Sunday, September 18, 2005

வஹி: இறைச்செய்தியும்- அறிவியலும்-12

சுழற்றும் பூமி -12


ஏ.கே.அப்துர் ரஹ்மான்

சென்ற கட்டுரையில் நாம் கேட்டிருந்த கேள்வியைக் கேட்டதும் அவை ஒரே நேரத்தில்தான் தரையிறங்கும் என்று கூறியிருப்பார்கள். அதே நேரத்தில் அந்த பதிலைத் தொடர்ந்து, எப்படி? என்ற மற்றொரு வினாவும் எழுப்பப்பட்டிருப்பதை பார்த்திருப்பார்கள். இந்த வினாவைப் பார்த்ததும் இந்த வினாவை எழுப்பியவரைச் சற்று விபரீதமாகக் கூடச் சிலர் எண்ணியிருப்பார்கள். ஏனென்றால் ஹாங்காங்கிலிருந்து டில்லிக்கு எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரம்தான் டில்லியிலிருந்து ஹாங்காங்கிற்கு இருக்க முடியும். எனவே எந்த ஊரிலிருந்து எந்த ஊருக்குப் பறந்தாலும் - தூரம் ஒன்றாக இருப்பதால் அவை ஒரே நேரத்தில்தானே தரையிறங்கியாக வேண்டும்!? அப்படியென்ன புதிர் வந்துவிட்டது என்பதே இந்த விபரீதப் பார்வைக்குரிய காரணமாக இருக்கும்.

ஆனால் விபரீதத்திற்குப் பதில் விவேகமாகப் பார்க்க வேண்டிய ஒரு வினாவைத்தான் நாம் எழுப்பியிருந்தோம். சில விபரம் கெட்டவைகள் தங்களுக்கு விவேகிகளாகத் தங்களுக்குப் பட்டம் சூட்டிக் கொண்ட போதிலும்.

நாம் வசித்துக் கொண்டிருக்கும் அந்த பூமி ஆகாயத்தில் அறையப்பட்டதை போல் அசைவற்றிருக்கும் ஒரு பொருளன்று: அது கணமும் ஓய்வின்றிச் சுழன்றோடிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் என்ற அறிவியலைச் சத்தியத் திருமறை, திரும்பத் திரும்ப நிறுவிக் கொண்டிருக்கும் தூய வசனங்களின் ஆழத்தை உலகம் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே அந்த வினாவை நாம் எழுப்பியிருந்தோம்.

மீண்டும் அந்த வினாவிற்கே திரும்புவோம். இரண்டு விமானங்களும் பறக்கும் நேரம், வேகம் மற்றும் தூரம் ஆகியவை சமமாக இருப்பதால் அவை ஒரே நேரத்தில்தான் தரையிறங்கும் என்பதை பதிலாகக் கண்டோம். நாம் மேற்கொள்ளும் பயணம் தரை வழிப் பயணமாக இருந்தால் இது சரியான பதிலாகும். ஆனால் நாம் மேற்கொள்ளும் பயணமோ ஆகாயப் பயணம். இதில்தான் சிக்கல் இருக்கிறது. எனவே இந்தப் பதிலைப் பரிசீலித்தாக வேண்டும்.

முந்தைய மூன்று கட்டுரைகளில் (சுழலும் பூமி பாகம் 1, 2, 3) பூகோளம் சுழன்று கொண்டிருக்கிறது என்றும், மேலும் அதனுடைய பாதையில் அது ஓடிக் கொண்டிருக்கிறது என்றும் திருக்குர்ஆன் கூறிக் கொண்டிருப்பதை கண்டோம். எனவே திருமறையின் கூற்றிற்கிசையப் பார்த்தால் பூகோளத்தின் சுழற்சியும் அதன் நகர்வும் தரையிறங்க வேண்டிய விமானங்களின் இலக்குகளை நகரச் செய்து அதனால் பெரிய விபரீதங்களைத் தோற்றுவிக்க வேண்டும்.

சான்றாகப் பூகோளத்தின் சுழற்சியை முதலில் எடுத்துக் கொள்வோம். பூகோளம் இடமிருந்து வலமாக (Anti Clock Wise கடிகார சுற்றுக்கு எதிர்ச் சுற்றாக) கிழக்கு நோக்கிச் செல்கிறது. இதன் காரணமாக பூகோளத்திலுள்ள டில்லியும் அதனோடு சேர்ந்து கிழக்கு நோக்கிச் சுழல்கிறது. இந்த நிலையில் டில்லி விமானம் தரையில் இருக்கும்வரை அதுவும் தரையோடு சேர்ந்து சுழல்கிறது. ஆனால் இந்த விமானம் பறப்பதற்காக ஆகாயத்தில் எழுந்ததும் அதன் பிறகு அதற்கும், டெல்லிக்கும் உள்ள நேரடித் தரைத் தொடர்பு அறுபட்டுப் போகிறது. எனவே விமானம் பறக்கும் வேகத்தில் விமானம் நகர்கிறது. பூகோளத்தின் சுழற்சி வேகத்தில் டெல்லி நகர்கிறது.

டெல்லியும் சரி, விமானமும் சரி இரண்டும் ஒரே திசையில் நகர்கின்றன. எனவே டெல்லி என்ன வேகத்தில் நகர்கிறதோ, அதே வேகத்தில் அதன் மீது பறக்கும் விமானமும் நகர்ந்தால் (விமானத்தின் வேகம் பூகோளத்தின் சுழற்சி வேகத்தைக் காட்டிலும் சற்று அதிகம் பெற்றிருக்க வேண்டும். இருப்பினும் அந்த அதிக வேகம் இங்கு புறக்கணிக்கத் தக்கதே) விமானம் எப்போதுமே டெல்லியின் மீதே பறந்து கொண்டிருக்கும். டெல்லியை விட்டு இந்த விமானம் நகர வேண்டுமானால் டெல்லி நகரும் வேகத்தைக் காட்டிலும் அதிக வேகத்தில் விமானம் நகர வேண்டும். ஆனால் நமது விமானமோ டெல்லி நகரும் வேகத்தைக் காட்டிலும் குறைந்த வேகத்தில்தான் நகர்கிறது.

டெல்லியின் வேகம் (பூகோளத்தின் சுழற்சி வேகம்) மணிக்கு ஏறத்தாள 1675 கி.மீ. ஆனால் நமது விமானமோ மணிக்கு ஏறத்தாள 650 கி.மீ வேகத்தில்(சூப்பர்சானிக் போன்ற அதிவேக விமானங்களைத் தவிர்த்து, சாதாரண விமானங்கள்) பறக்கிறது. இந்நிலையில் நமது டெல்லி விமானம் ஒரு மணி நேரம் பறந்தால் அது ஹாங்காங்கை நோக்கி எவ்வளவு தூரம் முன்னேறியிருக்க முடியும்?.

இந்த வினாவிற்கு விபரீதமான பதிலைத்தான் நாம் பெறுகிறோம். அதாவது டெல்லி விமானம் ஒரு மணி நேரம் ஹாங்காங்கை நோக்கிப் பறந்தும் கூட அதனால் ஹாங்காங்கை நோக்கி ஒரு அங்குலம் கூட முன்னேறியிருக்க முடியாது என்பதுடன் அது புறப்பட்ட டெல்லியிலிருந்தே ஏறத்தாள 1025 கி. மீ. (1675 - 650) பின்வாங்கப் பட்டிருக்கும். எவ்வளவு விபரீதமான நிலை பார்த்தீர்களா?.

டெல்லி விமானத்தின் நிலை இதுவென்றால், ஹாங்காங் விமானத்தின் நிலை இதற்கு நேர் மாறானதாக இருக்கும். ஏனெனில் டெல்லி ஹாங்காங்கிற்கு மேற்கில் இருப்பதால் இந்த விமானம் பூகோளத்தின் சுழல் திசைக்கு எதிர்த்திசையில் பறக்கிறது. எனவே இந்த விமானம் டெல்லியை நோக்கி மணிக்கு 650 கி.மீ. வேகத்தில் முன்னேறிச் செல்லும் போது பூகோளத்தின் சுழற்சியின் காரணமாக டெல்லி ஹாங்காங் விமானத்தை மணிக்கு 1675 கி.மீ. வேகத்தில் முன்னோக்கி வருகிறது. எனவே இந்த விமானம் டெல்லி விமானம் பறக்கும் வேகத்திலேயே பறந்த போதிலும் கூட தன்னுடைய இலக்கை (டெல்லியை) நோக்கி ஒரு மணி நேரத்தில் ஏறத்தாள 2325 கி.மீ. (167510750) தூரம் முன் தள்ளப் பட்டிருக்கும். எவ்வளவு பெரிய வினோதம் இது!.

இப்படிப்பட்ட விபரீதங்களும் வினோதங்களும் இந்த பூமியின் மீது நடைபெறுமேயானால் ஹாங்காங்கிலிருந்து புறப்படும் விமானம் வெறும் நூறே நிமிடங்களில் டெல்லியைப் பிடித்து விட வேண்டும். ஆனால் அதே நேரத்தில் அதே வேகத்தில் பறந்த டெல்லி விமானம் அதே நூறு நிமிடத்தில் தரையிறங்கினால் அங்கு ஹாங்காங் இருக்காது. அது தரையிறங்கிய இடத்திலிருந்து ஏறத்தாள 5500 கி.மீ. (2250102250) கி.மீக்கு அப்பால் ஹாங்காங் நகர்ந்து கொண்டிருக்கும். எனவே இந்த நிலையில் டெல்லி விமானம் ஹாங்காங்கை பிடிக்க வேண்டுமென்றால் பூகோளம் தன்னுடைய முழுமையான ஒரு சுழற்சியை முடித்து இரண்டாவது சுழற்சியைத் துவக்கிய பின்தான் - அதாவது ஏறத்தாள 39 மணி நேரம் கழித்த பின்புதான் ஹாங்காங்கைப் பிடிக்க முடியும்!.

ஆனால் இப்படிப்பட்ட விபரீதங்களும், வினோதங்களும் இந்த பூமியின் மீது நடைபெறுகின்றனவா?. இல்லையே! ஏன்?. எனவே பூகோளத்தின் சுழற்சியின் காரணமாக அதன் மீது நடைபெற வேண்டிய விபரீத, வினோதங்களிலிருந்து அதன்மீது பறக்கும் விமானங்களைத் தடுத்துக் கொண்டிருக்கும் அற்புதமான ஏதோ ஒரு சக்தி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இவை யாவும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன அல்லவா?. பூகோளத்தின் சுழற்சியால் விளையும் பாதிப்புக்கள் இவையென்றால், பூகோளம் அதன் பாதையில் சென்று கொண்டிருப்பதால் ஏற்படும் விளைவுகள் படுபயங்கரமானவையாகவும் இருக்கும்.

பொதுவாக விமானங்கள் பூகோளத்தின் பல பாகங்களிலும் பறந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு பறக்கும் விமானங்களுக்குப் பிரச்னைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் அதன் பொருட்டு, பூகோளம் ஒரே இடத்தில் அசைவற்று இருக்க வேண்டும். ஆனால் நமது பூமியோ மணிக்கு ஏறத்தாள 108,000 கி.மீ. வேகத்தில் சூரியனைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பூகோளம் எத்திசையில் ஓடுகிறதோ, அத்திசையில் பறக்கும் விமானங்களின் கதி எப்படிப் பட்டதாக இருக்கும்?.

வினாடிக்கு 30 கி.மீ. என்ற படுபயங்கர வேகத்தில் பறந்து வரும் இந்த பூ பெருங்கோளம் நமது விமானங்களின் மீது மோதி அவைகளை சுக்கு நூறாகத் தகர்த்தெறிந்து விடாதா?. இதற்கு மறுபக்கங்களில் பறக்கும் விமானங்களின் கதியும் பரிதாபத்திற்குரியதல்லவா?. ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் அந்த விமானங்களை அந்தரத்தில் தவிக்க விட்டு நமது பூகோளம் ஒரு மணி நேரத்திற்குள் இலட்சம் கி.மீ. அப்பால் சென்று விடும். அதன் பிறகு அந்த விமானங்கள் பூமியை அடையவே இயலாது போய்விடும்.

பூகோளத்தின் இந்த விண்ணோட்டம் நமது ஆகாய பயணங்களுக்கு எவ்வளவு பெரிய அபாயத்தை விளைவிக்க வேண்டும் என்பதைப் பார்த்தீர்களா?. ஆனால் இப்படிப் பட்ட அபாயங்கள் ஏதும் இங்கு நடைபெறுகின்றனவா?. இல்லையே!. இதிலிருந்து பூகோளத்தின் விண்ணோட்டதால் ஏற்பட வேண்டிய பேரபாயங்களிலிருந்து நமது விமானங்களைத் தடுத்துக் கொண்டிருக்கும் ஒரு அற்புதமான ஆற்றல் இங்கு செயல்படுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா?.

இல்லை!. இல்லை!. பூமியாவது நகர்வதாவது?. அதெல்லாம் வெறும் கதை! ஏனவே பூமியின் மீது பறப்பவைகளுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது. ஆகவே இங்கு எந்தவித ஆற்றலும் செயல்பட வேண்டியதில்லை. செயல்படவும் இல்லை என மறுக்கக் கூடிய எந்த ஒரு அறிவியல் பற்றாளராவது இந்த இருபதாம் நூற்றாண்டில் இருக்காலாமா?.

ஆனால் அப்படியும் சிலர் இருபதாம் நூற்றாண்டில் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது அவர்களுக்காக வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.

அருமை நண்பர்களே! அறிவியலை ஏற்பதில் துணிவுடன் நிலை பெற்றவர்களே! பூகோளத்தின் நகர்வும் அதன் சுழற்சியும் பதினேழாம் நூற்றாண்டிலிருந்தே உலகில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாகப் பூகோளத்தின் மீது பறப்பவைகளுக்கு ஏற்படக் கூடிய இடையூறுகளிலிருந்து அவைகளைத் தடுக்கும் பொருட்டு அற்புதமான ஆற்றல் ஒன்று இதில் செயல்படுகிறது என்பதையும் அறிவியல் கண்கள் கண்டுணர்கின்றன. அப்படியிருந்தும் இந்த நூற்றாண்டில் கூட அந்த ஆற்றலைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் திருமறை வசனத்தை ஏளனம் செய்யக் கூடியவர்கள் இருக்கிறார்கள் என்றால் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முந்தைய காலகட்டம் எப்படி இருந்திருக்கும் எனச் சற்றே கற்பனை செய்து பாருங்கள். பூகோளத்தின் சுழற்சியையோ, அதன் நகர்வையோ கற்பனைகூடச் செய்திராத காலத்திலேயே சத்தியத் திருமறை தூய குர்ஆன் வையகம் வியக்க விளித்தோதும் அதன் ஜீவ வசனத்தைப் பாருங்கள். அறைகிறது குர்ஆன்.!

'சிறகுகளை விரித்தும், சுருக்கியும் தங்களுக்கு மேல் பறக்கும் பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா?. ரஹ்மானை (கருணை மிக்க இறைவனைத்) தவிர அவைகளை (இடையூறுகளிலிருந்து) தடுத்துக் கொண்டிருக்கவில்லை. (ஆம்!) திண்ணமாக அவன் யாவற்றின் மீதும் பார்வையுடையவன்!' (அல்-குர்ஆனின் 67வது அத்தியாயம் ஸூரத்துல் முல்கின் 19வது வசனம்).

ஆகாயப் பறவைகள் தடுக்கப்பட வேண்டுமா?. தடுக்கப்படவிலலையென்றால் அவை பூமியை விட்டுத் தொலைந்து போகுமா?. ஆல்லது பூமியில் விழுந்து விடுமா? எனக்கூறி இந்த வசனத்தை ஏளனம் செய்தவர்கள் எங்கே?. அவர்கள் இதற்கு மேலும் தங்கள் நிலையைத் திருத்திக் கொள்ளாமல் இருக்கலாமா?. திருத்திக் கொள்ளாதவர்கள் யாரோ அவர்களை அறிவியல் அபிமானிகளாக நம்மால் ஏற்கத்தான் முடியுமா?.

பூகோளம் தன்பாதையில் நகர்ந்து கொண்டிருப்பினும் பூமிக்கு வெளியே குறிப்பிட்ட தொலைவில் உள்ள பொருட்களை அது செல்லும் இடங்களுக்கெல்லாம் இழுத்துச் செல்வதையும், பூகோளம் சுழன்று கொண்டிருந்தாலும், குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டவைகளை அது தன்னுடன் சுழற்றிக் கொண்டிருப்பதையும் ஒப்புக் கொள்ளக்கூடியவர்கள் யாரோ அவர்களால் இந்த தூய வசனத்தை ஒருக்காலும் ஏளனம் செய்ய முடியாது. ஏனெனில் இந்தக் காரியங்களை எல்லாம் பூகோளம் நிகழ்த்த வேண்டுமாயின் அதன் பொருட்டு அதனிடம் அற்புதமான ஆற்றல் ஒன்று செயல்பட்டாக வேண்டும் என்றும், அந்த ஆற்றல்தான் 'ஈர்ப்பாற்றல்' என்று அவர்கள் அறிவார்கள்.

எனவே நமக்கு மேல் சிறகடித்துப் பறக்கும் பறவைகள் அவைகள் இருக்கும் இடங்களில் தடுத்து வைக்கப்படுகின்றன எனக்கூறி திருமறை வசனம் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நவீன வானியல் விஞ்ஞானம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

நவீன வானியலை இவ்வளவு அற்புதமாகக் கூறும் இத்தூய திருமறை, அந்த வசனத்தில் உள்ளடங்கியிருக்கும் பூகோளத்தின் ஈர்ப்பாற்றல் எனும் அதன் இயற்பியலின் மீது ஆதாரப்பட்டு நிற்கிறது. பூகோளத்தின் படைப்பில் இந்த ஈர்ப்பாற்றலை வடிவமைத்த இறைவன் பூகோளத்திற்கு வெளியில் பரவும் ஈர்ப்பாற்றலை நிறுவ, பறவைகளை ஆதாரம் காட்டினான். எனவே தன் படைப்பினங்களின் வாழ்க்கை வசதியையும் ஒழுங்கையும் நிலை நிறுத்துவதில் தன்னால் வடிவமைக்கப்பட்ட ஈர்ப்பாற்றலைச் செயல்பட வைத்துள்ளதாகக் கூறினான்.

மெய்யாயகவே திருமறை கூறியவாறு பூமிக்கு ஈர்ப்பாற்றல் உண்டெனில் அன்றாட வாழ்க்கையில் நாம் அதை உணரவில்லையே ஏன்?. இதற்குரிய விளக்கத்தையும் இந்த அற்புதத் திருமறையிலேயேத் தேடுவோமா?.

(வளரும் இன்ஷா அல்லாஹ்)

---------------------------
வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் முந்தைய பகுதிகள்.

பேரண்டப் படைப்பின் துவக்கம் -1

வாழத் தகுந்த கோள்-2

ஓசோன் -3

விண்ணகத்தின் பரப்பெல்லை -4

பேரண்டத்தின் ஈர்ப்பு விசை -5

விண்ணடுக்குகள் -6

உருண்ட பூமி -7

சுழலும் பூமி(1) -8

சுழலும் பூமி(2) -9

சுழலும் பூமி(3) -10

சுழலும் பூமி(4) -11

No comments: