Thursday, November 28, 2013

கணவருக்கு மனைவி சஜ்தா செய்யச் சொல்வது சரியா?

ஐயம்:
"அல்லாஹ் அனுமதித்திருந்தால், மணைவி கணவனுக்கு சஜ்தா செய்யலாமென நான் கட்டளையிட்டிருப்பேன்" என்று பெருமானார்(ஸல்) சொன்னதாக ஒரு ஹதீஸ் சொல்லப்படுகிறது.

அல்லாஹ் அனுமதித்திருந்தால் அதை இதையென்று எதையும் செய்யலாமே?. "அல்லாஹ்வைத்தவிர யாருக்கும் தலை வணங்க மாட்டேன், தலையே போனாலும் சரி" எனும் சத்தியத்தை மனிதகுலத்துக்கு எடுத்துரைத்த பெருமானார்(ஸல்), இப்படி "கணவனே கண்கண்ட தெய்வம்" எனும் பொருள்படும் ஹதீஸை சொல்வாரா?.

எனக்கு தெரிந்த மார்க்க அறிஞர்களிடம் கேட்டால், மழுப்பலும் மௌனமும்தான் பதிலாக வருகிறது. தயவு செய்து நீங்களாவது தெளிவு செய்யுங்கள். நன்றி. - சாணக்கியன்

தெளிவு:

பூணூல் அணியும் சாணக்கியரே! மார்க்க அறிஞர்களிடம் கேட்டேன் தெளிவான பதில் இல்லை என்பதெல்லாம் நம்பும்படியாக இல்லை.

''அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் தலை வணங்க மாட்டேன் தலையே போனாலும் சரி!'' என்கிற ஓரிறைக் கொள்கையைப் பிரகடனப்பத்துவது தான் இஸ்லாம். சத்திய இஸ்லாத்தை ஏற்று, ஓரிறைக் கொள்கையில் உறுதியுடன் இருப்பவர் எந்தச் சூழ்நிலையிலும், தனக்கு மரணம் உறுதி என்று அறிந்தாலும், அல்லாஹ்வைத் தவிர பிறருக்கு சிரவணக்கம் செய்யமாட்டார்.

கேள்வியில் குறிப்பிட்டுள்ள, ''அல்லாஹ் அனுமதித்திருந்தால் அதை இதையென்று எதையும் செய்யலாமே?'' என்று கணவருக்கு மனைவி சிரவணக்கம் செய்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்பியதைப் போலவும், அதற்கு அல்லாஹ் அனுமதி வழங்கவில்லை என்பது போலவும் தவறானக் கருத்தை இங்கே சித்தரித்துக் காட்டப்படுகிறது. தொடர்புடைய நபிவழிச் செய்தியை முழுமையாக அறிந்து கொள்வோம்:

ஷாம் (சிரியா) நாட்டிலிருந்து முஆத் (ரலி) அவர்கள் மதீனா வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு சிரவணக்கம் செய்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், ''முஆத் என்ன இது?'' என்று (வியப்போடு) கேட்டார்கள். அதற்கு முஆத் (ரலி) அவர்கள், 'நான் ஷாம் நாட்டுக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள (கிறிஸ்தவ) மக்கள் தங்களின் பேராயர்களுக்கும் கத்தோலிக்கத் தலைவர்களுக்கும் சிரவணக்கம் செய்வதைத் தற்செயலாகக் கண்டேன். அப்போதே மனதுக்குள் தங்களுக்கு இவ்வாறு செய்ய வேண்டும் என விரும்பினேன்'' என்றார்கள்.

அதற்கு, ''இவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ் அல்லாத ஒருவருக்குச் சிரவணக்கம் செய்யுமாறு நான் கட்டளையிடுவதாக இருந்தால், கணவருக்குச் சிரவணக்கம் செய்யுமாறு மனைவிக்குக் கட்டளையிட்டிருப்பேன். முஹம்மதின் உயிர் யார் கையில் உள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! ஒரு பெண் தன் கணவருக்குச் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றாத வரை தன் இறைவனின் கடமையை நிறைவேற்றியவளாகமாட்டாள். ஒட்டகத்தின் சேணத்தில் அவள் அமர்ந்திருக்கும்போது அவளை அவர் கேட்டாலும் அவள் மறுக்கலாகாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃப் (ரலி) நூல்கள்: இப்னுமாஜா, அஹ்மத், சுருக்கமாக இதன் கருத்து தீர்மிதீ 1079)

போராயர்களும் - பாதிரிமார்களும், மடாதிபதிகளும், சங்கராச்சாரியர்களும், அரசியல் தலைவர்களும், பெரியோர்களும் மக்கள் தங்களுக்கு சிரவணக்கம் செய்ய வேண்டுமென விரும்புகின்றனர். மனிதன் மனிதனுக்குச் சிரவணக்கம் செய்வது சுயமரியாதைக்கு இழுக்கு என்பதை மக்களும் உணருவதில்லை. சிரவணக்கம் செய்யப்படுபவர்களும் உணர்ந்து இவ்வாறு செய்யாதீர்கள் எனப் போதிப்பதில்லை.

ஆன்மீகம், அரசியல் என இரு துறைகளிலும் ஒப்பற்றத் தலைவராக நபி (ஸல்) திகழ்ந்தார்கள். அன்றைய பிறமதங்களின் மதகுருமார்களுக்கும், தலைவர்களுக்கும் மக்கள் சிரவணக்கம் செலுத்தி வந்தனர். இவற்றைக் கண்ணுற்ற முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதராக ஏற்றுக்கொண்ட நபித்தோழர்கள், நாம் சிரவணக்கம் செலுத்துவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விடத் தகுதியானவர் யாரிருக்க முடியும் என நபி (ஸல்) அவர்களுக்குச் சிரவணக்கம் செய்யத் தயாராக இருந்தனர். ''அவ்வாறு செய்யாதீர்கள்'' என்று கூறி அல்லாஹ்வைத் தவிர, எவருக்கும் சிரவணக்கம் செய்யலாகாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.

''நாங்கள் சிரவணக்கம் செய்திட தகுதியானவர் நீங்கள்'' என நபித்தோழர்கள் வாதிடவும் செய்தனர். இருந்தும் மனிதன் மனிதனுக்குச் சிரவணக்கம் செய்யலாகாது என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு! வரவேற்புக்காகவேயன்றி ஒருவருக்காக எழுந்து நிற்பதையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. தமக்காக யாரும் எழுந்து நிற்கவும் வேண்டாம் எனவும் நபி (ஸல்) அவர்கள் கட்டளைப் பிறப்பித்தார்கள்.

ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், அடக்குமுறை இஸ்லாமில் மேலோங்கியுள்ளது என்கிற குதர்க்க குற்றச்சாட்டுக்கு மேற்கண்ட நபிவழிச் செய்தியில் எவ்வித சான்றும் இல்லை என்றிருந்தும் இஸ்லாமை மாசுப்படுத்திட, கணவனுக்கு மனைவி சிரவணக்கம் செய்யவேண்டும் என இஸ்லாம் கூறுவதாக தவறாகப் புனைந்து பிறமதத்தினர் இஸ்லாமை விமர்சிக்கின்றனர். ''கணவனே கண்கண்ட தெய்வம், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் போன்ற பிறமதக் கொள்கையைப் போன்று இஸ்லாமிலும் உள்ளதுபோல் விமர்சிக்கின்றனர்.

''தாயின் காலடியில் சொர்க்கமுள்ளது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை தாயின் காலடியில் சிரவணக்கம் செய்து தாயை வணங்க வேண்டும் என்று புரிந்து கொள்வதில்லை. தாய்க்குச் செய்யும் பணிகளை முகம் சுழிக்காமல் இன்முகத்துடன் செய்திட வேண்டும்.என்பதே இதன் பொருளாகும்.

''அல்லாஹ் அல்லாத ஒருவருக்குச் சிரவணக்கம் செய்யுமாறு நான் கட்டளையிடுவதாக இருந்தால், கணவருக்குச் சிரவணக்கம் செய்யுமாறு மனைவிக்குக் கட்டளையிட்டிருப்பேன்.'' என்பதில் அல்லாஹ்வையன்றி எவருக்கும், எதற்கும் சிரவணக்கம் செய்தல் கூடாது என்பதுதான் வலியுறுத்தப்படுகின்றது.

''உலகை விடச் சிறந்தது நற்குணமுள்ள மனைவியாவாள், தன் மனைவியிடம் அழகிய முறையில் நடந்து கொள்பவரே உங்களில் சிறந்தவராவார்'' என இஸ்லாமியப் பார்வையில் நற்குணமுள்ள மனைவி அமைவதும், நற்குணமுள்ள கணவன் அமைவதும் அருட்கொடையாகும். இவ்வாறு தொலைநோக்குப் பார்வைகொண்ட இஸ்லாமியத் திருமணம் பெண்மையின் மாண்பைப் போற்றியும், ஆணின் சிறப்புதனை வெளிப்படுத்தியும் உயர்த்திக் காட்டுகின்றது.

திருமணம் ஆண் பெண்ணிடையே அன்பு, நேசம், கருணையை நிலைத்தோங்கச் செய்யவேண்டும். இல்லையேல் மணவாழ்வு நெருக்கடியாகி மன உளைச்சல் மேலோங்கிவிடும். மனித வாழ்வில் திருமண உறவு முக்கியப் பங்காற்றுவதால் கணவன் மனைவி இருவருக்குமிடையே அமைதி, நேசம் வளர பல போதனைகள் இறைமறை வசனங்களிலும், நபிமொழிகளிலும் அறவுரைகளாக நிறைந்து காணப்படுகின்றன.
அவற்றுள் இல்லற வாழ்வில் இணைந்த தம்பதியர் ஒருவருக்கொருவர் நன்றி மறத்தல், நிராகரித்தல் கூடாது என்பதை வலியுறுத்தும் ஹதீஸைக் காண்போம்:

'எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, 'இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?' எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கணவனை நிராகரிக்கிறார்கள். (கணவர் செய்த) உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் 'உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று பேசிவிடுவாள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி 29, முழு ஹதீஸையும் காண்க, புகாரி 1052 முஸ்லிம் 1659)

மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ள விளக்கம், மணவாழ்வில் இணைந்து வருடங்களைக் கடந்த ஒவ்வொரு கணவருக்கும் புரியும். கணவன் காலமெல்லாம் நல்லவற்றை மனைவிக்குச் செய்து வந்தாலும், மனைவிக்குப் பிடிக்காத ஒரு செயலைக் கணவன் செய்து விட்டால் ''உனக்கு வாழ்க்கைப்பட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்?'' என்று கூறி அற்ப விஷயத்துக்காக கணவனை மறுத்து, கணவனுக்கு நன்றி மறக்கும் மனைவியைப் பற்றி இங்கு கூறப்படுகின்றது.

இவ்வகை மிகைப்படுத்திப் பேசும் பெண்களின் போக்கைக் கண்டித்தும் ''அல்லாஹ் அல்லாத ஒருவருக்குச் சிரவணக்கம் செய்யுமாறு நான் கட்டளையிடுவதாக இருந்தால், கணவருக்குச் சிரவணக்கம் செய்யுமாறு மனைவிக்குக் கட்டளையிட்டிருப்பேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருப்பது பொருத்தமாகவுள்ளது. ஏனெனில், இறைவனுக்கு சிரவணக்கம் செய்வதில் நன்றியினைத் தெரிவிப்பதற்காகவும் சிரவணக்கம் செய்வதுண்டு.

மனைவிக்கு எவ்வளவு சிறந்த கணவனாக இருந்தாலும் அவனுக்குக் கட்டுப்படுதலும் கடப்பாடு கொள்தலும் சிரவணக்கத்துக்கு நெருக்கமான தாழ்மையுடன் இருக்கலாம்; ஆனாலும் இறைவனுக்கு மட்டும் உரிய வணக்கமான ஸஜ்தா எனும் சிரவணக்கத்தை ஒரு மனைவி, தன் கணவனுக்குச் செய்ய அனுமதி இல்லை - அவன் தன் மனைவியின் மதிப்பில் எத்துணை உயர்ந்திருந்த போதிலும்.

இதனை குதர்க்க நோக்கன்றி இயல்பறிவு கொண்டு விளங்கினால் முரண்பாடு ஏற்படாது.

(இறைவன் மிக்க அறிந்தவன்)

நன்றி: http://satyamargam.com/islam/for-muslims/2214-wives-to-prostrate-husbands.html

No comments: