திருக்குர்ஆனில் சில வசனத்தை மாற்றினால் அதற்குப் பகரமாக சிறந்த வேறு வசனத்தையோ அல்லது அதற்கு நிகரான வசனத்தையோ நாம் கொண்டு வருவோம் என இறைவன் கூறுகின்றான். முன்னர் அறிவித்த சட்டத்தை பின்னாளில் இறைவன் மாற்றியிருக்கின்றான் என்பதே இதன் கருத்து. அதாவது, இறைவன் அருளிய ஒரு சட்டத்தை முதல் நிலையிலிருந்து வேறொரு நிலைக்கு அவசியம் கருதி இறைவனே மாற்றியமைக்கின்றான்.
முன்பு அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யவும், தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கவும் இவ்வாறுச் சட்டங்களை மாற்றும் வசனத்தையே ''நாம் ஒரு வசனத்தை மாற்றினால்'' என்று குறிப்பிடப்படுகிறது. இறைவன் அனைத்தையும் அறிந்தவன் என்றால் ஏன் இப்படி அடிக்கடி சட்டங்களை மாற்ற வேண்டும்? இது இறைவனின் தன்மைக்கு பங்கம் விளைவிக்காதா? என்றக் கேள்வி இங்கு நியாயமாகத் தோன்றினாலும், ஒரு சட்டம் இயற்றும் போது இச்சட்டம் பின்னாளில் மாற்றப்படும் என்பதையும் இறைவன் அறிந்திருப்பான். சூழ்நிலைக்குத் தக்கவாறு சட்டங்களை இயற்றுவதும் - மாற்றுவதும் இறைவனின் ஞானத்தில் எவ்வித களங்கத்தையும் ஏற்படுத்திவிடாது.
முதல் மனிதரும், முதல் நபியுமான ஆதம், ஹவ்வா தம்பதியரின் பிள்ளைகளுக்கு, உடன் பிறந்த சகோதரன், சகோதரியை மணமுடிக்க இறைவன் அனுமதித்தான். இங்கு சகோதரன் சகோதரியை மணக்க அனுமதிக்கவில்லையெனில் மனித இனம் அத்தோடு முடிந்திருக்கும். அதனால் அனுமதித்து, பின்னர் மனித இனம் பெருகியதும் உடன் பிறந்த சகோதரன், சகோதரியை மணந்து கொள்வதைத் தடை செய்து விட்டான். இவ்வாறு சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒரு சட்டத்தை அனுமதிப்பதும், தடை செய்வதும் இறைவனின் தனித்தன்மைக்கு எதிரானதல்ல.
தகவல் சம்பந்தப்பட்ட கடந்த கால வரலாற்று நிகழ்ச்சிகளைக் கூறும் வசனங்களில் முன்னர் அறிவித்ததற்கு மாற்றமாக பின்னர் அறிவித்தால் அது முரண்பாடுடையதாக இருக்கும். கடந்த கால நிகழ்ச்சிகளை மாற்றுவதாக 002:106வது வசனத்தின் பொருள் இல்லை. எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களை மாற்றுவதாகவும் பொருள் இல்லை. நீ இதைச் செய்தால் பரிசு தருவேன், இதைச் செய்தால் தண்டிப்பேன் என்ற வாக்குறுதியிலும் மாற்றம் செய்வதாகவும், விஞ்ஞான ரீதியான வசனங்களில் முதலில் ஒன்றைக் கூறிய பின் அதை மாற்றுவதாகவும் இவ்வசனத்தின் கருத்து இல்லை.
நடைமுறையிலிருக்கும் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது பற்றியே இவ்வசனம் பேசுகிறது. ஆரம்பத்தில் தொழுகையின் முன்னோக்கும் திசையாக பைத்துல் முகத்தஸ் இருந்தது. பின்னர் காபாவை நோக்கித் தொழும்படி சட்டம் மாற்றப்பட்டது.
அறப்போரில் சகிப்புத்தன்மையுடைய இருபது பேருக்கு இருநூறு பேரென எதிரிகளைச் சந்திக்க வேண்டும் (008:065) என்ற சட்டம் இருந்து, பின்னர் சகிப்புத்தன்மையுடைய நூறு பேர்களிலிருந்தால் எதிரிகளில் இருநூறு பேர்களை வெல்ல முடியும் (008:065) என மாற்றப்பட்டது.
சட்டம் இயற்றுவதும், இயற்றிய சட்டத்தை மாற்றுவதும் இறைவனின் தனியதிகாரத்துக்குட்பட்டது. ''அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?'' என்று அறிவிக்கின்றான் மேலும்,
''ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால் நீர் இட்டுக் கட்டுபவர் என்று என்று கூறுகின்றனர். எதை அருள வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன். மாறாக அதிகமானோர் அறியமாட்டார்கள்'' (திருக்குர்ஆன், 016:101)
*****
திருக்குர்ஆன் 002:106வது வசனத்திற்கு மேற்கூறப்பட்டவை பொதுவான விளக்கமாகும். இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்கள் இதில் மாற்றுக் கருத்துக்கொள்ளவில்லை. ஆனால், அவர்களின் விமர்சனம் வேறு கோணத்தில் இருக்கிறது.
அல்ஜப்பார்!? என்பவரின் கேள்விக்கு பிற மத நண்பர்களின் விளக்கம்,
Quote:
1) குர்-ஆன் 2:256ம் வசனம் "இஸ்லாமில் கட்டாயமில்லை" என்றுச் சொல்கிறது, இது எனக்கு தெரியுமா? என்று கேட்டீர்கள்.
2) இரண்டாவதாக, குர்-ஆனிலோ, ஹதீஸ்களிலோ "இஸ்லாமை விட்டு வேறு மதத்திற்கு மாறுபவர்களைக் கொல்லூங்கள்" என்ற வசனம் எங்கே உள்ளது எனக்கு தெரிவியுங்கள் என்று கேள்வி கேட்டுள்ளீர்கள்.
உங்களின் இந்த இரண்டு விவரங்கள் பற்றிய என் விளக்கத்தை இங்கு தருகிறேன்.
1) குர்-ஆன் 2:256ம் வசனம் (இஸ்லாமில் கட்டாயமில்லை), இரத்து செய்யப்பட்ட(து)தா?
இந்த வசனம்(2:256) குர்-ஆனில் இருப்பது எனக்குத் தெரியும், அதே நேரத்தில், இந்த வசனம் இரத்துசெய்யப்பட்டது என்று சில இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கிறார்கள்.
எப்போதெல்லாம், இஸ்லாமியர்கள் "இஸ்லாம் ஒரு அமைதி மதம் என்று" காட்ட விரும்புவீர்களோ அப்போது நீங்கள் மேற்கோள் காட்டும் வசனம் இதுவாகத்தான் பெரும்பான்மையாக இருக்கும்.
இவ்வசனம் இரத்துசெய்யப்பட்டதா? இதோ சில விவரங்கள்:
1) பொதுவாக இரத்துசெய்வது பற்றிய குர்ஆன் வசனம்:
Quote:
குர்-ஆன் 2:106
ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?
அல்லா தன் வசனத்தை சில நேரங்களில் மாற்றுவார், அதற்கு பதிலாக வேறு வசனத்தை இறக்குவார் என்றுச் சொல்கிறார்.[1]
2) குர்-ஆன் வசனங்கள் 9:73, 9:123, 48:16 போன்றவைகள், குர்-ஆன் 2:256ஐ இரத்து செய்கின்றன:
சில இஸ்லாமிய அறிஞர்கள், கீழ்கண்ட வசனங்கள், 2:256ம் வசனத்தை இரத்து செய்துவிட்டது என்றுச் சொல்கிறார்கள்.
Quote:
(9:73) நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் அறப்போர் செய்வீராக மேலும் அவர்களை கண்டிப்பாக நடத்துவீராக (மறுமையில்) .............
(9:123) நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் (தொல்லை விளைவிக்கும்) காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் .............
(48:16) பின் தங்கிவிட்ட நாட்டுப்புறத்து அரபிகளிடம்; "நீங்கள் சீக்கரத்தில் மிக்க பலசாலிகளான ஒரு சமூகத்தாரிடம் (அவர்களை எதிர்த்துப் போரிட) அழைக்கப்படுவீர்கள், அவர்களுடன் நீங்கள் போரிட வேண்டும்; அல்லது அவர்கள் முற்றிலும் பணிய வேண்டும்,...........
[2]
Source: http://www.answering-islam.org/Hahn/mappe.html
பிற மத நண்பர்கள், இங்கு எழுதியக் கருத்துகளை தாம் சொல்வது போலவும், முஸ்லிம் அறிஞர்கள் சொல்வது போலவும் ஓர் இரண்டாங்கெட்டான் தோரணையில் எழுதியுள்ளனர். பின்னர் எதிர் கருத்தைச் சந்திக்க முடியவில்லையெனில் ''நாங்கள் சொல்லவில்லை முஸ்லிம் அறிஞர்கள் சொன்னார்கள்'' என்று நழுவுவதற்கான சந்தர்ப்பத்தையும் திறமையாக ஏற்படுத்தியுள்ளனர்.
தமதுக் கருத்துக்கு வலுச்சேர்க்க எந்த இணையத்திலிருந்து ஆதாரங்களைத் திரட்டுகிறார்களோ, அந்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இவர்கள் விவாதிக்கும் போது அடுத்தவர்களின் கருத்தும் இவர்களின் கருத்தாகக்கொள்ளப்படும் என்பது பொதுவான விதி! இந்த விதியை பிற மத நண்பர்கள் அறிந்திருந்திருப்பார்கள் என்றே நம்புவோம்.
''இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. வழிகேட்டை நிராகரித்து, அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக்கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன், அறிந்தவன்'' (திருக்குர்ஆன், 002:256)
இந்த வசனம் ''இஸ்லாத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை - கட்டாயம் இல்லை'' என்ற ஒரு கருத்தை மட்டும் சொல்லவில்லை. ''இது வழிகேடு'' என்றும் ''இது நேர்வழி'' என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வழிகேட்டிலிருப்பதும், நேர்வழிக்குத் திரும்புவதும் அவரவர் விருப்பத்திற்குட்பட்டது. இதில் எதை வேண்டுமானாலும் ஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இஸ்லாம் அவரை நிர்ப்பந்திக்காது - கட்டாயப்படுத்தாது - வற்புறுத்தாது.
வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகியபின் ஒருவரை வற்புறுத்தி இஸ்லாத்திற்கு அழைக்க வேண்டிய அவசியமில்லை.
வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகியபின் இஸ்லாத்திலிருந்து வெளியேறுபவரையும் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்ற கருத்தையும் உள்ளடக்கியுள்ளது.
இது உண்மையாக இருந்தும் உம்முடைய சமுதாயத்தார் இதை ஏற்க மறுக்கின்றனர். ''நான் உங்களுக்குப் பொறுப்பாளன் அல்ல'' என்று கூறுவீராக! (திருக்குர்ஆன், 006:066)
''இந்த உண்மை உங்கள் இறைவனிடமிருந்து வந்ததாகும். எனவே விரும்பியவர் நம்பட்டும். விரும்பியவர் மறுக்கட்டும்'' (திருக்குர்ஆன், 018:029)
(இஸ்லாத்தை நம்பிக்கை கொண்ட பின்னும் மறுப்பவர் என்ற கருத்திலுள்ள மேலும் சில வசனங்கள் மதம் மாறினால் மரண தண்டனை பகுதியில் இடம்பெறும்)
இறைச் செய்திகளை அறிவிப்பது மட்டும் தான் இறைத்தூதரின் கடமை. அதைச் செவியுற்று கீழ்படிவதும், மறுப்பதும் அவரவரின் சுதந்திரம். இறைவனிடமிருந்து அருளப்பட்டதை விரும்பியவர் நம்பலாம், விரும்பியவர் மறுக்கலாம் எனவும் மத சுதந்திரம் வழங்கிய மார்க்கம் இஸ்லாம்.
இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் இல்லை என்ற 002:256வது வசனம் இரத்தாகி விட்டது என்று சொல்பவர்கள். ''வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாக்கப்படவில்லை'' எனக் கூற வருகின்றனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
002:256 வசனம் அருளப்பட்ட வரலாறு
(அறியாமை காலத்தில்) ஒரு பெண்ணுக்குப் பல குழந்தை பிறந்து இறந்து விடின், அவள் அடுத்த குழந்தை உயிரோடு வாழ்ந்தால் அதை யூத மதத்தில் சேர்த்து விடுவேன் என்று தன் மீது கடமையாக்கிக் கொள்வாள். (அதன்படி பலர் இஸ்லாத்திற்கு வந்த பின்பும் யூதர்களிடம் இருந்து வந்தனர்) பனூ நளீர் எனும் யூதக் கூட்டத்தார் வெளியேற்றப்பட்ட போது அவர்களில் அன்சாரிகளுடைய பிள்ளைகளும் இருந்தனர். அவர்களுடைய பெற்றோர்கள் நாங்கள் எங்களுடைய பிள்ளைகளை (யூத மதத்தில்) விடமாட்டோம் என்று கூறினார்கள். அப்போது இவ்வசனம் அருளப்பட்டது. (அபூதாவூத்)
மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்பதை ''இஸ்லாத்திற்கு வர யாரையும் நிர்ப்பந்திக்கக்கூடாது'' என்று விளங்க வேண்டும் என மேற்கண்ட நபிமொழியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்பது எங்கெல்லாம் நிர்ப்பந்திக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நிர்ப்பந்தம் கூடாது என்று பொருள் கொள்வதே திருக்குர்ஆனை விளங்கியதாகும். இன்னும் மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்ற வசனம் இரத்து செய்யப்பட்டது எனக் கூறி அதற்குச் சான்றாக போர் சம்பந்தப்பட்ட வசனங்களை எடுத்து வைக்கிறார்கள்.
அதாவது இணைவைப்பவர்களுடன் போர் செய்து, அவர்களை ''இஸ்லாத்தில் இணைய நிர்ப்பந்தப்படுத்துங்கள்'' என்று சொல்வது போல், போர் செய்யுமாறு அருளப்பட்ட வசனங்கள் ''இஸ்லாத்தில் கட்டாயமில்லை'' என்ற வசனத்தை மாற்றி விட்டது என்று சொல்கிறார்கள்.
திருக்குர்ஆனில் ஒரு வசனம் மாற்றப்பட்டது அல்லது இரத்து செய்யப்பட்டது என்று இருக்குமானால் அது இறைவனோ, இறைத்தூதரோ சொல்லியிருக்க வேண்டும். என்பதை பிற மத நண்பர்கள் புரிந்து கொள்ளட்டும்.
2) குர்-ஆன் வசனங்கள் 9:73, 9:123, 48:16 போன்றவைகள், குர்-ஆன் 2:256ஐ இரத்து செய்கின்றன:
பிற மத நண்பர்கள் ஆதாரமாக வைக்கும், போர் சம்பந்தமாக இறக்கப்பட்ட மேற்கண்ட வசனங்களைப் பற்றி அடுத்துப் பார்ப்போம்.
நன்றி!
அன்புடன்,
அபூ முஹை