தற்போதுள்ள நமது சரித்திரப் பாடப்புத்தகங்கள் அந்த கால முஸ்லிம் மன்னர்களைப் பற்றி தவறான ஒரு கருத்தைக் கூறி தற்போதைய தலைமுறையினரிடம் , உண்மைக்கு மாறான ஒரு கருத்தைப் பரப்பி வருகிறது. அந்தக்கால முஸ்லிம் மன்னர்களில் பலர் இந்துக்களை வெறுத்தவர்கள் போலவும், கோவில் சிலைகளை உடைத்து நொறுக்கியவர்கள் போலவும், இந்துக்களை வாள் முனையில் மிரட்டி முஸ்லிம் மதத்துக்குக் கொண்டு போனவர்கள் என்றும் சித்தரிக்கப்படுகின்றன.
இவையெல்லாம் பொய்யானவை - முஸ்லிம்கள் மீது ஒரு தப்பபியாரத்தை ஏற்படுத்த இட்டுக்கட்டிய கட்டுக்கதை - என்று நான் சொன்னால் பலர் நம்பமாட்டீர்கள்.
நமக்கு எதுக்கு பொல்லாப்பு
ஓரிஸா கவர்னர் பி.என். பாண்டே அவர்கள் நிகழ்த்திய மூன்று பேரூரைகள், இஸ்லாமும் இந்திய கலாச்சாரமும்” Islam and Indian Culture என்ற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. அதை ஒரு முறை படித்துப் பாருங்கள். உங்கள் கடைக்காரரிடம் அந்தப் புத்தகம் இல்லாவிட்டால், புத்தக ஆசிரியருக்கு எழுதி ஒரு பிரதி கேட்டுப் பாருங்கள். இலவசமாகத் தர அவர் ஒப்புக்கொள்ளாவிட்டால், நான் அதற்குண்டான காசைக் கொடுத்து விடுகிறேன். அதைப் படித்துப் பாருங்கள். நமது பள்ளிகள், கல்லூரிகள் எல்லாவற்றிலும் அதைக் கட்டாயமாகப் படிக்கச் செய்யலாம் என்று கூட கருதுகிறேன்.
சரித்திர உண்மைகள் என்று அச்சிடப்பட்டுள்ளவற்றில் உள்ள சில பொய்களை அவர் பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறார். கல்கத்தா பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறைத் தலைவராக உள்ள டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி அவர்கள் எழுதிய சரித்திரப் புத்தகம் என்று உள்ளது. அதில் அவர் ஒரு செய்தியை எழுதியிருக்கிறார். முஸ்லிம் மதத்துக்கு மாறும்படி திப்புசுல்தான் வற்புறுத்தியதால் 1,000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்” என்று அந்தப் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தகவல் அவருக்கு எப்படிக் கிடைத்தது என்று விசாரித்த போது மைசூர் கெஜட்டிலிருந்து எடுத்ததாகச் சொல்கிறார் டாக்டர் சாஸ்திரி. இப்படிப்பட்ட செய்திகளை கெஜட்டில் கண்டுபிடிக்க முடியாது. சாஸ்திரி அவர்கள் குறிப்பிடுகிற வேறு ஆதாரங்களிலும் அப்படிப்பட்ட செய்தி இருக்காது, என்றாலும் அவரது புத்தகம் மேற்கு வங்காளம், அஸ்ஸாம், பீஹார், ஓரிஸ்ஸா, மத்தியப்பிரதேசம், உத்தர்பிரதேஷம் ஆகிய மாநிலங்களிலுள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பாடப்புத்தகமாக வைக்க அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
அவர் குறிப்பிட்டிருக்கிற செய்தி உண்மையென்றால் , திப்பு சுல்தான் இந்துக் கோயில்களுக்கு எராளமான மானியம் கொடுத்திருக்கிறாரே எப்படி? அது மட்டுமா? சீரங்கப்பட்டினத்திலுள்ள தனது கோட்டைக்குள்ளிருக்கும் சீரங்கநாதர் கோயிலில் தினசரி பூஜை நடைபெறவும் திப்புசுல்தான் ஏற்பாடு செய்தவராயிற்றே!
முஸ்லிம் மன்னர்களிலேயே மிக மோசம் என்று வர்ணிக்கப்படுபவர் அவுரங்கசீப். அந்த அவரங்கசீப் இந்துக்களின் தேவஸ்தானங்களுக்கும், சீக்கிய குர்துவாராக்களுக்கும் ஏகப்பட்ட அளவில் மானியம் வழஙகியுள்ளார். சில இந்துக் கோயில்களை இடிக்க அவர் ஆணையிட்டிருக்கிறார். இதே போல் முஸ்லிம் மசூதிகள் சிலவற்றையும் அவர் இடித்துத் தள்ள உத்தரவு போட்டுள்ளார். தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று நிரூபிக்கப்பட்டால் அது முஸ்லிம் மசூதியோ, இந்துக்களின் கோயிலோ பாரபட்சமே காட்டுவதில்லை அவரங்கசீப். உடனே அதை இடித்துத் தள்ளு என்று கடுமை காட்டியிருக்கிறார்.
இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பகை உணர்வை விதைக்கும் வகையில் பிரிட்டிஷ்காரர்கள் திட்டமிட்டு இப்படியான பொய் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுச் சென்றிருப்பதாக பாண்டே விளக்குகிறார். வெள்ளைக்காரர்கள் ஆட்சியின் போது, துரை மார்கள் எழுதிய கடிதங்களில் “ஒருவரோடு ஒருவர் மோத விட வேண்டும் என்ற வாசகம் உள்ளதையும், கர்சன் பிரபுவுக்கு ஹேமில்டன் எழுதிய கடிதத்தில் “நமது நிலைமையை ஸ்திரப்படுத்திக் கொண்டு படித்த இந்திய மக்களிடையே பிளவை ஏற்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளதையும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். டஃபரின் பிரபு எழுதியுள்ள ஒரு குறிப்பில் “மதத்தின் பேரால் ஏற்படுகிற பிளவு தான் நாம் பிரிட்டிஷாரின் நிலையை வலுப்படுத்தும்” என்று சொல்லி இருக்கிறார்.
சரித்திரம் எழுதியுள்ள அந்தக் காலத்து சாஸ்திரிகளும், இந்த காலத்து பி.என். ஒய்க்களும் நமது முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராக இளம் உள்ளங்களில் விஷம் தூவி இருக்கிறார்கள் பார்த்தீர்களா?
நன்றி: அந்நஜாத் ஜுலை, 1987