இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி இறை வேதமாகிய திருக்குர்ஆனில் முரண்பாடு இல்லை என்று இறைவன் உத்தரவாதம் தருகிறான். மேலும், திருக்குர்ஆனில் எந்தத் தவறும் ஏற்படாது என்றும் இறைவன் ஆணித்தரமாகக் கூறுகின்றான்.
''இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (திருக்குர்ஆன், 004:082)
''இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கவனிடமிருந்து அருளப்பட்டது.'' (திருக்குர்ஆன், 41:42)
ஆனாலும், திருக்குர்ஆனின் சில வசனங்களைக் குறிப்பிட்டு, இந்த வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது எனக் கேள்விகள் கேட்டு, இஸ்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் பார்வையில், சில வசனங்கள் முரண்படுவது போல் தோன்றினாலும், இஸ்லாம் மார்க்கத்தை முழுமையாக விளங்காததால் திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக விமர்சிப்பவர்களுக்குத் தெரிகிறது. அவற்றை விளக்கும் நோக்கத்தில் இந்தப்பதிவு.
Were Warners Sent to All Mankind Before Muhammad? Allah had supposedly sent warners to every people [10:47, 16:35-36, 35:24], Abraham and Ishmael are specifically claimed to have visited Mecca and built the Kaaba [2:125-129]. Yet, Muhammad supposedly is sent to a people who never had a messenger before [28:46, 32:3, 34:44, 36:2-6]. This article also raises other issues: What about Hud and Salih who supposedly were sent to the Arabs? What about the Book that was supposedly given to Ishmael? Etc.கேள்வி:- 3.
எச்சரிப்பவர்கள் முஹம்மதுக்கு முன் இருந்த மனிதர்களுக்கு அனுப்பப்பட்டார்களா? அல்லாஹ் எல்லா மக்களுக்கும் எச்சரிப்பவர்களை அனுப்பி உள்ளான் [10:47, 16:35-36, 35:24], ஆப்ரஹாமும் இஸ்மவேலும் மக்கா சென்று காஅபாவைக் கட்டியவர்கள் [2:125-129]. இருப்பினும் இதற்கு முன் ஒரு தூதரும் அனுப்பப்படவில்லை என்று நம்பப்படும் மக்களுக்கு முஹம்மது தூதராக அனுப்பப்பட்டார் [28:46, 32:3, 34:44, 36:2-6]. இதில் இன்னொரு கேள்வியும் எழுகிறது. ஹூத், ஸாலிஹ் என்று அரபுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள் பற்றி என்ன சொல்வது? இஸ்மவேலுக்குக் கொடுக்கப்பட்ட வேதம் என்னாயிற்று?ஒவ்வொரு சமுதாயத்துக்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள் என்று திருக்குர்ஆன் 010:047வது வசனம் கூறுகிறது. இந்த விளக்கத்தின்படி அனைத்துச் சமுதாய மக்களுக்கும் இறைவன் தூதர்களை அனுப்பி வைத்திருக்கிறான். அது பற்றிய வசனங்கள்...
முதல் வகையான வசனங்கள். ''ஒவ்வொரு சமூகத்தாருக்கும் தூதர் உண்டு. அவர்களுடைய தூதர் வந்ததும் அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும், அவர்கள் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.'' (010:047)
''அல்லாஹ் வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்'' என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்.'' (016:036)
''எந்த ஒரு சமுதாயமானாலும் எச்சரிக்கை செய்பவர் அவர்களுக்கு வராமல் இருந்ததில்லை.'' (035:024)
(இன்னும் ஒரு சமுதாயத்துக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் தூதர்களாக அனுப்பப்பட்டுள்ளார்கள் பார்க்க: 010:075. 036:13,14.)
010:047. 016:036. 035:024 ஆகிய திருக்குர்ஆன் வசனங்கள் எல்லா சமூகத்தினர்களுக்கு நபிமார்களை அனுப்பியதாகக் கூறி. அச்சமூட்டி எச்சரித்து இறைத்தூதர்கள் அனுப்பப்படாத சமுதாயமே இல்லை என்றும் கூறுகிறது. இனி இதற்கு முரண்பாடாகக் கருதும் திருக்குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம்...
இரண்டாம் வகையான வசனங்கள்.
''இதற்கு முன் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத சமுதாயத்துக்கு நீர் எச்சரிக்கை செய்பவராகவும், அவர்கள் படிப்பினை பெறுவதற்காகவும் (இது கூறப்படுகிறது) (028:046)
''உமக்கு முன்னர் எச்சரிப்பவர் வராத சமுதாயத்தை நீர் எச்சரிப்பதற்காகவும், அவர்கள் நேர்வழி பெறுவதற்காகவும் (இது) உம் இறைவனிடமிருந்து உமக்கு வந்த உண்மை.'' (032:003)
''அவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் நாம் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. உமக்கு முன்னர், நாம் இவர்களிடம் அச்சமூட்டி செய்பவரையும் அனுப்பவில்லை.'' (034:044)
''எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இவர்களை நீர் எச்சரிப்பதற்காக மிகைத்தவனாகிய நிகரற்ற அன்புடையோனால் இது அருளப்பட்டது.'' (036:005,006)
முதல் வகையான (010:047. 016:036. 035:024) வசனங்கள், அறிவுரை கூறியும் எச்சரிக்கை செய்தும், நபிமார்கள் அனுப்பப்படாத சமுதாயங்கள் எதுவும் இல்லை என்று கூறுகிறது.
இரண்டாம் வகையான (028:046. 032:003. 034:044. 036:005,006) வசனங்கள், இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், இதுவரை தூதர் அனுப்பப்படாத சமுதாயத்திற்கு நபியாக அனுப்பப்பட்டார்கள் என்றும் கூறுகிறது. இந்த இருவகையான வசனங்களிலும் முரண்பாடு இருப்பதாகக் கொள்ள முடியாது. ஏற்கெனவே எல்லா சமுதாயத்தினருக்கும் தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள் என்பது, இறுதியாக தூதர் அனுப்பப்படாமலிருந்த சமுதாயத்திற்கும் அச்சமூட்டி எச்சரித்துத் தூதரை அனுப்பி நிறைவு செய்யப்பட்டது.
முரண்படுவதாகச் சொல்பவர்களும் இந்த வசனங்களைச் சொல்லி முரண்படுவதாகச் சொல்லவில்லை. இந்த வசனங்களைச் சுட்டிக் காட்டி, இவற்றோடு வேறு வசனங்களையும் ஒப்பிட்டு அதனால் முரண்படுவதாகச் சொல்கிறார்கள். அவற்றையும் பார்ப்போம்.
(இதையும் எண்ணிப் பாருங்கள்; ''கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம். இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்'' (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் 'என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்' என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.
(இன்னும் நினைவு கூறுங்கள்) ''இறைவா! இந்த ஊரைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக'' என்று இப்ராஹீம் கூறியபோது, ''(என்னை) மறுப்போருக்கும் சிறிது காலம் வசதிகள் அளிப்பேன், பின்னர் அவர்களை நரக வேதனையில் தள்ளுவேன், வேருமிடத்தில் அது மிகவும் கெட்டது'' என்று அவன் கூறினான்.
இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, ''எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்'' (என்று கூறினர்).
''எங்கள் இறைவனே! எங்களை உனக்கு முற்றிலும் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித்தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன், நிகரற்ற அன்புடையோன்.
''எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.'' (002:125-129)
மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்களை முன் வைத்து ஏற்கெனவே நபி இப்ராஹீம் (அலை) அவர்களும் அவர் மைந்தர் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் மக்காவாசிகளுக்கு நபியாக அனுப்பப்பட்டவர்கள்தானே, இந்த இரு நபிகளின் மூலம் வேதங்களும் வழங்கப்பட்டவர்கள் தானே என்றும் கேட்டு, அரபியர்களுக்கு ஏற்கெனவே நபிகள் அனுப்பப்பட்டிருக்கிறது அதனால் இரண்டாவது வகையான (028:046. 032:003. 034:044. 036:005,006) வசனங்கள் முரண்படுகிறது என்று சொல்ல வருகிறார்கள்.
அதாவது மக்காவாசிகளுக்கு முன்பு தூதர்கள் அனுப்பப்பட்டிருக்கிறது ஆனால் ஏற்கெனவே தூதர்கள் அனுப்பப்பட்ட சமுதாயத்துக்கு மீண்டும் தூதராக முஹம்மது (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார் என்ற வாதத்தை வைத்து -
''அவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் நாம் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. உமக்கு முன்னர், நாம் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் அனுப்பவில்லை.'' (034:044) - திருக்குர்ஆன் இந்த வசனத்தையும் இது போன்ற இரண்டாம் வகையான வசனங்களையும், 002:125-129 ஆகிய வசனங்களோடு ஒப்பிட்டு முரண்படுத்துகிறார்கள்.
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்திற்கு, சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களை திருக்குர்ஆன் (002:125-129 ) வசனங்கள் விவரிக்கின்றது. இந்த 2500 ஆண்டுகளுக்கிடையில் அரபு நாட்டில் வேறெந்த இறைத்தூதரும் அனுப்பப்படவில்லை! இங்கே அரபிய சமுதாயங்கள் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்...
அரபிய சமுதாயங்கள்.வரலாற்றாசிரியர்கள் அரபிய சமுதாயத்தை வம்சாவழி அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கின்றனர்.
1. அல் அரபுல் பாயிதா. இவர்கள் பண்டையக் கால அரபியர்களான ஆது, ஸமுது, தஸ்மு, ஜதீஸ், இம்லாக், உமைம்,
ஜுர்ஹும், ஹழூர், வபார், அபீல், ஜாஸிம், ஹிழ்ர மவ்த் ஆகிய வம்சத்தினர் ஆவர். முதல் வகையைச் சேர்ந்த இவர்கள் காலப்போக்கில் அழிந்து விட்டதால் இவர்களுடைய வரலாற்றுக் குறிப்புகள் ஏதும் தெரியவில்லை.
2. அல் அரபுல் ஆரிபா.இவர்கள் எஷ்ஜுப் இப்னு யாஃருப் இப்னு கஹ்தானின் சந்ததியினராவர். கஹ்தான் வம்ச அரபியர் என்றும் இவர்கள் அழைக்கப்படுவார்கள்.
3. அல் அரபுல் முஸ்தஃரிபா.இவர்கள் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினராவர். இவர்களை அத்னான் வம்ச அரபிகள் என்றும் அழைக்கப்படும்.
இந்த வரலாற்று குறிப்புகளிலிருந்து ஆது, ஸமூது கூட்டத்தினர் அழிக்கப்பட்டார்கள் என்று அறிய முடிகிறது. இதையேத் திருக்குர்ஆனும் உறுதி செய்கிறது. ஆது சமுதாயத்தினர் அழிக்கப்பட்டதையும், ஆது சமுதாயத்துக்குப் பின் வந்த ஸமூது கூட்டத்தினரும் அழிக்கப்பட்டதாகவும் திருக்குர்ஆன் 007:072-078 வசனங்கள் கூறுகிறது.
மக்காவில் எவருமே குடியிருக்காத நிலையில் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது மனைவி அன்னை ஹாஜராவையும் கைக்குழந்தையாக இருந்த தமது மைந்தர் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் மக்காவில் குடியமர்த்தியதற்கு முன்பே இரண்டாம்
ஜுர்ஹும் என்ற யமன் கோத்திரத்தினர் மக்கா வழியாக போக்குவரத்திலிருந்தனர். அன்னை ஹாஜரா, மகன் இஸ்மாயீல் (அலை) இவர்களின் பொருட்டு இறைவன் ஜம் ஜம் என்ற நீரூற்றை வெளிப்படுத்தினான் இந்த நீரூற்றின் காரணமாக ஜுர்ஹும் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் அன்னை ஹாஜராவின் அனுமதியோடு மக்காவில் குடியேறினார்கள்.
ஜுர்ஹும் குலத்தார் மக்காவில் தங்கியதோடு, தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்லியனுப்பி அவர்களும் மக்காவில் குடியேறினார்கள். இதனால் ஜுர்ஹும் குலத்தார்களின் வீடுகள் மக்காவில் தோன்றின. குழந்தை இஸ்மாயீல் (அலை) அவர்களும் வளர்ந்து வாலிபமானார். ஜுர்ஹும் குலத்தாரிடமிருந்து அரபு மொழியைக் கற்றுக் கொண்டார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஜுர்ஹும் குலத்தாருக்கு மிகவும் பிரியமானவராகவம், விருப்பமானவராகவும் திகழ்ந்தார். இஸ்மாயீல் (அலை) பருவ வயதை அடைந்தபோது ஜுர்ஹும் குலத்தார் தம் குலத்திலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். இந்தச் சம்பவங்களும் இன்னும் கூடுதலான விவரங்களையும் (
புகாரி 3364 ) நபிவழிச் செய்தியிருந்து தெரிந்து கொள்ளலாம். நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் வம்சா வழித் தோன்றல்கள் இங்கிருந்துத் துவங்குகிறது.
''இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவூட்டுவீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியை நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார்.'' (019:054)
இஸ்மாயீல் (அலை) அவர்கள் இறைவனால் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார் என்று திருக்குர்ஆன் பிரகடனம் செய்கிறது. ஆனால் அவருக்கு வழங்கிய வேதம், காலப்போக்கில் அழிந்து விட்டன என்றே விளங்க முடிகிறது. அதற்குப் பின் - முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன் - வந்த இறைத்தூதர்களுக்கு வழங்கிய வேதங்களே உருப்படியாக இல்லையெனும்போது முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு, சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் இறைத்தூதர் இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு வழங்கிய வேதத்தின் நிலைப்பற்றி சொல்லத் தேவையில்லை.
இறைத்தூதர் இஸ்மாயீல் (அலை) அவர்களுக்குப் பின் - இறுதி இறைத்தூதருக்கு முன் - அரபு நாட்டில் எந்தத் தூதரும் தோன்றியிருக்கவில்லை. இந்த 2500 ஆண்டுகளாக எந்த வழிகாட்டியும் அனுப்படாத, வேதமென்று எதுமில்லாத ஒரு சமுதாயத்தின் தான்தோன்றித்தனமான ஆன்மீகம் எப்படியிருந்திருக்கும்? என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள், ஆனால் இப்ராஹீம் நபியின் மார்க்கத்துக்கு எதிரான மூட நம்பிக்கைகளிலும், சடங்கு சம்பிரதாயங்களிலும் மூழ்கிக் கிடந்தனர்!
திருக்குர்ஆன் ஒரு வசனத்திற்கு வேறு ஒரு வசனமே விளக்கமாகும் என்ற அடிப்படையில், அன்றைய சமுதாயங்களில் வேதம் வழங்கப்பப்படாத சமுதாயம் இருந்தது என்பதை கீழ்வரும் வசனத்திலிருந்து விளங்கலாம்...
''எங்களுக்கு முன் இரண்டு சமுதாயங்களுக்கே வேதம் அருளப்பட்டது. நாங்கள் அதைப் படிக்கத் தெரியாமல் இருந்தோம்'' என்றும், ''எங்களுக்கு வேதம் அருளப்பட்டிருந்தால் அவர்களை விட நேர்வழி பெற்றிருப்போம்'' என்றும் நீங்கள் கூறாதிருக்கவும் (இவ்வேதத்தை அருளினோம்) (006:156,157)
எங்களுக்கு வேதம் அருளப்படவில்லை என்ற நியாயமான கோரிக்கையை வைக்கும் சமுதாயம் ஒன்று அன்று இருந்தது.
மட்டுமல்ல, எங்களுக்கு வேதம் வழங்கப்படவில்லை அதனால் நாங்கள் நேர்வழி பெறவில்லை என, நாங்கள் நேர்வழி பெறாதது எங்கள் குற்றமில்லை என்ற நேர்மையானக் காரணத்தை சமர்ப்பிக்கும் நிலையிலும் அந்தச் சமுதாயம் இருந்தது.
எங்களுக்கு முன் இரண்டு சமுதாயங்களுக்கு வேதம் அருளப்பட்டது அதை
நாங்கள் படிக்கத் தெரியாமல் இருந்தோம் என்பது அந்த சமுதாயத்திற்கு சமீப காலமாக அவர்களின் தாய்மொழியாகிய அரபி மொழியில் வேதம் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது இதையே -
''அவர்கள் வாசிக்கக்கூடிய வேதங்கள் எதையும் நாம் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. உமக்கு முன்னர், நாம் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் அனுப்பவில்லை.'' (034:044) - என்று திருக்குர்ஆன் விளக்குகிறது.
''அவர்கள் வாசிக்கக்கூடிய வேதங்கள் எதையும் நாம் அவர்களுக்குக் கொடுக்கவில்லை எனும் போது, வேதம் வழங்கப்படாத சமுதாயத்துக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் தூதராக அனுப்பியிருக்கவில்லை என்பதே பொருள். அதாவது 2500 ஆண்டுகளுக்கிடையில் எந்தத் தூதரும் அனுப்பப்படாமல், வேதமும் வழங்கப்படாமலிருந்த அரபி சமுதாயத்துக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை நியமிக்கிறான் இறைவன். மேலும், நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனையும் (002:129) இங்கு நிறைவேற்றப்படுகிறது.
அச்சமூட்டி எச்சரிக்க இறைத்தூதர் அனுப்பப்படாத சமுதாயத்துக்கு, முஹம்மது (ஸல்) அவர்கள் தூதராக அனுப்பப்பட்டார்கள் என்ற திருக்குர்ஆன் கூற்றில் எவ்வித முரண்பாடும் இல்லை! அதோடு, முழு மனித குலத்துக்கும் இறைத்தூராகவும், இறுதித்தூதராவும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நியமிக்கப்பட்டு தூதுப்பணி நிறைவு செய்யப்பட்டது.
அன்புடன்,
அபூ முஹை