இறைவனின் இறுதி வேதமாகிய திருக்குர்ஆனின் போதனைகளை ஆரம்பத்தில் மிக வன்மையாக எதிர்த்தவர்கள் - இஸ்லாத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்துவிட வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டவர்கள் - இறுதி வேதத்தை மக்களுக்குப் போதிக்க இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை பொய்யர், பைத்தியக்காரர், சூனியக்காரர் என்றெல்லாம் எள்ளியவர்கள் திருக்குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலக்கட்டத்திலேயே இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்திற்காக தங்கள் உயிர்களையும் தியாகம் செய்யவும் முன் வந்தார்கள். மிக சொற்ப நாட்களிலேயே உலக முஸ்லிம்களுக்கெல்லாம் ஆசிரியர்களாக பரிணமித்து, நபித்தோழர்கள் எனும் மிக உயரிய அந்தஸ்தைப் பெற்று அன்றும் இன்றும் உலக முடிவுநாள் வரையிலும் வரலாற்றுப் பக்கங்களில் ஜொலிப்பார்கள். இத்திருப்புமுனைக்குக் காரணம் இறைவனின் வேதமாகிய திருக்குர்ஆனின் வழிகாட்டுதல்தான்.
23 ஆண்டுகள் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாய்மொழி வழியாக இறைவன் தன் வார்த்தைகளை அருளியதுதான் திருக்குர்ஆன் எனும் வேதமாகும். திருக்குர்ஆனை முஹம்மது நபி (ஸல்) அவர்களே இயற்றினார்கள் என்று விமர்சிப்பவர்களின் கூற்றில் உண்மையிருக்குமென்றால் இறைத்தூதர் என்ற அந்தஸ்தில் இல்லாமல் தனியொரு மனிதரைப்பின் பற்ற அன்றைய மக்கள் முன் வந்திருக்க மாட்டார்கள் - முன் வந்தாலும் தொடர்ந்து அதில் நீடித்திருக்க மாட்டார்கள். என்னதான் கெட்டிக்காரத்தனமாக இருந்தாலும் ஒரேக் கொள்கையில், முரண்பாடில்லாமல் 23 ஆண்டுகளாக மக்களைத்தக்க வைப்பதென்பது தனியொரு மனிதனால் இயலாத காரியம்.
23 ஆண்டுகளாக இறைவனால், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வஹீயின் - இறைச் செய்தியின் மூலம் அருளப்பட்ட திருக்குர்ஆனில் அன்றைய மக்கள் முரண்பாடுகளைக் கண்டிருந்தால் நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே இஸ்லாத்தைப் புறக்கணித்திருப்பார்கள். நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் இஸ்லாத்தின் அடிச்சுவடுகூட அடையாளம் இல்லாமல் அழிந்து போயிருக்கும்.
மாறாக மொழி, இன வேறுபாடு எதுவுமின்றி ஆன்மீகம், அரசியல், அறிவியல், குடும்பவியல், குற்றவியல், சமூகவியல், கல்வியியல், கொள்கையியல், பொருளாதாரம் அனைத்து துறைகளிலும் - மனிதனின் பிறப்பு முதல் இறப்புவரை ஏற்படும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் - முரண்பாடற்ற - தீர்க்கமான தீர்வு கூறும் திருமறைக்குர்ஆன், உலகளாவிய நிலையில் மாந்தர்களை தம் கொள்கையின் பால் ஈர்த்திருப்பதே இது இறைவேதம் என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகளாகும்.
14 நூற்றாண்டுகளுக்கு முன், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதல்ல என்று பிரச்சாரம் செய்பவர்கள், 20ம் நூற்றாண்டின் அரிய கண்டுபிடிப்புகளாகிய அறிவியல் உண்மைகளைப்பற்றி பேசும் திருமறை வசனங்களை அறிவுப்பூர்வமாக மறுக்க கடமைப்பட்டுள்ளார்கள்.
அன்புடன்,
அபூ முஹை
விஞ்ஞான ஒளியில் என்கிற ஆய்வுக் கட்டுரை சகோதரர் ஏ. கே. அப்துல் ரஹ்மான் அவர்களால் எழுதப்பட்டது. அறிவியலும், பொருளாதாரமும் அரசாட்சி செய்யும் எல்லா வசதிகளும் கொண்ட இன்றைய இணையத்தள உலகில் - சரியானது என்று நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை பற்றி, 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு, எவ்வித வசதிகளோ, எவ்வித அறிவியல் உண்மைகளும் வெளிவர வாய்ப்புகளே இல்லாத காலகட்டத்தில் அருளப்பட்ட அருள்மறை குர்ஆன் கூறுவதை ஒப்பிடுகிறார் கட்டுரையாசிரியர்.
பேரண்டப் படைப்பின் துவக்கம் -1
நாம் வாழும் இந்தப் பூமியும், அதைச் சூழ்ந்து நிற்கும் ஆகாயமும் அதில் காணப்படும் எண்ணற்ற கோள்களும், துணைக் கோள்களும், நட்சத்திரங்களும் எப்படித் தோன்றின என்ற வியப்பும் வினாவும் மனித உள்ளத்தில் தொன்று தொட்டே அலை பாய்ந்து கொண்டிருந்தன. இதற்கு விடை கூற முற்பட்ட விஞ்ஞானிகள் ஒரு கருதுகோளை (Hypothesis) முன் வைத்தனர். 'நெபுலா' என்ற மேகத்திரளிலிருந்து, முதலாவதாக நட்சத்திரங்கள் தோன்றின என்றும், அப்படித் தோன்றிய நட்சத்திரங்களுள் ஒன்றுதான் சூரியன் என்றும் கூறினர். பின்னர் சூரியன் திடீரென வெடித்துச் சிதறிய போது அத்துண்டுகள் கோளமாயின என்றும், அக்கோள்களிலிருந்து துணைக் கோள்கள் பிரிந்து சென்றன என்றும் கூறுகின்றனர்.
இக்கூற்று பரவலாக நம்பப்பட்டு வந்த கால கட்டத்தில் தொடர்ந்து செய்யப்பட்ட ஆய்வுகள் இக்கொள்கைக்கு சாதகமாக அமையவில்லை. கிரகங்களின் பாதைகள், அவை சூரியனை நோக்கிச் சுற்றும் திசை, சூரியனின் அச்சில் சுழற்சி (Axial Rotation) ஆகியவற்றை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தங்களின் முந்தைய கொள்கையை அடியோடு ஒதுக்கிவிட்டுப் புதிய கருதுகோள் ஒன்றை முன்வைத்தனர்.
கோள்கள் சூரியனிலிருந்து வெடித்துச் சிதறியதல்ல: மாறாக அண்டத்தில் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள், துணைக்கோள்கள் உள்ளிட்ட யாவும் ஒரே சமயத்தில் தோன்றியதாகவே இருக்க முடியும் எனக் கூறி, அண்டம் எப்போதும் உள்ளது: அதற்கு ஆரம்ப முடிவு என்பது இல்லை எனவும் கூறினர்: இக்கூற்று இயல் மாறாக் கொள்கை (Steady State Theory) என்ற கவர்ச்சிகரமான பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் விஞ்ஞான உண்மைகள் இத்துடன் திருப்திப் பட்டுக் கொள்ளவில்லை. தொடர்ந்து செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள் இக்கொள்கைக்கு பாதகமாக அமைந்து விட்டன.
அண்டத்தின் வெப்பச் சூழலைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் இயல் மாறாக் கொள்கையை ஏற்பதற்குத் தேவையான வெப்பத்தை விடக் குறைந்த வெப்பத்தையும், அண்டத்தில் எங்கு பார்த்தாலும் இருண்ட பின்னணியைத் தோற்றுவிக்கும் அளவிற்கு குறைந்த ஒளியையும் கண்டதோடு, ஆண்டொன்றுக்கு 4 க.கி.மீ. (4 Km3) ல் ஒரு ஹைட்ரஜன் அணு உற்பத்தியாவதையும், கண்டனர். எனவே 'இயல் மாறக் கொள்கை' கேள்விக் குறியோடு தன்னுடைய வாழ்வை எதிர்நோக்கி நிற்கிறது.
மேற்கூறிய குறைபாடுகள் அனைத்திலும் தப்பி அவைகளையே தனக்குச் சாதகமாக அமைத்துக் கொண்டு மிக்க செல்வாக்குப் பெற்ற கருதுகோளாகத் தற்போது விஞ்ஞானிகளிடம் புகழ் பெற்று வருவது பெரு வெடிப்புக் கொள்கை (Big Bang Theory) யாகும். இக் கொள்கை என்னவெனில், இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பூமி உள்ளிட்ட கோள்களும், துணைக் கோள்களும், நட்சத்திரங்களும், இன்னும் ஏனைய பருப் பொருட்கள் யாவும், ஏறத்தாள பூமியைவிட 318.5 மடங்கு எடை உள்ள வியாழன் (Jupitor) கிரகத்தை ஒத்து, ஆனால் மிக அடர்த்தி வாய்ந்த ஒரு பொருளுக்குள் அடக்கப்பட்டிருந்தது. அப்பொருள் ஏதோ வானியல் காரணத்தால் தூள் தூளாக வெடித்துச் சிதறி அண்டம் முழுவதும் ஒரே தூசுப் படலமாகப் பரவியது. இந்த நிகழ்ச்சி ஏறத்தாள 1800 கோடி வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்தது. இந்த நிகழ்ச்சியின் பிறகு ஒரே புகை மூட்டமாக இருந்த அந்தத் தூசுத் துகள்கள் நட்சத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பருப்பொருட்களையும் தோற்றுவித்தது.
இவ்வாறு பூமி உட்பட இருந்த கோள்களும், ஏனைய துணைக் கோள்கள், நட்சத்திரங்கள் யாவும் ஒன்றாகக் கலந்திருந்த அந்தத் தூசுப்படலத்தில் இருந்து ஏறத்தாள 500 லிருந்து 750 கோடி வருடங்களுக்கிடையில் தனித் தனியாக பிரிந்தன என இந்தப் பெரு வெடிப்புக் கொள்கை (Big Bang Theory) கூறுகிறது.
அண்டத்தின் வரலாற்றை மனிதன் தன்னுடைய நவீன விஞ்ஞான அறிவையும், கருவிகளையும், பொருளாதார வசதியையும், தீராத வேட்கையையும், விடா முயற்சியையும் பயன்படுத்தி கண்டறிந்த இந்த விஷயங்கள் தொடர்பாக, இவ்வாறான வசதிகளோ, வேட்கையோ, இல்லாமல் வெறும் புராணக் கதைகளை பேசி வந்த 14 நூற்றாண்டுக்கு முந்தைய காலக் கட்டத்தில் பரிசுத்த குர்ஆன் என்ன கூறியது எனச் சற்றே திரும்பிப் பார்ப்போம்.
'நிச்சயமாக வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவற்றை நாமே பிரித்தோம் என்பதையும் (இக்குர்ஆன் என்னுடைய வசனம் அல்ல என்று கூறி) நிராகரிப்பவர்கள் பார்க்கவில்லையா? (அல் - குர்ஆன் அத்தியாயம் 21 ஸுரத்துல் அன்பியா 30வது வசனம்)
என்ன அற்புதமான வார்த்தைகள்!. இவ்வண்டத்தில் இருக்கும் யாவும் இரண்டறக் கலந்து ஒரு புகை மூட்டத்திலிருந்து தான் உற்பத்தியாகித் தனித் தனியே பிரிந்தன என்ற நவீன விஞ்ஞானக் கொள்கையை எவ்வளவு அற்புதமாகக் குர்ஆன் படம் பிடித்துக் காட்டிவிட்டது!.
நவீன விஞ்ஞானத்தின் அபிமான நண்பர்களே! பண்டைக் காலங்களில் உழைக்காமல் சோம்பி, அடிமைப்பட்டிருந்த பாமரனின் உழைப்பையும் சுரண்டி, உண்டு கொழுத்த கொடிய குழுவோரின் கதைகளையும், நாடு துறந்து, வீடு துறந்து, காடு கண்ட மனிதர்களின் கற்பனைக் கனவுகளையும், வேதங்களாய் ஏந்தி வந்த பட்டியலில்.. அறியாமலே.. படித்து உணராமலே.. பத்தோடு பதினொன்றாக உங்களில் சிலர் அருள்மறை குர்ஆனையும் சேர்த்துப் பார்க்கின்றனர். இது அறியாமையல்லவா?. நீங்கள் மெய்யாகவே எதில் அபிமானம் கொள்கிறீர்களோ.. அந்த விஞ்ஞானமே, அருள்மறை குர்ஆன் மெய்யான வேதம் என்பதற்குச் சாட்சியாகி நிற்பதைப் பார்த்தீர்களல்லவா!. பிறகு ஏன் நீங்கள் அதை நிராகரிக்கிறீர்கள்?. நீங்கள் குர்ஆனை ஏற்க மறுத்தால், குறைந்த பட்சம் அதை உலகுக்கு போதிக்க அனுப்பப்பட்ட அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இந்த இருபதாம் நூற்றாண்டில் பிறந்து வளர்ந்தவர் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.
இப்பூலகின் அறியாமையைப் போக்கிச் சன்மார்க்கம் செழிக்க அண்ட சராசரங்கள் யாவையும் தன் வல்லமை ஒன்றைக் கொண்டே படைத்துப் பரிபாலனம் செய்து கொண்டிருக்கும் இணை, துணையில்லாத அந்த ஏக இறைவனிடமிருந்து அந்த மாநபி முஹம்மத் (ஸல்) பெற்றுத் தந்த பரிசுத்த குர்ஆன் மேலும் கூறுவதைக் கேளுங்கள்.
இவ்வண்டத்தின் படைப்பைத் துவக்குவதற்காக பூமியின் மீது இருக்க வேண்டிய, முளைக்க வேண்டிய அனைத்தையும் நிர்ணயம் செய்த.. 'பின்னர்.. ஆகாயத்தின் பால் திரும்பினான். அது ஒரு புகையாக இருந்தது..' (அல்-குர்ஆன் அத்தியாயம் 41 ஸுரத்துல் ஹாமீம் ஸஜ்தாவின் 11வது வசனம்)
இப்போது சொல்லுங்கள்!. நவீன கம்யூட்டர் யுகத்தின் கண்டுபிடிப்புகளை வரிக்குவரி பிறழாமல் 14 நூற்றாண்டுகளுக்கு முந்திய சூழ்நிலையில் ஒரு மனிதரால் கூறியிருக்க முடியுமா?. ஆனால் அப்படி கூறியிருக்கிறார் என்பது தற்போது உலகறிந்த உண்மை. இதிலிருந்து நீங்கள் எந்த முடிவுக்கு வர விரும்புகிறீர்கள்?. நாம் முன்னரே கண்டது போல் திரு நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இருபதாம் நூற்றாண்டு மனிதரென்றா?. அல்லது அவர் போதித்த இந்த அற்புதமான உண்மைகளைக் கொண்ட பரிசுத்த குர்ஆன் அண்ட சராசரங்களையும் படைத்த மெய்யான இறைவனின் வேதமென்றா?.
நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் இதில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். எல்லாம் வல்லவனும், பேரருளாளனும், இப்பரிசுத்த குர்ஆனின் ஆசிரியனும் யாரோ அவன் நம் அனைவருக்கும் நல்ல முடிவை - சரியான முடிவைத் தேர்வு செய்யத் துணை புரிவானாக!
(வளரும் இன்ஷா அல்லாஹ்)