இஸ்லாத்தை விமர்சிக்கும் பிறமத நண்பர்கள் ஒரு குர்ஆனா பல குர்ஆன்களா!? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒரு குர்ஆனா அல்லது பல குர்ஆன்களா?!
Quran or Qurans?!
இக்கட்டுரையை அரபியில் படிக்க: النسخة العربية
இந்த கட்டுரைக்கான விவரங்கள் கீழ் கண்ட புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது:
The reading ways of Quran dictionary: (moa'agim alqera'at alqura'nia):
இது ஒரு அரபி மொழியில் எழுதப்பட்ட புத்தகம் மற்றும் இதனை இஸ்லாமிய அறிஞர்கள் எழுதினார்கள். குவைத் பல்கலைக்கழகம்(Kuwait University) இதனை 8 பாகங்களாக வெளியிட்டது. இதன் முதல் பதிப்பு 1982ம் ஆண்டு (அரபியில்) வெளியிடப்பட்டது, இதன் ஆசிரியர்கள்:
டாக்டர். அப்துல் அல் சலாம் மக்ரெம் (Dr. Abdal'al Salem Makrem)
டாக்டர். அஹமத் மொக்தார் ஒமர் (Dr. Ahmed Mokhtar Omar)
இவர்கள் இருவரும் குவைத் பல்கலைக் கழகத்தில் அரபி மொழி பேராசிரியர்களாக இருக்கிறார்கள்.
புத்தக பதிப்பாளர்: ஜத் அல்சலாசல்-குவைத் (Zat Alsalasel – Kuwait)
முன்னுரை:
உத்மான் இபின் அஃபான் காலம் வரைக்கும் பல குர்ஆன்கள் [massahif] எழுதப்பட்டது. இவர் இதர குர்ஆன்களை எரித்துவிட்டார் மற்றும் ஒரு குர்ஆனை ஆதிகாரபூர்வமான பிரதி என்று வைத்துக்கொண்டார்.
உதாரணத்திற்கு, கீழ்கண்ட குர்ஆன் வகைகள்:
1. அலி பின் அபி தலிப் என்பவரின் படி குர்ஆன் (Quran according to Ali bin abi talib)
2. இபின் மஸூத் என்பவரின் படி குர்ஆன் (According to Ibn Mass'oud)
3. அபி பின் கப் என்பவரின் படி குர்ஆன் (According to Aobi bin ka'ab)
இதன் பொருள் இவர்கள் குர்ஆனை எழுதினார்கள் என்று பொருளில்லை; இதன் பொருள் அவர்கள் குர்ஆனை எப்படி படிக்கவேண்டும் என்ற விவரங்களை கொண்டு இருந்தனர்.
குர்ஆனை 7 வகையில் படிக்கலாம்(ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தின் படி [alssib' ailmithani]) + 3 இதர வழிகள் (mokimila) + 4 கூடுதலான வழிகள், இதை இயல்புக்கு மாறான முறை[shaza] என்பார்கள்.
ஏழு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:
1. நஃபா: கலன் + வர்ஷ் (Nafaa': Qalon + Warsh)
2. இபின் கதிர்: அல்பிஜி + கோன்பில் (Ibn Kathir: Albizi + Qonbil)
3. அபி அம்ரொ: அல்தோரி + அல்சோசி (Abi amro: Aldori + Alsosi)
4. இபின் அமிர்: இபின் அபன் + இபின் த்வான் (Ibn Amer: Ibn Aban + Ibn Thkwan)
5. அச்செம்: அபோ பைகர் + ஹஃபஸ் (Assemm: Abo Biker + Hafas)
6. அல் கெஸ்ஸய்: அலித் + அல்தோரி (Alkessa'i: Allith + Aldori)
7. ஹம்ஜா: அல்பிஜாஜ் + அபோ ஈஸா அல்சிர்பி (Hamza: Albizaz + Abo Isa Alsirfi)
இங்கு பதிவு செய்துள்ள குழப்பமான கருத்துகளில் பிறமத நண்பர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று முழுதும் புரியவில்லை என்றாலும் ''குர்ஆன் ஒன்றல்ல, ஏழு வகையான குர்ஆன் உள்ளது'' என்று சொல்கின்றனர் என்று விளங்குகிறது. எடுத்து வைக்கும் சான்றுகளில் இவர்களுக்கே நம்பிம்கையில்லை என்பதை இவர்களின் தடுமாற்றம் தெளிவுபடுத்துகிறது. இவர்கள் பதியும் கருத்துக்கள் இவர்களுக்கேப் புரியாமல் போய் விடுகிறது என்பதை அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்,
//நான் இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்பது மிகவும் தெளிவாக உள்ளது; அதாவது ஒரே ஒரு குர்ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்லமுடியாது.//
தெளிவில்லாத விமர்சனத்தைப் பதிவு செய்கிறோம் என்பது அவர்களுக்கே உறுத்தலாக இருப்பதால் ''மிகவும் தெளிவாக உள்ளது'' என்று சான்றிதழ் வழங்கிக் கொள்கிறார்கள்.
நண்பர்களே! உலகில் ஒரே ஒரு குர்ஆன் உள்ளதாக யாரும் சொல்ல மாட்டார்கள்! உலகம் முழுதும் உள்ள குர்ஆன் பிரதிகளை கணக்கிட்டால் பல கோடி குர்ஆன் பிரதிகளை கண்டெடுக்கலாம். விஷயத்துக்கு வருவோம்,
வட்டார மொழி தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாநில மக்களும் பேசுவது தமிழ் என்றாலும் ஒவ்வொரு இடத்திலும் பேசும் தமிழில் வித்தியாசமிருக்கும். இதை வட்டார மொழி என்று சொல்வார்கள். பேசு பொருள் ஒன்றாக இருந்தாலும் பேசும் ஒலியில் ஏற்ற இறக்கமிருக்கும். ஒருவர் தமிழ் பேசுவதை வைத்தே அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறிவிடலாம். இதில் இலங்கைத் தமிழ் வித்தியாசமான தனித் தமிழ் பேச்சாக இருக்கும். பயிற்சி எடுத்தாலே தவிர ஒரு வட்டாரப் பேச்சை இன்னொரு வட்டாரத்தைச் சேர்ந்தவர் பேசுவது கடினம். அந்த அளவுக்கு வட்டார மொழி ஒருவரின் பேச்சில் ஊறிப்போனதாகும்.
''ஒரேயொரு (வட்டார) மொழிவழக்குப்படி ஜிப்ரீல்(அலை) அவர்கள் (குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத்தந்தார்கள். அதை இன்னும் பல(வட்டார) மொழிவழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத்தருமாறு அவர்களிடம் நான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க) எனக்கு அவர்கள் அதிகப்படுத்திக்கொண்டே வந்து இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறால்கள். (புகாரி, 3219, 4991)
திருக்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டது. அரபு மொழியில் ஏழு வட்டார மொழியில் ஓதுவதையே பிரபலமான ''ஏழு கிராஅத்துகள்'' - ஏழு வகையான ஓதும் முறைகள் - என்று சொல்வார்கள்.
ஏழு வகையான ஓதும் முறைகளையே மாறுபட்ட ஏழு வகையான குர்ஆன்கள் இருக்கின்றன என்று புரிந்து கொண்டு, //''ஒரே ஒரு குர்ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்லமுடியாது.''// என்ற தவறான விமர்சனத்தை வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வைத்துள்ள ஆதாரங்கள் மறு ஆய்வுக்குரியவை என்பதை இங்கு கூறிக்கொள்கிறேன்.
ஏழு வகையான ஓதுதல்''இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம்(ரலி) 'அல்ஃபுர்கான்' எனும் (25 வது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை செவியுற்றேன். அவரின் ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்டபோது எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அதை அவர் ஓதிக்கொண்டிருந்தார். தொழுகையில் வைத்தே நான் அவரைத் தண்டிக்க முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும்வரை பொறுத்துக் கொண்டேன்.
(அவர் தொழுது முடித்த) பிறகு அவரின் மேல் துண்டைக் கழுத்தில் போட்டுப் பிடித்து, 'நீர் ஓதியபோது நான் செவியுற்ற இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக் காண்பித்தது யார்?' என்று கேட்டேன். அவர், 'இதை எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் ஒதிக் காண்பித்தார்கள்' என்று பதிலளித்தார். உடனே நான், 'நீர் பொய் சொல்லிவிட்டீர்! ஏனெனில், நீர் ஓதியதற்கு மாற்றமாகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை எனக்கு ஓதிக்கொடுத்தார்கள்' என்று கூறியபடி அவரை இழுத்துக் கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்களிடம், '(இறைத்தூதர் அவர்களே!) தாங்கள் எனக்கு ஓதிக்கொடுக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் 'அல்ஃபுர்கான்' அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன்' என்று சொன்னேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவரை விடுங்கள்!' என்று கூறிவிட்டு (ஹிஷாம் அவர்களை நோக்கி), 'ஹிஷாமே, நீங்கள் ஓதுங்கள்!' என்றார்கள். அவர் என்னிடம் ஓதியது போன்றே நபி(ஸல்) அவர்களுக்கு முன்னாலும் ஓதிக் காட்டினார். (இதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது' என்று கூறினார்கள்.
பிறகு (என்னைப் பார்த்து), 'உமரே, ஓதுங்கள்!' என்று கூறினார்கள். எனக்கு அவர்கள் ஓதிக்கொடுத்திருந்த முறைப்படி நான் ஓதினேன். (அதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது. இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள்.'' என்று உமர் பின் கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, 4992, 5041, 6936, 7550)
நபி (ஸல்) அவர்களின் காலத்தில், இரு நபித்தோழர்கள் குர்ஆனை இரு வகையாக ஓதியிருக்கிறார்கள். இரு ஓதலையும் நபி (ஸல்) அவர்கள் சரி என அங்கீகரித்துள்ளார்கள் என்றால் இருவரும் குர்ஆன் வசனங்களை மாற்றி ஓதினார்கள் என்று பொருள் கொள்ள முடியுமா? என்றால் இல்லை. உதாரணமாக:
நபித்தோழர் ஹிஷாம் (ரலி) அவர்கள் திருக்குர்ஆனில் அல்ஃபுர்கான் எனும் 25வது - அத்தியாயத்தை ஓதியதாக அறிவிப்பில் உள்ளது. ஃபுர்கான் அத்தியாயத்தின் தொடக்க வசனம்:
''(சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியவான்'' என்று கூறுகிறது. தொழுகையில் முன்னின்று ஓதும் இமாம் இதை பிழையாக ஓதினாலோ, அல்லது மறதியாக ஒரு வார்த்தையை விட்டுவிட்டாலோ, அவருக்குப் பின்னின்று தொழுபவர்கள் தவறைத் திருத்தியும், மறந்த வசனத்தை நினைவு படுத்தியும் எடுத்துச் சொல்வார்கள்.
இந்த அடிப்படையில், ஹிஷாம் (ரலி) அவர்கள் அல்ஃபுர்கான் அத்தியாய வசனங்களை மாற்றியோ, தவறாகவோ ஓதியிருந்தால் தொழுகையிலேயே அவர் திருத்தப்பட்டிருப்பார். ஹிஷாம் (ரலி) அவர்களின் குர்ஆன் ஓதலை, பின்னின்று தொழுத மற்ற நபித்தோழர்கள் ஆட்சேபிக்கவில்லை. உமர் (ரலி) அவர்களும் அவர் ஓதி முடிக்கும் வரை ஆட்சேபிக்கவில்லை என்பதிலிருந்து ஹிஷாம் (ரலி) அவர்கள் குர்ஆன் வசனங்களை சரியாகவே ஓதியுள்ளார்கள் என்பது தெளிவு!
ஹிஷாம் (ரலி) அவர்கள் சரியாக ஓதியிருந்தால் அதை உமர் (ரலி) அவர்கள் ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு, ஓதிய வகையில் மாற்றமிருந்தது. அதாவது ஓதிய வட்டார மொழி வித்தியசமாக இருந்ததால் உமர் (ரலி) அவர்களுக்கு அது குர்ஆன் ஓதும் முறையாக இல்லையே என்று தோன்றியிருக்கிறது, குர்ஆனை மாற்றி வேறு முறையில் ஓதிவிட்டதாகக் கருதி, அதைக் கண்டிப்பதற்காக ஹிஷாம் (ரலி) அவர்களின் கழுத்தில் துண்டைப் போட்டு இழுத்து, நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படுகிறார்.
நபி (ஸல்) அவர்கள், இருவரும் ஓதியது சரிதான் என்று கூறிய பின் உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொண்டதிலிருந்து, ஹிஷாம் (ரலி) அவர்கள் குர்ஆனை ஓதிய முறையும் நபி (ஸல்) அவர்களால் அங்கீகரிக்கப்பட முறைதான் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருந்தது. தெரிந்த பின் ஏற்றுக்கொண்டார்கள் என்று விளங்கலாம்.
குர்ஆன் ஓதும் முறை''குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக!'' (திருக்குர்ஆன், 073:004)
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ''குர்ஆனை எனக்கு ஓதிக்காட்டுங்கள்'' என்று சொன்னார்கள். நான் ''தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க , தங்களுக்கு நான் ஓதிக்காட்டுவதா?'' என்று கேட்டேன். அவர்கள் ''பிறரிடமிருந்து அதை நான் செவியேற்க விரும்புகிறேன்'' என்று சொன்னார்கள். என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, 5049)
நபி (ஸல்) அவர்களின் ஓதுதல் முறை எப்படி இருந்தது என்று கேட்டேன். அதற்கவர்கள், ''நீட்டி ஓதுதலே அவர்களின் வழக்கம் என்று கூறிவிட்டு பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் எப்பதில் ''பிஸ்மில்லா...ஹ் என நீட்டுவார்கள், அர்ரஹ்மா...ன் என்றும் நீட்டுவார்கள், அர்ரஹீ...ம் என்றும் நீட்டுவார்கள்'' என்று பதிலளித்தார்கள். (புகாரி, 5046)
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் (தமது ஒட்டகத்தின் மீதர்ந்தபடி) 'அல்ஃபதஹ் (48வது) அத்தியாத்தைத் 'தர்ஜீவு' செய்து (ஓசை நயத்துடன்) ஓதிக்கொண்டிருந்தார்கள். (புகாரி, 4281, 4835)
''தர்ஜீவு'' என்பதற்கு மீட்டுதல் என்று பொருளாகும். ஒரு எழுத்தைத் திரும்பத் திரும்ப தொண்டைக்குக்கொண்டு வந்து ஓசை எழுப்பி ஓதுவதாகும். ஆ எழுத்தை ஆ ஆ ஆ என்று இழுத்து ஓதும்போது ஒரே எழுத்தின் ஒலி நீண்டு ஓசை நயத்துடன் ஓதும் முறைக்கு தர்ஜீவு எனப்படும்..
பாங்கொலியில் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்... தொழுகையின் அழைப்பை குரல் வளமிக்கவர் நன்றாக நீட்டிச் சொல்லும் போது கேட்க இனிமையாக இருக்கும். எடுத்துக்காட்டாக: நாகூர் ஹனீஃபா என்ற முஸ்லிம் பாடகர் ஒரு பாடலில் பாங்கு சொல்லியிருப்பார் அவரின் கனத்த குரலுக்கு நீட்டி நிறுத்தி சொல்லியிருக்கும் பாங்கை தர்ஜீவு என்று சொல்லலாம்.
குர்ஆனை மனனம் செய்தவர்கள் வெவ்வேறு முறைகளில் நீட்டி இழுத்து ஓதியிருக்கிறார்கள். ''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்'' என்ற தொடக்க வசனத்தை ஓதி நிறுத்திவிட்டு பின்னர் அல்ஹம்துலில்லாஹி... என்று தொடங்குவது ஒருவகை ஓதல்.
''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீமில்ஹம்துலில்லாஹி...'' என்று ஒன்றாகச் சேர்த்து நீட்டி இழுத்து ஓதுவதும் ஒருவகை ஓதல்.
ஒரு வசனத்தையே திரும்பத் திரும்ப ஓதுவதும் ஒருவகை. குரல் வளமிக்கவர்கள் குரலை உயர்த்தி, தாழ்த்தி நீட்டி நிறுத்தி வெவ்வேறு வகையிலும் ஓதிக்கொள்ளலாம் என்பதே பல வகையான ஓதுதல் எனப்படும். ஏழுவகையான ஓதுதல் என்பது ஓர் அளவுதானே தவிர குர்ஆனை இனிமையாக ஓத முடியுமென்றால் ஏழு முறைக்கும் அதிகமான வட்டார மொழியில் ஓதலாம். அதற்கு தடையேதும் இல்லை. குர்ஆன் இனிமையாக ஓதப்பட்டால் செவி தாழ்த்திக் கேட்பவர்களை அது ஊக்கப்படுத்தும்.
இதற்கு உதாரணமாக: 12 வயது எகிப்து சிறுமி சுமையா, இன்று தன் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதில் சிறப்புப் பெற்று வருகிறார். இவருடைய ஓதல், அப்படியே குர்ஆன் ஓதுவதில் பிரபல்யமான அப்துல் பாசித் அவர்களின் ஓதலை நினைவூட்டுகிறது. சுமையாவின் குர்ஆன் ஓதலைக் கேட்பதற்காக மக்கள் திரளாக வந்து கண்ணியத்துடன் காத்திருக்கிறார்கள் என்றால் ராகத்துடன் ஓதும் சுமையாவின்
இனிமையான குரல் மக்களை ஈர்க்கிறது.
ஏழு வட்டார மொழிநபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட ஏழு வட்டார மொழி இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்ல எந்த ஆதாரமும் இல்லை. ஒலியைப் பதிவு செய்ய முடியாத காலத்தில் இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்தது என்பதால் அன்று குர்ஆனை ராகமிட்டு ஓதிய முறை இது என்று தீர்க்கமாக சொல்ல இயலாது. குர்ஆனை ஓதும் முறை பற்றி வசனத்திலும் சில அறிவிப்புகளிலும் ஆதாரங்கள் இருப்பதால் குர்ஆனை இனிமையாக ராகமிட்டு ஓதலாம் என்கிறோம்.
ஏழு வட்டார மொழியை பிரபல்யமான ஏழு வகையான கிராஅத் - ஓதல் என்று சொன்னாலும் அறிஞர்களிடையே ஏழு வட்டார மொழி குறித்து கருத்து வேறுபாடுகள் உண்டு. இவற்றை அறிஞர்களின் கருத்தாகவே கொள்ளலாமே தவிர அறிஞர்களின் கருத்துக்களை வலுசேர்க்க நபிவழி அறிவிப்புகளில் சான்று எதுவும் இல்லை.
குர்ஆனை இனிமையாக பல ராகத்துடன் ஓதிக்கொள்ளலாம் என்பதையே ஏழு வட்டார மொழி வழக்கு என்ற அறிவிப்பு அனுமதிக்கிறது. குர்ஆன் வசனங்களை ஏழு விதமாக மாற்றி ஓதினார்கள் என்பதைக் குறிப்பிடவில்லை. இதற்கு மேற்கண்ட உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பில் தக்க சான்றுகள் உள்ளன.
மேலும்,
''நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள்'' (திருக்குர்ஆன், 073:020)
''இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்'' (மேற்கண்ட உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பு, புகாரி, 4992, 5041, 6936, 7550)
குர்ஆனில் சுலபமானதை ஓதுங்கள் என்று - (கூட்டுத் தொழுகையில் முன்னின்று தொழ வைப்பவர் அல்லாத) - ஒருவர் குர்ஆனை நீட்டியும் ஓதலாம், சுருக்கியும் ஓதலாம் என்பதை அனுமதிக்கிறது. ''உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்'' என்பதும் ஒரே ஒரு குர்ஆனையேக் குறிப்பிடுகிறது. ஏழு வகையான குர்ஆனைக் குறிப்பிடவில்லை.
எம்மிடம் உள்ளது இதுவே!
இனி...
குர்ஆனை 7 வகையில் படிக்கலாம்(ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தின் படி [alssib' ailmithani]) + 3 இதர வழிகள் (mokimila) + 4 கூடுதலான வழிகள், இதை இயல்புக்கு மாறான முறை[shaza] என்பார்கள்.
ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தின்... என்று விளக்கியிருக்கும் பிறமத நண்பர்களே!
ஏழு வித்தியசாமான குர்ஆன்கள் உண்டு என்ற உங்களின் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, வித்தியாசப்பட்ட குர்ஆன் வசனங்களை சான்றுகளுடன் களத்தில் வையுங்கள்!
அதாவது, ''ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தின் படி'' இந்த ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தையும், +3 +4 இதர மற்றும் கூடுதலான, இதில் இயல்புக்கு மாறான முறை என்ன? என்பதையெல்லாம் சற்று விளக்கிச் சொல்வீர்களாயின் முஸ்லிம்களும் புரிந்து கொள்வார்கள், விளக்குவீர்களா...?
சம்பந்தப்பட்ட பதிவில், நீங்கள் சரித்திரங்களைத் திரித்துள்ளீர்கள். ஆதாரங்களுடன் அடுத்து சந்திப்போம்.
நன்றி!
அன்புடன்,
அபூ முஹை