Monday, August 22, 2005

வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும்-7

உருண்ட பூமி -7


ஏ.கே.அப்துர் ரஹ்மான்

மூடிய இருட்டுக்குள் அயர்ந்துறங்கும் பூமியின் மீது தன் செங்கதிர்களை வாரியிறைத்து கிழக்கில் தோன்றுகிறான் ஆதவன். பிறகு மெல்ல ஊர்ந்து வந்து உச்சியில் காய்ந்து அந்திப் பொழுதில் மேற்கில் மறைகிறான். அதன் பிறகும் நிற்பதில்லை இந்த விண்ணுலா. அடுத்த விடியலைத் தோற்றுவிக்க கிழக்கில் முளைக்கிறான்.

என்ன விந்தை! மண்ணக மாந்தரெல்லாம் விண்கண்ட நாள் முதலாய் இன்றளவும் ஓயவில்லை இந்த நிகழ்ச்சிப் போக்கு! அற்புதம்தானே! நாளும் ஓய்வின்றி எந்நாளும் இப்பூமியில் இரவும், பகலும் மாறி வருவதின் மர்மமென்ன? சிந்தனைத் திறன் கொண்டோரின் உள்ளங்கள் எல்லாம் வியந்து கொண்டிருந்த இந்த வினாவுக்கு விடை காணப் புகுந்தனர் அறிவியலாளர்கள்.
பரந்து விரிந்த இப்பேரண்டத்தின் நட்ட நடுவில் நட்டு வைத்தாற்போல் பூமி ஆடாமல், அசையாமல் இந்த பூமி நிலை பெற்றிருக்கிறது. இந்தப் பூமியைச் சூரியன், சந்திரன் மற்றும் ஏனைய கோள்கள் யாவும் சுற்றி வருகின்றன. ஆகவே சூரிய குடும்பத்தின் அச்சாக (AXIS) அவைகளின் மையத்தில் பூமி இடம்பெற்றுள்ளது எனக் கூறினார்கள் ஆரம்பகால அறிவியலாளர்கள். இவர்களின் இந்தக் கோட்பாடு 'புவி மையக் கோட்பாடு' (Earth Centre Theory) என அழைக்கப்பட்டது.

எவ்வளவு பாதுகாப்பான கோட்பாடு பார்த்தீர்களா? காலங்காலமாகச் சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதைக் கண்டு வந்த மக்கள் மெய்யாகவே சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்ற எண்ணத்தில் இருந்தமையால் இக்கோட்பாட்டை எவ்வித விமர்சனத்திற்கும் இடம் தராமல் அப்படியே ஏற்றனர்.

அறிவியலின் அனைத்துத் துறைகளையும் தொட்டுப் பார்த்தவரும், முற்கால அறிவியல் உலகில் முடிசூடா மன்னனாக போற்றப்பட்டவருமான திருவாளர் அரிஸ்டாட்டில் (Aristotle. B.C.370 -286) தாம் இந்தப் புவிமையக் கோட்பாட்டை அறிவியலாக ஏற்கச் செய்தவர். அவருடைய காலத்திலிருந்து நவீன அறிவியலின் நுழைவாயிலாகிய 16 ஆம் நூற்றாண்டு வரை அறிவியல் உலகில் அரிஸ்டாட்டிலின் கூற்று எதுவோ, அதுவே வேத வாக்காக ஏற்கப்பட்டு வந்தது. ஆனால்!.. இப்பேரண்டத்திற்கோர் பேரருளாய் ஏக இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட மாமனிதர் முஹம்மது (ஸல்) (571 - 634) அறிவிக்கும் தூதுச் செய்தி அவருக்கு முன்னால் நிலை நாட்டப்பட்ட இப்புவி மையக் கோட்பாட்டை இதோ மிக வன்மையாக மறுத்துரைக்கிறது.

'இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். (அவை) யாவும் (அவைகளுக்குரிய) மண்டலத்தில் செல்கின்றன.'(அல் - குர்ஆன் அத்தியாயம் 21 ஸுரத்துல் அன்பியா - 33வது வசனம்).

இந்த வசனத்தின் வாயிலாக சூரியன், சந்திரன் மட்டுமல்ல. யாவுமே அவைகளுக்கே உரிய மண்டலங்களில் செல்கின்றன எனக் கூறி, பூமி நகராமல் ஒரே இடத்தில் நிலை பெற்றுள்ளது எனக் கூறும் புவி மையக் கோட்பாட்டை இவ்வசனம் மறுக்கிறது.

பூமி நகராமல் ஒரே இடத்தில் நிற்கிறது. இந்தபூமியைச் சுற்றித்தான் ஏனைய யாவும் நகர்கின்றன என்பதே புவி மையக் கோட்பாட்டின் கருப்பொருள். ஆனால் பூமியும் நகர்கிறது என்று கூறுவதால் புவிமையக் கோட்பாட்டை பொய் எனக் கூறிவிட்டது பரிசுத்த குர்ஆன்.

இந்த இடத்தில் நகரும் பொருட்களின் பெயர்ப் பட்டியல் சூரியனையும், சந்திரனையும்தானே குர்ஆன் குறிப்பிடுகிறது. பூமியின் பெயரைக் குறிப்பிடவில்லையே என யாருக்கேனும் ஐயம் எழக் கூடும். பூமியின் பெயர் இங்கு நேரடியாகக் குறிப்பிடாமல் இருந்ததே சாலச் சிறந்த காரியம் என்பதை நாம் வேறு தலைப்பில் காண்போம் இன்ஷா அல்லாஹ். ஆனால் யாவும் என்ற சொல்லுக்குள் பூமியும் அடங்குகிறது என்பதில் நிறைவடையாத உள்ளங்கள் ஏதேனும் இருந்தால், அவைகளும் நிறைவடையும் பொருட்டு, இப்பரிசுத்த வசனத்திடம் மேலும் சற்று நெருங்குவோம்.

நகரக் கூடியவைகளின் பெயர்ப் பட்டியலில் முதலாவதாக பரிசுத்த குர்ஆன் குறிப்பிடுவதே நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அதாவது தமக்குரிய மண்டலங்களில் நகரக் கூடியவைகளில் இரவும் உண்டாம்: பகலும் உண்டாம். இரவும், பகலும் அவைகளுக்குரிய மண்டலங்களில் நகர்கிறது என்றால் என்ன பொருள்?. இரவு என்றால் என்ன?. இரவு என்பது ஒளியானது மூடி மறைக்கப்படும் பகுதி எனக் கொள்கிறோம். பகல் என்றால் என்ன?. ஒளியைப் பிரதி பலிக்கும் பகுதி எனக் கொள்கிறோம். (இந்த விளக்கமே சரியான விளக்கம் என்பதில் உள்ள அறிவியலை வேறு தலைப்பில் காண்போம் இன்ஷா அல்லாஹ்) இப்போது இரவும், பகலும் அவைகளுக்குரிய மண்டலங்களில் செல்கிறது என்றால் அதன் பொருள் என்ன?.

ஒளியை மூடி மறைக்கும் பகுதியும், ஒளியை பிரதிபலிக்கும் பகுதியும் அவைகளுக்குரிய மண்டலங்களில் செல்கின்றன என்பது அதன் பொருள். ஒளியைப் பிரதிபலிக்கும் பகுதி, ஒளியை மூடி மறைக்கும் பகுதி என்பதில் பூமி அடங்கி விடுகிறதா இல்லையா?. பூமியின் எந்த ஒரு பகுதியும் ஒன்று இரவாக அல்லது பகலகாத்தான் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். ஆகவே இரவும், பகலும் அவைகளுடைய மண்டலங்களில் செல்கின்றன என்கிற குர்ஆனுடைய கூற்று, சர்வ நிச்சயமாகப் பூமி, எங்கும் ஓய்திருக்கவில்லை; அது நகர்ந்து கொண்டிருக்கிறது எனக் கூறிப் புவிமையக் கோட்பாட்டைத் தகர்த்து நிற்கிறது.

இவ்வாறு ஆறாம் நூற்றாண்டில் பிறந்த மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அறிவித்த இறைவனுடைய தூதுச் செய்தியில் பூமியும் நகர்கிறது எனும் அறிவியல் பேருண்மையைப் பற்றிச் சிறிதும் பொருட்படுத்தாமல், அறிந்தோ, அறியாமலோ அறிவியல் உலகம் புவிமையக் கோட்பாட்டின் மாயவலைக்குள் சிக்கி, அதற்கேற்ப வானியலைப் புரிந்து கொள்ள முயற்சித்தது. இதன் காரணமாக 16ஆம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை இத்துறையில் எந்த முன்னேற்றமும் காணாமல் இருட்டுக்குள் உழன்றனர்.

இந்த வரலாற்றுப் பின்னனியில் 16-ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் தோன்றிய அறிவியல் மாமேதைகள் கோபர் நிக்கஸ் (Coper Nicus, 1473 - 1543) மற்றும் கெப்ளர் (Kepler, 1571 - 1630) ஆகியோர் அறிவியல் வாயிலாக புவிமையக் கோட்பாட்டை மறுத்து, பரிசுத்த குர்ஆனின் கூற்றுக்கிசைய, பூமி நகர்கிறது என்ற கருத்தை வலியுறுத்தினர். வந்தது வினை!. அன்று வாழ்ந்து கொண்டிருந்த மதகுருமார்கள், பூமி நகர்கிறது என்ற கருத்து, தங்கள் வேத நூலுக்கு முரணான கருத்து எனக் கூறி அந்த அறிவியலாளர்களை சர்ச் விலக்கு, ஊர் விலக்கு, மத விலக்கு என படிப்படியான தொல்லைகளைத் தந்து அவர்களின் குரலை அடக்கி விட்டனர்.

ஆனால் அறியாமைக் காரிருளில் தங்கள் அறிவைத் தொலைத்துவிட்ட மதகுருக்களால் அந்த அறிவியலாளர்களின் குரலைத்தான் ஒடுக்க முடிந்ததேயன்றி அவர்கள் கூறிய பூகோள நகர்வைத் தடுக்க முடியவில்லை. ஏனெனில் அவர்களின் அந்தக் கூற்று இந்தப் பூமியைப் படைத்து இதனை நகர்த்திக் கொண்டிருப்பவன் யாரோ, அவனுடைய வார்த்தைகளாகிய பரிசுத்த குர்ஆனால் நற்சான்று பெற்றிருந்தது. ஆகவே பூகோளம் நின்று விடவில்லை. அது தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்தது. அது மேலும் பலமுறை சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருந்த போது திடீரென ஒலித்தது மற்றொரு குரல்.

சுற்றவில்லை சூரியன் பூமியை! சுற்றுகிறது பூமி சூரியனை என்றது அக்குரல். தொலைநோக்கியைச் சீரமைத்து பல அரிய கண்டு பிடிப்புகளை வழங்கிய அறிவியல் மாமேதை கலிலியோ (Galileo, 1564 - 1642) வின் குரல்தான் அது. இந்த முறை மக்கள் கொஞ்சம் சிந்திக்கத் துவங்கிய காரணத்தால், அந்த மதகுருமார்களால் இவரது குரலை ஒடுக்கி விட இயலவில்லை. இருப்பினும் இவருடைய 'சூரிய குடும்பத்தைப் பற்றிய (Solar System) கண்டு பிடிப்புக்கள் தங்களது வேத நூலுக்கு விரோதமானது என்று கூறிக் கிறிஸ்துவ குருமார்கள் இவரை ரோம் நகரத்தின் விசாரணைக் கூடத்துக்கு அழைத்தனர். அப்போது 69 வயதை நிரம்பிவிட்ட (1633 ல்) இம்முதியவர் பலவாறு மிரட்டப்பட்டு, இறுதியாக மக்கள் மத்தியில் இவருக்கு இருந்த பெரும் செல்வாக்கைப் புறக்கணிக்க முடியாத நிலையில் அந்த விசாரணை மன்றம் இவர் செய்த பாபத்திற்கு(?) ஒரு தண்டனையை அறிவித்தது.

பைபிளின் சங்கீத நூலிலிருந்து குறிப்பிட்ட சில பாடல்களை (Penitential Psalm) வாரத்திற்கு ஏழுமுறை வீதம் மூன்று வருடத்திற்கு எழுத வேண்டும் என உத்தரவிட்டது.

குர்ஆன் என்ன கூறுகிறதோ, அதையே இந்த அறிவியல் மேதை, தன்னுடைய அறிவியல் ஆய்வில் கண்டுவிட்டார் என்ற குற்றத்தைத்(?) தவிர, அன்று அந்த மதகுரு கூட்டம் இவர் மீது எந்தத் தவறையும் காணவில்லை.

இறுதியாக இந்த அறிவியல் மேதையின் கண்டு பிடிப்புகளுக்குப் பிறகு, பூமி நகர்கிறது என்று கூறும் பரிசுத்த குர்ஆனின் கூற்றைச் சிறுகச், சிறுக உலகம் ஒப்புக் கொள்ள ஆரம்பித்தது.

இந்த வேதத்தின் ஆசிரியன் மிகத் தூயவன். அவன் தன்னுடைய கூற்றை நிராகரிப்போர் மறுத்த போதிலும், நிரூபித்தே தீருகிறான்.

மாறி மாறி வரும் இரவுக்கும் பகலுக்கும் என்ன காரணம் என்பதற்குரிய அறிவியல் விளக்கத்தை நாம் பெற்று விட்டோம். இரவையும், பகலையும் தோற்றுவிப்பதில் பூமியின் வடிவமும், அதன் சுய சுழற்சியுமே காரணம் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டது. இந்த இரு விஷயங்களைப் பற்றிப் பரிசுத்த குர்ஆன் என்ன கூறுகிறது எனத் தேடினால், மெய்யாகவே இந்த அற்புத வேதம் நம்மைப் பிரமிக்க வைக்கிறது.

முதலாவதாக பூமியின் வடிவம் என்ன? என்ற கேள்விக்குரிய பதிலைப் பார்ப்போம்.

பூமியின் வடிவம் உருண்டையானதே என்று குர்ஆனுக்கு முற்பட்ட காலத்திலேயே (கி.மு.450-ல்) கிரேக்கர்கள் கருத்துக் கொண்டிருந்தார்கள். அக்கருத்து முற்கால அறிவியலின் முடிசூடா மன்னன் அரிஸ்டாட்டிலினாலும் அறிவியல் ரீதியாக அங்கீகரிக்கப் பட்டது. பூமியின் வடிவம் உருண்டையானதே என்பதைக் காட்ட கடலில் செல்லும் கப்பலை ஆய்வு செய்து சான்று பெற்றார்கள்.

கப்பல் ஒன்று கடலில் செல்லும் போது முதலாவதாக அதன் அடித்தளம் மறையும். பிறகு படிப்படியாக உடல் மறைந்து கடைசியாக பாய்மரம் மறையும். இதைக் கூர்ந்து கவனித்தால் கடலில் சென்று கொண்டிருக்கும் கப்பல் அது செல்லச் செல்லச் பூமியின் மீது கீழ் நோக்கிய ஒரு வளைவுக்குள் இறங்குவது போன்று தோன்றும். அதைப்போல நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கும் கப்பலின் பாய் மரத்தின் நுனி முதலாவதாகக் கடற்பரப்பின் தூரத்தில் எட்டிப் பார்க்கும். பிறகு படிப்படியாகப் பாய் மரம் முழுமையாகத் தெரிந்து அதன் பின் அடித்தளம் தெரியவரும். இது எதைக் காட்டுகிறது எனில், வந்து கொண்டிருக்கும் கப்பல் பூமியின் மீதுள்ள கீழ் நோக்கிய வளைவு ஒன்றிலிருந்து ஏறி வருவதைப்போல் தோற்றமனித்துப் பூமியின் எத்திசையில் திரும்பினாலும் பூமியானது கீழ் நோக்கி வளைந்திருக்கிறது எனக் காட்டுகிறது.

எத்திசையில் திரும்பினாலும் கீழ் நோக்கி வளைந்திருக்கும் ஒரு பொருளின் வடிவம் உருண்டையாகவே இருக்கும் என்பது தெளிவு. ஆகவே பூமி உருண்டை வடிவம் கொண்டது என்ற அறிவியலை அரிஸ்டாட்டில் ஏற்றுக் கொண்டிருந்தார்.

பூமியின் வடிவம் உருண்டை எனினும், பூமி அசையாது ஒரே இடத்தில் நிலை பெற்றிருக்க, சூரியன் அதனை சுற்றி வருகிறது என்பதே அரிஸ்டாட்டில் உட்பட அனைத்து அறிவியலாளர்களின் கருத்தாகப் பதினாறாம் நூற்றாண்டு வரை நிலை பெற்று வந்தது. இக்கருத்தை ஏழாம் நூற்றாண்டில் நுழைவாயிலிலேயே மறுத்துரைத்த பரிசுத்த குர்ஆன், பூமியின் வடிவம் பற்றிய இவர்களின் ஆய்வை ஏற்கிறதா அல்லது மறுக்கிறதா எனப் பார்ப்போம்,

குர்ஆன் கூறுகிறது:
'வானங்கள், பூமி ஆகியவற்றின் ஒழுங்கமைப்பிலும் இரவும், பகலும் ஒன்றன் பின் ஒன்றாக மாறி வருவதிலும், மக்களுக்கு பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பலிலும் - சிந்திக்கும் மக்களுக்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.' (அல்-குர்ஆன் 2 வது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 164 வது வசனம்.)

இந்த வசனத்திலிருந்து விளங்கப்படும் பற்பல அறிவியல்களில் ஒன்று நமது வினாவிற்கும் பதிலளிக்கிறது. இரவும், பகலும் மாறி, மாறி வருவதற்கு ஏற்ற வகையில் ஆகாயமும், பூமியும் ஒழுங்குற அமைக்கப் பட்டிருப்பதோடு, கடலில் செல்லும் கப்பல் பற்றியும் சிந்தித்தால் அவைகளுக்குரிய சான்றுகள் கிடைக்கும் எனக் கூறுகிறது இவ்வசனம். ஆகவே கடலில் செல்லும் கப்பலால் முன் வைக்கப்படும் சான்று எதை விளக்குகிறதோ அதை நாம் ஏற்க வேண்டும் எனக் கூறுகிறது பரிசுத்த குர்ஆன்.

குர்ஆனுக்கு நிகர் குர்ஆனேயன்றி வேறு ஏது?. அற்புதம்தான் நிகழ்த்துகிறது இந்த ஒப்பற்ற திருமறை!

பூமி நகரவில்லை எனக் கூறிய அரிஸ்டாட்டிலின் கூற்றை ஏற்பதா மறுப்பதா எனக் கேட்டபோது அவருடைய கூற்று தவறாக இருப்பதால் அதை வன்மையாக மறுத்து, பூமி நகர்கிறது எனக் கூறிற்று. அதே சமயம் பூமியின் வடிவம் உருண்டையே என்ற உண்மையை விளக்கும் அவர்களது ஆய்வை ஏற்றுக் கொள்ளலாமா என்று கேட்டால் 'சிந்திக்கும் மனிதர்களே! உங்களுக்கு அவைகளில் சான்றுகள் உண்டு' என அதை ஏற்கச் சொல்கிறது!.

இப்படிப்பட்ட அற்புதங்கள் எல்லாம் இன்று உலகில் வேதங்கள் என்ற பெயரில் அறியப்படும் வேறு எந்த நூலில் காண இயலும்?.

எங்கிருக்கிறீர்கள் நண்பர்களே! இந்த பரிசுத்த குர்ஆனைத் தவிர, வேதங்கள் என்று உங்கள் முன் ஓதப்படும் எந்த நூல்களாவது அறிவியல் கண்டு பிடிப்பகளுக்கே வழிகாட்டியாகத் திகழ்வதைப் பார்த்திருக்கிறீர்களா?.

வழிகாட்டுவது ஒரு பக்கம் இருக்கட்டும்!. குறைந்த பட்சம் அறிவியலோடு மோதாமலாவது இருக்க வேண்டாமா என்ற வினாதான் உங்களை இறை மறுப்பில் இறுகச் செய்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே அறிவியலை தனக்குச் சாட்சியாக நிறுத்தியிருப்பதோடு, அதில் ஏற்படும் மெய்யும், பொய்யும் பிரித்தறிவிக்கும் அதனுடைய வழிகாகட்டியாகவேத் திகழும் பரிசுத்த குர்ஆனை ஆய்வு செய்யுங்கள். நீங்கள் உண்மையையே கண்டறிவீர்கள்.

அன்பார்ந்த நண்பர்களே! இப்போது உங்களிடத்தில் ஒரு வினா எழக்கூடும். பரிசுத்த குர்ஆன் கூறியவாறு ஒருவர் கடலில் செல்லும் கப்பலை ஆய்வு செய்தால் பூமி உருண்டை வடிவம் கொண்டதே என்ற அறிவியல் சான்றை அவர் கண்டறிவார் என்பது உண்மையே. ஆனால் கடலில் செல்லும் கப்பல் பற்றிய ஆய்வு முறை குர்ஆன் வழங்கப்படுவதற்கு முன்னால், கிரேக்கர்களிடம் அறியப்பட்ட ஆய்வு முறைதானே? குர்ஆனை ஆய்வுக் கண்ணோடு பார்வையிடும் ஒருவர் இந்த வசனத்தைப் பார்த்தவுடன் பூமியின் வடிவம் பற்றி கிரேக்கத் தத்தவத்தை ஏற்கலாம் என்று கூறுவதாகவே விளங்கிக் கொள்ள முடியும். அப்படிப் பார்த்தால் கிரேக்கர்கள் அந்தத் தத்தவத்தைப் பற்றி எதுவும் கூறாமல் இருந்திருந்தால், அதைப்பற்றி கூறுகின்ற அவசியம் குர்ஆனுக்கும் ஏற்பட்டிருக்காது. ஆகவே அந்த நிலையில் பூமி உருண்டை வடிவம் கொண்டதே என்ற அறிவியலைக் குர்ஆனிலிருந்து விளங்க வாய்ப்பிருந்திக்காதல்லவா என்ற வினாவே அந்த வினாவாக இருக்கும்.

கிரேக்கர்கள் ஆய்வு என்பது வெறும் ஒரு 2500 வருடத்திற்குட்பட்ட விஷயம். ஆனால் இந்த பரிசுத்த குர்ஆன் இப்பேரண்டத்தை படைப்பதற்கு முன்கூட்டியே பாதுகாக்கப்பட்ட இடத்தில் பதியப்பட்டிருந்தது என்பதே உண்மை. ஆனால் அந்த விஷயத்திற்குள் தற்போது நுழையாமல் வாதத்திற்காக உங்கள் ஐயத்தில் காணப்படும் வினாவை ஏற்று அதற்குரிய விடையைக் காண்போம்.

நண்பர்களே! கடலில் செல்லும் கப்பல் பற்றிய எடுத்துக்காட்டு பூமியின் வடிவம் என்ன என்பதைக் கண்டறிவதற்குரிய ஆய்வு முறையைக் கூறும் கருவியே!. ஆனால் ஆய்வுக் கண்களால் இந்த அற்புத வேதத்தைப் பார்த்தீர்களானால் இந்த பூமி கோள வடிவத்தைக் கொண்டதே என்ற அறிவியல் தீர்ப்பையே தரும் அற்புதமான வசனங்களைக் கண்டு மலைத்துப் போவீர்கள். ஆகவே உங்கள் வினாவிற்கேற்ப கிரேக்கத் தத்துவம் எழுந்திராவிடினும் பூமி உருண்டை வடிவம் கொண்டதே என அறிவிக்கும் வேறு வசனங்களை குர்ஆன் விரித்தோதுகிறது.

அரிஸ்டாட்டிலுக்கும் (கி.மு. 370-286) பற்பல நூற்றாண்டுகளுக்கு முந்திய கால கட்டத்தில் இறைவனுடைய நல்லடியார்களில் சிறப்பான மனிதர் ஒருவர் இருந்தார். உலகின்; மீது ஆட்சி செலுத்தும் பேரரசராகவும் இருந்தார். 'துல்-கர்னைன்' என்ற பெயருடைய இவரைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்த பண்டைக்கால அரபு வாழ் மக்கள் இறைத்தூதராம் மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் துல்கர்னைன் அவர்களைப் பற்றி விபரம் கேட்கிறார்கள். தன்னுடைய தூதரிடம் கேட்கப்பட்ட இவ்வினாவிற்கு இறைவன் பதிலளிக்கிறான்;

'மேலும் (நபியே!) இவர்கள் உம்மிடம் துல்கர்னைன் பற்றிக் கேட்கிறார்கள். நீர் அவர்களிடம் கூறும் நான் அவரைப் பற்றிச் சில விபரங்களை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். திண்ணமாக நாம் அவருக்கு பூமியில் ஆட்சி அதிகாரத்தை அளித்திருந்தோம். மேலும் அவருக்கு எல்லாவிதமான சாதனங்களையும் வாய்ப்புகளையும் வழங்கியிருந்தோம். அவர்(தாம்) ஆற்ற வேண்டிய சில காரியங்களுக்காக ஒரு பயணம் புறப்பட்டார்.' (அல்-குர்ஆனின் 18வது அத்தியாயம் ஸுரத்துல் கஹ்ஃபுவின் 83, 84, 85 ஆம் வசனங்கள்.)

இந்த வசனத்தின் வாயிலாக, துல்கர்னைன் எனும் தன்னுடைய நல்லடியாருக்கு இறைவன் அரசாட்சியை உலகில் வழங்கி, உலகில் அவர் ஆற்ற வேண்டிய சில முக்கியமான பணிகளையும் அவருக்குக் கட்டளையிட்டு அவர் ஒரு நெடிய பயணத்தைத் துவக்கும்படி செய்திருக்கிறான் எனத் தெரிய வருகிறது. இப்பயணத்தின் நடுவே அவர் சென்றடையும் இடத்தைப் பற்றி தொடர்ந்து கூறுகிறது குர்ஆன்:

'சூரியன் அஸ்தமிக்கும் எல்லையை அவர் அடைந்த போது, அது கருப்பு நீரில் அஸ்தமிப்பதை (அவர்) கண்டார்.' (அல்-குர்ஆனின் 18வது அத்தியாயம் ஸுரத்துல் கஹ்ஃபுவின் 86 ஆம் வசனம்)

இந்த வசனத்தின் வாயிலாக, துல்கர்னைன் அவர்களுடைய பயணத்தைப் பற்றிச் சில முக்கியமான தகவலைத் தருகிறது குர்ஆன்.

முதலாவதாக அவர் தம்முடைய பயணத்தின் நடுவே ஒரு கட்டத்தில் எல்லைக் கோட்டை அடைந்து விட்டார் எனத் தெரிவிக்கிறது. அடுத்தபடியாக அந்த எல்லைக்கோடு ஒரு நீர்நிலையாக இருந்தது என்றும் அதிலும் சூரியன் நீர் நிலைக்குள் அஸ்தமிப்பதைப் போன்று காட்சியளிக்க வேண்டுமென்றால் அந்த நீர்நிலை கண்ணுக்கெட்டிய தூரம் வரை வியாபித்திருக்க வேண்டுமென்றும் தெரிகிறது. எனவே இந்த நீர் நிலை ஒரு கடலாக இருக்கலாம் எனவும் இந்த வசனத்திலிருந்து தெரிந்து கொள்கிறோம்.

அடுத்தபடியாக நீர்நிலை எல்லையாக இருக்க வேண்டுமாயின் அதற்கு முன்னால் செய்யப்பட்ட பயணம் வரை தரைப் பயணமாகவே இருக்க முடியும் எனத் தெரிகிறது. ஏனெனில் நீர்வழிப் பயணத்திற்கு நீர் நிலையே எல்லையாக முடியாது. மேலும் ஆகாய மார்க்கமாக இருந்திருந்தால் அதற்கு திசைகள் எல்லையாக இருக்க முடியாது. இவருடைய பயணத்தின் எல்லையாகக் குர்ஆன் குறிப்பிடுவது 'சூரியன் அஸ்தமிக்கும் எல்லை' என்பதே. அதாவது இவருடைய பயணத்திற்கு மேற்குத் திசையில் அமைந்த எல்லை என்று. ஆகவே இவர் மேற்குத் திசையிலுள்ள கடற்கரையை (அது எதுவாக இருந்தாலும் அதன் நீர் கறுப்பு நீராக இருக்க வேண்டும் என்பது நமது தலைப்போடு சம்பந்தப் படவில்லை) நெருங்கும் வரை, தரை வழிப்பயணமே மேற்கொண்டிருந்தார் என்பது தெளிவு.

மேலும் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயத்தையும் இந்த வசனம் தெரிவிக்கிறது. அதாவது இவர் தம்முடைய நெடிய பயணத்தை மேற்குத் திசையில் மேற்கொண்டிருக்கிறார் என்பது.

மேற்கு நோக்கிய இவருடைய பயணத்தில் நீர் நிலை எல்லையாக அமைய, அதற்கு மேலும் இவர் பயணத்தை மேற்கொள்ள வேண்டுமாயின் ஒன்று இவர் நீர் மார்க்கமாகவோ அல்லது ஆகாய மார்க்கமாகவோதான் பயணம் செய்தாக வேண்டும். இதற்குரிய சாதனங்களும் வாய்ப்புகளும் அந்த தொன்மையான காலத்தில் இருந்தனவா? என்று கேட்டால் அதற்குரிய பதிலையும் குர்ஆன் அந்த வசனங்களிலேயே கூறுகிறது. அதாவது:

'மேலும் அவருக்கு எல்லாவிதமான சாதனங்களையும், வாய்பபுகளையும் வழங்கியிருந்தோம்' என்று. எனவே இறைவன் நாடியபடி பயணத்திற்குரிய சாதனங்களும், வாய்ப்புகளும் இவர் பெற்றிருந்தார் என்பதை இவ்வசனம் விளக்குகிறது.

துல்கர்னைன் அவர்கள் சென்றடைந்த அந்த இடத்தில் இறைவனின் உத்தரவுப்படி செயலாற்ற வேண்டிய காரியங்களைச் செய்த பிறகு, அவர் தம்முடையை பயணத்தை மீண்டும் தொடர்கிறார். அதைப் பற்றித் தொடர்ந்து கூறும் குர்ஆன் வசனங்களைக் கவனியுங்கள்:

'மீண்டும் அவர் புறப்பட்டார். சூரியன் உதயமாகும் எல்லையை அவர் அடைந்து விட்டார்.' (அல்-குர்ஆனின் 18வது அத்தியாயம் ஸுரத்துல் கஹ்ஃபுவின் 89, 90ஆம் வசனங்கள்.)

என்ன விந்தை! இந்தப் பயணத்தில் அவருடைய எல்லையாக அமைந்தது எதுவோ அது சூரியன் உதயமாகும் எல்லையா?. எங்கிருக்கிறீர்கள் நண்பர்களே! இங்கு ஓதப்பட்ட பரிசுத்த குர்ஆனின் வசனத்தின் பால் செவி நீட்டிக் கேட்டீர்களா இல்லையா?.

சூரியன் மறையும் எல்லையிலிருந்து மேற்கு நோக்கி இந்தப் பூமியின் மீது நெடிய பயணம் செய்து வந்த ஒருவர் சூரியன் உதிக்கும் எல்லையை அடைவதா?.

அதாவது மேற்கு நோக்கி, மேற்கெல்லையில் இருந்து தரை வழியாகவும், நீர் வழியாகவும் (துல்கர்னைன் அவர்களுடைய இரண்டாவது பயணமும் எல்லைக்கு உட்பட்டது எனக் குர்ஆன் கூறுவதால் இப்பயணம் நீர் வழிப் பயணமே என்பது தெளிவு) ஒருவர் பயணம் செய்து வந்தால் அவர் கிழக்குத் திசையை அடைய முடியுமா?.

முடியுமா என்ற கேள்விக்கே இடமில்லை!. ஒருவர் அவ்வாறு மேற்கிலிருந்து மேற்கு நோக்கிப் பயணம் செய்து கிழக்கை அடைந்தே விட்டார் எனக் குர்ஆன் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. குர்ஆன் கூறுவதைப்போல் மேற்கு நோக்கிப் பயணம் செய்த ஒருவர் கிழக்கை அடைய வேண்டுமாயின் இந்தப் பூமியின் வடிவம் தட்டையாக, மேடை போன்றிருக்குமா?. அல்லது உருண்டையாக கோள வடிவத்தில் இருக்க வேண்டுமா?.

பதில் சொல்லுங்கள் நண்பர்களே!

ஆகவே இங்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வசனங்கள் வாயிலாகப் பூமி உருண்டையான கோள வடிவம் கொண்டதே என்று பரிசுத்த குர்ஆன் தெள்ளத் தெளிவாக விளக்கி விட்டது.

பண்டைக் கால கிரேக்கர்கள் பூமி உருண்டை வடிவம் கொண்டதேயென்ற அறிவியலைக் கூறாதிருப்பினும், பூமி உருண்டை வடிவம் கொண்டதேயென்ற அறவியலைப் பரிசுத்த குர்ஆன் கூறத்தான் செய்திருக்கும் என்பதில் இதற்கு மேலும் உங்களில் யாருக்கும் ஐயம் ஏற்பட வாய்ப்பில்லையல்லவா?.

பூமி உருண்டையான கோள வடிவம் கொண்டதே என்ற அறிவியலைக் குர்ஆனிலிருந்து தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொண்ட படியால், பூமியின் சுய சுழற்சி (தன்னைத் தானே சுற்றுதல்) பற்றிப் பரிசுத்த குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை அடுத்த தொடரில் காண்போம் இன்ஷா அல்லாஹ்..!

(வளரும் இன்ஷா அல்லாஹ்)
---------------------------
வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் முந்தைய பகுதிகள்.
பேரண்டப் படைப்பின் துவக்கம் -1
வாழத் தகுந்த கோள்-2
ஓசோன் -3
விண்ணகத்தின் பரப்பெல்லை -4
பேரண்டத்தின் ஈர்ப்பு விசை -5
விண்ணடுக்குகள் -6

No comments: