Thursday, September 01, 2005

வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும்-9

சுழலும் பூமி(2) -9


ஏ.கே.அப்துர் ரஹ்மான்

இராப்பகலை நிகழ்த்துவதற்காக, சூரியன் பூகோளத்தைச் சுற்றி வரவில்லை என்பதை நாம் அறிவோம். ஆகவே சூரியன் ஒரே இடத்தில் நிற்கிறது. அதற்கு முன்னால் பூமி சுழல்கிறது. இப்போது இந்த அறிவியலை, சூரியனுடைய பெயரையோ, பூமியின் பெயரையோ நேரடியாகச் சம்பந்தப் படுத்தாமல் நாம் கூற வேண்டும். அதே நேரத்தில் அதில் அறிவியல் பிழையும் ஏற்படக் கூடாது. எப்படிக் கூறலாம்?.

சூரியனுக்கு முன்னால் முகம் காட்டி நிற்கும் பக்கத்தின் மீது பகலாகவே இருக்கும் என்பதை நாம் அறிவோம். அந்த இடத்தில் பகல் அகன்று, இரவு தோன்ற வேண்டுமாயின் என்ன காரியம் நிகழ வேண்டும்?. பூமி சுழல வேண்டும் என்ற வார்த்தையைத் தவிர்த்து, வேறு வார்த்தைகளால் அறிவியல் பிழை ஏற்படாமல் பதில் கூற வேண்டும்.

பகலாக இருக்கும் பூமி முகப்பிலிருந்து ஒளி விலகிவிடுவதால் இரவு ஏற்படுகிறது என்று கூறுவோமா?. கூடாது!. அப்போது அறிவியல் பிழை ஏற்பட்டு விடும். ஏனெனில் ஒளி விலகுகிறது என்று கூறினால் ஒளியுடைய மூலம் (அதாவது சூரியன்) விலகுவதாகவே பொருள்படும். ஆனால் ஒளியுடைய மூலம் விலகவில்லை. அது இருக்கும் இடத்திலேயே இருக்கிறது. எனவே ஒளி விலகாமல் ஒரே இடத்தில் அமைந்திருக்க, அந்த ஒளி பூமியின் மேல் படாதவாறு அதை மூடி மறைக்கும் நிகழ்ச்சியொன்று நடைபெறுவதால்தான் இரவு ஏற்படுகிறது எனக் கூறலாம். ஏனெனில் பூகோளத்தின் சுழற்சியின் காரணமாக பூமியின் ஒரு பகுதியை, மற்றொரு பகுதி (ஒளிபடாமல்) மறைப்பதால் தான் இரவு ஏற்படுகிறது. எனவே நாம் இப்போது இத்திருமறையை பார்த்து ஒரு வினாவை எழுப்புவோம்.

சத்தியத் திருமறையே! பூகோளத்தின் மீது பகலாக இருந்த இடம் இரவாக மாறுவதற்காக ஒளி நகர்கிறதா?. அல்லது ஒளி மறைக்கப்படுகிறதா?.

பதிலளிக்கிறது அம்மாமறை!. ஆணையிட்டு உறுதிப் படுத்துகிறது அந்த சத்தியப் பேரொளி!.

'சூரியனின் மீதும் அதன் ஒளியின் மீதும் சத்தியமாக! அதனை(சூரிய ஒளியை)ப் பின் தொடர்ந்து வரும் நிலவின் மீதும் சத்தியமாக! அதனை (சூரிய ஒளியை) வெளிப்படுத்தும் போது பகலின் மீதும் சத்தியமாக! அதனை (சூரிய ஒளியை)மறைக்கும்போது (வரும்) இரவின் மீதும் சத்தியமாக.. ஆத்மாவைப் பரிசுத்தமாக்கியவன் வெற்றியடைந்தான். எவன் அதைப் பாவத்தில் புகுத்தினானோ அவன் தோல்வி அடைந்தான்..' (அல் -குர்ஆன் 91வது அத்தியாயம் ஸுரத்துஷ் ஷம்ஸ் 1 முதல் 10 வரையிலுள்ள வசனங்கள்).

எவ்வளவு அற்புதமாக நாம் அணுகிய அதே கோணத்தில் நமக்கு இராப்பகல் நிகழ்ச்சியின் அறிவியலைப் பூகோளத்தின் சுழற்சியையோ, சூரியனின் நகராமையையோ நேரடியாகக் கூறாமல், பிழையின்றிக் கூறுகின்றன இவ்வசனங்கள்!.

சூரிய ஒளியை வெளிப்படுத்தும்போது - அதாவது அந்த வார்த்தைகளையே அறிவியல் மொழியில் கூறினால் பிரதிபலிக்கும் போது - பகல் ஏற்படும் என்பது சத்தியமே. இந்த ஒளி மறைக்கப்பட்டால் இரவு ஏற்படும் என்பதும் சத்தியமே!.

(அதைப் போல ஆத்மாக்களைப் பரிசுத்த மாக்கியவன் வெற்றியும், பாவத்தில் புகுத்தியவன் தோல்வியும் அடைவான் என்பதும் சத்தியம் என்பது இந்த வசனங்களின் மையக் கருத்து)

இராப் பகலின் அறிவியல் அமைப்பை இதே கோணத்தில் அணுகிய மற்றொரு வசனத்தையும் கவனியுங்கள்!.

'(சூரிய ஒளியை) மறைக்கும்போது (வரும்) இரவின் மீது சத்தியமாக! வெளிப்படும்போது (வரும்) பகலின் மீது சத்தியமாக! (அல் -குர்ஆன் 92வது அத்தியாயம் ஸுரத்துல் லைல் 1 முதல் 2 வரையிலுள்ள வசனங்கள்).

இந்த வசனங்களிலும் இரவை ஏற்படுத்தும் செயல் எதுவோ அது ஒளியை மறைக்கின்ற செயலே என்றும், பகலை ஏற்படுத்தும் செயல் எதுவோ அது மறைக்கப்பட்டதிலிருந்து ஒளியை வெளிப்படுத்தும் செயலே என்றும் கூறப்படுகிறது. இதன் வாயிலாக ஒளி விலகிச் சென்று மறைவதையும், திரும்பவும் தேடி வந்து தோன்றுவதையும் அடிப்படையாகக் கொண்ட புவி மையக் கோட்பாட்டை இவ்வசனங்கள் அர்த்தமற்ற தாக்கி, பூகோளத்தின் சுழற்சியையே ஆதாரப்படுத்துகின்றன.

இராப் பகலின் அமைப்பை விளக்கும் இவ்வசனங்கள் என்ன கூறுகின்றன என்பதை விளங்கிக் கொண்டோமல்லவா?. (இன்ஷா அல்லாஹ் இதில் அடங்கியுள்ள ஏனைய அறிவியல்களை வேறு தலைப்புகளில் காண்போம்). இராப்பகல் மாற்றத்தின் நவீன அறிவியலை இவ்வசனங்கள் வலியுறுத்துகின்றன என்பது உண்மையே!. எனினும் சூரியன் பூமியைச் சுற்றவில்லை என்பதை இவ்வசனங்கள் ஆணிதத்தரமாகக் கூறவிவ்வையே என இவ்வசனங்களைப் பற்பல கோணங்களில் சிந்திக்கும் யாருக்கேனும் ஐயம் எழுமா?.

இராப்பகல் மாற்றத்தின் நவீன அறிவியலை இவ்வசனங்கள் வலியுறுத்துகின்றன என்ற கூற்றே சூரியன் பூமியைச் சுற்றவில்லை என்பதைத்தானே ஆணித்தரமாக வலியுறுத்தும். பிறகு மேற்கண்ட ஐயம் எழுவது ஏன்?.

சூரியன் பூமியைச் சுற்றவில்லை என்றோ அல்லது பூகோளம் சுழன்று கொண்டிருக்கிறது என்றோ நேரடியாக ஏழாம் நூற்றாண்டில் (அதற்கு முன்போ அல்லது 17-ஆம் நூற்றாண்டு வரையிலுமோ) கூறியிருந்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை நாம் முன்னர் கண்டோம்.

ஆகவே சூரியன் பூமியைச் சுற்றவில்லை: மாறாக பூகோளம் சுழல்கிறது என்ற நேரடி வார்த்தைகளைத் தவிர்த்த நிலையில் இராப்பகல் நிகழ்ச்சியின் அறிவியல் அமைப்பையே விளக்க வேண்டுமாயின் இவற்றைப் போன்ற வார்த்தைப் பிரயோகங்களையும், அணுகுமுறைகளையும் தவிர வேறு வழி இல்லை என்பது, இதுவரை கூறப்பட்ட விஷயங்களிலிருந்து தெளிவாக விளங்கும்.

இதுவரை நாம் இராப்பகல் நிகழ்ச்சியின் அறிவியல் அமைப்பைப் பற்றிக் கூறும் வசனங்களில் சிலவற்றைக் கண்டோம். இவற்றிலிருந்து சூரியன் பூகோளத்தைச் சுற்றவில்லை: பூகோளம் சுழன்றுதான் இராப்பகலைத் தோற்றுவிக்கிறது என்ற அறிவியலை ஐயத்துக்கிடமின்றி விளங்கிக் கொள்ள இயலாதவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களும் தெளிவடையும் பொருட்டு, அதற்கேற்ற ஆதாரங்களைப் பார்ப்போம்.

இராப்பகலைத் தோற்றுவிக்கும் நிகழ்ச்சி எதுவோ அதை மிகத் துல்லியமாக அறிவிக்கும் ஆதாரம் நாம் சென்ற இதழில் கண்ட துல்கர்னைன் அவர்களின் வரலாற்றை கூறும் வசனங்களிலேயே அடங்கியுள்ளது. அந்த வசனங்களில் அவருக்குத் தரை பயணத்தின் கடற்கரை 'எல்லை' யாகவும், கடல் வழிப் பயணத்தில் மனிதர்கள் வாழும் (நிலப் பகுதி) ''எல்லை' யாகவும் அமைந்தன. அத்துடன் அவருக்கு 'எல்லை' யாக அமைந்த ஆகாயப் பகுதியையும் திருமறை அடையாளம் காட்டுகிறது. (அக்கட்டுரையை மீண்டும் ஒரு முறை பார்க்க) அதாவது-

'அவர் புறப்பட்டார். சூரியன் அஸ்தமிக்கும் 'எல்லை' யை அவர் அடைந்தபோது.. என ஓரிடத்திலும்,

'மீண்டும் அவர் புறப்பட்டார். சூரியன் உதயமாகும் 'எல்லை'யை அவர் அடைந்துவிட்டார்' என மற்றோர் இடத்திலும் கூறப்பட்டுள்ளன. சூரியன் உதிப்பதும், மறைவதும் ஆகாயத்தில் என்பதால் ஆகாயத்தைப் பொருத்தவரை உதிக்க மற்றும் அஸ்தமிக்க எல்லை உண்டு என அவ்வசனங்களின் வாயிலாகத் திருமறை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

நல்லடியார் துல்கர்னைன் அவர்கள் நில, நீர்ப் பயணங்களைத்தான் மேற்கொண்டிருந்தார். அப்படியிருக்க அவர் இந்த உதயாஸ்தமன எல்லையை அடைய வேண்டுமாயின் அந்த எல்லைகள் ஆகாயத்தில் இருப்பினும் கூட, பூமியைத் தொடும் நிலையிலேயே இருக்க வேண்டும் என்பதும் இவ்வசனங்களிலிருந்து விளங்குகிறது.

இவ்வாறு திருமறை கூறும் விதத்தில் பூமியைத் தொடும் வகையில் உதயாஸ்தமனத்திற்கென எல்லைகள் இருந்தால் அவை எங்கிருக்கின்றன?. (இதைக் கண்டுபிடித்து விட்டால் அந்த உதயாஸ்தமனத்தின் சுற்று வட்டாரங்களில் தேடி யஃஜுஜ், மஃஜுஜைக் கண்டு பிடித்து விடலாமே என்று சகோதரர்கள் யாருக்கேனும் ஆசை பிறக்கலாம். நடக்கக் கூடிய காரியமா இது?. இறுதி நாள் சமீபிக்கும் வரை மறைந்திருக்க வேண்டிய விஷயத்தை நாம் இப்போதே கண்டு பிடித்து விடும் அளவிற்கா திருமறை நம்மிடம் பேசப் போகிறது?).

நிற்க!. புவிமையக் கோட்பாட்டிற்கிணங்க இந்த பூகோளம் அறைந்து வைத்தாற்போல் ஒரே இடத்தில் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த நிலையிலும் உதயாஸ்தமனங்களுக்கான எல்லை இருந்தால் அவை உலகின் எந்த நிலப் பகுதியைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன?.

பூகோளம் சுழலவில்லை என்பதே இத்திருமறையின் கூற்றானால், உதயஸ்தமனங்களின் எல்லைகள் எந்த நிலப்பகுதியைத் தொடுகின்றன என்பதை நிச்சயம் காட்ட முடியுமே!. இருந்தும் ஏன் காட்ட முடியவில்லை?. ஆகவே பூகோளம் சுழன்று கொண்டிருக்கிறது என இந்த வசனங்கள் தெளிவு படுத்தவதை ஒப்புக் கொள்கிறீர்களா? இல்லையா?.

என்ன கூறுகிறீர்கள் நண்பர்களே!.

எல்லையென்று எதைக் கூறுகிறீர்கள் என எதிர்க் கேள்வியை எழுப்புகிறீர்களா?.

'எல்லை' என்பதன் பொருள் வேறொன்றுமன்று. ஏதேனும் ஒரு பொருளோ, ஒரு இயக்கமோ ஒரு குறிப்பிட்ட பரப்பளவாலோ, அல்லது விதி முறையாலோ தடைபட்டிருப்பதற்குப் பயன்படும் தடுப்பே 'எல்லை'யாகும். இதன் பொருள் யாதெனில் அத்தடுப்பை மீறியோ, அல்லது அதற்கு வெளியிலோ அவை (தடுக்கப்பட்டவை) இல்லையென்பதாகும். எனவே எல்லை என்பதன் பொருளை நாம் புரிந்து கொண்டோம். இதற்கிணங்க திருமறை கூறும் எல்லைகளை யாராவது காட்ட முடியுமா?.

முடியுமா என்பதற்காக நாம் ஒரு சோதனையைச் செய்து பார்ப்போம். பூகோளம் சுழலவில்லை. சூரியன்தான் பூகோளத்தைச் சுற்றி இராப்பகலை ஏற்படுத்துவதாகக் கருத்தில் கொண்டு பூகோளத்தைச் சுற்றிச் சூரியனை ஒரு முறை வலம் வரச் செய்து பார்ப்போம். (கற்பனையில்தான்).

சோதனையின் துவக்கமாக விவாதப் பொருளாகியச் சூரியனைப் பசிபிக் சமுத்திரத்தின் உச்சியில் நிறுத்துவோம். இப்போது பசிபிக்கின் மையப் பகுதியில் நண்பகலும், அதன் இரு ஓரங்களிலுமுள்ள அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் முறையே அஸ்தமனமும் உதயமும் நிகழ்ந்து கொண்டிருக்கும். இந்த நிலை வெறும் பூமியில் மட்டும் நிகழவில்லை. பூமிக்கு மேலுள்ள ஆகாய முகடுகளிலும் அவை நிகழ்ந்து கொண்டிருக்கும்.

இப்போது நாம் சூரியனை சீனாவை நோக்கி மெல்ல நகர்த்துகிறோம். சீனாவிலிருந்து உதயம் இப்போது காஸ்பியன் கடலை நோக்கியும், அமெரிக்காவிலிருந்த அஸ்தமனம் பசிபிக் நோக்கியும் நகர்கின்றன. ஆனால் உதயமும், அஸ்தமனமும் பூமியில் மட்டும் நகரவில்லை: பூமியைச் சூழ்ந்திருக்கும் ஆகாய முகட்டிலும் நகர்கின்றன.

சூரியனை மேலும் நகர்த்துகிறோம். கூடவே உதயமும், அஸ்தமனமும் பூமியில் மட்டுமல்லாது, ஆகாயத்திலும் நகர்ந்து வருகின்றன. இப்போது நாம் சூரியனை மேலும், மேலும் நகர்த்திச் சீனாவைத் தாண்டி, ஐரோப்பாவைக் கடந்து அட்லாண்டிக் சமுத்திரம், அமெரிக்கா என யாவையும் தாண்டிப் பழையபடி பசிபிக் சமுத்திரம் மீதே நிறுத்துகிறோம்.

கூடவே உதயமும், அஸ்தமனமும் சீனாவைத் தாண்டி, ஐரோப்பா, அட்லாண்டிக் சமுத்திரம், அமெரிக்கா என யாவையும் தாண்டிப் பழையபடி சீனாவில் உதயமும் அமெரிக்காவில் அஸ்தமனமும் காட்சியளிக்கிறது. ஆனால் அவை பூமியில் மட்டும் நகர்ந்து வரவில்லை. உதயமும், அஸ்தமனமும் ஆகாய முகட்டிலும் நகர்ந்து வந்தன.

நாம் பூகோளத்தைச் சுற்றிச் சூரியனை முழுமையாக ஒரு முறை வலம் வரச் செய்து பார்ப்போம். இதில் உதயமோ, அஸ்தமனமோ பூமியிலோ, ஆகாகத்திலோ எந்த ஒரு பரப்பளவாலாவது தடுத்து வைக்கப்பட்டதா?. சூரியனின் நகர்விற்கேற்ப பூமியிலும், ஆகாயத்திலும் அவை ஒன்றிணைந்து நகர்ந்து வந்தன. இதன் காரணமாகப் பூமி பரப்பின் மீது ஒவ்வொரு புள்ளியிலும் அதனோடு தொடர்பு கொண்ட ஆகாயத்திலும், சூரியன் புள்ளி, புள்ளியாக உதித்தது: புள்ளி, புள்ளியாக அஸ்தமித்தது.

படம் 1. சூரியன் பூமியைச் சுற்றுவதைக் காட்டும் படம்:



(எல்லையற்ற உதயமும் அஸ்தமனமும்)

எனவே பூகோளத்தைச் சுற்றிச் சூரியன் வலம் வந்தால் எல்லையில்லாமல் உதித்துக் கொண்டும், எல்லையில்லாமல் அஸ்தமித்துக் கொண்டும் இருக்கக் கூடிய ஒரு காட்சியைத்தான் நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் சத்தியத் திருமறையோ 'உதிக்கும் எல்லை' மற்றும் 'அஸ்தமிக்கும் எல்லை' என்ற சொற்களால் உதயத்தையும், அஸ்தமனத்தையும் தோற்றுவிக்கும் ஆகாயப் பகுதி எல்லைக்கு உட்பட்டதே எனக் கூறுகிறது.

சத்தியத் திருமறையின் இக்கூற்று மெய்ப்பிக்கப் பட வேண்டுமாயின் சூரியக் குடும்பத்தின் இயக்கம் எந்த நிலையில் அமைக்கப் பட்டிருக்க வேண்டும்?. அல்லது இயற்கை(?)-ஆம்! அது என்னவோ இயற்கை இயற்கை என்று கூறி அந்த அர்த்தமற்றச் சொல்லை அர்த்தங்களின் பிறப்பிடமான இறைவனின் அரியாசனத்தில் அமர்த்தப் பார்க்கிறார்களே! - அந்த இயற்கை எதுவாக இருந்தாலும் அது - அது கூட இந்தச் சத்தியத் திருமறையை மெய்ப்பிக்கும் பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறது என்பதை இயற்கை அபிமானிகள் கண்டறியும் பொருட்டு இந்த இயற்கையின் இயக்கம் எப்படி இருந்தால் சத்தியத் திருமறை மெய்ப்பிக்கப்படும் என்பதைப் பார்ப்போம்.

சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் உதயாஸ்தமனங்களுக்கு எல்லைகள் கிடைப்பதில்லை என்பதால் சத்தியத் திருமறை அதனை மறுக்கிறது எனக் கண்டோம். புவி மையக் கோட்பாட்டை சத்தியத் திருமறை மறுக்கிறது என்பதற்கு ஆணித்தரமான ஆதாரம் தேடுவோருக்கு இது தெளிவான ஆதாரம். அடுத்தபடியாக சத்தியத் திருமறையை மெய்ப்பிக்கும் ஆதாரத்திற்காக அடுத்த கட்டச் சோதனையில் சூரியக் குடும்பத்தின் இயக்கத்தை கொஞ்சம் மாற்றியமைத்துப் பார்ப்போம். அதாவது சூரியனுக்கு முன்னால் கொஞ்சம் பூகோளத்தைச் சுழலவிட்டுப் பார்ப்போம்.

சோதனையின் துவக்கமாக இப்போதும் சூரியன் பசிபிக் சமுத்திரத்தின் மீதே காயட்டும். இப்போதும் பழையபடி சீனாவில் உதயமும், அமெரிக்காவில் அஸ்தமனமும் நிகழ்ந்து கொண்டிருக்கும். நாம் பூகோளத்தை மெல்லச் சுழற்றுகிறோம். (இதற்கு முந்தைய உதாரணத்தில் சூரியனைச் சுழற்றினோம்).

பூகோளத்தைச் சுழற்றத் துவங்கியதும் சீனா பொருந்தி நின்ற ஆகாயப் பகுதியிலிருந்து விலகத் துவங்குகிறது. விலகி வந்த சீனா பசிபிக் சமுத்திரம் பொருந்தி நின்ற ஆகாயப் பகுதிக்குள் நுழைந்து முற்பகலாகி மீண்டும் நகர்ந்து நண்பகலாக மாறுகிறது. பூ பரப்பின் மீது சீனா அடைந்த மாற்றத்தைக் கண்ணுற்ற நாம் இப்போது ஆகாயத்தைப் பார்க்கிறோம். வியந்து நிற்கிறோம்.

ஆம்!. பூகோளத்தின் சுழற்சியால் பூ பரப்பின் மீது உதயம் நகர்ந்த போதும் ஆகாயத்தைப் பொருத்தவரை அது நகரவே இல்லை. நின்ற இடத்திலேயே மீற முடியாத விதிக்குக் கட்டுப்பட்டு இயங்கிக் கொண்டிருந்தது. இதன் காரணமாக நகராமல் நிலை பெற்ற உதயப் புள்ளிக்குள் நுழைந்து செல்லும் நிலப்பரப்பு எதுவாயினும் அவற்றின் மீது அந்த உதயப் புள்ளி உதயத்தை நிகழச் செய்கிறது.

அவ்வாறே அஸ்தமனமும். அமெரிக்கா பொருந்தி நின்ற ஆகாயப் பகுதியில் அஸ்தமனம் நிகழ்ந்து கொண்டிருக்கையில் அமெரிக்கா அங்கு இருந்த போது அமெரிக்காவில் அஸ்தமனம் நிகழ்ந்தது. அமெரிக்கா அப்புள்ளியை விட்டு நகர்ந்ததும் அமெரிக்கா அஸ்தமனத்தை இழந்து, முன்னிரவாகி, நள்ளிரவை நோக்கிச் செல்கிறது. ஆனால் ஆகாயத்தில் எந்த மாறுதலும் இல்லை!. அஸ்தமனத்தை நிகழ்த்திக் கொண்டிருந்த ஆகாயப் பகுதி இந்த அஸ்தமனத்தையே நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.


படம் - 2 பூகோளத்தின் சுழற்சியைக் காட்டும் படம்




(எல்லையற்ற உதயமும், அஸ்தமனமும்)

சுழன்று வரும் பூகோளத்தின் நிலப் பரப்புகளில் எவையெல்லாம் உதயப் புள்ளிக்கும், அஸ்தமனப் புள்ளிக்கும் வெளியே உள்ளனவோ, அவைகள் எதிலுமே உதயஸ்தமனங்கள் இல்லை. ஆனால் எதெல்லாம் அதற்குள் இருந்தனவோ அவைகள் எதிலும் உதயாஸ்தமனங்கள் இல்லாமலில்லை.

ஆம்! உதயப் புள்ளியில் நிலை பெற்று நிற்கும் உதயம் அப்புள்ளிக்கு வெளியே இல்லை! அஸ்தமனப் புள்ளியில் நிலைபெற்று நிற்கும் அஸ்தமனம் அப்புள்ளிக்கு வெளியே இல்லை.

பூகோளத்தை மேலும் சுழற்றி, சீனாவைப் பசிபிக் சமுத்திரம் பொருந்தி நின்ற ஆகாயப் பகுதியைத் தாண்டி, அமெரிக்கா பொருந்தி நின்ற ஆகாயப் பகுதிக்கு கொண்டு வந்ததும் சீனா இப்போது அஸ்தமனத்தைக் காட்டியது. (இதற்காக அஸ்தமன எல்லையென்பது அமெரிக்கா என்று யாரும் எண்ணிவிடாதீர்கள். பூகோளத்தின் மீதுள்ள எந்த ஒரு புள்ளியும் உதய எல்லையோ, அஸ்தமன எல்லையோ ஆக முடியும். இதிலிருந்து துல்கர்னைன் அவர்கள் தம்முடைய தரை வழிப் பயணத்தின் கடற்கரையை அடைந்த போது, பூகோளத்தின் சுழற்சியின் காரணமாக உதய எல்லையை அந்த கடற்கரை எட்டிவிட்டது என்பதே இதன் பொருள்.

பூகோளம் சுழல்கிறது என்ற அறிவியலை அதியற்புதப் படைப்பாளனாம் அல்லாஹ் (ஜல்) இவ்வசனத்திற்குள் பொருத்த வில்லையானால், உதய எல்லை, அஸ்தமன எல்லை போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருக்க மாட்டான். இந்த அறிவியலை இந்த வசனங்களிலிருந்து நீக்கி விட்டுப் பார்த்தால் அவ்வசனங்களின் பொருள் இதுவே. அதாவது:-

'சூரியன் மறையும் வேளையில் அவர் ஓர் நீர் நிலையை அடைந்தார்.'

'சூரியன் உதிக்கும் வேளையை அவர் எட்டிவிட்டார்.'

எனவே அறிவியல் நீக்கப்பட்ட வசனம் வெறும் நேரத்தை மட்டும் குறிக்கும். அப்படியிருந்தும் அற்புதமான சொற்களைப் பயன்படுத்தி பூகோளம் சுழல்கிறது என்பதையும், அதைக் கருவாய்க் கொண்ட வசனங்களிலேயே பூமி கோள வடிவம் கொண்டது என்ற அறிவியலையும், இந்த அற்புதத் திருமறை பறைசாற்றி நிற்கிறதே! இப்படிப்பட்ட அற்புதத்திற்கு நிகராக வேறு எதையாவது நம்மால் கூற முடியுமா?.

பூகோளத்தை மேலும் சுழற்றினால் சீனா மேலும் நகர்ந்து வந்து ஐரோப்பா பொருந்தி நின்ற ஆகாயப் பகுதிக்குள் புகுந்து நள்ளிரவில் அடங்கி விடுகிறது. நாம் புதிய சுழற்சியைத் துவக்கினால் மீண்டும் சீனா உதயத்துப் புள்ளிக்குள் நகர்ந்து வந்து புதிய உதயத்தை அடைகிறது. ஆனால் ஆகாயத்தில் எந்த மாறுதலும் இல்லை. அவ்வாறே அமெரிக்காவும். அஸ்தமனப் புள்ளிக்குள் இருந்து அது முன்னிரவு, நள்ளிரவு எனத் தாண்டித் துவக்கத்தில் சீனா பொருந்தி நின்ற ஆகாயப் பகுதிக்குள் நுழைந்த போது அது உதயத்தை எட்டிப் பிடித்தது. மேலும் சுழன்று பசிபிக் இருந்த இடத்தைக் கடந்து அமெரிக்கா இருந்த இடத்திற்குத் திரும்பியதும் மீண்டும் அஸ்தமனத்தைக் காட்டுகிறது.

ஆனால் ஆகாயத்தில் எந்த மாற்றமும் இல்லை. உதயப் புள்ளியில் உதயமும், அஸ்தமனப் புள்ளியில் அஸ்தமனமும் கட்டுண்டு நின்றன.

இதோ இப்போது சுழன்று கொண்டிருக்கும் பூகோளம் சூரியனைச் சுற்றி வலம் வரத் துவங்குகிறது. கூடவே உதயப் புள்ளியும், அஸ்தமனப் புள்ளியும் பூகோளத்தோடு நகர்கின்றன. நகர்ந்து, நகர்ந்து எங்கு செல்கின்றன இவை?.

பரிசுத்த குர்ஆனின் ஆசிரியனாகிய இறைவன் மிகத் தூயவன். அவனுடைய சத்தியத் திருமொழியாம் 'இரவும் பகலும் அவைகளுக்குரிய மண்டலங்களில் செல்கின்றன- எனப் பொருள் கொண்ட (21:33) வசனத்தையும் மெய்ப்பிக்கும் பொருட்டு இலக்கு வைத்துப் பாயும் இப்புள்ளிகள் இதோ அழகிய எல்லைக் கோடுகளாக விரிவடைகின்றன. அந்த எல்லைக் கோட்டுக்கு ஒரு புறம் பகல்! மறுபுறம் இரவு! அவ்விரண்டுக்கும் மத்தியில் கட்டுண்டு செல்லும் ஒன்றிணைந்த உதயாஸ்தமன எல்லைக்கோடுகள். இவை யாவும் அவைகளுக்கே உரிய பாதையில் சூரியனைச் சுற்றி வட்டமடிக்கின்றன.

படம்: 3 சுழலும் பூமியின் நீள் வட்டச் சுற்றுப் பாதை.




(எல்லைக் கோட்டில் செல்லும் உதயாஸ்தமனங்கள்)

இக்கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்தீர்களா நண்பர்களே?. இதற்கு மேலும் இப்பரிசுத்தத் திருமறையை இறைவனுடைய வார்த்தைகளில்லை என்று மறுக்க அறிவோ, அறிவியலோ அல்லது மனசாட்சியோ இடம் தருமா?.

உதிப்பதற்கும், மறைவதற்கும் எல்லையுண்டு எனப் பரிசுத்த குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பறைசாற்றி, சூரியன் பூமியைச் சுற்றவில்லை: மாறாகப் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது என்ற அறிவியலைக கூறி நிற்கிறதே! அந்த கூற்றை நிரூபிப்பதற்கென்றே சூரியக் குடும்பம் - அல்லது அந்த இயற்கையாயினும் சரி-அடிபணிந்து, கட்டுண்டு இயங்கி வருகிறதே! நிலைமை இவ்வாறிருக்க இந்தத் தூய வேதத்தைப் புறக்கணிக்கும் அளவிற்கு நோய்வாய்ப்படுவது மிகத் துர்பாக்கியமல்லவா?.

இத்தூய வேதத்தில் கூறப்பட்ட விஷயங்களை மீற முடியாமல் விண்ணும், விண்ணிலள்ளவைகளும், மண்ணும், மண்ணிலுள்ளவைகளும் பணிந்து செல்லும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்?. ஆகவே இப்பேரண்டப் பொதுக்குழுவிலிருந்து ஒதுங்கி நிற்பது பேராபத்து!. ஏனெனில் நாம் இதற்குள் பிறந்து, இதிலேயே வாழ்ந்து, இதிலேயே மடிகிறோம். எனவே நம்மை ஐக்கியப் படுத்திக் கொள்வதற்காக நாம் அத்தூய வேதத்திற்குப் பணியத் தயாராகி விடுவோம்.

சூரியன் பூமியைச் சுற்றவில்லை: பூகோளமே சுழன்று வருகிறது என்பதற்கு மேலும் அசைக்க முடியாத ஆதாரங்களையும் மானிட சமுதாயத்தை விளித்தோதுகிறது இச்சத்தியத் திருமறை. அவற்றை இன்ஷா அல்லாஹ் வரும் கட்டுரைகளில் காண்போம்.

(வளரும் இன்ஷா அல்லாஹ்)

---------------------------
வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் முந்தைய பகுதிகள்.
பேரண்டப் படைப்பின் துவக்கம் -1

வாழத் தகுந்த கோள்-2

ஓசோன் -3

விண்ணகத்தின் பரப்பெல்லை -4

பேரண்டத்தின் ஈர்ப்பு விசை -5

விண்ணடுக்குகள் -6

உருண்ட பூமி -7

சுழலும் பூமி(1) -8

No comments: