Wednesday, August 03, 2005

வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும்-3

ஓசோன் -3

ஏ.கே.அப்துர் ரஹ்மான்

மேல்கார்த், மோலாக், ரா, போபஸ், அப்போலோ, சமாஷ், கிசால்கோட் யாரில்..பகவான்(?)..
மேற்கண்ட பெயர்களாலும், இன்னும் மேலே குறிப்பிடப்படாத பெயர்களாலும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த மக்கள் வெள்ளத்தால் அனுதினமும் பக்தி சிரத்தையோடு கடவுளாக(?) வழிபட்டு வரபட்ட அப்பொருள்தான் சூரியன் எனும் நெருப்புக் கோளமாகும். இப்பொருள் மக்கள் எண்ணிக் கொண்டிருப்பதைப் போன்று கடவுள் இல்லை. மாறாக அது ஒரு நூறு கி.மீ. குறுக்களவைக் கொண்ட எரியும் பாறைப் பொருள்தான் என கி.மு. 434ல் கூறிய அனக்ஸாகரஸ் (Anaxagoras 500-428 B.C.)எனும் அறிவியல் சிந்தனையாளர் மூட நம்பிக்கையாளர்களால் சித்திரவதைக்குள்ளாகிய வரலாறுகள் இந்த பூமியில் நிகழ்ந்த பின்னும் சத்தியத் திருமறையாம் தூய குர்ஆன் மூட நம்பிக்கையாளர்களின் கடவுளைப்(?) பற்றித் தெள்ளத் தெளிவான குரலில் ஓங்கி ஒலிக்கிறது.

'..சூரியனையும் சந்திரனையும் அவனே படைத்தான்'. (அல்-குர்ஆன் அத்தியாயம் 21 ஸூரத்துல் அன்பியாவின் 33வது வசனத்தின் ஒரு பகுதி)

'..அவைகளில் சூரியனை விளக்காகவும், சந்திரனை பிரகாசமாகவும் ஆக்கியிருக்கிறான்;'. (அல்-குர்ஆன் அத்தியாயம் 71 ஸூரத்துந் நூஹ் - ன் 16வது வசனம்)

'..மேலும் சூரியனையும், சந்திரனையும் அவை (தவறாமல்) தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் வண்ணம் (மானிடர்களாகிய) உங்களுக்கு வசப்படுத்தி தந்துள்ளான்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 14 ஸூரத்துல் இப்ராஹிம் 33வது வசனம்)

மேற்கண்ட வசனங்கள் சூரியனைப் படைக்கப்பட்ட பொருள் எனக் கூறுவதால் சூரியன் படைப்பாளன் (கடவுள்) இல்லை: அது ஒரு படைப்பினமே எனக் கூறுகிறது. மேலும் சூரியனை விளக்கு என்று கூறுவதால் அது ஓர் எரியும் பொருள் எனக் கூறுகிறது. அத்துடன் சூரியன் தன்னுடைய இயற்பியல் விதியிலிருந்து இம்மியும் பிசகாமல் இயக்கப்படுவதால் இயற்பியல் விதிகளைப் பயன்படுத்தி வளமும் வலிமையும் பெற்றுவரும் மனித சமுதாயத்திற்குத் தான் சூரியன் வசப்படுத்தப் பட்டுள்ளதேயன்றிச் சூரியனுக்கு வசப்பட்டவர்களாக மனிதர்கள் இல்லை எனக் கூறுகிறது.

குர்ஆன் கூறுகின்ற சூரியன் சம்பந்தப்பட்ட இந்த அறிவியல் தகவல்கள் யாவும் உண்மையென்றால் இதற்குப் பிறகும் கடவுளுக்குரிய இடத்தில் சூரியனை வைத்துப் பார்ப்பது கடவுளை நிந்திக்கும் செயலாகும். அத்துடன் தமக்கு வசப்பட்டிருப்பதற்கு மட்டுமே சக்தி பெற்ற ஒன்றைத் தாமே வழிபடுவது என்பது தம்மைத்தாமே நிந்தனை செய்யும் செயலாகவும் அமைந்து விடுகிறது.

தம்மைத் தாமே நிந்தனையில் தள்ளும் ஒருவர் மதிக்கப்படல் சாத்தியமா?

நவீன வானியல் விஞ்ஞானம் சூரியன் என்பது அதற்குரிய இயற்பியல் விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் ஓர் எரியும் கோளம் எனக் கூறுவதை அறியாதோர் யாரும் இந்த நூற்றாண்டில் இருக்க மாட்டார்கள். பதின்மூன்று இலட்சத்துத் தொள்ளாயிரம் கி.மீ.விட்டமும், பூமியைப் போன்று முப்பது இலட்சத்து முப்பதாயிரம் மடங்கு எடையும் (பூமியின் எடை 5,974,000,000,000,000,000,000 டன்கள்) கொண்ட இப்பொருளின் உள்ளே நமது கடல் மட்டத்தில் காணப்படும் அழுத்தத்தைக் காட்டிலும் நூறு கோடி மடங்கு அழுத்தமும் காணப்படுகிறது.

இப்படிப்பட்ட படுபயங்கரமான அழுத்தத்தின் கீழ் சூரியனுடைய உடலின் பெரும்பகுதியாகிய ஹைட்ரஜன் (Hydrogen) அணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து ஹீலியமாக (Heleum) மாறி வெளியிடப்படுகிறது. இதன் காரணமாக சூரியனின் மையத்தில் 1.5 -, 2 ஆயிரம் கோடி சென்டிகிரேட் வெப்பமும் புறப்பரப்பின் மீது ஆறாயிரம் டிகிரி வெப்பமும் காணப்படுகிறது. இவ்வாறு ஒரு பொருள் மற்றொரு பொருளாக இரசாயண மாற்றம் அடைந்து வெப்பத்தை வெளியிடும் நிகழ்ச்சி சூரியனில் நடைபெற்று வருவதால் இயற்பியல் அடிப்படையில் சூரியன் ஓர் எரியும் பொருள் என்று கூறுகிறோம்.

இப்படிப்பட்ட பிரம்மாண்டமான அணு உலையாம் சூரியனிலிருந்து விண்ணெங்கும் பாய்ந்தோடி வரும் அதன் ஒளிக்கதிர்களில் புற ஊதாக் கதிர்கள் (Ultra Violet Rays) என்பதும் ஒன்று. இந்த ஒளிக்கதிர்கள் மனிதர்கள் மட்டுமின்றி உயிரினங்கள் அனைத்துக்குமே பெரும்கேடு விளைவிக்கக் கூடியவையாகும். இக்கதிர்கள் நேராக பூமியை அடையுமானால் இப்பூலகின் மீது மனிதர்கள் மட்டுமின்றிப் புற்பூண்டுகள் முதற்கொண்டு அழிக்கப்பட்டு உயிரின் சுவடே இல்லாத ஒரு கோளாக இந்த பூமி ஆக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த பூமியன் மீது பலகோடி வருடங்களாக அழிவைத் தரும் இக்கதிர்களால் எவ்விதப் பாதிப்புமின்றி உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன! இது எப்படி சாத்தியமாயிற்று!?.

ஒருகால்..'அந்தோ பரிதாபம்! நமது புற ஊதாக் கதிர்கள் உயிரினங்களுக்குப் பெரும் கேடு விளைவிக்கக் கூடியவை. எனவே அக்கதிர்களில் எதையும் நாம் பூமிக்கு அனுப்பக் கூடாது'. எனக் கருதி, சூரியன் தானே தன் அழிவுக்கதிர்களை பூமிக்கு அனுப்பாமல் விலகிக் கொண்டதா? அதனால்தான் மானிடர்களில் பலர் இன்னமும் இதனை கடவுளாய் வழிபட்டுக் கொண்டிருக்கிறார்களா?.

அப்படியெல்லாம் எதுவுமில்லை! ஒரு மைக்ரோ செகண்ட் (ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு) கூட ஓய்வின்றித் தன் அழிவுக் கதிர்களை நமது பூமியின் மீது வாரி வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது இந்த நெருப்புக் கோளம் எனக் கூறுகிறார்கள் நவீன அறிவியல் வல்லுனர்கள்.

அன்பார்ந்த நண்பர்களே! இந்த இடத்தில் நாம் ஒரு கணமாவது சிந்திக்கக் கடமை பட்டுள்ளோம். கணமும் தப்பாமல் சூரியனுடைய அழிவுக் கதிர்கள் மடையுடைத்த வெள்ளமாய் நம்மீது கொட்டப்படுகின்றன. ஆனால் நாமோ பல்லாயிரம் வருடங்களாக அதன்கீழ் அழிவின்றி வாழ்ந்து வருகிறோம். உண்மைநிலை இதுவென்றால் சிந்தனைத் திறனை உலகப் பேரரங்கில் அடகு வைக்காத அறிவியல் அன்பர்களே! நீங்கள் கூறுங்கள்! நம்மீது படாதவாறு தடுத்துக் கொண்டிருக்கும் அதியற்புதத் தடுப்பொன்று நமக்கு மேல் இருக்க வேண்டுமா வேண்டாமா?

சிந்தனைத் திறம் பெற்றவர்களே! அறிவுசார், அறிவியல் சார் அன்பர்களே! நம்மீது பாய்ந்து வரும் இந்த அழிவுக்கதிர்கள் நம்மீது விழா வண்ணம் தடுக்கும் கூரையொன்று நமக்கு மேல் இல்லாவிடில் நம்மால் இங்கு வாழ முடியுமா? இதற்கு மேலும் சத்தியத் திருமறையின் கூற்றாம்:

'வானத்தை நாம் பாதுகாக்கப்பட்ட கூரையாக அமைத்தோம். எனினும் அவர்கள் (நிராகரிப்போர்) அதிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணிக்கின்றார்கள்.' (அல்-குர்ஆன் 21வது அத்தியாயம் ஸூரத்துல் அன்பியா - 32வது வசனம்) எனும் ஜீவ வசனத்தை ஒருவர் மறுத்து, பூமிக்குக் கூரை கிடையாது எனக் கூறத் துணிவார்?. அப்படிக் கூறினால் குர்ஆனை மறுப்பதாக நினைத்துக் கொண்டு அவர் செய்யும் காரியத்தால் 'அவர் பத்தும் சொல்வார்;. போகட்டும்' என அவரைக் கண்டு கொள்ளாமல் அறிவியல் உலகம் விட்டுவிடும் என்பதை அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். எனவே இப்படிப்பட்ட காரியத்தை எந்த அறிவியல் வாதியும் செய்யத் துணிய மாட்டார்.

சூரியப் பேருலையிலிருந்து ஓயாது பாய்ந்து வரும் இப்புற ஊதாக் கதிர்களை எங்கள் மீது விழா வண்ணம் தடுத்துக் கொண்டிருக்கும் கூரையே! நீ எங்கிருக்கிறாய்? மெய்யான உன் படைப்பாளனின் வார்த்தைகள்தாம் குர்ஆன் என்பதற்கு நீ வழங்கிக் கொண்டிருக்கும் சாட்சியமெங்கே!?.

இதோ..! ஓசோன் (OZONE) என்பதே இக்கூரைக்கு அறிவியலாளர்கள் சூட்டியிருக்கும் பெயர். உயிரினங்களின் ஜீவகவசமாகிய இப்பொருள் நமது கூரையின் மொத்த உருவமாகிய காற்று மண்டலத்தின் ஒரு மெல்லிய கீற்று (அடுக்கு) ஆகும். இப்பொருள் நமக்கு மிகவும் அறிமுகமான பிராண வாயுவின் (Oxygen) வேறொரு வடிவமாகும். இதைச் சற்றுச் சுருக்கமாகப் பார்ப்போம்.

எந்த ஒரு பொருளையும் துண்டு துண்டாக வெட்டிக் கொண்டே சென்றால் ஒரு குறிப்பிட்ட நிலையில்; அதை வெட்ட முடியாத நிலையை அடையும். கட்புலணாகாத இப்பொருளை மூலக்கூறு (Molecule) எனக் கூறலாம். மிக நுண்மையான இப்பொருளைத் தேவையான ஆற்றல் செலுத்தி மேலும் தனித் தனிப் பொருட்களாக பிரிக்கலாம். இவ்வாறு பிரியும் அந்த மிக, மிக நுண்ணிய பொருட்கள் அணு (Atom) எனப்படும். (அதை மேலும் பிரிக்க ஏராளமான ஆற்றல் தேவை) ஒரு பொருளைத் தனித்தனி அணுக்களாகப் பிரித்து அவைகளைச் சுதந்திரமாக விட்டுவிட்டால் அவைத் தொடர்ந்து அணுக்களாகவே இருந்து விடாது. அவை உடனே மூலக் கூறுகளாக இணைந்து விடும். இப்படிப்பட்ட மூலக் கூறுகளின் தொகுப்புகளே பொருட்களாகும்.

நமது பிராணவாயு என்பதும் மூலக்கூறுகளின் தொகுப்பேயாகும். மூலக்கூறுகள் அனைத்தும் ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்களின் தொகுதிகளாகும். பிராணவாயுவைப் பொருத்தவரை அதனுடைய மூலக் கூறில் இரண்டு அணுக்கள் இருக்கும். சில காரணங்களால் பிராணவாயு அதன் மூலக் கூறில் மூன்று அணுக்களைக் கொண்டிருக்கும். இவ்வாறு பிராண வாயுவின் மூன்று அணுக்கள் அதன் மூலக் கூறில் இடம்பெற்றால் அதன் பிறகு அது பிராண வாயுவின் குணத்திலிருந்து மாறுபட்ட பொருளாக மாறும். இதுவே ஓசோனாகும். ஓசோன் என்னும் இந்த வாயுப் பொருள்தான் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களைப் பூமியின் மீது விழ விடாமல் உட்கிரகித்துப் பூமிக்கு கூரையாக செயல்பட்டு வருகிறது எனக் கூறி 20 ஆம் நூற்றாண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள் தூய குர்ஆன் மெய்யான இறைவேதம் என்பதற்கு சாட்சியாக நிற்கின்றன.

இவ்வாறு பூமிக்குக் கவசமிட்டு நிற்கும் கூரையைப் பற்றித்தான் சத்தியத் திருமறை அது ஒரு பாதுகாக்கப்பட்ட பொருள் எனக் கூறுகிறது. எனவே நமது கூரையாக செயல்படும் ஓசோன் படலத்துக்கும், ஏதோ பிரச்னை என்றும், அப்பிரச்னையிலிருந்து அது பாதுகாக்கப்பட்டு வருகின்றது என்றும் இந்த வசனத்திலிருந்து முன்போல் (முந்தைய கட்டுரையில் கண்டதுபோல்) இப்போதும் விளங்குகிறது. அப்படியானால் ஓசோனுக்கும் பிரச்னையுண்டா?.

ஓசோனுக்கும் பிரச்னையுண்டு எனக் கூறுகிறார்கள் அறிவியலாளர்கள். ஓசோன் என்பது பிராணவாயுவின் இரண்டு அணுக்களுக்குப் பதிலாக (O2) அதன் மூன்று அணுக்களால் (O3) ஆன மூலக்கூறு எனக் கண்டோம். அதே நேரத்தில் மூலக்கூறு (O2) ஓசோனாக (O3) மாற்றம் அடையும் போது பிராண வாயுவைப் போன்று (O2) நீடித்து நிற்கும் (Stability) தன்மையை இழந்து விரைவில் சிதைந்து தனித் தனி அணுக்களாக மாற்றமடைந்து மீண்டும் பிராணவாயுவாக (O2) ஓசோன் (O3) மாறிவிடுகிறது.

ஓசோனுடைய இந்த குறுகிய ஆயுள் காரணமாக இதைத் தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டிருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதுவே ஓசோன் படலத்தில் காணப்படும் பிரச்னை என்று கூறுகிறார்கள் அறிவியலாளர்கள்.

பிரச்னை என்றால் இஃதன்றோ பெரும் பிரச்னை! எங்கள் இறைவா! என்னென்ன பிரச்னைகள் எங்களைச் சூழந்து நிற்கின்றன! கோடிக்கணக்கான வருடங்களாய் உயிரினங்கள் வாழ்ந்து வரும் இப்பூவுலகுக்குக் கூரையாய் அமைந்து நிற்கும் ஒரு பொருளுக்கு இவ்வளவு அற்ப ஆயுளா? ஒரு கணமும் ஓய்வின்றி நீ எங்கள் கூரையைப் புதுப்பித்துக் கொண்டிராவிடில் நாங்கள் இங்கு உயிர் வாழ்வது எங்ஙனம்? ஆகவே நாங்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே கூரை பாதுகாக்கப்பட்டு வருகிறது என நீ கூறியதற்கு நிறைவான ஆதாரமாகும். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில்கூட சுக சுந்தரமாக நீ எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே உன்னை மறுத்துரைக்க எப்படித்தான் அறிவு இடம் கொடுக்குமோ?

சூரியனுடைய புற ஊதாக் கதிர்களை உட்கிரகித்தவாறு ஓயாமல் சிதைந்து கொண்டிருக்கும் ஓசோன் படலம் பாதுகாக்கப்பட்டு வரும் மர்மம்தான் என்ன?

அன்பார்ந்த நண்பர்களே! இதற்குரிய விடையான அண்மைக்கால அறிவியல் கண்டு பிடிப்புகளைத் தெரிந்து கொண்ட ஒருவர் இத்தூய குர்ஆனின் பக்கங்களைப் புரட்டினால் அவரை வியப்படையச் செய்யும் வசனம் ஒன்றை அவர் கண்ணுறுவார். குர்ஆன் கூறுகிறது:

'மேலும் அச்சமும் ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலை காட்டுவதும் வானத்திலிருந்து மழை பொழியச் செய்து அதைக் கொண்டு பூமியை அது இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன. நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.' (அல்-குர்ஆன் 30வது அத்தியாயம் ஸூரத்துர் ரூம் - 24வது வசனம்)

இந்த வசனத்திலிருந்து இறந்து கிடக்கும் பூமியை உயிர்ப்பிப்பதில் மழை, மின்னல் என இரு நிகழ்ச்சிகளின் செயல்பாடுகள் உள்ளடங்கியிருப்பதாக நம்மால் காண முடிகிறது. நீரின்றி உயிரினம் இல்லை என்பதால், இதில் மழையின் செயற்பாடு என்ன என்பதை நாம் எளிதில் விளங்குகிறோம். ஆனால் இந்த வசனத்தில் உயிர்பிக்கும் நிகழ்ச்சியில் மின்னலும் இடம்பெறுவதாக காண முடிகிறதே? மின்னலுக்கும் உயிரினத்திற்கும் என்ன தொடர்பு?

மின்னல் என்பது பிரதானமான ஒளி (மின் ஒளி), ஒலி (இடியோசை), மின்சாரம் என மூன்று கூறுகளை உள்ளடக்கியது. (இம்மூன்று வார்த்தைகளையும் உள்ளடக்கிய ஒரு வார்த்தையாக 'இடிப்புயல்' எனும் வார்த்தையை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர்.) இப்படிப்பட்ட இந்த மின்னல் நாம் அச்சப்படவும், ஆசைப்படவும் ஏற்றது எனவும் இந்த வசனம் கூறுகிறது. மின்னலைப் பார்த்தவுடன் நாம் கண்களை மூடுவதும், காதுக்குள் விரலூன்றுவதும் மின்னலால் நமக்கு அச்சம் எற்படுவதால்தான். எனவே மின்னல் அச்சப்படத்தக்கது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இப்படி ஆபத்தை விளைவிக்கக் கூடிய இந்த நிகழ்ச்சியில் நாம் ஆசைபடத்தக்க விஷயம் என்ன இருக்கின்றது?.

ஆனால் மின்னல், மழை, உயிர்ப்பித்தல் என இம்மூன்று விஷயங்களையும் சிந்தித்துணரும் சமூகத்தவருக்கு நிச்சயமாக அத்தாட்சிகள் இருக்கின்றன என உத்திரவாதம் தருகிறது ஒப்பற்ற இறைவேதமாம் மாமறை குர்ஆன்! எனவே நாம் இப்போது இவைகளைப் பற்றிச் சிந்திக்கும் சமூகத்தைத்தான் அணுக வேண்டியுள்ளது.

சத்தியத்திருமறையின் சட்டங்களை அறிந்தோ, அறியாமலோ செயல்படுத்திக் கொண்டிருக்கும் அறிவியல் சிந்தனையாளர்களே! உங்களுக்குத்தான் எவ்வளவு கண்ணியத்தை இந்தச் சத்தியத் திருமறை வழங்கிக் கொண்டிருக்கிறது! உங்கள் ஆய்வுகளிலிருந்து நீங்கள் சிந்தித்துணர்ந்த விஷயங்களில் மின்னலுக்கும், உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சிக்கும் ஏதேனும் தொடர்புண்டா?

ஏதேனும் தொடர்பா? ஏராளமான தொடர்பு உண்டு! உயிரினங்களை வாழ வைக்கும் ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதில்கூட மின்னல் பங்கேற்கிறது எனக்கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்கள் விஞ்ஞானிகள்!

பிராண வாயுவின் அணுக்கள் பிளக்கப்பட்டு அவை மும்மூன்று அணுக்களாக இணைந்தால்தான் ஓசோன் உற்பத்தியாக முடியும் என முன்னர் கண்டோம். இந்த நிகழ்ச்சி நடைபெற வேண்டுமானால் அதற்குத் தேவையான ஆற்றல் பெறப்பட வேண்டும். ஓசோனால் உட்கிரகிக்கப்படும் சூரியனுடைய புற ஊதாக் கதிர்களுக்கே அந்த ஆற்றல் உண்டு. எனவே ஓசோனை உற்பத்தி செய்வது சூரியனுடைய செயல்பாடுதான் என விஞ்ஞானிகள் நம்பி வந்தனர். ஆனால் தொடர்ந்து செய்யப்பட்டு வந்த ஆய்வுகள் இந்த நம்பிக்கைக்கு ஆதாரம் தரவில்லை. ஓசோன் படலத்தினுடைய செறிவு, இரவு (சூரிய ஒளி பெறப்படாத நேரம்), பகல் (சூரிய ஒளி பெறப்படும் நேரம்) என்ற வித்தியாசமின்றி பாதிக்கபட்டு வந்ததை அவர்களுடைய ஆய்வுகளில் கண்டனர். எனவே சூரியச் செயல்பாட்டுக்கும். ஓசோனுடைய பாதுகாப்புக்கும் சம்பந்தம் இல்லை என்ற முடிவுக்கு வந்த விஞ்ஞானிகளுக்கு ஓசோனுடைய உற்பத்தி ஒரு புதிராகவே காணப்பட்டது. ஆய்வுகள் தொடர்ந்து செய்யப்பட்டதன் விளைவாக அண்மையில் இப்புதிருக்கு விடை கிடைத்தது.

ஒவ்வொரு நாளும் நமது பூகோளத்தின் மீது ஒட்டு மொத்தமாக 1 கோடியே 60 லட்சம் இடிப்புயல்கள் உற்பத்தியாகி வளி மண்டலத்தில் பரவுகின்றன. ஒவ்வொரு வினாடியிலும் இப்புவி பரப்பின் மேல் குறைந்த பட்சம் 100 முறை மின்னல் மின்னும். உடனே அவ்வளவு முறை இடியோசை ஏற்படும். இதன் காரணமாக எந்த ஒரு நேரத்திலும் இப்புவியின் மொத்த பரப்பின் மேல் 1800 இடிப்புயல்கள் ஏற்பட்டு வருகின்றன. இப்படி இடைவிடாது எற்பட்டுக் கொண்டிருக்கும் இடிப்புயல்களிலிருந்து உருவாகும் அளவிடற்கரிய ஆற்றல்தான் நமது ஓசோன் படலத்தை ஓயாது புதுப்பித்துப் பாதுகாத்து வருகின்றன எனக் கூறுகின்றன அண்மைக்கால அறிவியல் கண்டு பிடிப்புகள்.

இடி, மின்னலுடன் கூடிய மழைக்குப் பின் நமது சுவாச இயக்கம் எளிதாகி விடுவதை உணர்கிறோமே அதற்குக் காரணம்கூட ஓசோன் உற்பத்தியால் வளி மண்டலம் தூய்மையடைவதே எனவும் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.

அச்சம் தரத்தக்க மின்னலில் ஆசைப்படத் தக்க காரியங்களும் இருக்கின்றன எனக் கூறிய திருமறையின் வசனத்தை மெய்ப்பித்து நிற்கும் அறிவியல் கண்டு பிடிப்புகளைப் பார்த்தீர்களா? ஓசோனை உற்பத்தி செய்யும் இடிப்புயலின் வெளியீடாகிய மின்னலில் நாம் ஆசைப்படத்தக்க காரியம் உண்டா இல்லையா?.

ஓசோன் இல்லையேல் பூமியல் உயிரினம் இல்லை எனக் கூறும் விஞ்ஞானிகள், வளி மண்டலத்தில் ஓசோன் உற்பத்தியான பிறகே உயிரினம் தோன்றியது என அறுதியிட்டுக் கூறுகிறார்கள். உயிரினத் தோற்றுவாயில் ஓசோனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் உண்டெனில் அந்த ஓசோனையே உருவாக்கும் மின்னல் உயிரினத் தோற்றுவாயின் மிக முக்கிய பங்காளியல்லவா? உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சியில் நீருடன் மின்னலையும் இணைத்துக் கூறப்பட்ட திருமறை வசனத்தை மெய்யான இறைவேதம் என நிரூபித்துக் கொண்டிருக்கும் அறிவியல் கண்டு பிடிப்புகளைப் பார்த்தீர்களா?

உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சியில் மின்னலின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வியக்கத்தகு கண்டுபிடிப்புகளும், இத்தூய திருமறையை மானிட சக்திக்கு அப்பாற்பட்ட இறைவேதம் என நிரூபிக்கும் பொருட்டு அரங்கேறியிருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் அவை வேறு தலைப்புகளில்.

அன்பார்ந்த நண்பர்களே! பூலோக வாசிகளாகிய நமக்கு ஆகாயம் ஒரு கூரையாகவும், அந்தக் கூரை பாதுகாக்கப்பட்ட பொருளாகவும் இருக்கிறது எனக் கருத்துணர்ந்த திருமறை வசனத்திற்குரிய அறிவியல் ஆதாரங்களாக நாம் இதுவரை பரிமாறிக்கொண்ட விஷயங்களை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். நவீன வானியல் விஞ்ஞானத்தில் கரை கண்ட ஒருவராலன்றி, ஆகாயம் பாதுகாக்கப்பட்ட கூரையாக இருக்கிறது எனக் கூறியிருக்க முடியுமா? நிச்சயமாக- மிக- மிக நிச்சயமாக- முடியவே முடியாது என்பதுதான் நேர்மைத் திறனுடன் பதில் தரும் ஒருவரது கூற்றாக இருக்க முடியும். அப்படியானால் இன்றிலிருந்து 1400 வருடங்களுக்கு முன் அப்படிப்பட்ட ஓர் அதிசய மனிதர்(?) இப்பூமியில் எங்கேனும் தோன்றியிருக்க இயலும் என நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?

குறைந்த பட்சம் செயற்கைத் துணைக் கோள்கள் இல்லாத காலத்தில் ஒருவர் இதைக் கூற வேண்டுமானால் அவர் இறக்கைகளுடன் பிறந்தவராக இருக்க வேண்டும். கிட்டப் பார்வைகளையும், தூரப்பார்வைகளையும் சரி, தூரப்பார்வைகளாக மாற்றும் கண் கண்ணாடிகளைக் கூடக் கண்டறியாத காலத்தில் இதை ஒருவர் கூற வேண்டுமானால் அவருடைய கண்களில் போலே மீட்டர்கள் (Bolometers) பிரிலியோ மீட்டர்கள் (Pyrheliometers) எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் (Electron Microscopes) ரேடியோ தொலை நோக்கிகள் (Radio Telescopes) போன்ற நவீன கருவிகளெல்லாம் முளைத்திருக்க வேண்டும். இப்படிக் கூடவா ஒரு மனிதர் இருந்திருக்க வேண்டும்?

நிச்சயமாக அப்படியெல்லாம் ஒருவர் இருந்திருக்க முடியாது என்பது நமது பதிலாக இருக்கும்போது குறைந்தபட்சம் இப்படிப்பட்ட ஒரு மனிதரால் மட்டுமே 1400 வருடங்களுக்கு முன்னால் கூற முடியக் கூடிய நவீன உலகின் அறிவியல் கண்டு பிடிப்புகளெல்லாம் - சத்தியத் திருமறையாம் அல்-குர்ஆனில் எப்படி இடம் பெற்றன?

நாம் சிந்திக்க வேண்டாமா?

காரண காரியங்களோடு நாம் சிந்திக்கத் தலைப்பட்டால் நமது சிந்தனை களஞ்சியங்களில் இப்பேரண்டம் ஒரு குருட்டாம்போக்கு செயல் இல்லை: மாறாக இது ஒரு பரிபூரணமான திட்டமிட்ட பணியின் (An absolute frame work) உருவம் என்பதை ஐயத்துக்கிடமின்றி தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே திட்டமிட்ட பணியின் திட்டங்களை வகுத்தளித்தவன் ஒருவன் இருக்கின்றான்: அவனுடைய திட்டமே பணிகளை நடத்துகிறது: அப்படிப்பட்டவன் யாரோ அவனிடமிருந்தே இச்சத்தியத் திருமறை வழங்கப்பட்டுள்ளதால் அது காலங்கடந்த காரியங்களையும் தன்னுள் கொண்டிலங்குகிறது என நம்மால் மிக மிக எளிதாக ஏற்றுக் கொள்ள முடிகிறது!

எனவே இத்தூய மறைக்குப் பக்கத்தில் நீங்கள் வைத்திருக்கும் முற்றுப் புள்ளிகளை காற்புள்ளிகளாக மாற்றி மேலும் உங்களுடைய சிந்தனையைத் தொடருங்கள்! உண்மை எதுவாக இருந்தாலும் அதனை ஏற்கும் பண்புடையவர்களல்லவா நீங்கள்!.

(வளரும் இன்ஷா அல்லாஹ்)

1 comment:

AATHAVAN said...

Good Post ! Keep it up!