Monday, September 08, 2008

மத பயங்கரவாத நாளேடு!

திருந்தாத தினமலர் இருந்தென்ன..?

திங்கள், 08 செப்டம்பர் 2008

"ஏழை மக்களுக்கு சுகாதாரக் காப்பீடு" என்ற தலைப்பில் கடந்த ஆண்டு 06.10.2007இல் தினமலர் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அச்செய்திக்கு எவ்விதத் தொடர்புமின்றி அச்செய்தியோடு ஒரு படம் இணைக்கப் பட்டிருந்தது. அது, சர்ச்சைக்குரிய டென்மார்க்கின் யூல்லண்ட் போஸ்ட்டன் இதழில் வெளியான கேலிச்சித்திரங்களில் ஒன்றாகும். டென்மார்க் கேலிச்சித்திரங்கள் அப்போது அதிகம் அறியப் படாததால் அது கவனம் பெறாமல் போயிற்று. தினமலரின் இந்தத் திட்டமிட்ட எழுத்து வேசித்தனம் நடந்தது கடந்த ஆண்டின் ரமளானில் என்பது இங்கு நினைவு கூரத் தக்கது.

முஸ்லிம்கள் இவ்வாண்டின் புனித மாதமான ரமளானை மகிழ்வுடன் தொடங்க முயன்றபோது அவர்களது மகிழ்ச்சியைக் குலைத்து அவர்களுக்கு வருத்தத்தையும் சீற்றத்தையும் ரமளான் பரிசாக அளித்திருக்கிறது தினமலர் நாளிதழ்.

முஸ்லிம்கள் ரமளான் நோன்பைத் தொடங்கிய 01.09.2008 நாளிட்ட தினமலரின் வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம் பதிப்புகளில் இலவச இணைப்பாக வெளியிடப் பட்ட கம்ப்யூட்டர் மலரில், முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் அவர்களின் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து டென்மார்க்கின் யூல்லண்ட் போஸ்ட்டன் வெளியிட்டிருந்த இன்னொரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டது.

கொதித்தெழுந்த முஸ்லிம்கள், தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கள் எதிர்ப்புகளைக் காட்டத் தொடங்கினர்.

கேலிச் சித்திரம் வெளியான அன்று மாலை வேலூரை அடுத்த மேல்விஷாரத்தில் முஸ்லிம்கள் மறியல் செய்தனர். தொடர்ந்து, வேலூரில் உள்ள தினமலர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்ததால் வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வேலூர் தினமலர் அலுவலகம் முன்பு 02.09.2008 காலையில் குவிந்து போராட்டத்தைத் துவக்கினர்.

காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேலூர்-பெங்களூர் சாலைப் போக்குவரத்து முற்றிலும் சீர்குலைந்தது.

"கோடிக்கணக்கான முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் நபிகள் நாயகம் பற்றிக் கேலிச் சித்திரம் வெளியிட்டவர்களைக் கைது செய்ய வேண்டும்" என்றும் "இந்து-முஸ்லிம் இடையே பகையைத் தூண்டிவிடும் தினமலர் ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும்" என்றும் ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லிம்கள் கோஷமிட்டனர்.வேலூர் மாவட்ட ஆட்சியர் தர்மேந்திர பிரதாப் யாதவ், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி, மேலாளர் அறிவுச்செல்வம், வட்டாட்சியர் சுகந்தி, மாவட்டக் காவல்துறை துணை மேலாளர் ராமதாஸ் ஆகியோர் அங்கு வந்து, போராட்டம் நடத்தியவர்களைக் கலைந்து போகச் சொன்னார்கள். ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம்கள் மறுத்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தடியடியில் பலர் காயமடைந்தனர்.

"முஸ்லிம்களை இழிவுபடுத்தும் நோக்கில் திட்டமிட்டுக் கேலிச் சித்திரம் வெளியிட்ட"தைக் கண்டித்து, சேலத்தில் தமுமுகவினர் 02.09.2008 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். "தினமலர் பத்திரிகையைத் தடை செய்ய வேண்டும்" என்று அவர்கள் கோஷமிட்டனர். தமுமுக தலைமையேற்று சேலத்தில் நடத்திய தினமலர் எதிர்ப்புப் போராட்டத்தில், 28 பெண்கள் 294 கைது செய்யப் பட்டனர்.

மதுரையில் மனிதநீதிப் பாசறையும் தமுமுகவும் இணைந்து போராட்டத்தில் குதித்தனர். தங்களின் எதிர்ப்பைக் காட்டும் முகமாக தினமலர் நாளிதழை முஸ்லிம்கள் தீயிலிட்டுப் பொசுக்கினர். ததஜவினர் 04.09.2008 இல் மதுரையிலும் சென்னையிலும் 06.09.2008 இல் கோவையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சியில் தமுமுக தினமலரை எதிர்த்து முற்றுகைப் போராட்டத்தை நடத்தியது. தமுமுக, மனிதநீதிப் பாசறை, ஜாக், சிறுபான்மை உதவி அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து 04.09.2008 இல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இவ்வளவும் நடந்து முடிந்த பின்னர் முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டத்துக்கும் போராட்டத்துக்கும் அறவே தொடர்பில்லாத சில சங்கங்களின் தலைவர்களை தினமலர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து, அமர வைத்து வெறும் ஒரு 'வருத்தத்தை' மட்டும் தெரிவித்து, பிரச்சினை முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் தினமலர் ஆசிரியர்.

ஒன்று இரண்டு என்றில்லாமல் பல திக்குகளிலிருந்தும் தினமலருக்கு ஆப்புகள் சீவப் படும் வேலை மும்முரமாகத் தொடங்கி விட்டது.

அரிப்பெடுக்கும்போது தலையைக் கொள்ளிக்கட்டையால் சொரிந்து கொள்ளும் முட்டாள் குரங்கைப் பற்றி உவமை கேள்விப் பட்டிருக்கிறோம். இதே கேலிச் சித்திரம், டென்மார்க் என்ற ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே அசைத்துப் போட்டிருக்கும்போது, ஓர் அற்ப நாளிதழான நாம் எம்மாத்திரம்? என்பதைக் கொள்ளிக்கட்டையைக் கையிலெடுக்கும் முன்னர் தினமலர் யோசித்திருக்க வேண்டும்.

முஸ்லிம் விரோதப் போக்கை முழுதுமாக விட்டொழித்து முற்றாகத் திருந்தாதவரை உப்புப் போட்டுச் சோறு தின்னும் ஒவ்வொரு முஸ்லிமும் இனி, தினமலரை ஒழித்துக் கட்டுவதற்குத் தன்னால் எதுவெல்லாம் சாத்தியமோ அதையெல்லாம் செய்வான். முடிவு தெரியும்போது அதை வேறு நாளிதழ்களில்தான் தேடவேண்டியிருக்கும்.

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

No comments: