அரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் கடிதம் எழுதுதல்
நபி (ஸல்) அவர்கள் உடன்படிக்கையை முடித்து ஹுதைபிய்யாவிலிருந்து திரும்பிய பின் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டின் இறுதியில் பல அரசர்களுக்குக் கடிதம் எழுதி இஸ்லாமின் பக்கம் அவர்களை அழைத்தார்கள்.
நபியவர்கள் அரசர்களுக்குக் கடிதம் எழுத முற்பட்டபோது ''முத்திரை இல்லாத கடிதங்களை அரசர்கள் படிக்க மாட்டார்கள்'' என்று அவர்களிடம் கூறப்பட்டது. ஆகவே, நபியவர்கள் வெள்ளியினாலான மோதிரம் ஒன்றைத் தயார் செய்தார்கள். அதில் 'முஹம்மது ரஸூலுல்லாஹ்' என்று பதித்தார்கள். அது மூன்று வரிகளாக இருந்தது. முஹம்மது என்று முதல் வயிலும், ரஸூல் என்று அடுத்த வயிலும், அல்லாஹ் என்று அதற்கடுத்த இவ்வாறு எழுதப்பட்டிருந்தது. (ஸஹீஹுல் புகாரி)
நபியவர்கள் இப்பணிக்காக தங்களது தோழர்களில் நன்கு அனுபவம் வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களைத் தூதுவர்களாக அரசர்களிடம் அனுப்பினார்கள். ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு, முஹர்ரம் மாதம் தொடக்கத்தில், அதாவது கைபர் தாக்குதலுக்குச் சற்று முன்பு இந்தத் தூதுவர்களை நபி (ஸல்) அனுப்பினார்கள் என பேராசிரியர் மன்சூர்பூரி (ரஹ்) திட்டவட்டமாக தெரிவிக்கிறார்.
நபியவர்கள் எழுதிய கடிதங்களின் விவரங்கள் பின்வருமாறு:
1) ஹபஷா (அபிசீனியா) மன்னர் நஜ்ஜாஷிக்குக் கடிதம்
''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ஹபஷாவின் மன்னர் 'அஸ்ஹம்' என்ற நஜ்ஜாஷிக்கு எழுதப்படும் கடிதமாகும் இது. நேர்வழியைப் பின்பற்றி அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன் அவனுக்கு இணை துணை யாருமில்லை அவன் தனக்கென எவரையும் மனைவியாகவோ அல்லது பிள்ளையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை நிச்சயமாக முஹம்மது அவனது அடிமையாகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறுவோருக்கு ஈடேற்றம் உண்டாகுக!
நான் உமக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். நிச்சயமாக நான் இஸ்லாமியத் தூதராவேன். நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்.
''வேதமுடையவர்களே! அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்க மாட்டோம். அவனுக்கு யாதொன்றையும் இணைவைக்க மாட்டோம். அல்லாஹ்வை விடுத்து நம்மில் சிலர் சிலரைக் கடவுளாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்ற நீங்களும் நாமும் ஒத்துக் கொண்ட விஷயத்திற்கு நீங்கள் வந்துவிடுங்கள். நீங்கள் இதைப் புறக்கணித்தால் நாங்கள் 'முஸ்லிம்கள்' என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருந்துவிடுங்கள்.'' (அல்குர்ஆன் 003:064)
''நீ (இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொள்ள) மறுத்துவிட்டால் உனது சமுதாயத்தில் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாத கிறிஸ்துவர்களின் குற்றமும் உம்மையே சாரும்'' (தலாயிலுந்நுபுவ்வா, முஸ்தத்ரகுல் ஹாகிம்)
நூல்: ரஹீக்
தொடர்புடைய முந்தைய பதிவு
யூத, கிறிஸ்தவர்களின் பிளவுகள்.
No comments:
Post a Comment