இவர்கள் எங்கிருந்து இவ்வாறு புரிந்து கொண்டார்கள்! அதனால் கீழ்கண்டவாறு விமர்சனத்தை எழுப்புகிறார்கள்.
11. காபிர்களின் (Non-Islam) சட்டத்தோடு, இஸ்லாம் சட்டம் சம்மந்தம் கலந்தது எப்படி?
பொதுவாக, இஸ்லாமியர்களின் ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை என்னவென்றால், உலகத்தில் உள்ள அனைத்து அரசியல் சாசன மற்றும் இதர சட்டங்களை விட இஸ்லாமிய சட்டமே மேலானது, இதில் மட்டுமே மனிதர்களை நல்வழிப்படுத்தும் சட்டங்கள் உண்டு.
ஆனால், எப்போதெல்லாம், இஸ்லாமின் ஒரு சில கொடுமையான சட்டத்தை நியாயப்படுத்த இஸ்லாமிய அறிஞர்கள் விரும்புவார்களோ, அப்போதெல்லாம், தயக்கமே இல்லாமல் "காபிர்களின்" சட்டத்தை மேற்கோள் காட்டவோ அதைப்பற்றி பேசவோ தயங்க மாட்டார்கள். அது மட்டுமல்ல, இஸ்லாமிய சட்டத்தோடு சம்மந்தம் இல்லாத காபிர் சட்டத்தை ஒப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு ஒப்பிடுதலைத் தான் --- அவர்கள் செய்துள்ளார்கள்.
தேசத் துரோகம்
அதாவது, இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்துவதும், இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்கு விற்பதும் தேசத் துரோகம். என்ற சட்டம் காஃபிர்களால் இயற்றப்பட்டது. அதனால் முஸ்லிம்கள் இதை உதாரணம் காட்டிப் பேசுவது சந்தர்ப்பவாதம் என்று இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்கள் சொல்கின்றனர். இவர்களின் வாதம் தவறானது. இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்தக்கூடாது, இராணுவ இரகசியங்களை எதிரிகளுக்குத் தெரிவிக்கக்கூடாது என மறைமுகமாக அல்ல, நேரடியாகவே இஸ்லாமும் கண்டிக்கிறது. இதைப் பார்ப்பதற்கு முன்,
உலகில் எல்லா நாடுகளும் தன் நாட்டின் தகுதிக்கேற்றவாறு இராணுவம் வைத்திருக்கும். இதற்கு முஸ்லிம் நாடுகள், காஃபிர் நாடுகள் என்ற விதிவிலக்கு எதுவுமில்லை. எதிரி நாட்டுடன் சண்டையிட நேர்ந்தால் நட்பு நாட்டின் இராணுவ உதவியை நாடுவதுண்டு. இதற்கும் காஃபிர் நாடுகள், முஸ்லிம் நாடுகள் என்ற வேற்றுமை இல்லை!
இராணுவத்தில் பணியாற்றும் ஒரு சாதாரண போராளியும், வெளிப்படுத்தக்கூடாத இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்தினால் அது தேசத்துக்கே ஊறு விளைவிக்கும் தேசத் துரோகம் என்பதில் எந்த நாட்டின் இராணுவச் சட்டத்திலும் மாற்றுக் கருத்து இல்லை. அது காஃபிர் நாடாகவோ, முஸ்லிம் நாடாகவோ இருந்தாலும் சரியே, இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்துவது தேசத் துரோகம் என்றே இஸ்லாமும் கூறுகிறது.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் இஸ்லாமிய ஆட்சியை அமைத்தார்கள். அந்த ஆட்சியில் இராணுவம் இருந்தது. முஸ்லிம், காஃபிர், என இரு எதிரி இராணுவத்திலும் உளவு பார்க்கும் ஒற்றர்கள் இருந்தார்கள். முஸ்லிம் ஒற்றர் காஃபிர்களிடம் சிக்கிக் கொல்லப்பட்டிருக்கிறார். காஃபிர் ஒற்றர் முஸ்லிம்களிடம் சிக்கிக் கொல்லப்பட்டிருக்கிறார்.
நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 8ம் ஆண்டு மக்காவைக் கைப்பற்றுவதற்காக இராணுவப் படையுடன் மதீனாவிலிருந்து மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் இந்தப் போருக்கான ஏற்பாடுகளை இரகசிமாக மேற்கொண்டு வந்தார்கள். இந்தப் படையெடுப்பு மக்கத்துக் குரைஷியற்கு தெரிந்து விடக்கூடாது என்பது நபியவர்களின் எண்ணமாக இருந்தது.
ஆனால், நபித்தோழர் ஹாத்திப் (ரலி) அவர்கள் இந்தப் படையெடுப்பு இரகசியத்தை குரைஷியற்குத் தெரிவிப்பதற்காக கடிதம் எழுதி ஒரு பெண்மணி மூலமாக மக்காவுக்கு அனுப்பி வைக்கிறார். இறைவன் வஹீ மூலமாக இச்சம்பவங்களை நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்தான். உடனடி நடவடிக்கையாக கடிதம் கொண்டு செல்லும் பெண்மணி வழியில் மடக்கப்பட்டுக் கடிதம் கைப்பற்றப்படுகிறது.
கடிதத்தில் உள்ள விபரங்கள் அறிந்து ''ஹாத்திபே என்ன இது'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்கிறார்கள். அதற்கு ''அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குரைஷியரில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாகவே இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களுடைய வீட்டாரையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கின்றார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால் (இணைவைப்பவர்களான) மக்காவாசிகளுக்கு நான் உபகாரம் எதையாவது செய்து அதற்கு பிரதியுபகாரமாக அவர்கள் அங்குள்ள என் (பலவீனமான) உறவினர்களைக் காப்பாற்றட்டும் என்று விரும்பினேன். (இணைவைப்பவர்கள் கேட்டுக்கொண்டதால் இந்தத் தகவலைத் தெரிவித்தேன்) நான் என் மார்க்கத்தை விட்டு வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை'' என்று ஹாத்திப் (ரலி) கூறினார்.
இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் ''இவர் உங்களிடம் உண்மை பேசினார்'' என்று கூறினார்கள்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள் இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகிறேன்'' என்றார்.
(நபிமொழியின் சுருக்கம். முழு விபரங்கள் அறிய பார்க்க தமிழ் புகாரி, ஹதீஸ் எண்கள்: 3007, 3081, 3983, 4274)
நபித்தோழர் ஹாத்திப் (ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்து கொண்டவராவார். இஸ்லாமிய ஆட்சியின் போர் நடவடிக்கையை எதிரி நாட்டுக்கு தெரிவித்தது பெரும் குற்றம் என்றாலும் அவருடைய உள்ளத்தில் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. மக்காவிலிருக்கும் தனது உறவினர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியதால், மதீனாவிலிருந்து புறப்படவிருக்கும் முஸ்லிம்களின் போர்ப்படையைப் பற்றியத் தகவலை மக்காவிலிருக்கும் முஸ்லிம்களின் எதிரிகளுக்குத் தெரியப்படுத்துகிறார்.
ஹாத்திப் (ரலி) அவர்கள் சொன்னது உண்மை - ''இவர் உங்களிடம் உண்மை பேசினார்'' - என்று நபி (ஸல்) அவர்கள் அங்கீகரிக்கிறார்கள்.
''எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாயிருப்பவர்களை நீங்கள் அன்பு செலுத்தும் உற்ற நண்பர்களாக்கிக்கொள்ளாதீர்கள்'' (திருக்குர்ஆன், 060:001)
மேற்கண்ட இறைவசனம் ஹாத்திப் (ரலி) அவர்களின் தொடர்பாக அருளப்பட்டது. (பார்க்க: புகாரி ஹதீஸ் எண் 4890) இஸ்லாமிய ஆட்சி மேற்கொள்ளும் போர் நடவடிக்கைப் பற்றிய இராணுவ இரகசியங்களைச் சொல்லுமளவுக்கு எதிரிகளை உற்ற நண்பர்களாக்கிக்கொள்ள வேண்டாம் என இறைவசனம் கட்டளையிடுகிறது.
மேலும், இராணுவச் சட்டங்கள் காஃபிர்கள் இயற்றியது என்று தவறாக வாதமெழுப்பும் பிற மத நண்பர்களின் கவனத்திற்கு, இராணுவ இரகசியங்களை எதிரிகளுக்குத் தெரியப்படுத்துவது தேசத் துரோகம் மட்டுமல்ல, இஸ்லாமிய ஆட்சியின் இராணுவப் போர் நடவடிக்கைகளை எதிரிகளுக்குத் தெரியப்படுத்துபவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி வேறு மதத்தைத் தழுவி விட்டாரோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்திவிடும் என்பதை ஹாத்திப் (ரலி) அவர்களின் வாக்கு மூலத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
''நான் என் மார்க்கத்தை விட்டு வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை'' என்று ஹாத்திப் (ரலி) கூறினார்.
எனவே, இஸ்லாமிய ஆட்சி என்று அறிவித்துக்கொண்ட முஸ்லிம் நாடுகளிலும் இராணுவம் உண்டு. அந்த இராணுவத்திற்கும் இஸ்லாமிய சட்டத் திட்டங்களைக் கடைபிடிக்கும் விதிகள் உண்டு. அதனால் காஃபிர்களின் சட்டத்தோடு இஸ்லாமிய சட்டம் கலந்ததாகச் சொல்வது வெறும் கற்பனை.
(தேசத் துரோகம் என்பதற்கு வேறு சில அளவுகோலையும் வைத்துள்ளனர் அவற்றையும் அடுத்துப் பார்ப்போம்)
நன்றி!
அன்புடன்,
அபூ முஹை
மதம் மாறினால் மரண தண்டனை-1
மதம் மாறினால் மரண தண்டனை-2
No comments:
Post a Comment