Wednesday, July 09, 2008

படைத்தவனை மறந்த...

இஸ்லாமியர்களின் வீழ்ச்சியால் இந்தப் பாருலகு அடைந்த நஷ்டமென்ன?
என்கிற தமது சிறந்த நூலில் குறிப்பிடும் சில கருத்துக்களை இங்கே எடுத்தாள்வதே போதும் என நாம் எண்ணுகிறோம். ஏனெனில் அது நமது கருத்தை மிகச் சுருக்கமாகவும் அதே நேரத்தில் மிகத் தெளிவாகவும் புரிய வைத்து விடுகின்றது.

அப்புத்தகத்தின் முதல் பாடத்தின் முதல் பிரிவில் காணப்படுகின்றது,

''கி.பி. ஆறாம் நூற்றாண்டும் ஏழாம் நூற்றாண்டும் வரலாற்றில் மிக மோசமான இருண்ட காலமாக இருந்தது என்பதில் வராலாற்றுப் பேராசியர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இல்லை! பல நூற்றாண்டுகளாகவே மனித இனம் மிகக் கீழ்தரத்திற்கும் ஒழுக்க வீழ்ச்சிக்கும் ஆளாகிப் போயிருந்தது. வீழ்ந்து மடிந்துவிடத் தயாராக நின்ற அதன் கையைப் பற்றித் தடுத்து நிறுத்தும் எந்த சக்தியும் இந்த மண்ணகம் முழுவதும் இல்லாது போய் விட்டிருந்தது. அது ஒழுக்க வீழ்ச்சிகளிலும் கீழ்மைத்தனங்களிலும் சிக்குண்டு சீரழிந்து கொண்டிருந்த நிலையில் காலச்சக்கரம் வேகமாகச் சுழன்றோடிக் கொண்டிருந்தது.

அந்த நூற்றாண்டுகளில் மனிதன் தன்னைப் படைத்தவனை மறந்து விட்டிருந்தான்! தன்னையும் தனது குறிக்கோளையும் மறந்து விட்டிருந்தான்! தனது நேர்மையையும், நன்மை தீமை, நல்லவை அல்லவையைப் பகுத்தறியும் திறனையும் இழந்து விட்டு அலைந்தான்! அதற்குச் சிறிது காலத்திற்கு முன்பிருந்தே இறைத்தூதர்களின் போதனைகள் மறைந்து விட்டிருந்தன. அவர்கள் ஏற்றிவிட்டுச் சென்றிருந்த தீபங்கள் அவர்களுக்குப் பின்னர் வீசிய அநாகரிக, ஒழுக்க வீழ்ச்சிப் புயல்களால் அணைந்து விட்டிருந்தன. அல்லது அவற்றின் ஒளி குன்றிப்போய் பலவீனமாக அணைப் போகும் நிலையில் சில உள்ளங்களில் மாத்திரம் மினிக்கிக் கொண்டிருந்தன. அந்த ஒளி, வீடுகளையும் நாடுகளையும் பிரகாசிக்கச் செய்யப் போதுமானதாக இருக்கவில்லை என்பதைச் சொல்லத் தேவையில்லை!

மார்க்க மேதைகளும் பண்டிதர்களும், தமது மார்க்கத்திற்கும் தமக்கும் தீங்குகள் எதுவும் நேரிட்டு விடலாம், அப்போதைய சீரழிவுகளில் தாமும் சிக்கிக் கொண்டு விடலாம் என அஞ்சியவர்களாய் வாழ்க்கைக் களத்தை விட்டு விலகி ஓடி மடாயலங்களிலும், தனிமையான இடங்களிலும் தஞ்சம் புகுந்தனர். சிலர் அமைதி நிம்மதி ஆகியவற்றைத் தேடியும், சிலர் வாழ்க்கைப் போராட்டங்களுக்கு ஈடு கொடுக்க அஞ்சியும், சிலர் மதப் போராட்டங்களை எதிர்கொள்ளப் பயந்தும், சிலர் ஆன்மீகத்துக்கும் உலகாதாயத்துக்கும் நடந்த இழுபறிப் போரில் ஈடுபட விரும்பாமலும் இப்படி ஆளுக்கு ஆள் மனித நடமாட்டமில்லாத இடங்களை நோக்கி ஓடத் தலைப்பட்டனர். அந்த வெள்ளப் பிரளயத்தில் அடித்துச் செல்லபடாமல் எஞ்சி நின்ற சிலரும் ஆள வந்தவர்கள், அரசவைப் பிரமுகர்களின் அடிவருடிக்கொண்டு அவர்களின் அக்கிரமங்களுக்கும் அநியாயங்களுக்கும் துணை நின்றார்கள். தவறான வழியில் மக்களின் செல்வங்களைச் சுரண்டி உண்டு கொழுத்தார்கள்.

வாழையடி வாழையாக வந்திருந்த மிகச் சிறந்த அறநெறிகளும் பண்பாடுகளும் எத்தர்களுக்கும் சமூக விரோதிகளுக்கும் பலியாகி விட்டிருந்தன! அவை வஞ்சகர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் விளையாட்டுப் பொருட்களாகி விட்டிருந்தன! அவற்றின் உண்மையான வடிவங்களும் ஜீவனும் அவற்றை உருவாக்கி விட்டுப் போனவர்களே இப்போது திரும்பி வந்தாலும் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு சிதைக்கப்பட்டிருந்தன! அரசியல், சமூக, கலை கலாச்சாரத்தின் தொட்டில்களாய்த் திகழ்ந்தவை குழப்பம், சீரழிவு, சிக்கல், நிர்வாகச் சீர்கேடு ஆட்சியாளர்களின் ஆணவம், சுயநலம் ஆகியவற்றின் கூடாரங்களாய்த் திகழ்ந்தன!

இந்த உலகத்தில் முன்னர் சமர்ப்பிப்பதற்கேற்ற சமூகப் பிரக்ஞையுடன் கூடிய சிறந்த திட்டங்களோ, மனித சமுதாயத்திற்கு அழைப்பு விடக் கூடிய அளவுக்கு உருப்படியான செய்திகளோ இல்லாத சுயநலம் பிடித்த ஒரு சமுதாய அமைப்பே அங்கே நிலவியது. தனது உயர் பண்பாடுகளையும் சிறப்புகளையும் இழந்து விட்டு, வாழ்க்கை ஊற்றே வற்றிப்போன வரண்ட சமூக அமைப்புத்தான் அங்கே காணப்பட்டது. மனிதச் சட்டங்களின் அடிப்படையில் அமைந்த நிலையான ஆட்சியும் அங்கே இருக்கவில்லை! வானுலக வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைந்த தூய்மையான வாழ்க்கை நெறியும் அங்கே காணப்படவில்லை!''

சுருக்கமும் வேகமும் நிறைந்த இந்த விளக்கம் அண்ணல் முஹம்மது (ஸல்) அவர்களின் வருகைக்கு முந்தைய கால கட்டத்தில் மனிதனின் நிலையும் அவனது பண்பாடுகளும் எவ்வாறு நிலைகுலைந்து போயிருந்தன என்பதை மேலோட்டமாக நமக்குச் சித்தரித்துக் காட்டிவிடுகின்றது. இணை வைப்பாளர்களையும், வேதக்காரர்களையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த ஏகத்துவ மறுப்புக் காட்சிகள் சிலவற்றை திருக்குர்ஆனும் பல இடங்களில் படம்பிடித்துக் காட்டுகிறது.

உதாரணமாக: அப்போதைய யூத, கிறிஸ்தவர்களைப் பற்றி,

009:030. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள். கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்.

002:113. 'கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று யூதர்கள் கூறுகிறார்கள். 'யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்.

திருக்குர்ஆனின் நிழலில் என்ற நூலிலிருந்து.

*****
சமூக சீர்திருத்தம் மிக அவசியமான ஒரு கால கட்டத்தில், முந்தைய நபிமார்களின் தடத்தில் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய அழைப்புப் பிரச்சாரத்தைத் துவக்கினார்கள். பிரச்சாரப் பணிக்கு பேச்சாற்றல் அவசியமாக இருப்பது போல், எழுத்து வடிவிலும் இஸ்லாமிய பிரச்சாரம் செய்வது மாற்றங்களை ஏற்படுத்தும், ஏற்படுத்தின.
நபி (ஸல்) அவர்கள் அண்டை நாட்டு அரசர்களுக்கும் ஆளுனர்களுக்கும் எழுத்து மூலமாக விடுத்த இஸ்லாமிய அழைப்புக் கடிதங்கள் சிலவற்றை முந்தைய பதிவுகளில் கண்டோம். அதன் மீதான பிற மத நண்பர்களின் விமர்சனங்களையும் அடுத்துப் பார்போம்.

தொடர்புடைய முந்தைய பதிவு,

ஓமன் நாட்டு அரசனுக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-8

No comments: