Monday, July 24, 2006

மதங்கள் மனிதர்களுக்காகவா..?

மனிதனால் அறியப்பட்டு உலகுக்கு அறிமுகம் செய்யப்படும் நவீனங்கள் ஒவ்வொன்றிலும் கண்டுபிடித்து அறிமுகம் செய்பவரின் வழிகாட்டல் நிச்சயமாக இருக்கும். எப்படி உபயோகிப்பது? - எப்படி இயக்குவது? என்கிற குறிப்புகளடங்கிய குறிப்பேடு, அதில் சொல்லப்பட்டுள்ளபடியே உபயோகப் படுத்த வேண்டும் - இயக்க வேண்டும். அதற்கு மாற்றமாக உபயோப்படுத்தினாலும், மாற்றமாக இயக்கினாலும் விபரீதங்கள் ஏற்படும்.

மனிதனால் கண்டுபிடிக்கப்படும் ஒரு கருவியை இயக்க, அவருடைய வழிகாட்டல் அவசியம் எனும்போது, இறைவனால் படைக்கப்பட்ட மனிதன், நன்மை - தீமைகளை விளங்கி செயல்பட அவனுக்கு வழிகாட்டல் அவசியமாகிறது. குறைந்த அறிவே வழங்கப்பட்டுள்ள மனிதன், நன்மைகளைத் தேர்ந்தெடுப்பது போல, பல சந்தர்ப்பங்களில் நன்மையெனக் கருதித் தீமைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். இது தவிர்க்கப்பட வேண்டுமாயின் மனிதத்தின் மீது முழு அக்கறை கொண்ட ஒரு பேரறிவாளனின் வழிகாட்டல் வேண்டும்.

மதம்.
மதம் என்றால் வெறி, சம்மதம் என்ற அடிப்படையில் மனிதன் தானாகச் சம்மதித்து ஏற்றுக்கொண்ட ஒரு வழி என்றுதான் சொல்ல முடியும். மதம் மனிதனை மதங்கொள்ளச் செய்வது. இறைவனால் வழங்கப்பட்டதல்ல. இறைவனால் கொடுக்கப்பட்டது, மனிதன் சம்மதித்தாலும், சம்மதிக்கா விட்டாலும் - சரி கண்டாலும் சரி காண விட்டாலும் ஏற்று நடக்க வேண்டிய மார்க்கம் ஆகும். இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கம் மனிதச் சமுதாயம் சுபீட்சமாகவும், அமைதியாகவும் வாழும் வழியாகும். எனவே மனித சுபீட்சத்திற்கும் - அமைதிக்கும் எதிரான செயல்பாட்டிற்கு ஆதரவாக, இறை கொடுத்த மார்க்கம் - மதத்தில் அறவே வழிகாட்டல் இல்லை.

சண்டைகள், போராட்டங்கள், வன்முறைகள், பயங்கர வாதங்கள் என எத்தனையோ நடந்துள்ளதை வரலாற்று ஏடுகளில் நாம் பார்க்கிறோம். அவற்றுக் கெல்லாம் காரணம் மதங்களல்ல, மதவாதிகளே..! - நான் ஏற்கெனவே சொல்லி வருவதுதான் - மதவாதிகள் செய்யும் தவறுகளை மதங்களை நோக்கித் திருப்பக்கூடாது.

அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் தவறான நடவடிக்கைகளுக்காக சட்டத்தின் மீது பழி சுமத்த முடியாத போது - மதத்தைப் பின் பற்றுபவர்களின் தவறுகளையெல்லாம் மதத்தின் மீது சுமத்துவது சரியல்ல.

''மதவாதிகளின் தவறுகளுக்கு மதங்களின் மீது பழி சுமத்துவது தவறு!''

''மதவாதிகளின் ஒவ்வொரு செயலும் மதத்தின் இயற்கையான விளைவுகளே என முடிவு செய்வதும் தவறு!''


மதம் என்பது மனித முயற்சியின் வெளிப்பாடு என்று கருதினால் அதற்கு திட்டவட்டமான அளவுகோல் எதுவும் இருக்க முடியாது. இந்நிலையில் இயற்கையாகவே ஒவ்வொரு மனிதனும் தனித்தனியே வேறு பட்டு நிற்பது தவிர்க்க முடியாததாகிவிடும். ''நான் எந்த மதத்தையும் சேர்ந்தவனல்ல'' என்தும் அது அவர் கண்ட மதம். மதவாதிகளின் செயல்பாடுகளை கவனித்து மதங்களே இப்படித்தானோ? என தவறானக் கருத்தோட்டத்தில் மதங்களை விட்டு ஒதுங்குவதாகக் கருதி தனியொரு மதத்தை உருவாக்குகிறார்.

இஸ்லாம்.
இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில், இறைநெறி - மார்க்கம் அல்லது மதம் என்பது மனித உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளல்ல. 'உண்மையைத் தேடும் மனித முயற்சியே மதம்' என்பதையும் இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக, இறைவன் இறக்கியருளிய கட்டளைகளின் தொகுப்பே இறைநெறியாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் இறைநெறி என்பது முற்றிலும் இறைக் கட்டளைகளாகும். சத்தியத்தையும், அசத்தியத்தியத்தையும் அந்த இறைநெறி வகுத்தத் தந்த துலாக்கோலில் தான் மதிப்பிட வேண்டும்.

இறைவன் அருளிய துலாக்கோலைப் புறக்கணித்து விட்டு, ஒரு முஸ்லிம் தன்னுடைய அறிவை மட்டுமே பயன்படுத்தி சத்தியத்தை அறிய முற்படுவானேயானால் நிச்சயமாக அதில் அவன் வெற்றி பெறவே முடியாது. மாறாக அவன் குழப்பத்தில் மூழ்கி வழிகெட்டுப் போய் விடுவான்.

மதத்திற்கு இறை வெளிப்பாடுதான் (வஹீ) மூல ஆதாரம் என்று ஏற்றுக் கொள்பவர்கள் வஹீயின் மூலம் கிடைக்கும் செய்திகள்தான் ஏதார்த்த உண்மைகள் என்று ஒப்புக்கொள்வார்கள். அந்த மூல அறிவுக்கு வெளியே மத உண்மைகள் இருப்பதாக நம்பமாட்டார்கள். அப்படி இருப்பது சாத்தியமுமல்ல.

ஒவ்வாரு மனிதனும் தனித்தனியாக ஏதார்த்த உண்மையைக் கண்டுபிடிக்கும் போது ஒவ்வொரு மனிதனிடமும் ஏதார்த்த உண்மையை பற்றிய கருத்தோட்டமும் வெவ்வேறாகவே இருக்கும். இப்படி வேறுபட்டக் கருத்துக்கள் ஒருபோதும் மனித சமுதாயத்தை நல்வழிபடுத்திட உதவாது. எனவே, பக்குவப்படுத்தவும், நேர்வழி காட்டவும் மனிதனுக்கு மதத்தின் தேவை மிகவும் அவசியம்.

அன்புடன்,
அபூ முஹை

Friday, July 21, 2006

கணவன், மனைவி உரிமைகள்.

இஸ்லாம் திருமணத்தை வலியுறுத்துகிறது. மாறாக மணவாழ்வு ஆன்மீகப் பாதைக்கு எதிரானது என்பதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. திருமணம் நிறைவேறுவதற்கென்று சடங்கு சம்பிரதாயங்கள் எதையும் விதிக்கவில்லை. உறுதியான உடன்படிக்கை செய்துகொண்டு, மணமக்கள் இருவரும் வாழ்க்கையில் இணைவது இஸ்லாமியத் திருமணம்.

''...உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே.'' (திருக்குர்ஆன், 4:21)

திருமணம் செய்து கொள்வதற்கு, இரண்டு காரணங்களையும் இஸ்லாம் குறிப்பிடுகிறது.

1. ''மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களை, பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.'' (திருக்குர்ஆன், 4:1)

2. ''உங்களில் யார் பராமரிப்புச் செலவுக்குச் சக்திப் பெற்றுள்ளாரோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் (பிற பெண்களை நோக்குவதை விட்டும்) பார்வையைத் தடுக்கக் கூடியதாகவும், கற்பைக் காக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.'' (நபிமொழி)

மனித இன மறு உற்பத்தியாகச் சந்ததிகளைப் பெற்றுக் கொள்வது. கற்பு நெறியுடன் ஒழுக்கமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது. இதுவே மணமுடிக்கும் நோக்கத்தின் மிக அவசியமாக இங்கு சொல்லப்படுகிறது.

ஆண், பெண் இரு பாலாருக்கும் உடல் சுகம் மிகவும் அவசியமானது. இந்த சுகத்தை, கணவன், மனைவி என்ற உறவுடன் இணைந்து, இல்லற வாழ்வின் மூலம் முறையாகப் பெற்றுக் கொள்ளக் கண்டிப்புடன் எடுத்துச் சொல்கிறது இஸ்லாம்.

இல்லற சுகம் அனுபவிப்பதற்காகவே திருமணம் செய்கிறார்கள். தேவைப்படும்போது தக்கக் காரணமின்றி இல்லற சுகம் மறுக்கப்படால் திருமண வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். உடலுறவுத் தேவை கணவனுக்கு இருப்பது போல், மனைவிக்கும் பொதுவானது. மனைவியின் பால் கணவனுக்கு நாட்டம் இருப்பது போலவே, மனைவிக்கும் கணவன் பால் நாட்டம் இருக்கும். இருவருடைய உணர்வுகளும் கவனிக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால், மனைவி விரும்பினாலும், கணவன் விரும்பாமல் இல்லற சுகம் பெற முடியாது. இந்த உடற்கூறு வித்தியாசத்தையும் மறுக்க முடியாது. ஒரேயொரு சந்தர்ப்பத்தில் மட்டுமே மனைவியை ''அவர்களைப் படுக்கையிலிருந்து (தற்காலிமாக) விலக்கி வையுங்கள்'' (4:34) என்று சொல்லிவிட்டு -

''கணவர்களுக்கு மனைவியர் மீதுள்ள உரிமையைப் போன்று, மனைவியர்க்கும் கணவர்கள் மீது உரிமையுண்டு'' (திருக்குர்ஆன், 2:228)

- கணவன், மனைவி இருவருமே இல்லற சுகத்தை அனுபவிப்பதற்கு ஒருவர் மீது மற்றவர் உரிமை பெற்றிருக்கிறார்கள் என்பதை 2:228வது வசனத்திலிருந்து விளங்கலாம். கணவனின் தேவைக்காக மனைவியை அழைப்பது போல், மனைவியும் தன் தேவைக்காக கணவனை அழைக்கும் உரிமை பெற்றிருக்கிறார். கணவனின் தேவையை சரியானக் காரணமின்றி மனைவிப் புறக்கணிக்ககூடாது - மனைவியின் தேவையையும் தக்கக் காரணமின்றி கணவன் மறுக்கக்கூடாது. இதை ஆதிக்கம் என்று சொல்வதைவிட கணவன், மனைவி உரிமைகள் என்றே சொல்ல வேண்டும்.

நபிமொழிகள்.

நபி(ஸல்) அவர்கள் ஸல்மான்(ரலி), அபூ தர்தா(ரலி) இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸல்மான் அபூ தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபூ தர்தாவின் மனைவி) உம்மு தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். 'உமக்கு என்ன நேர்ந்தது?' என்று அவரிடம் ஸல்மான் கேட்டதற்கு உம்மு தர்தா(ரலி), 'உம் சகோதரர் அபூ தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை'' என்று விடையளித்தார்.

(சற்று நேரத்தில்) அபூ தர்தா வந்து ஸல்மானுக்காக உணவு தயாரித்தார். ஸல்மான் அபூ தர்தாவிடம், 'உண்பீராக!' என்று கூறினார். அதற்கு அபூ தர்தா, 'நான் நோன்பு வைத்திருக்கிறேன்' என்றார். ஸல்மான், 'நீர் உண்ணாமல் உண்ணமாட்டேன். என்று கூறியதும் அபூ தர்தாவும் உண்டார். இரவானதும் அபூ தர்தா(ரலி) நின்று வணங்கத் தாயரானார். அப்போது ஸல்மான்(ரலி), 'உறங்குவீராக' என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் ஸல்மான், 'உறங்குவீராக' என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் ஸல்மான்(ரலி), 'இப்போது எழுவீராக!' என்று கூறினார். இருவரும் தொழுதனர். பிறகு அபூ தர்தாவிடம் ஸல்மான்(ரலி), 'நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன் உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன் உம் குடும்பத்தினருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன் அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக'' என்று கூறினார்கள். பிறகு அபூ தர்தா(ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைத் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஸல்மான் உண்மையையே கூறினார்!'' என்றார்கள். (புகாரி, 1968)

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவிக்கிறார்.

நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'அப்துல்லாஹ்வே! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!'' என்று கேட்டார்கள். நான் 'ஆம்! இறைத்தூதர் அவர்களே!'' என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாள்) நோன்பு வையும், (சில நாள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும், (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன், உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன, உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன், உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன!... (புகாரி, 1974, 1975, 5199)

தன்னை முழுமையாக இறைவணக்க வழிபாடுகளில் ஈடுபடுத்திக் கொண்டு, உலக வாழ்க்கையில் கடமைகளை மறந்த அல்லது புறக்கணித்தத் தமது தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அறிவுரை கூறுகிறார்கள்.

மேற்காணும் நபிமொழிகளில், மனைவியின் தேவையைப் பூர்த்தி செய்வது கணவனுக்குக் கடமை என்று சொல்லப்பட்டுள்ளது. கணவனின் தேவையைப் பூர்த்தி செய்வதும் மனைவியின் கடமையென்று, இதிலிருந்து அறிந்து கொள்ள பெரிய ஆராய்ச்சி அறிவு வேண்டுமென்பதில்லை. திருமண ஒப்பந்தம் என்ற அடிப்படையில் கணவன் அழைத்து மனைவி மறுத்தாலும் - மனைவி அழைத்து கணவன் மறுத்தாலும், உடலுறவுக்கான தகுதியும், திறனுமிருந்து வேறு காரணங்கள் இல்லாமல் மறுத்தால், இருவரையும் வானவர்கள் சபிப்பார்கள்.

அன்புடன்,
அபூ முஹை

Saturday, July 15, 2006

பக்காப் படிக்கு முக்காப்படி அளக்கிறார் நேசகுமார்.

இஸ்லாம் என்றால் என்னவென்றே விளங்காமல் நேசகுமார் என்பவர் ''பக்காப்படிக்கு முக்காப்படி அளந்து கணக்கு காட்டுகிறார். இவர் அளக்கும் படி சரியில்லை என்று ஏற்கெனவே திருப்பி அனுப்பியும், வருடம் கடந்து சென்று விட்டதால் மக்கள் மறதியை தனக்கு சாதகமாக்கி மீண்டும் அளவு சரியில்லாத பழையப் பக்காப் படியோடு மீண்டும் நேசகுமார்.

''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை''
''முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும், தூதரும் ஆவார்''


இதை வாய் மொழிந்தவர்கள் இஸ்லாம் என்ற வட்டத்தில் நுழைந்து முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவ்வளவுதான் இஸ்லாம்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதித்தூதர் என்று இஸ்லாம் சொல்வதால், நபி(ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும் வரமாட்டார். அப்படி வருவதாக நம்பி, முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின் யாரையேனும் நபியாக நம்பிக்கை கொண்டால் அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவராவார். அதனால்...

//ம்யூஸ் என்பவர் அபூ முஹையிடம் இரு கேள்விகள் கேட்டிருக்கின்றார். மும்பை குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று சொல்வீர்களா, உடலை இஸ்லாமியச் சமாதியில் அடக்கம் செய்ய மறுப்பீர்களா என்று.

இதற்கு அபூ முஹை 'அழகாக' பதிலளிக்கிறார். கிப்லாவை நோக்கி வணங்குபவர்களை முஸ்லிம்கள் இல்லை என்று அறிவிக்கும் அதிகாரம் எந்த முஸ்லிமுக்கும் கிடையாதாம். மேலும் இறந்த பின் உடலை முறையாக அடக்கம் செய்வது - அது யார் என்றாலும் இஸ்லாமியர்களது நம்பிக்கையாம்.

எப்படி ஏமாற்றுகிறார்கள் பார்த்தீர்களா. அதே கிப்லாவை(காபா) நோக்கி வணங்குகிறவர்கள் தானே அகமதி முஸ்லிம்கள். அவர்களை மட்டும் முஸ்லிம்கள் இல்லையென்று அறிவிக்கும் அதிகாரம் உங்களுக்கு எப்படி கிட்டியது? அவர்கள் கிப்லா பக்கமே போகக் கூடாது என்றுதானே பாகிஸ்தான் தனது பாஸ்போர்ட்டில் மதம் என்று ஒரு பிரிவைச் சேர்த்து அவர்களை சவுதிக்காரர்கள் அடையாளம் கண்டு கொள்ள வழி செய்து தருகிறது.
பஹாய்களும் அதையேதானே செய்து வந்தார்கள்? - உங்களை விட அதீத ஈமான் கொண்டு, நல்லவர்களாக ஏக இறைவனை வணங்கிவருகிறார்களே - அவர்களை, அவர்களே முஸ்லிம் இல்லை என்று சொல்லும் படி ஓட ஓட அடித்து விரட்டியது யார்? அந்த அதிகாரம் உங்களுக்கு எப்படி கிட்டியது?//
-

- கிப்லாவை நோக்கினால் மட்டும் போதாது, முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறுதித்தூதர் என்றும் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். நேர்மையான பக்காப்படி கொண்டு அளக்கட்டும் என்று மீண்டும் நேசகுமார் என்பவருக்கு சொல்லிக் கொண்டு -

-இஸ்லாத்தை முறையாக விளங்காமல், அரைகுறையாக விளங்கிச் செயல்பட்டு அதனால் இஸ்லாத்தைக் களங்கப்படுத்தி, ஏனைய முஸ்லிம்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தும் பெயர் தாங்கி முஸ்லிம் என்றாலும், ''நாம் அறுத்ததை புசித்து நமது கிப்லாவை நோக்குபவன் முஸ்லிம்'' என்று இஸ்லாம் சொல்வதால் ் இவனை முற்றாக இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு வெளியேற்றும் அதிகாரம் எவருக்கும் இல்லை. - Muse அவர்களின் பின்னூட்டத்திற்கு சரியாகத்தான் அபூ முஹை பதிலளித்திருக்கிறார்.

''பஹாய்கள்'' முஹம்மது (ஸல்) அவர்களை இறைத்தூதராக ஏற்றுக் கொள்ளவில்லை, கிப்லாவை நாளெல்லாம் முன்னோக்கினாலும் ஒரு புண்ணியமும் இல்லை அறியவும்.

ஆரம்பத்தில் இவருடைய வாதங்கள் ஓரளவு ஏற்றுக் கொள்ளும்படி இருந்தது. இப்பெல்லாம் என்ன ஆச்சு இவருக்கு...?

அன்புடன்.
அபூ முஹை

Wednesday, July 12, 2006

யுனிகோட் உமர் தம்பி மரணம்.

மரணம் எவராலும் ஜீரணிக்க முடியாத ஒரு நிகழ்ச்சி. மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் மரணத்தை சந்தித்தாக வேண்டும். மரணத்திலிருந்து எவரும் தப்ப முடியாது, இதுதான் இறைவனின் நியாதி. உமர் தம்பி அவர்களின் மறைவால், அன்னாரின் பிரிவால் துக்கத்திலிருக்கும் அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ''இறைவனிடமிருந்தே வந்தோம், இறைவனிடமே மீளுவோம்''

அபூ முஹை


அதிரை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வர்களில் ஒருவரும், தமிழ் கணினியுலகில் யூனிகோட் எனும் தானியங்கி எழுத்துரு (Font) மேம்பாட்டிலும் இன்னும் பல கணினி சாதனைகள் படைத்தவரும், கல்வியாளருமான உமர் தம்பி அவர்கள் இன்று மாலை 5:30 மணியளவில் மரணமடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

உமர் தம்பி அவர்களின்  சாதனைகள் தமிழிணையப் பயனாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், நுணுக்கமான யுக்திகளைக் கொண்டதாகவும் உள்ளன.

வலைப்பூக்கள் என்று அறியப்படும் Blogs இல் தமிழில் எழுதப்படும் பதிவுகள் உமர்தம்பி அவர்களின் இணைய மென்பொருள் உதவியுடன் மிகச்சிறப்பாக அனைத்து வகை கணினியிலும் தெரியும் வண்ணம் வடிவமைக்கப்பட்டதாகும்.

உலகத் தமிழர்களின் வலைப்பூக்களை திரட்டும் தமிழ்மணம்.காம், (www.thamizmanam.com) உமர் தம்பி அவர்களின் செயலியைப் பயன்படுத்தும் முன்னணி தளமாகும்.

இவற்றுடன் தமிழ் இணைய அகராதி, யூனிகோட் உருமாற்றி, தமிழ் ஈமெயிலர், தேனிவகை எழுத்துறுக்கள்  ஆகியவை உமர் தம்பி அவர்களின்  இலாப நோக்கற்ற தனிப்பட்ட படைப்புகளாகும்.

மேலும் நமது இணைய தளத்திலும் பல பயனுள்ள கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். இவை மட்டுமின்றி தமிழாயாஹூ குரூப், மரத்தடி டாட் காம், ஈ சங்கமம் ஆகிய தமிழர் குழுமங்களிலும் இணைய தளங்களிலும் பல பயனுள்ள கட்டுரைகளை எழுதியுள்ளார்கள்.

உமர் தம்பி அவர்களின் இணைய மென்பொருட்களை கீழ்கண்ட சுட்டிகளில் காணலாம்.

http://www.geocities.com/csd_one/UniConMagz.zip

http://www24.brinkster.com/umarthambi/tamil/ETamil_search.asp

http://www.geocities.com/csd_one/fonts/ 

உமர் தம்பி அவர்களின் இழப்பு அதிரைக்கு மட்டுமின்றி தமிழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பு என்றால் மிகையில்லை.

அல்லாஹ் அன்னாரின் நற்கருமங்களைப் பொருந்திக் கொண்டு, உயரிய சுவர்க்கவாழ்வை வழங்குவானாக. ஆமீன்.

இதெல்லாம் ஒரு பொழப்பு.

மனிதர்களுக்கு சேவை புரிவதும் அவர்களுடன் நல்லமுறையில் நடந்து கொள்வதும் ஒழுக்கப் பண்பாடடின் ஒரு முக்கிய அம்சமாகும். ஒழுக்கவியலுடன் தொடர்புள்ள சிந்தனையாளர்கள் அனைவருமே தம் அறிவுரைகளில் மனிதகுல சேவைகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாறே உலகத்தின் எல்லா மதங்களும் அதன் முக்கியத்துவத்தை ஒப்புக் கொண்டுள்ளன. இதை அம்மதங்களின் வேதங்களிலும், ஆகமங்களிலும் காணலாம்.

படைப்பினங்களுக்கு பணி செய்வது இறைவனுக்குச் செய்யும் சேவையாக இஸ்லாம் கருதுகிறது - இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு செய்யும் உதவி இறைவனுக்கு செய்யும் உதவியாகவும், மனிதர்களுக்கு ஒத்துழைப்பு செய்வதை, இறைவனுக்கு செய்யும் ஒத்துழைப்பாகவும் கருதுகிறது இஸ்லாம்.

விசுவாசிகளே! - நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம், அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (திருக்குர்ஆன், 5:2)

பிற மனிதர்களின் உயிர், உடமை, மானம், மரியாதைகளை, தனது உயிர், உடமை, மானம், மரியாதைகளைப் பாதுகாப்பது போல் காத்திட வேண்டுமெனக் கட்டளையிடுகிறது இஸ்லாம். மனித வாழ்வின் அனைத்து நன்மையான அம்சங்களிலும், பயபக்தி விஷயங்களிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து, உறுதுணையாக இருக்க வலியுறுத்துகிறது. பாவமென வகுக்கப்பட்ட அநியாயச் செயல்களில், வரம்பு மீறி ஈடுபடுபவர்களுக்கு, எவ்விதத்திலும் உதவியாக - உறுதுணையாக இருக்கக் கூடாது எனவும் எச்சரிக்கிறது. பாவம் செய்பவனையும், பாவம் செய்பவனுக்கு உதவியாக இருப்பனையும் - ''நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.'' இறைவனின் இந்த எச்சரிக்கைகளுக்கு செவி கொடாதவன் எவனும் வெறும் பெயர் தாங்கி முஸ்லிம்களே!

இறைவனுக்கு இணைவைத்தலுக்கு அடுத்தபடியாக, இஸ்லாம் மனிதக் கொலையை இரண்டாவது பெரும் பாவமாகக் கருதுகிறது. கொலை செய்பவன் எவனும் இஸ்லாத்தை அறிந்த உண்மை முஸ்லிமாக இருக்க மாட்டான்.

நபிமொழிகள்

''மனித குலம் முழுவதும் அல்லாஹ்வின் குடும்பமாகும். மனிதகுலத்திற்கு அதிக நன்மை செய்வர்கள்தான் அல்லாஹ்விடத்தில் அதிக அன்பிற்குரியவர்கள்''. (நபிமொழி, மிஷ்காத்)

''எவன் மனிதர்கள் மீது கருணை புரிவதில்லையோ அவன் மீது இறைவன் கருணை புரிவதில்லை'' (நபிமொழி, புகாரி)

கருணை புரிபவர்கள் மீது கிருபையுள்ள இறைவன் கருணையைப் பொழிகின்றான். (எனவே நீங்கள்) பூமியில் இருப்பவர் மீது கருணை புரியுங்கள், வானத்தில் இருப்பவன் உங்கள் மீது கருணையைப் பொழிவான்''. (நபிமொழி திர்மிதி)

''இங்கு கருணைபுரிவது என்பது, பரஸ்பரம் அனுதாபம் கொள்வது, உங்களுக்கு மத்தியில் - உங்களுக்கு நெருக்கமானவர்களிடையே நீங்கள் புரியும் கருணையைக் குறிப்பிடவில்லை. மாறாக மனித இனத்தின் ஒவ்வொரு பொது மனிதனுடனும் நீங்கள் கருணை புரிய வேண்டும்'' (நபிமொழி, தப்ரானி) என்பதுதான் இங்கு வலியுறுத்தப்படுகிறது.

நாங்கள் அமர்ந்திருக்கும் பொழுது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். ''உங்களில் சிறந்தவர் யார்? தீயவர் யார்? என அறிவிக்கட்டுமா'' என்று கேட்டார்கள். நாங்கள் மெளனமாக இருந்தோம். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை மீண்டும் மீண்டும் இந்தக் கேள்வியைக் கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே! எங்களில் நல்லவர் யார், தீயவர் யார் என்பதை அவசியம் அறிவியுங்கள்'' என்று எங்களில் ஒருவர் பதிலளித்தார்.

''உங்களில் எவரிடம் மக்கள் நன்மையை எதிர்பார்க்கிறார்களோ, மேலும் உங்களிடமிருந்து எந்தத் தீமையும் ஏற்படாது - நாம் பாதுகாப்பாக இருப்போம் என மக்கள் கருதும் அளவுக்கு எவருடைய நடத்தை அமைந்திருக்குமோ அவர்தான் உங்களில் சிறந்தவர்''
''மேலும் எவர்களிடமிருந்து நன்மை எதிர்பார்க்கப்படவில்லையோ, எவருடைய தீங்கிலிருந்து மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்களோ அவர்தான் உங்களில் தீயவர். (நபிமொழி - அஹமத், திர்மிதி)

மனிதர்களைக் கொன்று குவித்து குருதி ஓட்டுபவனின் இதயத்தில் கருணை - இரக்கம் என்பது துளியும் இருக்காது. கருணை - இரக்கமற்ற எவனும் உண்மை முஸ்லிமாக இருக்க மாட்டான்.

//இதில் என்ன கொடுமை என்றால், இதைச் செய்தது இந்திய இராணுவம், ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, யூதர்கள், அவர்களே குண்டு வைத்துக் கொண்டார்கள், ஆதாரம் இருக்கிறதா என்றெல்லாம் இஸ்லாமிஸ்ட் கும்பல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும்.// - பிணங்களின் மீது ஏறி நின்று, மத வண்ணம் பூசும் இதெல்லாம் ஒரு பொழப்பு. அனாதைப் பிணங்களை சாலையில் கிடத்தி, வசூலித்து வயிறு வளர்ப்பவர்களை நினைவூட்டுகிறது.

நன்றி: கோவி.கண்ணன்

நடுநிலையாளர்களுக்கு.

Saturday, July 08, 2006

கணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..?

எல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது பொருந்தும். கணவன் தன் உடல் இச்சையைத் தணிப்பதற்காக மனைவியை அழைப்பது ஒரு சாதாரண விஷயம். இஸ்லாம் இதிலும் தலையிட்டு, ''கணவன் அழைத்தால் மனைவி மறுக்கக்கூடாது'' என்று கூறுவதால் ''இஸ்லாம் ஓர் பெண்ணடிமை மதம்'' என்று அவசர முடிவுக்கு வந்து விடுகிறார்கள்.

ஆணுக்கு ஏற்படும் உடற்கிளர்ச்சி அவனை, மிருகத்தனத்திங்குத் தள்ளி தனக்கு உரிமையில்லாத அன்னியப் பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தை பிரயோகிக்கவும் தூண்டி விடுகின்றது. எல்லா ஆண்களும் இப்படி இல்லையென்றாலும், கணிசமான ஆண்கள், அன்னியப் பெண்களிடம் வரம்பு மீறி கீழ்த்தரமாக நடந்து கொள்வது அன்றாடச் செய்திகளில் வாசிக்கிறோம்.

உடல் உணர்வுகள் கணவனுக்கும், மனைவிக்கும் சரிசமம் என்றாலும், கணவன் தயாராகாமல், மனைவிக்கு உணர்வுகள் ஏற்பட்டு எதுவும் நடந்து விடப்போவதில்லை. கணவனுக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டு, மனைவி தயார் இல்லாமல் இருந்தாலும் காரியம் நடந்துவிடும். அதற்காக கணவன், மனைவியை பலாத்காரம் செய்யலாம் என்று பொருளில்லை. பாலின உடற்கூறுகள், கணவன் தயாராகாமல் மனைவியுடன் உடலுறவு சாத்தியமில்லை.

விஷயத்துக்கு வருவோம்.

ஒரு பெண் அவள் எந்த நாட்டைச் சேர்ந்தவளாக இருந்தாலும், எந்த நாட்டில் அவனைப் பார்க்க நேர்ந்தாலும், அல்லது மனிதர்கள் வாழாத காட்டில் காண நேர்ந்தாலும், அவள் நம் மதத்தை சார்ந்தவளாக இருந்தாலும், அல்லது எந்த மதத்தையும் சேராதவளாக இருந்தாலும் ஒரு முஸ்லிம் அப்பெண்ணை எந்த சூழ்நிலையிலும், எந்த நிலையிலும் பலாத்காரம் செய்ய முடியாது - கூடாது. அப்பெண்ணின் நிலையும் அந்தஸ்தும் எப்படிப்பட்டதாக இருந்தாலும், அவள் அச்செயலுக்கு உடந்தையாக இருந்தாலும், உடன் படாவிட்டாலும் சரியே -

''நீங்கள் விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்'' (திருக்குர்ஆன், 17:32) என்று - தவறான ரகசிய உறவுகள் அனைத்தும் அவனுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.

''விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்'' இது முஸ்லிமான ஆண்கள், பெண்கள் இருபாலாருக்கும் இறைவனின் கட்டளையாகும். திருமண பந்தத்தை ஏற்படுத்தி, கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வதைத் தவிர, மற்ற தவறான - ரகசிய உறவாக, விபச்சாரத்தின் மூலமாக உடல் இச்சையைத் தணிக்கும் அனைத்து வழிகளையும் இஸ்லாம் அடைத்து விட்டது. (இங்கு, முஸ்லிம்கள் விபச்சாரம் செய்வதில்லையா? என்று விமர்சிப்பது பொருத்தமாக இருக்காது. விபச்சாரத்தை இஸ்லாம் தடை செய்துள்ளது. முஸ்லிம்கள் செய்யும் தவறை, இஸ்லாத்தை நோக்கி திருப்ப வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்)

நபிமொழிகள்,
''ஒருவர் தம் மனைவியைப் படுக்கைக்கு அழைக்கும்போது அவள் வர மறுத்திட்டால், அவளைப் பொழுது விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.'' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 5193)

மேற்காணும் நபிமொழியைப் படிப்பவர்கள், மனைவி நோயாளியாக, அல்லது இயலாமல் இருந்தாலும் கணவன் அழைக்கும்போது உடலுறவுக்கு ஒத்துப்போக வேண்டுமா? இது எப்படி சாத்தியமாகும்? இது என்ன கொடுமை? என்றெல்லாம் தமக்குத் தோணுவதை கற்பனையால் விரிவுபடுத்தி, இஸ்லாம் ஓர் ஆணாதிக்க மதம் என்று விமர்சிக்கின்றனர்.

தவறானக் கண்ணோட்டத்துடன் அணுகும் இவர்களின் கற்பனைக்கு எள்ளளவும் இந்த நபிமொழியில் சான்றுகள் இல்லை.

''எந்தவொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை'' என்ற இறைவாக்கிற்கு எதிராக - உடலுறவுக்கு சக்தியற்ற மனைவி மறுத்தால் - வானவர்கள் ஒரு போதும் சபிக்க மாட்டார்கள். கணவன் படுக்கைக்கு அழைக்கும்போது, உடலுறவுக்கு வலுவிருந்தும் மறுக்கும் மனைவியையே வானவர்கள் சபிக்கின்றனர் என்று விளங்கலாம்.

மனைவி உடல் நலமின்றி, இயலாமல் இருக்கும்பொழுது, மனிதாபிமானமுள்ள எந்தக் கணவனும் மனைவியுடன் உடலுறவு கொள்ள முயலமாட்டான். சுகமில்லாத மனைவிக்கு சிகிச்சையளித்து குணமடைய வேண்டியதைச் செய்வான்.

வெறுப்பு - கோபம்.
''ஒரு பெண் தன் கணவருடன் படுக்கையை(ப் பகிர்ந்து கொள்வதை) வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், (கணவனின் படுக்கைக்கு) அவள் திரும்பும் வரை வானவர்கள் சபிக்கின்றனர்.'' (புகாரி, 5194)

''ஒருவர் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.'' (புகாரி, 3237)

கணவன் படுக்கைக்கு அழைக்கும்போது எவ்வித காரணமுமின்றி மனைவி அதை மறுத்து வெறுத்தால், கணவன் கோபமடைவது இயல்பு. தாம்பத்திய உறவுக்கு பெரும்பாலும் கணவனிடமிருந்தே முதல் முயற்சி தொடங்கும். கணவனுக்கு மனைவியின் மீது ஏற்படும் நியாயமான ஆசைகள், மனைவியால் மறுக்கப்பட்டால் பின் விளைவு, விபச்சாரம் - அன்னியப் பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் என விபரீத விளைவுகளுக்குத் தூண்டும் அபாயம் ஏற்படும். எனவே தம்பதிகளுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டிருந்தாலும் அதற்காக பழி தீர்க்க எண்ணி படுக்கையை வெறுப்பது கூடாது என்று இங்கு வலியுறுத்தப்படுகிறது. (இன்னும்... அடுத்த பகுதியில்)

அன்புடன்,
அபூ முஹை