Thursday, October 26, 2006

இஸ்லாம் மார்க்கத்தின் இறைத்தூதர்கள்!

இஸ்லாம் எனும் இறைமார்க்கம் ஆதி முதல் இறுதி வரை ஒரே இறைவனை வணங்கும் வழிபாட்டு முறையைத்தான் மக்களுக்கு போதித்து வந்தது. ஆதி (நபி) ஆதம் (அலை) அவர்களிலிருந்து, இறுதி நபி (நபி) முஹம்மது (ஸல்) அவர்கள் வரை மக்களுக்குப் பிரச்சாரம் செய்தது, ''ஒரே இறைவனை வணங்குங்கள்'' என்ற ஏகத்துப் பிரச்சாரத்தையே முன் வைத்தார்கள். இதில் எந்த இறைத்தூதரும் மாற்றம் செய்யவில்லை.

மனிதன் சுயமாக முயன்று இறைவனைப் பற்றியோ, இறைவழி பற்றியும் அறிந்து கொள்ள முடியாது என்பதால், அந்த மனிதர்களிலிருந்தே ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவரை இறைத்தூதராக நியமிக்கிறான் இறைவன்!

ஏக இறைவனை அறிந்து கொள்வதற்கும், அவனுக்குக் கீழ்படிந்து நடப்பதற்கும், இறைவனைப் பற்றிய உண்மைகள், மற்றும் அவனது தனித் தன்மைகள், அவனுக்கு விருப்பமான வழிமுறைகள், இவ்வுலக வாழ்க்கை - அதாவது பரீட்சை வாழ்க்கையின் வெகுமதியையும் அல்லது தண்டனையைப் பெறவிருக்கும் மறுமை வாழ்க்கையைப் பற்றியத் தெளிவான அறிவை - ஞானத்தைப் பெற்றிருக்க வேண்டும். இதை ஒவ்வொரு மனிதனும் சுயமாக முயற்சி செய்து இறைவனைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும் என்பது இயலாத காரியம். அப்படி இறைவனை அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடும் மனிதர்கள் எவரும் ஒரேக் கருத்தில் இல்லை, மாறாக இறைவனைப் பற்றிய ஒவ்வொரு தனி மனிதனின் கருத்தும் வெவ்வேறாகவே இருக்கிறது என்பது கண்கூடு.

தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களின் வழியாக வேதவெளிப்பாட்டின் (வஹீ) மூலம் மக்களுக்கு இறைச் செய்தியை சமர்ப்பிக்கும்படி இறைத்தூதர்களுக்கு கட்டளையிட்டான். ஒவ்வொரு சமுதாயத்துக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா இறைத்தூதர்களுக்கும் இது பொதுவாக இருந்தது. அதனால் உண்மையான இறைத்தூதர்களை அறிந்து கொள்ள வேண்டிய பொறுப்பும் பொதுமக்கள் மீது இருக்கிறது.

உண்மையான இறைத்தூதர்.
தன்னை இறைத்தூதர் என அறிமுகம் செய்து கொண்ட எவரும் உடனடியாக இவர் இறைத்தூதர்தான் என்று எற்றுக் கொள்ளப்படவில்லை. மாறாக இவர் உண்மையான இறைத்தூதர் தானா? எனச் சுண்டிப் பார்க்கப்பட்டார்கள், சோதிக்கப்பட்டார்கள், இதற்கான உரை கல்லாக முந்தைய வேதங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என முந்தைய இறை வேதங்களோடு உரசிப்பார்த்தும் ஏற்றுக் கொண்டார்கள். மறுத்தவர்கள் காழ்ப்புணர்ச்சியாலும், பகைமையினாலும் மறுத்தார்கள் என்பதற்கான சான்றுளையும் வரலாற்றில் காண முடிகிறது.

இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று அறிமுகம் செய்த போது மக்காவின் அனைத்து சமூக மக்களும் அதை எதிர்த்தார்கள். எதிர்த்தார்களென்றால் மிகக் கடுமையான வன்முறைச் செயல்களால் எதிர்த்தார்கள். முஹம்மது (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என அறிமுகம் செய்வதற்கு முன்பு உண்மையாளர், நேர்மையாளர் என்று முஹம்மது (ஸல்) அவர்களைப் போற்றி புகழ்ந்த அதே மக்காவாசிகள், முஹம்மது (ஸல்) அவர்கள் 40ம் வயதில் தம்மை இறைத்தூதர் என்று அறிமுகம் செய்து கொண்டபோது, இவர் பொய்யர், சூனியம் செய்யப்பட்டவர், இட்டுக்கட்டுபவர் என்றெல்லாம் சொல்லி மக்கா வாழ் சமூகத் தலைவர்கள், மற்றும் முக்கியஸ்தர்களால் புறக்கணிக்கப்பட்டார்கள். ஊர் விலக்கும் செய்யப்பட்டிருந்தார்கள். இப்படி 13 ஆண்டுகள் தொடர்ந்து வன்முறைச் செயல்களுக்கும், இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டார்கள்.

ஆனாலும் கொள்கையில் எந்த தளர்த்தலும் இல்லை. இதற்கிடையில் எதிரிகளால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விலை பேசப்பட்டார்கள் அப்போதும் கொண்ட கொள்கையில் எவ்வித
மாற்றமும் இல்லை என்று மறுத்து விட்டார்கள். மட்டுமல்ல இறைத்தூதர் (ஸல்) அவர்கள்...

பிறருக்கு என்ன போதித்தாரோ அதன்படி தாமும் வாழ்ந்து காட்டினார்!

தான் சொன்ன விஷயத்துக்கு மாறாக நடந்து கொண்டதாக சின்ன எடுத்துக் காட்டு கூட அவர் வாழ்வில் இல்லை!

அவரது சொல்லிலும் செயலிலும் எந்த விதமான மாறுதலும் இருந்ததில்லை!

அவர் மற்றவர்களின் நன்மைக்காகக் கஷ்டப்படுகிறார்!

தன் நலனுக்காக பிறரைக் கஷ்டப்படுத்தியதில்லை!

உண்மை, கண்ணியம், பரிசுத்த இயல்பு. உயர்வான சிந்தனை, மேலான மனிதத் தன்மை இவற்றின் முன்மாதிரியாக விளங்குகிறார்! இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். துருவித் துருவி ஆராய்ந்தாலும் அவரின் வாழ்வில் சிறு களங்கமும் காணப்படுவதில்லை! இப்படி 23 ஆண்டுகள் முரண்பாடு இல்லாத மனித குலத்துக்கே முன்மாதிரியான வாழ்க்கை நெறியை சொல்லாலும், செயலாலும் தானும் பின்பற்றி வாழ்ந்து காட்டினார்.

தனது பிள்ளைகளை அறிவது போல்...
கேஜி வகுப்பில் படிக்கும் தன் மகன், அல்லது மகளை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வரச் செல்லும் ஒரு தந்தை அங்கே எத்தனை லட்சம் குழந்தைகள் இருந்தாலும் சரியே! அந்தக் கூட்டத்தில் தன் பிள்ளையை அறிந்து கொள்வார். அதுபோல், கேஜி வகுப்பில் படிக்கும் தன் பிள்ளைக்கு உணவு கொண்டு செல்லும் ஒரு தாய், அங்கே எவ்வளவு குழந்தைகள் இருந்தாலும் தன் பிள்ளையை சரியாக அடையாளம் கண்டு, தன் பிள்ளைக்கே உணவை ஊட்டிவிட்டுத் திரும்புவார். அதாவது எவ்வளவு கூட்டத்திலும் தம் பிள்ளைகளை அடையாளம் கண்டு கொள்வதில் எந்தப் பெற்றோருக்கும் எவ்வித சிரமும் இருக்காது.

பெற்றோர்கள் தன் பிள்ளைகளை அறிவது போன்றே முஹம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்பதையும் அறிந்திருந்தார்கள். அவர்களை நோக்கி திருக்குர்ஆன் இப்படிப் பேசுகிறது...

''நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தம் பிள்ளைகளை அறிவதைப் போன்று இவரை அறிவார்கள். ஆயினும், அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கிறார்கள்''. (திருக்குர்ஆன், 002:146)

பெரும் மக்கள் வெள்ளத்திலும் தன் மகனைக் காணும் ஒருவர், அவன்தான் தன் மகன் என்பதை எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் அறிந்து கொள்வார். அப்படி தனது பிள்ளைகளை அறிவது போன்று, முஹம்மது அவர்களையும் நபியென்று முந்தைய வேதக்காரர்கள் அறிவார்கள் என்று இங்கு சொல்லப்படுகிறது. முந்தைய வேதம் வழங்கப்பட்டவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள், இறைத்தூதர் என்பதை மிகச் சரியாக அறிந்து கொண்டார்கள் என்பதற்கான சான்றுகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

...''அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கிறார்கள்''

இது எந்த அளவுக்கு உண்மையான வார்த்தைகள் என்பதற்கு, முஹம்மது அவர்களை ஒரு இறைத்தூதர் என்று நன்கு அறிந்திருந்தும், ஒரு பிரிவினர் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்களை எதிரியாகக் கருதி பகைமைப் பாராட்டி வந்தார்கள் என்பதற்கு ஒரு வரலாற்றுச் சான்று...

''நான் எனது தந்தைக்கும், தந்தையின் சகோதரருக்கும் பிரியமான பிள்ளையாக இருந்தேன். அவர்களின் மற்ற பிள்ளைகளுடன் நான் இருந்தால் அவர்கள் என்னையே தூக்கிக் கொஞ்சுவார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்து குபாவில் அம்ர் இப்னு அவ்ஃப் கிளையாரின் வீட்டில் தங்கினார்கள். அப்போது அதிகாலையிலேயே எனது தந்தை ஹை இப்னு அக்தபும், தந்தையின் சகோதரர் அபூ யாஸிர் இப்னு அக்தபும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று சூரியன் மறையும் வரை பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் வீடடிற்குத் திரும்பும் பொழுது முகம் வாடியவர்களாக, களைத்தவர்களாக, சோர்ந்தவர்களாக வந்தார்கள். எப்போதும் போல உற்சாகத்துடன் நான் அவர்களிடம் ஓடி வந்தேன், ஆனால் அவர்களுக்கு ஏற்பட்டிருந்த கவலையினால் அவர்களில் எவரும் என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை.

சிறிய தந்தை: ''இவர் அவர்தானா?'' (அதாவது நாம் இப்போது சந்தித்தவர் நமக்கு தவ்ராத்தில் இறுதித்தூதர் என்று அறிவிக்கப்பட்டவர்தானா?)

எனது தந்தை: ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஆம்!''

சிறிய தந்தை: ''அவரை உமக்கு நன்றாகத் தெரியுமா? உன்னால் அவர்தான் என்று உறுதியாகக் கூறமுடியுமா?''

எனது தந்தை: ''ஆம்!''

சிறிய தந்தை: ''அவரைப் பற்றி உனது உள்ளத்தில் என்ன இருக்கிறது?''

எனது தந்தை: ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உயிரோடு இருக்கும் காலம் வரை அவரிடம் பகைமைக் கொள்வேன்''


உம்முல் முஃமினீன் ஸஃபியா (ரலி) அவர்கள் யூதராக இருந்த தனது தந்தை ஹை இப்னு அக்தபின் மன நிலையைப் பற்றி இவ்வாறு விவரிக்கிறார்கள். (நூல், இப்னு ஹிஷாம்)

உம்முல் முஃமினீன் ஸஃபியா (ரலி) அவர்களின் தந்தையாகிய ஹை இப்னு அக்தபுக்கும், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் ஏதாவது பங்காளித் தகராறு இருந்ததா? அல்லது கொடுக்கல் வாங்கலில் ஏதாவது பிரச்சனையா? இது எதுவுமே இல்லாமல், முஹம்மது (ஸல்) அவர்களை இதற்கு முன்னால் பார்த்திருக்கக்கூட இல்லை. அன்றுதான் மதீனாவுக்கு வந்திருக்கிறார்கள். முஹம்மது (ஸல்) அவர்கள் மதீனா வந்த அன்றே அவர்களை சந்தித்து பேசியதில் முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு இறைத்தூதர் என்பதை சந்தேகத்திற்கிடமில்லாமல் தெரிந்து கொள்கிறார்.

முஹம்மது (ஸல்) அவர்கள், ஒரு இறைத்தூதர் என்பதற்காக மட்டுமே ''நான் உயிரோடு இருக்கும் காலம் வரை அவரிடம் பகைமை கொள்வேன்'' என்று ஹை இப்னு அக்தபு கூறுகிறார் என்றால் அவருடைய மன நிலையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எவ்விதக் காரணமுமின்றி இது போன்ற பகைவர்கள் இன்னும், இன்றும் இருந்து கொண்டிருக்கிறார்கள். இனியும் இருக்கத்தான் செய்வார்கள்.

இறைத்தூதரை உண்மைப்படுத்தும் முந்தைய இறைத்தூதர்.

''இஸ்ராயீல் மக்களே! நான் உங்களுக்கு அனுப்பட்ட அல்லாஹ்வின் தூதர்! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும் எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹ்மத்' என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்'' என்று மர்யமின் குமாரர் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக.. (திருக்குர்ஆன், 061:006)

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வருகையைப் பற்றி முந்தைய இறைத்தூதர்களால், முந்தைய வேதங்களில் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டு, அந்த முன்னறிவிப்பின் காரணமாக, முஹம்மது நபி அவர்களை ஏற்றுக் கொள்வதில் முதன்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக அன்றைய தாயகமான எகிப்து, பாலஸ்தீன பகுதியிலிருந்து யூதர்கள், ''தய்யிபா என்ற மதீனா'' நகரில் குடியேறினார்கள். அவ்வாறு குடியேறியவர்களின் வாரிசுகளில் பலர், முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து, மதீனா வந்தபோது அவர்களை இறைத்தூதராக ஏற்றுக் கொண்டனர். சிலர் இறைத்தூதர் என அறிந்து கொண்டே முஹம்மது (ஸல்) அவர்களை மறுத்தனர்.

இறைத்தூதர் என எற்றுக் கொண்டவர்களும், முஹம்மது (ஸல்) அவர்களை ஒரு இறைத்தூதர் என்பதை உண்மைப்படுத்தினார்கள். ஒரு சாரார், இறைத்தூதர் என்பதை அறிந்து கொண்டதாலேயேயும் அவர்களைப் புறக்கணித்து, முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு இறைத்தூதர் என்பதை உண்மைப்படுத்தினார்கள். புறக்கணித்தவர்கள் தங்களை மேட்டுக் குடியினர் என்று சுயப் பிரகடனப்படுத்திக் கொண்டதால் அந்த உயர்குடியில்தான் தூதர்கள் வருவார்கள் என நம்பிய இறுமாப்பினால் அறிந்து கொண்டே மறுத்தனர்.

இன்றைய முஸ்லிம்கள்.
இன்றைய முஸ்லிம்கள், முஹம்மது (ஸல்) அவர்களை இறைத்தூதர் என்று நம்புகிறார்கள் என்றால் அது நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமல்ல. மாறாக முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு இறைத்துதூதர் என்பதற்கான வலுவான சான்றுகள் இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேல் எந்த சான்றுகளும் ஒரு முஸ்லிமிற்கு அவசியமில்லை! முஹம்மது நபி இறுதி இறைத்தூதர் என்பதால் இதன் பிறகு எந்த நபியின் வருகையும் இல்லை என உறுதியாகி, இன்றைய முஸ்லிம்களுக்கு இனியொரு நபியை அடையாளம் காணும் அவசியமும் இல்லாமல் போய் விட்டது.

உலக முடிவு நாள் நெருக்கத்தின் அடையாளமாக ''தஜ்ஜால்'' (கிறிஸ்தவ மதத்தினர் ''அந்தி கிறிஸ்து'') எனும் வழிகெடுப்பவன் தோன்றுவான் என்று அவனைப் பற்றி எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கின்றன இதுவும், இது போன்ற இன்னும் பல அடையாளங்களையும் தெரிந்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களை இஸ்லாம் அறிவிக்கின்றது. இவைகளே இன்றைய முஸ்லிம்களும், உலக முடிவு நாள்வரை வரவிருக்கும் முஸ்லிம்களும் மிக முக்கியமாக அறிந்து கொள்ள வேணடிய விஷயங்களாகும். இது தவிர, ஏற்கேனவே இறைத்தூதரை நம்பிக்கைக் கொண்டவர்களைப் பார்த்து, ''நீங்கள் இறைத்தூதரை எப்படி அறிந்து கொள்வீர்கள்?'' என்று கேட்பது மிகவும் அபத்தமானது.

இதற்காக, ''நீங்கள் இயேசு கிரிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.'' என்று சொல்வதும் அறியாமை!

நன்றி!
அன்புடன்,
அபூ முஹை

Thursday, October 12, 2006

இறைவன் மன்னிக்காத குற்றம்.

மனித குலத்துக்கு வழி காட்டியாக ஏக இறைவனால் அருளப்பட்ட மார்க்கம் இஸ்லாமென்பது, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களின் நம்பிக்கை. ஏக இறைவனை ஏற்று, அவன் வழி காட்டியாகத் தேர்ந்தெடுத்த இறைத்தூதர்களையும் நம்பிக்கை கொண்டு அவர்களைப் பின்பற்ற வேண்டும். என்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை!

இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கையை வாழ்க்கை நெறியாக் கொண்டவர்கள் ''முஸ்லிம்கள்'' என்றும், இஸ்லாத்தின் கொள்கையை ஏற்காதவர்கள் ''காஃபிர்கள்'' அதாவது, இஸ்லாத்தை நிராகரித்தவர்கள் - மறுத்தவர்கள் என்றும் இஸ்லாம் குறிப்பிடுகிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள், இஸ்லாத்தின் சட்டங்களைப் பின்பற்றிச் சரியாக உலக வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அதற்குப் பகரமாக மறுமையில் சொர்க்கத்தை வழங்குவதாக இறைவன் வாக்களித்திருக்கிறான்.

இஸ்லாம் மார்க்கத்தை நிராகரித்தவர்கள் - மறுத்தவர்கள் இஸ்லாத்தின் கட்டளைகளைப் புறக்கணித்து, தங்கள் மனோ இச்சைகளைப் பின்பற்றி இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொண்டதால் இவர்கள் இறைவனை நிராகரித்தவர்கள் என்பதால் மறுமையில் தண்டனை பெறுவார்கள் என்பதையும் இறைவன் வாக்களித்திருக்கிறான்.

இஸ்லாத்தை ஏற்று அம்மார்க்கத்தை சரியாகப் பின்பற்றியவர்களுக்கு பரிசாக சொர்க்கமும், இஸ்லாத்தை நிராகரித்தவர்களுக்கு தண்டனையாக நரகமும் வழங்கப்படும் என்று எவ்வித ஒளிவு, மறைவு இல்லாமல், வெளிப்படையாக இஸ்லாம் இவ்வாறு கூறுகிறது. இதில் யாருக்காகவும், எதற்காகவும் எவ்வித சலுகையும் இல்லை. எனவும் உலக மக்கள் முன் இவ்வாறு பிரகடனப்படுத்துகிறது.

இது பற்றி திருக்குர்ஆன் வசனங்களிலும், நபிமொழிகளிலும் சொல்லப்பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் இந்த ஆதாரங்களை எடுத்துக் கொண்டு, ''இஸ்லாத்தை ஏற்காதவர்களையெல்லாம் இஸ்லாம் மறுமையில் தண்டிப்பதாகச் சொல்கிறது பாருங்கள்'' என விமர்சிக்கின்றனர். திருக்குர்ஆன் முழுவதையும் மறுக்கும் இவர்கள் சில வசனங்களை மட்டும் நம்புகிறார்களா? ஆச்சரியந்தான்!

இறைவன் மன்னிக்காத குற்றம்.
ஏக இறைவனை மறுத்தவர்கள், பல கடவுட்க் கொள்கையுடைவர்கள் இவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்று இஸ்லாம் பார்க்கவில்லை. ''இறைவனுக்கு இணை கற்பித்தவர்கள்'' என்ற வட்டத்திற்குள் ஒன்று சேர்த்து, இவர்கள் செய்த நன்மைகளும், தீமைகளும் மறுக்கப்படுகிறது. ஏக இறைவனுக்கு இணை வைத்தவர்களின் செயல்பாடுகளை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக மறுத்து விடுகிறான் - இணை வைத்தவர்கள் ஏக இறைவனை மறுத்தது போல!

இறைவனுக்கு இணையாக எதையும் எவரையும் வணங்கக்கூடாது! இஸ்லாம் இந்தக் கொள்கையை அடிப்படையாக நிறுவியுள்ளது. ஓரிறைக் கொள்கையின் அஸ்திவாரத்தின் மீது இஸ்லாம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஓரிறைக் கொள்கையைப் புறக்கணித்தவர்கள், இறைவனால் புறக்கணிக்கப்படுவார்கள் எனும் போது அவர்களின் நன்மைகள், தீமைகள் கணக்கிடப்பட வேண்டும் என்பதும் அர்த்தமற்றதாகும்.

ஏக இறைவனை ஏற்க மாட்டோம், ஆனால் நல்லவன், கெட்டவன் என்ற கோணத்தில் இறைவன் தீர்ப்பளிக்க வேண்டும் என்பது முரண்பாட்டின் மொத்த உருவமாக இருக்கிறது. இஸ்லாம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை! இறைவனுக்கு இணை கற்பிப்பதை, பெரும் பாவங்களின் வரிசையில் முதல் இடத்தில் இஸ்லாம் நிறுத்தியுள்ளது.

''நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிப்பதை மன்னிக்க மாட்டான்அதற்கு கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்கிறார்.'' (திருக்குர்ஆன், 004:048,116)

''அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.'' (திருக்குர்ஆன், 004:116)

லுக்மான் தம் புதல்வருக்கு, நல்லுபதேசம் செய்யும் போது '' என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மாபெரும் அநீதியாகும்'' என்று கூறியதை நினைவூட்டுவீராக! (திருக்குர்ஆன், 031:013)

''அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான்.'' (திருக்குர்ஆன், 005:72)

ஏக இறைவனுக்கு இணை வைக்கும் செயல்பாடுகளை:- பெரும் பாவம், வழிகேடு, மாபெரும் அநீதியாகவும் இறை வசனங்கள் குறிப்பிடுகிறது. இறைவனுக்கு இணை கற்பிக்கும் எவரும் மன்னிக்கப்பட மாட்டார், இணை கற்பித்தவருக்கு சொர்க்கம் விலக்கப்பட்டுள்ளது என்பதும் இறைவனின் வாக்கு!

முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதவர்களுக்கும்.
எவர் இறைவனுக்கு இணை கற்பிக்கின்றாரோ அவருடைய நல்லறங்கள் அழிந்து விடும், அவர் நஷ்டமடைந்தவராவார். இதற்கு முஸ்லிம், முஸ்லிமல்லாதோர் என விதி விலக்கு இல்லை!

''இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தனது அடியார்களில் தான் நாடியோரை, இதன் மூலம் நேர்வழி காட்டுகிறான். (பின்னர்) அவர்கள் இணை கற்பித்தால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்.'' (திருக்குர்ஆன், 006:088)

''நம்பிக்கை கொண்ட பின்னர் மறுத்து, பின்னர் (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரின் மன்னிப்பு ஒரு போதும் எற்கப்படாது. அவர்களே வழி தவறியவர்கள்.'' -

- (ஏக இறைவனை) ''மறுத்து, மறுத்தவராகவே மரணித்தவர்கள் பூமி நிரம்பும் அளவுக்குத் தங்கத்தை ஈடாகக் கொடுத்தாலும் அது ஏற்கப்படாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. அவர்களுக்கு உதவுவோர் யாருமில்லை.'' (திருக்குர்ஆன், 003:090,091)

இறைத்தூதர்களுக்கும் இதே எச்சரிக்கை!

''நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!'' என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065,066)

இறைவனுக்கு இணை கற்பிப்பவர் அவர் எந்த மதத்தவராக இருந்தாலும், அவரின் நல்லறங்கள் - நன்மைகள் அழிக்கப்படும் என்று சொல்லி, இதில் இறைத்தூர்களுக்கும் எவ்வித சலுகையும் வழங்கவில்லை என ஆணித்தரமாக இறைச் சட்டங்களைப் பதித்துள்ளது இஸ்லாம்.

அன்புடன்,
அபூ முஹை

Monday, October 09, 2006

இறைவனின் நியதிகள்!

இஸ்லாம் மார்க்கத்தை இறைவன் தேர்ந்தெடுத்து, இறைத்தூதர்களின் வழியாக ஆன்மீகப் போதனைகள் மக்களுக்குப் பிரச்சாரம் செய்யப்பட்டது. இறை வழிகாட்டியாக, இறைத்தூதர்கள் கொண்டு வந்த வேதங்களில் ''முந்தய வேதங்கள் ஏன் பாதுகாக்கப்படவில்லை?'' என்ற கேள்விக்கு ''திருக்குர்ஆன் மட்டும் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்?'' என்ற தலைப்பில் விளக்கம் எழுதியிருந்தோம்.

சகோதரர் எழில் என்பவர் நாம் எழுதிய விளக்கத்தைப் படித்து விட்டு இறைவனுக்கு அறிவுரை வழங்கும் சில கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார். பொதுவாக கடவுளைப் படைப்பவர்களுக்கு கடவுளுக்கே அறிவுரை சொல்வது பெரிய விஷயமில்லை. அதை அவர் ஏற்றுக் கொண்டிருக்கும் மதம் ஆதரிக்கிறது. ஆதரிக்கட்டும் அதிலே நமக்கு ஆட்சேபனை எதுவுமில்லை! அவர் பதித்துள்ளக் கருத்துக்களைப் பார்ப்போம்.

திருக்குர்ஆன் மட்டும் ஏன் பாதுகாக்கப்படுகிறது? என்ற விளக்கத்திற்கு எதிர் கருத்துக்கள்...
****************************************************
//இந்த காரணத்தைப் பார்ப்போம்.

அல்லாவுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது என்று வைத்துக்கொள்வோம்.
அதனால் சீரழிக்கப்பட்டபின்னர் அதனை சரிக்கட்ட இன்னொரு இறைதூதரை அனுப்ப வேண்டிய நிலைக்கு வருகிறார்.
ஆனால், அல்லா எல்லாம் அறிந்தவர் என்றே கூறப்படுகிறது.

அல்லா எதிர்காலம் அறிந்தவர் என்று வைத்துக்கொள்வோம்.

எதிர்காலம் அறிந்த அல்லா, இது போல மனிதர்களின் சொந்தக்கருத்து திணிக்கப்பட்டு தான் அனுப்பிய வேதம் சீரழிக்கப்படும் என்று தெரிந்தவராகவே இருப்பார். ஆனால், அல்லா அதனை ஒன்றும் தடுக்கவில்லை. சீரழிக்கப்படக்கூடாது என்று உண்மையிலேயே அல்லா விரும்பியிருந்தால், எல்லாம் வல்ல அல்லாவால் அந்த பழைய வேதங்கள் சீரழிக்கப்படாமல் தடுக்க முடிந்திருக்கும். ஆனால் அவர் அதனை செய்யவில்லை. ஆகவே சீரழிக்கப்பட்டதற்கு அல்லாவே காரணம் என்று கூறலாம்.

ஆகவே இவ்வாறு வேதங்கள் மாற்றப்பட்டதற்கு அந்த வேதங்களை பின்பற்றுபவர்களை குறை சொல்வது முட்டாள்த்தனம்.//

****************************

//ஏன் ஒரு காலத்தில் விலக்கி வைக்கப்பட்டவை பின்னர் அனுமதிக்கப்பட வேண்டும்? அல்லது முன்னர் அனுமதிக்கப்பட்டவை ஏன் பின்னர் விலக்கி வைக்கப்பட வேண்டும்? இந்த பிரச்னையை விவாதம் இல்லாமல் முந்தைய வேதத்திலேயே தெளிவாக குறிப்பிட்டு விடலாமே? அதாவது, இந்த வருடத்திலிருந்து இந்த வருடம் வரைக்கும் இதனை பின்பற்றுங்கள். இந்த வருடத்திலிந்து இந்த வருடம் வரைக்கும் இதனை பின்பற்ற வேண்டாம். இந்த ஊரில் இருந்தால், இதனை பின்பற்றவேண்டாம் என்று முதலாவதாக கொடுத்த வேதத்திலேயே சுத்தமாக எழுதி வைத்துவிட்டு அந்த வேதத்தை மக்கள் சீரழிக்காமல் பார்த்துக்கொண்டிருக்கலாமே?//

*****************************

//மிகச்சரி. ஆனால், இது ஆட்சியாளராக வெவ்வேறு நபர்கள் வருவதால் நடக்கிறது. ஆனால், உலகத்து மக்களுக்கு வாழும்முறை எழுதித்தரும் அல்லா, ஒரே மாதிரியான மாற்றமில்லாத வேதத்தை கொடுத்து அதனை பாதுகாத்திருக்கலாமே?//
*******************************

//மாற்றமில்லாத ஒரே ஒரு வேதத்தை எந்த இறைதூதர் இடையூறும் இல்லாமல் ஒரு புத்தகத்தில் எழுதி, அதனை யாரும் எபோதும் படித்துக்கொள்ளலாம் என்று மனிதர்களின் மூளையில் மாற்றமுடியாதபடி செருகி விட்டால், இந்த இறைதூதர் பிரச்னையே இல்லையே? இறைதூதர் இப்படி நடந்துகொண்டார் அதனால் இந்த வேதம் சரியல்ல என்று மக்கள் கூற எந்த விதமான காரணமும் இல்லாமல், எல்லோரும் சரியாக தெரிந்துகொண்டிருப்பார்களே!// - எனக்குத் தேவையில்லாத வேலை.

********************************

//நிச்சயம். முழுமையடைந்த வேதமாக ஒரே ஒரு வேதத்தை கொடுத்து, அதிலேயே இந்த வருடத்திலிருந்து இந்த வருடம் வரைக்கும் இதனை பின்பற்றுங்கள் என்று எழுதிக்கொடுத்திருந்தால், பிரச்னையே இல்லையே! இன்று ஒவ்வொரு இறைதூதரின் பின்னால் நிற்பவர்களுக்கும் பின்னால் வந்த இறைதூதரை இறைதூதர் என்று ஒப்புக்கொள்ளமாட்டேன் என்றும் அல்லது அதனைப் பற்றி விவாதம் செய்வதற்கும் இடமில்லாமல் போயிருக்குமே!//

**********************************

இறுதி வேதம் என்று குரான் மட்டுமே தன்னைத்தானே அழைத்துக்கொள்கிறது. அதனை நிரூபிக்க எந்த விதமான external references or proof இல்லை. இதனைப் போல எந்த புத்தகமும் தன்னைத்தானே குறிப்பிட்டுக்கொள்ளலாம். இந்த பிரச்னையைத் தீர்க்கும் வழி அல்லாவுக்கு புலப்படவில்லையா?//
//இதனை முன்னமே செய்திருக்கலாம்!//

***********************************

பொதுவாக, ''அனைத்தையும் அறிந்தவன் இறைவன்'' என்றால் எல்லாக் காலத்திற்கும் பொருந்துகிற மாதிரி சட்டங்களைக் கொண்ட - முழுமை பெற்ற ஒரே வேதமாக வழங்கிருக்கலாமே, அப்படி ஏன் செய்யவில்லை? இதைத்தான் மேலேயெழுப்பியுள்ள கருத்துக்களின் சராம்சம்.

இனி விஷயத்துக்கு வருவோம்.

இன்று கோடான கோடி முஸ்லிம் சமுதாயத்துக்கு வழங்கியிருக்கும் இதே சட்டம்தான், ஆண், பெண் என ஒரேயொரு ஜோடியாக இருந்தவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது முட்டாள்தனம்.

முதல் மனிதராகவும், முதல் நபியாகவுமிருந்த ஆதாமிற்கும், அவருடைய மனைவி ஏவாளுக்கும் வழங்கப்பட்ட சட்டம், இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என்பது அடி முட்டாள்தனம்.

முதல் நபி, இறுதி நபி, இந்த இரு நபிகளுக்குமிடையே - எவ்வளவு கால வித்தியாசங்கள். இதற்கிடையில் எத்தனை இறைத்தூதர்களின் வருகைகள் - காலத்திற்கேற்ப சட்டங்களை ரத்து செய்யப்பட்டும், புதிய சட்டங்கள் சேர்க்கப்பட்டும் வேதங்களை வழங்கி, சூழ்நிலைக்குத் தக்கவாறு இறைச் சட்டங்களை மக்களுக்கு அறிவிக்க, இறைத்தூதர்களைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தது ''இறைவன் அனைத்தையும் அறிந்தவன்'' என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

தனி மனிதர், ஒரு குடும்பம், ஒரு கூட்டம், ஒரு ஊர், ஒரு தேசம், பிறகு உலகம் இப்படித்தான் இறைச் சட்டங்கள் விரிவாக்கப்பட்டன. படிப்படியாகத்தான் விரிவாக்கப்பட வேண்டும். அதுதான் அனைத்தையும் அறிந்தவன் வகுத்த சட்டங்களாக இருக்க முடியும். மண்ணுலகில் ஒரு தனி மனிதர் ஒரு குடும்பம் மட்டும் இருக்கும் போது அங்கு ஆட்சியின் சட்டங்கள் அவசியமில்லை.

முதல் மனிதரும், முதல் நபியுமான ஆதாம் (அலை) அவர்களின் நேரடி முதல் சந்ததிகளுக்கு சகோதரியைத் திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த அனுமதி அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தால் மனித இன மறு உற்பத்தி ஏற்படாமல் அழிந்து போய் விடும் என்பதால் சகோதரியைத் திருமணம் செய்வது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. மனித இனம் பெருகியபோது இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டு, திருமண உறவில் மாற்றங்கள் செய்யப்பட்டது.

மனிதனில் பலம், பலவீனம் இதை அடிப்படையாகக் கொண்டே முன்பு அனுமதிக்கப்பட்ட இறைச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, சட்டங்கள் இலகுவாக்கப்பட்டன. மூஸா (அலை) அவர்களின் சமூகத்திற்கு ஒரு நாளைக்கு 50 நேரத் தொழுகைகள் கடமையாக்கப்பட்டிருந்தன. 50 நேரத் தொழுகையைக் குறைத்து, முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு ஒரு நாளைக்கு 5 நேரத் தொழுகையாகக் கடமையாக்கப்பட்டது.

காரணம் மனிதனின் பலவீனம். இன்றைய மனிதன் ஒரு நாளைக்கு 24மணி நேரம் போதவில்லை என்று சொல்லுமளவுக்கு அவசர உலகில் வாழ்ந்து வருகிறான். முந்தய சமுதாயத்துக்கு கடமையாக்கப்பட்ட 50 நேரத் தொழுகையே இவனுக்கும் கடமையாக்கப்பட்டால் நிறைவேற்ற இயலாது. முந்தய சமுதாயத்திலிருந்து பிந்தய சமுதாயங்கள் அனைத்து உலக விஷயங்களிலும் வேறுபாடுவார்கள் என்பதால் எல்லாக் காலங்களிலும், எல்லா சமுதாயத்துக்கும் ஒரே சட்டம் என்பது அனைத்தையும் அறிந்த இறைவனால் வகுத்த இறைச் சட்டமாக இருக்க முடியாது.

இஸ்லாம், எக்காலத்திலும் ஓரிறைக் கொள்கையில் எந்த மாற்றம் செய்திருக்கவில்லை. மனித வாழ்க்கை நெறியின் சட்டங்களில் சில சீர்திருத்தங்களைச் செய்தது, ஓரிறைக் கொள்கைக்கு எந்த விதத்திலும் பங்கம் எற்படுத்தியதாகாது!

//இறுதி வேதம் என்று குரான் மட்டுமே தன்னைத்தானே அழைத்துக்கொள்கிறது. அதனை நிரூபிக்க எந்த விதமான external references or proof இல்லை. இதனைப் போல எந்த புத்தகமும் தன்னைத்தானே குறிப்பிட்டுக்கொள்ளலாம். இந்த பிரச்னையைத் தீர்க்கும் வழி அல்லாவுக்கு புலப்படவில்லையா?// - மீண்டும் ஒரு அறியாமையின் வெளிப்பாடு!

அனைத்தையும் அறிந்த அல்லாஹ்வின் வார்த்தைகள் அடங்கிய வேதப் புத்தகம் திருக்குர்ஆன்! உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் திருக்குர்ஆன் தான் வேதவாக்கு! அதற்கு மேல் உயர்வான ஒரு வாக்கும் இல்லை, என்பதும் முஸ்லிம்களின் ஆழமான, அசைக்க முடியாத நம்பிக்கை!

திருக்குர்ஆனை நிராகரித்தோரை அது எச்சரிப்பதோடு நிறுத்திக் கொள்கிறது. நிர்ப்பந்தம் செய்து எவரையும் நம்பிக்கைக் கொள்ளச் சொல்லவில்லை. திருக்குர்ஆன் இறுதி வேதம் என்பதற்கு திருக்குர்ஆனை விட வேறு சான்றுகள் முஸ்லிம்களுக்குத் தேவையில்லை!

இறைவனின் நியதி!
அனைத்தையும் அறிந்த இறைவன், தனக்கென சில நியதிகளை வகுத்துக் கொண்டிருக்கிறான். இறைவன் தனக்குத் தானே விதித்துக் கொண்ட அந்த நியதிகளை எவருக்காகவும் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

அன்புடன்,
அபூ முஹை

Friday, October 06, 2006

திருக்குர்ஆன் மட்டும் ஏன் பாதுகாக்கப்படுகிறது?

இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி வேதமாகிய திருக்குர்ஆன் பாதுகாக்கப்படுவது போல், திருக்குர்ஆனுக்கு முந்தய வேதங்களும் ஏன் பாதுகாக்கப்படவில்லை?



//பல நபிகள் மூலமாய் பல கட்டளைகள் இறைவனால் கொடுக்கப் பட்டும் அவைகள் பல மாற்றங்கள் பெற்றமையால் இறுதி வேதமாக முகம்மது மூலமாய் இப்போதைய குரான் இறக்கப் பட்டதல்லவா; இந்த வேதம் இதுவரை மாறாமல் காக்கப் பட்டது போல் மற்றைய முந்திய வேதங்களையும் இறைவன் காத்திருக்கக் கூடாதா; முடியாதா? பின் ஏன் அப்படி நடக்கவில்லை?//- தருமி.

கேள்விக்கான விளக்கம்.
ஒவ்வொரு இறைத்தூதரின் மறைவுக்குப் பின்னும் அவர்கள் கொண்டு வந்த வேதங்கள், அவற்றைப் பின்பற்றுபவர்களாலேயே மறைக்கப்பட்டது. மறைக்கப்பட்டது மட்டுமல்ல, வேதத்தைப் பெற்றிருந்த அறிஞர்களால் அவர்களின் சொந்தக் கருத்தும் வேதமெனத் திணிக்கப்பட்டு அதுவும் வேதத்தில் உள்ளதுதான் என மக்களுக்கு போதிக்கப்பட்டது. இதை சரிசெய்வதற்காக இன்னொரு இறைத்தூதரின் வருகை அவசியமாயிற்று இது ஒரு காரணம். (இது பற்றி இன்னும் விரிவாக ''யூத, கிறிஸ்தவ மதங்களின் தழுவலா இஸ்லாம்? என்ற பகுதியில் இடம்பெறும் இன்ஷா அல்லாஹ்)

இறைத்தூதர்கள் வேதங்களைக் கொண்டு வரும்போதும் பழைய வேதங்களை உள்ளடக்கியும், அதைத் தொடர்ந்து புதிய சட்டங்களை சேர்த்தும் அனுப்பப்பட்டார்கள். உதாரணமாக:

3:50. ''எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன், ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், என்னைப் பின் பற்றுங்கள்.'' (இறைத்தூதர்களின் மீள் வரவின் காரணத்தை மேலும் பல திருக்குர்ஆன் வசனங்களிலிருந்து விளங்கலாம்)

முந்தய வேதத்தை உண்மைப்படுத்த வந்த இயேசு எனும் ஈஸா (அலை) அவர்கள் முன்பு விலக்கப்பட்ட சிலவற்றை நீக்கி புதிய சட்டங்களை சேர்க்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டார். இப்பொழுது - தவ்ராத் வேதத்தையும் உள்ளடக்கி அதோடு புதிய சட்டங்களையும் சேர்த்து இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் கொண்டு வந்த - இன்ஜீல் எனும் வேதம் பின்பற்றத்தக்கது. ஏனென்றால் தவ்ராத் எனும் வேதத்தோடு புதிய இறைச் சட்டங்கள் இன்ஜீல் எனும் வேதத்தில் இறைத்தூதர் இயேசு (அலை) அவர்களால் சேர்க்கப்பட்டன.

''இன்று (மோசே எனும்) மூஸா (அலை) அவர்கள் உயிரோடு இருந்தாலும் என்னைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை'' என்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

நபி மூஸா (அலை) அவர்களே முஹம்மது நபியைத்தான் பின்பற்ற வேண்டும் என்பது முன் சென்ற நபிமார்களைப் பின்பற்றியே புதிய சட்டங்களுடன் பிந்திய நபியின் வருகை இருந்ததால் இந்த இறைத்தூதர் கொண்டு வரும் சட்டங்களே பின்பற்றப்பட வேண்டும் என்பதே இங்கு வலியுறுத்தப்படுகிறது. விளங்கிக் கொள்ள:

ஏற்கெனவே ஆட்சி செய்து வந்த ஆட்சியாளர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, புதிய ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்து, புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தினால், பழைய ஆட்சியை ஆதரித்த குடிமக்களும் அதற்குக் கட்டுப்பட வேண்டும், பழைய ஆட்சியாளர்களும் புதிய அரசின் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும்.

இறைச் செய்தியை அறிவித்து இறைத்தூதராக வாழ்ந்து, வழிகாட்டிய ஒரு நபியின் மறைவுக்குப்பின் அந்த சமுதாயம், அடுத்த இறைத்தூதர் வரும்வரை மறைந்த இறைத்தூதரையேப் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளார்கள். மீண்டும் இறைத்தூதரின் வருகை அவசியமென இறைவன் தீர்மானித்து அடுத்த இறைத்தூதரை நியமிக்கிறான். அதுவரை மறைந்த இறைத்தூதரைப் பின்பற்றியவர்கள் இப்போது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த இறைத்தூதரைப் பின்பற்ற வேண்டும். இதைத்தான் மறைந்த இறைத்தூதர்களும் தமக்குப்பின் வரவிருக்கும் இறைத்தூதரைப் பின்பற்றும்படியும் அறிவித்தார்கள்! மக்களும் அடுத்த இறைத்தூதரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் என்பதை வரலாற்றில் அறிந்து கொள்கிறோம்.

//இந்த வேதம் இதுவரை மாறாமல் காக்கப் பட்டது போல் மற்றைய முந்திய வேதங்களையும் இறைவன் காத்திருக்கக் கூடாதா; முடியாதா? பின் ஏன் அப்படி நடக்கவில்லை?//

முந்தய வேதங்களையும் இறைவனால் பாதுகாக்க முடியாதா? என்றால் இறைவனால் அது முடியாத காரியமில்லை! ஆனால் அதற்கான அவசியமில்லை. அடிப்படைக் கொள்கை நீங்கலாக, வணக்க வழிபாடுகளிலும், வாழ்க்கை நெறிகளிலும் சில மாற்றங்களுடன் ஒவ்வொரு இறைத்தூதர்களும் வேதங்களைக் கொண்டு வந்தார்கள். முழுமையடைந்த வேதம் மட்டுமே பாதுகாக்கப்பட வேண்டும். முழுமையடையாத முந்தய வேதங்கள் பாதுகாக்கப்பட வேண்டியதில்லை.

முந்தய வேதங்களையும் ஏற்றுக் கொண்டு நிறைவு பெற்ற இறுதியான வேதம் திருக்குர்ஆன். ''இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன், இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்'' (திருக்குர்ஆன், 5:3) என இறைச் செய்தியை பறைசாற்றித் திருக்குர்ஆன் பிரகடனம் செய்கிறது.

இஸ்லாம் மார்க்கம் முழுமை பெற்று, தூதுப்பணியும் முடிந்து விட்டதால் இறைத்தூதர்களின் வருகையும் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடன் முற்றுப் பெற்று விட்டது. இனி தூதர்களின் வருகை இல்லை அதனால் வேதங்களின் வருகையும் இல்லை. திருக்குர்ஆனே இறுதி வேதம் எனும்போது இறுதி வேதமாகிய திருக்குர்ஆன்தான் பாதுகாக்கப்பட வேண்டும்.

மனித குலத்துக்கு வழிகாட்டியாக இறைவனால் அருளப்பட்ட திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாக்கப்படுகிறது. திருக்குர்ஆனைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைவன் ஏற்றுக் கொண்டிருக்கிறான். (பார்க்க: திருக்குர்ஆன், 15:9) திருக்குர்ஆனில் இடைச் செருகல் ஏற்படாமல் இன்னும் தொடர்ந்து இறைவனால் பாதுகாக்கப்படும் இறுதி நாள்வரை!

எழுதியவற்றில் மேலும் கேள்விகள் இருந்தால் இங்கே பதிவு செய்யலாம் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Thursday, October 05, 2006

மரண தண்டனை!

மரண தண்டனை என்பது மனித குலத்துக்கு நல்லதொரு பாடமாக இருந்து வருகிறது. தண்டனை பெறுவோம் என்ற மரண பயத்தால் பெரும்பான்மையினர் தவறிலிருந்து விலகிக் கொள்வார்கள். இதனால் வலியவனிடமிருந்து எளியவன் விடுதலையடைகிறான். அதாவது அகம்பாவம், ஆணவம், பணத்திமிர் கொண்டவனும் குற்றமிழைத்தால் தண்டனை உறுதி என்றாகும் பொழுது, எளியவன் மீது அடக்கு முறையுடன் ஓங்கும் கைகளை வலியவன் தவிர்த்துக் கொள்வான்.

அவனைக் கொன்றால் நானும் சட்டத்தால் கொல்லப்படுவேன் என்று - எவ்வளவு பணபலத்துக்கும் உடன்படாத - எந்த சக்திக்கும் வளைந்து கொடுக்காத - உறுதிமிக்க மரண தண்டனை விதியியிருந்தால் அது மனித வள மேம்பாட்டுக்கு மிகவும் உதவிக் கொண்டிருக்கும்.

ஆனால் துரதிஷ்டம் நமது இந்திய நாட்டில், வெகு சிரமத்துடன் குற்றாவாளிகளை அடையாளம் கண்டு, பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி, குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனைகள் விதித்தால், அந்த தண்டனை கூடாது என அரசியல் குறுக்கீடு, மற்றும் தன்னார்வலர்களின் பரிதாப சிபாரிசு என குற்றவாளிகளைக் காப்பாற்ற படையெடுத்து விடுகின்றனர்.

விளைவு, இச்செயல் குற்றவாளிகளை மேலும் தெம்பூட்டுகிறது. இந்த கதிக்கு, குற்றவாளிகளை பிடித்தது, நீதி விசாரணை நடத்தியது இவையனைத்தும் வீணாகி, வெறும் வெட்டி வேலையாகி விடுகின்றது. நியாயமான நீதி கிடைக்கும் என்று நம்பியவர்கள், சட்டம், நீதி விசாரணை என்பதெல்லாம் வெறும் மண்ணாங்கட்டி என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள்.

முஹம்மது அப்ஸல்

ஒரு குற்றவாளியை, குற்றவாளியாத்தான் பார்க்க வேண்டும். அதனால் எந்த நாட்டின் நட்பு போய்விடுமோ என்று கருதினால் தெரிந்து கொண்டே குற்றங்களுக்கு துணை போகிறோம்! பாராளுமன்றம் இந்திய அரசுக்குச் சொந்தமான இடம். பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் இந்திய நாட்டை ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள். பாராளும் மன்றத்தை தகர்க்கவும், ஆட்சியாளர்களைக் கொல்லவும் துணிந்தவர்கள் தேசத் துரோகிகள் எனும் போது அதற்கு உடந்தையாக இருந்தவனும் தேசத் துரோகியே!

நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவித்து அரசுக்கு எதிரான பெரும் நாச வேலையில் ஈடுபட்டு பொதுவுடமையை அழிக்கவும், ஆட்சியாளர்களைக் கொல்லவும் துணிந்தவர்கள் சட்டத்தால் கொல்லப்பட வேண்டும். முறையான நீதி விசாரணை நடத்தப்பட்டு அவர் குற்றவாளியென நிரூபிக்கட்டு நீதி மன்றங்கள் வழங்கிய மரண தண்டனை அவர் மீது நிறைவேற்றப்பட வேண்டும். இந்த மரண தண்டனை இன்னொரு பயங்கரவாதிக்கு பாடமாக இருக்கும்.

குற்றவாளிகளை தண்டிப்பதில் குறுக்கே நிற்கும் ''கருணை மனு'' மற்றும் ''பொது மன்னிப்பு'' போன்ற சமாச்சாரங்கள் குற்றவாளிகளை ஊக்கப்படுத்துமே தவிர குற்றங்களை குறைக்க உதவாது. நீதி தன் கடமையைச் செய்வதற்கு இதெல்லாம் தடைக்கல்லாகத்தான் இருக்கிறது!

பாதிக்கப்பட்டவன் இங்கிருக்க, சம்பவத்துக்கு சம்பந்தமே இல்லாதவர் குற்றவாளி மீது கருணை காட்டுவது சரியாகுமா..? நீதி மன்றங்கள் முறையான விசாரணையில் குற்றவாளிகளுக்கு நியாயமான மரண தண்டனை விதித்தால் அதை நிறைவேற்றும் முயற்சியில் நீதியுடன் கை கோர்ப்போம் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Wednesday, October 04, 2006

நபி இயேசுவின் சிறப்புக்கு காரணம் என்ன?

இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களை நோக்கி சகோதரர் ஜோ கீழ்கண்ட கேள்விகளை வைத்திருக்கிறார்...

//இஸ்லாமிய சகோதரர்கள் பொதுவாக கருத்து சொல்லும் போது இஸ்லாமில் அனைத்து நபி மார்களும் (ஆதாம் ,ஆபிரகாம் தொடங்கி இயேசு ,அண்ணல் முகமது நபி வரை) சமமாகவே மதிக்கப்படுகிறார்கள் ,அதே நேரத்தில் முகமது நபியவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என்பதாலும் அவர் வழியாகவே இறை வார்த்தையான குரான் இறக்கப்பட்டதால் நடைமுறையில் முகமது நபியவர்கள் தனிச்சிறப்புடையவராகவும் இஸ்லாமியர்களின் தனிப்பட்ட பேரன்புக்குரியவராகவும் திகழ்கிறார் என்றும் கருத்துரைக்கிறார்கள் .இது பற்றி எனக்கு மறுப்பேதும் இல்லை.

ஆனால் இயேசு(ஈஸா நபி) குறித்து இஸ்லாம் நம்பிக்கை பற்றி மேலும் தகவல்களை நேரடியாக நம் இஸ்லாமிய அன்பர்களிடமிருந்து பெறலாமே என்ற நோக்கத்தில் இந்த பதிவு.

1. இயேசு அன்னை மரியின் மகனாக பிறந்தார் .ஆனால் அன்னை மரி தன்னுடைய கன்னித் தன்மையை இழக்காமலேயே ஆணின் மூலமாக அன்றி ,இறைவனால் கருத்தரிக்க வைக்கப்பட்டு இயேசு பிறந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை மட்டுமல்ல முஸ்லிம்களின் நம்பிக்கையும் கூட .ஆக ஆதாம் என்கிற ஆதிமனிதன் தவிர மற்றெல்லா நபிகளும் இயற்கையான முறையில் பிறந்த போது இயேசு மட்டும் விசேடமான முறையில் அன்னை மரியாளிடம் பரிசுத்தமான முறையில் பிறக்கிறார் .இறுதித் தூதர் முகமதுவுக்கே கிடைக்காத இந்த தனிச்சிறப்பை அல்லா ஈஸா நபிக்கு மட்டும் கொடுக்க வேண்டிய காரணம் என்ன ?இது பற்றி இஸ்லாத்தில் என்ன விளக்கம் சொல்லப்படுகிறது ?

2. இந்த உலகின் இறுதி நாள் வரும் போது வானகத்திலிருந்து இயேசு மறுபடியும் இந்த மண்ணுலகுக்கு வருவார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை .அது போலவே இஸ்லாமியர்களும் இறுதி நாளின் போது இயேசு மறுபடியும் வந்து குரானை ஓதுவார் என்று நம்புகின்றனர் .இங்கும் இறுதித் தூரரான முகமது நபிக்கு கிடைக்காக சிறப்பு இயேசு(ஈஸா நபி) -க்கு கிடைக்கிறது .இதற்கு காரணம் என்ன ? ஏன் இயேசு- வுக்கு இந்த தனிச்சிறப்பு என்பதற்கு இஸ்லாம் என்ன விளக்கம் சொல்கிறது ?//
*******************************************

சகோதரர் ஜோ இந்தக் கேள்விகளில் //''இறுதித் தூதரான முகமது நபிக்கு கிடைக்காத சிறப்பு இயேசு(ஈஸா நபி) -க்கு கிடைக்கிறது .இதற்கு காரணம் என்ன?''// என்பதையே முக்கியமாகக் கேட்டிருக்கிறார். கேள்வியில் விதர்ப்பம் இல்லை என்றே எடுத்துக் கொள்வோம்.

சிறப்பின் காரணம் என்னவென்பதை உள்ளதை உள்ளபடி சொல்லி விட்டால் தவறாகாது. நபிமார்களிடையே ஏற்றத் தாழ்வைக் கற்பிக்க இந்த நபிக்கு ஏன் இந்த சிறப்பு? என காரணத்தைத் தேடினால் - ''நபிமார்களிடையே வேற்றுமை இல்லை'' எல்லா நபிமார்களையும் ஒரே படித்தரத்தில் வைத்து நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற - இஸ்லாத்தின் கொள்கைக்கு முரண்பட்டதாகும்.

நபி இயேசு என்ற ஈஸா (அலை) அவர்களின் இடத்தில், நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இருந்திருந்தால் முஹம்மது நபி தந்தையின்றி பிறந்திருப்பார்கள், தொட்டிலில் பேசியிருப்பார்கள், இறைவனால் உயர்த்தப்பட்டிருப்பார்கள், இறுதி நாளின் நெருக்கத்தில் பூமிக்கு இறங்கி வரத்தான் செய்வார்கள்!

நபி முஹம்மது (ஸல்) அவர்களின் இடத்தில், இயேசு (அலை) அவர்கள் இருந்திருந்தால் இயேசு (அலை) அவர்களும் இறுதி நபியாகக் குறிப்பிடப்பட்டிருப்பார்கள், உலக மக்கள் அனைவருக்கும் இறைத்தூதராக ஆக்கப்பட்டிருப்பார்கள், மறுமை உலகில் - பரலோக ராஜ்யத்தில் பரிந்துரைப்பதையும் பெற்றிருப்பார்கள்.

எந்தெந்த நபிக்கு என்னென்ன சிறப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை அந்தந்தக் கால மக்களின் நம்பிக்ககைக்கேற்ப இறைவன் தீர்மானிக்கிறான். அவன் தீர்மானித்தத் தகுதிகளை, அவன் தேர்ந்தெடுக்கும் மனிதரை இறைத்தூதராக நியமித்து, அவருக்கு சிறப்பு தகுதிகளையும் வழங்குகிறான். அதைத்தான் இறைவன் இப்படிக் கூறுகிறான்...

17:55. உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான். நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்றோம்.இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.

2:253. அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம் அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான். அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான். தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம். இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்.

இறைத்தூதர்களில் சிலரை, சிலரைவிட மேன்மையாக்கியிருக்கிறான் என்பது இறைத்தூதர்கள் சிலருக்கு இறைவன் வழங்கிய சிறப்புத் தகுதி. இறைவன் கூறும் இந்தச் சிறப்புத் தகுதி கண்ணோட்டத்தில் நபிமார்களுக்கு வழங்கிய சிறப்புகளை சொல்லிக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. அந்த சிறப்புத் தகுதியை வைத்து இயேசு (அலை) அவர்களை விட முஹம்மது (ஸல்) அவர்கள் உயர்ந்த நபி என்றோ, முஹம்மது (ஸல்) அவர்களை விட இயேசு (அலை) அவர்கள் உயர்ந்தவர்கள் என்ற ஏற்றத்தாழ்வு அடிப்படையில் பாராபட்சமான பேச்சுக்கள் கூடாது என்பதையே...

''அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்.''

''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை''


திருக்குர்ஆன், 2:136, 285 ஆகிய வசனங்கள் கூறிகிறது.

இயேசு - ஈஸா (அலை) அவர்களின் சிறப்பு பற்றி திருக்குர்ஆன் சொல்லும் காரணங்கள்.

இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் சிலர் ஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிப்பட்டார்கள், சிலர் கொலையும் செய்யப்பட்டார்கள். இந்தக் கொடுமையானப் போக்கிலிருந்து யூதர்களை விலக்கி நல்வழிபடுத்திடவே இயல்புக்கு மாறாக ஒரு அற்புதத்தை அத்தாட்சியாக நபி இயேசு அவர்களின் பிறப்பை இறைவன் சிறப்பாக தேர்ந்தெடுத்தான்.

43:59. அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை. அவர் மீது நாம் அருள் புரிந்து இஸ்ராயீலின் சந்ததியருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.

3:48. இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.

3:49. இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான் இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்) ''நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன். நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன். அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன். நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது'' (என்று கூறினார்).

3:50. ''எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன், ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், என்னைப் பின் பற்றுங்கள்.''

3:51. ''நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான வழியாகும்.''


மேற்கண்ட வசனங்களில் இயேசு (அலை) அவர்களின் பிறப்பின் சிறப்பு பற்றிய காரணங்கள் தெளிவுபடுத்துப்படுகிறது. இறைத்தூதர் இயேசு அவர்களின் அற்புதமான பிறப்பின் ஏற்பாடு இம்ரானின் குடும்பத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறது.

3:33. ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.

3:34. (அவர்களில்) ஒருவர் மற்றவரின் சந்ததியாவார் - மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

3:35. இம்ரானின் மனைவி, ''என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்'' என்று கூறியதையும்.

66:12. மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார், நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்) இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.


நபி இயேசுவைப் பெற்றெடுக்க இம்ரானின் மகள் மர்யம் (அலை) அவர்களைத் தேர்ந்தெடுத்து அந்தச் செய்தி வானவர்கள் மூலம் அவருக்கு அறிவிக்கப்படுகிறது.

3:42. (நபியே! மர்யமிடத்தில்) வானவர்கள், மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான். இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்'' (என்றும்).

இம்ரானின் மகளாகிய மர்யம் (அலை) அவர்கள் மகத்தான அத்தாட்சியாக ஆண் துணையின்றி கருவுற்று இயேசு என்ற ஈஸா (அலை) இறைத்தூதரைப் பெற்றெடுக்கிறார், இந்த அதிசயப் பிறப்பின் சிறப்புக்குக் காரணம், ஏற்கெனவே தவ்ராத் என்ற வேதம் வழங்கப்பட்ட இஸ்ராயீலின் சந்ததிகள், இயேசுவை இறைத்தூதர் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக இயேசுவின் பிறப்பை, முதல் மனிதரும் முதல் நபியுமாகிய ஆதாம், என்ற ஆதம் நபியின் படைப்புக்கொப்பாக சிறப்பித்து அத்தாட்சியாக (பார்க்க:திருக்குர்ஆன், 3:59) சான்றாக்கினான் இறைவன்.

ஆனால் இந்த அற்புதத்தைப் பார்த்த பின்னும், இயேசு பல அதிசயங்களை செய்து காட்டிய பின்னும், யூதர்கள் இயேசுவை இறைத்தூதராக ஏற்கவில்லை (பார்க்க: திருக்குர்ஆன், 3:52) அவரை ஒரு நல்ல மனிதராகக் கூட ஏற்கவில்லை. மோசமாக விமர்சித்தார்கள். யூதர்களின் தவறான விமர்சனங்களில் எள்ளளவும் உண்மையில்லை என்று இயேசுவின் சிறப்பைச் சுட்டிக்காட்டி அவர் மீது சுமத்தப்பட்டக் களங்கத்தைத் திருக்குர்ஆன் துடைத்தெறிகிறது.

இனி...
திருக்குர்ஆன் மர்யம் என்று குறிப்பிடும் மரியாள் பற்றியும், இயேசுவின் பிறப்பு பற்றியும் பைபிள் என்ன கூறுகிறது?

3:46. ''மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார், இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.'' (மேலும் பார்க்க: திருக்குர்ஆன், 5:110, 19:39,40)

இயேசு பிறந்ததும் தொட்டிலில் பேசுவார் என்பதை அவர் பிறப்பதற்கு முன்பே முன்னறிவிப்புச் செய்தும், மரியாளின் கற்பு பற்றி தவறாக விமர்சித்தவர்களின் சந்தேக எண்ணங்களை நீக்கிட, இயேசு தொட்டில் குழந்தையாக இருக்கும் பருவத்தில் பேசி, அந்த அதிசயத்தை நடை முறையில் நடத்திக் காட்டி மரியாளின் கற்பொழுக்கத்தை நிலை நாட்டியதாக வரலாற்றுச் செய்தியை திருக்குர்ஆன் கூறுகிறது.

மரியாளின் கற்பு சம்பந்தமாகவும், இயேசு பிறந்தவுடன் தொட்டிலில் பேசியது தொடர்பாகவும் பைபிள் என்ன கூறுகிறது? என்பதை வசன எண்களுடன் அறியத் தந்தால் நன்றாக இருக்கும். இது நபி இயேசுவைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது? என்பதை அறிந்து கொள்ள கிறிஸ்துவ நண்பர்களிடம் நேரடியாகக் கருத்துக்களைக் கேட்டுப் பெறலாமே என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டது நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Sunday, October 01, 2006

ஆதாம், ஏவாள் எனும் ஜோடி.

இன்னுமா நம்புகிறார்கள்? என்ற தலைப்பில் எழில் என்பவர் ஒரு பதிவிட்டிருக்கிறார். ஆம் ''இன்னுமா நம்புகிறார்கள்...?'' இதே கேள்வியை வந்த வழிக்கே திருப்பினால் என்ன...?

பரிணாமப் பறிமாற்றங்களை அருகிலிருந்து பார்த்து குறிப்புகள் எடுத்துக் கொண்டாரா!? என்னத்தைச் சொல்ல..!

பரிணாமத்தின் உந்து விசையைக் கண்டுபிடிப்பதில் லாமார்க் போன்ற சிறந்த விஞ்ஞானிகளேத் தோற்றுப் போனார்களே! இவரென்ன விஞ்ஞானக் குஞ்சு! குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்பதை நிரூபித்து விட்டாரா..?

''கொம்பேறித் தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்'' அடடா என்ன தத்தவமய்யா இது, சொன்னவர் யாராம்..? அட கலைவாணர்... எப்படி இருக்கிறது பாருங்கள், ''பாரிணாம உந்து விசைக்கு'' நகைச்சுவை நடிகரை ஆதாரம் காட்டுகிறார் பாருங்கள். (தயவு செய்து யாரும் நகைக்க வேணடாம்.)

எவ்வளவோ உயினங்களைக் கண்டு வருகிறோம். அவைகளெல்லாம் தம் இனத்தையே ஈன்றெடுக்கின்றன.

குதிரையிலிருந்து குதிரைக் குட்டியும்,

கழுதையிலிருந்து கழுதைக் குட்டியும்,

ஆட்டிலிருந்து ஆட்டுக் குட்டியும்,

குருவியிலிருந்து குருவிக் குஞ்சும்,

மாமரத்திலிருந்து மாங்கன்றும்,

இன்னும் குரங்கிலிருந்து குரங்குக் குட்டிதான் பிறந்து கொண்டிருக்கிறது,

மனிதனிலிருந்து மனிதக் குழந்தைதான் பிறக்கிறது.


அனைத்தையும் விட மேலாக, மனிதன் அறிவால் உயர்ந்து நிற்கிறான். எந்த உயிரினத்துக்கும் கிட்டாத - வழங்கப்படாத இந்தப் பேறறிவு எனும் மணி மகுடம் எந்த உந்து விசையால் பரிணாமம் பெற்றது என்பதை ''கொம்பேறித் தாவும் குரங்கிலிருந்து பிறந்தவர் விளக்குவாரா..?''

அன்புடன்,
அபூ முஹை

3.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.

போர்களை நடத்திச் செல்ல ஆட்சி அவசியமா..? இஸ்லாம் என்ன சொல்கிறது..?


போர் நடத்த வேண்டுமென்றால் அதைக் கட்டுப்படுத்த ராணுவம், ராணுவ அதிகாரிகள் என்று இருக்க வேண்டும். ராணுவம், ராணுவ அதிகாரிகளைக் கட்டுப்படுத்த ஆட்சி, ஆட்சியின் அதிகாரம் இருக்க வேண்டும். ஆட்சி செய்வதற்கு நாடு, அல்லது ஏதேனும் நிலப்பகுதியை கைப்பற்றி அதைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இப்படி முறையாக அமைக்கப்பட்ட ஆட்சி, ராணுவம், போர் வீரர்கள் என்று இருந்து, அது தனது எதிரி நாட்டுடன் சண்டையிட்டால் அது போர் என்று சொல்லப்படும்.

இப்படி எதுவும் இல்லாமல் ஒரே ஊருக்குள் நான்கு பேர், அல்லது நாற்பது பேர்கள் அடித்துக் கொண்டால் அதற்குப் பெயர் வன்முறை, அல்லது கலவரம் என்றுதான் பொருள்படும். அதைப் போர் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

இஸ்லாமும் இதைத்தான் செய்திருக்கிறது. மக்காவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட குறைந்த அளவு அப்பாவி மக்களை போர் என்ற பெயரில் சொந்த நாட்டிலேயே கலவரத்தை ஏற்படுத்தி பலி கொடுக்கத் தயாரில்லை. இது சரியான முடிவுதானா? என்று கேட்டால் மடையர்களைத் தவிர யாரும் சரியான முடிவுதான் என்று சொல்வார்கள்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையில் ஆட்சி, அதிகாரம் எதுவும் அவர்கள் கையில் இல்லை. அதனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களை பொறுமையைக் கடைபிடிக்க கட்டளையிடப்பட்டது. மக்கத்துக் காஃபிர்களின் தொல்லைகள் தாளாமல் பல முஸ்லிம்கள் தமது சொந்த நாட்டைத் துறந்து அகதிகளாக வேறு நாட்டில் அடைக்கலம் புகுந்தார்கள். இறுதியில் நபி (ஸல்) அவர்களும் சொந்த ஊரைத் துறந்து அகதியாக வெளியேறினார்கள். மதீனா நகர் அவர்களை, இருகரம் நீட்டி வரவேற்று, அந்த நாட்டின் மன்னராக ஏற்றுக் கொண்டது.

மதீனா நகரத்தின் ஆட்சியதிகாரம் நபி (ஸல்) அவர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது. இப்போது நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மன்னர் நபி (ஸல்) அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இப்போதுதான் ''உங்களை எதிர்த்து போருக்கு வருபவர்களுடன் நீங்கள் போர் செய்யுங்கள்'' என இறைக் கட்டளை வருகிறது. முறையான ராணுவம் அமைத்து, போர் வீரர்களும் தேர்வு செய்யப்படுகிறார்கள் போருக்குத் தயாராகின்றனர். (மதீனா வந்த பின்னும் மக்கத்து காஃபிர்களின் தொல்லைகள் தொடர்ந்து கொண்டுதானிருந்தது என்பது பற்றி இதே தொடரில் பிறகு சொல்லயிருப்பதால் இங்கு தவிர்க்கப்படுகிறது)

போர் நடத்துவதற்கு ஆட்சி அவசியமா?

போர் செய்வதற்கு மட்டுமல்ல, நாட்டின் இறையாண்மையைக் காக்கவும் - குடிமக்கள் நலம் பேணவும், குற்றங்கள் நடக்காமல் தவறுகளைத் தடுக்க, தவறு செய்பவர்களை தண்டிக்கவும், ஆட்சியும் ஆட்சியை நடாத்திச் செல்ல அதிகாரம் பெற்ற மன்னர், அரசர், ராஜா அல்லது ஆட்சித் தலைவர் என்ற பெயரில் ஆட்சியாளர்கள் மிக அவசியமாகிறது.

//அரசியல் இஸ்லாம்
அரசியல் இஸ்லாம் என்பது முகமதுவால் துவங்கப்பட்டது. முகமது என்பவர் தமக்கு கிட்டிய ஆன்மீக அனுபவங்களை வைத்து உலகை கறுப்பு வெள்ளையாகப் பிரித்தார்(அதாவது தம்மை நம்புவோர்கள் , தம்மை நம்பாதவர்கள் - பிற்காலத்தில் இதுவே முஸ்லிம்கள் காபிர்கள் என்றானது).//
- இது கோணல் புத்தியுடையவரின் உளறல்.

ஆன்மீக இஸ்லாம், அரசியல் இஸ்லாம் என இரண்டு இஸ்லாத்தை இறைவன் ஏற்படுத்தவில்லை. மாறாக ஆன்மீகம், அரசியலையும் உள்ளடக்கிய ஒரே இஸ்லாத்தையே இறைவன் ஏற்படுத்தியிருக்கிறான். இறைத்தூதர் என்பவர் ஆசிரமத்தை அமைத்து அமர்ந்து கொண்டு, தன்னை நாடி வருபவர்களிடம் காணிக்கைகளைப் பெற்று ஆசீர்வாதங்களையும், பிரசாதங்களையும் வழங்கும் ஒரு ஆசிரமச் சாமியாராகவே நேசகுமார் என்பவர் கற்பனை செய்திருக்கிறார். பாவம் அவரால் ஆன்மீகம் என்பதை அதைக் கடந்து சிந்திக்க முடியவில்லை. அதனால் இஸ்லாம் கூறும் அரசியலும் ஆன்மீகம் என்பதை அவரின் குறைமதி ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

இறையாட்சியை நிறுவுவதே இறைத்தூதர்களின் வருகையாக இருந்தது. இறைவனின் வழிகாட்டல், இறை வணக்க வழிபாடு என்ற ஆன்மீகம் மட்டும் என்பதை இஸ்லாம் ஒரு போதும் ஒப்புக் கொள்ளவில்லை. வணக்க வழிபாடு எனும் ஆன்மீகம் மனித வாழ்க்கையில் ஒரு சிறு பகுதிதான். இறைவனை, நின்று, குனிந்து, நெற்றியை தரையில் வைத்து மண்டியிட்டு வணங்கும் வழிபாடுகளோடு இஸ்லாம் நிறுத்திக் கொள்ளவில்லை. மாறாக தனி மனிதனிலிருந்து, ஆட்சியாளர்கள் வரை அரசியலிலும் ஒவ்வொரு துறையிலும் வழிகாட்டலை வழங்கி, அவ்வழியைக் கடைபிடித்து செயல்படுவதும் ஆன்மீகம் என்றே இஸ்லாம் கூறுகிறது.
போர் செய்வதற்கு முன் போர் படையை வழி நடத்த ஓர் அரசனைப் பெற்றிருக்க வேண்டும் என்பதற்கான திருக்குர்ஆன் வசனங்கள்...

2:246. (நபியே!) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தம் நபியிடம், ''நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்படுத்துங்கள்'' என்று கூறிய பொழுது அவர், ''போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா?'' என்று கேட்டார்; அதற்கவர்கள்; ''எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?'' எனக் கூறினார்கள். எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.

2:247. அவர்களுடைய நபி அவர்களிடம் ''நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்'' என்று கூறினார். (அதற்கு) அவர்கள், ''எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள். மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கபடவில்லையே!'' என்று கூறினார்கள். அதற்கவர், ''நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான். இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான். இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன், (யாவற்றையும்) நன்கறிபவன்'' என்று கூறினார்.

(நபிமார்கள் அரசர்களாகவும் இருந்திருக்கிறார்கள். நபி இறைவனின் பாதையில் வழிகாட்டியாக இருந்து, வேறொருவர் ஆட்சியின் மன்னராகவும் இருந்திருக்கிறார் என்பதை, 2:246, 247 ஆகிய வசனங்களிலிருந்து விளங்கலாம்)

அநீதிக்கு எதிரான போர்.

இஸ்லாமியப் போர்கள் முதல் தொடரில் குறிப்பிட்டது போல் மக்காவை விட்டு, வெளியேற இயலாத - வழி தெரியாத பலவீனமான முஸ்லிம்கள் மக்காவிலேயே தங்கி விட்டார்கள். இவர்களின் மீதும் குரைஷிகளின் அடக்கு முறை மேலும் தொடர்ந்து கொண்டிருந்தது. மக்கத்துக் காஃபிர்களின் அடக்கு முறைக்கு ஆளான முஸ்லிம்களின் பிரார்த்தனை இவ்வாறாக இருந்தது.

4:75. பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) ''எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக. எங்களுக்காக உன்னிடமிருந்து (தக்க) ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக. இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக'' என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.

இஸ்லாம் ஒரு பயங்கரவாத மார்க்கம் என்று விமர்சிக்கும் இஸ்லாத்தின் எதிரிகள் படிப்பினைப் பெற வேண்டிய வசனங்களில் 4வது அத்தியாயத்தின் 75வது வசனமும் ஒன்றாகும். இஸ்லாத்தைத் தவறாக விளங்கி பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்தும் மிகச் சில அரைகுறை முஸ்லிம்களும் இந்த வசனத்தை சரியாக விளங்கிக் கொண்டால் பயங்கரவாதச் செயலை இஸ்லாம் ஆதரிக்கவில்லை என்பதை புரிந்து கொள்வார்கள்.

மக்கத்துக் காஃபிர்களின் அடக்கு முறைக்கு ஆளாகித் துன்பத்திற்கு தள்ளப்பட்டுப் பாதிக்கப்பட்டவர்களை போராடச் சொல்லவில்லை. தனி மனிதன் அல்லது ஒரு குழுவின் மீது அநீதி இழைக்கப்பட்டு அவர்கள் போராடலாம் என்பதை மேற்கண்ட (4:75வது) வசனம் நியாயப்படுத்தவில்லை. மாறாக அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ''அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் ஏன் போர் செய்யக்கூடாது?'' என்று மதீனாவில் இருக்கும் இஸ்லாமிய ஆட்சியை நோக்கி இந்தக் கேள்வியை முன் வைக்கிறான் இறைவன்.

முன்பு ஆட்சியதிகாரம் இல்லாத நிலையிலிருந்து போர் செய்வதைத் தடுத்த இறைவன், மதீனாவில் ஆட்சியதிகாரம் அமைக்கப்பட்ட பின் போர் செய்யக் கட்டளையிடுகிறான்...

4:77. ''உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஜக்காத்தை கொடுத்தும் வருவீர்களாக!'' என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு ''எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறலானார்கள். (நபியே!) நீர் கூறுவீராக, ''இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது. நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.''

மக்காவில் துன்பங்களை அனுபவித்த போதும், நாடு துறந்து அபிஸீனிய நாட்டிற்கு சென்ற போதும் முஸ்லிம்களுக்கு படை திரட்டும்படி கட்டளையிடப்படவில்லை. மதீனாவில் இஸ்லாமிய ஆட்சி அமைந்ததும் நாட்டை பாதுகாக்கவும், எதிரிகளைப் போரில் சந்திக்கவும் படை பலத்தைத் தயார் செய்து கொள்ள - ராணுவத்தை பலப்படுத்திக் கொள்ளச் சொல்லப்படுகிறது. இவையெல்லாம் தனி மனிதனுக்கோ, ஒரு குழுவைச் சேர்ந்தவர்களுக்கோ பிறப்பிக்கப்பட்டக் கட்டளையில்லை. மாறக ஆட்சியிருப்பவர்களுக்கு ராணுவத்தை திறமையாக நிர்வாகிக்கும்படி சொல்லும் அறிவுரைகள்.

8:60. அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள், இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம். அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்) அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான். அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும். (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.

இஸ்லாமிய ஆட்சியிலும் பலமில்லாத ராணுவத்தை வைத்துக் கொண்டு, போர் என்ற பெயரில், போர் செய்யும் வீரர்களை பலி கொடுக்கச் சொல்லவில்லை இஸ்லாம். எதிரி நாட்டின் போர்ப் படையில் பாதி பலத்தையேனும் பெற்றிருந்தால் மட்டுமே போருக்கு தயாராகும்படிச் சொல்கிறது. கீழ்காணும் வசனங்கள்...

8:65. நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள். ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்).

8:66. நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து, தற்சமயம் அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான் - எனவே உங்களில் பொறுமையும் (சகிப்புத் தன்மையும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் இருநூறு பேர் மீது வெற்றிக் கொள்வார்கள். உங்களில் (இத்ததையோர்) ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள்வார்கள் - (ஏனெனில்) அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.

எதிரி நாட்டின் மீது போர் தொடுக்க முனையும் போது குறைந்த பட்சப் படைபலம் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கிலிருந்தால் மட்டுமே இஸ்லாமிய ஆட்சியாளர்கள் போருக்கு தயாராக வேண்டும். அதை விடக் குறைவாக இருந்தால் ஆட்சியாளருக்கும் போர் செய்வது கடமை இல்லை. சதவிகிதத்தில் குறைவான போர் வீரர்களை கொண்ட ராணுவத்தைப் பெற்ற ஒரு நாடு போர் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனும் போது, தனி நபர், அல்லது ஒரு குழுவாகச் சேர்ந்து ''ஜிஹாத்'' என்ற பெயரில் செய்யும் பயங்கரவாதத்தை ஒரு போதும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

தனி மனிதர்களின் செயல்பாடுகளை வைத்து இஸ்லாம் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மார்க்கம் என்று இஸ்லாத்தை விமர்சிக்கும் எதிரிகளின் கருத்தில் நேர்மை இல்லை!

விளக்கங்கள் தொடரும்)

அன்புடன்,
அபூ முஹை