Sunday, June 25, 2006

கணவன், மனைவியை அடிக்கலாமா?

''விரும்பியவர் நம்பட்டும், விரும்பியர் மறுக்கட்டும்'' என்று திருக்குர்ஆன் (18:29) கூறுவதால், இஸ்லாத்தில் மனித அபிப்ராயத்துக்கு எள்ளளவும் எள் முனையளவும் இடமேயில்லை. இறைவன் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று கற்பனையால் இறைவனைப் படைப்பவர்களுக்கு, இறை வேதங்களை தமக்கு தோதாக திரிப்பதும், நீக்குவதும், சேர்ப்பதும் சாத்தியம்.

அனைத்தையும் ஏக இறைவன் ஒருவனே படைத்து மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாக வேதங்களை வழங்கினான் என நம்பிக்கை கொண்டவர்களுக்கு, இறை வேதங்களில் மனிதக் கருத்தைத் திணிப்பது துளியும் சாத்தியமில்லை.

ஐம்புலன்களுக்கும் எட்டாதவை யாவும் மறைவானதாகும், ''அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள்'' (2:3) என்பதால், மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது, வானவர்கள், சொர்க்கம், நரகம், தீர்ப்பு நாள் போன்ற - மறைவானவற்றை உலக வாழ்வில் கண்ணால் காணமுடியாது என்றாலும் - மறைவானவற்றை நம்புவதும் முஸ்லிம்களின் நம்பிக்கைகளில் ஓர் அம்சமாகும்.

இஸ்லாம் கூறும் மறைவானவைகளை இவ்வுலகின் ஆய்வுக் கூடத்தில், கண்ணாடி குடுவைகளைக் கொண்டு ஆய்வு செய்து சொர்க்கம், நரகத்தை உண்டு என்று நிரூபிக்க முடியாது. என்பது போல், அதே ஆய்வுகளைக் கொண்டு சொர்க்கம், நரகத்தை இல்லையென்றும் நிரூபிக்க முடியாது.

இந்த உலகமல்லாத இன்னொரு மறுமை வாழ்க்கை உண்டு, அல்லது இல்லை எனத் தீர்மானிப்பது மறுமையில் மட்டுமே சாத்தியம். சொர்க்கம், நரகம் போன்ற மறைவானவற்றை நீங்கள் மறுமையில்தான் அறிந்து கொள்வீர்கள் எனவும், அதை நம்பாதவர்களும் அங்கே கண்டு கொள்வார்கள் எனவும் இஸ்லாம் சொல்வதால், இவற்றை இவ்வுலக வாழ்க்கையில் நிரூபிக்க முயல்வது வீணே!

மறைவானவற்றைக் கண்ணால் பார்க்காமல் நம்புவது எப்படி ஆட்டுமந்தைத் தனமோ, அதுபோல் கண்ணால் பார்த்தால்தான் நம்புவேன் என்பதும் ஆட்டுப் புத்தியே. ''உனக்கு இரை இருக்கிறது வா'' என்று எந்த ஆட்டையும் அழைத்தால் வராது. ஆனால் ஆடுகளின் பார்வையில் படும்படி கீரைகளையோ, புல்லுக் கட்டையோக் காட்டினால் ஆடுகள் ஓடோடிவரும், இதை ஆடுகள் உணருமா? கண்ணால் பார்க்காமல் ஒரு போதும் ஆடுகள் தன் இரையை உணராது.

நிற்க,
''மனைவியை அடியுங்கள்'' என்று சொல்லும் 4:34வது வசனத்திற்கு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்ன விளக்கம் சொன்னார்கள் என்கிற நபிமொழிகளையும், சம்பந்தப்பட்டவர்கள் இங்கே பதிக்கட்டும். இன்ஷா அல்லாஹ் இந்தப் பதிவில் இது பற்றிப் பேசுவோம்.

//"எலும்பு முறியாதவரை பெண்களை அடிக்கலாம்"// என்று சொல்பவர்கள், இந்த வாசகம் இடம் பெற்ற நபிமொழியையும் - நபிமொழி மட்டுமிருந்தால் இங்கே அறியத்தரவும். - நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Monday, June 19, 2006

நரகத்தில் பெண்கள்-ஓர்விளக்கம்

நரகத்தில் பெண்களே அதிகம்.


''இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்- 2911)

உலகத்தின் அனைத்து செல்வங்களையும் விட சிறந்தது நல்ல மனைவி என்று, பெண்களைப் பற்றி சிலாகித்து கூறும் இஸ்லாம், ''நரகத்தில் பெண்களே அதிகம்'' என்றும் கூறுகிறது. (இவ்வுலக வாழ்க்கையில் தவறுகளுக்கான தண்டனைகள் அனுபவிக்கப்படும் இடமே நரகம் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை.)

''நான் (மிஃராஜ் - விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையேக் கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன்''. என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி- 3241, 5198)

மேற்கண்ட நபிமொழியை முன்வைத்து, இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தும், ஆணாதிக்க மதம் என்று வழக்கம் போல், விமர்சிக்கக் கிளம்பியுள்ளார்கள். இதனால் இவர்கள் பெறும் ஆதாயம் என்ன? ''ஆஹா அப்படியா?'' என்று நாலு பெண்கள் வரிந்து கட்டிக் கொண்டு வருவார்கள், என்ற எதிர்பார்ப்பா? அல்லது ''நரகத்தில் பெண்களே அதிகம்'' என்று சொல்லும் மதம் எங்களுக்குத் தேவையில்லை என, முஸ்லிம் பெண்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறுவார்கள் என்ற ஆவலா? திறந்த கண் கனவாளிகள்!

ஒரு பேரூந்தில் 42 பயணிகள் அமர்ந்திருக்கிறார்கள். 20 ஆண்களும், 22 பெண்களிருந்தால், பேரூந்தில் அதிகமாக இருப்பவர்கள் பெண்களே. அதற்காக, பேரூந்தில் ஆண்களே பயணிக்கவில்லை என்று அர்த்தம் செய்வது அனர்த்தமாகும், நரகத்தில் பெண்களே அதிகம் என்ற வார்த்தையே, நரகத்தில் ஆண்களும் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. 1000 ஆண்களும், 1010 பெண்களுமிருந்தால், ஆண்களை விட பெண்களே நரகத்தில் அதிகம். இதில், ஆணாதிக்கமும் - பெண்ணடிமைத்தனமும் எங்கிருந்து வந்தது.

முழுமையான விபரங்களுடன் மற்றொரு நபிமொழி.
''எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, 'இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?' எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் 'உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று பேசிவிடுவாள்' என்றார்கள்'' (புகாரி- 29, 1052, 5197)

நரகத்தில் பெண்கள் அதிகமாவதற்குக் காரணம் என்ன? என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கலாம். கவனிக்க:-

''அவர்கள் கணவனை நிராகரிக்கிறார்கள்.''

''உதவிகளை நிராகரிக்கிறார்கள்.''

''நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் 'உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று பேசிவிடுவாள்''


மனைவியின் தேவைகள் அனைத்தையும் கணவன் பூர்த்தி செய்து - மனைவி விரும்பியதையெல்லாம் கணவன் வாங்கிக் கொடுத்திருந்தாலும், அற்பமான சிறு குறைகளுக்காக ''உனக்கு வாக்கப்பட்டு என்ன சுகத்தைக் கண்டேன்? என்று கணவனை எடுத்தெறிந்து பேசி விடுவார்கள் பெண்களில் சிலர். உண்டா, இல்லையா?

மாலையில் கடை வீதிக்கு, அல்லது சினிமாவுக்கு அழைத்துப் போவதாக மனைவியிடம் சொல்லிவிட்டு காலையில் கணவன் வேலைக்குப் போவான். போன இடத்தில், எதிர்பாராத விதத்தில் மேலதிகாரியின் வருகை, அல்லது கூடுதலான பணியின் காரணமாகவும், அப்பணியை அன்றே முடிக்க வேண்டுமென்றக் கட்டாயத்தாலும் கணவன் வீடு திரும்ப தாமதம் ஆகிவிடும். இந்த தாமதம் மனைவிக்கு மிகவும் ஏமாற்றம் அளிப்பது உண்மைதான் ஆனாலும் கணவனின் சூழ்நிலையை புரிந்து கொள்ளாத பெண்களில் சிலர், ''உன்னைக் கட்டிக்கிட்டு ஒரு சுகத்தையும் நான் காணவில்லை'' என்று நன்றி கெட்டத்தனமானப் பேசிவிட்டு, பெட்டியுடன் தாய் வீட்டுக்குச் செல்ல தயராகி விடுவார்கள். உண்டா இல்லையா? (இவற்றை மறுப்பவர்கள் மனசாட்சியை மறைத்து விட்டுத்தான் மறுக்க வேண்டும்)

இது எல்லாப் பெண்களுக்கும் பொருந்தாது. ''கணவனை நிராகரிக்கும்'' ''கணவன் செய்யும் நன்மைகளை நிராகரிக்கும்'' பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் பற்றியே, ''நல்ல கணவனுக்கு நன்றி மறக்கும்'' பெண்களே நரகத்தில் அதிகம் என்று நபிமொழியில் விளக்கப்படுகிறது. ''நல்ல மனைவிக்கு நன்றி மறக்கும்'' கணவனுக்கும் நரகம்தான் என்பதற்கும் இது பொருந்தும் - (இது பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் ஆதாரங்களுடன் பார்ப்போம் இறைவன் நாடட்டும்) - துவேசத்தை துடைத்தெறிந்து விட்டு சிந்தித்தால் மட்டுமே இதிலுள்ள நடுநிலையை விளங்க முடியும்.

அன்புடன்,
அபூ முஹை

Thursday, June 15, 2006

அரபியர்களின் கடவுட்க் கொள்கை!

அரபிகள் ஒருபோதும் கடவுள் நம்பிக்கையற்றவர்களாய் இருந்ததில்லை. ஆனால் ஏகனும், எவர் தயவும் - தேவையும் அற்றவனுமான இறைவன் தன்னைப் பற்றி எவ்வாறு குறிப்பிடுகின்றானோ, அந்தப் பொருளில் இறைவனை அவர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை! அவனுக்கு இணை கற்பித்துக் கொண்டிருந்தார்கள். இறைவனை எப்படி கண்ணியப்படுத்த வேண்டுமோ அவ்வாறு கண்ணியப்படுத்தாதவர்களாகவும், எவ்வாறு அவனை வணங்கிட வேண்டுமோ அவ்வாறு வணங்காதவர்களாகவும் இருந்து வந்தார்கள். தமது முன்னோர்களில் நல்லடியார்களாகவும், கண்ணியத்திற்குரியவர்களாவும் திகழ்ந்தவர்களுக்கோ, அல்லது வானவர்களுக்கோ நினைவுச் சின்னங்களாகத் தாம் வடித்த சிலைகளை இறைவனுக்கு இணையாக்கிக் கொண்டிருந்தார்கள்.

வானவர்களை இறைவனின் பெண்மக்கள் எனக் கருதிக் கொண்டிருந்தார்கள். சில சமயங்களில் அந்தச் சிலைகளை மறந்துவிட்டு இந்தத் தேவைதைகளை வணங்கிக் கொண்டிருப்பார்கள். சிலைகளையோ அல்லது தேவதைகளையோ எதை வணங்கிய போதும் அவையெல்லாம் தம்மை இறைவனிடம் சமீபிக்கச் செய்பவை என்கிற நம்பிக்கையிலேயே வணங்கி வந்தார்கள். இது பற்றித் திருக்குர்ஆனில்..

''அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை'' (என்று கூறுகின்றனர்) திருக்குர்ஆன், 39:3

இறைவன் மீது அரபியர்கள் நம்பிக்கை கொண்டிருந்ததுடன் (பார்க்க: 29:61,63 ஆகிய வசனங்கள்) அவனுக்கு இணையும் கற்பித்துக் கொண்டிருந்தார்கள். அது அவர்களின் சமயச் சடங்குகள், மத ஆச்சாரங்கள், சித்தாந்தங்கள் அனைத்திலும் காணமுடியும். அவர்கள் தமது குழந்தைகள், கால்நடைகள், விவசாய மகசூல்கள் ஆகியவற்றில் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தைத் தமது தெய்வங்களுக்கென ஒதுக்கி வந்தார்கள். சில சமயங்களில் அவர்களின் தெய்வங்கள் மீது அவர்கள் கொண்டிருந்த பக்தியானது அவர்களின் ஆண் குழந்தைகளை அவற்றிற்காக நரபலி கொடுத்திடவும் அவர்களைத் தூண்டியது. அவர்களின் இந்தச் சீர்கேடுகளையும், குழப்பங்களையும் பற்றித்தான் திருக்குர்ஆன், அல்அன்ஆம் அத்தியாயத்தின் வசனங்களில் பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறது.

6:136. அல்லாஹ் உண்டாக்கிய விளைச்சலிலிருந்தும், கால்நடைகளிலிருந்தும் அல்லாஹ்வுக்கென ஒரு பாகத்தை ஏற்படுத்தினார்கள். இன்னும் அவர்களின் எண்ணப்படி இது அல்லாஹ்வுக்கு என்றும், இது எங்களுடைய இணை தெய்வங்களுக்கு என்றும் சொல்கிறார்கள் - அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கென்று குறிப்பிட்ட பாகத்தில் எதுவும் அல்லாஹ்வுக்குச் சேர்வதில்லை அல்லாஹ்வுக்கு ஆகியிருப்பது அவர்கள் தெய்வங்களுக்குச் சேரும் என்றும் சொல்கிறார்கள். அவர்கள் செய்யும் இம்முடிவு மிகவும் கெட்டதாகும்.

6:137. இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன. அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள். எனவே (நபியே!) நீர் அவர்களையும், அவர்களுடைய பொய்யான கூற்றுக்களையும் விட்டு விலகி விடுவீராக.

6:138. இன்னும் அவர்கள் (தம் கால்நடைகளைக் குறிப்பிட்டு) ''ஆடு, மாடு, ஒட்டகம், விவசாயத்தில் காணும் இந்த விளைச்சல் ஆகியவற்றை நாம் விரும்புபவர்களைத் தவிர வேறு யாரும் புசிப்பது தடுக்கப்பட்டுள்ளது'' என்று கூறுகின்றனர். மேலும் சில கால்நடைகளைச் சவாரி செய்யவும், சுமைகளைச் சுமந்து செல்லவும் பயன் படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது என்றும், இன்னும் சில கால்நடைகளை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரைக் கூறக்கூடாதென்றும், அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து சொல்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களுடைய பொய்க் கூற்றுகளுக்காக அவர்களுக்குக் கூலி கொடுப்பான்.

6:139. மேலும் அவர்கள், ''இந்தக் கால் நடைகளின் வயிற்றில் இருக்கும் குட்டிகள் எங்கள் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம். அவை எங்கள் பெண்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளன - அவை செத்துப் பிறந்தால், அவற்றில் அவர்களுக்கும் பங்கு உண்டு'' என்றும் கூறுகிறார்கள். அவர்களுடைய (இந்தப் பொய்யான) கூற்றுக்கு அவன் தக்க கூலி கொடுப்பான் - நிச்சயமாக அவன் பூரண ஞானமுடையோனும், (யாவற்றையும்) அநிந்தவனுமாக இருக்கின்றான்.

6:140. எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ, இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை.

மேலும் அவர்கள் தம்மை இப்றாஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கத்தின்படி நடப்பவர்களென்றும், தம்முடன் அரபு தீபகற்பத்தில் வசிப்பவர்களான வேதம் கொடுக்கப்பட்ட யூத, கிறிஸ்தவ சமுதாயத்தவர்களைவிடத் தாமே நேர்வழியில் நடப்பவர்களென்றும் நம்பிக் கொண்டிருந்தனர். யூதர்கள் உஸைர் (அலை) அவர்களை இறைவனின் குமாரர் என்றும், கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை இறைவனின் குமாரர் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். (பார்க்க: 9:30 வசனம்) இவர்களுக்கு மத்தியில், இறைவனுக்கு ஈஸா, உஸைர் (அலை) ஆகியோரைவிட மிக நெருக்கமாவர்களாக அவர்கள் நம்பிக் கொண்டிருந்த வானவர்களையும் - தேவதைகளையும் அவர்கள் வணங்கி வந்ததால் தம்மை யூத, கிறிஸ்தவர்களைவிட அதிக நேர் வழியில் இருப்பதாகக் கருதிக்கொண்டிருந்தார்கள். மொத்தத்தில் அவர்கள் தம்மை வேறெந்த சமூகத்தையும் விட மிக்க நேரான வழியில் இருக்கும் சிறந்த சமுதாயமாகவே கருதி வந்தனர்.

இதற்கிடையில் முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தி, ''இப்றாஹீம் (அலை) அவர்களின் உண்மையான மார்க்கம் இதுதான்'' எனக் கூறினார்கள். 'இல்லை! நாங்கள் இருப்பதுதான் இப்றாஹீம் நபியின் மார்க்கம், எனவே நாங்கள் அதை விட்டுவிட்டு முஹம்மதைப் பினபற்றத் தேவையில்லை!' என அவர்கள் கூறினார்கள். எனினும் முஹம்மது கூறும் இறைவனுக்குத் தாம் தலைவணங்குவதாகவும், அதற்காக தங்கள் தெய்வங்களுக்கு முஹம்மது தலைவணங்க வேண்டுமென்றும், அவர்களின் தெய்வங்களைப் பற்றியும் - அவர்களின் வணக்க வழிபாடுகள் பற்றியும் முஹம்மது எவ்விதக் குறையும் கூறக்கூடாது என்றும், முஹம்மதும் இதுபற்றி எந்த நிபந்தனையும் விதிக்கலாம் என்றும் ஒரு சமாதான உடன்பாட்டுக்கு முயற்சி செய்தார்கள்.

அவர்களின் சித்தாந்தங்களிலும், சிந்தனைப் போக்குகளிலும் ஒரு தெளிவில்லாத குழப்பநிலை இருந்ததும், பல தெய்வ வழிபாடுகளுடன் இறைவனையும் அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்ததும், முஹம்மதுக்கும் அவர்களுக்குமிடையிலுள்ள தூரம் அதிகமில்லை என அவர்களை நினைக்க வைத்தது. ஒரு நகரத்தை இருபகுதிகளாகப் பிரிப்பதைப் போலவும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து எல்லைத் தகராறுகளைத் தீர்த்துக் கொள்வது போலவும் இந்தப் பிரச்சினையை அவர்கள் கருதியதற்கு இதுவே காரணமாக இருந்தது.

இந்த ஐயத்தைப் போக்கவும், போலிச் சாக்குப் போக்குகள் கூறித் தட்டிக் கழிப்பதற்கு அறவே வழியில்லாமல் ஆக்கவும் இரு வணக்கங்களுக்கும், இரு நெறிகளுக்கும், இரு வழிகளுக்கும், இரு சித்ததாந்தங்களுக்கும் இடையிலுள்ள இடைவெளி இட்டு நிரப்ப முடியாதது என்பதைத் தெளிவுப்படுத்திடவே உறுதியான வார்த்தைகளுடனும், வலியுறுத்தல்களுடனும், மீண்டும் மீண்டும் ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லும் தோரணையில் இந்த அத்தியாயம் அருளப்பட்டது. இது அத்தனை சச்சரவுகளுக்கும் ஒரு முடிவுகட்டி விடுகிறது. அத்தனைப் பேச்சுக்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது. ஏகத்துவத்திற்கும், ஏகத்துவ மறுப்புக்குமிடையிலுள்ள வேறுபாட்டை நன்கு தெளிவுபடுத்தி விடுகிறது. சிறிய, பெரிய எல்லாப் பிரச்சினைகளுக்கும், விவாதத்திற்கும் அறவே இடமில்லாதவாறு எல்லைக் கற்களை மிகத் தெளிவாகப் பதித்து விடுகிறது.

109:1. (நபியே!) நீர் சொல்வீராக: நிராகரிப்போரே'!

109:2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.

109:3. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.

109:4. அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.

109:5. மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.

109:6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம், எனக்கு என்னுடைய மார்க்கம்.''

இந்த அத்தியாயம் முழுவதும் மறுப்புக்கு மேல் மறுப்பு, உறுதிக்கு மேல் உறுதி, வலியுறுத்துலுக்கு மேல் அழுத்தமான வலியுறுத்தல் என்று மறுப்பது, உறுதிப்படுத்துவது, வலியுறுத்துவது ஆகியவற்றுக்கான அனைத்து முறைகளும் கையாளப்பட்டுள்ளன.

109:2 'நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.''

எனது வணக்கம் உங்கள் வணக்கமாகாது! எனது வணக்கத்திற்குரியவன் உங்களால் வணங்கப்படுபவையாய் ஆகமாட்டான்!

109:3. ''இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.''

உங்கள் வணக்கம் எனது வணக்கமாகாது! உங்களால் வணங்கப்படுபவை எனது வணக்கத்திற்குரியவனாகமாட்டா!

109:4. ''அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.''

அத்தியாயத்தின் முதல் வாக்கியமான வினைச்சொல் வாக்கியத்தின் கருத்தே பெயர்ச்சொல் வாக்கியத்தால் இங்கே மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. இறைவனைத் தவிர உள்ள ஏனையவற்றை வணங்காத பண்பு என்னில் ஊறிப்போய் விட்ட, நீடித்த நிலைத்த பண்பாகி விட்டிருக்கிறது என்பதை இந்த வாக்கியம் மிகச் சிறப்பாக உணர்த்துகிறது.

109:5. ''மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்''.

எவ்வித ஐயத்திற்கும், சந்தேகத்திற்கும் இடமில்லாதவாறு அத்தியாயத்தின் இரண்டாவது வாக்கியத்தையே மீண்டும் வலியுறுத்துவதற்காக இந்த வாக்கியம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஒன்றை மீண்டும் மீண்டும் தெரிவிப்பது, வலியுறுத்திச் சொல்வது ஆகியவற்றின் அனைத்து வகைகளையும் கையாண்டு இந்தக் கருத்து இங்கே தெரிவிக்கப்பட்டப் பிறகு எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லாது போய் விடுகிறது.

இறுதியாக, சந்திக்கவே முடியாத அந்தப் பிரிவு, ஒப்புவமையே இல்லாத அந்தக் கருத்து வேறுபாடு, இணையவே முடியாத அந்த இடைவெளி, கலக்கவே முடியாத அந்தப் பாகுபாடு பின்வருமாறு சுருக்கமாகத் தெரிவிக்கப்பட்டு விடுகிறது.

109:6. ''உங்களுக்கு உங்களுடைய மார்க்கம், எனக்கு என்னுடைய மார்க்கம்.''

நான் இங்கேயும் நீங்கள் அங்கேயுமாக நாம் நின்று கொண்டிருக்கிறோம். இந்த இடைவெளியைக் கடப்பதற்கு எந்த வழியுமில்லை, எந்தப் பாலமுமில்லை. முழுமையானப் பொதுவான இடைவெளி, தெளிவான நுட்பமான பாகுபாடு ''கொள்கைகளே'' நம்மிருவருக்குமிடையில் இருக்கின்றன.

அடிப்படைக் கொள்கையில் வேறுபாடு, அடிப்படைச் சிந்தனையில் வேறுபாடு, வழிப்பாதையின் இயல்பில் வேறுபாடு, சன்மார்க்கத்தின் ஏதார்த்தத்தில் வேறுபாடு இத்தனை வேறுபாடுகளுடன் எந்தப் பிரச்சனையிலும் நடுவழியில் இணைவது என்பது இயலாத ஒன்றாகும். எனவே இத்தகைய அடிப்படையானக் கருத்து வேறுபாட்டின் எல்லைக் கற்கள் தெளிவுப்படுத்துவதற்கு இது போன்ற தயவு தாட்சண்யமற்ற கொள்கைப் பிரகடனம் இன்றியமையாததாகும்.

நன்றி:- திருக்குர்ஆனின் நிழலில்.

Monday, June 12, 2006

தமிழக முதல்வரின் சிந்தனைக்கு.

தமிழக முதல்வர் கலைஞரின் சிந்தனைக்கு.


ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராகப் பதவி ஏற்றுள்ள டாக்டர் கலைஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரது ஆட்சி நல்லாட்சியாகச் சிறந்து விளங்க இணை துணை இல்லாத ஏகன் இறைவனிடம் பிராரத்திக்கிறோம். ஆட்சி நல்லாட்சியாக அமைவதாக இருந்தால் பதவியேற்றுள்ள முதல்வர் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்ததாக வேண்டும். அப்படிப்பட்ட நடவடிக்கைகளால் உடனடியாக பலன் கிடைக்காவிட்டாலும், எதிர்காலத்தில் தமிழகம் தலை நிமிர்ந்து, சிறந்து விளங்க அது வழிவகுக்கும், தமிழகச் சரித்திரத்தில் கலைஞரின் புகழ் மங்காமல் ஒளிரும்.

இன்று மக்களின் மனோ நிலை எப்படி இருக்கிறதென்றால், எப்படிப்பட்ட தவறான அராஜக, அட்டூழிய வழிகளில் துணிந்து இறங்கி பணத்தைத் தேடிக்கொண்டால் போதும் மக்களிடையே மதிப்பையும், கண்ணியத்தையும், அரசியல் செல்வாக்கையும், பதவிகளையும் அடைந்து கொள்ள முடியும் என்ற எண்ணமே மிகைத்துக் காணப்படுகிறது. அரசையும், அதிகாரிகளையும் ஏமாற்ற முடிந்தால் ஏமாற்றுவது, அல்லது லஞ்சம் கொடுத்து சமாளிப்பது இப்படிப்பட்ட அநியாயக்காரர்களின் கொடிய ஆட்சியே, மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் சட்டபூர்வ ஆட்சியை விட கொடி கட்டிப்பறக்கிறது. இந்த நிலை மாற்றப்படாத வரை நல்லாட்சி மலர்வது குதிரைக் கொம்பே.

இதற்கு அடிப்படையாக நமது நாட்டின் கல்வி முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும். பிஞ்சு உள்ளங்களிலேயே பணத்தாசை வேர்விடும் வகையிலேயே நமது கல்வி அமைப்பு இருக்கிறது. குழுந்தையின் ஐந்து வயது பூர்த்தியாகி 6ம் வயதில் முதல் வகுப்பில் சேர்ப்பதற்கு முன்னர் 3ம் வயதில் பிரிகேஜி, 4ம் வயதில் எல்.கே.ஜி 5ம் வயதில் யு.கே.ஜி என மூன்று நிலைகளை உருவாக்கி வைத்திருக்கின்றனர். இந்த ஆரம்ப பிரிகேஜியில் குழந்தையை 3ம் வயதில் கொண்டு சேர்ப்பதற்கே ஆரம்ப நிலையிலேயே குறைந்தது 15 ஆயிரம் ரூபாய் செலவு ஆகின்றது. இதற்கு அதிகமாக வாங்கக்கூடிய ஆரம்பப்பள்ளிகளும் உண்டு. ஆக ஒரு குழந்தை பள்ளியினுள் நுழையும் போதே, அதன் அறியாப்பருவத்திலேயே பணத்தாசை வேர்விட்டு முளைக்க ஆரம்பித்து விடுகிறது. இதில் ஆரம்பித்து இளங்கலையோ அல்லது முதுகலையோ முடிக்கும் வரை பல லட்சக்கணக்கில் செலவிடும் நிலையே காணப்படுகிறது.

இப்படி லட்சக்கணக்கில் செலவழித்து பிள்ளைகளைப் படிக்க வைக்கும் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும்? பெரும் பணம் படைத்த ஒரு சிலருக்கே இது சாத்தியமாகும். சராசரி மனிதர்கள், ஏழைகள் இப்படிப்பட்ட கல்வியை தங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கச் சக்தியற்றவர்களாக இருக்கிறார்கள். பெரும் செல்வந்தர்களின் குழந்தைகள் இப்படிப்பட்ட உயர் கல்வியை லட்சக்கணக்கில் செலவிட்டு அடைந்து கொண்டாலும், அவர்களிடையே இயற்கையிலேயே ஆரம்பத்திலிருந்தே ஊட்டப்படுள்ள பணத்தாசை, அவர்களை லட்சக்கணக்கில் ஊதியம் தரும் அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் நோக்கி பறக்கச் செய்கிறது. அமெரிக்காவின் பொருளாதார வளத்தை மேலும் மேலும் மேம்படச் செய்யும் பெரும் முக்கியப் பணிகளில் நமது இந்திய நாட்டு பட்டதாரிகளே முன்னிலை வகிக்கிறார்கள் என்றால் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

தமிழ்நாட்டில் இன்று கல்வி நிலையங்கள் ஒரு பெருத்த வருமானத்தைத் தரும் கொழுத்த வியாபாரமாகப் போய் விட்டது. பொருளை வாங்கி விற்கும், அல்லது உற்பத்தி செய்து விற்கும் வியாபாரிகள் கூட அந்த அளவு கொழுத்த லாபத்தைப் பெற முடியாது. 50 பைசா அடக்கமாகும் தகவல் தொகுப்பு அறிக்கை (Prospectus) 50 ரூபாக்கும், 10 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரை அடக்கமாகும் தகவல் தொகுப்பு அறிக்கைக்கு ரூபாய் 250/- வரை மாணவர்களிடமிருந்து பிடுங்கும் கொடுமையும் அறங்கேறி வருகிறது. பல்கலைக்கழகங்களும் இதற்கு விதிவிலக்காக இல்லை. இப்படி சின்னஞ்சிறிய விஷயங்களிலிருந்து பெரும் விஷயங்கள் வரை கல்வியின் பெயரால் கொள்ளை அடிக்கப்படுகிறது.

கற்பனைக் கட்டுக்கதைகள், ஜோக்குகள், கிளர்ச்சியூட்டும் ஆபாசச் செய்திகள், ஆபாசப்படங்கள், இன்னும் இவைபோல் மனித உணர்வுகளை மழுங்கச் செய்து அவர்களை ஐயறிவு மிருகங்களைப் போல் செயல்பட வைக்கும் மோசமான செய்திகளைத் தாங்கிவரும் தினசரி, வார, மாத இதழ்கள் மற்றும் குறு, நெடு நாவல்கள், நூல்கள் இவை அனைத்திற்கும் ''Reading Books'' என்ற அடிப்படையில் விற்பனை வரி விதிக்காத தமிழக அரசு, மாணவ, மாணவியரின் படிப்புக்கும் அவர்களின் திறமையை வெளிக்காட்டும் வகையில் அவர்களுக்கு உதவும் அவர்களின் கையேடுகள் (Diary) பரீட்சையில் அவர்கள் எழுத பயன்படுத்தும் விடைத்தாள்கள் (Answer Sheets) போன்ற அனைத்து எழுது உபகரணங்களுக்கும் எழுது பொருள்கள் என்ற அடைப்படையில் விற்பனை வரி விதித்து, ஏழை மாணவ, மாணவியரின் பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரிக்கும் வகையிலேயே அரசு வரிவிதிப்பு முறைகள் இருக்கின்றன. இந்தத் தவறான விற்பனை வரி விதிப்பு முறையை மாற்றி அமைக்க புதிதாக பதவியேற்றுள்ள தமிழக (கலைஞர்) அரசு முன் வர வேண்டும். என பணிவன்புடன் வேண்டுகிறோம்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் படித்துப் பட்டம் பெற்று வெளிவரும் மாணவர்களிடம் நேர்மை, ஓழுக்கம், பண்பாடு, மனித நேயம், சேவை மனப்பான்மை இவற்றை எதிர்பார்க்க முடியுமா? பிஞ்சு உள்ளத்திலிருந்தே பணத்தாசை ஊட்டப்படுவதால் அது வளர்ந்து பெரும் மரமாகி மனிதர்கள் பணப் பேய்களாக அலைகிறார்கள். அந்தப் பணத்தை ஈட்ட எப்படிப்பட்ட கொடுஞ் செயல்களையும், ஆபாசங்களையும் அரங்கேற்றத் துணிகிறார்கள். அதனால் நாடே ஒழுக்கச் சீரழிவுகளிலும், லஞ்சம், கொள்ளை, கொலை, திருட்டு, விபச்சாரம், மது. மாது. சூது இத்தியாதி இத்தியாதி செயல்களால் அலங்கோலப்பட்டு அல்லோலகல்லோலப்பட்டு வருகிறது.

அன்றாட தினசரிகளைப் புரட்டினால் இப்படிப்பட்ட அட்டூழியங்கள் இடம் பெறாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்குப் பக்கம் பக்கமாகக் காணப்படுகிறது. மக்களின் மனோ நிலைக்கு ஏற்றவாறு இன்றைய திரைப்படங்களும் வெளியிடப்பட்டு, மக்கள் மேலும் மேலும் சீரழியவே வழி வகுக்கின்றன. ஆபாசங்கள், வன்முறைக் காட்சிகள் நிறைந்த திரைப்படங்கள் இளைஞர், இளைஞிகளை மேலும் ஒழுக்கங்கெட்ட காட்டுமிராண்டி, தீவிரவாத மனித நேயமற்ற செயல்களில் துணிந்து ஈடுபட வைக்குமா? அல்லது அவர்களை மனிதப்புனிதர்களாக உருவாக்குமா? என்பதைப் புதிய அரசு பரிசீலனை செய்யக் கடமைப்பட்டுள்ளது.

மக்களின் உயிர் காக்கும் மருத்துவத்துறையும், உயிர் போக்கும் துறையாக மாறி வருகிறது. மக்களைப் பயமுறுத்தி பகற்கொள்ளை அடிக்கும் ஒரு கொலைகாரத் துறையாக மாறிவருகிறது. மனித உயிர்களை அலட்சியப்படுத்தி கிட்னி திருடும் கொடியவர்களாக சில மருத்துவர்கள் மாறி வருகிறார்கள். நோயாளிகளின் உயிர் நலனைவிட தங்களின் சொகுசு வாழ்க்கை நலனைப் பெரிதாக நினைக்கும் மருத்துவர்களே அதிகரித்து வருகிறார்கள்.

மருத்துவத் துறையின் இந்த பரிதாப - ஆபத்தான நிலை மாற்றப்பட வேண்டும். 30லட்சம், 40லட்சம் என பணம் கொடுத்து மருத்துவப் படிப்பில் சேரும் நிர்ப்பந்தம் இருப்பதால் மருத்துவர்கள் இப்படி கல்மனம் கொண்டவர்களாக மாறும் கட்டாயம் ஏற்படுகிறது. அரசு உரிய கவனம் செலுத்தி கண்டிப்புடன் அதிரடி மாற்றங்கள் செய்து, மருத்துவர்களும் சேவை மனப்பான்மையுடன், கருணை மனப்பான்மையுடன் பணியாற்றும் உயர் நிலையை அடைய வேண்டும்.

இந்த நிலையில் நாடு எப்படி முன்னேறும்? தமிழகம் எப்படி முதல் மாநிலமாகத் திகழ முடியும்? சிந்திக்க வேண்டுகிறோம். உண்மையில் நம் தமிழகம் முன்னேறி முதல் மாநிலமாகத் திகழ வேண்டும் என்ற அசைக்க முடியாத ஆவல் அரசுக்கிருந்தால், இன்றைய தமிழகத்தில் கல்வி வியாபாரமாக்கப் பட்டிருப்பது ஒழிக்கப்பட்டே தீரவேண்டும். கல்வியை சேவை மனப்பான்மையோடு போதிக்க முன் வரவேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையை அரசு உருவாக்க வேண்டும்.

இலவசங்கள், மானியங்களுக்குப் பதிலாக ஆரம்ப முதல் பட்டப்டிப்பு வரை அனைத்து வகையிலும் இலவசக் கல்வியை ஏற்படுத்தி, கட்டாயக் கல்லியை அமுல் படுத்தினால் எதிர்காலத்தில் தமிழகம் கல்வியில் 100 சதவீதம் வெற்றியடைவதோடு, தமிழகம் இந்தியாவுக்கே ஓர் அழகிய முன்மாதிரியாகத் திகழும். அப்படிப்படித்து பட்டம் பெற்று கல்வியாளர்களாக ஆகிறவர்கள் தொண்டு செய்யும் சேவை மனப்பான்மையுடன் திகழ்வார்கள் என்பதில் ஐயம் இருக்க முடியுமா?

இன்று அரசு, கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பெயரவில் பள்ளிகளை நடத்தி வருகிறதே அல்லாமல், அங்கெல்லாம் தரமான கல்விகள் போதிக்கப்படவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மையாகும். ஆசிரியர்கள் பற்றாக்குறை, கட்டிடங்கள் பற்றாக்குறை, உபகரணங்கள் பற்றாக்குறை, தரமில்லாத கல்வி என்ற நிலையே அரசு பள்ளிக்கூடங்களில் காணப்படுகிறது.

அரசு பள்ளிக்கூடங்களில் தரமான கல்வி முறையாக அளிக்கப்பட்டால், மக்கள் பெரும் பணம் செலவுடன் கூடிய தனியார் பள்ளிக்கூடங்களை ஏன் நாடிச் செல்ல வேண்டும்? எனவே அரசுப் பள்ளிகளின் குறைபாடுகளை அகற்றி அங்கு தரமான கல்வி அளிக்க முனைப்புடன் ஏற்பாடு செய்வதுடன், தனியார் பள்ளிகளில் கல்வியின் பெயரால் கொள்ளை அடிப்பதைத் தடுக்கவும் ஆவன செய்வது அரசின் நீங்காக் கடமையாகும்.

அரசு பள்ளிகளில் தரமான கல்வி முறையாக அளிக்கப்பட்டாலே, தனியார் பள்ளிகளில் போய்ச் சேரும் மாணவ, மாணவிகள் அரசு பள்ளிகளை நோக்கி வந்து விடுவார்கள். தனியார் பள்ளிகளை நடத்துவோரும் அதை வியாபாரமாகக் கொள்ளாமல் சேவை மனப்பான்மையுடன் நடத்தும் சூழலும் ஏற்பட்டு விடும். இது அரசுப் பள்ளிகளை தரமிக்கதாக ஆக்குவது கொண்டே சாத்தியப்படும், கலைஞர் இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டுகிறேம்.

''அரசு எவ்வழி, மக்கள் அவ்வழி'' என்று சொல்வார்கள். எனவே அரசு தனக்கு தேவையான நிதி ஆதாரத்தை ஆகுமான நியாயமான வழிகளில் ஈட்டவே முற்பட வேண்டும். கோடிக் கணக்கில் நிதி சேர்கிறது என்பதால் தவறான வழிகளில் நிதி திரட்ட அரசு முற்படும் போது, அது போன்ற தவறான வழிகளில் மக்கள் தங்களின் நிதி ஆதாரத்தைத் தேடிக்கொள்ள முற்படுவதைக் குறை சொல்லவோ, தடுக்கவோ அரசுக்குத் தார்மீக உரிமை இல்லாமல் போய் விடுகிறது. தவறான வழிகளில் கோடி கோடியாகப் பொருள் ஈட்டும் வாய்ப்பு மிக அதிகமாக இருப்பதால்தான் அரசும், மக்களும் அத்தவறான வழிகளைத் தேர்ந்தெடுக்க முற்படுகிறார்கள்.
ஒழுக்கப் பண்பாடுகள் மிக்க அரசும், மக்களும் மட்டுமே அப்படிப்பட்ட ஈனத் தொழிலில் ஈடுபடுவதைத் தவிர்ப்பார்கள்.

மக்களுக்கு ஒரு முன் மாதிரியான லஞ்ச லாவண்யமற்ற, ஒழுக்க நிறைந்த, பேராசை இல்லாத வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்துவது அரசின் கடமையாகும். கோடிக்கணக்கில் வரும்படி வருகிறது என்பதற்காக நாட்டுக்கும் வீட்டுக்கும், உடலுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் மதுபானக் கடைகளை அரசே நடத்துவது போன்ற ஒரு கையாலாகாத, இழிவான, கேவலமான வேறு ஒரு செயல் இருக்க முடியாது. அரசு மட்டுமல்ல மக்களும் இத் தொழிலில் இருந்து தவிர்க்க வேண்டும்.

சுதந்திரம் கிடைத்ததிலிருந்து கலைஞர் முதன் முதலாக தமிழக முதல் மந்திரி ஆகும் வரை ஒரு தலைமுறைக்கு குடி என்பது என்னவென்றே தெரியாத நிலையை மாற்றி, மதுவிலக்கை அகற்றி மதுபானத்தை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை(?) கலைஞரையே சாரும். இது கலைஞரின் பெருமை மிக்க வாழ்க்கைச் சரித்திரத்தில் ஒரு அழிக்க முடியாத கரும்புள்ளியாகும். அதற்கு பிராயச்சித்தமாக மதுபழக்கத்தை தமிழகத்திலிருந்தே ஒழித்துக்கட்டி, மதுவிலக்கை மீண்டும் அமுல்படுத்தி, தமிழக மக்கள், அதிலும் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் அதிதிலும் குறிப்பாக அவர்களின் குடும்பங்களின் ஏக்கப் பெருமூச்சை அகற்றி, அவர்களின் முகங்களில் மகிழ்ச்சிப் புன்னகை இழைந்தோட வழிவகை செய்வது கலைஞரின் நீங்காக் கடமையாகும்.

இதுபோல் முன்னைய அரசு தடை விதித்த லாட்டரி தொழிலும் சூது நிறைந்த தொழிலேயாகும். ஏழை மக்கள் நெற்றி வேர்வை சிந்தி கடமையாக உழைத்துப் பெறும் பணத்தை அவர்களிடமிருந்து சுரண்டி அவர்களையும், அவர்களின் குடும்பங்களையும் ஓட்டாண்டி ஆக்கி வறுமையிலும், பசி பட்டினியிலும் உழலச் செய்வதே சூதான லாட்டரி தொழிலாகும். இத்தொழில் நாட்டு மக்களை உழைக்காத சோம்போறிகளாகவும், அப்படியே உழைத்தாலும் அதன் மூலம் பெறும் பணத்தையும் இந்த லாட்டரி சூதில் இழந்து விட்டு வெறுங்கையுடன் வீடு திரும்பும் அவலக்காட்சியே நிறைந்து காணப்படுகிறது. மது, மாது, சூது இந்த மூன்றும் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பெருங்கேட்டையே விளைவிக்கும் என்பதை அரசு உணர்ந்து அவற்றை முற்றிலுமாக ஒழித்துக்காட்ட முன்வர வேண்டும்.

சூது என்ற இந்த லாட்டரித் தொழில் மூலமாகவும், மதுபான தொழில் மூலமாகவும் சில லட்சக்கணக்கான மக்களுக்கு தொழில் ஆதாரம் கிடைக்கிறது, அவர்களின் குடும்பங்கள் வாழ வழி ஏற்படுகிறது, ஊனமுற்றோருக்கு ஊன்று கோலாக அமைகிறது என்றெல்லாம் கூறி, இந்த மதுத் தொழிலையும், சூதுத் தொழிலையும் சிலர் நியாயப்படுத்தலாம். இதில் கிடைக்கும் பலனை விட கேடுகளே அதிகம்.

தமிழகத்திலுள்ள ஐந்து லட்சம் மக்களுக்கு அதன் மூலம் வாழ்வாதாரம் கிடைக்கும் நிலையில், ஐந்து கோடி தமிழக மக்களுக்கு பெருங்கேட்டையே விளைவிக்கிறது. எனவே லாட்டரி தொழிலையும், மதுபானக் கடைகளையும் வெறும் ஐந்து லட்சம் மக்களின் நலன் கருதி, அரசே நடத்துவதை விட, தமிழக ஐந்து கோடி மக்களுக்குப் பெரும் துரோகத்தையும், தீங்கையும் செய்யும் வேறு ஒரு தீய செயல் இருக்க முடியாது. எனவே கலைஞர் அவர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி ஐந்து கோடி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறோம்.

(படித்த தலையங்கத்தின் ஒரு பகுதி)