Tuesday, November 27, 2007

ஷரஹ் எழுதும் அடியார்களே!

இஸ்லாம் மார்க்கத்தை வாழ்க்கை நெறியாகக் கொண்ட முஸ்லிம்கள் இறைவனையும், இறைத்தூதரையும் அனைத்து உலக விஷயங்களையும் விட அதிகமாக நேசிக்க வேண்டும்.

''உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன் பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட அவனது தூதரை விட அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்!'' (திருக்குர்ஆன், 009:024)

இஸ்லாத்தை விட மேலாக உறவுகளுக்கும், உலக செல்வங்களுக்கும் எந்த முக்கியத்துவமும் இல்லை என மேற்கண்ட இறைவசனம் ஆழமாக உணர்த்துகிறது. அதனால் இஸ்லாத்திற்காக எந்த வன்முறையிலும் ஈடுபடலாம் என்று அர்த்தம் கொள்ள இந்த வசனத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை! திருக்குர்ஆனின் மற்ற வசனங்கள் பிறருக்கு அநீதி இழைத்து வரம்பு மீறி நடப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது. (அதனால் படிப்பவர்கள் தங்கள் கற்பனையை வேறு திசையில் தட்டி விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.)

பெற்றோருக்குக் கட்டுப்பட வேண்டும், உறவுகளைப் பேண வேண்டும் என்றும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. எவன் ஒருவன் உறவை முறித்துக் கொள்கிறானோ அவனுடன் உள்ள உறவை நான் முறித்துக் கொள்வேன் என்று இறைவன் கூறுவதாக நபிமொழி இயம்புகிறது.

பூமியில் பரந்து சென்று உலக செல்வங்களைத் தேடிக் கொள்ளுங்கள். வீடு, தோட்டம், துரவுகள் என செல்வங்களை எந்த அளவுக்கு உங்களால் சம்பாதிக்க முடியுமோ, அவற்றை ஆகுமான வழியில் எவ்வளவும் சம்பாதித்து சேகரித்துக் கொள்ளுங்கள் என்றும் இஸ்லாம் அனுமதிக்கிறது!

ஆனாலும், ஏகத்துவ கொள்கைக்கு மாற்றமாக பெற்றோரும், உறவினரும் போதித்தால் அதற்கு இணங்காமல் இஸ்லாத்திற்கே முதலிடம் வழங்க, இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டும். இறைவழியில் செலவிட நேர்ந்தால் தமது செல்வங்களை தயக்கமில்லாமல் செலவிட முன் வர வேண்டும். என்பதே திருக்குர்ஆன் 009:024வது வசனத்தின் சுருக்கமான விளக்கம்.

''உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை, அவரது குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராக ஆகும்வரை அவர் (உண்மையான) நம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார். (புகாரி, 0015. முஸ்லிம்)

பெற்றோர், பிள்ளைகள், உறவினர்கள், உலக மாந்தர்கள் அனைவரையும் விட இறைத்தூதர் (ஸல்) அவர்களே ஒரு முஸ்லிமிற்கு மிகவும் பிரியமானவராக இருக்க வேண்டும். பிரியமானவர் என்றால், இம்மை எனும் இந்த உலக வாழ்க்கையில் வழிகாட்டியாகவும், மறைவான மறுமை வாழ்க்கை மீதான அவர்கள் அச்சமூட்டி எச்சரித்ததை நம்பிக்கை கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றிட வேண்டும்.

''நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்'' (திருக்குர்ஆன், 003:031)

இம்மை, மறுமை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அதற்கு முன்மாதிரியாக முஸ்லிம்கள் பின்பற்றிட ஒரே மாமனிதர் நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு எவரும் இல்லை! எனவும் திருக்குர்ஆன் வசனங்கள் சான்றுகள் பகிர்கின்றன.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு தனி மனிதரல்ல. இறைவனின் தூதுவர் எனும் மாபெரும் அந்தஸ்தை பெற்று இஸ்லாம் எனும் முழு மார்க்கமாகத் திகழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் நுபுவத்தைக் கீழ்த்தரமாக, கேவலமாக, அசிங்கப்படுத்தினால் அது இஸ்லாத்தை அவமதிப்பதாகும். அதை முஸ்லிம்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதையே வரும் நபிமொழியிலிருந்து விளங்கலாம்.

கண்பார்வையற்ற ஒரு மனிதரின் (தாய்மையடைந்த) அடிமைப்பெண், நபி (ஸல்) அவர்களை கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டும் நிந்தனைகள் பல செய்து கொண்டும் இருந்தாள். அம்மனிதர் பலமுறை மன்னித்தும் நபி (ஸல்) அவர்களை திட்டுவதை அவள் நிறுத்தவில்லை. அவர் பலமுறை அவளை எச்சரித்தும் அவள் திருந்தவில்லை. ஒரு நாள் இரவு அவள் நபி (ஸல்) அவர்களை அசிங்கமாகத் திட்டித் தீர்த்தாள், நபிகளை வசைமாறிப் பொழிந்தாள். எனவே கண்தெரியாத அந்த மனிதர் ஒரு கத்தியை எடுத்து அவளின் வயிற்றில் குத்திவிட்டார். இதனால் அவளும் அவள் வயிற்றிலிருந்த குழந்தையும் இறந்துவிட்டது. மறுநாள் காலை இச்சம்பவம் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் மக்கள் அவையை கூட்டினார்கள் பிறகு மக்களை நோக்கி கேட்டார்கள். ''மக்களே உங்களை பரிவுடன் கேட்கிறேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களில் யார் இந்த காரியத்தை செய்தது? மேலும் அவர் இவ்வவையில் இருப்பின் எழுந்து நிற்க வேண்டும் என்று அவர்மீது எனக்குள்ள உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்கள். பின்னர் மக்களிடமிருந்து ஒருவர் எழுந்து நின்றார்.

பிறகு அந்த நபர் நபி(ஸல்) அவர்களுக்கு முன் அமர்ந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! நான்தான் அவளின் உரிமையாளன். அவள் கேவலமான வார்த்தைகளால் உங்களை திட்டுவதும், தொடர்ந்து நிந்தனை செய்வதுமாக இருந்தாள். நான் அவளை பலமுறை மன்னித்தேன். இருப்பினும் அவள் உங்களை இகழ்வதை நிறுத்துவதாக இல்லை. அவளை பல முறை நான் எச்சரித்தும் தன் நிலையை மாற்றிக் கொள்வதாக அவள் இல்லை. அவளிடமிருந்து முத்துக்களைப் போன்ற இரு மகன்களைப் நான் பெற்றிருக்கின்றேன். அவள் என்னுடைய மனைவி. கடந்த இரவு அவள் உங்களைக் கேவலமாகத் திட்டிக் கொண்டும் வசைமாறிப் பொழிந்து கொண்டுமிருந்தாள். எனவே கோபத்தில் ஒரு ரம்பத்தை எடுத்து அவள் வயிற்றில் குத்திவிட்டேன்'' என்றார்.

பிறகு, ''சாட்சியாளர்களாக இருங்கள்! அவளின் இரத்தத்திற்கு பழி வாங்கப்படாது.'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( அபூதாவூத், நஸயீ )

இந்த நபிமொழிக்கு ஒரு மாற்று மத அடியார் கீழ்கண்டவாறு ''ஷரஹ்'' எழுதியிருக்கிறார்.

//முஹம்மதைத் திட்டினால் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் வயிற்றில் குத்தி கொன்று விட்டு வா. உன் மீது எந்த குற்றமும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்//

வேடிக்கையைப் பாருங்கள், முஹம்மதைத் திட்டினால் யாராய் இருந்தாலும் கொன்று விடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நபியவர்களின் மீது கூசாமல் அவதூறு கூறியிருக்கிறார். மேற்கண்ட நபிமொழியை மீண்டும் படித்துப் பாருங்கள். நபி (ஸல்) அவர்களுக்கு இந்த சம்பவம் நிகழ்ந்ததே தெரிந்திருக்கவில்லை. பின்னர் மக்கள் கூடியிருந்த அவையில், -''அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களில் யார் இந்த காரியத்தை செய்தது?'' - என்று விசாரிக்கிறார்கள். பிறகு கண் தெரியாத மனிதர் எழுந்து காரணத்தை கூறுகிறார். நடந்த சம்பவங்கள் மிகத் தெளிவாக இருந்தும் அதைத் திரிப்பதில் தேர்ந்தவர்கள் செய்யும் காரியத்தையே இந்த மாற்று மத அடியார் கையாண்டிருக்கிறார்.

நபி (ஸல்) அவர்கள் தமக்காக யாரையும் பழி வாங்கியதில்லை என நபிமொழி தொகுப்பு புகாரியில் இடம் பெற்ற செய்தி விளக்குகிறது. நபி (ஸல்) அவர்களுக்கு விருந்தளிக்கிறேன் என்று ஆட்டிறைச்சியில் விஷத்தைக் கலந்து கொலை செய்ய முயன்ற யூதப் பெண்ணையும் நபியவர்கள் மன்னித்தார்கள். நபித்துவம் துவக்க காலத்தில் மக்காவில் ஏகத்துவக் கொள்கையை எடுத்துரைத்த போது இவர் சூனியக்காரர், பைத்தியக்காரர் என்றெல்லாம் மக்காவாசிகள் விமர்சித்தார்கள். இன்னும் நபியவர்களைக் கொலை செய்யவும் முயன்றார்கள். இப்படித் தம்மை விமர்சித்தவர்களையும், தமக்குக் கொடுமைகள் இழைத்தவர்களையும் நபி (ஸல்) அவர்கள் மன்னித்தார்கள். தமக்காக யாரையும் பழி வாங்கியதில்லை!

வரலாறு இவ்வாறு இருக்க, சம்பந்தமில்லாமல் மேற்கண்ட நபிமொழிக்கு ''ஷரஹ்'' எழுதியவரின் கயமைத்தனம் நன்றாக விளங்குகிறது!

''உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை, அவரது குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராக ஆகும்வரை அவர் (உண்மையான) நம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.''

நபி (ஸல்) அவர்களை நேசிப்பது முஸ்லிம்களுக்கு நம்பிக்கை சம்பந்தப்பட்டது. அந்த நம்பிக்கையை கேவலப்படுத்தினால், அதன் விளைவுதான் இந்த சம்பவம்.

''கடந்த இரவு அவள் உங்களைக் கேவலமாகத் திட்டிக் கொண்டும் வசைமாறிப் பொழிந்து கொண்டுமிருந்தாள். எனவே கோபத்தில் ஒரு கத்தியை எடுத்து அவள் வயிற்றில் குத்திவிட்டேன்.''

இதிலிருந்து இஸ்லாத்தை விமர்சிப்பது என்பது வேறு, இஸ்லாத்தைக் கேவலாமாகத் திட்டி வசைமாறிப் பொழிவது என்பது வேறு. இரண்டாவதைச் செய்தால் அவர்கள் கொல்லப்பட்டாலும் அதற்கு ''பழிக்குப் பழி'' இல்லை என்று அந்த சம்பவத்துக்கு நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.

அதற்காக இன்று இஸ்லாத்தைக் கேவலமாக வசை பாடுபவர்களை தனி ஒரு முஸ்லிமோ அல்லது ஒரு குழுவோ கொன்றுவிட வேண்டும் என்று பொருள் இல்லை என்பதை முஸ்லிம்கள் விளங்கியே வைத்துள்ளனர்.

விளங்காத மாற்று மத அடியார்கள், இல்லாத விளக்கத்தை வழக்கம் போல் நபிமொழியில் திணிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இது இஸ்லாத்திற்கு எந்த தீங்கையும் ஏற்படுத்திடாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Sunday, November 25, 2007

முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாய் மாற்றுவது மிகவும் சுலபம்!

ஒரு கிறிஸ்தவ அறிஞரின் அறிக்கை


டாக்டர் J. டட்லி வுட்பரி, Dudley Woodberry என்பவர் ஒரு கிறிஸ்தவ அறிஞர் இவர் கிராமப்புறங்களில் வாழும் முஸ்லிம்களின் வாழ்க்கை - அவர்களை எப்படி கிறிஸ்தவர்களாக மாற்றுவது என்பனவற்றை ஆராய்ந்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் சுருக்கத்தைக் கீழே தருகின்றோம்.

(டாக்டர். டட்லி வுட்பரி என்பவர் தான் அமெரிக்க ஜனாதிபதி கார்ட்டருக்கு இஸ்லாமிய நாடுகளைப் பற்றியதொரு அறிக்கையைத் தயாரித்தத் தந்தவர்.)

என்னுடைய பார்வையில் இஸ்லாத்தை இரண்டாக பிரிக்கலாம். 1. நாட்டுப் புறங்களில் வாழும் பாமர மக்களிடையே இருக்கும் இஸ்லாம். இதனை கிராமிய இஸ்லாம் (Folk Islam) என அழைக்கலாம். 2. உண்மையான இஸ்லாம் (Classical Islam).

கிராமிய இஸ்லாம் என்பது இஸ்லாத்திற்கு முன்பிருந்த பல மூடப்பழக்க வழக்கங்களையும், மந்திர தந்திர மாயாஜாலங்களையும் தன்னகத்தே கொண்டது. இந்த இஸ்லாம் பெரும்பாலும் பாமர மக்களிடையே பழக்கத்திலிருக்கின்றது. இந்தப் பாமர மக்கள் தங்கள் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் நோய் நொடிகளுக்கும் மந்திர தந்திரங்களைப் பயன்படுத்தி நிவாரணம் காண்பதில் தீவிரமாக இருக்கின்றார்கள். மெஞ்ஞானிகள் என கருதப்படும் சூஃபியாக்கள் இந்த இஸ்லாத்தை மக்கள் மத்தியில் வேரூன்றச் செய்தவர்கள்.

இந்தக் கிராமிய இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள் தங்கள் நடைமுறை வாழ்க்கையில் மூடத்தனம் நிறைந்த பல ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைபிடிக்கின்றார்கள். மெஞ்ஞானிகள் எனக் கருதப்படும் சிலர் இந்தப் பாமர மக்களிடையே பல மூட நம்பிக்கைகளையும் சாதுர்யமாகத் திணித்துள்ளனர்.

மூடப் பழக்க வழக்கங்கள் நிறைந்த இந்தக் கிராமிய இஸ்லாத்தைத்தான் முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் பின்பற்றி வருகின்றார்கள்.

முஸ்லிம்களில் 70 சதவிகிதத்தினர், மனிதப் புனிதர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பீர்களிடமும் வலிகளிடமும் சென்று தங்களது அந்தரங்க நோய்கள் முதல் அனைத்து நோய்களுக்கும் வைத்தியம் தேடுகின்றார்கள், ஆகவே பீர்களும் வலிகளும் பாமரமக்களிடையே ஆதிக்கம் நிறைந்தவர்களாக இருக்கின்றார்கள்.

சவூதி அரேபியா போன்ற நாடுகளில் இந்த இஸ்லாத்திற்கு அதிகமாக இடமில்லை. காரணம் அங்கே உள்ள அரசுகள் இந்த மூடதனங்களை ஒட்டுமொத்தமாகத் தடை செய்துள்ளது.

மலேசியா - இந்தியா - இந்தோனேசியா நாடுகளில் இந்தக் கிராமிய இஸ்லாம் 'ஷேக்' குகளின் ஆசியோடு பாமர மக்களிடையே பீடு நடை போடுகின்றது.

இஸ்லாத்தை ஒரு கொள்கையாகவும் இறைவனின் வழிகாட்டுதல்களை வாழ்வின் இலட்சியமாகவும் கொண்டு வாழம் உண்மையான முஸ்லிம்கள் (Classical Muslims) இந்தக் கிராமிய இஸ்லாத்தின் பிடியை மெல்ல மெல்ல தளர்த்தி வருகின்றார்கள்.

எகிப்து நாட்டில் மூடத்தனமான இந்தக் கிராமிய இஸ்லாத்திற்கு சாவுமணி அடித்தது முஸ்லிம் சகோதரத்துவம் என்ற இக்வானுல் முஸ்லிமுன் இயக்கம். இந்த இயக்கத்தை முன்னோடியாகக் கொண்டு முகிழ்ந்த பல இயக்கங்கள் பாமர மக்களை உண்மையான இஸ்லாத்தின் பக்கம் இழுத்து வருகின்றன.

எனினும் முஸ்லிம்களில் - பெரும் பகுதியினர் இந்தக் கிராமிய இஸ்லாத்தைப் பின்பற்றியே வாழ்ந்து வருகின்றனர்.

கிறிஸ்தவர்களாகிய நாம் இந்தக் கிராமிய இஸ்லாத்தைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்களிடையே தான் அதிகமாக நமது பிரச்சாரத்தை செய்ய வேண்டும். இவர்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதே எளிது. 1960 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை உலகெங்கும் கிறிஸ்தவத்திற்குத் தாவிய முஸ்லிம்கள் அனைவரும் இந்தக் கிராமிய இஸ்லாத்தைச் சார்ந்தவர்களே! முஸ்லிம்களை கிறிஸ்தவத்திற்கு மாற்றும் நமது பணி பீர்களாலும், வலிகளாலும் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வரும் இந்த முஸ்லிம்களைச் சுற்றியே இருந்திட வேண்டும்.

(லண்டனில் இருந்து வெளியாகும் FOCUS இதழிலிருந்து எம்.ஜி.எம். நன்றி: சமரசம்)

அந்நஜாத், செப்டம்பர் 1986

Saturday, November 03, 2007

இறைத்தூதரின் அறிமுகம்!

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று தாமே சொல்லிக் கொள்ளவில்லை என்றொரு தவறானக் கருத்து வைக்கப்படுகிறது. முஹம்மது நபியை, அல்லாஹ்வின் தூதர் என்று மக்களாக விரும்பி அழைத்துக் கொண்டனர் என்று இஸ்லாத்திற்கு எதிரானக் கருத்தும் பேசப்படுகிறது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம்மை அல்லாஹ்வின் தூதர் என்று சுய அறிமுகம் செய்து கொள்ளாமல், முஹம்மதை இறைத்தூதர் என்று மக்கள் எப்படித் தெரிந்து கொண்டிருப்பார்கள்? இது சாத்தியமா? என்று பார்ப்போம்.

அறிமுகமில்லாத எவரும் தன்னை அறிமுகம் செய்து கொள்ளாமல் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாது உதாரணமாக:

ஒருவரைச் சந்திக்கும் பொழுது அவர் நானொரு பொறியாளர் என அறிமுகப்படுத்திய பின்னர் அவர் ஒரு பொறியாளர் என்பதைத் தெரிந்து கொள்வோம். இதை அவராகச் சொல்லாமல் அவரைத் தெரிந்து கொள்ள முடியாது. இன்னொரு வழி: அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் மூலமாகத் அறிந்து கொள்ள முடியும். அது, அவர் மற்றவருக்கு ஏற்கெனவே தன்னை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார் என்று பொருள்.

நபித்துவ வாழ்வுக்கு முன், நபி (ஸல்) அவர்களை முஹம்மத் என்ற பெயரில் மக்கா நகர் மக்கள் அறிந்திருந்தனர். முஹம்மத் உண்மையாளர், மிக நம்பிக்கையானவர் என்று நன்மதிப்பும் வைத்திருந்தனர். நபியவர்களின் நாற்பதாம் வயதில் இறைவனால், இறைத்தூதுவராக நியமிக்கப்படுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது நாற்பது வயது வரை, அதாவது அவர்கள் நபியாகத் தேர்ந்தெடுக்கும் வரை வேதம் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தார்கள்.

(நபியே) இவ்வேதம் உமக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்த்தவராக நீர் இருக்கவில்லை. (திருக்குர்ஆன், 028:086)

இவ்வாறே நம் கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்பது என்ன என்பதை (நபியே) நீர் அறிந்தவராக இருக்கவில்லை. திருக்குர்ஆன்,(042:052)

நாற்பது வயதுக்கு முன் வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்றால் என்ன? என்பது கூட நபியவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. தாம் நபியாகத் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. என்பதை மேற்கண்ட இறைவசனங்கள் உணர்த்துகின்றன. நபியவர்களுக்கு முதன்முதல் இறைச் செய்தி வந்தபோது அதையும் அவர்களால் உறுதி செய்ய முடியாமல் இருந்தார்கள் என்பதை வரலாற்றில் படிக்கிறோம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நாற்பதாம் வயதில் இறைவனால் அவனது தூதுவராகத் தேர்ந்தெடுக்கபடுகிறார்கள். இந்தத் தேர்வு இறைவனுக்கும், நபியவர்களுக்கும் மட்டுமுள்ள தொடர்பாக இருக்கிறது. அப்படியானால் இறைவன் நபியவர்களைத் தூதராகத் தேர்ந்தெடுத்தச் செய்தி மூன்றாமவருக்கு எப்படித் தெரிந்தது? என்ற விடையில்லாக் கேள்வி இங்கு எழுகிறது.

முஹம்மது நபி (ஸல்)அவர்கள் தாம் ஒரு இறைத்தூதர் என்று மக்களிடம் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட பின்னரே இறைவனின் பக்கம் மக்களை அழைத்து, ஏகத்துவ இஸ்லாமியப் பிராச்சாரத்தைத் துவங்கினார்கள்.

நபியவர்கள் தம்மை இறைத்தூதர் என்று அறிமுகம் செய்த பின்னரே அவர்களை ஏற்றுக்கொண்ட மக்கள் ''அல்லாஹ்வின் தூதரே!'' என்றும் அழைத்து வந்தார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதராக தாமாகச் சொல்லிக் கொண்டதில்லை என்பது சரியான வாதமல்ல! மாறாக, நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் தம்மை இறைத்தூதர் என சுய அறிமுகம் செய்து கொண்டார்கள் எனபதற்கு வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

''மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர்.'' (திருக்குர்ஆன், 007:158)

''நாம் உம்மை மனிதர்களுக்கு தூதராகவே அனுப்பியுள்ளோம்'' (திருக்குர்ஆன், 004:079 இன்னும் பார்க்க: 004:170. 033:040)

முஹம்மது நபியவர்கள் மனிதகுலம் அனைவருக்கும் இறைத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றே திருக்குர்ஆன் மக்களிடையே அறிமுகம் செய்கிறது. குர்ஆன் வசனங்கள் அனைத்தும் நபி (ஸல்) அவர்களின் வாய் வார்த்தைகள் வழியாகவே இறைவன் அருளினான். ''மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர்.'' எனும் வசனத்தின் வாயிலாக தம்மை இறைத்தூதர் என மக்களிடம் சுய அறிமுகம் செய்து கொள்ளும்படி திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.

முஹம்மது நபி தம்மை இறைத்தூதர் என்று அறிவித்துக் கொண்டதில்லை என்ற வாதம் தவறானது என்பதை மேற்கண்ட வசனங்கள் மெய்பிக்கிறது.

மேலும், ''(நபியே) உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக'' (026:214) என்ற வசனம் அருளப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று எச்சரித்தார்கள்.

''அல்லாஹ்வின் தூதர்'' (ஸல்) அவர்களுடைய அத்தையான ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது'' என்று எச்சரிக்கை செய்கிறார்கள். (புகாரி, 4771)

இங்கு தமது தந்தையுடன் பிறந்த சகோதரி, உறவு முறையில் அத்தையாகிய ஸஃபிய்யாவை நோக்கி ''அல்லாஹ்வின் தூதரின் அத்தையே'' எனத் தம்மை இறைத்தூதர் என்று அறிமுகப்படுத்துகிறார்கள்.

ஹுதைபிய்யா உடன்படிக்கையில், ''இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது அவர்கள் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம்'' என்று உடன்படிக்கையில் எழுதும்படி நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி, 2732) (அவ்வாறு எழுத குறைஷியர் சார்பில் ஒப்பந்தம் செய்தவர் மறுத்து விட்டால் என்பது தனி விஷயம்)

இன்னும் அழைப்புப் பணியில், அரசர்களுக்கும், ஆளுனர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் கடிதம் எழுத நாடியபோது அரசர்கள் முத்திரை இல்லாத கடிதங்களை படிக்க மாட்டார்கள் என்பதால் வெள்ளியிலான மோதிரத்தை தயார் செய்தார்கள். அதில் முஹம்மது ரஸூலுல்லாஹ் என்று பதித்தார்கள்.

அல்லாஹ்

ரஸூல்

முஹம்மது


என்று அதில் மூன்று வரிகளாக இருந்தது (புகாரி)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ஹபஷாவின் மன்னர் அஸ்ஹாம் என்ற நஜ்ஜாஷிக்கு எழுதப்படும் கடிதமாகும்..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் எழுதுகிறேன். அல்லாஹ்வின் அடிமையும், அவனது தூதருமான முஹம்மது, கிப்திகளின் மன்னருக்கு எழுதுவது...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, பாரசீகர்களின் மன்னர் கிஸ்ராவுக்கு எழுதுவது...

மேற்கண்டவாறு நபி (ஸல்) அவர்கள் அரசர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். இந்தக் கடிதங்களிலெல்லாம் இறைத்தூதர் முஹம்மது எழுதிக்கொள்வது என்று தம்மை அல்லாஹ்வின் தூதர் என்றே அறிமுகம் செய்து கொண்டார்கள்.

எனவே நபி (ஸல்) அவர்கள், சொல்லாலும், எழுத்தாலும் தம்மை அல்லாஹ்வின் தூதர் என சுய அறிமுகப்படுத்திய பின்னரே அவர்கள் இறைத்தூதர் என மற்றவர்கள் அறிந்துகொண்டார். அறிந்து நபியவர்களைப் பின்பற்றியவர்கள் முஹம்மதை இறைத்தூதர் என ஒப்புக் கொண்டு, நபியை "அல்லாஹ்வின் தூதரே!" என்று அழைத்து வந்தார்கள்.

ஆகவே, முஹம்மது நபி தம்மை இறைத்தூதர் என்று அறிமுகப்படுத்தியதில்லை என்பது தவறானக் கருத்து மட்டுமல்ல, இஸ்லாத்திற்கு முரண்படும் கருத்துமாகும் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை