Monday, December 02, 2013

தியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது?

ஐயம்:

தியாகப் பெருநாளின் முக்கியத்துவம் பற்றி பேசும்பொழுது "ஒரு பக்தனின் பக்தியை சோதிக்க அவனுடைய பிஞ்சுக்குழந்தையை பலியிடுமாறு அளவற்ற அருளாளனும் நிகரற்ற கருணையாளனுமான உங்கள் அல்லாஹ் கட்டளையிடுகிறானே.... இவ்வளவு ஈவு இரக்கமற்ற கடவுள் தேவையா?

அல்லாஹ்வின் பெயரால் ஆட்டை அறுத்து சாப்பிட்டுவிட்டால் பெரிய தியாகமாகி விடுமா?" என்று எனது பிராமின் நண்பர் கேட்கிறார். தயவு செய்து விளக்கம் தரவும். நன்றி. - சாணக்கியன்.

தெளிவு:

இணை தெய்வங்களுக்கு நரபலி கொடுப்பது எல்லாக் காலத்திலும் நிகழ்ந்திருக்கின்றன. இன்றும் நரபலி பற்றிய நிகழ்வுகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்தேறி வருவதாக ஊடகத் செய்திகளில் வாசிக்கிறோம். இறுதி வேதம் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்திலும் நரபலிகள் கொடுக்கப்பட்டன. நரபலியைக் கண்டித்து அருளப்பட்ட வசனம்:

"இவ்வாறே இணைவைப்போரில் அதிகமானோருக்கு, தமது குழந்தைகளைக் கொலை செய்வதை (நன்மை போல்) அவர்களது இணை தெய்வங்கள் அலங்கரித்துக் காட்டின. இது அவர்களை அழிவுக்குட்படுத்துவதற்கும் அவர்களுடைய மார்க்கத்தை அவர்களுக்குக் குழப்புவதற்குமேயாகும்..." (அல்குர்ஆன் 006:137).

"அறிவில்லாமல் மடத்தனமாகத் தமது குழந்தைகளைக் கொலை செய்தவர்களும்..." (அல்குர்ஆன் 006:140)

அரபியர்கள் ஏக இறைவனின் மீது நம்பிக்கை கொண்டிருந்தாலும், எவர் தயவும் தேவையற்ற இறைவன் தன்னைப் பற்றிக் குர்ஆனில் எவ்வாறு குறிப்பிடுகின்றானோ, அந்தப் பொருளில் இறைவனை அவர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை! எவ்வாறு அவனை வணங்கிட வேண்டுமோ அவ்வாறு வணங்காதவர்களாகவும், இறைவனை எவ்வாறு கண்ணியப்படுத்த வேண்டுமோ அவ்வாறு கண்ணியப்படுத்தாதவர்களாகவும் இருந்ததோடு, இறைவனுக்கு இணைகற்பிக்கும் பல தெய்வ வழிபாடுகளையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. ஏக இறைவனை நம்புகிறோம் என்று சொல்லிக்கொண்டு, அவர்களின் சமயச் சடங்குகள், மத ஆச்சாரங்கள், சித்தாந்தங்கள் அனைத்திலும் ஷைத்தானின் அடிச் சுவடுகளைப் பின்பற்றி வந்தனர்.

அரபியர்களின் பல தெய்வக் கொள்கையைப் பற்றிக் குர்ஆனில் பல வசனங்கள் அறிவிக்கின்றன. இணை தெய்வங்கள் மீது அவர்கள் கொண்டிருந்த பக்தியானது, அவர்களின் ஆண் குழந்தைகளை அவற்றிற்காக நரபலி கொடுத்திடவும் அவர்களைத் தூண்டியது. அவர்களின் இந்தச் சீர்கேடுகளையும், குழப்பங்களையும் பற்றித்தான் குர்ஆன் ஆறாவது அத்தியாயத்தின் 136-140 வசனங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இஸ்லாம் நரபலியை ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை. மாறாக, நரபலியைக் கொலை என்றே உறுதிப்படுத்துகின்றது.

தியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது?

இது நல்ல கேள்வி, தியாகத் திருநாள் என்று சொல்லி, அனுமதிக்கப்பட்டப் பலிப் பிராணிகளை இறைவனின் பெயரால் அறுத்து, அதன் இறைச்சியை சமைத்துச் சாப்பிட்டுவிட்டால் அது தியாகம் ஆகிவிடுமா? இதில் எங்கே தியாகம் இருக்கிறது? என்கிற கேள்வி நியாயமாக இருந்தாலும், ஹஜ்ஜுப் பெருநாளுக்கு, ''தியாகத் திருநாள்'' எனும் பெயர் ஏன் நிலைப்பெற்றது? என்பதை அறிய இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் இது தொடர்பாக நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் படித்தால் தெளிவு பெறலாம்!

"என் இறைவா! நல்லெழுக்கமான குழந்தையை எனக்குத் தந்தருள்வாயாக! (என்று பிரார்த்தனை செய்தார்). எனவே, சகிப்புத் தன்மை மிக்க ஒரு மகன் குறித்து அவருக்கு நாம் நற்செய்தி கூறினோம்" (அல்குர்ஆன் 037:100-101)

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தொடர் பிரார்த்தனையின் விளைவாக அவரின் சந்ததியாக ஒரு மகன் பிறந்தார். அவரது பெயர் இஸ்மாயீல்.

இஸ்மாயீல் வளர்ந்து தந்தையுடன் இணைந்து செயற்படும் பருவத்தை அடைந்தபோது, "என்னருமை மகனே! உன்னை நான் அறுப்பதாக நிச்சயமாகக் கனவில் கண்டேன். உனது அபிப்பிராயம் என்ன?'' எனக் கேட்டார். அ(தற்க)வர், "'என்னருமைத் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதை நீங்கள் செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ், சகித்துக் கொள்ப(வர்களுள் ஒரு)வனாக என்னைக் காண்பீர்கள்" என்று கூறினார்.

அவ்விருவரும் (அல்லாஹ்வுக்குக்) கட்டுப்பட்டனர். இன்னும் அவர் (தம் மகனாகிய) இவரை முகம் குப்புற நிலத்தில் கிடத்தியபோது,

"யா இப்ராஹீம்! நிச்சயமாக நீர் கனவை உண்மைப்படுத்தி விட்டீர்'' என நாம் அவரை அழைத்தோம். நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம். நிச்சயமாக இது ஒரு தெளிவான சோதனையேயாகும். அவருக்குப் பகரமாக, மகத்தான பலிப் பிராணியை ஆக்கினோம். பின்வருவோரில் அவர்மீது
(புகழ்) நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது சாந்தி உண்டாகட்டும். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி வழங்குவோம்
(அல்குர்ஆன் 037:102-110).

நபிமார்களின் கனவு இறைச் செய்திகளின் முன்னறிவிப்பாகும். அக்கனவு நிறைவேறும் அல்லது நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற ரீதியில், மகனை அறுப்பதாக நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கண்ட கனவு இறைவனின் கட்டளை என அதைச் செயல்படுத்திட தந்தையும், மகனாரும் முன்வருகின்றனர். நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு நீண்ட காலம் குழந்தையில்லாமல் இருந்து, பின்னர் குழந்தை பிறந்தது. (மகன் இஸ்மாயீலை அறுக்க முயன்ற நிகழ்வுக்குப் பின்னரே நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த மகனாரின் பெயர் இஸ்ஹாக் 037:112).

ஒற்றைக்கு ஒற்றையான இஸ்மாயீல் என்ற அந்த ஒரு மகனைத் தம் கையாலேயே அறுக்க தந்தை ஆயத்தமாகிறார். அருமை மகனை இழக்க நேரிடுமே என்கிற தயக்கம் ஏதுமின்றி இறைக்கட்டளையே முக்கியம் எனச் செயல்பட முன்வந்த ஒரு தந்தையின் இந்தத் தியாகத்துக்கு ஈடாக எந்தச் செயலையும் குறிப்பிட்டுச் சொல்லிட இயலாது.

இது ஒருபுறமிருக்க:

''இறைவன் உங்களுக்குக் கட்டளையிட்டதை நிறைவேற்றுங்கள்'' என்று தந்தையிடம் மகன் கூறி, 'இறைக் கட்டளைக்கு மிஞ்சியது எதுவுமில்லை' என உயிர் துறக்க முன்வரும் மகனார் இஸ்மாயீலின் உயிர்த்தியாகமோ ஈடு இணையற்றது என்று சொல்லுமளவுக்கு உயர்ந்த தியாகமல்லவோ!

இறை அன்பர் என இறைவனால் போற்றப்பட்ட, வாய்மை தவறாத நபி இப்ராஹீம் (அலை) என்கிற நல்லடியாருக்கும், தியாக உள்ளம் படைத்தவரும் சகிப்புத் தன்மை மிக்கவருமான மகனார் இஸ்மாயீலுக்கும் வைக்கப்பட்ட சோதனையாகும் என்றே இறைமறை வசனம் குறிப்பிடுகின்றது. இறைக் கட்டளைக்கு முன்னால் ஈடு செய்ய இயலாத உயிரிழப்பும் துச்சமென மதித்து செயலில் இறங்கிய இரு நல்லடியார்களின் தியாகச் செயல்கள் இடையில் தடுக்கப்பட்டு, அந்த இடத்தில் ''பெரும் பலியாக'' பலிப் பிராணியை தியாக மகன் இஸ்மாயீலுக்குப் பகரமாக்கினான் இறைவன்.

நபி இஸ்மாயீல் (அலை) அவர்களைச் சிறப்பிக்கும் வண்ணம் இரு வசனங்களை இறைவன் தன் வேதத்தில் அருளிப் பதித்தான்:

"(நபியே) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நீர் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார். மேலும், அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார்.

மேலும், அவர் தமது குடும்பத்தாருக்குத் தொழுகையையும் ஸகாத்தையும் ஏவக்கூடியவராக இருந்தார். இன்னும் அவர் தன் இறைவனிடம் பொருந்திக் கொள்ளப்பட்டவராகவும் இருந்தார்"
(அல்குர்ஆன் 005:054-055).

இம்மாபெரும் சம்பவத்தின் தியாக வரலாறு மறுமை நாள்வரை நம்பிக்கையாளர்களின் உள்ளத்தில் பசுமையாக நிலைத்திருக்க வேண்டும் என இத்தியாக தினத்தை இஸ்லாமிய மரபாக ஆக்கினான் இறைவன். உலகம் முழுவதும் உள்ள நம்பிக்கையாளர் அனைவரும் அந்நாளில் அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அறுத்து பலியிட்டு அதன் இறைச்சியை தாமும் புசித்து மற்றவருக்கும் உண்ணக் கொடுப்பார்கள்.

அவ்வாறு செய்வதால் ஒவ்வொரு முஸ்லிமும் தியாகம் செய்வதாகவும் பொருளில்லை! மாறாக, படைத்தவனுக்கு அவனின் படைப்புகள் எப்படி கட்டுப்பட வேண்டுமென்பதை நினைவுறுத்தும் விதமாக செயற்கரிய மகத்தான தியாகத்தைச் செய்த இரு நல்லடியார்களின் தியாகங்கள் பிராணிகளின் பலியின் மூலம் எடுத்து சொல்லப்படுகிறது! தியாகத் திருநாள் என்பதன் மூலம் வேண்டுவதும் அதுவே!

மற்றபடி இத்தியாக நாளில் எந்த முஸ்லிமும் தியாகம் செய்திட வேண்டும் என்கிற பொருள் ''தியாகப் பெருநாளில்'' இல்லை! தியாகம் செய்வதற்கென ஒரு தினத்தை இறைவன் நிர்ணயிக்கவில்லை. எந்த நாளும் எந்த நேரமும் இறைவழியில் தியாகம் செய்திட வேண்டும் என்பதே மேற்காணும் நிகழ்விலிருந்து முஸ்லிம்கள் பெறும் படிப்பினையாகும்!

(இறைவன் மிக்க அறிந்தவன்)

நன்றி: சத்தியமார்க்கம்.காம்
             

1 comment:

அபூ முஹை said...
This comment has been removed by the author.