சுழலும் பூமி(4) -11
ஏ.கே.அப்துர் ரஹ்மான்
சூரியன் சுழல்வதால்தான் இராப்பகல்கள் ஏற்படுகின்றனவே அன்றி, சூரியன் பூமியைச் சுற்றி வரவில்லை எனக் கூறும் திருமறையின் பற்பல வசனங்களை முந்திய கட்டுரைகளில் கண்டோம். சூரியக் குடும்பத்தின் இயக்கதைப் பற்றிய இந்த நவீன அறிவியல் கண்டுபிடிப்பை மேலும், மேலும் வலியுறுத்திக் கொண்டிருக்கும் சத்தியத் திருமறையின் மேலும் ஓர் அற்புதத்தைப் பாருங்கள். திருக்குர்ஆன் கூறுகிறது:
'பின் வாங்கிச் செல்லும் இரவின் மீதும், புலரும் வைகறையின் மீதும் நான் சத்தியம் செய்கிறேன். உண்மையில் இது கண்ணியமிக்க தூதர் ஒருவரின் வாக்காகும்...(எனவே) நீங்கள் (இவ்வேதத்தைப் புறக்கணித்து) எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்?. இதுவோ அனைத்துலக மக்களுக்கும் உரிய ஓர் அறிவுரையாகும்.' (அல்-குர்ஆனின் 81வது அத்தியாயம் ஸுரத்துத் தக்வீரின் 17முதல் 27 வரையிலான வசனங்கள்).
இந்த வசனங்களின் வாயிலாக, இத்தூயத் திருமறை இறைச் செய்தியை அறிவிக்கும் ஒரு வானுலகத் தூதரால் (ஜிப்ரீல்) ஓதிக் காட்டப்பட்ட வசனங்களேயன்றி இது மானிடக் கற்பனையன்று!. ஆகவே உலக மக்கள் அனைவரும் இதனை ஏற்று ஒழுக வேண்டும் என ஆணையிட்டுக் கூறுகிறான் அல்லாஹ்!.
இந்த வசனங்களின் ஆணைப் பொருட்களாக இரவையும், வைகறையையும் இறைவன் பயன்படுத்தியுள்ளான். இரவு என்பது பின்வாங்கிச் செல்லும் நிலையையும், வைகறை (விடியற்காலை) என்பது புலரும் நிலையையும் பெற்றிருப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மையாகத் திருக்குர்ஆன் கண்ணியமிக்க தூதர் ஒருவாரால் ஓதிக் காட்டப் படுவதே என்பதும் எனக் கூறுகின்றன இந்த வசனங்கள்.
சூரியன் பூமியைச் சுற்றுவதால் இராப்பகல் ஏற்படுகின்றனவா அல்லது பூகோளம் தன்னைத்தான் சுற்றுவதால் இராப்பகல்கள் ஏற்படுகின்றனவா என்ற கேள்விக்குத் தெள்ளத் தெளிவாக இந்த வசனங்கள் பதிலளித்துக் கொண்டிருப்பதைக் கவனித்துள்ளீர்களா?.
இராப்பகலை ஏற்படுத்தும் நிகழ்ச்சி எப்படி இருந்தால் இரவு பின்வாங்கிச் செல்லும் நிலை ஏற்படுமோ அதுவே இராப்பகல் மாற்றத்திற்குரிய காரணமாகும் என இந்த வசனம் கூறுகிறது. ஆகவே இரவைப் பின் வாங்கிச் செல்ல வைக்கும் இயக்கம் எது என்று கண்டுபிடித்து விட்டோம் என்றால், இராப்பகல் மாற்றத்திற்குரிய காரணமாக அல்லது சூரியக் குடும்பத்தின் இயக்கமாகத் திருமறை எதைக் கூறிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்! இரவைப் பின்வாங்கச் செய்யும் அந்த இயக்கம் யாது?.
விவாதத்திற்குரிய இந்த இயக்கத்தைப் புரிந்து கொள்ளும் பொருட்டு 'பின்வாங்கிச் செல்ல' என்றால் என்ன என்பதை முதலாவதாக நாம் விளங்கிச் கொள்வோம்.
நிகழ்ச்சி ஒன்று நடைபெற வேண்டுமாயின் இயக்கம் ஒன்று இருந்தாக வேண்டுமென்பதை நாம் அறிவோம். அதே நேரத்தில் நடைபெறும் நிகழ்ச்சி பின்வாங்கிச் செல்லும் நிகழ்ச்சியாக இருக்க வேண்டுமாயின் அதை நிகழ்த்தும் இயக்கம் இரண்டு இன்றியமையாத நிபந்தனைகளைப் பெற்றிருக்க வேண்டும்.
முதலாவதாக பின்வாங்கிச் செல்லும் நிகழ்ச்சியை நிகழ்த்தும் இயக்கம் எதுவோ அது பின்வாங்கும் நிகழ்ச்சியை நிகழ்த்துவதற்கு முன் அது முன்னோக்கி செல்லும் இயக்கமாக இருக்க வேண்டும்.
அடுத்தபடியாக எந்த இயக்கம் பின்வாங்கிச் செல்லும் இயக்கமாக இருக்க வேண்டுமோ அந்த இயக்கம் எத்திசையில் முன்னேறுகிறதோ அந்த முன்னேற்றம் ஒரு குறிப்பிட்ட இலக்கில் அல்லது எல்லையில் அதற்கு நேர் எதிர்த்திசையில் இயங்க வேண்டும். அப்போதுதான் அது பின் வாங்கிச் செல்லும் இயக்கமாக அமைய முடியும்.
சான்றாக சுழலும் காற்றாடியின் (FAN) பட்டைகள் (Leaves) ஒன்றன் பின் ஒன்றாக, ஒரே திசையில் சுழல்கின்றனவேயன்றி, எந்த ஒரு எல்லையிலும் அவை சுழலும் திசைக்கு எதிர்திசையில் சுழலலில்லை. எனவே காற்றாடியின் பட்டைகள் முன்னோக்கிச் சுழல்கின்றனவேயன்றி, பின் வாங்கிச் செல்வதில்லை. ஆனால் சுவரில் எரியப்பட்ட பந்து சுவரில் பட்டவுடன் அதற்கு எதிர்த்திசையில் இயங்குகிறது. இதைப்போன்று இரவும் ஒரு குறிப்பிட்ட எல்லையை அல்லது இலக்கை அடைந்தவுடன் அது செல்லும் திசைக்கு எதிர்த் திசையில் இயங்க வேண்டும். அப்படிப்பட்ட இயக்கம் யாது?.
எரியப்பட்ட பந்திற்கு அது பட்டுத் திரும்பும் சுவர் எல்லையாக அமைவதைப் போன்று, பூமியின் நகரும் இரவும், ஒரு குறிப்பிட்ட எல்லையில் பட்டு அதற்கு எதிர்த்திசையில் திரும்ப வேண்டும். ஆகவே நகரும் இரவைத் திசைத் திருப்பும் எல்லைக் கோடு எது?
இந்த வினாவிற்குக் கூட சத்தியத் திருமறை பதில் கூறும் அற்புதத்தைப் பாருங்கள்! திருமறை கூறுகிறது:
'திரும்பிச் செல்லும் இரவின் மீது சத்தியமாக! பிரகாசமடையும் விடியற்காலையின் மீதும் சத்தியமாக! இந்த நரகம் மிகப் பெரியவற்றுள் ஒன்றாகும்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 74 ஸுரத்துல் முத்தஸ்ஸிரின் 33 முதல் 35 வரையிலான வசனங்கள்).
இந்த வசனங்கள் சத்தியத் திருமறை இறைவேதமன்று: இது மானிடக் கற்பனையே எனக் கூறக் கூடியவர்கள் அடைய இருக்கும் தண்டனையாகிய கொடிய நரகத்தைப் பற்றி ஆணையிட்டு எச்சரிக்கை செய்கின்றன. இந்த வசனங்களில் இரவு பிரகாசமடையும் நிகழ்ச்சியே விடியற்காலை என்றும், அவ்வாறு நிகழும் விடியற்காலையானது இரவு திரும்பிச் செல்லும் பொழுதே நடைபெறுகிறது என்றும் கூறுகின்றன. எனவே முன்னேறிச் செல்லும் இரவின் இயக்கம் விடியற்காலை எனும் எல்லையில் அதாவது உதய எல்லையில்தான் திருப்பப்பட்டுத் திரும்பிச் செல்கிறது அல்லது பின் வாங்கிச் செல்கிறது என இந்த வசனங்கள் தெள்ளத் தெளிவாக விளக்கம் தருகின்றன.
சத்தியத் திருமறை கூறும் இந்த விளக்கத்திற்கிசைய இரவின் இயக்கம் அமைய வேண்டுமாயின் அதற்காக நடைபெற வேண்டிய நிகழ்ச்சி யாது?. சூரியன் பூமியைச் சுற்றினால் அந்த இயக்கம் நடைபெறுமா? அல்லது பூகோளம் தன்னைத்தான் சுற்றினால் நடைபெறுமா?.
சூரியன் பூமியைச் சற்றுவதாக இருந்தால் இந்த இயக்கம் நிச்சயமாக நடைபெறாது. சான்றாக, சூரியன் இப்போது இந்தியாவின் உச்சியில் நகர்வதாக வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் பூமியன் மீதுள்ள இரவுப் பகுதி அட்லாண்டிக் சமுத்திரத்தில் ஆரம்பித்து, அமெரிக்கக் கண்டத்தைச் சுற்றி, பசிபிக் சமுத்திரம் வரை பரவியிருக்கும். சூரியன் நகர, நகர இரவும் சூரிய வெளிச்சத்திற்கு முன்னால் நகர்ந்து கொண்டிருக்கும். சூரியன் பூமியைச் சுற்றி எவ்வளவு முறை வலம் வந்தாலும் நகரும் சூரிய வெளிச்சத்திற்கு முன்னால் இரவு ஒரே திசையில் நகர்ந்து கொண்டிருக்குமேயன்றி, எந்த ஒரு இடத்திலும் இரவானது, தான் நகர்ந்து கொண்டிருக்கும் திசைக்கு எதிர்த்திசையில் திரும்பிச் செல்லாது. ஆகவே சூரியன் பூமியைச் சற்றுகிறது எனக்கூறும் புவிமையக் கோட்பாட்டை இந்த வசனமும் வன்மையாக மறுத்துக் கொண்டிருக்கிறது.
சத்தியத் திருமறை மறுக்கும் தத்தவம் இது என்பதைத் தெரிந்து கொண்டோம். எனவே இம்மாமறை வற்புறுத்தும் இயக்கம் எது?. அதுதான் சூரியக் குடும்பத்தின் இயக்கத்தைப் பற்றிய நவீன அறிவியல் கண்டுபிடிப்பாகும்.
இந்த இயக்கத்தை விளக்கும் பொருட்டு இங்கு பூகோளத்தின் எட்டு வரை படங்கள் வரையப் பட்டுள்ளன. இப்படங்கள் இரவின் நகர்வைப் புரிந்து கொள்ளும் பொருட்டு ஒரு வசதிக்காக பூகோளத்தின் நிலப் பரப்பு 24 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப்போது பூகோளத்தின் சுழற்சியின் காரணமாக சூரியன் அட்லாண்டிக் சமுத்திரத்தை நோக்கி மத்தியத் தரைக்கடலின் உச்சியிலிருந்து நகர்வதாக வைத்துக் கொண்டால் ஆசிய நாடுகளின் அஸ்தமனமும், வட அமெரிக்க நாடுகளில் உதயமும் நிகழ்ந்து கொண்டிருக்கும். எனவே இந்தியாவும் அஸ்தமன எல்லையில் இரவைப் பெற்றுத் தொடர்ந்து 12 மணி நேரங்கள் முன்னேறிச் சென்று உதய எல்லையைத் தொடுகிறது.
பூகோளப் படத்தில் எண் 18 எனக் குறிக்கப்பட்ட நிலப் பரப்பில் இந்திய உள்ளது. இப்போது எண் 18ல் உள்ள இந்தியா உதய எல்லையைத் தொட்டுக் கொண்டிருப்பதைப் படம் அ-வில் காண்கிறீர்கள்.
இப்போது பூகோளம் மேலும் சுழல்கிறது. எனவே உதய எல்லையை அடைந்த இந்தியா அதைத் தாண்டி பகல் பகுதிக்குள் புகுந்து விடுகிறது. ஆனால் அஸ்தமன எல்லையில் இருந்து இந்தியாவுடன் 12 மணிநேரம் முன்னோக்கி வந்த இரவு இப்போது என்ன செய்யும்?. தொடர்ந்து இந்தியாவுடன் பகல் பகுதியிலும் பயணம் செய்ய முடியுமா?. செய்ய முடியாது!.
ஆகவே அஸ்தமன எல்லையிலிருந்து இந்திய நிலப் பரப்பாகிய எண் 18-ல் குடியேறி அதனுடன் மேற்கிலிருந்து கிழக்காக வந்த இரவு உதய எல்லையை அடைந்தவுடன் அதற்கு மேலும் பயணம் செய்ய இயலாமல் தடுக்கப்படுகிறது. இவ்வாறு உதய எல்லையால் எண் 18லிருந்து தடுக்கப்பட்ட பிறகும் எண் 18-ல் இருந்த நிலப்பரப்பு (இந்தியா) பூகோளத்தின் சுழற்சியின் காரணமாக முன்னேறிச் செல்வதால் எண் 18-ல் இருந்த இரவு வேறு வழியின்றி எண் 17-ல் உள்ள நிலப் பரப்புக்குப் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. (படம் - ஆ)
ஆதாவது அஸ்தமன எல்லையிலிருந்து கிழக்கு நோக்கி வந்த இரவு உதய எல்லையைத் தொட்டதும் அதற்கு நேர் எதிர்ச் திசையாகிய மேற்கை நோக்கித் திரும்பிச் செல்கிறது!.
அற்புதமன்றோ நிகழ்த்தி நிற்கிறது ஒப்பற்ற வான்மறை?.
எண் 17-ல் இருப்பது பாகிஸ்தான் எனக் கொள்வோம். இந்த நிலப் பரப்பும்கூட அஸ்தமன எல்லையில் இருந்து இரவைப்பெற்றே முன்னேறி வந்துள்ளது. இந்தியா உதய எல்லையைத் தாண்டிய பிறகு பாகிஸ்தான் உதய எல்லையைத் தாண்டுகிறது. அப்போது பாகிஸ்தானிலிருக்கும் (எண் 17) இரவும் அதற்கு மேல் பாகிஸ்தானுடன் பயணம் செய்ய இயலாமல் பாகிஸ்தானை விட்டுவிட்டு 16-ல் இருக்கும் வளைகுடாவிற்குப் பின் வாங்குகிறது. (படம் இ)
எண் 16க்குப் பிறகு பின்வாங்கிய இரவு அதற்கு பிறகு என்ன செய்யும்?. தொடர்ந்து எண் 16-உடன் பயணம் செய்ய இயலுமா?. இயலாது. ஏனெனில் பூகோளத்தின் சுழற்சி எண் 16-ஐயும் உதய எல்லையைத் தாண்டச் செய்தால் அதிலுள்ள இரவு எண் 15-க்குப் பின்வாங்குகிறது. (படம் ஈ). அதன் பிறகு எண் 15-லிருந்து எண் 14-க்கும், (படம் -உ) பிறகு எண் 13-க்கும் (படம் ஊ) பிறகு எண் 12-க்கும் (படம் எ) பிறகு எண் 11-க்கும் (படம் - ஏ) பின் வாங்குகிறது.
கணமும் நிற்காமல் சுழன்று கொண்டிருக்கும் பூகோளம் தொடர்ந்து சுழல்கிறது. எனவே கணமும் ஓயாமல் இரவும், அஸ்தமன எல்லையிலிருந்து உதய எல்லைவரை மேற்கிலிருந்து கிழக்காகச் சென்று உதய எல்லையைத் தொட்டதும் அதற்கு நேர் எதிர்த் திசையில் கிழக்கிலிருந்து மேற்காகப் பின் வாங்குகிறது.
எண் 11-ல் இருக்கும் இரவு படிப்படியாக 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 24, 23, 22, 21, 20, 19 எனப் பின்வாங்கி முடிவில் எண் 18-ஐ மீண்டும் அடைகிறது. பூகோளத்தின் அடுத்த சுழற்சியில் திரும்பவும் பழைய கதை ஆரம்பிக்கிறது.
அற்புதம் என்றால் இதுவன்றோ அற்புதம்!. சூரியன் பூமியைச் சுற்றினால் இந்த நிலை ஏற்படுமா?. பூகோளத்தின் சுழற்சியின் காரணமாக அதன் மீது கட்டுண்டு நிற்கும் இரவு மற்றும் பகல் பகுதிகளுக்குள் பூகோளம் ஓயாமல் சுழன்று கொண்டிருந்தால் அல்லவா இந்த நிலை ஏற்படும்!. இந்த நவீன அறிவியல் பேருண்மையை மேலும், மேலும் நிறுவிக் கொண்டிருக்கும் அற்புதமான மற்றுமோர் சொல்லோவியத்தையும் நீங்கள் பார்க்க வேண்டாமா?. அற்புதத் திருமறை கூறுவதைப் பாருங்கள்:
'இரவையும், பகலையும் அல்லாஹ்தான் புரட்டிக் கொண்டிருக்கின்றான். திண்ணமாக இதில் பார்வை உடையவர்களுக்கு ஒரு படிப்பினை இருக்கின்றது' (அல்-குர்ஆன் 24வது அத்தியாயம் ஸுரத்துந் நூரின் 44வது வசனம்).
பார்வையுடைய நண்பர்களே! நீங்கள் கூறுங்கள். இதில் படிப்பினை உண்டா?. இல்லையா?. சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் இரவோ, பகலோ எந்த இடத்திலாவது புரண்டு வருமா?. சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் இரவும் பகலும் பூமியின் மீது சுழன்று வருமேயன்றிப் புரண்டு வராது என்பதை விளக்கத் தேவையில்லை. அதே நேரத்தில் சூரியனுக்கு முன்னால் பூகோளம் சுழல்வதாக இருந்தால் நிலை என்ன?.
பூகோளத்தின் சுழற்சியின் காரணமாக உதய எல்லையில் மோதும் இரவு அதற்கப்பால் செல்ல இயலாமல் உதய எல்லையில் புரள்கிறது. அதைப் போன்று அஸ்தமன எல்லையில் மோதும் பகல் அஸ்தமன எல்லையில் புரள்கிறது. இந்த நிலைதானே ஏற்படும்!. எவ்வளவு அழுத்தம் - திருத்தமாக இச்சத்தியத் திருமறை பூகோளத்தின் சுழற்சியை எடுத்தியம்பிக் கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்தீர்களா?. ஆனால் திருமறை கூறியதைப் போல் இந்த விஷயத்தில் பார்வையுடையவர்கள் யாரும் அப்போது இல்லாது போன காரணத்தால் மனித குலத்தால் இந்த வசனங்களில் காணப்படும் அரிய அறிவியலைப் புரிந்து கொள்ள இயலாமல் போயிற்று.
ஆனால்..! மாசு மருவற்ற இந்த சத்தியத் திருமறையின் ஜீவ வசனங்கள் சான்றளித்ததைப் போல் இந்த விஷயங்களில் பார்வையுடையவர்களாகிய கோபர் நிக்கஸ், கெப்ளர், கலீலியோ போன்ற அறிவியல் மேதைகள் வந்தவுடன் இத்தூய வசனங்களின் நிரூபண உண்மைகளைக் கண்டு நாம் வியந்து நிற்கிறோம்.
அன்பார்ந்த நண்பர்களே! சூரியக் குடும்பத்தின் இயக்கத்தைப் பற்றிய நவீன அறிவியலைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் பற்பல திருமறை வசனங்களை இத்தொடர்களில் கண்டு வந்தீர்கள். உண்மை எதுவோ அதை, அது எங்கிருந்து வந்த போதிலும் ஏற்றே ஆக வேண்டும் எனும் அளவிற்கு உண்மையின்பால் பற்றும் மரியாதையும் கொண்ட எவருக்குமே இதற்கு மேலும் இந்த வசனங்களில் ஐயமிருக்க முடியாது. இப்போது அவர்களிடம் எஞ்சி நிற்கக் கூடியது ஒரே ஒரு வினா மட்டுமே!
இராப்பகல் மாற்றத்திற்காகச் சூரியன் நகரத் தேவையில்லை எனில் சூரியனும் நகர்வதாகக் திருக்குர்ஆன் (21:33) கூறியதைக் கண்டோமே! குர்ஆன் கூறியதைப்போல் மெய்யாகவே சூரியன் நகர்கிறதா? நகர்கிறது எனில் அந்த நகர்வு எந்த வகையில் அமைந்துள்ளது?. இதைப்பற்றி திருக்குர்ஆன் ஏதேனும் விளக்கமளிக்கிறதா?. என்பதே அந்த வினாவாகும்.
மேற்படி வினாவுக்கும் திருமறை குர்ஆன் விடையளிக்கிறது:
'மேலும் சூரியன் (அவர்களுக்கோர் சான்றாகும்) அது தனக்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது பேரறிவு படைத்தவனும் வல்லமை மிக்கவனும் நிர்ணயித்தாகும்' (அல்-குர்ஆன் அத்தியாயம் 36 - ஸுரத்துல் யாஸீன் 38வது வசனம்).
இந்த தூய வசனம் இத்தலைப்போடு தொடர்பு கொண்ட மூன்று விஷயங்களைத் தெரிவிக்கிறது.
முதலாவதாக சூரியன் நகர்கிறது என்பது உண்மையே என்றும், இரண்டாவதாக அந்த நகர்வு பூகோளத்தைச் சுற்றிக் கொண்டிருக்கக்கூடிய நகர்வு இல்லையென்றும், மூன்றாவதாக சூரியனுக்கென்று ஒரு இடம் இருப்பதாகவும், அந்த இடத்திற்குத்தான் அது நகர்கிறது என்றும் கூறுகிறது.
இதில் காணப்படும் முதலிரண்டு விஷயங்களை அறிவியல் நிரூபித்துவிட்டதை விளக்கத் தேவையில்லை. ஆனால் மூன்றாவதாக சூரியனுக்கோர் இடம் இருப்பதாகவும், அதை நோக்கியே அது சென்று கொண்டிருப்பதாகவும் இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வசனத்தை மேலும் சற்று ஆழமாகப் பார்த்தால்தான் திருமறை கூறுகின்ற சூரியனுக்குரிய இடத்தை நம்மால் உய்த்துணர முடியும். அதன் பிறகுதான் அதை அறிவியலோடு ஒப்பிட்டு பார்க்கவும் இயலும். ஆகவே நாம் இந்த விஷயத்தை நாம் வேறு தலைப்பில் ஆய்வு செய்வோம். இன்ஷா அல்லாஹ்.
அதே நேரத்தில் இத்தலைப்புக்குத் தேவையான தகவல் ஒன்றை மிகத்தெளிவாக அவ்வசனம் கூறிக் கொண்டிருப்பதை நாம் மறந்து விடக் கூடாது. அதாவது சூரியனுடைய நகர்வால் இராப்பகல் மாற்றம் ஏற்படுகிறதா? என்ற வினா எழுமானால் இல்லவே இல்லை என்பதே திருமறையின் பதில்! ஏனெனில் சூரியன் நகர்வதாகக் கூறும் சத்தியத் திருமறை அந்த நகர்வின் இலக்கு எது என்பதையும் கூறிவிட்டது!.
திருமறையின் கூற்றில் இதற்கு மேலும் ஐயம் கொள்வோர் யாரேனும் இருந்தால் அவர்களைப் பார்த்து ஒரு வினா எழுப்புவோம். ஹாங்காங்கிலிருந்து, டெல்லியை நோக்கியும், டெல்லியிலிருந்து ஹாங்காங் நோக்கியும் முறையே இரண்டு விமானங்கள் ஒரே நேரத்தில் ஒரே வேகத்தில் பறந்து வந்தால், அவையிரண்டும் ஒரே நேரத்தில் தரையிறங்குமா?. அல்லது வெவ்வேறு நேரங்களில் தரையிறங்குமா?. எப்படி?.
பின் வாங்கிச் செல்லும் இரவு
(வளரும் இன்ஷா அல்லாஹ்)
---------------------------
வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் முந்தைய பகுதிகள்.பேரண்டப் படைப்பின் துவக்கம் -1
வாழத் தகுந்த கோள்-2
ஓசோன் -3
விண்ணகத்தின் பரப்பெல்லை -4
பேரண்டத்தின் ஈர்ப்பு விசை -5
விண்ணடுக்குகள் -6
உருண்ட பூமி -7
சுழலும் பூமி(1) -8
சுழலும் பூமி(2) -9
சழலும் பூமி(3) -10
No comments:
Post a Comment