Thursday, December 22, 2005

மதமாற்றம் ஏன்? -3

ஐயம்:
2.) ஆதாம் கடவுளால் தோற்றுவிக்கப் பட்டான்; ஏவாள் அவனது விலா எலும்பிலிருந்து உண்டாக்கப் பட்டதாக பழைய ஏற்பாடு சொல்கிறது. இஸ்லாமில் மனிதன் உறைந்த ரத்தத்திலிருந்து உண்டாக்கப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அது யாருடைய ரத்தம்? மனிதன் படைக்கப் படுவதற்கு முன் எங்கிருந்து ரத்தம் வந்தது? ஒருவேளை கடவுளின் ரத்தமாக இருக்குமோ? (தருமியின் பதிவு)

தெளிவு:
''சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான்'' (திருக்குர்ஆன், 55:14) ஆதாம் - ஆதம் இறைவனால் படைக்கப்பட்டார் என்றுதான் இஸ்லாம் கூறுகிறது.

//இஸ்லாமில் மனிதன் உறைந்த ரத்தத்திலிருந்து உண்டாக்கப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.// மனிதன் உறைந்த இரத்தத்திலிருந்து படைக்கப்பட்டதாக சில மொழி பெயர்ப்புகளில் கூறப்பட்டுள்ளது. ''மனிதனை அவன் இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான்''. (திருக்குர்ஆன், 96:2) திருக்குர்ஆன் மூலத்தில் ''அலக்'' என்கிற வார்த்தையை ''இரத்தக் கட்டி'' என்று தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இது தவறான பொருளாகும்.

(இன்னும் சில வசனங்களில் ''அலக்'' என்ற வார்த்தையை மொழிபெயர்க்காமல் அப்படியே சொல்லப்பட்டுள்ளது.

''நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு ''அலக்கிலிருந்தும்'' பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்''. (திருக்குர்ஆன், 22:5)

''பின்னர் அந்த இந்திரியத் துளியை ''அலக்'' என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த ''அலக்கை'' ஒரு தசைப் பிண்டமாக்கினோம்''. (திருக்குர்ஆன், 23:14)

''அவன்தான் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின் இந்திரியத்திலிருந்தும் பின் ''அலக்'' என்னும் நிலையிலிருந்தும் (உருவாக்கி) உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான்''. (திருக்குர்ஆன், 40:67)

''பின்னர் அவன் ''அலக்'' என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்''.) (திருக்குர்ஆன், 75:38)

கரு, அதன் வளர்ச்சிக் கட்டத்தின் எந்த நிலையிலும் ''இரத்தக் கட்டி'' என்ற நிலைக்கு வருவதில்லை. இது விஞ்ஞானத்தின் தீர்க்கமான முடிவு. ''அலக்'' என்பதற்கு 'பற்றிப் பிடித்துக் கொண்டு தொங்கும் பொருள்' என்பதே நேரடியான மொழிபெயர்ப்பாகும். கருத்தரித்ததும் அந்தக் கரு, கருப்பையின் சுவற்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டு மெல்ல மெல்ல வளர்ந்து ஒரு தட்டையான பொருளாக மாறி கருவறை சுவற்றோடு அப்பிக் கொள்கிறது. இப்போது அதை மருத்துவத்தில் (PLACENTA - நச்சுக் கொடி) சூலகத்தின் கருவக ஒட்டுப் பகுதியென்று குறிப்பிடுகிறார்கள்.

வளரும் கருவுக்கு அது குழந்தையாகி வெளியே வரும்வரை சுவாசப்பை, ஈரல், சிறுநீரகம் எல்லாமே இந்த ''பிளஸென்டா'' தான்! எனவே ஒரு குழந்தை உருவாவதற்குரிய எல்லாமாகச் செயல்படும் பிளஸென்டாவைத்தான் இறைவன் இங்கே ''அலக்'' என்று குறிப்பிடுகிறான். எனவே ''அலக்' என்றால் ''இரத்தக் கட்டி'' என்பது தவறான பொருளாகும்.

''அலக்'' என்பதற்கு இரத்தக் கட்டி என்கிற பொருள் தவறானது எனும்போது, அதைத் தொடர்ந்து //..ஒருவேளை கடவுளின் ரத்தமாக இருக்குமோ?// என்ற தருமியின் சந்தேகக் கேள்வியும் தவறானதே.

ஐயம்:
3.)ஆபிரஹாமின் வழித்தோன்றல்கள்தான் கிறித்தவர்களும், இஸ்லாமியரும் - பழைய ஏற்பாட்டின் படி. அதை இஸ்லாம் ஏற்றுக்கொள்கிறதா? (ஏனெனில், குழந்தை இல்லா ஆபிரஹாமுக்கும் அவர் மனைவி சாராயின் அடிமைப் பணிப் பெண்ணான ஆகாருக்கும் பிறந்த குழந்தையான - ‘இஸ்மயேலின்’ சந்ததிகள்தான் பின்னால் இஸ்லாமியர்களாக ஆனார்கள் - என்கிறது பழைய ஏற்பாடு.) அதோடு, கடவுளின் தூதர் இஸ்மயேலைப் பற்றி சொல்லும் “நல்ல″ வார்த்தைகள்…? (ஆதி. 16, 17) அவைகளை நான் இங்கு தர விரும்பவில்லை; வேண்டுமென்றால் தெரியாதோர் அங்கு சென்று வாசித்துக் கொள்ளவும்.

தெளிவு:
//ஆபிரஹாமின் வழித்தோன்றல்கள்தான் கிறித்தவர்களும், இஸ்லாமியரும் - பழைய ஏற்பாட்டின் படி. அதை இஸ்லாம் ஏற்றுக்கொள்கிறதா?// - ''ஆப்ரஹாமின் வழித்தோன்றல்கள் மட்டுமே இஸ்லாமியர்கள் - முஸ்லிம்கள் என்பது தவறு. ஆப்ரஹாமின் சந்திதிகள் மட்டுமே முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்பதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை.'' இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யத் துவங்கிய ஆரம்ப காலத்தில் அடிமைகள் சிலரே இஸ்லாத்தை ஏற்றிருந்தனர். அபிசீனிய நாட்டைச் சேர்ந்த கருத்த அடிமையான பிலால் அவர்களும் இஸ்லாத்தை ஏற்றிருந்தார். இவர் ஆப்ரஹாமின் வழித்தோன்றலில் உள்ளவரல்ல.

இன்று உலகளாவிய நிலையில் பரந்து விரிந்து வேர்களைப் பதித்திருக்கும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட அனைத்து முஸ்லிம்களும் ஆப்ரஹாமின் வழித்தோன்றல்களல்ல என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியும். முஸ்லிம்களில் - ஆப்ரஹாமின் வழித்தோன்றல்களும் இருக்கிறார்கள் - ஆப்ரஹாமின் வழித்தோன்றலல்லாதவர்களும் உண்டு. இஸ்லாத்தை ஏற்க ஆப்ரஹாமின் சந்ததிகளென்ற அந்தஸ்து அவசியமில்லை.

ஆப்ரஹாம் இறைவனின் தோழர் என்றும், இரண்டு மனைவியரை அவர் திருமணம் செய்திருந்தார், அவ்விருவரில் சாராள் முதல் மனைவி, ஆகார் இரண்டாம் மனைவி. ஆப்ரஹாமின் குடும்பத்தில் தோன்றிய முதல் குழந்தையை - இஸ்மவேலை - ஆகார்தான் பெற்றெடுத்தார் என்றும் பைபிள் கூறுகிறது. இதை இஸ்லாம் ஒப்புக்கொள்கிறது.

இஸ்மவேல் - இஸ்மாயீல் அவர்கள் பால்குடி பருவமாகயிருந்தபோதே - இஸ்மாயில் அவர்களையும், அவரின் தாயார் ஆகார் - ஹாஜராவையும், ஆப்ரஹாம் - இப்ராஹீம் அவர்கள் அழைத்து வந்து மக்காவில் குடியமர்த்தினார் இவர்கள் குடியேறிய வேளையில் அங்கு எவருமே குடியிருந்திருக்கவில்லை. இவர்களின் காரணமாகவே இங்கே ஸம், ஸம் என்ற நீரூற்றை இறைவன் தோன்றிடச் செய்தான். இந்த நீரூற்றின் காரணமாக ஜுர்ஹும் என்ற குலத்தார் இங்கே குடியேறினர். இஸ்மாயீல் அவர்கள் ஜுர்ஹும் குலத்தாரிடமிருந்து அரபி மொழியைக் கற்றுக்கொண்டார். இஸ்மாயீல் வாலிப வயதையடைந்தபோது அவருக்கு, தங்களில் ஒரு பெண்ணை ஜுர்ஹும் குலத்தார் திருமணம் செய்து வைத்தனர். (இது நீண்ட ஹதீஸின் சுருக்கம். பார்க்க: தமிழ் புகாரி 3364, 3365) இஸ்மவேல் - இஸ்மாயீலின் சந்ததிகளே அரபியர்கள்.

''இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' (திருக்குர்ஆன், 14:39) என்று ஆப்ரஹாம் - இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனுக்கு நன்றி கூறிப் புகழ்ந்துரைக்கிறார்.

ஆகாருக்கு இஸ்மவேல் பிறந்து பல ஆண்டுகள் சென்றபின், ஆப்ரஹாமின் முதல் மனைவி சாராவுக்கு ஈசாக் - இஸ்ஹாக் பிறந்தார். இஸ்ஹாக்கின் சந்ததிகளே இஸ்ரவேலர்கள். யாகூப், யூசுப், மூஸா, ஹாரூன், தாவூத், சுலைமான், ஸக்கரிய்யா, எஹ்யா, ஈஸா அடங்கிய அதிகமான இறைத்தூதர்கள் இஸ்ரவேலர்களில்தான் அனுப்பப்பட்டார்கள்.

ஐயம்:
4.)யூதர்களுக்கு அருளப்பட்ட தோராவும், கிறித்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட புதிய ஏற்பாடும் திரிக்கப்பட்டு விட்டதாலேயே ‘இறுதி’ வார்த்தைகளாக குரான் கொடுக்கப்பட்டது என்ற வாதம் ஒன்று வந்தது. இது ஏதோ மதங்களின் பரிணாம வளர்ச்சிபோல சொல்லப்பட்டு, அந்தப் பரிணாம வளர்ச்சியின் ‘இறுதி நிலை’தான் (the final format)இந்த இஸ்லாம் என்பதுபோல கூறப்பட்டது. உலகம் என்ன இந்த மூன்றே மூன்று மதங்களை மட்டுமா கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான மதங்கள்; நம்பிக்கைகள் - அவைகளில் இந்த மூன்றும் உண்டு; அவ்வளவே. நம் பார்வைகள் அகன்றிருக்க வேண்டிய அவசியம் இந்த விவாதத்திலிருந்து தெரியும்.

தெளிவு:
உலகம் தோன்றி, முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதாம் - ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டு இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரை மூன்று மதங்களைத்தானா உலகம் கண்டிருந்தது? என்றால் நிச்சயமாக இல்லை! குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் வேதம் என்று சொல்லிக்கொள்ளுமளவிற்கு, நபி மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட தோரா - தவ்ராத் என்ற வேதமும், நபி ஏசு - ஈஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட பைபிள் - இன்ஜில் என்ற வேதமும் ஆக இவ்விரு வேதங்கள் மட்டுமே இருந்தன, அதுதான் இங்கு சுட்டப்படுகிறது.

இதனால், தவ்ராத் வழங்கப்பட்ட இறைத்தூதர் மோசே - மூஸா (அலை) அவர்களுக்கு முன்பு வாழ்ந்த சமூகங்களுக்கு நேர்வழி காட்ட இறைத்தூதர்கள் அனுப்பப்படவில்லையென்றோ, இறை வேதங்கள் வழங்கப்படவில்லையென்றும் பொருளல்ல. அப்படி விளங்குவது குறுகிய கண்ணோட்டத்தையே உறுதிப்படுத்தும். (பழைய, புதிய ஏற்பாடுகள் திரிக்கப்பட்டதா? இதற்கான விளக்கத்தை தருமியின் ஐந்தாவது கேள்வியில் சேர்த்து தெளிவுபடுத்துவோம்.)

(வளரும்)

Friday, December 16, 2005

மதமாற்றம் ஏன்? -2

ஹாரிதின் மகள் ஜுவைரியா (ரலி) அவர்களின் நிலையை எண்ணி மனசு கஷ்டப்படுவதாக தருமி குறிப்பிட்டுள்ளார். பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பார்கள், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளைக் கண்டால் யாருக்குத்தான் இரக்கம் ஏற்படாது? பெண்ணொருத்தி துன்பத்தையனுபவிக்கிறாள் என்பதைப் பார்க்கும் போதும், கேள்விப்படும் போதும் மனிதம் கொண்ட எவரது உள்ளத்திலும் ''அடடா இது என்ன அநியாயம்'' என்று நெஞ்சிரக்கம் கொள்ளும். இரக்கத்தின் மேலிட்டால் மனது கஷ்டத்திற்குள்ளாவதும் இயல்பு. -

(//3. ஜுவேரியா - இந்தப் பெண்ணின் கதை மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமாயிருந்தது. போரில் தோற்றவனின் மனைவி விரும்பாத ஒருவனின் மனைவியாவதைத் தவிர்க்க, பேரம் பேசப்பட்டு, முகமதின் மனைவியாகிறாள். எந்த நூற்றாண்டாயிருந்தால் என்ன..பெண்கள் நிலை எங்கும் எப்போதும் ஒரே மாதிரிதான் போலும்!//)

- ஆனால், ஜுவைரியாவுக்காக தருமியின் மனசுக் கஷ்டப்படுகிறது என்பதில் நியாயமிருக்கிறதா? என்பதை பார்ப்போம்.

பனூ முஸ்தலிக் என்ற கூட்டத்தினர் இஸ்லாத்தின் பரம எதிரிகளாகத் திகழ்ந்தவர்கள். முஸ்லிம்களுக்கு பல வகையிலும் தொல்லை தந்து கொண்டிருந்தனர். இதன் காரணமாக பனூ முஸ்தலிக் என்ற கூட்டத்தினருடன் ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு - அதாவது நபி (ஸல்) அவர்களின் 59வது வயதில் - நபி (ஸல்) அவர்கள் போரிட்டனர்.

இந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர். அந்தக் கூட்டத்திலேயே கடுமையான எதிரியாக இருந்த முஸாபிஃ பின் ஸஃப்வான் என்பவர் கொல்லப்பட்டார். போர்களத்தில் உயிருடன் பிடிக்கப்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட போது 'முஸாபிஃ பின் ஸஃப்வான்' என்பவரின் மனைவியும், அந்தக் கூட்டத்தின் தலைவர் ஹாரித் என்பவரின் மகளுமான ஜுவைரியாவும் அவர்களில் ஒருவராக இருந்தார். அன்றைய போர் வழக்கப்படி பிடிக்கப்பட்ட கைதிகள் போர் வீரர்களுக்குப் பங்கிட்டு கொடுக்கப்பட்டனர். ஜுவைரியா அவர்கள் ஸாபித் இப்னு கைஸ் (ரலி) என்ற நபித்தோழருக்குக் கொடுக்கப்பட்டார்.

இதன் பின்..

(அபூ தாவூதில் இடம்பெற்ற நபிவழிச் செய்தியின் சுருக்கமிது)

ஜுவைரியா நபி (ஸல்) அவர்களை அணுகி: ''யா ரஸூலல்லாஹ் - ஓ அல்லாஹ்வின் தூதரே! நான் ஹாரிதின் மகள் ஜுவைரியா... என் விடுதலைக்கு தாங்கள் உதவுங்கள்'' என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர்: ''நல்லதை நீ கேட்பாயா?'' என்றார்கள்.

ஜுவைரியா: ''சொல்லுங்கள் யா ரஸூலல்லாஹ்.''

அல்லாஹ்வின் தூதர்: ''உன்னை விடுவித்து நான் திருமணம் செய்து கொள்வேன்'' என்றார்கள்

ஜுவைரியா: ''சம்மதிக்கிறேன்'' என்றார்.

இந்த சம்பவத்திலிருந்து தெரிந்து கொள்ளும் விஷயங்கள் - அக்காலப் போர் முறைப்படி, போரில் சிறைப் பிடிக்கப்பட்டவர்கள் சிறைப் பிடித்தவர்களுக்கு அடிமைகள் என்பதை ஆணும், பெண்ணும் அறிந்து வைத்திருந்தனர். பனூ முஸ்தலிக் என்ற கூட்டத்தின் தலைவரின் மகளாகிய ஜுவைரியா அந்த சூழ்நிலையிலிருந்து, தற்போது தானொரு அடிமை என்பதை விளங்கிக் கொள்கிறார். அடிமைத் தளையிலிருந்து சுதந்திரம் பெறவே நபி (ஸல்) அவர்களின் உதவியை நாடுகின்றார்.

''ஓ அல்லாஹ்வின் தூதரே'' என்ற ஜுவைரியாவின் அழைப்பிலிருந்து முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட ''இறைத்தூதர்" என்ற அந்த மாபெரும் பதவியை அவர் ஏற்றுக் கொண்டு பிரகடனப்படுத்துகிறார். ''சொல்லுங்கள் யா ரஸூலல்லாஹ்'' என இறைத்தூதரின் கட்டளைக்கு செவி சாய்க்கிறார். ''சம்மதிக்கிறேன்'' என்று இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை திருமணம் செய்து கொள்ள ஒப்புதலளிக்கிறார். இங்கே ஜுவைரியா மீது சிறிதும் வன்முறையோ - பலவந்தமோ நடத்தப்படவில்லை (அப்படி நடத்தப்பட்டதாக வரலாற்று தகவல்களில் அறிந்திருந்தால் தருமி சமர்ப்பிக்கலாம்)

ஜுவைரியா எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை, அவருக்கு அநீதியும் இழைக்கப்படவில்லை ஜுவைரியாவின் சம்மதத்தின் பின்பே நபி (ஸல்) அவர்கள் ஜுவைரியாவை மணமுடித்தார்கள் என்பதே வரலாற்று உண்மையாகும்.

//ஜுவேரியா - இந்தப் பெண்ணின் கதை மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமாயிருந்தது.// என்ற தருமியின் கூற்றில் எந்த உண்மையும் இல்லை. ஜுவைரியாவுக்கு துளியும் அநியாயம் இழைக்கப்படாத நிலையில் ஜுவைரியாவுக்காக தருமியின் மனம் கஷ்டப்படுகிறதென்றால் - மன்னிக்கவும், ''பிறர் நன்றாக வாழ்வதை பொறுக்காத சில மனங்களும் கஷ்டப்படத்தான் செய்யும்'' என்பதை எண்ணிப் பார்ப்பதிலிருந்து என்னால் தவிர்க்க முடியவில்லை.

இந்தக் கேள்வி..

//53வயதான நபி(ஸல்) அவர்களை மணந்ததால் என் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று ஆயிஷா (ரலி) எங்காவது சொல்லியிருக்கிறார்களா?//

ஜுவைரியாவுக்கும் பொருந்தும்

59வயதான நபி(ஸல்) அவர்களை மணந்ததால் என் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று ஜுவைரியா (ரலி) எங்காவது சொல்லியிருக்கிறார்களா?

--------------

//2. Zaynab bint Jahsh- ஜேனாப் என்ற இந்தப் பெண்மணி முகமதின் வளர்ப்பு மகனின் மனைவி; வளர்ப்பு மகன் விவாகரத்து செய்த பின் இப்பெண்ணை முகமது மணம் முடிக்கிறார்.// இந்த செய்தியின் மூலம் தருமி என்ன சொல்ல வருகிறார்?

''ஸைது அவளை விவாக விலக்கு செய்து விட்ட பின்னர் நாம் அவளை உமக்கு திருமணம் செய்வித்தோம். ஏனென்றால் மூஃமீன்களால் சுவீகரித்து வளர்க்கப்பட்டவர்கள். தம் மனைவியரை விவாகரத்து செய்து விட்டால் அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாத என்பதற்காக இது நடை பெற்று தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (அல்குர்ஆன் 33:37)

இது பற்றி ஏற்கெனவே முன்பு விளக்கப்பட்டிருக்கிறது.
----------------
இனி தருமியின் மற்ற விமர்சனங்களைத் தொடந்து அவரது ஐயங்களையும் பார்ப்போம்.

ஐயம்: 1.)பழைய ஏற்பாடு இரு (கிறித்துவம், இஸ்லாம்)மதத்தினருக்கும் பொது எனப்படுகின்றது. கிறித்துவர்களின் பைபிளில் ஆதாம் - ஏவாள் படைப்பைப் பற்றி சொல்லும்போது ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டாள் என்பதை, இது ஓர் ஆணாதிக்க விளக்கம் என்று கூறியிருந்தேன். ஆனால், முஸ்லீம் எழுத்துக்களில் அந்த முதல் பெண்ணுக்குப் பெயரே இல்லை. பெயர் தரும் அளவிற்குக்கூட பெண்ணுக்கு முக்கியம் இல்லையோ?

தெளிவு: ஆதாமின் - ஆதமின் மனைவியாகிய முதல் பெண்மணியின் பெயர், ''ஹவ்வா'' என்று இஸ்லாம் பெயரிட்டு அழைக்கிறது. (பார்க்க: தமிழ் புகாரி ஹதீஸ் எண், 3330)

(வளரும் இன்ஷா அல்லாஹ்)

Monday, December 12, 2005

மதமாற்றம் ஏன்? -1

இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் சிந்தனைகள் எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியாகவே இருந்திருக்கின்றது. பால்ய விவாகம், பலதாரமணம், மற்றும் போர்கள் பற்றியக் குற்றச்சாட்டுகள் என எல்லா விமர்சனங்களும் ஒரே சாயலே. வலைப் பூவில் கடந்த 2004 டிசம்பர் மாதம் தொடங்கிய இஸ்லாத்தைப் பற்றிய விமர்சன வாசிப்பில் இப்போது தருமி என்பவரும் இணைந்துள்ளார்.

''நான் ஏன் மதிய உணவு சாப்பிட்டேன்?'' என்ற தலைப்பில் எவராவது பதிவிட்டால் ''இது என்ன பிரமாதம் அவருக்கு பசித்திருக்கும் அதனால் மதிய உணவு சாப்பிட்டார்'' என்பதை யூகித்துக்கொள்வது பெரிய விஷயமல்ல. அதுபோல் ''நான் ஏன் மதம் மாறினேன்?'' என்ற தருமியின் தலைப்பைப் பார்த்ததும் தாய் மதமோ, தழுவிய மதமோ அவருக்கு பிடித்திருக்காது என்றுதான் சொல்லத் தோன்றும். அதுதான் ஏதார்த்தமான உண்மையும் கூட.

ஆனால் பாருங்கள், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பால்ய விவாகம் செய்து கொண்டதால், என் தாய் மதமாகிய கிறிஸ்த்துவ மதத்திலிருந்து மாறினேன் என்று தருமி சொல்வது - இஸ்லாத்தில் குறைபாடுகள் இருப்பதாக விமர்சித்து, அதனால் கிறிஸ்துவத்திலிருந்து மதம் மாறினேன் என்பது சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. (எதற்கு மாறினார் என்பது தனி விஷயம்)

பிற மதவாதிகள், தங்களின் மதம் சார்ந்த விமர்சனங்களை சாதாரணமாக எற்றுக்கொள்வது போல், இஸ்லாத்தை விமர்சித்தால் முஸ்லிம்கள் ஏன் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது? என்று தருமியே சொல்லிவிட்டு, அவருடைய இஸ்லாத்தின் விமர்சனங்கள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டு - மறந்தும் விட்டது. இப்போது என் கேள்விக்கு பதிலே இல்லை என்று முஸ்லிம்களை சீண்டுகிறார். இங்கே அவர் ஏன் மதம் மாறினார் என்பதன் நோக்கம் மிகத் தெளிவாகவேப் புரிகிறது. மக்காவை - நோக்கித் தொழும் என்னையும் - உலக முஸ்லிம்கள் அனைவரையும் அவமானப்படுத்தி, சபையொழுக்கம் தெரியாத வின்ஸ்டன் என்பவரின் அநாகரிகப் பின்னூட்டத்தை தருமி அனுமதித்து ஆதரித்திருப்பது அவரது உள் நோக்கம் என்ன? என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது. தருமி அவர்களே மிக்க நன்றி!

ஆயிஷா (ரலி) அவர்களின் பால்ய விவாகத்தையே முதலில் தருமி தொட்டிருப்பதால் அதிலிருந்தே தொடங்குவோம். இஸ்லாத்தின் மீது களங்கத்தை சுமத்துபவர்கள், 1420 ஆண்டுகளுக்கு முன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒருவர் மட்டும்தான் பால்ய விவாகம் செய்து கொண்டார் என்கிற மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு, அதே கற்பனையிலேயே தங்களின் விமர்சனத்தையும் துவக்குகிறார்கள். பால்ய விவாகம் குற்றமான செயலாகயிருந்திருந்தால் அது அன்றைய சமூகத்தார்களால் எதிர்க்கப்பட்டிருக்கும். (அப்படி எதிர்க்கப்பட்டதாக தகவலிருந்தால் தருமி சமர்ப்பிக்கலாம்) இந்தியாவில் கடந்த நூற்றாண்டு ஆரம்பம் வரையிலும் பால்ய விவாகம் அங்கீகரிக்கப்பட்டதாகவே இருந்தது.

பால்ய விவாகம்.
குஜ்ஜார் எனும் உயர் ஜாதியைச் சேர்ந்த ராம்கரன் தனது ஒரு வயது மகளை திருமணம் செய்யத் திட்டமிட்ட போது இருகுழந்தைகளுக்கெதிரான கொடுமை என்று குடும்பத்தாரோடு வாதிட்டாள் பன்வாரிதேவி. குடும்பத்தார் கேட்க மறுத்ததும், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கிறாள். காவல் துறை வருவதற்கு முன் கல்யாணம் முடிந்து ஒரு வயது குழந்தை புதுப் பெண்ணாகிறது.

தன் உயர் சமூகம் சார்ந்த உரிமை(?)க்கெதிராக பன்வாரிதேவி புகார் செய்ததால் ஐந்து வெறியர்களால் குதறியெடுக்கப்படுகிறாள் அவள். அந்தக் காமுகர்களுக்கு நீதி மன்றம் விடுதலையளிக்கிறது. பெண் விடுதலைப் பற்றி விவாதித்து சாதனை புரியும் இந்தியாவில் எழுச்சி நூற்றாண்டின் இறுதியில் சில வருடங்களுக்கு முன் நடந்த கொடுமை இது.

கல்வியாளர்களாக மதிக்கப்படும் பிரிட்டிஷார் ஆட்சியின் போது 1828ல் குற்ற நீதி சட்டம் சென்னை, பம்பாய், கல்கத்தாவில் அமுல்படுத்தப்பட்டது. அதில் 8வயதுக்கு குறைவான பெண்ணை கற்பழிப்பது தண்டனைக்குரியக் குற்றமென அறிவிக்கப்பட்டது.

8வயதுக்கு மேற்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ய வழிவகுத்த அதே வேளையில் 1828ற்கு முன் சட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்பதையும் இச்சட்டம் உறுதிப்படுத்துகிறது.

திருத்தப்பட்ட 1844ம் ஆண்டு தண்டணை சட்டத்தில் 8வயதிற்கு குறைவான மனைவியோடு உடலுறவு கொள்வது கற்பழிப்புக் குற்றம் எனக் கூறப்பட்டது. 8வயதைத் தொட்டவுடன் அவளை மனைவியாக்கி சிதைக்கலாம் என்பதுதான் இச்சட்டத்தின் அர்த்தம்.

இந்திய தண்டனை சட்டம் 376வது பிரிவின்படி திருமண வயது 10ஆக உயர்த்தப்பட்டது 1860ல் தான். ரக்மாபாய் என்ற சிறுவயது பெண்குழந்தையை எலும்புருக்கு நோயால் பாதிக்கப்பட்ட வயது முதிர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்யப்பட்டது. ஓரளவு கல்வி பெற்றிருந்த இந்த குழந்தை மணப்பெண் தன் கணவனோடு உடலுறவிற்கு சம்மதிக்க முடியாது என மறுத்தாள். ஆயிரக்கணக்கான மதவாதிகள் ரக்மாபாய்க்கு எதிராக களமிறங்கினர். அவள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

''மனைவியோடு உடலுறவு கொள்ளும் உரிமை கணவருக்கு உண்டு, இதை மறுக்கும் மனைவி தண்டிக்கப்படுவாள்'' என்று 1877ம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

இதன் பிறகு நடத்தப்பட்ட ஆய்வுகளின் பலனாகத்தான் 1891ல் திருமண வயது 12ஆக உயர்த்தப்பட்டது இந்த நூற்றாண்டின் துவக்கத்தில், 1928ல் தான் திருமண வயது 16 என்ற நிலையை எட்டியது. (தினமணிக்கதிர் ஆய்வு கட்டுரை 9-97)

இந் நாட்டின் பெண்களுக்கெதிரான கொடுமைகளை முடிவுகட்ட எவ்வளவுதான் சட்டங்கள் போட்டாலும் அவை அனைத்தும் நீதிப் புத்தகங்களிலும், வீட்டுக்கு வெளியிலும்தான் காத்துக்கிடக்கின்றன. கசங்கி புதையும் குழந்தைகள் என்னவோ புதைந்து கொண்டுதானிருக்கிறார்கள். பிரபலமான பூலான் தேவிகூட வயதுக்கு வருமுன் 10வயதில் திருமணம் முடிக்கப்பட்டவர் என்பதை மறுக்க முடியுமா? கவிபாரதி 7வயது கண்ணம்மாவை கைப் பிடித்ததை மறைக்க முடியுமா?

இந்த நூற்றாண்டின் இறுதிவரை இதுதான் நிலைமையெனில் 1420 வருடங்களுக்கு முன்னால் நிலமை எப்படியிருந்திருக்கும் என்பதை ஆய்வாளர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஆயிஷா(ரலி)யின் திருமணம்.
இருண்டு கிடந்த பிரதேசத்தில் இஸ்லாம் தம் ஒளிக்கதிர்களை வீசத் துவங்கிய கொஞ்ச காலத்தில் வியக்கத்தக்க சீர் திருத்தங்கள் உருவாகத் துவங்கின. கொடுமைகள் வேரறுக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் பால்ய விவாகம். இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் தமது 53வது வயதில் தம் நெருங்கிய தோழரான அபூபக்கர் சித்தீக் அவர்களின் மகள் ஆயிஷாவைத் திருமணம் செய்கிறார்கள் அப்போது ஆயிஷாவிற்கு வயது ஆறு.

அன்றைய அரபுலகில் பால்ய விவாகம் நடைமுறையிலிருந்த வழக்கமாகும். இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த பெண்கள் 21வயதில் பாட்டியாகி விடுவார்கள் (புகாரி) என்கிறது வரலாறு. 9வயதில் திருமணம் 10 அல்லது 11வயதில் மகப்பேறு, அந்த மகளுக்கு 9வயதில் திருமணம் 10 அல்லது 11வயதில் மகளுக்கு மகப்பேறு இப்படி அந்தக்காலத்துப் பெண்கள் மகள் வழி பாட்டி என்ற உறவு அந்தஸ்தை 21வயதிலேயே பெற்றுவிடுவார்கள்.

அன்றைய நடைமுறை வழக்கில்தான் முஹம்மது (ஸல்) ஆயிஷா (ரலி) திருமணம் நடக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் செய்த பால்ய விவாகமாகட்டும் அல்லது நான்குக்கு மேற்பட்ட திருமணமாகட்டும் இது அவருக்கு மட்டுமே உள்ள தனி சலுகையாகும். திருக்குர்ஆன், 33வது அத்தியாயத்தின் 50வது வசனத்தில்..

''இது மற்ற இறைநம்பிக்கையாளர்களுக்கின்றி உமக்கு மட்டும் உரியது'' என்று இறைவன் கூறுகிறான்.''

இஸ்லாத்தில் பால்ய விவாகம் உண்டு, இது கொடுமை என்று மீடியாக்களும், அறிவு ஜீவிகளும் கூறுவது போல், ஆம் உண்டுதான். இது இறைத்தூதருக்கு மட்டும் இறைவன் அனுமதித்த சட்டம். இஸ்லாத்தில் மற்றெவருக்கும் பால்ய விவாகம் அனுமதி இல்லை.

நபியை மணந்த ஆயிஷா (ரலி)யின் வாழ்க்கையில் சிறு கீறல்கூட இல்லாமல் மிக்க மகிழ்ச்சியாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று அவர்கள் சொல்லியே வரலாற்றிலிருந்து அறிய முடிகிறது. ஆனாலும் தருமி போன்றவர்கள் புகுந்து இது கொடுமையென்று தொடர்ந்து புலம்பிக் கொண்டிருப்பதுதான் மிகக் கொடுமை. 53வயதான நபி(ஸல்) அவர்களை மணந்ததால் என் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று ஆயிஷா (ரலி) எங்காவது சொல்லியிருக்கிறார்களா? இந்த பால்ய விவாகத்திற்கும் தருமி மதமாறியதற்கும் என்ன சம்பந்தம்?

(மற்றவை அடுத்த பகுதியில் வளரும் இன்ஷா அல்லாஹ்)

Saturday, December 03, 2005

காஷ்மீர் ஓர் பார்வை-4

இந்தியாவிற்கு தலைவலி அளித்த சமஸ்தானங்கள்.
ஜுனேகாத், ஹைதராபாத், காஷ்மீர்


ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியத் துணைக் கண்டத்தில் பிரிட்டிஷாரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத பகுதிகள் இருந்தன. இப்பகுதிகளில் மன்னராட்சி நடைபெற்று வந்தது. இவை சமஸ்தானங்கள் என்று அழைக்கப்பட்டு வந்தன. இந்த சமஸ்தானங்கள் பிரிட்டிஷ் பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத சுயாட்சிப் பெற்ற பகுதிகளாக இருந்த போதிலும் பிரிட்டிஷ் பேரரசின் உத்தரவுகளுக்கு அவ்வப்போது கீழ்படியும் நிலையில்தான் அவை இருந்தன.

இதுபோன்ற ஒரு சமஸ்தானமாகத்தான் ஜம்மு - காஷ்மீர் விளங்கியது. ஹரிசிங் (முன்னாள் மத்திய அமைச்சர் கரண்சிங்கின் தந்தை) ஜம்மு - காஷ்மீரின் மகாராஜாவாக இருந்தார்.
1947ல் இந்தியாவிற்கு விடுதலையளிக்க முன் வந்தபோது இந்தியா துணைக் கண்டத்தை இரண்டாகப் பிரிக்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர்.

முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையுடன் வாழும் பகுதிகளெல்லாம் ஒன்று சேர்ந்து பாகிஸ்தான் உருவாக்கப்படும் என்றும். முஸ்லிமல்லாதார் மிகுதியாக வாழும் பகுதிகளெல்லாம் ஒன்று சேர்ந்து இந்தியாவாக உருவாக்கப்படும் என்பதே ஆங்கிலேயர்களின் திட்டமாகும். சமஸ்தானங்களின் மகாராஜாக்கள் தங்களது பகுதிகளை இந்தியாவுடனோ, அல்லது பாகிஸ்தானுடனோ அவர்கள் ஆளும் பகுதியின் பூகோள, மக்களின் மத நம்பிக்கை மற்றும் விருப்பப்படி இணைப்பதற்கு அறிவுறுத்தப்பட்டார்கள்.

இதன்படி பெரும்பாலான சமஸ்தானங்கள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனே இணைந்தன. ஆனால் மூன்று மாகாணங்களின் மகாராஜாக்கள் மட்டும் தங்கள் பகுதியை இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணைப்பதைத் தவிர்த்து காலம் கடத்தி வந்தார்கள். இவர்களில் ஒருவர் ஜம்மு - காஷ்மீர் சமஸ்தானத்தின் மகாராஜா ஹரிசிங், மற்றவர் ஜுனேகாத் சமஸ்தானத்தின் (இன்றைய குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதி) மகாராஜா, இன்னொருவர் ஹைதராபாத் நிஜாம் ஆவார். இவர்கள் மூவரும் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ தங்கள் சமஸ்தானங்களை இணைப்பதை தள்ளிப் போட்டு வந்தனர்.
ஜம்மு - காஷ்மீர் சமஸ்தான மகாராஜா ஹரிசிங் இந்துவாக இருந்தார். ஆனால் அவரது சமஸ்தானத்தில் வாழ்ந்த மக்களின் பெரும்பான்மையானோர் முஸ்லிம்களாக இருந்தனர். ஜுனேகாத் ஆட்சியாளரான நவாப் முஸ்லிமாக இருந்தார் அவரது அட்சியின் கீழ் வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் ஹிந்துக்களாக இருந்தனர். இந்த இரண்டு சமஸ்தானங்களும் பூகோள ரீதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளுக்கு நடுவே அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணையவேண்டும் என்று சமஸ்தானங்களுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து நிர்ப்பந்தங்கள் வந்தன. இந்தியாவுடன் இணைவதற்கான இணைப்பு ஒப்பந்தங்களும் சமஸ்தானங்களின் அரசர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஜுனேகாத் மக்கள் தொகையில் 80 சதவிகிதத்தினர் ஹிந்துக்கள் ஆவர். ஆட்சியாளர் முஸ்லிமாவார். இந்தியாவுடன் இணைவதற்கான இணைப்பு ஒப்பந்த ஆவணத்தை இந்திய அரசின் மாநிலங்கள் துறை ஜுனேகாத் நவாபிற்கு அனுப்பி வைத்தது. நவாபிடமிருந்த எவ்வித பதிலும் வராததால், ஆகஸ்ட்,12. 1947ல் உடனடியாக இணைப்பு ஆவணம் குறித்து பதில் தருமாறு மத்திய அரசு கோரியது. இந்த ஆவணம் பரிசீலனையிலுள்ளது என்று ஜுனேகாத்தின் திவான் ஷா நவாஸ் பூட்டோ பதிலளித்தார். ஆகஸ்ட்,13ல் ஜுனேகாத்தில் குடிமக்கள் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இதற்கு இரண்டு நாள் கழித்து ஆகஸ்ட் 15 அன்று ஜுனேகாத்தின் ஆட்சியாளர் பாகிஸ்தானுடன் இணைவதாக அறிவித்தார்.

ஜுனேகாத் ஆட்சியாளரின் இம்முடிவு இந்தியாவிற்கு பேரதிர்ச்சியாக இருந்தது. பூகோள ரீதியில் ஜுனேகாத் இந்தியாவுடன் நெருங்கி இருந்த போதிலும், அதன் மக்கள் தொகையில் 80 சதவிகிதத்தினர் ஹிந்துக்களாக இருந்தும், ஜுனேகாத் மக்களில் பெரும்பான்மையானோர் இந்தியாவுடன் இணைப்பை விரும்பிய போதினும் ஜுனேகாத் பாகிஸ்தானுடன் இணைந்தது சமஸ்தான இணைப்பின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணாணது என்று பாகிஸ்தானிடம் இந்தியா புகார் கூறியது. இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவம் ஜுனேகாத்திற்கு அனுப்பப்பட்டது. பிறகு அங்கு வாழும் மக்கள் இணைய விரும்புவது இந்தியாவுடனா? அல்லது பாகிஸ்தானுடனா? என்பதையறிய மக்கள் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஜுனேகாத் மக்கள் இந்தியாவுடன் சேர பெருமளவில் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து ஜினேகாத் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

இந்தியா விடுதலையடைந்த போது இந்தியாவுடன் இணைய மறுத்த இன்னொரு சமஸ்தானம் ஹைதராபாத்தாகும். ஹைதராபாத் சமஸ்தானம் நிஜாமின் ஆட்சியின் கீழ் இருந்தது. அவரது குடிமக்களில் 88 சதவிகிதத்தினர் ஹிந்துக்களாவர். சுதந்திரம் பெற்ற தனிநாடாக வேண்டுமென்பது தான் நிஜாமின் விருப்பமாகும் மக்கள் விருப்பத்தை அறிய பிரிட்டிஷ் அதிகாரிகள் மூலம் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலையாகும். இதற்கு இத்திஹாதுல் முஸ்லிமின் என்ற முஸ்லிம்களின் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுடன் இணைவதற்கு நிஜாமும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இந்தியா தங்கள் சுயாட்சியில் தலையிடுவதாக ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலிடம் நிஜாம் புகார் செய்தார்.

செப்டம்பர் 1947ன் தொடக்கத்தில் ஹைதராபாத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டது. செப்டம்பர் 9ல் போலீஸ் நடவடிக்கை என்ற பெயரில் இந்திய படைகள் ஹைதராபாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. செப்டம்பர் 13ம் தேதி ஹைதராபாத் கலகத்தை இந்திய ராணுவம் அடக்கியது. நிஜாமின் அமைச்சரவை ராஜினாமா செய்தது. ஹைதராபாத் இந்தியாவுடன் இணைந்தது. இதன் பிறகு காஷ்மீர் மட்டுமே தீர்வு காணப்படாத பிரச்சினையாக இருந்தது.

நன்றி: ஒற்றுமை ஆகஸ்ட் 01-15,2001 இதழ்