Tuesday, March 29, 2005

திசை திருப்பும் உள் நோக்கம்.

ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களையும் முட்டளாக்கும் முயற்சியில், அவதூறுகளை சுமந்து களமிறங்கிய நேசகுமார் ''தனியொருவனாக பதிலளிப்பதின் சங்கடங்கள்'' என்று இப்போது புலம்புகிறார். மந்தையில் அமர்களமாய் புகுந்த தனி நரியைப்போல, இஸ்லாத்தின் மீது அவதூறுச் சேற்றை வாரியிறைக்க தமிழ்மணம் வலைப்பதிவில் 3.12.2004ல் ''நபிகள் நாயகத்தின் வாழ்வு'' என்று தொடங்கி.. நேசகுமார் தனி நபராகத்தான் வலிய களமிறங்கினார்.

நொங்கு தின்ன ஆசைப்பட்டவன், நோண்டித்தின்ன சங்கடப்பட்டானாம்.
இஸ்லாத்தின் மீது பெய்யானக் குற்றங்களை அடுக்கடுக்காய் சுமத்துவதில் நேசகுமார் தன்னையொரு தன்னிகரற்ற அறிவாளி(?)யாகத்தான் அடையாளம் காட்டிக் கொண்டார். 3.12.2004ன் முதல் பதிவிலேயே பல குற்றச்சாட்டுக்களை பதிந்திருக்கிறார். அதைத் தொடர்ந்த பதிவுகளிலும், இஸ்லாத்தைப் பற்றி அவர் எழுதியவற்றில்தான் முஸ்லிம் சகோதரர்கள் குறுக்கு விசாரணை செய்திருக்கிறார்கள். அதற்கு விளக்கம் தர முன் வராமல் ''தனியொருவனாக பதிலளிப்பதின் சங்கடங்கள்'' என்று தனது பன்முகத்தன்மையைக் காட்டுகிறார்.

இது தனியொருவராகக் களமிறங்குவதற்கு முன் யோசித்திருக்க வேண்டிய விஷயம். அல்லது ஒவ்வொரு வாதமாக வைத்து விவாதித்திருக்க வேண்டும். (நான் பதிலளிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை என்று அவர் சொன்னாலும் பின் ஏன் இரட்டை வேஷம்?)

கால அவகாசமெடுத்து பதிலளிப்பதன் உறுதித்தன்மை, வசதிகள்
காலம் தாழ்த்துவது தடம் புரண்ட கருத்துத் திசை மாற்றத்திற்கும் உதவியாக இருக்கும் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இஸ்லாத்தின் எதிர்ப்பு.
இஸ்லாத்தின் பன்முகத்தன்மையைப் பற்றி நான் எழுதியபோது அதை இஸ்லாமிய எதிர்ப்பு எனத் தவறாகக் கருதிய முஸ்லிம் அன்பர்கள்,..
நேசகுமார் இதுவரை இஸ்லாத்தை வன்மையாக எதிர்க்கும் தீவிரவாதியாகவே தன்னை அடையாளம் காட்டியிருக்கிறார். எதிரியை எதிரி என்று சொல்லாமல் பூசி மொழுகச் சொல்கிறாரா?

இவையனைத்தும் இஸ்லாத்திற்கு எதிராக எழுதப் படுபவை அல்ல. இஸ்லாத்தில் மாற்றம் வேண்டும் என்றுதான் நான் கோருகிறேனே தவிர, இஸ்லாமே இல்லாமல் போகவேண்டும் என வேண்டவில்லை, விரும்பவும் இல்லை.
வென்னீரில் வாய் வைத்த பூனை, தண்ணீரைக் கண்டாலும் அலறும். என்பது போல் நேசகுமார் ஏதோ ஒரு அதிர்ச்சியில் பாதித்திருக்கிறார் என்றே கருத வேண்டியுள்ளது. முஸ்லிம்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் இஸ்லாத்தில் ஒன்றை சேர்க்கவோ, நீக்கவோ முடியாதே! இஸ்லாத்தின் இந்த அரிச்சுவடியை விளங்காமலேயே இஸ்லாத்தில் மாற்றம் வேண்டும் என விமர்சிப்பது நேசகுமாரின் அறியாமையை வெளிப்படுத்துகிறது.

சில முஸ்லிம்களின் குறையை இஸ்லாத்தின் குறைபாடாக முன்னெடுத்துச் செல்கிறார் என்பதை மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறேன்.

சிறு பிள்ளைத்தனம்.
ஆனாலும், நான் மட்டுமே அடிப்படைவாதத்திற்கு எதிராக எழுதிக் கொண்டிருக்கவில்லை. வலைப்பதிவர்களில் இணையத்தில் எழுதுபவர்களில் பலரும் அவர்களது பதிவுகளிலும், குழுமங்களிலும், வலையிதழ்களிலும் பலவித முறைகளில் இஸ்லாமிஸ்ட்டுகளுக்கு எதிரான கருத்துக்களை தத்தம் பாணியில் வெளிப்படுத்தியே வருகின்றனர். ஆனால், எனக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும் என அனைத்து இஸ்லாமிய அன்பர்களும் விழைகிறார்களேதவிர, மேலே குறிப்பிட்டுள்ளபடி ஏனையோர் எழுதுவதில் இருக்கும் வாதங்களுக்கு பதிலளிப்பதோ, அல்லது தொடர்ந்து பதிலளிப்பதோ இல்லை.
தனது கருத்தின் மீதான எதிர்கருத்தைச் சந்திக்க முடியாமல், ''அவனும்தான் வேலியைத்தாண்டி என்னோடு சேர்ந்து மாங்காய் பறித்தான், அவனையும் கண்டியுங்கள்'' என்று சொல்லும் சிறுவனின், சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது.

ஹாமீத் ஜஃபருக்குத்தான் பதிலளிப்பேன் என்ற சாதிப்பு எதற்கு?
விவாதம் நேரடியானதாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். அது வரிசைப்படியாகவும் அமைந்திருக்க வேண்டும். இது விவாத விஷயத்தில் தெளிவையேற்படுத்திட உதவியாக இருக்கும். சுற்றி வளைத்தல் என்பது விவாத மையக் கருத்தை விட்டு விலகச் செய்து - திசை திருப்பவே உதவும் என்பதில் என்னிடம் மாற்றுக் கருத்தில்லை.

டிசம்பர் 3.2004ல் நேசகுமார் முதல் வலைப்பதிந்து பல பதிவுகளுக்குப்பிறகே ''கயமை வேண்டாம்'' என்று 23.12.2004ல்(திண்ணையில்) ஹாமீத் ஜாஃபர் எழுதுகிறார். (நேசகுமார் இதை 7.1.2005ல் தான் வலைப்பதிவில் அறிமுகப்படுத்துகிறார்) இடைப்பட்ட ஒரு மாத நாட்களில் முஸ்லிம் சகோதரர்கள் வலைப்பதிவில், வைத்த கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்காமல் ஹாமீத் ஜாஃபருக்குத்தான் பதிலளிப்பேன் என்று சுற்றி வளைத்து ஜல்லியடிப்பது திசை திருப்பும் நோக்கமா இல்லையா?

தான் நினைப்பது போலவே பிறர் எழுத வேண்டும்.
தான் நினைப்பது போலவே மற்றவர்கள் எழுத வேண்டும் என்று நினைப்பவரின் புத்தியில் கோளாறு இருக்கும் என்பதை எவரும் மறுக்க முடியாது. நேசகுமாரும் இந்த சுபாவத்தையுடையவர்தான் இதை நான் மிகையாகச் சொல்லவில்லை. அவரே அப்படி எழுதியிருக்கிறார்.

ஹமீது ஜா·பருக்கு உடனடியாக அபூமுஹை எதிர்வினை புரிந்திருக்க வேண்டும்.
என்னே அறிவு!? ஹாமீத் ஜாஃபர் திண்ணையில் எழுதுகிறார். திண்ணைக்கும் நமக்கும் சம்மந்தமில்லை. 7.1.2004ல் நேசகுமாரின் வலைப்பதிவில் ''இஸ்லாம் முன் வைக்கும் இறைவன் - ஹாமீத் ஜாஃபருக்கு சில கேள்விகள்'' என்ற தலைப்பில் ''கயமை வேண்டாம்'' என்ற கட்டுரைக்கு சுட்டி கொடுக்கப்பட்டிருந்தது.

நான் பின்பற்றும் மதத்தை ஒருவன் குறை சொன்னால், நான் பின்பற்றும் மதம் அந்தக் குறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்பதையே நான் நிரூபிக்க வேண்டும். இதை விடுத்து நீ பின்பற்றும் மதம் யோக்கியமா? என்று நான் திரும்ப அவனைக் கேட்டால், நான் பின்பற்றும் மதம் யோக்கியமானதல்ல என்பதை என்னை அறியாமலேயே ஒப்புக் கொள்கிறேன்.

நேசகுமார் இஸ்லாத்தைப் பற்றி விமர்சித்து விட்டார் என்பதற்காக, நான் என் நண்பர்களின் முதுகிலேறி அவர்கள் பின்பற்றும் மதத்தை விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை!

கயமை வேண்டாம் ஆக்கத்தில் இந்து மதத்தைச் சாடியும் எழுதப்பட்டிருந்தது. இதில் இஸ்லாம் உடன்படவில்லை என்பதாலும், ஹாமீத் ஜஃபருக்கு என்று பெயர் குறிப்பிட்டே நேசகுமாரின் வலைப்பதிவுத் தலைப்பு வைக்கப்பட்டிருந்ததாலும் சம்மந்தப்பட்டவர்களே விவாதிக்கொள்வதுதான் சிறப்பாகும்.

உதாரணமாக ஹமீது ஜா·பரின் இஸ்லாம் பற்றிய கருத்துக்கு நான் எழுதும் பதிலை விட, அதை மறுத்து அபூமுஹை அளித்துள்ள பதில் படிப்பவர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஹாமீத் ஜஃபருக்கு - அதாவது ஒரு முஸ்லிற்கு, முஸ்லிமல்லதோர் பதிலளித்தால் அது இன்னும் கணமாக இருந்திருக்குமே!

பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.
நேசகுமார், முன்பு பின்னூட்ட வாசலை அடைத்து, விவாத நாகரீகமற்றவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இப்போது ''பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்'' என்று ஏலம் விடுகிறார். ஒருமுறை முகத்திலறைந்தாற்போல் சாத்திய கதவை எவரும் மீண்டும் தட்டுவார்களா?

தகுதியற்ற தம்பட்டம்.
நான் இஸ்லாம் பற்றி மட்டுமே எழுதிக் கொண்டிருக்கவில்லை. வரலாறு, சமூகம், சினிமா, இலக்கியம், மொழி, கலை என பல்வேறு விஷயங்களைப் பற்றி - சித்தர்களிலிருந்து விண்கோள் வரை எழுதியிருக்கிறேன், எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னிடம் புத்தகமாய் இவற்றைப்(இஸ்லாம் பற்றியவை) பதிப்பிப்பதற்கு கேட்டு வந்த ஆ·பர்களுக்கும் கூட மாதங்கள் பல ஆகியும், கமிட் செய்யாமல் இருக்கிறேன் - நேரமின்மையால். இந்நிலையில் மூச்சுவிடாமல் இஸ்லாம் பற்றி எழுதுவது, நாளுக்கு நாலு பதிவு செய்வது, சாத்தியமில்லாமல் போகிறது.
எனது இவ்வலைப்பதிவு இதுவரை நாலாயிரத்துக்கும் அதிகமான முறை படிக்கப் பட்டிருக்கிறது (கவுன்ட்டரில் தெரிவது உள்ளே வரும் ஐபி எண்ணிக்கை மட்டுமே. மீண்டும் மீண்டும் படிப்பவைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை), இது மட்டுமல்லாது திண்ணையில், மரத்தடியில், பதிவுகளில் என பல்வேறு இடங்களில் பலர் படித்திருக்கின்றனர். பின்னூட்டங்கள் போன்று பதிக்க ஆரம்பித்தேனென்றால், எனது எழுத்துக்கள் தமது மதிப்பை இழந்துவிடும்.
1. வரலாறு, சமூகம், சினிமா, இலக்கியம், மொழி, கலை, சித்தர்களிலிருந்து விண்கோள்வரை எழுதியிருக்கிறேன்.
2. (இஸ்லாம் பற்றியவை) பதிப்பிப்பதற்கு கேட்டு வந்த ஆ·பர்களுக்கும் கூட மாதங்கள் பல ஆகியும், கமிட் செய்யாமல் இருக்கிறேன் -
3. எனது இவ்வலைப்பதிவு இதுவரை நாலாயிரத்துக்கும் அதிகமான முறை படிக்கப் பட்டிருக்கிறது.

தற்புகழ்ச்சி விரும்பியைத் தவிர வேறு எவரிடமிருந்தும் இந்த தம்பட்டம் வெளிப்படாது. இவையெல்லாம் 3.12.2004ல் நேசகுமார் முதல் வலைப்பதிந்து, தொடர்ந்து பதிந்த இஸ்லாத்தின் வரலாற்றுப் புரட்டலுக்கு எந்தளவிற்கு வலுசேர்க்கும்? உண்மைப்படுத்தும்? என்பதை நடுநிலையாளர்கள் புரிந்தால் சரி.

பொதுவாக
நேசகுமார் 23.3.2005 பதிவில் கவ்வைக்குதவாத வாதங்களையே வைத்திருக்கிறார். திண்ணையில் எழுதியது, மரத்தடியில் சூடு பறந்தது, யமுனா ராஜேந்திரனுக்கு மறுமொழியிட்டது, நாகூர் ரூமி வந்தது போனது இன்னும் இது மாதிரியான உளறலெல்லாம் ''இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்'' என்ற பெயரில் ''நபிகள் நாயகத்தின் வாழ்வோடு'' எப்படி சம்மந்தப்படும்? என்பதை பொறுத்திருந்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதுவரை பழைய பாக்கிக்கான கருத்துக்களை வைக்கிறேன்.

விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட நேசகுமாரின் பதிவு.

http://islaamicinfo.blogspot.com/2005/03/blog-post_23.html

Thursday, March 24, 2005

இது இஸ்லாம், இவர் முஸ்லிம்.

கொள்கைகளால் வேறுபட்டு பல மதங்களாக பிரிந்திருந்தாலும், மனிதயினத் துவக்கம் ஒரு மனிதரிலிருந்தே பல்கிப் பெருகிப் பரவியது என்றே இஸ்லாம் கூறுகிறது.

மனிதர்களே! அவன்தான் உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். (திருக்குர்ஆன், 4:1, 7:189, 39:6)

சாதி, இனம், மொழி, கொள்கையென்று வேறுபட்டு - பிரிந்து கிடந்தாலும் மனிதர்கள் அனைவரும் ஒரு தந்தை வழித் தோன்றிய, ஒரேகுடும்பத்தினரே என்பதை இஸ்லாம் அழுத்தமாகச் சொல்கிறது.

//" இறைவன் ஒருவனே என்ற இந்த அழுத்தமான தத்துவமானது, இறைவனின் படைப்பான மனிதர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்ற சிந்தனைக்கு மனிதனை அழைத்துச் செல்வதாக உள்ளது. எனவே இறைவனின் ஒருமையையும், முஹம்மது அவனது இறைதூதர் என்பதையும் பறைசாற்றும் கலிமா, ஒரு முஸ்லிம் முஸ்லிமாக இருப்பதற்கு அடிப்படையானது. இந்த கலிமாவை மனதால் முற்ற முழுக்க ஒரு முஸ்லிம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொள்ளாதவர் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்?" [பக்கம் 32, இஸ்லாம் ஒர் எளிய அறிமுகம்.] // (பக்கம் 40, இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம், இரண்டாம் பதிப்பு)

நாகூர் ரூமியின் முதல் பாதி கருத்துக்கள் மிக அருமை. பிற்பகுதியில் ''இந்த கலிமாவை முற்ற முழுக்க ஏற்றுக் கொள்ள வேண்டும்'' என்பதை அறிவுரையாக ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் வலியுறுத்த முடியாது.

லாயிலாஹா இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை என்றும், முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும், தூதருமாவார் என சாட்சி கூறுகிறேன். என்று சொல்லிவிட்டால் அவர் ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டவராக இஸ்லாத்தில் நுழைந்து முஸ்லிம் ஆகிவிடுகிறார்.

ஓரிறைக் கொள்கையை உளமாற ஏற்றுக்கொண்டாரா? அல்லது உள்ளத்தால் ஓரிறைக் கொள்கையை ஏற்காமல் வேறு காரணத்திற்காக ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர் போல் இஸ்லாத்தில் நுழைந்தாரா? என்று ஆராய்ச்சி செய்யும் அதிகாரத்தை இறைவன் எவருக்கும் வழங்கவில்லை.

''நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் (போருக்குச்) சென்றால் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஸலாம் கூறியவரிடம் இவ்வுலக வாழ்க்கையின் பொருட்களைப் பறிப்பதற்காக ''நீ நம்பிக்கை கொண்டவன் இல்லை'' என்று கூறிவிடாதீர்கள்''.. (திருக்குர்ஆன், 4:94)

''அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் உறுதிமொழி கூறி, தொழுகையைக் கடைபிடித்து, ஸகாத்தும் வழங்கும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் செய்து விட்டால் -தகுந்த காரணம் இருந்தாலன்றி - என்னிடமிருந்து தம் உயிரையும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வார்கள். அவர்களது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது.'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

(ஒரு போரில்) ''நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் போய்ச் சேர்ந்தோம். அவரை நாங்கள் சுற்றி வளைத்துக் கொண்டபோது அவர் ''லாயிலாஹ இல்லல்லாஹ்'' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்ல அந்த அன்சாரி (அவரைக் கொல்லாமல்) விலகிக் கொண்டார். நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்று விட்டேன். நாங்கள் (திரும்பி) வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு இந்தச் செய்தி எட்டவே அவர்கள் என்னிடம் 'உஸாமா! அவர் ''லாயிலாஹா இல்லல்லாஹ்'' என்ற (ஏகத்துவ வாக்கியத்தை) மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?'' என்று கேட்டார்கள். ''ஆயுதத்தை அஞ்சித்தான் அவர் இவ்வாறு சொன்னார் அல்லாஹ்வின் தூதரே'' என்று கூறினேன். ''அதை அவர் (உளப்பூர்வமாகச்) சொன்னாரா இல்லையா என்று அறிய அவருடைய இதயத்தை நீ பிளந்து பார்த்தாயா? என்று கடிந்து கேட்டார்கள்''. (புகாரி, முஸ்லிம்)

மேற்கண்ட இறைவசனமும், நபிமொழிகளும் நம்பிக்கை கொண்டவரின் வெளிப்படையைத்தான் அறியச் சொல்கிறது. நம்பிக்கை கொண்டவரின் அந்தரங்க நோக்கத்தை அலசச் சொல்லவில்லை. நம்பிக்கை கொண்டவரின் அந்தரங்கங்களை அல்லாஹ் ஒருவன் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.
நம்பிக்கை கொண்டு ஓரிறைக் கொள்கையை மொழிந்து, இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டு முஸ்லிமாகும் ஒருவர் அறிந்தும், அறியாமலும் இஸ்லாத்திற்கெதிராக செயல்படும் அவரின் செயல்களுக்கு அவரே பொறுப்பாளியாகிறார். என்பதையும் நாம் முன் வைத்த ஆவனங்களிலிருந்து விளங்கலாம்.

எது இஸ்லாம், யார் முஸ்லிம்?
இவையிரண்டுமே விரிவாக விளக்கப்பட வேண்டியவை. சுருக்கமாச் சொன்னால் திருமறைக் குர்ஆனும், திருக்குர்ஆனுக்கு விளக்கமாக வாழ்ந்த இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் உண்மையான வழிகாட்டியும் மட்டுமே இஸ்லாம்!

லாயிலாஹா இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று சாட்சி கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர் முஸ்லிம்.

''அவன்தான் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம் என்று பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது)'' (திருக்குர்ஆன், 22:78)

//இத்தெளிவை ஏற்படுத்திக் கொண்ட பின்னர், ஹமீது ஜா·பருக்கு என் தரப்பு பதில்களையும், ஏனைய கேள்விகளையும் முன்வைக்கிறேன்.//

மேலும் விளக்கம் தேவையெனில் எழுதவும். போதுமெனில் ஹாமீத் ஜாஃபருக்கு, நேசகுமார் தமது தரப்பு பதில்களையும், கேள்விகளையும் முன்வைக்கலாம்.

அதற்கு முன் இஸ்லாம் முன்வைக்கும் இறைவன் - ஹமீது ஜாஃபருக்கு சில கேள்விகள் என்ற 7.1.05ல் வலைப்பதிவு செய்த திண்ணைக் கட்டுரையைக் காணவில்லை அதை மீண்டும் நேசகுமார் பதிவு செய்து கொள்ளவும்
http://www.thinnai.com/le01060519.html

Thursday, March 17, 2005

நேசகுமாரும், ஹமீத் ஜாஃபரும்.

ஒருவரின் கருத்தை மறுக்கவில்லை என்பதால், அக்கருத்தில் முழு உடன்பாடு உண்டு என்பது அர்த்தமல்ல. சகோதரர் ஹமீத் ஜாஃபர், சகோதரர் நேசகுமாருக்கு எழுதியது, அதற்கான எதிர் கருத்தை நேசகுமார், ஹமீத் ஜாஃபருக்கு எழுதியது. இருவரும் ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்பதாலும், மேலும் இஸ்லாத்தைப் பற்றி ஹமீத் ஜாஃபர் தமது சார்பாக முன் வைத்தக் கருத்தை சகோதரர் நேசகுமார் விமர்சித்தபோது, அதற்கான தக்க பதிலை அளிப்பது மீண்டும் ஹமீத் ஜாஃபருக்கே கடமையாகிறது. எனவே ஹமீத் ஜாஃபரின் மற்றக் கருத்துக்களுக்கு அவரே விளக்கமளிக்கட்டும்.

திருக்குர்ஆன் 2:62 வசனத்தின் பொருள் என்ன? என்பதை மட்டும் நாம் விளக்குவோம்.

2:62. ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது, மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

இந்த வசனத்தின் பொருளை மேலோட்டமாகப் பார்த்தாலே ஒரு விளக்கத்தை புரிந்து கொள்ள முடியும். அதாவது ''யூதர்கள், கிறித்தவர்கள், ஸாபியீன்கள்'' என்று மட்டும் சொல்லவில்லை ஏற்கெனவே ''நம்பிக்கை'' கொண்டவர்களையும் சேர்த்தேச் சொல்கிறது.

ஈமான் கொண்டவர்கள், யூதர்கள், கிறித்தவர்கள், ஸாபியீன்கள் இப்படி நீங்கள் எந்த மதத்தை - எந்தப்பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நிச்சயமாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும் ஈமான் கொண்டிருக்க வேண்டும் என்று மீண்டும் நம்பிக்கை கொள்ளச் சொல்கிறது.

இந்நம்பிக்கையின் அடிப்படையில் நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி, அவர்களின் இறைவனிடம் உண்டு, அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள் என்றும் இயம்புகிறது.

அல்லாஹ்வை நம்புவது என்றால் அல்லாஹ் எவ்வாறு ஈமான் கொள்ளச் சொல்கிறானோ, அவ்வாறு நம்பிக்கை கொள்ள வேண்டும். அது பற்றிய சில வசனங்கள்.

அல்லாஹ்வை நம்புதல்.
ஒரே இறைவன், 2:163, 2:133, 5:73, 6:19, 9:31, 12:39, 13:16, 14:52, 16:22, 16:51, 17:42, 18:110, 21:22, 21:108, 22:34, 29:42, 37:4, 38:5, 38:65, 41:6, 43:45, 112:1

பல கடவுள் இருந்தால். 21:22, 23:91, 17:42
அல்லாஹ்வுக்கு மரணமில்லை.2:255, 20:111, 25:58,
அல்லாஹ்வுக்கு தூக்கமில்லை, 2:255.
அல்லாஹ்வுக்கு சோர்வில்லை, 2:255.
அல்லாஹ் மறக்கமாட்டான், 20:52, 19:64,
அல்லாஹ் உண்ண மாட்டான்,6:14, 22:37, 51:57,
அல்லாஹ்வுக்கு நிகரில்லை, 6:163, 17:111, 25:2 112:4
அல்லாஹ்வுக்கு உதவியாளன் இல்லை, 17:111.

அல்லாஹ் வீணாக விளையாடுபவன் இல்லை,3:191, 21:16,17, 44:38, 23:115, 38:27.
அல்லாஹ் தேவையற்றவன், 22:64, 27:40, 31:12,26, 35:15, 39:7, 47:38, 57:24, 64:6, 112:2,
அவனைப்போல எதுவுமில்லை, 42:11, 36:78, 112:4.

மகன் இல்லை, 2:116. 4:171, 10:68, 17:111, 18:4, 19:35,88-93 21:26, 23:91, 25:2, 37:149-153, 39:4, 43:81,

பிள்ளைகள் இல்லை, 6:100, 17:111, 37:52.
மனைவி மக்கள் இல்லை, 6:101, 72:3.
பெற்றோர் பிள்ளை இல்லை, 112:3.

எங்கும் இருக்கின்றானா?, 7:54, 10:3, 13:2, 20:5, 25:59, 32:4, 57:4.
அவ்வாஹ்வின் பெயர்களைச் சிதைக்கக் கூடாது, 7:180.
அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுதல் பெரும் குற்றம், 4:50.

அல்லாஹ்வின் பெயரில் பொய்யை இட்டுக் கட்டுவது மிகப் பெரிய அநியாயம், 6:93.

இறைச் செய்தி வருவதாகக் கூறுவது கடும் குற்றம், 6:93.
அல்லாஹ்வின் பெயரால் பொய் மிகப் பெரிய பாவம், 6:21,
அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டுவது பெரும் குற்றம், 7:37.

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள், 7:180, 17:110.

இவ்வசனங்களும் இன்னும் இதுபோன்றத் திருக்குர்ஆனின் மற்ற வசனங்களும் அல்லாஹ்வை நம்பும் இலக்கணத்தைத் தெளிவுபடுத்துவது மட்டுமில்லாமல் இவையல்லாத அவரவர் மனோ இச்சையின்படி அல்லாஹ்வை நம்புவது உண்மையான இறைநம்பிக்கையாகாது என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.

இறுதி நாள்.
வானம், பூமி சூரியன், விண் கோள்கள், பூமியில் வாழும் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் ஒருநாள் அழிக்கப்படும். அந்நாளில் இறைவன் மட்டுமே நிலைத்திருப்பான்.

யுக முடிவு நாள், இறுதி நாள், ஸூர் ஊதப்படும் நாள் என பல்வேறு சொற்களால் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது. பின்னர் மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படுவர். விசாரணைக்குப்பின் தீர்ப்பு வழங்கப்படவர். நல்லவர்களுக்குப் பேரின்பம் கிடைக்கும், கெட்டவர்களுக்குத் துன்புறுத்தும் பலவிதமான தண்டனைகள் வழங்கப்படும். இவ்வாழ்விற்கு அழிவே இருக்காது.

தீர்ப்பு நாள், மறுமை, மறு உலகம், ஒன்று திரட்டப்படும் நாள், யாராலும் உதவ முடியாத நாள், திரும்பச் செல்லும் நாள், கூலி வழங்கும் நாள், விசாரிக்கப்படும் நாள், பயன்தரும் நாள், உயிர்ப்பிக்கப்படும் நாள், இறைவனைச் சந்திக்கும் நாள், அவ்வுலகம் கைசேதப்படும் நாள், இறைவன் முன் நிற்கும் நாள், தப்பிக்க இயலாத நாள், எழுப்பப்படும் நாள் இன்னும் பல பெயர்களால் இந்த ''மறுமை நாள்'' குறிப்பிடப்படுகிறது.

சந்தேகம் இல்லாத நாள், மகத்தான நாள், அந்நாள், அந்நேரம், வாக்களிக்கப்பட்ட நாள், எந்த சந்தேகமும் இல்லாத நாள் போன்ற சொற்கள் அழிக்கப்படும் நாளுக்கும், உயிர்ப்பிக்கப்படும் நாளுக்கும் பொதுவானதாகும்.
அழிக்கப்படும் நாள், மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாள் ஆகிய இரு நாட்களும் எப்போது ஏற்படும் என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உள்ளிட்ட எந்த மனிதரும் ஏன் வானவர்களும் கூட அறியமாட்டார்கள். அந்த நாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாகும்.

இவ்வுலகில் மனிதன் நல்லவனாக வாழ இத்தகைய ஒரு நாளை நம்புவது பெரிதும் உதவும்.

எவரும் எவருக்கும் பயனளிக்க முடியாத நாள், 2:48,123. 2:254, 14:31, 26:88, 43:67, 60:3, 70:10, 80:34,35,36.

சில முகங்கள் வெண்மையாகும் நாள். வேறு சில முகங்கள் கருப்பாகும் நாள், 3:106.

உண்மை பயனளிக்கும் நாள், 5:119.
மறைக்க முடியாத நாள், 4:42, 86:9,

இறைவனின் அனுமதியின்றி பேச முடியாத நாள், 11:105, 78:38.

பார்வைகள் நிலைகுத்தி நிற்கும் நாள், 14:42.
பாலுட்டும் தாயை மறக்கடிக்கும் நாள், 22:2.
கர்ப்பிணிப் பெண்ணை பிரசவிக்கச் செய்யும் நாள், 22:2.
போதையுடையோராக மாற்றிவிடும் நாள், 22:2.

இருதயங்கள் தொண்டைகளை அடைத்துக் கொள்ளும் நாள், 40:18.

மலக்குகள் அணிவகுத்து நிற்கும் நாள், 78:38.

இன்னும் இவ்வசனங்களைப் போல ஏராளமான இறைவசனங்கள் மறுமையை எவ்வாறு நம்பச் சொல்கிறதோ அவ்வாறே மறுமையைப் பற்றி ஈமான் கொள்ள வேண்டும். இதற்கு மாற்றமான எவரின் மறுமை நம்பிக்கையும் உண்மையான மறுமை பற்றிய விசுவாசமாக இருக்காது.

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் அல்லாஹ் எவ்வாறு நம்பிக்கைக் கொள்ளச் சொல்கிறானோ அதை அப்படியே முழுமையாக விசுவாசம் கொண்டவர்களுக்கு மட்டுமே அவர்களின் நல்லறங்கள் பயனிக்கும்.
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் அல்லாஹ் கூறிய வகையில் நம்பிக்கைக் கொள்ளாதவர்களுக்கு அவர்களின் நல்லறங்கள் புறக்கணிக்கப்பட்டு, பாழாகிவிடும். இதுவே முஸ்லிம்களின் நம்பிக்கை.

கீழ் காணும் கருத்தைப் பற்றி அடுத்த பதிவில்.
இறைவன் ஒருவனே என்ற இந்த அழுத்தமான தத்துவமானது, இறைவனின் படைப்பான மனிதர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்ற சிந்தனைக்கு மனிதனை அழைத்துச் செல்வதாக உள்ளது. எனவே இறைவனின் ஒருமையையும், முஹம்மது அவனது இறைதூதர் என்பதையும் பறைசாற்றும் கலிமா, ஒரு முஸ்லிம் முஸ்லிமாக இருப்பதற்கு அடிப்படையானது. இந்த கலிமாவை மனதால் முற்ற முழுக்க ஒரு முஸ்லிம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொள்ளாதவர் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்?" [பக்கம் 32, இஸ்லாம் ஒர் எளிய அறிமுகம்.]

Monday, March 14, 2005

கற்காலம் சொல்லும் கருத்து!?

சகோதரர் நாகூர் ரூமியின் ''கற்காலம்'' என்ற கட்டுரையின் சுட்டியை அனுப்பி, இது பற்றிய "இஸ்லாத்தின் கருத்தென்ன? என்பதை முடிந்தால் விளக்குங்கள்'' என்று நண்பரொருவர் கேட்டிருந்தார். கட்டுரையைப் படித்ததில், இஸ்லாத்திற்கு முரணானக் கருத்தாக என் சிந்தனைக்குத் தோன்றுவதை இங்கே பதிவு செய்கிறேன் தவறிருந்தால் திருத்துங்கள்.

கல்லெறிந்து கொல்லும் தண்டனை இஸ்லாத்தில் இல்லை என்பதைப் போல் காட்ட கற்காலம் கட்டுரையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. எதற்காக இந்தக் கட்டமைப்பு? யாரைத் திருப்திப்படுத்த இந்த சுத்தி வளைப்பு?

திருமணம் ஆகாதவர்கள் விபச்சாரம் செய்தால், அவர்களுக்கு கசையடியும், திருமணம் ஆனவர்கள் விபச்சாரம் செய்தால், அவர்கள் மரணிக்கும் வரை கல்லாலடிப்பதும், விபச்சாரக் குற்றத்திற்காக இவ்விருவகையான தண்டனைகளை இஸ்லாம் விதித்திருக்கிறது.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இத்தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் இறக்கும்வரை இந்தச்சட்டம் மாற்றப்படவில்லை. நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின், நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியே கலிஃபாக்களின் ஆட்சியிலும் விபச்சாரம் செய்த திருமணம் ஆகாதவர்களுக்கு தண்டனையாக கசையடியும், விபச்சாரம் செய்த திருமணம் ஆனவர்களுக்கு தண்டனையாக கல்லெறிந்து கொல்வதும் என இருவகை தண்டனைகளை வழங்கியிருக்கிறார்கள் என்பதை பல ஹதீஸ்களிலிருந்து விளங்கிக்கொள்ள முடிகிறது.

தவறான புரிதல். (விபச்சாரம் செய்த குரங்கு!?)
அறியாமைக் காலத்தில் விபச்சாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை நான் கண்டேண். நானும் அவற்றோடு சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன். (தமிழ் புகாரி, எண்3849)

நபிமொழி, அல்லது நபிவழி என்று ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்வதற்கு அந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் என இம்மூன்றில் ஏதாவது ஒன்று இடம்பெற்றிருக்க வேண்டும். நபிவழி ஹதீஸ்களை - செய்திகளைத் தேர்ந்தெடுக்கும் தகுதிகளில் இதுவும் ஒரு அளவுகோலாகும்.

புகாரி 3849வது செய்தியை மைமுன் என்பவரின் மகன் அம்ர் (ரஹ்) அவர்கள் தமது கருத்தாகவேச் சொல்கிறார். இது நபிமொழி என்ற அந்தஸ்தைப் பெறாது. (மூலத்தில்) அறிவிப்பாளர் தொடரில் நபித்தோழர் யாரும் இடம்பெறவில்லை, நபித்தோழர்கள் மட்டுமே நபிவழிச் செய்தியை அறிவிக்க முடியும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றிருந்தும், நபி (ஸல்) அவர்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டாதவர் ஆவார். (இர்ஷாத்துஸ் ஸாரீ, பார்க்க புகாரி பின் குறிப்பு) எனவே அம்ர் (ரஹ்) நபித்தோழர் அல்ல. மேலும் சட்டம் வகுக்க இது நபிமொழி இல்லை.

//இது நபிகள் நாயகம் அவர்களின் ஆளுமைக்கே எதிரானது.//
தாயிஃப் மக்களை மன்னித்தது.
விஷம் வைத்துத் தன்னைக்கொல்ல வந்தவரை மன்னித்தது.
தன்னை எதிர்த்தும், கொல்லவும் முயற்சி செய்த குறைஷிகளை மன்னித்தது.

இவையெல்லாம், நபி (ஸல்) அவர்கள் தமக்குத் தீங்கிழைத்தவர்களை மன்னித்தார்கள். ஆனால் குற்றவாளிகள் எவரையும் மன்னிக்காமல் தண்டனை வழங்கியிருக்கிறார்கள். ''என் மகள் ஃபாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் குற்றவாளிகளை தண்டித்து தீர்ப்பு வழங்குவதில் உறுதியான ஆட்சியாளராக இருந்தார்கள்.

இஸ்லாம், சில குற்றத்திற்காக மரண தண்டனை விதித்திருப்பதைப்போல், மணமானவர்கள் விபச்சாரம் செய்தக் குற்றத்திற்காகவும் கல்லெறிந்து கொல்லும் - மரண தண்டனையை நிறைவேற்றும்படி சட்டம் இயற்றியுள்ளது.
''இது எப்படி நபி (ஸல்) அவர்களின் ஆளுமைக்கு எதிரானதாகும்''?

//1.என்னிடமிருந்து ஹதீதுகளை அறிவிப்பாளர்கள் வந்து உங்களிடம் கூறுவார்களானால், அந்த ஹதீதுகளை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள், திருக்குர்ஆனின் ஒளியில் அவற்றை உரசிப் பாருங்கள். திருக்குர்ஆனோடு அது ஒத்துப்போனால், அதை ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையெனில் அதை விட்டுவிடுங்கள்.//

இந்த கருத்தில் வரும் ஹதீஸ் பலவீனமானது, மட்டுமல்ல இந்த ஹதீஸின் கருத்தும் முரணானவை. எப்படி?

''என்னுடைய செய்தி திருக்குர்ஆனோடு ஒத்துப் போனால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லையெனில் விட்டுவிடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்களின் சொல் திருக்குர்ஆனுக்கு முரண்படும் என்ற முரண்பட்ட கருத்தை முன்வைக்கிறது. மேலும் ''இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்க்கை திருக்குர்ஆனாகவே இருந்தது'' என்ற உண்மையான நபிமொழிக்கும் முரண்படுகிறது.

இன்னும் எழுதுவேன், எழுதியவற்றில் தவறிருந்தால் சகோதரர் நாகூர் ரூமி திருத்துங்கள்.

Sunday, March 13, 2005

ஒரு புத்தகம் பற்றி.

கிழக்கு பதிப்பகம் வெளியீடு, நாகூர் ரூமியின் ''இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்'' புத்தகத்தின் சில கருத்துக்கள் இஸ்லாத்திற்கு உடன்பாடில்லை என்றாலும், இஸ்லாத்தைப் பற்றிய அனைத்துத் தவறான பிரச்சாரத்திற்கும் நேர்த்தியான விளக்கங்களை வழங்கியிருக்கிறார்.

பெண்ணினக் கொடுமைக்குத் துணை போகிறது என மாற்றாரால் விமர்சிக்கப்படும் போலிப் பிரச்சாரத்திற்கு அழுத்தனமான விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

''இஸ்லாமும் பெண்களும்'' என்ற தலைப்பின் கீழ்:
இஸ்லாத்துக்கு முன் பெண்களின் நிலை.
இஸ்லாமும் பலதார மணமும்.
நபி (ஸல்) அவர்களின் பலதார மணங்கள்.
விவாகரத்து, ஜீவனாம்சம், திருமணக் கொடை.
முஸ்லிம் பெண்களின் ஆடைகள் (ஹிஜாப்)
ஷாபான் வழக்கு விபரம், பெண்களும் கல்வியும்.

இப்படி பலக் கிளைத் தலைப்பாக, இஸ்லாத்தில் பெண்களின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி மேலதிக விளக்கம் தேவையில்லாத அளவிற்கு ஆணித்தரமாக இஸ்லாத்தின் கருத்தோட்டத்தை நாகூர் ரூமி பதித்திருக்கிறார்.

''இஸ்லாமும் அடிமைத்தனமும்'' என்று இஸ்லாத்திற்கும் - அடிமைகளுக்கும் உள்ள உறவை அருமையாக படம் பிடித்துக் காட்டி, இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்பே மனிதனுக்கு மனிதன் அடிமைத்தனம் வழக்கில் இருக்கிறது என்ற வரலாற்று ஆவணங்களை முன் வைத்திருக்கிறார்.

ஸைத் (ரலி) அவர்களுக்கும், ஸைனப் (ரலி) அவர்களுக்கும் நடந்த திருமணம் அன்றைய சமூக அமைப்பில் புரட்சிகரமானத் திருமணமகாவே கருதப்பட்டது. ஒரு அடிமைக்கும் உயர் குலப்பெண்ணுக்கும், நடந்த ''திருமணப் புரட்சி'' யை குறிப்பிட்டு, இஸ்லாம் மனிதர்களிடையே வேற்றுமையை வகுக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

''இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்'' முழு புத்தகத்தையும் விமர்சிக்கும் நோக்கமில்லை. புத்தகத்திலிருந்து மாற்றாரால் விமர்சிக்கப்பட்டக் கருத்துக்களில் நேர்மையில்லை என்பதை இங்கே சொல்லிக்கொள்கிறேன்.

தவிர்க்க வேண்டியவை.
74:30ம் வசனத்திற்காக, புத்தகத்தில் சுமார் 24பக்கங்களுக்கு விளக்கமளித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரம் குர்ஆன், சுன்னா மட்டுமே என்று சொல்லிவிட்டு, 74:30ம் வசனத்திற்கு குர்ஆன், சுன்னா அல்லாத ஆதாரங்களை நிரப்பி, நாகூர் ரூமி தனக்குத் தானே முரண்பட்டிருக்கிறார்.

அரபுமொழி புகழ்ச்சியையும் தவிர்த்திருக்கலாம்.
-------------------------------

சகோதரர் நாகூர் ரூமியின் ''கற்காலம்'' கட்டுரையின் சுட்டியை அனுப்பி, இது பற்றிய "இஸ்லாத்தின் கருத்தென்ன? என்பதை முடிந்தால் விளக்குங்கள்'' என்று நண்பரொருவர் கேட்டிருந்தார். கற்காலம் கட்டுரைப் பற்றிய கருத்துப்பறிமாற்றத்தில் சில விளக்கம் கேட்டு நாளை பதிவு செய்வேன். சகோதரர் நாகூர் ரூமி அவர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
அபூ முஹை