மாட்டுத் தீவனம் ஊழல், நிலக்கரி ஊழல் என போர் ஆயுதங்கள் வாங்குவதிலும் போபர்ஸ் ஊழல், ஆயுதப்பேர ஊழல் எனவும் நடந்தேறியுள்ளது. சரி,
தனி மனிதக்கும் தன்னுயிர் தற்காப்புக்காக ஆயுதங்கள் தேவைப்படுகிறது. முக்கியப் புள்ளிகளாக இருந்தால் ஆயுதம் தாங்கிய வீரர்களை அவருக்குப் பாதுகாப்பாக வழங்கப்படுகிறது. முக்கியப் புள்ளிகளின் குடும்பத்தினக்கும் ஆயுதம் தாங்கியவர்கள் பாதுகாப்புக்காக நிற்கின்றனர். நீதியை நிலைநாட்டும் நீதிபதி, மக்கள் தொண்டாற்றும் அதிகாரி, என நாட்டுக்கு பாதுகாப்பு வழங்கும் ராணுவ அதிகாரிக்கும் பாதுகாப்புத் தேவையாக உள்ளது என்றால், எதிரிகளை அச்சமடைய செய்வவும், எதிரிகள் திடீர் தாக்குதல் நடத்தினால் எதிர் தாக்குதல் தொடுப்பதற்கும் அல்லாமல், அது வன்முறை - பயங்கரவாத செயலோ அல்ல.
போர்க் கருவிகளில் அபாயம் நிறைந்த நவீனங்கள் வரவில், அணுவை ஆயுதமாக்கும் தொடக்கம் அப்பாவித்தனமாகத் தொடங்கி, அணுகுண்டு தயாரிக்கும் ஆய்வுக்காக 200 கோடி டாலர்கள் செலவு செய்து அதைச் சோதிக்க ஹிரோஷிமாவும், நாகசாகியும் தேவைப்படுகிறதென்றால் ''இதோ பார், என்னிடம் பலம் வாய்ந்த ஆயுதங்கள் உள்ளன'' என்று எல்ரோரையும் அச்சமடைய செய்வதற்கல்லாமல் வேறு எதற்கு!
ஈனோலாகே என்று சொல்லப்பட்ட வல்லரசு விமானம் உலக வரலாற்றில் முதன் முறையாக 1945,ஆகஸ்ட் 6ம் நாளில் ஹிரோஷிமா நகரில் தன் சோதனையை வீசியதில் 1,40000 மக்கள் பலியானார்கள். மீண்டும் 1945, ஆகஸ்ட் 9ம் நாளில் நாகாசாகியில் அணுகுண்டு வீசியதில் 75,000 மக்கள் பலியானார்கள்.
உலக நாடுகள் அதிர்ந்தன, அச்சமடைந்தன. இன்றும் வீராப்புப் பேசினாலும் வல்லரசின் போர் ஆயுதங்களுக்கு அச்சம் விலகிடவில்லை.
விஷயத்துக்கு வருவோம்,
மேலைநாட்டு குறும்படத் தயாரிப்பளார் கீட் வைல்டெர்ஸ் என்பவர் தயாரித்து வெளியிட்ட பிட்னா எனும் குறும்படத்தை குறித்து ஒரு கீழை நாட்டவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்,
//டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கீட் வைல்டெர்ஷ் என்பவர் த்யாரித்த குறும்படமே இன்று உலகில் பிட்னா என்ற வார்த்தையை உலகளவில் பிரபலமாக்கியுள்ளது. கிட்டதட்ட பதினைந்து நிமிடங்களே ஓடும் இந்தப் படத்தில் இஸ்லாம் வன்முறையைத் தூண்டும் குரான் வசனங்களும் உலகளாவிய இஸ்லாம் பயங்கரவாதம் குறித்த காட்சிகளையும் காண்பிக்கின்றனர். அந்த படத்தில் வரும் குரான் வசனங்களை தமிழில் கீழே கொடுத்துள்ளேன். இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கை அல்லா அல்ல வன்முறையே என்பதை இந்த படம் எனக்கு உணர்த்தியது. இந்த பிட்னா படத்தின் விடீயோ லின்க்கையும் கீழே கொடுத்துள்ளேன்://
பதினைந்து நிமிடங்கள் காட்சித்தரும் குறும்படம் தாயாரித்து இஸ்லாம் வன்முறை மார்க்கம் என்பதை ஒரு மேலை நாட்டவர் உணர்த்தி விட்டார். பதினைந்து நிமிடங்கள் காட்சியளிக்கும் ஒரு குறும்படத்தைப்பார்த்து இஸ்லாம் வன்முறை மார்க்கம் என்பதை ஒரு கீழை நாட்டவர் உணர்ந்து கொண்டார்.
இஸ்லாம் வன்முறை, பயங்கரவாத மார்க்கம் என்பதற்கு இவர்கள் எடுத்து வைக்கும் திருக்குர்ஆன் வசனங்களில் ஒன்று:
அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம். அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்) அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான். அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்க பூரணமாகவே வழங்கப்படும் (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (திருக்குர்ஆன், 008:060)
இஸ்லாம் - முஸ்லிம்களின் எதிரிகள் மக்காவில் இருந்தனர். மதீனாவில் முஸ்லிம்கள் இருந்தனர். மக்காவுக்கும், மதீனாவுக்கும் இடையே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவு உள்ளன. இன்று ஆகாய மார்க்கமாக ஒரு மணி நேரம். தரை மார்க்கமாக பேரூந்தில் சுமார் ஐந்து மணி நேரம். ஆனால், அன்று மக்காவுக்கும் மதீனாவுக்கு இடையே சுமார் பத்து நாட்கள் பயணமாக இருந்தது.
இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற வெறியோடு படைகளைத் திரட்டிக்கொண்டு மதீனாவை நோக்கிப் புறப்பட்டனர். இதை அறிந்த முஸ்லிம்கள், எதிரிகளை ஊருக்குள் நுழைவதைத் தவிர்க்க, மதீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்று, மக்கா நோக்கிச் செல்லும் பாதையில் சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவிலிருந்த பத்ர் எனுமிடத்தில் எதிரிகளைச் சந்தித்தனர். இஸ்லாத்தின் எதிரிகள் இந்தப் போரில் தோல்வியைத்தழுவினர். முஸ்லிம்கள் வெற்றிப்பெற்றனர். (நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்த காலத்தில் நடந்த முதல் போர்)
இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறோம் என்றால் முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் அவர்களை உண்டு, இல்லை என ஆக்கிவிட வேண்டும் என்பதில் இஸ்லாத்தின் எதிரிகள் குறியாக இருந்தனர். ஆள் பலம், ஆயுதபலம், போர் வாகனங்கள், பொருள் பலமும் எதிரிகளிடம் வலுவாக இருந்தன. முஸ்லிம்கள் பலவீனமாக இருந்தார்கள்.
எதிரிகள் அச்சமடையவும், அவர்களை யுத்தத்தில் சந்திப்பதற்காகவும், முஸ்லிம்கள் தங்களைப் பலபடுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் குறித்து திருக்குர்ஆன், 008:060ம் வசனம் பேசுகிறது. இது தனி மனிதனுக்கோ அல்லது குழுவிற்கோ சொல்லப்பட்டதல்ல.
இரண்டாவது அகபா உடன்படிக்கை வரலாறு அறிந்தவர்களுக்கு விளங்கும், மதீனாவில் இஸ்லாத்தை ஏற்ற அன்ஸாரிகள், நபி (ஸல்) அவர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையே அகபா ஒப்பந்தம்.
அகபா உடன்படிக்கையின் மூலம் நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு அழைப்பு விடுத்து, அங்கு இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யலாம், இதனால் எதிரிகளின் தாக்குதலில் இருந்து எங்கள் உயிரைக் கொடுத்தாவது நபி (ஸல்) அவர்களைக் காப்பாற்றுவோம். என அன்ஸாரிகள் உடன்படிக்கை செய்து, நபியவர்களை மதீனாவுக்கு அழைத்தார்கள். நபி (ஸல்) அவர்களும் அவ்வழைப்பை ஏற்று மதீனா சென்றார்கள். இதன் பிறகு நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் துவங்கியது.
நபி (ஸல்) அவர்களும், அன்ஸாரிகளும் செய்துகொண்ட இரண்டாவது அகபா உடன்படிக்கையை குறைஷித் தலைவர்கள் அறிந்து ஆத்திரமடைந்தனர். நபி (ஸல்) அவர்களுக்கு உதவியதன் மூலம் குறைஷியற்கு அன்ஸாரிகள் எதிரியானார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்தடைந்த போது, மதீனாவாசிகள் நபியவர்களைத் தலைமையாக ஏற்றுக்கொண்டனர். தனது தலைமை பறிபோனதே என அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூல் என்பவன் உறவாடிக் கெடுக்க, வஞ்சனையுடன் இஸ்லாத்திற்குள்ளிருந்தே இஸ்லாத்தின் எதிரியாகச் செயல்பட்டான். இவனுக்கு ஆதரவு அளிக்கவும் வேறு சில எதிரிகள் இருந்தனர். இவ்வாறு பல வழிகளிலும் அறிந்தும், அறியாமலும் எதிரிகள் இருந்தனர். அவர்களை அச்சமடையச் செய்யவும், அவர்கள் போரிட்டால் எதிர்த்துப் போர் செய்யவும் ஆயுதங்களையும், போர் வாகனங்களையும் தயார்படுத்திக் கொள்ளுங்கள். என ஆட்சியாளருக்குச் சொல்லப்படுகிறது.
''அல்லாஹ்வின் எதிரிகளையும்.
உங்கள் எதிரிகளையும்.
அவர்கள் அல்லாத மற்றவர்களையும்.
நீங்கள் அச்சமடையச் செய்யலாம். அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள் அல்லாஹ்வே அறிவான்'' என்று இந்த 008:060 வசனம் கூறுகிறது.
மக்காவிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது மட்டுமல்லாமல், வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் தீர்த்துக்கட்டும் வெறியுடன் போர்த் திட்டங்களை வகுத்த எதிரிகளின் அபாயத்திலிருந்து, இஸ்லாமிய அரசு நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்காக போர் ஆயுதங்களைத் தயாரிப்பது - சேமிப்பது வன்முறை - பயங்கரவாதம் என்றால், நாட்டின் பாதுகாப்பிற்காக போர் ஆயுதங்களை வைத்திருக்கும் அத்தனை நாடுகளும், வன்முறை - பயங்கரவாத நாடுகள் என்று முத்திரைக் குத்திவிடலாம்.
போர், வன்முறை இவ்விரண்டுக்கும் வித்தியாசத்தை உணர முடியாத அளவுக்கு இவர்களிடம் இஸ்லாமிய வெறுப்பு மிஞ்சியுள்ளது.
ஃபித்னா என்றால் வன்முறை - பயங்கரவாதம் என்பதற்கு குறும்படத்தில் சொல்லிய இன்னும் மற்ற திருக்குர்ஆன் வசனங்களையும் அடுத்துப் பார்ப்போம் நன்றி!
முந்தைய விளக்கம்: ஃபித்னா என்றால் என்ன?
அன்புடன்,
அபூ முஹை