Monday, May 23, 2005

மனைவி உங்கள் விளை நிலம்.

விதைக்கும் கருவைப் பேணி வளர்த்துக் குழந்தையாகப் பெற்றெடுக்கும் விளை நிலமே மனைவி - மனைவி உங்கள் விளை நிலம் என்று இங்கே உவமாணமாகச் சொல்லப்படுகிறது. அதுவும் அன்றைய யூதர்களின் தவறான நம்பிக்கையை மறுத்தே சொல்லப்பட்டது.

ஒருவர் தம் மனைவியிடம் பின்பக்கத்திலிருந்து உடலுறவு கொண்டால் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் காலத்து யூதர்கள் சொல்லிவந்தார்கள். இந்தத் தவறான நம்பிக்கைக்கு எதிராகவே இவ்வசனம் அருளப்பட்டது. (புகாரி, முஸ்லிம்)

2:223. உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள் ஆவார்கள், எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்.

மனைவியின் சம்மதம் இல்லா விட்டாலும் பலவந்தமாக உடலுறவு கொள்ளலாம் என்பதை இவ்வசனத்திலிருந்து துளியும் விளங்க முடியாது. தம்பதியர்களிடையே தாம்பத்ய உறவுக்கு பலாத்காரம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

Friday, May 20, 2005

எழுதுவோம்.

//*காஃபாவைப் புனித ஆலயமாக இஸ்லாம் அறிவித்திருப்பதால் அங்கே கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டிய சிலக் கட்டுபாடுகள் உண்டு, இஸ்லாத்தைச் சார்ந்தவர்களாலேயே அதைப்பேண முடியும் மற்றவர்களுக்குத் தெரியாது என்பதால் இயலாது. இது பற்றி விரிவாக என்பதிவில் எழுதவுள்ளேன்.
---
சிவா & ஈரோடு பிலிம்ஸ்,இது குறித்து எழுதுகிறேன். தற்போது நிறைய வேலைகள் இருப்பதால் உடனடியாக எழுத இயலாது என்றே நினைக்கிறேன். அதற்குள் அபூ முஹை அவர்கள் மேலே கண்டிருப்பது போன்று இது குறித்து விளக்கி எழுதுவார் என எதிர்பார்க்கிறேன்.*//

எழுதாமலா, எழுதுவோம் அதற்கு முன் நிலுவையிலிருக்கும் பழைய வினாக்களுக்கு விளக்கம் வைக்கப்பட வேண்டும். 01.05.2005 நமது பதிவில், நேசகுமார் கேட்டுக் கொண்டதற்காக - அதுவும் அவர் எழுதியவற்றிலிருந்தே மூன்று விளக்கங்களை கேட்டிருந்தோம், ஹதீஸ்களின் தரங்கள் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை என்பதால் முதலாவது கேள்விக்கு விளக்கம் தர வேண்டாம். 2,3 ஆகிய கேள்விகளுக்கு விளக்கமளிக்கட்டும். மீண்டும் கேள்விகள் கீழே.

2. நபி (ஸல்) அவர்கள், ஜைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது, நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் அதிர்ச்சியடைந்து எதிர்ப்பாயிருந்தார்கள் என்று நேசகுமார் கதையளந்திருக்கிறார்.

3. 24:3ம் வசனம் மாற்று மதப்பெண்டிர்களையெல்லாம் ''விபச்சாரிகள்'' என்று சொல்வதாக - நேசகுமார் திருக்குர்ஆன் மீது களங்கம் சுமத்தியிருக்கிறார். இந்த வசனத்திற்கு இதுதான் பொருள் என்பதை அவர் நிரூபிக்கட்டும்.

இதற்கு நேசகுமார் அவர்கள் விளக்கமளித்த பின் அடுத்தக் கட்டத்தைத் தொடர்வோம். ஸஹீஹான ஹதீஸ்கள் பற்றிய தகவல்கள் கேட்டிருக்கிறார், நேரம் கிடைக்கும் போது ஹதீஸ்களின் தரங்கள் பற்றி விளக்குவோம்.

Tuesday, May 17, 2005

அவசரப் பதிவு.

//*இந்நிலையில் என்னை வசைபாடுவதை விடுத்து (குறிப்பாக அபூ முஹை அவரது ஒரு பதிவில் என்னையும் எனது பிறப்பையும் பற்றி வசைபாடியிருந்தார்),*//

மனித குலம் அனைத்தும் தொடக்கத்தில் ஒரே தாய், தந்தையிடமிருந்தே பல்கிப் பெருகியவர்கள் என்பதை ஆழமாக நம்புபவன் நான். நேசகுமாரின் கர்வத்தையே நான் சாடியிருக்கிறேன், அவரது பிறப்பைப் பற்றி எங்கும் வசைபாடியதில்லை. என் மீது சுமத்தும் இந்தக் குற்றச்சாட்டு தவறான புரிதல், அல்லது அவதூறாகவே இருக்க வேண்டும்.

எடுத்துக் காட்டினால் அது பற்றி விளக்கவும், பிறப்பைப் பற்றி வசை பாடியது உண்மையென்றால் அதை வாபஸ் பெறுவதில் நமக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நேசகுமார் தயவு செய்து என் மீது சுமத்தும் குற்றத்தை சுட்டிக் காட்டி நிரூபிக்கவும். (இது ஒரு அவசரப் பதிவு)

அபூ முஹை

Friday, May 13, 2005

தலாக் ஓர் விளக்கம் -1

தவறாகப் புரியப்பட்ட சட்டங்களில் ''தலாக்'' - விவாகரத்துச் சட்டமும் அடங்கும். தங்களை அறிவு ஜீவி(?) என்று சொல்லிக் கொள்பவர்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் ''தலாக்'' சட்டத்தினால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள், இஸ்லாத்தில் பெண்ணியத்திற்கு பாதுபாப்பு இல்லை' என்று அறிவு ஜீவித்தனத்திற்கு - இஸ்லாத்தை விமர்சிப்பதே அளவு கோலாகி விட்டது. இந்த அறிவு ஜீவிகளிடம் மறு பக்க சிந்தனையை ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது.

ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் கட்டாயம் தலாக் - விவாகாரத்தைப் பயன்படுத்தியேயாக வேண்டும் என இஸ்லாம், முஸ்லிம்களை வற்புறுத்துவது போல் - எங்காவது நடக்கும் தலாக் நிகழ்ச்சியை ஊதிப் பெரிதாக்கி, ''பெண்னின கொடுமை'' என்று மொத்த பழியையும் இஸ்லாத்தை நோக்கி வீசப்படுகிறது.

''அல்லாஹ் அனுமதித்தவைகளில் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானது தலாக்'' (நபிமொழி) என்று வேண்டா வெறுப்பிலேயே ''தலாக்கை'' இஸ்லாம் அனுமதித்திருக்கிறது. தலாக் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன? என்பதை அறிந்து கொள்வதற்கு முன், திருமணப் பந்தம் பற்றி இஸ்லாம் கூறுவதை அறிந்த கொள்வோம்.

வாழ்க்கை ஒப்பந்தம்.
இஸ்லாம், திருமணத்தைப் பிரிக்கவே முடியாத பந்தமாகக் கருதவில்லை - வாழ்க்கை ஒப்பந்தமாகவேக் கருதுகிறது.

4:21. அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே!

ஒருவருக்கொருவர் வாழ்க்கைத் துணையாக இணைந்து கொள்ள சம்மதித்து, உறுதியான ஒப்பந்தம் செய்து கொள்வதையே இஸ்லாம் திருமணம் என்கிறது - இஸ்லாமியத் திருமணத்தில் சடங்கு, சம்பிரதாயம் எதுவுமில்லை (அப்படியிருந்தால் அது முஸ்லிம்களாக சேர்த்துக் கொண்டது) மணமகன் - மணமகள் இவர்கள் தவிர இரு சாட்சிகள் தேவை. வாழ்க்கையில் இணைய சம்மதிக்கிறோம் என மணமக்கள் கையொப்பமிட்டு, இதற்கு சாட்சியாக இருவர் கையொப்பமிட்டால் திருமணம் முடிந்தது. வாழ்க்கை ஒப்பந்தத்திற்கு மணமகளின் மனப்பூர்வமான சம்மதம் மிக அவசியம் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

4:19. நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது.

மணமகளின் சம்மதம் பெறாமல் நடந்த திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்து செய்திருக்கிறார்கள்.

மணமக்கள் இருவரும் விரும்பி -கணவன், மனைவியாக சேர்ந்து வாழ ஒப்புதலளித்து, ஒப்பந்தம் செய்து கொள்வதே இஸ்லாமியத் திருமணம். ஒப்பந்தம் செய்து கொள்ளும் எதுவும், ஒப்பந்தம் செய்யப்பட்டவர்களால் எந்த சமயத்திலும் அதிலிருந்து விலகிக் கொள்ளவும் உரிமையுண்டு - திருமணப்பந்தத்திலிருந்து விலகி - விவாகரத்துப் பெற்றுக் கொள்வதில் கணவன், மனைவி இருவருக்கும் சமவுரிமையுண்டு என்பதையும் விளங்கலாம்.

4:228 ''கணவர்களுக்கு மனைவியர் மீதுள்ள உரிமையைப் போன்று, மனைவியர்க்கும் கணவர்கள் மீது உரிமையுண்டு''

இஸ்லாம் ஆண்களுக்கு வழங்கப்பட்டது போன்று - பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது என்பதை இவ்வசனம் கூறுகிறது. இனி தலாக் பற்றிப் பார்ப்போம்.

தலாக் ஓர் விளக்கம்.
இஸ்லாமிய வழக்கில் கணவன் மனைவியை விவாகரத்து செய்வதையே ''தலாக்'' என்ற வார்த்தை குறிக்கும். தலாக் என்றால் 'விடுவித்தல்' 'கட்டவிழ்த்து விடுதல்' என்பது பொருளாகும். தலாக் கூறிட ஆண்களுக்கு மூன்று சந்தர்ப்பங்கள் - வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது பற்றி ஏற்கெனவே ஈ - தமிழ் வலைப்பதிவு பின்னூட்டத்தில் சுருக்கமாக எழுதியிருக்கிறோம்.

தலாக் கூறி, முதல் இரண்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திய பின் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழலாம். மூன்றாவது சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது. இதுதான் இஸ்லாம் கூறும் தலாக் சட்டம் - தலாக் பற்றித் திருக்குர்ஆனில்..

2:227 அவர்கள் திருமணப் பிரிவினையை (விவாகரத்தின் மூலம்) உறுதிப் படுத்திக் கொண்டால் நிச்சயமாக இறைவன் செவியுறுபவன் நன்கறிபவன்.
2:228 தலாக் விடப்பட்டப் பெண்கள் மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரை (தம் கணவருக்காக) காத்திருப்பார்கள். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் அவர்கள் நம்பிக்கைக் கொண்டவர்களாக இருந்தால் தங்கள் கர்பப்பைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை (குழந்தை உருவாகி இருந்தால்) மறைப்பது ஆகுமானதல்ல. அவர்களின் கணவர்கள் (இத்தாவிலிருக்கும் தம் மனைவியோடு சேர்ந்துக் கொள்ள) நல்லிணக்கத்தை நாடினால் (அந்த கால கெடுவுக்குள்) அழைத்துக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு.

2:229 (இத்தா கால கெடுவுக்குள் சேர்ந்துக் கொள்ளும் வாய்ப்புள்ள) இத்தகைய தலாக் இரண்டுத் தடவைகள்தான். இந்த வாய்ப்புகளில் அவளுடன் அழகிய முறையில் சேர்ந்து வாழலாம் அல்லது அழகிய முறையில் அவளை விட்டு விடலாம்.

முதல் இரண்டு தடவைகள் கூறும் தலாக் பற்றி 2:228, 229 ஆகிய வசனங்களில் தெளிவாகச் சொல்லப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் பிணக்கம் ஏற்பட்டு மனைவியை விவாகரத்துச் செய்யும் முடிவுக்கு வருபவன் ''உன்னை தலாக் - விவாகரத்து செய்து விட்டேன்'' என்று கூறினால் விவாகரத்து ஆகிவிடும். இதனால் திருமண பந்தம் - ஒப்பந்தம் முற்றாக முறிந்து விடாது. அவனின் மனைவி என்ற உறவுடனேயே மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரைக் காத்திருக்க வேண்டும்.- இந்தக் காத்திருப்பும் அவள் கருவுற்றிருக்கிறாளா என்பதை அறிந்து கொள்வதற்காகவே - இந்த அவகாசத்திங்குள் கணவன், மனைவி இருவரும் எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் சேர்ந்து கொள்ளலாம். அவள் கர்ப்பிணி என்றால் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை திருமண ஒப்பந்தம் முறியாது என்பதை திருக்குர்அன் 65:4 வசனத்திலிருந்து விளங்கலாம்.

65:4 ''கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (இத்தாவின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையிலாகும்.

முதல் இரண்டு தலாக்கின் நோக்கங்கள்:- 1. கணவன் சமாதானம் ஆகிவிடுவான் எனக் காத்திருப்பது. 2. கர்ப்பம் உண்டாகியிருக்கிறாளா என்பதை உறுதி செய்வது. இந்த நோக்கம் முதலிரண்டு தலாக்கிற்கு மட்டுமே பொருந்தும். மூன்றாவது முறையாகத் தலாக் சொன்னால் மனைவி (இத்தா) காத்திருக்க வேண்டிய அவசியமில்லை, மூன்றாவது முறை தலாக் சொல்லிய கணவன் - முதலிரண்டு முறை தலாக் சொல்லி மீண்டும் சேர்ந்து வாழ்ந்தது போல் சேர விரும்பினாலும் இதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
இவன் தலாக்கை - விவாகரத்தை விளையாட்டாக எடுத்துக் கொண்டு மூன்று சந்தர்ப்பங்களையும் தன் வெறுப்பிற்காகப் பயன்படுத்தி - பாழாக்கி விட்டதால் மூன்றாவது முறை தலாக் சொன்னவுடன் விவாகரத்து உறுதியாகிவிடும். அதன் பிறகு உள்ள நிபந்தனையை திருக்குர்ஆன் விவரிக்கிறது..

2:230 பின்னர்(மூன்றாவதாகவும்)தன் மனைவியை அவன் தலாக் சொல்லிவிட்டால் அதன் பிறகு அவனல்லாத வேறொரு கணவனை அவள் திருமணம் முடிக்காத வரை முதல் கணவனுக்கு அவள் அனுமதிக்கப் பட்டவளாக ஆகமாட்டாள். (இப்போது இரண்டாம்) கணவனும் அவளை தலாக் சொல்லி விட்டால் (அதன் பிறகு முதல் கணவனும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டால்) அவ்விருவரும் இறைவனின் வரம்பை நிலை நிறுத்த முடியும் என்று கருதினால் (திருமணத்தின் மூலம்) மீண்டும் இணைந்துக் கொள்வது அவ்விருவர் மீது குற்றமில்லை. இவைகள் அல்லாஹ்வின் வரம்புகளாகும். அறிவுள்ள சமூகத்தாருக்கு இறைவன் இவற்றை தெளிவு படுத்துகிறான்.

மூன்றாவது முறையாக தலாக்கை பயன்படுத்தியவன் மீண்டும் தன் மனைவியோடு சேர்ந்து வாழ நினைத்தாலும் அது சாத்தியமில்லை. விவாகரத்து செய்யப்பட்ட மனைவி, வெறொரு கணவனை அவள் திருமணம் செய்து அவனும் அவளை தலாக் சொல்லி பிரிந்த பிறகே முதல் கணவன் அவளை மீண்டும் மணந்து கொள்வது சாத்தியமாகும்.

முத்தலாக்
இங்கே தலாக் பற்றி நிலவும் தவறானக் கருத்தைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. முத்தலாக் என்றோ, தலாக், தலாக், தலாக் என்றோ கூறினால் அவன் மூன்று வாய்ப்புகளைப் பயன்படுத்தி விட்டான் - அவன் மனைவியை நிரந்தரமாகப் பிரிந்து விட்டாள் என்பது தவறானக் கருத்தாகும்.
மூன்று தடவை என்பதை - மூன்று வேளையாகவே அறிவாளி புரிந்து கொள்வான். சிறு உதாரணம்:- நோய்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் மூன்று வேளை மருந்தை காலை, பகல், இரவு என்று மூன்று நேரங்களில் சாப்பிடும்படிக் கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம், மூன்று வேளை மருந்துகளையும் ஒரு நேரத்தில் சாப்பிட்டவன் மூவேளை மருந்தையும் ஒழுங்காகச் சாப்பிட்டான் என்பதாகாது.

கடுமையான வெறுப்புற்று நிதானம் தவறியே தலாக் கூறுகிறான். இனி மனைவியின் அவசியம் தேவையில்லை என்ற உச்சக்கட்ட கோபத்திற்கு தள்ளப்பட்டவன் வெறுப்பைக் காட்ட இறைவன் வழங்கிய மூன்று சந்தர்ப்பங்களே தலாக். வாழ்க்கையில் அவனுக்கு வழங்கப்பட்ட இம்மூன்று தலாக் வாய்ப்புகளில் முதல் தலாக்கிலேயே கடுங்கோபம் கொண்டு ஆயிரம் தலாக் என்று கூறினாலும் - இங்கு செயலால் அவன் பயன்படுத்தியிருப்பது ஒரு சந்தர்ப்பத்தைத் தான். என்பதை அறிவுடையோர் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். மேலும் இது பற்றிய நபிமொழிகளையும் அறிந்து கொள்வோம்.

நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்கர் (ரலி) அவர்கள் காலத்திலும் உமர்(ரலி) அவர்களின் ஆரம்ப இரண்டு கால ஆட்சியிலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கணிக்கப்பட்டு வந்தது. (முஸ்லிம், அஹ்மத்)

ருகானா என்பவர் தம்மனைவியை ஒரு இடத்தில் வைத்து மூன்று தலாக் சொல்லி விட்டார் பிறகு வருந்தினார் இதை அறிந்த நபி-ஸல்- அவர்கள் உன் மனைவியை திருப்பி அழைத்துக் கொள் என்றார்கள். அதற்கு அவர் நான் என் மனைவியை மூன்று தலாக் சொல்லி விட்டேனே என்றார். அதை நான் அறிவேன் நீ உன் மனைவியை திருப்பி அழைத்துக் கொள் என்றார்கள். (அஹ்மத், அபூதாவூத், ஹாகீம்)

ஒரு மனிதர் தம் மனைவியை ஒரே நேரத்தில் மூன்று தலாக் சொன்ன செய்தியைக் கேள்விப்பட்ட நபி(ஸல்) அவர்கள் பெரும் கோபம் அடைந்து, நான் உயிரோடு உங்கள் மத்தியில் இருக்கும் போதே அவர் அல்லாஹ்வின் வேதத்தோடு விளையாடுகிறாரா.. என்றுக் கேட்டார்கள்.(நஸயீ)


ஒருவன் ஒரே நேரத்தில் முத்தலாக் என்றோ, அல்லது தலாக், தலாக், தலாக் என்றோ சொன்னாலும் அது ஒரு தலாக்காகவே கணக்கிடப்படும் என்று நபிவழி சான்றுகளிலிருந்து விளங்கலாம். ஒரு முஸ்லிம் சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தினால் - அது பயன்படுத்தியவனின் அறிவின்மையைக் காட்டும். அதை இஸ்லாத்தை நோக்கி திருப்புவது அறிவுடைமையாகாது.

முஸ்லிம்களும் - முஸ்லிமல்லாதோருக்கும் இங்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். தலாக் சட்டத்தை விமர்சிக்கும் எவரும் - தலாக் சட்டத்தை இயற்றிய திருமறைக் குர்ஆனிலிருந்தும், திருக்குர்ஆனுக்கு விளக்கமாக விளங்கிய நபி (ஸல்) அவர்களின் (ஆதாரப்பூர்வமான) வழிமுறையிலிருந்தும் மேற்கோள் காட்டி விமர்சியுங்கள். அதுவே உண்மையானதாகவும் - நேர்மையானதாகவும் இருக்கும்.

அடுத்தப் பதிவில் பெண்களின் விவாகரத்து உரிமைப்பற்றி எழுதுவோம்.

(தொடர்ந்து வரும் பதிவுகளில் தலாக் பற்றிய தவறான புரிதல்கள் விளக்கப்படும், டெலிபோன் தலாக் பற்றியும் இங்கு பரிசீலிப்போம். இந்தப் பதிவில் எழுதியவற்றில் சந்தேகமோ அல்லது மேலதிமான விளக்கமோ தேவைப்பட்டால் எழுதலாம்.)

Wednesday, May 11, 2005

நபியின் சொத்துக்கு வாரிசுண்டா?

நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் நடந்த வரலாற்று சம்பவங்களை இஸ்லாத்தின் வரலாறாக மேற்கோள் காட்டுவது அறியாமையே என்று மீண்டும் இங்கே சொல்லிக்கொண்டு - நபி (ஸல்) அவர்கள் விட்டுச் சென்றச் சொத்துக்கள் தனியொரு மனிதர் விட்டுச் சென்றச் சொத்துக்களை மாதிரி வாரிசுரிமையைப் பெற்றிருக்கவில்லை. நபிமார்கள் விட்டுச் செல்லவதெல்லாம் தர்மமாகும் என்பதைப் பார்ப்பதற்கு முன் ''குமுஸ்'' என்றால் என்னவென்பதை சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

குமுஸ்
போரில் எதிரிகள் விட்டுச் சென்றதில் - போரில் பங்கெடுத்தவர்களுக்கு எண்பது சதவீதமும், நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், திக்கற்றவர்களுக்கும் சேர்த்து இருபது சதவீதமும் என்று பிரிக்கப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் தர்மமாக (ஸகாத்தாகக்) கிடைக்கும் அனைத்தும் விலக்கப்பட்டுள்ளது. ஸகாத் - தர்மமாக வரும் நிதியிலிருந்து எதையும் தொடக்கூடாது என்று தடை விதித்திருப்பதால், போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பங்கு ஒதுக்கினான். இதை இவ்வசனத்திலிருந்து விளங்கலாம்.

8:41. (முஃமின்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருள்களிலிருந்து நிச்சயமாக குமுஸ் - ஐந்திலொரு பங்கு அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும், அவர்களுடைய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, இரு படைகள் சந்தித்துத் தீர்ப்பளித்த (பத்ரு நாளில்) நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை (அல்லாஹ்வே அளித்தான் என்பதை)யும் நீங்கள் நம்புவீர்களானால் (மேல்கூறியது பற்றி) உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.

போரில் எதிரிகள் விட்டுச் செல்லும் பொருட்களுக்கு ஃகனீமத் (போர்ச் செல்வம்) எனப்படும் இவ்வாறு கிடைக்கும் போர்ச் செல்வத்தை ஐந்து பாகங்களாகப் பிரித்து, நான்கு பாகங்கள் போரில் கலந்து கொண்ட வீரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். மீதியுள்ள ஒரு பாகம் (குமுஸ்) அல்லாஹ்வின் தூதருக்கு உரியதாகும். இந்த ஐந்தில் ஒரு பாகத்தில் ஐந்தில் ஒரு பாகத்தை இறைத்தூதர் தமக்குரிய நிதியாக - ஆட்சித் தலைவர் நிதியாக வைத்துக் கொண்டு உரிய இனங்களில் செலவிடுவார்கள். இறைத்தூதருக்குப் பின் அரசு கருவூலத்தில் இந்தப் பங்கு சேர்க்கப்பட்டு உரியவர்களுக்கு வழங்கப்பட்டது. (பத்ஹுல் பாரீ)

குமுஸ் - ஐந்தில் ஒரு பங்கு போர்ச் செல்வமும், ஃபய்வு - என்னும் போர் செய்யாமலேயே எதிரி நாட்டிலிருந்து கிடைக்கும் செல்வமும் ஆட்சியாளரின் பொறுப்பில் சிறப்பு நிதியாக இருக்கும். பய்வு என்னும் செல்வம் பற்றி திருக்குர்ஆன்..

59:7. அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும், மேலும் உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது); மேலும் (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும் எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். மேலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.

ஃபய்வு என்றால் போர் செய்யாமலேயே எதிரி நாட்டிலிருந்து கிடைக்கும் செல்வமாகும். ஃகனீமத் என்பது போரில் எதிரிகள் விட்டுச் செல்லும் பொருளாகும். இதிலிருந்து ஃகனீமத் மற்றும் ஃபய்வு இரண்டுக்குமிடையிலான வித்தியாசத்தை அறியலாம். ஃகனீமத்தில் போராளிகளுக்குப் பங்கு (5ல் 4பங்கு) உண்டு ஃபய்வில் போராளிகளுக்குப் பங்கு கிடையாது. அது ஆட்சியாளர்களின் பொறுப்பில் நிதியாக இருக்கும். (உம்தத்துல் காரீ)


குமுஸ் - ஃபய்வு இவ்விரண்டு சொத்துக்கள் பற்றி விளங்கிக் கொள்ள மேலே எடுத்தெழுதிய ஆதாரங்களே போதுமானதாகும். முஹம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதராகவும், ஆட்சியின் தலைவராகவும் இருந்ததால் அவர்களின் கட்டுப்பாட்டில், கருவூலத்தில் பொது நிதியாக இச்சொத்துக்கள் வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் ஆட்சித் தலைவராக அபூ பக்ர் (ரலி) அவர்கள் பொறுப்பேற்றார்கள்.

நபியின் சொத்துக்கு வாரிசுரிமை இல்லை.
நபி(ஸல்) அவர்கள் மரணித்தப் பின், நபி(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் - நபியின் மகள் என்ற முறையில் தமக்குச் சேரவேண்டிய வாரிசுச் சொத்தைப் பங்கிட்டுத் தருமாறு அபூ பக்ர் (ரலி) அவர்களிடம் கேட்டார். அதற்கு 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் '(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள்விட்டுச் செல்பவையெல்லாம் தருமம் செய்யப்பட வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார்கள்'' என்று அபூ பக்ர் (ரலி அவர்கள் பதிலளித்தார்கள். (முழு விபரங்களுக்கு பார்க்க புகாரி, 3092, 3093)

அபூ பக்ர் (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின், உமர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்கிறார்கள். உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் - நபி (ஸல்) அவர்களின் உறவினர்களான, நபி (ஸல்) அவர்களின் தந்தை அப்துல்லாஹ்வின் சகோதரரான அப்பாஸ் (ரலி) அவர்களும் - நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் கணவராகிய அலி (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களை சந்தித்து, மதீனாவின் புறநகர் ஃபய்வு சொத்துக்களைப் பராமறிக்கும் பொறுப்பை தங்களிடம் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்கள், இது பற்றிய நீண்ட ஹதீஸில் (புகாரி, 3094) பார்க்கலாம். அந்த ஹதீஸின் விளக்கக் குறிப்புக் கீழே.

நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரலி) ஆட்சியிலும் ஃபதக் போன்ற (ஃபய்வு) சொத்துக்கள் ஆட்சியாளர்களான அவர்களின் பொறுப்பிலேயே இருந்து வந்தன. அவற்றிலிருந்து கிடைத்த வருமானத்தை எடுத்து நபி (ஸல்) அவர்களின் குடும்பத்திற்கும், மீதி ஏழைகளுக்கும் செலவிடப்பட்டது. உமர் (ரலி) அவர்களும் ஆரம்பத்தில் இதே நடைமுறையையே பின்பற்றி வந்தார்கள்.

பின்னர் நபி (ஸல்) அவர்களின் வாரிசுகளில் அப்போது வாழ்ந்து கொண்டிருந்த அப்பாஸ் (ரலி) அவர்களும் - ஃபாத்திமாவுக்காக அலி (ரலி) அவர்களும் கலீஃபா உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து, அந்தச் சொத்துக்களின் பராமரிப்புப் பொறுப்பை அரசிடமிருந்து தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரினர். அதையேற்று அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இருவரும் இணைந்து அவற்றைப் பராமரித்து வந்தனர்.

பின்னர் இருவரிடையேப் பிரச்சனை எழுந்த போது தங்களிருவருக்கும் தனித்தனியேப் பிரித்துக் கொடுத்து விடுமாறு அப்பாஸ் (ரலி) அவர்களும், அலி (ரலி) அவர்களும் கலீஃபா உமர் (ரலி) அவர்களிடம் கோரினர். அவ்வாறுப் பிரித்துக் கொடுத்து விட்டால், அவைக் காலப்போக்கில் அவ்விருவருக்கும் சொந்தமான வாரிசுச் சொத்தாகி விடலாம் என்பதால் கலீஃபா உமர் (ரலி) அவர்கள் சம்மதிக்கவில்லை. (உம்தத்துல் காரீ)

நபி (ஸல்) அவர்கள் விட்டுச் செல்வதெல்லாம் தருமமாகும்.

''எங்கள் (நபிமார்களின்) சொத்துக்களுக்கு யாரும் வாரிசு தாரர்கள் அல்ல! நாங்கள் விட்டுச் சென்றவை தர்மமாகும்''. (புகாரி, முஸ்லிம்)

''என் வாரிசுகள் பொற்காசையோ, வெள்ளி நாணயத்தையோ பங்கிட்டுக் கொள்ள (வாரிசுரிமையாகப் பெற) மாட்டார்கள். என் மனைவிமார்களின் ஜீவனாம்சத்தையும் என் ஊழியரின் கூலியையும் தவிர நான் விட்டுச் செல்வதெல்லாம் தருமமேயாகும்.'' அறிவிப்பாளர், அபூ ஹூரைரா (ரலி) (தமிழ் புகாரி, ஹதீஸ் எண் 2776, 3096)


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்த பின் அவர்களின் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த சொத்துக்களெல்லாம் மறு ஆட்சியாளரின் பொறுப்பில் பொது நிதியாகவே இருந்தது. இச்சொத்துக்களிலிருந்து வரும் வருமானத்தையே, நபி (ஸல்) அவர்கள் தன் மனைவிமார்களின் ஜீவனாம்சமாகக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். ''என் ஊழியரின் கூலியையும் தவிர'' என்பது, அடுத்த ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கப்படுபவரின் ஊதியத்தையும் - சொத்துக்களைப் பராமரிப்பவர்களுக்கான கூலியையும் குறிக்கிறது. இவை தவிர அனைத்தும் தர்மம் செய்யப்பட வேண்டும்.

( இது பற்றி விரிவாக, சம்மந்தப்பட்டவர் தனிப்பதிவு எழுதிய பின் நாமும் எழுதுவோம்.)

Sunday, May 01, 2005

அள்ளிப்போட்டதை விமர்சிக்காமல்!

பெயரில்லாதவரின் (அனானிமஸ்) பின்னூட்டத்திற்கு பதிலளிப்பது போல் நேசகுமார் சில கருத்துக்களை தமது பதிவின் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார். ''இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்'' எனத் தொடங்கிய இவ்விவாதம் நேசகுமார் - ஸலாஹூத்தீன் என்ற இருவருக்கு மட்டும் சம்மந்தமுடையதல்ல. 03.12.2004ன் முதல் பதிவிலேயே ''அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கு குறிப்பிட விரும்வது இதுதான்'' என்றே தனது பொய்ப் பிரச்சாரத்தைத் துவங்கினார்.

//*நான் ஆரம்பத்திலேயே சலாஹ¤த்தீனுக்கு (9.02.2005 பதிவு) சொல்லியிருந்தது போன்று இது போன்றவைகளுக்கு நான் உடனடியாக பதில் அளிக்க விரும்பவில்லை.*//

03.12.2004ல் துவங்கிய வலைப்பதிவு இரண்டு மாதம் கழித்து 09.02.2004ல் எழுதப்பட்டது ஆரம்பத்திலேயே சொல்லியதாகாது. இதற்கிடையில் நிறையக் கருத்துக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. தாம் என்ன எழுதுகிறோம் - தனது கருத்துக்கு எதிரணியில் என்ன விளக்கங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதையெல்லாம் புரிந்தும், புரியாதது மாதிரி தன்னைக் காட்டிக்கொள்கிறார்.

அள்ளிப்போட்டதை விமர்சிக்காமல், அள்ளிப்போடும் போது சிந்தியதை (ஹாமீத் ஜாஃபரின் கருத்தை) விமர்சிப்பதே நேசகுமாரின் வாடிக்கை. முஸ்லிம்கள் எதிலேனும் சறுக்கட்டும் என்ற இவரின் காத்திருப்புக்குப் பந்தாவாக ''நான் உடனடியாக பதிலளிக்க விரும்பவில்லை'' என்று போலியாக காலரை நிமிர்த்தி விட்டுக்கொள்வார். இவரைப்பற்றி ஜாஃபர் அலி என்பவர் எனது பதிவின் பின்னூட்டத்தில் எழுதியது,

சகோதரரே! நான் இதுவரை அவர் வலைப்பதிவை பார்வையிட்ட வகையில் (நேச குமார்) அவர் இஸ்லாத்தை குறை கூறும் நோக்கோடு மட்டுமே வாதிடுகிறார். இவருக்கு பதிலளித்து நம் நேரத்தை தான் விரயமாக்கி வருகிறோம், அறிந்து கொள்ளவோ. இல்லை அடுத்தவருக்கு எடுத்து சொல்லவோ அவர் இஸ்லாத்தின் மீது குற்றம் சொல்ல வரவில்லை. அவர் நோக்கம் இஸ்லாத்தை மற்றவர்களுக்கு ஒரு தவறான புரிதலுடன் விளங்க வைப்பது. (ஜாஃபர் அலியின் கருத்து நூற்றுக்கு நூறு சரி என்பதையே நேசகுமார் நிரூபித்து வருகிறார்)

இதுவரை நேசகுமார் முன்வைத்த, இஸ்லாத்தின் வரலாற்றுப் புரட்டலுக்கு, முஸ்லிம்கள் சரியான - உண்மை வரலாற்றுச் சான்றுகளை முன்வைத்திருக்கிறார்கள். வரலாற்று ஆவணங்களை வைக்கும் போது - கட்டுரை எழுத வேண்டிய அவசியம் என்ன? கட்டுரையாக எழுத வேண்டும் என்கிறார் - ஒருவேளை இஸ்லாத்தின் மீது களங்கத்தை சுமத்தி தனது பதிவுகளை நிறைப்பது போல், நாமும் அவ்வாறு விளக்கம் என்ற பெயரில் எழுத வேண்டும் என்று அவர் எண்ணினால் அது அவரின் அறியாமை. இஸ்லாத்திற்கு வெளியிலிருந்து ஒருவன் இஸ்லாத்தைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் அவனுக்கு வரம்பெதுவும் கிடையாது. இஸ்லாத்திற்கு உள்ளேயிருந்து ஒருவன் இஸ்லாத்தை எழுதும் போது அவன் விருப்பத்துக்கு இஸ்லாத்தை எழுத முடியாது - எழுதக்கூடாது.

பெயரில்லாதவரின் (அனானிமஸ்) பின்னூட்டத்திற்கு நேசகுமார் எழுதியது.
//*அபூ முஹை தெரிவித்திருக்கும் கருத்துக்களில் எனது கூற்றுக்களை உடைத்தெறியுமாறு அமைந்திருக்கும் சிறந்த 2,3 கருத்துக்களை நீங்களே தெரிவு செய்து இங்கே பின்னூட்டமாக உள்ளிடுங்கள். அடுத்த பதிவில் அவற்றுக்கு பதிலளிக்கிறேன்.*//

நேசகுமார் கேட்டுக் கொண்டதற்காக.
1. நபி (ஸல்) அவர்கள், ஜைனப் (ரலி) இருவரின் திருமணம் பற்றிய அவதூறுச் செய்திகள் முழுக்க. முழுக்கக் கட்டுக்கதை என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது - அதாவது புனையப்பட்ட செய்தியின் அடிப்படையில் அப்பட்டமாக நபி (ஸல்) அவர்களின் மீது நேசகுமார் அவதூறைச் சுமத்தியிருக்கிறார்.

2. நபி (ஸல்) அவர்கள், ஜைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது, நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் அதிர்ச்சியடைந்து எதிர்ப்பாயிருந்தார்கள் என்று நேசகுமார் கதையளந்திருக்கிறார்.

3. 24:3ம் வசனம் மாற்று மதப்பெண்டிர்களையெல்லாம் ''விபச்சாரிகள்'' என்று சொல்வதாக - நேசகுமார் திருக்குர்ஆன் மீது களங்கம் சுமத்தியிருக்கிறார். இந்த வசனத்திற்கு இதுதான் பொருள் என்பதை அவர் நிரூபிக்கட்டும்.

இதற்கு நேசகுமார் பதிலளிக்கட்டும் மேலும் தொடர்வோம்.

பெயரில்லாதவர் பின்னூட்டிய நேசகுமாரின் பதிவு.
http://islaamicinfo.blogspot.com/2005/04/ii.html

குறிப்பு:- நாம் ஏற்கெனவே சொன்னது போல், நேசகுமாரின் பதிவுகளில் பின்னூட்டமிடுவதை வெறுக்கிறோம். முன்பு பின்னூட்ட வாசலை அடைத்து தன்னை நாகரீகமற்றவர் என்று அவர் அடையாம் காட்டிக் கொண்டார்.