Showing posts with label ஹஜ். Show all posts
Showing posts with label ஹஜ். Show all posts

Friday, December 23, 2011

கடன் பட்டிருப்பவர்கள் ஹஜ் செய்தல் கூடுமா?

கடன் இருக்கும் நிலையில் கடனை அடைக்க எவ்வித ஏற்பாடும் செய்யாமல் ஒருவர் மரணித்தால், கடன் அடைக்கப்படும்வரை அவரது ஆன்மா அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் (திர்மிதீ); உயிர்த் தியாகிகளுக்குங்கூட கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்; ஆனால் கடன் மன்னிக்கப்படுவதில்லை (முஸ்லிம்) போன்ற அறிவிப்புகளின்படி, கடன் அடைக்கப்பட வேண்டும் என்பது சரியே! இது ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்வோருக்கு மட்டும் உள்ள நிபந்தனையல்ல. எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவான விதியாகும்.

கடன் உள்ளவருக்கு ஹஜ் கடமை இல்லை என்பதையும் தாண்டி, கடனே இல்லாவிட்டாலும், ஹஜ்ஜுக்குச் சென்று வரும் பொருளாதார வசதியில்லாதவருக்கும் ஹஜ் கடமை இல்லை. அதாவது, கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றவில்லை என்பதற்கான கேள்விக்கு பொருளாதார வசதியற்றவர் உள்ளாக மாட்டார். ஹஜ் செய்வதற்கான பொருளாதாரம் அவரிடம் இல்லை; எனவே ஹஜ் செய்யவில்லை என்றாகிவிடும்.

ஒருவரின் ஹஜ் பயணத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கடனும் உள்ளது. இப்போது உடனடியாகக் கடனை அடைத்து, ஹஜ் பயணத்தைத் தவிர்ப்பது சிறந்ததாகும். மரணம் எப்பவும் சம்பவிக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு கடன் அடைக்கப்பட வேண்டும்.

ஆனால், கடன் உள்ளவர் இஸ்லாம் அனுமதித்துள்ள வேறு வழியில் மக்கா செல்வதற்கான வசதியைப் பெற்றிருந்தால் அவருக்குக் கடன் உள்ளது என்று வைத்துக்கொண்டாலும் அவர் இப்போது ஹஜ் செய்வது கூடுமா கூடாதா என்றால், கடன் உள்ளவர் ஹஜ் செய்யலாம் என்பதே இஸ்லாத்தின் நிலைபாடாக உள்ளது. கஅபா அமைந்திருக்கும் நாட்டில் இருந்தாலும், அங்குப் பணியாற்றும் நிறுவனத்தில் ஹஜ்ஜுக்கு விடுப்புக் கிடைத்தாலும், சென்றுவர பொருளாதாரம் இருந்தாலும் கடனாளி ஹஜ் செய்தல் கூடாது என்பதற்கான தெளிவானத் தடையேதும் குர்ஆன், சுன்னாவிலிருந்து நம்மால் அறிய முடியவில்லை!

பயணத்தில் உண்பதும் உடுத்துவதும் ஹலாலாக இருக்கவேண்டும் என்று பொதுவாக இஸ்லாம் கூறுவதால், இதன் அடிப்படையில் ஹஜ் பயணத்திற்கான செலவுகள் ஹலாலாக இருக்கவேண்டும். கடன் வாங்குவது ஹராம் அல்ல! அதனால் கடன் உள்ளவர் மக்கா சென்றால் அவர் ஹஜ் செய்வதற்குக் கடன் இடையூறாக இருக்கும் என்பதற்குப் போதிய தெளிவுகள் இல்லை!

ஹஜ்ஜுடைய காலத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து பேரூந்து வாகனம் மூலமாக ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் பயணிகளுடன் வரும் பேரூந்து வாகன ஓட்டிக்குக் கடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதை அவர் பொருட்படுத்த வேண்டியதில்லை. அவரும் குறிப்பிட்ட எல்லையை அடைந்ததும் ஹஜ் பயணிகளுடன் தாமும் இஹ்ராம் அணிந்து "லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக்" என்று தல்பியா முழங்கியபடி வாகனத்தைச் செலுத்தி மக்காவிற்குள் நுழைந்து தங்க வேண்டிய இடங்களில் தங்கி, செய்ய வேண்டிய ஹஜ் கிரியைகளை நிறைவேற்றினால் இவர் உழைப்பிற்கான ஊதியத்துடன் ஹஜ்ஜை நிறைவேற்றுகிறார். 2:198வது வசனத்தின் கருத்துப்படி ஹஜ்ஜின்போது நேர்மையான முறையில் அல்லாஹ்வின் அருளைத் தேடுவதில் அல்லாஹ் தடைவிதிக்கவில்லை!

அதுபோல், மற்ற நாடுகளிலிருந்து விமானம் மூலமாக வரும் ஹஜ் பயணிகளைக் கொண்டுவந்து ஜித்தாவில் சேர்க்கும் விமான ஓட்டி, அவரும் ஹஜ்ஜை முடித்துவிட்டு, குறிப்பிட்ட தேதியில் வந்து விமானம் புறப்படும் நாளில் வேலையை ஏற்றுக் கொள்கிறேன் என ஹஜ் கிரியைகளை நிறைவேற்றினால் அவருக்கு ஆகுமானதே!

ஹஜ் கடமை என்பது கிரியைகளைக் கொண்டு நிறைவேற்றப்படுவதாகும். "பூமியில் பரந்து சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்" என்கிற (62:10) வசனத்தினடிப்டையில் வேலைக்கென சவூதிக்கு வந்தவர் ஹஜ்ஜின் நாட்களில் மக்கா சென்று குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட கிரியைகளை நிறைவேற்றினால் அவருடைய ஹஜ் கடமையும் நிறைவேறிவிடும்.

கடன் உள்ள நிலையில் மரணித்தவருக்குக் கடன் மன்னிக்கப்படுவதில்லை. இது எல்லாருக்கும் உள்ள பொதுவானதாகும். ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றியவருக்கும் இது பொருந்தும்!

கடனாளியாக இருந்து, அந்தக் கடனை அடைக்காமலும் வாய்ப்புக் கிடைத்தும் ஹஜ்ஜை நிறைவேற்றாமலும் மரணித்த ஒருவரையும் கடனிருந்தும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றிவிட்டு மரணித்த ஒருவரையும் ஒப்பு நோக்கினால் இந்த உண்மை புரியும்.

oOo


ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ் வாய்ப்பை வழங்கும்போது, ஆதாரமில்லாத பொருந்தாக் காரணங்களை நாமாகக் கற்பித்துக் கொள்ளாமல், மக்காவுக்குச் சென்று ஹஜ்ஜை நிறைவேறுவதற்கு முனைப்புக் கொள்ளவேண்டும். ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்கு ஆர்வமூட்டும் சான்றுகளைக் காண்போம்:

அருள்வளமிக்கதாகவும் அகிலத்தாருக்கு வழிகாட்டியாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பெற்ற முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதுதான். அது, பெரும் பேறு பெற்றதாகவும் உலகத்தாருக்கான நேர்வழி மையமாகவும் திகழ்கிறது.

அதில் தெளிவான சான்றுகளும் மக்காமு இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் பாதுகாப்புப் பெற்றவர் ஆவார். மக்களில் அங்குச் சென்றுவரச் சக்தி பெற்றோர் அல்லாஹ்வுக்காக அவ்வில்லத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவர் மறுதலித்தாலும் (அதனால் அல்லாஹ்வுக்கு இழப்பில்லை. ஏனெனில்) அல்லாஹ் அகிலத்தாரிடம் தேவையற்றவன் ஆவான்
(அல்குர்ஆன் 3:96,97).

"வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" அறிவிப்பவர் இப்னு உமர்(ரலி) (நூல்கள்: புகாரி 8, முஸ்லிம் 20, திர்மிதீ, நஸயீ, அஹ்மத்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது, "மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கிவிட்டான். எனவே ஹஜ் செய்யுங்கள்" என்றார்கள். அப்போது ஒரு மனிதர், "ஒவ்வோர் ஆண்டிலுமா (ஹஜ் செய்ய வேண்டும்), அல்லாஹ்வின் தூதேர?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அவர் மூன்று முறை அவ்வாறே கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் "ஆம்' என்று சொல்லிவிட்டால் அது (ஒவ்வோர் ஆண்டிலும்) கடைமயாகிவிடும். பின்னர் உங்களால் அதை நிறைவேற்ற முடியாமலாகிவிடும்" என்று கூறிவிட்டு, "நான் (எதுவும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு எதை விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்தெதல்லாம், அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் அதிகமாக(த் தேவையற்ற) கேள்விகள் கேட்டதாலும் அவர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டதாலும்தான். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டைளயிட்டால், அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதை(முற்றாக) விட்டுவிடுங்கள்!" என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரி 7288, முஸ்லிம் 2599, நஸயீ).

தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற கடமையான அமல்களை அறிவித்திடும் குர்ஆன் வசனங்களைப் போன்று, மேற்காணும் இறைவசனங்களும் நபிவழி அறிவிப்புகளும் ஹஜ் செய்வது முஸ்லிம்கள் மீது கடமையாகும் என வலியுறுத்துகின்றன.

கடமையான மற்ற அமல்களை நாம் வாழுமிடங்களில் இருந்தே நிறைவேற்றிக்கொள்ளலாம். ஆனால், ஹஜ்ஜுக் கடமையை, மனிதர்களுக்கென முதல் முதலாக அமைக்கப்பட்ட இறை ஆலயம் என அல்லாஹ் அறிவித்திருக்கும் மக்காவில் அமையப்பெற்ற கஅபத்துல்லாஹ்வைச் சென்றடைந்து அதைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட சில இடங்களில் தங்கியிருந்து ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிட வேண்டும்.

ஹஜ்ஜைப் பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்) (அல்குர்ஆன் 22:27).

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் மூலமாகவே அல்லாஹ் ஹஜ்ஜின் அறிவிப்பை ஏற்பாடு செய்துள்ளான் என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து விளங்குகிறோம். ஹஜ்ஜுக்கான அறிவிப்பைக் கேட்டு ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக அருகிலிருப்போர் நடந்தும், தூரத்திலிருப்போர் வாகனங்களில் பயணித்தும் கஅபத்துல்லாஹ்வை வந்தடைவார்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

மக்களில் அங்குச் சென்றுவரச் சக்தி பெற்றோர் அல்லாஹ்வுக்காக அவ்வில்லத்தை ஹஜ்ஜுச் செய்வது கடமையாகும் (அல்குர்ஆன் 3:97).

ஒரு முஸ்லிம் இன்று உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர் மக்காவுக்குச் சென்று வர சக்தி பெற்றிருந்தால் அங்குச் சென்று ஹஜ் செய்வது அவருக்குக் கடமையாகும். இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள 'சக்தி' என்பது ஹஜ் கிரியைகளுக்காகத் தொலை தூரம் செல்வதால் சென்று திரும்பும் நாட்களுக்கான பொருளாதாரமும் உடல் ஆரோக்கியமும் முக்கியத் தேவைகளாகும்.

அடுத்து, தொலை தூரம் சென்று வர வாகனம் அவசியம். 'சக்தி' என்பதில் வாகன அவசியமும் உள்ளடங்கும். ஆகவே, ஹஜ்ஜுக்குச் சென்று வர சக்தி பெற்றோர் என்பதில் பொருளாதாரம், உடல் ஆரோக்கியம், மற்றும் வாகன வசதியும் வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அன்சாரிப் பெண்ணிடம், "நீ எங்களுடன் ஹஜ்ஜுச் செய்வதைத் தடுத்தது எது?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, "எங்களிடம் நீர் இறைப்பதற்கான இரண்டு ஒட்டகங்கள் மட்டுமே உள்ளன. ஓர் ஒட்டகத்தில் என் கணவரும் மகனும் ஏறி ஹஜ்ஜுக்குச் சென்றுவிட்டனர். மற்றோர் ஒட்டகத்தை எங்களுக்காக விட்டுச் சென்றனர். அதன் மூலம் நாங்கள் நீர் இறைத்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ரமளான் மாதம் வந்துவிட்டால் அப்போது நீ உம்ராச் செய்துகொள். ஏனெனில், ரமளானில் உம்ராச் செய்வது ஹஜ்ஜுக்கு நிகரான(பலனுடைய)தாகும்" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்கள்: புகாரி 1863, மேற்கண்ட அறிவிப்பு முஸ்லிம் 2408, 2409)

இதன் அறிவிப்பாளர் அதாவு (ரஹ்) அவர்கள் கூறுகிறார்: "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள். ஆனால், அதை நான் மறந்துவிட்டேன்". (அப்பெண்ணின் பெயர் 'உம்மு ஸினான்' என்பதாகும்).

ஹஜ்ஜுக்குச் சென்று வர வாகனத் தேவையுள்ளது. இது அந்தந்தக் காலத்திற்கேற்ப வாகனங்கள் மாறிக்கொள்ளும். சென்று வரும் சக்தியை முன்னேற்பாடு செய்துகொள்ள வேண்டும். என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜைத் தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் உடலுறவு, கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் நன்மை மிக்கது, தக்வா(என்னும் இறையச்சமே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள் (அல்குர்ஆன் 2:197).

ஹஜ்ஜுக்குத் தேவையான பொருள்களைச் சேகரித்துக் கொள்ள வேண்டும் என்பதில் உணவும், வாகன வசதியும் அடங்கிவிடும்.

யமன் வாசிகள் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருள்களைச் சேகரிக்காமல் ஹஜ்ஜுக்கு வருவார்கள். மேலும், 'நாங்கள் இறைவன் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்' என்றும் கூறுவார்கள். மக்கா வந்தடைந்தால் மக்களிடம் யாசகம் கேட்பார்கள். இது குறித்தே அல்லாஹ், "(ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள், நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் நன்மையானது தக்வா (என்னும் இறையச்சமே) ஆகும்" என்ற வசனத்தை இறக்கினான். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்: புகாரி 1523).

2:197வது வசனம் அருளப்பட்ட பின்னணி, தொலைவிலிருந்து ஹஜ்ஜுக்குச் செல்வோர் தேவையான பொருட்களை சேகரித்துக் கொண்டு செல்லாமல் மக்கா சென்று தமது தேவையை யாசித்துப் பெற்றுள்ளனர். இவ்வாறு செய்யாமல் உங்களுக்கான பொருட்களை முன்னேற்பாடாக சேகரித்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்லப்படுகிறது. இதனால் யாசிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லலாமே தவிர, வயிற்றுப் பசிக்குக்கூட யாசிப்பது கூடவே கூடாது என்று தடைவிதிப்பதாக ஆகாது. "குர்பானி இறைச்சியை ஏழைகளுக்கும், யாசிக்காதோருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்" என்று 22:28, 36 ஆகிய வசனங்கள் கூறுகின்றன!.

சக்தி பெறுதலைத் தாமாக முயற்சி செய்து சக்தி பெறுதல் என்றும் எதிர்பாராமல் வேறு வகையில் மக்கா சென்று விடுவது என்றும் இரு வகைகளாகப் பிரிக்கலாம். நாம் கவனிக்கத் தக்கது அவை ஹலாலான வழியில் உள்ளதா என்பதை மட்டுமே.

எனவே, ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்கு ஹலாலான வழியில் சக்தி வழங்கப்பட்டவர்கள், கடன் என்ற காரணத்துக்காக அதைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை.

(இறைவன் மிக்க அறிந்தவன்).


Saturday, December 08, 2007

குர்பானியின் சட்டங்கள்.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமையாக - ஈமான் கொள்வது, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் எனும் இபாதத்துகளில் எல்லாத் திசைகளிலுமிருந்து உலக முஸ்லிம்கள் காபத்துல்லாஹ்வை நோக்கி புனிதப் பயணத்தை மேற்கொண்டு ''ஹஜ்'' எனும் கடமையை நிறைவேற்றும் துல்ஹஜ் மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

''மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக!'' (அல்குர்ஆன் 022:028) என இறைவன் தனது அடியார் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கிட்டக் கட்டளையின் பேரில், அறிவித்த ஹஜ்ஜின் அழைப்பை ஏற்று கால காலமாக இறையில்லத்தை நோக்கி மக்கள் பயணம் சென்று ஹஜ் எனும் இறைவணக்கத்தை நிறைவேற்றுகின்றனர்.

'என் இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தருவாயாக" (என்று பிரார்த்தித்தார்). எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயம் கூறினோம்.

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார், "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினார், 'என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ், நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.

ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்திய போது, நாம் அவரை, 'யா இப்ராஹீம்!" என்றழைத்தோம். 'திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம் என்று கூறினோம்.



நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ்சோதனையாகும். பெரிய பலிப் பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்."
(அல்குர்ஆன், 037:100-108)

துல்ஹஜ் மாதம் ஹாஜிகளுக்கு மட்டும் இபாதத் மாதமன்று! நபி இப்ராஹீம் (அலை) மற்றும் அவர்களின் மைந்தர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் நினைவாக உலக முஸ்லிம்கள் அனைவரும் ''குர்பானி'' எனும் பிராணிகளை அறுத்து பலியிடும் இபாதத்தை நிறைவேற்றும் ஈதுல் அழ்ஹா எனும் தியாகத் திருநாளைக் கொண்டாடும் மாதமுமாகும். எனவே, துல்ஹஜ் மாதத்தில் அறுத்துப் பலியிடுதல் பற்றிய இஸ்லாத்தின் சட்டங்களை நினைவுபடுத்திக் கொள்வோம்.

குர்பானி கொடுக்க நாடுபவர்

நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ் பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும்வரை தனது முடியையும் நகத்தையும் வெட்ட வேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா , பைஹகீ.)

குர்பானி கொடுக்கும் பிராணிகள் ஆரோக்கியமாகவும், ஊனமற்றதாகவும் இருக்க வேண்டும். தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் கண்பார்வைக் குறைவு, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் சதைப்பற்று இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மதீ ,அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா)

பிராணிகளின் கண்களையும், காதுகளையும், கவனித்துத் தேர்வு செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். சிறிதளவு காது வெட்டப்பட்டவை, காது கிழிக்கப்பட்டவை, காதில் துவாரமிடப்பட்டவை ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (திர்மிதீ அஹ்மத், அபூதாவூத், நஸயீ).

நபி(ஸல்) அவர்கள் 'கொம்புள்ள கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய, கறுப்பு நிறத்தால் அமரக்கூடிய, கறுப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது கால், மூட்டுக்கால், கண் பகுதி ஆகியவை கறுப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள். (முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)

கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய, கறுப்பு நிறத்தால் அமரக்கூடிய, கறுப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது கால், மூட்டுக்கால், கண் பகுதி ஆகியவை கறுப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள். (ஆடு வந்ததும்) ஆயிஷாவே கத்தியை எடுத்து வா! என்றார்கள். பிறகு அதைக் கல்லில் தீட்டு! என்றார்கள். நான் அப்படியேச் செய்தேன். பிறகு கத்தியை வாங்கிக் கொண்டார்கள். ஆட்டைக் கீழே படுக்க வைத்து அறுத்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) (முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)

குர்பானி பிராணிகளை வீட்டில் வளர்ப்பதும் நபி வழியே!
'மதீனாவில் குர்பானி பிராணிகளை நாங்கள் கொழுக்க வைப்போம். (ஏனைய) முஸ்லிம்களும் கொழுக்க வைப்பார்கள்." (புகாரி, தஃலீக்).

ஒரு குடும்பத்துக்கு எத்தனை ஆடுகள் குர்பானி கொடுக்கலாம்?

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் 'ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பர். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள். மக்கள் பெருமையடிக்க ஆரம்பித்து நீர் பார்க்கக்கூடிய இந்த நிலை ஏற்பட்டுவிட்டது என்று கூறினார்கள். (திர்மிதீ, இப்னுமாஜா, தப்ரானீ)

குர்பானி இறைச்சியை நீங்களும் உண்ணுங்கள்! சேமித்தும் வைத்துக்கொள்ளங்கள், தர்மமும் செய்யுங்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

எனவே, ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆடு குர்பானி கொடுத்தால் போதுமானது. வசதி படைத்தவர்கள் எத்தனை ஆடுகள் வேண்டுமானாலும் அறுத்து பலியிட்டு தர்மம் செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்கள் குர்பானி கொடுத்திருக்கிறார்கள் என்று விளங்கிக் கொள்ளலாம்.

கூட்டாக ஏழு பேர் சேர்ந்து ஒரு ஒட்டகம், ஒரு மாடு இவற்றை குர்பானி கொடுக்கலாம்.

ஹுதைபியா ஆண்டில் நாங்கள் ஏழு நபர்கள் சார்பாக ஒரு ஒட்டகத்தையும், ஏழு நபர்கள் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுத்தோம். (முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி இப்னுமாஜா)

அறுப்பது பெருநாள் தொழுகைக்கு முன்பா? பிறகா?

இன்றைய நாளில் நாம் முதலாவதாக செய்வது தொழுகையாகும். பிறகு நாம்(இல்லத்திற்குத்) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம். (புகாரி , முஸ்லிம்)

இன்றைய நாளில் நாம் முதலாவதாக செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூதர்தா இப்னு நியார்(ரலி) அவர்கள் (தொழுமுன்) அறுத்துவிட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடம்) என்னிடத்தில்
'முஸின்னாவை" விட சிறந்த ஆறுமாத குட்டி ஆடு உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்றார். முன் அறுத்ததற்கு இதை பகரமாக்குவீராக! (அறுப்பீராக!) எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்)

எங்கு அறுப்பது?

வீட்டிலும் அறுக்கலாம். ஈத்கா எனும் தொழும் திடலிலும் அறுக்கலாம்.

முஸல்லா என்னும், திடலில் நபி(ஸல்) அவர்கள் அறுப்பவர்களாக இருந்தனர். (புகாரி , அபூதாவூத்)

இன்றைய நாளில் நாம் முதலாவதாக செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம். (புகாரி, முஸ்லிம்)

ஆயிஷா கத்தியைக் கொண்டு வா! அதைக் கல்லில் கூர்மையாக்கு! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)

நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்று கூறியதிலிருந்து வீட்டில் வைத்து அறுத்திருக்கிறார்கள் என்பதை விளங்கலாம்.

பெண்கள் அறுக்கலாமா?

ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதை சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள். (புகாரி)

குர்பானி கொடுக்கும் நாட்கள்

தஷ்ரிக்குடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (தாரகுத்னி, இப்னு ஹிப்பான், அஹ்மத்)

துல்ஹஜ் மாதம் பெருநாள் தினமாகிய பிறை 10லிருந்து பிறை 13வரை குர்பானி கொடுக்கலாம்.

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Saturday, April 14, 2007

அபூ முஹைக்கு பதிலாம்!?

சாப்பாடு, சாப்பாடு என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால் வயிறு நிறைந்து விடுமா?

நிறைந்து விடும் என்று நேசமுடன் ஒருவர் சொல்கிறார்!

அபூ முஹைக்கு பதில் என்று தலைப்பு எழுதி விட்டால் அது அபூ முஹைக்கு பதில் சொன்னதாகிவிடுமா?

ஆம்! பதில் சொன்னதாகிவிடும் என்று இவர் நேசமுடன் நம்புகிறார்!

//அபூ முஹைக்கு பதில் - ஏகத்துவம் பற்றி

நபிகள் நாயகம், ஏகத்துவக் கொள்கையில் சமரசம் செய்துகொண்டார் என்று நான் முன்பு எழுதியிருந்ததற்கு ஆதாரம் கேட்டிருந்தார் அபூ முஹை. நான் சொன்ன அதே விஷயத்தை சற்றே மாறுப்பட்ட விதத்தில் விரிவாக எழுதியுள்ளார் ரசூல், இந்த திண்ணை இதழில்.//

நாம் ஆதாரத்தை கேட்டதாக உளறியிருக்கிறார்!

கேட்டது நாமல்ல, இரண்டு வருடங்களுக்கு முன்பு சகோதரர் அப்துல்லாஹ் கேட்ட கேள்வியை, மீண்டும் நினைவுபடுத்தி சகோதரர் இப்னு பஷீர் கேட்டிருந்தார்.

//நபிகளாரின் காலத்திலேயே, ஆன்மீக இஸ்லாம் பின் சென்று அரசியல் இஸ்லாம் முன்னிலைப் படுத்தப்பட்டு, சிலை வழிபாட்டையும் ஏனைய பாகன்களின் பழக்க வழக்கங்களையும் கூட வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் முஹம்மது அவர்களின் நபித்துவத்தை மட்டும் மறுத்தளிக்காதீர்கள் என்ற கோரிக்கையே பிரதானப் படுத்தப் பட்டது
(நபிகள் நாயகத்தின் வாழ்வு - அன்னை ஜைனப்பின் மணம் - இறுதி நபி சில விளக்கங்கள் - நேசகுமார் - திண்ணை 16/12/2004)// -

- இதற்கு ஆதாரங்களை சகோதரர் அப்துல்லாஹ் கேட்டிருந்தார்...

//இதன் மூலம் எனக்கு தோன்றக் கூடிய கேள்விகளுக்கு நேசகுமார் அவர்கள் பதிலளித்து, இஸ்லாத்தை எனக்கு நன்கு அறிமுகப்படுத்துமாறு வேண்டுகிறேன்.
ஒன்று, அவரது பிதற்றல்களுக்கான ஆதாரம். குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும்.
இரண்டாவது, இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று, இறைவனுக்கு இணை வைத்தல் கூடாது என்பதே. எனவே, எப்படி நபிகள் நாயகம் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை உதறிவிட்டு, நீங்கள் சிலைகளை வேண்டுமானலும் வணங்கிக் கொள்ளுங்கள், ஆனால், என்னுடைய நபித்துவத்தை மட்டும் மறுத்துவிடாதீர்கள் என்று தனது கோரிக்கையை பிரதானப் படுத்தியிருக்க முடியும்?

நேசகுமாரின் வரிகள் ''நபிகளாரின் காலத்திலேயெ'' என்று அழுத்தமாகத் தொடங்கியிருப்பதால், பதில்கள் நபிகளாரின் காலத்திற்க்கு பிறகு வந்த கதை எல்லாம் இல்லாமல், நபிகளாரின் காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு, பதில் சொல்ல வேண்டுகிறேன்.
பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி!//

****************************
மேற்கண்ட அப்துல்லாஹ்வின் கேள்விக்கு நேரடி விடை தெரியாமல், இரண்டு வருடம் கழித்து திண்ணை ரசூல் என்பவரின் துணையை நாடியிருக்கிறார். இதாவது உருப்படியான விளக்கமாக இருக்கிறதா பாருங்கள்...

//" இஸ்லாத்தின் இறுதிக் கடமையை ஹஜ் என்னும் புனிதக் கடமையை நிறைவேற்றுதலாக உள்ளது. ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முஸ்லிமும் இஹ்ராம் என்னும் வெள்ளாடை தரித்தலும் மக்காவின் எல்லைப் புறமான மினாவில் தங்கி அங்கு ஷைத்தானை கல்லெறிவதும், கஃபாவைச் சுற்றி ஏழுமுறை வலம் வந்து இரண்டு ரக்அத்து தொழுவதும், அங்குள்ள உஹறஸ்ருல் அஸ்வத் பளிங்கு கல்லை முத்தமிடுவதும், சபா, மர்வா குன்றுகளுக்கிடையே தொங்கோட்டம் ஓடுவதும், இறுதி நிகழ்வாக பலியிடுதலான குர்பான் கொடுப்பதும், அரேபிய கலாச்சார சூழல் சார்ந்து, திருக்குர்ஆன் அங்கீகரித்த நபிகள் நாயகத்தின் நடைமுறைகளாகும். இந்துக்கள் கோவில்களில் நிற்க வைத்து கும்பிடுகிறார்கள், முஸ்லிம்களோ தர்காக்களில் படுக்கப்போட்டு கும்பிடுகிறார்கள் என்று குற்றம் சாட்டுவதைப்போல கஃபாவை சுற்றி வலம் வருவதை கே'யிலை சுற்றி வலம் வருவதாகவும், ஹஸ்ருல் அஸ்வத்தை முத்தமிடுவதை கறுப்பு நிற கல்லை வணங்குவதாகவும், முடி களைவதை கோயில் கடமை முடித்துவிட்டு மொட்டை போடுவதாகவும் அர்த்தப்படுத்திப் பார்க்க சாத்தியமுள்ளதாக மானுடவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனவே தான் தர்கா நிகழ்வுகளையோ, ஹஜ்ஜின் அமல்களையோ மேலோட்டமாகவோ எந்திரகதியாகவோ இல்லாமல் வரலாற்று சூழல், வடிவம், உள்ளடக்கம் சார்ந்தும் அணுக வேண்டியுள்ளது.

4. இஸ்லாத்திற்கு முற்பட்ட காலங்களில் அரேபிய நாடுகளில் ஆசியப் பிரதேசங்களில் மட்டுமல்ல உலகமெங்கும் பழங்குடி சமுதாய மக்களின் சமய வழக்கங்களில் ஒன்றாக கடவுளுக்காக பலியிடுதல் என்கிற வழக்கம் உள்ளது. வேதகாலப்பழக்கமும் நடைமுறையும் இது. சமண புத்த மதங்களின் உருவாக்கத்தின்போது கால்நடைகளை தெய்வத்திற்கு பலியிடுதல் தடுக்கப்பட்டது. இதற்கான சமூகக் காரணம் வேட்டைச் சமூகத்திலிருந்து விவசாய சமூகத்திற்கு மாறியதுதான். புராதான விவசாய சமூகத்தில் கால்நடைகள் பங்களிப்பு மிக தேவையாயிருந்தது. எனவே அது அம்மத நம்பிக்கைகளில் தடை செய்யப்பட்டிருந்தது. எந்திரமயமாக்கப்பட்ட தொழிலுற்பத்தி சமுதாயத்தில் விவசாய உற்பத்தி கூட கால்நடைகளின் தேவை குறைந்து விட்டது. இக்காலத்தில் வைதீக இந்து மதம் பசுவதைதடை என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட, தலித்திய மற்றும் சிறுபான்மையின மக்களின் உணவுப்பழக்கத்தில் கை வைக்கப்பார்க்கிறது சைவம் உயர்ந்தது. அசைவம் தாழ்ந்தது என்ற பிராம­ய கருத்தாடலை திரும்பவும் உயிர்ப்பிக்க முயல்கிறது.

இச்சூழலில் இஸ்லாம் கூறும் ஹஜ் கடமையை நிறைவேற்றுகையில் ஆட்டையோ ஒட்டகத்தையோ பலியிடுதல் (குர்பான் கொடுத்தல்) இபுராகீம் நபீ அவர்தம் மகனார் இஸ்மாயிலை இறையாணையின் படி பலிகொடுக்க முன் வந்ததையும் அவர்களது இறைபக்தியையும் இறை அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் வகையிலான ஒரு பாரம்பரியமான நடைமுறையாகும். இதன் வரலாற்று அர்த்தம் என்பதே மனிதப்பலி தடுக்கப்பட்டு விலங்கினப்பலி மாற்றாக முன்வைக்கப்பட்ட சம்பவமாகும"// -
- http://www.thinnai.com/?module=displaystory&story_id=60704121&format=html

சின்னப் பிள்ளைகளுக்கு நிலாக் கதை சொல்ற மாதிரி இருக்கிறது.

ஹஜ் கிரியைகள் பற்றி குர்ஆன், சுன்னா சொல்லும் வழிமுறைகளில் முஸ்லிம்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் ஹஜ் கிரியைகளுக்கும், சிலை வழிபாட்டிற்கும் என்ன தொடர்பு இருப்பதாக சொல்ல வருகிறார்? அதை திண்ணை ரசூலின் செய்தியிலிருந்து இந்த மனநோயாளி விளக்கட்டும்!

நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே காபாவிலிருந்த சிலைகள் நபியின் உத்தரவோடு அப்புறப்படுத்தப்பட்டன என்பது வரலாறு. அதற்கு மாற்றமாக...

//நபிகளாரின் காலத்திலேயே, ஆன்மீக இஸ்லாம் பின் சென்று அரசியல் இஸ்லாம் முன்னிலைப் படுத்தப்பட்டு, சிலை வழிபாட்டையும் ஏனைய பாகன்களின் பழக்க வழக்கங்களையும் கூட வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் முஹம்மது அவர்களின் நபித்துவத்தை மட்டும் மறுத்தளிக்காதீர்கள் என்ற கோரிக்கையே பிரதானப் படுத்தப் பட்டது//

...இப்படி உளறியிருப்பது மனநோயின் உச்ச வரம்பு!

கருப்புக் கல் - ஹஜருல் அஸ்வத் - (அஸ்வமேத அல்ல) - பற்றி முஸ்லிம் பதிவர்கள் தேவையான அளவுக்கு விளக்கம் எழுதியிருக்கிறார்கள். இன்னும் கருப்புக் கல்லை சிலை என்பவரை எந்த லிஸ்டில் சேர்ப்பது?

நிற்க வைத்து கும்பிடுவதையும், படுக்கப் போட்டு கும்பிடுவதையும் இஸ்லாம் அங்கீகரிக்கிறது என்பதற்கு ஒரு ஆதாரம் வைக்கட்டுமே பார்க்கலாம்!

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை