Tuesday, December 18, 2007

தியாகப் பெருநாள் செய்தி!

அனைவருக்கும் தியாகப் பெருநாள் வாழ்த்துகள்!


செவ்வாய், 18 டிசம்பர் 2007

அன்புமிக்க சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இதழியலிலும் எழுத்தியலிலும் முன்னெப்போதையும்விடக் கூடுதல் முனைப்புக் காட்ட வேண்டியக் காலக் கட்டத்தை சமகால முஸ்லிம் சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

தாம் ஏற்றுக் கொண்டிருக்கும் வாழ்க்கை நெறி எத்துணை உன்னதமானது என்பதை அறியாமலேயே வாழ்ந்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் கோடானு கோடி என்ற உண்மை ஒருபுறம்; இஸ்லாத்தை அரைகுறையாக விளங்கிக் கொண்டுத் தடுமாறும் கூட்டம் மறுபுறம்; இஸ்லாத்தில் இல்லாதவைகளைக் கூடுதலாக விளங்கிக் கொண்டு அவற்றுக்கு இஸ்லாமியச் சாயம் பூச முயலும் கும்பல் இன்னொரு புறம்.

இவையன்றி, பிறப்பால் அனைவரும் சமம் என்ற உண்மையை உரத்து முழங்கும் இஸ்லாத்தின் மீள்எழுச்சியைத் தடுப்பதற்காகத் திட்டமிட்டு உருவாக்கி விடப் பட்டிருக்கும் 'எழுத்துத் தீவிரவாத'க் கூலிக் கும்பல் இஸ்லாத்துக்கு எதிராக எல்லாவித உத்திகளோடும் புற்றீசல்கள் போலப் புறப்பட்டிருக்கும் இவ்வேளை, இஸ்லாத்துக்கு எதிரானத் திட்டமிட்டத் திரித்தல்களையும் திருகுதாளங்களையும் எதிர் கொண்டு முறியடிக்கவும் சரியான தகவல்களைச் சான்றுகளோடு எடுத்து வைக்கவும் எழுத்துப் போராளிகள் நம் சமுதாயத்துக்கு ஏராளமாகத் தேவைப்படுகிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் போராளிகள் எதிர் கொள்ள வேண்டியவர்களாக சல்மான், தஸ்லீம் போன்ற அபகீர்த்தியால் அறியப் பட்ட முஸ்லிம் பெயரைத் தாங்கிய இஸ்லாத்தின் எதிரிகளும் அதிகமாக அறியப் படாதவர்களாகத் தமிழுலகில் சிலரும் உளர்.

எழுத்துலகில் முஸ்லிம்கள் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் கட்டாயம் இதனோடு முற்றுப் பெற்று விடவில்லை. எழுத்துலகம் எழுச்சியடைந்த 1950 களிலிருந்து 1990 வரையிலான காலகட்டங்களை எடுத்துக் கொண்டால், உலகளாவிய அளவில் இஸ்லாத்திற்கெதிரான மறைத்தல்கள், திரித்தல்கள் அனைத்தும் இக்காலகட்டங்களில் சக்தி வாய்ந்த ஊடகங்களின் மூலம் பரப்பப்பட்டு, அவற்றால் மக்கள் மனதில் இஸ்லாத்தைக் குறித்தத் தவறான எண்ணங்கள் உறுதியாகப் பதியும் விதத்தில் எழுத்துலகைக் கொண்டு எதிரிகள் சாதித்து விட்டதை அறிந்துக் கொள்ள முடியும்.

ஒரு பின்லாடனின் பெயரைக் கூறி ஆப்கான் அரசையும் இல்லாத பேரழிவு ஆயுதங்களின் பெயரைக் கூறி ஈராக் அரசையும் வீழ்த்தி, இன்று லட்சகணக்கான முஸ்லிம்களின் உயிரையும் உடைமையையும் சீரழித்து, நாட்டையே சின்னாபின்னமாக்கி, அடுத்து எந்த முஸ்லிம் நாட்டின் மீது அட்டூழியத்தை அவிழ்த்து விடலாம் என ஆய்ந்து கொண்டிருக்கும் வல்லரசுகளுக்கு, அவைகள் செய்யும் அட்டூழியத்திற்கு எதிராக மக்களை ஒன்று திரண்டு நிறுத்தாததன் காரணம் ஊடகங்களால் விதைக்கப் பட்ட இஸ்லாத்தைக் குறித்த எதிர்மறைத் திரிபுச் சிந்தனைகளே.

"ஒரு வாள் சாதிக்க இயலாததை ஒரு பேனா முனையால் சாதிக்க இயலும்" எனக் கூறுவதன் அர்த்தம் நடைமுறையில் எதிர்மறையாகச் சாதிக்கப்பட்டு இன்று உலக அரங்கில் பலிகடா ஆக்கப்பட்டுள்ளது முஸ்லிம் சமுதாயம்.

இந்நிலையிலிருந்துச் சமுதாயத்தை மீட்டு எடுப்பதும் அதே பேனா முனையால் மட்டுமே சாத்தியமாகும் என்பதைச் சமுதாயச் சிந்தனையுள்ள அனைவரும் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

"அக்கிரமக்காரன் முன்பு அநியாயத்தை உரக்க, உறுதியாக எடுத்துச் சொல்வதையே போராட்டத்தில் உயர்ந்தப் போராட்டமாகக்" காணும் இஸ்லாத்தில், நிலையான மறுமை வெற்றியைக் கொய்தெடுக்க அக்கிரமக்காரன் ஃபிர்அவ்னுக்கு எதிராகக் குரலெழுப்பி, போராட்டத்தின் மறுவடிவமாகத் திகழ்ந்த மூஸா(அலை) அவர்களின் போராட்ட வழி முறையை, அல்குர்-ஆன் போதிக்கும் அறவழியை நடைமுறைப்படுத்திக் காண்பிக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் தற்காலக் கட்டாயத் தேவையாகும்.

உண்மைகளை மறைத்து, திட்டமிட்டக் கட்டுக் கதைகளைச் செய்திகளாக உலகுக்குத் தரும் பெரும்பாலான ஊடகங்களுக்கு மத்தியில் மறைக்கப் பட்ட உண்மைகளை வெளிக் கொண்டு வரும் மிகச் சில ஊடகங்களும் இல்லாமலில்லை. அவை வெளிக் கொண்டு வந்து வெளிச்சம் போடும் உண்மைகளால் ஏற்படும் நல்ல விளைவுகளையும் அதன் சக்தியையும் கண்கூடாகக் காணும்போது சற்றே மனதுக்கு மகிழ்வேற்படுகிறது!. உதாரணத்திற்கு கத்தரில் இருந்து செயல்படும் 'அல் ஜஸீரா' தொலைகாட்சி, ஆப்கான் மற்றும் ஈராக் அநியாயமாக அழிக்கப்பட்ட வேளைகளில் நடந்த அக்கிரமங்களை வெளிச்சமிட்டுக் காட்டியது. அக்கிரமக்காரர்களுக்கு இதுவரை அது சிம்ம சொப்பனமாகவே திகழ்கிறது.

அதே போன்று தனது பக்க நியாயத்தை உலகில் எவருமே நடுநிலையாக வெளிப்படுத்தத் தயாரில்லாமல் தனக்கு எதிராக அமெரிக்கா போர் தந்திரங்களைக் கையாண்டு காய்களை நகர்த்திக் கொண்டிருந்த வேளையில் 'ப்ரஸ்' என்ற பெயரில் ஒளிபரப்பைத் தொடங்கிய ஒரு (ஈரானியத்) தொலைக் காட்சி, தனது பக்க நியாயங்களையும் அமெரிக்காவின் போர் அட்டூழியங்களையும் அநியாயங்களையும் ஆதாரங்களுடன் பட்டியல் போட்டு காண்பித்தது. இன்று அதன் பக்கத்திலுள்ள நியாயங்களைப் பேசுவதற்கும் "அமெரிக்காவின் செயல் தவறானதுதான்" எனக் குரல் எழுப்பும் வகையில் மற்ற முக்கிய நாடுகளைத் தூண்டுவதற்கும் அணி திரளவும் ஒரு தூண்டுகோலாகாத் திகழ்கிறது.

அவ்வளவு தூரம் போவானேன். இந்தியாவில் சங் பரிவாரத்தின் தோற்றம், நோக்கம், செயல்பாடுகளை அறியாதவர்கள் மிகச் சொற்பம். சங் பரிவாரத்தின் அரசியல் பிரிவு பாஜக ஆட்சியில் இராணுவத்திற்குச் சவப்பெட்டி வாங்கியதில் செய்த ஊழலிலிருந்து பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாங்கிய லஞ்சம் வரை, இன்று காவி அரக்கன் நரேந்திரமோடி முஸ்லிம்களைக் குஜராத்தில், மக்களைக் காக்க வேண்டிய அரசு இயந்திரங்களை மக்களுக்கு எதிராக உபயோகித்து, சொந்த மாநில மக்களையே வெறித்தனமாகக் கொன்று குவித்ததையும் தெளிவான ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி அனைத்து மக்கள் முன்னிலையிலும் கயவர்களின் முகமூடியைத் 'தெஹல்கா' தெளிவாக விலக்கிக் காண்பித்தது.

2000க்கு முன்னர்வரை மேற்குலக ஊடகங்களால் மூளைச் சலவை செய்யப் பட்டிருந்த மத்திய கிழக்கு நாடுகள், தற்பொழுது தம்மைத் தாமே சுயபரிசோதனை செய்து கொள்ளத் துவங்கியுள்ளன. அதற்கு உதவியது அல்ஜஸீரா மற்றும் ப்ரஸ் தொலைகாட்சியின் பேனா கரங்களே. அவ்வாறே, இந்திய முஸ்லிம்களின் இரத்தத்தையும் சதையையும் உண்டு வாழும் காவிக் கூட்டமும் மக்கள் பணத்தை உண்டு வாழும் அரசியல்வாதிக் கூட்டமும் கவலையுடன் தங்கள் செயல்பாடுகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன. இந்த மாற்றத்தை ஏற்படுத்தியதில் தெஹல்கா என்ற பேனா முனைகளுக்கு முக்கியப் பங்குண்டு என்பதை மறுக்க இயலாது.

இதே போன்ற பேனா புரட்சி சமுதாயத்தில் நடைபெற வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்வின் போராட்டமாகப் பேனா முனையை ஆக்கிக் கொள்ள வேண்டும்.

சமுதாய அங்கங்களுக்கு இப்புனிதத் தியாகப் பெருநாள் தினத்தின் செய்தியாகச் சத்தியமார்க்கம்.காம் ஒன்றைக் கூறிக் கொள்கிறது:

"எதிர்காலச் சமுதாயத்தின் நன்மைக்காக, உலக மக்களின் அமைதியான சுபிட்ச வாழ்விற்காக ஒவ்வொரு முஸ்லிமும் தன்னைத் தியாகம் செய்துக் கொள்ளத் தயாராகிக் கொள்ளட்டும். அந்தத் தியாகம் பேனா முனையினைக் கொண்டு ஆரம்பமாகட்டும். எடுங்கள் பேனாக்களை; எழுதுங்கள் நியாயங்களை - அக்கிரமக்காரர்களும் பயங்கரவாதிகளும் அடங்கும் வரை அல்லது அழியும் வரை!".

இதயத்திற்கு ஓய்வில்லை மூச்சுக் காற்றுச் சுழலும் வரை;
எழுதுகோல் ஏந்தும் கைகளுக்கு ஓய்வில்லை நீதி நிலைநாட்டப்படும் வரை!

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Saturday, December 08, 2007

குர்பானியின் சட்டங்கள்.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமையாக - ஈமான் கொள்வது, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் எனும் இபாதத்துகளில் எல்லாத் திசைகளிலுமிருந்து உலக முஸ்லிம்கள் காபத்துல்லாஹ்வை நோக்கி புனிதப் பயணத்தை மேற்கொண்டு ''ஹஜ்'' எனும் கடமையை நிறைவேற்றும் துல்ஹஜ் மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

''மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக!'' (அல்குர்ஆன் 022:028) என இறைவன் தனது அடியார் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கிட்டக் கட்டளையின் பேரில், அறிவித்த ஹஜ்ஜின் அழைப்பை ஏற்று கால காலமாக இறையில்லத்தை நோக்கி மக்கள் பயணம் சென்று ஹஜ் எனும் இறைவணக்கத்தை நிறைவேற்றுகின்றனர்.

'என் இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தருவாயாக" (என்று பிரார்த்தித்தார்). எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயம் கூறினோம்.

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார், "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினார், 'என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ், நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.

ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்திய போது, நாம் அவரை, 'யா இப்ராஹீம்!" என்றழைத்தோம். 'திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம் என்று கூறினோம்.



நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ்சோதனையாகும். பெரிய பலிப் பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்."
(அல்குர்ஆன், 037:100-108)

துல்ஹஜ் மாதம் ஹாஜிகளுக்கு மட்டும் இபாதத் மாதமன்று! நபி இப்ராஹீம் (அலை) மற்றும் அவர்களின் மைந்தர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் நினைவாக உலக முஸ்லிம்கள் அனைவரும் ''குர்பானி'' எனும் பிராணிகளை அறுத்து பலியிடும் இபாதத்தை நிறைவேற்றும் ஈதுல் அழ்ஹா எனும் தியாகத் திருநாளைக் கொண்டாடும் மாதமுமாகும். எனவே, துல்ஹஜ் மாதத்தில் அறுத்துப் பலியிடுதல் பற்றிய இஸ்லாத்தின் சட்டங்களை நினைவுபடுத்திக் கொள்வோம்.

குர்பானி கொடுக்க நாடுபவர்

நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ் பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும்வரை தனது முடியையும் நகத்தையும் வெட்ட வேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா , பைஹகீ.)

குர்பானி கொடுக்கும் பிராணிகள் ஆரோக்கியமாகவும், ஊனமற்றதாகவும் இருக்க வேண்டும். தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் கண்பார்வைக் குறைவு, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் சதைப்பற்று இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மதீ ,அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா)

பிராணிகளின் கண்களையும், காதுகளையும், கவனித்துத் தேர்வு செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். சிறிதளவு காது வெட்டப்பட்டவை, காது கிழிக்கப்பட்டவை, காதில் துவாரமிடப்பட்டவை ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (திர்மிதீ அஹ்மத், அபூதாவூத், நஸயீ).

நபி(ஸல்) அவர்கள் 'கொம்புள்ள கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய, கறுப்பு நிறத்தால் அமரக்கூடிய, கறுப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது கால், மூட்டுக்கால், கண் பகுதி ஆகியவை கறுப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள். (முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)

கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய, கறுப்பு நிறத்தால் அமரக்கூடிய, கறுப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது கால், மூட்டுக்கால், கண் பகுதி ஆகியவை கறுப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள். (ஆடு வந்ததும்) ஆயிஷாவே கத்தியை எடுத்து வா! என்றார்கள். பிறகு அதைக் கல்லில் தீட்டு! என்றார்கள். நான் அப்படியேச் செய்தேன். பிறகு கத்தியை வாங்கிக் கொண்டார்கள். ஆட்டைக் கீழே படுக்க வைத்து அறுத்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) (முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)

குர்பானி பிராணிகளை வீட்டில் வளர்ப்பதும் நபி வழியே!
'மதீனாவில் குர்பானி பிராணிகளை நாங்கள் கொழுக்க வைப்போம். (ஏனைய) முஸ்லிம்களும் கொழுக்க வைப்பார்கள்." (புகாரி, தஃலீக்).

ஒரு குடும்பத்துக்கு எத்தனை ஆடுகள் குர்பானி கொடுக்கலாம்?

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் 'ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பர். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள். மக்கள் பெருமையடிக்க ஆரம்பித்து நீர் பார்க்கக்கூடிய இந்த நிலை ஏற்பட்டுவிட்டது என்று கூறினார்கள். (திர்மிதீ, இப்னுமாஜா, தப்ரானீ)

குர்பானி இறைச்சியை நீங்களும் உண்ணுங்கள்! சேமித்தும் வைத்துக்கொள்ளங்கள், தர்மமும் செய்யுங்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

எனவே, ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆடு குர்பானி கொடுத்தால் போதுமானது. வசதி படைத்தவர்கள் எத்தனை ஆடுகள் வேண்டுமானாலும் அறுத்து பலியிட்டு தர்மம் செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்கள் குர்பானி கொடுத்திருக்கிறார்கள் என்று விளங்கிக் கொள்ளலாம்.

கூட்டாக ஏழு பேர் சேர்ந்து ஒரு ஒட்டகம், ஒரு மாடு இவற்றை குர்பானி கொடுக்கலாம்.

ஹுதைபியா ஆண்டில் நாங்கள் ஏழு நபர்கள் சார்பாக ஒரு ஒட்டகத்தையும், ஏழு நபர்கள் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுத்தோம். (முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி இப்னுமாஜா)

அறுப்பது பெருநாள் தொழுகைக்கு முன்பா? பிறகா?

இன்றைய நாளில் நாம் முதலாவதாக செய்வது தொழுகையாகும். பிறகு நாம்(இல்லத்திற்குத்) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம். (புகாரி , முஸ்லிம்)

இன்றைய நாளில் நாம் முதலாவதாக செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூதர்தா இப்னு நியார்(ரலி) அவர்கள் (தொழுமுன்) அறுத்துவிட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடம்) என்னிடத்தில்
'முஸின்னாவை" விட சிறந்த ஆறுமாத குட்டி ஆடு உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்றார். முன் அறுத்ததற்கு இதை பகரமாக்குவீராக! (அறுப்பீராக!) எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்)

எங்கு அறுப்பது?

வீட்டிலும் அறுக்கலாம். ஈத்கா எனும் தொழும் திடலிலும் அறுக்கலாம்.

முஸல்லா என்னும், திடலில் நபி(ஸல்) அவர்கள் அறுப்பவர்களாக இருந்தனர். (புகாரி , அபூதாவூத்)

இன்றைய நாளில் நாம் முதலாவதாக செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம். (புகாரி, முஸ்லிம்)

ஆயிஷா கத்தியைக் கொண்டு வா! அதைக் கல்லில் கூர்மையாக்கு! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)

நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்று கூறியதிலிருந்து வீட்டில் வைத்து அறுத்திருக்கிறார்கள் என்பதை விளங்கலாம்.

பெண்கள் அறுக்கலாமா?

ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதை சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள். (புகாரி)

குர்பானி கொடுக்கும் நாட்கள்

தஷ்ரிக்குடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (தாரகுத்னி, இப்னு ஹிப்பான், அஹ்மத்)

துல்ஹஜ் மாதம் பெருநாள் தினமாகிய பிறை 10லிருந்து பிறை 13வரை குர்பானி கொடுக்கலாம்.

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Tuesday, November 27, 2007

ஷரஹ் எழுதும் அடியார்களே!

இஸ்லாம் மார்க்கத்தை வாழ்க்கை நெறியாகக் கொண்ட முஸ்லிம்கள் இறைவனையும், இறைத்தூதரையும் அனைத்து உலக விஷயங்களையும் விட அதிகமாக நேசிக்க வேண்டும்.

''உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன் பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட அவனது தூதரை விட அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்!'' (திருக்குர்ஆன், 009:024)

இஸ்லாத்தை விட மேலாக உறவுகளுக்கும், உலக செல்வங்களுக்கும் எந்த முக்கியத்துவமும் இல்லை என மேற்கண்ட இறைவசனம் ஆழமாக உணர்த்துகிறது. அதனால் இஸ்லாத்திற்காக எந்த வன்முறையிலும் ஈடுபடலாம் என்று அர்த்தம் கொள்ள இந்த வசனத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை! திருக்குர்ஆனின் மற்ற வசனங்கள் பிறருக்கு அநீதி இழைத்து வரம்பு மீறி நடப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது. (அதனால் படிப்பவர்கள் தங்கள் கற்பனையை வேறு திசையில் தட்டி விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.)

பெற்றோருக்குக் கட்டுப்பட வேண்டும், உறவுகளைப் பேண வேண்டும் என்றும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. எவன் ஒருவன் உறவை முறித்துக் கொள்கிறானோ அவனுடன் உள்ள உறவை நான் முறித்துக் கொள்வேன் என்று இறைவன் கூறுவதாக நபிமொழி இயம்புகிறது.

பூமியில் பரந்து சென்று உலக செல்வங்களைத் தேடிக் கொள்ளுங்கள். வீடு, தோட்டம், துரவுகள் என செல்வங்களை எந்த அளவுக்கு உங்களால் சம்பாதிக்க முடியுமோ, அவற்றை ஆகுமான வழியில் எவ்வளவும் சம்பாதித்து சேகரித்துக் கொள்ளுங்கள் என்றும் இஸ்லாம் அனுமதிக்கிறது!

ஆனாலும், ஏகத்துவ கொள்கைக்கு மாற்றமாக பெற்றோரும், உறவினரும் போதித்தால் அதற்கு இணங்காமல் இஸ்லாத்திற்கே முதலிடம் வழங்க, இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டும். இறைவழியில் செலவிட நேர்ந்தால் தமது செல்வங்களை தயக்கமில்லாமல் செலவிட முன் வர வேண்டும். என்பதே திருக்குர்ஆன் 009:024வது வசனத்தின் சுருக்கமான விளக்கம்.

''உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை, அவரது குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராக ஆகும்வரை அவர் (உண்மையான) நம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார். (புகாரி, 0015. முஸ்லிம்)

பெற்றோர், பிள்ளைகள், உறவினர்கள், உலக மாந்தர்கள் அனைவரையும் விட இறைத்தூதர் (ஸல்) அவர்களே ஒரு முஸ்லிமிற்கு மிகவும் பிரியமானவராக இருக்க வேண்டும். பிரியமானவர் என்றால், இம்மை எனும் இந்த உலக வாழ்க்கையில் வழிகாட்டியாகவும், மறைவான மறுமை வாழ்க்கை மீதான அவர்கள் அச்சமூட்டி எச்சரித்ததை நம்பிக்கை கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றிட வேண்டும்.

''நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்'' (திருக்குர்ஆன், 003:031)

இம்மை, மறுமை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அதற்கு முன்மாதிரியாக முஸ்லிம்கள் பின்பற்றிட ஒரே மாமனிதர் நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு எவரும் இல்லை! எனவும் திருக்குர்ஆன் வசனங்கள் சான்றுகள் பகிர்கின்றன.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு தனி மனிதரல்ல. இறைவனின் தூதுவர் எனும் மாபெரும் அந்தஸ்தை பெற்று இஸ்லாம் எனும் முழு மார்க்கமாகத் திகழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் நுபுவத்தைக் கீழ்த்தரமாக, கேவலமாக, அசிங்கப்படுத்தினால் அது இஸ்லாத்தை அவமதிப்பதாகும். அதை முஸ்லிம்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதையே வரும் நபிமொழியிலிருந்து விளங்கலாம்.

கண்பார்வையற்ற ஒரு மனிதரின் (தாய்மையடைந்த) அடிமைப்பெண், நபி (ஸல்) அவர்களை கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டும் நிந்தனைகள் பல செய்து கொண்டும் இருந்தாள். அம்மனிதர் பலமுறை மன்னித்தும் நபி (ஸல்) அவர்களை திட்டுவதை அவள் நிறுத்தவில்லை. அவர் பலமுறை அவளை எச்சரித்தும் அவள் திருந்தவில்லை. ஒரு நாள் இரவு அவள் நபி (ஸல்) அவர்களை அசிங்கமாகத் திட்டித் தீர்த்தாள், நபிகளை வசைமாறிப் பொழிந்தாள். எனவே கண்தெரியாத அந்த மனிதர் ஒரு கத்தியை எடுத்து அவளின் வயிற்றில் குத்திவிட்டார். இதனால் அவளும் அவள் வயிற்றிலிருந்த குழந்தையும் இறந்துவிட்டது. மறுநாள் காலை இச்சம்பவம் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் மக்கள் அவையை கூட்டினார்கள் பிறகு மக்களை நோக்கி கேட்டார்கள். ''மக்களே உங்களை பரிவுடன் கேட்கிறேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களில் யார் இந்த காரியத்தை செய்தது? மேலும் அவர் இவ்வவையில் இருப்பின் எழுந்து நிற்க வேண்டும் என்று அவர்மீது எனக்குள்ள உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்கள். பின்னர் மக்களிடமிருந்து ஒருவர் எழுந்து நின்றார்.

பிறகு அந்த நபர் நபி(ஸல்) அவர்களுக்கு முன் அமர்ந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! நான்தான் அவளின் உரிமையாளன். அவள் கேவலமான வார்த்தைகளால் உங்களை திட்டுவதும், தொடர்ந்து நிந்தனை செய்வதுமாக இருந்தாள். நான் அவளை பலமுறை மன்னித்தேன். இருப்பினும் அவள் உங்களை இகழ்வதை நிறுத்துவதாக இல்லை. அவளை பல முறை நான் எச்சரித்தும் தன் நிலையை மாற்றிக் கொள்வதாக அவள் இல்லை. அவளிடமிருந்து முத்துக்களைப் போன்ற இரு மகன்களைப் நான் பெற்றிருக்கின்றேன். அவள் என்னுடைய மனைவி. கடந்த இரவு அவள் உங்களைக் கேவலமாகத் திட்டிக் கொண்டும் வசைமாறிப் பொழிந்து கொண்டுமிருந்தாள். எனவே கோபத்தில் ஒரு ரம்பத்தை எடுத்து அவள் வயிற்றில் குத்திவிட்டேன்'' என்றார்.

பிறகு, ''சாட்சியாளர்களாக இருங்கள்! அவளின் இரத்தத்திற்கு பழி வாங்கப்படாது.'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( அபூதாவூத், நஸயீ )

இந்த நபிமொழிக்கு ஒரு மாற்று மத அடியார் கீழ்கண்டவாறு ''ஷரஹ்'' எழுதியிருக்கிறார்.

//முஹம்மதைத் திட்டினால் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் வயிற்றில் குத்தி கொன்று விட்டு வா. உன் மீது எந்த குற்றமும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்//

வேடிக்கையைப் பாருங்கள், முஹம்மதைத் திட்டினால் யாராய் இருந்தாலும் கொன்று விடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நபியவர்களின் மீது கூசாமல் அவதூறு கூறியிருக்கிறார். மேற்கண்ட நபிமொழியை மீண்டும் படித்துப் பாருங்கள். நபி (ஸல்) அவர்களுக்கு இந்த சம்பவம் நிகழ்ந்ததே தெரிந்திருக்கவில்லை. பின்னர் மக்கள் கூடியிருந்த அவையில், -''அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களில் யார் இந்த காரியத்தை செய்தது?'' - என்று விசாரிக்கிறார்கள். பிறகு கண் தெரியாத மனிதர் எழுந்து காரணத்தை கூறுகிறார். நடந்த சம்பவங்கள் மிகத் தெளிவாக இருந்தும் அதைத் திரிப்பதில் தேர்ந்தவர்கள் செய்யும் காரியத்தையே இந்த மாற்று மத அடியார் கையாண்டிருக்கிறார்.

நபி (ஸல்) அவர்கள் தமக்காக யாரையும் பழி வாங்கியதில்லை என நபிமொழி தொகுப்பு புகாரியில் இடம் பெற்ற செய்தி விளக்குகிறது. நபி (ஸல்) அவர்களுக்கு விருந்தளிக்கிறேன் என்று ஆட்டிறைச்சியில் விஷத்தைக் கலந்து கொலை செய்ய முயன்ற யூதப் பெண்ணையும் நபியவர்கள் மன்னித்தார்கள். நபித்துவம் துவக்க காலத்தில் மக்காவில் ஏகத்துவக் கொள்கையை எடுத்துரைத்த போது இவர் சூனியக்காரர், பைத்தியக்காரர் என்றெல்லாம் மக்காவாசிகள் விமர்சித்தார்கள். இன்னும் நபியவர்களைக் கொலை செய்யவும் முயன்றார்கள். இப்படித் தம்மை விமர்சித்தவர்களையும், தமக்குக் கொடுமைகள் இழைத்தவர்களையும் நபி (ஸல்) அவர்கள் மன்னித்தார்கள். தமக்காக யாரையும் பழி வாங்கியதில்லை!

வரலாறு இவ்வாறு இருக்க, சம்பந்தமில்லாமல் மேற்கண்ட நபிமொழிக்கு ''ஷரஹ்'' எழுதியவரின் கயமைத்தனம் நன்றாக விளங்குகிறது!

''உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை, அவரது குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராக ஆகும்வரை அவர் (உண்மையான) நம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.''

நபி (ஸல்) அவர்களை நேசிப்பது முஸ்லிம்களுக்கு நம்பிக்கை சம்பந்தப்பட்டது. அந்த நம்பிக்கையை கேவலப்படுத்தினால், அதன் விளைவுதான் இந்த சம்பவம்.

''கடந்த இரவு அவள் உங்களைக் கேவலமாகத் திட்டிக் கொண்டும் வசைமாறிப் பொழிந்து கொண்டுமிருந்தாள். எனவே கோபத்தில் ஒரு கத்தியை எடுத்து அவள் வயிற்றில் குத்திவிட்டேன்.''

இதிலிருந்து இஸ்லாத்தை விமர்சிப்பது என்பது வேறு, இஸ்லாத்தைக் கேவலாமாகத் திட்டி வசைமாறிப் பொழிவது என்பது வேறு. இரண்டாவதைச் செய்தால் அவர்கள் கொல்லப்பட்டாலும் அதற்கு ''பழிக்குப் பழி'' இல்லை என்று அந்த சம்பவத்துக்கு நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.

அதற்காக இன்று இஸ்லாத்தைக் கேவலமாக வசை பாடுபவர்களை தனி ஒரு முஸ்லிமோ அல்லது ஒரு குழுவோ கொன்றுவிட வேண்டும் என்று பொருள் இல்லை என்பதை முஸ்லிம்கள் விளங்கியே வைத்துள்ளனர்.

விளங்காத மாற்று மத அடியார்கள், இல்லாத விளக்கத்தை வழக்கம் போல் நபிமொழியில் திணிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இது இஸ்லாத்திற்கு எந்த தீங்கையும் ஏற்படுத்திடாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Sunday, November 25, 2007

முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாய் மாற்றுவது மிகவும் சுலபம்!

ஒரு கிறிஸ்தவ அறிஞரின் அறிக்கை


டாக்டர் J. டட்லி வுட்பரி, Dudley Woodberry என்பவர் ஒரு கிறிஸ்தவ அறிஞர் இவர் கிராமப்புறங்களில் வாழும் முஸ்லிம்களின் வாழ்க்கை - அவர்களை எப்படி கிறிஸ்தவர்களாக மாற்றுவது என்பனவற்றை ஆராய்ந்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் சுருக்கத்தைக் கீழே தருகின்றோம்.

(டாக்டர். டட்லி வுட்பரி என்பவர் தான் அமெரிக்க ஜனாதிபதி கார்ட்டருக்கு இஸ்லாமிய நாடுகளைப் பற்றியதொரு அறிக்கையைத் தயாரித்தத் தந்தவர்.)

என்னுடைய பார்வையில் இஸ்லாத்தை இரண்டாக பிரிக்கலாம். 1. நாட்டுப் புறங்களில் வாழும் பாமர மக்களிடையே இருக்கும் இஸ்லாம். இதனை கிராமிய இஸ்லாம் (Folk Islam) என அழைக்கலாம். 2. உண்மையான இஸ்லாம் (Classical Islam).

கிராமிய இஸ்லாம் என்பது இஸ்லாத்திற்கு முன்பிருந்த பல மூடப்பழக்க வழக்கங்களையும், மந்திர தந்திர மாயாஜாலங்களையும் தன்னகத்தே கொண்டது. இந்த இஸ்லாம் பெரும்பாலும் பாமர மக்களிடையே பழக்கத்திலிருக்கின்றது. இந்தப் பாமர மக்கள் தங்கள் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் நோய் நொடிகளுக்கும் மந்திர தந்திரங்களைப் பயன்படுத்தி நிவாரணம் காண்பதில் தீவிரமாக இருக்கின்றார்கள். மெஞ்ஞானிகள் என கருதப்படும் சூஃபியாக்கள் இந்த இஸ்லாத்தை மக்கள் மத்தியில் வேரூன்றச் செய்தவர்கள்.

இந்தக் கிராமிய இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள் தங்கள் நடைமுறை வாழ்க்கையில் மூடத்தனம் நிறைந்த பல ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைபிடிக்கின்றார்கள். மெஞ்ஞானிகள் எனக் கருதப்படும் சிலர் இந்தப் பாமர மக்களிடையே பல மூட நம்பிக்கைகளையும் சாதுர்யமாகத் திணித்துள்ளனர்.

மூடப் பழக்க வழக்கங்கள் நிறைந்த இந்தக் கிராமிய இஸ்லாத்தைத்தான் முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் பின்பற்றி வருகின்றார்கள்.

முஸ்லிம்களில் 70 சதவிகிதத்தினர், மனிதப் புனிதர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பீர்களிடமும் வலிகளிடமும் சென்று தங்களது அந்தரங்க நோய்கள் முதல் அனைத்து நோய்களுக்கும் வைத்தியம் தேடுகின்றார்கள், ஆகவே பீர்களும் வலிகளும் பாமரமக்களிடையே ஆதிக்கம் நிறைந்தவர்களாக இருக்கின்றார்கள்.

சவூதி அரேபியா போன்ற நாடுகளில் இந்த இஸ்லாத்திற்கு அதிகமாக இடமில்லை. காரணம் அங்கே உள்ள அரசுகள் இந்த மூடதனங்களை ஒட்டுமொத்தமாகத் தடை செய்துள்ளது.

மலேசியா - இந்தியா - இந்தோனேசியா நாடுகளில் இந்தக் கிராமிய இஸ்லாம் 'ஷேக்' குகளின் ஆசியோடு பாமர மக்களிடையே பீடு நடை போடுகின்றது.

இஸ்லாத்தை ஒரு கொள்கையாகவும் இறைவனின் வழிகாட்டுதல்களை வாழ்வின் இலட்சியமாகவும் கொண்டு வாழம் உண்மையான முஸ்லிம்கள் (Classical Muslims) இந்தக் கிராமிய இஸ்லாத்தின் பிடியை மெல்ல மெல்ல தளர்த்தி வருகின்றார்கள்.

எகிப்து நாட்டில் மூடத்தனமான இந்தக் கிராமிய இஸ்லாத்திற்கு சாவுமணி அடித்தது முஸ்லிம் சகோதரத்துவம் என்ற இக்வானுல் முஸ்லிமுன் இயக்கம். இந்த இயக்கத்தை முன்னோடியாகக் கொண்டு முகிழ்ந்த பல இயக்கங்கள் பாமர மக்களை உண்மையான இஸ்லாத்தின் பக்கம் இழுத்து வருகின்றன.

எனினும் முஸ்லிம்களில் - பெரும் பகுதியினர் இந்தக் கிராமிய இஸ்லாத்தைப் பின்பற்றியே வாழ்ந்து வருகின்றனர்.

கிறிஸ்தவர்களாகிய நாம் இந்தக் கிராமிய இஸ்லாத்தைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்களிடையே தான் அதிகமாக நமது பிரச்சாரத்தை செய்ய வேண்டும். இவர்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதே எளிது. 1960 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை உலகெங்கும் கிறிஸ்தவத்திற்குத் தாவிய முஸ்லிம்கள் அனைவரும் இந்தக் கிராமிய இஸ்லாத்தைச் சார்ந்தவர்களே! முஸ்லிம்களை கிறிஸ்தவத்திற்கு மாற்றும் நமது பணி பீர்களாலும், வலிகளாலும் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வரும் இந்த முஸ்லிம்களைச் சுற்றியே இருந்திட வேண்டும்.

(லண்டனில் இருந்து வெளியாகும் FOCUS இதழிலிருந்து எம்.ஜி.எம். நன்றி: சமரசம்)

அந்நஜாத், செப்டம்பர் 1986

Saturday, November 03, 2007

இறைத்தூதரின் அறிமுகம்!

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று தாமே சொல்லிக் கொள்ளவில்லை என்றொரு தவறானக் கருத்து வைக்கப்படுகிறது. முஹம்மது நபியை, அல்லாஹ்வின் தூதர் என்று மக்களாக விரும்பி அழைத்துக் கொண்டனர் என்று இஸ்லாத்திற்கு எதிரானக் கருத்தும் பேசப்படுகிறது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம்மை அல்லாஹ்வின் தூதர் என்று சுய அறிமுகம் செய்து கொள்ளாமல், முஹம்மதை இறைத்தூதர் என்று மக்கள் எப்படித் தெரிந்து கொண்டிருப்பார்கள்? இது சாத்தியமா? என்று பார்ப்போம்.

அறிமுகமில்லாத எவரும் தன்னை அறிமுகம் செய்து கொள்ளாமல் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாது உதாரணமாக:

ஒருவரைச் சந்திக்கும் பொழுது அவர் நானொரு பொறியாளர் என அறிமுகப்படுத்திய பின்னர் அவர் ஒரு பொறியாளர் என்பதைத் தெரிந்து கொள்வோம். இதை அவராகச் சொல்லாமல் அவரைத் தெரிந்து கொள்ள முடியாது. இன்னொரு வழி: அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் மூலமாகத் அறிந்து கொள்ள முடியும். அது, அவர் மற்றவருக்கு ஏற்கெனவே தன்னை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார் என்று பொருள்.

நபித்துவ வாழ்வுக்கு முன், நபி (ஸல்) அவர்களை முஹம்மத் என்ற பெயரில் மக்கா நகர் மக்கள் அறிந்திருந்தனர். முஹம்மத் உண்மையாளர், மிக நம்பிக்கையானவர் என்று நன்மதிப்பும் வைத்திருந்தனர். நபியவர்களின் நாற்பதாம் வயதில் இறைவனால், இறைத்தூதுவராக நியமிக்கப்படுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது நாற்பது வயது வரை, அதாவது அவர்கள் நபியாகத் தேர்ந்தெடுக்கும் வரை வேதம் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தார்கள்.

(நபியே) இவ்வேதம் உமக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்த்தவராக நீர் இருக்கவில்லை. (திருக்குர்ஆன், 028:086)

இவ்வாறே நம் கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்பது என்ன என்பதை (நபியே) நீர் அறிந்தவராக இருக்கவில்லை. திருக்குர்ஆன்,(042:052)

நாற்பது வயதுக்கு முன் வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்றால் என்ன? என்பது கூட நபியவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. தாம் நபியாகத் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. என்பதை மேற்கண்ட இறைவசனங்கள் உணர்த்துகின்றன. நபியவர்களுக்கு முதன்முதல் இறைச் செய்தி வந்தபோது அதையும் அவர்களால் உறுதி செய்ய முடியாமல் இருந்தார்கள் என்பதை வரலாற்றில் படிக்கிறோம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நாற்பதாம் வயதில் இறைவனால் அவனது தூதுவராகத் தேர்ந்தெடுக்கபடுகிறார்கள். இந்தத் தேர்வு இறைவனுக்கும், நபியவர்களுக்கும் மட்டுமுள்ள தொடர்பாக இருக்கிறது. அப்படியானால் இறைவன் நபியவர்களைத் தூதராகத் தேர்ந்தெடுத்தச் செய்தி மூன்றாமவருக்கு எப்படித் தெரிந்தது? என்ற விடையில்லாக் கேள்வி இங்கு எழுகிறது.

முஹம்மது நபி (ஸல்)அவர்கள் தாம் ஒரு இறைத்தூதர் என்று மக்களிடம் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட பின்னரே இறைவனின் பக்கம் மக்களை அழைத்து, ஏகத்துவ இஸ்லாமியப் பிராச்சாரத்தைத் துவங்கினார்கள்.

நபியவர்கள் தம்மை இறைத்தூதர் என்று அறிமுகம் செய்த பின்னரே அவர்களை ஏற்றுக்கொண்ட மக்கள் ''அல்லாஹ்வின் தூதரே!'' என்றும் அழைத்து வந்தார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதராக தாமாகச் சொல்லிக் கொண்டதில்லை என்பது சரியான வாதமல்ல! மாறாக, நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் தம்மை இறைத்தூதர் என சுய அறிமுகம் செய்து கொண்டார்கள் எனபதற்கு வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

''மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர்.'' (திருக்குர்ஆன், 007:158)

''நாம் உம்மை மனிதர்களுக்கு தூதராகவே அனுப்பியுள்ளோம்'' (திருக்குர்ஆன், 004:079 இன்னும் பார்க்க: 004:170. 033:040)

முஹம்மது நபியவர்கள் மனிதகுலம் அனைவருக்கும் இறைத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றே திருக்குர்ஆன் மக்களிடையே அறிமுகம் செய்கிறது. குர்ஆன் வசனங்கள் அனைத்தும் நபி (ஸல்) அவர்களின் வாய் வார்த்தைகள் வழியாகவே இறைவன் அருளினான். ''மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர்.'' எனும் வசனத்தின் வாயிலாக தம்மை இறைத்தூதர் என மக்களிடம் சுய அறிமுகம் செய்து கொள்ளும்படி திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.

முஹம்மது நபி தம்மை இறைத்தூதர் என்று அறிவித்துக் கொண்டதில்லை என்ற வாதம் தவறானது என்பதை மேற்கண்ட வசனங்கள் மெய்பிக்கிறது.

மேலும், ''(நபியே) உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக'' (026:214) என்ற வசனம் அருளப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று எச்சரித்தார்கள்.

''அல்லாஹ்வின் தூதர்'' (ஸல்) அவர்களுடைய அத்தையான ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது'' என்று எச்சரிக்கை செய்கிறார்கள். (புகாரி, 4771)

இங்கு தமது தந்தையுடன் பிறந்த சகோதரி, உறவு முறையில் அத்தையாகிய ஸஃபிய்யாவை நோக்கி ''அல்லாஹ்வின் தூதரின் அத்தையே'' எனத் தம்மை இறைத்தூதர் என்று அறிமுகப்படுத்துகிறார்கள்.

ஹுதைபிய்யா உடன்படிக்கையில், ''இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது அவர்கள் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம்'' என்று உடன்படிக்கையில் எழுதும்படி நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி, 2732) (அவ்வாறு எழுத குறைஷியர் சார்பில் ஒப்பந்தம் செய்தவர் மறுத்து விட்டால் என்பது தனி விஷயம்)

இன்னும் அழைப்புப் பணியில், அரசர்களுக்கும், ஆளுனர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் கடிதம் எழுத நாடியபோது அரசர்கள் முத்திரை இல்லாத கடிதங்களை படிக்க மாட்டார்கள் என்பதால் வெள்ளியிலான மோதிரத்தை தயார் செய்தார்கள். அதில் முஹம்மது ரஸூலுல்லாஹ் என்று பதித்தார்கள்.

அல்லாஹ்

ரஸூல்

முஹம்மது


என்று அதில் மூன்று வரிகளாக இருந்தது (புகாரி)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ஹபஷாவின் மன்னர் அஸ்ஹாம் என்ற நஜ்ஜாஷிக்கு எழுதப்படும் கடிதமாகும்..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் எழுதுகிறேன். அல்லாஹ்வின் அடிமையும், அவனது தூதருமான முஹம்மது, கிப்திகளின் மன்னருக்கு எழுதுவது...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, பாரசீகர்களின் மன்னர் கிஸ்ராவுக்கு எழுதுவது...

மேற்கண்டவாறு நபி (ஸல்) அவர்கள் அரசர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். இந்தக் கடிதங்களிலெல்லாம் இறைத்தூதர் முஹம்மது எழுதிக்கொள்வது என்று தம்மை அல்லாஹ்வின் தூதர் என்றே அறிமுகம் செய்து கொண்டார்கள்.

எனவே நபி (ஸல்) அவர்கள், சொல்லாலும், எழுத்தாலும் தம்மை அல்லாஹ்வின் தூதர் என சுய அறிமுகப்படுத்திய பின்னரே அவர்கள் இறைத்தூதர் என மற்றவர்கள் அறிந்துகொண்டார். அறிந்து நபியவர்களைப் பின்பற்றியவர்கள் முஹம்மதை இறைத்தூதர் என ஒப்புக் கொண்டு, நபியை "அல்லாஹ்வின் தூதரே!" என்று அழைத்து வந்தார்கள்.

ஆகவே, முஹம்மது நபி தம்மை இறைத்தூதர் என்று அறிமுகப்படுத்தியதில்லை என்பது தவறானக் கருத்து மட்டுமல்ல, இஸ்லாத்திற்கு முரண்படும் கருத்துமாகும் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Monday, October 22, 2007

இந்தியா காஃபிர் நாடா? (பகுதி-3)

சனி, 20 அக்டோபர் 2007

ஹிஜ்ரத் - நாடு துறத்தல் ஒரு பார்வை!


மூன்றாம் பகுதியை வாசிக்கத் துவங்கும் முன் முன்சென்ற பகுதி-1, பகுதி-2 ஆகியவற்றை பார்வையிட்டுக் கொள்ளுங்கள்.

இஸ்லாமியச் சொல் வழக்கில் “ஹிஜ்ரத்” என்றால் நாடு துறத்தல் என்று பொருளாகும். பிறந்த நாட்டை, வாழ்ந்த பூமியை, வசிக்கும் இல்லத்தை, தமக்குச் சொந்தமான நிலங்களை ஒட்டுமொத்தமாகத் தியாகம் செய்துவிட்டு எந்த அறிமுகமும் இல்லாத அந்நிய நாட்டில் குடியேறுவதாகும். நாடு துறத்தல் பற்றி வரலாற்று ஆசிரியர்களின் கண்ணோட்டம் சுருக்கமாக:

ஹிஜ்ரத் என்றால் தனது எல்லா உலக ஆதாயங்களையும் இழந்து, சொந்த மண்ணில் உள்ள உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு தன்னையும் தனது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்ள தனது சொந்த நாட்டை, சொந்த ஊரைத் துறந்து அந்நிய நாட்டுக்கு அந்நிய ஊருக்குச் செல்வதாகும். இவ்வாறு நாடு துறப்பவர்கள், செல்லும் வழியில் அல்லது செல்வதற்கு முன் பல ஆபத்துகளைச் சந்திக்க வேண்டி வரும். உயிர் பறிபோகலாம்; உடைமைகள் அபகரிக்கப்படலாம்; செல்லுமிடத்தில் எத்தகைய எதிர்காலத்தை முன்னோக்க வேண்டியிருக்குமோ? அங்கு என்னென்ன கவலைகளும், துக்கங்களும், துயரங்களும் மறைந்திருக்கின்றனவோ? என்று அறியாத நிலையில் மேற்கொள்ளும் பயணமே ஹிஜ்ரத்தாகும்.

இப்படியொரு நாடு துறத்தல் எனும் தியாகத்தைச் செய்தவர்கள் இதற்கான மகத்தான கூலியை இறைவனிடம் பெற்றிருக்கிறார்கள் என்று திருமறை குர்ஆன் கூறுகிறது. ஹிஜ்ரத் பற்றிய இறைவனின் கட்டளைகளையும், அதைச் செயல்படுத்திய நபியவர்கள் மற்றும் நபித்தோழர்கள் பற்றியும் சற்று விரிவாகப்பார்ப்போம். அதற்குமுன்,

"இந்தியா ஒரு காஃபிர் நாடு எனவே இந்தியாவில் முஸ்லிம்கள் வசிப்பது ஹராம் - விலக்கப்பட்டது" என்று சில இஸ்லாம் விரோத சக்திகள் கூக்குரலிடுகின்றன. இந்தியாவில் ஒரு மதம் சார்ந்த ஆட்சியை நிறுவ முயற்சிக்கும் மதவாத சக்திகளுக்கு இஸ்லாம் ஒரு பேரிடராக இருப்பதால் முஸ்லிம்களுக்கு எதிராக இஸ்லாத்தையே திருப்பிவிட முயற்சிக்கும் ஒரு சதி வேலையே "இந்தியா போன்ற காஃபிர் நாட்டில் முஸ்லிம்கள் வாழக்கூடாது!" என்ற வாய் கிழிய ஓதும் இப்புதுமந்திரம்.

இந்தியா ஆங்கிலேய அடிமைத்தளையிலிருந்து மீண்டு சுதந்திரம் அடைந்த காலகட்டங்களுக்குப் பின், அதுவரை இந்தியா சுதந்திரம் அடைவதற்காக பாடுபடாமல் அன்னியனின் ஆட்சியில் உயர் பதவிகளை தக்கவைத்து அனுபவித்துக் கொண்டிருந்த ஒரு கூட்டம், இந்தியா சுயாட்சி பெற்றதன் ஊடாகவே முஸ்லிம்கள் பெருவாரியாக வசித்து வந்த பகுதிகளும் தனியாகப் பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட உடன் அவர்கள் கனவு காணும் மதஆட்சியை இந்தியாவில் நிறுவி விடலாம் என மனப்பால் குடித்தனர். ஆனால் அதன் பின்னரும் இந்திய மண்ணின் அனைத்து இடங்களிலும் ஆங்காங்கே பரவி வசித்து வந்த முஸ்லிம்கள் அதற்கு மிகப்பெரும் இடையூறாக இருந்தனர்.

முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து ஒதுக்காமல் தங்களின் கனவு ஈடேறாது என்பதை நன்றாகப் புரிந்து கொண்ட அவர்கள், இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திற்குப் பின்னர் முஸ்லிம்களை இந்தியாவில் நிம்மதியாக வாழ விடாமல் அனைத்து விதத்திலும் இடையூறுகளை ஏற்படுத்தத் துவங்கினர். இதன் பல்வேறு வடிவங்கள் தான் சூரத், பாகல்பூர், பம்பாய், குஜராத், கோயம்புத்தூர் போன்ற இடங்களில் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட திட்டமிட்ட இனக்கலவரங்களும் பாபர் மசூதி போன்ற எண்ணற்ற இறையில்லங்கள் இடிப்பும் ஆகும். இத்தருணங்களின் போதெல்லாம் முக்கியமாக இவர்களின் வாயில் இருந்து உதிர்ந்த வாசகங்கள் மிக முக்கியமானவைகளாகும். “முஸ்லிம்களே! இந்தியாவில் வாழ உங்களுக்கு உரிமையில்லை; ஒன்று நீங்கள் கப்ருஸ்தானுக்குச் செல்ல வேண்டும்; அல்லது பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும்”.

இதுதான் அவர்களின் நோக்கம். சுதந்திரம் அடைந்த கடந்த 60 வருடக்காலமாக இவர்களால் நிகழ்த்தப்பட்ட அனைத்து அட்டூழிய, அராஜகங்களையும் சகித்துக் கொண்டு சொந்தம் மண்ணை விட்டு வெளியேறாமல் இருக்கும் முஸ்லிம்களை என்ன செய்வது என்று புரியாமல் வழிதேடியவர்களின் புதிய கண்டுபிடிப்பு தான் “இந்தியா காஃபிர் நாடு”, “முஸ்லிம்கள் காஃபிர்களுக்கு இடையில் வாழக் கூடாது”, எனவே “முஸ்லிம்கள் உடனடியாக வேறு இஸ்லாமிய நாடுகளுக்கு ஹிஜ்ரத் செய்ய வேண்டும்” இது இஸ்லாமிய சட்டம் என்ற பூச்சுற்றல்.

இதனை அடிப்படையாக வைத்து, அரேபிய நாட்டின் ஆட்சியர்கள், நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றவில்லை! எனக் கூறி, “அரேபிய பூமி எல்லா முஸ்லிம்களுக்கும் ஹிஜ்ரத் செய்யும் நிலமாக இருக்க வேண்டும்” என்று ஹிஜ்ரத் என்றால் என்னவென்றே விளங்கிக்கொள்ளாமல் இந்த அரைவேக்காடுகள் முஸ்லிம்களுக்குப் பாடம் நடத்த வந்திருக்கின்றனர். அதாவது முஸ்லிம்களெல்லாம் அரேபியா மண்ணிலேயே வசிக்க வேண்டும், முஸ்லிமல்லாதவர்கள் ஆட்சியராக இருக்கும் மற்ற பூமியில் முஸ்லிம்கள் வசிக்கக்கூடாது என்று சொல்ல வருகிறார்கள்.

இஸ்லாத்தின் பெயரைக் கூறிவிட்டால் நம்பிவிடுவார்கள் முஸ்லிம்கள் என்று எண்ணியது சரி தான். ஆனால் அதனை ஆய்ந்துப் பார்க்காமல் அப்படியே நம்பி இருக்கும் இடத்தைக் காலி செய்து விடுவார்கள் என்று எண்ணியது தான் இவர்கள் செய்த அபத்தம்.

இவர்களின் கருத்தில், முஸ்லிம்கள் இந்நாட்டின் மைந்தர்கள் அல்ல, அவர்கள் அரேபியா நாட்டிற்குச் செல்ல வேண்டியவர்கள் என்ற சூழ்ச்சிகள் மறைந்திப்பது மட்டுமல்லாது, ஹிஜ்ரத் பற்றிய அறியாமையும் தாராளமாக நிறைந்திருக்கின்றன. ஹிஜ்ரத் என்பது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பிழைப்புக்காகச் செல்வது போல் அல்ல! அல்லது இந்தியாவிலிருந்து சுற்றுப்பயணமாக பல நாடுகளுக்கு ஜாலி டிரிப் - மகிழ்ச்சியான பயணம் சென்று வருவது போலவும் அல்ல!

ஹிஜ்ரத் மிகவும் கடுமையானது, ஹிஜ்ரத் கடமையாக்கப்பட்ட நேரத்தில் அக்கடமையைக் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும். ஹிஜ்ரத்தை மேற்கொள்ளும் சமயத்தில் அதிலிருந்து தவறினால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் இஸ்லாம் எச்சரிக்கை செய்கிறது. இஸ்லாமிய ஒளியில் ஹிஜ்ரத்தினைக் குறித்து சற்று விரிவாக இங்கு காண்போம்:

நபித்துவ வாழ்வில் முதல் ஹிஜ்ரத்:

இறைத்தூதுவராக, இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மக்காவில் ஆரம்பக் காலகட்ட இஸ்லாமியப் பிரச்சாரத்தைத் துவங்கிய காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்கள், இஸ்லாத்தின் மார்க்க கடமைகளை நிறைவேற்ற இயலாமல் மக்கா நகர் முஷ்ரிகின்களால் சித்ரவதை செய்யப்பட்டார்கள். சிலர் கொலை செய்யப்பட்டு மாண்டும் போனார்கள். குறைஷியருக்கு அஞ்சி இறைக் கடமைகளை நிறைவேற்ற இயலாமல் தவித்துக்கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு, இதற்கான வழிகாட்டலை இறைவன் அறிவித்தான்.

“நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள். இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு நன்மையே உள்ளது. அல்லாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி கூலி வழங்கப்படும்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 039:010)

குறைஷியரிடமிருந்து உயிரையும் மார்க்கத்தையும் பாதுகாத்துக்கொள்ள ஹபஷா(அபிசீனியா)விற்கு ஹிஜ்ரத் செய்யுமாறு தொடக்கக்கால நபித்தோழர்களை நபி(ஸல்) அவர்கள் பணித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அனுமதியுடன், தாம் பிறந்த மண்ணைத் துறந்து முஸ்லிம்கள் ஹபஷாவிற்குப் பயணம் மேற்கொண்டனர். "எங்களுக்கு வீடு, சொத்து எதுவுமே வேண்டாம்" என்று முடிவெடுத்து எல்லாவற்றையும் இழந்து செல்லத் தயாராக இருந்தாலும் நாடு துறந்து செல்வது முஸ்லிம்களுக்கு இலகுவானதாக இருந்திருக்கவில்லை. மக்காவை விட்டு வெளியேற முயன்ற முஸ்லிம்களின் முயற்சியைக் குறைஷியர் அறிய நேர்ந்தால் அவர்களை விலங்கிட்டுக், கைதிகளாக்கி அடைத்து வைத்தார்கள். அதனால் நாடு துறந்து செல்வதும் அத்துணை எளிதாக இருக்கவில்லை!

முதலாவதாக நாடு துறந்து சென்றவர்களில் பன்னிரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் இருந்தனர். அவர்களுக்குத் தலைவராக உஸ்மான் பின் அஃப்பான்(ரலி) அவர்கள் இருந்தார்கள். இப்பயணத்தில் அவர்களின் மனைவியான (நபி(ஸல்) அவர்களின் மகள்) ருகையாவும்(ரலி) உடன் இருந்தார்கள். “நபி இப்ராஹீம்(அலை), நபி லூத்(அலை) ஆகிய இருவருக்குப் பின் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்த முதல் குடும்பம் இதுதான்” என்று இவ்விருவரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இது நபித்துவம் பெற்ற ஐந்தாம் ஆண்டில் நடைபெற்றது.

இரண்டாவது ஹிஜ்ரத்:

முஸ்லிம்கள் பெருமளவில் ஹபஷாவிற்கு ஹிஜ்ரத் செல்ல ஆயத்தமானார்கள். ஆனால் இந்த இரண்டாவது ஹிஜ்ரத் முந்திய ஹிஜ்ரத்தை விட மிகக் கடினமானதாகவே இருந்தது. முஸ்லிம்களின் இப்பயணத்தை குறைஷிகள் அறிந்து கொண்டதால் அத்திட்டத்தை அழிக்க வேண்டுமென்பதற்காகத் தீவிரமான முயற்சியில் இறங்கினர். ஆனால் அல்லாஹ்வின் அருளால் பயணம் அவர்களுக்குச் சாதகமாகி நிராகரிப்பவர்கள் தங்களது திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னதாகவே பயணத்தைத் துரிதப்படுத்தி ஹபஷா சென்றடைந்தனர். இம்முறை 83 ஆண்களும் 18 பெண்களும் ஹபஷா சென்றனர்.

ஹபஷாவிற்குச் சென்ற முஸ்லிம்களை, குறைஷியர் அங்குச் சென்றும் திரும்ப மக்காவுக்குக் கொண்டு வர முழு முயற்சி மேற்கொண்டனர். அன்றைய ஹபஷாவின் மன்னர் நஜ்ஜாஷி நீதமானவராக இருந்ததால் குறைஷியரின் சூழ்ச்சிகள் பலிக்கவில்லை. அதனால் முஸ்லிம்களை மீண்டும் மக்காவுக்குக் கொண்டு வருவதில் தோல்வியடைந்த குறைஷியர், மக்காவில் எஞ்சியிருந்த மற்ற முஸ்லிம்களிடம் மேலும் மூர்க்கத்தனமானக் கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டனர்.

நபியவர்களின் ஹிஜ்ரத்:

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மதீனாவாழ் முஸ்லிம்கள், மக்கா வாழ் முஸ்லிம்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டினர். அதன் பேரில் முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கும் ஹிஜ்ரத் சென்றார்கள். இவ்வாறாக முஸ்லிம்களின் ஆதரவு மேலோங்க குறைஷியர் குல முஷ்ரிகின்கள் கொந்தளித்தனர். இறுதியாக இஸ்லாத்தை முடக்கிட நபி(ஸல்) அவர்களையும் குறிவைத்துக் கொல்லத் திட்டம் தீட்டினார்கள். நபி(ஸல்) அவர்களைத் தீர்த்துக்கட்ட மூன்று ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன.

1. ஊரை விட்டு வெளியேற்றுவது.

2. சங்கிலியால் விலங்கிட்டு ஒரு அறையில் அடைத்து சாகும்வரை அப்படியே விட்டுவிடுவது.

3. கொன்று விடுவது.

இம்மூன்று யோசனையில் மூன்றாவதைச் சிறந்த திட்டமென ஏற்று, நபி(ஸல்) அவர்களைக் கொலை செய்து விடுவதைக் குறைஷி முஷ்ரிகின்கள் தேர்ந்தெடுத்தார்கள். அதற்கான ஆட்களும், நாளும் தேர்ந்தெடுக்கப்பட்டத் தருணத்தில், இறைவனின் உத்தரவினால் ஏற்கெனவே மதீனாவாசிகளோடு மக்காவில் வைத்து செய்து கொண்ட அகபாவின் இரண்டாவது உடன்படிக்கையின்படி மதீனாவாசிகள் தந்த ஆதரவையேற்று நபி(ஸல்) அவர்கள் நாடு துறந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்தார்கள்.

“இன்பத்திலும் துன்பத்திலும் (இறைக் கட்டளைக்கு) செவிசாய்க்க வேண்டும்; கட்டுப்பட வேண்டும். வசதியிலும் வசதியின்மையிலும் செலவு செய்ய வேண்டும். நன்மையை ஏவவேண்டும்; தீமையைத் தடுக்க வேண்டும். அல்லாஹ்வுக்காக நீங்கள் தியாகம் செய்யத் தயாராக வேண்டும். அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவர்களின் பழிப்பு உங்களைப் பாதித்து விடக்கூடாது. ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்காகச் சண்டையிடக்கூடாது. நான் உங்களிடம் வந்து விட்டால் நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும். உங்களையும், உங்களின் மனைவியரையும் பிள்ளைகளையும் பாதுகாப்பதைப் போல் நீங்கள் என்னைப் பாதுகாக்க வேண்டும். இதனை நீங்கள் பைஆ (இஸ்லாமிய ஒப்பந்தம்) செய்து கொடுங்கள். அல்லாஹ் உங்களுக்குச் சொர்க்கத்தைத் தருவான்” இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் அகபாவில் வைத்து உரை நிகழ்த்தினார்கள்.

அப்பொழுது அகபாவில் மதீனாவாசிகள் நபி(ஸல்) அவர்களுக்குக் கீழ்க்கண்டவாறு உறுதியளித்தனர்:

“செல்வங்கள் அழிந்தாலும், (எங்களில்) சிறப்பிற்குரியவர்கள் கொல்லப்பட்டாலும் நாங்கள் இவரை அரவணைத்துக் கொள்வோம்; கைவிட்டுவிட மாட்டோம். இதே நிபந்தனைகளின் பேரில்தான் இவரை அழைத்துச் செல்கிறோம். நாங்கள் இந்த நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றினால் எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று மதீனாவாசிகள் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “சொர்க்கம் கிடைக்கும்” என்று கூறினார்கள். உடனே அந்த மக்கள் ‘உங்களது கையை நீட்டுங்கள்' என்று கூற நபி(ஸல்) அவர்கள் கையை நீட்டியவுடன் அனைவரும் இஸ்லாமிய ஒப்பந்தம் செய்து கொடுத்தார்கள்.

மதீனாவாசிகள் அகபாவில் வைத்து ஏற்கெனவேச் செய்து கொடுத்த இந்த ஒப்பந்தத்தின்படி நபி(ஸல்) அவர்களும் அவர்களைப் பின்பற்றிய முஸ்லிம்களும் துன்பத்தோடும் துயரத்தோடும் உயிருக்கு அஞ்சிய நிலையிலும் ஹிஜ்ரத் பயணம் சென்றார்கள். ஹிஜ்ரத் - நாடு துறந்தவர்கள் பற்றியும் அவர்களுக்கான நற்கூலிகள் பற்றியும் திருமறை குர்ஆன்...

ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள். மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள். (அல்குர்ஆன், 009:020)

கொடுமைப்படுத்தப்பட்டப் பின்னர், அல்லாஹ்விற்காக நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர்களுக்கு, நாம் நிச்சயமாக அழகான தங்குமிடத்தை இவ்வுலகத்தில் கொடுப்போம். இன்னும், அவர்கள் (இதை) அறிந்து செயற்படுவார்களாயின் மறுமையிலுள்ள (நற்) கூலி (இதைவிட) மிகவும் பெரிது. (அல்குர்ஆன், 016:041, மேலும் பார்க்க: 016:110)

அல்லாஹ்வுடைய அருளையும் அவனுடைய பொருத்தத்தையும் அடைவதற்காகத் தங்கள் செல்வத்தை இழந்து இல்லங்களிலிருந்து வெளியேற்றப் பட்டுப் புலம் பெயர்ந்த ஏழைகளுக்கும் (போர் பொருட்களில்) பங்குண்டு. அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனின் தூதருக்கும் இடையறாது உதவிகள் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தாம் உண்மையாளர்கள். (அல்குர்ஆன், 059:008)

இன்னும், எவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு) ஹிஜ்ரத் செய்து பின்னர் கொல்லப்பட்டோ இறந்தோ விடுகிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் அழகிய உணவை நிச்சயமாக அளிக்கின்றான்; (ஏனெனில்) உணவளிப்பவர்களிலெல்லாம் நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க மேலானவன். (அல்குர்ஆன், 022:058.)

ஹிஜ்ரத்தின் நோக்கம்:

ஆரம்பக் காலகட்டத்தில் மிகச் சொற்ப விசுவாசிகளைப் பெற்றிருந்த இஸ்லாம், முஸ்லிம்கள் மார்க்கத்தைப் பேணவும், உயிர்களைக் காத்துக்கொள்ளவும் ஹிஜ்ரத் எனும் நாடு துறக்கும் தியாகத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இஸ்லாம் ஹிஜ்ரத்தைக் கடமையாக்கியது என்பதை இஸ்லாத்தின் வரலாற்றுப் பதிவுகள் சான்று பகிர்கின்றன. அதன்படி ஹபஸாவை நோக்கிய முதல் இரு ஹிஜ்ரத்கள் அமைந்தன.

மதீனாவை நோக்கிய ஹிஜ்ரத், குறைஷியரிடமிருந்து தப்பிச் செல்வதோடு, நிரந்தமாக அன்றைய முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதற்காகவும், அதற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு உறுதுணையாக நின்று மார்க்கத்தை மேலோங்கச் செய்ய வேண்டும் என்ற வகையிலும் அமைந்தது. அதாவது எதிரிகளிடமிருந்து தப்பியோடுவதைத் தவிர்த்து அவர்களை ஒன்றிணைந்து எதிர்த்துப் போராடுவதற்காக, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தலைமையின் கீழ் வலுவான சக்தியாக முஸ்லிம்கள் ஒன்று சேரவேண்டும் என்ற காரணத்திற்காகவும் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வது அன்றைய முஸ்லிம்களின் மீது கடமையாக இருந்தது.

இஸ்லாமிய வரலாற்றில் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் நடந்த முதலாவது யுத்தமாகிய பத்ர் போரில், 317 பேர்களே முஸ்லிம்களின் படை தரப்பில் இருந்தனர். இது எதிரிகளின் படையில் நான்கில் ஒரு பங்கு. எதிரிகளின் படையில் 1300 பேர்கள் இருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பத்ர் போர் நடந்து கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் தமது இறைவனை நோக்கி. “அல்லாஹ்வே! இக்கூட்டத்தை இன்று நீ அழித்து விட்டால் உன்னை வணங்குவதற்கு இப்பூமியில் யாருமே இருக்க மாட்டார்கள். அல்லாஹ்வே! நீ இக்கூட்டத்தை அழிக்க நாடினால் இன்றைய தினத்திற்குப் பின் உன்னை யாரும் வணங்க மாட்டார்கள்” என்று இறைவனிடம் கையேந்தினார்கள். நபி(ஸல்) அவர்களின் பிரார்த்தனையை ஏற்று அல்லாஹ் உதவி புரிந்தான்.

அன்று 317 பேர்களைப் பெற்றிருந்த முஸ்லிம் படைகளைக் கொண்டுதான் தூய இஸ்லாத்தின் ஏகத்துவக்கொள்கை நிலைநாட்டப்பட்டது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. அதனாலேயே அன்றைய முஸ்லிம்களின் ஹிஜ்ரத் எனும் தியாகத்தை அல்லாஹ் பொருந்திக்கொண்டான், அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டதாக அருள்மறை குர்ஆன் கூறுகிறது...

“ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸாரிகளிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான்... (அல்குர்ஆன், 009:100)

ஹிஜ்ரத் செய்தவர்களுடன், அன்ஸார்களையும் சேர்த்தே இறைவன் குறிப்பிட்டு கூறுகிறான். இதற்கும் முக்கியக் காரணங்கள் உண்டு. (இதை தொடரும் பகுதியில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்)

இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தோரையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான காலகட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களை மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன், இரக்கமுடையோன். (அல்குர்ஆன், 009:117)

ஹிஜ்ரத்திற்கான முக்கியக் காரணிகள், சிரமமான காலத்தில் சிரமத்தைப் பொருட்படுத்தாமல், பொருளிழப்பாலும், உயிரிழப்பாலும் மார்க்கத்துக்கு உதவும் உண்மை நோக்கில் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் பின்பற்றியவர்களை மேற்கண்ட வசனம் சிறப்பித்து கூறுகிறது. தொடர்ந்து வரும் வசனத்தில்...

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட அவர்கள் மகத்தான பதவியுடையவர்கள்... (அல்குர்ஆன், 057:010)

மக்கா வெற்றிக்குப் பின் மார்க்கம் நிலையாக மேலோங்கியது. மக்கா வெற்றிக்கு முன் இஸ்லாத்திற்காகச் செய்த தியாகங்களுக்கு சமமாக மக்கா வெற்றிக்குப் பின் செய்யப்படும் தியாகங்கள் வராது. அதாவது, மக்கா வெற்றிக்கு முன் இஸ்லாத்திற்காக நாடு துறந்த, அறப்போர் செய்த தியாகங்களுக்கு மகத்தான பதவியுண்டு. மக்கா வெற்றிக்குப் பிறகு செய்யும் தியாகங்கள் அதற்குச் சமமாக இல்லை!

ஹிஜ்ரத் செய்வதற்கான உறுதிமொழியைப் பெறுவதற்காக (என் சகோதரர்) அபூ மஅபத் (முஜாலித்) அவர்களை அழைத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி(ஸல்) அவர்கள், “ஹிஜ்ரத், அதற்குரியவர்களுக்குக் கடமையாகி (நிறைவேறி) முடிந்துவிட்டது. இனி, இஸ்லாத்தின்படி நடந்திடவும் அறப்போர் புரிந்திடவும் தான் இவரிடம் நான் உறுதிமொழி பெறுவேன்” என்று கூறினார்கள். (புகாரி, 4307. முஸ்லிம், 3796, 3797)

வாழ்க்கையும் மார்க்கமும் கேள்விக்குறியாகும் மேற்காணும் கொடுமையான சூழல் இல்லையென்றால், ஹிஜ்ரத் கடமையன்று என மேற்கண்ட நபிமொழியைப் போல் சில நபிமொழிகள் தெளிவாக உணர்த்துகின்றன. அவற்றை அடுத்த பகுதியில் காண்போம் இன்ஷா அல்லாஹ்.

ஆக்கம்: அபூ முஹை

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Tuesday, October 16, 2007

இந்தியா காஃபிர் நாடா? (பகுதி-2)

புதன், 03 அக்டோபர் 2007

முஷ்ரிகீன் (இணை வைப்பவர்கள்) மத்தியில் முஸ்லிம்கள் வாழலாமா?

கட்டுரையின் முதல் பகுதியினைப் படித்துவிட்டுத் தொடருங்கள்.

முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்களும், முஸ்லிம்கள் மத்தியில் முஷ்ரிகின்களும் வாழ்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட காரியம் என்பது போலவும், அவ்வாறு வாழ்தல் நடைமுறைக்கும் கூட ஒத்து வராது என்பது போலவும் சிலர் புனைந்து கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

இதன் பின்னணி என்ன என்பதை இறைவன் அறிவான். எனினும் இதனூடான ஓர் அரசியல் சூழ்ச்சியை முதலில் சமூகம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாம் அரேபிய மண்ணில் நபி(ஸல்) அவர்களால் புனர் நிர்மாணிக்கப்பட்ட அக்காலகட்டத்திலேயே கேரள கடல் வழியாக, சமூகத்தில் தாழ்த்தப்பட்டு, சமூக நீதி கிடைக்காமல் ஒடுக்கப்பட்ட இந்திய மக்களிடையே காலூன்றி விட்டதை வரலாறு தெளிவாக அறிவிக்கின்றது. அதன் பிந்தைய குறுகிய கால கட்டத்திலேயே இந்தியாவில் சமூக நீதி மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வழங்கி அவர்களை சமூக நீரோட்டத்தில் இஸ்லாம் மேலே கொண்டு வந்து விட்டது.

இதனைப் பொறுக்க இயலாத சில தீயசக்திகள் அக்கால கட்டத்திலேயே இஸ்லாம் மார்க்கத்தை இந்தியாவிலிருந்து வேரோடு அழிக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்பட்டு வருவதையும் இந்திய வரலாறு பதிந்து வைத்துள்ளது. இதன் பின்னணியிலேயே இந்தியா ஒரு காஃபிர் நாடு என்றும், முஸ்லிம்கள், முஷ்ரிகின்கள், காஃபிர்கள் மத்தியில் வாழ இஸ்லாத்தில் தடை உள்ளது என்றும் இந்திய கலாச்சார, பண்பாட்டு வரலாற்றையும், இஸ்லாமிய கொள்கைகளையும் தங்களுக்கு இயைந்த வகையில் வளைத்தொடித்தும், திரித்தும் முஸ்லிம்கள் மத்தியிலேயே ஓர் சந்தேகமான, இந்தியாவில் வாழ்வதில் ஒரு பிடிப்பற்ற சிந்தையை உருவாக்க முயல்வதைக் கவனமாகக் கண்டு கொள்ள வேண்டும்.

இனி முதலில் இஸ்லாத்தில் அவ்வாறு முஷ்ரீகீன் மத்தியில் முஸ்லிம்கள் வாழ்வதற்கு தடையுள்ளதா என்பதை ஆதாரத்துடன் காண்போம்.

இஸ்லாம் மார்க்கத்தின் இறைவேதம் திருமறைக்குர்ஆன் அறிவுக்குப் பொருந்தாத எந்த வசனங்களையும் தன்னகத்தேக் கொண்டிருக்கவில்லை. இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அறிவுக்கு பொருத்தமில்லா எந்த வார்த்தையையும் மொழிந்ததில்லை. மேலும் அது ஒருவரால் செய்ய இயலாத, அவருடைய சக்திக்கு அப்பாற்பட்ட எந்த ஒரு கட்டளையையோ, கடமையையோ நிர்பந்திக்கவும் இல்லை.

“அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்) எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் (அறியாது) தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன். காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” (அல்குர்ஆன், 002:286)

“நாங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் (அவர்களின் கட்டளைகளைச்) செவியுற்றுக் கீழ்படிந்து நடப்போம் என உறுதிமொழி அளிக்கும்போது அவர்கள், ‘என்னால் முடிந்த விஷயங்களில்’ என்று (சேர்த்துச் சொல்லுமாறு) கூறுவது வழக்கம்.” (முஸ்லிம்: 3803, புகாரி: 7204 )

மேற்கண்ட இறைவசனமும், நபிமொழியும் இஸ்லாம் மனிதனின் சக்திக்கப்பாற்பட்ட சுமைகளைச் சுமத்துவதில்லை என்று வாக்களிக்கிறது! நாங்கள் செவியேற்றுக் கீழ்படிந்து நடப்போம் என்று சொன்னவர்களையும் கூட, “உங்களால் இயன்றவரை நிறைவேற்றுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் திருத்தம் செய்திருப்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியது.

இன்று சிலர் கூற முற்படுவது போன்று முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் வாழ இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்ற ஒரு விதி இருக்குமாயின் அது தனிப்பட்ட வகையில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சுமையான காரியம் என்பதைத் தனியாக விளக்க வேண்டிய அவசியமில்லை.முஸ்லிம்கள் முஷ்ரிகீன் மத்தியில் வாழக்கூடாது என்பது இக்காலகட்டத்தில் மட்டுமில்லை, என்றைக்குமே சாத்தியமில்லாதது. இஸ்லாம் உலகளாவிய மார்க்கம் என்றால் உலகளாவிய மக்களிடையே அது தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

முஷ்ரிகீன் மத்தியில் நபியவர்கள்

நபி(ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்க்கை காலமெல்லாம் அவர்கள் முஷ்ரிகீன் மத்தியிலேயே வாழ்ந்து வந்துள்ளதற்கு தெளிவான ஆதாரங்கள் காணக்கிடைக்கின்றன.

“குல் யா அய்யுஹல் காஃபிரூன் - (ஏக இறைவனை) மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன்.” (அல்குர்ஆன் 109:001)

என்ற வசனம் இஸ்லாத்தை நிராகரித்த முஷ்ரிகின்களை அழைத்தல்லவா பேசுகிறது? இன்னும் முஷ்ரிகீன் கடவுட் கொள்கைகளுக்கு பதிலடியாக திருக்குர்ஆனில் பல வசனங்கள் அருளப்பட்டதையும் காண முடிகிறது.

முஷ்ரிகீன் கடவுட் கொள்கையை விமர்சித்திருக்கும் எந்த ஒரு குர்ஆன் வசனத்திலும் அவர்களிடையே வசிக்க வேண்டாம் என்றொரு கட்டளையைக் காண இயலாது.

ஒருமுறை, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் இறப்புக்குப்பின் (கலீஃபா) அபூபக்ர்(ரலி) அவர்கள் உமர் (ரலி)அவர்களிடம், “நம்மை (அம்மையார்) உம்மு அய்மன்(ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சந்தித்து வந்ததைப் போன்று நாமும் சந்தித்து வருவோம்” என்று கூறினார்கள்.

அவ்வாறே உம்மு அய்மன்(ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றபோது அவர்கள் அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும், ''ஏன் அழுகிறீர்கள்? அவனுடைய தூதர்(ஸல்) (நம்மோடு இருப்பதைவிட) அல்லாஹ்விடம் இருப்பது அவர்களுக்குச் சிறந்ததாயிற்றே?” என்று கேட்டார்கள்.

அதற்கு உம்மு அய்மன்(ரலி) அவர்கள், “அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழவில்லை. மாறாக (அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் இறப்போடு) வானிலிருந்து இறைச் செய்தி (வஹீ) வருவது நின்று விட்டதே! (அதற்காகத் தான் அழுகிறேன்)” என்று கூறி அவர்கள் இருவரையும் அழச்செய்து விட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவருமே அழலாயினர்.
(முஸ்லிம்: 4849)

(“உம்மு அய்மன் என் தாய்க்குப்பின் தாய்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்)

இஸ்லாமிய வரலாற்றில் மிகச் சிறந்த காலம் விண்ணுக்கும், மண்ணுக்கும் இறைச்செய்தியின் தொடர்பு இருந்த காலமாகும். நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் விண்ணிலிருந்து வந்துகொண்டிருந்த இறைச்செய்தி முற்றுப்பெற்று விட்டதே எனக்கூறி உம்மு அய்மன்(ரலி) அவர்கள் அழுதார்கள். இறைச்செய்தியின் சுவையை அனுபவித்தவர்கள் விண்ணுக்கும் மண்ணுக்குமுள்ள தொடர்பு - நபியவர்களின் மறைவோடு முடிந்து விட்டதே என அழுதிருக்கிறார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அந்த வஹியின் தொடர்புடைய பொற்காலமெல்லாம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முஷ்ரிகீன் மத்தியில்தான் வாழ்ந்தார்கள். யூதர்களிடம் கடன் பெற்றுத் திரும்பச் செலுத்தியிருக்கிறார்கள். மற்றொரு சமயம் யூதரிடம் தம் கவசத்தை அடமானம் வைத்திருந்தார்கள், அதையும் திருப்பாமலேயே மரணமடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நபி(ஸல்) அவர்கள் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே முஷ்ரிகீன் மத்தியிலேயே இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். நபியவர்களின் மறைவிற்குப் பின்னும் அவர்கள் விட்டுச்சென்ற பிரச்சாரம் இன்றுவரை ஓய்ந்து விடவில்லை! இறுதிநாள் வரையிலும் முஷ்ரிகீன் மத்தியில் பிரச்சாரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அதாவது முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார்கள்.

முஸ்லிம்களுக்கு மத்தியில் முஷ்ரிகீன்

எவ்வாறு முஷ்ரிகீன் அதிகமாக இருந்த நேரத்தில் முஹம்மது(ஸல்) அவர்கள் மத்தியில் வாழ்ந்து இஸ்லாமிய பிரச்சாரத்தை மேற்கொண்டார்களோ, அது போன்றே முஸ்லிம்கள் அதிகமாக இருந்த காலத்தில் முஷ்ரிகீன் முஸ்லிம்கள் மத்தியில் எவ்வித பிரச்சனைகளும் இன்றி சுபிட்சமாக வாழ்ந்துள்ளனர்.

“(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!. அதன்பின் அவரைப் பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்." (அல்குர்ஆன் 009:006)

நபி(ஸல்) அவர்கள் முஷ்ரிகீன் மத்தியில் வாழ்ந்தார்கள், முஷ்ரிக்குகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். ஒப்பந்தத்தை முறித்து எதிரிகளுடன் இணைந்து துரோகம் இழைத்தவர்களுடன் போர் செய்தார்கள். இஸ்லாமிய நாட்டில் முஸ்லிமல்லாதவர்களிடம் குடியுரிமை வரியென இஸ்லாமிய ஆட்சியர் ஜிஸ்யா வரி வசூலிப்பார்கள். இந்த வரி இன்றும் நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டம். இது முஸ்லிம்களுக்கு மத்தியில் முஷ்ரிகீன் சேர்ந்து வாழ்வதை இஸ்லாம் அனுமதிப்பதற்குரிய சிறந்த ஆதாரமாகும்.

“உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு உன் பெற்றோர் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே, அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்.” (அல்குர்ஆன், 029:008. 031:015)

இணை வைக்கும் விஷயத்தில் மட்டும் பெற்றோர்களுக்குக் கட்டுப்படாமல், மற்ற உலக விஷயங்களின் இணைவைக்கும் முஷ்ரிக் - காஃபிர் பெற்றோர்களுக்கு கடமைகளைச் செய்ய வேண்டும் என இவ்வசனம் கட்டளையிடுகின்றது. முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் வாழ இஸ்லாத்தில் அனுமதியில்லை எனில், இறைவனின் இக்கட்டளைக்கு அர்த்தமில்லாமல் போய் விடும்.

மேலும்,

“மார்க்கத்தால் எதிரியில்லாத முஷ்ரிக்கீன் - காஃபிர்களுடன் நல்லமுறையில் நடந்து கொள்ள இஸ்லாம் கூறுகிறது”. பார்க்க: அல்குர்ஆன், 060:008, 009. வசனங்கள்.

அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் முஷ்ரிகத் - இணைவைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், “என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரது உறவைப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்ளட்டுமா?” என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், “ஆம்! நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்” என்று கூறினார்கள்.
(புகாரி: 2620)

நபியவர்களின் இந்த மார்க்கத் தீர்ப்பு அன்றும், இன்றும், யுக முடிவு நாள் வரையும் செயல்படுத்தத்தக்கது.

முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்களோ அல்லது முஸ்லிம்கள் மத்தியில் முஷ்ரிகின்களோ வாழ்வதற்கு இஸ்லாத்தில் எந்தவொரு தடையும் இல்லை என்பதற்கு இன்னும் பல உதாரணங்களை வரலாற்றிலிருந்தும், நபி(ஸல்) அவர்களின் வாழ்விலிருந்தும் எடுத்துக் காட்ட இயலும். விரிவஞ்சி இத்துடன் இதனை நிறுத்திக் கொள்வோம்.

இனி, முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் வசிக்கக்கூடாது என்ற கருத்திலுள்ள ஹதீஸைப் பார்ப்போம்.

நபி(ஸல்) அவர்கள் ஹஸ்அம் கோத்திரத்தாரை நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள் . அவர்களில் சிலர் ஸஜ்தாவின் மூலம் உயிரைக் காத்துக் கொள்ள முயன்றனர். அப்படையினர் அவர்களைக் கொன்று விட்டனர். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிந்ததும் அவர்களின் குடும்பத்தினருக்கு பாதி நஷ்ட ஈடு கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். “முஷ்ரிகீன் மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன்” என்று அப்போது கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! ஏன்?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். “இருவரின் நெருப்புகளும் ஒன்றை ஒன்று பார்க்கலாகாது” என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். (திர்மிதி)

இதே கருத்தில் வரும் மற்றொரு ஹதீஸ்.

“முஷ்ரிகின்களுடன் குடியிருக்காதீர்கள்! அவர்களை மணக்காதீர்கள்! யார் அவர்களுடன் வசிக்கவோ குடியிருக்கவோ செய்கிறாரோ அவரும் அவர்களைப் போன்றவரே!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

இந்த நபிமொழிகள் முர்ஸல் வகையை சேர்ந்ததாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ஹைஸ் பின் அபீ ஹாஷிம் என்பவர் நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஜரீர்(ரலி) வழியாக இந்த ஹதீஸை அறிவிக்கிறார். மற்றொரு இடத்தில் நபித்தோழரை விட்டுவிட்டு நேரடியாக நபியவர்களிடம் கேட்டதாகவும் அறிவிப்பதால் இது முர்ஸல் - அறிவிப்பாளர் தொடர் அறுந்த ஹதீஸ் வகையைச் சேர்ந்ததாகும். அதாவது ஹஸன் என்ற தரத்தைச் சேர்ந்தது. ஆனால் சட்டத்தை வகுக்கும் ஸஹீஹான ஹதீஸின் தரத்தைச் சேர்ந்ததல்ல.

ஒரு ஹதீஸை வைத்துச் சட்டம் வகுக்க வேண்டும் எனில், அந்த ஹதீஸ் ஸஹீஹ் தரத்தில் உள்ளதாக இருக்க வேண்டும்; முக்கியமாக குர்ஆனுக்கு முரண்படக் கூடாது என்பது ஹதீஸ் கலை சட்டமாகும். மேலும், மேலே கூறப்பட்ட அனைத்து ஆதாரங்களும் முஸ்லிம்கள் முஷ்ரிகின்களுக்கு மத்தியிலோ அல்லது முஷ்ரிகின்கள் முஸ்லிம்களுக்கு மத்தியிலோ வாழ இஸ்லாத்தில் தடையில்லாததைத் தெளிவாக எடுத்தியம்புவதால் முர்ஸல் வகையை சேர்ந்த மேற்கண்ட ஹதீஸை வைத்து அவ்வாறு ஒரு சட்டம் இஸ்லாத்தில் வகுக்க வேண்டிய அவசியமும் முஸ்லிம்களுக்கு இல்லை.

இனி இந்த ஹதீஸின் விளக்கத்தை காண்போம்:

நபி(ஸல்) அவர்கள் ஒரு கோத்திரத்தினரை நோக்கிப் படையை அனுப்பி வைத்தார்கள் என்று வருகின்றது. இதிலிருந்து அந்தக் கோத்திரத்தினர் நபியவர்களின் கட்டுப்பாட்டிற்குள் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. நபி(ஸல்) அவர்கள் அனுப்பிய படையினரிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ளச் சிலர் ஸஜ்தா செய்திருக்கிறார்கள். அவர்களைப் படையினர் கொன்று விட்டனர். சரணடைந்தவர்களைக் கொல்வது தவறு என்பதற்காகவே நபி(ஸல்) அவர்கள் அவர்களின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு கொடுக்குமாறு கட்டளையிடுகிறார்கள்.

இந்தத் தருணத்தில்தான், “முஷ்ரிகீன் மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். திருமறைக்குர்ஆன் வசனங்களும், வேறு நபிமொழிகளும் முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் வாழ அனுமதிப்பதை மேலே விளக்கிய ஆதாரங்கள் தெளிவிக்கின்றது. நபி(ஸல்) அவர்களும் அவ்வாறு வாழ்ந்திருக்கிறார்கள் எனும்போது திருமறைக் குர்ஆனுக்கும் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நடைமுறைகளுக்கும் எதிராக ஒரு சட்டத்தை வகுக்கும் வகையில் இந்த முர்ஸலான ஹதீஸைக் கொண்டு வந்து வலிந்து பொருத்தக் கூடாது.

அப்படியெனில் மேற்காணும் முர்ஸலான ஹதீஸில் வரும், ''முஷ்ரிகீன் மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன்” என்று நபி(ஸல்) கூறியதன் பொருள் யாதெனில், “முஷ்ரிகீன் மத்தியில் வாழும் முஸ்லிம்கள் இஸ்லாத்தைவிட முஷ்ரிகின்களின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. இஸ்லாத்தைவிடப் பிறவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முஷ்ரிகீன் மத்தியில் - வாழும் முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக்கொள்கிறேன்” என்று பொருள் கொள்வதே பொருத்தமாகத் தெரிகிறது.

இப்படி விளங்கினால் திருமறை வசனங்களுக்கும், வேறு நபிமொழிகளுக்கும் இந்த ஹதீஸும் எவ்விதத்திலும் முரண்படவில்லை என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.

ஹிஜ்ரத் எப்பொழுது, யாருக்குக் கடமையாகும் என்பதையும் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு அது கடமையா என்பதையும் குறித்து இன்ஷா அல்லாஹ் அடுத்த பகுதியில் காண்போம்.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)

ஆக்கம்: அபூமுஹை

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

< பகுதி -1

இந்தியா காஃபிர் நாடா? (பகுதி-1)

புதன், 19 செப்டம்பர் 2007

சத்தியமார்க்கம்.காம் தளத்தில், "இந்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ள கல்வி உதவித்தொகை'' என்ற தலைப்பில் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு அரசு ஒதுக்கியுள்ள கல்வி உதவித்தொகையைக் குறித்தும் அதனை பெறும் முறையினை குறித்தும் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் சுலைமான் என்பவர், "இந்தியா காஃபிர் நாடு என்றும், காஃபிர் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் இந்தியாவை விட்டு நாடு துறந்து - ஹிஜ்ரத் செல்ல வேண்டும்; அப்படிச் செல்லாதவர்கள் நரகத்தில் ஒதுங்குவார்கள்" என்றும் இந்திய அரசின் அந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு எச்சரிக்கையை முஸ்லிம்களுக்கு வைத்திருந்தார். அது சரியான கருத்து தானா என்பதைக் குறித்து இங்கு காண்போம். முதலில் அவர் கூறிய கருத்து கீழே:


//முஸ்லீமான பின்னால் குஃபார் நாட்டில் வாழ்பவன் என் உம்மாவை சேர்ந்தவன் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) தெரிவித்துள்ளார்கள். அல் வாலா அல் பாராவை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.

அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?' என (மலக்குகள்) கேட்பார்கள். எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான் சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும். (4:97) //- சுலைமான்.


முதலில் இந்தியா ஒரு காஃபிர் நாடு என்று சொல்வது வடிகட்டிய கயமைத்தனம் ஆகும். இந்தியா ஒரு மதசார்பற்ற, ஜனநாயக நாடு. இங்கே எல்லா மதத்தவர்களும் ஆட்சியில் பங்கு வகிக்கிறார்கள். அனைத்து மதத்தினருக்கும் வணக்க, வழிபாட்டுச் சுதந்திரம் இருக்கிறது. அவரவர்களுக்கென ஒவ்வொரு மதத்தினருக்கும் தனியாக வழிபாட்டுத்தலங்களும் உண்டு.

"இந்தியாவில் குடியுரிமை உள்ள எந்த ஓர் இந்தியனுக்கும் சட்டத்தின் முன்பு சம உரிமையும், சட்டத்தின் மூலம் சமமான பாதுகாப்பையும் வழங்க அரசு மறுக்கக்கூடாது. இந்தியக் குடிமக்கள் தாம் நேசிக்கும் மதத்தைப் பின்பற்றவும், தாம் சார்ந்திருக்கும் மதம் அல்லது கொள்கை பற்றி எண்ண, எழுத, பிறருக்குப் போதிக்கவும் உரிமை பெற்றவர்கள்" என்று இந்திய அரசியல் சாசனம் கூறுகிறது. ஒருவரின் மதக் கொள்கையில் இன்னொருவர் கண்டிப்பாகக் குறுக்கிட முடியாது. இவ்வளவு வெளிப்படையான மதச் சுதந்திரம் வழங்கும் இந்திய நாட்டை ஒரு காஃபிர் நாடாகச் சித்திரிக்க முயல்வது அறியாமை மட்டுமல்லாது அயோக்கியத் தனமும் ஆகும். எந்த மதத்தையும் சாராத இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு, அதைக் காஃபிர் நாடு என்று சொல்வது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவிலுள்ள இஸ்லாத்தின் எதிரிகள் சிலர் இது போன்று கூறுவதுண்டு. ஆனால் இந்தியநாடு எந்த மதத்தினரினது குடும்பச் சொத்து அல்ல. எந்த ஒரு மதத்தினரும் அதைச் சொந்தம் கொண்டாட முடியாது. முஸ்லிம்கள் என்ற பெயரில் முகலாய மன்னர்கள் இந்தியாவை ஆண்ட போதும் அது மதச்சார்பற்ற நாடாகவே இருந்தது. முஸ்லிம் நாடு என்று அறிவிக்கப்படவில்லை. அதன் பிறகு வெள்ளையர்கள் ஆண்ட போதும் மதச்சார்பற்ற நாடாகவே இருந்தது. கிறிஸ்தவ நாடாக அறிவிக்கப்படவில்லை. சுதந்திர இந்தியாவும் மதசார்பற்றத் தன்மையிலிருந்து விலகி மதம் சார்ந்த நாடாக ஆகி விடவில்லை! இந்தியா காஃபிர் நாடு என்று சிலர் சொல்லி வந்தாலும் அதில் எள் முனையளவும் உண்மை இல்லை!

அவ்வாறு கூறப் படுவதை இஸ்லாத்தின் எதிரிகள் சிலரின் வஞ்சகப் பேச்சு, சூழ்ச்சி என்று கொள்க.

இனி சுலைமான் எழுதியது...

இவர், இந்தியாவில் குடியிருக்கும் முஸ்லிம்கள் காஃபிர் நாட்டில் குடியிருக்கிறார்கள் என்பதாகத் தவறாக விளங்கிக் கொண்டு, "காஃபிர் நாட்டில் குடியிருப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை" எனத் தனக்குத் தெரிந்த இஸ்லாத்தை, மற்ற முஸ்லிம்களுக்கு விளக்க வந்திருக்கிறார். - (இந்தியா காஃபிர் நாடல்ல. என்பதை மேலே விளக்கியுள்ளோம்.) - அதற்கான இஸ்லாத்தின் ஆதாரமாக திருமறைக்குர்ஆன் 004:097 வசனத்தையும், திர்மிதியில் இடம் பெற்ற ஒரு ஹதீஸையும் எடுத்தெழுதியிருக்கிறார். இருவேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக கூறப்பட்ட இந்த ஹதீஸ் மற்றும் குர்ஆன் வசனத்தை எடுத்து இஸ்லாம் கூறவராத ஒரு கருத்தை நிலைநாட்ட முயன்றுள்ளார். முதலில் திருமறைக்குர்ஆன் வசனத்தையும் அது எச்சூழலில் எதற்காக இறக்கப்பட்டது என்பதையும் பார்த்துவிட்டு பிறகு திர்மிதியில் இடம்பெறும் ஹதீஸைப் பார்ப்போம்.

தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது "நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?" என்று கேட்பார்கள். "நாங்கள் பூமியில் பலவீனர்களாக இருந்தோம்" என்று அவர்கள் கூறுவார்கள். "அல்லாஹ்வின் பூமி விசாலாமானதாக இல்லையா? அதில் நீங்கள் ஹிஜ்ரத் செய்திருக்கக்கூடாதா?" என்று கேட்பார்கள். அவர்கள் தங்குமிடம் நரகம் அது கெட்ட தங்குமிடம். (அல்குர்ஆன், 004:097)

இந்த வசனத்தைக்காட்டி இந்தியாவில் வாழ முடியாத முஸ்லிம்கள் அனைவரும் நாடு துறந்து - ஹிஜ்ரத் செல்ல வேண்டும் என முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து வெளியேறச் சொல்கிறார் சுலைமான். அவர் வைத்த 004:097வது வசனத்தின் பின்னணி என்ன?

புகாரி, 4596 வது ஹதீஸ் இது பற்றி விவரிக்கிறது:

மதீனாவாசிகள் ஒரு படைப் பிரிவை அனுப்பிவிடவேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட்டனர். அந்தப் படைப் பிரிவில் என் பெயரும் பதிவுசெய்யப்பட்டது. அப்போதுதான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான இக்ரிமா(ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் இதைப் பற்றித் தெரிவித்தேன். அவர்கள் என்னை வன்மையாகத் தடுத்தார்கள். பிறகு தமக்கு இப்னு அப்பாஸ்(ரலி) (பின்வருமாறு) அறிவித்ததாகக் கூறினார்கள்.

(நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) முஸ்லிம்களில் சிலர் இணைவைப்பாளர்களுடன் இருந்தனர். அவர்கள் (பத்ருப்போரில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கெதிராக இணைவைப்பாளர்களின் கூட்டத்தை அதிகப்படுத்தி(க் காட்டக் காரணமாக இருந்த)னர். எனவே, (முஸ்லிம்களின் அணியிலிருந்து அவர்களை நோக்கி) எய்யப்படும் அம்பு செல்லும். அது அவர்களில் ஒருவரைத் தாக்கிக் கொன்றுவிடும், அல்லது அவர் (வாளால்) அடிபட்டுக் கொல்லப்படுவார். (இது தொடர்பாகவே) அல்லாஹ் இவ்வசனத்தை (திருக்குர்ஆன் 04:97) அருளினான்: (மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியாதவாறு இறை மறுப்பாளர்களின் ஊரில் இருந்துகொண்டு) தமக்குத்தாமே அநீதி இழைத்துக்கொண்டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது (அவர்களை நோக்கி 'இந்த ஊரில்) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்?' என வினவுவார்கள். அதற்கு அவர்கள், 'பூமியில் நாங்கள் பலவீனர்களாய் இருந்தோம்' என பதிலளிப்பார்கள். 'அல்லாஹ்வின் பூமி விசாலமானதாய் இருக்கவில்லையா? அதில் நீங்கள் நாட்டைத் துறந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா?' என வானவர்கள் வினவுவார்கள். இவர்களின் இருப்பிடம் நரகம் தான். மேலும், அது மோசமான இருப்பிடமாகும்.

மேற்கண்ட ஹதீஸிலுள்ள முதல் பத்திக்கான விளக்கம்: நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) மக்காவில் ஆட்சிராக இருந்தபோது இது நடந்தது. அப்போது ஷாம் நாட்டினருக்கெதிரான போருக்காக வேண்டி மதீனாவிலிருந்து ஒரு படையை அனுப்பிவைக்க வேண்டுமென கலீஃபாவிடமிருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது (ஃபத்ஹுல் பாரி)

இரண்டாவது பத்திக்கான விளக்கம்: நபி(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்துவிட்ட பிறகு மக்காவிலேயே தங்கிவிட்ட முஸ்லிம்களில் சிலர் எதிரிகளுக்கு அஞ்சித் தங்களை இனம் காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் பத்ருப் போர் வந்தது. மக்கா குறைஷியர் இந்த முஸ்லிம்களையும் கட்டாயப்படுத்தி பத்ருப் போருக்கு அழைத்துச் சென்று விட்டனர். பத்ரில் எதிரிகளின் எண்ணிக்கை கூடுதலாகவும், முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதைக் கண்ட இந்த முஸ்லிம்களின் உள்ளத்தில் சந்தேகம் எழ ஆரம்பித்தது. 'குறைவான எண்ணிக்கையிலுள்ள முஸ்லிம் அணியினரை, அவர்களது மார்க்கப் பற்று ஏமாற்றிவிட்டது' என்று இவர்கள் கூறினர்.

பின்னர் எதிரணியில் நின்ற இவர்கள் முஸ்லிம்களின் தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்தனர். இவர்களின் உயிர்களைக் கைப்பற்றிய போது வானவர்கள் கேட்ட கேள்வி மற்றும் இவர்கள் அளித்த பதில் குறித்தே (004:097) வசனம் அருளப்பட்டது. என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கினார்கள்.

உண்மையிலேயே இணைவைப்பவர்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் இந்த முஸ்லிம்களுக்கு இல்லாவிட்டாலும், இணைவைப்பாளர்களின் எண்ணிக்கையைப் பெரிதுபடுத்திக் காட்டுவதற்கு இவர்களும் ஒரு காரணமாகிவிட்டார்கள் என்ற அடிப்படையிலேயே அல்லாஹ் இவர்களைக் கண்டிக்கிறான்... (ஃபத்ஹுல் பாரி)

இஸ்லாம் மார்க்கத்தின் வணக்க வழிபாடுகளைச் சரிவர நிறைவேற்ற விடாமல் மக்காவின் இணைவைப்பாளர்கள் முஸ்லிம்களைத் தடுத்து தொந்தரவுபடுத்திச் சித்ரவதை செய்து வந்தனர். மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற முடியாதவாறு இணைவைப்பாளர்களின் ஊரில் இருக்க வேண்டாம் என முஸ்லிம்கள் மக்காவைத் துறந்து, ஹிஜ்ரத் சென்றார்கள். நபி (ஸல்) அவர்களும் நாடு துறந்து சென்றார்கள். அவர்களை அரவணைப்பதற்கு ஒரு நாடு ஆவலோடு காத்திருந்தது.

இன்னும், முஸ்லிம்களில் ஹிஜ்ரத் செல்ல இயலாதவர்கள் மக்காவிலேயே தங்கிவிட்டனர். அப்படித் தங்கிய வர்களில் ஹிஜ்ரத் செல்லச் சக்திப் பெற்றிருந்தும் அவர்கள் நாடு துறந்து செல்லாமல் இருந்தனர். நாடு துறந்து செல்லத்தடையாக அவர்களின் செல்வங்களின் மீதான ஆசையாக இருந்திருக்கலாம் (அல்லாஹ் மிக அறிந்தவன்) ஹிஜ்ரத் செல்ல சக்தியிருந்தும் செல்லாமல் இருந்தவர்களையே 004:097வது வசனத்தில் இறைவன் கண்டிக்கிறான். உண்மையில் ஹிஜ்ரத் செய்ய இயலாத பலவீனமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மீது குற்றமில்லை. அவர்களின் பிழைகளை இறைவன் பொறுத்துக் கொள்வான் என்று இறைவன் அடுத்தடுத்த வசனங்களில் கூறுகிறான்

ஆண்களில் பலவீனமானவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களைத் தவிர- எந்த உபாயத்திறனும் அற்றவர்கள்; வெளியேறும் எந்த வழியையும் அறியமாட்டார்கள். அல்லாஹ் அவர்களது பிழைகளைப் பொறுப்பான். அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கிறான். (திருமறைக்குர்ஆன், 004:098, 099) மேலும், இஸ்லாத்திற்காக ஹிஜ்ரத் - நாடு துறந்து செல்வதின் சிறப்புப் பற்றி 004:100வது வசனம் விளக்கமாக எடுத்துரைக்கிறது.

எனினும் மக்கா வெற்றிக்குப் பின் உலக முஸ்லிம்களுக்கு ஹிஜ்ரத் ஒன்று இல்லை. எனவே திருமறைக்குர்ஆனில் கூறப்படும் அத்தனை ஹிஜ்ரத் வசனங்களும் முஸ்லிம்களுக்கு இல்லை! அதாவது இன்றைய முஸ்லிம்களுக்கு ஹிஜ்ரத் எனும் நாடு துறந்து செல்வது கடமை இல்லை! இதை நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது அறிவித்து விட்டார்கள்.

''மக்கா வெற்றியின் போது நபி(ஸல்) அவர்கள் 'இவ்வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது. இனி அறப் போர் செய்வதும் நல்ல எண்ணமும் தான் உள்ளது. எனவே போருக்காக அழைக்கப்பட்டால் உடனே புறப்படுங்கள்'' என்று கூறினார்கள். (புகாரி. முஸ்லிம், திர்மதீ, அஹ்மத், அபூதாவூத். நஸயீ)

மார்க்கத்திற்காக நாடு துறத்தல் அளப்பெரும் நன்மையை அள்ளித்தரும். ஆனால் ஹிஜ்ரத் பயணம் நபியின் காலத்தோடு முடிந்து விட்டது. மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற முடியாத காலத்தில்தான் ஹிஜ்ரத் கடமையாக இருந்தது. அதன் பிறகு இஸ்லாம் மேலோங்கி இன்றுவரை வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற இயலாத நிலைமை எங்குமே இல்லை! அதனால் இந்திய வாழ் முஸ்லிம்கள் நாடு துறந்து செல்ல வேண்டிய அவசியமில்லை.

இந்திய மண்ணில் குடியுரிமைப் பெற்ற ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இந்தியாவில் வாழ உரிமை இருக்கிறது. முஸ்லிம்களும் இ ந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். அவர்களை வெளியேற்ற எவருக்கும் அதிகாரம் இல்லை. ஒருவேளை முஸ்லிம்களை வெளியேற்ற யாராவது வன்முறையில் இறங்கி இங்கே வாழ்வே முடியாத ஒரு சூழலை ஏற்படுத்துவார்கள் எனில் சொந்த மண், சொந்த உடமையைப் பாதுகாப்பதற்காக அறப்போரில் இறங்கி அதில் இறந்தாலும் அதுவும் முஸ்லிம்களுக்கு நன்மைதான்.

//முஸ்லீமான பின்னால் குஃபார் நாட்டில் வாழ்பவன் என் உம்மாவை சேர்ந்தவன் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) தெரிவித்துள்ளார்கள். அல் வாலா அல் பாராவை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.// - சுலைமான்.

- இந்த ஹதீஸுக்கான விளக்கம் அடுத்த பகுதியில் இன்ஷா அல்லாஹ்.

ஆக்கம்: அபூமுஹை

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

பகுதி-2

Saturday, September 01, 2007

காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? பகுதி-3

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் புதுப்பித்துக் கட்டிய காபா ஆலயம், பலவீனமாக இருந்ததால் குறைஷியர் அதை இடித்துவிட்டுப் புதுப்பித்துக் கட்டினார்கள். நபித்துவ வாழ்வுக்கு முன், காபாவைப் புதுப்பித்துக் கட்டும் அறப்பணியில் நபி (ஸல்) அவர்களும் கலந்து கொண்டு கல் சுமந்திருக்கிறார்கள். குறைஷியர் காபாவைக் கட்டும்போது பொருளாதார நெருக்கடியினால் காபாவைச் சுருக்கி விட்டனர். பார்க்க: முதல் படம்.



"நான் காபா ஆலயத்தில் நுழைந்து அதில் தொழ விருப்பம் கொண்டிருந்தேன், அப்போது நபி (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து ஹிஜ்ருக்குள் என்னை நுழையச் செய்து ஆலயத்தின் உள்ளே நுழைய நீ விரும்பினால் இங்கே தொழுவாயாக! ஏனெனில் இதுவும் ஆலயத்தின் ஒரு பகுதியாகும். எனினும் உனது கூட்டத்தினர் காபாவைக் கட்டியபோது அதைச் சுருக்கி விட்டனர். மேலும் இந்த இடத்தை ஆலயத்தை விட்டும் அப்புறப்படுத்தி விட்டனர்" என்று கூறினார்கள். (திர்மிதீ, நஸயீ)

இந்த செய்தியை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மாஷா அல்லாஹ், இதை இறைவன் இந்த சமுதாயத்துக்கு வழங்கிய மாபெரும் அருள் என்றே சொல்ல வேண்டும்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் சரியான அடித்தளத்திலிருந்து (002:127) உயர்த்திப் புதுப்பித்துக்கட்டிய காபா நான்கு மூலைகளைக் கொண்டதாக இருக்கவில்லை. இரு யமனிய மூலைகள் (ருக்னைன் யமானீயன்) என்று சொல்லப்படும் வடகிழக்கு, தென் கிழக்கு ஆகிய இரு மூலைகளை மட்டும் கொண்டதாக இருந்தது. இப்போது இருக்கும் காபாவுக்கு வடக்கே உள்ள ஷாமியா மூலைகள் (ருக்னுஷ் ஷாமியா) இருக்கவில்லை. படம் 1ல் ஒட்டகத் திமில் போல் வளைந்து காணப்படும் 'ஹிஜ்ர்' அல்லது 'ஹத்தீம்' என்று அழைக்கப்படும் அரைவட்டப் பகுதியும் சேர்த்து காபா செவ்வையான வடிவத்தில் இருந்தது. குறைஷியர் காபாவைப் புதுப்பித்துக் கட்டியபோது பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஹத்தீம் பகுதியில் ஐந்து அல்லது ஆறு முழங்களைக் கொண்ட அரைவட்டப் பகுதியை அப்புறப்படுத்தி, சதுர வடிவத்தில் சுருக்கிக்கட்டி விட்டனர். ஆயினும், இன்றும் ஹிஜ்ர் அல்லது ஹத்தீம் என்று அழைக்கப்படும் அரைவட்டப் பகுதியும் காபாவைச் சேர்ந்த பகுதியே என்பதற்கு காபாவைத் தவாஃப் செய்பவர்கள் அந்த அரைவட்டப் பகுதியையும் சேர்த்தே சுற்றுகிறார்கள் என்பதிலிருந்து விளங்கலாம். மேலும் நபி (ஸல்) அவர்களும் அரைவட்டப் பகுதியும் காபாவைச் சார்ந்தது என்றே அங்கீகரித்திருக்கிறார்கள். இதற்கான ஆதாரங்கள் பல நபிவழித் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன.

இப்போது இருக்கும் சதுர வடிவான காபாவை, நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் புதுப்பித்துக் கட்டியிருந்தது போல் செவ்வக வடிவான அமைப்பில் கட்டுவதற்கும், காபாவுக்கு கிழக்கு, மேற்குமாக இரு வாயில்களை அமைக்கவும் நபி (ஸல்) அவர்கள் நாடியிருந்தார்கள். ஆனால் குறைஷியர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றிருந்ததால் அதை வெறுப்பார்கள் என்ற எண்ணத்தில் நபி (ஸல்) அவர்கள் அதைக் கைவிட்டார்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த அறிவிப்பை தமது சிறிய தாயார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாகச் செவியேற்றிருந்த அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் மறைவுக்குப்பின் ஹிஜ்ரி 64ம் ஆண்டில், நபி (ஸல்) அவர்கள் காபாவை எவ்வாறு கட்டுவதற்கு நாடியிருந்தார்களோ அதைப் போன்று ஹிஜ்ர், ஹத்தீம் என்ற அரைவட்டப் பகுதியையும் காபாவோடுச் சேர்த்துக் கட்டினார்கள், காபாவுக்குள் நுழைந்து வெளியேற மேற்கு, கிழக்கு என இரு வாயில்களையும் அமைத்தார்கள்.

அதற்கான காரணம்...

யஸீது பின் முஆவியா ஆட்சிக் காலத்தில் ஷாம்வாசிகள் (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக மக்காவை முற்றுகையிட்டு) போர் தொடுத்தபோது, இறையில்லம் காபா தீக்கிரையானது. அப்போது நடந்தவை நடந்து முடிந்தன. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் மக்கள் ஹஜ் பருவத்தில் ஒன்று கூடும்வரை இறையில்லத்தை அது நிலையிலையிலேயே விட்டு வைத்தார்கள். (பனூ உமய்யாக்களான) ஷாம்வாசிகளுக்கு எதிராக மக்களுக்கு எழுச்சியூட்டுவதற்ாகவே அல்லது அவர்களை ரோஷம் கொள்ளச் செய்வதற்காகவே அவ்வாறு விட்டு வைத்தார்கள். (ஹஜ்ஜை முடித்து) மக்கள் புறப்பட்டபோது அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், ''மக்களே காபா விஷயத்தில் எனக்கு ஆலோசனை கூறுங்கள். அதை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டுவதா அல்லது பழுதடைந்த பகுதியை மட்டும் செப்பனிடுவதா?'' என்று கேட்டார்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ''எனக்கு இது தொடர்பாக ஒரு யோசனை தோன்றுகிறது. அதில் பழுதடைந்த பகுதியை மட்டும் நீங்கள் செப்பனிடுங்கள். மக்கள் இஸ்லாத்தை ஏற்றபோதிருந்த அதே நிலையில் காபாவை விட்டுவிடுங்கள், மக்கள் இஸ்லாத்தை ஏற்றபோதும், நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பெற்றபோதும் இருந்த நிலையில் அதன் கற்களையும் (விட்டுவிடுங்கள்)'' என்றார்.

அதற்கு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், ''உங்களில் ஒருவரது இல்லம் தீக்கிரையானால் அதைப் புதுப்பிக்காத வரை அவரது மனம் திருப்தியடைவதில்லை. இந்நிலையில் இறையில்லத்தின் விஷயத்தில் மட்டும் எப்படி (நீங்கள் இவ்வாறு கூறுவீர்கள்)? நான் (காபாவை இடித்துப் புதுப்பிப்பதா, அல்லது பழுதடைந்ததைச் செப்பனிடுவதா எனும் விஷயத்தில்) என் இறைவனிடம் நன்முடிவு வேண்டி மூன்று முறை பிரார்த்திப்பேன். பிறகு ஒரு முடிவுக்கு வருவேன்'' என்றார். நன்முடிவு வேண்டி பிரார்த்தித்தபின், இடித்துவிட்டுப் புதுப்பிக்கும் முடிவுக்கு வந்தார்.

அப்போது மக்கள் முதலில் காபாவின் மீது ஏறும் மனிதர் மீது வானத்திலிருந்து ஏதேனும் வேதனை இறங்கிவிடும் என அச்சம் தெரிவித்தனர். இறுதியாக ஒரு மனிதர் காபாவின் மீதேறி அதிலிருந்து ஒரு கல்லைக் கீழே தள்ளினார். அவருக்கு எதுவும் நேராததைக் கண்ட மக்கள் ஒவ்வொருவராக (இடிக்கும் பணியில்) ஈடுபட்டு அதைத் தரைமட்டமாக்கினர். பின்னர் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கட்டுமானப்பணி நிறைவடையும்வரை (இறையில்லத்திற்குத் தற்காலிகத்) தூண்கள் அமைத்து அவற்றின் மீது திரையும் தொங்க விட்டார்கள்.

மேலும், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் ''என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உன்னுடைய சமுதாய) மக்கள் இறைமறுப்பிற்கு நெருக்கமான காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்றில்லையாயின் - என்னிடம் காபாவின் கட்டடத்தை வலுப்படுத்தக்கூடிய அளவு பொருளாதாரம் இல்லை என்பது (ஒருபுறம்) இருக்க - நான் 'ஹிஜ்ர்' பகுதியில் ஐந்து முழங்களை காபாவுடன் சேர்த்து விட்டிருப்பேன். பின்னர் மக்கள் நுழைவதற்கு ஒரு வாயிலும் வெளியேறுவதற்கு ஒரு வாயிலுமாக (இரு வாயில்களை) அதற்கு அமைத்திருப்பேன். என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

இன்று என்னிடம் பொருளாதாரமிருப்பதைக் காண்கிறேன். மக்களை அஞ்சும் நிலையிலும் நான் இல்லை'' என்று கூறி(விட்டு காபாவைப் புதுப்பிக்கலா)னார்கள்.

பின்னர் காபாவில் 'ஹிஜ்ர்' பகுதியில் ஐந்து முழங்களைக் கூடுதலாக்கினார்கள், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கவே (ஹிஜ்ர் பகுதியை அகழ்ந்து) ஓர் அடித்தளத்தை வெளியாக்கினார்கள். அதன் மீதே காபாவை எழுப்பினார்கள். (முடிவில்) காபாவின் உயரம் பதினெட்டு முழங்களாக இருந்தது. அதன் உயரத்தை அதிகமாக்கிய பின்பும் அது குறைவாகவே பட்டது. எனவே மேலும் பத்து முழங்கள் அதிகமாக்கினார்கள், அத்துடன் உள்ளே நுழைவதற்கும் ஒரு வாயில், வெளியேறுவதற்கு ஒரு வாயில் என இறையில்லத்திற்கு இரு வாயில்களை அமைத்தார்கள். (முஸ்லிம்)

குறைஷியர் சுருக்கிக் கட்டிய காபாவை - அன்று மக்காவின் ஆட்சியாளராக இருந்த அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் - இடித்து விட்டு விரிவுபடுத்தி புதுப்பித்துக் கட்டினார்கள். இப்னு ஸுபைர் கொலை செய்யப்பட்டபோது, ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் மக்காவின் ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார். கலீஃபா அப்துல் மலிக் பின் மர்வானுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதன் பிறகு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் காபாவை இடித்து விரிவாக்கிக் கட்டிய காபா, மீண்டும் ஹிஜ்ரி 74ல் இடிக்கப்பட்டு, குறைஷிகள் கட்டியது போல சுருக்கிக் கட்டப்படுகிறது.

ஹிஜ்ரி 74ல் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப்.

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் இந்த விவரங்களைத் தெரிவித்து (கலீஃபா) அப்துல் மலிக் பின் மர்வானுக்கு ஒரு கடிதம் வரைந்தார். அதில் ''அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் (ஹிஜ்ர் பகுதியை அகழ்ந்து அங்கிருந்த) ஓர் அடித்தளத்தின் மீது காபாவை எழுப்பியுள்ளார், அதை மக்காவின் நியாயவான்கள் பலரும் பார்த்துள்ளனர்'' என்றும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு அப்துல் மலிக் பின் மர்வான், ''நாம் இப்னு ஸுபைரை எந்த விஷயத்திலும் களங்கப்படுத்த விரும்பவில்லை, எனவே அவர் உயர்த்திக் கட்டியதை அப்படியே விட்டுவிடுவீராக! 'ஹிஜ்ர்' பகுதியிலிருந்து அவர் அதிகப்படுத்தியதை (மட்டும்) பழையபடியே மாற்றி அமைப்பீராக! அவர் புதிதாகத் திறந்துவிட்ட வாயிலை மூடிவிடுவீராக!'' என்று பதில் எழுதினார். எனவே, ஹஜ்ஜாஜ் ('ஹிஜ்ர்' பகுதிச் சுவரை) இடித்து முன்பிருந்த அமைப்பிற்கே மாற்றி அமைத்தார். (முஸ்லிம்)

பிறகு...

அப்துல் மலிக் மர்வான் ஆட்சிக் காலத்தில், அவரிடம் ஹாரிஸ் பின் அப்துல்லாஹ் பின் அபீரபீஆ (ரஹ்) அவர்கள் ஒரு தூதுக் குழுவில் சென்றார்கள். அப்போது அப்துல் மலிக் பின் மர்வான், ''அபூகுபைப் (இப்னுஸ் ஸுபைர்) ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து தாம் கேட்டதாகக் கூறும் செய்தியை, அவர் அவர்களிடமிருந்து கேட்டிருக்கமாட்டார் என்றே நான் எண்ணுகிறேன்'' என்றார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) அவர்கள், ''ஆம் (அபூகுபைப் உண்மையே சொல்கிறார்) இதை நானும் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளேன்'' என்றார். அதற்கு அப்துல் மலிக் பின் மர்வான் ''ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றதைக் கூறுங்கள்'' என்றார்.

அதற்கு ஹாரிஸ் (ரஹ்) கூறினார், ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள், என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''உன்னுடைய சமுதாயத்தார் இறையில்லம் காபாவின் கட்டடத்தைச் சுருக்கிவிட்டனர். அவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்றில்லையாயின், அவர்கள் விட்டுவிட்டதை நான் மறுபடியும் இணைத்துக் கட்டியிருப்பேன். எனக்குப் பின் உன் சமுதாயத்தாருக்கு அதை (விரிவாக்கிக்) கட்ட வேண்டுமென்ற எண்ணம் தோன்றினால் (அவ்வாறு செய்யட்டும்!) என் அருகில் வா! அவர்கள் விட்டுவிட்ட (இடத்)தை உனக்கு நான் காட்டுகிறேன்'' என்று கூறிவிட்டு, (காபா அருகில்) ஏழு முழங்கள் அளவிற்கு இடத்தை எனக்குக் காட்டினார்கள். (முஸ்லிம்)

பிறகு ஹாரிஸ் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்களிடம் அப்துல் மலிக் பின் மர்வான் ''ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?'' என்று கேட்டார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் ''ஆம்'' என்றார்கள். பிறகு அப்துல் மலிக் பின் மர்வான் தம்மிடமிருந்த குச்சியால் தரையைச் சிறிது நேரம் குத்திக் கீறி (யபடி ஆழ்ந்து யோசித்து) விட்டு, ''இறையில்லத்தையும் இப்னுஸ் ஸுபைர் மேற்கொண்டதையும் (அதே நிலையில்) விட்டிருக்க வேண்டுமென (இப்போது) விரும்புகிறேன்'' என்றார். (முஸ்லிம்)

இவ்வாறாக...

- நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் காபாவைப் புதுப்பித்துக் கட்டினார்கள்.

- பிறகு, குறைஷியர் காபாவை இடித்துவிட்டுப் புதுப்பித்துச் சுருக்கிக் கட்டினர்.

- பிறகு, ஹிஜ்ரி 64ல் மக்காவின் ஆட்சியாளாராக இருந்த அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் காபாவை இடித்துவிட்டு ஹத்தீமை காபாவோடு இணைத்து விரிவாக்கிக் கட்டினார்கள்.

- பிறகு, ஹிஜ்ரி 74ல் மக்காவின் ஆட்சியாளராக இருந்த ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப், விரிவாகக் கட்டப்பட்டிருந்த காபாவில் ஹத்தீம் எனும் அரைவட்டப் பகுதியை இடித்து நீக்கிவிட்டு குறைஷியர் கட்டியிருந்த அளவுக்குச் சுருக்கிக் கட்டினார்.

- இன்று இருக்கும் காபாவின் அமைப்பு, ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் கட்டியது. தற்போது புனித காபாவின் கட்டட அமைப்பு: சதுர வடிவம். இதற்குப்பின் மாற்றம் செய்வதை அறிஞர்கள் சிலர் விரும்பவில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக பின்வரும் நிகழ்ச்சியைக் கூறலாம்.

இறைநம்பிக்கையாளரின் தலைவர் ஹாரூன் அர்ரஷீத் அல்லது அவருடைய தந்தை மஹ்தீ, காபாவை இடித்துவிட்டு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் செய்த மாற்றத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் யோசனை கேட்டார். அதற்கு அவர்கள், ''இறைநம்பிக்கையாளரின் தலைவரே! இறையில்லம் காபாவை அரசர்களின் விளையாட்டுத் தலமாக ஆக்கி விடாதீர்கள். ஆளாளுக்கு அதை இடிக்க நினைப்பார்கள், இடித்தும் விடுவார்கள்'' என்று கூறினார்கள். எனவே ஹாரூன் அர்ரஷீத் அந்த முடிவைக் கைவிட்டார். (தஃப்ஸீர் இப்னு கஃதீர்)

காபா சிலமுறைகள் இடிக்கப்பட்டுக் கட்டப்பட்டிருந்தாலும் காபாவின் பழைய அஸ்திவாரத்திற்குள்ளேயே கட்டப்பட்டிருக்கிறது. பழைய அஸ்திவாரத்தை விட்டு வெளியே கட்டப்படவில்லை. குறைஷியர் காபாவைச் சுருக்கி விட்டனர் என்பது பழைய அஸ்திவாரத்திற்குள்ளேயே சுருக்கிக் கட்டினார்கள். மேலும் ஹத்தீம் என்ற வளைந்த பகுதியை அப்புறப்படுத்திச் சுருக்கிக் கட்டினார்கள். அதனால் காபா இடம் மாற்றிக் கட்டப்படவில்லை! காபாவுக்குள்ளேயே காபா சுருக்கப்பட்டது இடம் மாறி காட்டியதாக ஆகாது. இன்றும் காபாவை வலம் வருபவர்கள் ஹத்தீம் - வளைந்த அரைவட்டப் பகுதியையும் சேர்த்து சுற்றி வருகிறார்கள். பார்க்க: 2வது படம்.



மேலும்,

காபாவின் மேல் பகுதி முகடுகளைத் தாங்கி நிற்க காபாவின் உட்பகுதியில் மூன்று தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. பார்க்க: 3வது படம்.



இப்போது இருக்கும் தரையை விட்டு சற்று மேல் பகுதியில் அமைந்த காபாவின் நுழைவாயில் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கும் செய்தியில்,

நான் நபி(ஸல்) அவர்களிடம் கஅபாவின் அருகிலுள்ள ஒரு (வளைந்த சிறு) சுவரைப் பற்றி, 'இது காபாவில் சேர்ந்ததா?' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் 'ஆம்!'' என்றார்கள். பிறகு நான் 'எதற்காக அவர்கள் இதனை காபாவோடு இணைக்கவில்லை?' எனக் கேட்டேன். அதற்கவர்கள் 'உன்னுடைய சமூகத்தாருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தான்!'' என்று பதிலளித்தார்கள். நான் 'காபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதின் காரணம் என்ன?' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும் தங்களுக்கு வேண்டாதவர்களைத் தடுத்து விடுவதற்காகவுமே உன்னுடைய கூட்டத்தார் அவ்வாறு செய்தார்கள். 'உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயிருப்பதால், அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும்' என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் நான் இச்சுவரை காபாவினுள் இணைத்து அதன் கதவைத் கீழிறக்கி பூமியோடு சேர்ந்தால் போலாக்கியிருப்பேன்'' என்று பதிலளித்தார்கள். (புகாரி)

இன்றும் காபாவின் வாயில் கதவு தரையோடு இல்லாமல் சற்று உயரமான இடத்திலேயே அமைப்பட்டிருக்கிறது. காபாவின் நிர்வாகத்தினர் நாடினாலன்றி காபாவினுள் எவரும் செல்ல முடியாது. ஆனாலும் அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் காபாவினுள் நுழைந்து தொழ விரும்புபவர்கள் காபா புனித ஆலயத்தின் ஒரு பகுதியாகிய திறந்தவெளியாக இருக்கும் ஹத்தீம் எனும் அரைவட்டப் பகுதியில் நுழைந்து தொழுது கொள்ளலாம். இதுவும் காபாவைச் சேர்ந்ததுதான். மக்கள் ஹத்தீம் பகுதிக்குள் செல்வதை யாரும் தடுக்க மாட்டார்கள். இன்னும் இறுதி காலம்வரை, அல்லாஹ் நாடியவரை காபா இந்த நிலையிலேயே இருக்கும். (அல்லாஹ் மிக அறிந்தவன்)

(அல்குர்ஆன், மற்றும் ஹதீஸ் தொகுப்புகள், தப்ஸீர், திருக்குர்ஆனின் நிழலில் ஆகிய நூற்களிலிருந்து ஆதாரங்களைத் திரட்டி இத்தொடர் எழுதப்பட்டது.)

அன்புடன்,
அபூமுஹை

(தொடர் நிறைவடைந்தது)

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Wednesday, August 29, 2007

கொரிய நாட்டினரை தாலிபான் விடுதலை செய்தது!

புதன், 29 ஆகஸ்ட் 2007
கடந்த 2007, ஜூலை 19 அன்று கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்திற்காக ஆப்கானிஸ்தான் வந்திறங்கிய 23 கொரிய நாட்டினரைத் தாலிபான் பணயக் கைதிகளாகச் சிறை பிடித்தது. முதலில் சிதைந்து போயுள்ள ஆப்கனை மீளக் கட்டியெழுப்ப வந்த பொறியாளர்களாக இவர்களைச் சித்தரித்த ஊடகங்கள், பின்னர் கொரிய அரசின் அறிக்கையின் பின்னர், சியோலில் இருக்கும் சேம்முல் ப்ரெஸ்பைட்டீரியன் சர்ச் (Saemmul Presbyterian Church)சைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையை வெளியிட்டன.

ஆப்கன் அரசினால் பிடித்து வைக்கப்பட்டுள்ள 10 தாலிபான் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்; கொரியப் படைகளை ஆப்கனிலிருந்து திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கைகளை இந்த பணயக் கைதிகளை விடுவிக்க தாலிபான் நிபந்தனை விதித்தது. இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் ஒவ்வொருவராகக் கொரியப் பணயக் கைதிகளைக் கொன்றுவிடப்போவதாவும் மிரட்டியிருந்தது.

இம்மிரட்டலுக்குப் பணியாத ஆப்கன் அரசு தாலிபான் கைதிகள் எவரையும் விடுவிக்கமுடியாது என அறிவித்தது. ஆப்கன் அதிபர் ஹமீத் கார்சாய், அமெரிக்காவுக்குப் பயணம் செய்து அதிபர் புஷ்ஷைச் சந்தித்தார். இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தாலிபானை ஆப்கனும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து ஒடுக்கி அழிக்கப்போவதாக அறிக்கை வெளியிட்டனர்.

இதற்கிடையே ஒருவர் பின் ஒருவராக இரு ஆண் பணயக் கைதிகளைத் தாலிபான் கொன்றது. உலகெங்கிலும் இருந்து முஸ்லிம்கள் பலரும் தாலிபானின் இக்கொடுஞ்செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததோடு மீதமுள்ள பணயக் கைதிகள் அனைவரையும் விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தனர்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட தென் கொரிய அரசு, உடனடியாக அரசுப் பிரதிநிகள் சிலரை, தென்கொரிய நாட்டிலிருக்கும் முஸ்லிம் தலைவர்களின் உதவியுடன் தாலிபானுடன் பேச்சு நடத்த முன்வந்தது. தென்கொரிய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்ட தாலிபான் இரு பெண் பணயக் கைதிகளை விடுவித்தது.

தாலிபானுடன் பேச்சு நடத்திய கொரிய முஸ்லிம்கள் ஆப்கன் பழங்குடியினத் தலைவர்களை நடுவர்களாக வைத்து தாலிபான் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் தென்கொரிய அரசு இவ்வாண்டு இறுதிக்குள் ஆப்கனிலிருக்கும் தனது 200 படையினரைத் திரும்பப் பெறுவதாகவும், கிறிஸ்தவ மதப் பிரச்சாரப் பணியை ஆப்கனில் இனி அனுமதிப்பதில்லை என்றும் உறுதி அளித்தது.

இதனால் திருப்தி அடைந்த தாலிபான் தரப்பினர் இன்று பணயக் கைதிகளாக மீதமுள்ள 19 கொரியர்களையும் விடுதலை செய்தனர். விடுதலை செய்யப்பட்ட கொரியர்கள் அனைவரும் ஆப்கன் செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைக்கப் பட்டனர். இப்பேச்சு வார்த்தையில் கொரிய அரசு தரப்புக் குழுவில் முனைப்புடன் பங்கு பெற்ற கொரிய முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவர் அப்துல் ரஹ்மான் லீ, ஆப்கன் பழங்குடியினத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Monday, August 20, 2007

2. காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? பகுதி-2

ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2007

மக்காவில் அமைந்திருக்கும் காபாவை, உலக முஸ்லிம்கள் புனித ஆலயமாகத் தமது வணக்க வழிபாட்டை அதை நோக்கி அமைத்துக் கொள்கிறார்கள். காபா ஆலயத்தை வன்முறை நோக்கத்தோடு தாக்கி அழிப்பதற்கு எவரேனும் முயன்றால் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பதை திருக்குர்ஆன் 105வது அத்தியாயம் கூறுகிறது. அதற்கான வரலாற்று சான்றுகளை பகுதி- 1ல் காணலாம்.

மேலும்,

''ஒரு படை காபாவின் மீது படையெடுக்கும், அப்படையை பூமி விழுங்கிவிடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) காபாவை வன்முறையால் அழிக்கவருபவர்களை இறைவன் அழித்து விடுவான் என்பதை மேற்காணும் நபிமொழி உறுதிப்படுத்துகிறது. அப்படியானால் காபாவை எவராலும் இடித்து அழித்துவிட முடியாதா? என்றால் இஸ்லாம் அப்படிச் சொல்லவில்லை!

''அபிசீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் காபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

''(வெளிப்பக்கமாக) வளைந்த கால்களையுடைய, கருப்பு நிறத்தவர்கள் ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி காபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்று இருக்கிறது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

காபாவை இடித்து அழிக்க வருபவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று கூறும் இஸ்லாம், காபாவை வளைந்த, மெலிந்த கால்களையுடையர்கள் உடைத்து பாழ்படுத்தி விடுவார்கள் என்றும் கூறுகிறது. ஒரு காலகட்டம் வரை காபாவை எவராலும் அழிக்க முடியாது. ஒரு காலத்தில் காபாவை இடித்துப் பாழ்படுத்தி விடுவார்கள். முஸ்லிம்களாலும் அவர்களைத் தடுக்க இயலாமல் போகலாம். அப்போது காபாவை இடித்துப் பாழ்படுத்துபவர்களை இறைவனும் தடுக்கமாட்டான். (இது இறுதி நாளுக்கு நெருக்கமாக நடக்கும் நிகழ்வாக இருக்கலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்)

''யாஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும், உம்ராவும் செய்யப்படும்'' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

யாஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தாரின் வருகைக்குப் பிறகும் காபா ஆலயம் இருக்கும் என்பது நபியின் வாக்கு!

இஸ்ரேலியத்தனம்

காபா ஆலயத்தை சில தடவைகள் இடித்துவிட்டு மீண்டும் கட்டியிருக்கிறார்கள். அதனால் காபாவை இடிப்பதை அல்லாஹ் எந்த நேரமும் தடுத்துக்கொண்டிருக்க மாட்டான். என்று சிலர் புரியாமல் விளங்கி வைத்திருக்கிறார்கள். ஒன்றை இல்லாமல் அழித்து நாசப்படுத்துவதற்கும், அதையே அழகான முறையில் செப்பனிடுவதற்காக அகற்றி மீண்டும் கட்டுவதற்கும், எண்ணத்தாலும், செயலாலும் வேறுபாடுகள் இருக்கிறது.

வரலாற்றுக் காலங்களை குறிப்பிட்டு சொல்ல முடியாத மிகப் பழமையான காபா, ஆலயமான வடிவத்தை இழந்து, அடித்தளம் மட்டுமே எஞ்சியிருந்தது எனத் திருக்குர்ஆன், 002:127 வசனம் கூறுகிறது. அங்கு ஏற்கெனவே மனிதர்கள் வாழ்ந்து, பிறகு மக்கள் எவரும் அங்கு வசித்திருக்கவில்லை. காபா ஆலயம் பராமரிப்பு இல்லாத நிலையில் இயற்கையின் கால மாறுபாட்டால் சிதிலத்திற்குள்ளாகி ஆலயத்தின் கட்டிடம் தரைமட்டமாகியிருந்தது. (இந்த அழிவை இறைவன் ஏன் தடுக்கவில்லை? என்ற கேள்வியெழாமல் இருக்க) மனிதர்கள் வசிக்காத பிரதேசத்தில் ஆலயம் அவசியமில்லை. மேலும், காபா ஆலயம் புதுப்பித்துக் கட்டப்படும் காலத்தை இறைவனே நன்கு அறிந்தவன்.

ஒரிறைக் கொள்கைப் பிரச்சாரம் துவக்கப்பட்டு, இஸ்லாத்தில் தொழுகை கடமையாக்கப்பட்டது. முஸ்லிம்கள் தொழும் கிப்லா - முன்னோக்கும் திசை பைத்துல் மக்திஸை - மஸ்ஜித் அல்-அக்ஸாவை நோக்கி இருந்தது. அப்போது முஸ்லிம்களின் கிப்லா யூதர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இவ்வாறு பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் மக்திஸை முன்னோக்கியே, - இந்த உம்மத்தின் முதல் முஸ்லிமாகிய நபி (ஸல்) அவர்களும் மற்ற முஸ்லிம்களும் - தொழுது வந்தனர். இந்த கிப்லா மாற்றப்பட வேண்டும், முஸ்லிம்களின் தொழுகையின் கிப்லாவாக - முன்னோக்கும் திசையாக காபாவை நோக்கித் திருப்பப்பட வேண்டும் என்பதே அண்ணல் நபியவர்களின் விருப்பமாக இருந்தது, நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் இதற்காக அடிக்கடி பிரார்த்தனை செய்து கொண்டும், பணிந்து வேண்டிக்கொண்டும் இருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிராத்தனைக்கேற்ப கிப்லா மாற்றம் தொடர்பான இறையுத்தரவு வந்தது. இது இறவைனிடமிருந்து வந்த உண்மையாகும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க: அல்குர்ஆன், 002:144, 149, 150)

இந்தக் கிப்லா மாற்றம் நிகழ்ந்தபோது நயவஞ்சகமும், சந்தேகமும் கொண்ட சிலருக்கும், யூத இறைமறுப்பாளர்களுக்கும் ஐயமும், தடுமாற்றமும் ஏற்பட்டன. முஸ்லிம்களை நோக்கி, ''ஏற்கெனவே இருந்த அவர்களின் கிப்லாவிலிருந்து அவர்களைத் திருப்பியது எது?'' என்று கேட்பவர்களுக்கு பதிலடியாக:

மனிதர்களில் சில மதியீனர்கள், ''ஏற்கெனவே (முஸ்லிம்கள் முன்னோக்கித் தொழுதுகொண்டு) இருந்த அவர்களது 'கிப்லா' விலிருந்து (வேறு திசைக்கு) அவர்களைத் திருப்பியது எது?'' என்று கேட்பார்கள். ''கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான்'' என்று (நபியே) கூறுவீராக! (அல்குர்ஆன், 002:142) என்ற இறைவசனம் அருளப்பட்டது.

காபாவை முன்னோக்கி கிப்லா திருப்பப்பட்டதும், புனித இறையில்லமான காபாவைப் பற்றி இங்கு தொடங்கிய விஷமத்தனமான, யூதத்தன அவதூறு விமர்சனங்கள் இன்றும் இஸ்ரேலியத்தனமாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

குறைஷியர் காபாவைக் கட்டியது.

நபித்துவ வாழ்விற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புனித காபாவைக் குறைஷியர்கள் புதுப்பித்துக் கட்டுவதற்கு ஏகமனதாக முன் வந்தனர். இதன் காரணம்: காபா நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலத்திலிருந்து மேல் முகடு இல்லாமல் ஒன்பது முழங்கள் கொண்டதாக இருந்தது. அதன் சுவரும் - கட்டடங்களும் சிதிலமடைந்து இருந்தன. காபாவினுள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களை ஒரு கூட்டம் திருடிச் சென்றது. இந்நிலையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் காபாவின் கட்டடம் மேலும் பாதிப்படைந்தது. காபாவின் மீது கொண்ட மரியாதையின் காரணமாக குரைஷியர் அதைப் புதுப்பிக்கும் நிலைக்கு ஆளாயினர்.

''குறைஷிக் குலத்தாரே! காபாவின் கட்டுமானப் பணிக்காக உங்கள் வருமானத்தில் தூய்மையானவற்றைத் தவிர வேறெதையும் ஈடுபடுத்தாதீர்கள். விபச்சாரத்தின் வருமானமோ, வட்டிப் பணமோ, மக்கள் எவரிடமிருந்தாவது அக்கிரமமாகப் பெறப்பட்ட பொருளோ சேரக்கூடாது'' என்று சொல்லிக்கொண்டு, குறைஷியர் ஒவ்வொரு குலத்தாரும் தங்களுக்கிடையே அந்தப் பணியைப் பிரித்துக் கொண்டனர்.

பின்னர் குறைஷியரில் உள்ள பல கோத்திரத்தாரும் காபாவைக் கட்டுவதற்காகக் கற்களைச் சேகரித்தினர். பின்னர் அவற்றைப் பயன்படுத்தி 'ஹஜருல் அஸ்வத்' - கருப்புக் கல் இருக்கும் மூலைவரை காபாவைக் கட்டினார்கள். கருப்புக் கல்லை அதற்குரிய இடத்தில் பதிப்பது யார்? என்பது தொடர்பாக அவர்களிடையே சர்ச்சை ஏற்பட்டது. அந்தக் கல்லை அதற்குரிய இடத்தில் தாமே தூக்கி வைக்க வேண்டும் வேறு யாரும் அதைச் செய்துவிடக் கூடாது என்று ஒவ்வொரு கோத்திரத்தினரும் நினைத்தார்கள்.

குறைஷியர்கள் இதற்காக சண்டையிட்டுக் கொள்வதற்கும் தயாராயினர். இதே நிலையில் நான்கைந்து நாட்கள் நகர்ந்தன. அப்போது குறைஷியர்களிலேயே மூத்த வயதினரான அபூஉமய்யா பின் அல்முஃகீரா மக்ஸுமி என்பவர், குறைஷிக் குலத்தாரே! யார் இந்த ஆலயத்தின் வாசல் வழியாக அதிகாலையில் முதன்முதலில் நுழைகிறாரோ அவரை இந்தப் பிரச்சனையில் நடுவராக ஆக்கிக் கொள்ளுங்கள். அவர் உங்களிடையே தீர்ப்பளிப்பார்'' என்று கூறினார். குறைஷிகள் அவ்வாறே செய்வதாகக் கூறி, கலைந்து சென்றனர்.

மறுநாள் அதிகாலையில் ஆலயத்தின் வாசல் வழியாக முதன்முதலில் உள்ளே நுழைந்தவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்தாம். (இது நபித்துவத்திற்கு முன்பு நடந்தது. ஆனாலும் இது அனைவரும் அறிந்த பிரபலமான செய்தி.) நபி (ஸல்) அவர்களைக் கண்ட குறைஷியர், இதோ முஹம்மது வந்துள்ளார், நம்பத்தகுந்தவரான இவரை நாங்கள் முழு மனதுடன் ஏற்கிறோம் என்றனர்.

(இங்கே குறைஷியருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைப் பார்த்தால் நபித்துவ வாழ்விற்கு முன்பு நபியவர்களின் மீது குறைஷியர்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதை நமக்குக் காட்டுகிறது. குறைஷியர் ஒவ்வொரு குலத்தாரும் மற்ற குலத்தாருக்கு எதிரும் புதிருமாக இருந்து வந்தனர். இந்த நிலையில் தமக்கு வேண்டாத குலத்தார் யாராவது ஆலயத்திற்குள் முதலில் வந்திருந்தால் அது மற்ற குலத்தாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன்முதலில் ஆலயத்தின் வாசல் வழியாக நுழைந்தது குறைஷியர் அனைத்து குலத்தாருக்கும் திருப்திகரமாக இருந்தது. அந்த அளவுக்கு எல்லா மக்களிடமும் நற்பெயர் பெற்றிருந்தார்கள். நபியவர்களை ''அல்அமீன்'' நம்பிக்கைக்குரியவர் என்று ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.)

நபி (ஸல்) அவர்கள் வந்ததும் அந்த மக்கள் செய்தியைத் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'என்னிடம் ஒரு துணியைக் கொண்டு வாருங்கள்' என்றார்கள். அது கொண்டு வரப்பட்டது. கருப்புக் கல்லைத் தமது கையால் அந்தத் துணியில் வைத்த நபி (ஸல்) அவர்கள், ''இந்தத் துணியின் ஒவ்வொரு ஓரத்தையும் ஒவ்வொரு கோத்திரத்தாரும் பிடித்துக்கொண்டு அனைவருமாகச் சேர்ந்து அதைத் தூக்கிக் கொடுங்கள்'' என்றார்கள். அவ்வாறே அவர்கள் தூக்கித் தர, அந்தக் கல் அதற்குரிய இடத்திற்கு வந்தபோது தமது கையால் அதை உரிய இடத்தில் பதித்துப் பூசினார்கள். (அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் அவர்கள் மீது மறுமை நாள்வரை என்றென்றும் உண்டாகட்டும்)

நபித்துவ வாழ்விற்கு முன், குறைஷியர் காபாவைப் புதுப்பித்துக் கட்டிய அந்த அறப்பணியில், நபி (ஸல்) அவர்களும் கலந்து கொண்டு கல் சுமந்திருக்கிறார்கள். நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் புதுப்பித்துக்கட்டிய காபாவின் சுவர்கள் பலவீனப்பட்டதால் குறைஷியர் காபாவை இடித்து விட்டு மீண்டும் புதுப்பித்துக் கட்டினார்கள். ஆனால் இப்ராஹீம்(அலை) அவர்கள் எழுப்பிய காபாவின் அளவை சுருக்கி விட்டார்கள். இதற்குக் காரணம் குறைஷியரிடம் பொருளாதாரம் இல்லாமலிருந்ததேயாகும்.

(மீண்டும் இறுதிப் பகுதியில், இறைவன் நாடட்டும்)

அன்புடன்,
அபூ முஹை

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Friday, August 17, 2007

கொல்கத்தா இமாமின் வன்முறைப் பேச்சு.

இந்தியா, அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தமாக நாடாளுமன்றம் அல்லோலப்பட்டு வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங் மீது முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்ட்ஸ் பாய்ச்சல் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது.

"இந்த பொய்க்கு மன்மோகன் மீது தோட்டா பாய்ந்திருக்கும்!"

புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்டு 2007 ( 13:39 IST )

"அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக கூறிய பொய்யை, சீனாவில் சொல்லியிருந்தால் மன்மோகன் மீது தோட்டா பாய்ந்திருக்கும் " என பிரதமரை கடுமையாக விமர்சித்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுக்கு எதிராக, காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்த விவகாரத்தில், இந்திய மக்களை பிரதமர் மன்மோகன் சிங் ஏமாற்றிவிட்டார் என்றும், இதுவே சீனாவாக இருந்தால், அவர் மீது தோட்டா பாய்ந்திருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரம் தொடங்கிய சில நிமிடங்களில், ஃபெர்னாண்டஸ்சின் பேட்டிக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

'ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோர வேண்டும்' என்று அவர்கள் வலியுறுத்தினர். மேலும், அந்தப் பேட்டி இடம்பெற்றிருந்த செய்தித்தாள்களைக் காட்டிய அவர்கள், 'இது மாபெரும் அவமதிப்புச் செயல்'என்று குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து ஃபெர்னாண்டஸுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால், அவையை பிற்பகல் 2.30 வரை சபாநாயகர் ஹமீத் அன்சாரி ஒத்திவைத்தார்.

செய்தியின் சுட்டி

நாடாளுமன்றத்தில் பிரதமரை நோக்கி எழுந்த இந்த வன்முறையானப் பேச்சு எவ்வாறு கண்டிக்கத்தக்கதோ அதுபோல் தஸ்லிமாவின் மீதான கொல்கத்தா இமாமின் வன்முறையைத் தூண்டும் பேச்சும் கண்டிக்கத்தக்கது.

பிறரை வன்முறைக்குத் தூண்டுவதைவிட கொல்கத்தா இமாம் ரோஷமுள்ளவராக இருந்தால் நேரில் சென்று தஸ்லிமாவை வதம் செய்யலாமே.

ஒரு ஜனநாயக நாட்டில் இருந்து கொண்டு, ஜார்ஜ் ஃபெர்னாண்ட்ஸும், கொல்கத்தா இமாமும் பேசியது கண்டிக்கத்தக்கது. எல்லாம் ஜனநாயகம் வழங்கும் சலுகை.

கொல்கத்தா இமாமின் பேச்சுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த ஒட்டுமில்லை!

கொல்கத்தா இமாம் பேசியது இங்கே