Monday, December 02, 2013

தியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது?

ஐயம்:

தியாகப் பெருநாளின் முக்கியத்துவம் பற்றி பேசும்பொழுது "ஒரு பக்தனின் பக்தியை சோதிக்க அவனுடைய பிஞ்சுக்குழந்தையை பலியிடுமாறு அளவற்ற அருளாளனும் நிகரற்ற கருணையாளனுமான உங்கள் அல்லாஹ் கட்டளையிடுகிறானே.... இவ்வளவு ஈவு இரக்கமற்ற கடவுள் தேவையா?

அல்லாஹ்வின் பெயரால் ஆட்டை அறுத்து சாப்பிட்டுவிட்டால் பெரிய தியாகமாகி விடுமா?" என்று எனது பிராமின் நண்பர் கேட்கிறார். தயவு செய்து விளக்கம் தரவும். நன்றி. - சாணக்கியன்.

தெளிவு:

இணை தெய்வங்களுக்கு நரபலி கொடுப்பது எல்லாக் காலத்திலும் நிகழ்ந்திருக்கின்றன. இன்றும் நரபலி பற்றிய நிகழ்வுகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்தேறி வருவதாக ஊடகத் செய்திகளில் வாசிக்கிறோம். இறுதி வேதம் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்திலும் நரபலிகள் கொடுக்கப்பட்டன. நரபலியைக் கண்டித்து அருளப்பட்ட வசனம்:

"இவ்வாறே இணைவைப்போரில் அதிகமானோருக்கு, தமது குழந்தைகளைக் கொலை செய்வதை (நன்மை போல்) அவர்களது இணை தெய்வங்கள் அலங்கரித்துக் காட்டின. இது அவர்களை அழிவுக்குட்படுத்துவதற்கும் அவர்களுடைய மார்க்கத்தை அவர்களுக்குக் குழப்புவதற்குமேயாகும்..." (அல்குர்ஆன் 006:137).

"அறிவில்லாமல் மடத்தனமாகத் தமது குழந்தைகளைக் கொலை செய்தவர்களும்..." (அல்குர்ஆன் 006:140)

அரபியர்கள் ஏக இறைவனின் மீது நம்பிக்கை கொண்டிருந்தாலும், எவர் தயவும் தேவையற்ற இறைவன் தன்னைப் பற்றிக் குர்ஆனில் எவ்வாறு குறிப்பிடுகின்றானோ, அந்தப் பொருளில் இறைவனை அவர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை! எவ்வாறு அவனை வணங்கிட வேண்டுமோ அவ்வாறு வணங்காதவர்களாகவும், இறைவனை எவ்வாறு கண்ணியப்படுத்த வேண்டுமோ அவ்வாறு கண்ணியப்படுத்தாதவர்களாகவும் இருந்ததோடு, இறைவனுக்கு இணைகற்பிக்கும் பல தெய்வ வழிபாடுகளையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. ஏக இறைவனை நம்புகிறோம் என்று சொல்லிக்கொண்டு, அவர்களின் சமயச் சடங்குகள், மத ஆச்சாரங்கள், சித்தாந்தங்கள் அனைத்திலும் ஷைத்தானின் அடிச் சுவடுகளைப் பின்பற்றி வந்தனர்.

அரபியர்களின் பல தெய்வக் கொள்கையைப் பற்றிக் குர்ஆனில் பல வசனங்கள் அறிவிக்கின்றன. இணை தெய்வங்கள் மீது அவர்கள் கொண்டிருந்த பக்தியானது, அவர்களின் ஆண் குழந்தைகளை அவற்றிற்காக நரபலி கொடுத்திடவும் அவர்களைத் தூண்டியது. அவர்களின் இந்தச் சீர்கேடுகளையும், குழப்பங்களையும் பற்றித்தான் குர்ஆன் ஆறாவது அத்தியாயத்தின் 136-140 வசனங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இஸ்லாம் நரபலியை ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை. மாறாக, நரபலியைக் கொலை என்றே உறுதிப்படுத்துகின்றது.

தியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது?

இது நல்ல கேள்வி, தியாகத் திருநாள் என்று சொல்லி, அனுமதிக்கப்பட்டப் பலிப் பிராணிகளை இறைவனின் பெயரால் அறுத்து, அதன் இறைச்சியை சமைத்துச் சாப்பிட்டுவிட்டால் அது தியாகம் ஆகிவிடுமா? இதில் எங்கே தியாகம் இருக்கிறது? என்கிற கேள்வி நியாயமாக இருந்தாலும், ஹஜ்ஜுப் பெருநாளுக்கு, ''தியாகத் திருநாள்'' எனும் பெயர் ஏன் நிலைப்பெற்றது? என்பதை அறிய இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் இது தொடர்பாக நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் படித்தால் தெளிவு பெறலாம்!

"என் இறைவா! நல்லெழுக்கமான குழந்தையை எனக்குத் தந்தருள்வாயாக! (என்று பிரார்த்தனை செய்தார்). எனவே, சகிப்புத் தன்மை மிக்க ஒரு மகன் குறித்து அவருக்கு நாம் நற்செய்தி கூறினோம்" (அல்குர்ஆன் 037:100-101)

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தொடர் பிரார்த்தனையின் விளைவாக அவரின் சந்ததியாக ஒரு மகன் பிறந்தார். அவரது பெயர் இஸ்மாயீல்.

இஸ்மாயீல் வளர்ந்து தந்தையுடன் இணைந்து செயற்படும் பருவத்தை அடைந்தபோது, "என்னருமை மகனே! உன்னை நான் அறுப்பதாக நிச்சயமாகக் கனவில் கண்டேன். உனது அபிப்பிராயம் என்ன?'' எனக் கேட்டார். அ(தற்க)வர், "'என்னருமைத் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதை நீங்கள் செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ், சகித்துக் கொள்ப(வர்களுள் ஒரு)வனாக என்னைக் காண்பீர்கள்" என்று கூறினார்.

அவ்விருவரும் (அல்லாஹ்வுக்குக்) கட்டுப்பட்டனர். இன்னும் அவர் (தம் மகனாகிய) இவரை முகம் குப்புற நிலத்தில் கிடத்தியபோது,

"யா இப்ராஹீம்! நிச்சயமாக நீர் கனவை உண்மைப்படுத்தி விட்டீர்'' என நாம் அவரை அழைத்தோம். நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம். நிச்சயமாக இது ஒரு தெளிவான சோதனையேயாகும். அவருக்குப் பகரமாக, மகத்தான பலிப் பிராணியை ஆக்கினோம். பின்வருவோரில் அவர்மீது
(புகழ்) நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது சாந்தி உண்டாகட்டும். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி வழங்குவோம்
(அல்குர்ஆன் 037:102-110).

நபிமார்களின் கனவு இறைச் செய்திகளின் முன்னறிவிப்பாகும். அக்கனவு நிறைவேறும் அல்லது நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற ரீதியில், மகனை அறுப்பதாக நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கண்ட கனவு இறைவனின் கட்டளை என அதைச் செயல்படுத்திட தந்தையும், மகனாரும் முன்வருகின்றனர். நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு நீண்ட காலம் குழந்தையில்லாமல் இருந்து, பின்னர் குழந்தை பிறந்தது. (மகன் இஸ்மாயீலை அறுக்க முயன்ற நிகழ்வுக்குப் பின்னரே நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த மகனாரின் பெயர் இஸ்ஹாக் 037:112).

ஒற்றைக்கு ஒற்றையான இஸ்மாயீல் என்ற அந்த ஒரு மகனைத் தம் கையாலேயே அறுக்க தந்தை ஆயத்தமாகிறார். அருமை மகனை இழக்க நேரிடுமே என்கிற தயக்கம் ஏதுமின்றி இறைக்கட்டளையே முக்கியம் எனச் செயல்பட முன்வந்த ஒரு தந்தையின் இந்தத் தியாகத்துக்கு ஈடாக எந்தச் செயலையும் குறிப்பிட்டுச் சொல்லிட இயலாது.

இது ஒருபுறமிருக்க:

''இறைவன் உங்களுக்குக் கட்டளையிட்டதை நிறைவேற்றுங்கள்'' என்று தந்தையிடம் மகன் கூறி, 'இறைக் கட்டளைக்கு மிஞ்சியது எதுவுமில்லை' என உயிர் துறக்க முன்வரும் மகனார் இஸ்மாயீலின் உயிர்த்தியாகமோ ஈடு இணையற்றது என்று சொல்லுமளவுக்கு உயர்ந்த தியாகமல்லவோ!

இறை அன்பர் என இறைவனால் போற்றப்பட்ட, வாய்மை தவறாத நபி இப்ராஹீம் (அலை) என்கிற நல்லடியாருக்கும், தியாக உள்ளம் படைத்தவரும் சகிப்புத் தன்மை மிக்கவருமான மகனார் இஸ்மாயீலுக்கும் வைக்கப்பட்ட சோதனையாகும் என்றே இறைமறை வசனம் குறிப்பிடுகின்றது. இறைக் கட்டளைக்கு முன்னால் ஈடு செய்ய இயலாத உயிரிழப்பும் துச்சமென மதித்து செயலில் இறங்கிய இரு நல்லடியார்களின் தியாகச் செயல்கள் இடையில் தடுக்கப்பட்டு, அந்த இடத்தில் ''பெரும் பலியாக'' பலிப் பிராணியை தியாக மகன் இஸ்மாயீலுக்குப் பகரமாக்கினான் இறைவன்.

நபி இஸ்மாயீல் (அலை) அவர்களைச் சிறப்பிக்கும் வண்ணம் இரு வசனங்களை இறைவன் தன் வேதத்தில் அருளிப் பதித்தான்:

"(நபியே) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நீர் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார். மேலும், அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார்.

மேலும், அவர் தமது குடும்பத்தாருக்குத் தொழுகையையும் ஸகாத்தையும் ஏவக்கூடியவராக இருந்தார். இன்னும் அவர் தன் இறைவனிடம் பொருந்திக் கொள்ளப்பட்டவராகவும் இருந்தார்"
(அல்குர்ஆன் 005:054-055).

இம்மாபெரும் சம்பவத்தின் தியாக வரலாறு மறுமை நாள்வரை நம்பிக்கையாளர்களின் உள்ளத்தில் பசுமையாக நிலைத்திருக்க வேண்டும் என இத்தியாக தினத்தை இஸ்லாமிய மரபாக ஆக்கினான் இறைவன். உலகம் முழுவதும் உள்ள நம்பிக்கையாளர் அனைவரும் அந்நாளில் அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அறுத்து பலியிட்டு அதன் இறைச்சியை தாமும் புசித்து மற்றவருக்கும் உண்ணக் கொடுப்பார்கள்.

அவ்வாறு செய்வதால் ஒவ்வொரு முஸ்லிமும் தியாகம் செய்வதாகவும் பொருளில்லை! மாறாக, படைத்தவனுக்கு அவனின் படைப்புகள் எப்படி கட்டுப்பட வேண்டுமென்பதை நினைவுறுத்தும் விதமாக செயற்கரிய மகத்தான தியாகத்தைச் செய்த இரு நல்லடியார்களின் தியாகங்கள் பிராணிகளின் பலியின் மூலம் எடுத்து சொல்லப்படுகிறது! தியாகத் திருநாள் என்பதன் மூலம் வேண்டுவதும் அதுவே!

மற்றபடி இத்தியாக நாளில் எந்த முஸ்லிமும் தியாகம் செய்திட வேண்டும் என்கிற பொருள் ''தியாகப் பெருநாளில்'' இல்லை! தியாகம் செய்வதற்கென ஒரு தினத்தை இறைவன் நிர்ணயிக்கவில்லை. எந்த நாளும் எந்த நேரமும் இறைவழியில் தியாகம் செய்திட வேண்டும் என்பதே மேற்காணும் நிகழ்விலிருந்து முஸ்லிம்கள் பெறும் படிப்பினையாகும்!

(இறைவன் மிக்க அறிந்தவன்)

நன்றி: சத்தியமார்க்கம்.காம்
             

Saturday, November 30, 2013

உருவப்படம் வரைதல் - ஓர்ஆய்வு

அறிவியல், நவீன கண்டுபிடிப்புகள், நவீன கருவிகள் இவற்றுக்கு இஸ்லாம் எதிரானதல்ல. ஒவ்வொரு நவீன கருவியும் அறிமுகமான தொடக்கத்தில் மார்க்கத்தின் மீதான அளவிலா பற்றின் காரணம் அவற்றை இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்த்துத் தடை செய்து வந்தனர். பின்னர் படிப்படியாக அனுமதித்து நடைமுறைப்படுத்தலாம் என தீர்ப்பு வழங்கினார்கள்.

''குர்ஆன் மொழி பெயர்ப்பை தமிழில் தருவது ஹராம்'' என்று தீர்ப்பு வழங்கினார்கள். இன்று குர்ஆனுக்குத் தமிழ் மொழி பெயர்ப்புகள் பல வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை மார்க்க அறிஞர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஒலி பெருக்கி அறிமுகமான காலத்தில் அது "ஷைத்தானின் கருவி. ஷைத்தானின் கருவியைப் பயன்படுத்துவது ஹராம்" என்று அறிஞர்கள் தீர்ப்பு வழங்கினார்கள். அதனால் தொழுகைப் பள்ளிகளில் ஒலி பெருக்கி
அமைப்பதற்குத் தடையாக இருந்தது. பின்னர் துணிச்சலுடன் சில அறிஞர்களும் பள்ளி நிர்வாகிகளும் முன்வந்து பள்ளிகளில் ஒலி பெருக்கி அமைத்தார்கள். இன்று ஒலிபெருக்கி வழியாக அறிஞர்கள் மார்க்கப் பிரச்சாரம் செய்கின்றனர்.

தொலைக்காட்சிப் பெட்டி - டிவி அறிமுகமான அந்தக் காலத்தில் "டிவியில் உருவங்கள் வருகின்றன. எனவே, ஷைத்தான் பொட்டியான டிவி ஹராமானது" என்று தீர்ப்பு வழங்கினார்கள். இந்தக் காலத்தில் அறிஞர்கள் டிவியில் தோன்றி மார்க்கப் பிரச்சாரம் செய்கின்றனர். இவ்வாறு நவீன கருவிகளுக்கெல்லாம் துவக்கத்தில் எதிர்ப்பும் அவை நடைமுறைக்கு வந்த பின்னர் அவற்றிலுள்ள நன்மைகளைக் கண்டு, படு உற்சாகத்துடன் அறிஞர்கள் அதில் பங்காற்றுவதைப் பார்க்கிறோம்.

அந்த வகையில், "உருவப்படம் வரைவது ஹராம்" என்று முன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று விளம்பர சுவரொட்டிகளில் தம் உருவப்படம் வரவில்லை என்றால் ஹராம் என்று சொல்லுமளவுக்கு பத்திரிக்கை, நோட்டீஸ், சுவரொட்டி, கம்ப்யூட்டர், டிவிடிக்கள், இணைய தளங்கள் என அறிஞர்களின் உருவங்கள் பதிவு செய்யப் படுகின்றன. கல்விப் பாடங்கள், அறிவியல் கல்வி, சமூக அவலங்கள் என பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்ட பயனுள்ளவைகளை தொலைக்காட்சியில் கண்டு மக்கள் அறிவை வளர்த்துக் கொள்கின்றனர். ஒரு டி.வி.டி யில் லட்சக் கணக்கான உருவப்படங்கள் பதிவு செய்யப் படுகின்றன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

உருவப்படம் ஹராம் என்று சொல்பவர்களாலும் உருவப்படங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க இயலாது என்று சொல்லுமளவுக்கு இன்று உருவப்படங்கள் கட்டாயத் தேவை என்ற காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, 'இஸ்லாம் உருவப்படம் வரைதலைத் தடைசெய்துள்ளது' என்பதை எவ்வாறு விளங்க வேண்டும் என்பதில்
அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

ஓரிறைவனை வணங்குவது இஸ்லாமின் அடிப்படைக் கொள்கை. எல்லா இறைத்தூதர்களும் ஓரிறைக் கொள்கையின் அடிப்படையில் வாழ்க்கை நெறியினைப் போதித்தனர். ஒரு சமூகத்துக்கு அனுப்பப்பட்ட நபியின் மறைவுக்குப்பின், அச்சமுதாயத்தினர் மன ஆசைக்கு உட்பட்டு, தான்தோன்றித்தனமாக வாழ்க்கையை அமைத்து, "இதைத்தான்
அல்லாஹ் எங்களுக்கு ஏவினான்" என்றும் வாய் கூசாமல் இறைவனின் மீது இட்டுக்கட்டிப் பொய்யுரைத்தனர். 

அவர்கள் ஏதேனும் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்துவிட்டால், ''எங்கள் மூதாதையர்களை இதன் மீதிருக்கவேக் கண்டோம். அல்லாஹ்வும் இதையே எங்களுக்கு ஏவினான்'' என்றும் கூறுகின்றனர். அல்லாஹ் மானக்கேடானவற்றை ஏவமாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (இட்டுக் கட்டிக்) கூறுகின்றீர்களா? என்று (நபியே) நீர் கேட்பீராக! (அல்குர்ஆன் 007:028)

மனக்கேடான காரியங்களைச் செய்வதற்கு மட்டுமல்லாமல், இறைவனுக்கு இணை தெய்வங்களை ஏற்படுத்தி அவற்றை வணங்குவதற்கும் முன்னோர்களை ஆதாரம் காட்டி நியாயப்படுத்தினர்.

...எங்கள் மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களை விட்டுவிட்டு அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எம்மிடம் வந்துள்ளீர்?...என்று கூறினர். (அல்குர்ஆன் 007:070) ...எமது மூதாதையர்கள் வணங்கியதை நாம் வணங்குவதை விட்டும் எம்மைத் தடுக்கின்றீரா?...என்று கூறினர். (அல்குர்ஆன் 011:062)

இஸ்லாத்தின் மீளெழுச்சியின்போது ஓரிறைக் கொள்கையை எதிர்த்தவர்கள், 'எம் மூதாதையர்களை எந்த வழியில் கண்டோமோ அந்த வழியை நாங்களும் பின்பற்றுவோம்' என்று கொள்கையளவில் பல தெய்வக் கொள்கையை நம்பிக் கொண்டிருந்தனர். உருவச் சிலைகளை வணங்கி வழிபாடு நடத்தி, எங்கள் முன்னோர்களை இப்படித்தான் கண்டோம், நாங்களும் அவர்களையேப் பின்பற்றுவோம் என்றும் கூறிவந்தனர். இக்கருத்தைக் குர்ஆன் நெடுகிலும் பல வசனங்களில் காணலாம்.
உருவச் சிலைகள், உருவப் படங்கள் இவை இறைவனுக்கு இணைகற்பித்தல் எனும் மாபெரும் பாவத்தைச் செய்திடத் தூண்டுதலாக அமைந்துள்ளன. தந்தை தெய்வமாக வணங்கிய உருவத்தை மகன் வணங்கி வழிபடுவது இயல்பு. இவ்வாறு தலைமுறை தலைமுறையாக உருவச்சிலைகள், உருவப்படங்கள் தொடர்ந்து வணங்கி வழிபாடு நடத்தப்பட்டு வந்தன. இறைவனுக்கு இணைவைக்கும் கொடிய பாவத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க உருவச் சிலைகள் செய்வதும், விற்பதும்,  உருவப்படங்கள் வரைதலும், விற்பதும் குற்றமெனத் தடைவிதித்து கடுமையாக எச்சரித்துள்ளது இஸ்லாம்!

கப்ரு - மண்ணறையை வணங்குதல்.

நபி(ஸல்) அவர்கள் மரண வேளை நெருங்கியபோது தங்களின் போர்வையைத் தங்களின் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும்போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது 'தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூத, கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்" எனக் கூறி அவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள். (அறிவிப்பாளர்கள்: ஆயிஷா (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி 0435-0437, முஸ்லிம் 0921, நஸயீ 2047, அபூதாவூத் 3227, அஹ்மத்)

ஓர் இறைவனை வணங்கும்படி ஓரிறைக் கொள்கையின் பக்கம் அழைத்த நபிமார்களையும் யூத, கிறிஸ்தவர்கள் விட்டு வைக்கவில்லை. இறைவனிடமிருந்து செய்திகளைப் பெற்று மக்களுக்கு அறவுரைகளைப் போதிக்க நியமிக்கப்பட்ட நபிமார்கள் மரணித்து விட்டால், அவர்களின் அடக்கத்தலத்தில் ஆலயம் எழுப்பி வணக்கத்தலமாக்கி நபிமார்களின் மண்ணறைகளை வணங்கி வழிபாடு செய்தனர்.

உம்மு ஹபீபா(ரலி)வும் உம்மு ஸலமா(ரலி)வும் தாங்கள் அபிசீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற
(கிறிஸ்தவ) கோவிலைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கஸ்தலத்தின் மேல் வணக்கஸ்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர்" என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 0427, 0434, 1341, 3873, முஸ்லிம் 0918, நஸயீ 0704, அஹ்மத் 23731)

சமகாலத்தில் மக்களுடன் சேர்ந்து வாழ்ந்த நல்ல மனிதர் மரணமடைந்தால் அவரை அடக்கம் செய்து அவருடைய சமாதி மீது வணக்கத் தலத்தை நிறுவி, அதில் அவருடைய உருவப்படங்களைப் பொறித்துவிடுவார்கள். சமாதி, உருவ வழிபாடுகள் இப்படித் துவங்கி, பின்னாளில் சமாதிகளும் உருவங்களும் தெய்வங்களாக வழிபட்டுக் கொண்டாடப் படுகின்றன.

எடுத்துக் காட்டாக: கிறிஸ்தவ ஆலயங்களில் இறைத்தூதர் இயேசு அவர்களின் உருவச் சிலைகளும் உருவப்படங்களும் பதிக்கப்பட்டிருக்கும். அத்துடன் இயேசுவின் அன்னை மரியாவின் உருவச் சிலைகளும்
உருவப்படங்களும் பதிக்கப்பட்டு, அன்னையும், மகனாரும் வணங்கப்படுவதைப் பார்க்கிறோம் - இயேசு, மரியா உருவ ஓவியங்கள் கிருஸ்தவர்களின் வீட்டில் வைத்து கடவுளாக வணங்கி             ஆராதிக்கப்படுகின்றன - இச்செயலுக்கு முஸ்லிம்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல "தமிழகத்து தர்ஹாக்களைப் பார்த்து வருவோம்" என நல்லவர்கள் அடக்கம் செய்யப்பட்ட சமாதிகளின் மீது தர்ஹாக்களை எழுப்பி சமாதி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

        
தர்ஹாக்களின் ஓவியங்கள் வீட்டில் வைத்து தீப ஆராதனையாக ஊதுவத்தி கொளுத்தி வைத்து வணங்கி ஆராதிக்கப்படுகின்றன - உருவ வழிபாடு கூடாது என இஸ்லாம் தடை விதித்திருப்பதால் தர்ஹாக்களில் உருவங்கள் பொறிக்கப்படவில்லை. மாறாக, சமாதியில் அடக்கம் செய்யப்பட்டவர் வணங்கப்படுகிறார். (தர்ஹாவின் சமாதி        
வழிபாடும், இறைவனுக்கு இணைகற்பிக்கும் செயலாகும் என்பது தனி விஷயம்)

உருவ வழிபாடுகளை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை! சமாதி வழிபாடு, உருவ வழிபாடு இவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்திடவேண்டும் என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.

''மண்ணறைகள் (கப்ருகள்) மீது அமராதீர்கள், அவற்றை நோக்கித் தொழாதீர்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூமர்ஸத் கன்னாஸ் (ரலி) நூல்கள்: முஸ்லிம் 1768, திர்மிதீ 0971, நஸயீ 0760, அபூதாவூத் 3229, அஹ்மத்)

நாங்கள் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களுடன் ரோம் நாட்டிலுள்ள ரோடிஸ் தீவில் இருந்தோம். அங்கு எங்கள் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். அப்போது ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள், அவரது கப்ரைத் தரை மட்டமாக அமைக்கும்படி உத்தரவிட்டார்கள். ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்ரைத் தரை மட்டமாக்கும்படி உத்தரவிட்டதை நான் கேட்டுள்ளேன்'' என்று சொன்னார்கள். (அறிவிப்பாளர்: ஸுமாமா பின் ஷுஃபை (ரஹ்) நூல்கள்: முஸ்லிம் 1763, நஸயீ 2030, அபூதாவூத் 3219, அஹ்மத்)

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர், (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!" என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) நூல்கள்: முஸ்லிம் 1764, திர்மிதீ 0970, நஸயீ 2031, அபூதாவூத் 3218, அஹ்மத்)

இறைவனுக்கு இணைவைக்கும் செயற்பாடுகளை இறைவன் மன்னிக்கவே மாட்டான (அல்குர்ஆன் 004:116) என அறுதியிட்டுக் கூறியிருப்பதால், உருவ வழிபாடு இணைவைக்கும் செயல், அதனால் இஸ்லாம் உருவங்கள் வரைவதை, செதுக்குவதைத் தடைசெய்திருக்கின்றது.
உருவப் படங்கள் வரைவதைத் தடைசெய்வதுத் தொடர்பான நம் அறிவுக்கெட்டிய சில அறிவிப்புகளைப் பார்த்து விடலாம். 

முதல் வகை ஹதீஸ்கள்.

1) நான் இப்னு அப்பாஸ் (ரலி) உடன் இருந்தபோது ஒருவர் வந்து, 'அப்பாஸின் தந்தையே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் உருவங்களை வரைகிறேன்' எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), 'நபி(ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். 'யாரேனும் ஓர் உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அவர் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது" என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்' என்றார். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சுவிட்டார். அவரின் முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), 'உமக்குக் கேடு உண்டாகட்டும்! நீர் உருவம் வரைந்துதான் தீர வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவற்றை வரைவீராக!' என்றார். (அறிவிப்பாளர்: ஸயீது இப்னு அபில் ஹஸன் (ரஹ்) நூல்கள்: புகாரி 2225, 5963, முஸ்லிம் 4290, 4291, திர்மிதீ 1751, நஸயீ 5359, அபூதாவூத் 5024, அஹ்மத்)

2) நான் சிறியமெத்தை ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதில் உருவப் படங்கள் வரையப்பட்டிருந்தன. (வீட்டுக்கு வந்த) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கண்டதும் வாசற்படியிலேயே நின்றுவிட்டார்கள், உள்ளே வரவில்லை. அவர்களின் முகத்தில் அதிருப்தியி(ன் அறிகுறி)யினை நான் அறிந்து கொண்டு, 'இறைத்தூதர் அவர்களே! நான் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். நான் என்ன குற்றம் செய்துவிட்டேன்?' என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இது என்ன மெத்தை?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'தாங்கள் இதில் அமர்ந்துகொள்வதற்காகவும், தலை சாய்த்துக் கொள்வதற்காகவும் இதைத் தங்களுக்காகவே நான் விலைக்கு வாங்கினேன்'' என்றேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'இந்த உருவப் படங்களை வரைந்தவர்கள் மறுமைநாளில் வேதனை செய்யப்படுவார்கள். மேலும் அவர்களின் 'நீங்கள் படைத்தவற்றுக்கு (நீங்களே) உயிர் கொடுங்கள்' என (இறைவன் தரப்பிலிருந்து இடித்து)க் கூறப்படும்'' என்று சொல்லிவிட்டு, 'உருவப்படங்கள் உள்ள வீட்டில் நிச்சயமாக (இறைவனின் கருணையைக் கொண்டுவரும்) வானவர்கள் நுழைவதில்லை'' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 5181, 5937, முஸ்லிம் 4287, அஹ்மத், முவத்தா மாலிக்)

3) நான் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன் மதீனாவில் ஒரு வீட்டினுள் நுழைந்தேன். அதன் மேல் தளத்தில் உருவப் படங்களை வரைபவர் உருவங்களை வரைந்து கொண்டிருந்தார். அப்போது அபூ ஹுரைரா(ரலி), 'என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனை விட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்கமுடியும்? அவர்கள் ஒரு தானிய விதையையாவது படைத்துக் காட்டட்டும். ஓர் அணுவையாவது படைத்துக் காட்டட்டும் என்று (அல்லாஹ் கூறுவதாக) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்' என்றார்கள்... (நபிமொழிச் சுருக்கம், அறிவிப்பாளர்: அபூ ஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் (ரஹ்) நூல்கள்: புகாரி 5953, 7559 முஸ்லிம் 4292, அஹ்மத்)

முஸ்லிம் 4292 இல், ''மதீனாவில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த மர்வான் அல்லது ஸயீத் பின் அல்ஆஸுக்கு உரிய புதுமனை ஒன்றுக்கு நானும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் சென்றோம். அந்த மனையில் ஓவியர் ஒருவர் உருவப் படங்களை வரைந்து கொண்டிருந்தார்'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

4) ...வட்டி (வாங்கி) உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும், பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக் கொள்பவளையும், உருவப்படங்களை வரைகின்றவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூஜுஹைஃபா (ரலி) நூல்கள்: புகாரி 5962, அஹ்மத் 18281)

5) நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ தல்ஹா (ரலி) நூல்கள்: புகாரி 3225, முஸ்லிம் 4278, திர்மிதீ 2804, நஸயீ 4282, அபூதாவூத் 4153, இப்னுமாஜா 3649, அஹ்மத்)

6) உருவச் சிலைகளோ உருவப் படங்களோ உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 4293)

மேற்காணும் ஆறு அறிவிப்புகளும் உயிரினங்களின் உருவ ஓவியம் தீட்டுவதை வன்மையாகக் கண்டித்து எச்சரிக்கின்றன. உருவச் சிலையும், உருவப்படமும், நாயும் உள்ள வீட்டில் நன்மையைக் கொண்டுவரும் வானவர்கள் நுழையமாட்டார்கள் எனக் கூறி வீடுகளில் இவற்றைத் தவிர்க்கும்படியும் அறிவிக்கின்றன. இந்த அறிவிப்புகளின்
கருத்துகளில் ஏறத்தாழ சற்று வார்த்தைகள் வித்தியாசத்தில் இன்னும் அனேக அறிவிப்புகள் உள்ளன. இந்த ஆதாரங்களின் அடிப்படைப் படிப்பினையாக,

உருவப்படம் வரைந்தவர் அந்த உருவத்துக்கு உயிர் கொடுக்கும்படி மறுமையில் வேதனை செய்யப்படுவார். அவரால் உயிர் கொடுக்க இயலாது. அதனால் வேதனையும் நீங்காது.

அடக்கத் தலத்தில் ஆலயம் எழுப்பி அங்கு அடக்கம் செய்யப்பட்டவரின் உருவப்படத்தை வரைந்து வைப்பவர்கள், படைப்பினங்களில் மகா மட்டமானவர்கள்.

"என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அக்கிரமக்காரன் யார்?" என்று அல்லாஹ் கேட்கிறான்.

உருவப் படங்கள் வரைபவர்களை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.

உருவப்படங்களும் நாயும் உள்ள வீட்டில் அருளைக் கொண்டுவரும் வானவர்கள் நுழைய மாட்டார்கள்.

ஆகியவற்றை எடுத்துச் சொல்லி "உருவப்படம் வரையக் கூடாது"' புகைப்படக் கருவியைக் கொண்டு உயிரினங்களின் உருவங்களைப் "புகைப்படம் எடுக்கக் கூடாது" ஒளிப்பதிவு செய்யும் கருவியைக் கொண்டு உயிரினங்களின் உருவங்களை "ஒளிப்பதிவு செய்யக் கூடாது" "வீடுகளில் உருவப்படங்களை வைத்திருக்கக் கூடாது" எனத் தீர்ப்பு
வழங்குகின்றனர் சில அறிஞர்கள்.

முதல் வகையான மேற்கண்ட இவ்வறிவிப்புகளின் எச்சரிக்கை மட்டும் இருந்திருந்தால் மறுபேச்சுக்கே இடமில்லாமல், உயிரினங்களின் உருவப் படங்கள் வரைவதற்கும், உருவப் படங்களை பயன்படுத்துவதற்கும் தடையுள்ளது என்று சொல்லி முடித்து ஒதுங்கி விடலாம். ஆனாலும், விதிவிலக்காக வேறு சில அறிவிப்புகளும் உள்ளன அவற்றையும்
இங்கு ஒப்பு நோக்க வேண்டும்.


இரண்டாம் வகை ஹதீஸ்கள்.

(1) எங்களிடம் திரைச் சீலையொன்று இருந்தது. அதில் பறவையின் உருவம் இருந்தது. ஒருவர் வீட்டுக்குள் நுழையும்போது அந்தத் திரையே அவரை வரவேற்கும். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை அப்புறப்படுத்து. நான் வீட்டுக்குள் நுழையும் போதெல்லாம் இவ்வுலக(த்தின் ஆடம்பர)ம்தான் என் நினைவுக்கு வருகிறது" என்று கூறினார்கள். மேலும், எங்களிடம் குஞ்சம் வைத்த துணியொன்றும் இருந்தது. அதன் கரைவேலைப்பாடுகள் பட்டினால் ஆனவை என்றே நாங்கள் கூறிவந்தோம். அதை நாங்கள் அணிந்துவந்தோம். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்லிம் 4279, திர்மிதீ 2468, நஸயீ 5353, அஹ்மத்)

(2) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தபோது, எனது வீட்டுவாசலில் நான் குஞ்சம் உள்ள திரைச் சீலையொன்றைத் தொங்கவிட்டிருந்தேன். அதில் இறக்கைகள் கொண்ட குதிரைகளின் உருவங்கள் இருந்தன. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை (அகற்றுமாறு) உத்தரவிட, அவ்வாறே அதை நான் அகற்றிவிட்டேன். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 4281)

(3) ஆயிஷா (ரலி) அவர்களிடம் உருவச் சித்திரங்கள் பொறித்த திரைச் சீலை ஒன்று இருந்தது. அதனால் வீட்டின் ஒரு பகுதி(யிலிருந்த அலமாரி)யை அவர்கள் மறைத்திருந்தார்கள். (அதை நோக்கித் தொழுத) நபி(ஸல்) அவர்கள், 'இதை அகற்றிவிடு. ஏனெனில், இதிலுள்ள உருவப்படங்கள் என் தொழுகையில் என்னிடம் குறுக்கிட்டுக் கொண்டேயிருக்கின்றன' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி 5959, முஸ்லிம் 4284, அஹ்மத் 12122. முஸ்லிம் நூல் அறிவிப்பில், ஆகவே ''அதை நான் அப்புறப்படுத்தி அதைத் தலையணை(இருக்கை)களாக ஆக்கி விட்டேன்'' என்று இடம்பெற்றுள்ளது)

(4) நான் என்னுடைய அலமாரி (நிலைப் பேழை) ஒன்றின் மீது (மிருகங்களின்)  உருவங்கள் (வரையப்பட்டு) இருந்த ஒரு திரைச் சிலையைத் தொங்க விட்டிருந்தேன். அதை நபி(ஸல்) அவர்கள் கிழித்துவிட்டார்கள். எனவே, அதிலிருந்து நான் இரண்டு மெத்தை இருக்கைகளைச் செய்து கொண்டேன். அவை வீட்டில் இருந்தன அவற்றின் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்வார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2479)

நபி (ஸல்) அவர்களின் வீட்டில் உருவ பொம்மைகள் இருந்தன.

(5) நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகளை வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 6130, முஸ்லிம் 4827, அபூதாவூத் 4931, இப்னுமாஜா 1982, அஹ்மத். முஸ்லிம் நூல் (4827) 
அறிவிப்பில், ''நான் நபி (ஸல்) அவர்கள் இல்லத்தில் பொம்மைகள் வைத்து விளையாடுவேன்'' என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது).

(6) நான் ஏழு வயதுடையவளாக இருந்த போது, நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளாக இருந்தபோது, அவர்களிடம் அனுப்பிவைக்கப்பட்டேன். அப்போது விளையாட்டுப் பொம்மைகள் என்னுடன் இருந்தன. நான் பதினெட்டு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை விட்டு இறந்தார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்லிம் 2780, நஸயீ 3378)
 
விளையாட்டுப் பொம்மைகளில் உயிரினங்களின் உருவங்களும் இருந்தன,

(7) நபி (ஸல்) அவர்கள் தபூக் அல்லது கைபர் இரண்டில் ஏதோ ஒரு போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தார்கள். அப்போது காற்று வீசி ஆயிஷா (ரலி) அவர்களின் விளையாட்டுப் பொம்மைகளுக்குப் போடப்பட்டிருந்த திரை விலகியது. அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் "யா ஆயிஷா என்ன இது?'' என்றார்கள். "என் பொம்மைகள்'' என்று  கூறினேன். அவற்றுக்கிடையே இரண்டு இறக்கைகளைக் கொண்ட குதிரை பொம்மை ஒன்றைக் கண்டு, அதோ நடுவில் உள்ள அந்தப் பொம்மை என்ன? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். "குதிரை'' என்று கூறினேன். குதிரையின் மேல் என்ன? என்று கேட்டார்கள். "இறக்கைகள்'' என்று கூறினேன். குதிரைக்கும் இரண்டு இறக்கைகளா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, "ஏன் சுலைமான் நபியிடம் இறக்கைகள் உள்ள குதிரை இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ?'' என்று கேட்டேன், இதைக் கேட்டதும், அவர்களின் கடவாய்ப்பற்களை நான் காணும் அளவுக்கு சிரித்தார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: அபூதாவூத் 4932)

(7வது அறிவிப்பில், "கைபர் அல்லது தபூக்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கைபர் போர் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு நடைபெற்றது. தபூக் போர் ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டு நடைபெற்றது).

உருவப் படங்கள் தொடர்பாக மேற்கண்ட இரண்டாம் வகை ஹதீஸ்களின் கருத்துக்களையொட்டி, சற்று முன்-பின் வாசகங்கள் வித்தியாசத்தில் இன்னும் அனேக அறிவிப்புகள் உள்ளன. இரண்டாம் வகை ஹதீஸ்களிலிருந்து, எவ்வித மதிப்பும் அந்தஸ்தும் வழங்காமல் சில காரண காரியங்களுக்காக வீடுகளில் உருவப்படங்களை வைத்திருக்கலாம், உருவப்படங்களைப் பயன்படுத்தலாம் என்று விளங்க முடிகிறது.
உருவப் படம் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்கிற அறிவிப்பிற்கு எதிராக இன்று உருவப் படங்கள் இல்லாத வீடு இல்லை எனும் அளவுக்கு, புகைப்படங்கள், குடும்ப அட்டை, காப்பீடு அட்டை, வாக்காளர் அட்டை, செய்தித் தாள்கள், புத்தகங்கள், கல்விப் புத்தகங்கள், ரூபாய் நோட்டுக்கள், சில்லரைக் காசுகள் என இப்படி எவ்வளவோ உருவப் படங்கள் பதிக்கப்பட்டவை வீடுகளில் உள்ளன. இவை தவிர்க்க முடியாதவை. தவிர்ப்பது நடைமுறை சாத்தியமற்றது.

எடுத்துக் காட்டாக: பாலர் கல்வியை எடுத்துக் கொள்வோம். துவக்கத்தில் குழந்தைகளுக்கு உயிர் எழுத்துகள் கற்றுத் தரப்படுகின்றன. அ, அம்மா அல்லது அணில். ஆ, ஆடு. இ, இலை. ஈ, ஈயின் உருவம். உ, உரல். ஊ, ஊஞ்சல். எ, எலி. ஏ, ஏணி. ஐ. ஐவர். ஒ, ஒட்டகம், ஓ, ஓடம். ஒள, ஒளவையார். என குழந்தைகள் மனத்தில் உயிர் எழுத்துகளைப் பதிய வைக்க பாடப் புத்தகத்தில் உயிரினங்களின் உருவப்படங்களும் வரைந்து காட்டி கல்வி போதிக்கப்படும். குழந்தைகள் வீட்டில் இருக்கும் போதும் பாடப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பார்கள். பாடப்    
புத்தகங்கள் வீட்டில்தான் இருக்கும். பாடப் புத்தகத்தில் உயிரினங்களின் உருவப்படங்கள் இருப்பதால் வானவர்கள் வீட்டில் நுழையமாட்டார்கள் என்று சொல்ல மாட்டோம்.

உருவப் படம் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்கிற அறிவிப்பிற்கு எதிராக இன்று உருவப் படங்கள் இல்லாத வீடு இல்லை எனும் அளவுக்கு, புகைப்படங்கள், குடும்ப அட்டை, காப்பீடு அட்டை, வாக்காளர் அட்டை, செய்தித் தாள்கள், புத்தகங்கள், கல்விப் புத்தகங்கள், ரூபாய் நோட்டுக்கள், சில்லரைக் காசுகள் என இப்படி எவ்வளவோ உருவப் படங்கள் பதிக்கப்பட்டவை வீடுகளில் உள்ளன. இவை தவிர்க்க முடியாதவை. தவிர்ப்பது நடைமுறை சாத்தியமற்றது. உருவப்படம் கூடாது என்று சொல்பவரின் சட்டைப் பையில் உருவப்படம் வரையப்பட்ட
பணம் இருக்கும். உருவப்படம் உள்ள அடையாள அட்டையும் இருக்கும்.

இன்று தொலைதூரம் என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. பொருளாதார வசதி இருந்தால் நினைத்த நேரத்தில் விரும்பிய நாட்டிற்குச் சென்று வரலாம். இதற்குப் பாஸ்போர்ட் கட்டாயம் வேண்டும். பாஸ்போர்ட்டின்
உரிமையாளரை அடையாளப்படுத்த புகைப்படம் தேவை. அயல் நாட்டினர் உம்ரா, ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டுமாயின் பாஸ்போர்ட் இல்லாமல் இறை ஆலயமான கஅபா இருக்கும் சவூதி அரேபியா நாட்டிற்குள்
சட்டப்படி நுழைய இயலாது.

தொலைந்து போனவர்களைத் தேடும் முயற்சியில் "காணவில்லை" என்று அறிவிப்புச் செய்வதற்கும் காணாமல் போனவரின் புகைப்படம் தேவை. காவல் துறையினர் திருடர்கள் பற்றிய எச்சரிக்கை செய்வதற்கும், அயல்
நாட்டிற்குத் தப்பியோடிய குற்றவாளியை இன்டர் நெட் மூலம் அடையாளப்படுத்துவதற்கும் உளவுத் துறைக்குப் புகைப்படங்கள் பெரும் உதவியாக இருந்து வருகின்றன.

காவல் துறை, நீதித்துறை, அரசுத்துறை என பல துறைகளிலும் புகைப்படங்களும், ஒளிப்பதிவுகளும் ஆவணங்களாகப் பத்திரப்படுத்தப் படுகின்றன! இன்னும் சொல்வதென்றால், புகைப்படம், ஒளிப்படம் இவை முக்கிய சாட்சிகளாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. மோசடியைத் தவிர்க்க, வீடு நிலம் என அசையாச் சொத்துக்கள் வாங்கும்போது விற்பவர், வாங்குபவரின் புகைப்படங்கள் முத்திரைப் பத்திரத் தாள்களில் ஒட்டிப் பதிவு
செய்யப்படுகின்றன. உருவப் படங்களால் இவ்வளவு பயன் இருந்தாலும், இஸ்லாம் முற்றாகத் தடைவிதித்திருந்தால் முஸ்லிம்கள் மறு பேச்சின்றிக் கட்டுப்பட வேண்டும்; அதில் மாற்றுக் கருத்து இல்லை!

திரைச் சீலையில் உயிரினங்களின் உருவப் படங்கள் தேவையா?



மறைவுக்காக வீட்டின் நுழைவாயிலில் திரைச் சீலையைத் தொங்க விடுகின்றனர். வெளியில் நடமாடும் ஆட்களின் பார்வை வீட்டிற்குள் எட்டாமலிருக்க திரைச் சீலை ஒரு மறைவு அவ்வளவுதான். அதற்கு துணி மட்டும் போதும். அதில் உருவப்படங்களை வரைந்து அலங்கரிப்பது வீட்டின் நுழைவாயிலை மதிப்பு மிக்கதாகக் கருதுவதாகும். இது தேவையற்ற அலங்காரம் என்பதுடன் திரைத் துணியில் வரையப்படும் உயிரினங்களின் உருவங்கள் மதிக்கப்படுகின்றன.

உருவப்படங்களின் மீதான இந்த மதிப்பைத்தான் இஸ்லாம் இல்லாமல் ஆக்குகின்றது. அதேத் திரைத் துணியைக் கிழித்து தரையில் விரித்து அதன் மீது அமர்ந்து கொள்ளலாம். மிதியடியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது திரைத் துணியைச் சுருட்டி வீட்டில் ஒரு மூலையில் வைத்து விட்டாலும் வானவர்கள் நுழையத் தடையில்லை!


(8) ஜிப்ரீல் (அலை - ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரது (இல்ல வாயிலில் நின்று உள்ளே வர) அனுமதி கோரினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) "உள்ளே வரலாம்" என அனுமதி வழங்கினார்கள். (ஆனால்) "உங்கள் வீட்டுத் திரைச் சீலையில் (உருவப்) படங்கள் உள்ள நிலையில் நான் எப்படி உள்ளே வருவேன்? அதன் தலைகளை வெட்டி விடுங்கள்; அல்லது உருவங்களைச் சிதைத்துவிடுங்கள். வானவர் கூட்டமாகிய நாங்கள் உருவங்கள் வரையப்பட்ட இல்லங்களில் நுழைய மாட்டோம்" என ஜிப்ரீல் பதிலுரைத்தார். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: நஸயீ 5395, திர்மிதீ 2806, அபூதாவூத் 4158, அஹ்மத் 8018).

நஸயீ நூல் தவிர திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத் ஆகிய நூல்களில் கூடுதலாக வரும் கீழ்க்காணும் செய்தி பதிவுசெய்யப்பட்டுள்ளது.

என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்தார்கள், "நான் நேற்றிரவு உங்களிடம் வந்திருந்தேன். உங்கள் வீட்டு வாசலில் உருவப்படங்கள் இருந்ததன் காரணமாக வீட்டுக்குள் நுழையவில்லை" என்று ஜிப்ரீல் (அலை) கூறினார்கள். வீட்டுத் திரைச் சீலையில் உருவப்படங்கள் இருந்தன. வீட்டில் ஒரு நாயும் இருந்தது, உருவப்படத்தின் தலையை நீக்கி அதை மரத்தின் வடிவம் போல் ஆக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அந்தத் திரைச் சீலையைத் துண்டாக்கி மிதிபடும் வகையில் இரண்டு தலையணைகள் தயாரிக்குமாறும், நாயை வெளியேற்றுமாறும் கட்டளையிட்டார்கள். ஹஸன் அல்லது ஹுஸைனுக்கு சொந்தமான நாய்க் குட்டி, நபி (ஸல்) அவர்களின் கட்டிலுக்கடியில் இருந்தது. பின், அது வெளியேற்றப்பட்டது.

மிதிபடும் வகையில் மதிப்பற்ற உருவப்படங்கள் வீட்டில் இருக்கலாம். அதனால் வானவர்கள் நுழைய தடை இல்லை என்பதை மேற்கண்ட அறிவிப்பிலிருந்து விளங்குகிறோம். 
உலகப் பயன் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படும் உருவப் படங்கள் வீட்டில் வைத்திருக்க மார்க்க ரீதியாக எவ்விதத் தடையும் இல்லை! அப்படியானால் முதல் வகை ஹதீஸ்களின் நிலை என்ன? என்கிற வினா எழுகின்றது. இதற்கு வணங்கப்படும் உருவச் சிலைகளை வடிவமைக்கக் கூடாது, வணங்கப்படும் உருவப் படங்களை வரையக் கூடாது, வணங்கி வழிபாடு நடத்தும் சிலைகளும், உருவப் படங்களும் உள்ள வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள் 
எனப் பொருள் கொள்வதே பொருத்தமாகும்.

"நாய்கள், உருவப்படங்கள் இருக்கும் வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள் என்ற ஹதீஸில், 'வணங்கப்படும் உருவப்படங்கள்' என்று நாமாக விளக்கம் இணைத்துக் கொள்ள நமக்கு அதிகாரம் உண்டா?"

இல்லை!, மார்க்கத்தில் ஒன்றைக் கூட்டவோ குறைக்கவோ ஹலால், ஹராம் என்று விதிக்கவோ எவருக்கும் அதிகாரமில்லை. அதிகாரம் யாவும் அல்லாஹ்வுக்குரியது! ஹதீஸ்களிலிருந்து புரிந்து கொண்டதையே விளக்கமாக
வைத்துள்ளோம். நாய்களைப் பற்றித் தடை விதிக்கும் ஹதீஸ்களைப் போலவே, விதிவிலக்காக வேட்டை நாய்களை வளர்த்துக் கொள்ளலாம் என்று அல்லாஹ்வின் தூதர் அனுமதியளித்திருக்கின்றார்கள் (புகாரி 2322). இந்த அனுமதி, கட்டாயத் தேவையைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டதாகும்.

உருவச் சிலைகள் உருவப் படங்கள் மட்டும் வணங்கப்படுவதில்லை. சில மதச் சின்னங்களும் வணங்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. சிலுவை, திரிசூலம், வேல் ஆகியவற்றைக் கடவுள்களின் சின்னங்கள் எனப் பிற மதத்தவர் வணங்கி வழிபட்டு வருகின்றனர். சிலுவைச் சின்னம் இல்லாத கிறிஸ்தவ தேவாலங்களைக் காண இயலாது. சிலுவை ஒரு தெய்வச் சின்னம் எனக் கருதி கிறிஸ்தவ மக்கள் வணங்குவதால், தோற்றத்தில் சிலுவைக்
குறி போன்றவற்றையும் நபி (ஸல்) அவர்கள் சிதைத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தங்களின் வீட்டில் சிலுவை போன்ற உருவங்கள் உள்ள எந்தப் பொருளையும் சிதைக்காமல் விட்டுவைத்ததில்லை. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 5952, அபூதாவூத் 4151, அஹ்மத் 23740).

மதச் சின்னங்கள் வணங்கப்படுவதால் சிலுவை சின்னத்தைப் போல் தோற்றமளித்தவைகளை நபி (ஸல்) அவர்கள் சிதைத்துள்ளார்கள். வணங்கப்படும் உருவப் படங்களும் சிதைத்து அழிக்கப்பட வேண்டும் என்பது இதிலிருந்து விளங்க முடிகிறது. 
மரணமடைந்த முன்னோர்களின் உருவப்படங்கள் மரச் சட்டமடித்து கண்ணாடியிட்டு சுவற்றில் மாட்டி, அதற்கு நெற்றியில் குங்குமம் சந்தனம் பொட்டுவைத்து மாலையிட்டு அவை பூஜிக்கப்படுன்றன. பிறமதத்தினர் வீட்டின் பூஜையறையில் முன்னோர்களின் உருவப் படங்கள் தெய்வமாக வணங்கப்படுகின்றன.

அம்மி, குழவி, ஆட்டுக்கல், உரல், கல் தூண் என இவற்றை வடிவமைக்கும் சிற்பியிடம் வியாபார சிந்தனை மட்டுமே இருக்கும். வேறு உணர்வு அதிலிருக்காது. ஆனால் ஆண் தெய்வங்கள், பெண் தெய்வங்கள் என உருவச் சிலைகளை வடிவமைக்கும் சிற்பி, அதை உருவாக்கும் போதே அதற்கு தெய்வீக ஆற்றல் உள்ளதாகக் கருதி ஆச்சாரத்துடன் விரதமிருந்து சிலையை வடிக்கிறார். தெய்வப் படங்களை ஓவியம் தீட்டும் ஓவியரும் அதற்கு தெய்வீக ஆற்றல் இருப்பதாகக் கருதி பக்தியுடன் உருவங்களைத் தீட்டுகிறார்.

செல்வங்களை அள்ளித் தரும் பெண் தெய்வம் கையிலிருந்து பொற்காசுகள் கொட்டுவது போலவும், கல்விக்கான பெண் தெய்வம் கையில் வீணை வைத்திருப்பது போன்றும் ஓவியரின் கற்பனைக் கேற்ப, இணைகற்பிக்கும் இணை தெய்வங்களின் உருவங்களை வரைந்தவரிடம், அவர் வரைந்த உருவப் படத்திற்கு உயிர் கொடுக்கும்படி மறுமையில் வேதனை செய்யப்படுவார் என்று விளங்கினால் முரண்பாடு இல்லை. 
முற்றும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!

உருவப் பொம்மைகள் வீட்டில் வைத்திருக்கலாமா?
(இன்ஷா அல்லாஹ் அடுத்த பகுதியில்)
உருவ பொம்மைகள் வீட்டில் வைத்திருக்கலாமா?

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Thursday, November 28, 2013

கணவருக்கு மனைவி சஜ்தா செய்யச் சொல்வது சரியா?

ஐயம்:
"அல்லாஹ் அனுமதித்திருந்தால், மணைவி கணவனுக்கு சஜ்தா செய்யலாமென நான் கட்டளையிட்டிருப்பேன்" என்று பெருமானார்(ஸல்) சொன்னதாக ஒரு ஹதீஸ் சொல்லப்படுகிறது.

அல்லாஹ் அனுமதித்திருந்தால் அதை இதையென்று எதையும் செய்யலாமே?. "அல்லாஹ்வைத்தவிர யாருக்கும் தலை வணங்க மாட்டேன், தலையே போனாலும் சரி" எனும் சத்தியத்தை மனிதகுலத்துக்கு எடுத்துரைத்த பெருமானார்(ஸல்), இப்படி "கணவனே கண்கண்ட தெய்வம்" எனும் பொருள்படும் ஹதீஸை சொல்வாரா?.

எனக்கு தெரிந்த மார்க்க அறிஞர்களிடம் கேட்டால், மழுப்பலும் மௌனமும்தான் பதிலாக வருகிறது. தயவு செய்து நீங்களாவது தெளிவு செய்யுங்கள். நன்றி. - சாணக்கியன்

தெளிவு:

பூணூல் அணியும் சாணக்கியரே! மார்க்க அறிஞர்களிடம் கேட்டேன் தெளிவான பதில் இல்லை என்பதெல்லாம் நம்பும்படியாக இல்லை.

''அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் தலை வணங்க மாட்டேன் தலையே போனாலும் சரி!'' என்கிற ஓரிறைக் கொள்கையைப் பிரகடனப்பத்துவது தான் இஸ்லாம். சத்திய இஸ்லாத்தை ஏற்று, ஓரிறைக் கொள்கையில் உறுதியுடன் இருப்பவர் எந்தச் சூழ்நிலையிலும், தனக்கு மரணம் உறுதி என்று அறிந்தாலும், அல்லாஹ்வைத் தவிர பிறருக்கு சிரவணக்கம் செய்யமாட்டார்.

கேள்வியில் குறிப்பிட்டுள்ள, ''அல்லாஹ் அனுமதித்திருந்தால் அதை இதையென்று எதையும் செய்யலாமே?'' என்று கணவருக்கு மனைவி சிரவணக்கம் செய்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்பியதைப் போலவும், அதற்கு அல்லாஹ் அனுமதி வழங்கவில்லை என்பது போலவும் தவறானக் கருத்தை இங்கே சித்தரித்துக் காட்டப்படுகிறது. தொடர்புடைய நபிவழிச் செய்தியை முழுமையாக அறிந்து கொள்வோம்:

ஷாம் (சிரியா) நாட்டிலிருந்து முஆத் (ரலி) அவர்கள் மதீனா வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு சிரவணக்கம் செய்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், ''முஆத் என்ன இது?'' என்று (வியப்போடு) கேட்டார்கள். அதற்கு முஆத் (ரலி) அவர்கள், 'நான் ஷாம் நாட்டுக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள (கிறிஸ்தவ) மக்கள் தங்களின் பேராயர்களுக்கும் கத்தோலிக்கத் தலைவர்களுக்கும் சிரவணக்கம் செய்வதைத் தற்செயலாகக் கண்டேன். அப்போதே மனதுக்குள் தங்களுக்கு இவ்வாறு செய்ய வேண்டும் என விரும்பினேன்'' என்றார்கள்.

அதற்கு, ''இவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ் அல்லாத ஒருவருக்குச் சிரவணக்கம் செய்யுமாறு நான் கட்டளையிடுவதாக இருந்தால், கணவருக்குச் சிரவணக்கம் செய்யுமாறு மனைவிக்குக் கட்டளையிட்டிருப்பேன். முஹம்மதின் உயிர் யார் கையில் உள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! ஒரு பெண் தன் கணவருக்குச் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றாத வரை தன் இறைவனின் கடமையை நிறைவேற்றியவளாகமாட்டாள். ஒட்டகத்தின் சேணத்தில் அவள் அமர்ந்திருக்கும்போது அவளை அவர் கேட்டாலும் அவள் மறுக்கலாகாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃப் (ரலி) நூல்கள்: இப்னுமாஜா, அஹ்மத், சுருக்கமாக இதன் கருத்து தீர்மிதீ 1079)

போராயர்களும் - பாதிரிமார்களும், மடாதிபதிகளும், சங்கராச்சாரியர்களும், அரசியல் தலைவர்களும், பெரியோர்களும் மக்கள் தங்களுக்கு சிரவணக்கம் செய்ய வேண்டுமென விரும்புகின்றனர். மனிதன் மனிதனுக்குச் சிரவணக்கம் செய்வது சுயமரியாதைக்கு இழுக்கு என்பதை மக்களும் உணருவதில்லை. சிரவணக்கம் செய்யப்படுபவர்களும் உணர்ந்து இவ்வாறு செய்யாதீர்கள் எனப் போதிப்பதில்லை.

ஆன்மீகம், அரசியல் என இரு துறைகளிலும் ஒப்பற்றத் தலைவராக நபி (ஸல்) திகழ்ந்தார்கள். அன்றைய பிறமதங்களின் மதகுருமார்களுக்கும், தலைவர்களுக்கும் மக்கள் சிரவணக்கம் செலுத்தி வந்தனர். இவற்றைக் கண்ணுற்ற முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதராக ஏற்றுக்கொண்ட நபித்தோழர்கள், நாம் சிரவணக்கம் செலுத்துவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விடத் தகுதியானவர் யாரிருக்க முடியும் என நபி (ஸல்) அவர்களுக்குச் சிரவணக்கம் செய்யத் தயாராக இருந்தனர். ''அவ்வாறு செய்யாதீர்கள்'' என்று கூறி அல்லாஹ்வைத் தவிர, எவருக்கும் சிரவணக்கம் செய்யலாகாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.

''நாங்கள் சிரவணக்கம் செய்திட தகுதியானவர் நீங்கள்'' என நபித்தோழர்கள் வாதிடவும் செய்தனர். இருந்தும் மனிதன் மனிதனுக்குச் சிரவணக்கம் செய்யலாகாது என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு! வரவேற்புக்காகவேயன்றி ஒருவருக்காக எழுந்து நிற்பதையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. தமக்காக யாரும் எழுந்து நிற்கவும் வேண்டாம் எனவும் நபி (ஸல்) அவர்கள் கட்டளைப் பிறப்பித்தார்கள்.

ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், அடக்குமுறை இஸ்லாமில் மேலோங்கியுள்ளது என்கிற குதர்க்க குற்றச்சாட்டுக்கு மேற்கண்ட நபிவழிச் செய்தியில் எவ்வித சான்றும் இல்லை என்றிருந்தும் இஸ்லாமை மாசுப்படுத்திட, கணவனுக்கு மனைவி சிரவணக்கம் செய்யவேண்டும் என இஸ்லாம் கூறுவதாக தவறாகப் புனைந்து பிறமதத்தினர் இஸ்லாமை விமர்சிக்கின்றனர். ''கணவனே கண்கண்ட தெய்வம், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் போன்ற பிறமதக் கொள்கையைப் போன்று இஸ்லாமிலும் உள்ளதுபோல் விமர்சிக்கின்றனர்.

''தாயின் காலடியில் சொர்க்கமுள்ளது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை தாயின் காலடியில் சிரவணக்கம் செய்து தாயை வணங்க வேண்டும் என்று புரிந்து கொள்வதில்லை. தாய்க்குச் செய்யும் பணிகளை முகம் சுழிக்காமல் இன்முகத்துடன் செய்திட வேண்டும்.என்பதே இதன் பொருளாகும்.

''அல்லாஹ் அல்லாத ஒருவருக்குச் சிரவணக்கம் செய்யுமாறு நான் கட்டளையிடுவதாக இருந்தால், கணவருக்குச் சிரவணக்கம் செய்யுமாறு மனைவிக்குக் கட்டளையிட்டிருப்பேன்.'' என்பதில் அல்லாஹ்வையன்றி எவருக்கும், எதற்கும் சிரவணக்கம் செய்தல் கூடாது என்பதுதான் வலியுறுத்தப்படுகின்றது.

''உலகை விடச் சிறந்தது நற்குணமுள்ள மனைவியாவாள், தன் மனைவியிடம் அழகிய முறையில் நடந்து கொள்பவரே உங்களில் சிறந்தவராவார்'' என இஸ்லாமியப் பார்வையில் நற்குணமுள்ள மனைவி அமைவதும், நற்குணமுள்ள கணவன் அமைவதும் அருட்கொடையாகும். இவ்வாறு தொலைநோக்குப் பார்வைகொண்ட இஸ்லாமியத் திருமணம் பெண்மையின் மாண்பைப் போற்றியும், ஆணின் சிறப்புதனை வெளிப்படுத்தியும் உயர்த்திக் காட்டுகின்றது.

திருமணம் ஆண் பெண்ணிடையே அன்பு, நேசம், கருணையை நிலைத்தோங்கச் செய்யவேண்டும். இல்லையேல் மணவாழ்வு நெருக்கடியாகி மன உளைச்சல் மேலோங்கிவிடும். மனித வாழ்வில் திருமண உறவு முக்கியப் பங்காற்றுவதால் கணவன் மனைவி இருவருக்குமிடையே அமைதி, நேசம் வளர பல போதனைகள் இறைமறை வசனங்களிலும், நபிமொழிகளிலும் அறவுரைகளாக நிறைந்து காணப்படுகின்றன.
அவற்றுள் இல்லற வாழ்வில் இணைந்த தம்பதியர் ஒருவருக்கொருவர் நன்றி மறத்தல், நிராகரித்தல் கூடாது என்பதை வலியுறுத்தும் ஹதீஸைக் காண்போம்:

'எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, 'இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?' எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கணவனை நிராகரிக்கிறார்கள். (கணவர் செய்த) உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் 'உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று பேசிவிடுவாள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி 29, முழு ஹதீஸையும் காண்க, புகாரி 1052 முஸ்லிம் 1659)

மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ள விளக்கம், மணவாழ்வில் இணைந்து வருடங்களைக் கடந்த ஒவ்வொரு கணவருக்கும் புரியும். கணவன் காலமெல்லாம் நல்லவற்றை மனைவிக்குச் செய்து வந்தாலும், மனைவிக்குப் பிடிக்காத ஒரு செயலைக் கணவன் செய்து விட்டால் ''உனக்கு வாழ்க்கைப்பட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்?'' என்று கூறி அற்ப விஷயத்துக்காக கணவனை மறுத்து, கணவனுக்கு நன்றி மறக்கும் மனைவியைப் பற்றி இங்கு கூறப்படுகின்றது.

இவ்வகை மிகைப்படுத்திப் பேசும் பெண்களின் போக்கைக் கண்டித்தும் ''அல்லாஹ் அல்லாத ஒருவருக்குச் சிரவணக்கம் செய்யுமாறு நான் கட்டளையிடுவதாக இருந்தால், கணவருக்குச் சிரவணக்கம் செய்யுமாறு மனைவிக்குக் கட்டளையிட்டிருப்பேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருப்பது பொருத்தமாகவுள்ளது. ஏனெனில், இறைவனுக்கு சிரவணக்கம் செய்வதில் நன்றியினைத் தெரிவிப்பதற்காகவும் சிரவணக்கம் செய்வதுண்டு.

மனைவிக்கு எவ்வளவு சிறந்த கணவனாக இருந்தாலும் அவனுக்குக் கட்டுப்படுதலும் கடப்பாடு கொள்தலும் சிரவணக்கத்துக்கு நெருக்கமான தாழ்மையுடன் இருக்கலாம்; ஆனாலும் இறைவனுக்கு மட்டும் உரிய வணக்கமான ஸஜ்தா எனும் சிரவணக்கத்தை ஒரு மனைவி, தன் கணவனுக்குச் செய்ய அனுமதி இல்லை - அவன் தன் மனைவியின் மதிப்பில் எத்துணை உயர்ந்திருந்த போதிலும்.

இதனை குதர்க்க நோக்கன்றி இயல்பறிவு கொண்டு விளங்கினால் முரண்பாடு ஏற்படாது.

(இறைவன் மிக்க அறிந்தவன்)

நன்றி: http://satyamargam.com/islam/for-muslims/2214-wives-to-prostrate-husbands.html

Friday, December 23, 2011

கடன் பட்டிருப்பவர்கள் ஹஜ் செய்தல் கூடுமா?

கடன் இருக்கும் நிலையில் கடனை அடைக்க எவ்வித ஏற்பாடும் செய்யாமல் ஒருவர் மரணித்தால், கடன் அடைக்கப்படும்வரை அவரது ஆன்மா அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் (திர்மிதீ); உயிர்த் தியாகிகளுக்குங்கூட கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்; ஆனால் கடன் மன்னிக்கப்படுவதில்லை (முஸ்லிம்) போன்ற அறிவிப்புகளின்படி, கடன் அடைக்கப்பட வேண்டும் என்பது சரியே! இது ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்வோருக்கு மட்டும் உள்ள நிபந்தனையல்ல. எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவான விதியாகும்.

கடன் உள்ளவருக்கு ஹஜ் கடமை இல்லை என்பதையும் தாண்டி, கடனே இல்லாவிட்டாலும், ஹஜ்ஜுக்குச் சென்று வரும் பொருளாதார வசதியில்லாதவருக்கும் ஹஜ் கடமை இல்லை. அதாவது, கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றவில்லை என்பதற்கான கேள்விக்கு பொருளாதார வசதியற்றவர் உள்ளாக மாட்டார். ஹஜ் செய்வதற்கான பொருளாதாரம் அவரிடம் இல்லை; எனவே ஹஜ் செய்யவில்லை என்றாகிவிடும்.

ஒருவரின் ஹஜ் பயணத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கடனும் உள்ளது. இப்போது உடனடியாகக் கடனை அடைத்து, ஹஜ் பயணத்தைத் தவிர்ப்பது சிறந்ததாகும். மரணம் எப்பவும் சம்பவிக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு கடன் அடைக்கப்பட வேண்டும்.

ஆனால், கடன் உள்ளவர் இஸ்லாம் அனுமதித்துள்ள வேறு வழியில் மக்கா செல்வதற்கான வசதியைப் பெற்றிருந்தால் அவருக்குக் கடன் உள்ளது என்று வைத்துக்கொண்டாலும் அவர் இப்போது ஹஜ் செய்வது கூடுமா கூடாதா என்றால், கடன் உள்ளவர் ஹஜ் செய்யலாம் என்பதே இஸ்லாத்தின் நிலைபாடாக உள்ளது. கஅபா அமைந்திருக்கும் நாட்டில் இருந்தாலும், அங்குப் பணியாற்றும் நிறுவனத்தில் ஹஜ்ஜுக்கு விடுப்புக் கிடைத்தாலும், சென்றுவர பொருளாதாரம் இருந்தாலும் கடனாளி ஹஜ் செய்தல் கூடாது என்பதற்கான தெளிவானத் தடையேதும் குர்ஆன், சுன்னாவிலிருந்து நம்மால் அறிய முடியவில்லை!

பயணத்தில் உண்பதும் உடுத்துவதும் ஹலாலாக இருக்கவேண்டும் என்று பொதுவாக இஸ்லாம் கூறுவதால், இதன் அடிப்படையில் ஹஜ் பயணத்திற்கான செலவுகள் ஹலாலாக இருக்கவேண்டும். கடன் வாங்குவது ஹராம் அல்ல! அதனால் கடன் உள்ளவர் மக்கா சென்றால் அவர் ஹஜ் செய்வதற்குக் கடன் இடையூறாக இருக்கும் என்பதற்குப் போதிய தெளிவுகள் இல்லை!

ஹஜ்ஜுடைய காலத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து பேரூந்து வாகனம் மூலமாக ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் பயணிகளுடன் வரும் பேரூந்து வாகன ஓட்டிக்குக் கடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதை அவர் பொருட்படுத்த வேண்டியதில்லை. அவரும் குறிப்பிட்ட எல்லையை அடைந்ததும் ஹஜ் பயணிகளுடன் தாமும் இஹ்ராம் அணிந்து "லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக்" என்று தல்பியா முழங்கியபடி வாகனத்தைச் செலுத்தி மக்காவிற்குள் நுழைந்து தங்க வேண்டிய இடங்களில் தங்கி, செய்ய வேண்டிய ஹஜ் கிரியைகளை நிறைவேற்றினால் இவர் உழைப்பிற்கான ஊதியத்துடன் ஹஜ்ஜை நிறைவேற்றுகிறார். 2:198வது வசனத்தின் கருத்துப்படி ஹஜ்ஜின்போது நேர்மையான முறையில் அல்லாஹ்வின் அருளைத் தேடுவதில் அல்லாஹ் தடைவிதிக்கவில்லை!

அதுபோல், மற்ற நாடுகளிலிருந்து விமானம் மூலமாக வரும் ஹஜ் பயணிகளைக் கொண்டுவந்து ஜித்தாவில் சேர்க்கும் விமான ஓட்டி, அவரும் ஹஜ்ஜை முடித்துவிட்டு, குறிப்பிட்ட தேதியில் வந்து விமானம் புறப்படும் நாளில் வேலையை ஏற்றுக் கொள்கிறேன் என ஹஜ் கிரியைகளை நிறைவேற்றினால் அவருக்கு ஆகுமானதே!

ஹஜ் கடமை என்பது கிரியைகளைக் கொண்டு நிறைவேற்றப்படுவதாகும். "பூமியில் பரந்து சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்" என்கிற (62:10) வசனத்தினடிப்டையில் வேலைக்கென சவூதிக்கு வந்தவர் ஹஜ்ஜின் நாட்களில் மக்கா சென்று குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட கிரியைகளை நிறைவேற்றினால் அவருடைய ஹஜ் கடமையும் நிறைவேறிவிடும்.

கடன் உள்ள நிலையில் மரணித்தவருக்குக் கடன் மன்னிக்கப்படுவதில்லை. இது எல்லாருக்கும் உள்ள பொதுவானதாகும். ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றியவருக்கும் இது பொருந்தும்!

கடனாளியாக இருந்து, அந்தக் கடனை அடைக்காமலும் வாய்ப்புக் கிடைத்தும் ஹஜ்ஜை நிறைவேற்றாமலும் மரணித்த ஒருவரையும் கடனிருந்தும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றிவிட்டு மரணித்த ஒருவரையும் ஒப்பு நோக்கினால் இந்த உண்மை புரியும்.

oOo


ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ் வாய்ப்பை வழங்கும்போது, ஆதாரமில்லாத பொருந்தாக் காரணங்களை நாமாகக் கற்பித்துக் கொள்ளாமல், மக்காவுக்குச் சென்று ஹஜ்ஜை நிறைவேறுவதற்கு முனைப்புக் கொள்ளவேண்டும். ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்கு ஆர்வமூட்டும் சான்றுகளைக் காண்போம்:

அருள்வளமிக்கதாகவும் அகிலத்தாருக்கு வழிகாட்டியாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பெற்ற முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதுதான். அது, பெரும் பேறு பெற்றதாகவும் உலகத்தாருக்கான நேர்வழி மையமாகவும் திகழ்கிறது.

அதில் தெளிவான சான்றுகளும் மக்காமு இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் பாதுகாப்புப் பெற்றவர் ஆவார். மக்களில் அங்குச் சென்றுவரச் சக்தி பெற்றோர் அல்லாஹ்வுக்காக அவ்வில்லத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவர் மறுதலித்தாலும் (அதனால் அல்லாஹ்வுக்கு இழப்பில்லை. ஏனெனில்) அல்லாஹ் அகிலத்தாரிடம் தேவையற்றவன் ஆவான்
(அல்குர்ஆன் 3:96,97).

"வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" அறிவிப்பவர் இப்னு உமர்(ரலி) (நூல்கள்: புகாரி 8, முஸ்லிம் 20, திர்மிதீ, நஸயீ, அஹ்மத்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது, "மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கிவிட்டான். எனவே ஹஜ் செய்யுங்கள்" என்றார்கள். அப்போது ஒரு மனிதர், "ஒவ்வோர் ஆண்டிலுமா (ஹஜ் செய்ய வேண்டும்), அல்லாஹ்வின் தூதேர?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அவர் மூன்று முறை அவ்வாறே கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் "ஆம்' என்று சொல்லிவிட்டால் அது (ஒவ்வோர் ஆண்டிலும்) கடைமயாகிவிடும். பின்னர் உங்களால் அதை நிறைவேற்ற முடியாமலாகிவிடும்" என்று கூறிவிட்டு, "நான் (எதுவும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு எதை விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்தெதல்லாம், அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் அதிகமாக(த் தேவையற்ற) கேள்விகள் கேட்டதாலும் அவர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டதாலும்தான். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டைளயிட்டால், அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதை(முற்றாக) விட்டுவிடுங்கள்!" என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரி 7288, முஸ்லிம் 2599, நஸயீ).

தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற கடமையான அமல்களை அறிவித்திடும் குர்ஆன் வசனங்களைப் போன்று, மேற்காணும் இறைவசனங்களும் நபிவழி அறிவிப்புகளும் ஹஜ் செய்வது முஸ்லிம்கள் மீது கடமையாகும் என வலியுறுத்துகின்றன.

கடமையான மற்ற அமல்களை நாம் வாழுமிடங்களில் இருந்தே நிறைவேற்றிக்கொள்ளலாம். ஆனால், ஹஜ்ஜுக் கடமையை, மனிதர்களுக்கென முதல் முதலாக அமைக்கப்பட்ட இறை ஆலயம் என அல்லாஹ் அறிவித்திருக்கும் மக்காவில் அமையப்பெற்ற கஅபத்துல்லாஹ்வைச் சென்றடைந்து அதைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட சில இடங்களில் தங்கியிருந்து ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிட வேண்டும்.

ஹஜ்ஜைப் பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்) (அல்குர்ஆன் 22:27).

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் மூலமாகவே அல்லாஹ் ஹஜ்ஜின் அறிவிப்பை ஏற்பாடு செய்துள்ளான் என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து விளங்குகிறோம். ஹஜ்ஜுக்கான அறிவிப்பைக் கேட்டு ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக அருகிலிருப்போர் நடந்தும், தூரத்திலிருப்போர் வாகனங்களில் பயணித்தும் கஅபத்துல்லாஹ்வை வந்தடைவார்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

மக்களில் அங்குச் சென்றுவரச் சக்தி பெற்றோர் அல்லாஹ்வுக்காக அவ்வில்லத்தை ஹஜ்ஜுச் செய்வது கடமையாகும் (அல்குர்ஆன் 3:97).

ஒரு முஸ்லிம் இன்று உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர் மக்காவுக்குச் சென்று வர சக்தி பெற்றிருந்தால் அங்குச் சென்று ஹஜ் செய்வது அவருக்குக் கடமையாகும். இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள 'சக்தி' என்பது ஹஜ் கிரியைகளுக்காகத் தொலை தூரம் செல்வதால் சென்று திரும்பும் நாட்களுக்கான பொருளாதாரமும் உடல் ஆரோக்கியமும் முக்கியத் தேவைகளாகும்.

அடுத்து, தொலை தூரம் சென்று வர வாகனம் அவசியம். 'சக்தி' என்பதில் வாகன அவசியமும் உள்ளடங்கும். ஆகவே, ஹஜ்ஜுக்குச் சென்று வர சக்தி பெற்றோர் என்பதில் பொருளாதாரம், உடல் ஆரோக்கியம், மற்றும் வாகன வசதியும் வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அன்சாரிப் பெண்ணிடம், "நீ எங்களுடன் ஹஜ்ஜுச் செய்வதைத் தடுத்தது எது?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, "எங்களிடம் நீர் இறைப்பதற்கான இரண்டு ஒட்டகங்கள் மட்டுமே உள்ளன. ஓர் ஒட்டகத்தில் என் கணவரும் மகனும் ஏறி ஹஜ்ஜுக்குச் சென்றுவிட்டனர். மற்றோர் ஒட்டகத்தை எங்களுக்காக விட்டுச் சென்றனர். அதன் மூலம் நாங்கள் நீர் இறைத்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ரமளான் மாதம் வந்துவிட்டால் அப்போது நீ உம்ராச் செய்துகொள். ஏனெனில், ரமளானில் உம்ராச் செய்வது ஹஜ்ஜுக்கு நிகரான(பலனுடைய)தாகும்" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்கள்: புகாரி 1863, மேற்கண்ட அறிவிப்பு முஸ்லிம் 2408, 2409)

இதன் அறிவிப்பாளர் அதாவு (ரஹ்) அவர்கள் கூறுகிறார்: "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள். ஆனால், அதை நான் மறந்துவிட்டேன்". (அப்பெண்ணின் பெயர் 'உம்மு ஸினான்' என்பதாகும்).

ஹஜ்ஜுக்குச் சென்று வர வாகனத் தேவையுள்ளது. இது அந்தந்தக் காலத்திற்கேற்ப வாகனங்கள் மாறிக்கொள்ளும். சென்று வரும் சக்தியை முன்னேற்பாடு செய்துகொள்ள வேண்டும். என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜைத் தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் உடலுறவு, கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் நன்மை மிக்கது, தக்வா(என்னும் இறையச்சமே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள் (அல்குர்ஆன் 2:197).

ஹஜ்ஜுக்குத் தேவையான பொருள்களைச் சேகரித்துக் கொள்ள வேண்டும் என்பதில் உணவும், வாகன வசதியும் அடங்கிவிடும்.

யமன் வாசிகள் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருள்களைச் சேகரிக்காமல் ஹஜ்ஜுக்கு வருவார்கள். மேலும், 'நாங்கள் இறைவன் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்' என்றும் கூறுவார்கள். மக்கா வந்தடைந்தால் மக்களிடம் யாசகம் கேட்பார்கள். இது குறித்தே அல்லாஹ், "(ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள், நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் நன்மையானது தக்வா (என்னும் இறையச்சமே) ஆகும்" என்ற வசனத்தை இறக்கினான். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்: புகாரி 1523).

2:197வது வசனம் அருளப்பட்ட பின்னணி, தொலைவிலிருந்து ஹஜ்ஜுக்குச் செல்வோர் தேவையான பொருட்களை சேகரித்துக் கொண்டு செல்லாமல் மக்கா சென்று தமது தேவையை யாசித்துப் பெற்றுள்ளனர். இவ்வாறு செய்யாமல் உங்களுக்கான பொருட்களை முன்னேற்பாடாக சேகரித்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்லப்படுகிறது. இதனால் யாசிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லலாமே தவிர, வயிற்றுப் பசிக்குக்கூட யாசிப்பது கூடவே கூடாது என்று தடைவிதிப்பதாக ஆகாது. "குர்பானி இறைச்சியை ஏழைகளுக்கும், யாசிக்காதோருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்" என்று 22:28, 36 ஆகிய வசனங்கள் கூறுகின்றன!.

சக்தி பெறுதலைத் தாமாக முயற்சி செய்து சக்தி பெறுதல் என்றும் எதிர்பாராமல் வேறு வகையில் மக்கா சென்று விடுவது என்றும் இரு வகைகளாகப் பிரிக்கலாம். நாம் கவனிக்கத் தக்கது அவை ஹலாலான வழியில் உள்ளதா என்பதை மட்டுமே.

எனவே, ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்கு ஹலாலான வழியில் சக்தி வழங்கப்பட்டவர்கள், கடன் என்ற காரணத்துக்காக அதைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை.

(இறைவன் மிக்க அறிந்தவன்).


Friday, August 07, 2009

இஸ்லாம் போர்க்களத்தில் சிறுவர்களைக் கொல்லச் சொல்கின்றதா...?

''போர்க்களத்தில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லாதீர்கள்'' என்ற நபிமொழிக்கு முரணாக ''போர்க்களத்தில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்ல நேர்ந்தால் அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களே'' என மற்றுமொரு நபிமொழி அறிவிக்கின்றது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்மறையான கருத்துடன் உள்ளதே என்று தோன்றினாலும், சரியாகப் புரியப்படாத சில விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். நபித்துவத்தைக் களங்கப்படுத்துவதற்கென்றே களமிறங்கியவர்கள் இவ்விரு வகை நபிமொழிகளையும் முன்னிருத்தி, இஸ்லாமை மாசுப்படுத்திட பொய்யானக் குற்றச்சாட்டைக் கூறி வருகின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட அறப்போர்கள் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள். (நூல்கள்: புகாரி, 3014. முஸ்லிம், 3587)

மற்றோர் நபிவழிச் செய்தி

''பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை விதித்தார்கள்'' (புகாரி, 3015. முஸ்லிம், 3588. திர்மிதீ, அபுதாவூத், அஹ்மத், இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளன)

போர்க் காலங்களில் எதிரிகளுடன் யுத்தம் தொடங்கிய நிலையில் போர்க்களத்தில் பெண்களையும், சிறுவர்களையும் தாக்கக்கூடாது. என முஸ்லிம் அணியினருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விதித்தப் போர் விதியாகும். போர்க்களத்தில் எதிரிகளின் பெண்களையும், சிறுவர்களையும் தாக்கிக் கொல்லக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை விதிக்கின்றார்கள்.

முஸ்லிம் அணியின் சார்பாக பெண்கள் அறப் போரில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. முஸ்லிம் அணியில் நின்று யுத்தக்களமிறங்கி எதிரிகளுடன் சண்டையிடுவது பெண்களுக்குக் கடமையல்ல.

"இறைத்தூதர் அவர்களே! இறைவழியில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகிறோம்; எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் '(அவ்வாறு) இல்லை. எனினும் (பெண்களுக்குச்) சிறந்த ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்" என்றார்கள். (நூல்: புகாரி 1520, 1861, 2875, 2876)

பெண்கள் போர்க்களத்தில் ஆயதமேந்தி அறப்போர் செய்வது தடுக்கப்பட்டிருந்தாலும், எதிரிகளுடன் யுத்தம் நடத்தும் போர் வீரர்களாகிய தமது அணியினரின் தாகத்துக்குத் தண்ணீர் கொடுப்பது, காயமுற்றால் சிகிச்சையளித்து, காயமுற்றவர்களை அப்புறப்படுத்துவது போன்ற சேவைகளில் பெண்கள் பங்கெடுத்துக் கொள்வதை இஸ்லாம் தடுக்கவில்லை!

அபூ பக்ர்(ரலி) அவர்களின் மகள் ஆயிஷா(ரலி) அவர்களும் (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு (காயமுற்றவர்களுக்குப் பணிவிடைகள் செய்து) இருப்பதை கண்டேன். அவர்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் துருத்திகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றிவிட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டு வந்து அவர்களின் வாய்களில் மீண்டும் ஊற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் கால் கொலுசுகளை கண்டேன். அபூ தல்ஹா(ரலி) அவர்களின் சுரத்திலிருந்து இரண்டு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது. (நபிமொழிச் சுருக்கம் புகாரி 3811, 4064)

"(பெண்களாகிய) நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (புனிதப் போரில்) இருந்தோம். (புனிதப் போரில்) காயமுற்றவர்களுக்கு நீர் புகட்டியும், மருந்திட்டும் வந்தோம். கொல்லப்பட்டவர்களையும், (காயமுற்றவர்களையும்) மதீனாவுக்கு எடுத்துச் சென்று கொண்டும் இருந்தோம்." (புகாரி, 2882, 5679)

''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போருக்குப் புறப்பட்டுச் செல்லும்போது அவர்களுடன் (என் தாயார்) உம்மு ஸுலைம் (ரலி) அவர்களும் இன்னும் சில அன்சாரிப் பெண்மணிகளும் கலந்துகொள்வர். அப்பெண்கள் (அறப்போர் வீரர்களுக்கு) தண்ணீர் கொடுப்பார்கள். காயமுற்றவர்களுக்குச் சிகிச்சை அளிப்பார்கள்'' (முஸ்லிம், 3698)

ஆயுதம் தாங்கி நேரடியாக போர்க்களத்தில் எதிரிகளுடன் போரிடுவது பெண்களுக்கு கடமை இல்லை என்றாலும் தற்காப்புக்காக பிச்சுவாக் கத்தி போன்ற சிறு ஆயுதத்தை வைத்துக்கொள்வதை நபியவர்கள் தடுக்கவில்லை. (முஸ்லிம் 3697)

முஸ்லிம் அணியின் சார்பாக போர் வீரர்களுக்கு உதவும் அடிப்படையில் போர்க்களத்தில் பெண்கள் கலந்துகொண்டு சேவை செய்யலாம். முஸ்லிம் அணியில் இருக்கும் பெண்கள் போராளிகளாக இல்லை என்பது போல் எதிரணியில் இருக்கும் பெண்களும் போராளிகளாக இல்லாமல் இருக்க வேண்டும். இரு அணிகளிலும் சேவைக்காகவே பெண்கள் உள்ளனர் போராளிகளாக இல்லை. என்று வைத்துக்கொண்டாலும் ஒவ்வொரு அணியினருக்கும் பிற அணியிலுள்ள பெண்கள் எதிரிகளைச் சார்ந்தவர்கள். பெண்கள் போராளிகளாக இல்லை எனினும் போரில் வெற்றிப்பெற்ற அணியினர் தோல்வியுற்ற எதிரணியினரின் பெண்களையும் போர்க் கைதிகளாக சிறைப்பிடிப்பர்.

போரில் பெண்களைக் கொல்லக்கூடாது என்பது போர்க்களத்தில் போராளிகளாக இல்லாத பெண்களையேச் சுட்டுகின்றது. யுத்தத்தில் நேருக்கு நேர் எதிரணியைச் சந்திக்கும்போது பெண் போராளித் தாக்க வந்தால் அவரை எதிர்த்துத் தாக்கவேண்டும் என்பதே போர் விதி! பெண்களைத் தாக்கக்கூடாது என்ற சட்டத்தை இங்கு கடைபிடித்தால் எதிரியான பெண் போராளியால் ஆண் போராளிக் கொல்லப்படுவார். போரில் பெண்களைக் கொல்லக்கூடாது என்கிற விதி தாக்கவரும் பெண் போராளிகளுக்குப் பொருந்தாது!

உஹதுப் போரில் வீரமரணமடைந்த ஹம்ஸா (ரலி) அவர்களின் உடலைக் கிழித்து ஈரக்குலையைக் கடித்துத் துப்பிய பெண்மணியாகிய ஹிந்த் (ரலி) அவர்கள் அப்போது முஸ்லிம்களுக்கு எதிரணியில் இருந்தார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. நேருக்கு நேர் எதிரிகளைச் சந்திக்கும் போரில் மூர்க்கத்தனமாக தாக்கவரும் எதிரி ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எதிர்த்துத் தாக்க வேண்டும்.

போர்களத்தில் பெண்கள் சிறுவர்கள் கொல்லப்பட்டால்

''இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் சிறுவர்களும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ''அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சார்ந்தவர்களே'' என்று பதிலளித்தார்கள். (நூல்கள் - புகாரி, 3012. முஸ்லிம், 3589, 3590)

முஸ்லிம் நூலில் இடம்பெற்றுள்ள மற்றோர் நபிவழிச் செய்தியில்,

''குதிரைப் படையினர் இரவு நேரத்தில் திடீர் தாக்குதல் நடத்தும்போது (எதிரிகளான) இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுவிடுவார்களே?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு ''அக்குழந்தைகளும் அவர்களின் தந்தையரைச் சார்ந்தவர்களே'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (முஸ்லிம், 3591)

போரில் பெண்களையும் சிறுவர்களையும் கொல்லக்கூடாது என்ற (நூல்கள்: புகாரி, 3014. முஸ்லிம், 3587) நபிமொழிக்கு முரணாக, போரில் பெண்களும் சிறுவர்களும் கொல்லப்பட்டால் அவர்களும் எதிரிகளைச் சார்ந்தவர்களே என்று (நூல்கள்: புகாரி, 3012. முஸ்லிம், 3589, 3590) மேற்கண்ட நபிமொழிகள் உரைக்கின்றது. இது எதிர்மறை முரணாகத் தோன்றினாலும், போர்க்களத்தில் பெண்களையும் சிறுவர்களையும் கொல்லக்கடாது என்பது விதி! போர்க்களத்தில் பெண்களையும் சிறுவர்களையும் கொல்ல நேர்ந்தால்... என்பது விதிவிலக்கு!

இருஅணியினர் யுத்தம் செய்யும்போது முஸ்லிம் அணியினருக்கு இணைவைப்பாளரின் அணியினர் எதிரிகள். இணைவைப்பாளரின் அணியினருக்கு முஸ்லிம் அணியினர் எதிரிகள். இரு அணியினரின் குடும்பத்தினரும் பிற அணியினருக்கு எதிரிகளைச் சார்ந்தவர்கள் என்பதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை! முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் யுத்தம் செய்யாத வரை இவர்கள் நேரடி எதிரிகள் அல்ல. அதே நேரத்தில் எதிரிகளின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இது இருஅணியினருக்கும் பொருந்தும்.

போர்க்களத்தில் பெண்களையும் சிறுவர்களையும் தாக்கக்கூடாது எனத் தடை உள்ளதால் திடீர் தாக்குதல் நடத்தும்போது போரில் நேரடியாக ஈடுபடாத பெண்களையும் சிறுவர்களையும் திட்டுமிட்டுத் தாக்கும் எண்ணமில்லை என்றாலும் தெரியாமல் அவர்கள் தாக்கப்பட்டால் என்ன செய்வது? என்பதே இரண்டாவது வகையான ஹதீஸ்கள் விளக்குகின்றன. இதை இன்னும் சற்றுத் தெளிவாக இடம்பெறும் செய்தியில் விளக்கம் கிடைக்கின்றன.

''எங்களின் குதிரைகள் இணைவைப்பாளர்களின் பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும் மிதித்து விட்டன'' என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். ''அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சார்ந்தவர்களே'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ, 1495. அஹ்மத், இப்னுமாஜா)

போர்க்களத்தில் எவ்வித திட்டமுமின்றி எதிர்பாரா விதமாக பெண்களும் சிறுவர்களும் தாக்கப்பட்டால் அது குற்றமாகாது என்பதை எடுத்துரைப்பதே நோக்கமாகும். போர்க்களத்தில் இவைத் தவிர்க்க இயலாது. எடுத்துக் காட்டாக:

எதிரிகளின் இராணுவ முகாமைத் தாக்கும்போது அவர்களின் குடும்பத்தினரும் அங்கு இருந்து திடீர் தாக்குதலில் பெண்களும், சிறுவர்களும் சிக்கிப் பாதிக்கப்படுவார்கள். இது தாக்கியவர்களின் குற்றமல்ல! தாக்கப்பட்ட எதிரிகள் இராணுவ முகாமில் குடும்பத்தினரை வைத்திருந்தது குற்றமாகும். போர் சூழலில் குடும்பத்தினர் இராவணுத்துடன் சேர்ந்திருக்காமல் அவர்களை பாதுகாப்பான தனி இடத்தில் வைக்க வேண்டும். இராணுவத்துடன் சேராமல் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்ட எதிரிகளின் முதியவர்கள், பெண்கள், சிறுவர்களைத் தேடிச் சென்று அவர்களைத் தாக்கக்கூடாது. இது போர் என்ற பெயரில் செய்யும் வன்முறையாகும். இதை முதல் வகையான ஹதீஸ்கள் தடைவிதிக்கின்றன.

இராணுவத்தினருடன் சேர்ந்து - கலந்து முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் இருந்து எதிர்பாராமல் இராணுவ வீரர்களுடன் இக்குடும்பத்தினரும் தக்குதலுக்குள்ளாக நேரிட்டால் அது குற்றமில்லை என இரண்டாவது வகையான ஹதீஸ்கள் கூறுகின்றன.

இன்று நவீனகாலப் போர் முறைகளின் தாக்தலுக்கு பெரும்பான்மை அல்லது சிறிய அளவில் பொதுமக்களும் பலியாகின்றனர். இதற்கான காரணி: ''எங்கள் உளவுத்துறை மிகச் சரியான தகவல்கள் தந்து, நாங்கள் இராணு முகாமைத் தாக்கினோம். அங்கு இராணுவத்திருடன் பொதுமக்கள் இருந்தால் அல்லது பொதுமக்களுடன் இராணுவத்தினர் இருந்தால் எங்கள் குற்றமில்லை'' என்று தாக்கியவர்கள் எளிதாக சமாதானம் சொல்லி - எதிரிகளுடன் இருப்பவர் எதிரிகளைச் சார்ந்தவர்கள் என - மிகச் சுலபமாக பொருத்திவிடுகின்றனர்.

போர் சூழலில் முதியவர்கள், பெண்கள், சிறுவர்களும் அறியாமல் தாக்கப்பட்டால் போரில் இவைத் தவிர்க்க இயலாது. என்பதையே இரண்டாவது வகையான ஹதீஸ்களின் கருத்தாகும். இஸ்லாமை விமர்சிப்பவர்கள் முதல் வகையான ஹதீஸ்களை இருட்டடிப்புச் செய்து, இரண்டாவது வகையான ஹதீஸ்களை முன்னிலைப்படுத்தி உண்மைக்கெதிராக, பொய்யான பிரச்சாரம் செய்கின்றனர்.

அன்புடன்,
அபூ முஹை