Tuesday, September 06, 2005

வஹி: இறைச்செய்தியும்- அறிவியலும்-10

சுழலும் பூமி(3) -10ஏ.கே.அப்துர் ரஹ்மான்

ஓன்றுமில்லாத சூன்யப் பெருவெளியில் இந்தப் பிரம்மாண்டமான பேரண்டத்தையும், அதற்குள் நமது சூரியக் குடும்பத்தையும் படைக்க ஆற்றல் பெற்றவன் மாபெரும் பாக்கியவான். அந்த அதிகம்பீர ஆற்றலின் ஏகாதிபதி தன்னுடைய படைப்பில் உதிப்பதற்கும், அஸ்தமிப்பதற்கும் எல்லைகளை வடிவமைத்திருக்கும் தகவலைத் தந்து, அதன் வாயிலாகப் பூகோளம் சுழல்கிறது என்ற அறிவியல் பேருண்மையைத் தன் திருமறையில் ஓதி நிற்கிறான்.

சூரியன் பூமியைச் சுற்றவில்லை: பூகோளமே சுழன்று வந்து இராப்பகலைத் தோற்றுவிக்கிறது என்ற அறிவியலை இதோ தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் மேலும் மேலும் நிறுவிக் கொண்டிருக்கிறான் அந்த சர்வ சம்பூர்ண கேந்திரன்!. அவன் கூறுகிறான்:

'அவன் இரவைக் கொண்டு பகலை மறைக்கிறான். சிந்திக்கும் மக்களுக்கு இதில் சான்றுகள் இருக்கின்றன.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 13 ஸுரத்துர் ரஃதுவின் 03வது வசனம்).

இந்த வசனத்தில் இராப்பகல் மாற்றம் எவ்வாறு இயங்குகிறது எனத் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. அதாவது பகலாக இருந்த இடத்தை இரவு மறைப்பதால்தான் பகலாக இருந்த இடம் இரவாக மாறுகிறது என இவ்வசனம் கூறுகின்றது. எனவே பகலை இரவாக மாற்றும் பொருட்டு அப்பகலை இரவு மறைக்க வேண்டும் என்பது இவ்வசனத்தின் பொருள். இது எப்படிச் சாத்தியமாகும்?.

பகலை மறைக்கும் ஆற்றல் இரவுக்கு இருக்க முடியுமா?. ஆனால் இராப்பகல் மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிப் போக்கு இந்த அடிப்படையில்தான் செயல்படுகிறது என்பது திருமறையின் கூற்று!. இராப்பகல் மாற்றத்தின் இயக்கத்தை விளக்கும் இத்திருமறையின் கூற்றைப் புரிந்து கொள்ளும் பொருட்டு நாம் ஒரு சோதனையைப் புரிந்து கொள்வோம். அச்சோதனையில் இராப்பகல் மாற்றத்தின் நவீன அறிவியலைக் கொஞ்ச நேரம் மறந்து விட்டு, நமது பழங்கால நம்பிக்கையில் சோதனையைத் துவங்குவோம்.

இதோ கால்பந்து (FOOT BALL) அளவில் ஒரு உலகப் பந்தை தம் இரு கைகளாலும் ஒருவர் பிடித்திருக்கிறார். அப் பந்துக்கு கீழிலிருந்து அதன் மீது நீங்கள் ஒரு பென் டார்ச் (Pen Torch) அடிக்கிறீர்கள். இப்போது அப்பந்தின் டார்ச்சை நோக்கியிருக்கும் அரைவட்டம் வெளிச்சமாகவும், அதற்கு மறு பக்கம் இருக்கும் அரை வட்டம் இருட்டாகவும் இருக்கிறது.

இப்போது வெளிச்சப் பகுதி பகல் என்றும், இருட்டுப் பகுதி இரவென்றும் வைத்துக் கொள்வோம். திருமறை கூறுவதைப்போல் இரவால் பகலை மறைத்துப் பகலை நாம் இரவாக மற்ற வேண்டும். இதற்காக இப்போது என்ன செய்யலாம்?

இரவை நகர்த்திப் பகல் இருந்த இடத்திற்குக் கொண்டு வர வேண்டும்!. அதை எப்படிச் செய்வது? டார்ச்சை மெதுவாக நகர்த்திப் பார்ப்போமா?. இதோ நீங்கள் டார்ச்சை நகர்த்துகிறீர்கள். உடனே வெளிச்சப் பகுதி அது இருந்த அரை வட்டப் பகுதியிலிருந்து டார்ச் நகரும் திசையில் நகர்ந்து விடுகிறது.(மேல் காணும் படம் உதாரணம்).

வெளிச்சம் நகர்ந்து விட்ட பிறகு அந்த வெளிச்சத்தை எப்படி இருட்டால் மறைப்பது?. சூரியனே பூமியைச் சுற்றி நகர்ந்தால் பூமியின் மீதுள்ள பகலும் நகர்ந்து விடுகிறது. எனவே பகலே விலகி ஒடுவதால் அந்த இடத்தில் இல்லாத பகலை எப்படி மறைக்க முடியும்?.

பெரிய சிக்கலைச் சந்தித்து விட்டோமே!. திருமறையோ சிந்திக்கும் மனிதர்களுக்கு இதில் சான்றுகள் இருப்பதாகக் கூறுகிறது. நாம் சிந்திக்கத் துவங்கிய உடன் நமது சோதனை திருமறைக்கு முரண்பட்டு நிற்பதை உணர்கிறோம். இதை எப்படித்தான் தீர்ப்பது?. என்ன நண்பரே! ஏதேனும் புலப்படுகிறதா?.

புலப்படுகிறது! அதாவது இறைவசனத்திற்கும், முந்தைய கட்டுரையில் கண்ட ('சூரிய ஒளியை) மறைக்கும்போது (வரும்) இரவின்மீது சத்தியமாக' (அல்-குர்ஆன் 91:4) என்ற வசனத்திற்கும் பொருள் கொண்டவாறு பொருள் கொண்டால் சிக்கலே இல்லை.

எப்படி? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்!.

அதாவது சூரிய ஒளிக்கு முன்னாலுள்ள பூகோளத்தின் பகல் பகுதி அதற்கு எதிர்புறம் உள்ள பகுதியை சூரிய ஒளி படாமல் மறைப்பதால் அங்கு இரவு ஏற்படுகிறது என அந்த வசனத்திற்குப் பொருள் கொண்டோமே! அவ்வாறு இதற்கும் பொருள் கொண்டால் சூரியனுக்கு முன்னால் பகல் ஏற்படுவதற்காக அதற்கு எதிர்புறம் உள்ள இரவு மறைத்திருக்கிறது என இந்த வசனத்திற்கும் பொருள் கொள்ள வேண்டியது தானே?. ஆகவே இந்தச் சோதனையில் தவறு ஏதும் இல்லை என எடுத்துக் கொள்ளலாமே?.

?! என்ன கூறுகிறீர்கள் நண்பரே! பகலாக இருக்கும் பகுதிக்குப் பின்னால் இரவு இருப்பதே இரவால் பகலை மறைக்கிறான் எனும் வசனத்திற்குரிய விளக்கமாகுமா?. அப்படிப் பார்த்தால் பகலுக்கும் பின் பக்கம் உள்ள இரவு மறைப்பதால்தான் பகல் ஏற்படுகிறதா?. ஏன் இப்படிக் குழப்பிப் போகிறீர்கள்?

'சூரிய ஒளியைப் பிரதி பலிக்கும்போது பகல்: சூரிய ஒளியை மறைக்கும்போது இரவு' எனப் பொருள் கொண்ட வசனங்கள் 'இரவு' மற்றும் 'பகல்' என்பதன் அமைப்பை விளக்குவது விலக்கணம் (Definition). ஆனால் 'இரவால் பகலை மறைக்கிறான்' எனும் வசனம் அந்த இராப்பகல் அமைப்பை ஏற்படுத்துவதற்காக நடைபெறும் இயக்கத்தைக் கூறும் வசனம். எனவே அமைப்பும், இயக்கமும் வெவ்வேறு விஷயங்கள் என்பதால் அவ்விரண்டும் கூறும் விஷயங்களும் வெவ்றானவை. எனவே நமது சோதனையில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க உருப்படியான யோசனை ஏதேனும் கூறுங்கள். சிந்தித்தால் சான்றுகள் கிடைக்கும் எனத் திருமறையே உத்திரவாதம் தருகிறது.

அப்படிப் பார்த்தால், அதாவது உங்களுடைய திருமறையின் கூற்றுப்படி பகலை இரவுதான் மறைக்க வேண்டுமாயின், அதற்காக இரவு நகர்ந்தே ஆக வேண்டும். இரவை நகர்த்த வேண்டுமென்றால் நாம் பென்டார்ச்சை நகர்த்தியாக வேண்டும். ஆனால் பென்டார்ச்சை நகர்த்தினால் உடனே டார்ச்சோடு சேர்ந்து வெளிச்சமும் (பகல்) ஓடிவிடுவதால் இல்லாத வெளிச்சத்தை (பகலை) எப்படி மறைப்பது என்று கேட்கிறீர்கள். எனவே இப்போது டார்ச்சை நகர்த்தாமல் நிறுத்தி விடலாம் என்று கருதினால் உடனே நகர வேண்டிய இரவு நகராமல் நின்று விடுகிறது.

நாம் கண்ட சோதனையில் இரவு நகர வேண்டுமானால், பகல் நகர்ந்தாக வேண்டும். எனவே ஒன்றின் நகர்வு இரண்டையும் நகர்த்துகிறது. திருமறை கூறியவாறு பகலை, இரவு மறைக்க வேண்டுமானால், பகல் நகராமல் இருக்க, இரவு நகர்ந்து அதனை மறைக்க வேண்டும்!. ஆனால் இரவைத் தனியாக நகர்த்த முடியாது.

ஆம்! திருமறையின் வசனம் மெய்ப்பிக்கப் பட வேண்டுமென்றால் மெய்யாகவே அற்புதம்தான் நிகழ்ந்தாக வேண்டியுள்ளது. பூகோளத்தில் இரவும், பகலும் நகராதிருக்கும் நிலையிலேயே அவை நகர(?) வேண்டியுள்ளது.

சிந்திக்கும்படி கட்டளையிட்ட இத்திருமறையின் ஆசிரியனே! நீயின்றிச் சிந்தனையை ஒளிரச் செய்பவன் யார்?.

சூரியன் பூகோளத்தைச் சுற்றி வருவதாகக் கொண்டு நடத்தப்பட்ட சோதனையைக் கொஞ்ச நேரம் மறந்து விட்டுத் திருமறையின் வசனத்தைச் சிந்திப்போம். ஏனென்றால் அச்சோதனை திருமறை கூறும் இராப்பகல் மாற்ற இயக்கத்தோடு முரண்படுகிறது. இச்சோதனையை மறந்துவிட்டுச் சிந்தித்தால் ஒன்றையொன்று மறைப்பதற்காக நடைபெறும் இயக்கமே இராப்பகல் மாற்றம் எனத் தெரிகிறது. இதில் மறையும் பொருள் பகல் என்றும், மறைக்கும் பொருள் இரவு என்றும் தெரிகிறது.

பகலை இரவு மறைக்க வேண்டுமென்றால் அதற்காக இயங்க வேண்டியது எது?. பகலைத் தேடி வந்து இரவு மறைக்கலாம். அல்லது இரவைத் தேடிப்போய் அதற்குள் பகல் மறையலாம்.

எப்படிப் பார்த்தாலும் ஒன்று நகர்ந்தால் மற்றொன்று நகரக் கூடாது என்ற பதிலே இப்போதும் கிடைக்கிறது. அதோடு ஒன்றை நகராமல் நிறுத்தினால் இரண்டுமே நகராமல் நின்றுவிடும் என்பதை நாம் புறக்கணிக்க முடியவில்லை!.

எனவே இரவும் பகலும் நகராமல் இருக்கும் நிலையிலேயே அவைகளை நகர்த்துவதற்கு(?) ஏதேனும் வழியுண்டா?. டார்ச்சைப் பிடித்துக் கொண்டு வெறுமனே நின்றிருந்தால் எப்படி?. சிந்தியுங்கள் நண்பரே!.

சிந்திக்கலாமா?. சிந்தனைதான் சிறந்த செல்வமாயிற்றே!. ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரண்டு விஷயங்கள் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டுமானால் அதற்காக இரண்டு பொருட்கள் வேண்டும். ஆனால் இராப்பகல் இயக்கத்தில் பங்கேற்க சூரியனைத் தவிர வேறு எதைத் தேடுவது?.

இரண்டு பொருட்கள்..?..! ஆம்!. இரண்டு பொருட்கள்தாம் இருக்கின்றனவே! ஒன்று சூரியன் என்றால், மற்றொன்று பூமி!.

பூமியா?. பூமியை எப்படி இராப்பகல் இயக்கத்தில் இணைக்க முடியும்?. அதுபாட்டுக்கு அசையாமல் நின்று கொண்டிருக்கும் ஒரு பொருள்தானே!?.

அப்படியெல்லாம் அதைச் சும்மா அசையாமல் நிற்கவைத்து வேடிக்கைப் பார்த்தால் திருமறை வசனத்திற்கு அறிவியல் நிரூபணம் கிடைக்காமல் போய்விடும். எனவே நான் இதோ பந்தை பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் டார்ச்சிலிருந்து வரும் ஒளியை அதன்மீது பாய்ச்சுங்கள்.

இப்போது நீங்கள் டார்சசிலிருந்து வரும் ஒளியை அதன்மீது பாய்ச்சுகிறீர்கள். பந்தின் ஒரு பகுதியில் ஒளி வட்டமும் மறு பகுதியில் இருள் வட்டமும் கிடைக்கிறது. நீங்கள் டார்ச்சிலிருந்து வரும் ஒளியை நகர்த்தாதவரை இப்பந்தின் மீது படரும் வெளிச்சமும், இருட்டும் நகரப் போவதில்லை. எனவே டார்ச்சை நகராமல் பிடித்துக் கொள்ளுங்கள். இதோ இப்போது நான் மெதுவாகப் பந்தைச் சுழற்றுகிறேன். என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தீர்களா?.

ஆம்! அற்புதமான காட்சி! பந்தைச் சூழ்ந்திருக்கும் வெளியிடங்களில் இருட்டும் வெளிச்சமும் நகரவில்லை. ஆனால் பந்தின் மீது மட்டும் அவை நகர்கின்றன. அற்புதம்தான்!.

எதை அற்புதம் என்று கூறுகிறீர்கள் நண்பரே?. உங்கள் முன்னால் என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அதில் ஒரு பகுதியைத்தான் நீங்கள் கவனித்திருக்கிறீர்கள். ஆனால் மறு பகுதியையும் கவனித்தால் அதை வர்ணிக்க நீங்கள் வார்த்தைகள் தேட வேண்டியிருக்கும்!.

புரியவில்லையா?. பந்தின் மீது மட்டும் இருட்டும், வெளிச்சமும் நகர்வதாக கூறினீர்களே! எங்கே நகர்கிறது காட்டுங்கள்!.

இதோ!..ஆமாம்!. பந்தின் மீது கூட அவை நகரவேயில்லை. பந்து மட்டுமே நகர்கிறது! ஆ..! இதென்ன விந்தை?. இருட்டும் சரி: வெளிச்சமும் சரி: அவை இருக்கும் இடத்தைவிட்டுப் பந்தின் மீதும் அதற்கு வெளியிலும் நகராமல் கட்டுண்டு நிற்கின்றன. அதே சமயம் பந்தின் மீது நகரவும் செய்கின்றன.

ஒரே சமயத்தில் ஒரே பந்தின் மீது இருட்டும் வெளிச்சமும் நகராமல் இருக்கும்போதே அவை நகர்கின்றன!. இப்படிக் கூடவா இருக்க முடியும்?. ஆனால் இருக்கிறதே..!..!

என்ன நண்பரே! திகைத்து நிற்கிறீர்கள்?. இரவும் பகலும் இந்த பூகோளத்தின் மீது நகராமலேயே நகர்ந்து கொண்டிருப்பதன் இரகசியம் என்னவென்று புரிகிறதா?. இந்த அற்புதக் காட்சியைத்தானே நாம் ஆய்வு செய்த திருவசனம் உள்ளடக்கி நிற்கிறது?. ஆனால் உங்கள் கண்களுக்கு அது முரண்பாடாகத் தெரிந்தது. திருமறை என்ன கூறியதோ அதுவே இப்போது செய்முறைச் சோதனையாக உங்கள் கண்முன் வந்து நின்றதும் பேச்சிழந்து நிற்கிறீர்கள்!
தன்னுடைய வாய்மையை நிரூபிக்கும் பொருட்டு இப்படிப்பட்ட அறிவியல் பேருண்மைகளைத் தனது சாட்சிகளாக நிறுத்தியிருக்கும் ஒரு அற்புத வேதத்தையா மானிடர்களில் பலர் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றனர்?. அறியாமையல்லவா இது?.

சூரியனை நகராமல் நிறுத்தினால்தான் பூகோளத்தின் ஒரு பக்கம் பகலும், மறுபக்கம் இரவும் நிலை பெற்றிருக்கும். இப்படி நிலை பெற்றுவிட்ட இராப்பகலுக்குள் பூகோளம் சுழல்வதால்தான் பகல் மறைந்து இரவாக மாறுகிறது. அதைப்போல் இரவாக இருந்த பூமி சுழன்று போய்ப் பகலுக்குள் புகுந்து, பகல் மறைந்து இரவாக மாறுகிறது.

இராப்பகலின் இந்த இயக்கத்தை இப்படிக் கூடக் கூறலாம். அதாவது இராப்பகல் இயக்கம் என்பதே பகலுக்குள் இரவு புகுவதாலும், இரவுக்குள் பகல் புகுவதாலும் ஏற்படும் நிகழ்ச்சியே என்று.

..!அப்படிக் கூறினால் நீங்கள் கூறும் நிகழ்ச்சி, சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் ஏற்படாதா?.

எப்படி ஏற்பட முடியும்?. சூரியன் பூகோளத்தைச் சுற்றி வந்தால் பகல் நகர்ந்த இடத்தில் இரவு இடம் பிடிக்கும்: இரவு நகர்ந்த இடத்தில் பகல் இடம் பிடிக்கும். ஆனால் பகலுக்குள் இரவு புக வேண்டுமானால் பகல் நகராதிருக்க வேண்டும். அப்போதுதான் அதற்குள் இரவால் புகமுடியும். அதைப்போல் இரவு நகராதிருந்தால்தான் பகலால் இரவுக்குள் புக முடியும். எனவே இந்தக் கோணத்திலும் ஒரே நேரத்தில் பகலும், இரவும் நகரவும் வேண்டும். நகராதிருக்கவும் வேண்டும்(?).அப்போதுதான்..

இரவுக்குள் பகல் புகுத்தப்படும். அதைப்போல் பகலுக்குள் இரவும் புகுத்தப்படும். ஆனால் நிச்சயமாக இந்த நிலை சூரியன் பூகோளத்தைச் சுற்றி வந்தால் ஏற்படவே ஏற்படாது! அதில் எப்படி ஐயம் ஏற்பட முடியும்?.

நமது மற்றொரு ஆய்வைத் தாங்கள் மிக எளிதாக்கி விட்டீர்கள். இராப்பகல் மாற்றத்திற்காக நடைபெறும் நிகழ்ச்சியை எடுத்துரைக்க இத்திருமறை கூறிக் கொண்டிருக்கும் மற்றொரு அறிவியல் சான்றே அதுதான். திருமறை கூறுகிறது:

'நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான். பகலை இரவில் புகுத்துகிறான். சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான் என்பதை நீர் பார்க்கவில்லையா?..' (அருள்மறை குர்ஆனின் 31வது அத்தியாயம் ஸுரத்துல் லுக்மானின் 29வது வசனம், 22வது அத்தியாயம் ஸுரத்துல் ஹஜ்ஜின் 61வது வசனம், 35வது அத்தியாயம் ஸுரத்துல் ஃபா(த்)திரின் 13வது வசனம், 57வது அத்தியாயம் ஸுரத்துல் ஹதீத் - ன் 6வது வசனம்)

பார்த்தீர்களா?. நமது சோதனையில் கண்ட அந்தக் கண் கொள்ளாக் காட்சியை, இன்று நீங்கள் அணுகிய அதே கோணத்தில் 1400 வருடங்களுக்கு முன்பே இந்த சத்தியத் திருமறை அணுகி சூரியன் பூமியைச் சுற்றவில்லை: மாறாகப் பூகோளமே சுழன்று வந்து இராப்பகல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று தெள்ளத் தெளிவாகக் கூறி நிற்கும் அற்புதத்தை! இதற்கு மேலுமா இந்தத் தூய வேதம் இறைவனுடைய வசனங்கள்தாமா என ஐயங்கொள்ள முடியும்?.

இதற்கு மேலும் தயங்கி நிற்பவர்களைத் தெளிவடையச் செய்து கொண்டிருக்கும் மற்றும் ஓர் அறிவியல் சான்றைத் திருமறைக் குர்ஆன் கூறிக் கொண்டிருக்கும் பாங்கினைப் பாருங்கள்.

'அவன் பகலின் மீது இரவைச் சுருட்டுகிறான்: இரவின் மீது பகலைச் சுருட்டுகிறான்..'(அருள்மறை குர்ஆனின் 39வது அத்தியாயம் ஸுரத்துஜ் ஜுமரின் 5வது வசனம்).

இவ்வசனம் இரவையும், பகலையும் இருவிதத் திரைகளாக பார்க்கிறது. இவ்விரு திரைகளும் சுருள்வதால்தான் இராப்பகல் மாற்றங்கள் நடைபெறுகின்றன என்பது இந்த வசனங்களின் கருத்து. இவ்வசனம் கூறுவதைப் போன்று இராப்பகல் திரைகள் சுருள வேண்டுமாயின் அதற்காக நடைபெறவேண்டிய நிகழ்ச்சி என்ன சூரியன் பூகோளத்தைச் சுற்றி வர வேண்டுமா? அல்லது பூகோளம் தன்னைத்தான் சுற்றிக் கொள்ள வேண்டுமா?.

முதலாவதாக இவ்வசனம் கூறிக் கொண்டிருக்கும் 'சுருளுதல்' என்ற சொல்லையே ஓர் ஆய்விற்கு உட்படுத்துவோம்.

எந்த ஒரு பொருளும், அது சுருள வேண்டுமாயின் அதைச் சுருட்டும் பொருளாக மற்றொன்று இருக்க வேண்டும். இதில் சுருளும் பொருளாக (இரவையும் பகலையும்) பூகோளம் அளிக்கிறது எனில் சுருட்டும் பொருளை சூரியனே அளித்தாக வேண்டும் என்பது தெளிவு. ஏனெனில் இராப்பகல் மாற்றத்தில் இவ்விரண்டுக்கும் மட்டுமே பங்குண்டு. சூரியனுடைய பங்களிப்பு இதில் ஒளியின் மூலமாகச் செயல்படுவதேயன்றி வேறில்லை. எனவே சுருளும் இராப்பகல்களை சுருட்டிக் கொண்டிருப்பது சூரிய ஒளியே.

அடுத்தபடியாக, சுருளும் செயலுக்குரிய சாத்தியக் கூறுகளைப் பார்ப்போம்.

'சுருளுதல்' எனும் செயல் நடைபெற வேண்டுமாயின் அதற்கென குறைந்த பட்சம் இரண்டு பொருட்கள் இருக்க வேண்டும் எனக் கண்டோம். அத்துடன் அவ்விரண்டும் இன்றியமையாத இரண்டு விதிகளையும் பெற்றிருக்க வேண்டும்.

முதலாவதாக அவ்விரண்டு பொருட்களுமோ, அல்லது அவற்றுள் ஏதேனும் ஒன்றோ நகர்ந்தாக வேண்டும். அடுத்தபடியாக அவற்றின் நகர்வு எதிரும் புதிருமாக ஒன்றையொன்று சந்திக்கும் விதத்தில் நகர வேண்டும். அல்லது அவற்றுள் ஒன்று மட்டும் நகர்கிறது என்றால் நகராத பொருள் நிலைத்திருக்க அதைச் சந்திக்கும் விதத்தில் நகரும் பொருள் அதற்கு எதிராக நகர வேண்டும்.

இதைப் போன்று 'சுருளுதல்' எனும் செயல் நடைபெறாத நிலைகளும் உண்டு. எந்த இரு பொருட்களும் நகராது நின்று விட்டால் அவை ஒன்றையொன்று சுருட்டாது. அதைப்போல் ஒன்றைப் பின்பற்றி மற்றொன்று சம வேகத்தில் செல்லும் எந்த இரு பொருட்களும் ஒன்றையொன்று சுருட்டாது.

இப்போது சூரியன் பூகோளத்தைச் சுற்றி வருவதாக வைத்துக் கொள்ளுங்கள். அதாவது சூரியன் சுற்றிவந்தால் இராப்பகல்கள் சுருட்டப்படும் நிகழ்ச்சிகள் நடைபெற முடியுமா?.

சூரியன் நகர்வதால் பூகோளத்தின் மீது படும் அதனுடைய ஒளி பூகோளத்தின் மீதும் (அதற்கு வெளியிலும்) நகர்கிறது. ஒளி நகர்வதால் அந்த ஒளியைப் பின்பற்றி இருட்டும் நகர்கிறது. ஒளி என்ன வேகத்தில் நகர்கிறதோ அதே வேகத்தில் ஒளியைப் பின்பற்றி இருட்டும் நகர்கிறது. எனவே சூரியன் பூகோளத்தைச் சுற்றி வந்தால் ஒளியும், இருட்டும் ஒன்றைப் பின்பற்றி மற்றொன்று சம வேகத்தில் நகர்வதால் அவ்விரண்டும் ஒன்றையொன்று சுருட்டாது.

எனவே சூரியன் பூகோளத்தைச் சுற்றி வருவதாக் கொண்டால் அது திருமறைக்கு முரண்படுகிறது. அதாவது திருமறையின் ஆசிரியனாம் அகிலங்களின் இரட்சகனாகிய மிக்க மேலான அல்லாஹ்வுக்கு சூரியக் குடும்பம் பணியவில்லை எனக் கொள்வதற்கு ஒப்பாகும். ஆனால் அண்ட சராசரங்களும் அவனுக்கே பணிந்து கிடக்கும் பேருண்மைக்கு அறிவும், அறிவியலும் வலிய வலிய சான்றளித்துக் கொண்டிருப்பதால் சூரியக் குடும்பத்தின் இயக்கம் அவனுடைய கூற்றை மெய்ப்பிக்கும் விதத்தில்தான் அமைந்தாக வேண்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

எனவே பூகோளம் சுழல்கிறது என்று எடுத்துக் கொண்டால் நிலை என்ன?.

முன் கட்டுரையில் கண்டவாறு பூகோளத்தின் ஒரு பக்கம் பகலும், மறுபக்கம் இரவும் நிலைத்து விடுவதால் அவ்விரண்டையும் பிரித்துக்காட்டும் உதய மற்றும் அஸ்தமன எல்லைகள் கிடைக்கும். அந்த எல்லைக்குள் பூகோளம் எல்லையின்றிச் சுழன்று கொண்டிருப்பதால் ஒவ்வொரு கணமும் பூகோளத்தின் மீதுள்ள இரவுப் பகுதி சுழன்று வந்து நிலைபெற்று நிற்கும் பகல் பகுதியின் துவக்கக் கோட்டின்(உதய எல்லை) மீது மோதுகின்றன. மோதிய பிறகும் பூகோளம் தொடர்ந்து நகர்ந்து (சுழன்று) கொண்டிருப்பதால் அந்தப் பகலின் மீது இரவு சுருட்டப்படுகின்றது.

லேத்துப் பட்டறைகளில் கடையப்படும் உலோகங்களிலிருந்து சுருண்டு வரும் பிசிறைப் போல், உருளும் பூகோளத்தின் இருட்டுத் திரை பகலின் மீது சுருள்கிறது.

அதைப் போன்று பூகோளத்தின் சுழற்சியின் காரணமாக அதன் மீதுள்ள பகல் பகுதி சுழன்று வந்து நகராமல் நிலைபெற்று நிற்கும் இரவுப் பகுதியின் துவக்கக் கோட்டின் (அஸ்தமன எல்லை) மீது மோதி அதனுடைய வெளிச்சத்திரை இரவின் மீது சுருள்கிறது.

அற்புதமன்றோ இது!. சூரியன் பூகோளத்தைச் சுற்றி வந்தால் இந்த அரிய வர்ணணைக்கு ஆதாரம் கிடைத்திருக்குமா?.

சூரியக் குடும்பத்தின் இயக்கத்தையே!..அல்லது இயற்கை என்று கூறுகிறார்களே அதுவே ஆயினும் சரி!.. இலக்கிய நயத்துடன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் வாயிலாக நேர்முக வர்ணணை செய்து கொண்டிருக்கும் இப்படிப்பட்ட ஓர் ஒப்பற்ற கலைக் களஞ்சியத்தையா பகுத்தறிவுடையோர் புறக்கணிக்க முடியும்?.

மெய்யாகவே இவை இறைவனுடைய வார்த்தைகள் அல்ல என்று மறுப்பவர்கள், நேர்மையாளர்களாக இருந்தால் இதைப்போன்ற வேறு ஒரு அற்புதத்தை அவர்கள் காட்ட வேண்டும்!.

யார் காட்டுவார்கள்?.

சூரியன் பூமியைச் சுற்றவில்லை. மாறாகப் பூகோளமே தன்னைத்தான் சுற்றி இராப்பகல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது எனும் அறிவியல் பேருண்மை அறிவியல் உலகில் தியாக வரலாற்றைப் படைத்திருக்கிறது. 17ஆம் நூற்றாண்டில் அன்று வாழ்ந்த சிலர் பொய்யர்களாக செயல்பட்டு இந்த அரிய அறிவியலை அழித்தொழிக்கத் துடித்தனர். எதிர்காலத்தையும் அறிந்த இறைவன் இராப்பகல் இயக்கத்திற்குரிய ஆதாரங்களை மேலும் மேலும் கொட்டி வைத்திருக்கிறான் இத்தூய மறையில். அவைகளை இன்ஷா அல்லாஹ் அடுத்தக் கட்டுரையில் காண்போம்.

(வளரும் இன்ஷா அல்லாஹ்)
---------------------------
வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் முந்தைய பகுதிகள்.
பேரண்டப் படைப்பின் துவக்கம் -1

வாழத் தகுந்த கோள்-2

ஓசோன் -3

விண்ணகத்தின் பரப்பெல்லை -4

பேரண்டத்தின் ஈர்ப்பு விசை -5

விண்ணடுக்குகள் -6

உருண்ட பூமி -7

சுழலும் பூமி(1) -8

சுழலும் பூமி(2) -9

6 comments:

ravi srinivas said...
This comment has been removed by a blog administrator.
ravi srinivas said...

பூமிதான் சூரியனைச் சுற்றுக்கிறது என்ற கருத்து முகமது நபி பிறப்பதற்கு முன்பே விவாதிக்கப்பட்ட ஒன்று. நவீன அறிவியல் இதை விளக்குகிறது, அதற்கு கடவுள் என்ற கருத்து தேவையில்லை. ஆர்யபட்டரும் இதைக் குறித்து எழுதியிருக்கிறார், பண்டைய கிரேக்க சான்றுகளும் உள்ளன.முதலில் அறிவியல் கருத்துக்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளுங்கள். நபி பிறக்கும் முன்னரே பல நாடுகளில் கணிதமும்,வானியலும் பெரும் வளர்ச்சிப் பெற்றிருந்தன.

அபூ முஹை said...

ரவி சிரீனிவாஸ்

பூமி சூரியனைச் சுற்றுகிறது என முதன் முதலாக திருக்குர்ஆன்தான் கூறியது என்று கட்டுரையாளர் எந்த இடத்திலும் சொல்லவில்லை. மாறாக இதே சிந்தனை கிரேக்கர்களிடமும் தோன்றியது என்றும் எழுதத் தவறவில்லை.

பார்க்க:
http://abumuhai.blogspot.com/2005/08/8.html

நல்லடியார் said...

//நவீன அறிவியல் இதை விளக்குகிறது, அதற்கு கடவுள் என்ற கருத்து தேவையில்லை//

நவீன அறிவியல் என்று நீங்கள் சொல்வது என்ன திடீரென்று தோன்றியதா? பல்வேறு காலகட்டங்களில் இருந்த கருத்துக்களை ஒருங்கிணைத்து அதற்கு ஒரு தியரியை சொல்வதுதான் நவீன அறிவியல்.

அபூமுஹை சொல்வது, அன்றைய காலகட்டத்தில் எழுதப்படிக்கத் தெரிந்திராத முஹம்மது சொன்னவை அமானுட அறிவு கொடுக்கப்படாதவரால் யூகித்து சொல்லி இருக்க முடியாது என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொண்டால் குழப்பமில்லை. இராகு,எமகண்டம் என்று வானவியலை மூடநம்பிக்கைக்கு சாதகமா திரித்த வேதங்களைவிட குர்ஆன் மனிதன் சிந்திக்க எவ்வளவு தெளிவாக சொல்கிறது என ஒப்புக் கொள்ள மறுப்பது காழ்புணர்வு அன்றி வேறென்ன?

//நபி பிறக்கும் முன்னரே பல நாடுகளில் கணிதமும்,வானியலும் பெரும் வளர்ச்சிப் பெற்றிருந்தன.//

நபிகள்தான் இவற்றை கண்டு பிடித்தார் என்று சொல்லி இருந்தால் நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்கலாம். உங்கள் வாதம் உண்மையாக இருப்பின் நபிகளுக்குப் பின்னரும் ஐரோப்பாவின் இருண்ட காலமாக 7-11 நூற்றாண்டுகள் இருந்திருக்காது.

ரவி ஷ்ரினீவாஸ்,

பண்டைய வேதங்களில் சொல்லப் பட்டவதை விட தெளிவாக தற்கால உண்மைகள் அடிக்கோடிடப் பட்டிருக்கின்றன என்பதற்கே குர்ஆனை மேற்கோள் காட்டி எழுதுகிறோம். அது எப்படி பழம் பெருமை பேசுவதாகும்?

அப்படிப்பார்க்கப் போனால் நீங்கள் சொல்லும் நவீன அறிவியலில் பெரும்பாலானாவை பழமையிலிருந்து உருவானவைதான்.

புவியீர்ப்பு விசையை கண்டறிந்து சொன்னவர் ஐசக் நியூட்டன் என்கிறோம். அப்படியென்றால் அதற்கு முன் புவியீர்ப்பு விசை இல்லை என்றா எடுத்துக் கொள்வோம்? அல்லது பழைய கருத்து என்று ஒதுக்கி விடுவோமா? இல்லையே? அதுமாதிரிதான் குர்ஆன்-அறிவியல் ஒப்பீடுகள். ஒரு கருத்துப் பரிமாற்றமே.

அறிவியலை நம்பினால் கடவுளை நம்பக் கூடாது என்று யார் சார் சொன்னது? அறிவியல் என்ன நாத்திகர்கள் கண்டுபிடித்ததா? அறிவியல் மனித அறிவுக்கு உட்பட்டதை மட்டும்தான் சொல்லும், ஆனால் மதம் அதற்கும் அப்பாற்பட்டதையும் சொல்லும். இந்த வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

ravi srinivas said...

பூமிதான் சூரியனைக் சுற்றுகிறது என்ற கருத்தின் முழுமையான வரலாற்றைக் கட்டுரையாசிரியர் குறிப்பிடவில்லை. நான் கூற வந்தது மிகவும் அடிப்படையான ஒன்று அறிவியல் இவற்றையும், இன்னும் பலவற்றையும் கடவுள் என்ற கருத்தின் துணையின்றி மிகத் தெளிவாக விளக்குகிறது. இங்கு குரானின் சில வாசகங்களை வைத்துக்கொண்டு அறிவியல் சாயம் பூச முயல்கிறீர்கள். இப்படி புனித நூல்களுக்கும் அறிவியலுக்கும் முடிச்சுப் போடுவது புதிதல்ல. அறிவியலுக்கு கடவுள் தேவையில்லை, உங்களுக்குத் தேவை. அறிவியலின் வளர்ச்சி எதையும் கேள்விக்குட்படுத்தவதிலும், சான்றுகளைக் கோருவதில், பரிசோதனைகள், நிரூபணங்கள் போன்றவற்றைச் சார்ந்து இருக்கிறது. ஒரு சமயம் குரான் ஒரு அறிவியல் நூல் அல்ல என்பீர்கள். ஆனால் அதில் கூறப்பட்டவற்றிற்கு அறிவியல் முலாம் பூசி மதப்பிரச்சாரம் செய்வீர்கள். இந்த முரண்பாட்டினை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அறிவியல் இறைவனைத் துணைக்கு அழைக்கவில்லை. உங்களுக்கு இறை நம்பிக்கைத்தான் ஆதாரமான நம்பிக்கை. குரானை நம்புங்கள், ஆனால் அறிவியல் இதே விஷயங்களை விளக்க கடவுளை முன்னிறுத்துவதில்லை என்பதை உணர்ந்தால் உங்களுடைய வாதம் வலுவற்றது என்பதைப்
புரிந்து கொள்வீர்கள். இந்து மதம் இஸ்லாம் குறித்து ஒப்பிடும் முன் இந்தியாவில் அறிவியல் ,கணிதத்தின் வரலாறு குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

நல்லடியார் said...

அறிவியல் என்று இன்று நாம் அறிபவை அன்றைய மத நம்பிக்கையாக மட்டுமே இருந்தன. பெளதீக அறிவியலையும் உயிரி அறிவியலையும் குழப்பிக் கொள்கிறீர்கள். பெளதீகம் (Physics) மாற்றங்களுக்கு உட்பட்டது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

Micro Scope கொண்டு கடவுளைக் காணமுடியாது. உலகின்,பிரபஞ்சத்தின் படைப்புகளில் பொதிந்துள்ளவற்றை அறிவியல் துணை கொண்டு மதங்களை உரசிப்பார்ப்பதில்தான் உண்மையான அறிவியல் இருக்கிறது.

//இங்கு குரானின் சில வாசகங்களை வைத்துக்கொண்டு அறிவியல் சாயம் பூச முயல்கிறீர்கள். இப்படி புனித நூல்களுக்கும் அறிவியலுக்கும் முடிச்சுப் போடுவது புதிதல்ல.//

அன்றைய காலகட்டத்தில் எழுதப்படிக்கத் தெரிந்திராத முஹம்மது சொன்னவை அமானுட அறிவு கொடுக்கப்படாதவரால் யூகித்து சொல்லி இருக்க முடியாது என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொண்டால் குழப்பமில்லை என்று சொன்னதை நீங்கள் கவனிக்கவில்லை. முடிந்தால் நீங்களும் உங்கள் வேதம்/கொள்கை கொண்டு விளக்க முயற்சியுங்களேன். இதிலென்ன தவறு கண்டீர்?

//அறிவியலின் வளர்ச்சி எதையும் கேள்விக்குட்படுத்தவதிலும், சான்றுகளைக் கோருவதில், பரிசோதனைகள், நிரூபணங்கள் போன்றவற்றைச் சார்ந்து இருக்கிறது.//

அதைத்தான் குர்ஆனும் 17:41 இன்னும் அவர்கள் (சிந்தித்துப்) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக(ப் பல்வேறு) விளக்கங்களைக் கூறியுள்ளோம். எனினும், (இவை யாவும்) அவர்களுக்கு (உண்மையிலிருந்து) வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை!

37:155 நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா?

39:27 இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்.
திரும்ப திரும்ப சொல்கிறது.

//ஒரு சமயம் குரான் ஒரு அறிவியல் நூல் அல்ல என்பீர்கள். ஆனால் அதில் கூறப்பட்டவற்றிற்கு அறிவியல் முலாம் பூசி மதப்பிரச்சாரம் செய்வீர்கள். இந்த முரண்பாட்டினை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.//

இதில் என்ன முரன்பாட்டைக் கண்டீர்கள்? குர்ஆன் அறிவியல் நூல் என்றால் இன்று உலகின் விஞ்ஞானிகளில் முஸ்லிம்களின் விகிதாச்சார அளவிற்காவது இருப்பார்கள். யாரும் அப்படி சொல்லவில்லை. நாங்கள் சொல்வதெல்லாம் குர்ஆன் மனிதனால் எழுதப்பட்டதல்ல என்பதே. இதை நீங்கள்தான் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்.

//இந்து மதம் இஸ்லாம் குறித்து ஒப்பிடும் முன் இந்தியாவில் அறிவியல் ,கணிதத்தின் வரலாறு குறித்து அறிந்து கொள்ளுங்கள். //

ஐயா நாங்களும் இந்தியர்கள்தான். ஆரியபட்டர் இல்லை என்றோ அல்லது சுஸ்ருதா புராணம் பொய் என்று சொல்லவில்லை. அதேபோல் குர்ஆனிலும் "சில" தற்கால உண்மைகள் உள்ளன என்பதைத்தான் சொல்கிறோம்.

அது என்னமோ தெரியவில்லை குர்ஆனில் தீவிரவாதம் உள்ளது என்று ஆதாரமின்றி சொன்னால் நம்பக் கூடியவர்களால், அறிவியல் இருக்கிறது என ஆதரத்துடன் சொன்னால் நம்ப முடியவில்லை.

Belief consists in accepting the affirmations of the soul; Unbelief, in denying them. -Ralph Waldo Emerson