Thursday, August 11, 2005

வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும்-5

பேரண்டத்தின் ஈர்ப்பு விசை! -5


ஏ.கே. அப்துர் ரஹ்மான்

எல்லைகளக் கொண்ட ஆகாயப் பெருவெளியில் கணமும் ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கும் பூகோளம் அதன் எல்லையைத் தாண்ட விடாமல் தடுக்கப்படுகிறது என 1400 வருடங்களுக்கு முன்பே கூறிவிட்டது பரிசுத்த குர்ஆன். இப்பரிசுத்த வசனத்தை நிரூபிக்கும் அறிவியல் சான்றுகளில் ஒன்றை முந்தைய கட்டுரையில் நாம் கண்டோம்.

இப்போது மற்றொரு சான்றையும் கவனியுங்கள்.

மெய்யாகவே இந்த பூகோளம் ஆகாயத்திலிருந்து விலகிச் செல்வதாக வைத்துக் கொண்டால், அனைத்துக்கும் முதலாவதாக இது பூகோளத்திற்கு மேல் போர்த்தப்பட்டுள்ள காற்று மண்டலத்திலிருந்து விலகும். அதன் பிறகு படிப்படியாகப் பேரண்டத்தின் எல்லையைத் தாண்டும். ஆனால் நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் (35:41) வசனமோ ஆகாயமும், பூமியும் விலகாமல் தடுக்கப்படுவதாகக் கூறுகிறது. இந்த வசனத்தின்படி பூமி காற்று மண்டலத்திலிருந்து விலகுவதும் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளதாகக் கூறுகிறது. ஏனெனில் ஆகாயம் என்ற சொல்லில் காற்று மண்டலமும் உள்ளடங்குகிறது என்பதை நாம் இதற்கு முன்பு செய்த ஆய்வுகளில் கண்டிருக்கிறோம்.

ஆகவே, இந்த வசனம் மெய்யல்ல என்றால் இந்தக் கட்டுரையோ, கட்டுரையாளனோ அல்லது படிக்கும் நீங்களோ இல்லை.

ஆம். நண்பர்களே! நாம் வசிக்கும் இந்த பூகோளம் தன் பாட்டுக்கு வினாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் விண்ணுலா சென்றால், வெறும் 500 கி.மீ. மட்டுமே பருமன் கொண்ட நமது காற்று மண்டலத்திலிருந்து ஒரு சில நொடிகளிலேயே விலகிச் சென்று விடுமே. அதன் பிறகு நமது கதி என்ன?.

இந்தப் பூகோளம் காற்று மண்டலத்திற்குள் வெறும் 16 கி. மீ. தூரம் நகர்ந்தாலே அங்குள்ள காற்று, அதியற்புதப் படைப்பாளானால் நமது உடலுக்குள் படைத்து வைக்கப்பட்டுள்ள நுறையீரலின் சிற்றறைக்குள் (Pulmonary Alveoli) நுழையாது. நமது உடலின் இரத்த நாளங்களில் பிராண வாயுவைப் புகுத்தும் இந்தச் சிற்றறைகளில் காற்று நுழையாவிடில் நமக்கு பிராணவாயு இல்லை. சென்ற நூற்றாண்டில் 10 கி.மீ. தூரம் பலூன்களில் பறந்து கொண்டிருந்த நமது காற்று மண்டல ஆய்வாளர்கள் அங்கு பிராண வாயுவின் (Oxygen) பற்றாக் குறையினால் மயிரிழையில் உயிர் தப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆகவே நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் பரிசுத்த குர்ஆனின் வசனத்தில் கூறப்பட்டவாறு விண்ணும், மண்ணும் விலகாமல் தடுக்கப்படும் நிகழ்ச்சி உண்மை அல்லவென்றால் நாம் இல்லை. ஆகவே பரிசுத்த குர்ஆன் கூறும் இந்த அறிவியல் பேருண்மையை நீங்கள் மறுக்க முடியாது.

நாம் மறுக்கவில்லை: ஏற்கவே செய்கிறோம். ஆனால் நமது வீடாகிய இந்த பூமி ஆகாயத்தில் நகராமல் நிற்கிறதா?. இல்லை. நகரவே செய்கிறது. நமது காற்று மண்டலமாவது அண்டங்கள் யாவும் பரவி நிற்கிறதா?. அதுவும் இல்லை. வெறும் 500 கி.மீ.க்குள் அடங்கிவிடுகிறது. நிலைமை இதுவென்றால் மெய்யாகவே அறிவியலை ஏற்கும் துணிவு பெற்றவர்களே! நீங்கள் கூறுங்கள்! மெய்யாகவே விண்ணும், மண்ணும் விலகக் கூடிய வாய்ப்பு இருந்தும் கூட அதைத் தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி ஒன்று அதில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று கூறும் பரிசுத்தக் குர்ஆன் மெய்யா?. பொய்யா?.

மெய்யாயகவே விண்ணும், மண்ணும் விலகும் வாய்ப்பிருந்தும் அது தடுக்கப்பட்டுள்ளது என ஒருவர் கூற வேண்டுமாயின், அவர் அதனோடு தொடர்பு கொண்ட எத்தனை, எத்தனை அறிவியல் பேருண்மைகளைத் தெரிந்திருக்க வேண்டும்?.

அவை அனைத்தையும் நவீன அறிவியலின் அரிச்சுவடியைக் கூடக் கற்பனையிலும் பார்க்க முடியாத 1400 வருடங்களுக்கு முந்தைய அறியாமைக் காலத்தில் தோன்றிய ஒரு மனிதரால் கூறியிருக்க இயலுமா?.

அறிவியலோடு மோதி, மோதி மாய்ந்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் கற்பனைப் புதினங்களைப் போன்றதா இந்த அற்புதக் குர்ஆன்?. இருபதாம் நூற்றாண்டின் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை எல்லாம், அதற்கும் பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே தன்னை மெய்ப்பிக்கும் அரிய சாட்சிகளாய் வரிசையில் நிற்க வைத்த மெய்யான இறைவனின் மெய்யான வசனங்களல்லவா?. கூறுங்கள் நண்பர்களே! கூறுங்கள்.

நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் வசனம் எப்படித் துவங்குகிறது?.

'நிச்சயமாக வானங்களும், பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு..'

அதாவது பூமி மட்டுமே விலகும் வாய்ப்பைக் கொண்டதில்லை: வானங்களும் விலகும் வாய்ப்பைக் கொண்டனவே. ஆனால் அதையும் அல்லாஹ் தடுத்துக் கொண்டிருக்கிறான் எனக் கூறுகிறது அந்த வசனம்.

நாம் அந்த இரட்சகனை என்னவென்று புகழ்வோம்?.

கோள்களும், ஏனைய பருப்பொருட்களும் விண்ணில் ஓடுகின்றன. ஆகவே அவை ஆகாயத்திலிருந்து விலகாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதைக் கண்டோம். ஆனால் ஆகாயங்களும் விலகாமல் தடுக்கப்படுகின்றன என்றால் ஆகாயங்களும் ஓடுகின்றனவா?.

ஆம்! ஓடுகின்றன. கோள்களையும், துணைக் கோள்களையும், நட்சத்திரங்களையும், ஏனைய பருப்பொருட்களையும் உள்ளடக்கிய பேரண்டத்தின் ஒவ்வொரு பகுதிகளும் (Galaxies) பேரண்டத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன எனக் கூறுகிறது நவீன அறிவியல் யுகத்தின் நிறமாலை நோக்கிகள். நாம் வசிக்கும் பூமியையும், அது வசிக்கும் சூரியக் குடும்பத்தையும் உள்ளடக்கிய நமது ஆகாயத்தின் ஒரு பகுதியாகிய பால்வழி மண்டலம் (Milky Way Galaxy) மணிக்குச் சுமார் 25,20,000 கி.மீ. வேகத்தில் 'விர்கோ மிகைக் கொத்து மண்டலம்'(Virgo Super Cluster) எனும் விண்மீன் திரளை இலக்கு வைத்துப் பாய்கிறது எனவும் கூறுகிறது நவீன அறிவியல். பரிசுத்த குர்ஆனை மெய்யான இறைவேதம் என ஏற்க வேண்டிய கட்டாயத்தை நம்மீது - பகுத்தறிவுள்ள மக்கள் அனைவர் மீதும் - ஏற்படுத்துகின்றன நவீன அறிவியலின் மேற்படி கண்டுபிடிப்புகள்.

பால்வழி மண்டலத்தைப் போன்று ஏராளமான மண்டலங்கள் பேரண்டத்தில் இருக்கின்றன. அவை யாவும் ஓரிடத்தில் நிலைத்திருக்காமல் ஒவ்வொன்றும் ஓடிக் கொண்டிருக்கின்றன. கோடிக்கணக்கான வருடங்கள் இந்த நிலையில் பேரண்டம் நிலை பெற்று வந்தும், அவை தனித்தனியாக சிதறி விடவில்லையெனில் அதைச் தடுக்கும் சக்தியொன்று அதற்குள் செயல்படுகிறது என்பதை யாரால் மறுக்க முடியும்?.

மறுக்க முடியாத அந்த சக்தி எது? அது வேறொன்றுமில்லை: கணமும் ஓய்வின்றி பேரண்டத்தை விரித்துக் கொண்டிருக்கும் சக்தியே எனக் கூறுகிறது நவீன அறிவியல்.

முதல் தொடரில் பேரண்டம் படைக்கப்படுவதற்கு முன் அதிபயங்கரமான ஒரு பெரு வெடிப்பு நிகழ்ந்ததாக அறிவியல் கூறுவதைக் கண்டோமே: அந்த கணத்திலிருந்து அந்த வெடிப்பாற்றல் பேரண்டத்தை விரிவடையச் செய்து வருவதால், ஆகாய மண்டலங்களின் (Galaxies) ஓட்டம் பேரண்டத்திற்குள்ளாகவே தடுக்கப்பட்டு, எல்லையைத் தாண்டி விலகிப் போவது தவிர்க்கப் பட்டுள்ளது எனக் கூறுகிறது இருபதாம் நூற்றாண்டு அறிவியல்.

இதிலிருந்து, அண்டங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் அவைகளை உள்ளடக்கி நிற்கும் பேரண்டம் விரிவடைந்து இடம் தருவதற்கு அவை பேரண்டத்திலிருந்து விலகிப்போகும் வாய்ப்புத் தடுக்கப்படுகிறது என அறிகிறோம். இதைப்போல அண்டங்களில் ஓடிக் கொண்டிருக்கும் கோள்கள் மற்றும் ஏனையப் பருப் பொருட்களும் அண்டங்களிலிருந்து விலகிச் செல்லாமல் தடுக்கும் சக்தி எது?.

அதுவே இப்பேரண்டத்தின் ஈர்ப்பு விசை (Universal Gravitation) எனக் கூறுகிறது அறிவியல். கோள்களாயினும், நட்சத்திரங்களாயினும், ஏனைய பருப் பொருட்களாயினும் அவை ஒவ்வொன்றும் பெற்றிருக்கும் ஈர்ப்புவிசையின் உதவியால் ஒன்றை மற்றொன்று ஈர்த்து, யாவும் ஒரு குழுவாகச் செயல்படச் செய்கிறது.

மணிக்கு 1,08,000 கி.மீ. வேகத்தில் பூகோளம் ஓடிக் கொண்டிருந்தாலும், அதன்மீது சூரியன் கொண்டுள்ள ஈர்ப்பாற்றல் அதைத் தன்னிடமிருந்து விலகி விடாமல் தடுக்கிறது. இதனால் பூகோளத்தினுடைய விண்ணோட்டம் அதனை ஈர்த்துப் பிடிக்கும் சூரியனையே சுற்றிச் சுற்றி வரும்படி அவைகளுக்கிடையில் உள்ள ஈர்ப்புவிசையால் செயல் படுத்தப் பட்டுள்ளன.

பார்த்தீர்களா! விண்ணும், மண்ணும் விலகாமல் இறைவன் தடுத்துக் கொண்டிருக்கிறான் என்று 1400 வருடங்களுக்கு முன் பரிசுத்த குர்ஆன் கூறியதைப் பேரண்டத்தின் விரிவாற்றல் மற்றும் பேரண்டத்தின் ஈர்ப்பாற்றல் எனப் பெயரிட்டு 20-ஆம் நூற்றாண்டு அறிவியல் கண்டு பிடிப்புகளே சாட்சி கூறி நிற்பதை!

அறிவியல் சாட்சி நிற்கும் ஒன்றையா நீங்கள் புறக்கணிக்க முடியும்?. அல்லது அறிவியலின் அபிமானிகளே! அறிவியலைக் காட்டிலும் உயர்ந்த சாட்சியம் ஒன்றிருந்து அதைத்தான் நீங்கள் எதிர் பார்க்கிறீர்களா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?..

(வளரும் இன்ஷா அல்லாஹ்)
---------------------------
வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் முந்தைய பகுதிகள்.

பேரண்டப் படைப்பின் துவக்கம் -1
வாழத் தகுந்த கோள்-2
ஓசோன் -3
விண்ணகத்தின் பரப்பெல்லை -4

No comments: