Wednesday, August 29, 2007

கொரிய நாட்டினரை தாலிபான் விடுதலை செய்தது!

புதன், 29 ஆகஸ்ட் 2007
கடந்த 2007, ஜூலை 19 அன்று கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்திற்காக ஆப்கானிஸ்தான் வந்திறங்கிய 23 கொரிய நாட்டினரைத் தாலிபான் பணயக் கைதிகளாகச் சிறை பிடித்தது. முதலில் சிதைந்து போயுள்ள ஆப்கனை மீளக் கட்டியெழுப்ப வந்த பொறியாளர்களாக இவர்களைச் சித்தரித்த ஊடகங்கள், பின்னர் கொரிய அரசின் அறிக்கையின் பின்னர், சியோலில் இருக்கும் சேம்முல் ப்ரெஸ்பைட்டீரியன் சர்ச் (Saemmul Presbyterian Church)சைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையை வெளியிட்டன.

ஆப்கன் அரசினால் பிடித்து வைக்கப்பட்டுள்ள 10 தாலிபான் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்; கொரியப் படைகளை ஆப்கனிலிருந்து திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கைகளை இந்த பணயக் கைதிகளை விடுவிக்க தாலிபான் நிபந்தனை விதித்தது. இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் ஒவ்வொருவராகக் கொரியப் பணயக் கைதிகளைக் கொன்றுவிடப்போவதாவும் மிரட்டியிருந்தது.

இம்மிரட்டலுக்குப் பணியாத ஆப்கன் அரசு தாலிபான் கைதிகள் எவரையும் விடுவிக்கமுடியாது என அறிவித்தது. ஆப்கன் அதிபர் ஹமீத் கார்சாய், அமெரிக்காவுக்குப் பயணம் செய்து அதிபர் புஷ்ஷைச் சந்தித்தார். இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தாலிபானை ஆப்கனும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து ஒடுக்கி அழிக்கப்போவதாக அறிக்கை வெளியிட்டனர்.

இதற்கிடையே ஒருவர் பின் ஒருவராக இரு ஆண் பணயக் கைதிகளைத் தாலிபான் கொன்றது. உலகெங்கிலும் இருந்து முஸ்லிம்கள் பலரும் தாலிபானின் இக்கொடுஞ்செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததோடு மீதமுள்ள பணயக் கைதிகள் அனைவரையும் விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தனர்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட தென் கொரிய அரசு, உடனடியாக அரசுப் பிரதிநிகள் சிலரை, தென்கொரிய நாட்டிலிருக்கும் முஸ்லிம் தலைவர்களின் உதவியுடன் தாலிபானுடன் பேச்சு நடத்த முன்வந்தது. தென்கொரிய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்ட தாலிபான் இரு பெண் பணயக் கைதிகளை விடுவித்தது.

தாலிபானுடன் பேச்சு நடத்திய கொரிய முஸ்லிம்கள் ஆப்கன் பழங்குடியினத் தலைவர்களை நடுவர்களாக வைத்து தாலிபான் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் தென்கொரிய அரசு இவ்வாண்டு இறுதிக்குள் ஆப்கனிலிருக்கும் தனது 200 படையினரைத் திரும்பப் பெறுவதாகவும், கிறிஸ்தவ மதப் பிரச்சாரப் பணியை ஆப்கனில் இனி அனுமதிப்பதில்லை என்றும் உறுதி அளித்தது.

இதனால் திருப்தி அடைந்த தாலிபான் தரப்பினர் இன்று பணயக் கைதிகளாக மீதமுள்ள 19 கொரியர்களையும் விடுதலை செய்தனர். விடுதலை செய்யப்பட்ட கொரியர்கள் அனைவரும் ஆப்கன் செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைக்கப் பட்டனர். இப்பேச்சு வார்த்தையில் கொரிய அரசு தரப்புக் குழுவில் முனைப்புடன் பங்கு பெற்ற கொரிய முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவர் அப்துல் ரஹ்மான் லீ, ஆப்கன் பழங்குடியினத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Monday, August 20, 2007

2. காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? பகுதி-2

ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2007

மக்காவில் அமைந்திருக்கும் காபாவை, உலக முஸ்லிம்கள் புனித ஆலயமாகத் தமது வணக்க வழிபாட்டை அதை நோக்கி அமைத்துக் கொள்கிறார்கள். காபா ஆலயத்தை வன்முறை நோக்கத்தோடு தாக்கி அழிப்பதற்கு எவரேனும் முயன்றால் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பதை திருக்குர்ஆன் 105வது அத்தியாயம் கூறுகிறது. அதற்கான வரலாற்று சான்றுகளை பகுதி- 1ல் காணலாம்.

மேலும்,

''ஒரு படை காபாவின் மீது படையெடுக்கும், அப்படையை பூமி விழுங்கிவிடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) காபாவை வன்முறையால் அழிக்கவருபவர்களை இறைவன் அழித்து விடுவான் என்பதை மேற்காணும் நபிமொழி உறுதிப்படுத்துகிறது. அப்படியானால் காபாவை எவராலும் இடித்து அழித்துவிட முடியாதா? என்றால் இஸ்லாம் அப்படிச் சொல்லவில்லை!

''அபிசீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் காபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

''(வெளிப்பக்கமாக) வளைந்த கால்களையுடைய, கருப்பு நிறத்தவர்கள் ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி காபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்று இருக்கிறது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

காபாவை இடித்து அழிக்க வருபவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று கூறும் இஸ்லாம், காபாவை வளைந்த, மெலிந்த கால்களையுடையர்கள் உடைத்து பாழ்படுத்தி விடுவார்கள் என்றும் கூறுகிறது. ஒரு காலகட்டம் வரை காபாவை எவராலும் அழிக்க முடியாது. ஒரு காலத்தில் காபாவை இடித்துப் பாழ்படுத்தி விடுவார்கள். முஸ்லிம்களாலும் அவர்களைத் தடுக்க இயலாமல் போகலாம். அப்போது காபாவை இடித்துப் பாழ்படுத்துபவர்களை இறைவனும் தடுக்கமாட்டான். (இது இறுதி நாளுக்கு நெருக்கமாக நடக்கும் நிகழ்வாக இருக்கலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்)

''யாஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும், உம்ராவும் செய்யப்படும்'' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

யாஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தாரின் வருகைக்குப் பிறகும் காபா ஆலயம் இருக்கும் என்பது நபியின் வாக்கு!

இஸ்ரேலியத்தனம்

காபா ஆலயத்தை சில தடவைகள் இடித்துவிட்டு மீண்டும் கட்டியிருக்கிறார்கள். அதனால் காபாவை இடிப்பதை அல்லாஹ் எந்த நேரமும் தடுத்துக்கொண்டிருக்க மாட்டான். என்று சிலர் புரியாமல் விளங்கி வைத்திருக்கிறார்கள். ஒன்றை இல்லாமல் அழித்து நாசப்படுத்துவதற்கும், அதையே அழகான முறையில் செப்பனிடுவதற்காக அகற்றி மீண்டும் கட்டுவதற்கும், எண்ணத்தாலும், செயலாலும் வேறுபாடுகள் இருக்கிறது.

வரலாற்றுக் காலங்களை குறிப்பிட்டு சொல்ல முடியாத மிகப் பழமையான காபா, ஆலயமான வடிவத்தை இழந்து, அடித்தளம் மட்டுமே எஞ்சியிருந்தது எனத் திருக்குர்ஆன், 002:127 வசனம் கூறுகிறது. அங்கு ஏற்கெனவே மனிதர்கள் வாழ்ந்து, பிறகு மக்கள் எவரும் அங்கு வசித்திருக்கவில்லை. காபா ஆலயம் பராமரிப்பு இல்லாத நிலையில் இயற்கையின் கால மாறுபாட்டால் சிதிலத்திற்குள்ளாகி ஆலயத்தின் கட்டிடம் தரைமட்டமாகியிருந்தது. (இந்த அழிவை இறைவன் ஏன் தடுக்கவில்லை? என்ற கேள்வியெழாமல் இருக்க) மனிதர்கள் வசிக்காத பிரதேசத்தில் ஆலயம் அவசியமில்லை. மேலும், காபா ஆலயம் புதுப்பித்துக் கட்டப்படும் காலத்தை இறைவனே நன்கு அறிந்தவன்.

ஒரிறைக் கொள்கைப் பிரச்சாரம் துவக்கப்பட்டு, இஸ்லாத்தில் தொழுகை கடமையாக்கப்பட்டது. முஸ்லிம்கள் தொழும் கிப்லா - முன்னோக்கும் திசை பைத்துல் மக்திஸை - மஸ்ஜித் அல்-அக்ஸாவை நோக்கி இருந்தது. அப்போது முஸ்லிம்களின் கிப்லா யூதர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இவ்வாறு பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் மக்திஸை முன்னோக்கியே, - இந்த உம்மத்தின் முதல் முஸ்லிமாகிய நபி (ஸல்) அவர்களும் மற்ற முஸ்லிம்களும் - தொழுது வந்தனர். இந்த கிப்லா மாற்றப்பட வேண்டும், முஸ்லிம்களின் தொழுகையின் கிப்லாவாக - முன்னோக்கும் திசையாக காபாவை நோக்கித் திருப்பப்பட வேண்டும் என்பதே அண்ணல் நபியவர்களின் விருப்பமாக இருந்தது, நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் இதற்காக அடிக்கடி பிரார்த்தனை செய்து கொண்டும், பணிந்து வேண்டிக்கொண்டும் இருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிராத்தனைக்கேற்ப கிப்லா மாற்றம் தொடர்பான இறையுத்தரவு வந்தது. இது இறவைனிடமிருந்து வந்த உண்மையாகும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க: அல்குர்ஆன், 002:144, 149, 150)

இந்தக் கிப்லா மாற்றம் நிகழ்ந்தபோது நயவஞ்சகமும், சந்தேகமும் கொண்ட சிலருக்கும், யூத இறைமறுப்பாளர்களுக்கும் ஐயமும், தடுமாற்றமும் ஏற்பட்டன. முஸ்லிம்களை நோக்கி, ''ஏற்கெனவே இருந்த அவர்களின் கிப்லாவிலிருந்து அவர்களைத் திருப்பியது எது?'' என்று கேட்பவர்களுக்கு பதிலடியாக:

மனிதர்களில் சில மதியீனர்கள், ''ஏற்கெனவே (முஸ்லிம்கள் முன்னோக்கித் தொழுதுகொண்டு) இருந்த அவர்களது 'கிப்லா' விலிருந்து (வேறு திசைக்கு) அவர்களைத் திருப்பியது எது?'' என்று கேட்பார்கள். ''கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான்'' என்று (நபியே) கூறுவீராக! (அல்குர்ஆன், 002:142) என்ற இறைவசனம் அருளப்பட்டது.

காபாவை முன்னோக்கி கிப்லா திருப்பப்பட்டதும், புனித இறையில்லமான காபாவைப் பற்றி இங்கு தொடங்கிய விஷமத்தனமான, யூதத்தன அவதூறு விமர்சனங்கள் இன்றும் இஸ்ரேலியத்தனமாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

குறைஷியர் காபாவைக் கட்டியது.

நபித்துவ வாழ்விற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புனித காபாவைக் குறைஷியர்கள் புதுப்பித்துக் கட்டுவதற்கு ஏகமனதாக முன் வந்தனர். இதன் காரணம்: காபா நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலத்திலிருந்து மேல் முகடு இல்லாமல் ஒன்பது முழங்கள் கொண்டதாக இருந்தது. அதன் சுவரும் - கட்டடங்களும் சிதிலமடைந்து இருந்தன. காபாவினுள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களை ஒரு கூட்டம் திருடிச் சென்றது. இந்நிலையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் காபாவின் கட்டடம் மேலும் பாதிப்படைந்தது. காபாவின் மீது கொண்ட மரியாதையின் காரணமாக குரைஷியர் அதைப் புதுப்பிக்கும் நிலைக்கு ஆளாயினர்.

''குறைஷிக் குலத்தாரே! காபாவின் கட்டுமானப் பணிக்காக உங்கள் வருமானத்தில் தூய்மையானவற்றைத் தவிர வேறெதையும் ஈடுபடுத்தாதீர்கள். விபச்சாரத்தின் வருமானமோ, வட்டிப் பணமோ, மக்கள் எவரிடமிருந்தாவது அக்கிரமமாகப் பெறப்பட்ட பொருளோ சேரக்கூடாது'' என்று சொல்லிக்கொண்டு, குறைஷியர் ஒவ்வொரு குலத்தாரும் தங்களுக்கிடையே அந்தப் பணியைப் பிரித்துக் கொண்டனர்.

பின்னர் குறைஷியரில் உள்ள பல கோத்திரத்தாரும் காபாவைக் கட்டுவதற்காகக் கற்களைச் சேகரித்தினர். பின்னர் அவற்றைப் பயன்படுத்தி 'ஹஜருல் அஸ்வத்' - கருப்புக் கல் இருக்கும் மூலைவரை காபாவைக் கட்டினார்கள். கருப்புக் கல்லை அதற்குரிய இடத்தில் பதிப்பது யார்? என்பது தொடர்பாக அவர்களிடையே சர்ச்சை ஏற்பட்டது. அந்தக் கல்லை அதற்குரிய இடத்தில் தாமே தூக்கி வைக்க வேண்டும் வேறு யாரும் அதைச் செய்துவிடக் கூடாது என்று ஒவ்வொரு கோத்திரத்தினரும் நினைத்தார்கள்.

குறைஷியர்கள் இதற்காக சண்டையிட்டுக் கொள்வதற்கும் தயாராயினர். இதே நிலையில் நான்கைந்து நாட்கள் நகர்ந்தன. அப்போது குறைஷியர்களிலேயே மூத்த வயதினரான அபூஉமய்யா பின் அல்முஃகீரா மக்ஸுமி என்பவர், குறைஷிக் குலத்தாரே! யார் இந்த ஆலயத்தின் வாசல் வழியாக அதிகாலையில் முதன்முதலில் நுழைகிறாரோ அவரை இந்தப் பிரச்சனையில் நடுவராக ஆக்கிக் கொள்ளுங்கள். அவர் உங்களிடையே தீர்ப்பளிப்பார்'' என்று கூறினார். குறைஷிகள் அவ்வாறே செய்வதாகக் கூறி, கலைந்து சென்றனர்.

மறுநாள் அதிகாலையில் ஆலயத்தின் வாசல் வழியாக முதன்முதலில் உள்ளே நுழைந்தவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்தாம். (இது நபித்துவத்திற்கு முன்பு நடந்தது. ஆனாலும் இது அனைவரும் அறிந்த பிரபலமான செய்தி.) நபி (ஸல்) அவர்களைக் கண்ட குறைஷியர், இதோ முஹம்மது வந்துள்ளார், நம்பத்தகுந்தவரான இவரை நாங்கள் முழு மனதுடன் ஏற்கிறோம் என்றனர்.

(இங்கே குறைஷியருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைப் பார்த்தால் நபித்துவ வாழ்விற்கு முன்பு நபியவர்களின் மீது குறைஷியர்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதை நமக்குக் காட்டுகிறது. குறைஷியர் ஒவ்வொரு குலத்தாரும் மற்ற குலத்தாருக்கு எதிரும் புதிருமாக இருந்து வந்தனர். இந்த நிலையில் தமக்கு வேண்டாத குலத்தார் யாராவது ஆலயத்திற்குள் முதலில் வந்திருந்தால் அது மற்ற குலத்தாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன்முதலில் ஆலயத்தின் வாசல் வழியாக நுழைந்தது குறைஷியர் அனைத்து குலத்தாருக்கும் திருப்திகரமாக இருந்தது. அந்த அளவுக்கு எல்லா மக்களிடமும் நற்பெயர் பெற்றிருந்தார்கள். நபியவர்களை ''அல்அமீன்'' நம்பிக்கைக்குரியவர் என்று ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.)

நபி (ஸல்) அவர்கள் வந்ததும் அந்த மக்கள் செய்தியைத் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'என்னிடம் ஒரு துணியைக் கொண்டு வாருங்கள்' என்றார்கள். அது கொண்டு வரப்பட்டது. கருப்புக் கல்லைத் தமது கையால் அந்தத் துணியில் வைத்த நபி (ஸல்) அவர்கள், ''இந்தத் துணியின் ஒவ்வொரு ஓரத்தையும் ஒவ்வொரு கோத்திரத்தாரும் பிடித்துக்கொண்டு அனைவருமாகச் சேர்ந்து அதைத் தூக்கிக் கொடுங்கள்'' என்றார்கள். அவ்வாறே அவர்கள் தூக்கித் தர, அந்தக் கல் அதற்குரிய இடத்திற்கு வந்தபோது தமது கையால் அதை உரிய இடத்தில் பதித்துப் பூசினார்கள். (அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் அவர்கள் மீது மறுமை நாள்வரை என்றென்றும் உண்டாகட்டும்)

நபித்துவ வாழ்விற்கு முன், குறைஷியர் காபாவைப் புதுப்பித்துக் கட்டிய அந்த அறப்பணியில், நபி (ஸல்) அவர்களும் கலந்து கொண்டு கல் சுமந்திருக்கிறார்கள். நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் புதுப்பித்துக்கட்டிய காபாவின் சுவர்கள் பலவீனப்பட்டதால் குறைஷியர் காபாவை இடித்து விட்டு மீண்டும் புதுப்பித்துக் கட்டினார்கள். ஆனால் இப்ராஹீம்(அலை) அவர்கள் எழுப்பிய காபாவின் அளவை சுருக்கி விட்டார்கள். இதற்குக் காரணம் குறைஷியரிடம் பொருளாதாரம் இல்லாமலிருந்ததேயாகும்.

(மீண்டும் இறுதிப் பகுதியில், இறைவன் நாடட்டும்)

அன்புடன்,
அபூ முஹை

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Friday, August 17, 2007

கொல்கத்தா இமாமின் வன்முறைப் பேச்சு.

இந்தியா, அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தமாக நாடாளுமன்றம் அல்லோலப்பட்டு வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங் மீது முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்ட்ஸ் பாய்ச்சல் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது.

"இந்த பொய்க்கு மன்மோகன் மீது தோட்டா பாய்ந்திருக்கும்!"

புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்டு 2007 ( 13:39 IST )

"அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக கூறிய பொய்யை, சீனாவில் சொல்லியிருந்தால் மன்மோகன் மீது தோட்டா பாய்ந்திருக்கும் " என பிரதமரை கடுமையாக விமர்சித்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுக்கு எதிராக, காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்த விவகாரத்தில், இந்திய மக்களை பிரதமர் மன்மோகன் சிங் ஏமாற்றிவிட்டார் என்றும், இதுவே சீனாவாக இருந்தால், அவர் மீது தோட்டா பாய்ந்திருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரம் தொடங்கிய சில நிமிடங்களில், ஃபெர்னாண்டஸ்சின் பேட்டிக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

'ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோர வேண்டும்' என்று அவர்கள் வலியுறுத்தினர். மேலும், அந்தப் பேட்டி இடம்பெற்றிருந்த செய்தித்தாள்களைக் காட்டிய அவர்கள், 'இது மாபெரும் அவமதிப்புச் செயல்'என்று குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து ஃபெர்னாண்டஸுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால், அவையை பிற்பகல் 2.30 வரை சபாநாயகர் ஹமீத் அன்சாரி ஒத்திவைத்தார்.

செய்தியின் சுட்டி

நாடாளுமன்றத்தில் பிரதமரை நோக்கி எழுந்த இந்த வன்முறையானப் பேச்சு எவ்வாறு கண்டிக்கத்தக்கதோ அதுபோல் தஸ்லிமாவின் மீதான கொல்கத்தா இமாமின் வன்முறையைத் தூண்டும் பேச்சும் கண்டிக்கத்தக்கது.

பிறரை வன்முறைக்குத் தூண்டுவதைவிட கொல்கத்தா இமாம் ரோஷமுள்ளவராக இருந்தால் நேரில் சென்று தஸ்லிமாவை வதம் செய்யலாமே.

ஒரு ஜனநாயக நாட்டில் இருந்து கொண்டு, ஜார்ஜ் ஃபெர்னாண்ட்ஸும், கொல்கத்தா இமாமும் பேசியது கண்டிக்கத்தக்கது. எல்லாம் ஜனநாயகம் வழங்கும் சலுகை.

கொல்கத்தா இமாமின் பேச்சுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த ஒட்டுமில்லை!

கொல்கத்தா இமாம் பேசியது இங்கே

Wednesday, August 15, 2007

காபா இடமாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? பகுதி-1

புதன், 15 ஆகஸ்ட் 2007

காபா எனும் இறையில்லம் மனிதர்களுக்காக முதன் முதலாகக் கட்டப்பட்ட ஆலயம் என்று இஸ்லாம் மார்க்கத்தின் திருமறையான, திருக்குர்ஆன் கூறுகிறது.

''அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும், மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன், 003:096)

மக்காவில் அமைந்த காபா, மனிதர்கள் இறைவனை வணங்குவதற்காக பூமியில் அமைக்கப்பட்ட முதல் இறையில்லம். காபாவின் வரலாறு மிகத் தொன்மையானது. இது பற்றிய வரலாற்றாசிரியர்களின் கண்ணோட்டம்:

ஹிஜாஸ் எனத் தற்போது அழைக்கப்படும் பகுதியைக் குறிப்பிடும்போது, ''அது பூர்வீக மக்களால் பெரிதும் கெளரவிக்கப்பட்ட பகுதி என்றும் அங்கு கல்லான ஒரு பலி பீடம் இருந்தது. அது மிகத் தொன்மையானது. சுற்று வட்டாரத்திலுள்ள மக்கள் அதனை தரிசிக்க எல்லாத் திசைகளிலிருந்தும் வந்தனர்'' என்று டியோடரஸ் ஸிகுலஸ் குறிப்பிடுகிறார். - (சி.எம். ஓல்ட் ஃபாதர் என்பவரின் மொழிபெயர்ப்பு லண்டன் 1935 வால்யூம் 2 பக்கம் 211)

''காபா மிகப் பழமையானது. யாத்திரிகர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து அங்கு வந்தனர். இப்படி இவர்கள் வருவது எப்போது தொடங்கியது என்பதே தெரிய முடியாத அளவுக்கு வெகு காலத்திற்கு முன்பே காபா இருக்கிறது''. என்று இஸ்லாத்தின் எதிரியான ஸர் வில்லியம் முயீர் கூறுகிறார். அவரே எழுதிய, Life of Mohammed - 1923, பக்கம் 103.

காபாவின் பழமை பற்றி, வராலாற்று ஆய்வுக்கு எட்டாத மிகத் தொன்மையானத் திருத்தலம் என்பதை வரலாற்று ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தப் பழமையான இறை ஆலயம் எத்தனை முறை புதுப்பித்துக் கட்டப்பட்டது என்பதற்கான சரியான வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கவில்லை. நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்தில் காபா சிதிலமடைந்து இருந்தது. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் இப்படி சிதிலமடைந்து கிடந்தது என்பதற்கும் இஸ்லாத்தில் சரியான குறிப்புகள் இல்லை!

எந்த மக்களும் குடியிருக்காத மக்கா எனும் அந்த இடத்தில் காபா சிதிலமடைந்து கிடந்தது. இறைவன் தனது நபி இப்ராஹீம் (அலை) அவர்களைக் கொண்டு மீண்டும் புதுப்பிக்கும்படி பணிக்கிறான். இது தொடர்பாக இஸ்லாத்தின் சான்றுகள் இருக்கின்றன. இங்கிருந்தே காபாவின் வரலாறு மீண்டும் துவங்குகிறது. வெறும் அடித்தளம் மட்டுமே இருந்த மிகத் தொன்மையான காபாவை, இறைவனால் அடையாளம் காட்டப்பட்டு நபி இப்ராஹீம் (அலை) அவர்களும், அவரது மைந்தர் இஸ்மாயீல் (அலை) அவர்களும் புதுப்பித்துக் கட்டுகிறார்கள். கட்டி முடித்து, இறைவனிடம் பிரார்த்தனையும் செய்கிறார்கள். (பார்க்க: அல்குர்ஆன், 002:125-130)

மனிதர்கள் இறைவனை வணங்குவதற்காக முதன் முதலாக அமைக்கப்பட்ட காபா எனும் இறையில்லம் மிகச் சரியாக, ஏற்கெனவே இருந்த அதே அடித்தளத்தில் மீண்டும் கட்டி எழுப்பப்படுகிறது. (காபாவின் மீள் துவக்க வரலாறு பற்றி இன்னும் விரிவாக திருமறை வசனங்களும், பல நபிமொழிகளும் கூறுகிறது. காபா அதன் சரியான இடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை அலசுவது மட்டுமே இந்த கட்டுரையின் நோக்கம் என்பதால் மேற்கொண்டு செல்வோம்)

ஒரு வரலாறு:

நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்விற்கு முன்னர் அரபு தீபகற்பத்தில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டு வந்த ஒரு வரலாற்றுச் சம்பவம்:

நபித்துவ வாழ்விற்கு முந்திய கால கட்டத்தில் ரோமானியப் பேரரசு யமன் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதும், யமன் நாடு அபிசீனியாவின் ஆளுகைக்கு உட்பட்டது. அப்போது யமனில் அபிசீனியாவின் ஆளுநராக இருந்த அப்ரஹா என்பவன், அபிசீனியா மன்னரின் பெயரால் யமனில் ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தை எழுப்பியிருந்தான். புனித மக்காவில் இருந்த காபா ஆலயத்திற்குச் செல்லாதவாறு, அரபியர்களை அந்த தேவாலயத்தின்பால் ஈர்ப்பதற்காக அதில் பல்வேறு வகையான பகட்டான அலங்காரங்களையெல்லாம் செய்திருந்தான்.

அரபு தீபகற்பத்தின் மத்திய பாகத்திலும், அதன் வடபுலங்களிலும் வாழ்ந்திருந்த அரபியர்கள், அப்ராஹாவின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த யமன் நாட்டு மக்கள் அனைவரும் புனித காபா ஆலயத்தின் பக்கமே தங்களின் கவனத்தைத் திருப்பியவர்களாகவும், அதன்பால் ஈர்க்கப்பட்டவர்களாகவும் இருப்பதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். தமது இந்த எண்ணத்தை அபிசீனிய மன்னருக்கு எழுதித் தெரிவித்தான்.

அவன் எவ்வளவோ பிரயத்தனங்களை மேற்கொண்டும், அரபிகளை அவர்களின் புனித ஆலயமான காபாவை விட்டுத் திருப்பிவிட முடியவில்லை. அப்போது அப்ரஹா காபா ஆலயத்தை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டு மக்களின் கவனத்தை, தான் எழுப்பிய கிறிஸ்தவ தேவாலயத்தின் பால் திருப்பிவிடும் எண்ணத்தில் பெரும் படை ஒன்றைத் திரட்டிக்கொண்டு புறப்பட்டான். அதில் ஏராளமான யானைகளும் இருந்தன. மிகப் பெரும் பட்டத்து யானை அவற்றிற்கெல்லாம் முன்னணியில் சென்றது.
இதற்கிடையே அவன் இந்த நோக்கத்துடன் புறப்பட்டு விட்ட செய்தி அரபு நாடு முழுவதும் பரவியது. தமது புனித ஆலயத்தைத் தமது கண் முன்பே இடித்துத் தகர்த்துவிட அவன் வந்து கொண்டிருக்கும் செய்தி அரபிகளுக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது.

இதன் காரணமாக அரபுகள் ஒவ்வொரு குலத்தாரும் அணிதிரளும்படி வேண்டியபின் படை திரட்டிக்கொண்டு அப்ரஹாவை மக்காவிற்கு சென்று விடாமல் வழியிலேயே தடுக்க, அவன் படையுடன் போர் செய்தார்கள். எனினும் அவர்கள் தோல்வி கண்டார்கள். அப்ரஹா, தம்முடன் போர் செய்து தோல்வியடைந்தவர்களைச் சிறைப்பிடித்துக்கொண்டு, காபா ஆலயத்தை இடித்துத் தகர்க்க தொடர்ந்து இராணுவத்துடன் முன்னேறி வந்தான்.

காபாவை இடிக்க வந்த அப்ரஹாவின் யானைப்படையை இறைவன் என்ன செய்தான் என்பதை திருக்குர்ஆன், அல்ஃபீல் - யானை - 105வது அத்தியாயம் எடுத்துரைக்கிறது.

(நபியே!) யானைப் படையை உமது இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் அறியவில்லையா?
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?

மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.

சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.

அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.
(அல்குர்ஆன், 105:001-005)

இயந்திரங்கள் இல்லாத அந்தக் காலத்தில் பலம் பொருந்திய யானைகளைக் கொண்டு காபாவை உடனடியாக இடித்துத் தகர்த்து விட முடியும். மேலும், நவீன போர் கருவிகள் இல்லாத அக்காலத்தில் இரும்பினால் செய்யப்பட்ட வெறும் ஈட்டி, வாள், கத்தி இவைகளைக் கொண்டு மனிதர்களிடையே போரிட்டுத் தாக்கிக் கொள்ள முடியுமே தவிர, யானைப் படையுடன் போர் செய்ய அந்தக் கருவிகள் உதவாது. யானைப் படையை எதிர்க்க பலமில்லாமல் இருந்த மக்காவின் குறைஷிகள், மற்றுமுள்ள குலத்தார்கள், இது இறைவனின் வீடு அதை அவனே பாதுகாத்துக்கொள்வான் என்று அப்ரஹாவின் யானைப் படையுடன் போர் செய்யாமல் ஒதுங்கிக்கொண்டார்கள்.

அப்ரஹாவின் யானைப்படை மக்காவை நோக்கி வந்தது. முன்னணியில் வந்து கொண்டிருந்த பட்டத்து யானை மக்காவிற்குள் நுழைய மறுத்து மக்காவிற்கு வெளியேலேயே படுத்துவிட்டது. அதைக் கிளப்புவதற்கு எத்தனையோ முயற்சிகளை செய்தும் முடியவில்லை.

நபித்துவ வாழ்வில், ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட நாளில் மக்காவிற்குள் நுழைய மறுத்து, நபி (ஸல்) அவர்களின் கஸ்வா எனும் ஒட்டகம் மக்காவிற்கு வெளியிலேயே படுத்துக்கொண்டது. நபித்தோழர்கள், ''கஸ்வா இடக்குப் பண்ணுகிறது'' என்றார்கள். ''கஸ்வா இடக்குப் பண்ணவில்லை! அது சண்டித்தனம் செய்யும் இயல்புடையதுமில்லை! ஆயினும் அன்று அப்ரஹாவின் யானையை மக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்தவனே இப்போது இதனையும் தடுத்து விட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அப்ரஹாவின் யானைப்படை மக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்திய இறைவன், பறவைக் கூட்டங்களை அனுப்பி, அவர்கள் மீது சுடப்பட்ட கற்களை எறிய வைத்து, மென்று தின்னப்பட்ட வைக்கோல் போல யானைப் படையும், அப்ரஹாவும் அழிக்கப்பட்டார்கள்.

நபித்துவ வாழ்வில், மக்கா வெற்றி கொண்ட நாளில்

''நிச்சயமாக அல்லாஹ்தான் அன்று யானைப் படையை மக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினான். அவனே இன்று அவனது தூதரையும், நம்பிக்கையாளர்களையும் மக்காவின் மீது ஆதிக்கம் பெற வைத்திருக்கிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

காபாவை இடித்துத் தகர்க்க வந்த அப்ரஹாவும் யானைப் படையையும் மக்காவிற்குள் நுழையக்கூட முடியாமல், அழித்தொழிக்கப்பட்டார்கள். என்பதை திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் கூறுகிறது. காபா எனும் இறை ஆலயத்தைக் காத்துக்கொள்வதற்கு மனிதர்கள் சக்தி பெறவில்லையெனில் காபாவை இறைவன் காப்பாற்றிக் கொள்வான்.

(மீண்டும் அடுத்த பகுதியில்... இறைவன் நாடட்டும்)

அன்புடன்.
அபூ முஹை

நன்றி: சத்தியமார்க்கம்.காம்