித்தவனை ''இவன்தான் என்னைக் கெடுத்தான்'' என்று அடையாளம் காட்டினால் போதும் வேறு சாட்சிகள் தேவையில்லை என்பதை நபிமொழியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். (இது, கற்பழிப்பை நிரூபிக்க நான்கு சாட்சிகள் வேண்டும் என்று சொல்பவர்கள் கவனத்திற்கு)

5. ''அல்லாஹ்வின் தூதரே! நான்தான் அவளைக் கெடுத்தவன்'' என்று உண்மையை ஓப்புப் கொண்டு முன் வந்தவருக்கே கற்பழிக்கப்பட்டப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பு வழங்கவில்லை! (என்பது ந.ராகவன் அவர்களின் கவனத்திற்கு)

இனி இம்ரானாவின் விஷயத்துக்கு வருவோம்.

''நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்தப் பெண்களை மணக்காதீர்கள்'' (திருக்குர்ஆன், 4:22)

இந்த வசனத்தில் தந்தையின் மனைவியை அதாவது மாற்றாந்தாயை, தந்தை மரணித்து விட்டாலோ அல்லது தந்தை மனைவிளை விவாகரத்து செய்தாலோ அந்தப் பெண்ணை அவருடைய ஆண்மக்கள் திருமணம் செய்யக்கூடாது என்று தடை விதிக்கிறது. இந்த வசனத்தின் அடிப்படையில்தான் இம்ரானாவின் மாமனார் இம்ரானாவை பலாத்காரம் செய்து உடலுறுவு கொண்டதால் இம்ரானா, நூர் இலாஹியின் தந்தையின் மனைவி!? என்ற அந்தஸ்துக்கு உரியவராகிறார் இனி கணவர் நூர் இலாஹிக்கு இம்ரானா மனைவியாக முடியாது என்று இங்கே ஷரியத்தைக் கேலிக் கூத்தாக்குகிறார்கள்.

''உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளாதீர்கள்'' (திருக்குர்ஆன், 4:23)

மகனின் மனைவி அதாவது மருமகளை, மகன் இறந்து விட்டால் அல்லது மகன் மனைவியை விவாகரத்துச் செய்தாலோ அந்தப் பெண்ணை அவருடைய தந்தைத் திருமணம் செய்யக்கூடாது என்று 4:23ம் வசனம் தடை விதிக்கிறது. திருமணம் செய்துகொள்ள விலக்கப்பட்ட, தன் மகனின் மனைவியை திருமண உறவையும் கடந்து சண்டாளன் பலத்காரம் செய்தது கீழ்த்தரமான செயல் -இச்செயலுக்கு மகனின் மனைவியை கற்பழித்தத் தந்தைக்கே மணமுடிப்பது இஸ்லாத்திற்குப் பொருந்தாதத் தீர்ப்பு இச்சட்டத்தை எங்கிருந்து பெற்றார்கள் என்பதை நாமறியவில்லை.

கற்பழித்தவன்தான் குற்றவாளி, கற்பழிக்கப்பட்டப் பெண் நிரபராதி - அவள் தவறுக்கு உடன்படவில்லை - நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் ''நீ செல்! அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான்'' என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இப்படிச் சொல்லியிருப்பது பலவந்தப்படுத்தப்பட்டவர்கள் குற்றமற்றவர்கள் என்பதைத் தெளிவுப்படுத்துகிறது. மேலும் திருக்குர்ஆன் நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் மீது குற்றமில்லை (5:3) என்று கூறுகிறது.

இம்ரானா குற்றமற்றவர் என்பதால் அவர் தன் கணவரோடு சேர்ந்து வாழ்வதற்கு இஸ்லாத்தில் தடை இருப்பதாக நாமறியவில்லை. அவர் தன் கணவரோடு சேர்ந்து வாழலாம் என்பதே எமது நிலைப்பாடு! மாற்றுக் கருத்துள்ள - இதற்குத் தடை இருக்கிறது என்பதையறிந்த முஸ்லிம் சகோதரர்கள் கண்டிப்பாக தமது கருத்தைப் பதித்து தவறைச் சுட்டிக்காட்டுங்கள் இதைத் தனிப்பதிவாகவும் பதித்துள்ளேன். நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Thursday, June 09, 2005

பனூ முஸ்தலிக் போர்!

பனூ முஸ்தலிக் போரில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நடந்து கொண்டது நியாயமில்லை என்று இஸ்லாத்தை விமர்சிக்க முன் வருபவர்கள், - நபியின் மக்கா வாழ்க்கையில் நபித்துவம் பெற்ற ஆரம்பக் காலத்தில் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்தபோது, இணைவைப்பவர்கள், நபியவர்களுக்கு பல இன்னல்களை விளைவித்து நபியைப்பின் பற்றியவர்களை கொடுமைகளுக்கு உட்படுத்தினார்கள், சந்தர்ப்பம் கிடைக்கும்போது கையில் அகப்பட்ட முஸ்லிம்களை வன்கொலையும் செய்தார்கள். இப்படி பதிமூன்று ஆண்டுகாலம் பட்ட தொல்லைகளும் - உயிரிழப்புகளும் உண்டு. இறுதியாக நபி (ஸல்) அவர்களின் உயிருக்கும், நபி (ஸல்) அவர்களைப்பின் பற்றியவர்களின் உயிருக்கும் ஆபத்து என்ற நிலையில்தான் நபி(ஸல்) அவர்களும், அவர்களைப்பின் பற்றுபவர்களும் தமது உடமைகளை இழந்து மக்காவைத் துறந்து அகதிகள்போல் வெளியேறுகிறார்கள். - இந்த ஆரம்ப பதிமூன்று ஆண்டுகால இஸ்லாத்தை கண்டு கொள்வதே இல்லை, வசதியாக மறைத்து விடுகிறார்கள்.

திருமறைக்குர்ஆனில் பல வசனங்கள் இவ்விபரங்களை விளக்குகிறது, இவைகள் இவர்களின் பார்வைக்குத் தெரிவதில்லை. ஹதீஸ் ஆதாரங்களுக்கு இணையதளங்களின் சுட்டியை காட்டும் வேளையில் - அதே ஹதீஸ் நூல்களிலேயே, இஸ்லாத்தின் முந்தைய பதிமூன்று ஆண்டுகால வரலாறும் பதியப்பட்டிருக்கிறது இதுவும் இவர்களின் கண்ணிற்கு(?) வசதியாக மறைந்து விடுகிறது - சாமர்த்தியமாக மறைத்து விடுகிறார்கள். இவர்கள் இஸ்லாத்தை விமர்சிக்கும்போது மட்டும் தமது விரிவான சிந்தனையையும் சுருக்கிக் கொள்கிறார்கள். என்பதே நிதர்சனமான உண்மை. இனி வியத்துக்கு வருவோம்.

பனூ முஸ்தலிக் போர்.

இப்னு அவ்ன் அறிவிக்கிறார்கள், நான் நாஃபிவு அவர்களிடம் "போர் தொடுப்பதற்கு முன்பு இஸ்லாத்திற்கு அழைப்பு கொடுக்க வேண்டுமா?" என்று எழுதி கேட்டேன்.

அதற்கவர், "இது இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் அவசியமாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பனூ முஸ்தலிக் கூட்டத்தினரை அவர்கள் தங்களின் கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டிக் கொண்டிருக்கும்போது அவர்கள் அறியாமலேயே போர் தொடுத்தார்கள். அவர்களில் சண்டையிட்டவர்களை கொன்று மற்றவர்களை கைது செய்தார்கள். அப்பொழுதுதான் ஜுவைரியா பின்த் அல்-ஹாரித் அவர்களை கைப்பற்றினார்கள்" என்பதாக பதில் எழுதினார். அப்போரில் கலந்துக்கொண்ட அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறது. ஸஹீஹ் முஸ்லிம், ஹதீஸ் எண் 4292


மேற்கண்ட ஹதீஸையொட்டி முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீது மூன்று குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன.

1. முஹம்மது நபி (ஸல்) அவர்கள், உத்தமரல்ல.

2. முஹம்மது நபி (ஸல்) அவர்கள், சரணடைந்த நிராயுதபாணிகளைக் கொன்றார்.

3. முஹம்மது நபி (ஸல்) அவர்கள், போர் அறிவிப்பைப் பிரகடனப்படுத்தாமல், கொள்ளைக் கூட்டத்துத் தலைவனைப் போல் தாக்கியிருக்கிறார்.


இந்தக் குற்றச்சாட்டில் எள்ளளவும், எள் முனையளவும் உண்மையோ, நேர்மையோ இல்லை என்பதை நாம் தெரிந்து கொள்வதற்கு முன்.. தமிழ்நாடு மாநிலத்திற்குட்பட்ட ஏதாவது ஒரு நகரத்தில், அல்லது கிராமத்தில், அரசுக்கெதிராகக் கிளர்ச்சி செய்பவர்கள் ஒரு சிறு கும்பலாக ஓன்று சேர்ந்து, ரகசிய இடத்தில் வன்முறைக்குத் தேவையான ஆயுதங்களை சேகரிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இது உளவுத்துறை மூலமாக அரசுக்குத் தெரியவந்தால், ரகசிய இடத்தில் தங்கியிருக்கும் வன்முறையாளர்களைப் பிடிப்பதற்காக அரசும் ரகசியமாகவே திட்டமிட்டு செயல்படும் - செயல்படவேண்டும். இங்கு வன்முறையாளர்களுக்கு, அவர்களைப்பிடிப்பதற்கானத் தகவலை முன்னறிவிப்பாகத் தெரியப்படுத்த வேண்டும் என்பது புத்திசாலித்தனம் இல்லை, மாறாக முட்டாள் தனம் என்பதில் சந்தேகமில்லை.

ஒருநாட்டிற்கும், இன்னொரு நாட்டிற்கும் தொடங்கவிருக்கும் போரையே பிரகடனப்படுத்த வேண்டும். ஒரு நாட்டிற்குள் நடக்கும் உள்நாட்டுக் குழப்பங்களை அரசு இரும்புக்கரம் கொண்டு தடுக்கும். போர் அறிவிப்பு செய்து கொண்டு போர் தொடுப்பதற்கு பனூ முஸ்தலிக் போர் இரு நாட்டிற்கு நடந்த போரல்ல. மதீனாவில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஆட்சிக்குக் கட்டுப்படுகிறோம் என்று அரசோடு ஒப்பந்தம் செய்து கொண்ட பனூ நளீர், பனூ குறைளா, பனூ முஸ்தலிக் ஆகிய கூட்டத்தினர் ஒப்பந்தத்தை மீறி பல முறை முஹம்மது (ஸல்) அவர்களைக் கொலை செய்யவும் முயற்சித்தார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்களோடு செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு மாறாக, மக்கா இணைவைப்பாளர்களுடன் கை கோர்த்துக் கொண்டு, மதீனாவின் செய்திகளை ரகசியமாக இணைவைப்பவர்களுக்கு அறிவித்து மதீனா மீது போர் தொடுக்கும் போர் சூழலை எதிர்பார்த்திருந்தார்கள்.

கூடவேயிருந்து குழி பறித்தல் என்பார்களே இத்துரோகச் செயலைத்தான் மதீனா அரசுக்கு பனூ முஸ்தலிக் கூட்டத்தினர் செய்து வந்தனர். அரசுக்கெதிராக போர் செய்வதற்குப் படையைத் திரட்டிக்கொண்டு முஸ்லிம்களை தாக்குவதற்காக ஒரு தண்ணீர் துறையில் இவர்கள் குழுமியிருப்பதாக நபி (ஸல்) அவர்களுக்குத் தகவல் கிடைத்து, அவர்களைத் தடுப்பதற்காகவே நபி (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் மதீனாவிலிருந்து புறப்பட்டு தண்ணீர் துறைக்கு வந்து சேர்ந்தார்கள் இங்குதான் பனூ முஸ்தலிக் கூட்டத்தினரின் தேசத் துரோகச் செயல் முறியடிக்கப்பட்டது.

பனூ குஸாஆ என்ற அரபுக் குலத்தாரில் ஜுதைமா பின் சஅத் என்றொருவர் இருந்தார். இவரது புனைப் பெயரே 'முஸ்தலிக்' என்பது. இவருடைய வழித்தோன்றல்களே 'பனூ முஸ்தலிக்' கூட்டத்தார். இவர்கள் ஹாரிஸ் பின் அபீ ளிரார் என்பவரின் தலைமையில் (சுமார் 700 பேர்) முஸ்லிம்களைத் தாக்குவதற்காகப் படை திரண்டுள்ளனர் என்ற தகவல் நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது எனவே, அவர்களைத் தடுக்கும் நோக்கில் நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் மதீனாவிலிருந்து புறப்பட்டு 'முரைய்சீவு' என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். 'முரைய்சீவு' என்பது மதீனாவுக்கருகே கரையோரத்தில் உள்ள தண்ணீர் துறைக்குப் பெயராகும். இவ்விடத்தில் போர் நடந்தது. இதனாலேயே இதற்கு 'முரைய்சீவு' போர் என்ற பெயர் உண்டு. இப்போரில் எதிரிகள் தோற்கடிக்கப் பட்டனர். அவர்களில் சிலர் உயிர் இழந்தனர். பலர் கைது செய்ய பட்டனர். இப்போர் பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் அவர்களுடைய துணைவியர் ஆயிஷா (ரலி) அவர்களும் வந்து இருந்தனர். இப்போர் முடிந்து திரும்பி வரும் போதுதான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு சுமத்தும் சம்பவம் நடந்தது. இந்த போர் எந்த ஆண்டில் நடந்தது என்பது பற்றி பல்வேறு தகவல்கள் காணப்படுகின்றன. ஹிஜ்ரி ஆறாமாண்டு ஷஅபான் மாதம் என்கிறது ஒரு தகவல். ஹிஜ்ரி 5ஆம் ஆண்டு ஷஅபான் மாதம் என்கிறது மற்றொரு தகவல். ஹிஜ்ரி 4ஆம் ஆண்டு என்றும் சொல்லப் படுகின்றது. (ஃபத்ஹுல் பாரி, உம்ததுல் காரி)

பனூ முஸ்தலிக் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர். தோற்றவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அந்தக் கூட்டத்தில் கடுமையான எதிரியாக இருந்த முஸாபிஃ பின் ஸஃப்வான் என்பவர் கொல்லப்பட்டார் அவரின் மனைவியும், அந்தக் கூட்டத்தின் தலைவர் ஹாரிஸ் என்பவரின் மகளுமான ஜுவைரியாவும் அவர்களில் ஒருவர். ஜுவைரிய அவர்கள் ஸாபித் பின் கைஸ்(ரலி) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டார். ஸாபித் பின் கைஸ் (ரலி) ஏழு ஊகியாவை தந்து விட்டு விடுதலைப் பெற்றுக் கொள்ளமாறு ஜுவைரியா அவர்களிடம் கூறினார். நான் இந்தக் கூட்டத்தின் தலைவரின் மகள், எனக்கு ஏழு ஊகியா தந்து நான் விடுதலையாக உதவுங்கள் என்று ஜுவைரியா நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். ஏழு ஊகியாவைத் தந்து ஜுவைரியாவை நபி (ஸல்) அவர்கள் விடுதலை செய்தார்கள். பின் ஜுவைரியாவின் சம்மதத்துடன் அவரை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். இதன் விளைவாக நபி (ஸல்) அவர்கள் சம்பந்தம் செய்து கொண்ட கூட்டத்தாரை அடிமைகளாக வைத்திருப்பது சரியில்லை என்று போரில் கைதிகளாகப் பிடித்து பங்கிடப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

Monday, June 06, 2005

பூமியில் முதல் ஆலயம் காஃபா.

மக்காவில் இருக்கும் காஃபா என்னும் ஆலயத்தின் வரலாற்றுச் சான்றைச் சொல்லும் நபிமொழியை எடுத்தெழுதி அதில் குறிப்பிட்டிருக்கும் வரலாற்றுத் தகவல் தவறானது என்று நிரூபிக்கும் நோக்கத்தோடு முன் வைக்கப்பட்ட நபிமொழி இது..

நான் நபி(ஸல்) அவர்களிடம்) 'இறைத்தூதர் அவர்களே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?' என்று கேட்டேன். அவர்கள் 'அல் மஸ்ஜிதுல் ஹராம் - மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்'' என்று பதிலளித்தார்கள். நான் 'பிறகு எது?' என்று கேட்டேன். அவர்கள் ('ஜெரூஸத்தில் உள்ள) ''அல் மஸ்ஜிதுல் அக்ஸா'' என்று பதிலளித்தார்கள். நான் 'அவ்விரண்டுக்கு மிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது'' என்று கேட்டேன். அவர்கள் 'நாற்பதாண்டுகள்'' (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப்பட்டது) பிறகு 'நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே அதைத் தொழுதுவிடு. ஏனெனில் நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில் தான் சிறப்பு உள்ளது'' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர், அபூதர் (ரலி) தமிழ் புகாரி 3366)

இந்நபிமொழியில், பூமியில் முதலாவதாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் மக்காவில் அமைந்த காஃபா என்னும் ஆலயம், பூமியில் இரண்டாவதாக அமைக்கப்பட்டது ஜெருஸத்தில் உள்ள அக்ஸா பள்ளிவாசல், இரண்டுக்கும் உள்ள கால வித்தியாசம் நாற்பது ஆண்டுகள் என்றும் விளக்குகிறது. இதில் முரண்பாடு காண்பவர்கள் கீழ் காணும் கருத்தை வைக்கிறார்கள்.

//**குறிப்பு:
பிரச்னை என்னவென்றால், காபா (அல் மஜிதுல் ஹரம்) கட்டப்பட்டது ஆபிரஹாமால் என்று கூறிக்கொள்கிறார்கள். அவர் இருந்தது 2000 கிமு என்று சுமாராகச் சொல்லலாம். சாலமன் கட்டிய கோவில் கட்டப்பட்ட வருடம் என்று சுமார் 958 கிமு என்று கூறுகிறார்கள். இடையே ஆயிரம் வருடங்கள். முகம்மது கூறுவதோ 40 வருடங்கள்!*//


ஆப்ரஹாம், (நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தான் பூமியில் முதன் முதலாக காஃபா பள்ளிவாசலைக் கட்டினார்கள் என்பது தவறு. காஃபாவை மறு நிர்மாணம் செய்தார்கள் என்பதே சரி.

ஆப்ரஹாம் தமது இரண்டாவது மனைவி ஹாஜர் (அலை) அவர்களையும், தாய்ப்பால் அருந்தும் பருவத்திலிருந்த தமது மகன் இஸ்மவேல் (நபி இஸ்மாயீல் (அலை) அவர்களையும் இறைவனின் கட்டளைப்படி, அன்று யாருமே வசிக்காத - தண்ணீரைக் காண முடியாத, பறிதவிப்பான நிலையில் மக்காவில் குடியமர்த்திவிட்டுச் சென்று விடுகிறார். இந்த வரலாற்று சம்பவத்தில்தான் வானவர் ஜிப்ரீல் மூலம் ஸம் ஸம் நீருற்றை அங்கு இறைவன் ஏற்படுத்துகிறான். ''நீங்கள் (கேட்பாரற்று) வீணாகி விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டாம். இங்கு அல்லாஹ்வின் ஆலயம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சிறுவரும் (இஸ்மவேலும்) அவருடைய தந்தையும் (ஆப்ரஹாமும்) சேர்ந்து கட்டுவார்கள். அவருடைய குடும்பத்தை அல்லாஹ் வீணாக்கி விட மாட்டான்'' என்று ஹாஜர்(அலை) அவர்களிடம் வானவர் ஜிப்ரீல் கூறினார். அப்போது காஃபா ஆலயம், தரையிலிருந்து உயரமாக ஒரு மேட்டைப் போன்று அமைந்திருந்தது. வெள்ளம் வந்து அதன் வலப் பக்கமாகவும் இடப் பக்கமாகவும் (வழிந்து) சென்றுவிடும். (தமிழ் புகாரி 3364, நீண்ட ஹதிஸிலிருந்து)

இந்த செய்திலிருந்து ஏற்கெனவே இருந்த காஃபா ஆலயம் சிதிலமடைந்து விட்டதால் அதே இடத்தில் மீண்டும் இறைத்தூதர் ஆப்ரஹாம் என்ற இப்ராஹீம் (அலை) அவர்களால் காஃபா மறு நிர்மாணமாகக் கட்டப்பட்டது அதுவும் இறைவனின் கட்டளைப்படி.

திருக்குர்ஆன் கூறுவது.
3:96. (இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான். அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.

முதல் மனிதர் படைக்கப்பட்டு அவர் இறைவனை வணங்குவதற்காக எழுப்பிய ஆலயம்தான் காஃபா என்பதை 3:96 வசனத்திலிருந்து விளங்கலாம். மேலும் முதல் மனிதர் ஆதாம் என்ற ஆதம் (அலை) அவர்கள் மக்காவில் தான் இறக்கப்பட்டார்கள் என்பதையும் இவ்வசனம் கூறுகிறது. சுவனத்திலிருந்து கொண்டு வந்த கருப்புக் கல் (ஹஜருல் அஸ்வத்) காஃபாவின் ஒரு மூலையில் பதிக்கப்பட்டிருப்பதும் இதை உறுதி செய்கிறது.

இறைவனை வணங்குவதற்காக முதன் முதலாக ஆலயத்தை எழுப்பிவர் ஆப்ரஹாம் என்பது - ஆப்ரஹாம் காலத்திற்கு முன் பல்லாயிரம் ஆண்டுகளாகவே மனிதயினம் இருந்திருக்கிறது, நபிமார்களும் இருந்திருக்கிறார்கள். இவர்களெல்லாம் இறைவழிபாட்டிற்காக ஆலங்களை ஏற்படுத்திக் கொண்டதில்லை என்ற தவறானக் கருத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே புகாரி 3366 வது ஹதீஸில் சொல்லப்படும் வரலாற்றுக் குறிப்புகளில் முரண்பாடு இல்லை. மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமும், ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவும் முதலில் எழுப்பப்பட்ட ஆலங்களில் மிகப் பழமையான இரு ஆலயங்கள்.

முஹம்மது (ஸல்) அவர்கள் நபி ஆவதற்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பு - அவர்களின் 35வது வயதில், மக்காவாசிகள் காஃபாவை அடிமட்டம் வரை இடித்து விட்டு மீண்டும் கட்டியிருக்கிறார். முஹம்மது (ஸல்) அவர்கள் மறைவுக்குப் பின்னும் மக்காவை ஆட்சி செய்தவர்கள் காஃபாவை இடித்து விட்டு மீண்டும் கட்டியிருக்கிறார்கள் என்பது வரலாறு. அதுபோல் மஸ்ஜிதுல் அக்ஸாவும் நபி சுலைமான் (சாலமன்) அவர்களால் மறு நிர்மாணம் செய்யப்பட்டது என்பதே சரியாகும்.

தலாக் ஓர் விளக்கம் -2

முஸ்லிம் பெண்களின் விவாகரத்து உரிமை.
மனைவியைப் பிடிக்கவில்லை என்றால் தலாக் - விவாகரத்துச் செய்யும் உரிமை, இஸ்லாத்தில் ஆண்களுக்கு இருப்பது போன்று, பெண்களுக்கு இல்லை என்று முஸ்லிமல்லாதோர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். இஸ்லாம் பெண்களுக்கும் அந்த உரிமையை வழங்கியிருக்கிறது என்பதை அறியாததால் அவர்கள் இவ்வாறு கருதுகின்றனர். கணவன் - மனைவி இருவருக்குமிடையே விவாவரத்துச் செய்யும் முறையில் வித்தியாசமிருக்கிறதே தவிர உரிமையில் வித்தியாசமில்லை.

சில முஸ்லிம்களும் இஸ்லாத்தை அறியாததால் பெண்களின் விவாகரத்து உரிமை மறுக்கப்பட்டாலும் இதற்காக இஸ்லாத்தைக் குறை கூற முடியாது. திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள கணவனுக்கு உரிமை இருப்பது போல் மனைவிக்கும் உரிமையிருப்பதை இவ்வசனத்திலிருந்து விளங்கலாம். ''கணவர்களுக்கு மனைவியர் மீதுள்ள உரிமையைப் போன்று, மனைவியர்க்கும் கணவர்கள் மீது உரிமையுண்டு'' 2:228

தவறான எண்ணம்.
கணவனால் கொடுமைப்படுத்தப்படும் மனைவி, அவனிடமிருந்து பிரிய விரும்புகிறாள் இந்த நிலையில் கணவன் மறுக்கிறான் - அவன் தலாக் விட்டால் தான் மனைவி பிரிய முடியுமென்றால் - காலமெல்லாம் அவனின் கொடுமைக்கு அவள் ஆளாகிக் கொண்டிருக்க நேரிடும் இது எவ்வளவு பெரிய விபரீதம் என்று தவறாக விளங்கி, இஸ்லாத்தை விமர்சிக்கிறார்கள். இது களையப்பட வேண்டும்.

கணவன் செய்யும் அக்கிரமங்களையெல்லாம் சகித்துக் கொண்டு, கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று ஆணாதிக்க சக்திக்கு அடிமைப்பட்டு வாழ பெண்களை ஒரு போதும் இஸ்லாம் நிர்ப்பந்திக்கவில்லை. மனைவியைப் பிடிக்கவில்லையெனில் ''தலாக்'' சொல்லி விவாக பந்தத்தை முறித்துக் கொள்ளும் உரிமை கணவனுக்கு இருப்பது போல், கணவன் மீது அதிருப்தியுற்ற மனைவி ''குலா'' எனும் விவாகப் பிரிவினையின் மூலம் கணவனைப் பிரியும் உரிமையைப் பெற்றிருக்கிறாள்.

ஸாபித் இப்னு கைஸ் இப்னி ஷம்மாஸ்(ரலி) அவர்களின் துணைவியார் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் ஸாபித் அவர்களின் நன்னடத்தையையோ, அவரின் குணத்தையோ குறை சொல்லவில்லை. ஆயினும் நான் இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்'' என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'சரி! அவர் (உனக்கு மஹராக - மணக்கொடையாக வழங்கியத்) தோட்டத்தை அவரிடமே திருப்பித் தந்து விடுகிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு அவரும் 'சரி' என்றார். நபி (ஸல்) அவர்கள் அந்தக் கணவரிடம் ''தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு'' என்று கூறினார்கள். (புகாரி, நஸயீ)


பெண்ணுக்கு வழங்கியுள்ள இந்த விவாகரத்து உரிமையை இஸ்லாமிய வழக்கில் ''குலா'' என்பார்கள். இந்த நபிவழியிலிருந்து விளங்கும் சட்டங்கள்.

1 ஒரு பெண்ணுக்கு தன் கணவனைப் பிரிய வேண்டுமானால் அந்தப் பகுதியின் தலைவரிடம் முறையிட வேண்டும்.

2 அவள் திருமணத்தின் போது மஹராக - மணக் கொடையாக எதை வாங்கினாளோ அதைக் கணவனிடம் ஒப்படைக்குமாறு தலைவர் கட்டளையிட வேண்டும்.

3. அந்த மஹரைப் பெற்றுக் கொண்டவுடனே, அவளை விட்டுப் பிரிந்து விடுமாறு கணவருக்குத் தலைவர் கட்டளையிட வேண்டும். அந்தக் கட்டளைக்கு அவன் கட்டுப்படா விட்டாலும், தலைவர் அத்திருமணத்தை ரத்துச் செய்வார்.

4 கணவனைப் பிடிக்காத மனைவி அதற்கானக் காரணத்தை சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இஸ்லாத்தில் விவாகரத்து என்பது ஆண்கள், பெண்கள் இருபாலாருக்கும், முறையில் வித்தியாசமிருந்தாலும் உரிமையில் சமமாகவே வழங்கப்பட்டிருக்கிறது. மனைவியைத் தலாக் சொல்லும் கணவன் அது பற்றி அந்தப் பகுதி தலைவருக்குத் தெரிவிக்க வேண்டும். அதே மாதிரி கணவனைப் பிரிய எண்ணும் மனைவியும் அந்தப் பகுதி தலைவரிடம் முறையிட வேண்டும். ''தலாக்'', ''குலா'' இவ்விரண்டுமே ரகசியமாக நடப்பதில்லை. ஊரறியப்படுவதுதான் மறுமணத்திற்கான வாய்ப்பையும் எளிதாக்கும்.

திருமணப் பந்தத்தின் மூலம் இணையும் தம்பதியர்கள் ஒருவரையொருவர் புரிந்து நல்லிணக்கத்தோடு தொடர்ந்து வாழலாம். அல்லது தம்பதியரிடையே பிணக்கு ஏற்பட்டு தொடர்ந்து அதில் நீடிக்க விரும்பாமல் நிரந்தரமாகப் பிரிந்துவிடும் நிலையும் ஏற்படலாம். இஸ்லாம், கணவன் - மனைவி இருவருக்கும் மணவிலக்கை இலேசாக்கியிருக்கிறது. இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளைத்தான் பிரிக்க முடியாது. திருமணத்தினால் ஏற்படும் கணவன், மனைவி உறவைப் பிரிக்கவே முடியாத உறவாக இஸ்லாம் கருதவில்லை. திருமணத்திற்குப் பின் கணவன் ஒழுக்கமில்லாதவன் என்று அறியப்பட்டால் அதை சகித்துக் கொண்டு அவனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பது கட்டாயமல்ல. ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சமமாக ''விவாகரத்தில்'' இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியிருக்கிறது.