இன்று நமது நிலையைப் பார்க்கும் போது 1947-ல் இந்திய சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்தவரும், இரண்டாவது உலக மகாயுத்தத்தைச் சாதுரியமாகச் சமாளித்தவர் என்ற புகழுக்குரியவருமான வின்ஸ்ட்டன் சர்ச்சில் அன்றே நம் நாட்டு அரசியல் வாதிகளைப் பற்றி முன்கூட்டியே சொன்னது இன்று அப்படியே நடந்து வருகிறது. அவரது இந்த எச்சரிக்கையை முன்னர் ஒரு சமயம் ஒரு இதழில் பார்த்து அதை எமது 1984 தினசரி கையேட்டில் குறித்து வைத்திருந்தது. இப்போது எமதுப் பார்வையில் பட்டது. அதை அப்படியே எடுத்து எழுதியிருக்கிறோம்.
இந்திய மக்கள் பொறுப்பற்றவர்கள்; தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதைக் கூட அறிந்துக் கொள்ள முடியாத அளவிற்கு அறிவற்றவர்கள். அவர்களுடைய தலைவர்கள் அரைவேக்காட்டு பேர்வழிகள், விசாலமான பார்வையும், பொது நோக்கும் அற்றவர்கள், கடைந்தெடுத்த சுயநலவாதிகள் அதிகாரத்திற்காகவும் பதவிகளுக்காகவும் எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருக்கும் அவர்களிடம் சுதந்திரமும் ஜனநாயகமும் சந்தைக்கு வருகின்ற விற்பனை சரக்காக மாறிவிடும். சுதந்திரம் கிடைத்து ஐம்பது(50) ஆண்டுகளுக்குள் அவர்களது அரசு நிர்வாகம் கேலிக் கூத்தாகி விடும்.''
வின்ஸ்ட்டன் சர்ச்சில்
முன்னாள் இங்கிலாந்து பிரதமர்
இன்று நமது நாட்டில் இடம்பெற்று வரும் நிகழ்ச்சிகள் அவரது முன் அறிவிப்பை அப்படியே உண்மைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. உண்மையில் இப்போது நாட்டில் உண்மையான ஜனநாயக ஆட்சி நடைபெறுவதாகத் தெரியவில்லை. குண்டர்களின் ஆட்சியே நடைபெறுவதாகத்தான் இருக்கிறது. ஆட்சியாளர்கள் தங்கள் கைகளில் ராணுவம், பலவிதப் பட்டாளங்கள், காவல்துறை இன்னும் பல அதிகாரங்களை வைத்திருந்தாலும் குண்டர்களுக்குப் பயந்தே ஆட்சி நடத்துகிறார்கள். குஜராத் போன்ற மாநிலங்களில் குண்டர்களே ஆட்சியைப் பிடித்து மக்களை வதைக்கிறார்கள்.
பழம் பெருமை வாய்ந்த பாபரி மஸ்ஜித் இடிப்பட்டபோது, மத்தியிலிருந்த காங்கிரஸ் ஆட்சி, மாநிலத்திலிருந்த பா.ஜ.க ஆட்சி நடந்து கொண்ட விதம், மும்பைக் கலவரத்தில் பால்தாக்ரே கட்சிக் குண்டர்கள் நடத்திய அடாவடித்தனத்தில், மத்திய மாநில ஆட்சிகள் நடந்து கொண்ட விதம், கோத்ரா ரயில் எரிப்பு நாடகத்தின் மூலம் குஜராத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுமிராண்டி அடாவடித்தனங்களில் மத்திய, மாநில அரசுகள் நடந்து கொண்ட விதம், மிகச் சமீபத்தில் மும்பையில் வட மாநிலங்களிலிருந்து வந்து மும்பையில் தொழில் செய்வோரை எதிர்த்து ராஜ்தாக்ரே கட்சியினர் நடத்திய அட்டூழியங்கள் குறித்து மத்திய மாநில அரசுகள் நடந்து கொண்ட விதம், இது போல் பெறும்பாலும் அனைத்து மாநிலங்களிலும் குண்டர்கள், வன்முறையாளர்கள் திட்டமிட்டுச் செய்யும் அக்கிரமச் செயல்களில் மத்திய, மாநில அரசுகள் நடந்து கொள்ளும் விதம், எடுக்கும் நடவடிக்கைகள் இவை அனைத்தையும் ஆழ்ந்து நோக்குகிறவர்கள் சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் பிரதமர் வின்ஸ்ட்டன் சர்ச்சில் கூறியுள்ளது நூற்றுக்கு நூறு அப்படியே நிறைவேறி வருகிறது என்றே உறுதியாகக் கூறுவார்கள்.
தாதாக்கள், தேசவிரோதிகள் மதவெறி, இனவெறி, பிரதேச வெறி, மொழி வெறி என மக்களைத் தூண்டி ஒரு பெருங்கொண்ட கும்பலை வன்முறையாளர்களாக தயார் செய்து விட்டால், ஆட்சியாளர்கள் அவர்களுக்கு அடிப்பணிந்து, அவர்களின் மூடத்தனமான அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பார்கள். அந்த வன்முறையாளர்களுக்கும், அநியாயக்காரர்களுக்கும் பாதுகாப்புக் கொடுப்பார்கள். அவர்களது விருப்பங்களையே நிறைவேற்றித் தருவார்கள் என்ற கசக்கும் உண்மையே அம்பலப்பட்டு வருகிறது.
இரண்டு காரணங்களுக்காக ஆட்சியாளர்கள் இப்படிப்பட்ட வன்முறையாளர்களுக்கும், கொடுமையாளர்களுக்கும் அவர்களின் கூட்டத்தைக் கண்டு அஞ்சி விலை போகிறார்கள். ஒன்று அவர்களின் காட்டுமிராண்டித்தனமான அசுரபலம். இரண்டாவது அப்படிப்பட்டவர்களிடம் இருக்கும் ஓட்டு வங்கி, இதற்கு சுமார் 60 விழுக்காடு வரை ஆயிரம் கோடி ரூபாய் செலவில் முடிவுற்று இடையில் மத்திய அரசால் நிறுத்தப்பட்டிருக்கும் தமிழக மக்களின் நீண்ட நெடுநாள் கனவான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நல்ல உதாரணமாகும்.
இதிலிருந்தே நமது நாட்டைப் பொறுத்தமட்டிலும் ஜனநாயகம் என்பது ஒரு போலித்தோற்றம், மக்களை ஏமாற்றி அரசியல்வாதிகள் குறுக்கு வழிகளில் பணம் பண்ணவும், அந்தப் பணத்தைக் கொண்டே மக்களை ஏமாற்றம், பெரும்பான்மை மக்கள் அறியாமையிலும், மூட நம்பிக்கைகளிலும் மூழ்கி இருந்தால் அதற்கு ஏற்றவாறு மத்திய மாநில அரசுகள் ஆட்டம் போடவும் வழிவகுக்கும் போலி ஜனநாயகம் என்பதும் வெளிச்சத்திற்கு வருகிறது.
இப்படி நாட்டின் எண்ணற்ற நலந்தரும் திட்டங்கள் இப்படிப்பட்ட மூட நம்பிக்கையாளர்கள் பெருங்கொண்ட எண்ணிக்கையில் இருப்பதால் அவர்களின் வன்முறை அட்டூழியச் செயல்களுக்கு பயந்தும், அவர்களிடமுள்ள ஓட்டு வங்கியைக் கணக்கில் கொண்டும் பாழ்ப்படுத்தப்பட்டு வருகின்றன. இதைத் தான் வின்ஸ்ட்டன் சர்ச்சில்" அரைவேக்காட்டுப் பேர்வழிகள், விசாலமானப் பார்வையற்றவர்கள், பொதுநோக்கு அற்றவர்கள், கடைந்தெடுத்த சுயநலவாதிகள், அதிகாரத்திற்காகவும், பதவிகளுக்காகவும் எதை வேண்டுமானாலும் இழக்கத் தயராக இருக்கும் அவர்களிடம் சுதந்திரமும், ஜனநாயகமும் சந்தைக்கு வருகின்ற விற்பனை சரக்காக மாறிவிடும். சுதந்திரம் கிடைத்து ஐம்பது ஆண்டுகளுக்குள் அவர்களது அரசு நிர்வாகம் கேலிக் கூத்தாகிவிடும்" என்று அன்று சொன்னது இன்று எந்த அளவு உண்மையாகிவிட்டது என்பதை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் சிந்தித்துத் தங்களின் இந்த அறீவீனமானப் போக்கை மாற்றிட முன்வரவேண்டும்.
நன்றி: அந்நஜாத் மார்ச் 2008