ஈர்க்கும் பூமி 13
ஏ.கே.அப்துர் ரஹ்மான்
பரந்து விரிந்து கிடக்கும் நமது பூமி மானிட உள்ளங்களில் தட்டை வடிவம் கொண்டிருந்தபோது அது எதன் மீது நிலை பெற்றிருக்கிறது என்ற வினாவும் எழத்தான் செய்தது. இதற்கு விடை காண முயன்ற சில கற்பனை காவியங்களும், சில போதைக் கனவுகளும் நமது பூமியை பன்றியின் மூக்கின் மீது நிற்பதாகக் கண்டன. மேலும் நில கற்பனைகள் நமது பூமியை ஒரு மீனின் வாலின் மீது நிற்பதாகவும் கண்டன. ஆனால் அந்த பன்றியும், மீனும் எதன் மீது நிற்கின்றன எனத் தொடர்ந்து வரும் கேள்விகள் அவர்களில் பெரும்போலோருக்கு அப்போது தேவைப்படவில்லை.
வேதனை என்னவென்றால் இந்த இருபதாம் நூற்றாண்டில் கூட இத்தத்துவங்கள்(?) மானிடர்களாகிய நம்மில் பலரால் வேதங்கள் என்றே போற்றி வழிபடப்பட்டு வருகின்றன என்பதேயாகும்.
எதையும் அறிவியல் நோக்கோடு ஆய்வு செய்யக் கூடியவர்கள் பண்டைக்காலம் தொட்டுக் கிரேக்கத்தில் தோன்றினர். அவர்களில் ஒருவராகிய 'தேலஸ்(Thales கி. மு. 624 - 545) எனும் அறிவியலாளரின் ஆய்வில் நமது பூகோளம் வட்டமான ஒரு வில்லையைப் போன்றது (Just Like a Disk) எனக் கண்டார். அப்போதும் அந்த வில்லை எதன் மீது நிற்கிறது என்ற கேள்வி எழுந்தது. இதற்கு அவர் கூறிய பதில் அந்த வில்லை நீரில் மிதக்கிறது என்பதேயாகும். ஆனால் அவருக்குப் பின்னால் வந்த அறிவியலாளர் ஹெக்காடியஸ் - பூமி வில்லை வடிவம் என்பதை ஆதரித்து, ஆனால் அந்த வில்லை வடிவ பூமி தண்ணீரில் மிதக்கவில்லை என்றார். அதே நேரத்தில் நமது பூமி ஆகாயத்தில் எவ்வாறு நிலை பெற்றிருக்கிறது என்பதற்கு அவருக்கு விடையும் தெரியவில்லை. ஆகவே அவரிடம் பூமி எதன்மீது நிற்கிறது எனக் கேட்கப்பட்ட போது அது நான்கு தூண்களின் மீது நிற்கிறது என 'ஜோக்' அடிக்க வேண்டிய நிலைதான் அவருக்கு ஏற்பட்டது.
ஆனால் அகிலங்களுக்கெல்லாம், பேரொளியாய் வந்த சத்தியத் திருமறையாம் தூய குர்ஆனுக்கு இப்படிப்பட்ட 'ஜோக்' அடிக்க வேண்டிய நிலை எதுவும் அவசியமேயில்லை.
ஆகாயங்களும், பூமியும் படைக்கப்பட்டிருப்பதில் இப்படிப்பட்ட தூண்கள் ஏதும் உண்டா? என்ற கேள்விக்குத் திருமறை குர்ஆன் அளிக்கும் பதிலைப் பாருங்கள்! திருமறை கூறுகிறது:
'அவன் (அல்லாஹ் - ஜல்) உங்கள் பார்வையில் படக்கூடிய தூண்கள் எதுவுமின்றி வானங்களைப் படைத்துள்ளான்.'(அல்-குர்ஆனின் 31வது அத்தியாயம் ஸூரத்துல் லுக்மானின் 10வது வசனம்).
'உங்கள் பார்வையில் படக்கூடிய தூண்கள் எதுவுமின்றி அல்லாஹ்தான் வானங்களை உயர்த்தினான்.' (அல்-குர்ஆனின் 13வது அத்தியாயம் ஸூரத்துல் ரஃதுவின் 2வது வசனம்).
இவ்விரண்டு வசனங்களும் ஆகாயங்கள் எதிலும் கண்களுக்குப் புலனாகும் தூண்கள் எதுவும் இல்லை எனக் கூறுகின்றன. இதிலிருந்து பூமிக்குரிய வானத்திலும் தூண்கள் இல்லை எனத் தெளிவாகிறது. எனவே பூமிக்குரிய வானத்திலும் தூண்கள் இல்லை என்பதால் பூமி தூண்களின் மேல் நிற்கிறது என்ற கூற்று தவறு என்பதே திருமறையின் அறிவிப்பாகும்.
இத்திரு வசனங்களில் காணப்படும் மேலும் ஒரு சிறப்பம்சத்தை கவனியுங்கள். ஆகாயங்கள் படைக்கப்பட்டிருப்பதில் எவ்வித தூண்களும் இல்லை எனவும், எனவே அவை எவ்வித பிடிமானமும் இன்றித் தாமாகவே நிலை நின்று வருகின்றன எனவும் திருமறை கூறவில்லை. மாறாக கண்களுக்குப் புலனாகும் தூண்கள் எதுவும் இல்லை என்றே கூறுகிறது. எனவே இந்த வசனங்கள் ஆகாயங்கள் படைக்கப்பட்டதிலும் அவை உயர்ந்து நிற்பதிலும் கண்களுக்கு புலனகாத ஏதோ பிணைப்பு இருந்து வருகிறது என்பதையே சுட்டிக் காட்டுகின்றன. இதையேதான் நவீன விஞ்ஞான உலகமும் அறிவியல் ஆதாரங்களால் நிரூபித்து நிற்கிறது. (அண்டங்கள் யாவும் அவற்றிலுள்ள பொருட்களும் பேரண்டத்தின் ஈர்ப்பாற்றலால் - Universal Gravitation - தான் நிலை பெற்று வருவதாகத் தொடர் 4 மற்றும் 5ல் கண்டோம்.)
திருமறை குர்ஆனால் மட்டும் இந்த அறிவியலை எவ்வாறு இவ்வளவு துல்லியமாகக் கூற முடிந்தது?. பதினாறாம் நூற்றாண்டு வரை பூகோளம் ஆகாயத்தில் அசைவற்றிருக்கும் ஒரு பொருள் என்றும், எனவே அதைத் தாங்கி நிற்கக் கூடிய பருப்பொருள் - அது நீரோ - தூணோ - பன்றியோ - மீனோ - எதுவாயினும் சரி ஒன்று இருக்க வேண்டும் என்றும் உலகம் பரவலாக நம்பி வந்தபோது, ஏழாம் நூற்றாண்டிலேயே இவைகளை மறுத்து - ஆகாயங்கள் யாவும் நிலை நின்று வருவதன் சரியான அறிவியலை திருமறை குர்ஆனால் மட்டும் எவ்வாறு கூற முடிந்தது?. எனவே இவ்வேதம் மெய்யான இறைவனின் வார்த்தைகளேயன்றி மானிடக் கற்பனையில்லை என்பதை இது ஆதாரப்படுத்தவில்லையா?.
இன்னுமா இவ்வேதம் மானிடச் சிந்தனைத் திறனால் உருவாக்கப்பட்டது எனக் கூற முடியும்?. சிந்திக்க வேண்டாமா?.
சிந்தனைத் திறன் பெற்றவர்களே! அறிவியல் அபிமானிகளே! உங்கள் சிந்தனைத் திறனுக்கு மேலும் மேலும் விருந்தோம்பிக் கொண்டிருக்கும் இத்தூய மறையின் மற்றொரு வசனத்தைக் கவனியுங்கள் திருமறை கூறுகிறது:
'அவன்தான் (அல்லாஹ் - ஜல்) உங்களுக்காக இந்த பூமியைத் தொட்டிலாக ஆக்கினான்.' (அல்-குர்ஆனின் 43வது அத்தியாயம் ஸூரத்துஜ் ஜூக்ருஃப் - ன் 10வது வசனம்).
சத்தியத் திருமறை தனக்கே உரிய உவமான உத்தியுடன் பூகோளத்தின் இயக்கத்தை எவ்வளவு தெள்ளத் தெளிவாக கூறி நிற்கிறது பார்த்தீர்களா?.
பூகோளத்தின் இயக்கத்தை இம்மியும் பிழையின்றிப் புரிந்து கொண்ட இருபதாம் நூற்றாண்டு மனிதர்களாகிய நாம் நமது பூகோளத்தை ஒரு 'ரங்க ராட்டிணத்துடன்' ஒப்பிட்டு கூறினால் அதில் வியப்பேதும் இல்லை. (பூகோளம் சற்றே ஒரு நீள் வட்டமான பாதையில் இயங்குகிறது. ஆனால் ரங்கராட்டிணம் துல்லியமாக வட்ட வடிவத்தில் இயங்குகிறது. எனவே பூகோளத்தை ரங்கராட்டிணத்துடன் ஒப்பிடுவதில் ஒரு சிறு பிழை ஏற்பட்டாலும், உவமானம் என்ற வகையில் அப்பிழை புறக்கணிக்கத் தக்கதே). அதே நேரத்தில் பூகோளம் அசைவற்று நிற்கும் ஒரு பொருள் என்று கருதப்பட்ட காலத்தில், ரங்கராட்டிணம் போன்ற விளையாட்டுப் பொருட்களை மக்கள் அறிந்திராத நிலையில் பூகோளத்தை ஒரு தொட்டிலுக்கு உவமையாகக் குறிப்பிட்டிருப்பது வியப்பிற்கு மேல் வியப்பைத் தருகிறது.
ஒருவர் தொட்டிலை ஆட்டும்பொழுது, தொட்டில் முன்னும் பின்னும் அசைகிறது. அசையும் தொட்டிலின் முன் பக்க எல்லையிலும், பின் பக்க எலவ்லையிலும் வளைவுகள் ஏற்படும். எனவே ஆட்டப்படும் தொட்டில் முன்னும், பின்னும் வளைவுப் பாதையில் இயங்குவதால் தொட்டிலின் இயக்கம் ஒரு நீள் வட்டப் பாதையைத் தோற்றுவிக்கும்.
பூகோளம் தன்னுடைய நீள் வட்டப் பாதையில் இயங்குவதைக் குறிப்பிட இதைக் காட்டிலும் சிறந்த ஜனரஞ்சகமான ஓர் உவமானம் 7-ஆம் நூற்றாண்டில் இருந்திருக்க முடியுமா? என எண்ணிப் பார்த்தால் மேனி சிலிர்க்கவில்லையா?.
பூகோளத்தின் இயக்கத்தை ஏழாம் நூற்றாண்டிலேயே ஒரு தொட்டிலுக்கு ஒப்பிட்டுக் காட்டிய ஒரு நூலை மானிடப் படைப்பு எனக் கூறத் துணிபவர் யாராக இருந்தாலும், அவரை ஓர் அறிவியல் அபிமானியாக அறிவியல் உலகம் எற்காது.
மேலும் கவனியுங்கள்! தொட்டிலொன்றைத் தொங்கவிட வேன்டுமென்றால் கயிறு தேவை. எனவே தொட்டிலோடு ஒப்பிடப்பட பூமிக்கும் ஓர் கயிறு தேவையே! அப்படிப்பட்ட கயிறு ஏதேனும் உண்டா? என அறிவியலாளர்களைக் கேட்டால் அவர்கள் 'ஆம்! உண்டு!' என்றே கூறுகிறார்கள். சூரியனுடைய ஈர்ப்பாற்றல் எனும் கண்ணுக்கு புலனாகாத கயிறுதான் சூரியனிடமிருந்து பூகோளம் விலகிப் போகமால் தொங்க விடப்பட்டதை போன்று தங்க வைத்துள்ளது என்று கூறுகிறார்கள்.
ஆகாயங்கள் யாவற்றிலும் காணப்படும் பருப்பொருட்கள் அனைத்திலும் இதைப்போன்ற ஈர்ப்பாற்றல் செயல் பட்டு வருகின்றது என்றும் இதன் காரணமாகவே அவை யாவும் விலகிப் போகாமல் இயங்கி வருகின்றன என்றும் கூறும்போது சிலருக்கு ஓர் ஐயம் எழக்கூடும். விண்ணகப் பருப் பொருட்கள் அனைத்திலும் ஈர்ப்பாற்றல் செயல்படுகிறது எனில் நமது பூமியிலும் அப்படிப்பட்ட ஈர்ப்பாற்றல் செயல்படுகிறது என்பதே அதன் பொருள். ஆனால் பூமியைத் தவிர ஏனைய, பொருட்களில் ஈர்ப்பாற்றல் உண்டா? இல்லையா? என்பதை நாம் நேரடியாக உணர முடியாத போதிலும் நமது பூமியில் அப்படிப்பட்ட சக்தி ஒன்று இருக்குமானால் அதை நம்மால் உணர முடிந்திருக்க வேண்டும். ஏனெனில் நாம் வாழ்வதே இந்த பூமியில்தான். நாம் இப்போது உயிரோடு இருக்கிறோம். இறந்து போன சடலம் ஒன்று பூமியில் கிடந்தால் அது கிடந்த இடத்திலேயே கிடக்கும். இறந்த உடல் அசைவதில்லை. எனவே இறந்துபோன உடல்களை பூமி ஈர்ப்பதால்தான் அவை பூமியின் மீது தங்கி நிற்கின்றன என யாரேனும் கூறினால் அது மெய்யாகவோ அல்லது பொய்யாகவோ இருக்கலாம். ஆனால் உயிருள்ள மனிதர்களின் நிலை நிலை என்ன?. சடலங்களை ஈர்க்கும் பூமி உயிருள்ளவைகளை ஈர்க்காதா?. உயிருள்ளவர்களையும் பூமி ஈர்க்கிறது எனில், நம்மால் நடக்கவும் ஒடவும், தாண்டவும், குதிக்கவும் முடிகிறதே! இவை யாவும் எப்படிச் சாத்தியமாகும்?.
உயிருள்ளவைகளையும் பூமி ஈர்க்கிறது எனில் நாம் நடக்க, ஓட, குதிக்க, கால்கைள பூமியிலிருந்து தூக்கும்போது நமது கால்களை எந்த ஈர்ப்பாற்றலும் இழுத்துப் பிடிப்பதாக உணரவில்லையே! இது ஏன்?. எனவே பூமிக்கு ஈர்ப்பாற்றல் உண்டு என்பது மெய்தானா?.
அறிவார்ந்த நண்பர்களே! இந்த வினாவைக் கருத்தில் கொண்டு, இதற்கு விடை தேடி இந்த அற்புதத் திருமறையின் பக்கங்களைப் புரட்டுவோம். அது வழங்கிக் கொண்டிருக்கும் தீர்வும் விளக்கமும் விருப்பு, வெறுப்பின்றி உண்மையை ஏற்கத் துணியும் எந்த ஒரு அறிவியல் பற்றாளரையும் தன்பால் ஈர்த்து விடும்: இதுவே மெய்யான இறைவேதம் எனச் சொல்ல வைக்கும் என்பதில் ஐயமில்லை. அந்த ஜீவ வசனங்களை பார்க்கும் முன் இங்கு எழுப்பிய வினாவிற்குரிய அறிவியல் விளக்கத்தை முதலாவதாகக் காண்போம்.
உயிரற்றவைகளை பூமி ஈர்க்கிறதா? இல்லையா?. என்பதைப் புரிற்து கொள்ள முடியாத போதிலும் உயிருள்ள நம்மை பூமி நம்மை ஈர்க்கவில்லை எனக் கருதுவது தவறு. உயிருள்ளவைகளையும் பூமி ஈர்க்கவே செய்கிறது. இருப்பினும் உயிருள்ள நம்மால் இதைப் புரிந்து கொள்ள இயலாததற்கு காரணத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாம் பூமிக்குரியவர்களாகப் படைக்கப்பட்டிருக்கிறோம். ஆகவே நமது இயற்பியல் அமைப்பு (Physical Condition) பூமிக்கேற்ற வகையில் அமைந்துள்ளது. இதன் காரணமாக பூமியின் இந்த ஈர்ப்பாற்றல் ஒரு இழுவிசை போன்று நமது சாதாரண வாழ்வியல் அசைவுகளில் உணரப்படாமல் நம்மைப் பொறுத்தவரை பூமியின் ஒரு அரவணைப்பாகவே உணரப்படுகிறது. நாம் அணிந்திருக்கும் நமது ஆடை ஓர் இதமான அணைப்பாக உணரப்படுகிறது. இதே ஆடையை ஒரு சிட்டுக்குருவியின் மேல் வைத்தால் அது அந்த சிட்டுக்குருவிக்கு ஒரு அணைப்பாக இருக்காது. அந்த சிட்டுக்குருவி பூமியோடு அழுத்தப்படும். இதே நிலைதான் நம்மில் ஒருவர் வியாழனுக்குச் (Jupiter) சென்றாலும் ஏற்படும். ஏனெனில் அங்கு பூமியைக் காட்டிலும் 2.5 மடங்கு அதிகமான ஈர்ப்பாற்றல் செயல் படுகிறது. இந்த ஆடையின் பளுவை ஒரு சிற்றெறும்பின் மீது ஏற்றினால் நிலைமை மேலும் விபரீதமாகும். அந்த எறும்பு பூமியின் மீது நசுக்கப்படும். இந்த நிலைதான் நம்மில் ஒருவர் சூரியனுக்குச் சென்றாலும் ஏற்படும். ஏனெனில் அங்கு நமது பூமியைப் போன்று 28 மடங்கு அதிகமான ஈர்ப்பாற்றல் செயல்படுகிறது.
நாம் நமது ஆடையை ஒரு யானையின் மீது போர்த்தினால் அந்த யானையைப் பொறுத்தவரை இது ஒரு அணைப்பாக உணரப்படாது. அது ஒரு தொடு உணர்வாகத்தான் யானைக்கு இருக்கும். இதே நிலைதான் நம்மில் ஒருவர் நிலவுக்குச் சென்றாலும் ஏற்படும். ஏனெனில் அங்குள்ள ஈர்ப்பாற்றல் நமது பூமியில் இருப்பதைக் காட்டிலும் 6.25 மடங்கு குறைவு.
எனவே பூமிக்குரியவர்களாக, பூமியை ஒரு வீட்டைப் போன்று பயன்படுத்தக் கூடியவர்களாக (பார்க்க அல்-குர்ஆனின் 40வது அத்தியாயம் ஸூரத்துல் முஃமின் 64வது வசனம், 07வது அத்தியாயம் ஸூரத்துல் அஃராஃப் - ன் 10வது வசனம்) படைக்கப்பட்டிருக்கும் நமக்கு பூமியின் இந்த ஈர்ப்பாற்றல் பூமியின் ஓர் அரவணைப்பாகவே உணரப்படுகிறது.
பூமியின் இந்த அரவணைப்பை நாம் உதாரணங்கள் வாயிலாக விளங்கலாம். தந்தை ஒருவர் தம் மைந்தனின் கரத்தைப் பற்றியவாறு கடைத் தெருவில் நடந்து செல்கிறார். கடைத் தெருவை வேடிக்கை பார்த்தவாறு தந்தையோடு மைந்தன் சென்று கொண்டிருக்கும் வரை அவனுக்குப் பிரச்னை எதுவுமில்லை. அதே நேரத்தில் வேடிக்கைப் பார்த்தவாறு அவன் தந்தையிடமிருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் விலகிச் செல்ல முயன்றால் தந்தையின் கரம் உடனே அவனை இழுத்துத் தன்பால் சேர்த்துக் கொள்ளும். அப்போதுதான் தந்தையின் அரவணைப்பில் சென்று கொண்டிருக்கும் மகன் தன் தந்தையின் இந்த அரவணைப்பை இழுவிசையாக உணர்கிறான்.
ஒரு தாயின் மார்போடு அணைக்கப்பட்டிருக்கும் சேயும் இதற்கோர் உதாரணமாகும். தாயின் மார்பில் கிடந்தவாறு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அக்குழந்தையால் மகிழ்ச்சியோடு பொங்க முடியும். அதே நேரத்தில் மகிழ்ச்சி மிகைத்து ஒரு குறிப்பிட்ட எல்லைக்குமேல் அக்குழந்தை தன் தாயின் மார்பிலிருந்து பொங்கியெழ நினைத்தால் உடனே தாயின் கரம் அக்குழந்தையை மேலும் வலுவாக அணைக்கும். அப்போதுதான் அக்குழந்தை தன் தாயின் அணைப்பை ஒரு அழுத்தும் சக்தியாக உணரும்.
இவ்விரு உதாரணங்களைப் போன்றே பூமியின் மீது நடமாடும் உயிருள்ளவர்களின் நிலையும் அமைந்துள்ளது. பூமியின் மீது நடக்க, ஓட, தாண்ட, குதிக்க முயலும் எந்த நபரையும் ஒரு குறிப்பிட்ட தூரம்வரை பூமி அனுமதிக்கும். அப்போது அந்த நபருக்கு பூமி தன்னை இழுப்பதாகவோ அல்லது அந்த இழுவிசை தன்னை பூமியின் மீது அழுத்துவதாகவோ தெரியாது. ஆனால் அதே மனிதன் ஒரு பத்து மீட்டர் உயரத்துக்குக் குதிக்க வேண்டுமென்றோ அல்லது தாண்ட வேண்டுமென்றோ முயன்றால் அந்த பூமி அம்மனிதனை தன்பால் இழுத்து அணைத்துக் கொள்ளும். இதிலிருந்து பூமியின் அணைப்பு எந்த நேரமும் நம்மீது செயல்பட்டுக் கொண்டிருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
தந்தையின் கரத்திலுள்ள மைந்தன் தந்தையுடன் சென்று கொண்டிருப்பதை போல, தாயின் மார்போடு அணைக்கப்பட்ட சேய் தாயோடு சென்று கொண்டிருப்பதைப் போல பூமியோடு அணைக்கப்பட்ட நாம் பூமியோடு சென்று கொண்டிருக்கிறோம்.
இப்போது விவரிக்கப்பட்ட விஷயங்களிலிருந்து பூமியின் ஈர்ப்பாற்றல் இறந்தோர், உயிருள்ளோர் என்ற பாகுபாடின்றி எந்த நேரமும் பூமியின் அரவணைப்பாக நம்மீது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக விளங்கிக் கொண்டோம். இத்தெளிவான அடிப்படையில் பரிசுத்தத் திருமறை புவி ஈர்ப்புச் சக்தியின் (Earth's Gravitation) பயன்பாட்டை எவ்வளவு இரத்தினச் சுருக்கமாக பாரறியப் பரை சாற்றிக் கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்! திருமறை கூறுகிறது:
'உயிருள்ளவர்களையும் இறந்தவர்களையும் அணைத்துக் கொள்ளும் விதத்தில் பூமியை நாம் ஆக்கவில்லையா?. அன்றியும் அதில் உயர்ந்த மலைகளையும், நாம் நாட்டினோம்: இனிமையான நீரையும் புகட்டினோம். (இவ்வாறான ஆதாரங்கள் உங்கள் முன் இருந்தும், இவ்வசனங்கள் நம்முடைய வார்த்தைகள் இல்லை எனக் கூறி இதிலுள்ளவைகளை) பொய்ப்பிப்பவர்களுக்கு அந்த நாளில் (தீர்ப்பு நாளில்) கேடுதான்!' (அல்-குர்ஆன் அத்தியாயம் 77 ஸூரத்துல் முர்ஸலாத் 25 முதல் 28ஆம் வசனம் வரை).
அற்புதமல்லவா நிகழ்த்தி நிற்கிறது இந்த ஒப்பற்ற வான்மறை! புவி ஈர்ப்புச் சக்தியின் பயன்பாட்டை இதைக் காட்டிலும் தெளிவாகவும், எளிமையாகவும் இரத்தினச் சுருக்கமாகவும் விளங்க வைக்கக்; கூடிய வார்த்தைகளை நம்முன் எடுத்தக் காட்டக் கூடியவன் யார்?.
எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் நண்பர்களே!. நம்மில் சிலர் இதை மானிடக் கற்பனையென, அறிவியலை மதிக்கக் கூடிய ஒருவரால் கூற முடியுமா?. பூகோளத்தின் ஈர்ப்பாற்றலைக் கூறும் வசனத்தைச் தொடர்ந்து மலைகளையும், குடிநீரையும் குறிப்பிடுகிறதே இந்த அற்புதத் திருமறை! அதன் மர்மம்தான் என்ன?. விரிவை அஞ்சி அதை உங்களது அறிவியல் சிந்தனைக்கே விட்டுவிட்டு விஷயத்தைத் தொடர்கிறேன்.
பூமியின் மீது பறக்கும் பறவைகள் பூமியுடன் தடுத்து வைக்கப்படுகின்றன எனக் கூறிய திருமறை வசனத்தை முன் கட்டுரையில் ஆய்வு செய்தோம். வானியல் அறிவியலின் அற்புதமான பேருண்மைகளை ஓங்கிய குரலில் முழங்கிக் கொண்டிருக்கும் இந்த வசனத்தையும் மேற்கோள் காட்டி 'என்னய்யா! உளரல்? எல்லாம் சிறுபிள்ளைத் தனம்!' எனக் கூறியவர்களை நாம் கண்டுள்ளோம். அதைப்போன்று அப்பறவைகளை பூமியுடன் தடுத்து வைத்துக் கொண்டிருக்கும் சக்தியாகிய புவி ஈர்ப்புச் சக்தியை பற்றிக்கூறும் இந்த வசனத்தையும் மேற்கோள்காட்டி 'பூமி நம்மை அரவணைக்கிறதா? இதென்ன உளரல்? எனக் கேட்டு மறைந்து கிடக்கும் அவர்களது அறிவியல் அபிமானத்தையும், மேதாவிலாசத்தையும் மேலும் மேலும் வெளிப்படுத்தக் கூடியவர்கள் யாரேனும் உண்டா?.
ஏற்று போற்ற வேண்டியவைகளை எள்ளி நகைத்தவர்களின் நிலை எப்படி முடிவுற்றது என்பதை கூறும் வரலாற்று நிகழ்ச்சிகள் நம்முன் ஏராளமாக இருக்கின்றன. எனவே நேற்றைய வரலாறுகளிலிருந்து இன்று பாடம் பயிலாதவர்கள் நாளைய வரலாற்றின் கழிவுகளாக மாறுவார்கள் என்பது திண்ணம்.
உண்மை எதுவோ அது எங்கிருந்து வந்தபோதிலும் அதை ஏற்றேயாக வேண்டும் எனும் அளவிற்கு உண்மையின்பால் பற்றுள்ளவர்களே! நம்மால் நுனிப்புல் மேய முடியாது. சிந்திப்பதற்கு நம்முன் விஷயங்கள் இருக்கின்றன. எனவே நாம் சிந்தித்தாக வேண்டும்.
சிந்திப்போம் நண்பர்களே! முன் கட்டுரையிலும் இக்கட்டுரையில் கண்ட விஷயங்களை ஒருவர் கூற வேண்டுமானால் குறைந்த பட்சம் அவருக்கு நவீன வான் அறிவியலில் என்னென்ன விஷயங்கள் உள்ளன என்பது தெரிந்திருக்க வேண்டும்?.
முதலாவதாக அவருக்கு பூகோளம் ஆகாயத்தில் அசைவற்றிருக்கும் ஒரு பொருளன்று. மாறாக கணமும் ஓயாமல் ஒரு நீள் வட்டப்பாதையில் சுழன்றோடிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் எனத் தெரிந்திருக்க வேண்டும்.
இரண்டாவதாக, பூகோளத்தின் இந்தச் சுழலோட்டம் காரணமாக அதன் மீது பறக்கும் பறவைகள் வினோதமான இடப் பெயர்ச்சிகளையும், பூமியிலிருந்து தொலைந்து போவதையும், பூமியின் மீது ஏற்படும் மோதலையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் அவர் தெரிந்திருக்க வேண்டும்.
மூன்றாவதாக புவிவாழ் உயிரினங்களுக்கு இவ்வகையான இடையூறுகள் ஏற்படா வண்ணம் தடுத்துக் கொண்டிருக்கும் அறபுதமான சக்தி ஒன்று அதில் செயல்படுகிறது என்றும் அச்சக்தி பூமியோடு நம்மை அரவணைத்துச் செல்லக் கூடிய 'புவி ஈர்ப்புச் சக்தியே' என்பதும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
நான்கவதாக, அகிலம் முழுவதும் ஈர்ப்புச் சக்தி செயல்படுகிறது என்றும், அதே நேரத்தில் அது கண்ணுக்குப் புலனாகாத ஒரு சக்தியே என்றும் அவர் தெரிந்திருக்க வேண்டும்.
எண்ணிப் பாருங்கள்! இத்தூயத் திருமறை இறைவனுடைய வார்த்தைகள் இல்லையென்றால் - இது மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் சுய கற்பனையேயென்றால் - நவீன வானியலின் இந்த அறிவியல் பேருண்மைகள் அவருக்கு எப்படித் தெரிந்தன?.
அந்த மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு மாபெரும் விஞ்ஞானி. அவர் கண்டுபிடித்த உண்மைகனைத்தும், பிறகு வந்தவர்கள் காப்பி அடித்தார்கள் என்று சொல்லப் போகிறார்களா?.
எப்பாடுபட்டாவது இக்குர்ஆனை பொய்ப்பித்தாக வேண்டும் என்ற வெறியில் இப்படிக்கூட யாரேனும் கூறினாலும் வியப்பதற்கில்லை.
குர்ஆன் இறைவேதமில்லை! அது முஹம்மத் (ஸல்) அவர்களின் படைப்பு எனக் கூறுபவர்களில் யார் அறிவியல் சிந்தனை பெற்றவர்களோ அவர்கள் தங்களது கூற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலம் எப்போதோ வந்து விட்டது. அக்காரியத்தை நீங்கள் செய்யாமல் தொடர்ந்து அதே குரலையே ஒலித்துக் கொண்டிருந்தால், உங்கள் கூற்றில் நீங்கள் நேர்மையானவர்கள் என்று கூறவும் செய்தால், அனைத்திற்கும் முன்னதாக நீங்கள் ஒரு காரியம் செய்யக் கடமை பட்டிடுள்ளீர்கள்.
மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் படைப்பாக நீங்கள் எதைக் கூறுகிறீர்களோ அதில் காணப்படும், வானியல், புவியியல், உயிரியல், பேரண்டவியல் போன்ற என்னென்ன துறைகளை பற்றிய அறிவியல் உண்மைகள் காணப்படுகின்றனவோ, அந்த அறிவியல் உண்மைகளில் எவையெவை அவருக்குப் பின்னால் வந்த விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டனவோ அவை யாவும் மாமனிதர் முஹம்மத்(ஸல்) அவர்களால் கண்டு பிடிக்கப்பட்டவைகளே அன்றி, இன்று உலகம் முழுவதும் நம்பிக் கொண்டிருப்பதைப் போன்று சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படவில்லை எனப் பகிரங்கமாகப் பாரறியப் பிரகடனம் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறீர்கள்.
---------------------------
வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் முந்தைய பகுதிகள்.
பேரண்டப் படைப்பின் துவக்கம் -1
வாழத் தகுந்த கோள்-2
ஓசோன் -3
விண்ணகத்தின் பரப்பெல்லை -4
பேரண்டத்தின் ஈர்ப்பு விசை -5
விண்ணடுக்குகள் -6
உருண்ட பூமி -7
சுழலும் பூமி(1) -8
சுழலும் பூமி(2) -9
சுழலும் பூமி(3) -10
சுழலும் பூமி(4) -11
சுழற்றும் பூமி -12