Showing posts with label காபா. Show all posts
Showing posts with label காபா. Show all posts

Saturday, September 01, 2007

காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? பகுதி-3

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் புதுப்பித்துக் கட்டிய காபா ஆலயம், பலவீனமாக இருந்ததால் குறைஷியர் அதை இடித்துவிட்டுப் புதுப்பித்துக் கட்டினார்கள். நபித்துவ வாழ்வுக்கு முன், காபாவைப் புதுப்பித்துக் கட்டும் அறப்பணியில் நபி (ஸல்) அவர்களும் கலந்து கொண்டு கல் சுமந்திருக்கிறார்கள். குறைஷியர் காபாவைக் கட்டும்போது பொருளாதார நெருக்கடியினால் காபாவைச் சுருக்கி விட்டனர். பார்க்க: முதல் படம்.



"நான் காபா ஆலயத்தில் நுழைந்து அதில் தொழ விருப்பம் கொண்டிருந்தேன், அப்போது நபி (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து ஹிஜ்ருக்குள் என்னை நுழையச் செய்து ஆலயத்தின் உள்ளே நுழைய நீ விரும்பினால் இங்கே தொழுவாயாக! ஏனெனில் இதுவும் ஆலயத்தின் ஒரு பகுதியாகும். எனினும் உனது கூட்டத்தினர் காபாவைக் கட்டியபோது அதைச் சுருக்கி விட்டனர். மேலும் இந்த இடத்தை ஆலயத்தை விட்டும் அப்புறப்படுத்தி விட்டனர்" என்று கூறினார்கள். (திர்மிதீ, நஸயீ)

இந்த செய்தியை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மாஷா அல்லாஹ், இதை இறைவன் இந்த சமுதாயத்துக்கு வழங்கிய மாபெரும் அருள் என்றே சொல்ல வேண்டும்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் சரியான அடித்தளத்திலிருந்து (002:127) உயர்த்திப் புதுப்பித்துக்கட்டிய காபா நான்கு மூலைகளைக் கொண்டதாக இருக்கவில்லை. இரு யமனிய மூலைகள் (ருக்னைன் யமானீயன்) என்று சொல்லப்படும் வடகிழக்கு, தென் கிழக்கு ஆகிய இரு மூலைகளை மட்டும் கொண்டதாக இருந்தது. இப்போது இருக்கும் காபாவுக்கு வடக்கே உள்ள ஷாமியா மூலைகள் (ருக்னுஷ் ஷாமியா) இருக்கவில்லை. படம் 1ல் ஒட்டகத் திமில் போல் வளைந்து காணப்படும் 'ஹிஜ்ர்' அல்லது 'ஹத்தீம்' என்று அழைக்கப்படும் அரைவட்டப் பகுதியும் சேர்த்து காபா செவ்வையான வடிவத்தில் இருந்தது. குறைஷியர் காபாவைப் புதுப்பித்துக் கட்டியபோது பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஹத்தீம் பகுதியில் ஐந்து அல்லது ஆறு முழங்களைக் கொண்ட அரைவட்டப் பகுதியை அப்புறப்படுத்தி, சதுர வடிவத்தில் சுருக்கிக்கட்டி விட்டனர். ஆயினும், இன்றும் ஹிஜ்ர் அல்லது ஹத்தீம் என்று அழைக்கப்படும் அரைவட்டப் பகுதியும் காபாவைச் சேர்ந்த பகுதியே என்பதற்கு காபாவைத் தவாஃப் செய்பவர்கள் அந்த அரைவட்டப் பகுதியையும் சேர்த்தே சுற்றுகிறார்கள் என்பதிலிருந்து விளங்கலாம். மேலும் நபி (ஸல்) அவர்களும் அரைவட்டப் பகுதியும் காபாவைச் சார்ந்தது என்றே அங்கீகரித்திருக்கிறார்கள். இதற்கான ஆதாரங்கள் பல நபிவழித் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன.

இப்போது இருக்கும் சதுர வடிவான காபாவை, நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் புதுப்பித்துக் கட்டியிருந்தது போல் செவ்வக வடிவான அமைப்பில் கட்டுவதற்கும், காபாவுக்கு கிழக்கு, மேற்குமாக இரு வாயில்களை அமைக்கவும் நபி (ஸல்) அவர்கள் நாடியிருந்தார்கள். ஆனால் குறைஷியர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றிருந்ததால் அதை வெறுப்பார்கள் என்ற எண்ணத்தில் நபி (ஸல்) அவர்கள் அதைக் கைவிட்டார்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த அறிவிப்பை தமது சிறிய தாயார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாகச் செவியேற்றிருந்த அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் மறைவுக்குப்பின் ஹிஜ்ரி 64ம் ஆண்டில், நபி (ஸல்) அவர்கள் காபாவை எவ்வாறு கட்டுவதற்கு நாடியிருந்தார்களோ அதைப் போன்று ஹிஜ்ர், ஹத்தீம் என்ற அரைவட்டப் பகுதியையும் காபாவோடுச் சேர்த்துக் கட்டினார்கள், காபாவுக்குள் நுழைந்து வெளியேற மேற்கு, கிழக்கு என இரு வாயில்களையும் அமைத்தார்கள்.

அதற்கான காரணம்...

யஸீது பின் முஆவியா ஆட்சிக் காலத்தில் ஷாம்வாசிகள் (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக மக்காவை முற்றுகையிட்டு) போர் தொடுத்தபோது, இறையில்லம் காபா தீக்கிரையானது. அப்போது நடந்தவை நடந்து முடிந்தன. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் மக்கள் ஹஜ் பருவத்தில் ஒன்று கூடும்வரை இறையில்லத்தை அது நிலையிலையிலேயே விட்டு வைத்தார்கள். (பனூ உமய்யாக்களான) ஷாம்வாசிகளுக்கு எதிராக மக்களுக்கு எழுச்சியூட்டுவதற்ாகவே அல்லது அவர்களை ரோஷம் கொள்ளச் செய்வதற்காகவே அவ்வாறு விட்டு வைத்தார்கள். (ஹஜ்ஜை முடித்து) மக்கள் புறப்பட்டபோது அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், ''மக்களே காபா விஷயத்தில் எனக்கு ஆலோசனை கூறுங்கள். அதை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டுவதா அல்லது பழுதடைந்த பகுதியை மட்டும் செப்பனிடுவதா?'' என்று கேட்டார்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ''எனக்கு இது தொடர்பாக ஒரு யோசனை தோன்றுகிறது. அதில் பழுதடைந்த பகுதியை மட்டும் நீங்கள் செப்பனிடுங்கள். மக்கள் இஸ்லாத்தை ஏற்றபோதிருந்த அதே நிலையில் காபாவை விட்டுவிடுங்கள், மக்கள் இஸ்லாத்தை ஏற்றபோதும், நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பெற்றபோதும் இருந்த நிலையில் அதன் கற்களையும் (விட்டுவிடுங்கள்)'' என்றார்.

அதற்கு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், ''உங்களில் ஒருவரது இல்லம் தீக்கிரையானால் அதைப் புதுப்பிக்காத வரை அவரது மனம் திருப்தியடைவதில்லை. இந்நிலையில் இறையில்லத்தின் விஷயத்தில் மட்டும் எப்படி (நீங்கள் இவ்வாறு கூறுவீர்கள்)? நான் (காபாவை இடித்துப் புதுப்பிப்பதா, அல்லது பழுதடைந்ததைச் செப்பனிடுவதா எனும் விஷயத்தில்) என் இறைவனிடம் நன்முடிவு வேண்டி மூன்று முறை பிரார்த்திப்பேன். பிறகு ஒரு முடிவுக்கு வருவேன்'' என்றார். நன்முடிவு வேண்டி பிரார்த்தித்தபின், இடித்துவிட்டுப் புதுப்பிக்கும் முடிவுக்கு வந்தார்.

அப்போது மக்கள் முதலில் காபாவின் மீது ஏறும் மனிதர் மீது வானத்திலிருந்து ஏதேனும் வேதனை இறங்கிவிடும் என அச்சம் தெரிவித்தனர். இறுதியாக ஒரு மனிதர் காபாவின் மீதேறி அதிலிருந்து ஒரு கல்லைக் கீழே தள்ளினார். அவருக்கு எதுவும் நேராததைக் கண்ட மக்கள் ஒவ்வொருவராக (இடிக்கும் பணியில்) ஈடுபட்டு அதைத் தரைமட்டமாக்கினர். பின்னர் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கட்டுமானப்பணி நிறைவடையும்வரை (இறையில்லத்திற்குத் தற்காலிகத்) தூண்கள் அமைத்து அவற்றின் மீது திரையும் தொங்க விட்டார்கள்.

மேலும், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் ''என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உன்னுடைய சமுதாய) மக்கள் இறைமறுப்பிற்கு நெருக்கமான காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்றில்லையாயின் - என்னிடம் காபாவின் கட்டடத்தை வலுப்படுத்தக்கூடிய அளவு பொருளாதாரம் இல்லை என்பது (ஒருபுறம்) இருக்க - நான் 'ஹிஜ்ர்' பகுதியில் ஐந்து முழங்களை காபாவுடன் சேர்த்து விட்டிருப்பேன். பின்னர் மக்கள் நுழைவதற்கு ஒரு வாயிலும் வெளியேறுவதற்கு ஒரு வாயிலுமாக (இரு வாயில்களை) அதற்கு அமைத்திருப்பேன். என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

இன்று என்னிடம் பொருளாதாரமிருப்பதைக் காண்கிறேன். மக்களை அஞ்சும் நிலையிலும் நான் இல்லை'' என்று கூறி(விட்டு காபாவைப் புதுப்பிக்கலா)னார்கள்.

பின்னர் காபாவில் 'ஹிஜ்ர்' பகுதியில் ஐந்து முழங்களைக் கூடுதலாக்கினார்கள், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கவே (ஹிஜ்ர் பகுதியை அகழ்ந்து) ஓர் அடித்தளத்தை வெளியாக்கினார்கள். அதன் மீதே காபாவை எழுப்பினார்கள். (முடிவில்) காபாவின் உயரம் பதினெட்டு முழங்களாக இருந்தது. அதன் உயரத்தை அதிகமாக்கிய பின்பும் அது குறைவாகவே பட்டது. எனவே மேலும் பத்து முழங்கள் அதிகமாக்கினார்கள், அத்துடன் உள்ளே நுழைவதற்கும் ஒரு வாயில், வெளியேறுவதற்கு ஒரு வாயில் என இறையில்லத்திற்கு இரு வாயில்களை அமைத்தார்கள். (முஸ்லிம்)

குறைஷியர் சுருக்கிக் கட்டிய காபாவை - அன்று மக்காவின் ஆட்சியாளராக இருந்த அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் - இடித்து விட்டு விரிவுபடுத்தி புதுப்பித்துக் கட்டினார்கள். இப்னு ஸுபைர் கொலை செய்யப்பட்டபோது, ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் மக்காவின் ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார். கலீஃபா அப்துல் மலிக் பின் மர்வானுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதன் பிறகு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் காபாவை இடித்து விரிவாக்கிக் கட்டிய காபா, மீண்டும் ஹிஜ்ரி 74ல் இடிக்கப்பட்டு, குறைஷிகள் கட்டியது போல சுருக்கிக் கட்டப்படுகிறது.

ஹிஜ்ரி 74ல் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப்.

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் இந்த விவரங்களைத் தெரிவித்து (கலீஃபா) அப்துல் மலிக் பின் மர்வானுக்கு ஒரு கடிதம் வரைந்தார். அதில் ''அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் (ஹிஜ்ர் பகுதியை அகழ்ந்து அங்கிருந்த) ஓர் அடித்தளத்தின் மீது காபாவை எழுப்பியுள்ளார், அதை மக்காவின் நியாயவான்கள் பலரும் பார்த்துள்ளனர்'' என்றும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு அப்துல் மலிக் பின் மர்வான், ''நாம் இப்னு ஸுபைரை எந்த விஷயத்திலும் களங்கப்படுத்த விரும்பவில்லை, எனவே அவர் உயர்த்திக் கட்டியதை அப்படியே விட்டுவிடுவீராக! 'ஹிஜ்ர்' பகுதியிலிருந்து அவர் அதிகப்படுத்தியதை (மட்டும்) பழையபடியே மாற்றி அமைப்பீராக! அவர் புதிதாகத் திறந்துவிட்ட வாயிலை மூடிவிடுவீராக!'' என்று பதில் எழுதினார். எனவே, ஹஜ்ஜாஜ் ('ஹிஜ்ர்' பகுதிச் சுவரை) இடித்து முன்பிருந்த அமைப்பிற்கே மாற்றி அமைத்தார். (முஸ்லிம்)

பிறகு...

அப்துல் மலிக் மர்வான் ஆட்சிக் காலத்தில், அவரிடம் ஹாரிஸ் பின் அப்துல்லாஹ் பின் அபீரபீஆ (ரஹ்) அவர்கள் ஒரு தூதுக் குழுவில் சென்றார்கள். அப்போது அப்துல் மலிக் பின் மர்வான், ''அபூகுபைப் (இப்னுஸ் ஸுபைர்) ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து தாம் கேட்டதாகக் கூறும் செய்தியை, அவர் அவர்களிடமிருந்து கேட்டிருக்கமாட்டார் என்றே நான் எண்ணுகிறேன்'' என்றார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) அவர்கள், ''ஆம் (அபூகுபைப் உண்மையே சொல்கிறார்) இதை நானும் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளேன்'' என்றார். அதற்கு அப்துல் மலிக் பின் மர்வான் ''ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றதைக் கூறுங்கள்'' என்றார்.

அதற்கு ஹாரிஸ் (ரஹ்) கூறினார், ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள், என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''உன்னுடைய சமுதாயத்தார் இறையில்லம் காபாவின் கட்டடத்தைச் சுருக்கிவிட்டனர். அவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்றில்லையாயின், அவர்கள் விட்டுவிட்டதை நான் மறுபடியும் இணைத்துக் கட்டியிருப்பேன். எனக்குப் பின் உன் சமுதாயத்தாருக்கு அதை (விரிவாக்கிக்) கட்ட வேண்டுமென்ற எண்ணம் தோன்றினால் (அவ்வாறு செய்யட்டும்!) என் அருகில் வா! அவர்கள் விட்டுவிட்ட (இடத்)தை உனக்கு நான் காட்டுகிறேன்'' என்று கூறிவிட்டு, (காபா அருகில்) ஏழு முழங்கள் அளவிற்கு இடத்தை எனக்குக் காட்டினார்கள். (முஸ்லிம்)

பிறகு ஹாரிஸ் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்களிடம் அப்துல் மலிக் பின் மர்வான் ''ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?'' என்று கேட்டார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் ''ஆம்'' என்றார்கள். பிறகு அப்துல் மலிக் பின் மர்வான் தம்மிடமிருந்த குச்சியால் தரையைச் சிறிது நேரம் குத்திக் கீறி (யபடி ஆழ்ந்து யோசித்து) விட்டு, ''இறையில்லத்தையும் இப்னுஸ் ஸுபைர் மேற்கொண்டதையும் (அதே நிலையில்) விட்டிருக்க வேண்டுமென (இப்போது) விரும்புகிறேன்'' என்றார். (முஸ்லிம்)

இவ்வாறாக...

- நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் காபாவைப் புதுப்பித்துக் கட்டினார்கள்.

- பிறகு, குறைஷியர் காபாவை இடித்துவிட்டுப் புதுப்பித்துச் சுருக்கிக் கட்டினர்.

- பிறகு, ஹிஜ்ரி 64ல் மக்காவின் ஆட்சியாளாராக இருந்த அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் காபாவை இடித்துவிட்டு ஹத்தீமை காபாவோடு இணைத்து விரிவாக்கிக் கட்டினார்கள்.

- பிறகு, ஹிஜ்ரி 74ல் மக்காவின் ஆட்சியாளராக இருந்த ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப், விரிவாகக் கட்டப்பட்டிருந்த காபாவில் ஹத்தீம் எனும் அரைவட்டப் பகுதியை இடித்து நீக்கிவிட்டு குறைஷியர் கட்டியிருந்த அளவுக்குச் சுருக்கிக் கட்டினார்.

- இன்று இருக்கும் காபாவின் அமைப்பு, ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் கட்டியது. தற்போது புனித காபாவின் கட்டட அமைப்பு: சதுர வடிவம். இதற்குப்பின் மாற்றம் செய்வதை அறிஞர்கள் சிலர் விரும்பவில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக பின்வரும் நிகழ்ச்சியைக் கூறலாம்.

இறைநம்பிக்கையாளரின் தலைவர் ஹாரூன் அர்ரஷீத் அல்லது அவருடைய தந்தை மஹ்தீ, காபாவை இடித்துவிட்டு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் செய்த மாற்றத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் யோசனை கேட்டார். அதற்கு அவர்கள், ''இறைநம்பிக்கையாளரின் தலைவரே! இறையில்லம் காபாவை அரசர்களின் விளையாட்டுத் தலமாக ஆக்கி விடாதீர்கள். ஆளாளுக்கு அதை இடிக்க நினைப்பார்கள், இடித்தும் விடுவார்கள்'' என்று கூறினார்கள். எனவே ஹாரூன் அர்ரஷீத் அந்த முடிவைக் கைவிட்டார். (தஃப்ஸீர் இப்னு கஃதீர்)

காபா சிலமுறைகள் இடிக்கப்பட்டுக் கட்டப்பட்டிருந்தாலும் காபாவின் பழைய அஸ்திவாரத்திற்குள்ளேயே கட்டப்பட்டிருக்கிறது. பழைய அஸ்திவாரத்தை விட்டு வெளியே கட்டப்படவில்லை. குறைஷியர் காபாவைச் சுருக்கி விட்டனர் என்பது பழைய அஸ்திவாரத்திற்குள்ளேயே சுருக்கிக் கட்டினார்கள். மேலும் ஹத்தீம் என்ற வளைந்த பகுதியை அப்புறப்படுத்திச் சுருக்கிக் கட்டினார்கள். அதனால் காபா இடம் மாற்றிக் கட்டப்படவில்லை! காபாவுக்குள்ளேயே காபா சுருக்கப்பட்டது இடம் மாறி காட்டியதாக ஆகாது. இன்றும் காபாவை வலம் வருபவர்கள் ஹத்தீம் - வளைந்த அரைவட்டப் பகுதியையும் சேர்த்து சுற்றி வருகிறார்கள். பார்க்க: 2வது படம்.



மேலும்,

காபாவின் மேல் பகுதி முகடுகளைத் தாங்கி நிற்க காபாவின் உட்பகுதியில் மூன்று தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. பார்க்க: 3வது படம்.



இப்போது இருக்கும் தரையை விட்டு சற்று மேல் பகுதியில் அமைந்த காபாவின் நுழைவாயில் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கும் செய்தியில்,

நான் நபி(ஸல்) அவர்களிடம் கஅபாவின் அருகிலுள்ள ஒரு (வளைந்த சிறு) சுவரைப் பற்றி, 'இது காபாவில் சேர்ந்ததா?' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் 'ஆம்!'' என்றார்கள். பிறகு நான் 'எதற்காக அவர்கள் இதனை காபாவோடு இணைக்கவில்லை?' எனக் கேட்டேன். அதற்கவர்கள் 'உன்னுடைய சமூகத்தாருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தான்!'' என்று பதிலளித்தார்கள். நான் 'காபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதின் காரணம் என்ன?' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும் தங்களுக்கு வேண்டாதவர்களைத் தடுத்து விடுவதற்காகவுமே உன்னுடைய கூட்டத்தார் அவ்வாறு செய்தார்கள். 'உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயிருப்பதால், அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும்' என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் நான் இச்சுவரை காபாவினுள் இணைத்து அதன் கதவைத் கீழிறக்கி பூமியோடு சேர்ந்தால் போலாக்கியிருப்பேன்'' என்று பதிலளித்தார்கள். (புகாரி)

இன்றும் காபாவின் வாயில் கதவு தரையோடு இல்லாமல் சற்று உயரமான இடத்திலேயே அமைப்பட்டிருக்கிறது. காபாவின் நிர்வாகத்தினர் நாடினாலன்றி காபாவினுள் எவரும் செல்ல முடியாது. ஆனாலும் அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் காபாவினுள் நுழைந்து தொழ விரும்புபவர்கள் காபா புனித ஆலயத்தின் ஒரு பகுதியாகிய திறந்தவெளியாக இருக்கும் ஹத்தீம் எனும் அரைவட்டப் பகுதியில் நுழைந்து தொழுது கொள்ளலாம். இதுவும் காபாவைச் சேர்ந்ததுதான். மக்கள் ஹத்தீம் பகுதிக்குள் செல்வதை யாரும் தடுக்க மாட்டார்கள். இன்னும் இறுதி காலம்வரை, அல்லாஹ் நாடியவரை காபா இந்த நிலையிலேயே இருக்கும். (அல்லாஹ் மிக அறிந்தவன்)

(அல்குர்ஆன், மற்றும் ஹதீஸ் தொகுப்புகள், தப்ஸீர், திருக்குர்ஆனின் நிழலில் ஆகிய நூற்களிலிருந்து ஆதாரங்களைத் திரட்டி இத்தொடர் எழுதப்பட்டது.)

அன்புடன்,
அபூமுஹை

(தொடர் நிறைவடைந்தது)

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Monday, August 20, 2007

2. காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? பகுதி-2

ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2007

மக்காவில் அமைந்திருக்கும் காபாவை, உலக முஸ்லிம்கள் புனித ஆலயமாகத் தமது வணக்க வழிபாட்டை அதை நோக்கி அமைத்துக் கொள்கிறார்கள். காபா ஆலயத்தை வன்முறை நோக்கத்தோடு தாக்கி அழிப்பதற்கு எவரேனும் முயன்றால் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பதை திருக்குர்ஆன் 105வது அத்தியாயம் கூறுகிறது. அதற்கான வரலாற்று சான்றுகளை பகுதி- 1ல் காணலாம்.

மேலும்,

''ஒரு படை காபாவின் மீது படையெடுக்கும், அப்படையை பூமி விழுங்கிவிடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) காபாவை வன்முறையால் அழிக்கவருபவர்களை இறைவன் அழித்து விடுவான் என்பதை மேற்காணும் நபிமொழி உறுதிப்படுத்துகிறது. அப்படியானால் காபாவை எவராலும் இடித்து அழித்துவிட முடியாதா? என்றால் இஸ்லாம் அப்படிச் சொல்லவில்லை!

''அபிசீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் காபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

''(வெளிப்பக்கமாக) வளைந்த கால்களையுடைய, கருப்பு நிறத்தவர்கள் ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி காபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்று இருக்கிறது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

காபாவை இடித்து அழிக்க வருபவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று கூறும் இஸ்லாம், காபாவை வளைந்த, மெலிந்த கால்களையுடையர்கள் உடைத்து பாழ்படுத்தி விடுவார்கள் என்றும் கூறுகிறது. ஒரு காலகட்டம் வரை காபாவை எவராலும் அழிக்க முடியாது. ஒரு காலத்தில் காபாவை இடித்துப் பாழ்படுத்தி விடுவார்கள். முஸ்லிம்களாலும் அவர்களைத் தடுக்க இயலாமல் போகலாம். அப்போது காபாவை இடித்துப் பாழ்படுத்துபவர்களை இறைவனும் தடுக்கமாட்டான். (இது இறுதி நாளுக்கு நெருக்கமாக நடக்கும் நிகழ்வாக இருக்கலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்)

''யாஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும், உம்ராவும் செய்யப்படும்'' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

யாஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தாரின் வருகைக்குப் பிறகும் காபா ஆலயம் இருக்கும் என்பது நபியின் வாக்கு!

இஸ்ரேலியத்தனம்

காபா ஆலயத்தை சில தடவைகள் இடித்துவிட்டு மீண்டும் கட்டியிருக்கிறார்கள். அதனால் காபாவை இடிப்பதை அல்லாஹ் எந்த நேரமும் தடுத்துக்கொண்டிருக்க மாட்டான். என்று சிலர் புரியாமல் விளங்கி வைத்திருக்கிறார்கள். ஒன்றை இல்லாமல் அழித்து நாசப்படுத்துவதற்கும், அதையே அழகான முறையில் செப்பனிடுவதற்காக அகற்றி மீண்டும் கட்டுவதற்கும், எண்ணத்தாலும், செயலாலும் வேறுபாடுகள் இருக்கிறது.

வரலாற்றுக் காலங்களை குறிப்பிட்டு சொல்ல முடியாத மிகப் பழமையான காபா, ஆலயமான வடிவத்தை இழந்து, அடித்தளம் மட்டுமே எஞ்சியிருந்தது எனத் திருக்குர்ஆன், 002:127 வசனம் கூறுகிறது. அங்கு ஏற்கெனவே மனிதர்கள் வாழ்ந்து, பிறகு மக்கள் எவரும் அங்கு வசித்திருக்கவில்லை. காபா ஆலயம் பராமரிப்பு இல்லாத நிலையில் இயற்கையின் கால மாறுபாட்டால் சிதிலத்திற்குள்ளாகி ஆலயத்தின் கட்டிடம் தரைமட்டமாகியிருந்தது. (இந்த அழிவை இறைவன் ஏன் தடுக்கவில்லை? என்ற கேள்வியெழாமல் இருக்க) மனிதர்கள் வசிக்காத பிரதேசத்தில் ஆலயம் அவசியமில்லை. மேலும், காபா ஆலயம் புதுப்பித்துக் கட்டப்படும் காலத்தை இறைவனே நன்கு அறிந்தவன்.

ஒரிறைக் கொள்கைப் பிரச்சாரம் துவக்கப்பட்டு, இஸ்லாத்தில் தொழுகை கடமையாக்கப்பட்டது. முஸ்லிம்கள் தொழும் கிப்லா - முன்னோக்கும் திசை பைத்துல் மக்திஸை - மஸ்ஜித் அல்-அக்ஸாவை நோக்கி இருந்தது. அப்போது முஸ்லிம்களின் கிப்லா யூதர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இவ்வாறு பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் மக்திஸை முன்னோக்கியே, - இந்த உம்மத்தின் முதல் முஸ்லிமாகிய நபி (ஸல்) அவர்களும் மற்ற முஸ்லிம்களும் - தொழுது வந்தனர். இந்த கிப்லா மாற்றப்பட வேண்டும், முஸ்லிம்களின் தொழுகையின் கிப்லாவாக - முன்னோக்கும் திசையாக காபாவை நோக்கித் திருப்பப்பட வேண்டும் என்பதே அண்ணல் நபியவர்களின் விருப்பமாக இருந்தது, நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் இதற்காக அடிக்கடி பிரார்த்தனை செய்து கொண்டும், பணிந்து வேண்டிக்கொண்டும் இருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிராத்தனைக்கேற்ப கிப்லா மாற்றம் தொடர்பான இறையுத்தரவு வந்தது. இது இறவைனிடமிருந்து வந்த உண்மையாகும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க: அல்குர்ஆன், 002:144, 149, 150)

இந்தக் கிப்லா மாற்றம் நிகழ்ந்தபோது நயவஞ்சகமும், சந்தேகமும் கொண்ட சிலருக்கும், யூத இறைமறுப்பாளர்களுக்கும் ஐயமும், தடுமாற்றமும் ஏற்பட்டன. முஸ்லிம்களை நோக்கி, ''ஏற்கெனவே இருந்த அவர்களின் கிப்லாவிலிருந்து அவர்களைத் திருப்பியது எது?'' என்று கேட்பவர்களுக்கு பதிலடியாக:

மனிதர்களில் சில மதியீனர்கள், ''ஏற்கெனவே (முஸ்லிம்கள் முன்னோக்கித் தொழுதுகொண்டு) இருந்த அவர்களது 'கிப்லா' விலிருந்து (வேறு திசைக்கு) அவர்களைத் திருப்பியது எது?'' என்று கேட்பார்கள். ''கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான்'' என்று (நபியே) கூறுவீராக! (அல்குர்ஆன், 002:142) என்ற இறைவசனம் அருளப்பட்டது.

காபாவை முன்னோக்கி கிப்லா திருப்பப்பட்டதும், புனித இறையில்லமான காபாவைப் பற்றி இங்கு தொடங்கிய விஷமத்தனமான, யூதத்தன அவதூறு விமர்சனங்கள் இன்றும் இஸ்ரேலியத்தனமாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

குறைஷியர் காபாவைக் கட்டியது.

நபித்துவ வாழ்விற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புனித காபாவைக் குறைஷியர்கள் புதுப்பித்துக் கட்டுவதற்கு ஏகமனதாக முன் வந்தனர். இதன் காரணம்: காபா நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலத்திலிருந்து மேல் முகடு இல்லாமல் ஒன்பது முழங்கள் கொண்டதாக இருந்தது. அதன் சுவரும் - கட்டடங்களும் சிதிலமடைந்து இருந்தன. காபாவினுள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களை ஒரு கூட்டம் திருடிச் சென்றது. இந்நிலையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் காபாவின் கட்டடம் மேலும் பாதிப்படைந்தது. காபாவின் மீது கொண்ட மரியாதையின் காரணமாக குரைஷியர் அதைப் புதுப்பிக்கும் நிலைக்கு ஆளாயினர்.

''குறைஷிக் குலத்தாரே! காபாவின் கட்டுமானப் பணிக்காக உங்கள் வருமானத்தில் தூய்மையானவற்றைத் தவிர வேறெதையும் ஈடுபடுத்தாதீர்கள். விபச்சாரத்தின் வருமானமோ, வட்டிப் பணமோ, மக்கள் எவரிடமிருந்தாவது அக்கிரமமாகப் பெறப்பட்ட பொருளோ சேரக்கூடாது'' என்று சொல்லிக்கொண்டு, குறைஷியர் ஒவ்வொரு குலத்தாரும் தங்களுக்கிடையே அந்தப் பணியைப் பிரித்துக் கொண்டனர்.

பின்னர் குறைஷியரில் உள்ள பல கோத்திரத்தாரும் காபாவைக் கட்டுவதற்காகக் கற்களைச் சேகரித்தினர். பின்னர் அவற்றைப் பயன்படுத்தி 'ஹஜருல் அஸ்வத்' - கருப்புக் கல் இருக்கும் மூலைவரை காபாவைக் கட்டினார்கள். கருப்புக் கல்லை அதற்குரிய இடத்தில் பதிப்பது யார்? என்பது தொடர்பாக அவர்களிடையே சர்ச்சை ஏற்பட்டது. அந்தக் கல்லை அதற்குரிய இடத்தில் தாமே தூக்கி வைக்க வேண்டும் வேறு யாரும் அதைச் செய்துவிடக் கூடாது என்று ஒவ்வொரு கோத்திரத்தினரும் நினைத்தார்கள்.

குறைஷியர்கள் இதற்காக சண்டையிட்டுக் கொள்வதற்கும் தயாராயினர். இதே நிலையில் நான்கைந்து நாட்கள் நகர்ந்தன. அப்போது குறைஷியர்களிலேயே மூத்த வயதினரான அபூஉமய்யா பின் அல்முஃகீரா மக்ஸுமி என்பவர், குறைஷிக் குலத்தாரே! யார் இந்த ஆலயத்தின் வாசல் வழியாக அதிகாலையில் முதன்முதலில் நுழைகிறாரோ அவரை இந்தப் பிரச்சனையில் நடுவராக ஆக்கிக் கொள்ளுங்கள். அவர் உங்களிடையே தீர்ப்பளிப்பார்'' என்று கூறினார். குறைஷிகள் அவ்வாறே செய்வதாகக் கூறி, கலைந்து சென்றனர்.

மறுநாள் அதிகாலையில் ஆலயத்தின் வாசல் வழியாக முதன்முதலில் உள்ளே நுழைந்தவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்தாம். (இது நபித்துவத்திற்கு முன்பு நடந்தது. ஆனாலும் இது அனைவரும் அறிந்த பிரபலமான செய்தி.) நபி (ஸல்) அவர்களைக் கண்ட குறைஷியர், இதோ முஹம்மது வந்துள்ளார், நம்பத்தகுந்தவரான இவரை நாங்கள் முழு மனதுடன் ஏற்கிறோம் என்றனர்.

(இங்கே குறைஷியருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைப் பார்த்தால் நபித்துவ வாழ்விற்கு முன்பு நபியவர்களின் மீது குறைஷியர்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதை நமக்குக் காட்டுகிறது. குறைஷியர் ஒவ்வொரு குலத்தாரும் மற்ற குலத்தாருக்கு எதிரும் புதிருமாக இருந்து வந்தனர். இந்த நிலையில் தமக்கு வேண்டாத குலத்தார் யாராவது ஆலயத்திற்குள் முதலில் வந்திருந்தால் அது மற்ற குலத்தாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன்முதலில் ஆலயத்தின் வாசல் வழியாக நுழைந்தது குறைஷியர் அனைத்து குலத்தாருக்கும் திருப்திகரமாக இருந்தது. அந்த அளவுக்கு எல்லா மக்களிடமும் நற்பெயர் பெற்றிருந்தார்கள். நபியவர்களை ''அல்அமீன்'' நம்பிக்கைக்குரியவர் என்று ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.)

நபி (ஸல்) அவர்கள் வந்ததும் அந்த மக்கள் செய்தியைத் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'என்னிடம் ஒரு துணியைக் கொண்டு வாருங்கள்' என்றார்கள். அது கொண்டு வரப்பட்டது. கருப்புக் கல்லைத் தமது கையால் அந்தத் துணியில் வைத்த நபி (ஸல்) அவர்கள், ''இந்தத் துணியின் ஒவ்வொரு ஓரத்தையும் ஒவ்வொரு கோத்திரத்தாரும் பிடித்துக்கொண்டு அனைவருமாகச் சேர்ந்து அதைத் தூக்கிக் கொடுங்கள்'' என்றார்கள். அவ்வாறே அவர்கள் தூக்கித் தர, அந்தக் கல் அதற்குரிய இடத்திற்கு வந்தபோது தமது கையால் அதை உரிய இடத்தில் பதித்துப் பூசினார்கள். (அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் அவர்கள் மீது மறுமை நாள்வரை என்றென்றும் உண்டாகட்டும்)

நபித்துவ வாழ்விற்கு முன், குறைஷியர் காபாவைப் புதுப்பித்துக் கட்டிய அந்த அறப்பணியில், நபி (ஸல்) அவர்களும் கலந்து கொண்டு கல் சுமந்திருக்கிறார்கள். நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் புதுப்பித்துக்கட்டிய காபாவின் சுவர்கள் பலவீனப்பட்டதால் குறைஷியர் காபாவை இடித்து விட்டு மீண்டும் புதுப்பித்துக் கட்டினார்கள். ஆனால் இப்ராஹீம்(அலை) அவர்கள் எழுப்பிய காபாவின் அளவை சுருக்கி விட்டார்கள். இதற்குக் காரணம் குறைஷியரிடம் பொருளாதாரம் இல்லாமலிருந்ததேயாகும்.

(மீண்டும் இறுதிப் பகுதியில், இறைவன் நாடட்டும்)

அன்புடன்,
அபூ முஹை

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Wednesday, August 15, 2007

காபா இடமாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? பகுதி-1

புதன், 15 ஆகஸ்ட் 2007

காபா எனும் இறையில்லம் மனிதர்களுக்காக முதன் முதலாகக் கட்டப்பட்ட ஆலயம் என்று இஸ்லாம் மார்க்கத்தின் திருமறையான, திருக்குர்ஆன் கூறுகிறது.

''அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும், மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன், 003:096)

மக்காவில் அமைந்த காபா, மனிதர்கள் இறைவனை வணங்குவதற்காக பூமியில் அமைக்கப்பட்ட முதல் இறையில்லம். காபாவின் வரலாறு மிகத் தொன்மையானது. இது பற்றிய வரலாற்றாசிரியர்களின் கண்ணோட்டம்:

ஹிஜாஸ் எனத் தற்போது அழைக்கப்படும் பகுதியைக் குறிப்பிடும்போது, ''அது பூர்வீக மக்களால் பெரிதும் கெளரவிக்கப்பட்ட பகுதி என்றும் அங்கு கல்லான ஒரு பலி பீடம் இருந்தது. அது மிகத் தொன்மையானது. சுற்று வட்டாரத்திலுள்ள மக்கள் அதனை தரிசிக்க எல்லாத் திசைகளிலிருந்தும் வந்தனர்'' என்று டியோடரஸ் ஸிகுலஸ் குறிப்பிடுகிறார். - (சி.எம். ஓல்ட் ஃபாதர் என்பவரின் மொழிபெயர்ப்பு லண்டன் 1935 வால்யூம் 2 பக்கம் 211)

''காபா மிகப் பழமையானது. யாத்திரிகர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து அங்கு வந்தனர். இப்படி இவர்கள் வருவது எப்போது தொடங்கியது என்பதே தெரிய முடியாத அளவுக்கு வெகு காலத்திற்கு முன்பே காபா இருக்கிறது''. என்று இஸ்லாத்தின் எதிரியான ஸர் வில்லியம் முயீர் கூறுகிறார். அவரே எழுதிய, Life of Mohammed - 1923, பக்கம் 103.

காபாவின் பழமை பற்றி, வராலாற்று ஆய்வுக்கு எட்டாத மிகத் தொன்மையானத் திருத்தலம் என்பதை வரலாற்று ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தப் பழமையான இறை ஆலயம் எத்தனை முறை புதுப்பித்துக் கட்டப்பட்டது என்பதற்கான சரியான வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கவில்லை. நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்தில் காபா சிதிலமடைந்து இருந்தது. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் இப்படி சிதிலமடைந்து கிடந்தது என்பதற்கும் இஸ்லாத்தில் சரியான குறிப்புகள் இல்லை!

எந்த மக்களும் குடியிருக்காத மக்கா எனும் அந்த இடத்தில் காபா சிதிலமடைந்து கிடந்தது. இறைவன் தனது நபி இப்ராஹீம் (அலை) அவர்களைக் கொண்டு மீண்டும் புதுப்பிக்கும்படி பணிக்கிறான். இது தொடர்பாக இஸ்லாத்தின் சான்றுகள் இருக்கின்றன. இங்கிருந்தே காபாவின் வரலாறு மீண்டும் துவங்குகிறது. வெறும் அடித்தளம் மட்டுமே இருந்த மிகத் தொன்மையான காபாவை, இறைவனால் அடையாளம் காட்டப்பட்டு நபி இப்ராஹீம் (அலை) அவர்களும், அவரது மைந்தர் இஸ்மாயீல் (அலை) அவர்களும் புதுப்பித்துக் கட்டுகிறார்கள். கட்டி முடித்து, இறைவனிடம் பிரார்த்தனையும் செய்கிறார்கள். (பார்க்க: அல்குர்ஆன், 002:125-130)

மனிதர்கள் இறைவனை வணங்குவதற்காக முதன் முதலாக அமைக்கப்பட்ட காபா எனும் இறையில்லம் மிகச் சரியாக, ஏற்கெனவே இருந்த அதே அடித்தளத்தில் மீண்டும் கட்டி எழுப்பப்படுகிறது. (காபாவின் மீள் துவக்க வரலாறு பற்றி இன்னும் விரிவாக திருமறை வசனங்களும், பல நபிமொழிகளும் கூறுகிறது. காபா அதன் சரியான இடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை அலசுவது மட்டுமே இந்த கட்டுரையின் நோக்கம் என்பதால் மேற்கொண்டு செல்வோம்)

ஒரு வரலாறு:

நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்விற்கு முன்னர் அரபு தீபகற்பத்தில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டு வந்த ஒரு வரலாற்றுச் சம்பவம்:

நபித்துவ வாழ்விற்கு முந்திய கால கட்டத்தில் ரோமானியப் பேரரசு யமன் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதும், யமன் நாடு அபிசீனியாவின் ஆளுகைக்கு உட்பட்டது. அப்போது யமனில் அபிசீனியாவின் ஆளுநராக இருந்த அப்ரஹா என்பவன், அபிசீனியா மன்னரின் பெயரால் யமனில் ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தை எழுப்பியிருந்தான். புனித மக்காவில் இருந்த காபா ஆலயத்திற்குச் செல்லாதவாறு, அரபியர்களை அந்த தேவாலயத்தின்பால் ஈர்ப்பதற்காக அதில் பல்வேறு வகையான பகட்டான அலங்காரங்களையெல்லாம் செய்திருந்தான்.

அரபு தீபகற்பத்தின் மத்திய பாகத்திலும், அதன் வடபுலங்களிலும் வாழ்ந்திருந்த அரபியர்கள், அப்ராஹாவின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த யமன் நாட்டு மக்கள் அனைவரும் புனித காபா ஆலயத்தின் பக்கமே தங்களின் கவனத்தைத் திருப்பியவர்களாகவும், அதன்பால் ஈர்க்கப்பட்டவர்களாகவும் இருப்பதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். தமது இந்த எண்ணத்தை அபிசீனிய மன்னருக்கு எழுதித் தெரிவித்தான்.

அவன் எவ்வளவோ பிரயத்தனங்களை மேற்கொண்டும், அரபிகளை அவர்களின் புனித ஆலயமான காபாவை விட்டுத் திருப்பிவிட முடியவில்லை. அப்போது அப்ரஹா காபா ஆலயத்தை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டு மக்களின் கவனத்தை, தான் எழுப்பிய கிறிஸ்தவ தேவாலயத்தின் பால் திருப்பிவிடும் எண்ணத்தில் பெரும் படை ஒன்றைத் திரட்டிக்கொண்டு புறப்பட்டான். அதில் ஏராளமான யானைகளும் இருந்தன. மிகப் பெரும் பட்டத்து யானை அவற்றிற்கெல்லாம் முன்னணியில் சென்றது.
இதற்கிடையே அவன் இந்த நோக்கத்துடன் புறப்பட்டு விட்ட செய்தி அரபு நாடு முழுவதும் பரவியது. தமது புனித ஆலயத்தைத் தமது கண் முன்பே இடித்துத் தகர்த்துவிட அவன் வந்து கொண்டிருக்கும் செய்தி அரபிகளுக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது.

இதன் காரணமாக அரபுகள் ஒவ்வொரு குலத்தாரும் அணிதிரளும்படி வேண்டியபின் படை திரட்டிக்கொண்டு அப்ரஹாவை மக்காவிற்கு சென்று விடாமல் வழியிலேயே தடுக்க, அவன் படையுடன் போர் செய்தார்கள். எனினும் அவர்கள் தோல்வி கண்டார்கள். அப்ரஹா, தம்முடன் போர் செய்து தோல்வியடைந்தவர்களைச் சிறைப்பிடித்துக்கொண்டு, காபா ஆலயத்தை இடித்துத் தகர்க்க தொடர்ந்து இராணுவத்துடன் முன்னேறி வந்தான்.

காபாவை இடிக்க வந்த அப்ரஹாவின் யானைப்படையை இறைவன் என்ன செய்தான் என்பதை திருக்குர்ஆன், அல்ஃபீல் - யானை - 105வது அத்தியாயம் எடுத்துரைக்கிறது.

(நபியே!) யானைப் படையை உமது இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் அறியவில்லையா?
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?

மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.

சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.

அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.
(அல்குர்ஆன், 105:001-005)

இயந்திரங்கள் இல்லாத அந்தக் காலத்தில் பலம் பொருந்திய யானைகளைக் கொண்டு காபாவை உடனடியாக இடித்துத் தகர்த்து விட முடியும். மேலும், நவீன போர் கருவிகள் இல்லாத அக்காலத்தில் இரும்பினால் செய்யப்பட்ட வெறும் ஈட்டி, வாள், கத்தி இவைகளைக் கொண்டு மனிதர்களிடையே போரிட்டுத் தாக்கிக் கொள்ள முடியுமே தவிர, யானைப் படையுடன் போர் செய்ய அந்தக் கருவிகள் உதவாது. யானைப் படையை எதிர்க்க பலமில்லாமல் இருந்த மக்காவின் குறைஷிகள், மற்றுமுள்ள குலத்தார்கள், இது இறைவனின் வீடு அதை அவனே பாதுகாத்துக்கொள்வான் என்று அப்ரஹாவின் யானைப் படையுடன் போர் செய்யாமல் ஒதுங்கிக்கொண்டார்கள்.

அப்ரஹாவின் யானைப்படை மக்காவை நோக்கி வந்தது. முன்னணியில் வந்து கொண்டிருந்த பட்டத்து யானை மக்காவிற்குள் நுழைய மறுத்து மக்காவிற்கு வெளியேலேயே படுத்துவிட்டது. அதைக் கிளப்புவதற்கு எத்தனையோ முயற்சிகளை செய்தும் முடியவில்லை.

நபித்துவ வாழ்வில், ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட நாளில் மக்காவிற்குள் நுழைய மறுத்து, நபி (ஸல்) அவர்களின் கஸ்வா எனும் ஒட்டகம் மக்காவிற்கு வெளியிலேயே படுத்துக்கொண்டது. நபித்தோழர்கள், ''கஸ்வா இடக்குப் பண்ணுகிறது'' என்றார்கள். ''கஸ்வா இடக்குப் பண்ணவில்லை! அது சண்டித்தனம் செய்யும் இயல்புடையதுமில்லை! ஆயினும் அன்று அப்ரஹாவின் யானையை மக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்தவனே இப்போது இதனையும் தடுத்து விட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அப்ரஹாவின் யானைப்படை மக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்திய இறைவன், பறவைக் கூட்டங்களை அனுப்பி, அவர்கள் மீது சுடப்பட்ட கற்களை எறிய வைத்து, மென்று தின்னப்பட்ட வைக்கோல் போல யானைப் படையும், அப்ரஹாவும் அழிக்கப்பட்டார்கள்.

நபித்துவ வாழ்வில், மக்கா வெற்றி கொண்ட நாளில்

''நிச்சயமாக அல்லாஹ்தான் அன்று யானைப் படையை மக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினான். அவனே இன்று அவனது தூதரையும், நம்பிக்கையாளர்களையும் மக்காவின் மீது ஆதிக்கம் பெற வைத்திருக்கிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

காபாவை இடித்துத் தகர்க்க வந்த அப்ரஹாவும் யானைப் படையையும் மக்காவிற்குள் நுழையக்கூட முடியாமல், அழித்தொழிக்கப்பட்டார்கள். என்பதை திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் கூறுகிறது. காபா எனும் இறை ஆலயத்தைக் காத்துக்கொள்வதற்கு மனிதர்கள் சக்தி பெறவில்லையெனில் காபாவை இறைவன் காப்பாற்றிக் கொள்வான்.

(மீண்டும் அடுத்த பகுதியில்... இறைவன் நாடட்டும்)

அன்புடன்.
அபூ முஹை

நன்றி: சத்தியமார்க்கம்.காம்