இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு காஷ்மீர் மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் அளித்த வாக்குறுதி:
இந்திய பாராளுமன்றத்தில் பிப்ரவரி 12.1951ல் ஜவஹர்லால் நேருவின் அறிக்கை:
''காஷ்மீர் மக்களுக்கும் இதோடு கூடவே ஐக்கிய நாடுகள் சபைக்கும் நாம் வாக்குறுதி அளித்துள்ளோம். நாம் முன்பும் அதில் உறுதியாக இருந்தோம். இன்றும் உறுதியாக இருக்கின்றோம். காஷ்மீர் மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.
செப்டம்பர் 11.1951ல் இந்திய பிரதமர் நேரு ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதிய கடிதம்:
காஷ்மீர் இந்தியாவுடன் தொடர்ந்து இணைந்திருப்பதா? என்ற கேள்விக்கு பதில் - ஐ.நா. சபையின் கண்காணிப்பில் ஜனநாயக முறையிலான - சுதந்திரமான - சார்பற்ற வாக்கெடுப்பு (Plebiscite) நடத்தப்படுவதன் மூலமே முடிவு செய்ய முடியும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை இந்திய அரசாங்கம் மீண்டும் உறுதி செய்கிறது. ஆனால் அத்தகைய ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கான சூழ்நிலைகள் கூடிய விரைவில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் இந்திய அரசு ஆவலுடன் உள்ளது''
ஜூன் 16.1952ல் இந்திய பாராளுமன்றத்தில் ஜவஹர்லால் நேருவின் அறிக்கை:
முறையான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு ''நாங்கள் இந்தியாவுடன் சேர்ந்திருக்க விரும்பவில்லை'' என காஷ்மீர் மக்கள் கூறுவார்களானால், எங்களுக்கு அது வருத்தமாக இருப்பினும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராகவே உள்ளோம். நாங்கள் அவர்களுக்கு எதிராக ராணுவத்தை அனுப்பப்போவதில்லை''
பாகிஸ்தான் பிரதமருக்கு இந்திய பிரதமர் நேரு அனுப்பிய தந்தியில் பின்வருமாறு கூறுகிறார்:
''இத்தகைய அவசரக் காலக்கட்டத்தில் காஷ்மீருக்கு நாங்கள் உதவுவது, அப்பிரதேசம் இந்தியாவுடன் இணைவதற்காக செய்யப்படும் நெருக்குதல் அல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நாங்கள் தொடர்ந்து வெளிப்டையாக தெரிவித்து வருகின்ற கருத்து என்னவென்றால், ஒரு சர்ச்சைக்குரிய பிரதேசமோ அல்லது மாநிலமோ இணைய வேண்டுமானால் அம்மக்களின் விருப்பத்தின் பேரில் தான் அது நடக்க நடைபெற முடியும் என்ற கருத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம்'' (தந்தி எண் 402, அக்டோபர், 27,1947)
பாகிஸ்தான் பிரதமருக்கு அனுப்பப்பட்ட இன்னொரு தந்தியில் நேரு கூறினார்:
''மஹாராஜா அரசின் வேண்டுகோளின்படியும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாநிலத்தின் செல்வாக்கு மிக்க கட்சியின் கோரிக்கையின்படியும் தான் காஷ்மீர் இந்தியாவுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இதுவும் கூட சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட்டவுடன் காஷ்மீர் மக்கள் தான் இணைப்பைப் பற்றி முடிவு செய்வார்கள் என்ற நிபந்தனையுடன் தான் சம்மதிக்கப்பட்டது. எந்த நாட்டுடன் (இந்தியா அல்லது பாகிஸ்தான்) இணைந்து கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு திறந்தே உள்ளது'' (தந்தி எண், 255, அக்டோபர் 31.1947ல் நேரு)
அனைத்திந்திய வானொலி மூலமாக நவம்பர் 2, 1947ல் நேரு நாட்டு மக்களுக்கு கூறிய செய்தி:
பிரச்சனை நடந்து கொண்டிருக்கும்போதே காஷ்மீர் மக்களுக்கு முழு வாய்ப்பினை அளித்திடாமல் எதையும் இறுதி செய்யக்கூடாது என்ற நிலையில் நாம் உள்ளோம். அவர்கள் தான் இறுதியாக முடிவு செய்ய வேண்டும். ஒரு பிரதேசம் எந்த நாட்டுடன் இணைவது என்ற சர்ச்சை எழும் பொழுது, எதில் இணைவது என்பதைப் பற்றிய முடிவை அப்பிரதேச மக்கள் தான் மேற்கொள்ள வேண்டும் - இது தான் நமது கொள்கை இக்கொள்கையின் அடிப்படையில் தான் காஷ்மீரை இணைத்து ஒப்பந்தத்தில் ஒரு விலக்குப் பிரிவையும் சேர்த்துள்ளோம்.''
நவம்பர் 3, 1947ல் நாட்டு மக்களுக்கு ஒலிபரப்பிய இன்னொரு செய்தியில் நேரு கூறினார்:
''காஷ்மீரின் தலைவிதியை அம்மக்கள் தான் இறுதியாக முடிவு செய்யவேண்டும் என நாம் பிரகடனப்படுத்தியுள்ளோம். இவ்வுறுதி மொழியை காஷ்மீர் மக்களுக்கு மட்டுமல்லாமல், உலகிற்கே நாம் அளித்துள்ளோம். இதிலிருந்து பின் வாங்க மாட்டோம், பின் வாங்கவும் முடியாது''.
பாகிஸ்தான் பிரதமருக்கு நவம்பர் 21,1947 தேதியிட்ட கடிதத்தில் நேரு எழுதியதாவது:
அமைதியும் ஒழுங்கும் ஏற்பட்ட பிறகு ஐ.நா. சபை போன்ற சர்வதேச அமைப்புகளின் கண்காணிப்பின் கீழ் கருத்துக் கணிப்பின் மூலமாகவோ அல்லது வாக்கெடுப்பின் மூலமாகவோ காஷ்மீரின் இணைப்பு முடிவு செய்யப்பட வேண்டும் என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன்''.
ஆகஸ்ட் 7, 1952ல் இந்திய பாராளுமன்றத்தில் நேரு கூறியதாவது:
''மக்களின் விருப்பம் மற்றும் நன்னம்பிக்கையின் அடிப்படையில் தான் காஷ்மீரின் எதிர்காலம் முடிவு செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையை நாம் ஏற்கின்றோம் என்பதை நான் தெளிவாக கூறிக் கொள்கிறேன்.
இப்பாராளுமன்றத்தின் விருப்பமும் நன்னம்பிக்கையும் இப்பிரச்சனையில் முக்கியத்துவம் இல்லாதது. இதற்குக் காரணம் காஷ்மீர் பற்றிய பிரச்சனையை முடிவு செய்யும் பலம் இப்பாராளுமன்றத்திற்கு இல்லை என்பதனால் அல்ல, அத்தகைய ஒரு திணிப்பை இப்பாராளுமன்றம் கொண்டுள்ள கொள்கைக்கு எதிரானது''.
நன்றி: ஒற்றுமை ஆகஸ்ட் 01-15,2001 இதழ்
Friday, November 25, 2005
Tuesday, November 22, 2005
காஷ்மீர் ஓர் பார்வை-2
1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14,15 தேதிகள் இந்தியா இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்தியா என்றும் பாகிஸ்தான் என்றும் இரண்டு தனித்தனி நாடுகள் சுதந்திரம் அடைந்தன. இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் அப்போது இருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை - ராஜாக்களின் ஆட்சியின் கீழ் இருந்த பிரதேசங்களை என்ன செய்வது?
''இந்தியப் பகுதிதியிலுள்ள சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணையலாம். பாகிஸ்தான் பகுதியிலுள்ள சமஸ்தானங்கள் பாகிஸ்தானுடன் இணையலாம்'' என்று சொல்லி விட்டார். பிரிட்டிஷ் அரசின் கடைசிப் பிரிதிநிதி மவுண்ட்பேட்டன். அதன்படி பெரும்பாலான சமஸ்தானங்கள் இணைந்து விட்டன.
ஆனால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடுவில் அமைந்த விட்ட ஜம்மூ-காஷ்மீர் சமஸ்தானம் எந்த நாட்டுடன் இணைவது?
ஜம்மு-காஷ்மீரின் அன்றைய மக்கள் தொகையில் 75 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள் என்பதால் பாகிஸ்தானுடன் இணைவதா? அல்லது ஜம்மு-காஷ்மீரின் ராஜா ஹரிசிங் ஒரு இந்து என்பதால் இந்தியாவுடன் இணைவதா?
''எந்த நாட்டுடனும் இணையமாட்டேன். ஜம்மு-காஷ்மீர் தனிநாடாக, சுதந்திர நாடாக விளங்கும்''
''அது சரிதான்.. ஆனால் இங்கு மக்கள் ஆட்சிதான் நடக்க வேண்டும். மன்னராட்சிக்கு இடமில்லை மன்னனே வெளியேறு'' என்று சிறையிலிருந்து ஒரு குரல். காஷ்மீர் சிங்கம் என்று ஜவஹர்லால் நேருவால் போற்றப்பட்ட ஷேக் அப்துல்லாஹ் தான் அந்தச்சிறைப்பறவை.
மறுபுறம் ஜம்மு-காஷ்மீரை தமது நாட்டுடன் இணைப்பதற்கு ராஜாவை சம்மதிக்கச் செய்ய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவும், பாகிஸ்தானின் ஜெனரல் ஜின்னாவும் படு தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் இப்படி இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. திடீரென்று பாகிஸ்தான் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது ரகசியமாக.
பாகிஸ்தான் பதான் வகுப்பைச் சேர்ந்த போர் குணமுள்ள பழங்குடியினருக்கு ஆயுதம் அளித்து காஷ்மீரைக் கைப்பற்ற ஏவி விட்டது. பாகிஸ்தான் அரசு அவர்களை வழி நடத்திச் செல்ல ராணுவ வீரர்களும் அவர்களுடன் அனுப்பப்பட்டனர். தலை நகரான சிரீநகரை நோக்கி அனைவரும் விரைந்தனர்.
இந்த ஆக்கிரமிப்பான அணிவகுப்புப் புறப்பட்டு 48 மணி நேரம் கழித்த பிறகுதான் இந்திய அரசுக்கு இது பற்றியத் தகவல் கிடைத்தது. பிரதமர் நேரு துரிதமாக முடிவெடுத்தார் இந்திய அதிகாரி வி.பி.மேனன் டெல்லியிலிருந்து விமானத்தில் பறந்து சிரீநகரை அடைந்தார்... ராஜா ஹரிசிங்கைச் சந்தித்தார்.
''பாகிஸ்தானின் படை வந்து கொண்டிருக்கிறது என்ன செய்யப் போகிறீர்கள்?''
''நீங்கள் சொல்வதைச் செய்கிறேன், என்னைக் காப்பாற்றுங்கள்''
''ஜம்மு - காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கு நீங்கள் சம்மதித்தால், உங்களை இந்திய அரசு காப்பாற்றும்''
''சம்மதிக்கிறேன்''
''சரி ஜம்மு நகரில் உள்ள உங்களது குளிர்கால அரண்மனைக்கு நீங்கள் உடனே சென்று விடுங்கள். நான் டெல்லிக்கு சென்றுவிட்டு, ஜம்மு நகருக்கு நாளை வருகிறேன்'' வி.பி. மேனன் டெல்லிக்குப் பறந்தார்.
ராஜா ஹரிசிங் ஜம்மு நகருக்கு விரைந்தார் - நூற்றுக் கணக்கான வண்டிகள் புடைசூழ. அந்த வண்டிகளில் தங்கமும், வைரமும் வைடுரியமும் நிரம்பி வழிய ஆயுதமேந்திய மெய்க் காவலர்கள் முன்னும் பின்னும் அணிவகுக்க! டெல்லிக்குச் சென்று வி.பி.மேனன் நேருவை சந்தித்து விட்டு, உடனே ஜம்மு நகருக்கு மீண்டும் பறந்து வந்தார். ராஜா ஹரிசிங்கிடம் ஒப்பந்தப் பத்திரத்தை நீட்டினார். ராஜா ஹரிசிங் கையெழுத்திடடார்.
''ஜம்மு காஷ்மீர் ராஜ்யத்தை ஆளும் சிரீமான் இந்திர மஹேந்திர ராஜ ராஜேஸ்வர மஹா ராஜாதி ராஜ சிரீ ஹரிசிங் ஆகிய நான், எனது ராஜ்யத்தை இந்தியாவுடன் இணைக்கிறேன். ராணுவம், வெளிநாட்டு உறவு, தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் இந்திய அரசின் முழு அதிகாரத்தை ஏற்கிறேன் என்பதை இதன் மூலம் அறிவித்து ஒப்பந்தம் செய்கிறேன்.
ஹரிசிங்
மஹா ராஜாதி ராஜா
ஜம்மு - காஷ்மீர் ராஜ்யம் ஒப்பந்தப் பத்திரம் டெல்லிக்குச் சென்றது. இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் கையெழுத்திட்டார்.
''இந்த ஒப்பந்தத்தை நான் ஏற்கிறேன்..''
மவுண்ட்பேட்டன்
கவர்னர் ஜெனரல்
இந்தியா
நாள்: 1947 அக்டோபர் 27
அன்றே இந்தியப் படைகள் சிரீநகர் சென்றன, சண்டை நடந்தது. போர் பிரகடனம் செய்யாமலேயே பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவத்துடன் போரிட்டது. போர் நடந்து கொண்டிருந்தபோதே 1948ம் ஆண்டு ஜனவரி 1ல் இந்திய அரசு ஐ.நா. சபையில் முறையிட்டு மனு அளித்தது.
பாகிஸ்தானிலிருந்து ஆயுதமேந்திய பலர் ஜம்மு - காஷ்மீருக்குள் ஊடுருவி ஆக்ரமிக்க முயன்றார்கள். இதைத் தடுக்க ராணுவ உதவி செய்யுமாறும் ஜம்மு - காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க அனுமதிக்குமாறும் ராஜா ஹரிசிங் இந்தியா அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். ஜம்மூ காஷ்மீரின் மிகப் பெரிய கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஷேக் அப்துல்லாஹ்வும் வேண்டுகோள் விடுத்தார். எனவே ஜம்மு - காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க அனுமதிக்கவும், ராணுவ நடவடிக்கை எடுக்கவும் இந்தியா அரசு முடிவு செய்தது.
எனினும் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றிய உடனே, இணைப்புத் தொடர்பாக சர்வதேச மேற்பார்வையின் கீழ் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி மக்களின் தீர்ப்பை ஏற்போம் என்றும் இந்திய அரசுத் தெளிவாக அறிவித்தது. எனவே ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தானின் தலையீட்டை நிறுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று இந்தியா அரசு தனது மனுவில் கூறியது.
இதையடுத்து 1948 ஏப்ரல் மாதம் 21 அன்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. ஜம்மு - காஷ்மீரில் மக்கள் கருத்தை அறிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இதற்கான ஏற்பாடுகளை ஐ.நா சபையின் விஷேஷக் கமிஷன் செய்ய வேண்டுமென்றும் தீர்மானம் கூறியது. கமிஷன் உறுப்பினர்கள் இரு அரசுகளுடனும் பேசி பேச்சு வார்த்தை நடத்திப் பல தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.
அதன்படி, 1949 ஜனவரி 1ம் தேதி முதல் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்.. ஜம்மு - காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் பழங்குடியினர் வெளியேற வேண்டும்.. அதையடுத்து பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவத்தினரின் பெரும் பகுதி வாபஸ் ஆகவேண்டும்.. அதன் பிறகு மக்கள் கருத்தறிய வாக்கெடுப்பு நடத்தப்படும். என்று அந்தத் தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி போர் நிறத்தம் மட்டும் ஏற்பட்டது, போர் நிறுத்த எல்லை வகுக்கப்பட்டது. ஆனால் தீர்மானத்தின் மற்ற அம்சங்கள் இன்றுவரை செயல்படுத்தப்படவில்லை. போர் நிறுத்த எல்லைக் கோட்டுக்கு வடக்கில் உள்ள காஷ்மீர் பகுதி பாகிஸ்தான் வசமும், தெற்கில் உள்ள பகுதி இந்திய வசமும் நீடித்து வருகின்றன. வடக்கில் உள்ள பகுதி 'பாகிஸ்தான் ஆக்ரமிப்பில் உள்ள காஷ்மீர்' (P O K -pakistan Occupied kashmir) என்று குறிப்பிப்படுகிறது.
அந்தப்பகுதியை 'சுதந்திரக் காஷ்மீர்' என்று பாகிஸ்தான் குறிப்பிட்டு அங்கு ஒரு பொம்மை அரசையும் பாகிஸ்தானே அமைத்து நடத்தி வருகிறது.
இந்தியப் பகுதியில் உள்ள ஜம்மு - காஷ்மீரில் 1947ம் ஆண்டில் ஷேக் அப்துல்லாஹ் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுவதாக ராஜா ஹரிசிங் ஏற்கெனவே அறிவித்திருந்தார். 1953ம் ஆண்டுவரை ஜம்மு - காஷ்மீர் பிரதமராக ஷேக் அப்துல்லாஹ் நீடித்தார். அநேகமாக இந்தியாவிலேயே முதன் முறையாக நில உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வந்து உபரி நிலங்களை நஷ்டஈடு இன்றிக் கைப்பற்றி ஏழைகளுக்கு வழங்கினார் அவர்.
எனினும், அவ்வப்போது காஷ்மீரின் 'சுதந்திரம்" பற்றிப் பேசியது இந்திய அரசுக்கு அச்சத்தைக் கொடுத்தது.
திடீரென்று ஒருநாள், 1953 ஆகஸ்ட் 7 இரவு ஷேக் அப்துல்லாஹ் கைது செய்யப்பட்டு சிறையிலிடப்பட்டார்! ஜம்மு காஷ்மீரின் துணைப் பிரதமர் பக்ஷிகுலாம் முகம்மது பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.
ஓரிரு முறை விடுதலையானலும் மீண்டும் மீண்டும் ஷேக் அப்துல்லாஹ் சிறையிலிடப்பட்டார்.
சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அவரை விடுதலை செய்து, காஷ்மீரின் முதலமைச்சராக்கினார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. ஷேக் அப்தல்லாஹ்வின் மரணத்துக்குப் பின் அவரது மகன் ஃபருக் அப்துல்லாஹ் முதலமைச்சரானார். அவரது மைத்துனர் குலாம் முகம்மது ஷாவைக் கொண்டே ஃபருக் அப்துல்லாஹ்வைக் கவிழ்த்து குலாம் முகம்மது ஷாவை முதலமைச்சராக்கினார் இந்திரா காந்தி!
இது போன்ற அலங்கோலங்கள் ராஜீவ் காந்தி ஆட்சியிலும் தொடர்ந்தன.
வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது ஜம்மு - காஷ்மீரில் தொடங்கிய கவர்னர் ஆட்சி இப்போது ஜனாதிபதி ஆட்சியாகத் தொடர்ந்து நீடிக்கிறது இதனால் ஜம்மு - காஷ்மீரின் மக்கள் வெறுப்படைந்து வந்தார்கள். மக்களின் ஆதரவைப் பெறாத ஆட்சியாளர்கள் சகிக்க முடியாத ஊழல் முடை நாற்றம், விவசாயம், தொழில் நசிவு, வறுமை, வேலையின்மை அதிகரிப்பு, போராட்டங்கள் மீது அடக்குமுறை-
-தீவிரவாதம் வளர்ந்தது, வலுப்பெற்றது!
தீவிரவாதத்தை ஒடுக்க அரசுக்குத் தெரிந்த ஒரே வழி ராணுவ அடக்குமுறை!
விளைவு! ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டால் பத்து தீவிரவாதிகள் உருவாகிறார்கள்.
அடக்கு முறையையும், சித்ரவதையையும் அனுபவிக்கும் மக்கள் நாளுக்கு நாள் தீவிரவாதிகளின் பக்கம் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள், அடக்கு முறையும் அதிகரித்து வருகிறது.
இதற்குத் தீர்வுதான் என்ன?
ராணுவ நடவடிக்கை மூலம் பிரச்சனையைத் தீர்க்க முயலும் போக்கை மத்திய அரசு உடனே நிறுத்த வேண்டும். தீவிரவாதிகள் உட்பட அனைத்துத் தரப்பினருடனும் அரசு உடனடியாகப் பேச்சு வார்த்தை தொடங்க வேண்டும். இது மட்டுமே தீர்வுக்கான உண்மையான தொடக்கமாக அமையும்.
இரா.ஜவஹர்
நன்றி: ஜுனியர் போஸ்ட் 30.10.1992
Thursday, November 17, 2005
காஷ்மீர் ஓர் பார்வை-1
காஷ்மீர் - இந்தியாவின் மேற்கே உச்சத்தில் அமைந்துள்ள ஒரு சொர்க்க பூமி. காஷ்மீரைப் பற்றி நினைக்கும் எவரது உள்ளத்திலும் பனித் தென்றல் வீசும். அதன் வரலாற்றை படிக்கும் போது அந்த பனித் தென்றலுடன் இரத்த வாடையும் சோகமும் சுமையும் மனதை கவ்விக் கொள்ளும். வெகுளித்தனமும் வெள்ளை மனதும் கொண்ட காஷ்மீரத்து மக்கள் கடந்த பல ஆண்டுகளாக தங்கள் வெகுளித்தனத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்கள். காரணம் நில ஆக்ரமிப்பை தங்கள் கொள்கையாகக் கொண்ட இந்திய - பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அடக்குமுறைதான். சொந்த பூமி கண்முன்னே சூறையாடப்படுவதையும் - தம் மக்கள் தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு உள்ளாக்கப்படுவதையும் பார்த்துப் பார்த்து உறைந்து போன மக்கள் சுய போராட்டம் ஒன்றே தீர்வு என்றெண்ணி ஆயுதமேந்தத் தயாராகி விட்டார்கள். விளைவு இந்தியா - பாகிஸ்தான் - உள்நாட்டுப் போராளிகள் என்று முத்தரப்பு பிரச்சனைகளில் அந்த மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள்.
காஷ்மீர் அதன் வரலாறு என்ன? அங்கு என்ன நடந்தது. ஆரம்பத்தில் தனிநாடாக சுய அதிகாரத்துடன் விளங்கிய நாடு இன்றைக்கு இந்தியா பாகிஸ்தானுக்கு மத்தியில் சிக்கித் தவிப்பதேன். போன்ற கேள்விகளுக்கு விடைகாணும் முகமாக இங்கு கட்டுரைகள் தொகுக்கப்படுகிறது.
வரலாற்றுத் துணுக்குகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரைகள் காஷ்மீரின் சொந்த - சோகக்கதையை எடுத்துக் காட்டும் முயற்சியின் சிறுதுளியாகும். நான் படித்ததை இங்கு பதிந்து வைக்கிறேன்.
அன்புடன்
அபூ முஹை
காஷ்மீரின் வரலாற்றை நான்கு காலக்கட்டங்களாகப் பிரிக்கலாம்.
முதலாவது காலக்கட்டத்தில் உள்ளூர் அரசர்கள் காஷ்மீரை ஆட்சி செய்து வந்தார்கள். இந்த காலக்கட்டத்தில் சில சந்தர்ப்பங்களில் இந்தியாவிலிருந்து வந்த ஆட்சியாளர்கள் காஷ்மீரை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார்கள் வேறு சந்தர்ப்பங்களில் காஷ்மீர் ஆட்சியாளர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு அப்பால் இந்தியா மற்றும் மத்திய ஆசியா வரை தங்கள் ஆளுகையை நீடித்துக் கொண்டார்கள்.
இந்த காலக்கட்டத்தில் தான் அசோகரின் ஆட்சியும் காஷ்மீரில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் நிலைநாட்டப்பட்டது. இந்த ஆட்சியின் போதுதான் காஷ்மீரில் பெளத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. கி.பி முதலாம் நூற்றாண்டில் கனிஷ்கரின் ஆட்சியின் போது பெளத்தம் காஷ்மீரில் மேலும் வலுவடைந்தது. ஆனால் அதற்கு பிறகு காஷ்மீரில் உள்ளூர் ஆட்சியாளர்களின் கரம் மேலோங்கி பெளத்தம் அழிக்கப்பட்டு பிராமணியத்திற்கு புத்துயிர் அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இரண்டாம் காலக்கட்டம் தொடங்கிய ஆறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 'ஹன்' இனத்தவர் காஷ்மீரைக் கைப்பற்றினர். சிறிது காலத்திற்கு பிறகு மீண்டும் உள்ளூர் ஆட்சியாளர் வசமே காஷ்மீர் மீண்டது.
ஆனால் மிக விரைவிலேயே உஜ்ஜைன் சாம்ராஜ்யத்தின் மேலாண்மையை காஷ்மீர் ஏற்றுக்கொண்டது. உஜ்ஜைனில் உள்ள விக்கிரமாதித்தவர்களின் ஆட்சி பலவீனம் அடைந்தபோது காஷ்மீர் உள்ளூர் ஆட்சியாளர்களின் ஆளுகைக்கு வந்தது.
ஏழாம் நூற்றாண்டில் துர்லபாவிர்தனா என்ற ஆட்சியாளர் கர்கோட்ட சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். கி.பி. 855ல் உட்பாலா சாம்ராஜ்யம் கர்கோட்ட சாம்ராஜ்யத்தை அகற்றிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பிறகு தந்த்ரின், யாஷ்காரா, பார்வா குப்தா பரம்பரையினர் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்தனர். குப்தா மன்னர் ஒருவரின் விதவையான தித்தா எனபவர் கி.பி. 1003 வரை ஆட்சி செய்தார். இதன் பிறகு லோஹாரா பரம்பரை ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு காஷ்மீர் வரலாற்றின் மூன்றாம் காலக்கட்டம் தொடங்கியது.
14ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஷ்மீர் மீது தார்த்தாரியர்கள் தாக்குதல் தொடுத்தார்கள். இந்த தாக்குதலை சமாளிப்பதற்காக காஷ்மீர் அரசரின் தளபதி இரண்டு நபர்களின் உதவியைக் கோரினார். இவர்களில் ஒருவர் காஷ்மீர் மேற்கில் இருந்த ஸ்வாத் பகுதியைச் சேர்ந்த ஷமீர். மற்றொருவர் காஷ்மீரின் கிழக்கே இருந்த திபெத்தைச் சேர்ந்த ரைன்ஷன் ஷா.
தார்த்தாரியர்களின் படையெடுப்பை இவர்கள் வெற்றிகரமாக முறியடித்தார்கள். காஷ்மீர் தளபதியின் மகள் குத்தாராணியை ரைன்ஷன் ஷா மணமுடித்துக் கொண்டார். அதன் பிறகு அவர் இஸ்லாத்தைத் தழுவி தனது பெயரை சத்ருத்தீன் என்று மாற்றிக்கொண்டார். இவரது மதமாற்றம் குறித்து வரலாற்று ஆசிரியர் லாரன்ஸ் குறிப்பிடும்போது -
- காஷ்மீரில் இருந்த ஏதாவது ஒரு மதத்தை பின்பற்ற வேண்டும் என்ற அவசியத்தை ரைன்ஷன் ஷா உணர்ந்தார். இந்து மதத்தின் எந்தவொரு சாதி பிரிவும் தன்னை ஏற்றுக்கொள்ளாது என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே அவரால் இந்து மதத்தை தேர்ந்தெடுக்க இயலவில்லை. ஒருநாள் புல்புல்ஷா அதிகாலையில் தொழுவதை கண்டார். அந்த வழிபாட்டு முறை அவரைக் கவர்ந்ததால் ரைன்ஷன் ஷா இஸ்லாத்தைத் தழுவினார்''
(ஆதாரம்: valley of Kashmir, Lawrence, pege 190 as quoted in Sisit Gupta's Kashmir, A Study of India - Pakistan Relations)
கி.பி 1346ல் சத்ருத்தீனின் மரணத்திற்கு பிறகு ஸ்வாத்தைச் சேர்ந்த ஷாமீர் ஷம்சுத்தீன் என்ற பெயரில் காஷ்மீரின் ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார். 1586ல் அக்பரின் ஆட்சியின்போது முகலாயப் பேரரசின் கீழ் காஷ்மீர் வரும்வரை ஷம்சுத்தீனின் பரம்பரையினரே காஷ்மீரின் கீழ் ஆட்சியாளராக வந்தனர்.
சுமார் இரண்டு நூற்றாண்டு காலம் நீடித்த முகலாய ஆட்சி காஷ்மீருக்கு அமைதியையும், ஆனந்தத்தையும் அளித்தது என்றும் முகலாய நிர்வாக முறை கிராமங்கள் வரை அமல்படுத்தப்பட்டது. என்றும் வரலாற்று ஆசிரியர் லாரன்ஸ் குறிப்பிடுகிறார்.
கி.பி 1757ல் காஷ்மீர் ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியாக மாறியது அஹ்மது ஷா துரானி காஷ்மீர் ஆட்சியாளர் ஆனார். 18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லாகூரை தலைமையகமாகக் கொண்டு சீக்கியர்களின் சாம்ராஜ்யம் உருவாக்கப்பட்டது. கி.பி 1819ல் ரஞ்சித் சிங் என்று சீக்கிய ஆட்சியாளர் காஷ்மீரை ஆக்கிரமித்தார். இதன் பிறகு காஷ்மீர் வரலாற்றின் நான்காம் காலக்கட்டம் தொடங்கியது.
சுபராவின் யுத்தத்தில் ஆங்கிலேயர்களிடம் சீக்கியப்படைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பஞ்சாப், காஷ்மீர் உட்பட சீக்கியர்களின் ஆளுகையின்படி இருந்த அனைத்துப் பகுதிகளும் ஆங்கிலேயர் வசமானது. இதனைத் தொடர்ந்து ரஞ்சித் சிங்கின் அமைச்சரவையில் இடம் பெற்று பின்பு ஜம்முவின் ஆளுனராகவும் இருந்த குலாப் சிங்கிற்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே அமிர்தரஸில், 15.03.1846ல் ஒரு உடன்பாடு கையொப்பமானது. இதன்படி குலாப்சிங்கிடம் ரூபாய், 75 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு காஷ்மீரை அவருக்கு ஆங்கிலேயர் விற்றனர்.
இதன் விளைவாக காஷ்மீரின் சுயேட்சையான மகாராஜாவாக குலாப்சிங் தன்னைப் பிரகடனம் செய்து கொண்டார். குலாப்சிங் 1857ல் மரணமடைந்தார். இதன் பிறகு இவரது மகன் ரன்பீர்சிங் (1857 - 1885) ஆட்சிக் கட்டில் ஏறினார். 1885ல் இவரது மகன் பிரதாப்சிங் வசம் ஆட்சி சென்றது. 1925ல் பிரதாப்சிங்கின் மரணத்திற்கு பிறகு அவரது உறவினர் ஹரிசிங் மகாராஜாவாகப் பொறுப்பேற்றார். இந்தியா விடுதலை அடைந்த பிறகும் இவர் காஷ்மீரின் மன்னராக 1948 வரை நீடித்தார். குலாப்சிங் முதல் ஹரிசிங் வரை காஷ்மீரை ஆண்ட குடும்பத்தினரின் ஆட்சி டோக்ரா பரம்பரை ஆட்சி என்று அழைக்கப்படுகிறது.
குலாப்சிங்கும் அவரைத் தொடர்ந்து வந்த டோக்ரா ஆட்சியாளர்களும் காஷ்மீரை சர்வாதிகார முறையில் கொடுங்கோன்மையாக ஆட்சி செய்து வந்தனர். காஷ்மீரில் நிலவிய இந்த மன்னர் ஆட்சியின் கீழ் வாழ்ந்த மக்களில் 80 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் ஆவர். இவர்கள் ஹரிசிங்கின் கொடுங்கோன்மையான ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சிகள் செய்து வந்தனர். 1931ல் நடைபெற்ற பெரும் மக்கள் கிளர்ச்சியை ஹரிசிங் இரும்புக்கரம் கொண்டு நசுக்கினார். 1932ல் முதன் முதலாக காஷ்மீரில் ஒரு அரசியல் கட்சி ஷேக் அப்துல்லாஹ்வால் உருவாக்கப்பட்டது. இந்த கட்சிக்கு அப்போது ''அனைத்து ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் மாநாட்டு கட்சி'' என்று பெயரிடப்பட்டது. பிறகு 1939ல் ''தேசிய மாநாடு கட்சி'' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மக்கள் கிளர்ச்சி பெருகிடவே ஹரிசிங் 1934ல் சட்டப்பேரவை அமைக்க ஒப்புக் கொண்டார். ஆனால் முழுமையான ஜனநாயக நெறிமுறைப்படி இந்த சட்டப்பேரவை அமைக்கப்படவில்லை. 75 பேர் கொண்ட இந்த சட்டப்பேரவையில் 35 பேர் நியமன உறுப்பினர்கள் ஆவர். மக்களில் 6 சதவிகிதத்தினர் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கும், சொத்துரிமையுள்ளவர்களுக்கும் மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால் இவ்வாறு அமைக்கப்பட்ட சட்டப்பேரவைக்கு ஆலோசனைகள் கூறும் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டது.
1939ல் மேலும் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அமைச்சரவை ஏற்படுத்தவும், நீதித்துறை உருவாக்கவும் வழிவகை செய்யப்பட்டது. ஆனால் முடிவெடுக்கும் அதிகாரத்தின் பெரும்பகுதி மகாராஜா வசமே இருந்தது. இருப்பினும், காஷ்மீரில் வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் மகாராஜா ஹரிசிங் மீது அதிருப்தியுடன் தான் வாழ்ந்து வந்தனர். இச்சூழலில் தான் இந்தியாவிற்கு விடுதலையளிக்கவும், விடுதலைப் பெற்ற இந்தியாவை இரண்டு நாடுகளாகப் பிரிக்கவும் ஆங்கிலேய அரசு முடிவு செய்தது.
நன்றி: ஒற்றுமை ஆகஸ்ட் 01-15,2001 இதழ்
Subscribe to:
Posts (Atom)