Monday, January 31, 2005

புத்தகக் கண்காட்சி, சென்னை

நேற்றைய பதிவு, இது காணவில்லை என்பதால் மீண்டும்...

2005 மார்ச் மாதம் இறுதியில் எடுக்க வேண்டிய விடுமுறையை, 2005 ஜனவரி 16ந் தேதியில் பெற்றுக் கொண்டு ஜனவரி 17ந் தேதி திங்கள்கிழமை காலை 7 மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வந்திறங்கினேன்.

குடி புகலை முடித்து, பின் சாமான்களைப் பெற்றுக் கொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியேறி வாடகை வாகனத்தில் எழும்பூர் வந்து வழக்கமாகத் தங்கும் விடுதியில் தங்கினேன். மாலை 5 மணிக்கு திருநெல்வேலிக்குச் செல்ல பேருந்தில் இருக்கையை பதிவு செய்து கொண்டேன்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்று வரும் எண்ணமும் இருந்தது. புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடத்தை விசாரித்து தெரிந்து கொண்டு, எந்த நேரத்தில் காணமுடியும் என்பதில் காலை பத்து மணிக்குப் புத்தகக் கண்காட்சி திறக்கப்படும் என்ற தகவலின்படி காலை பத்தரை மணிக்கு காயிதே மில்லத் கலைக் கல்லூரி சென்ற போது கல்லூரி விளாகத்தின் இரும்புக் கதவின் வாசலில் இருந்த சீருடையாளரில் ஒருவர் ''பகல் 2 மணிக்கு மேல்தான் புத்தகக் கண்காட்சி திறக்கப்படும் இப்போது உள்ளே வர அனுமதி இல்லை'' என்றார்.

நான் திரும்பிச் சென்று பகல் 2 மணிக்கு மீண்டும் காயிதே மில்லத் கலைக் கல்லூரி விளாகத்தில் நுழைந்தேன். மக்கள் கூட்டம் நுழைவுச் சீட்டுக்காகக் கத்திருந்த வரிசையோடு நானும் சேர்ந்து கொண்டேன்.

நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டு உள்ளே செல்லும் வழியில், புத்தகக் கடைகளின் பெயர்கள் - எண்களுடன் குறிப்பிட்ட முகவரி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

தேவையான கடையைத் தேடி அலையும் சிரமத்தை, அந்தத் துண்டு பிரசுரம் முற்றாக நீக்கி விடுவது மட்டுமல்லாமல் நாம் தேடிவந்த புத்தகக் கடையையும் ''இதோ இங்கிருக்கிறது'' என்று பளிச்சென்று அடையாளம் காட்டித் தருகிறது.

கிழக்கு பதிப்பகம் புத்தகக் கடையில் ''இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்'' மற்றும் ''டாலர் தேசம்" ஆகிய இரு புத்தகங்களும் வாங்கினேன்.

ஸாஜிதா புக் சென்டர் புத்தக் கடையில் திருக்குர்ஆன் விரிவுரையான தோற்றுவாய், பசுமாடு ஆகிய இரு அத்தியாயம் மட்டும் முதல் பாகமாக தமிழாக்கம் செய்து வெளிவந்துள்ள '' தஃப்ஸீர் இப்னு கஸீர்'' வாங்கினேன்.

IFT நிறுவனத்தின் புத்தகக் கடையில் ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம் முதலிரண்டு பாகங்களும் வாங்கினேன்.

புத்தகக் கண்காட்சியில் ஏராளமான புத்தகக் கடைகள் இருந்தும் அவற்றைப் பார்க்க நேரமின்மையால் மாலை 5 மணிக்கு பதிவு செய்தப் பேருந்து பயணத்தை கவனத்தில் கொண்டு விரைவாக வெளியேற வேண்டியிருந்தது.

சென்னைப் புத்தகக் கண்காட்சி

2005 மார்ச் மாதம் இறுதியில் எடுக்க வேண்டிய விடுமுறையை, 2005 ஜனவரி 16ந் தேதியில் பெற்றுக் கொண்டு ஜனவரி 17ந் தேதி திங்கள்கிழமை காலை 7 மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வந்திறங்கினேன்.

குடி புகலை முடித்து, பின் சாமான்களைப் பெற்றுக் கொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியேறி வாடகை வாகனத்தில் எழும்பூர் வந்து வழக்கமாகத் தங்கும் விடுதியில் தங்கினேன். மாலை 5 மணிக்கு திருநெல்வேலிக்குச் செல்ல பேருந்தில் இருக்கையை பதிவு செய்து கொண்டேன்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்று வரும் எண்ணமும் இருந்தது. புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடத்தை விசாரித்து தெரிந்து கொண்டு, எந்த நேரத்தில் காணமுடியும் என்பதில் காலை பத்து மணிக்குப் புத்தகக் கண்காட்சி திறக்கப்படும் என்ற தகவலின்படி காலை பத்தரை மணிக்கு காயிதே மில்லத் கலைக் கல்லூரி சென்ற போது கல்லூரி விளாகத்தின் இரும்புக் கதவின் வாசலில் இருந்த சீருடையாளரில் ஒருவர் ''பகல் 2 மணிக்கு மேல்தான் புத்தகக் கண்காட்சி திறக்கப்படும் இப்போது உள்ளே வர அனுமதி இல்லை'' என்றார்.

நான் திரும்பிச் சென்று பகல் 2 மணிக்கு மீண்டும் காயிதே மில்லத் கலைக் கல்லூரி விளாகத்தில் நுழைந்தேன். மக்கள் கூட்டம் நுழைவுச் சீட்டுக்காகக் கத்திருந்த வரிசையோடு நானும் சேர்ந்து கொண்டேன். நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டு உள்ளே செல்லும் வழியில், புத்தகக் கடைகளின் பெயர்கள் - எண்களுடன் குறிப்பிட்ட முகவரி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

தேவையான கடையைத் தேடி அலையும் சிரமத்தை, அந்தத் துண்டு பிரசுரம் முற்றாக நீக்கி விடுவது மட்டுமல்லாமல் நாம் தேடிவந்த புத்தகக் கடையையும் ''இதோ இங்கிருக்கிறது'' என்று பளிச்சென்று அடையாளம் காட்டித் தருகிறது.

கிழக்கு பதிப்பகம் புத்தகக் கடையில் ''இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்'' மற்றும் ''டாலர் தேசம்" ஆகிய இரு புத்தகங்களும் வாங்கினேன்.

ஸாஜிதா புக் சென்டர் புத்தக் கடையில் திருக்குர்ஆன் விரிவுரையான தோற்றுவாய், பசுமாடு ஆகிய இரு அத்தியாயம் மட்டும் முதல் பாகமாக தமிழாக்கம் செய்து வெளிவந்துள்ள '' தஃப்ஸீர் இப்னு கஸீர்'' வாங்கினேன்.

IFT நிறுவனத்தின் புத்தகக் கடையில் ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம் முதலிரண்டு பாகங்களும் வாங்கினேன்.

புத்தகக் கண்காட்சியில் ஏராளமான புத்தகக் கடைகள் இருந்தும் அவற்றைப் பார்க்க நேரமின்மையால் மாலை 5 மணிக்கு பதிவு செய்தப் பேருந்து பயணத்தை கவனத்தில் கொண்டு விரைவாக வெளியேற வேண்டியிருந்தது.

Saturday, January 22, 2005

புனித ஹஜ் பயணம் ஓர் வர்ணனை பகுதி 6

பகுதி ஆறு

தவாபுஸ் ஸியாரா.
ஹஜ்ஜின் மிக மிக முக்கியமான செயல்களில் இந்தத் தவாபுஸ் ஸியாராவும் ஒன்று. இந்தத் தவாபைச் செய்யாதவரை ஹஜ் நிறைவு பெறாது.

ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து, குர்பானி கொடுத்து, தலை முடி நீக்கி, இஹ்ராமிலிருந்து விடுபட்ட ஹாஜிகள், தவாபுஸ்ஸியாராச் செய்வதற்கு கஃபத்துல்லாஹ்வை நோக்கி புறப்படுகின்றனர்.

இன்றைய தினம் செய்யும் இந்தத் தவாபுஸ்ஸியாரா என்பது மிகவும் சிரமமானது தான். இது நாள் வரை ஹாஜிகள், எத்தனையோ முறை- புனிதக் கஃபாவை தவாப் செய்திருக்கலாம். அப்போதுள்ள கூட்ட நெரிசலே அதிகமாக இருந்திருக்கும். ஆனால் இன்று பெரும்பாலும் அத்தனை இலட்சம் ஹாஜிகளும், தவாபுஸ்ஸியாராவை நிறைவேற்ற மஸ்ஜிதுல் ஹராமில் நுழைந்து விடுகின்றனர்.

இன்றைய தினம், மஸ்ஜிதுல் ஹராமில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. சுப்ஹானல்லாஹ்! இன்று தவாபை முடித்து வெளியில் வருவது என்பது இலேசான காரியமல்ல.

கஃபா என்னும் இறையாலயத்தை- இன்றைய தினம் புனித ஹாஜிகள் சுற்றி வரும் காட்சியை- மஸ்ஜிதுல் ஹராமின் இரண்டாவது- மூன்றாவது தளங்களில் நின்று பார்த்தால்- பார்த்துக் கொண்டே இருக்கலாம். கண்கொள்ளாக் காட்சி!

ஏறக் குறைய இருபது இலட்சம் பேர் சுற்றுகிறார்கள். கடல் அலையைப் போல் - மனித வெள்ளம் சுற்றிச் சுற்றி வட்டமிடுகின்றது.

ஏழுச் சுற்றுக்களை முடித்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி, நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். புதிதாக நுழைபவர்கள் தங்கள் சுற்றுக்களைத் தொடங்குகின்றனர்.

இன்று காலை முதல் தொடங்கிய நெரிசல்- இன்று பகல் முழுவதும் நீடிக்கின்றது. இரவு முழுவதும் தொடர்கின்றது. உணவை மறந்து, உறக்கத்தை மறந்து, எப்படி இவர்கள்- கொஞ்சம் கூடக் களைப்பு இல்லாமல் சுற்றுகிறார்கள்.

இன்றைய தினம் காலையிலிருந்து ஒவ்வொரு செயலாகச் செய்து முடித்து விட்டு- எவ்வளவு சுறுசுறுப்பாக தவாபும் செய்கின்றனர்! இயலாமையும் சோர்வும் இருந்த இடம் தெரியாமல் போக - இளமையும் வலிமையும் எங்கிருந்து இவர்களுக்கு வந்தது?

இறைவனின் கட்டளையை சிரமேற் கொண்டு வந்தவர்களுக்கு, உற்சாகமும், உத்வேகமும் தாமாக வந்து விடுமோ! இன்றைய தினத்தின் செயல்களை, தவறுதலாகவோ, அறியாமையாலோ, முன் பின் மாற்றிச் செய்து விட்டாலும் குற்றமில்லை.

நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது நான் வந்தேன். அப்போது ஒருவர் எழுந்து, 'நான் இதற்கு முன் இது என நினைத்தேன்!" என்றார். இன்னொருவர் எழுந்து 'நான் இதற்கு முன் இது என நினைத்தேன்! பலியிடுவதற்கு முன் தலையை மழித்து விட்டேன்! கல்லெறிவதற்கு முன் பலியிட்டு விட்டேன்." என இது போன்றவற்றைக் கூறலானார். அவ்வனைத்திற்குமே, நபி (ஸல்) அவர்கள், 'குற்றமில்லை! (விடுபட்டதைச்) செய்யுங்கள்" என்றே கூறினார்கள். அன்றைய தினம் வினவப்பட்ட எல்லாவற்றிற்குமே அவர்கள் 'குற்றமில்லை! (விடுபட்டதைச்) செய்யுங்கள்" என்றே கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ்(ரலி) ஆதாரம்: புகாரி (1737)
----------------------------------
துல் ஹஜ் 11 ஆம் நாள் - ஹஜ்ஜின் 4 ஆம் நாள்.
தவாபுஸ்ஸியாராவை முடித்த ஹாஜிகள். ஏற்கனவே 8 ஆம் நாள் மினாவில் தங்கியிருந்த கூடாரங்களுக்கு- மறுபடியும் வந்து சேருகின்றனர். இன்று முதல், மூன்று தினங்கள், ஒவ்வொரு நாளும், சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பிறகு- மூன்று ஜம்ராவுக்கும் முறையே ஏழு கற்கள் வீதம் எறிய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய நாளில் (துல் ஹஜ் 10 ஆம் நாள்) முற்பகல் நேரத்தில் கல்லெறிந்தார்கள்.மறு நாட்களில் சூரியன் உச்சி சாய்ந்ததும் கல்லெறிந்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: புகாரி (பாடம் 134)

இன்று முதல், மூன்று தினங்களுக்கு தினமும் ஜம்ரத்துஸ் ஸுக்ரா, ஜம்ரத்துல் உஸ்தா, ஜம்ரத்துல் அகபா, ஆகிய மூன்று ஜம்ராக்களிலும் முறையே ஏழு கற்கள் வீதம் எறிய வேண்டும்.

நபி (ஸல்) மினா பள்ளி வாசலை அடுத்திருக்கும் (முதல்) ஜம்ராவில் கல்லெறியும் போது ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லையும் எறியும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு சற்று முன்னால் சென்று கிப்லாவை முன்னோக்கி நீண்ட நேரம் நின்று கைகளை உயர்த்தி துஆச் செய்வார்கள். பிறகு இரண்டாவது ஜம்ராவுக்கு வந்து அங்கும் ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லையும் எறியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு இடது பக்கமாகப் பள்ளத்தாக்கிற்கு அடுத்துள்ள பகுதிக்கு வந்து கிப்லாவை முன்னோக்கி நின்று கைகளை உயர்த்தி துஆச் செய்வார்கள். பிறகு ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்து ஏழு சிறு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லையும் எறியும் போதும் தக்பீர் கூறுவார்கள் பின்பு அங்கிருந்து திரும்பி விடுவார்கள். அங்கு நிற்க மாட்டார்கள். அறிவிப்பவர்: ஸுஹ்ரி (ரலி) ஆதாரம்: புகாரி (1753)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் செய்துக் காட்டிய அதே முறையைப் பின்பற்றி ஹாஜிகள் ஜம்ராக்களில் கல் எறிகிறார்கள். முதல் நாள் இருந்த அளவுக்கு மக்கள் நெரிசல் அடுத்தடுத்த நாட்களில் இல்லை. அவரவர் தம் வசதிப்பட்ட நேரங்களில் வருவதால்- கூட்டம் சற்று குறைவாகத் தெரிகிறது.

ஒவ்வொரு நாளும் கல்லெறிந்து விட்டு மினாவில் அவரவர் கூடாரங்களில் சென்று ஹாஜிகள் ஓய்வெடுக்கின்றனர். கிடைக்கின்ற நேரமெல்லாம் இறைவணக்கத்தில் பொழுதைக் கழிக்கின்றனர். மினாவில், பல்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கும் அந்தந்த நாட்டு ஹஜ் கமிட்டியினராலும்- தனியார் ஹஜ் சர்வீஸ்கள் மூலம் வந்தவர்களுக்கு அந்தந்த நிறுவனத்தினராலும், தனித்தனியே கூடாரங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

ஒவ்வொரு நாட்டினருக்காகவும், அமைக்கப்பட்டுள்ள கூடாரப் பகுதிகளில் அந்தந்த நாட்டு தேசியக் கொடி அடையாளத்துக்காக பறக்கவிடப்பட்டுள்ளது. உள் நாட்டிலிருந்து தனிப்பட்ட முறையில் வந்தவர்கள் கூடாரங்களை வாடகைக்கு எடுத்து தங்கிக் கொள்கின்றனர்.

கூடாரங்கள் கிடைக்கப் பெறாதவர்கள், தங்குவதற்கென- நீண்ட பெரும் அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கங்களில் இலவசகமாகத் தங்கிக் கொள்ளலாம். எல்லா இடங்களிலும் தாராளமாகத் தண்ணீர் வசதியும் கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
--------------------------------
துல் ஹஜ் 12 ஆம் நாள்- ஹஜ்ஜின் 5 ஆம் நாள்
முன் தினத்தைப் போலவே - இன்றும் ஹாஜிகள் சூரியன் உச்சியை விட்டு சாய்ந்த பிறகு தங்கள் கூடாரங்களிலிருந்து புறப்பட்டு மூன்று ஜம்ராக்களிலும், முறையே ஏழு கற்கள் வீதம் எறிகின்றனர்.

முதியவர்கள் மற்றும், இயலாதவர்களுக்குப் பகரமாக மற்றவர்கள் கல்லெறியலாம். பகரமாக எறிபவர்கள், முதலில் தமக்காக எறிந்துக் கொள்ள வேண்டும். பிறகு தம்மைப் பகரமாக நியமித்தவர்களுக்காக எறிய வேண்டும். வழக்கம் போல் ஹாஜிகள் ஒவ்வொரு கல்லாக எறிகின்றார்கள். ஒவ்வொரு கல் எறியும் போதும் தக்பீர் கூறுகிறார்கள். முதல் இரண்டு ஜம்ராக்களிலும் நின்று துஆச் செய்து விட்டு மூன்றாவது ஜம்ரவாகிய ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்ததும், நின்று துஆச் செய்யாமல் திரும்பி விடுகின்றனர்.
--------------------------
துல் ஹஜ் 13 ஆம் நாள்- ஹஜ்ஜின் 6 ஆம் நாள்
குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்! இரண்டு நாட்களில் விரைபவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. தாமதிப்பவர் மீதும் குற்றம் இல்லை. (இது இறைவனை) அஞ்சுவோருக்கு உரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள். அவனிடம் ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்! (திருக் குர்ஆன் 2:203) 11 ஆம் நாளும், 12 ஆம் நாளும் ஆகிய இரு தினங்கள் மட்டும் கல்லெறிந்து விட்டு புறப்படுபவர்கள் புறப்படலாம். ஆனால் மஃரிபுக்கு முன் புறப்பட்டு விட வேண்டும். இன்று மினாவில் தங்கினால், 13 ஆம் நாளும் கல்லெறிந்து விட்டுத் தான் புறப்படவேண்டும்.

இரண்டு நாட்கள் மட்டும் கல்லெறிந்து விட்டு புறப்படுபவர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலானவர்கள் 13 ஆம் நாளும் கல்லெறிந்து பூரணமாகத் தங்கள் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றி விட்டுத் தான் புறப்படுகின்றனர். இன்றைய தினத்துடன் புனித ஹஜ்ஜின் அனைத்து செயல்களும் நிறைவடைகின்றன. எந்தப் புனிதக் கடமையை நிறைவேற்ற- இப்பூவுலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும்- இப்புனித பூமிக்கு வந்தனரோ! அந்தப் புனிதக் கடமையின் அனைத்து செயல்களும் இன்றோடு முடிவடைந்து விட்டன. அல்ஹம்து லில்லாஹ் .
-----------------------------------
புறப்படத் தயாராகின்றனர்.
புனித ஹாஜிகள் புனித ஹஜ்ஜின் அனைத்துக் கடமைகளையும் பூரணமாக நிறைவேற்றி- புண்ணியம் பெற்ற புனித ஹாஜிகள்- ஒரு சில தினங்கள் புனித மக்காவில் அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட விடுதிகளில் வந்து தங்கி இளைப்பாறுகின்றனர்.

புனித மக்காவின் கடை வீதிகள் நிரம்பி வழிகின்றன. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்- புனித மக்காவின் கடைகள் முழுதும் குவிந்துக் கிடக்கின்றன. புனித ஹாஜிகள்- ஹஜ்ஜை முடித்து தம் இல்லங்களுக்குத் திரும்பும்போது- தம்மை அன்புடன் எதிர் பார்த்து காத்திருக்கும்- உறவினர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும், அன்பளிப்புப் பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர்.

திரு மறை குர்ஆன் பிரதிகள், தொழுகை விரிப்புகள், வாசனைத் திரவியங்கள், சுவையான பேரீத்தம் பழங்கள், புனித ஹஜ்ஜின் நினைவாக- காலமெல்லாம் வைத்துப் பாதுகாக்க- பல்வேறு பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்கின்றனர். உறவினர்களுக்கு வழங்க - ஜம்ஜம் தண்ணீரையும் தேவையான அளவு எடுத்து வைக்கத் தவறவில்லை.

(ஹஜ்ஜின் போது வியாபாரத்தின் மூலம்) உங்கள் அருளைத் தேடுவது உங்களுக்குக் குற்றமில்லை. (திருக் குர்ஆன் 2:198)

உக்காழ், மஜன்னா, துல்மஜாஸ், ஆகியவை அறியாமைக் காலத்தில் கடை வீதிகளாக இருந்தன. இஸ்லாம் வந்ததும், அங்கே வியாபாரம் செய்வதை மக்கள் குற்றம் எனக் கருதினார்கள். அப்போது உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்கள் மீது குற்றமில்லை (2:198) என்ற வசனம் இறங்கியது. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)ஆதாரம்: புகாரி (2050)

எனவே புனித ஹாஜிகள் தமக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வதில் தவறில்லை.
-----------------------------
'தவாபுல் விதா"
''தவாபுல் விதா'' எனும் பயணத் தவாபு யாரேனும் ஹஜ் செய்தால், அவரது கடைசிக் காரியம் பைத்துல்லாஹ்வில் (தவாபு செய்வதாக) அமையட்டும். மாதவிடாய் ஏற்பட்டவர்களைத் தவிர, என்று நபி (ஸல்) அவர்கள் கூறி அவர்களுக்கு விதிவிலக்கு அளித்தார்கள்.அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதாரம்: திர்மிதி (866)

பயணத்திற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து வைத்துக் கொண்டு- பயணத் தவாபு செய்வதற்கு ஹாஜிகள் தயாராகி விட்டனர். மஸ்ஜிதுல் ஹராமில் நுழைந்து- ஹஜருல் அஸ்வத் இருக்கும் இடத்திலிருந்து தவாபைத் தொடங்கி- ஏழு முறை கஃபாவை வலம் வந்து- மகாமே இப்ராஹீமில் தொழுது- ஜம்ஜம் நீரருந்தி- தங்கள் பயணத் தவாபை நிறைவு செய்கின்றனர்.

புனிதக் கஃபாவிடமிருந்து பிரியா விடை பெறுகின்றனர். கஃபாவைக் காணக் காண ஹாஜிகளின் கண்கள் குளமாகின்றன. கண்களிலிருந்து குற்றால அருவியெனக் கொட்டுகிறது கண்ணீர். 'இந்தக் கஃபாவை விட்டுப்பிரியப் போகின்றோமே" என்பதை நினைக்க நினைக்க, இனிய இறை நேசர்களின் இதயங்கள் அழுகின்றன. கண்குளிர- உளம் மகிழ- இந்தக் கஃபாவைக் கண்டுக் கொண்டே- இங்கேயே இருந்துவிட மாட்டோமா? என்று இந்த இனியவர்களின் இதயங்கள் ஏங்குகின்றன. அழிகின்ற இந்த உலகத்தை- இதில் வாழும் மனிதர்களை- அநாச்சாரங்களும், அநியாயங்களும், அட்டூழியங்களும், நிறைந்த சமூகத்தினரையெல்லாம், கண்டு அலுத்துப் போன இதயங்களுக்கு இத்தனை நாட்களும் இங்கே அமைதி கிடைத்தது. ஆறுதல் கிடைத்தது. இதை விட்டுச் செல்லப் போகின்றோம் எனும் போது- கல் நெஞ்சமும் கரையத்தானே செய்யும்.

புனித ஹஜ்ஜை இனிதே நிறைவேற்றும் பெரும் பேற்றைத் தந்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றனர். ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்த ஹாஜிகளாய் இங்கிருந்து செல்கின்றனர். பாவங்கள் மன்னிக்கப் பட்டவர்களாக- பரிசுத்த மனதோடு- பக்தி நிறைந்த உள்ளத்தோடு- நல்ல இன்பத்தின் பொலிவோடு- இதயத்தின் வலிவோடு- ஈமானின் நிறைவோடு- புனித ஹாஜிகளாய்- புண்ணிய சீலர்களாய்- இந்தப் புண்ணிய பூமியை விட்டுப் புறப்படுகின்றனர். ஹாஜிகள் தாயகம் திரும்ப- தத்தம் வாகனங்களில் ஏறி அமர்ந்து விட்டனர்.

தரை வழியாக வந்த வாகனங்கள், சிங்காரச் சாலைகளில் சீறிப் பாய்ந்த வண்ணம் புறப்படுகின்றன. நீலத் திரைக் கடலில் நீந்தி வந்தக் கப்பல்கள், நீரைக் கிழித்த வண்ணம்- இஸ்லாமியத் துறைமுகத்திலிருந்து மிதக்கத் துவங்கி விட்டன.வான் வெளிப் பாதையில் வந்திறங்கிய விமானங்கள் - ஜித்தாவின், மன்னர் அப்துல் அஜீஸ் பன்னாட்டு விமானத் தளத்திலிருந்து, திரும்பும் பயணத்தைத் தொடங்கி விட்டன.ஹாஜிகள் மனத் திரையில் படக் காட்சிகளைப் போல் ஒவ்வொரு காட்சிகளாக வந்து போகின்றன.

அவரவர் தம் இல்லங்களிலிருந்து ஆர்வத்துடன் புறப்பட்டதும்-
இஹ்ராம் உடை தரித்து- இனிய ஹஜ்ஜுக்காகத் தயாரானதும்-
மக்கத் திரு நகரில் மகிழ்ச்சியுடன் இறங்கியதும்-
மஸ்ஜிதுல் ஹராமில் மனம் குளிர நுழைந்ததும்-
மாண்புடன் கஃபாவைத் தவாபு செய்ததும்-
மகாமே இப்ராஹீமில் தொழுததும்-
ஜம்ஜம் நீரருந்தியதும்-
ஸபா- மர்வாவில் தொங்கோட்டம் ஓடியதும்-
புனித உம்ராவை இனிதே நிறைவேற்றியதும்-
மக்காவைச் சுற்றி ஒரு மகிழ்ச்சிப் பயணம் செய்ததும்-
மதீனத் திரு நகரில் நுழைந்ததும்-
மஸ்ஜிதுன்னபவியில் தொழுததும்-
மாநபியின் மண்ணறையை மாண்புடன் தரிசித்ததும்-
மதீனாவைச் சுற்றி மனம் குளிரக் கண்டதும்-
மீண்டும் புறப்பட்டு மக்காவை வந்தடைந்ததும்-
புனித ஹஜ்ஜுக்கு ஆயத்தமானதும்-
மினாவின் கூடாரங்களில் தங்கியதும்-
அரபாத் பெருவெளியில் நின்றதும்-
அழுதழுது பாவமன்னிப்புக் கேட்டதும்-
முஸ்தலிபாவில் முழு இரவைக் கழித்ததும்-
ஜம்ராவுக்குச் சென்றதும்-
மூன்று நாட்கள் கல்லெறிந்ததும்-
அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிட்டதும்-
தலை முடிக் களைந்ததும்-
தவாபுஸ்ஸியாராச் செய்ததும்-
இறுதியாக இன்றைய தினம் பிரியா விடை பெற்று பயணத் தவாபுச் செய்ததும்-

பசுமரத்தாணி போல் பதிந்து விட்டநினைவுகளை அசை போடுகிறார்கள் அல்லாஹ்வின் நேசர்கள். ஆண்டாண்டு காலமாக வந்து சென்ற- அத்தனை கோடி ஹாஜிகளின்- அங்கீகரிக்கப் பட்ட ஹஜ்ஜுக்கு சாட்சி கூறும் அரபாத் பெருவெளியும்-உண்மை விசுவாசிகளின் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு மௌன சாட்சி கூறும் முஸ்தலிபா நிலப் பரப்பும்-அடுத்தடுத்த ஆண்டுகளில் வரப் போகின்ற அல்லாஹ்வின் நேசர்களுக்காகக் காத்திருக்கின்றன.

இலட்சோப லட்சம் மக்கள் தங்கிச் சென்ற மினாவின் கூடாரங்கள் வெறிச் சோடிக் கிடக்கின்றன. வரும் ஆண்டுகளில் வரவிருக்கும் புனிதர்களுக்காகக் காத்திருக்கின்றன. இறையில்லம் கஃபாவைச் சுற்றுதல் மட்டும் எப்போதும் எப்போதும் தொடர்ந்துக் கொண்டே இருக்கும். சங்கிலித் தொடரான இச்சுற்றுதல் சதா சர்வ காலமும் தொடர்ந்துக் கொண்டே இருக்கும். தினந் தோறும் வருகின்ற- ஏராளமான மக்கள்- என்றென்றைக்கும் இந்த இறையில்லத்தை சுற்றிக் கொண்டே இருப்பர்.

அண்டம் அழியும் வரை, மண் மாயும் வரை, யுகம் முடியும் வரை ஓயாது ஒழியாது சுற்றிக் கொண்டே இருப்பர்.
-------------------------
நபி (ஸல்) அவர்கள் போரிலிருந்தோ, ஹஜ்ஜிலிருந்தோ, உம்ராவிலிருந்தோ, திரும்பும் போது- பூமியில் உயரமான பகுதியில் ஏறினால், மூன்று தடவை தக்பீர் கூறுவார்கள். பிறகு லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன, ஸாயிஹுன, லிரப்பினா ஹாமிதூன, ஸதகல்லாஹு வஃதஹு, வ நஸர அப்தஹுவ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹு என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதாரம்: திர்மிதி (873)
----------------------------
எளிய முறையில் ஹஜ் செய்ய.
எளிய முறையில் ஹஜ் செய்ய சில அரிய ஆலோசனைகள் பலர் சேர்ந்து தவாப் செய்ய வந்தால், தவாப் சுற்றத் தொடங்கும் போது, தொடங்குவதற்கு முன் மஸ்ஜிதுல் ஹராம் பள்ளியின் உட் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையாளம் வைத்துக் கொண்டு, 'தவாபை முடித்து இந்த இடத்தில் வந்து சேர்ந்துவிடவேண்டும்" என்று நிர்ணயம் செய்துக் கொள்ளுங்கள்.

கூட்ட நெரிசலில் உடன் வந்தவர் தவறிவிட்டால், மீதியுள்ள சுற்றுக்களை மன நிம்மதியுடன் சுற்ற முடியாது. இவ்விதம் ஒரு குறிப்பிட்ட இடத்தை நிர்ணயம் செய்துக் கொண்டு தவாப் சுற்றத் தொடங்கினால், இடையில் பிரிய நேர்ந்தாலும், ஏழு சுற்றுக்களை நிறைவு செய்த பின் மீண்டும் மற்றவர்களுடன் இணைந்துக் கொள்ளலாம்.

மஸ்ஜிதுல் ஹராமின் உள்ளே நுழைய, பல வழிகள் உண்டு. ஒவ்வொரு நுழை வாயிலுக்கும் பெயர்கள் உண்டு. அனைத்து பெரிய, மற்றும் சிறிய நுழைவாயில்களுக்கும் எண்கள் உண்டு. பரந்து விரிந்த பள்ளியின் உட்பகுதி- பார்ப்பதற்கு எல்லா இடங்களும் ஒரே மாதிரியாகத் தோன்றும். எனவே நுழைவாயில் எண்களை நினைவு வைத்துக் கொள்ளலாம். தவாப் சுற்றத் தொடங்கும் போதும், ஸபா- மர்வாவில் தொங்கோட்டம் ஓடத் தொடங்கும் போதும் இதே முறையைப் பின்பற்றுங்கள்.

கடமைகளை நிம்மதியாக நிறைவேற்றலாம். உங்கள் தங்குமிடங்களிலிருந்து ஒவ்வொரு முறையும் மஸ்ஜிதுல் ஹராமுக்கு வரும்போது, ஒரு குறிப்பிட்ட எண்ணுள்ள நுழைவாயில் வழியே வருகின்றீர்கள். மறுபடியும் திரும்பிச் செல்லும் போது அதே நுழைவாயில் வழியே வெளியேறினால் தான் உங்கள் தங்குமிடங்களுக்கு எளிதாகச் சென்றடைய முடியும். பள்ளியின் உள்ளே உங்கள் கடமைகளை முடித்து வெளியே வரும்போது- தவறுதலாக வேறு வழியாக வெளியே வந்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உள்ளே நுழைந்த குறிப்பிட்ட நுழைவாயிலைத் தேடி, பள்ளியின் வெளிப் புறம் சுற்றிக் கொண்டிருக்காதீர்கள். மிக நீண்ட தூரம் சுற்ற வேண்டியிருக்கும். வந்த வழியே மறுபடியும் உள்ளே சென்று, பள்ளியின் உட்பகுதியில் நுழைவாயில் எண்ணைத் தேடிக் கண்டுபிடித்து- அதன் வழியே வெளியேறுங்கள். இது தான் எளிதாக இருக்கும்.

தவாப் சுற்றும்போது- தொழுகைக்கான பாங்கு சொல்லப் பட்டுவிட்டால், உடனடியாக தவாபை அப்படியே நிறுத்திவிட்டு- தொழுவதற்கு வசதியான இடத்தைத் தேடி நின்று விடுங்கள். கொஞ்சம் தாமதித்தாலும் நின்று தொழ இடம் கிடைப்பது சிரமமாகிவிடும். ஜமாஅத் தொழுகை முடிந்த பிறகு, தவாபின் மீதியுள்ள சுற்றுக்களை பூர்த்தி செய்துக் கொள்ளலாம். மறுபடியும் முதல் தவாபிலிருந்து தான் தொடங்க வேண்டும் என்று அவசியமில்லை.

தவாப் சுற்றும் போது நெரிசல் அதிகம் உள்ள நேரங்களில், ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டுத்தான் ஆக வேண்டும், என்று அவசியமில்லை. ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது சுன்னத் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் முதியவர்களையும், பெண்களையும் இடித்துத் தள்ளி இடையூறு செய்வது ஹராம் ஆகும். ஒரு சுன்னத்தை நிறைவேற்றுவதற்காகப் பல ஹராம்களைச் செய்யக் கூடாது. தூரத்திலிருந்தே ஹஜருல் அஸ்வதை நோக்கி சைகை செய்து தக்பீர் கூறினால் போதுமானது. தவாபின் முதல் சுற்றுக்காக ஹஜருல் அஸ்வத் இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டு பிடிக்கவும், ஒவ்வொரு சுற்றின் போதும் சுற்றுக்களின் எண்ணிக்கையை கணக்கிட்டுக் கொள்ளவும், சிரமப்படத் தேவையில்லை. ஹஜருல் அஸ்வத் இருக்கும் பகுதிக்கு நேராகத் தரையில் கருப்புக் கோடு அடையாளமிடப்பட்டுள்ளது. தரைப் பகுதியை கவனித்துக் கொண்டே சுற்றினால் எளிதில் அடையாளம் காண முடியும்.

ஸபா- மர்வாவில் தொங்கோட்டம் ஓடும்போது- ஒரு குறிப்பிட்டப் பகுதியில் ஆண்கள் சற்று வேகமாக ஓட வேண்டும். அந்தக் குறிப்பிட்டப் பகுதியை அடையாளம் காண பச்சை விளக்குகள் எந்த நேரமும் எரிந்துக் கொண்டே இருக்கும். தவாப் சுற்றும் போதும், ஸபா- மர்வாவில் தொங்கோட்டம் ஓடும் போதும், சிலர் கைகளில் புத்தகங்களை வைத்துக் கொண்டு, அவற்றில் எழுதப்பட்டுள்ள குறிப்பிட்ட துஆக்களைத் தான் ஓத வேண்டும் என்று நினைக்கின்றனர். இதற்கெல்லாம் ஆதாரம் எதுவுமில்லை. இந்தப் புனிதமான நேரங்களில் நமக்குத் தெரிந்த, அண்ணல் நபி (ஸல்) கற்றுத் தந்த எளிமையான திக்ருகளை ஓதலாம். பிரார்த்தனை செய்யலாம். பிரார்த்தனைகள் அவரவர் தாய் மொழியிலேயே கூட இருக்கலாம்.

தவாப் சுற்றும் போதும், தொங்கோட்டம் ஓடும் போதும், அடுத்தவர் மீது இடிக்காமல் கவனமாக இருக்க வேண்டும். நம்மைவிட விரைவாகச் செல்பவர்களுக்கு ஒதுங்கி வழிவிட வேண்டும். மெதுவாகச் செல்பவர்கள் ஓரமாகச் செல்லலாம். தவாப் சுற்றும் போது, ஹிஜ்ர் இஸ்மாயீல் எனப்படும் அரை வட்டச் சுவற்றின் உட்பகுதியில் சுற்றக் கூடாது. ஏனெனில் அதுவும் கஃபாவின் ஒரு பகுதியாகும்.

தவாப் செய்து முடித்த பிறகு, மகாமே இப்ராஹீம் இருக்கும் இடத்திற்கு அருகில் தான் தொழ வேண்டும் என்பதில்லை. அந்த இடத்தில் நின்று தொழுவது- தவாப் சுற்றுபவர்களுக்கு இடையூறாக இருக்கும். தொழுகையையும் முழுமையாக நிறைவேற்ற முடியாது.

மஸ்ஜிதுல் ஹராமின் எந்தப் பகுதியிலும் தொழுதுக் கொள்ளலாம். மக்காவில் தங்கியிருக்கும் நாட்களில் சிலர், மேலும் மேலும் உம்ராக்களைச் செய்துக் கொண்டிருக்கின்றனர். ஆர்வத்தின் காரணமாக இவ்வாறு செய்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இவ்வாறு செய்வது விரும்பத் தக்கதல்ல. பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் இதை அங்கீகரிக்கவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் எத்தனை முறை வேண்டுமானாலும் தவாப் செய்யலாம். மார்க்க வல்லுனர்களும் மாமேதைகளும் இதையே வலியுறுத்துகின்றனர்.

தமத்துவ் வகை ஹஜ் செய்பவர்கள், ஹஜ்ஜுடைய நாள் வந்ததும், தன்யீம் அல்லது ஆயிஷாப் பள்ளி என்ற இடத்துக்குச் சென்று தான் இஹ்ராம் அணிய வேண்டும் என்பதில்லை. மக்காவில் அவரவர் தங்கியிருக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்துக் கொள்ளலாம். இதற்கான ஆதாரம் பின் வருமாறு:

நபி (ஸல்) அவர்கள் மதீனா வாசிகளுக்கு துல் ஹுலைபாவையும், ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்பாவையும், யமன் வாசிகளுக்கு யலம்லமையும், நஜ்த் வாசிகளுக்கு கர்ணையும் நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும், ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும், உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள் தாம் வசிக்கும் இடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் அணிந்துக் கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிந்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்கள். அறிவிப்பவர்;: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: புகாரி (1529)

தனிப்பட்ட முறையில் ஹஜ்ஜுக்கு வரும் சிலர்- மினாவிலும், அரபாவிலும், முஸ்தலிபாவிலும், தங்க வேண்டிய சமயங்களில்- கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக, இந்தப் புனிதத் தலங்களின் எல்லைகளைத் தாண்டிச் சென்று விட வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு பகுதியிலும் கடைசி எல்லையைக் குறிப்பிட்டு மாபெரும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த எல்லைகளைத் தாண்டிச் சென்று விடாமல் கவனமாக இருக்க வேண்டும்.

உதாரணமாக, ஹஜ் என்பது அரபாத் எல்லையில் இருப்பது தான். அரபாத் எல்லைக்கு வெளியே சென்று தங்கினால் ஹஜ் கூடாது. எனவே மிகுந்த கவனம் தேவை. அரபா தினத்தில், சூரியன் மறைந்த பிறகு தான் அரபாவை விட்டுப் புறப்படவேண்டும். எக்காரணம் கொண்டும் சூரியன் மறைவதற்கு முன் புறப்படக் கூடாது.

அரபாவில் மஃரிபைத் தொழாமல்- முஸ்தலிபா சென்றடைந்த பிறகு தான், இஷாவுடைய நேரத்தில் மஃரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழ வேண்டும்.

ஜம்ராவில் எறிய வேண்டிய கற்களை, முஸ்தலிபாவில் தான் பொறுக்க வேண்டும் என்பதில்லை. எந்தப் பகுதியிலும் பொறுக்கிக் கொள்ளலாம். கற்களைத் தண்ணீரில் கழுவி வைத்துக் கொள்ளவேண்டும் என்பதில்லை. அப்படியே வைத்துக் கொள்ளலாம்.

கல்லெறியும் போது, சுண்டி விளையாடும் அளவுக்கு சிறிய கற்களையே எறிய வேண்டும். சிலர் கோபமாக ஷைத்தானை அடிப்பது போல் பெரிய கற்களையும், செருப்புகளையும் வீசுகின்றனர். இது தவறாகும். கல்லெறியும் கடமைக்கு முரணானதாகும்.

கல்லெறியும் போது ஏழு கற்களையும் ஒன்றாகச் சேர்த்து எறியக் கூடாது. ஒவ்வொரு கல்லாகத்தான் எறிய வேண்டும். அதுவும் தக்பீர் கூறி எறிய வேண்டும்.

இறையில்லம் கஃபாவைத் தவாபு செய்யும் போது, அதன் உள்ளே அல்லாஹ் இருக்கின்றான் எனக் கருதக் கூடாது. அல்லாஹ்வை வணங்க உலகில் கட்டப்பட்ட முதல் இல்லம் இது. அவ்வளவு தான்.

கஃபாவைப் பிரிந்து வரும்போது, சிலர் பின்னோக்கி வருகின்றனர். கஃபாவை நோக்கி முதுகுப் புறத்தைக் காட்டக் கூடாது எனக் கருதுகின்றனர். இது போன்ற மூட நம்பிக்கைகள் மார்க்கத்தில் இல்லை.

கஃபாவை தவாப் சுற்றுவது போல், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கத் தலத்தைச் சுற்றி வருவதோ, தொட்டு முத்தமிடுவதோ கூடாது. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கத் தலத்தின் முன்னர் நின்று அவர்களுக்கு ஸலாம் கூற வேண்டுமே தவிர, அவர்களிடம் கையேந்திப் பிரார்த்திப்பதோ, தமது தேவைகளை நிறைவேற்றித் தரும்படிக் கேட்பதோ கூடாது. இது ஷிர்க் ஆகும். ஷிர்க்கை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்கவே மாட்டான்.

உஹது மலையடிவாரம், ஹிரா குகை, ஆகிய இடங்களிலும், மற்றும் மக்கா மதீனாவின் பிற இடங்களிலும் உள்ள மண்ணைப் புனிதம் என்றுக் கருதி அள்ளி வைத்துக் கொள்வதோ, எடுத்து வருவதோ கூடாது. மக்கா மதீனா நகரங்கள் புனிதமானவை தான். அதில் சந்தேகமில்லை.அதற்காக அங்குள்ள கல்லும் களிமண்ணும் புனிதமானவை என்று பொருள் அல்ல.
-----------------------------
புனிதஹஜ்ஜுக்குப் புறப்படுவதற்கு முன் புனித ஹஜ்ஜுக்குப் போய் வருவதற்கு- ஹலாலான முறையில் சம்பாதித்த பணத்தை மட்டுமே பயன்படுத்துங்கள். பல்வேறு சிரமங்களுக்குக் கிடையே செய்யும் புனிதப் பயணம், விழலுக்கு இறைத்த நீராக வீணாகி விடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். உற்றார் உறவினர், உடன் பிறந்தோர், அண்டை அயலார், அனைவரிடமும் விடை பெறும் போது- அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டு- பிராயச் சித்தம் தேடியவர்களாப் புறப்படுங்கள். கடன்கள் இருந்தால்- கொடுத்து முடித்து- அல்லது போய் வந்த பிறகு இன்ஷா அல்லாஹ் தருவதாக வாக்களித்து, கடன் கொடுத்தவர் அதை மனமார ஏற்றுக் கொண்டால் மட்டுமே, ஹஜ்ஜுக்குப் புறப்பட ஆயத்தமாகுங்கள்.

புகழுக்காகவும், பெருமைக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் இல்லாமல் மெய்யாகவே இறைவனின் கட்டளையை நிறைவேற்றும் எண்ணத்தை இதயத்தில் வைத்துப் புறப்படுங்கள். வசதிக்காக அதிகமான உடமைகளை உடன் எடுத்துச் செல்லாதீர்கள். சென்று திரும்பும் வரையுள்ள சில தினங்கள், சின்னஞ்சிறு சிரமங்களை சகித்துக் கொள்ளுங்கள். குறைவான உடமைகள் உங்கள் பயணத்தை எளிதாக்கும்.

அவசரத்திற்கு தேவைப்படும் மருந்து வகைகளையும், முதலுதவி மருந்துகளையும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பயணத்தின் போது, வகை வகையான உணவுகளுக்கு முக்கியத்துவம் தராமல், எளிமைளான உணவுப் பழக்கத்தைக் கடைப் பிடியுங்கள். வழிப் பயணம் இலகுவாக இருக்கும். குறிப்பாக, ஹஜ்ஜுடைய நாட்களில், மினா அரபாத், முஸ்தலிபா, ஆகிய இடங்களில் எளிமையான உணவுகளை உண்ணுங்கள். அதிக நெரிசல் மிகுந்த இடங்களில் உங்கள் அவசரத் தேவைகளை நிறைவேற்ற அதிக நேரம் காத்திருக்க வேண்டி வரும்.

புனித ஹஜ்ஜுக்குப் புறப்பட்டதிலிருந்து- திரும்பவும் உங்கள் இல்லம் வந்து சேரும் வரை- வழிப் பயணத்திலும், புனிதத் தலங்களில் தங்கியிருக்கும் போதும், சக ஹாஜிகளுடன் அன்பாகப் பழகி, ஒருவருக் கொருவர் உதவியாக இருங்கள். எந்த வகையிலும் பிறருக்கு இடையூறு ஏற்படாதவாறு உங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளுங்கள்.

பல்வேறு குண நலன்கள் கொண்ட பலருடன் சேர்ந்து பயணம் மேற் கொள்ளும் போது, எல்லா வகையிலும் அணுசரித்துப் போகப் பழகிக் கொள்ளுங்கள். பொறுமையைக் கடைப் பிடியுங்கள். உடன் வரும் சக ஹாஜிகள்- முதியவர்களாக இருப்பின், அனைத்து வகையிலும் அவர்களுக்கு முன்னுரிமைக் கொடுத்து, அரவணைத்துச் செல்லுங்கள். அப்படி ஒரு முதுமை நமக்கு ஏற்படும்போது- நமக்கு உதவ சிலரை அல்லாஹ் ஏற்படுத்துவான்.

புனிதப் பயணம் மேற்கொள்ளும் பொன்னான வாய்ப்பை அடையப் பெற்றிருக்கிறீர்கள். வீண் பேச்சுக்கள், விதண்டாவாதம், சண்டை சச்சரவுகள், ஆகியவற்றைத் தவிர்த்து, அதிகமதிகம் இறைவணக்கத்தில் பொழுதைக் கழியுங்கள்.

மக்காவில் தங்கியிருக்கும் நாட்களில், மஸ்ஜிதுல் ஹராமிலும், மதீனாவில் தங்கியிருக்கும் நாட்களில், மஸ்ஜிதுன்னபவியிலும், ஐவேளைத் தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவதில் கவனம் செலுத்துங்கள். இப்படி ஒரு வாய்ப்பு மறுபடியும் எப்போது கிடைக்கும் என்று சொல்ல முடியாது.
-------------------------------
புறப்படுவோம் வாருங்கள்.
இஸ்லாத்தின் இறுதிக் கடமையாம், புனித ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கான பொருள் வளமும், உடல் நலமும், பெற்றவர்களே! இனியும் உங்கள் பொன்னான வாய்ப்பைத் தவற விடாதீர்கள். 'அடுத்தடுத்த ஆண்டுகளில் செய்துக் கொள்ளலாம்" என்று காலம் கடத்தாதீர்கள். அது வரை இருப்போம் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது?

இன்றைய தினமே இறந்து போய்விட்டால், வங்கிக் கணக்குகளும், வாங்கிவைத்த சொத்துக்களும் உங்களுடையதல்ல. பங்கு போட்டுக் கொள்ள பங்காளிகள் பத்து பேர் தயாராக நிற்கின்றனர். அரும்பாடுபட்டு சேர்த்த சொத்துக்களை அப்படியே போட்டுவிட்டு போகப் போகின்றீர்கள். அதற்கு முன் அல்லாஹ் உங்களுக்கு விதித்த கடமையைச் செய்து விட்டு, மறுமைப் பயணத்துக்குத் தயாராகுங்கள்.

வயோதிகத்தை அடைந்த பிறகு ஹஜ்ஜுக்குச் செல்வதை விட, நல்ல உடல் வலிமை இருக்கின்ற போதே செல்வதற்கு முயற்சி செய்யுங்கள். ஏனெனில் தள்ளாத வயதில், ஹஜ்ஜுடையச் செயல்களை- முறையாக- முழுமையாகச் செய்வது சிரமமாக இருக்கும். இளமையுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், இருக்கும் இப்போதே ஹஜ்ஜுக்குச் செல்வது- ஹஜ்ஜின் எல்லாக் கடமைகளையும் சிறப்பாகச் செய்ய வசதியாக இருக்கும்.

புனித ஹஜ்ஜின் நேர் முக வர்ணனையாக நாம் எழுதியிருப்பது மிகவும் குறைவு. நேரடியாக நீங்கள் அனுபவித்துப் பாருங்கள். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதப் பேரின்பம் பெறுவீர்கள்.

அல்லாஹ்வின் பேரருளைப் பெற்றுக் கொள்ள 'புனித ஹஜ்ஜுக்குப் போகவேண்டும்" என்னும் ஆர்வம் இன்னுமா உங்கள் இதயத்தில் எழவில்லை?

''புறப்படுவோம் வாருங்கள் புண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம்''.

(முற்றும்)

Thursday, January 20, 2005

புனித ஹஜ் பயணம் ஓர் வர்ணனை பகுதி 5

பகுதி ஐந்து

துல் ஹஜ் 9 ஆம் நாள்- ஹஜ்ஜின் 2 ஆம் நாள்.

இன்று தான் ஹஜ்.
'ஹஜ் என்பது அரபாவாகும்" என்பது நபி மொழி இது வரை ஹாஜிகள் செய்த செயல்கள் எல்லாம், ஹஜ்ஜுடன் இணைந்த செயல்கள். உண்மையில் ஹஜ் என்பது, துல் ஹஜ் 9 ஆம் நாள் காலையிலிருந்து சூரியன் மறையும் வரை அரபாத் மைதானத்தில் நின்று வணங்குவது தான்.

அந்தப் புனித நாள் இன்று தான். அரபாத் மைதானம் என்பது, பல மைல் சுற்றளவு கொண்ட பரந்து விரிந்த ஒரு பாலைவனத் திடல். ஆனால் இப்போது இந்தப் பாலைவன மைதானம் முழுதும் மரங்கள் வளர்த்து சோலைவனமாக மாற்றப் பட்டுள்ளது. மினா அளவுக்கு முழுக்க முழுக்க கூடாரங்கள் அமைக்கப் படாவிட்டாலும், சில இடங்களில் மட்டும் கூடாரங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

பெரும் பாலானவர்கள் மரங்களின் நிழல்களில் தங்கி இறை வணக்கத்தில் ஈடுபடுகின்றனர்.கடும் கோடைக் காலங்களில்- ஹாஜிகளுக்கு வெயிலின் வெப்பத்தைத் தணிப்பதற்காக- அரபாத் மைதானம் முழுவதும் குழாய்களைப் பொருத்தி, குளிர்ந்த தண்ணீரை நீராவி மாதிரி சன்னமாகத் தெளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பரந்து விரிந்த பாலைவனத் திடல் முழுவதையும் இயற்கையாகவும் செயற்கையாகவும் குளிர வைத்திருக்கிறார்கள். ஹாஜிகளின் மனங்களையும் தான்.

புனித ஹஜ்ஜுக்காக, புண்ணிய பூமிக்கு வந்தவர்கள், வந்த நோக்கத்தில் கண்ணுங்கருத்துமாக இருக்கும்போது, கடும் வெப்பம் கூட ஒரு பொருட்டாகத் தெரியாது. என்றாலும் ஹாஜிகளின் உடல் நலனைப் பேண- சகல ஏற்பாடுகளும் சரியான முறையில் செய்யப் பட்டுள்ளன என்றால் அது மிகையில்லை. உணவு ஏற்பாடுகளும், மருத்துவ உதவிகளும், தாராளமான தண்ணீர் வசதியும், மினாவைப் போலவே அரபாத்திலும் அழகான முறையில் மிகுந்த அக்கரையுடன் செய்யப் பட்டுள்ளன.

எண்ணற்ற தனியார் நிறுவனங்கள், போட்டி போட்டுக் கொண்டு தங்கள் நிறுவனங்களின் உணவுப் பொருள் தயாரிப்புகளை- பெரும் பெரும் வாகனங்களில் கொண்டு வந்து வைத்துக் கொண்டு 'ஃபீ ஸபீல்" (இறைவனின் பாதையில் இலவசம்) என்று கூவிக் கூவி அழைத்து வாரி வழங்குகின்றனர். பழங்கள், பழச்சாறுகள், ரொட்டிகள், குளிர் பானங்கள், உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், இப்படி இலவச விநியோகப் பொருட்களின் பட்டியல் நீள்கிறது.

தனி நபர்களும் அவரவர் தம்மால் இயன்றதைக் கொண்டு வந்து- வல்ல இறைவனுக்காக அள்ளி வழங்குகின்றனர்.சவூதி மன்னர் பஹத் அவர்கள் சார்பாக- ஒவ்வொரு நாளும் ஒரு கோடிக்கும் அதிகமான குளிர்ந்த குடி நீர் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப் படுகிறது.

மன்னர் பஹத்- திருக் குர்ஆன் வளாகத்தில் அச்சிடப் பட்ட திருக் குர்ஆன் பிரதிகள், உலகின் பல்வேறு மொழிகளில் திருக் குர்ஆன் மொழி பெயர்ப்புகள், மற்றும் ஒலி- ஒளி நாடாக்கள், ஹஜ் மற்றும் அறநிலையத் துறை சார்பாக, பல்வேறு மொழிகளில் ஹஜ் உம்ரா வழிகாட்டி நூல்கள், 'இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு மையம்" சார்பாக, இஸ்லாமிய கொள்கை விளக்க சிற்றேடுகள், தமிழ், மலையாளம், போன்ற இந்திய மொழிகள் உட்பட பல்வேறு மொழிகளில் மார்க்க விளக்க நூல்கள், இவை அனைத்துமே இலவசமாக வழங்கப் படுகின்றன. இவற்றை ஹாஜிகள் அவரவர் நாடுகளுக்குக் கொண்டு செல்லும்போது, பல கோடி மக்கள் படித்துப் பயன் பெறுகின்றனர்.
---------------------------------
லுஹரையும்அஸரையும் சேர்த்துத் தொழுதல்.
அரபாத் மைதானத்தில் அமைந்துள்ளது, 'மஸ்ஜிதுன்னமிரா" என்னும் மாபெரும் பள்ளிவாசல். ஆர்வத்துடன் அதிகாலையிலேயே வந்தவர்கள், பக்குவமாகப் பள்ளியின் உட்பகுதிக்குச் சென்று விட்டனர். பல இலட்சம் பேர் பள்ளிக்கு வெளியே அணிவகுத்து நின்று விட்டனர்.

இன்றைய தினம், லுஹரையும் அஸரையும் ஒன்றாக சேர்த்து, லுஹருடைய நேரத்தில் இரண்டிரண்டு ரக்அத்கள் மட்டும் தொழவேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அப்படித் தான் தொழுதார்கள்.

இப்னு சுபைர் (ரலி) உடன் தாம் போர் தொடுத்த ஆண்டு ஹஜ்ஜுக்கு வந்த ஹஜ்ஜாஜ், இப்னு உமர் (ரலி) இடம், 'அரபாவில் தங்கும் போது நீங்கள் எவ்வாறு செயல்பட்டீர்கள்?" எனக் கேட்டார். அதற்கு ஸாலிம், நீர் நபி வழியைப் பின்பற்ற நாடினால், அரபா நாளில் நடுப் பகலில் தொழுவீராக! என்றார். அப்போது, இப்னு உமர் (ரலி) 'ஸாலிம் கூறியது உண்மை தான் (நபித் தோழர்கள் அரபாவில்) லுஹரையும், அஸரையும், நபி வழிப்படி சேர்த்தே தொழுபவர்களாக இருந்தனர்" என்றார்.நான் 'நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளர்களா?" என ஸாலிமிடம் கேட்டேன். அதற்கவர், இந்த விஷயத்தில் நபி வழியைத் தவிர வேறு யாருடைய வழிகாட்டுதலை நீங்கள் பின் பற்றுவீர்கள்? எனக் கேட்டார். அறிவிப்பவர்: இப்னு ஷிஹாப் (ரலி) ஆதாரம்: புகாரி (1662)

மஸ்ஜிதுன்னமிராவிலும்- அதன் வெளிப் பகுதியிலும் இடம் பிடித்துக் கொண்டவர்கள், இமாமுடன் சேர்ந்து, லுஹரையும், அஸரையும், ஒன்றாகச் சேர்த்து இரண்டிரண்டு ரக்அத்களாக தொழுதுக் கொள்கின்றனர்.

அரபாவின் பிற பகுதிகளில் தங்கியிருப்போர், அவரவர் தங்கியுள்ள இடங்களில் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து ஜமாஅத்துடன் தொழுகைகளை நிறை வேற்றுகின்றனர். மஸ்ஜிதுன்னமிராவில் இமாம் குத்பா உரை நிகழ்த்துகிறார். ஹஜ்ஜின் நிகழ்ச்சிகள் அனைத்தையும்- தொலைக் காட்சியில் நேரடி ஒளி பரப்பு செய்யப் படுகின்றது. உலகம் முழுவதும் பல கோடி மக்கள் நேரடி ஒளி பரப்பைக் கண்டு களிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும், இந்த உரையை உலகமே உன்னிப்பாகக் கவனிக்கின்றது. இந்தப் பிரசங்கம் உடனுக்குடன் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் படுகிறது.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள்- அரபாத் பெருவெளியில் நிகழ்த்திய இறுதிப் பேருரை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய உரையாகும்.அதோ! தூரத்தில் தெரிகிறதே! அது தான் 'ஜபலுர் ரஹ்மத்" என்னும் அருட்கொடை மலை. இம் மலையடிவாரத்தில் தான், அண்ணல் நபி (ஸல்) அவர்கள், புனித ஹஜ்ஜை நிறைவேற்றும் போது தங்கியிருந்தார்கள்.

அங்கு சென்று சிறிது நேரமேனும் நிற்க ஆசைப்பட்டு ஹாஜிகள் கூட்டம் அலை மோதுகிறது. ஆர்வத்தின் காரணமாக, சிலர் தட்டுத் தடுமாறி மலையின் மீது ஏறுகின்றனர். மலை முழுதும் மனிதத் தலைகள். தூரத்திலிருந்து பார்க்கும் போது மனிதக் குவியல் போல் தெரிகிறது.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள், இந்த மலையின் அடிவாரத்தில் தான் தங்கியிருந்தார்கள். ஆர்வம் என்ற பெயரில் அறியாமையால் மக்கள் மலையின் மீது ஏறுகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டிய செயலாகும்.

அந்திச் சூரியன் அஸ்தமிக்கும் வரை, இந்த அரபாத் பெருவெளியில் நின்று- இறைவனை வணங்க வேண்டும். மாலைப் பொழுது நெருங்க நெருங்க, தல்பிய்யா முழக்கம் எட்டுத் திக்கும் எதிரொலிக்கிறது. தனித் தனியாக, சிறு சிறு குழுக்களாக, எப்படியெல்லாம் இறை தியானத்தில் ஈடுபட முடியுமோ அப்படியெல்லாம் அமர்ந்து பிரார்த்தித்த வண்ணம், இந்தப் பொன் மாலைப் பொழுதில் ஹாஜிகள்- பெறற்கரியப் பேற்றைப் பெறுகின்றனர். இதயம் திறந்து இறைவனிடம் மன்றாடுகின்றனர். இனியொரு வாய்ப்பு எப்போது கிடைக்கும்? இதுவே இறுதி வாய்ப்பாகி விடுமோ? இறைவன் ஒருவனைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது.

அவரவர் மொழிகளில் அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறார்கள். இரு கண்களும் கண்ணீர் மல்க இரு கரங்களும் ஏந்தி நின்று இறைஞ்சுகிறார்கள். இந்த அரபாத் பெருவெளியில் அனைத்துப் பேர்களுடன் கூடி நின்று இறைஞ்சும் பெரும் பேற்றைப் பெற்றதை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்கள். இதயங்கள் அழுகின்றன. கண்கள் கண்ணீரை வடிக்கின்றன. கல் நெஞ்சங்கள் கூட இங்கே கரைந்து போகின்றன.

மஹ்ஷர் மைதானத்தில்- நிராயுத பாணிகளாக நிற்கப் போகும் நாளை நினைத்து அழுகிறார்கள். வாய்களுக்கு முத்திரையிடப்பட்டு, கரங்களைப் பேசவும், கால்களை சாட்சி சொல்லவும் வைக்கப்படும்- அந்த ஒரு நாளை நினைத்து அழுகிறார்கள். அறியாமையால் வாழ்க்கையில் செய்து விட்ட தவறுகளை நினைத்து அழுகிறார்கள். மறுமையில் வலக்கரத்தில் பட்டோலை வழங்கப்பட வேண்டுமே என்று வேண்டி அழுகிறார்கள். அறிந்தும் அறியாமலும் செய்து விட்ட பாவங்களை நினைத்து அழுகிறார்கள். அழுதழுது பாவமன்னிப்புக் கேட்கிறார்கள்.

அருகில் உள்ளவர் அழுகின்றார்;. அல்லாஹ்விடம் ஏதோ கேட்கின்றார். ஆப்கானிய மொழி நமக்குப் புரியவில்லை. கதறி ஒருவர் அழுகின்றார். கருப்பு நிறத்து ஹபஷி அவர். பக்கத்தில் ஒருவர் பிரார்த்திக்கிறார். பாகிஸ்தானிய ஹாஜி அவர். உருது மொழியில் கேட்கின்றார். அங்கே ஒருவர் அழுகின்றார். அரபி மொழியில் இறைஞ்சுகிறார். இங்கே ஒருவர் அழுகின்றார். இனிய தமிழில் இறைஞ்சுகிறார்.

எல்லோரும் இறைஞ்சுகிறார்கள். எல்லோருக்காகவும் இறைஞ்சுகிறார்கள். தமக்காக இறைஞ்சுகிறார்கள். தம் பெற்றோருக்காக இறைஞ்சுகிறார்கள். உடன் பிறந்தவர்களுக்காக, உற்றார், உறவினர்களுக்காக, உலக மக்களுக்காக இறைஞ்சுகிறார்கள். பரந்து விரிந்த இந்த அரபாத் பெருவெளி முழுவதும் ஏங்கிய நெஞ்சங்களும், ஏந்திய கரங்களும், அழுத கண்களும், பிரார்த்தித்த வாய்களும் தான்.

இத்தனை மனிதர்களின், இத்தனை மொழிப் பிரார்த்தனைகளையும் ஒரே நேரத்தில், ஒரே ஒருவன் கேட்கின்றான். பாவமன்னிப்புக் கேட்டவர்களின் பாவங்களை மன்னிக்கிறான். அருட் கொடைகளைக் கேட்டவர்களுக்கு அள்ளி வழங்குகிறான். இப்புனித நன்னாளில், இப்புனித இடத்தில், இப்புனித நேரத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் என்பதில் எள்ளவும் நமக்குச் சந்தேகம் இல்லை.

ஹலாலான உணவுண்டு, ஹலாலான உடையுடுத்தி, ஹலாலான முறையில் ஈட்டிய பொருளில் செலவு செய்து வந்தவர்களின் நேரிய பிரார்த்தனைகளும், நியாயமான கோரிக்கைகளும் அங்கீகரிக்கப்படும் என்பதில் கடுகளவும் நமக்குச் சந்தேகம் இல்லை.

ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கமே கூலி என்னும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அற்புத வாக்கில் நமக்கு அணுவளவும் சந்தேகம் இல்லை.

இன்று முதல்- இந்த நேரம் முதல்- தூய்மையானவர்களாக- பாவங்கள் மன்னிக்கப் பட்டவர்களாக- கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களாக- குறைகள் மறைக்கப் பட்டவர்களாக- குற்றங்கள் நீக்கப் பட்டவர்களாக- இவர்களை இறைவன் ஆக்கியருள்வானாக. ஆமீன்.

துல் ஹஜ் 9 ஆம் நாள்- அரபா நாளாகிய இன்றைய தினம், சூரியன் உச்சியை விட்டு சாய்ந்ததிலிருந்து- மறையும் வரை- எவர் சிறிது நேரமேனும், இந்த அரபாத் பெருவெளியில் நிற்க வில்லையோ- அவருக்கு ஹஜ் இல்லை.

ஹஜ்ஜின் மிக மிக முக்கியமான செயலே- இந்த நேரத்தில்- இந்தத் திடலில் நின்று பிரார்த்திப்பது தான். ஏனெனில், 'ஹஜ் என்பது அரபாவாகும்" என்பது நபி மொழி.

திரு மறைக் குர்ஆனின்- சட்டங்கள் பற்றிய இறுதி வசனம் இன்றைய தினத்தில் இந்த அரபாத் பெருவெளியில் தான் அருளப்பட்டது

.....இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப் படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல் வறுமையின் காரணமாக நிர்ப்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன். (திருக் குர்ஆன் 5:3)
--------------------------------
அரபாத்தை விட்டுப் புறப்படுதல்.
மஃரிபுடைய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரேபியப் பாலையில், அரபாத் பெருவெளியில்- ஆதவன் தனது அரும் பணியை நிறைவு செய்து விட்டு- அந்திவானத்தில் மெல்ல மெல்ல மறையத் தொடங்குகிறது. விலை மதிக்கவொன்னா பொன் மாலைப் பொழுது முடியப் போகிறது. வாழ்வில் கிடைத்தற்கரிய இச்சந்தர்ப்பத்தின் இறுதி நேரம் வரை ஹாஜிகள் பிரார்த்தனையில் ஈடு படுகின்றனர்.

சிலர் அவசரப்பட்டு, அரபாவை விட்டுப் புறப்படத் தயாராகின்றனர். சூரியன் நன்றாக மறைந்த பிறகு தான் அரபாவை விட்டுப் புறப்பட வேண்டும். மஃரிபுடைய நேரம் முடியும் வரை இருந்து விட்டு, மஃரிபைத் தொழாமல் இங்கிருந்து புறப்பட வேண்டும். முஸ்தலிபாவுக்குச் சென்று- மஃரிபையும் இஷாவையும்- இஷாவுடைய நேரத்தில் முஸ்தலிபாவில் தொழவேண்டும். இது தான் நபி வழி.

இறுதி ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிபாவில் மஃரிபையும் இஷாவையும் இணைத்துத் தொழுதார்கள். அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) ஆதாரம்: புகாரி (1674)

இப்னு உமர் (ரலி) முஸ்தலிபாவில் (மஃரிப், இஷா ஆகிய) இரு தொழுகைகளை ஒரு இகாமத் கூறி சேர்த்துத் தொழுதார்கள். நபி (ஸல்) அவர்கள் இந்த இடத்தில் இவ்வாறு செய்ததை நான் பார்த்திருக்கிறேன் எனவும் அவர் கூறினார். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மாலிக் (ரலி) ஆதாரம்: திர்மிதி (813)

இதோ மாலைக் கதிரவன் மறைந்து விட்டான். புனித ஹாஜிகளும் அரபாவை விட்டு விடை பெறுகின்றனர். அழுதழுது கேட்ட பாவமன்னிப்பை அடையப் பெற்றவர்களாக- அல்லாஹ்வின் பேரருள் கிடைக்கப் பெற்றவர்களாக- அல்லாஹ்வின் நேசர்கள் அனைவரும் புறப்படுகின்றனர் முஸ்தலிபாவை நோக்கி!

புனித ஹாஜிகளாக- புண்ணிய சீலர்களாக புறப்படுகின்றனர் முஸ்தலிபாவை நோக்கி! கூட்டம் கூட்டமாக மக்கள்- குதூகலத்துடன் முஸ்தலிபாவை நோக்கி!

வரிசை வரிசையாக வாகனங்கள்- அனைத்துமே முஸ்தலிபாவை நோக்கி!திக்கெட்டும் கேட்கிறது தல்பிய்யா முழக்கம்.
----------------------------
மஷ்அருல் ஹராம்.
மஷ்அருல் ஹராம் என்பது முஸ்தலிபாவில் இருக்கும் ஒரு மலைக் குன்றின் பெயராகும். புனித ஹாஜிகள் முஸ்தலிபா வரும்போது இந்த இடத்தில் நின்று இறைவனை நினைவு கூறுகிறார்கள். ஏனெனில் இது இறைவனின் கட்டளையாகும்

.....அரபாத் பெரு வெளியிலிருந்து நீங்கள் திரும்பும் போது மஷ்அருல் ஹராமில் அல்லாஹ்வை நினையுங்கள். அவன் உங்களுக்குக் காட்டித் தந்தவாறு அவனை நினையுங்கள்! இதற்கு முன் நீங்கள் வழி தவறி இருந்தீர்கள். (திருக் குர்ஆன் 2:198)

மஷ்அருல் ஹராம் என்னும் மகிமை மிக்க இடத்தில் இறைக் கட்டளைப்படி- இறைவனை நினைவு கூர்ந்த ஹாஜிகள், முஸ்தலிபாவுக்கு வந்து- இரவுப் பொழுதை இங்கேயே கழிக்கிறார்கள். இரவின் பிற்பகுதியில், எங்கு நோக்கினும் பாங்கு சப்தம். இது தஹஜ்ஜுத் என்னும் நடுநிசித் தொழுகைக்கான பாங்கு. தனித்தனியாகவும், கூட்டமாகவும் நடுநிசித் தொழுகையை நிறைவேற்றுகின்றனர்.

பொழுது புலரப் போகின்றது. அதற்கு முன் மறுபடியும் பாங்கோசை. ஆம் இது வழக்கம் போல் பஜ்ர் என்னும் அதிகாலைத் தொழுகைக்கான பாங்கு சப்தம். களைப்புத் தீர சற்று நேரம் உறங்கி ஓய்வெடுத்தவர்கள் ஆர்வத்துடன் எழுகின்றனர். பஜ்ருத் தொழுகையை நிறைவேற்றத் தயாராகின்றனர்.

இங்கே முஸ்தலிபாவிலும், தண்ணீர் வசதி, கழிவறை வசதிகள் அனைத்தும் சிறப்பாகச் செய்யப் பட்டுள்ளன. பஜ்ருத் தொழுகையை முடித்து விட்டு இனி அடுத்தடுத்தக் கடடைகளை நிறைவேற்ற அவசர அவசரமாகப் புறப்படுகின்றனர். முஸ்தலிபாவில், பஜ்ருத் தொழுகையை அதன் முன் நேரத்திலேயே தொழுது விட வேண்டும். இது தான் நபி வழியாகும்.

நபி (ஸல்) அவர்கள் எந்தத் தொழுகையையும் (அதற்குரிய நேரத்தில் தொழாமல்) வேறு நேரத்தில் தொழுததை நான் பார்த்ததில்லை. இரண்டு தொழுகைகளைத் தவிர. ஒன்று (முஸ்தலிபாவில்) மஃரிபையும், இஷாவையும் சேர்த்துத் தொழுதது. இன்னொன்று பஜ்ரை அதற்கான (வழக்கமான) நேரத்திற்கு முன் (முஸ்தலிபாவிலேயே) தொழுதது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) ஆதாரம்: புகாரி (1682)

பஜ்ருத் தொழுகையை சீக்கிரமே முடித்து விட்டு சூரியன் உதிப்பதற்கு முன்பே முஸ்தலிபாவை விட்டு புறப்பட வேண்டும் என்பதால் ஹாஜிகள் அவசர அவசரமாகப் புறப்படுகின்றனர் மினாவை நோக்கி!

நபி (ஸல்) அவர்கள் சூரியன் உதிப்பதற்கு முன்பே முஸ்தலிபாவிலிருந்து புறப்பட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: திர்மிதி (819)

பெண்கள், குழந்தைகள், இயலாத முதியோர்கள், சற்று முன் கூட்டியே புறப்பட்டுச் செல்வது தவறில்லை. அப்படியே முன் கூட்டியே மினா சென்றடைந்தவர்கள்- சூரியன் உதிக்கும் வரை கல்லெறியக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள், தமது குடும்பத்தினரில் பலவீனர்களை முன் கூட்டியே அனுப்பி வைத்தார்கள். 'சூரியன் உதிக்கும் வரை நீங்கள் கல்லெறிய வேண்டாம்" எனவும் கூறியனுப்பினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: திர்மிதி (817)
--------------------------------------------
துல் ஹஜ் 10 ஆம் நாள்.
ஹஜ்ஜின் 3 ஆம் நாள் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களுக்கு, இன்று தான் ஹஜ்ஜுப் பெருநாள். ஈதுல் அல்ஹா என்னும் தியாகத் திரு நாள். உலக முஸ்லிம்கள் இன்று பெருநாள் தொழுகைத் தொழுவார்கள். ஆனால் ஹஜ் செய்பவர்களுக்கு இன்று பெருநாள் தொழுகை கிடையாது. இன்று காலை பஜ்ருத் தொழுகையை, முஸ்தலிபாவில் முடித்து விட்டு மினாவுக்குச் செல்கின்றனர்.

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், தம் அருமந்த மைந்தர், இஸ்மாயீல் அவர்களை- அல்லாஹ்வின் ஆணைப்படி அறுத்துப் பலியிடுவதற்காக அழைத்துச் சென்ற போது, ஷைத்தான் வழி மறித்து தடுக்கப் பார்த்தான். உறுதியான உள்ளத்துடன் சென்ற நபி இப்ராஹீம் (அலை) அவர்கள், அவன் மீது கல் வீசி விரட்டினார்கள்.

அதன் நினைவாக- ஹஜ்ஜுக்கு வருபவர்கள், அந்த இடத்தில் இன்றளவும் கல் எறிகின்றனர். இது ஹஜ்ஜின் கடமைகளில் ஒன்றாகும்.

இன்றைய தினம், ஹாஜிகள் முற் பகல் நேரத்தில் கல் எறிகிறார்கள். இன்று 'ஜம்ரத்துல் அகபா"வில் மட்டும் கல்லெறிய வேண்டும். இந்த ஜம்ரத்துல் அகபாவுக்கு 'ஜம்ரத்துல் ஊலா" என்றும் சொல்லப்படும்.

பத்தாம் நாளில் முற்பகல் நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் கல்லெறிந்தார்கள். அதன் பிறகுள்ள நாட்களில் சூரியன் உச்சியிலிருந்து விலகிய பின் கல்லெறிந்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: திர்மிதி (818)

ஏழு பொடிக் கற்களை எறிய வேண்டும். அதுவும் ஒன்றன் பின் ஒன்றாக எறிய வேண்டும். ஒவ்வொரு கல்லையும் எறியும் போதும் தக்பீர் கூற வேண்டும். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் செய்ததாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி

அத்தனை இலட்சம் ஹாஜிகளும் கல் எறிகிறார்கள். சிலர் கோபமாக ஷைத்தானை அடிப்பது போல் பெரிய கற்களையும்- செருப்புகளையும் வீசுகிறார்கள். இது தவறு. கல் எறியும் கடமைக்கு இவை முரணானதாகும்.

நபி (ஸல்) அவர்கள், சுண்டி விளையாடும் அளவு சிறிய கற்களையே எறிந்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி ) ஆதாரம்: திர்மிதி (821)

கல் எறியும் இடத்தில் நெரிசல் அதிகம். அரபா, மினா, முஸ்தலிபா ஆகிய இடங்கள் பரந்து விரிந்த மாபெரும் திடல்கள். அத்தனை இலட்சம் ஹாஜிகளும் பரந்தத் திடலில் தங்கியிருப்பதில் சிரமம் இல்லை. ஆனால், ஜம்ரா என்னும் ஒரு குறிப்பிட்ட இடத்தில், அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அத்தனை இலட்சம் பேரும் கல் எறிய வேண்டும் என்பதால் இங்கு நெரிசல் அதிகம்.

கல்லெறியும் இடத்துக்கு செல்லும் போது- கையில் பணமோ அல்லது பொருட்களோ எடுத்துச் செல்லக் கூடாது. கூட்ட நெரிசலில் தவறிவிட வாய்ப்புண்டு. கையில் இருக்கும் பொருள் தவறி கீழே விழுந்து விட்டால்- குனிந்து எடுக்க முயலக் கூடாது. முன்னேறி வரும் கூட்டம் கீழே தள்ளிவிடலாம்.கூட்டத்தை சமாளிக்க- 'கல்லெறியும் இடம்" இப்போது, மக்கள் போவதற்கும், வருவதற்குமாகத் தனித்தனிப் பாதைகள் அமைக்கப் பட்டு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. காவல் துறையினர்; பலமானத் தடுப்புகளை ஏற்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக அனுப்புகின்றனர்.

பல் வேறு வருடங்களில்- கூட்ட நெரிசலில் இந்த ஜம்ராவில் தான் விபத்துக்கள் நடந்துள்ளன. சில சமயங்களில் உயிர்ச் சேதங்களும் கூட ஏற்பட்டதுண்டு. இப்போது நெரிசலின்றி மக்கள் சென்று வர பல் வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.கூட்டம் கூட்டமாகச் சென்று- ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து திரும்புகின்றனர் ஹாஜிகள்.கல்லெறி நிகழ்ச்சி முடிந்தவுடன் இதுவரை முழங்கிக் கொண்டிருந்த தல்பிய்யாவை நிறுத்தி விடுகின்றனர். இதுவே நபி வழியாகும்.

நபி (ஸல்) அவர்கள் ஜம்ராவில் கல்லெறிகின்றவரை தல்பிய்யா கூறிக் கொண்டே இருந்தார்கள்.அறிவிப்பவர்: பள்ல் பின் அப்பாஸ் (ரலி) ஆதாரம்: புகாரி (1685)
-------------------------------
குர்பானி கொடுப்பது.
இனி அடுத்த செயல், அறுத்து பலியிடுவதாகும்.

ஹஜ்ஜின் செயல்களில் சிறப்பானது எது? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'தல்பிய்யாவை உரத்த குரலில் கூறுவதும், ஒட்டகத்தை அறுத்து பலியிடுவதும்," என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அபூ பக்ர் (ரலி) ஆதாரம்: புகாரி (757)

தனியொரு நபர் ஒரு ஆட்டையோ, அல்லது ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ, ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம்.

ஹுதைபிய்யா வருடத்தில் ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும், ஏழு பேர் சேர்ந்து ஒரு ஒட்டகத்தையும், நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் அறுத்துள்ளோம் அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: திர்மிதி (828)

ஹாஜிகள் குர்பானி கொடுக்கும் இடத்திற்கு வந்து குர்பானிக்காகப் பிராணிகளை வாங்கி அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுகின்றனர்.அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். (திருக் குர்ஆன் 22:37)

ஆண்டு தோறும்- வெளி நாடுகளிலிருந்து இலட்சக் கணக்கான ஆடுகளும், மாடுகளும், ஒட்டகங்களும், இறக்கு மதி செய்யப் படுகின்றன.

இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பிராணிகளும், கால் நடை மருத்துவர்களால், முறையாகப் பரிசோதிக்கப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளன. ஹாஜிகள் நேரடியாகச் சென்று, பிராணியைத் தேர்ந்தெடுத்து, விலை கொடுத்து வாங்கி அவரவர் தம் கரங்களால் அறுக்கின்றனர். இயலாதவர்கள், அடுத்தவர்களை நியமித்து அறுக்கச் செய்கின்றனர். இது போக, ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்து- வங்கிகளில் கூப்பன்கள் விற்கப்படுகின்றன. வங்கிகளில் பணம் செலுத்திவிட்டால், துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாளன்று பிராணிகள் அறுக்கப் பட்டு உரிய முறையில் பக்குவப் படுத்தப்பட்டு ஏழை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. அரசு கண்காணிப்பில், பல்வேறு இஸ்லாமிய சங்கங்கள் இப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சிறப்பாகச் செயல்படுகின்றன.

புனிதத் தலங்கள் அனைத்திலும், சிறப்புக் கிளைகளை அமைத்து அல்ரஜ்ஹி வங்கி குர்பானி கூப்பன்களை விற்க ஏற்பாடு செய்துள்ளது. ஹாஜிகளுக்காக இச்சேவையை அல்ரஜ்ஹி வங்கி இலவசமாகச் செய்கிறது.

ஆண்டு தோறும் பல்லாயிரக் கணக்கான டன் இறைச்சி- பதப்படுத்தப்பட்டு- இந்த முறையில் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. எத்தனையோ நாடுகளில் வாழும் ஏழைகள் இதனால் பயன் பெறுகின்றனர்.

அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிட்டு- அளப்பெறும் நன்மையை அடைந்த புனித ஹாஜிகள், தமது அடுத்த செயலாகிய- தலை முடியைக் களையத் தயாராகின்றனர்.

----------------------------
தலை முடி களைதல்.
ஆண்கள் தலை முடியை முழுவதுமாக மழித்துக் கொள்ளவோ, கத்தரித்துக் கொள்ளவோ செய்யலாம், தலை முடியை முழுவதுமாக மழித்துக் கொள்வதே சிறந்தது.

நபி (ஸல்) அவர்கள் 'இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக!" எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள், 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்" என்றனர். (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக!" என்று பிரார்த்தித்தபோது தோழர்கள், "முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்" என்றனர். நபி (ஸல்) அவர்கள் மூன்றாவது தடவையாகவும், அதைக் கூறிய போது 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக)" எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹ{ரைரா (ரலி) ஆதாரம்: புகாரி (1728)

தலை முடியை முழுவதுமாக மழித்துக் கொண்டோ, அல்லது குறைத்துக் கொண்டோ, ஹாஜிகள் இஹ்ராமிலிருந்து விடுபடுகின்றனர். இது வரை அணிந்திருந்த இஹ்ராம் உடைகளைக் களைந்து விட்டு- வழக்கமாக அணியும் ஆடைகளை அணிந்துக் கொள்கின்றனர்.

இனி அடுத்தக் கடமை 'தவாபுஸ் ஸியாரா" செய்வதாகும்.
---------------------------------

(நேர்முக வர்ணனை அடுத்தப் பதிவில் முடியும் )
அனைவருக்கும் இதயம் நிறைந்த ''தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்''
அன்புடன்
அபூ முஹை


Wednesday, January 19, 2005

புனித ஹஜ் பயணம் ஓர் வர்ணனை பகுதி 4

ஜன்னத்துல் பகீஃ
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவியரில் பலரும், அருமைத் தோழர்களில் பல்லாயிரக் கணக்கானோரும், இங்கு தான் அடக்கப் பட்டுள்ளனர்.

திரு மறையின் முழுமையான மூலப் பிரதியை உருவாக்கித் தந்தவரும், மூன்றாவது கலீபாவுமான உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்கள்,

பெருமானாரின் எண்ணற்ற பொன் மொழிகளை அகிலத்திற்கு அறிவித்த, அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள்,

அண்ணலாருக்கு அமுதூட்டிய அருமை அன்னை, ஹலீமா ஸஃதிய்யா (ரலி) அவர்கள்,

அண்ணலாரின் அருமந்த மைந்தர், இப்ராஹீம் (ரலி) அவர்கள்,

பிக்ஹூச் சட்டங்களை இயற்றிய பெருமேதை, இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்,

திருத்தமுடன் திரு மறையை ஓதுவதில் தனிச் சிறப்புப் பெற்ற காரி, இமாம் நாபிஃ (ரஹ்) அவர்கள், ஆகியோரும், இன்னும் ஏராளமான நபித் தோழர்களும், இறை நேசர்களும், ஆன்றோரும், சான்றோரும், இந்தப் புனித மண்ணில் தான் அடக்கம் செய்யப் பட்டுள்ளனர். திரளாகக் கூடி நின்று, ஹாஜிகள் இந்தப் புனித மண்ணில் அடக்கப் பட்டிருப்பவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றனர். இந்த அடக்கத் தலத்திலும், இன்னும் இங்குள்ள எந்த அடக்கத் தலங்களிலும் பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை. ஏனெனில்,

கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை அல்லாஹ் சபிப்பானாக! என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம்: திர்மிதி

இந்த ஜியாரத்தை முடித்துக் கொண்டு, ஹாஜிகள் மதீனாவைச் சுற்றியுள்ள, சரித்திரப் புகழ் பெற்ற இடங்களைப் பார்த்து வரப் புறப்படுகின்றனர். மதீனாவைச் சுற்றிலும் பார்க்க வேண்டிய இடங்களை - அவரவர் தம் வழிகாட்டிகளின் வழிகாட்டுதலின்படி சென்று பார்த்து வருகின்றனர். மதீனாவின் மகத்துவத்தையும், மாண்பையும் பறை சாற்றிக் கொண்டு- வரலாற்று ஆதாரங்களாக நிலைத்து நிற்கும் இடங்களையும், சரித்திரச் சான்றுகளையும், காணுகின்ற கண்கள் பேறு பெற்றவை.

அண்ணல் நபி (ஸல்) அவர்களை வரவேற்று உபசரித்து, அகிலமெங்கும் இஸ்லாம் பரவ, அடித்தளம் அமைத்துக் கொடுத்த - மதீனத் திரு நகரை மகிழ்ச்சியுடன் தரிசிக்கும் உள்ளங்கள் பேறு பெற்றவை.

அண்ணல் நபி (ஸல்) அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட அழகுத் திரு நகரில் தங்கி - ஆத்ம திருப்தி அடையும் இதயங்கள் பேறு பெற்றவை.இந்தப் புனித மதீனாவில் தங்கியிருக்கும் நாட்களில் இயன்றவரை மஸ்ஜிதுன்னபவிக்கு வந்து, ஜமாஅத்துடன் தொழுது அளப்பெரும் நன்மைகளை அடைகின்றனர் ஹாஜிகள்.

மனம் குளிர மஸ்ஜிதுன்னபவியில் தொழுது, மன நிறைவடைந்த மாண்பாளர்கள், இதோ புனித ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றப் புறப்பட்டு விட்டனர். புறப்பட்டுப் போகின்ற இறுதி நேரத்திலும் கூட மீண்டும் ஒரு முறை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புனித அடக்கத் தலத்தை ஜியாரத் செய்யத் தவறவில்லை. உயிரினும் மேலான உண்மை நபியவர்களுக்கு ஸலாம் உரைத்து, புறப்பட்டு விட்டனர் புனித மக்கா நன்னகர் நோக்கி!
-----------------------------
துல் ஹஜ் எட்டாம் நாள்- ஹஜ்ஜின் முதல் நாள்.
புண்ணிய சீலர்கள், எந்த நோக்கத்திற்காக அவரவர் இல்லங்களிலிருந்து புறப்பட்டு வந்தார்களோ! அந்த ஹஜ் இன்று தான் ஆரம்பம். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும்- உள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புனித ஹஜ்ஜை நிறைவேற்று வதற்காக வந்து, மக்காவின் பல்வேறு இடங்களிலும் தங்கியிருந்த ஹாஜிகள்- ஹஜ்ஜுக்காக நிய்யத் செய்து இஹ்ராம் அணிந்து இன்று மினா வந்து சேருகின்றனர்.

'இப்ராத்" எனும் வகை ஹஜ் செய்ய, இறுதி நேரத்தில் வருபவர்கள், அவரவர் வரும் வழியில் உள்ள 'மீக்காத்" எல்லையில் குளித்து இஹ்ராம் அணிந்து நேரடியாக மினா வந்து சேருகின்றனர்.

மினாவில் சமீப காலம் வரை அனைத்து ஹாஜிகளும், தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரங்களில் தான் தங்க வைக்கப்பட்டனர். ஹஜ்ஜின் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் மினாவில், மணலையும் மலைகளையும் தவிர வேறு எதுவுமே இருக்காது.
--------------------------------
பாதுகாப்பு ஏற்பாடுகள்.
தற்காலிக கூடாரங்களில் அடிக்கடி தீ விபத்துக்கள் நடந்து கொண்டிருந்தன. தனித்தனியாக கேஸ் மற்றும் மண்ணெண்ணெய் அடுப்புகளை வைத்து அவரவர் சொந்தமாக சமையல் செய்து கொண்டிருந்ததால், இவ்விதம் அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்படுவதையொட்டி, கூடாரங்களில் சமையல் செய்வதை சவூதி அரசு முதலில் தடை செய்தது. அதற்குப் பகரமாக, அத்தனை இலட்சம் ஹாஜிகளுக்கும், பாதுகாப்பான தனி இடங்களில், சுகாதார முறைப்படி உணவைத் தயார் செய்து - விநியோகிக்கும் பொறுப்பைப் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டன.

இதன் மூலம் உணவுப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைத்தது.சில ஆண்டுகளுக்கு முன், துணிகளால் அமைக்கப்படும் கூடாரங்களை அறவே தவிர்த்து விட்டு, சவூதி அரசு அத்தனை இலட்சம் ஹாஜிகளுக்கும், நவீன வசதிகளுடன் கூடிய தீப்பிடிக்காத கூடாரங்கள் அமைத்துக் கொடுத்தது. இதன் மூலம், அடிக்கடி ஏற்பட்ட தீ விபத்துக்கள் தவிர்க்கப்பட்டன.

மினாவில் ஒவ்வொரு வருடமும் ஹாஜிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப் படுகின்றன. தடையின்றி அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவரவர் தங்கியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே, பல நூற்றுக் கணக்கான கழிவறை வசதி, ஆண்களுக்கும், பெண்களுக்கும், தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புத் துறையினர், தீ விபத்துக்களிலிருந்து ஹாஜிகளைப் பாதுகாக்க, சகல விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து இரவும் பகலும் கண்காணிக்கின்றனர். கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள அனைத்துப் பகுதிகளிலும் தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனங்களில் தீயணைப்புக் கருவிகளுடன் தீயணைப்பு வீரர்கள் எந்த நேரமும் சுற்றிச் சுற்றி வந்த வண்ணம் உள்ளனர்.
-----------------------------
மருத்துவ வசதி.
மினாவில் ஹாஜிகளுக்கு, சகல விதமான அதி நவீன மருத்துவ வசதிகளுடன், மிகப் பிரம்மாண்டமான, அரசு மருத்துவ மனை நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ளது. பல நூறு படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இம் மருத்துவ மனையில், அவசர சிகிச்சைப் பிரிவும் இயங்குகிறது. உடனுக்குடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றனர். எல்லா வகையான மருத்துவ சேவைகளும் இலவசமாகவே செய்யப்படுகின்றன.

பல் வேறு நாடுகளின் தூதரகங்களும், தத்தம் நாட்டினருக்காக மருத்துவ சேவை மையங்கள் அமைத்து சேவை புரிகின்றன.

பல் வேறு தனியார் மருத்துவ மனைகள் ஒவ்வொரு பகுதியிலும் அமைக்கப்பட்டு, குறைந்த கட்டணத்தில் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.அரசு மற்றும் தனியார், நடமாடும் மருத்துவ ஊர்திகள், முதலுதவி வசதிகளுடனும், மருத்துவர்கள் மற்றும் ஆண் பெண் செவிலியர்களுடனும், எப்போதும் மினாவைச் சுற்றி வருகின்றன.

ஒவ்வொரு வருடமும், இந்தியா பாகிஸ்தான், உட்பட பல்வேறு ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் பல்லாயிரக் கணக்கில் மருத்துவர்களும், உதவியாளர்களும், வரவழைக்கப் பட்டு மருத்துவப் பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.

சவூதி செம்பிறைச் சங்கத்தின் மருத்துவச் சேவைகள் மறக்க முடியாதவை. பல்வேறு இடங்களில் தற்காலிக சேவை மையங்கள் அமைத்து செம் பிறைச் சங்கம் ஹாஜிகளுக்கு இலவச மருத்துவச் சேவை செய்கின்றது. ஆபத்தான நிலையில் இருப்போரை- அருகில் உள்ள மக்காவின் பெரிய மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல செம்பிறைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்களும், பல நூற்றுக் கணக்கில் ஆம்புலன்ஸ் வண்டிகளும் எப்போதும் தயார் நிலயில் நிற்கின்றன.
----------------------------------
சாரணர் படை.
சவூதியின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள உயர் நிலைப் பள்ளிகள், மற்றும் கல்லூரிகளிலிருந்து வந்து குவிந்துள்ள சாரணர் படை மாணவர்களின் பணி மகத்தானது.

பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, ஹாஜிகளுக்கு வழிகாட்டிகளாகவும், உதவியாளர்களாகவும், சீருடை அணிந்து சிறப்புப் பணி செய்கின்றனர். இயலாத மற்றும் வயது முதிர்ந்த ஹாஜிகளை அரவணைத்து அழைத்துச் செல்வதும், தமது இருப்பிடங்களுக்குச் செல்ல வழி தெரியாமல் தவிப்பவர்களை அவர்களிடம் உள்ள அடையாள அட்டைகளைக் கொண்டு - இருப்பிடத்தை அறிந்து - உரிய இடங்களுக்குக் கொண்டு போய் சேர்த்தும் உபகாரம் செய்கின்றனர்.

மினாவில் மட்டுமின்றி - ஹாஜிகள் அடுத்தடுத்தக் கடமைகளை நிறைவேற்றச் செல்லும், முஸ்தலிபா, அரபா, போன்ற புண்ணியத் தலங்கள் அனைத்திலும், சாரணர் படை மாணவர்கள் மிகவும் சிறப்பாகப் பணி புரிகின்றனர்.
--------------------------------
தொலைத் தொடர்பு வசதி.
தபால் தந்தித் துறை, மினாவின் பல்வேறு இடங்களில் அஞ்சல் மற்றும் தந்தி வசதிகளைச் செய்து வைத்திருக்கிறது. தொலை பேசித் துறையினரின் சேவை மிகவும் பாராட்டத் தக்கது. மினாவிலும் மற்றும் புனிதத் தலங்கள் அனைத்திலும், நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்றன தொலை பேசி மையங்கள்.உலகின் 180க்கும் அதிகமான நாடுகளுடன் நேரடித் தொடர்பு கொள்ளத் தக்க இம் மையங்களின் மூலம் நாளொன்றுக்கு பல இலட்சக் கணக்கான தொலை பேசி அழைப்புகள் செய்யப் படுவதாக சவூதி தொலைத் தொடர்பு அமைச்சகம் தெரிவிக்கிறது.

அவரவர் நாடுகளில் உள்ள உறவினர்களுடன் தொடர்பு கொண்டு - புனித ஹஜ்ஜை இனிய முறையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொள்ள - மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
--------------------------------
காவல் துறையினரின் கண்காணிப்பு.
ஆண்டு தோறும் இலட்சக் கணக்கான ஹாஜிகள் ஒன்று கூடும் புனித ஹஜ்ஜில், எவ்வித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, காவல் துறை எல்லா வகையானக் கண்காணிப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது. பொதுவாகவே முஸ்லிம்கள் ஒன்று கூடும் எந்த ஒரு விழாவிலும் காவல் துறைக்கு எந்த வேலையும் இருக்காது.

நியாய உள்ளம் படைத்த எத்தனையோ காவல் துறை அதிகாரிகள் இதற்கு சாட்சி பகர்வர். கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடமையாகக் கொண்டவர்கள்-அதிலும் புனித ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற வந்த புண்ணிய சீலர்கள்- எவ்வளவு கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை.

காவல் துறையும், ராணுவமும், தீயணைப்புப் படையினரும், சாரணர் படையும், தரையில் தங்கள் கண்காணிப்பைத் தொடர, ஆகாயத்தில் ஹெலிகாப்டர்கள்- அனைத்தையும் கண்காணித்தபடி வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன. இவை எதைப் பற்றியும் கவலைப் படாமல்- அத்தனை இலட்சம் ஹாஜிகளும், இறை வணக்கத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அவரவர் தம் சொந்த ஊர்களில் மாட மாளிகைகளில் வசித்தவர்கள்- சுக போக வாழ்க்கை வாழ்ந்தவர்கள், இங்கே மினாவில் வந்து கூடாரங்களில் தங்கள் பொழுதைக் கழிக்கின்றனர்.மறு உலகின் நிரந்தர வாழ்க்கைப் பயணத்தில்- சற்றுத் தங்கி இளைப்பாறுவது தான் இவ்வுலக வாழ்க்கை. இவ்வுலக வாழக்கைப் பயணத்தில் சற்றுத் தங்கி இளைப்பாறுவது போல் மினாவில் இந்த சின்னஞ்சிறு கூடாரங்களில் தங்கி ஹாஜிகள் இளைப்பாறுகின்றனரோ!

இல்லை. இவர்கள் இங்கு இளைப்பாற வரவில்லை! பொன்னான பொழுதை வீணில் போக்க இங்கு வரவில்லை! காட்சிகளைக் கண்டு களிப்படைய வரவில்லை! இறைவனின் அழைப்பை ஏற்று வந்திருக்கின்றனர். இறைவனுக்காக இங்கு வந்திருக்கின்றனர். இறை வணக்கத்துக்காக இங்கு வந்திருக்கின்றனர்.

குழுக்களாகவும், தனித்தனியாகவும், அமர்ந்து இன்றைய தினத்தை இறை வணக்கத்தில் கழிக்கின்றனர். இறை தியானத்தில் கழிக்கின்றனர். இயன்றவரை திரு மறையை ஓதுவதிலும், நபிலான தொழுகைகளிலும், பிரார்த்தனையிலும் திக்ருகளை மொழிவதிலும் கழிக்கின்றனர்.

துல் ஹஜ் எட்டாம் நாள்- ஹஜ்ஜின் முதல் நாளாகிய இன்றைய தினத்தின் லுஹர், அஸர், மஃரிப், இஷா, ஆகிய ஐவேளைத் தொழுகைகளையும் இங்கேயே நிறைவேற்றுகின்றனர்.இன்றைய தினத்தின் இரவுப் பொழுதும் இங்கேயே இறை தியானத்தில் கழிகின்றது.

இரவுப் பொழுதிலும் இங்கு உறக்கமா வரும்? உறங்கவா இங்கு வந்தோம்? என்ற எண்ணம் இதயத்தில் எழ- சிறிது நேரமே கண்ணயர்ந்தவர்கள் கூட - நடு நிசித் தொழுகையான தஹஜ்ஜஜுத் தொழுகையை நிறைவேற்றத் தயாராகின்றனர்.

மினாவில் லுஹர், அஸர், இஷா ஆகிய, நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்களாக சுருக்கித் தொழுவது சிறந்ததாகும்.

மக்கள் முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு அச்சமற்ற நிலையிலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலும் இருந்த போது நான் நபி (ஸல்) அவர்களுடன் (நான்கு ரக்அத் கொண்ட தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன். என்று ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் திர்மிதியில் பதிவாகியுள்ளது. (ஹதீஸ் எண் 808)

நான் நபி (ஸல்) அவர்களுடன் மினாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன்.அபூ பக்ர் (ரலி) உமர் (ரலி) ஆகியோருடனும் இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன். உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியின் துவக்க காலத்திலும் இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன். என்று இப்னு மஸ்வூத் கூறியதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

மறு நாள், துல் ஹஜ் 9 ஆம் நாள் அதிகாலை பஜ்ருத் தொழுகையையும்- இங்கு மினாவிலேயே நிறை வேற்றி விட்டு - அடுத்தக் கடமையை நிறைவேற்ற அரபாத்தை நோக்கி ஹாஜிகள் புறப்படுகின்றனர்.
--------------------------
(நேர்முக வர்ணனை வளரும்)

புனித ஹஜ் பயணம் ஓர் வர்ணனை பகுதி 3

பகுதி மூன்று

ஜம் ஜம் கிணறு. இப்போது மக்கா நகரமாக இருக்கும் இந்த இடம் ஊராக உருவாவதற்கு முன், முதன் முதலில் இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவியையும், கைக் குழந்தையான மகன் இஸ்மாயீலையும் இறைக் கட்டளைப்படி இங்கே குடியமர்த்தினார்கள்.
குழந்தை தாகத்தால் தவித்த போது இஸ்மாயீலின் தாயார், ஸஃபா மர்வா என்னும் இரு மலைக் குன்றுகள் மீதும் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்குமாக ஓடி ஏறி, ஏதாவது வணிகக் கூட்டம் செல்கின்றதா? என்று பார்த்தார்கள். அவர்களிடம் தண்ணீர் வாங்கி குழந்தையின் தாகத்தை தணிக்க எண்ணினார்கள். அதற்கிடையே அல்லாஹ், குழந்தை கிடந்த இடத்தில் அற்புத நீரூற்றை ஏற்படுத்தினான்.
எத்தனை ஆண்டுகளானாலும் கெட்டுப் போகாத தன்மை இந்த ஜம்ஜம் நீருக்கு உண்டு. இங்கே கால் கோடிக்கும் அதிகமான மக்கள் அன்றாடம் பயன்படுத்தியும், கேன்களில் அடைத்து தமது ஊர்களுக்கு எடுத்துச் சென்றும் இந்தக் கிணறு ஊறிக் கொண்டே இருக்கிறது. இஸ்லாம் மெய்யான மார்க்கம் என்பதற்குச் சான்று பகர்ந்துக் கொண்டிருக்கிறது.
தோண்டுகின்ற இடமெல்லாம் எண்ணெய்க் கிணறுகள் தோன்றுகின்ற இந்தப் பாலைவன மணலில், இது ஒரு வரலாற்று அற்புதம்.
நாள் தோறும் வருகின்ற பல்லாயிரக் கணக்கான மக்களுக்கும், ஆண்டு தோறும் கூடுகின்ற அத்தனை இலட்சம் பேருக்கும் தாகம் தணிக்கிறது இக்கிணறு. அதிக சக்தியுள்ள இயந்திரங்கள் மூலம் அனுதினமும் நீர் வெளியேற்றப் படுகிறது. அள்ள அள்ளக் குறையாத இப்பேரற்புதத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இறைவன் பேராற்றலுடையவன்.சுற்றிலும் கண்ணாடித் தடுப்புகளால் அரண் அமைத்து பாதுகாக்கப் பட்டுள்ள இக்கிணற்றின் மிக அருகில் சென்று பார்க்கும் ஹாஜிகள் இறைவனின் மாபெரும் அற்புதத்தை எண்ணி வியக்கின்றனர். இந்த ஜம்ஜம் கிணறு இருக்கும் பகுதியும், பிரார்த்தனை அங்கீகரிக்கப் படும் இடங்களில் ஒன்றாகும்.தரைப் பகுதியில் படிகள் அமைத்து உள்ளே சென்று பார்க்கவும், தண்ணீர் அருந்தவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஆண்களுக்கும், பெண்களுக்கும், தனித் தனியாக பாதைகள் அமைக்கப் பட்டுள்ளன.
தவாபை முடித்து - தொழுகையையும் நிறை வேற்றிய ஹாஜிகள், கூட்டம் கூட்டமாகச் சென்று தண்ணீர் அருந்துகின்றனர். பிரார்த்தனை அங்கீகரிக்கப் படும் இந்த கிணற்றடியில் நின்று பிரார்த்திக்கின்றனர். வயிறும் மனதும் நிறைந்தவர்களாக- ஹாஜிகள் அடுத்த செயலை நிறைவேற்ற அவசரமாகச் செல்கின்றனர்.இனி அடுத்தக் கடமை ஸஃபா மர்வா மலைகளுக்கிடையே ஸயீ என்னும் ஓட்டம்.
----------------------------------------------------------
ஸயீ என்னும் தொங்கோட்டம்.
ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை. நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன். அறிந்தவன்.(திருக் குர்ஆன் 2:158)
அன்று நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் அன்னையார் தண்ணீர் தேடி ஓடியதை நினைவு கூறும் விதமாக இன்றளவும் ஹஜ்ஜுக்கு வரும் அனைவரும் ஓடுகின்றனர். ஸஃபா, மர்வா என்பது இரு சின்னஞ்சிறு மலைக் குன்றுகளின் பெயர். இப்போது அந்த இடங்களில் மலைக் குன்றுகள் இல்லை. சற்று உயரமான இடத்தில்- மலைக் குன்றுகளை நினைவு படுத்தும் விதமாகக் கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஸஃபா, மர்வா இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதி, நீண்ட அரங்கம் போல் அமைக்கப் பட்டு, குளு குளு வசதி செய்யப் பட்டுள்ளது. ஆங்காங்கே மாபெரும் மின் விசிறிகள் காற்றோட்டத்தை ஏற்படுத்துகின்றன. அடுக்கடுக்காக மூன்று தளங்கள், ஹாஜிகள் சிரமமின்றி ஓடுவதற்கு வசதியாக அமைக்கப் பட்டுள்ளன. போவதற்கும், வருவதற்குமாக இரு தனித்தனிப் பாதைகள். ஓட இயலாதவர்களைத் தள்ளு வண்டியில் வைத்து, தள்ளிக் கொண்டு செல்வதற்கும் நடுவில் தனிப்பாதை அமைக்கப் பட்டுள்ளது.
ஓட்டத்தை, ஸஃபாவில் துவக்க வேண்டும். ஸஃபாவிலிருந்து மர்வா சென்று சேருவது ஒரு ஓட்டம். மீண்டும் மர்வாவிலிருந்து புறப்பட்டு ஸஃபா வந்து சேருவது இரண்டாவது ஓட்டம். இவ்விதம், ஸஃபாவில் தொடங்கிய முதல் ஓட்டம், ஏழாவது ஓட்டத்துடன் மர்வாவில் நிறைவு பெறும். ஸஃபாவிலிருந்து மர்வா வரை வேகமாக ஓட வேண்டும் என்று அவசியமில்லை. நடந்து சென்றால் போதும். இடைப்பட்ட பகுதியில் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் மட்டும் ஆண்கள் சற்று வேகமாக ஓட வேண்டும். இந்த இடத்திற்கு 'மீலைனில் அக்லரைன்" என்று பெயர். இந்த இடத்திற்கு அடையாளமாக இரு புறமும் பச்சை விளக்குகள் எரிகின்றன.
நபி (ஸல்) அவர்கள் முதல் தவாப் செய்யும் போது மூன்று சுற்றுக்களில் வேகமாக ஓடுவார்கள். நான்கு சுற்றுக்களில் நடப்பார்கள். மேலும் ஸஃபா மர்வாவுக்கிடையே தவாப் செய்யும் போது ஓடைப் பகுதியில் மட்டும் ஓடுவார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதாரம்: புகாரி (1644)
ஸஃபா மர்வா குன்றுகளுக்கிடையே, மனித வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஹஜ் அல்லது உம்ராச் செய்ய வந்த அத்தனை இலட்சம் புனிதர்களும் ஓடுகிறார்கள். ஒருவரையொருவர் இடிக்க வில்லை. வீண் பேச்சுக்கள் இல்லை. உலக நினைவுகள் இல்லை. மெதுவான குரலில் துஆக்கள் ஓதுவதைத் தவிர வேறு எந்த சப்தமும் இல்லை. மரணத்தை நினைத்து ஓடுகிறார்கள்!; மறுமையை நினைத்து ஓடுகிறார்கள்! மஹ்ஷரை நினைத்து ஓடுகிறார்கள்! மண்ணறை வாழ்வை நினைத்து ஓடுகிறார்கள்!கால்கள் ஓடுகின்றன! கண்கள் அழுகின்றன! நாவுகள் பிரார்த்திக்கின்றன!
ஸஃபாவில் முதல் ஓட்டத்தைத் தொடங்கிய ஹாஜிகள், தமது ஏழாவது ஓட்டத்தை மர்வாவில் நிறைவு செய்து - தங்கள் முதல் கடமையான - புனித உம்ராவை இத்துடன் இனிதே நிறைவு செய்கின்றனர்.
'ஒரு உம்ராச் செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவர்க்கத்தைத் தவிர வேறில்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: திர்மிதி (855)
தமத்துவ் என்னும் ஹஜ் செய்ய நிய்யத் செய்தவர்கள், தலைமுடி நீக்கி அல்லது கத்தரித்து இஹ்ராமிலிருந்து விடுபடுகின்றனர். கிரான் என்னும் ஹஜ் செய்ய நிய்யத் செய்து இஹ்ராம் அணிந்தவர்கள் - இதே இஹ்ராமுடன் ஹஜ்ஜை எதிர் நோக்கிக் காத்திருக்கின்றனர்.
------------------------------------------------------------
புனித மதீனாவுக்குப் புறப்படுதல்.
உம்ராவை இறையருளால் இனிதே நிறைவேற்றிய புனித இறைநேசர்கள்- மக்காவில் தங்குவதற்காக- அவரவர் வழிகாட்டிகளால், ஏற்பாடு செய்யப் பட்டுள்ள தங்கும் விடுதிகளுக்குச் சென்று ஓய்வெடுக்கின்றனர். ஹரம் ஷரீபுக்கு மிக அருகிலேயே தங்குமிடம் கிடைக்கப் பெற்றவர்கள் ஒவ்வொரு நேரத் தொழுகைக்கும் ஹரம் ஷரீபுக்கு வந்து - தங்கள் வாழ்வில் கிடைத்தற்கரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். சற்றுத் தொலைவில் தங்கியிருப்பவர்களும் முன் கூட்டியே ஹரம் ஷரீபுக்கு வந்து ஜமாஅத் தொழுகையின் பாக்கியத்தை அடைந்துக் கொள்கின்றனர். புனித ஹஜ்ஜை ஆவலுடன் எதிர் நோக்கிக் காத்திருக்கும் புண்ணிய சீலர்கள், மக்காவில் தங்கியிருக்கும் நாட்களில் வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களைக் கண்டு, கடந்த கால இஸ்லாமிய வரலாற்றை நினைவு கூறுகின்றனர்.
புனித ஹஜ்ஜுக்கு இன்னும் சில நாட்கள் இருப்பதால்- அதற்குள் புனித மதீனாவுக்குப் போய் வரலாமே! ஹஜ்ஜை முடித்தபின் மதீனாவுக்குச் செல்வதென்றால் - அங்கேயும் அதிக மக்கள் நெரிசலாக இருக்கும்.அதுமட்டுமின்றி ஹஜ்ஜின் அனைத்து செயல்களையும் செய்து முடித்து களைப்பு அடைந்து விடலாம் என்பதால் பெரும் பாலானவர்கள் இப்போதே புனித மதீனாவுக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்.
--------------------------------------------------------------
மதீனா நோக்கி ஒரு மகிழ்ச்சிப் பயணம்.
உம்ராவை இனிதே நிறைவேற்றிய இறைவனின் விருந்தினர்கள், புனிதப் பயணத்தின் இரண்டாம் கட்டமாக புண்ணிய மதீனா நன்னகர் நோக்கி இதோ புறப்பட்டுவிட்டனர். 14 நூற்றாண்டுகளுக்கு முன் - இறைவனின் தூதுச் செய்தியை, ஓரிறைக் கொள்கையை, உன்னத இஸ்லாத்தை, மக்கத் திருநகரில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்த போது- அவர்களும், அவர்களின் சத்தியக் கொள்கையை ஏற்றுக் கொண்டோரும், மக்கத்துக் குறைஷிக் கெடுமதியாளர்களால், பல்வேறு துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும், ஆளாக்கப் பட்டார்கள்.
பொறுமையின் சிகரமான பூமான் நபி (ஸல்) அவர்கள் பொறுத்துப் பொறுத்து - இதற்கு மேலும் சகித்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்ட போது- இறைவனின் ஆணைப்படி- அண்ணல் நபி (ஸல்) அவர்களும், அவர்களின் ஆருயிர்த் தோழர் அபூ பக்கர் சித்தீக் (ரலி) அவர்களும், தாங்கள் பிறந்து வளர்ந்த மக்காவைத் துறந்து புறப்பட்டனர்.'யத்ரிப்" என்னும் இனிய நகரம், அவ்விருவரையும் இரு கரம் நீட்டி வரவேற்றது.
அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் சத்தியக் கொள்கைக்கும், புத்துணர்வு தந்தது. பண்டைய வரலாற்றில் 'யத்ரிப்" என்ற பெயரால் அழைக்கப்பட்ட அந்த நகரம் தான், பின்னாளில் 'மதீனத்துன்னபி" (நபியின் நகரம்) என்று மரியாதைப் பெற்று, அதுவே இப்போது 'மதீனா' என்று அழைக்கப்படுகிறது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இடம் பெயர்ந்து சென்ற அந்த நிகழ்ச்சி 'ஹிஜ்ரத்" எனப்படுகிறது.இஸ்லாமிய ஆண்டு இந்த நாளிலிருந்து தான் தொடங்குகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'யத்ரிபு என்று மக்கள் கூறக்கூடிய, எல்லா ஊர்களையும் மிகைக்கக் கூடிய ஓர் ஊருக்கு (ஹிஜ்ரத் செய்து செல்லுமாறு) நான் கட்டளை யிடப்பட்டேன்! அது தான் மதீனா! இரும்பின் துருவை உலை நீக்கி விடுவதைப் போல் மதீனா நகர் தீயவர்களை வெளியேற்றி விடும்" அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம்: புகாரி (1871)
பாம்பு தன் புற்றில் (சென்று) அபயம் பெறுவது போல், ஈமான் (இறை நம்பிக்கை) மதீனாவில் அபயம் பெறும். அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம்: புகாரி (1876)
இறைவா! மக்காவில் நீ ஏற்படுத்திய பரக்கத்தைப் போல் இரு மடங்கை மதீனாவில் ஏற்படுத்துவாயாக! அறிவிப்பவர்: அனஸ் (ரலி) ஆதாரம்: புகாரி (1885)
அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிடித்தமான இந்த மதீனா, இன்று அனைவருக்கும் பிடித்தமான நகரமாக இருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. நபி (ஸல்) அவர்களின் துஆவின் மகிமை இன்றளவும் இந்த மதீனா நகரத்தில் பிரதிபலிக்கிறது.
சிந்தைக்கினிய செழுமை மிக்க மதீனா நகர் நோக்கி புறப்பட்டு விட்டனர் ஹாஜிகள். வழி நெடுகிலும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பாலைவனமும், இடையிடையே இருபுறமும் மலைக் குன்றுகளும், அரபு நாட்டு இயற்கை அப்படியே பிரதிபலிக்கிறது. அண்ணல் நபி (ஸல்) அவர்களும், அவர்களின் அருமைத் தோழர் அபூ பக்கர் சித்தீக் (ரலி) அவர்களும், கரடு முரடான பாதைகளில் ஒட்டகத்தின் மீதேறி நாட்கணக்கில் கடந்த தூரத்தை, இப்போது சில மணி நேரங்களில், அகன்று விரிந்த வழவழப்பான சாலைகளில், அதிவேகமாக விரைந்து செல்லும் வாகனங்களில் ஹாஜிகள் சென்றடைகின்றனர்.
-----------------------------------------------------------
இதோ! மதீனா முனவ்வராவின் எல்லைப் பகுதி.
அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு அடையாள அட்டைகள் பரிசோதிக்கப் படுகின்றன. மதீனா நகரின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் இவ்விதம் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அடையாள அட்டைகள் சரி பார்க்கப்பட்ட பின்னர், அனைத்து ஹாஜிகளும் அகம் குளிர, முகம் மலர, மதீனா நகரில் நுழைகின்றனர். இதயம் கவரும் பசுமை நிறைந்த, இங்கித நகரில் நுழைகின்றனர். மாநபி அவர்கள் வாழ்ந்த மதீனத் திரு நகரில் நுழைகின்றனர். மதீனா நகரின் மையப் பகுதியை நெருங்க நெருங்க, மஸ்ஜிதுன்னபவியின் வானளாவிய மினாராக்களை வெகு தொலைவிலிருந்தே காண முடிகிறது.
நள்ளிரவு நேரத்திலும், கண்ணைப் பறிக்கும் ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது இப்புனிதப் பள்ளி. சமீப காலம் வரை மஸ்ஜிதுன்னபவியைச் சுற்றி ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பெரும் பெரும் அடுக்கு மாடிக் கட்டிடங்கள் கூட, உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை கொடுத்து அப்புறப்படுத்தப்பட்டு இப்போது மிகப் பெரிய அளவில் பள்ளி வளாகம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பள்ளி வெளிப்புற வளாகத்தின் பெரும் பகுதியில் தரை மட்டத்திற்குக் கீழ் கார் நிறுத்துமிடமும், கழிவறைகளும், அமைக்கப்பட்டுள்ளன. எல்லா நுழைவாயில்களுக்கு அருகிலும்- அடித்தளப் பகுதியில் உலூச் செய்யும் குழாய் வசதிகளும், கழிவறைகளும் அமைக்கப்பட்டு - உள்ளே சென்று வர தானியங்கிப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இயலாதவர்களும். முதியவர்களும் கூட எளிதில் சென்று வர முடியும்.பள்ளியின் வெளிப்புற வளாகத்திலேயே, பல இலட்சம் பேர் நின்று தொழ முடியும். பளீரென்ற வெள்ளைப் பளிங்குக் கற்களால் தரை முழுவதும் இழைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ஆண்டுப் பெருகி வரும் கூட்டத்திற்கு ஏற்றபடி - பள்ளி மிகவும் விசாலமாக இப்போது வடிவமைக்கப் பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் எந்நேரமும் - பள்ளியின் உள்ளேயும், வெளியேயும் தூய்மைப் படுத்திக் கொண்டே இருக்கின்றனர். தரையை சுத்தம் செய்வதற்காகவே சிறப்பான முறையில் வடிவமைக்கப் பட்ட இயந்திரங்கள் சுத்தம் செய்துக் கொண்டே இருக்கின்றன. பரந்து விரிந்த பள்ளியின் உட்பகுதி முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப் பட்டு, கடும் கோடையிலும் கூட இதமான குளுமையை அனுபவிக்க முடிகிறது.
உட்பகுதியின் ஒரு பக்கம் மாபெரும் தானியங்கிக் குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெயில் மற்றும் மழை நேரங்களில் இந்த ராட்சதக் குடைகள் விரிந்துக் கொள்ளும். மற்ற நேரங்களில் குடைகள் சுருங்கி காற்றோட்டத்தை ஏற்படுத்தும். மற்றொரு பக்கம்- காங்கிரீட் மேற் கூரை- தனித்தனிப் பகுதிகளாக அப்படியே நகர்ந்து- திறந்துக் கொள்ளும். வெயில் மற்றும் மழை நேரங்களில் மூடிக் கொள்ளும். கற்பனைக் கெட்டாத கட்டடக் கலையின் அற்புத வடிவமைப்புகள் காண்போரை பிரமிக்கச் செய்கின்றன. பள்ளியின் உட்பகுதி முழுவதும்- பல்லாயிரக் கணக்கில் குடி நீர் பிளாஸ்குகள் வைக்கப்பட்டு, மக்காவிலிருந்து ஜம்ஜம் நீர் கொண்டு வந்து தினந்தோறும் நிரப்பப்படுகிறது.
மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராமில், இரவும் பகலும் மக்கள் கஃபாவைத் தவாபு செய்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இந்த மஸ்ஜிதுன்னபவியில், இரவு இஷாத் தொழுகை முடிந்ததும், அனைவரும் வெளியேற்றப் படுகின்றனர். பள்ளியின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் இரவில் யாரையும் உறங்க அனுமதிப்பதில்லை. இஷாத் தொழுகை முடிந்து அடைக்கப்பட்ட பள்ளியின் கதவுகள், தஹஜ்ஜுத் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டவுடன் திறக்கப்படுகின்றன. எல்லா நாட்களிலும் தஹஜ்ஜுத் தொழுகையை நிறைவேற்ற ஹாஜிகள் ஆர்வத்துடன் வந்து விடுகின்றனர். பஜ்ருத் தொழுகை வரை இறை வணக்கத்தில் ஈடுபடுகின்றனர்.
---------------------------------------------------
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனையப் பள்ளிகளில் தொழுவதை விட எனது பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்தது. அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம்: புகாரி (1190)
இந்த ஹதீஸின் கருத்தை உணர்ந்த ஹாஜிகள், தஹஜ்ஜுத் தொழுகையைக் கூடத் தவற விடுவார்களா? மதீனாவில் தங்கியிருக்கும் நாட்களில் மஸ்ஜிதுன்னபவியில் அதிகமதிகம் தொழுகையில் ஈடுபட்டு நன்மைகளை சேர்ப்பதில் கவனமாக இருக்கின்றனர்.
இன்றைய தினம் பஜ்ருத் தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றி விட்டு மக்கள் கூட்டம், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புனித அடக்கத்தலத்தை ஜியாரத் செய்ய அலைமோதுகிறது. பள்ளியின் உட்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னோக்கி நகருகின்றனர். இதோ! முதலில் தெரிவது 'சுவர்க்கப் பூங்கா"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'எனது வீட்டிற்கும் எனது மிம்பருக்கும் இடைப்பட்டப் பகுதி சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும்." அறிவிப்பவர்: அபு ஹூரைரா (ரலி) ஆதாரம்: புகாரி (1195)
இந்த இடத்திற்கு அடையாளமாக, அழகான பச்சைக் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நபி மொழி அரபியில் 'மா பைன பைத்தீ வ மிம்பரீ ரவ்லதன் மின் ரியாலில் ஜன்னா" என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் நின்று தொழவைத்த இடமும் (மிஹ்ராபுன்னபி) பிரசங்கம் செய்வதற்காக நின்ற மேடையும், அருகருகே அமைந்துள்ளன. பாக்கியம் பெற்ற இந்த இடங்களுக்கருகில் நிற்கவும், நின்று தொழவும் ஹாஜிகள் அலைமோதுகின்றனர்.
அடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுகின்றனர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் துயில் கொண்டுள்ள புனித அடக்கத்தலத்தை நோக்கி! இதோ! தூய நபியவர்கள் துயில் கொண்டுள்ள தூய்மைத் தலம். உண்மை நபியவர்கள் உறங்கும் உன்னத அடக்கத் தலம். மனங்கவரும் இஸ்லாத்தை மனங்குளிர போதித்த மனித குல மாணிக்கத்தின் மறைவிடம்.புவியெங்கும் மக்கள் புகழ் பாடிக் கொண்டாடும், புனிதரின் பூத உடல் இங்கே தான்.
யுகம் யுகமாய் திருந்தாதக் காட்டுமிராண்டிகளாக இருந்தவர்களை, இருபத்து மூன்றே ஆண்டுகளில் இகமே போற்றும் இனிய தோழர்களாய் மாற்றியமைத்த இனியவரின் புனித உடல் இங்கே தான்.கண்கள் காணக் காண, நினைவுகள் பின்னோக்கி செல்கின்றன. 1400 ஆண்டுகளுக்கு முன்- அகிலம் முழுவதும், அநியாயமும், அட்டூழியமும், தலை விரித்தாடியபோது, அகிலத்தின் அருட்கொடையை, அரேபியப் பாலையில் அல்லாஹ் அவதரிக்கச் செய்தான்.
தாயின் வயிற்றில் கருவாக இருந்த போதே தந்தையை இழந்து, தமது ஆறாம் வயதில், தாயையும் இழந்து, பாட்டனார் அப்துல் முத்தலிபின் பராமரிப்பில் வளர்ந்து, 'அல் அமீன்" என்றும் 'அஸ்ஸாதிக்" என்றும் அன்புடன் அழைக்கப் பட்ட நம்பிக்கைக்குரிய இளைஞராக-செல்வச் சீமாட்டி கதீஜாவின் சிறப்பு மிகு வணிகராக-இருபத்தைந்தாம் வயதில் எழில் மணம் புரிந்து-நாற்பதாம் வயதில் இறைத்தூதராக நபித்துவம் பெற்று- மக்கத்துக் குறைஷிகளால் பலவித துன்பங்களுக்குள்ளாகி-53 ஆம் வயதில், இறைவனின் ஆணைப்படிதாம் பிறந்து வளர்ந்த மக்காவைத் துறந்து-மதீனத் திரு நகருக்கு மாண்புடன் ஹிஜ்ரத் செய்து-மதீனத்து அன்ஸாரிகளின் மதிப்புக்கு உரியவராக-மன்னாதி மன்னர்களும் தமக்கு முன்னே அணிவகுத்து நிற்கும் அளவுக்கு மாண்பையும் மரியாதையையும் பெற்று-மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை மதீனாவில் நிறுவி-ஏகத்துவக் கொள்கையை இகமெங்கும் பரவச் செய்து-தமது 63 ஆம் வயதில் - அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று- இம் மண்ணுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு - மறுமை நாள் வரை துயில் கொண்டுள்ள தூய இடம் இது தான்.
கண் இமைக்கும் நேரத்தில்- வள்ளல் நபியின் வாழ்க்கைச் சரிதம் நம் கண் முன்னே தோன்றி மறைகிறது. இந்தப் புனித அடக்கத்தலத்தைக் காணக் காண, அனைவரின் கண்களும் கண்ணீர் வடிக்கின்றன. அனைவரின் நாவுகளும் அழகாக ஸலாம் உரைக்கின்றன. நபியே ஸலாம் உண்டாக!இறைவனின் தூதரே ஸலாம் உண்டாக! அனைவரும் ஸலாம் கூறுகிறார்கள். அமைதியாக ஸலாம் கூறுகிறார்கள்.
இதன் உள்ளே கல்லறை கட்டப்படவில்லை. கண்ணைப் பறிக்கும் அலங்காரம் இல்லை. 'எண்ணெய் விளக்கு" எரியவில்லை. உண்டியல் இல்லை. ஊது பத்தி- சாம்பிரானி இல்லை. மயிலிறகு இல்லை. மலர் வளையம் இல்லை. ஏமாற்றும் இடைத் தரகர்கள் இல்லை. பாத்திஹா ஓத யாரும் இல்லை. பைத்தியங்கள் சங்கிலிகளால் பிணைக்கப் படவில்லை. பூமாலைக் கட்டி போடமுடியாது. போர்வை வாங்கி போர்த்த முடியாது. சந்தனம் பூச முடியாது. கொடியேற்றம் இல்லை. கூத்தும் கும்மாளமும் இல்லை. பாட்டுக் கச்சேரியும் இல்லை. பரத்தையர் நாட்டியமும் இல்லை.
'எனது கப்ரை திரு விழா நடத்தும் இடமாக ஆக்கிவிடாதீர்கள்" என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளிச் சென்ற வார்த்தை இன்றளவும் இங்கே பேணப் படுகின்றது.
அர்ச்சனைகளிலிருந்தும், ஆராதனைகளிலிருந்தும், அனைத்து வகை அனாச்சாரங்களிலிருந்தும், ஆடல் பாடல் கச்சேரிகளிலிருந்தும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புனித அடக்கத்தலத்தை அல்லாஹ் காப்பாற்றி விட்டான்.
அறியாமையால் சிலர், கையேந்தி பிரார்த்திக்கவும், அடக்கத்தலத்தின் சுவர்களைத் தொட்டு முத்தமிடவும் முயற்சிக்கின்றனர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது கொண்ட அளவு கடந்த அன்பின் காரணமாகத் தான் இவ்வாறு செய்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் மார்க்கத்தில் அதற்கு அனுமதி இல்லை என்பதை இவர்கள் உணரவில்லை.
காவல் துறையினரும், அரசு அதிகாரிகளும், அறிவிற் சிறந்த ஆன்றோரும், அருகில் நின்று கண்காணிக்கின்றனர். அறியாமையால் அனாச்சாரங்களில் ஈடுபட முனைவோரைத் தடுக்கின்றனர்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள், கப்ர் ஜியாரத் எப்படிச் செய்யவேண்டும் என்று மொழிந்தார்களோ! அவர்களின் அடியொற்றி நடந்த ஸஹாபாக்கள் எவ்விதம் ஜியாரத் செய்தார்களோ! அந்த முறை தான் இன்றளவும் இங்கே கடைபிடிக்கப்படுகிறது.
அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் உரைத்தபடியே, மக்கள் கூட்டம் மெதுவாக நகருகின்றது.
------------------------------------------------------------
அபூ பக்கர் (ரலி).
அவர்களுக்கு அடுத்து அடக்கம் செய்யப் பட்டிருக்கும், அண்ணலாரின் அருமைத் தோழர், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஒவ்வொரு துன்ப துயரத்திலும் பங்கு கொண்ட பண்பாளர், அண்ணலாருடன் சேர்ந்து ஹிஜ்ரத் செய்யும் பேறு பெற்ற பெருந்தகை, நபிமார்களுக்குப் பின் மனிதர்களில் சிறந்தவர் என்று புகழப்பட்ட புண்ணிய சீலர், அண்ணல்நபி (ஸல்) அவர்களுக்குப் பின் அவர்களின் அரசியல் தலைமையை அலங்கரிக்கும் பொறுப்புக்கு அனைவராலும் ஏகோபித்து அங்கீகரிக்கப் பட்டவர், அபூ பக்கர் சித்தீக் (ரலி) அவர்களுக்கு ஸலாம் உரைக்கின்றனர்.மக்கள் கூட்டம் மேலும் முன்னோக்கி நகருகின்றது.
-------------------------------------------------------------
உமர் (ரலி).
அவர்களை அடுத்து அடக்கம் செய்யப்பட்டுள்ள, அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர், வீரத்தின் விளை நிலம், இஸ்லாமிய கிலாபத் ஆட்சியின் இரண்டாவது கலீபா, நீதி மிக்க ஆட்சிக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய நீதி மான், உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களுக்கு ஹாஜிகள் ஸலாம் உரைக்கின்றனர்.
ஜியாரத்தை முடித்து வெளியில் வந்த ஹாஜிகள், வாழ்வில் கிடைத்தற்கரிய பெரும் பேற்றைப் பெற்றதற்காக ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்கள். ஹஜ்ஜுடைய காலங்களில், மஸ்ஜிதுன்னபவியில் உள்ளே நுழைந்து ஜியாரத்தை முடித்து வெளியே வருவது என்பது சிரமமான காரியம் தான். நின்று காண்பதற்கு நேரம் இல்லை. கடல் அலையைப் போல் ஹாஜிகள் கூட்டம், கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துக் கொண்டே வருகின்றது.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புனித அடக்கத்தலத்தை தரிசிக்கும் பேறு பெற்றோம் என்னும் மகிழ்ச்சிக்கு முன்னால்- அதற்காகப் பட்ட சிரமங்கள் யாருக்கும் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.புண்ணியம் கிடைக்கப் பெற்றவர்களின் திரு முகங்களில் புன்னகைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
இந்த மதீனத் திரு நகரில் தங்கியிருக்கும் நாட்களிலெல்லாம், இன்னும் ஒரு முறை, இன்னும் ஒரு முறை - எவ்வளவு சிரமங்கள் இருந்தாலென்ன? இன்னும் ஒரு முறை - மறுபடியும் இந்த பொன்னான வாய்ப்பு எப்போது கிடக்கும்? எனவே இன்னும் ஒரு முறை ஜியாரத் செய்ய வேண்டும் என்னும் ஆசையே அனைவரின் மனதிலும் மேலோங்குகிறது.இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தம் இன்னுயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் இனிய இதயங்களுக்கு இப்படி ஓர் ஆர்வம் ஏற்படுவதில் வியப்பில்லை.புனித அடக்கத்தலத்தை ஜியாரத் செய்து முடித்த புண்ணிய சீலர்கள் இதோ மஸ்ஜிதுன்னபவிக்கு அருகில் இருக்கும் ஜன்னத்துல் பகீஃ என்னும் புனிதர்களின் பூஞ்சோலை நோக்கி புறப்பட்டு விட்டனர்.
-------------------------------------------------------
(நேர்முக வர்ணனை வளரும்)

Saturday, January 15, 2005

புனித ஹஜ் பயணம் ஓர் வர்ணனை, பகுதி2

பகுதி இரண்டு
மக்கத் திரு நகரில்.
'இறைவனின் விருந்தினர்களை வரவேற்பதில் மக்கத் திரு நகரம் மகிழ்ச்சி அடைகிறது" என்னும் 'உம்முல் குரா" பல்கலைக் கழக அலங்கார வளைவு, ஹாஜிகள் புனித மக்காவில் நுழைந்து விட்டனர் என்பதை உணர்த்துகிறது.

எந்த நகரைச் சிறப்பித்து இறைவன் தன் திரு மறையில் இயம்பினானோ!

இறைவனை வணங்க, உலகின் முதல் இறையாலயம் எழுப்பப்பட்டச் சிறப்பு எந்த நகருக்குக் கிடைத்ததோ!

எந்த நகரில், ஈருலக வேந்தர் இறைத் தூதர் நபி (ஸல்) அவர்கள் பிறந்தார்களோ!

இஸ்லாம் என்னும் கதிரவனின் ஒளிக் கதிர்கள், எந்த நகரிலிருந்து ஒளி வீசத் தொடங்கியதோ!

அந்த மக்கத் திருநகருக்குள் ஹாஜிகள் நுழைந்து விட்டனர். மஸ்ஜிதுல் ஹராமுக்கு மிக அருகில் சென்று வாகனங்கள் நிறுத்தப் படுகின்றன. கண்ணைப் பறிக்கும் ஒளி வெள்ளத்தில் மஸ்ஜிதுல் ஹராமைக் கண்ட வண்ணம், புனித மண்ணில் அடியெடுத்து வைக்கின்றனர் புண்ணிய ஹாஜிகள். விண்ணோக்கி உயர்ந்த மினாராக்களிலிருந்து கம்பீரமாகக் கேட்கிறது பாங்கொலி.

கணக்கிலடங்கா பள்ளிகளில் காலமெல்லாம் கேட்ட சப்தம் தான். இந்தப் பள்ளியின் ஒலி பெருக்கியில் மட்டும் எப்படி இத்தனை ஒரு கம்பீரம்! ஆர்ப்பரித்து எழும் கடல் அலை படிப்படியாக இறங்குவது போல் செவிகளில் ஓர் உணர்வு. 'பாலைகளில், காடுகளில், பணிபடர்ந்த நாடுகளில், சோலைகளில், தீவுகளில்," இந்தப் பாங்கோசைக் கேட்காத இடமில்லை இப்பாருலகில்.

இறைவனை வணங்க உலகம் முழுவதும் ஒரே மாதிரியான அழைப்பு. இஸ்லாத்திற்கு மட்டுமே உரிய தனிச் சிறப்பு. மொழி தெரிந்தவர்- தெரியாதவர்- பொருள் புரிந்தவர்- புரியாதவர்- எல்லோருக்கும் தெரியும், இது 'அல்லாஹ்வை வணங்க அனைவரும் வாருங்கள்" என விடுக்கும் அழைப்பு.

நாள் ஒன்றுக்கு ஐவேளைத் தொழுகை. நானிலமெங்கும் உள்ள பள்ளிவாசல்களில், நாள் தவறாமல் நடக்கும் இந்த இறை வணக்கத்திற்காக, நாள் ஒன்றுக்கு ஐந்து முறை அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு தொழுகையின் நேரமும் சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு ஊருக்கு ஊர், மாநிலத்துக்கு மாநிலம், நாட்டுக்கு நாடு மாறுபடும். ஒவ்வொரு தொழுகைக்கும் அழைக்கப்படும் இந்தப் பாங்கோசை உலகம் முழுவதும் ஏதேனும் ஒரு பகுதியில் கேட்டுக் கொண்டே இருக்கும். யுக முடிவு நாள் வரை இந்த சங்க நாதம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
--------------------------------------------
மனங்கவரும் மஸ்ஜிதுல் ஹராம்.
புனித ஹாஜிகள் தாங்கள் வந்த நோக்கத்திலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். மஸ்ஜிதுல் ஹராமின் அனைத்து வாசல் வழியாகவும் அணி அணியாக ஆர்வத்துடன் நுழைகின்றனர். இந்த மஸ்ஜிதுல் ஹராம் பள்ளியில் ஒரு ரக்அத் தொழுவது மற்றப் பள்ளிகளில் ஒரு இலட்சம் ரக்அத்கள் தொழுவதற்குச் சமம்.திருக் கஃபாவை உள்ளடக்கிய இப் புனிதப் பள்ளி, பல்வேறு கால கட்டங்களிலும், விரிவு படுத்தப் பட்டு வந்திருக்கிறது.

இறுதியாக, இப்போதைய ஆட்சியாளர்களால், மிகப் பிரம்மாண்டமான அளவில் விரிவு படுத்தப் பட்டுள்ளது. அதி நவீன வசதிகளுடன், அழகான முறையில், வடிவமைக்கப்பட்டுள்ள இப்பள்ளியில், ஏக காலத்தில் இருபது இலட்சம் பேர், எந்தச் சிரமமுமின்றித் தொழ முடியும். கட்டிடக் கலையின் சகல விதமானத் தொழில் நுட்பங்களும் இங்கே கையாளப் பட்டுள்ளன.

பல்லாயிரக் கணக்கான ஊழியர்கள் சீருடை அணிந்து சுழற்சி முறையில் பகலும் இரவும் பணிபுரிகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் - எந்த நேரமும் ஒவ்வொரு பகுதியிலும் தூய்மைப் படுத்திக் கொண்டே இருக்கின்றனர். மஸ்ஜிதுல் ஹராமின் மையப் பகுதியில் இதோ நம் கண்களைப் பறிக்கின்றதே! இது தான் கஃபா!
--------------------------------------------
கஃபா என்னும் முதல் இறையாலயம்.
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக அமைக்கப் பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதுதான், அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. (திருக் குர்ஆன் 3: 96)

கஃபா. சொல்லுக்கடங்காத புகழுக்குரிய இறையில்லம். இறைவனை வணங்க, உலகில் முதன் முதல் உருவாக்கப்பட்ட இறையாலயம். உலகில் இப்போது வாழும் 120 கோடி முஸ்லிம்களின் ஒரே இதயம். ஐயாயிரம் ஆண்டுகளாக அத்தனை புயல்களையும் மழைகளையும் எதிர்த்து நின்று காலத்தால் அழியாமல் அப்படியே நிமிர்ந்து நிற்கும், அல்லாஹ்வின் அருள் இல்லம். அந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக! (திருக் குர்ஆன் 2:125)

ஆம்! உலக முஸ்லிம்கள் ஒன்று கூடுமிடமாக இந்த ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தை பாதுகாப்பு மையமாக இறைவன் அறிவித்து 14 நூற்றாண்டுகள் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும், அது இன்றளவும் அபய பூமியாகவே அமைந்துள்ளது. குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

1400 ஆண்டுகளுக்கு முன் அப்ரஹா என்னும் அரசன் யானைப் படையுடன், இப்புனிதக் கஃபாவை அழிக்க வந்த போது 'அபாபீல்" என்னும் சின்னஞ்சிறு பறவைகளைக் கொண்டு அல்லாஹ் பாதுகாத்தான். திரு மறையின் 105 ஆவது அத்தியாயம் இச்சம்பவத்தை அழகாக எடுத்தியம்புகின்றது.

அது போலவே, எல்லாக் கால கட்டத்திலும், எதிரிகளிடமிருந்தும், இயற்கையின் தாக்குதல்களிலிருந்தும். இதனை இன்று வரை இறைவன் காப்பாற்றி வருகிறான். கண்ணைப் பறிக்கும் வண்ணப் படங்களாகக் காலண்டர் அட்டைகளில் மட்டுமே கண்டு களிப்படைந்தக் கஃபாவை இதோ கண் முன்னே ஹாஜிகள் காண்கின்றனர். களிப் பேருவகைக் கொள்கின்றனர். கற்பனையில் கூடக் கண்டிராதக் காட்சியைக் கண்டு கண்கள் அகல விரிகின்றன.

இதயம் நடுங்குகிறது. மெய் சிலிர்க்கிறது. மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன. உடல் முழுதும் மின்சாரம் பாய்ந்தது போன்ற ஓர் உணர்வு. பன்னூலாசிரியர் ஆசுஆ அப்துற்றஹீம் அவர்கள் பாணியில் சொல்வதானால், 'உச்சியைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்குகிறது.

"இந்தக் கஃபா, விலையுயர்ந்த கருப்புத் திரையால் மூடப் பட்டுள்ளது. திரை முழுவதும் தங்க இழைகளால் திருமறை வசனங்கள் தீட்டப் பட்டுள்ளன. இந்தக் கருப்புத் திரையை உருவாக்கு வதற்கென்றே - தனியாக ஒரு தொழிற்கூடம் நிறுவப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இந்தக் கருப்புத் திரை மாற்றப் பட்டு, புதிய திரை போர்த்தப் படுகின்றது.
--------------------------------------------
தவாபுல் குதூம் என்னும் முதல் தவாப்.
பொதுவாக எந்தப் பள்ளியில் நுழைந்தாலும், முதலில் 2 ரக்அத் நபில் தொழுவது சிறந்தது. ஆனால் மஸ்ஜிதுல் ஹராமின் உள்ளே நுழைந்ததும் கடமையான ஜமாஅத் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் முதலில் தவாப் செய்வதே சிறந்தது. அதுவே முறையும் கூட.

ஹஜ் அல்லது உம்ராச் செய்ய, புனித மக்காவுக்கு வரும்போது முதலில் செய்யும் தவாபுக்கு 'தவாபுல் குதூம்" என்று பெயர். கஃபாவை ஏழு முறை சுற்றி வருவது ஒரு தவாப் ஆகும். மஸ்ஜிதுல் ஹராமுக்கு ஏராளமான நுழைவாயில்கள் உள்ளன. எந்த வழியாகவும் உள்ளே நுழையலாம். அவரவர் வந்து சேரும் வழிகளில் உள்ள நுழைவாயில் வழியே உள்ளே நுழைகின்றனர். அவரவர் தம் தவாபுல் குதூமை அழகாகத் தொடங்குகின்றனர்.

'நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்ததும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைந்தார்கள். ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டார்கள். பின்பு வலப்புறமாக (கஃபாவை) சுற்றலானார்கள். மூன்று சுற்றுக்கள் விரைவாகவும் நான்கு சுற்றுக்கள் சாதாரணமாகவும் நடந்து சுற்றினார்கள். பிறகு மகாமே இப்ராஹீம் எனும் இடத்திற்கு வந்தார்கள். மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் (2:125) என்ற வசனத்தை ஓதிவிட்டு, தமக்கும் கஃபாவுக்கும் இடையே மகாமே இப்ராஹீம் இருக்குமாறு 2 ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் ஹஜருல் அஸ்வதுக்கு வந்து அதைத் தொட்டு முத்தமிட்டார்கள். பிறகு ஸஃபாவுக்குச் சென்றார்கள்.

'நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களில் உள்ளவையாகும் (திருக் குர்ஆன் 2: 158) என்ற வசனத்தை அவர்கள் ஓதியதாக எண்ணுகிறேன்" அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: திர்மிதி (784)

ஹஜருல் அஸ்வத் கல் இருக்கும் இடத்திலிருந்து ஹாஜிகள் தவாபைத் தொடங்குகின்றனர். இயன்றால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிடட்டும், இயலாவிட்டால் தூரத்திலிருந்தே கைகளால் சைகை செய்தும் தவாபைத் தொடங்கலாம். நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தின் மீதமர்ந்து தவாப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வதுக் கருகே வந்த போது அதை நோக்கி சைகை செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: திர்மிதி (793)

'ஹஜருல் அஸ்வத் சுவர்க்கத்திலிருந்து இறங்கியதாகும். அது பாலை விட வெண்மையாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கறுப்பாக்கி விட்டன" என்று நபி (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)ஆதாரம்: திர்மிதி (803)

கியாமத் நாளில் பார்க்கும் இரு கண்கள் கொண்டதாகவும், பேசும் நாவு கொண்டதாகவும் ஹஜருல் அஸ்வதை (அல்லாஹ்) எழுப்புவான். யார் இதை முத்தமிட்டரோ அவருக்காக அது சாட்சி கூறும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) ஆதாரம்: திர்மிதி (884)

தவாபின் ஒவ்வொரு சுற்றின் போதும் ஹஜருல் அஸ்வதை முத்தமிடவோ அல்லது அதை நோக்கி சைகை செய்யவோ வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஃபாவை தவாப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் சைகை செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: புகாரி (1612)

ஹாஜிகள் தவாபைத் தொடங்குகிறார்கள். ஒரே சீராக, ஒழுங்கு முறையுடனும், மிகுந்த கட்டுப்பாட்டுடனும் சுற்றி வருகிறார்கள். இலட்சக் கணக்கான மக்கள் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இரவும் பகலும் இடைவிடாது சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.அரசர்களும், ஆண்டிகளும், ஆட்சி செய்யும் அதிகாரிகளும், முதலாளிகளும், தொழிலாளிகளும், ஏழைகளும், செல்வந்தர்களும், ஏற்றத் தாழ்வின்றி சுற்றுகிறார்கள்.

படித்தவர்களும், பாமரர்களும், பாகுபாடின்றி சுற்றுகிறார்கள். ஆண்களும். பெண்களும், சிறியோரும், பெரியோரும், வாலிபர்களும், வயோதிகரும் அனைத்து வகை மனிதர்களும் அழகாகச் சுற்றுகிறார்கள்.

தள்ளாத வயதில் பெற்றோரைத் தம் முதுகில் சுமந்தபடி- தாம் பெற்றக் குழந்தைகளைத் தம் தோளில் சுமந்தபடி- வளரும் சிசுக்களைத் தம் வயிற்றில் சுமந்தபடி- மறுமை பயத்தைத் தம் மனதில் சுமந்தபடி- இறையச்சத்தைத் தம் இதயத்தில் சுமந்தபடி- திருமறை குர்ஆனைத் தம் கரங்களில் சுமந்தபடி-திக்ருகளைத் தம் நாவுகளில் மொழிந்த படி- பாவ மன்னிப்புக் கேட்டுத் தம் கைகள் ஏந்தியபடி- கவலையுடன் அழுதழுது கண்ணீர் சொரிந்தபடி-சுற்றுகிறார்கள். சுற்றுகிறார்கள். சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

1400 ஆண்டுகளாக, ஆயிரமாயிரம் கோடிப் பேர்கள் சுற்றினார்கள். இந்தக் கணப் பொழுதிலும் இலட்சக் கணக்கானோர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இறுதி நாள் வரை இன்னும் எத்தனை எத்தனை கோடிகளோ! எண்ணிக்கை எந்த எண்ணிலும் அடங்காது. ஏட்டிலும் அடங்காது.

ஏழு முறை கஃபாவைச் சுற்றுவது ஒரு தவாப் ஆகும். ஏழு சற்றுக்களை நிறைவு செய்தவர்கள், எவ்வளவு இதமுடன் வெயியேறுகின்றனர்! தவாபை முடித்தவர்கள், சிறுகச் சிறுக வெளியேற - தவாபைத் தொடங்குபவர்கள் பக்குவமாக நுழைகின்றனர். சங்கிலித் தொடராக இந்தச் சுற்றுக்கள் தொடர்கின்றன.தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றன. முதல் தவாபில் முதல் மூன்று சுற்றுக்களில் மட்டும் தோள்களைக் குலுக்கியவாறு கொஞ்சம் வேகமாக (ஆண்கள்) ஓட வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள், ஹஜ்ஜிலும் உம்ராவிலும் முதல் மூன்று சுற்றுக்களில் ஓடுவார்கள். (மீதமுள்ள) நான்கு சுற்றுக்களில் நடந்து செல்வார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆதாரம்: புகாரி (1604)

தவாபை முடித்ததும், அடுத்த செயல் மகாமே இப்ராஹீமில் இரண்டு ரக்அத் தொழவேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இப்படித்தான் செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மக்கா வந்த போது கஃபாவை ஏழு முறை வலம் வந்தார்கள். பிறகு மகாமே இப்ராஹீமுக்குப் பின்னால் இரண்டு ரக்அத் தொழுதார்கள். பிறகு ஸஃபாவி(ல் ஓடுவத)ற்காகப் புறப்பட்டார்கள். 'நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடத்தில் உங்களுக்கு அழகிய முன் மாதிரி உள்ளது" என இறைவன் கூறுகிறான். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதாரம்: புகாரி(1627)

மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (திருக் குர்ஆன் 2:125)

தவாபை நிறைவு செய்த ஹாஜிகள், மகாமே இப்ராஹீமுக்கு அருகில் நின்று இரண்டு ரக்அத் தொழுகின்றனர். மகாமே இப்ராஹீமுக்கு மிக அருகில் தான் நின்று தொழ வேண்டும் என்பதில்லை.

நபி (ஸல்) அவர்கள் (தம் ஹஜ்ஜை முடித்து) மக்காவிலிருந்து புறப்பட நாடினார்கள். தவாப் செய்யாத நிலையில் நானும் புறப்பட ஆயத்தமானேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'சுப்ஹுத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டவுடன் மக்கள் தொழுது கொண்டிருக்கும்போது நீ ஒட்டகத்தின் மீதமர்ந்து தவாப் செய்துக் கொள்" எனக் கூறினார்கள். அவ்வாறே நான் செய்தேன். இதனால் (இரண்டு ரக்அத்துகளை) பள்ளிக்கு வெளியே வந்த பிறகே தொழுதேன். அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி) ஆதாரம்: புகாரி(1626)

மகாமே இப்ராஹீமுக்கு அருகில் நின்று தொழுவது, தவாபு சுற்றுபவர்களுக்கு இடையூறாக இருக்கும். நெரிசலில் சிலர் அவசர அவசரமாக, ருகூவு செய்யவும் முடியாமல், ஸஜ்தாச் செய்யவும் முடியாமல், சிரமப்பட்டு தொழுவதைக் காணலாம். தொழுகை என்பது நிறுத்தி நிதானமாகச் செய்ய வேண்டிய ஒரு வணக்கமாகும்.

எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப் படுத்த மாட்டோம் (திருக் குர்ஆன் 23:62)

என்று அல்லாஹ்வின் திருமறை கூறுகிறது. எனவே கடுமையான சிரமத்துக்கு மத்தியில் அந்த மகாமே இப்ராஹீமுக்கு அருகில் நின்று தொழுவதை விட மஸ்ஜிதுல் ஹராமின் எந்தப் பகுதியிலும் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளலாம். விபரம் அறிந்த ஹாஜிகள், தவாபின் இரண்டு ரக்அத் தொழுகையை மஸ்ஜிதுல் ஹராமில் வசதிப் பட்ட இடங்களில் நிறைவேற்றுகின்றனர்.

கஃபாவின் வட பகுதியில் அரை வட்டத்துக்குச் சிறிய சுவர் ஒன்று எழுப்பப் பட்டுள்ளது. இதற்கு ஹிஜ்ர் இஸ்மாயீல் என்று பெயர்.

நான் கஃபா ஆலயத்துக்குள் நுழைந்து அதில் தொழ விருப்பம் கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து ஹிஜ்ருக்குள் என்னை நுழையச் செய்து, ஆலயத்தின் உள்ளே நுழைய விரும்பினால் இங்கே தொழுவாயாக! ஏனெனில் இதுவும் ஆலயத்தின் ஒரு பகுதியாகும். எனினும் உனது கூட்டத்தினர் கஃபாவைக் கட்டிய போது அதைச் சுருக்கி விட்டனர். மேலும் இந்த இடத்தை ஆலயத்தை விட்டும் அப்புறப் படுத்திவிட்டனர்." என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: திர்மிதி: (802)

ஹாஜிகளில் பலர், இந்த ஹிஜ்ருக்குள் நுழைந்து தொழுதுக் கொள்கின்றனர். இங்கு நின்று பிரார்த்திக்கின்றனர். கஃபாவின் மேற்குப் பகுதியில் மழை நீர் வடிவதற்காகக் குழாய் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதற்கு 'மீஜாபுர் ரஹ்மத்" என்று பெயர். இதுவும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் இடங்களில் ஒன்றாகும். ஹாஜிகள் இந்த இடத்திலும் நின்று பிரார்த்திக்கின்றனர்.

(நேர்முக வர்ணனை தொடரும்)
------------------------------------------------
At 6:14 PM, raj said...
நேரில் காண்பதுபோலவே உள்ளது வர்ணனைகள். நல்ல பதிவு, பாராட்டுக்கள். புத்தகத்தின் விபரங்களை(எந்த பதிப்பகம்) வெளியிட்டால் நல்லது. இஸ்மாயில், சிங்கை.

சகோதரர் இஸ்மாயில் அவர்களுக்கு,
புனித ஹஜ் பயணத்தை வர்ணிக்கும் இப்புத்தகம் எண்பதுகளின் இறுதிப்பகுதியில் இலவசமாக வெளியிடப்பட்டது. இதற்கு பதிப்புரிமை எதுவும் இல்லை. எவர் வேண்டுமானாலும் அச்சிட்டு வெளியிடலாம்.
அன்புடன்
அபூ முஹை