Thursday, August 18, 2005

வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும்-6

விண்ணடுக்குகள் -6


ஏ.கே.அப்துர் ரஹ்மான்

''ஏழு வானங்களையும் அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காய் படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? (71:15)

இந்த பரிசுத்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றபடி நீங்கள் ஆகாயங்கள் யாவும் அடுக்குகளாய் படைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறீர்களா? உங்கள் ஐயத்தைத் தீர்க்க இது நாள் வரையிலும் நீங்கள் ஆகாயத்தின் பக்கம் பார்க்காதவர்களாயினும் சரி, ஆகாயம் இப்போதும் இருக்கவே செய்கிறது. உங்கள் அறைகளிலிருந்து வெளியே வந்து கொஞ்ச நேரம் (அல்லது உங்கள் வாழ்நாள் முழுவதும்) அதை உற்றுப் பார்த்து விட்டு அதில் அடுக்குகள் தெரிகின்றனவா என்பதைக் கூறுங்கள்.

நண்பர்களே! நான் கேலி செய்யவில்லை. இந்தப் பரிசுத்த வசனத்தின் ஆழத்தை, இவ்வசனத்தையும் இதைப் போன்ற இன்னும் ஏராளமான வசனங்களையும் உள்ளடக்கிய திருக்குர்ஆன் மெய்யாகவே மனித சக்திக்கு அப்பாற்பட்ட. மெய்யான இறைவனின் வார்த்தைகளே என்பதற்குரிய அறிவியல் ஆதாரங்களின் பரிணாமத்தை நீங்கள் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டுமென்பதற்காகவே உங்களை உசுப்புகிறேன்.

எண்ணிப் பாருங்கள் நண்பர்களே! காலங்காலமாகப் பற்பல நோக்கங்களுக்காகப் பல கோடிக் கண்கள் அனுதினமும் பார்த்துப் பார்த்துப் பழகிப் போன இந்த ஆகாயப் பெருவெளியில் எந்த ஒரு மனிதராவது எந்த ஒரு அடுக்கையாவது கண்டிருக்கிறாரா? ஆனால் மாமனிதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அறிவிக்கும் தூதுச் செய்தியில் ஆகாயங்கள் யாவுமே அடுக்குகளின் தொகுப்பே எனும் கருத்துத் தொனிக்கிறதே! இதன் மர்மமென்ன?

மெய்யாகவே இந்த மனிதர் கூறியவாறு ஆகாயங்கள் யாவும் அடுக்குகளாகத் தான் அமைந்துள்ளன எனில் இந்தப் பேரண்ட இரகசியம், ஆறாம் நூற்றாண்டின் அறியாமைக் காரிருளில் மூழ்கிக் கிடந்த ஆகாயத்தின் இயற்பியலியல் (Astrophysics) காணப்படும் அரிய அறிவியல் இவருக்கு மட்டும் எப்படித் தெரிந்தது? ஆகவே இவர் கூறியவாறு மெய்யாகவே நமது பேரண்டம் அடுக்கடுக்காகத்தான் அமைந்துள்ளது எனில் இவர் போதித்த குர்ஆன் வசனங்கள் இவருடைய வார்த்தைகளல்ல என்பது தெளிவு நண்பர்களே!

நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் வசனம் மானிடக் கணகளுக்குப் புலப்படாத இரண்டு விஷயங்களைத் தெரிவிக்கின்றது. முதலாவது விஷயம் ஆகாயங்களின் எண்ணிக்கை மொத்தம் ஏழு. இதை மானிடக் கண்களும் பார்த்ததில்லை. அறிவியல் கண்களும் இதுவரை இதைப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே இது குர்ஆனுக்கு சாட்சி கூறுவதற்காகக் காத்திருக்கும் எதிர்கால விஞ்ஞானத்தைச் சார்ந்தது.

உலகின் மிகச் சக்தி வாய்ந்த தொலை நோக்கி பூமிக்கு வெளியே 1250 கோடி ஒளி வருடங்கள் வரை பரவியிருக்கும் நெடிதுயர்ந்த இப்பேரண்டத்தின் விளிம்பைக் காட்டி அதற்கப்பால் எதுவும் இருப்பதற்கான அறிகுறிகளைத் தெரிவிக்கவில்லை. ஆகவே மீதமுள்ள எல்லையற்ற பெருவெளி வெறும் சூன்யம் என முடிவு செய்யத் தூண்டுகிறது இன்றைய விஞ்ஞானம். ஒரு கால் எதிர் காலக் கண்டு பிடிப்புகள் இதற்கப்பாலும் பேரண்டங்கள் இருப்பதை நிரூபித்தால் அதன் வாயிலாக ஏழு ஆகாயங்கள் யாவை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அல்லது இன்றைய கண்டு பிடிப்பே முழுமையானது என்பதை எதிர்காலக் கண்டு பிடிப்புகள் நிறுவினால் அப்போது இந்தப் பேரண்டமே மிக முக்கியமான சில பண்புகளின் அடிப்படையில் ஏழு முதன்மைத் தொகுதிகளாக - ஏழு ஆகாயங்களாக - அவைப் பெற்றிருப்பதை நாம் அறிவியல் வாயிலாகக் கண்டு தெளிவோம் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் வசனத்தில் எழுப்பப் பட்டிருக்கும் வினாவே அதற்குச் சான்று!

அந்த வசனத்தில் இறைவன் ''நீங்கள் பார்க்கவில்லையா?'' என்ற வினாவை மானிட சமுதாயத்தைப் பார்த்து எழுப்புகிறான். ஆகவே மானிட சமுதாயம் அதைப் பார்க்கக் கூடிய நேரம் வந்தே தீரும் என்பதிலும் ஐயத்திற்கிடமில்லை.

இந்த வசனத்தில் கூறப்படும் மற்றொரு விஷயம் ஆகாயங்களை (ஏழு ஆகாயங்களும்) அதைப் படைத்தவன் யாரோ அவன் அடுக்குகளாகவே படைத்திருக்கிறான் என்பது. இந்த விஷயத்தையே நாம் இங்கு ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். மானிடக் கண்களுக்கு நேரடியாகப் புலப்படாத இந்த விஷயத்தை மெய்யா பொய்யா என நாம் எப்படித் தெரிந்து கொள்வது? எந்தக் கோணத்தில் அணுகி இதன் யாதார்த்த நிலையை நாம் விளங்கிக் கொளவது? இதற்குரிய விடையைத் தேடினால் அந்த அற்புதக் குர்ஆன் மெலும் வினவுகிறது.

''ஆகாயம் எப்படி உயர்த்தப் பட்டுள்ளது என்பதை (அவர்கள் பார்க்க வேண்டாமா?) (88:18) என்று, நெடிதுயர்ந்து கம்பீரமாகக் காட்சியளிக்கும் ஆகாயப் பெருவெளி எவ்வாறு அடுக்குகளால் அமைந்துள்ளது எனத் தேடினால் அந்தப் பணியை நிறைவேற்றும்படி பரிசுத்த குர்ஆன் நம்மையே ஏவுகிறது.

தற்போது மேற்கோள் காட்டப்பட்ட இந்த பரிசுத்த வசனத்தில் கூறப்படும் அறிவியலில் மேலும் புதிய செய்தி ஒன்றை அதன் ஆசிரியனாகிய இறைவன் பறைசாற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தீர்களா?

அதாவது ''ஆகாயம் எப்படி உயர்த்தப்பட்டுள்ளது'' எனக் கூறும் வசனத்தின் வாயிலாக ஆகாயம் என்பது உயர்த்தப்பட்ட ஒரு வஸ்துவே என்ற அறிவியலை அவன் அறிவிக்கிறான் ஆகவே ஆகாயம் என்பது மெய்யாகவே உயர்த்தப்பட்ட ஒரு வஸ்து தானா என்பதற்கு முதலாவதாக நாம் விடை காண்போம். அதன் பிறகு அதில் அடுக்குகளைத் தேடுவோம்.

இந்த வசனத்தை ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன் மானிட சமுதாயத்திற்கு இறைவன் இறக்கி வைத்தான். மிகத் தொன்மையான அந்தக் காலக் கட்டத்தில் இந்த வசனத்தில் அடங்கியுள்ள அறிவியலைக் கற்பனையில் கூட எந்த மனிதனும் கண்டிருக்க முடியாது. அவ்வளவு ஏன்? இந்த வசனத்தில் அடங்கியுள்ள அறிவியலை இன்றைய நாட்களில் அறிவியலோடு தொடர்புடைய மக்கள் பரவலாகப் பேசி வருகிறார்கள். அப்படியிருந்தும் ஆகாயம் என்பது உயர்த்தப்பட்ட ஒரு வஸ்துவா என்பதை அவர்களிடம் கேட்டால் எவ்வளவு பேர் சரியாகப் பதில் சொல்வார்கள்?

''ஆகாயமா? உயர்த்தப்பட்டதா? இதென்ன பந்தலென்றா நினைத்தீர்கள் உயர்த்திக் கட்டுவதற்கு? அது உயர்ந்தே தான் இருக்கிறது யாரும் உயர்த்த வேண்டியது இல்லை'' எனக் கூறித் தங்கள் மேதாவிலாசத்தைக் காட்டுகின்ற மாமேதைகள்(?) கூட இன்றைய நாட்களிலும் அறிவாளிகளாக மதிக்கப்படுகிறார்கள் எனில் 1400 வருடங்களுக்கு முந்திய நிலை மிக மோசமாக இருந்திருக்கும் என விளக்கத் தேவையில்லையல்லவா?

அறிவார்ந்த நண்பர்களே! இந்தப் பின்னணியில் மேற்கண்ட வசனத்தை அணுகினால் ஒரு காலத்தில் ஆகாயம் உயர்த்தப்படாமலே இருந்துள்ளது எனக் கருத்தறிவிக்கும் அறிவியலை 1400 வருடங்களுக்கு முன் ஒருவரால் கூற முடியும் எனில் அவர் குறைந்த பட்சம் அறியாமைக்கு அப்பாற்பட்ட பேரறிவாளன் ஒருவனுடன் தொடர்பு கொண்டவர் என்பதையாவது நாம் ஏற்றாக வேண்டும்.

ஆகாயம் உயர்த்தப்பட்டது எனக் கூறும் குர்ஆன் வசனத்திற்கு, ஆகாயம் என்பது உயர்த்தப்பட்ட ஒரு வஸ்து அது உயர்த்தப்படுவற்கு முன்னால் அது உயர்ந்திருக்கவில்லை. மாறாகத் தாழ்ந்தோ அமிழ்ந்தோ (அல்லது அதைப் போன்று வேறு ஏதேனும் ஓர் நிலையிலோ) இருந்தது என்பது பொருள்.

நண்பர்களே! அறிவியல் கண்களுக்கு எட்டிய வரை இந்தப் பிரமாண்டமான பேரண்டம் 1250 கோடி ஒளி ஆண்டு வரை பரவி கம்பீரமாக நெடிதுயர்ந்து நிற்கிறது. இது இன்றைய நிலை, இவ்வாறே தான் இது அன்றும் இன்றும் (என்றும்) இருக்கிறதா? நாம் கொஞ்ச நாட்கள்(!) அதாவது 1800 கோடி வருடங்கள் பின்னோக்கிச் செல்வோம். அப்போது இந்தப் பேரண்டத்தின் நிலை என்ன? என்பதை முதல் கட்டுரையில் படித்திருப்பீர்கள் (பார்க்க முதல் கட்டுரை)

அதாவது 1800 கோடி வருடங்களுக்கு முன் இப்பேரண்டம் மிக மிகச் சிறிய பொருளுக்குள் மிக மிக அடர்த்தியாக இருந்தது என்றும் அதன் பிறகு ஏதோ ஒரு வானியல் காரணத்தால் திடீரென அப்பொருள் வெடித்துச் சிதறி இன்றைய நிலையை அடைந்தது என்றும் முதல் கட்டுரையில் கண்டிருப்பீர்கள். இப்போது கூறுங்கள், ஆகாயம் உயர்த்தப்பட்டுள்ளது எனக் கூறும் இப் பரிசுத்த வசனத்தில் அடங்கியுள்ள அறிவியல் மெய்யா? அல்லது பொய்யா?

நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் வசனத்தில் கூறப்பட்டிருப்பதைப் போன்று ஆகாயம் என்பது உயர்த்தப்பட்டிருக்கும் ஒரு வஸ்துவே. அடுத்தபடியாக ஆகாயம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது என்பதை நாம் பார்த்தாக வேண்டும்.

இந்தக் கட்டளையை எப்படி நிறைவேற்றலாம்? மானிடப் பார்வைகளின் சக்திக்கப்பால் உள்ள விஷயங்களைத் தெரிந்து கொள்ள அதற்கேற்ற கருவிகள் நமக்கு வேண்டுமே! அந்தக் கருவிகள் எங்கே?

ஓ..அறிவியலாளர்களே! பரிசுத்த குர்ஆன் எதைச் செய்யத் தூண்டுகிறதோ அதை அறிந்தோ அறியாமலோ செயல் படுத்திக் கொண்டிருப்பவர்களே! உள்ளங்களில் இறைவனின் உள்ளமையையும், ஆற்றலையும், ஏகத்துவத்தையும் வெளிச்சம் போட அறிந்தோ அறியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ ஈடுபட்டிருக்கும் மகத்தான காரியங்களைச் செய்து கொண்டிருப்பவர்களே! உங்களுடைய தொலை நோக்கிகளும் (Telescope) நிறமாலை நோக்கிகளும் (Spectroscopies) கூறும் செய்தியென்ன? இப்பேரண்டம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது? நீங்கள் கண்டறிந்த விஷயங்களில் பரிசுத்த குர்ஆனை மெய்ப்பிக்கக் கூடியு அறிவியல் ஆதாரங்கள் ஏதேனும் உண்டா?

உண்டு, நிச்சமாக உண்டு இப்பேரண்டம் உயர்த்தப்பட்டிருப்பதே அடுக்குகளாகத்தான் எனக் கூறுகிறது நவீன அறிவியல் கண்டு பிடிப்புகள்.

ஆகாயம் உயர்த்தப்பட்ட ஒரு வஸ்துவே எனக் கூறிய பரிசுத்த குர்ஆனின் மற்றொரு வசனத்தைச் சாட்சி கூறி மெய்ப்பித்து நிற்கும் அறிவியலைப் பார்த்து இந்த ஆகாயம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது எனக் கேட்டபோது ஆகாயம் அடுக்கடுக்காகவே உயர்த்தப்பட்டுள்ளது எனக் கூறுகிறது அறிவியல். அடுக்கடுக்காக என்றால் எவ்வாறு? இந்த வினாவிற்குரிய பதிலை இப்போது காண்போம்.

ஆகாயத்தில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை கொஞ்சமா? நஞ்சமா? ஒன்றா? ஓராயிரமா? அல்ல நண்பர்களே அல்ல! அதிகம்பீரமான இப்பேரண்டத்தில் ஏறத்தாழ 100 கோடி அடுக்குகள் (Galaxies) அமையப் பெற்றுள்ளன எனக் கூறி நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் பரிசுத்த குர்ஆன் வசனத்தை மிக மிக உறுதியாக மெய்ப்பித்து நிற்கிறது நவீன அறிவியல்.

என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே! இப்பரிசுத்த குர்ஆனின் அமானுஷிகத் தன்மை, இதன் பொய்க் கலப்பற்ற தூய நிலை நம்மை மெய்சிலிர்க்க வைக்கவில்லையா? இந்த அற்புத வேதத்தை விட்டு நம்மால் முகம் திருப்ப முடியுமா?

நண்பர்களே! முதலாவதாக பேரண்டத்தின் இயற்பியலைப் (Astrophysics) பற்றிய ஆய்வில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ''வில்லியம் ஹெர்ஷல்'' என்ற அறிவியல் மேதை தான் ஆகாயத்தில் அடுக்குகளைக் கண்டவர். இவருடைய கண்டு பிடிப்புகள் ஒரு புறத்தில் பரிசுத்த குர்ஆனை ஒப்புக் கொண்ட போதிலும் மறுபுறத்தில் குர்ஆனை மறுத்தன.

அதாவது இவருடைய ஆய்வு ஆகாயத்தை 688 அடுக்குகளாக வகைப் படுத்திய போதிலும் அதில் ஒரே ஒரு அடுக்கு மட்டுமே (பால்வழி மண்டலம் மட்டுமே) நட்சத்திரங்களைக் கொண்டதாகவும் அதிலும் அந்த அடுக்கின் மையத்தில் சூரியன் இருப்பதாகவும் காட்டி ஏனைய அடுக்குகள் எதிலும் நட்சத்திரங்கள் இல்லை எனக் கூறிற்று. இதன் வாயிலாக, நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும்

''ஏழு ஆகாயங்களையும் அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காய்ப் படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? (71:15) எனும் வசனத்தில் காணப்படும் ஆகாயத்தின் அடுக்குகளை இவரது ஆய்வு ஒப்புக் கொண்டு, அதே சமயம் பரிசுத்த குர்ஆனின் மற்றொரு பரிசுத்த வசனத்தை மறுப்பதாக அமைந்தது.

பொய்யின் நிழலைக் கூட அண்ட விடாத அதி பரிசுத்த பேரொளியாம் ஒப்பற்ற திருக்குர்ஆன் ஆறாம் நூற்றாண்டிலேயே வரப்போகும் நூற்றாண்டுகள் அனைத்தையும் பார்த்துக் கூறிற்று, ''இன்னும் அவற்றில் (ஏழு வானங்களில்) சந்திரனைப் பிரகாசமாகவும் சூரியனை விளக்காகவும் ஆக்கியிருக்கிறான்'' (71:16) என்று!

அருமை நண்பர்களே! நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் வசனத்தைத் தொடர்ந்து வரும் வசனம் இது. இந்த வசனத்தின் வாயிலாகக் குர்ஆன் கூறும் அறிவியல் பேருண்மையென்ன?

அதாவது பதினெட்டாம் நூற்றாண்டில் வில்லியம் ஹெர்ஷல் எனும் அறிவியலாளர் பால்வழி மண்டலம் ஏனும் அடுக்கில் மட்டுமே நட்சத்திரங்கள் இருக்கின்றன எனக் கூறப் போகும் தகவல் தவறு. மாறாகத் தன்னுடைய ஆசிரியனாகிய, மிக்க மேலான அல்லாஹ் (ஜல்) ஆகாயங்கள் யாவிலும் (ஏழு ஆகாயங்களிலும்) சூரியனையும் (நட்சத்திரம்) - சூரியன் மட்டுமென்ன - சந்திரனையும் (துணைக் கோளையும்) படைத்திருக்கிறான் எனக் கூறிக் காலத்தையும் வென்ற ஒப்பற்ற அறிவுக் களஞ்சியமாய் உலக மக்கள் அனைவருக்கும் பாடம் நடத்துகிறது.

அற்புதமல்லவா இது! எதிர்காலத் தவறுகளையே தீர்க்க தரிசனமாய்க் கண்டு தடுத்து, எதிலும் மெய்களின் பால் நம்மை வழி நடத்தப் பேரொளியாய் வந்திருக்கும் இப்பரிசுத்த வேதத்தையா புறக்கணிக்க முடியும்? சிந்திக்க வேண்டாமா?

பால்வழி மண்டலத்தில் மட்டுமல்லாது ஆகாயமெங்கும் நட்சத்திரங்கள் உண்டு எனக் குர்ஆன் மட்டும் தானே கூறுகிறது அதற்குரிய அறிவியல் சாட்சியம் எங்கே எனக் கேட்கிறீர்களா?

பதினெட்டாம் நூற்றாண்டின் அறிவியல் மேதை வில்லியம் ஹெர்ஷலுக்கு ஏற்பட்ட தவறு அமெரிக்க அறிவியல் மேதை ''ஷெப்லி'' அவர்களால் முதல் திருத்தம் செய்யப்பட்டது. சூரியக் குடும்பம் பால்வழி மண்டலத்தின் மையத்தில் இல்லை. அது இம்மண்டலத்தின் ஒரு ஓரத்தில் இருக்கிறது என 1918-ல் ஆரம்பித்த இவரது கண்டுபிடிப்புக்குப் பிறகு இத்துறையில் படிப்படியான முன்னேற்றங்களைக் கண்டு இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற அறிவியல் மேதையாம் திரு, ஜன்ஸ்டீன் வரையிலான அறிவியலாளர்களின் கண்டு பிடிப்புகளைத் தொகுத்துப் பார்த்தால் அவையாவும் பரிசுத்த குர்ஆனை மெய்ப்பித்துக் கொணடிருக்கும் அற்புதத்தைக் கண்டு அறிவியலை மதிக்கும் எந்த நபராலும் வியக்காமல் இருக்க முடியாது.

நெடிதுயர்ந்த கம்பீரமாகக் காட்சியளிக்கும் இப்பேரண்டத்திற்குள் அமைந்திருக்கும் அடுக்குகள் அவைகளுக்கே உரிய பரப்பளவு எல்லை வரம்பு மற்றும் வடிவம் போன்ற சிறப்பம்சங்களால் ஒவ்வொன்றும் ஒரு மண்டலமாகக் (Galaxy) காட்சியளிக்கிறது. இப்படிப்பட்ட மண்டலங்கள் இப்பேரண்டத்தில் ஏறத்தாழ 100 கோடி. இவை ஒவ்வொன்றும் நட்சத்திரங்கள் (Star) குவாசர்கள் (Quasars) கருக்குழிகள் (Black Holes) போன்ற விண்ணகப் பருப்பொருட்களால் (Celestrial Bodies) நிரம்பப் பெற்றிருக்கின்றன.

(குவாசர்கள், கருங்குழிகள் போன்ற பொருட்கள் மிகத் தொலைவில் இருப்பதால் இவற்றின் இயற்பியல் பண்புகள் இன்னமும் சரியாக அறியப்படவில்லை. இருப்பினும் குவாசர்கள் என்பது நட்சத்திரங்களைக் காட்டிலும் அதிக ஒளியுடையவை எனவும் கருங்குழிகள் ஒளியற்றவை எனவும் முன்னவை சிற்றுருவங்கள் எனவும் பின்னவை நட்சத்திரங்களை விடப் பேருருவும் கொண்டவை எனவும் கருத்தில் கொள்க)

இவ்வாறு மண்டலம் மண்டலமாக அமையப் பெற்றிருக்கம் ஒவ்வொரு அடுக்கிலும் கோடிக்கணக்கான விண்மீன்கள் இருக்கின்றன. இதில் நமது பூகோளம் அமையப் பெற்றிருக்கும் அடுக்காகிய பால்வழி மண்டலத்திற்குள் இருக்கும் விண்மீன்களின் எண்ணிக்கை ஏறத்தாழ பத்தாயிரம் கோடி. இந்த பத்தாயிரம் கோடி நட்சத்திரங்களுக்குள் இருக்கும் ஒரு நட்சத்திரமே நமது சூரியன். இந்தச் சூரியனுக்குக் கோள்களும் துணைக் கோள்களும் இருப்பதைப் போல சூரியனை ஒத்த ஏனைய நட்சத்திரங்களுக்கும் கோள்களும் துணைக் கோள்களும் இருக்க வேண்டும் என்பது அறிவியலாளர்களின் கணிப்பு.

சூரியக் குடும்பத்தைத் தவிர உள்ள நட்சத்திரங்களில் கோள்களையும் துணைக் கோள்களையும் பற்றிய அறிவியல் வெறும் கணிப்புடன் நிற்பதற்குக் காரணம் அவைகள் நட்சத்திரங்களைப் போல் சுயமாக ஒளி விடாததேயாகும். இவை சுயமாக ஒளி விடாத காரணத்தால் தொலை நோக்கிகளுக்கோ அல்லது நிறமாலை நோக்கிகளுக்கோ இவை அகப்படுவதில்லை. இருப்பினும் ஒவ்வொரு ஆகாயத்திலும் துணைக் கோளும் உண்டு எனக் கூறும் குர்ஆன் வசனத்தை அறிவியலாளர்களின் கணிப்பு ஆதரிக்கவே செய்கிறது.

பால்வழி மண்டலத்திற்கு மிக அருகில் உள்ள அடுக்கு 'ஆண்ட்ரமீடா' என அழைக்கப்படுகிறது இது பால் வழி மண்டலத்தைக் காட்டிலும் இரு மடங்கு பரப்பளவைக் கொண்டது. பால்வழி மண்டலம் தட்டையான சக்கர வடிவம் கொண்டது. இதன் பருமன் 10,000 ஒளியாண்டுகள், குறுக்களவு ஒரு லட்சம் ஒளியாண்டுகள்.

பேரண்டத்தில் பரவியிருக்கும் அடுக்குகள் ஏராளம் ஏராளாமாக இருப்பதால் அவைகளுக்குப் பெயரிட எண்களையும் எழுத்துக்களையும் பயன்படுத்துகின்றனர். சான்றாக நமக்கருகில் உள்ள அடுக்குகள் 'M' அடுக்கு 'M-33' அடுக்கு போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

அருமை நண்பர்களே! அறிவியல் அபிமானிகளே! ஆகாயங்கள் அடுக்குகளாகத் தான் அமைந்திருக்கின்றன என்ற பேரண்டத்தின் இயற்பியல் பற்றிய பரிசுத்த குர்ஆனின் அறிவியல் பிரகடனம் மெய்யா? பொய்யா?

இப்பேரண்டம் அடுக்குகளால் அமைந்ததே என்ற அறிவியலை நாம் பார்த்தே தீருவோம் எனக் கருத்துணரப்பட்ட குர்ஆனுடைய தீர்க்க தரிசனம் மெய்ப்பிக்கப்பட்டதா இல்லையா?

ஒவ்வொரு ஆகாயத்திலும் சூரியன் (நட்சத்திரம்) உண்டு எனக் கூறிய ஆறாம் நூற்றாண்டின் பரிசுத்த குர்ஆனைப் பதினெட்டாம் நூற்றாண்டு மறுத்த போது அந்த மறுப்பையே இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் தகர்த்தெறிந்து பரிசுத்த குர்ஆன் உண்மை, உண்மை, உண்மையென ஓங்கி ஒலித்துத் தன்னை அசைக்க முடியாத சாட்சியாக அந்த அற்புத வேதத்திற்கு அர்ப்பணித்து நிற்கிறதா இல்லையா?

மானிடர்களாகிய நம்மில் சிலர் எங்கு செல்கிறார்கள் நண்பர்களே? பதினெட்டாம் நூற்றாண்டின் அறிவியலால் கூட கண்டு பிடிக்க இயலாத விஷயத்தையா ஆறாம் நூற்றாண்டின் தனி மனிதரால் கண்டு பிடிக்க முடிந்தது? இது மனித சக்திக்கு அப்பாற்ப்பட்ட வார்த்தைகளே (வேதமே) என்பதை இன்னும் இவர்கள் உணர மாட்டார்களா?

இந்த அற்புத வேதம் மெய்யாகவே இறைவனின் வார்ததைகள் தாமா? அல்லவா எனக் கண்டறிய அறிவியலைக் காட்டிலும் உயர்ந்த ஆதாரம் ஒன்று இருந்து அதைத் தேடித்தான் அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்களா?

இவர்கள் தாம் அறிவியலை ஏற்கும் பண்புடையவர்களா? இவர்கள் சிந்திக்க மாட்டார்களா நண்பர்களே?

அருமை நண்பர்களே! ஆகாயங்கள் யாவும் அடுக்குகளாகத்தான் அமைந்திருக்கின்றன எனக் கூறும் பரிசுத்த குர்ஆனை மெய்ப்பிக்க சாட்சிக் கூண்டை நோக்கி ஓடோடி வரும் மற்றொரு அறிவியல் பேருண்மையைப் பாருங்கள்.

பூகோளத்தைச் சூழ்ந்து நிற்கும் வளிமண்டலக் கூரை, 'இந்த வசனத்திற்குச் சாட்சி கூறும் பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள், நானும் ஆகாயம் என்ற சொல்லுக்கு உட்பட்டவனே, ஆகவே என்னுடைய இறைவனைத் துதிக்கும் பட்டியலில் நானும் உள்ளேன்' எனக் கூறி ஓடோடி வந்து அதிலுள்ள அடுக்குகளை அடையாளம் காட்டுகிறது.

வளிமண்டலத்தைப் பற்றிய அறிவியல் ஆய்வு 1643-ல் இத்தாலிய விஞ்ஞானிகளால் முதலாவதாக மேற்கொள்ளப்பட்ட போதிலும் தம்முடைய ஆய்வுக் கருவிகளுடன் 1730-ல் மலை மீதேறிய டாக்டர் 'ஹாலி' அவர்களே இம்மண்டலத்தில் அடுக்குகளைக் கண்ட முதலாவது அறிவியலாளராவார். அதன் பிறகு பலூன்களைப் பயன் படுத்த அறிவியலாளர்கள் கற்றுக் கொண்ட பின் 1745, 1784, 1910 எனப் படிப்படியாகப் பல வளர்ச்சிக் கட்டங்களைத் தாண்டி அண்மைக் கால ஆங்கிலேய அறிவியல் மேதை எட்வார்ட் அப்பில்டன் வரையிலான அறிவியலாளர்களின் கண்டு பிடிப்புக்கள் நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் பரிசுத்த குர்ஆன் கூறிய அறிவியலை மெய்ப்பித்துக் கொண்டிருப்பதைப் பாருங்கள்.

வளி மண்டலத்தின் முதல் அடுக்கு பூமியின் மேல் பரப்பிலிருந்து கிட்டதட்ட 16 கி.மீ வரை பரவியுள்ளது. இந்த அடுக்கில் உயரே செல்லச் செல்ல ஒவ்வொரு இருநூறு மீட்டருக்கும் ஒரு டிகிரி (1 'C/200 Mts) வெப்பம் குறைந்து கொண்டே செல்லும் எனவே இந்த அடுக்கு ''மாறும் வெப்ப நிலை மண்டலம்'' (Troposhere) என அழைக்கப்படுகிறது. வளிமண்டலத்தின் மொத்தமுள்ள காற்றில் 75% முதல் 79% வரை இந்த அடுக்கில் இடம் பெற்றுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக உள்ளது ''மாறா வெப்பநிலை இடைவெளி'' (Tropopause) என்பதாகும் இதில் முந்திய அடுக்கை விட வெப்பம் திடீரென அதிகரித்து இதன் முந்திய மற்றும் பிந்திய அடுக்குகளைப் பிரித்துக் காட்டும் தனி அடுக்காக அமைந்தள்ளது.

அடுத்தபடியாக உள்ளது ''மாறா வெப்பநிலை மண்டலம்'' (stratospere). இதில் உயரத்திற்கேற்ப வெப்பத்தில் எந்த மாறுதலும் இல்லை. இம்மண்டலம் ஏறத்தாழ 50 கி.மீ வரை பரவியுள்ளது.

இதற்கடுத்த அடுக்கு உயிர்ப் பிராணிகளுக்கு கவசம் போல் (இது பற்றிய முந்திய பதிவில் சொல்லப்பட்டுள்ளது) அமைந்திருக்கும் ஓசோன் எனும் மிக மெல்லிய அடுக்கு (Ozone Layer) இதைத் தாண்டியதும் அயனி மண்டலம் (Inosphere) ஆரம்பமாகிறது.

ஆரம்ப காலத்தில் அயனி மண்டலம் என்பது ஒரே ஒரு அடுக்குகள் என விஞ்ஞானிகள் எண்ணினார்கள். ஆனால் அயனி மண்டலத்தைப் பற்றிய ஆய்வுகளில் நவீன விஞ்ஞான யுகம் செயற்கைத் துணைக் கோள்களைப் (Artificial Satelites) பயன்படுத்தத் துவங்கியதும் இந்த அயனி மண்டலம் ஒரே அடுக்கல்ல, அதற்குள்ளும் வெவ்வேறு அடுக்குகள் இருக்கின்றன என ஆய்வுகள் காட்டின.

இம்மண்டலத்தில் 90 கி.மீ வரை பரவியுள்ள பகுதி 'D' அடுக்கு எனவும் 180 கி.மீ வரை பரவியிருப்பதை 'E' அடுக்கு எனவும் அதற்கு மேல் 300 கி.மீ வரை பரவியிருப்பதை 'F1' அடுக்கு மற்றும் 'F2' அடுக்கு என இரு அடுக்குகளாகவும் பிரிப்பதை ஆய்வுகள் காட்டின.

300 கி.மீ வெளியே 'புறவெளி மண்டலம்' (Exosphere) எனும் அடுக்கு ஆரம்பித்து வளி மண்டலத்தின் எல்லையாகிய 500 கி.மீ வரை பரவி நிற்கிறது!

பார்த்தீர்களா! ஆகாயங்கள் யாவையும் அடுக்கடுக்காக எவ்வாறு படைத்திருக்கிறான் என்ற பரிசுத்த குர்ஆனின் வியக்கத்தகு வினாவிற்கு, இவ்வாறு தான் படைக்கப்பட்டுள்ளன எனக் கூறி வளி மண்டலத்தின் சிற்றடுக்குகளையும் நட்சத்திர மண்டலங்களின் பேரடுக்குகளையும் பற்றிய நவீன அறிவியல் பேருண்மைகள் சாட்சி கூறி நிற்பதை!

அறிவியல் அபிமானிகளே! இதற்கு மேலுமா இப்பரிசுத்த வேதத்தை நம்மால் புறக்கணிக்க முடியும்?

பேரண்டம் முழுவதும் பரவியிருக்கும் 100 கோடி அடுக்குகளில் நவீன அறிவியல் மேலும் ஒரு உயர் தொகுதியைக் கண்டிருக்கிறது. இத்தொகுதிகள் ஒவ்வொன்றும் சில நட்சத்திர மண்டலங்களை உள்ளடக்கிய ''உட்குழுவாக'' (Local Groups) அமைந்துள்ளன. இதில் நமது பால் வழி மண்டலம் அமைந்திருக்கும் உட்குழுவில் இருபத்தி நான்கு நட்சத்திர மண்டலங்கள் (Galaxies) உள்ளடங்கியுள்ளன.

நவீன அறிவியல் கண்டு பிடிப்புக்கள் இந்தக் கோணத்தில் முன்னேறிச் சென்றால் இதற்கு மேலும் உயர் பிரிவுகளைக் கண்டறிந்து முடிவாக இந்தப் பேரண்டத்திற்குள்ளாகவே எண்ணிறைந்த நட்சத்திர மண்டலங்கள் பரிசுத்த குர்ஆன் கூறியவாறு ஏழு முதன்மைத் தொகுதிகளாக - ஆம்! ஏழு ஆகாயங்களாக - அமைந்திருப்பதைக் காணும் நாள் வெகு தொலைவில் இல்லை என எண்ணத் தோன்றுகிறது.

இவ்வளவு அழுத்தம் திருத்தமாக இதுவரை கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் பேருண்மைகளாயினும் சரி, தற்போது கண்டு பிடிக்கப்பட்டு வரும் அறிவியல் பேருண்மைகளாயினும் சரி! ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முந்திய தொன்மையான காலக் கட்டத்தில் அருளப் பெற்ற ஒரு வேதத்தை நூற்றுக்கு நூறு என்ற விதத்தில் அறிவியல் வாயிலாக நிரூபித்து நிற்கிறது எனில் அந்த வேதம் மனித சக்தியால் இயற்றப்பட்டதாக இருக்க முடியுமா? என்பதை சிந்திக்க நாம் கடமைப் பட்டிருக்கிறோம்.

ஆகவே பரிசுத்த குர்ஆன் மனித சக்திக்கு அப்பாற்பட்டதே எனச் சாட்சி கூறி நிற்கும் நவீன அறிவியலின் அறைகூவலை ஏற்று அறிவியலோடு அறிவாளிகளாக நாமும் அந்த அறைகூவலில் பங்கு பெறத் துணிவுடன் திரள்வோம். இதுவே அறிவியலை ஏற்கும் துணிவு பெற்றவர்களின் பண்பாக இருக்க முடியும் என்பதில் ஐயத்திற்கு இடமேது?

ஆகவே அறிவியலை ஏற்கும் பண்புடையவர்களே! அறிவியலே வழிகாட்டி அழைத்துச் செல்லும் இப்பரிசுத்த குர்ஆனின் பால் நாம் அனைவரும் ஒன்று திரள்வோம், துணிவுடன் வாருங்கள்.

(வளரும் இன்ஷா அல்லாஹ்)
---------------------------
வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் முந்தைய பகுதிகள்.
பேரண்டப் படைப்பின் துவக்கம் -1
வாழத் தகுந்த கோள்-2
ஓசோன் -3
விண்ணகத்தின் பரப்பெல்லை -4
பேரண்டத்தின் ஈர்ப்பு விசை -5

4 comments:

lionel283mikaela said...
This comment has been removed by a blog administrator.
inomeno said...

அபூ முஹை,
தங்கள் விளக்கத்தை எதிர்பார்த்து
http://inomeno.blogspot.com/ இல்
‘அபூ முஹையின் விளக்கம் வேண்டி’
என்ற பதிவை இட்டிருக்கிறேன்.
தங்களுக்கு விருப்பம் இருந்தால் விளக்கம் தாருங்கள்.

அபூ முஹை said...

inomeno உங்கள் பதிவைப் பார்த்துக் கொண்டேன். இன்ஷா அல்லாஹ் ஓரிரு தினங்களில் விளக்கமளிக்கிறேன்!

Aarokkiyam உள்ளவன் said...

ஐனோமினோ (நேசகுமார்),

அப்படியே உங்களிடம் நான் கேட்ட கேள்விகளுக்கும் உங்கள் மேலான பதிலை அன்புடன் எதிர்பார்க்கிறேன் :-)))