Tuesday, October 11, 2005

இஸ்லாம் வழங்கும் இறைத்தூது -1

(இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கிய கோட்பாடுகளில் ஒன்று இறைத்தூதர்களை ஏற்று அவர்கள் வாழ்ந்த வழியில் நாமும் வாழ்வதாகும். இஸ்லாம் அல்லாத இதர மதங்களில் இறைவன் புறத்திலிருந்து செய்திகளை கொண்டு வரும் இறைத்தூதர்கள் பற்றிய உண்மை நிலைகள் கண்டறியப்படவே இல்லை. ஆனால் இஸ்லாம் தனது கொள்கையின் அஸ்திவாரங்களில் ஒன்றாக இறைத்தூதர்களையும் அவர்களை அறிந்து கொள்வதின் அறிவு நிலையையும் ஆக்கியுள்ளது. அந்த தூதுத்துவத்தின் நிலைப்பாடு என்ன? அது உலகில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன? அதை ஏற்காமல் போனால் ஏற்படும் விளைவுகள் என்ன? இறுதித் தூதராக வந்த முஹம்மத் அவர்களின் பணியின் எல்லைகள் என்ன? இது போன்ற வினாக்களுக்கு அறிவார்ந்த - தர்க்க ரீதியாக விளக்கமளிக்கிறது இந்தக் கட்டுரை. மறைந்த நல்லறிஞர் அபுல் அஃலா அவர்களின் இக்கட்டுரையின் வழியாக உங்கள் அறிவுக்கு தூது விடுவதில் மகிழ்கிறோம்.)

அனைவரும் அறிவுறுத்திய ஒரே நெறி.

(1) துவக்கத்திலேயே ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்தி விடுவது அவசியமெனக் கருதுகிறேன். அதாவது மனித வரலாற்றில் முதன் முறையாக முஹம்மது (ஸல்) அவர்களால் வழங்கப் பட்ட வாழ்க்கை நெறி (தீன்) இஸ்லாம் என்பதும் இக்கருத்தின் அடிப்படையில் அவர்கள்தாம் இஸ்லாத்தை நிர்மானித்தார் என்று கூறுவதும் சரியான கருத்தாகாது.

இறைவனுக்கு மனிதன் முழுமையாக அடிபணிதல் எனும் ஒரே நெறியினைத்தான் தொடக்க காலத்திலிருந்து மனித இனத்துக்கு இறைவன் தொடர்ந்து முறையாக வழங்கினான் என்ற உண்மையை இறைமறை தெளிவாகவும் விரிவாகவும் வலியுறுத்திக் கூறுகிறது இந்நெறியினையே அரபி மொழியில் இஸ்லாம் எனக்கூறப்படுகிறது நூஹ் (அலை) இப்றாஹீம் (அலை) மூஸா (அலை) ஈஸா (அலை) ஆகியோரும் இன்னும் பல இறைத்தூதர்களும் பல்வேறு காலங்களில் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப் பட்டார்கள்!

அவர்கள் எல்லோரும் எடுத்துரைத்தது அந்த ஒரே நெறியினைத்தான் அதை விடுத்து வேறு எந்த நெறியினையும் அவர்களில் எவரும் சுயமாக வழங்கியதில்லை. எனவே அத்தூதர்கள்தாம் அந்நெறியினை வழங்கியவர்கள் எனக் கருதுவதும் அக்கொள்கைக்கு கிறிஸ்தவம் மோஸஸ்த்துவம் எனப்பெயரிடுவதும் சரியானதல்ல. அவர்கள் ஒவ்வொருவரும் தமக்கு முன் வந்த இறைத்தூதர்கள் வழங்கிய நெறியினை தம்முடைய காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு தெளிவுபடுத்திப் போதிக்க வந்தவர்கள்தாம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பம்சங்கள்.

(2) அவ்வாறிருந்தும் ஏனைய நபிமார்களை விட முஹம்மது(ஸல்)அவர்களின் பணியில் பல சிறப்பம்சங்களை காணலாம் அவை பின்வருமாறு:

(அ) அவர்கள் இறைவனின் இறுதித்தூதர் ஆவார்கள்.

(ஆ) எல்லா இறைத்தூதர்களும் அறிவுறுத்திய அதே நெறியைத்தான் பெருமானார்(ஸல்) அவர்களின் மூலமாக இறைவன் மீண்டும் புதுப்பித்தான்.

(இ) பல்வேறு காலங்களிலும் வாழ்ந்த மக்கள் இடைச்செருகல் செய்தும் சுயக்கருத்துக்களைப் புகுத்தியும் மூலக்கொள்கையில் கறைபடுத்தி விட்டனர் இதனால் அது பல்வேறு மதங்களாக உருவெடுத்தது. மூல நெறியான இஸ்லாத்தைக் கறைபடுத்திய இந்த பிற்சேர்க்கைகள் யாவற்றையும் களைந்து அதனைத் தூய்மையான மூலவடிவில் மனித குலத்துக்கு வழங்க இறைவன் முஹம்மது(ஸல்) அவர்களை அனுப்பினான்.

(ஈ) முஹம்மது(ஸல்) அவர்களுக்குப் பின்பு எந்த நபியும் அனுப்பப் படமாட்டார்கள் என்பதால் அவர்களுக்கு வழங்கப் பட்ட இறைவேதம் எல்லாக் காலத்திற்கும் நின்று வழிகாட்டும் வண்ணம் வார்த்தைக்கு வார்த்தை அதன் மூலமொழியில் பாதுகாக்கப் பட்டுள்ளது. எக்காலத்திலும் மனிதன் அதன் மூலம் அறிவுறை பெறலாம். முஹம்மது(ஸல்) அவர்கள் மூலம் இறைவன் அளித்த அல்குர்ஆன் அன்று முதல் இன்று வரை எவ்வித்ததிலும் ஓர் எழுத்துக்கூட மாற்றமின்றி அப்படியே இருக்கின்றது எனும் உண்மையில் சந்தேகத்துக்கு அறவே இடமில்லை.

குர்ஆன் வசனங்கள்(வஹியாக) அறிவிக்கப் பட்டவுடன் நபி(ஸல்) அவர்கள் அதை எழுத வைத்து விடுவார்கள். இப்பணி அவர்களுடைய இறுதிமூச்சுவரை நீடித்தது. இவ்வாறு நபி(ஸல்) அவர்களின் வாழ் நாளிலேயே தோழர்களில் சிலர் குர்ஆன் முழுவதையுமோ அதன் பகுதியையோ எழுதி வைத்திருந்தார்கள். பிறகு முதல் கலீஃபாவான அபூபக்கர்(ரலி) அவர்கள் எழுதி வைக்கப்பட்டிருந்த அச்சுவடிகளை சேகரித்து குர்ஆனை மனனம் செய்திருந்த ஹாபிஸ்களின் உதவியுடன் அவற்றை சரிபார்த்து ஆதாரப்பூர்வமான முழுக் குர்ஆனையும் தொகுக்கச் செய்தார்கள்; பிறகு மூன்றாம் கேந்திரங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அன்று முதல் இன்றுவரையுள்ள பதிப்புகளை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் அச்சடிக்கப்பட்ட குர்ஆன் பிரதிகளை ஆராய்ந்தால் அவற்றின் எந்தவொரு பிரதியிலும் எவ்வித மாற்றமும் இல்லாதிருப்பதைக் காணலாம்.

இதைத் தவிர பெருமானார்(ஸல்) அவர்கள், தொழுகைக் கடமையாக்கப்பட்ட நாளன்றே தொழுகையில் குர்ஆன் வசனங்களை ஓதவேண்டும் எனும் உத்தரவைப் பிறப்பித்து விட்டிருந்தார்கள். ஆகவே நபித்தோழர் பலர் முழுக் குர்ஆனையோ அதன் சில பகுதிகளையோ நபி(ஸல்) அவர்கள் வாழ்நாளிலேயே மனனம் செய்திருந்தனர்;. எனவே அக்காலம் முதல் இன்று வரை ரமளான் மாத இரவுத்தொழுகையில் முழுக் குர்ஆனையும் மனனம் செய்து ஓதும் பழக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது.

அகவே வார்த்தைக்கு வார்த்தை குர்ஆன் முழுமையையும் மனனம் செய்திருந்தோர் (ஹபிஸ்கள்) ஆயிரக்கணக்கில் ஒவ்வொரு காலத்திலும் இருந்து வருகின்றனர். இவ்வாறு வேறு எந்த வேதமும் ஏடுகளில் பொறிக்கப்பட்டும். உள்ளங்களில் பதிக்கப்பட்டும். இருக்கவில்லை எனவே குர்ஆன் சிறிதளவும் மாற்றப்படாமல் அதன் அசல் வடிவத்தில் இன்றளவும் பாதுகாக்கப்படடிருக்கிது. என்பதில் இம்மியளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

(உ) மேலும் நபி(ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லும் செயலும் அவர்களுடைய தோழர்களாலும் அவர்களுக்குப் பின்னால் வரலாற்று ஆசிரியர்களாலும் நிகரற்ற முறையில் பதியப்பட்டு பாதுகாக்கப்பட்டன இவ்வளவு நுணுக்கமாக வேறு எந்த ஒரு நபியின் சரிதமோ ஒரு சரித்திர நாயகரின் வரலாறோ யாராலும் பதிக்கப் படவில்லை;. நபி(ஸல்) அவர்களின் காலத்திற்குப்பின் இது நபி(ஸல்) அவர்களின் சொல் அல்லது செயல் அல்லது அங்கீகாரம் என்று ஒருவர் கூறினால் அதனை அவர் எவரிடமிருந்து கேட்டறிந்தார் என்ற விபரத்தைக் கட்டாயமாக சொல்ல வேண்டியிருந்தது.

இவ்வாறே எந்த ஒரு சம்பவத்தை எடுத்துக் கொண்டாலும் இவ்விபரத் தொடர்ச்சி நபி(ஸல்) அவர்களிடம் நேரில் கண்டவர் அல்லது நேரில் கேட்டவர் வரை சென்று முடியும். பின்னர் அதனைக் கூறிய ஒவ்வொருவரின் உண்மை நிலை விரிவாக ஆராயப்படும். அவர் முழுமையான நம்பிக்கைக்கு உரியவர்தானா என்று தீர்மானிக்கப்படும். இத்தீர்மானத்தின் அடிப்படையில்தான் அது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் என்றே ஏற்றுக்கொள்ளப்படும். இம்முறையில் தான் நபி(ஸல்) அவர்களின் அறிவுறைகள் (ஹதீஸ்கள்) தொகுக்கப்பட்டன. அவற்றை அறிவித்தவர்களின் வரலாறும் எழுதப்பட்டன. இத்தகைய உன்னத முறையில் தயாரிக்கப்பட்ட நபி(ஸல்) அவர்களின் வரலாறுதான் நம்மிடையே உள்ளது. இத்தகைய ஆதாரப்பூர்வமான தொகுப்புகளிலிருந்து அண்ணல் நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள். அவர்களுடைய சொல் செயல் அங்கீகாரம் எப்படியிருந்தன என்பதனையும் அவர்கள் அளித்த அறிவுறைகள் எவையெவை என்பதனையும் நாம் இன்று தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

(ஊ) இவ்வாறு பாதுகாக்கப்பட்ட குர்ஆனும் நபி(ஸல்) அவர்களுடைய சொல் செயல் அங்கீகாரமும் ஒருங்கிணைந்த இணையாக்கம்தான் இறைவன் மனிதனுக்கு வகுத்துத் தந்த அசல் நெறியான இஸ்லாம் என்பது எது, அது நமக்கு எத்தகைய வழிகாட்டுதலை வழங்குகிறது, அது நம்மீது சுமத்துகின்ற கடமைகள் யாவை என்பனவற்றையெல்லாம் அறிந்து கொள்வதற்கு நம்பத்தக்க அறிவின் ஊற்றாய் அமைந்துள்ளது.

முஹம்மது நபி(ஸல்) அவர்களே வழிகாட்டி.

(3) முஸ்லிம்கள் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன் சென்று போன நபிமார்கள், அவர்கள் குர்ஆனில் குறிப்பிடப்பட்டவர்களாகயிருந்தாலும், குறிப்பிடப்படாதவர்களாகயிருந்தாலும் சரியே அவர்கள் அனைவரின் மீதும் நம்பிக்கை கொண்டேயாக வேண்டும். இது நமது நம்பிக்கையோடு (ஈமானோடு) பின்னிப் பிணைந்த ஓர் அம்சமாகும். இதனைக் கைவிட நேர்ந்தால் நாம் முஸ்லிம்கள் என்னும் தகுதியை இழந்தவர்களாவோம் ஆனால் வழி காட்டுதல் பெறுவதற்கு முஹம்மது(ஸல்) அவர்களை மட்டும் ஏன் பின்பற்றவேண்டும் என்பதற்குப் பின்வரும் காரணங்களே அடிப்படையாகும்:

(அ) அவர்கள் இறைவன் அனுப்பிய இறைத்தூதர்களுள் இறுதியாக வந்தமையால் இறைவனின் இறுதியான சட்டதிட்டங்களைக் கொண்டு வந்தார்கள்.

(ஆ) முஹம்மது(ஸல்) அவர்களின் மூலமாக நமக்கு எட்டிய இறைமொழி தூய்மையானதாகும் மனிதர்களால் கறைப்படுத்தப்படாமல் அதன் மூலவடிவில் அப்படியே பாதுகாக்கப்பட்டதுமாகும். மேலும் அது உயிருள்ள வாழும் மொழியாகும். கோடிக்கணக்கான மக்கள் பேசி, எழுதி புரிந்து கொள்ளும் மொழியாகும். அதன் இலக்கணமும் சொல் வளமும் மரபமைப்பும் உச்சரிப்பும் எழுத்துவடிவமும் அது வெளிப்பட்ட நாளிலிருந்து இதுநாள்வரை எவ்வித மாற்றத்திற்கும் உள்ளாகவில்லை.

(இ) நான் முன்பே குறிப்பிட்டபடி முஹம்மது(ஸல்) அவர்களின் குணம் நடத்தை வாக்கு செயல் ஆகிய வாழ்வின் அனைத்து அம்சங்களும் முழுமையான வரலாறாக பதிவு செய்யப்பட்டு அதிகக் கவனுத்துடனும் சிறப்பான முறையிலும் பாதுகாக்கப்பட்டுள்ளன.

மேற்சொன்ன அம்சங்களை ஏனைய நபிமார்களின் வரலாற்றில் காண முடியாது எனவேதான் நாம் அவர்களின் மீது நம்பிக்கை வைக்கிறோம் ஆனால் செயல் ரீதியாக பின்பற்ற முடிவதில்லை.

(வளரும்)

No comments: