Thursday, July 31, 2008

யஹ்யாவும், யோவானும் ஒரே பெயரா?

இஸ்லாம் மார்க்கத்தின் இறைவேதம் திருக்குர்ஆனில் முரண்பாடுகளை ஆய்வுக்குட்படுத்தும் சில பிற மத நண்பர்கள். திருக்குஆனில் சரித்திரத் தவறைக் கண்டு பிடித்து விட்டதாகக் கூறி சில ஆவணங்களைப் பதிவு செய்துள்ளனர். திருக்குர்ஆனை அருளிய அகிலத்தின் இறைவனை பொய்பித்து விட வேண்டும் என்ற தணியாத தாகத்தில் ஆய்வறிவையும் இழக்கத் தயாராகி விட்டனரோ என்று எண்ணுமளவுக்கு திருக்குர்ஆனில் பிழை தேடும் இவர்களின் ஆய்வு மிகப் பலவீனமாக உள்ளது.

திருக்குர்ஆனில் பிற மத நண்பர்கள் கண்டுபிடித்த சரித்திர தவறு !?

குர்‍ஆனின் சரித்திர தவறு: யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)

முன்னுரை: இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட குர்‍ஆனின் வசனங்கள் பற்றி நாம் சிந்தித்துக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறோம். குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 1ஐ தொடர்ந்து, இப்போது இரண்டாம் பாகமாக, அல்லா செய்த ஒரு சரித்திர தவறை காணப்போகிறோம்.

குர்‍ஆன் 19:7ல் அல்லா சொல்கிறார்:

குர்‍ஆன் 19:7

'ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்).

யஹ்யா ( யோவான் or John ) என்ற பெயர் கொண்ட நபர்களை அல்லா, யோவான் ஸ்நானனுக்கு முன்பு ஒருவரையும் உருவாக்கவில்லையாம். அதாவது, யோவான் என்ற பெயர் கொண்ட ஒருவரும் யோவானுக்கு முன்பு வாழவில்லையாம். இப்படி அல்லா சொல்வதினால், அவருக்கு சரித்திரம் பற்றிய‌ விவரம் தெரியவில்லை என்று
புலனாகிறது. சரித்திரத்தை நாம் புரட்டிப்பார்த்தாலும், மற்றும் பைபிளின் பழையை ஏற்பாட்டை புரட்டிப்பார்த்தாலும், யோவான் (John) என்ற பெயர் கொண்டவர்கள் அனேகர் இருப்பதாக நாம் கண்டுக்கொள்ளமுடியும். குர்‍ஆனில் உள்ள பல பிழைகளில் இதுவும் ஒன்று.


(இங்கு பிற மத நண்பர்கள் விமர்சிக்கும் கரு இதுதான். இத்துடன் பிற மத நண்பர்கள் இணைத்துள்ள கி.மு சான்றுகள் சில கீழே இடம்பெறும்)

முக்கியமான ஓர் அடிப்படையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இயேசு தான் ஈஸா என்று முஸ்லிம்களும், முஸ்லிம் அறிஞர்களும் கூறி வந்தாலும், இயேசு என்ற பெயர் தான் ஈஸா என்பதை திருக்குர்ஆன் ஒப்புக் கொள்ளவில்லை.

''மர்யமின் மகன் ஈஸா'' என்றே திருக்குர்ஆனும் நபிமொழிகளும் குறிப்பிடுகின்றன. மர்யம், ஈஸா இது இடுகுறிப் பெயர்கள். இன்னார் மகன் இன்னார் என ஒருவரை அடையாளப்படுத்துவதற்காக அவர் குழந்தையாக இருக்கும் பொழுது சூட்டப்படும் பெயராகும். இந்த இடுகுறிப் பெயரை எந்த மொழியில் எழுதினாலும் மர்யம், ஈஸா என்றே
எழுத வேண்டும். இல்லையேல் ஆவணங்கள் குழப்பமாகிவிடும்.

''நான் இவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்'' (திருக்குர்ஆன், 003:036)

குழந்தை பிறந்ததும் குழந்தையின் தாயாரால் மர்யம் என்று பெயரிடப்படுகிறது.

''அவரது பெயர் மர்யமின் மகன் ஈஸா என்பதாகும்'' (திருக்குர்ஆன், 003: 045)

தாயின் கருவறையில் ஜனிக்கும் முன்னரே இறைவனால் ஈஸா எனப் பெயரிடப்பட்டவர்.

(சற்று வித்தியாசத்துடன், 'அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக' என்று பைபிள் கூறுகிறது)

எல்லாக் குழந்தைகளுக்கும் பெயரிடப்படுவது போல் குழந்தையை அடையாளப்படுத்துவதற்காக மர்யம், ஈஸா என பேரிடப்பட்டார்கள். பெயரின் உச்சரிப்பு மர்யம், ஈஸா என்பதில் திருக்குர்ஆன் பார்வையில் எந்த சந்தேகமும் இல்லை. முந்தைய வேதங்களும் இறைவன் அருளியது என்ற அடிப்படையில் முந்தைய வேதத்தில் மரியம், மரியமின் மகன் ஈஸா என்று பெயரிட்டபடியே திருக்குர்ஆனும் மர்யம், மரியமின் மகன் ஈஸா என்று அழைக்கிறது.

இறைவன் இட்ட ஈஸா என்ற பெயர் பின்னர் இயேசு Jesus என மருவியது. இது ஈஸா என்ற பெயருக்கு மட்டும் ஏற்பட்டதில்லை. (இப்ராஹீம் ஆப்ராஹாம். சுலைமான் சாலமோன் என) பல தீர்க்கத்தரிசிகளின் பெயர்களும் வேறு பெயராக மருவியுள்ளது. (இல்லை என்று மறுப்பவர்கள் தங்கள் வேதத்தின் மூலமொழியிருந்து நிரூபிக்கட்டும்)

ஓர் அசல் பெயர் வேறு பெயராக மருவுவதற்கான உதாரணத்தை பிற மத நண்பர்களின் எழுத்திலிருந்தே எடுத்துச் சொல்ல முடியும்: அல்லாஹ் என்பதை இவர்கள் அல்லா என்றும் முஹம்மது என்பதை முகமது என்றும் குறிப்பிட்டு எழுதுகின்றனர். 'ஹ' வடமொழி எழுத்து என்பதால் அதைத் தவிர்க்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது. வடமொழி எழுத்தாக இருந்தும் கிறிஸ்து, ஸ்தானம் என்று குறிப்பிட 'ஸ' எழுத்தை இவர்கள் எழுதுகின்றனர். அல்லாஹ், முஹம்மது இந்தப் பெயர்களை எப்படிச் சிதைத்தாலும் ஒப்பிட்டுப் பார்க்க மூலமொழி இருப்பதால் எதிர்காலத்தில் இவர்கள் எழுதுவது போல் அப்படியே மருவி விடாது. ''யஹ்யா'' என்ற பெயரும் இப்படித்தான்
மருவியுள்ளது வேறு வகையில்.

'ஸகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்). (திருக்குர்ஆன், 019:007)

கருவறையில் ஜனிப்பதற்கு முன்னரே மர்யமின் மகன் ஈஸாவுக்கு பெயரிடப்பட்டது போல் ஸக்கரிய்யாவின் மகனும் கருவறையில் ஜனிப்பதற்கு முன்னரே இறைவனால் ''யஹ்யா'' என்று பெயரிடப்படுகிறார். இதற்கு முன்னர் யஹ்யா என்ற பெயரிட்டவரை நாம் ஏற்படுத்தவில்லை என்றும் மேலதிகத் தகவலை இறைவன் இங்கு குறிப்பிடுகிறான்.
யஹ்யா என்ற பெயருடையவரை இதற்கு முன் நாம் ஏற்படுத்தவில்லை என இறைவன் கூறுவது, முழு மனித குலத்திலும் இதற்கு முன்னர் யஹ்யா என்ற பெயருடையவர் இருந்ததில்லை என்பதைக் குறிக்கின்றதா? அல்லது இதற்கு முன்னர் யஹ்யா என்ற பெயரில் தீர்க்கத்தரிசி யாரையும் நாம் ஏற்படுத்தவில்லை என்று குறிப்பிடுகின்றதா? இதற்கு ஆலு இம்ரான் - 003வது அத்தியாயத்தில் விளக்கம் கிடைக்கிறது.

அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து ''நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகன்) பற்றி நற்செய்தி கூறுகிறான். அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்'' எனக் கூறினர். (திருக்குர்ஆன், 003:039)

ஸகரிய்யாவின் மைந்தர் கருவறையின் ஜனனத்திற்கு முன்பே யஹ்யா என்று பெயரிடப்பட்டு, நபியாகவும் நியமிக்கப்படுகிறார். என இறைவாக்கு நற்செய்தி கூறுவதிலிருந்து, இதற்கு முந்தைய நபிமார்களில் யஹ்யா என்ற பெயரில் தீர்க்கத்தரியை நாம் ஏற்படுத்தவில்லை என்பதே இறைமொழியின் கருத்தாகும். எனவே ''இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" என்ற திருக்குர்ஆன் வசனம் தவறு என்று எதிர் கொள்பவர்கள், ஸகரிய்யாவுக்கு முந்தைய சரித்திரத்தில் யஹ்யா என்ற பெயரில் நபி இருந்ததை நிரூபித்தாக வேண்டும்.

முற்காலத்தில் ''யஹ்யா'' என்ற பெயரில் உள்ளவர்கள் என்று சரித்திரச் சான்றுகள் சிலவற்றை பிற மத நண்பர்கள் வைத்துள்ளனர்.


சரித்திரத்தில் யோவான்(JOHN) பெயர்களைக் கொண்ட நபர்கள்

1) ஜான் ஹிர்கானஸ் John Hyrcanus (Yohanan Girhan):

இவர் கி.மு. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த "ஹாஸ்மொனியன்" நாட்டு அரச‌னாவார். ஆட்சிகாலம் கி.மு. 134 - 104, மரித்த ஆண்டு : கி.மு. 104. மேலும் விவரங்களுக்கு : பார்க்க John Hyrcanus - Wikipedia John Hyrcanus- Brittanica John Hyrcanus - Jewish Encyclopedia

2) "ஜான்" எஸ்ஸன் - John Essenes:

ஒரு கலகம் செய்த குழுவிற்கு தலைவராக இருந்த "ஜான்" எஸ்ஸன் என்வரைப்பற்றி ஜொஸெபாஸ் சொல்கிறார். "ஜான்" எஸ்ஸன் கி.மு. வில் வாழ்ந்தவர். பார்க்க: "ஜான்" எஸ்ஸன் - John Essenes

3) 1 மக்காபீஸ் 2:1

மக்காபீஸ் என்ற நூல் ( கி.மு 100) சொல்கிறது. மத்ததியாஸ் "ஜானின்" மகன், ஜான் சிமியோனின் மகன். மற்றும் அதிகாரம் 2 வசனம் 2 சொல்கிறது, மத்ததியாஸுக்கு "ஜான்" என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான் என்று. பார்க்க: 1 மக்காபீஸ் 2:1 :மற்றும் 1 மக்காபீஸ் 16:19 ல் கூட ஒரு முறை "ஜான்" என்ற ஒருவரைப்பற்றி சொல்கிறது. பார்க்க : 1மக்காபீஸ் 16:19

மேல் சொல்லப்பட்ட எல்லா "ஜான்" களும், பைபிளின் யோவான் ஸ்நானகனுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யோவானுக்கு முன்பு யோவான் என்ற பெயர் கொண்ட பழைய ஏற்பாட்டு நபர்கள்:
இந்தப்பெயர் "யோகனான்"(எபிரேய மொழியில்-"யோகனான்") என்று பல முறை (27 க்கு அதிகமாக) பழைய ஏற்பாட்டில் வருகிறது. ( பார்க்க 2 இராஜா 25:23, 1 நாளா 3:15,24, 6:9,10, 12:4, 12:12, 26:3, 2 நாளா 17:15, 23:1, 28:12, எஸ்றா 8:12, 10:6, 10:28, நெகே 6:18, 12:13, 12:22,23,42, எரே 40:8 இன்னும் பல இடங்களில்.)


பிற மத நண்பர்களின் இந்த விமர்சனம், திருக்குர்ஆனில் ''யஹ்யா'' குறித்து இடம் பெற்றுள்ள சிறு வசனத்தையும் இவர்கள் முறையாக விளங்கிக் கொள்ளவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது. வசனத்தை விளங்காமலேயே தீர்க்கத்தரிசி அல்லாத மற்றவர்கள் பெயரையும் இங்கு குறிப்பிட்டுள்ளனர். இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத
நண்பர்களின் இந்த அநேக சான்றுகளில் எங்கும் ''யாஹ்யா'' என்ற உச்சரிப்பில் உள்ள இடுகுறிப் பெயர் உள்ளதா? என்பது வாசகர்களின் கவனத்திற்கு.

யஹ்யா, யோவான்

பைபிள் புதிய ஏற்பாடு: தூதன் அவரை நோக்கி சக்கரியாவே பயப்படாதே உன் வேண்டுதல் கேட்கப்பட்டது. உன் மனைவியாகிய எலிசபெத்து உமக்கு ஒரு குமாரரைப் பெறுவாள். அவருக்கு யோவான் என்று பேரிடுவாயாக. (லூக்கா, 1:13)

யாஹ்யாவை யோவான் என்று பைபிள் குறிப்பிடுவதால் யோவானுக்கு முந்தைய காலத்தில் யோவான் என்ற பெயரில் பலர் இருந்துள்ளனர் என்பதைப் பட்டியலிடுவது திருக்குர்ஆனை எதிர் கொண்டதாகுமா? சிந்தியுங்கள்.

தமிழில் இயேசு, ஆங்கிலத்தில் ஜீஸஸ் என்று சொல்லிக்கொண்டால் அது திருக்குர்ஆன் கூறும் ஈஸா என்ற பெயராகிவிடும் என்று வாதிப்பது எப்படித் தவறான வாதமோ அது போன்றே யோவான், ஜான் என்ற பெயர்களை திருக்குர்ஆன் கூறும் யஹ்யா என்ற பெயரோடு ஒப்பிடுவதும் தவறான வாதமாகும்.

நபி (ஸல்) அவர்களின் விண்ணகப் பயணம்,

...நான் அங்கு சென்று சேர்ந்தபொழுது அங்கு யஹ்யா (அலை) மற்றும் ஈஸா (அலை) ஆகியோர் இருந்தனர். அவர்கள் இருவரும் ஒன்று விட்ட சகோதரர்கள். (ஒருவருக்கொருவர் சின்னம்மா பெரியம்மா மகன்கள்) ஜிப்ரீல்(அலை) அவர்கள், 'இது யஹ்யாவும் ஈஸாவும் ஆவர். இருவருக்கும் ஸலாம் சொல்லுங்கள்' என்று கூறினார். அவ்வாறே நான் சலாம் சொன்னேன். அவர்கள் இருவரும் ஸலாமுக்கு பதிலுரைத்தார்கள். பிறகு 'நல்ல சகோதரரே!
நல்ல நபியே! வருக!" என்று கூறி (வாழ்த்தி) னார்கள்.
(புகாரி, 3207, 3430, 3887)

யஹ்யா என்ற பெயர் எக்காலத்திலும் யோவான், ஜான் என்று மருவிடவில்லை - மறுமை நாள்வரை யஹ்யா என்ற பெயரே நிலைத்திருக்கும் என்பதை மேற்கண்ட அறிவிப்புகள் உறுதிப்படுத்துகின்றது. யஹ்யா என்ற பெயருக்கு பதிலாக வேறு பெயர்களை ஆவணமாக வைக்கும் உங்கள் விமர்சனத்தில் நேர்மையுள்ளதா?

பிற மத நண்பர்களே! இதை நன்கு சிந்தனையில் பதிவு செய்து, இஸ்லாத்தை விளங்கி விமர்சனம் செய்யுங்கள்!

மொழி பெயர்ப்பு,

பிற மத நண்பர்கள் தமது கருத்துக்கு வலு சேர்க்க திருக்குர்ஆன் 019:007 வசனத்தின் தமிழ் மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்புகளை வைத்துள்ளனர். மூலமொழி உயிருடன் வழக்கில் இருக்க விமர்சனத்தை மூலமொழியுடன் உரசிப் பார்க்காமல் மொழி பெயர்ப்புகளுடன் ஒப்பிடுவது புத்திசாலித்தனம் இல்லை. யஹ்யா என்ற பெயரை எந்த மொழியில் சொன்னாலும், எழுதினாலும் யஹ்யா என்று தான் சொல்ல வேண்டும், எழுத வேண்டும். யஹ்யாவை ஆங்கிலத்தில் ஜான் என்று மொழி பெயர்ப்பாளர்கள் குறிப்பிட்டால் அதற்கு திருக்குர்ஆன் பொறுப்பேற்க வேண்டும் என்ற அவசியமில்லை.

முக்கியக் கவனத்திற்கு,

திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்று தவறானப் பிராச்சாரம் செய்பவர்கள், பைபிளிலிருந்து திருக்குர்ஆன் எவ்வாறு தனித்தன்மையில் வேறுபடுகிறது என்பதை விளங்கிக்கொள்வீர்களா? யஹ்யா என்ற தீர்க்கத்தரிசியின் பெயர் மாறி மருவிப் போனதால் அவருடைய உண்மைப் பெயரைத் திருக்குர்ஆன் தூசித் தட்டி வெளிப்படுத்துகிறது. திருக்குர்ஆன் பைபிளின் நகலாக இருந்திருந்தால் ஸகரிய்யாவின் குமாரரை யோவான் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்!

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Wednesday, July 23, 2008

முஹம்மது நபி பொய்யரா?

இஸ்லாம் எனும் இறை மார்க்கத்தை மக்களுக்குப் போதிக்க வந்த நபிமார்கள் அனைவரும் ''பொய்யர்'' என்றே முத்திரைக் குத்தப்பட்டார்கள். இதற்கு இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விதிவிலக்கல்ல.

பொய்யர்
குறிகாரர்
சூனியக்காரர்
பைத்தியக்காரர்
இட்டு கட்டுபவர்

இவையெல்லாம் வழக்கம் போல் நபி (ஸல்) அவர்களுக்கும் சமகால மக்கள் வழங்கிய பட்டங்கள். முஹம்மது நபி இட்டுக்கட்டுபவராக இருந்திருந்தால் தம்மைப் பற்றிய அறியாமை மக்களின் இந்த அடைமொழிகளை மறைத்திருக்கலாம் என்பது சிற்றறிவுடையோருக்கும் விளங்கும். ஆனால் இறை வேதத்தில் இவை கால காலத்திற்கும் இடம்பெற்றிருப்பது திருக்குர்ஆன் மாற்ற முடியாத, மாற்றத்திற்குள்ளாகாத இறைவேதம் என்பதற்கு சான்றாக
அமைந்துள்ளது.

இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்களின் முனை மழுங்கிய சிந்தனையைப் பார்ப்போம்.

இஸ்லாமிய நபியாகிய முகமது பற்றி, அவர் காலத்து மக்களின்(முஸ்லீமல்லாதவர்களின்) கருத்து என்ன? என்று குர்‍ஆன் சொல்லும் சாட்சியைப் பற்றிய ஓர் அலசல்.

இக்கட்டுரை "Muhammad as Al-Amin (the Trustworthy) How His Enemies Really Viewed Him" என்ற கட்டுரைக்கு மேலதிக விவரங்களுக்காக இணைக்கப்படுகிறது.

முகமது அவர்கள் நபித்துவம் பெறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, தன் ஊர் மக்களிடம் ஒரு நேர்மையான மனிதராகவும், குற்றமில்லாத மனிதராகவும் பெயர் பெற்று இருந்தார் என்று இஸ்லாமிய தாவா செய்யும் அறிஞர்கள் கூறுவது வழக்கம். இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள், முகமது ஒரு நேர்மையானவர் என்றும், குற்றம் குறை இல்லாதவர் என்றும் தன் சமகாலத்து மக்கள் அறிந்து இருந்தார்கள் என்று கூறுவதை நாம் கண்டுயிருப்போம். இன்னும் சொல்லப்போனால், முகமது காலத்தவர்கள் முகமதுவிற்கு "அல்-அமீன் (Al-Amin)" அல்லது "நேர்மையானவர்-(Trustworthy)" என்றும் பெயர் சூட்டி இருந்தனர் என்றும் கூறுவார்கள், இப்படி பலவிதமாக கூறுவார்கள்.

முஸ்லீம்கள் இப்படியெல்லாம் சொல்வதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், இவர்களின் இந்த கூற்று, கண்களால் கண்டு சாட்சி சொன்னவர்களின் கூற்றின் மீது ஆதாரப்பட்டு இருக்கவில்லை, அதற்கு மாறாக முகமதுவின் மரணத்திற்கு பின்பு ஒரு சில நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டவைகளாகும். இன்னும் சொல்லப்போனால், இவைகள் அனைத்தும் முஸ்லீம்களின் கை மற்றவர்களின் மீது ஓங்கி இருக்கும் போது(இஸ்லாமிய அரசர்கள்/கலிபாக்கள் ஆட்சி செய்தபோது) எழுதப்பட்டவைகளாகும், மற்றும் அவர்கள் சரித்திரத்தை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப திரும்ப எழுதினார்கள். அந்த கால்த்தில் முஸ்லீம்கள் தாங்கள் எந்த கண்ணோட்டத்தில் முகமதுவின் வாழ்க்கையை படிக்கவிரும்பினார்களோ அந்த நம்பிக்கையின் படி எழுத ஆரம்பித்தார்கள்(The Muslims were pretty much free to read back into the life of Muhammad their specific theological
views and beliefs concerning their prophet.)

முக்கியமாகச் சொல்லவேண்டுமானால், முஸ்லீம்கள் முகமதுவிற்கு கொடுக்கும் இந்த புகழாரங்களுக்கு எதிராக‌ அவர்களின் வேதமே எதிர் சாட்சியாக அமைந்துள்ளது. நாம் குர்‍ஆனை ஆராய்ந்துப் பார்த்தால், முகமது ஒரு உண்மையின் களங்கரை விளக்காகவோ அல்லது ஒரு முழுமையான‌ நேர்மையான மனிதராகவோ இருந்தார் என்று அவரைச் சுற்றியிருந்த மக்கள் கருதவில்லை அல்லது நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை நாம் அறியலாம். அம்மக்களின் சாட்சி முகஸ்துதி செய்வதாக கூட இருக்கவில்லை, குறைந்தபட்சம் சொல்லவேண்டுமானால், முகமதுவிற்கு பிறகு சேகரிக்கப்பட்ட விவரங்களாகிய‌ , முகமதுவை அவரது எதிரிகள் புகழ்வதாக உள்ள விவரங்கள் அனைத்தும் வெறும் கட்டுக்கதைகளாகவும், மாயையாகவும் இருக்கிறது.


நபித்துவ வாழ்வுக்கு முன், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பண்புகள் பற்றி,

மனிதாபிமானம் உடையவர்
அமானிதம் பேணுபவர்
வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவர்
எளியோருக்கும், சிரமத்தில் தவிப்போருக்கும் உதவுபவர்
விருந்தினரை உபசரிப்பவர்
உயர் பண்பு, சிறந்த ஒழுக்கமுடைய நற்பண்பாளர்
''நம்பிக்கையாளர்''

இப்படி உயர் பண்புகளைக் கொண்டவராக நபியவர்கள் திகழ்ந்தார்கள். இது நபியவர்களை அறிந்த மக்காவில் வாழ்ந்த மக்களின் கருத்தாகும். சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் நம்பி ஒப்படைத்தப் பொருட்களைத் திரும்பப் பெற முடியாத அக்காலத்தில் நபியவர்களிடம் கொடுத்துப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படி மக்கள் தமது பொருட்களை நம்பி ஒப்படைத்துத் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.

ஒரு சம்பவம்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மலைக்குன்றின் மீதேறி, மக்காவின் மக்களையும், மற்றும் மக்கள் தலைவர்களையும் மலையடிவாரத்துக்கு அழைத்தார்கள். அழைத்து, அவர்களிடம் ''இந்த மலைக்கப்பால் உங்களைத் தாக்குவதற்கு ஒரு படை வருகிறது என்று நான் கூறினால் அதை நீங்கள் நம்புவீர்களா?'' என்று கேட்டார்கள். ''ஆம் நம்புவோம்'' என்று அந்த மக்களும் தலைவர்களும் பதிலளித்தனர். (கருத்து) இச்சம்பவத்திலிருந்து மக்களும் தலைவர்களும் - நபித்துவ வாழ்வுக்கு முன் - நபியவர்களை ''உண்மையாளர்'' என்று ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பது தெளிவு.

பொதுவாக, எந்த மனிதரையும் அவரின் இயல்பான நடைமுறை வாழ்க்கையைக் கவனித்து வந்தால் அதைக் கொண்டு அவரின் பண்புகளைக் கணித்து விடலாம். ஒருவரை உண்மையாளர் அல்லது பொய்யர் என்று சொல்வதற்கு அவரின் செயல்பாடுகள் கண் முன்னே நிகழ்கிறது என்பதால் கணிப்பது எளிது.

நபி (ஸல்) அவர்களை ''உண்மையாளர்'' என்று கூறிய அதே மக்கள் பின்னர் ''பொய்யர்'' என்று உரைத்தது நபியவர்களின் ஆன்மீகக் கொள்கையை நோக்கியே தவிர, நடை முறை வாழ்க்கையில் நபியவர்கள் யாரையும் ஏமாற்றிப் பொய்யுரைத்தாகக் கொள்வது தவறு. நபியவர்களை பொய்யர், குறிகாரர், சூனியக்காரர், பைத்தியக்காரர், இட்டுக்கட்டுபவர் என்றெல்லாம் விமர்சனம் எழுந்தது அந்த மக்களின் அறியாமை என்று அடித்து கூறி
விடலாம். ஏனெனில்,

ஓரிறைக் கொள்கை, மறுமை, சுவனம், நரகம், இறந்த பின் உயிர்ப்பித்து எழுவது இது போன்ற தங்களுக்கு அறிவில்லாதவற்றையே அம்மக்கள் பொய் என்று கூறினர். நபியவர்களை பொய்யரென்று கூறிய அதே வேளையில் பொய்யர் என்பதை நிரூபிக்க எவ்வித சான்றுகளையும் சமர்ப்பிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஒரு கொள்கையை நம்பாதது வேறு, அந்தக் கொள்கையை பொய்யென்று உரைப்பது வேறு.
முந்தையதில் அது பற்றிய அறிவு இல்லாததால் அதை நம்பவில்லை. பிந்தையதில் அது பற்றிய எந்த அறிவுமின்றி அதைப் பொய்யென்று பொய்யுரைப்பது. இந்த அறியாமை அன்றைய விமர்சகர்களிலிருந்து இன்று வரை நீடிக்கிறது நாளையும் இது தொடரும்.

(ஓரிறைக் கொள்கை, மறுமை, சுவனம், நரகம், இறந்த பின் உயிர்ப்பித்து எழுவது இவற்றை முஸ்லிம்கள் நன்கு அறிந்து கொண்டு தான் இஸ்லாத்தை நம்பிக்கை கொள்கிறார்களா? என்று இங்கு கேள்வி எழலாம். இவற்றைக் கண் கூடாகக் காண்பதற்கான அவகாசம் இருக்கிறது என்பது தான் இஸ்லாத்தின் பதில்)

தகவல்

நபியவர்கள் கொண்டு வந்த கொள்கையை அறியாமையினால் பொய் என்றும், குறிகாரச் சொல் என்றும், சூனியம் என்றும், பைத்திக்காரத்தனம் என்றும், கட்டுக்கதை என்றும் விமர்சித்த அதே மக்கள் பின்னாளில் நபியவர்களின் முன்னிலையிலேயே அதேக் கொள்கையை உளமாற ஏற்றுக் கொண்டனர் என்பது யாரும் அறியாமல் மறைக்கப்பட்ட வரலாறல்ல.

நபிமார்களைப் பொய்யர் என்று உரைத்தது முஹம்மது நபிக்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல. எல்லாக் காலத்திலும், எல்லா மக்களும், எல்லா நபிமார்களையும் நோக்கி ''இவர் பொய்யர்'' என்று கூறினர் என பிறமத நண்பர்கள் வைத்துள்ள திருக்குர்ஆன் வசனமே கூறுகிறது.

இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும். (குர்‍ஆன் 35:4)

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முந்தைய நபியாகிய ஈஸா நபி (அலை) அவர்களையும், அவர்கள் காலத்து மக்கள் ''பொய்யர் சூனியக்காரர்'' என்றே கூறினார்கள்.

அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், 'இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை' என்று கூறிய வேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும். (திருக்குர்ஆன், 005:110)

மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: 'இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும் எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்' என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் 'இது தெளிவான சூனியமாகும்' என்று கூறினார்கள். (திருக்குர்ஆன், 061:006)

இறை வேதமும், இறை வேதத்தை மக்களிடம் அறிமுகப்படுத்தும் இறைத்தூதர்களையும் சுலபத்தில் மக்கள் ஏற்றுக்கொண்டதில்லை. பெண் சுகத்தில் திளைத்தவனிடம் விபச்சாரம் செய்யாதே என்று இறைவனின் கட்டளையைக் கூறினால் அதை அவன் எளிதாக ஏற்றுக் கொள்ள மாட்டான். தனது இன்பங்கள் பறிக்கப்படுகின்றன என்பதால். மக்கள் மனம் விரும்பாத செய்திகளை இறைத்தூதர்கள் கொண்டு வந்ததால் இறைத்தூதர்கள் இம்சிக்கப்பட்டார்கள். கொலை செய்யப்பட்டார்கள். முந்தைய நபிகள் கொல்லப்பட்டார்கள் என்ற தகவலோடு ஒப்படும் போது பொய்யர்.. இத்யாதி விமர்சனம் மிகச் சாதாரணம்.

ஆகவே, மூஸா அவர்களிடம் நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது, அவர்கள்: 'இது இட்டுக் கட்டப்பட்ட சூனியமே அன்றி வேறில்லை இன்னும் நம்முடைய முன்னோர்களான நம் மூதாதையர்களிடத்திலும் இதைக் கேள்விப்பட்டதில்லை' என்று கூறினார்கள். (திருக்குர்ஆன்,028:036)

இறைத்தூதர் மூஸா (அலை) அவர்கள் மக்களால் எவ்வாறு விமர்சிக்கப்பட்டார்களோ அதைப் போன்றே இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்)அவர்களும் மக்களால் விமர்சிக்கப்பட்டார்கள். இதில் முஹம்மது நபியை மக்கள் விமர்சித்ததை மட்டும் பிற மத நண்பர்கள் தூக்கிப் பிடிப்பது மழுங்கிய சிந்தனைக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறது.

விபரீத சிந்தனை

குர்‍ஆன் என்பது முகமதுவின் வாழ்நாட்களில் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது என்றும், அதில் சம காலத்து நிகழ்வுகளைப் பற்றிய விவரங்கள் உண்டென்றும் முஸ்லீம்கள் நம்புகின்றனர். மக்காவில் வாழ்ந்த மக்கள் முகமதுவை ஒரு நல்ல நேர்மையான, நம்பத்தகுந்த நபர் என்றுச் சொன்னார்கள் என்று இஸ்லாமிய ஹதீஸ்கள் சொல்லும் விவரங்களுக்கு எதிராக இந்த குர்‍ஆனின் சாட்சி உள்ளது. முஸ்லீம்களின் வேதமாகிய குர்‍ஆன், முஸ்லீம்கள் சொல்வதற்கு எதிராகச் சொல்கிறது, அதாவது முகமதுவின் சமகாலத்து மக்கள் முகமதுவை.

ஒரு பொய்யராகக் கண்டனர்,

அவர் ஒரு ஏமாற்றுக்காரராகக் கண்டனர்,

கட்டுக்கதைகளை இட்டுக்கட்டுபவராகக் கண்டனர்.


இங்கு குறிப்பிட்டிருப்பது பிற மத நண்பர்களின் விபரீத சிந்தனைக்கு மற்றும் ஓர் எடுத்துக்காட்டு. திருக்குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டது நபித்துவம் பெற்ற பின்னர். அதாவது நபியவர்களின் 40ம் வயதில் திருக்குர்ஆன் அருளத் துவங்கியது. முஹம்மது நேர்மையாளர், உண்மையாளர், நம்பிக்கையாளர் என மக்கள் சிலாகித்துக் கூறியது நபித்துவம் பெறுவதற்கு முன்னர். அதாவது நபியவர்களின் 40ம் வயது வரை. இதன் பிறகும் நபியவர்களின் நேர்மையில் எந்தக் குறைவும் ஏற்படவில்லை.

நபித்துவம் பெற்று திருக்குர்ஆன் அருளத் துவங்கிய பின்னரே மக்கள் நபியவர்களைப் பொய்யர் என்று கூறினர் என்றால் இது நபியவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட பின்னர், அவர்கள் கொண்டு வந்த ஓரிறைக் கொள்கையை, நபியவர்களின் நபித்துவத்தைப் பொய் என்றுப் புறக்கணித்தனர் என்று பொருள் கொள்வதில் எதுவும் சிரமம் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்,

திருக்குர்ஆன் சொல்வதும் உண்மை.

ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் சொல்வதும் உண்மை.

அன்புடன்,
அபூ முஹை

Tuesday, July 22, 2008

ரோமர்களை எதிர்த்த இஸ்லாமிய அரசு

இஸ்லாம் அழைப்புப் பணி

ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கைக்குப் பின் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வாழ்க்கையில் ஹுதைபிய்யா ஒப்பந்தம் ஒரு புதிய சகாப்தமாக விளங்க காரணமாக அமைந்தது. இஸ்லாமிய அழைப்புப் பணியை பரப்புவதற்கும், மக்கள் முன் அதை வைப்பதற்கும் முஸ்லிம்களுக்கு பெருமளவு வாய்ப்பு ஏற்பட்டது. இக்கால கட்டத்தில் போருக்குக் காட்டிய முயற்சியை விட பல மடங்கு ஆர்வத்தை இஸ்லாமிய அழைப்புப் பணியில் முஸ்லிம்கள் காட்டினர். இந்த இடை விடா பெரும் முயற்சியின் பலன், அரபுலக மக்கள் இஸ்லாத்தை விளங்கி கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தைத் தழுவினர்.

ஹிஜ்ரி 8ம் ஆண்டு மக்காவை நோக்கி நபியவர்கள் புறப்பட்ட போது அவர்களுடன் 10,000 நபித் தோழர்கள் இருந்தனர். ஹிஜ்ரி 9ம் ஆண்டு தபூக்கை நோக்கி படை புறப்பட்ட போது அதில் 30,000 பேர்கள் இருந்தனர். ஹிஜ்ரி 10ம் ஆண்டு நபியவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது அரபுலகத்தின் பல பாகங்களிலிருந்தும் வந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் நபியவர்களுடன் ஹஜ் செய்தனர். இவை, இஸ்லாமிய அழைப்புப் பணியால் கவபரட்டு மக்கள் திரளாக இஸ்லாத்தை ஏற்றனர் என்பதன் எளிய எடுத்துக்காட்டு.

அழைப்புப் பணியில் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அரசர்களுக்கும், ஆளுனர்களுக்கும் இஸ்லாமிய அழைப்பு விடுத்து எழுதிய கடிதங்கள் சிலவற்றை முந்தைய பதிவுகளில் இடம்பெற்றுன. அதில் ஓமன் நாட்டு அரசனுக்கு நபியவர்கள் எழுதிய கடிதம் குறித்து பிற மத நண்பர்கள் வருமாறு விமர்சனம் செய்திருந்தனர்,

ஓமன் நாட்டு அரசனுக்கு முகமது அனுப்பிய கடிதம்

முகமது ஓமன் நாட்டு அரசன் "ஜாஃபர்" மற்றும் அவர் சகோதரன் "அப்து அல் ஜலாந்தி" என்பவருக்கும் ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தை முகமதுவின் தூதுவர் "Amr bin al-'As al-Sahmi and Abu Zaid al-Ansari" கொண்டுச் சென்றார்.

இன்று இஸ்லாமியர்கள் மேடைகளில், வெப்தளங்களில், மற்றும் தொலைக்காட்சி மற்றும் இதர சாதனங்கள் மூலமாக இஸ்லாமை பரப்பிக்கொண்டு வருகின்றனர். அவர்கள் இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும், இன்னும் இதர மக்களையும் இஸ்லாம் பக்கம் ஈர்க்க முன்வைக்கும் வாதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. இஸ்லாம என்றால் அமைதி என்று பொருள்:

2. இஸ்லாமில் கட்டாயமில்லை:

3. இஸ்லாம் வாள் மூலம் பரப்பப்பட்டது என்று சொல்லும் செய்தி பொய்யானது.

4. நபி (முகமது) அவர்கள் செய்த போர்கள் அனைத்தும், தற்காப்புக்காக செய்தவை. தாமாக அவர் என்றுமே சண்டையிட்டது இல்லை.

5. ஜிஹாத் என்றால், தற்காப்புக்காக நமக்கு ஆபத்து வரும் போது செய்யும் சண்டையே தவிர, நாமாக சண்டையிடுவது இல்லை.

6. முகமது அவர்கள் யாரிடமும் வீணாக சண்டையிட்டது இல்லை. அவரைப்போல நல்லவர் உலகில் வேறு யாருமில்லை.

இப்படி பல செய்திகளை இஸ்லாமியர்கள், முன்வைப்பார்கள். ஆனால், ஓமன் நாட்டு அரசருக்கு முகமது என்ன எழுதினார் என்று பாருங்கள்.

ஓமன் நாட்டு அரசருக்கு முகமது எழுதின கடிதம்

"Peace be upon the one who follows the right path! I call you to Islam. Accept my call, and you shall be unharmed. I am God's Messenger to mankind, and the word shall be carried out upon the miscreants. If, therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if you refuse to accept Islam, your power shall vanish, my horses shall camp on the expanse of your territory and my prophecy shall prevail in your kingdom."

ஓமன் நாட்டு அரசருக்கு முகமது எழுதின கடிதம் - தமிழாக்கம்

நேர்வழியில் நடப்பவன் மீது சாந்தி உண்டாகட்டும்! இஸ்லாமிற்கு நான் உங்களை அழைக்கிறேன். என் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் சேதமாகாமல் இருப்பீர்கள். நான் மனித இனத்திற்காக வந்த இறைவனின் தூதுவன்(தீர்க்கதரிசி) ஆவேன், தீமை செய்பவர்கள் மீது இறைவனின் வார்த்தையை காட்டுவதற்காக வந்தேன். எனவே, நீங்கள் இஸ்லாமை அங்கீகரித்தால், என் வலிமையை(POWER) உனக்குத் தருவேன். ஆனால், நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்தால், உன் வலிமை(POWER) அழிக்கப்படும். என் குதிரைகள் உன் நாட்டின் நிலத்தில் பாளயமிறங்கும், என் தீர்க்கதரிசனம் உன் நாட்டின் மீது வெற்றிக்கொள்ளும்.

Photograph of the Arabic original and the English text as it is on display at Sohar Fort, Sultanate of Oman

சமத்துவம், சகோதரத்துவம் பேசும் இஸ்லாமிய நண்பர்களே,கீழ்கண்ட கேள்விகள் உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்:

1. இக்கடிதம் யார், யாருக்கு எழுதியது?

2. இக்கடிதம் எழுதுவதற்கு முன்பாக முகமதுவிற்கு "இந்த நாட்டு அரசனால் ஆபத்து
ஏதாவது இருந்ததா?"

3. இக்கடிதத்தில் முகமது மிகவும் நிதானமாக பேசுவதைக்கண்டீர்களா?

4. அதே நிதானத்தோடு அந்த நாடு அழிக்கப்படும் என்று சொல்வதை கவனித்தீர்களா?

5. இதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் என்ன பதில் சொல்வார்கள்?

6. தன் நாட்டில் இருந்துக்கொண்டு, முகமதுவிற்கு எந்த பயமுறுத்தலோ அச்சுருத்தலோ செய்யாமல் இருக்கின்ற அரசனுக்கு, இஸ்லாம், அல்லா, முகமது விடுக்கும் "அழைப்பு" எப்படி இருக்கிறது என்றுப் பார்த்தீர்களா?

7. முகமது இஸ்லாமின் நன்னடத்தையைக் காட்டி அந்த அரசனை இஸ்லாமிற்கு அழைக்கிறாரா? அல்லது அழித்துவிடுவேன் என்று பயமுறுத்தி அழைகிறாரா?

9. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிக படைபலம் உள்ள அரசனாக இருந்தால், முகமதுவோடு சண்டையிட்டுயிருப்பான், குறைந்த படைபலம் உள்ளவனாக இருந்தால், "இஸ்லாமை ஏற்றுக்கொண்டு" முகமதுவின் "ஜகாத்" கொடுத்துக்கொண்டு இருந்திருப்பான்.

10. கொன்றுவிடுவேன் என்று பயமுறுத்தி கொண்டுவரும் "பக்தி", "நமாஜ்" அல்லது "தொழுகை" உண்மையானதாக இருக்குமா? இதைத் தான் உண்மை தெய்வம் எதிர்பார்க்குமா?

11. இஸ்லாமில் கட்டாயமில்லை, இஸ்லாம் அமைதியான மதம், இஸ்லாம் கத்திமுனையில் பரப்பப்பட்டது இல்லை என்று சொல்லிக்கொள்கிறீர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் ?

12. இது தான் இஸ்லாம் காட்டும், முகமது காட்டும் வழியா?
நிதானப் பார்வையை இழந்து, எதையும் பகைமையுடன் அணுகினால் நியாயமும் அநியாயமாகவே தோன்றும் என்பதற்கு பிற மத நண்பர்களின் மேற்கண்ட விமர்சனம் அமைந்துள்ளது.


இஸ்லாம் என்றால் அமைதி, சாந்தி மார்க்கம் என்று பொருள்படும். அநீதியும், அக்கிரமும் தலை விரித்தாடும் போது அதைக் கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என்பது தான் அமைதியின் அகராதி என்றால் அந்த அமைதி என்ற அர்த்தத்தில் இஸ்லாம் இல்லை.

சுருக்கமாக:

கி.பி அறுநூறுகளின் ஆரம்பத்தில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் கருத்து வேறுபாடு கொண்டு, தங்களிடையிலான பகைமையும் குரோதமும் உச்சகட்டத்தை அடைந்து, ஒருவருக்கொருவரை அழித்துக்கொண்டிருந்தனர். கி.பி. ஆறாம் நூற்றாண்டும் ஏழாம் நூற்றாண்டும் வரலாற்றில் மிக மோசமான இருண்ட காலமாக இருந்தது. இந்தச் சூழலில் இஸ்லாம் மார்க்கத்தின் மறுப் பிரச்சாரம் துவக்கப்பட்டு மக்களுக்கும், மக்களின் தலைவர்களுக்கும் இஸ்லாமிய அழைப்பு விடுக்கப்பட்டது.

பண்பாடு, கலாச்சாரம், ஒழுக்கம் இவற்றில் தானும் சிறப்புடன் வாழ்ந்து மக்களையும் அதன் பக்கம் அழைக்க வேண்டும். இதுவே ஒரு நல்லவனின் அளவுகோலாகும். இறை மார்க்கத்தின் பால் மக்களை அழைக்கும் இறைத்தூதர்களின் அழைப்பு பல மடங்கு அதிகமானது. ஆண்டி முதல் அரசன் வரை இறை மார்க்கத்தை அவர்கள் எடுத்துச் சொல்லி அழைப்பு விடுக்க வேண்டும். அப்போதுதான் தீர்க்கத்தரிசிகளின் தூதுத்துவம் முழுமையடையும். மக்கா வெற்றிக்குப் பின் அரபுலகத்தில் இஸ்லாம் பரவலாக அறியப்பட்டு இஸ்லாத்தை ஏற்றவர்களில் ரோமானிய ஆட்சியின் கீழ் வாழ்ந்த மக்களும் அடங்குவர்.

அன்று வல்லரசாகத் திகழ்ந்த ரோமானியர்கள் இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவர்களைக் கொலை செய்தார்கள்.

ஃபர்வா இப்னு அம்ர் என்பவர் ரோம் நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த அரபியர்களுக்கு ஆளுனனராக இருந்தார். இவர் இஸ்லாத்தின் பால் கவரப்பட்டு முஸ்லிமானார். இவர் இஸ்லாத்தை ஏற்ற செய்தியைக் கேட்ட ரோமர்கள் அவரைச் சிறையிலடைத்து துன்புறுத்தி ‘’மார்க்கமா? அல்லது மரணமா? இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள் என்றனர்’’ அவரோ மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்தார். ஃபாலஸ்தீனில் ‘அஃபரா’ என்ற கிணற்றருகே ரோமர்கள் அவரைச் சிலுவையில் அறைந்து தலையைக் கொய்தனர்.

நபி (ஸல்) அவர்கள் புஸ்ரா மன்னருக்கு அனுப்பிய கடிதத்தை எடுத்துக் சென்றிருந்த ‘ஹாரிஸ் இப்னு உமைர்’ என்ற தூதரைப் புஸ்ராவின் கவர்னராக இருந்த ‘ஷுரஹ்பீல் இப்னு அம்ர் கஸ்ஸானி’ என்பவர் வழிமறித்துக் கொன்று விட்டான்.

இதையெல்லாம் கண்டும் காணாமல் ஒட்டிக் கொண்ட தூசியைத் தட்டி விட்டுச் செல்ல வேண்டும் என்ற பிற மத போதனையை அந்த மதத்தவர் ஏற்றுக் கொள்ளட்டும் ஆட்சேபனை இல்லை. ஆனால் அநீதியைத் தட்டிக் கேட்பதைக் குறை காணுபவர் காழ்ப்பு எனும் பித்தம் தலைக்கேறியவர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

கிறிஸ்தவ ஆலயங்களின் ஆதிக்கத்தை யாராலும் எதிர்க்க முடியாது என்ற அகம்பாவமும், தற்பெருமையும் ரோமானியர்களை இறுமாப்புக் கொள்ள வைத்தது. இறுமாப்பில் ரோமானியப் பேரரசு, பேரரசின் கீழ் ஆட்சி செய்த குறுநில மன்னர்கள், ஆளுனர்களின் அடக்குமுறைகளையும், அத்து மீறல்களையும் எதிர்த்து இஸ்லாமியப் பேரரசு அன்று குரல் கொடுத்தது. ரோமானியர்களின் ஆதிக்கத்தை யாராலும் எதிர்க்க முடியாது என்ற நம்பிக்கையைத் தகர்ப்பதற்காகவும், இஸ்லாத்தை ஏற்றால் அது ஆபத்தையும், மரணத்தையும் சந்திக்க நேரும் என்று எவரும் எண்ணி விடக் கூடாது என்பதற்காகவும் ரோமானியர்களை எதிர்த்துப் போர் எச்சரிக்கையும், போர் பிரகடனமும் விடுக்கப்பட்டது. முஃதா போர், தபூக் போர் சம்பவங்கள் ஏற்படக் காரணிகள் இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்களைக் கொலை செய்ததற்காக ரோமானியர்கள் மீது போர் அவசியமாயிற்று என்பதை வரலாற்றைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.

‘’எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உங்களிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஆண்களில் பலவீனமானவர்கள், பெணகள், மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? (திருக்குர்ஆன், 004:075)

அநீதி இழைக்கப்பட்டோருக்காக இஸ்லாமிய அரசு போர் செய்ய வேண்டும் என்ற இறை வாக்கு இஸ்லாமியப் பேரரசால் நிறைவேற்றப்பட்டது.

இஸ்லாத்தின் மீதான நீண்ட குற்றப் பட்டியலில் பிற மத நண்பர்கள் இதையும் - ‘’அநீதி, அக்கிரமம் செய்யப்பட்டோருக்காக இஸ்லாம் போரிடச் சொல்கிறது’’ என்று முஸ்லிம்கள், முஸ்லிம் அறிஞர்கள் மேடைகளில், வெப்தளங்களில், தொலைக்காட்சியிலும் பேசி வருகின்றனர் என்று - சேர்த்துக் கொள்ளட்டும்,

அன்புடன்,
அபூ முஹை

Wednesday, July 16, 2008

நல்லவர் தீமையைத் தடுக்கட்டும்.

இஸ்லாம் அழைப்புப் பணி.

இங்கு பைபிள் வசனங்களை விமர்சிக்கும் நோக்கமல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்வோம்.

கீழ் கண்ட வசங்களை சொன்னது யார் என்றுத் தெரியுமா உங்களுக்கு?

மத்தேயு 10:14 எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.

லூக்கா 9:5 உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்றார்.

அப்போஸ்தல நடபடிகள் 13:51 இவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்துக்குப் போனார்கள்.


இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்கள் மேற்கோள் காட்டியுள்ள பைபிள் வசனங்கள் மேற்கண்டவை.

''நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக'' திருக்குர்ஆன், 031:017)

''நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்'' (திருக்குர்ஆன், 013:022)

நன்மைகளைச் செய்வதோடு தீமைகளையும் களைந்து, களைய முன் வர வேண்டும். தான் மட்டும் நல்லவனாக வாழ்ந்தால் போதும் மற்றவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? என்றிருப்பவர் தீமையைத் தடுத்தவராகமாட்டார்.

''அல்லாஹ் அழிக்கப் போகின்ற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?'' என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள்'' உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)'' என்று கூறினர். (திருக்குர்ஆன், 007:164)

''அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம். வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம்'' (திருக்குர்ஆன், 007:165)

இவ்வசனத்தில் தீமையைத் தடுத்தவர்கள் மட்டுமே காப்பாற்றப்பட்டார்கள் என்றும், தீமையைச் செய்தவர்களும், அதைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தவர்களும் தண்டிக்கப்பட்டார்கள். என்றும் கூறப்படுகிறது. நல்லவன் என்பது தாமும் நல்லவனாக வாழ்ந்து, வலிமைக்கேற்றவாறு தீமையைத் தடுக்கவும் வேண்டும்.

''எனது உயிர் எவனது கையில் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நீங்கள் நன்மையை ஏவுங்கள், தீமையைத்தடுங்கள் (தவறினால்) அல்லாஹ் தண்டனையை உங்களுக்கு அனுப்புவான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

''யாரேனும் ஒரு தீமையைக் கண்டால் அதைக் கையால் தடுக்கட்டும், அதற்கு சக்தி பெறாதவர் தமது நாவால் தடுக்கட்டும், அதற்கும் இயலாதவர் தமது உள்ளத்தால் அதை வெறுக்கட்டும். இதுவே ஈமானின் கடைசி நிலையாகும்'' (முஸ்லிம், திர்மிதீ)

தீமையைத் தடுக்காதவர் நல்லவனாக வாழ்ந்தும் புண்ணியமில்லை, அவர் தண்டனைக்குரியவர் என இன்னும் பல கருத்துக்களில் இஸ்லாம் உரைக்கின்றது.

ஓர் அழகிய உதாரணம்:

அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை - ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்தில், இடம் கிடைத்தது.கீழ் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) 'நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம், நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்' என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, திர்மிதீ)

கப்பலில் கீழ் தளத்தில் பயணிப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று விட்டால் கப்பலில் பயணிப்பவர் அனைவரும் கடலில் மூழ்கும் அபாயம் எற்படும். அவர்கள் தடுக்கப்பட வேண்டும். கீழ் தளத்திலுள்ளவர்களை நோக்கி ''நீங்கள் தண்ணீர் எடுக்க வருவது எங்களுக்கு எவ்வித சிரமத்தையும் ஏற்படுத்திடவில்லை'' என்று கூறுவதோடு, அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்க உதவுவதும் அவர்களைத் தீமை செய்வதிலிருந்து தடுக்கும். இதுவே, நன்மையைக் கொண்டு தீமையைத் தடுப்பது.

சமுதாயத்தில் விளையும் தீமைகளை, ஒவ்வொரு தனி மனிதனும் தனது சக்திக்கு ஏற்றவாறு தடுத்திட வேண்டும். இது குறித்து நாளை அவன் விசாரிக்கப்படுவான்.

மத்தேயு 10:14 எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.


மார்க்கத்தை நிறைவேற்ற முடியாத இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்ற கருத்தில் இஸ்லாமும் அறவுரை வழங்கியுள்ளது. நபியவர்களும் முஸ்லிம்களும் மக்காவை விட்டு வெளியேறிய சம்பவம் இதற்கு முன்னுதாரணமாக உள்ளது.

''சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் படிந்த தூசியைத் தட்டிவிட்டு வெளியேறுங்கள்'' இந்த அறவுரை தனி மனிதனுக்கு வேண்டுமானால் பொருந்தாலாம். ஓர் அரசுக்குப் பொருந்தாது. அநீதி எங்கு நடந்தாலும் வலிமைப் பெற்ற அரசு அதைத் தட்டிக்கேட்க வேண்டும். அதுவும் தீர்க்கத்தரிசிகள் தலைமையில் அமைந்த அரசு அநீதியை எதிர்த்துப் போரிட தயக்கம் காட்டக்கூடாது.

அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு இஸ்லாத்தை ஏற்றவர்களின் வாழ்க்கைக்கு ரோமானியர்கள் நெருக்கடி கொடுத்து வந்தனர். தங்களுக்கு கீழுள்ளவர்கள் யாராவது இஸ்லாத்தை ஏற்றால் அவரைக் கொன்றனர். ரோமர்களின் அடக்கு முறைகளையும், அத்து மீறல்களையும் கண்டித்து, அவர்களுடன் போர் தொடுக்குமுன் விடுக்கப்படும் இஸ்லாத்தின் அழைப்பும் எச்சரிக்கையும் முறையாக மன்னர்களுக்குக் கடிதம் வழியாக எழுதப்பட்டது. எழுதியவர்: ஆன்மீகத் தலைவர், ஆட்சியின் தலைவரான - இஸ்லாமியப் பேரரசின் மாமன்னர் நபி (ஸல்) அவர்கள்.

எல்லா மன்னருக்கும் எழுதப்பட்ட அழைப்பும் எச்சரிக்கையும் ஓமன் நாட்டு அரசருக்கும் எழுதப்பட்டது. அது குறித்து பிற மத நண்பர்களின் விமர்சனம் அடுத்த பகுதியில், நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Wednesday, July 09, 2008

படைத்தவனை மறந்த...

இஸ்லாமியர்களின் வீழ்ச்சியால் இந்தப் பாருலகு அடைந்த நஷ்டமென்ன?
என்கிற தமது சிறந்த நூலில் குறிப்பிடும் சில கருத்துக்களை இங்கே எடுத்தாள்வதே போதும் என நாம் எண்ணுகிறோம். ஏனெனில் அது நமது கருத்தை மிகச் சுருக்கமாகவும் அதே நேரத்தில் மிகத் தெளிவாகவும் புரிய வைத்து விடுகின்றது.

அப்புத்தகத்தின் முதல் பாடத்தின் முதல் பிரிவில் காணப்படுகின்றது,

''கி.பி. ஆறாம் நூற்றாண்டும் ஏழாம் நூற்றாண்டும் வரலாற்றில் மிக மோசமான இருண்ட காலமாக இருந்தது என்பதில் வராலாற்றுப் பேராசியர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இல்லை! பல நூற்றாண்டுகளாகவே மனித இனம் மிகக் கீழ்தரத்திற்கும் ஒழுக்க வீழ்ச்சிக்கும் ஆளாகிப் போயிருந்தது. வீழ்ந்து மடிந்துவிடத் தயாராக நின்ற அதன் கையைப் பற்றித் தடுத்து நிறுத்தும் எந்த சக்தியும் இந்த மண்ணகம் முழுவதும் இல்லாது போய் விட்டிருந்தது. அது ஒழுக்க வீழ்ச்சிகளிலும் கீழ்மைத்தனங்களிலும் சிக்குண்டு சீரழிந்து கொண்டிருந்த நிலையில் காலச்சக்கரம் வேகமாகச் சுழன்றோடிக் கொண்டிருந்தது.

அந்த நூற்றாண்டுகளில் மனிதன் தன்னைப் படைத்தவனை மறந்து விட்டிருந்தான்! தன்னையும் தனது குறிக்கோளையும் மறந்து விட்டிருந்தான்! தனது நேர்மையையும், நன்மை தீமை, நல்லவை அல்லவையைப் பகுத்தறியும் திறனையும் இழந்து விட்டு அலைந்தான்! அதற்குச் சிறிது காலத்திற்கு முன்பிருந்தே இறைத்தூதர்களின் போதனைகள் மறைந்து விட்டிருந்தன. அவர்கள் ஏற்றிவிட்டுச் சென்றிருந்த தீபங்கள் அவர்களுக்குப் பின்னர் வீசிய அநாகரிக, ஒழுக்க வீழ்ச்சிப் புயல்களால் அணைந்து விட்டிருந்தன. அல்லது அவற்றின் ஒளி குன்றிப்போய் பலவீனமாக அணைப் போகும் நிலையில் சில உள்ளங்களில் மாத்திரம் மினிக்கிக் கொண்டிருந்தன. அந்த ஒளி, வீடுகளையும் நாடுகளையும் பிரகாசிக்கச் செய்யப் போதுமானதாக இருக்கவில்லை என்பதைச் சொல்லத் தேவையில்லை!

மார்க்க மேதைகளும் பண்டிதர்களும், தமது மார்க்கத்திற்கும் தமக்கும் தீங்குகள் எதுவும் நேரிட்டு விடலாம், அப்போதைய சீரழிவுகளில் தாமும் சிக்கிக் கொண்டு விடலாம் என அஞ்சியவர்களாய் வாழ்க்கைக் களத்தை விட்டு விலகி ஓடி மடாயலங்களிலும், தனிமையான இடங்களிலும் தஞ்சம் புகுந்தனர். சிலர் அமைதி நிம்மதி ஆகியவற்றைத் தேடியும், சிலர் வாழ்க்கைப் போராட்டங்களுக்கு ஈடு கொடுக்க அஞ்சியும், சிலர் மதப் போராட்டங்களை எதிர்கொள்ளப் பயந்தும், சிலர் ஆன்மீகத்துக்கும் உலகாதாயத்துக்கும் நடந்த இழுபறிப் போரில் ஈடுபட விரும்பாமலும் இப்படி ஆளுக்கு ஆள் மனித நடமாட்டமில்லாத இடங்களை நோக்கி ஓடத் தலைப்பட்டனர். அந்த வெள்ளப் பிரளயத்தில் அடித்துச் செல்லபடாமல் எஞ்சி நின்ற சிலரும் ஆள வந்தவர்கள், அரசவைப் பிரமுகர்களின் அடிவருடிக்கொண்டு அவர்களின் அக்கிரமங்களுக்கும் அநியாயங்களுக்கும் துணை நின்றார்கள். தவறான வழியில் மக்களின் செல்வங்களைச் சுரண்டி உண்டு கொழுத்தார்கள்.

வாழையடி வாழையாக வந்திருந்த மிகச் சிறந்த அறநெறிகளும் பண்பாடுகளும் எத்தர்களுக்கும் சமூக விரோதிகளுக்கும் பலியாகி விட்டிருந்தன! அவை வஞ்சகர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் விளையாட்டுப் பொருட்களாகி விட்டிருந்தன! அவற்றின் உண்மையான வடிவங்களும் ஜீவனும் அவற்றை உருவாக்கி விட்டுப் போனவர்களே இப்போது திரும்பி வந்தாலும் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு சிதைக்கப்பட்டிருந்தன! அரசியல், சமூக, கலை கலாச்சாரத்தின் தொட்டில்களாய்த் திகழ்ந்தவை குழப்பம், சீரழிவு, சிக்கல், நிர்வாகச் சீர்கேடு ஆட்சியாளர்களின் ஆணவம், சுயநலம் ஆகியவற்றின் கூடாரங்களாய்த் திகழ்ந்தன!

இந்த உலகத்தில் முன்னர் சமர்ப்பிப்பதற்கேற்ற சமூகப் பிரக்ஞையுடன் கூடிய சிறந்த திட்டங்களோ, மனித சமுதாயத்திற்கு அழைப்பு விடக் கூடிய அளவுக்கு உருப்படியான செய்திகளோ இல்லாத சுயநலம் பிடித்த ஒரு சமுதாய அமைப்பே அங்கே நிலவியது. தனது உயர் பண்பாடுகளையும் சிறப்புகளையும் இழந்து விட்டு, வாழ்க்கை ஊற்றே வற்றிப்போன வரண்ட சமூக அமைப்புத்தான் அங்கே காணப்பட்டது. மனிதச் சட்டங்களின் அடிப்படையில் அமைந்த நிலையான ஆட்சியும் அங்கே இருக்கவில்லை! வானுலக வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைந்த தூய்மையான வாழ்க்கை நெறியும் அங்கே காணப்படவில்லை!''

சுருக்கமும் வேகமும் நிறைந்த இந்த விளக்கம் அண்ணல் முஹம்மது (ஸல்) அவர்களின் வருகைக்கு முந்தைய கால கட்டத்தில் மனிதனின் நிலையும் அவனது பண்பாடுகளும் எவ்வாறு நிலைகுலைந்து போயிருந்தன என்பதை மேலோட்டமாக நமக்குச் சித்தரித்துக் காட்டிவிடுகின்றது. இணை வைப்பாளர்களையும், வேதக்காரர்களையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த ஏகத்துவ மறுப்புக் காட்சிகள் சிலவற்றை திருக்குர்ஆனும் பல இடங்களில் படம்பிடித்துக் காட்டுகிறது.

உதாரணமாக: அப்போதைய யூத, கிறிஸ்தவர்களைப் பற்றி,

009:030. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள். கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்.

002:113. 'கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று யூதர்கள் கூறுகிறார்கள். 'யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்.

திருக்குர்ஆனின் நிழலில் என்ற நூலிலிருந்து.

*****
சமூக சீர்திருத்தம் மிக அவசியமான ஒரு கால கட்டத்தில், முந்தைய நபிமார்களின் தடத்தில் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய அழைப்புப் பிரச்சாரத்தைத் துவக்கினார்கள். பிரச்சாரப் பணிக்கு பேச்சாற்றல் அவசியமாக இருப்பது போல், எழுத்து வடிவிலும் இஸ்லாமிய பிரச்சாரம் செய்வது மாற்றங்களை ஏற்படுத்தும், ஏற்படுத்தின.
நபி (ஸல்) அவர்கள் அண்டை நாட்டு அரசர்களுக்கும் ஆளுனர்களுக்கும் எழுத்து மூலமாக விடுத்த இஸ்லாமிய அழைப்புக் கடிதங்கள் சிலவற்றை முந்தைய பதிவுகளில் கண்டோம். அதன் மீதான பிற மத நண்பர்களின் விமர்சனங்களையும் அடுத்துப் பார்போம்.

தொடர்புடைய முந்தைய பதிவு,

ஓமன் நாட்டு அரசனுக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-8

Monday, July 07, 2008

ஓமன் நாட்டு அரசனுக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-8

இஸ்லாம், அழைப்புப் பணி

8) ஓமன் நாட்டு அரசருக்குக் கடிதம்

நபியவர்கள் ஓமன் நாட்டு அரசர் 'ஜைஃபர்' மற்றும் அவரது சகோதரர் 'அப்து'க்குக் கடிதம் அனுப்பினார்கள். அதன் வாசகமாவது:

''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, அல் ஜுலந்தாவின் மகன்களான ஜைஃபர் மற்றும் அப்துக்கு எழுதுவது. நேர்வழியை பின்பற்றுபவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! நான் உங்களிருவருக்கும் இஸ்லாமிய அழைப்பு விடுக்கின்றேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள். நான் மக்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். உயிருடன் இருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்கும், அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுக்கு நிச்சயம் வேதனை உண்டு என்பதை அறிவிப்பதற்கும் அல்லாஹ் என்னைத் தூதராக அனுப்பியிருக்கின்றான். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.''

இக்கடிதத்தை அம்ர் இப்னு ஆஸ் (ரழி) கொண்டு சென்றார். இப்போது நாம் இந்த நிகழ்ச்சியை குறித்து அம்ர் (ரழி) கூறுவதைக் கேட்போம்.

''நான் ஓமன் சென்று முதலில் அப்தை சந்தித்தேன். ஏனெனில், அப்துதான் இருவரில் சாந்த குணமும் புத்திசாலித்தனமும் உடையவர். நான் அவரிடம் சென்று, நான் அல்லாஹ்வின் தூதரால் உமக்கும் உமது சகோதரருக்கும் அனுப்பப்பட்ட தூதுவனாவேன்'' என்று என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். அதற்கவர் ''எனது சகோதரர்தான் வயதிலும் ஆட்சியிலும் என்னைவிட முந்தியவர். எனவே, நான் உன்னை அவரிடம் அனுப்பி வைக்கிறேன். முதலில் அவர் உன் கடிதத்தை படிக்கட்டும் என்று கூறிவிட்டு ''நீ எதன் பக்கம் அழைக்கிறாய்?'' என்றார்.

அம்ர்: நான் உன்னை அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவர் யாருமில்லை. அவனைத் தவிர வணங்கப்படும் அனைத்தையும் விட்டு நீர் விலகிக் கொள்ள வேண்டும். நிச்சயமாக முஹம்மது, அல்லாஹ்வின் அடிமை, அவனது தூதர் என்று நீர் சாட்சி கூறவேண்டும்.

அப்து: அம்ரே! நிச்சயமாக நீர் உனது கூட்டத்தினரின் தலைவருடைய மகன். உனது தந்தை என்ன செய்தார்? அவர் நாங்கள் பின்பற்றுவதற்குத் தகுதியானவர்தான்.

அம்ர்: முஹம்மதை ஏற்றுக் கொள்ளாமல் அவர் மரணித்து விட்டார். அவர் இஸ்லாத்தை ஏற்று நபி (ஸல்) அவர்களை உண்மைப்படுத்தியிருக்க வேண்டுமென்று நான் ஆசைப்பட்டேன். (ஆனால் நடக்கவில்லை) நானும் எனது தந்தையின் கொள்கையில்தான் இருந்தேன். இறுதியாக அல்லாஹ் எனக்கு இஸ்லாமிய நேர்வழியைக் காட்டினான்.

அப்து: நீர் எப்போது அவரைப் பின்பற்ற ஆரம்பித்தாய்?

அம்ர்: சமீபத்தில் தான்.

அப்து: நீர் எங்கிருக்கும் போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாய்?

அம்ர்: நான் நஜ்ஜாஷியிடமிருக்கும் போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். அவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டார்.

அப்து: அப்போது அவரது கூட்டத்தினர் அவன் ஆட்சிக்கு என்ன செய்தனர்?

அம்ர்: அவரது ஆட்சியை ஏற்று அவரைப் பின்பற்றியே நடந்தனர்.

அப்து: அவைத் தலைவர்களும் பாதிரிகளுமா அவரைப் பின்பற்றினார்கள்?

அம்ர்: ஆம்!

அப்து: அம்ரே! நீர் சொல்வதை நன்கு யோசித்துச் சொல். ஏனெனில் பொய்யை விட ஒருவனை கேவலப்படுத்தக் கூடிய குணம் எதுவும் இருக்க முடியாது.

அம்ர்: நான் பொய் கூறவுமில்லை. அதை எங்களின் மார்க்கம் ஆகுமானதாக கருதவுமில்லை.

அப்து: அநேகமாக ஹிர்கலுக்கு நஜ்ஜாஷி இஸ்லாமானது தெரிந்திருக்காது.

அம்ர்: இல்லை. ஹிர்கலுக்குத் தெரியும்.

அப்து: அது ஹிர்கலுக்கு தெரியுமென்பதை நீர் எவ்வாறு அறிந்து கொண்டீர்?

அம்ர்: அதாவது, நஜ்ஜாஷி இதற்கு முன் ஹிர்கலுக்குக் கப்பம் கட்டி வந்தார். ஆனால், அவர் எப்போது இஸ்லாத்தை ஏற்று முஹம்மதை உண்மைப்படுத்தினாரோ அப்போது ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஹிர்கல் என்னிடம் ஒரு திர்ஹமைக் கேட்டாலும் நான் அதைக் கொடுக்க மாட்டேன்'' என்று கூறிவிட்டார். இவ்வார்த்தை ஹிர்கலுக்கு எட்டியபோது அவருடன் இருந்த அவரது சகோதரர் 'யன்னாக்' என்பவன் ''உமது அடிமை உமக்குக் கப்பம் கட்டாமல் உமது மார்க்கத்தை விட்டு விட்டு வேறொருவரின் புதிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதற்கு நீ விட்டு விடுகிறாயா?'' என்று கேட்டான். அதற்கு ஹிர்கல் ''ஒருவர் ஒரு மார்க்கத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளும்போது அவரை நான் என்ன செய்ய முடியும்? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனது ஆட்சியின் மீது எனக்குப் பிரியமில்லையெனில் அவர் செய்தது போன்றுதான் நானும் செய்திருப்பேன்'' என்றார்.

அப்து: அம்ரே! நீர் என்ன சொல்கிறாய் என்பதை நன்கு யோசித்துக் கொள்!

அம்ர்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உம்மிடம் உண்மைதான் சொல்கிறேன்.

அப்து: அவர் எதை செய்யும்படி ஏவுகிறார்? எதை செய்வதிலிருந்து தடுக்கிறார்?

அம்ர்: அல்லாஹ்வுக்கு வழிபடவேண்டுமென ஏவுகிறார். அவனுக்கு மாறு செய்வதிலிருந்து தடுக்கிறார். (பெற்றோருக்கு) உபகாரம் செய்யவும், உறவினர்களைச் சேர்த்து வாழவும் சொல்கிறார். அநியாயம் செய்வது, அத்து மீறுவது, விபசாரம் செய்வது, மது அருந்துவது, கற்கள், சிலைகள், சிலுவைகள் ஆகியவற்றை வணங்குவது போன்ற அனைத்திலிருந்தும் தடுக்கிறார்.

அப்து: ஆஹா! அவர் அழைக்கும் விஷயம் எவ்வளவு நல்லதாக இருக்கிறது. எனது சகோதரர் இவர் விஷயத்தில் எனது பேச்சை ஏற்றுக் கொண்டால் நாங்கள் இருவரும் நேரடியாக முஹம்மதிடம் வந்து அவரை நம்பிக்கை கொண்டு அவரை உண்மைப்படுத்துவோம். ஆனால், எனது சகோதரர் தனது பதவி மீது ஆசை கொண்டவர். அதை அவர் பிறருக்கு விட்டுக் கொடுத்து விட்டு அவருக்கு (கட்டுப்பட்டு) வாலாக இருப்பதை விரும்ப மாட்டார்.

அம்ர்: நிச்சயமாக உமது சகோதரர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அல்லாஹ்வின் தூதர் அவரையே அவரது கூட்டத்தினருக்கு அரசராக நியமித்து விடுவார்கள். மேலும், அந்தக் கூட்டத்தினரின் செல்வந்தர்களிடமிருந்து தர்மத்தைப் பெற்று அக்கூட்டத்தினரின் ஏழைகளுக்கே திரும்ப கொடுத்து விடுவார்கள்.

அப்து: இது மிக அழகிய பண்பாடாயிற்றே. தர்மம் என்றால் என்ன?

அம்ரு: நபியவர்கள் பொருட்களில் இன்னின்னவற்றில் ஏழைவ கொடுக்க வேண்டுமென கடமையாக்கி இருக்கிறார்கள். அதுபோல் ஆடு, மாடு, ஒட்டகங்களிலும்.

அப்து: அம்ரே! இலைதழைகளைத் தின்று தண்ணீரைக் குடித்து வாழும் எங்களது கால்நடைகளிலுமா (தர்மம்) ஏழைவ வசூலிக்கப்படும்?

அம்ர்: ஆம்! அவ்வாறுதான்.

அப்து: எனது கூட்டத்தினர் உங்களை விட்டும் தூரமாக இருக்கிறார்கள். அவர்களிடம் படைபலமும் அதிகமாக உள்ளது. எனவே, அவர்கள் இதற்குக் கட்டுப்படுவார்கள் என்று நான் எண்ணவில்லை.

அம்ர் (ரழி) கூறுகிறார்கள்: நான் அப்துடைய வீட்டில் இவ்வாறு பல நாட்கள் தங்கியிருந்தேன். ஒவ்வொரு நாளும் அவர் தனது சகோதரரிடம் சென்று என்னிடம் கேட்ட செய்தியைக் கூறுவார். பின்பு ஒரு நாள் அப்தின் சகோதரர் என்னை அழைக்க நான் அவரிடம் சென்றேன். அவரது பணியாட்கள் எனது புஜத்தைப் பிடித்தவர்களாக நின்றனர். ''அவரை விட்டு விடுங்கள்'' என்று அவர் கூற, அவர்கள் என்னை விட்டு விட்டனர். அங்கிருந்த இருக்கையில் அமரச் சென்ற போது அந்தப் பணியாட்கள் என்னை உட்கார விடாமல் தடுத்தனர். சரிஎன, நான் அப்தை நோக்கினேன். அவர் என்னிடம் ''உமது தேவை என்னவென்று சொல்'' என்றார்.

நான் அப்தின் சகோதரரிடம் முத்திரையிடப்பட்ட கடிதத்தைக் கொடுத்தேன். அதை வாங்கி முத்திரையைப் பிரித்து இறுதி வரை படித்தார். பின்பு தனது சகோதரரிடம் கொடுக்கவே அவரும் அவ்வாறே படித்துப் பார்த்தார். ஆனால், அவரை விட அவன் சகோதரர் அப்துதான் மிகவும் இரக்கமுள்ளவராக இருந்தார்.

பின்பு அப்தின் சகோதரர் என்னிடம் ''குறைஷிகள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று என்னிடம் சொல்ல மாட்டாயா?'' என்றார். அதற்கு நான் ''குறைஷிகள் அவரைப் பின்பற்றி விட்டனர். மார்க்கத்தில் ஆசையுடன் சிலர் அவரை ஏற்றுக் கொண்டனர். எதிர்த்தவர்கள் வாளினால் அடக்கப்பட்டனர்'' என்றேன். அதற்கவர் ''அவருடன் யார் இருக்கிறார்கள்?'' என்றார். அப்போது நான் மக்களெல்லாம் இஸ்லாத்தை விரும்பியே ஏற்றிருக்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த நேர்வழியாலும், பகுத்தறிவாலுமே இதுவரை தாங்கள் வழிகேட்டில்தான் இருந்து வந்ததை அறிந்து கொண்டனர்.

''இப்போதுள்ள இந்தச் சிரமமான நிலையில் உன்னைத் தவிர வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நீர் இன்று இஸ்லாத்தை ஏற்று அவரைப் பின்பற்றவில்லை என்றால் நபி (ஸல்) அவர்களின் வீரர்கள் நாளை ஒரு நாள் உன்னிடம் வந்து சேருவார்கள். உமது ஆட்சியெல்லாம் அழியத்தான் போகிறது. எனவே, நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொள்! ஈடேற்றம் அடைவாய்! நபி (ஸல்) உனது கூட்டத்தினருக்கு உன்னையே ஆளுநராக நியமிப்பார்கள். குதிரைகளும் வீரர்களும் உம்மிடம் வரமாட்டார்கள்'' என்று கூறினேன். அப்போது அவர் ''என்னை இன்று விட்டுவிடு நாளை என்னிடம் திரும்ப வா'' என்றார்.

இதற்குப் பின் நான் அப்திடம் சென்றேன். அவர் ''அம்ரே! எனது சகோதரருக்கு ஆட்சி மோகம் இல்லையென்றால் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார் என்று நான் ஆதரவு வைக்கிறேன்'' என்று கூறினார். மறுநாள் நான் அப்தின் சகோதரரிடம் சென்றேன். ஆனால், அவர் எனக்கு அனுமதியளிக்க மறுத்து விட்டார். எனவே, நான் திரும்ப அப்திடம் வந்து ''என்னால் உனது சகோதரரிடம் செல்ல முடியவில்லை'' என்றேன். அவர் என்னை அவன் சகோதரரிடம் நேரடியாக அனுப்பி வைத்தார்.

அவர் என்னிடம் ''நீ எனக்குக் கொடுத்த அழைப்பு விஷயமாக யோசித்துப் பார்த்தேன். எனது கையிலுள்ள ஆட்சியை வேறு எவருக்கேனும் நான் கொடுத்து விட்டால் அரபிகளில் மிக பலவீனனாக கருதப்படுவேன். மேலும், அவரது வீரர்கள் இங்கு வரை வந்து சேரவும் முடியாது. அப்படி வந்தாலும் இதுவரை அவர்கள் சந்தித்திராத போரைச் சந்திக்க நேரிடும்'' என்று கூறினான். இதனைக் கேட்டு ''சரி! நாளை நான் இங்கிருந்து புறப்படுகிறேன்'' என்றேன். நான் நாளை நிச்சயமாக புறப்பட்டு விடுவேன் என்பதை தெரிந்து கொண்டவுடன், அப்து தனது சகோதரரிடம் சென்று ''நம்மால் அவரை வெல்ல முடியாது. அவர் யாருக்கெல்லாம் தூதனுப்பினாரோ அவர்கள் அனைவரும் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள். எனவே, நாமும் அவரை ஏற்றுக் கொள்வதுதான் நமக்கு நல்லது'' என்று கூறினார்.

மறுநாள் விடிந்தபோது அப்தின் சகோதரர் என்னை வரவழைத்து அவரும் அவரது சகோதரரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, நபி (ஸல்) அவர்களை உண்மையாளராக ஏற்றுக் கொண்டார்கள். அங்கு ஜகாத் (ஏழை வரி) வசூலிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர். என்னை எதிர்த்தவர்களை அடக்க எனக்கு உதவியும் செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியின் முன் பின் தொடர்களை நாம் ஆராயும் போது இதுதான் இறுதியாக நபி (ஸல்) அனுப்பிய கடிதமாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது. அநேகமாக மக்காவை வெற்றிக் கொண்ட பிறகு இக்கடிதம் அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் பல அண்டை நாட்டு மன்னர்களுக்கு இக்கடிதங்களின் மூலம் இஸ்லாமிய அழைப்பை எடுத்து வைத்தார்கள். அவர்களில் சிலர் நம்பிக்கை கொண்டனர் சிலர் மறுத்து விட்டனர். என்றாலும் நிராகரித்தவர்கள் எப்போதும் நபியவர்களைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்தனர். நபியவர்களின் பெயரும் மார்க்கமும் அவர்களுக்கு நன்கு அறிமுகமாகி விட்டது.

நூல்: ரஹீக்

தொடர்புடைய முந்தைய பதிவுகள்,

யமாமா, சிரியா இரு அரசர்களுக்கும் நபியவர்கள் எழுதிய கடிதம்-6,7

பஹ்ரைன் ஆளுனருக்கு நபியவர்களின் கடிதம்-5

ஹெர்குலிஸ் மன்னனுக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-4

பாரசீக மன்னனுக்கு நபியர்கள் எழுதிய கடிதம்-3

எகிப்து மன்னருக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-2

அபிசீனியா மன்னருக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-1

யூத, கிறிஸ்தவர்களின் பிளவுகள்.

யமாமா, சிரியா இரு அரசர்களுக்கும் நபியவர்கள் எழுதிய கடிதம்-6,7

இஸ்லாம், அழைப்புப் பணி

6) யமாமா நாட்டு அரசருக்குக் கடிதம்

இவர் பெயர் 'ஹவ்தா இப்னு அலீ' ஆகும். நபி (ஸல்) அவர்கள் இவருக்கு எழுதிய கடிதத்தின் வாசகமாவது:

''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹவ்தா இப்னு அலீக்கு எழுதிக் கொள்வது. நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம் வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன்.''

இக்கடிதத்தை அனுப்புவதற்கு நபி (ஸல்) ஸலீத் இப்னு அம்ர் அல் ஆமி (ரழி) அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஸலீத் (ரழி) இந்த முத்திரையிட்ட கடிதத்தை எடுத்துக் கொண்டு ஹவ்தாவிடம் வந்தபோது, அவர் ஸலீதை வரவேற்று தனது விருந்தினராகத் தங்க வைத்தார். ஸலீத் (ரழி) அவருக்கு அக்கடிதத்தைப் படித்துக் காட்டினார். அவர் அதற்குச் சிறிய அளவில் மறுப்பு தெரிவித்து விட்டு பதில் ஒன்றை எழுதினார். அதில், ''நீர் அழைக்கும் விஷயம் எவ்வளவு அழகானது, அற்புதமானது - பொதுவாக அரபிகள் எனக்குப் பயந்து நடக்கிறார்கள். உமது அதிகாரத்தில் எனக்கும் சில பங்கைக் கொடுத்தால் நான் உம்மைப் பின்பற்றுகிறேன்'' என்று கூறினார்.

இக்கடிதத்துடன் ஸலீத்துக்கு வெகுமதிகளையும் அன்பளிப்புகளையும் கொடுத்து 'ஹஜர்' என்ற இடத்தில் நெய்யப்பட்ட உயர்ந்த ஆடைகளையும் அவருக்கு அணிவித்தார்.

இவையனைத்தையும் எடுத்துக் கொண்டு ஸலீத் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்த செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அக்கடிதத்தைப் படித்துப் பார்த்துவிட்டு ''அவன் பூமியில் சிறுபகுதியைக் கேட்டாலும் கொடுக்க மாட்டேன். அவனும் நாசமாகி விட்டான். அவனது அதிகாரத்திற்கு உட்பட்டதும் நாசமாகி விட்டது'' என்றார்கள். நபியவர்கள் மக்காவை வெற்றி கொண்டு திரும்பிய போது 'ஹவ்தா' இறந்துவிட்ட செய்தியை ஜிப்ரீல் (அலை) கூறினார்கள். அப்போது நபி (ஸல்), ''நிச்சயமாக யமாமாவில் தன்னை நபி என்று கூறும் ஒருவன் உருவாகுவான். அவன் எனது மரணத்துக்குப் பின் கொல்லப்படுவான்'' என்றார்கள். ஒருவர் ''அல்லாஹ்வின் தூதரே! அவனை யார் கொல்வார்? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் ''நீரும் உமது தோழர்களும்'' என்றார்கள். பின்னாளில் நபி (ஸல்) கூறியவாறே நடந்தது.

7) சிரியா நாட்டு மன்னருக்குக் கடிதம்

இவர் பெயர் 'ஹாரிஸ் இப்னு அபூ ஷமீர் அல்கஸ்ஸானி' ஆகும். நபி (ஸல்) இவருக்கு எழுதிய கடிதமாவது:

''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹாரிஸ் இப்னு அபூ ஷமீருக்கு எழுதியது. நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உண்மையாக ஏற்றுக் கொண்டவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! தனக்கு இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ் ஒருவனையே நீர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேன். அப்படி செய்தால் உங்கள் ஆட்சி உங்களிடமே நிலைத்திருக்கும்.''

அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு ''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை. கடுங்கோபம் கொண்ட அவன் கைஸர் மன்னரிடம் நபியவர்கள் மீது போர் தொடுக்க அனுமதி கேட்டான். ஆனால், கைஸர் அவனைத் தடுத்து விட்டார். இதற்குப் பின் கடிதம் கொண்டு வந்த ஷுஜாஃ இப்னு வஹபுக்கு அன்பளிப்பாக ஆடைகளையும் வழிசெலவுகளையும் கொடுத்து அழகிய முறையில் ஹாரிஸ் அனுப்பி வைத்தான்.

நூல்: ரஹீக்

தொடர்புடைய முந்தைய பதிவுகள்,

பஹ்ரைன் ஆளுனருக்கு நபியவர்களின் கடிதம்-5

ஹெர்குலிஸ் மன்னனுக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-4

பாரசீக மன்னனுக்கு நபியர்கள் எழுதிய கடிதம்-3

எகிப்து மன்னருக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-2

அபிசீனியா மன்னருக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-1

யூத, கிறிஸ்தவர்களின் பிளவுகள்.

Sunday, July 06, 2008

பஹ்ரைன் ஆளுனருக்கு நபியவர்களின் கடிதம்-5

இஸ்லாம், அழைப்புப் பணி

5) பஹ்ரைன் நாட்டு ஆளுநருக்குக் கடிதம்

பஹ்ரைன் நாட்டு ஆளுநர் 'அல்முன்திர் இப்னு ஸாவி' என்பவருக்கு இஸ்லாமின் பக்கம் அழைப்புக் கொடுத்து நபி (ஸல்) கடிதம் எழுதினார்கள். அக்கடிதத்தை அலா இப்னு ஹள்ரமி என்ற தோழர் மூலம் அனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்களின் கடிதத்தைப் படித்துப் பார்த்த பின்பு அவர் நபியவர்களுக்குப் பதில் எழுதினார். ''அல்லாஹ்வின் தூதரே! உங்களது கடிதத்தை பஹ்ரைன் நாட்டு மக்களுக்கு முன் நான் படித்துக் காட்டினேன். அவர்களில் சிலர் இஸ்லாமால் கவரப்பட்டு அதை விரும்பி ஏற்றுக் கொண்டனர். எனது நாட்டில் மஜுஸிகளும் யூதர்களும் இருக்கின்றனர். எனவே, நான் என்ன செய்ய வேண்டும்? எவ்வாறு நடக்க வேண்டும்? என எனக்குக் கட்டளை பிறப்பியுங்கள்'' என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு நபி (ஸல்) அவர்களும் பின்வரும் பதில் எழுதியனுப்பினார்கள்.

''அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, முன்திர் இப்னு ஸாவிக்கு எழுதிக் கொள்வது. உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! உங்களுக்கு முன் நான் அல்லாஹ்வைப் புகழ்கிறேன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. முஹம்மது அவனது அடிமையும் அவனது தூதருமாயிருக்கின்றார் என்று நான் சாட்சி கூறுகிறேன். இதற்குப் பின் உங்களுக்கு நான் அல்லாஹ்வை நினைவூட்டுகிறேன்.

யாரொருவர் நன்மையை நாடுகிறாரோ அந்த நன்மையின் கூலி அவரையே சாரும். யார் நான் அனுப்பும் தூதர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்து, அவர்கள் கூறும் விஷயங்களைப் பின்பற்றுகிறாரோ அவர் எனக்குக் கீழ்ப்படிந்து நடந்தவராவார். யார் அவர்களுக்கு நன்மை செய்கிறாரோ அவர் எனக்கு நன்மை செய்தவராவார். நான் அனுப்பிய தூதர்கள் உங்களைப் பற்றி நல்லதையே கூறினார்கள். நீங்கள் உங்களது கூட்டத்தினருக்குச் செய்த பரிந்துரையை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்களுக்கு அவர்கள் முஸ்லிமாக மாறும் போது அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும் அப்படியே கொடுத்து விடுங்கள். அவர்களில் குற்றமிழைத்திருந்தவர்களை நான் மன்னித்து விட்டேன். எனவே, நீங்களும் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் சீர்திருத்தம் செய்து கொண்டிருக்கும் காலமெல்லாம் நாம் உங்களை உங்களது பதவியிலிருந்து அகற்ற மாட்டோம். யார் தனது யூத அல்லது மஜூஸி மதத்தில் நிலையாக இருந்து விடுகிறாரோ அவர் ஜிஸ்யா (வரி) செலுத்த வேண்டும்.'' இவ்வாறு அதில் குறிப்பிட்டார்கள்.

நூல்: ரஹீக்

தொடர்புடைய முந்தைய பதிவுகள்,

ஹெர்குலிஸ் மன்னனுக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-4

பாரசீக மன்னனுக்கு நபியர்கள் எழுதிய கடிதம்-3

எகிப்து மன்னருக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-2

அபிசீனியா மன்னருக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-1

யூத, கிறிஸ்தவர்களின் பிளவுகள்.

ஹெர்குலிஸ் மன்னனுக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-4

இஸ்லாம், அழைப்புப் பணி

4) ரோம் நாட்டு மன்னருக்குக் கடிதம்

நபியவர்கள் ரோமின் மன்னர் (ஹெர்குலஸ்) 'ஹிர்கலுக்கு' எழுதிய கடிதத்தின் வாசகத்தை இமாம் புகாரி (ரஹ்) ஒரு நீண்ட ஹதீஸுக்கு இடையில் குறிப்பிடுகிறார்கள். அது,

''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்,.. அல்லாஹ்வின் அடிமையும், அவனது தூதருமான முஹம்மது, ரோமின் மன்னர் ஹிர்கலுக்கு எழுதுவது: நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! இஸ்லாமை ஏற்றுக்கொள் ஈடேற்றம் அடைவாய் இஸ்லாமை ஏற்றுக்கொள் அல்லாஹ் உனக்கு கூலியை இருமுறை வழங்குவான் நீ புறக்கணித்து விட்டால் உமது கூட்டத்தினர் அனைவரின் குற்றமும் உன்னையே சாரும்.

வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்'' (என்று கூறுங்கள். நம்பிக்கையாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) ''நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!'' என்று நீங்கள் கூறிவிடுங்கள். (அல்குர்ஆன் 3:64)

இக்கடிதத்தை எடுத்துச் செல்ல திஹ்யா இப்னு கலீஃபா அல்கல்பி என்ற தோழரைத் தேர்வு செய்தார்கள். அவரிடம் ''நீங்கள் இதை புஸ்ராவின் கவர்னரிடம் கொடுங்கள், கவர்னர் அக்கடிதத்தை மன்னர் கைஸரிடம் கொடுக்கட்டும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.

இது தொடர்பாக இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் நீண்ட அறிவிப்பை இங்கு பார்ப்போம்:

அது, அபூ ஸுஃப்யான் மற்றும் குறைஷி காஃபிர்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவில் ஒப்பந்தம் செய்திருந்த காலம். அக்காலத்தில் அபூ ஸுஃப்யானும் குறைஷி காஃபிர்களும், வணிகர்களாக ஷாம் (சிரியா) சென்றிருந்தார்கள். அபூ ஸுஃப்யான் தனது சக தோழர்களுடன் இருக்கும் போது அவரிடம் ஹெர்குலிஸ் (ஹிர்கல்) மன்னன், ஒரு தூதுவனை அனுப்பி ரோம் நகரப் பெருந்தலைவர்கள் கூடியிருக்கும் மஸ்ஜிதுல் அக்ஸாவில் தனது அவைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். (ஹிர்கல் ரோமிலிருந்து அங்கு அப்போது வந்திருந்தார்.)

அபூ ஸுஃப்யான் தனது குழுவுடன் அங்கு வரவே அவர்களை ஹிர்கல் வரவேற்று அமரவைத்தார். பிறகு தனது மொழிபெயர்ப்பாளரையும் அவைக்கு வரவழைத்தார். இதற்குப் பின் நாம் நேரடியாக அபூ ஸுஃப்யான் கூறுவதைக் கேட்போம்.

மன்னர்: தன்னை நபி என்று கூறும் அந்த மனிதருக்கு உங்களில் மிக நெருங்கிய உறவினர் யார்?

அபூஸுஃப்யான்: அவர்களுக்கு மிக நெருங்கிய உறவினன் நான்தான்.

மன்னர்: அவரை என்னருகே கொண்டு வாருங்கள் அவருடைய தோழர்களை அவருக்கு பின் பக்கம் இருக்க வையுங்கள்.

(தனது மொழிபெயர்ப்பாளரிடம்) தன்னை நபியெனக் கூறும் அந்த மனிதரை (நபியை)ப் பற்றி இவ (அபூஸுஃப்யானி)ரிடம் நான் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் (அபூ ஸுஃப்யான் தோழர்களான) நீங்கள் இவர் பொய் கூறுகிறார் என்று தெரிவிக்கவும். இதனை மொழிபெயர்த்து இவர்களிடம் கூறு.

அபூஸுஃப்யான் (மனதிற்குள்): நான் பொய் கூறுவதாக என் நண்பர்கள் சொல்லி விடுவார்களோ என்ற வெட்கம் மட்டும் எனக்கு இல்லாவிட்டால் அல்லாஹ்வின் மீதாணையாக! நபியவர்களைப் பற்றி நான் பொய் சொல்லியிருப்பேன்.

மன்னர்: உங்களில் அவரது குடும்பம் எப்படிப்பட்டது?

அபூஸுஃப்யான்: அவர் எங்களில் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்.

மன்னர்: இதற்கு முன்பு (இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லை உங்களில் யாராவது சொல்லியிருக்கின்றனரா?

அபூஸுஃப்யான்: இல்லை.

மன்னர்: ''இவரது முன்னோர்களில் யாராவது அரசராக இருந்தாரா?''.

அபூஸுஃப்யான்: இல்லை.

மன்னர்: அவரை பின்பற்றுபவர்கள் மக்களில் சிறந்தவர்களா அல்லது எளியவர்களா?

அபூஸுஃப்யான்: எளியவர்களே பின்பற்றுகிறார்கள்.

மன்னர்: அவர்கள் அதிகரிக்கின்றனரா? குறைகின்றனரா?

அபூஸுஃப்யான்: இல்லை! அதிகரிக்கின்றனர்.

மன்னர்: அவரது மார்க்கத்தில் இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறுகின்றனரா?

அபூஸுஃப்யான்: இல்லை.

மன்னர்: இச்சொல்லைச் சொல்வதற்கு முன்பு அவர் பொய் பேசுவார் என சந்தேகப் பட்டதுண்டா?

அபூஸுஃப்யான்: இல்லை.

மன்னர்: அவர் மோசடி செய்ததுண்டா?

அபூஸுஃப்யான்: இல்லை. நாங்கள் அவரிடம் தற்போது ஓர் உடன்படிக்கை செய்திருக் கிறோம். அதன்படி அவர் செயல்படுவாரா அல்லது மாட்டாரா என்பது எங்களுக்குத் தெரியாது. (நபியைப் பற்றி குறை கூற இந்த வாக்கியத்தைத் தவிர வேறு வாக்கியத்தை என் பேச்சின் இடையே சேர்க்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.)

மன்னர்: அவருடன் போர் செய்துள்ளீர்களா?

அபூஸுஃப்யான்: ஆம்!

மன்னர்: அவருடன் நீங்கள் புரிந்த போர் முடிவு எவ்வாறு இருந்தது?

அபூஸுஃப்யான்: அவருக்கும் நமக்கும் இடையே போர் ஏற்றம் இறக்கமாக, அதாவது சில நேரம் அவர் எங்களை வெல்வார் சிலநேரம் நாங்கள் அவரை வெல்வோம்.

மன்னர்: அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்?

அபூஸுஃப்யான்: அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணை ஆக்காதீர்கள். உங்கள் முன்னோர் கூறியதை விட்டுவிடுங்கள் என்று கூறி தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவைப் பேணுதல் போன்ற நற்பண்புகளைக் கட்டளையிடுகிறார்.

அனைத்தையும் ஆழ்ந்து கேட்ட மன்னர் தனது மொழிபெயர்ப்பாளரிடம் தான் இனி பேசுவதை மொழிபெயர்த்துக் கூறச் சொன்னார். அதாவது:

உன்னிடம் அவரது குடும்பம் பற்றிக் கேட்டேன். ''அவர் உங்களில் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்'' என்றாய். இவ்வாறுதான் இறைத்தூதர்கள், சமுதாயத்தில் நல்ல குடும்பத்தில் அனுப்பப்படுவார். அடுத்து, உன்னிடம் ''இதற்கு முன்பு (இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லை உங்களில் யாராவது சொல்லியிருக்கின்றனரா?'' எனக் கேட்டேன், ''இல்லை'' என்றாய். இச்சொல்லை இதற்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால் அவரைப் பின்பற்றி இவரும் கேள்விப்பட்டதை கூறுகிறார் என்று சொல்லியிருப்பேன்.

அடுத்து உன்னிடம் ''இவரது முன்னோர்களில் யாராவது அரசராக இருந்தாரா?'' எனக் கேட்டேன். நீ ''இல்லை'' என்றாய். அங்ஙனம் இவரது முன்னோர்களில் யாராவது மன்னராக இருந்திருந்தால் அவருடைய முன்னோர்களில் அரசாட்சியை ஆசைப்படுகிறார் என்றிருப்பேன். அடுத்து உன்னிடம் ''(இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லைச் சொல்வதற்கு முன்பு அவர் பொய்யுரைப்பார் என சந்தேகப்பட்டதுண்டா?'' எனக் கேட்டேன். நீ ''இல்லை'' என்றாய். மக்களிடம் பொய்யுரைக்கத் துணியாதவர் நிச்சயம் அல்லாஹ்வின் மீது பொய்யுரைக்க மாட்டார் என்பதை நன்கு புரிந்துகொண்டேன். அடுத்து அவரை பின்பற்றுபவர்கள் மக்களில் சிறந்தவர்களா அல்லது எளியவர்களா''? என்று உன்னிடம் கேட்டேன் ''அவரை சாதாரண எளிய மக்கள்தான் பின்பற்றுகிறார்கள்'' என்று கூறினாய். (பெரும்பாலும் ஆரம்பத்தில்) அத்தகைய மக்கள்தான் இறைத்தூதர்களைப் பின்பற்றுவார்கள்.

அடுத்து உன்னிடம் ''அவரைப் பின்பற்றுபவர்கள் அதிகரிக்கின்றனரா குறைகின்றனரா'' என்று கேட்டேன். ''அதிகரிக்கின்றனர்'' என்றாய் நீ. அவ்வாறே இறை நம்பிக்கை முழுமை அடையும்வரை அது வளர்ந்து கொண்டே இருக்கும். அடுத்து உன்னிடம் ''அவரது மார்க்கத்தில் இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறி இருக்கின்றனரா'' என்று கேட்டேன். நீ ''இல்லை'' என்றாய். ஆம்! இறை நம்பிக்கையின் நிலை அவ்வாறுதான் இருக்கும். அதன் தெளிவு உள்ளத்துடன் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டால் எவரும் அதைவிட்டு வெளியேற மாட்டார்கள். அடுத்து உன்னிடம் ''அவர் மோசடி செய்ததுண்டா''? என்று கேட்டேன். நீ ''இல்லை'' என்றாய். அவ்வாறே இறைத்தூதர்கள் மோசடி செய்ய மாட்டார்கள்.

அடுத்து உன்னிடம் அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்? என்று கேட்டேன். ''அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள் என்று கட்டளையிட்டு, சிலை வணக்கத்தை விட்டு உங்களைத் தடுக்கிறார். மேலும் தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவைப் பேணுதல் போன்ற நற்பண்புகளை ஏவுகிறார்'' என்று கூறினாய். ''நீ கூறியவை அனைத்தும் உண்மையாக இருந்தால் என்னிரு கால்களுக்குக் கீழுள்ள இவ்விடங்களை அவரே அரசாள்வார். நிச்சயம் அவர் தோன்றுவார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், உறுதியாக அவர் உங்களிலிருந்து வருவார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவரைச் சென்றடையும் வழி எனக்குத் தெரிந்திருப்பின் சிரமம் பாராது அவரை சந்திப்பேன். நான் அவரருகில் இருந்தால் அவருடைய கால்களைக் கழுவுவேன்'' என்றார். பின்பு புஸ்ராவின் ஆளுநர் வாயிலாக தனக்காக திஹ்யாவிடம் நபி (ஸல்) கொடுத்தனுப்பிய கடிதத்தைத் தன்னிடம் கொடுக்க வேண்டினார். ஆளுநர் அதனை மன்னனிடம் தந்தார். முன்னாள் நாம் கண்ட அக்கடிதத்தை மன்னர் படித்து முடித்தபோது அங்கே மக்களின் சப்தங்கள் உயர்ந்தன. கூச்சல்கள் அதிகமாயின.

அபூ ஸுஃப்யான் கூறுகிறார்: ''எங்களை வெளியேற்றும்படி கூற நாங்கள் வெளியேற்றப் பட்டோம். நாங்கள் வெளியேறும் போது நான் என் தோழர்களிடம் கூறினேன்: ரோமர்களின் மன்னன்கூட அவரைக் கண்டு அஞ்சும் அளவுக்கு அபூ கபிஷாவின்' பேரனுடைய காரியம் உறுதியாகி விட்டது'' என்று அபூஸுஃப்யான் கூறினார்.

அப்போதே அல்லாஹ்வின் தூதர் விஷயத்தில் நிச்சயம் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என நான் நம்பிக்கையுடன் இருந்தேன். முடிவில் அல்லாஹ் எனக்கு இஸ்லாமை ஏற்க அருள் செய்தான் என்று அபூஸுஃப்யான் கூறினார். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் கடிதம் கைஸர் மன்னரிடம் எப்படிப்பட்ட பிரதிபலிப்பை ஏற்படுத்தியது என்பதை அபூஸுஃப்யான் நேரில் பார்த்து புரிந்து கொண்டதையே இவ்வாறு கூறினார்.

மேலும், நபி (ஸல்) அவர்களின் தூதுவர் திஹ்யாவிற்கு மன்னர் கைஸர் பெரும் செல்வத்தையும் உயர்ந்த ஆடைகளையும் கொடுத்து கௌரவித்தார். அந்தளவுக்கு நபி (ஸல்) அவர்களின் கடிதம் அவரிடம் மாறுதலை ஏற்படுத்தியது. திஹ்யா (ரழி) திரும்ப மதீனா நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் வழியில் 'ஹிஸ்மா' என்ற இடத்தில் ஜுதாம் கிளையைச் சேர்ந்த சிலர் அவன் பொருட்கள் அனைத்தையும் வழிப்பறி செய்து கொண்டனர். பின்பு மதீனா வந்து சேர்ந்த திஹ்யா (தனது இல்லம் செல்வதற்கு முன்) நேராக நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து நடந்ததைக் கூறினார். உடனே நபியவர்கள் 500 வீரர்களை ஜைது இப்னு ஹாரிஸாவின் தலைமையில் ஹிஸ்மாவை நோக்கி அனுப்பினார்கள். இந்த 'ஹிஸ்மா' என்பது வாதில் குர்ராவை அடுத்துள்ள ஊராகும். அங்கு சென்ற ஜைது (ரழி) அவர்கள் ஜுதாம் கிளையினரைத் தாக்கி அதிகமானவர்களைக் கொன்றார்கள். பின்பு அக்கிளையினரின் கால்நடைகளையும் பெண்களையும் அழைத்துக் கொண்டு மதீனா வந்து சேர்ந்தார்கள். அதில் 1000 ஒட்டகங்களும், 5000 ஆடுகளும், கைதிகளில் பெண்கள் சிறுவர்களென 100 பேர்களும் இருந்தனர்.

ஏற்கனவே ஜுதாம் கிளையினர் நபி (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்திருந்தனர். எனவே, இக்கிளையினரின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவரான ஜைது இப்னு ஃபாஆ நபி (ஸல்) அவர்களிடம் இவ்வழக்கைக் கொண்டு வந்தார். இவரும், இவன் கிளையைச் சேர்ந்த மற்றும் சிலரும் இதற்கு முன்பே இஸ்லாமைத் தழுவியிருந்தனர். இவர்கள் தங்களது ஜுதாம் கிளையினர் திஹ்யாவை வழிப்பறி செய்த போது தங்களால் முடிந்தளவு திஹ்யாவைப் பாதுகாத்தனர். எனவே, நபியவர்கள் இவர்களின் கோரிக்கையை ஏற்று ஜைது இப்னு ஹாரிஸா கொண்டு வந்திருந்த பொருட்களையும் கைதிகளையும் திரும்பக் கொடுத்து விட்டார்கள்.

போர்களைப் பற்றிக் குறிப்பிடும் வரலாற்று ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் இந்நிகழ்ச்சியை ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன் நடந்ததாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அது தவறாகும். ஏனெனில், நபியவர்கள் கைஸர் மன்னருக்கு ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்தான் கடிதம் அனுப்பினார்கள். எனவே, ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்தான் இச்சம்பவம் நடந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று இப்னுல் கய்யூம் (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.

நூல்: ரஹீக்

தொடர்புடைய முந்தைய பதிவுகள்,

பாரசீக மன்னனுக்கு நபியர்கள் எழுதிய கடிதம்-3

எகிப்து மன்னருக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-2

அபிசீனியா மன்னருக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-1

யூத, கிறிஸ்தவர்களின் பிளவுகள்.

Saturday, July 05, 2008

பாரசீக மன்னனுக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-3

இஸ்லாம், அழைப்புப் பணி

3) பாரசீக மன்னருக்குக் கடிதம்

நபி (ஸல்) அவர்கள் பாரசீக மன்னர் 'கிஸ்ரா'விற்கும் கடிதம் எழுதினார்கள். அந்த கடிதமாவது:

''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, பாரசீகர்களின் மன்னர் கிஸ்ராவிற்கு எழுதும் கடிதம். நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணை துணை யாருமில்லை அவன் தனக்கென எவரையும் மனைவியாகவோ பிள்ளையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை நிச்சயமாக முஹம்மது அவனது அடிமையாகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்!

நான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனைத்து மக்களுக்கும் அனுப்பப்பட்ட தூதராவேன். உயிருள்ளவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, இறைநிராகரிப்பாளர்களுக்கு அவனது தண்டனையின் வாக்கு உறுதி ஆவதற்காக என்னை அவன் தூதராக அனுப்பியிருக்கிறான். நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள் ''நீங்கள் மறுத்துவிட்டால் மஜூஸிகளின் (நெருப்பை வணங்குபவர்களின்) குற்றமெல்லாம் உங்களையே சாரும்.''

இக்கடிதத்தை எடுத்துச் செல்வதற்கு 'அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மி' என்ற தோழரைத் தேர்வு செய்தார்கள். இவர் பஹ்ரைன் நாட்டு மன்னரிடம் இந்தக் கடிதத்தைக் கொடுத்து, அவர் அக்கடிதத்தை தனது ஆள் மூலமாக கிஸ்ராவிடம் அனுப்பினாரா அல்லது அப்துல்லாஹ்வே நேரடியாக கிஸ்ராவிடம் கொடுத்தாரா என்ற விபரம் அறியப்படவில்லை. எதுவாக இருப்பினும், முடிவில் அக்கடிதம் கிஸ்ராவிடம் சென்று அதை அவன் படித்து விட்டு கிழித்தெறிந்தான். பின்பு பெருமையுடன் ''எனது குடிமக்களில் ஒரு கேவலமான அடிமை எனது பெயருக்கு முன் அவரது பெயரை எழுதுவதா?'' என்று கூறினான்.

இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்த போது ''அல்லாஹ் அவனது ஆட்சியை கிழித்தெறியட்டும்'' என்று கூறினார்கள். அவ்வாறே நடக்கவும் செய்தது. இதற்குப் பின் கிஸ்ரா யமன் தேசத்திலுள்ள தனது கவர்னருக்குக் கடிதம் எழுதினான். அதில் ''ஹிஜாஸில் உள்ள இவரிடம் நல்ல துணிச்சலான இரு வீரர்களை அனுப்பி வை. அவர்கள் அவரை என்னிடம் கொண்டு வரட்டும்'' என்று குறிப்பிட்டான். இக்கடிதம் கிடைத்தவுடன் கவர்னர் பாதான் தன்னிடமுள்ள வீரர்களிலிருந்து இருவரைத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தான். மேலும் அவ்விருவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான். அதில் ''இக்கடிதம் கிடைத்தவுடன் நபியவர்கள் இந்த இருவருடன் உடனே புறப்பட்டு கிஸ்ராவிடம் செல்ல வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தான்.

வந்த இருவரில் ஒருவன் பெயர் சுஹ்ர்மானா பானவய்ஹி. இவன் கணக்கு மற்றும் ஃபார்சி மொழியை அறிந்தவன். இரண்டாமவன் பெயர் குர்குஸ்ரு.

இவ்விருவரும் மதீனா வந்து நபியவர்களைச் சந்தித்தார்கள். அவ்விருவரில் ஒருவன் நபியவர்களிடம் ''அரசர்களுக்கெல்லாம் அரசரான கிஸ்ரா தனது கவர்னர் பாதானுக்கு கடிதம் எழுதினார். அதில் உம்மை அழைத்து வருவதற்காக ஆட்களை உம்மிடம் அனுப்பும்படி ஆணையிட, பாதான் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார். நீர் என்னுடன் புறப்பட வேண்டும்'' என்று கூறியதுடன் நபியவர்களை எச்சரிக்கும்படி பல வார்த்தைகளையும் கூறினான். நபி (ஸல்) அவற்றைப் பொறுமையாக கேட்டு விட்டு, தன்னை நாளை சந்திக்குமாறு அவ்விருவரிடமும் கூறினார்கள்.

இக்காலக் கட்டத்தில் மன்னர் கைசரின் படையுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த கிஸ்ராவின் படையினர் கடும் தோல்வியடைந்தனர். இதற்குப் பின் கிஸ்ராவுக்கு எதிராக அவனது குடும்பத்திலிருந்தே பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. கிஸ்ராவின் மகன் ஷீர்வைஹி தகப்பனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இச்சம்பவம் ஹிஜ்ரி 7, ஜுமாதா அல் ஊலா பிறை 10, செவ்வாய் இரவு நடந்தது. அச்சம்பவம் நடந்த அதே நேரத்தில் அதை வஹியின் வாயிலாக நபி (ஸல்) அறிந்து கொண்டார்கள். (ஃபத்ஹுல் பாரி, தாக் இப்னு கல்தூன்)

மறுநாள் இரு தூதர்களும் வந்தபோது நபி (ஸல்) அச்செய்தியை அவர்களுக்குக் கூறினார்கள். அதற்கு அவ்விருவரும் ''நீர் என்ன பேசுகிறாய் என்று தெரிந்துதான் பேசுகிறாயா? இதற்கு முன் மிக இலகுவான தண்டனையைத்தான் நாம் உம்மிடம் கூறியுள்ளோம். நீர் சொன்ன இச்செய்தியை நாங்கள் எழுதி கவர்னருக்கு அனுப்பலாமா?'' என்று கூறினர். அதற்கு நபியவர்கள் ''ஆம்! அவருக்கு இச்செய்தியை என் சார்பாக அனுப்பி வையுங்கள்.'' என்றும் ''எனது மார்க்கமும், ஆட்சியும் கிஸ்ராவின் ஆட்சி எதுவரை இருக்கிறதோ அதுவரை வந்தடையும். எதுவரை குதிரையும் ஒட்டகமும் செல்ல முடியுமோ அதுவரை சென்றடையும். அவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் அவரது கட்டுப்பாட்டில் உள்ளதை அவருக்கே சொந்தமாக்கி விடுவேன், அவரது இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவரையே அரசனாக்கி விடுவேன்'' என்றும் சொல்லுங்கள் என்றார்கள்.

அந்த இருவரும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து புறப்பட்டு தங்களது கவர்னர் பாதானிடம் வந்தனர். பிறகு நபி (ஸல்) கூறி அனுப்பிய செய்தியைக் கூறினார்கள். சிறிது நேரத்திற்குள் ஷீர்வைஹியின் கடிதம் ஒன்று அவரிடம் வந்தது. அதில்: ''நான் எனது தந்தையைக் கொன்று விட்டேன். எனது தந்தை தனது கடிதத்தில் குறிப்பிட்ட மனிதர் விஷயத்தில் சற்று பொறு. எனது அடுத்த கட்டளை வரும் வரை அவரை பழித்துப் பேசிவிடாதே'' என்று எழுதப்பட்டிருந்தது. (தாரீகுல் உமமில் இஸ்லாமிய்யா, ஃபத்ஹுல் பாரி)

நூல்: ரஹீக்

தொடர்புடைய முந்தைய பதிவுகள்,

யூத, கிறிஸ்தவர்களின் பிளவுகள்.

அபிசீனியா மன்னருக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-1

எகிப்து மன்னருக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-2

எகிப்து மன்னருக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-2

இஸ்லாம், அழைப்புப் பணி

மிஸ்ரு (எகிப்து) நாட்டு மன்னருக்குக் கடிதம்

மிஸ்ரு (எகிப்து) மற்றும் இஸ்கந்தய்யா (அலெக்ஸாண்டியா)வின் மன்னரான 'முகவ்கிஸ்' என்றழைக்கப்படும் ஜுரைஜ் இப்னு மத்தாவிற்கு நபி (ஸல்) கடிதம் அனுப்பினார்கள். (ரஹ்மத்துல் லில் ஆலமீன்)

அக்கடிதத்தில்:

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் எழுதுகிறேன். அல்லாஹ்வின் அடிமையும், அவனது தூதருமான முஹம்மது, கிப்திகளின் மன்னருக்கு எழுதுவது. நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்.

நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. அல்லாஹ் உங்களுக்கு இருமுறை நற்கூலி வழங்குவான். ''நீங்கள் புறக்கணித்து விட்டால் கிப்தி இனத்தவர்களின் குற்றமும் உங்களையே சாரும்''

( ''வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்'' (என்று கூறுங்கள். நம்பிக்கையாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) ''நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!'' என்று நீங்கள் கூறிவிடுங்கள். ) (அல்குர்ஆன் 3:64) (ஜாதுல் மஆது)

இந்தக் கடிதத்தை எடுத்துச் செல்வதற்கு நபியவர்கள் ஹாதிப் இப்னு அபூ பல்தாவை தேர்வு செய்தார்கள். ஹாதிப் (ரழி) அங்கு சென்றவுடன் அம்மன்னரைப் பார்த்து இவ்வாறு கூறினார்: ''நிச்சயமாக உமக்கு முன் தன்னை மிக உயர்ந்த இறைவன் என்று சொல்லி வந்த ஒருவன் இங்கு இருந்தான். அல்லாஹ் அவனை நிரந்தரத் தண்டனையைக் கொண்டு தண்டித்தான். அல்லாஹ் அவனைக் கொண்டு பிறரையும், பின்பு அவனையும் தண்டித்தான். எனவே, நீ பிறரைக் கொண்டு படிப்பினை பெற்றுக் கொள். பிறர் உன்னைக் கொண்டு படிப்பினை பெறும்படி நடந்து கொள்ளாதே!''

இதைக் கேட்ட முகவ்கிஸ் ''நிச்சயமாக எங்களுக்கென்று ஒரு மார்க்கம் இருக்கிறது. நாங்கள் அம்மார்க்கத்தை விடமாட்டோம். ஆனால், அதைவிட சிறந்த ஒரு மார்க்கம் கிடைத்தால் விட்டு விடுவோம்'' என்று கூறினார். அப்போது ஹாதிப் (ரழி) அதற்கு பின்வரும் பதிலை கூறினார்:

நாங்கள் உம்மை இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் அழைக்கிறோம். இதைத் தவிர மற்ற மார்க்கங்களின் தேவை இனி அறவே இருக்காது. இதுவே அனைத்திற்கும் போதுமான, பரிபூரணமான மார்க்கமாகும். நிச்சயமாக இந்த நபி மக்களுக்கு அழைப்பு கொடுத்தார்கள். அம்மக்களில் குறைஷிகள் அவருடன் மிகக் கடுமையாக நடந்து கொண்டனர். யூதர்கள் அவரைப் பகைத்தனர். கிறிஸ்துவர்கள் அவருடன் நட்பு கொண்டனர்.

சத்தியமிட்டுக் கூறுகிறேன்! நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றி நபி மூஸா (அலை) அவர்கள் நற்செய்தி அறிவித்தார்கள். அவ்வாறே நபி முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி நபி ஈஸா (அலை) அவர்கள் நற்செய்தி அறிவித்தார்கள். உம்மை நாங்கள் குர்ஆனின் பக்கம் அழைப்பது நீங்கள் தவ்றாத் வேதமுடையவர்களை இன்ஜீலின் பக்கம் அழைப்பதைப் போன்றுதான். ஒவ்வொரு நபி அனுப்பப்படும் போதும் அவரது காலத்திலுள்ள மக்களெல்லாம் அந்த நபியின் சமுதாயமாகக் கருதப்படுவார்கள். எனவே, அம்மக்கள் அந்த நபிக்கு கீழ்ப்படிந்து நடப்பது கடமையாகும். நீங்கள் இந்த நபி அனுப்பப்பட்ட காலத்தைச் சேர்ந்தவர்கள். (எனவே நீர் அவரை பின்பற்றியாக வேண்டும்) ஈஸாவின் மார்க்கத்தைப் பின்பற்றுவதிலிருந்து நாங்கள் உம்மைத் தடுக்கவில்லை. மாறாக, நாங்களும் உமக்கு அதைத்தான் ஏவுகிறோம்.''

இந்தப் பதிலைக் கேட்ட முகவ்கிஸ், ''இந்த நபியின் விஷயத்தில் நான் சிந்தித்து விட்டேன். அவர் வெறுப்பானவற்றை ஏவவில்லை, அல்லது விருப்பமான ஒன்றை தடுக்கவுமில்லை. வழிகெட்ட சூனியக்காரராகவோ, பொய் சொல்லும் குறிகாரராகவோ நான் அவரைக் கருதவில்லை. மறைவாக பேசப்படும் இரகசியங்களை வெளிப்படுத்தும் நபித்துவத்தின் அடையாளம் அவரிடம் இருக்கக் கண்டேன். இருந்தாலும் நான் மேலும் யோசித்துக் கொள்கிறேன்'' என்று ஹாத்திபுக்கு பதில் கூறினார். பின்பு, நபி (ஸல்) அவர்களின் கடிதத்தை யானை தந்தத்தில் வைத்து மூடி முத்திரையிட்டு தனது அடிமை பெண்களிடம் கொடுத்து பாதுகாத்து வைக்கச் சொன்னார். பின்பு அரபியில் எழுதும் தனது எழுத்தாளரை அழைத்து நபியவர்களுக்கு கடிதம் ஒன்று எழுதுமாறு கூறினார்.

''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் எழுதுகிறேன். அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதுக்கு கிப்திகளின் அரசர் முகவ்கிஸ் எழுதுவது. உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டுமாக! நான் உங்களது கடிதத்தைப் படித்தேன். அதில் நீங்கள் கூறியிருப்பதையும், நீங்கள் எதன் பக்கம் அழைக்கிறீரோ அதையும் நான் புரிந்து கொண்டேன். ஒரு நபி மீதமிருக்கிறார் என்பது எனக்கு நன்கு தெரியும். அவர் ஷாம் தேசத்திலிருந்து வருவார் என்றுதான் எண்ணியிருந்தேன். நான் உங்களது தூதரைக் கண்ணியப்படுத்தினேன். மதிப்பும் மரியாதையுமிக்க இரண்டு அடிமைப் பெண்களையும் சில ஆடைகளையும் நான் உங்களுக்கு அனுப்பியுள்ளேன். நீங்கள் வாகனிப்பதற்காக ஒரு கோவேறு கழுதையையும் அன்பளிப்பாக அளிக்கிறேன். உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகுக.''

இக்கடிதத்தில் இவர் வேறு எதையும் குறிப்பிடவில்லை. இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. இரண்டு அடிமைப் பெண்களில் ஒருவர் 'மாரியா', மற்றொருவர் 'சீரீன்'. கோவேறு கழுதையின் பெயர் 'துல்துல்' ஆகும். பிற்காலத்தில் வந்த மன்னர் முஆவியா (ரழி) அவர்களின் காலம் வரை துல்துல் உயிருடனிருந்தது. (ஜாதுல் மஆது)

மாரியாவை நபி (ஸல்) தனக்காக வைத்துக் கொண்டார்கள். இவர் மூலம் நபியவர்களுக்கு 'இப்றாஹீம்' என்ற குழந்தை பிறந்தது. சீரீனை நபி (ஸல்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரழி) என்ற அன்சாரி தோழருக்கு வழங்கினார்கள்.

நூல்: ரஹீக்

தொடர்புடைய முந்தைய பதிவுகள்

யூத, கிறிஸ்தவர்களின் பிளவுகள்.

அபிசீனியா மன்னருக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-1

Friday, July 04, 2008

அபிசீனியா மன்னருக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-1

அரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் கடிதம் எழுதுதல்

நபி (ஸல்) அவர்கள் உடன்படிக்கையை முடித்து ஹுதைபிய்யாவிலிருந்து திரும்பிய பின் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டின் இறுதியில் பல அரசர்களுக்குக் கடிதம் எழுதி இஸ்லாமின் பக்கம் அவர்களை அழைத்தார்கள்.

நபியவர்கள் அரசர்களுக்குக் கடிதம் எழுத முற்பட்டபோது ''முத்திரை இல்லாத கடிதங்களை அரசர்கள் படிக்க மாட்டார்கள்'' என்று அவர்களிடம் கூறப்பட்டது. ஆகவே, நபியவர்கள் வெள்ளியினாலான மோதிரம் ஒன்றைத் தயார் செய்தார்கள். அதில் 'முஹம்மது ரஸூலுல்லாஹ்' என்று பதித்தார்கள். அது மூன்று வரிகளாக இருந்தது. முஹம்மது என்று முதல் வயிலும், ரஸூல் என்று அடுத்த வயிலும், அல்லாஹ் என்று அதற்கடுத்த இவ்வாறு எழுதப்பட்டிருந்தது. (ஸஹீஹுல் புகாரி)

நபியவர்கள் இப்பணிக்காக தங்களது தோழர்களில் நன்கு அனுபவம் வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களைத் தூதுவர்களாக அரசர்களிடம் அனுப்பினார்கள். ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு, முஹர்ரம் மாதம் தொடக்கத்தில், அதாவது கைபர் தாக்குதலுக்குச் சற்று முன்பு இந்தத் தூதுவர்களை நபி (ஸல்) அனுப்பினார்கள் என பேராசிரியர் மன்சூர்பூரி (ரஹ்) திட்டவட்டமாக தெரிவிக்கிறார்.

நபியவர்கள் எழுதிய கடிதங்களின் விவரங்கள் பின்வருமாறு:

1) ஹபஷா (அபிசீனியா) மன்னர் நஜ்ஜாஷிக்குக் கடிதம்

''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ஹபஷாவின் மன்னர் 'அஸ்ஹம்' என்ற நஜ்ஜாஷிக்கு எழுதப்படும் கடிதமாகும் இது. நேர்வழியைப் பின்பற்றி அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன் அவனுக்கு இணை துணை யாருமில்லை அவன் தனக்கென எவரையும் மனைவியாகவோ அல்லது பிள்ளையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை நிச்சயமாக முஹம்மது அவனது அடிமையாகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறுவோருக்கு ஈடேற்றம் உண்டாகுக!

நான் உமக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். நிச்சயமாக நான் இஸ்லாமியத் தூதராவேன். நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்.

''வேதமுடையவர்களே! அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்க மாட்டோம். அவனுக்கு யாதொன்றையும் இணைவைக்க மாட்டோம். அல்லாஹ்வை விடுத்து நம்மில் சிலர் சிலரைக் கடவுளாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்ற நீங்களும் நாமும் ஒத்துக் கொண்ட விஷயத்திற்கு நீங்கள் வந்துவிடுங்கள். நீங்கள் இதைப் புறக்கணித்தால் நாங்கள் 'முஸ்லிம்கள்' என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருந்துவிடுங்கள்.'' (அல்குர்ஆன் 003:064)

''நீ (இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொள்ள) மறுத்துவிட்டால் உனது சமுதாயத்தில் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாத கிறிஸ்துவர்களின் குற்றமும் உம்மையே சாரும்'' (தலாயிலுந்நுபுவ்வா, முஸ்தத்ரகுல் ஹாகிம்)

நூல்: ரஹீக்

தொடர்புடைய முந்தைய பதிவு

யூத, கிறிஸ்தவர்களின் பிளவுகள்.

யூத, கிறிஸ்தவர்களின் பிளவுகள்.

நபி ஈஸா (அலை) அவர்களின் வருகைக்கு முன்னர் யூதர்கள் தமக்குள் கருத்து வேறுபாடுகள் கொண்டு பல்வேறு கூட்டங்களாகவும், கோஷ்டிகளாகவும் பிளவுண்டு போனதுதான் அவர்களுக்கிடையில் ஏற்பட்ட முதல் கருத்து வேறுபாடும் பிளவுமாகும். அவர்களின் திருத்தூதராக நபி மூஸா (அலை) அவர்களும், திருவேதமாக தவ்ராத்தும் இருந்தும் அவர்கள் மாச்சரியங்களுக்கு ஆளாகி ஸதூக்கீ, ஃபார்சீ, ஆஸீ, ஃகாலீ, சாமிரீ என ஐந்து கோஷ்டிகளாகப் பிரிந்து போனார்கள். அவர்களில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனிக் குறிக்கோளும் அடையாளங்களும் இருக்கின்றன.

ஈஸா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களின் திருத்தூதர்களில் ஒருவராகவும், அவர்களின் திருத்தூதர்கள் வரிசையில் இறுதியானவராகவும் வந்தும் அவர்கள் மீண்டும் ஒருமுறை யூத, கிறிஸ்தவர்கள் என இரண்டாகப் பிரிந்தார்கள். ஈஸா (அலை) அவர்கள் தவ்ராத் வேதத்தை மெய்ப்பிப்பதற்காகவே வந்திருந்தும் கூட இந்த நிலை! யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்குமிடையில் நிகழ்வுற்ற கருத்து வேறுபாடுகள், பிளவுகள், போட்டி, பொறாமைகள், போராட்டங்கள், உயிர் பலிகள் ஆகியவற்றை வரலாற்றில் படிக்கும் போது நம் நெஞ்சம் பதறுகிறது, உடல் நடுங்குகிறது.

கி.பி அறுநூறுகளின் ஆரம்பத்தில் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான பகைமையும் குரோதமும் உச்சகட்டத்தை அடைந்தது. இரு இனத்தாரும் ஒருவரையொருவர் வெறுக்கவும், ஒருவர் நற்பெயருக்கு மற்றவர் களங்கம் கற்பிக்கவும், மானம் மரியாதைகளைக் கடித்துக் குதறிக்கொள்ளவும் ஆரம்பித்தார்கள். மனிதாபிமானமற்ற வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. துருக்கி ரோமானியர்களின் ஆதிக்கத்தில் இருந்தபோது, கி.பி. 610ல் அதன் நகரங்களின் ஒன்றான அந்தாக்கியாவின் தலைமைத் திருச்சபைத் தலைவர் யூதர்களை கிறிஸ்தவர்களுக்கெதிராகத் தூண்டி விட்டதால் அங்கே பெரும் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை அடக்குவதற்காக ரோமானியப் பேரரசன் தனது தளபதி 'போனோஸஸ்' (Bonosus) என்பவனைப் பெரும் படையுடன் அனுப்பி வைத்தான்! போனோஸஸ் கலவரத்தை அடக்கும் சாக்கில் மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டான்! பல்லாயிரக்கணக்கானோர் வாளுக்கும், நீரில் மூழ்கடிக்கப்பட்டும், உயிருடன் கொளுத்தப்பட்டும், வன விலங்குகளுக்கு இரையாகப் போடப்பட்டும் பலியாயினர். இவ்வாறான கொடூர மதச் சண்டைகள் யூத கிறிஸ்தவர்களிடையே பல முறை நடந்திருக்கின்றன.

எகிப்தின் சிறந்த வரலாற்றுப் பேராசிரியரான 'அல் மக்ரீஜீ' (Al-Makrezy) அவர்கள் தமது அல்குத்தத் என்னும் வரலாற்று நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்,

ரோமானியப் பேரரசன் ஃபோக்காவின் காலத்தில் பாரசீக மாமன்னன் 'கிஸ்ரா' தனது படைகளை எகிப்து, சிரியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பினான். அவர்கள் 'கத்ஸ்' (Gadix) பாலஸ்தீனம், சிரியா ஆகியவற்றின் பெரும்பான்மையான நகரங்களிலிருந்த கிறிஸ்தவ தேவாலயங்களை இடித்துத் தரைமட்டமாக்கினார்கள். கிறிஸ்தவர்களை முற்றாகக் கொன்றொழித்தார்கள். கிறிஸ்தவர்களைத் தேடிக்கொண்டு எகிப்துக்கும் வந்தார்கள். அங்கு வாழ்ந்த ஏராளாமான கிறிஸ்தவர்களைக் கொன்று குவித்துவிட்டு எண்ணிலடங்காதவர்களைச் சிறைப்பிடித்துக் கொண்டும் சென்றார்கள். இத்தனை கொடுமைகளுக்கும் ஆங்காங்கே வாழ்ந்த யூதர்களே துணை நின்று காட்டிக் கொடுத்தார்கள்.

'தபரிய்யா' (Taberiade) ஜபலுல் ஜலீல், நாஸரேத் (Nazareth), சோர் (sour), கதஸ் (Gadix) போன்ற நகரங்களிலிருந்தெல்லாம் பெருந்திரளான யூதர்கள் முன் வந்து பாரசீகப் படைகளுடன் சேர்ந்து கொண்டு வன்மத்துடனும் குரோதத்துடனும் கிறிஸ்தவர்களை எவ்வளவு பேரிழப்புக்கும் சேதத்துக்கும் உள்ளாக்க முடியுமோ அவ்வளவும் செய்தார்கள். கதஸிலிருந்த இரண்டு மாபெரும் கிறிஸ்தவ தேவாலங்களைத் தகர்த்தெறிந்தார்கள். அவர்களின் வீடு வாசல்களைத் தீக்கிரையாக்கினார்கள். சிலுவைகளை உடைத்தெறிந்தார்கள். கதஸின் கத்தோலிக்கத் திருச்சபைப் பேராயரையும் அவரது நண்பர்களில் பெரும்பாலோரையும் சிறைப்பிடித்தார்கள். இத்தனை கொடுமைகளுக்கும் பின்னர் கதஸை வெற்றி கொண்டார்கள்.

இதற்கிடையில் யூதர்கள் சோர் (sour) என்ற நகரத்தில் கலவரத்தை மூட்டி விட்டார்கள். தமது இனத்தாரை பல நகரங்களுக்கும் அனுப்பி ஆங்காங்கே கலவரங்களை மூட்டி கிறிஸ்தவர்களைக் கொன்று குவிக்குமாறும், தேவாலங்களை இடித்துத் தகர்க்குமாறும் ஏவி விட்டார்கள். உள் நாட்டுக் கலவரங்கள் பெருமளவுக்கு மூண்டன. 'சோரில்' இருபதினாயிரம் யூதர்கள் ஒன்று திரண்டு நகரத்துக்குள்ளும் வெளியிடங்களிலும் கிறிஸ்தவ கோயில்களை இடித்து உடைத்தார்கள். செய்தி காட்டுத் தீ போல் பரவி கிறிஸ்தவர்கள் எண்ணிறந்தோர் திரண்டு கிளர்ந்தெழுந்து யூதர்களைச் சுற்றி வளைத்துக்கொண்டு மூர்க்கத்தனமாகத் தாக்கத் தலைப்பட்டார்கள். முடிவில் யூதர்கள் பெரும்பாலோரைக் காவு கொடுத்துவிட்டு படு மோசமான தோல்வியைத் தாங்கிக் கொண்டு ஓடிப் போனார்கள். இதற்கிடையில் ்ஹெர்குலிஸ்' என்கிற மாவீரன் பாரசீக மன்னன் கிஸ்ராவை வென்று கான்ஸ்டண்டி நோபிளில் ரோமாப் பேரரசனாக முடி சூட்டிக்கொண்டு, அங்கிருந்து பாரசீகர்களால் சீரழிக்கப்பட்ட சிரியா, எகிப்து ஆகிய நாடுகளை சீரமைப்பதற்காக திக் விஜயம் புறப்பட்டான்.

அவனது திக் விஜயத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட யூதர்கள் முந்திக் கொண்டு தபரிய்யா மற்றும் ஏனைய நகரங்களிலிருந்து புறப்பட்டுப்போய் அவனைச் சந்தித்தார்கள். மிக விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் அவனுக்குக் காணிக்கையாக்கி அவன் தமக்கு அபயம் அளிக்க வேண்டும் என்று அவனிடம் சத்தியப் பிரமாணமும் வாங்கிக் கொண்டார்கள். பின்னர் அவன் அங்கிருந்து புறப்பட்டு கதஸுக்குச் சென்றான். அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள், பைபிள்களையும், சிலுவைகளையும், நறுமணப் புகைக் கிண்ணங்களையும் கைகளில் ஏந்தியவர்களாய் அவனுக்கு முகமன் கூறி வரவேற்றார்கள். அங்கே வெறித் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டும், தேவாலயங்கள் இடிக்கப்பட்டும் அவன் கண்ட காட்சிகள் அவனை உலுக்கி விட்டன. பெரும் துயரத்துக்கும் வேதனைக்கும் ஆளானான். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட கிறிஸ்தவர்கள் ஹெர்குலிஸிடம் யூதர்கள் செய்த அக்கிரமங்களையும் அட்டூழியங்களையும் எடுத்துச் சொன்னார்கள். பாரசீகர்களால் தமக்கு நேர்ந்த துன்பங்களைவிட யூதர்களால்தான் மிகப்பெரும் துன்பங்களும் துயரங்களும் தமக்கு இழைக்கப்பட்டன என்று தமது சோகக் கதைகளை கண்ணீர் மல்க அவனிடம் எடுத்துக் கூறினார்கள்.

இந்தக் கொடுமைகளுக்காக அவன் யூதர்களைப் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று அவனைத் தூண்டி விட்டார்கள். அவனோ, தான் யூதர்களுக்கு ஏற்கெனவே அபயம் அளிப்பதாக சத்திய வாக்கு அளித்துவிட்டதாய் எவ்வளவோ கூறிப் பார்த்தான். ஆனால் அவர்களின் பாதிரிகளும் பண்டிதர்களும், பேராயர்களும், ''நடந்தது தெரியாமல் அவன் கொடுத்த வாக்கையும் சத்தியத்தையும் அவன் காப்பற்றத் தேவையில்லை'' என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள். மேலும், அவனது சத்தியத்தை அவன் முறிப்பதற்காகத் தாமும் ஏனைய கிறிஸ்தவர்களும் எப்போதும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு வெள்ளிக் கிழமையன்று நோன்பு நோற்று அதற்குப் பிராயச் சித்தம் செய்வதாக அவனுக்கு வாக்குறுதியும் அளித்தார்கள். அவனும் முடிவில் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி யூதர்களின் மீது மிகக் கொடூரமான தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டான்! ரோமாபுரிப் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட எகிப்து, சிரியா ஆகிய நாடுகளிலிருந்து தலைமறைவாகிவிட்ட அல்லத ஓடி விட்ட யூதர்களைத் தவிர வேறு யூதர்களே அங்கே இல்லை என்னும் அளவுக்கு அவர்களைக் கொன்று குவித்தான்.

இங்கு எடுத்துச் சொல்லப்பட்ட செய்திகளிலிருந்து யூத, கிறஸ்தவர்களான இந்த இருசாராரும் எவ்வளவு மூர்க்கத்தனமாக மனித இரத்தத்துடன் விளையாடும் கொடுமைக் குணம் படைத்தவர்களாயிருந்திருக்கிறார்கள் என்பதும் தத்தமது பகைவர்களைப் பழிவாங்குவதற்குத் தக்க தருணம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள் என்பதும், அதற்காக விதிமுறைகளையம் வரம்புகளையும் மீறுவதற்குத் தயாராக இருந்தார்கள் என்பதும் மிகத் தெளிவாகப் புரிகிறது.

திருக்குர்ஆனின் நிழலில் என்ற நூலிலிருந்து.

*****

திருக்குர்ஆன் 98வது - ''அல்பய்யினா'' - அத்தியாயம், தொடக்க ஐந்து வசனங்கள் யூத, கிறிஸ்தவர்களைக் குறித்துப் பேசுகிறது. தவ்ராத் வேதத்தைப் பெற்றிருந்த யூதர்கள் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் கொண்டு சில கோஷ்டிகளாக பிளவுபட்டனர் என்றும், நபி ஈஸா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களின் இறைத்தூதராக இருந்தும் யூத, கிறிஸ்தவர்கள் என மேலும் பிளவுபட்டு வன்முறையில் இறங்கி ஒருவரையெருவர் அழித்துக்கொண்டனர்.

திருக்குர்ஆன், 098:001-005 வரையுள்ள வசனங்களுக்கு விளக்கமாக மேற்கண்ட இந்த வரலாற்றுத் தகவலைக் குறிப்பிடுகிறார்கள்.

வசனங்கள்,

098:001 வேதக்காரர்களிலும், இணை வைப்பவர்களிலும் (ஏக இறைவனை) எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரம் வரும் வரை (தம் வழிகளிலிருந்து) விலகுபவர்கள் அல்லர்.

098:002 (அத் தெளிவான ஆதாரம்) அல்லாஹ்விடமிருந்து வந்த தூதர், அவர்களுக்கு பரிசுத்தமான ஆகமங்களை ஓதிக் காண்பிக்கிறார் (என்பது).

098:003 அவற்றில் நிலையான சட்டதிட்டங்கள் உள்ளன.

098:004 எனினும் வேதக்காரர்கள் அவர்களுக்குத் தெளிவான (இந்த) ஆதாரம் வந்த பின்னரேயன்றி அவர்கள் பிளவுபடவில்லை.

098:005 'அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும். மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும். மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.'

யூத, கிறிஸ்தவர்கள் கருத்து வேறுபாடு கொண்டு பிளவுபட்டார்கள் என்பது மேற்கண்ட இறைவசனத்தின் விளக்கம். கிறிஸ்தவர்களும் தம்மில் கருத்து வேறுபாடு கொண்டு பிளவுபட்டு ரோமானியப் பேரரசனின் அடக்குமுறைக்கு ஆளானார்கள் என்பது வரும் திருக்குர்ஆன் வசனங்களின் கருத்து.

*****

அடுத்து, கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் இறைத்தூதரும் இறை வேதமும் ஒன்றுதான் என்றிருந்தும் அவர்கள் தமக்கிடையே எப்படிக் கருத்து வேறுபாடுகளுக்கும் பிளவுகளுக்கும் ஆளானார்கள் என்பதைப் பார்ப்போம். முதலில் அவர்கள் கொள்கையில் தமக்கிடையே கருத்து வேறுபாடு கொண்டு பிளவுண்டு போயினர். அதன் பின்னர் ஒருவருக்கொருவர் பகைமையும் வெறுப்பும் கொண்டு, ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு பல கோஷ்டிகளாகப் பிரிந்து போனார்கள். அந்தக் கருத்து வேறுபாடுகள் அனைத்தும், இயேசு கிறிஸ்துவும் அவரது தாயார் மர்யமும் மனிதர்கள்தாமா? அல்லது தெய்வங்களா? என்பது பற்றியும் அவர்கள் நினைத்துக்கொண்டிருப்பதைப் போலக் கடவுளும் ஒருவராகச் சேர்ந்த ''மும்மைக் கடவுள் தத்துவம்'' (Trinity) பற்றியுமே இருந்தன. திருக்குர்ஆன் அவர்களின் அந்தக் கருத்து வேறுபாடுகள் குறித்துப் பின்வருமாறு எடுத்துக் காட்டுகிறது.

005:072. ''நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்'' என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிடடார்கள்;. ஆனால் மஸீஹ் கூறினார்; ''இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்'' என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.

005:073. நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்;. ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்.

5:116. இன்னும், ''மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?'' என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், ''நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்'' என்று அவர் கூறுவார்.



இந்த மதக் கருத்து வேறுபாடுகள் முற்றி உச்சக்கட்டத்தையடைந்து ரோமாபுரி, சிரியா ஆகியவற்றைச் சார்ந்த கிறிஸ்தவர்கள் மோனோபிஸிட்ஸ் (Monophysites - இயேசு கிறிஸ்துவின் திருமேனியில் தெய்வீகம் என்ற ஓரியல்பு மட்டுமே இருக்கிறது என்கிற கோட்பாட்டாளர்)களாகவும், எகிப்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் 'மால்க்கிட்ஸ்' (Malkites - இயேசு கிறிஸ்துவின் திருமேனியில் மனிதத்துவமும், தெய்வீகமும் கலந்திருக்கின்றன என்கிற கோட்பாட்டாளர்)களாகவும் பிளவுண்டு போனார்கள். மோனோபிஸிட்ஸ்கள் இயேசுவின் மனிதத்துவம் என்னும் ஒரு துளிப் பால் கடவுளின் தெய்வீகம் என்கிற பெருங்கடலில் சங்கமமாகி இரண்டறக் கலந்து இப்போது அவரில் தெய்வீகம் மட்டுமே உள்ளது என்று வாதித்தார்கள்.

கி.பி. அறுநூறு எழுநூறுகளில் இந்த மோதல் முற்றி இரண்டு போட்டி மதங்களிக்கிடையே நடக்கும் மூர்க்கத்தனமான போரைப் போன்றும், யூத, கிறிஸ்தவர்களுக்கிடையில் நடந்து வந்த முரட்டுத்தனமான சண்டையைப் போன்றும் மாறியது. கிறிஸ்தவர்களின் இரு பிரிவினராகிய ஒவ்வொருவரும் மற்றவர்களை அவர்கள் ஒன்றுமேயில்லை என்று கூறிக்கொண்டு தாக்கிக் கொள்ளத் தலைப்பட்டார்கள்.

இந்த மதச் சண்டைகளைக் கண்டுமனம் வெதும்பிய - ரோமாபுரியை கி.பி. 610லிருந்து 641 வரை ஆண்ட - ரோமானியப் பேரரசன் ஹெர்குலிஸ் கி.பி. 638ல் பாரசீகத்தை வெற்றி கொண்டதும், ஒருவருக்கொருவர் அடித்துப் பிடித்துக் கொண்டிருந்த கிறிஸ்தவ மதப் பண்டிதர்களை அழைத்து அவர்களுக்குள் ஒரு சமாதானத்தை ஏற்படுத்தினான். அந்தச் சமாதான உடன்படிக்கையானது, இனிமேல் நம்மில் யாரும் இயேசுகிறிஸ்துவின் இயல்பு பற்றி, அவர் மனிதரா? தெய்வமா? அல்லது இரண்டுமா? என்கிற சர்ச்சைகளில் ஈடுபடுவதில்லை என்றும், எல்லாம் வல்ல கடவுள் ஒருவனுக்கு மட்டுமே ஆக்கவும் அழிக்கவும் தீர்மானிக்கும் அதிகாரம் உண்டு என நம்மில் ஒவ்வொருவரும் நம்ப வேண்டும் என்றும் நிறைவேறியது.

ஏற்கெனவே கி.பி. 631ல் ஹெர்குலிஸ் தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் மோனோத்திஸம் (Monotheism - ஒரு கடவுட் கோட்பாடு) என்கிற இந்த கோட்பாட்டை அமல்படுத்தியிருந்தான்! தனது ரோமாப் பேரரசின் ஆட்சிக்குட்பட்ட எல்லா கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அந்தக் கொள்கையே கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவும் போட்டிருந்தான்! அந்தப் புதிய மதக் கோட்பாட்டை கருத்து வேறுபாடுகளுக்குள்ளான ஏனைய எல்லாப் பகுதி கிறிஸ்தவர்களையம் பின்பற்றச் செய்து விடவேண்டும் என்கிற உறுதியுடன் அவன் எவ்வளவோ பிரயத்தனப்பட்டான்! எல்லா வழிகளையும் மேற்கொண்டு பார்த்தான்! ஆயினும் எகிப்தைச் செர்ந்த பாதிரிகள் அவனது இந்தப் புதிய மதக் கோட்பாட்டுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். தமக்கும், அவனது அந்தக் கோட்பாட்டுக்கும் எந்த ஒட்டுறவும் இல்லை என்று கூறி விலகிக் கொண்டார்கள். தமது பழைய மதக் கோட்பாட்டில் உறுதியாக நின்றதுடன் அதற்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருந்தார்கள்.

இறைவன் ஒருவனுக்கு மட்டுமே ஒன்றைத் தீர்மானிக்கும் ஆற்றல் உண்டு என்கிற, தனது புதிய மதக் கோட்பாட்டின் கீழ் கிறிஸ்தவர்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்திடவும், அவர்களுக்கிடையிலுள்ள கருத்து வேறுபாடுகளைக் களைந்திடவும் மீண்டும் ஒரு முறை மன்னன் ஹெர்குலிஸ் பாடுபட்டான்! தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கடவுளுக்குத் தந்த அவனது புதிய மதக் கோட்பாடு அதைச் செயல்படுத்தும் அதிகாரம் யாருக்கு உண்டு என்பதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை! மக்கள் அவனது சித்தாந்தங்களை ஏற்பதற்குத் தயாராயில்லை! அவனும் அதற்காக அவர்களை விட்டுவிடத் தயாராயில்லை! தனது புதிய மதக் கோட்பாட்டையே அரசு அங்கீகாரம் பெற்ற சட்டமாக்கி, மேற்கத்திய நாடுகள் அனைத்தும்க்கும் அதனைக் கொண்டு சென்று பார்த்தான்! யாரும் அதற்கு மசிவதாயில்லை! முரட்டுத்தனமான பிடிவாதத்திலிருந்த எகிப்தியர்களையோ அது எந்த விதத்திலும் திருப்திப்படுத்துவதாக அமையவில்லை!

முடிவில், ஹெர்குலிஸ் பத்து ஆண்டுகள் தொடர்ந்து அடக்குமுறை அட்டூழியங்களை கட்டவிழ்த்து விட்டான்! அந்தப் பத்தாண்டு காலத்தில் எகிப்தில் நடைபெற்ற இனப் படுகொலைகளையும், சித்திரவதைகளையும் படிக்கும்போதே நமது நெஞ்சு பதறுகிறது! மேனி நடுங்குகிறது! அந்தப் பத்தாண்டு காலத்தில் மக்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்! சித்திரவதை முகாம்களில் சித்திரவதை செய்யப்பட்டுச் சாகடிக்கப்பட்டார்கள்! தீப்பந்தங்கள் கொளுத்தப்பட்டு அவை அந்த துரதிஷ்டசாலிகளின் உடல்களை நோக்கிப் பிடிக்கப்பட்டன! அந்தப் பந்தங்கள் கக்கிய தீச்சுவாலையின் வெம்மையில் அவர்களின் உடலிலுள்ள கொழுப்பு உருகி இருபுறங்களிலும் வழிந்தோடியது. சிறைக் கைதிகள் சிலர் மணல் நிரம்பிய சாக்கு மூட்டைகளுக்குள் வைத்துத் தைக்கப்பட்டு கடலில் வீசி எறியப்பட்டார்கள்! இன்னோரன்ன கொடுமைகளும் சித்திரவதைகளும் அங்கே கட்டவிழ்த்து விடப்பட்டன!

இத்தனை கொடுமைகளும் கருத்து வேறுபாடுகளும் அந்த வேதக்காரர்களுக்குத் தெளிவான சான்று வந்திருந்தும் நிகழ்வுற்றன.

நூல்: திருக்குர்ஆனின் நிழலில்

*****
இங்கு, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் கருத்து வேறுபாடுகள் கொண்டு பிளவுபடவில்லையா? வன்முறையில் இறங்கவில்லையா? என்ற கேள்வியெழலாம். அதை மறுக்கவோ அல்லது முந்தைய மதங்களில் தான் கருத்து வேறுபாடுகள் கொண்டு பிளவுபட்டார்கள, வன்முறையில் ஈடுபட்டார்கள் என்பதை நிறுவவோ இந்த வரலாற்றுக் குறிப்புகளை இங்கு நாம் எழுதவில்லை.

மாறாக, ஒரு நாட்டை ஆளும் அரசனின் ஆட்சியோடு அந்நாட்டின் இறையான்மையாகிய இறை மார்க்கமும் சம்பந்தப்பட்டிருப்பதால் ஓர் அரசன் நேர்வழி பெற்று, நேர்வழிக்கு வரும்படி குடிமக்களையும் அழைத்திட வேண்டும். (அதில் அடக்கு முறைகள் கூடாது. மார்க்க அழைப்பில் அடக்கு முறையை இஸ்லாம் ஆதரிக்கவில்லை)

''அரசன் எவ்வழியோ குடிமக்களும் அவ்வழியே'' என தமிழில் ஒரு முதுமொழி உண்டு. மார்க்க விஷயத்தில் குடிமக்களின் குற்றமும் அரசனைச் சாரும் என்று இஸ்லாம் கூறுகிறது. இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அரசர்களுக்குக் கடிதம் மூலம் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுத்தார்கள். அதில் அவர்கள் முக்கியமாகக் குறிப்பட்டு எழுதிய வாசகம் இதுதான்,

''நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. அல்லாஹ் உங்களுக்கு இருமுறை நற்கூலி வழங்குவான். ''நீங்கள் புறக்கணித்து விட்டால் கிப்தி இனத்தவர்களின் குற்றமும் உங்களையே சாரும்.''

நபி (ஸல்) அவர்கள் பல அரசர்களுக்கு கடிதம் எழுதி இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுத்தார்கள். அதில் ஓமன் நாட்டு அரசருக்கு எழுதிய ஒரு கடிதத்தைச் சுட்டிக் காண்பித்து இதுதான் ''இஸ்லாம் அமைதி மார்க்கமா?'' என இஸ்லாத்தை விமர்சிக்கும் சில பிற மத நண்பர்கள் முஸ்லிம்களை நோக்கி பல கேள்விகள் வைத்துள்ளனர். அவர்கள் பிரமாண்டமாகக் காட்டிக்கொள்ளும் அளவிற்கு அக்கடிதத்தில் ஒன்றுமில்லை எனறாலும், ''எவன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன?'' என்றிருப்பதுதான் இவர்களைப் பொருத்தவரை அமைதி மார்க்கத்தின் அளவுகோலாக இருக்கிறது.

அநீதிகள், அக்கிரமங்கள் இழைக்கப்பட்டு, அமைதி இல்லாத இடத்திலும், அநீதியை ஒடுக்குவதன் மூலமும் இஸ்லாம் அமைதியை ஏற்படுத்தும். இதையும் ''இஸ்லாம் அமைதி மார்க்கம்'' என்றும் சொல்லலாம்.

தொடர்ந்து, அண்டை நாட்டு அரசர்களுக்கு நபியவர்கள் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுத்து எழுதிய கடிதங்களைப் பார்ப்போம். (இறைவன் நாடட்டும்)

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை