சுழலும் பூமி(1) -8
ஏ.கே.அப்துர் ரஹ்மான்
பரந்து விரிந்து கிடக்கும் இப்பூகோளத்தின் மீது நாளும் தவறாமல் இராப் பகல்கள் மாறி, மாறி வரும் பொருட்டு, பூமி கோள வடிவம் கொண்டுள்ளது எனக் கூறும் அறிவியலைப் பரிசுத்த குர்ஆனிலிருந்து இதற்கு முந்திய தொடரில் கண்டோம். ஆனால் பூகோளத்தின் வடிவம் மட்டுமே இராப்பகலைத் தோற்றுவிக்காது. அது சுழலவும் வேண்டுமென்பதை நாம் அறிவோம்.
இராப் பகலைத் தோற்றுவிப்பதற்காகப் பூகோளம் சுழன்றேதான் ஆக வேண்டும் என்ற சிந்தனைகூட கி.மு. 400 களிலேயே கிரேக்கர்களிடம் தோன்றியது. ஆனால் அக்கால அறிவியலாளர்களில் சிறந்தவராகக் கருதப்பட்ட திரு.டாலமி (Ptolemy) போன்றவர்கள் வன்மையாக எதிர்த்த காரணத்தால் இக்கருத்து முளையிலேயே கிள்ளப்பட்டது. போதாக் குறைக்கு அக்காலத்தில் அறிவியல் உலகின் முடிசூடா மன்னராக விளங்கிய அரிஸ்டாட்டில் இக்கருத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கியெடுத்து புவிமையக் கோட்பாட்டை அரியணையேற்றினார். இதன் விளைவாகப் பூகோளத்தின் சுழற்சியைக் கற்பனை செய்தவர்கள் தங்களிள் நிலையை மாற்றிக் கொண்டார்கள். அரிஸ்டாட்டிலுக்குப் பயந்து தான் அவர்கள் தங்களது கருத்திலிருந்து விலகினார்கள் எனவும் கூறப்படுகிறது.
எப்படிப் பார்த்தாலும் அக்கருத்து, தோன்றிய வேகத்திலேயே மறைந்து போயிற்று. ஆகவே அரிஸ்டாட்டிலை ஏற்றதன் காரணமாகவோ நாம் முந்தைய கட்டுரையில் கூறியவாறு பூகோளம் அசையாதிருக்க, சூரியன் சுற்றி வருவதால்தான் இராப்பகல்கள் ஏற்படுகின்றன என்ற கோட்பாடே 16 ஆம் நூற்றாண்டு வரை அறிவியலாளர்களின் நிலையாக இருந்தது.
இவ்வாறு குர்ஆன் வழங்கப்படுவதற்கு (கி.பி. 611 - 634) 800 வருடங்களுக்கு முன்பே மறுக்கப்பட்டு, மறக்கடிக்கப்பட்டு, மக்கள் மனதிற்கு எட்டாமல் 16 ஆம் நூற்றாண்டுவரை மறைந்து கிடந்த இந்த நவீன வானசாஸ்திரத்தைப் பற்றிப் பரிசுத்த குர்ஆன் என்னதான் கூறுகிறது என்று பார்ப்போம்.
இராப் பகல் மாற்றத்தை மையக் கருத்தாக கொண்டு சத்தியத் திருமறையாம் பரிசுத்த குர்ஆனில் பற்பல வசனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வசனங்கள் இராப்பகல் மாற்றங்களைப் பற்பல கோணங்களில் அணுகுகின்றன. எனவே நமது தலைப்பிற்கேற்ற வகையில் அவைகளை மூன்று பெரும்பகுதிகளாக பிரிக்கலாம். அவையாவன:
1. மானிடப் பார்வையில் சூரியனின் பங்களிப்பு. அவைகளுக்குரிய குர்ஆன் வசனங்களான: 2:258, 6:78, 17:78, 18:17, 18:86, 18:90, 20:130, 50:39.
2. அறிவியல் பார்வையில் பூகோளத்தின் பங்களிப்பு. அதற்குரிய வசனங்களான 7:54, 13:2-3 22:61, 24:44, 31:29, 35:13, 39:5, 57:6, 74:33, 91:1-4, 92:1-2, 93:1-2.
3. பயன்பாட்டுப் பார்வையில் இராப்பகலின் பங்களிப்பு இப்பட்டியலில் காணப்படும் வசனங்கள் இத்தலைப்போடு தொடர்பு கொள்ளவில்லை. ஏனெனில் இரவும், பகலும் ஏற்படுவதால் நாம் அடையும் நன்மைகளை அது சுட்டிக் காட்டுகிறது. எனவே முன்னிரு தலைப்புகளை மாத்திரம் நாம் ஆய்வு செய்வோம்.
பொதுவாக இராப் பகல் நிகழ்ச்சியில் சூரியனுடைய பங்களிப்பு வெறும் ஒளி மூலமாக அமைவதே. மற்றபடி இரவைப் பகலாக்குவதும், பகலை இரவாக்குவதும் பூகோளத்தின் சுழற்சியே. இருப்பினும் தொன்று தொட்டு இன்றுவரை நடந்து வரும் நமது பேச்சு வழக்கில் நாம் இந்த அறிவியலை பயன் படுத்துவதில்லை. நகராத சூரியனை (சூரியன் நகர்கிறது. ஆனால் இராப்பகல் நிகழச்சியில் அந்த நகர்வு தேவையற்றது. எனவே இதைப்போன்ற இடங்களில் சூரியன் நகராதிருப்பதாகக் கற்பனை செய்க) உதித்தது, அஸ்தமித்தது எனக் கூறிப் பூமியை சுற்றிவந்து சூரியன் இராப்பகலை ஏற்படுத்துவதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறோம். அதற்காக இந்தப் பேச்சு வழக்கை இனிமேல் மாற்ற முடியுமா?. மாற்றினால் குழப்பமே மிஞ்சும். எனவே திருமறையும் மனதிர்களின் பேச்சு வழக்கிலும் பேச வேண்டியிருந்ததன் அவசியத்தைக் கீழ்கண்ட வசனம் தெரிவிக்கிறது:
'சூரியன் (நடுவானிலிருந்து) சாய்ந்ததிலிருந்து இரவில் இருள் சூழும் வரை தொழுகையை நிலை நிறுத்துவீராக!' (அருள் மறை குர்ஆன் அத்தியாயம் 17 ஸுரத்துல் பனீ - இஸ்ராயீல் 78வது வசனம்).
இவ்வசனத்தின் வாயிலாக நம்மிடம் இறைவன் என்ன கட்டளையிட்டானோ அதனை நிறைவேற்ற வேண்டுமாயின் அதற்குரிய நேரத்தைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஆகவே அக்கட்டளை இறங்கிய காலம் தொட்டு உலகுள்ள காலம் வரை வாழ்ந்த, வாழுகிற, வாழப்போகின்ற அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் சூரியன் சாய்ந்ததிலிருந்து எனத் தொன்று தொட்டு மனிதர்கள் பேசி வருகின்ற அவர்களது பேச்சு வழக்கிலேயே திருமறை நேரத்தைக் கூறியது.
ஆனால் இந்த இடத்தில் சூரியன் சாய்தல் என்ற காட்சியின் அறிவியலையே இறைவன் பயன் படுத்தியிருந்தால்?. அதாவது பூமி சுழன்று, அது சூரியனைச் சாய்ந்ததைப் போல் காட்டும் நேரத்திலிருந்து என்று கூறியிருந்தால்..?
இதைக் கேட்ட மாத்திரத்தில் திருமறை வழங்கப்பட்ட நாளிலிருந்து 17ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த மக்கள் பலவாறு குழம்பிப்போய், இறுதியாக ஒரு முடிவுக்கு வருவார்கள். என்ன முடிவு?. ஓஹோ.. பூமி சுலழக்கூடிய காலம் கூட ஒரு காலத்தில் ஏற்படும் போல் தெரிகிறது. அந்தக் காலத்தில் செயல்படுத்தப் பட வேண்டிய கட்டளைதான் இது. ஆகவே இப்போது இக்கட்டளையைச் செயல்படுத்தக் கூடாது என்பதே அம்முடிவாக இருக்கும். இம்முடிவு கூட இறைவன் இம்மாதிரியான வார்த்தைகளைத் தன் மறையில் பயன்படுத்திய பிறகும் அதை நம்புவதற்கு யார் தயாராக இருப்பார்களோ அவர்கள் எடுக்கும் முடிவாகவே இருக்கும். பிற மக்களைப் பற்றிக் கூறவே தேவையில்லை!.
இப்போது உங்களிடம் ஒரு வினா எழும். பூகோளம் சுழல்கிறது என்ற விபரம் அப்போது யாருக்கும் தெரியவில்லை என்பதால்தான் இந்தப் பிரச்னை. இதைத் தீர்க்க, தன்னுடைய தூதருக்கே அவ்விஷயத்தை இறைவன் கற்றுத் தந்து மக்களுக்கு விளக்கியிருந்தால் பிரச்னை தீர்ந்திருக்கும் அல்லவா என்பதே அவ்வினா?.
இந்த வினா மேலோட்டமாகப் பார்ப்பதற்கு நன்றாகவே காட்சியளித்தாலும், வரலாற்று பேருண்மைகளைக் கருத்தில் கொள்ளாதன் விளைவே இவ்வினாவாகும். சத்தியத் திருமறை வழங்கப்படுவதற்கு முன்பும் சரி, அது வழங்கப்பட்டதற்கு பின்பும் சரி, பூமி சுழல்கிறது என்று கூறியவர்களின் நிலையும், அக்கருத்தை இதர அறிவியலாளர்கள் ஈறாகப் பொது மக்கள் அணுகிய விதமும் நாம் மிக நன்றாக அறிவோம். ஆகவே பூமி சுழல்கிறது என்ற அறிவியலை இறைத்தூதர் (ஸல்) தம்முடைய அழைப்புப் பணியில் பிரச்சாரம் செய்திருந்தால், அவரை இறைவனுடைய தூதர் என்று ஏற்பதற்கு அன்றைய கால கட்டத்தில் எவ்வளவு பேர் தயாராக இருந்திருப்பார்கள்?.
யாரும் தயாராகவில்லை என்றாலும், கோபர், நிக்கஸ், கெப்ளர் முதலானவர்களைப் போன்று மாமனிதர் முஹம்மது (ஸல்) அவர்களும் தம்முடைய வாழ்வை அறிவியலுக்காக அர்ப்பணித்திருக்கலாமே என்ற கோணத்தில் கூட, போகிற போக்கில் யாருக்கேனும் எண்ணத் தோன்றும். இது அவருடைய வருகையின் நோக்கத்தைக் கூடக் கருத்தில் கொள்ளாத கோளாறே!. சீர் கெட்ட நம்பிக்கைகளால், பழக்க வழக்கங்களால் சிதைந்து கொண்டிருந்த மானிடப் பண்பாடுகளைச் சீரமைக்க இறைவனால் அனுப்பப் பட்ட மாபெரும் சீரமைப்பாளரே அம்மாமனிதர். ஆவர் போதித்த ஏகத்தவ கோட்பாடிலிருந்து தொழுகை ஈறாக அனைத்துப் போதனைகளும் மனிதர்களை, மனிதர்கள் என்ற சொல்லுக்கு எற்ற பண்பாளர்களாக உருவாக்கும் வழி முறைகளே. நிலைமை இவ்வாறிருக்க அவர் அறிவியலுக்காகத் தம்மை அர்ப்பணித்துச் சென்று விடுதல் என்பது அவர் அனுப்பப்பட்ட நோக்கத்தைத் தகர்க்கும் செயலாகும்.
இதிலிருந்து மனிதர்கள் செயல்பட வேண்டிய கட்டளைகளை அறிவிக்கும் இடங்களில் எக்காலத்து மக்களாலும் புரிந்து கொள்ளப்படாத, மற்றும் அவர்களின் பேச்சு வழக்கில் நடைமுறைப் படுத்தப்படாத வார்த்தைகளால் கட்டளைகள் அமையக் கூடாது என்பதை ஐயத்திற்கிடமின்றித் தெரிந்து கொள்கிறோம்.
இதை விளக்கும் சான்றுகளில் நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் நிகழ்த்திய விவாதமும் காணப்படுகிறது. அவர் காலத்தில் ஆட்சி செய்த அரசன் தன்னையே இறைவன் என்று கூறினான். அவனுடைய தவறை அவனுக்கு உணர்த்தி, சன்மார்க்கத்தின் பால் அழைக்கச் சென்ற நபியவர்கள் இவ்வாறு கேட்கிறார்கள்:
'அப்படியானால் (நீயே இறைவனானால்) இறைவன் சூரியனை கிழக்கிலிருந்து உதிக்கச் செய்கிறான். நீ அதைச் சற்று மேற்கிலிருந்து உதிக்கச் செய் என கூறினார்.' (அருள்றை குர்ஆன் 2வது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 258வது வசனம்).
இந்த காரசாரமான விவாதத்தில் நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் 'உதித்தல்' என்ற சொல்லின் 'அறிவியல் அமைப்பையே' தமது வாதத்தில் பயன்படுத்தி இருந்தால் எப்படி இருந்திருக்கும்?. அதாவது இறைவனே பூமியைச் சுற்றிச் சூரியனை கிழக்கில் தோன்றும்படிச் செய்கிறான். நீ அதை சற்று மேற்கில் தோன்றும்படிச் செய் எனக் கேட்டிருந்தால் அது விவாதமாக இருந்திருக்குமா?.
இதைப்போன்ற அறிவியல் அமைப்பில் அவர் தம் வாதத்தை அந்தக் கால கட்டத்தில் எடுத்து வைத்திருந்தால், மன்னன் மட்டுமின்றி மக்கள் அனைவருமே அவருக்கு பைத்திய முத்திரை குத்தியிருப்பார்கள். அதோடு அவர் கூறும் விஷயம் யாவற்றையும் பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் என்ற கோணத்தில் அணுகியிருப்பார்கள். இதற்காக மக்களை குற்றப்படுத்துவதும் முறையாகாது. ஏனெனில் இந்த விஷயம் அவ்வளவு தனித்தன்மை பெற்றது.
ஒரு மனிதனுக்கு அவனுடைய வீடு எவ்வளவு அறிமுகமானதோ, அவ்வளவு அறமுகமானதே நமது பூமி. இந்த பூமி சுழல்கிறது என நேரடி வார்த்தைகளில் அவர்களிடம் கூறப்பட்டால் - பூமி சுழல்கிறதா?. இந்த பூமியில்தானே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இது சுழன்று கொண்டிருந்தால் நம்மால் உணர முடியுமே?. ஆனால் இதுவோ அறைந்து வைத்தாற்போல் அசையாமல் இருக்கிறதே!. அப்படி இருக்க இது சுழல்கிறது என்று கூறுகிறாரே! என்னவோ பாவம்! மூளைக்கோளாறு போல் தெரிகிறது என அதைக் கூறியவரைப் பற்றி மக்கள் முடிவு கட்டுவது வியப்புக்குரிய விஷயமன்று. ஆகவே பூமியின் சுழற்சியையோ அல்லது முன் கட்டுரையில் கண்டவாறு பூமியின் நகர்வையோ (21:33) கூற வேண்டிய நிலை ஏற்படும் போது இந்த விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியது மிக மிக இன்றியமையாததாகும்.
எனவே இம்மாதிரியான விஷயங்களைக் கருத்தில் கொண்டே குர்ஆன் தன்னுடைய கட்டளைகளையும் தன் நேர்மையை நிலைநாட்டும் வாதங்களையும் அமைக்கின்றது.
விவாதங்கள் என்பது புரிந்து கொள்ளப்படாத விஷயங்களைப் புரிந்து கொள்வதற்காகச் செய்யப்படும் கருத்துப் பறிமாற்றங்கள்தாம். எனவே புரிந்து கொள்ளப்படாதவைகளைப் புரிய வைப்பதற்காகச் செய்யப்படும் கருத்துப் பறிமாற்றங்களும் புரியா விஷயங்களாக அமைந்தால் அவை எவ்வாறு விவாதங்களாக முடியும்?. எனவே திருமறை தன்னுடைய அணுகு முறையில் அது யாரிடம் பேசுகிறதோ அவர்கள் அனைவரையும் மிகத் துல்லியமாக எடைபோட்டே தன் வார்த்தைகளை முன் வைக்கிறது.
திருமறை கையாளுகின்ற மற்றுமோர் அணுகுமுறையும் அற்புதமானது. சான்றாக துல்கர்னைன் அவர்களின் வரலாற்றில் ஒரு வசனம்
'சூரியன் கறுப்பு நீரில் அஸ்தமிப்பதை அவர் கண்டார்' எனவும்,
மற்றொரு வசனம்:
சூரியன் ஒரு சமுதாயத்தார் மீது உதிப்பதை அவர் கண்டார்' (அருள்றை குர்ஆன் 18வது அத்தியாயம் ஸுரத்துல் கஃபுவின் 86 மற்றும் 89வது வசனங்கள்) எனவும் கூறுகிறது.
இந்த வசனமும் இதுபோன்ற ஏனைய வசனங்களும் நாம் செயலாற்ற வேண்டிய கட்டளைகள் எதையும் கூறவில்லை. எனவே சூரியன் அஸ்தமித்தது அல்லது உதித்தது எனத் திருமறை தன்னுடைய அறிவிப்பாகக் கூறாமல், துல்கர்னைன் அவர்களின் பார்வையில் அவை எவ்வாறு உணரப்பட்டனவோ அதை மட்டும் கூறவதோடு நிறுத்திக் கொண்டது. ஆகவே எங்கெல்லாம் உதித்தது அல்லது அஸ்தமித்தது எனத் தானாகக் கூறாமல், விஷயங்களை முன்வைக்க வாய்ப்புகள் உண்டோ அங்கெல்லாம் திருமறை அந்த வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்கிறது என்பது கண்கூடாகத் தெரியும் உண்மையாகும்.
இதுவரை கூறப்பட்ட விஷயங்களைக் கவனமானப் பரிசீலனை செய்பவர்களிடம் இப்போது ஓர் வினா எழும். அதாவது மானிடப் பார்வையில் அமைந்த விஷயங்களைப் கூறும் போது வசனங்கள் இவ்வாறுதான் அமைய வேண்டும் என்பது உண்மையே. ஆனால் இராப் பகல் மாற்றத்தின் அறிவியல் அமைப்பை கற்றறிந்த மக்களும் குர்ஆனைப் பார்க்கிறார்கள். ஆய்வுக் கண்ணோடு பார்க்கும் அப்படிப்பட்ட மக்களைக் கருத்தில் கொண்டு இது இறைவேதமே என அவர்களுக்கு உணர்த்தும் வகையில் ஒரு அறிவியல் சான்றைக் கூட குர்ஆன் தரவில்லையா? என்பதே அவ்வினாவாக இருக்கும்.
ஆனால் ஒன்றோ இரண்டோ அல்ல. ஏராளமான சான்றுகளை இந்த அற்புதத் திருமறை தாங்கி நிற்கிறது. இராப் பகல் நிகழ்ச்சியை ஏற்படுத்த, பூகோளம் சுழல்கிறது என்ற அறிவியலைப் பூகோளத்தின் பெயரை நேராடியாகப் பயன்படுத்தாமல் எந்த அளவிற்குக் கூறலாமோ, அந்த அளவிற்கு கூறகிறது. இராப் பகலை ஏற்படுத்த, சூரியன் பூகோளத்தைச் சுற்றி வரவில்லை என்ற அறிவியலைக் கூற சூரியன் பெயரை நேராடியாகப் பயன்படுத்தாமல் எந்த அளவிற்குக் கூறலாமோ, அந்த அளவிற்கு கூறகிறது. அது எப்படி?...
(வளரும் இன்ஷா அல்லாஹ்)
---------------------------
வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் முந்தைய பகுதிகள்.