Sunday, September 14, 2008

குர்ஆன் பிரதிகளில் பிழைகளும், திருத்தமும்!

குர்ஆனில் எழுத்துப் பிழைகள் உள்ளது. இது உலக முஸ்லிம்கள் ஒப்புக்கொண்ட ஒரு விஷயம். குர்ஆனில் எழுத்துப் பிழை இல்லை என்று ஒரு முஸ்லிம் வாதிப்பாரேயானால் அவருக்கு குர்ஆனோடு சிறுதும் பரிச்சயமில்லை என்று சொல்லி விடலாம்.

கருத்து வேறுபாடு இல்லாத அளவுக்கு, குர்ஆனில் எழுத்துப் பிழைகள் உள்ளது என்று ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் அதைக் குறிப்பிட்டு எழுதியும் இருக்கிறார்கள்.

(படத்தின் மீது சொடுக்கினால் தெளிவாகப் படிக்க முடியும்)



*****



*****



''குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்'' என்று விமர்சிக்கும் பிறமத நண்பர்கள், குர்ஆன் பிரதிகளில் உள்ள எழுத்துப் பிழைகளை குர்ஆனில் உள்ள பிழையாக்க முயலுகின்றனர். அதற்கான குறுக்கு வழிதான், ''குரான் பாதுகாக்கப்பட்டதா?'' என்று ஒரு தடத்தில் எழுதிக்கொண்டு, இன்னொரு சாட்கெட்டில் ''குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்'' என்று எழுதிவிட்டால் ''குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை'' என்று அப்பாவிகளை நம்பவைத்து விடலாம் பாருங்கள்!

ஆனால், குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. வானவர் ஜிப்ரீல் குர்ஆனை எழுதிக்கொடுத்துச் சென்றிருந்தால் குர்ஆன் பிரதிகளில் உள்ள எழுத்துப் பிழைகளை இறைச் செய்தியில் (நவூதுபில்லாஹ்) உள்ள பிழையாகக் கொள்ளலாம். ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறைச் செய்தியைக் கொண்டு வந்து, நபி (ஸல்) அவர்களுக்கு ஓதிக் கற்றுக் கொடுத்தாரே தவிர எழுதிக் கற்றுக் கொடுக்கவில்லை. குர்ஆன் பிரதிகளில் உள்ள எழுத்துப் பிழைகள், குர்ஆனை எழுதிக்கொண்ட மனிதர்களால் எற்பட்ட எழுத்துப் பிழைகளாகும்.

வஹி ஓசையாக அருளப்பட்டதால் குர்ஆன் என்பது அதை ஓதும் ஓலியாகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்..

எந்த மனிதருக்கும் எழுத்துப் பிழைகள் ஏற்படவே செய்யும். குர்ஆனை எழுதும் போதும் எழுத்துப் பிழைகள் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் சமுதாயம் அந்த எழுத்துப் பிழைகளையும் திருத்தாதாமல் தொடர்ந்து எழுத்துப் பிழைகளுடனேயே மறு பிரதிகளை அச்சடித்து வருகிறது.

குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பில்,

அச்சேற்றும் போது ஏற்படும் பிழைகளும் உள்ளன. மூன் பப்ளிகேஷன் வெளியீடு தமிழ்மொழி குர்ஆனில் மூலமொழியில் ஒரு வசனத்தை மேலும், கீழுமாக மாற்றி அச்சடித்து விட்டார்கள். இது சதாரணமாக மனிதருக்கு ஏற்படும் கவனக்குறைவு அவ்வளவுதான். இதற்காக பொருட்செலவு, உடல் உழைப்பு ஆகியவற்றை வீணாக்கி ஆயிரக்கணக்கான குர்ஆன் பிரதிகளை வெளியிடாமல் இருக்க வேண்டிய அவசியமில்லை.



வசனத்தைத் தனி ஸ்டிக்கரில் அச்சடித்து தவறராகப் பதியப்பட்ட வசனத்தின் மேல் ஒட்டிக்கொள்ளும்படி தனி ஏற்பாடு செய்தார்கள்.

ஏற்கெனவே வெளியிட்ட குர்ஆனில் அச்சுப் பிழைகள் ஏற்பட்டு, படிப்பவர்கள் அதைச் சுட்டிக்காட்டினால் அடுத்த பதிப்பில் திருத்திக்கொள்வார்கள். ஆனால் பிழையாக அச்சடிக்கப்பட்ட குர்ஆன் அப்படியேதான் இருக்கும். அதனால் குர்ஆனை மாற்றி எழுதி விட்டார்கள். அல்லது திருத்திவிட்டார்கள் என்று அர்த்தமல்ல.

குர்ஆன் பலவகையில் உள்ளது என்று பிறமத நண்பர்கள் எடுத்து வைக்கும் வாதங்களில் ஒன்று 019:019வது வசனமாகும். இந்த வசனத்தை குர்ஆன் பிரதிகளில் மாற்றி எழுதியுள்ளனர் என்பது அவர்களின் குற்றச்சாட்டு. இது குறித்து பிறமத நண்பர்களின் விமர்சனத்தை தனியாக எழுதுவோம். இங்கு நாம் சொல்ல வருவது,



0019:019வது வசனத்தில் ''லிஅஹப'' என்று இருக்க வேண்டும். மூன் பப்ளிகேஷன் வெளியிட்ட குர்ஆனில் ''லஅஹப'' என்று அச்சடித்துள்ளனர்.

இது குர்ஆனில் உள்ள பிழை இல்லை. அச்சேற்றும் போது கவனக்குறைவினால் ஏற்பட்ட தவறாகும். இதை அடுத்த பதிப்பில் திருத்திக்கொள்ள முடியும். இது போன்ற ஓரெழுத்து பிழைகளை மையமாக வைத்தே பிறமத நண்பர்களின் விமர்சனங்கள் அமைந்துள்ளது.

இப்படி உலகில் பல குர்ஆன் பிரதிகளில் அச்சுப் பிழைகள் ஏற்பட்டு அது திருத்தம் செய்யாமல் இருந்தால் அது மனிதர்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட பிழைகளே தவிர, குர்ஆனில் உள்ள பிழைகள் இல்லை!

இறைவன் ஓசையாகவே குர்ஆனை அருளினான். என்பதால் குர்ஆன் பிரதிகளை, குர்ஆன் ஒலியோடு ஒப்பிட்டுப் பார்ப்பது மிக அவசியம்!

Friday, September 12, 2008

7 வட்டார மொழியில் குர்ஆன் அருளப்பட்டது!

இஸ்லாத்தை விமர்சிக்கும் பிறமத நண்பர்கள் ஒரு குர்ஆனா பல குர்ஆன்களா!? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?!

Quran or Qurans?!

இக்கட்டுரையை அரபியில் படிக்க: النسخة العربية

இந்த கட்டுரைக்கான விவரங்கள் கீழ் கண்ட புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது:

The reading ways of Quran dictionary: (moa'agim alqera'at alqura'nia):

இது ஒரு அரபி மொழியில் எழுதப்பட்ட புத்தகம் மற்றும் இதனை இஸ்லாமிய அறிஞர்கள் எழுதினார்கள். குவைத் பல்கலைக்கழகம்(Kuwait University) இதனை 8 பாகங்களாக வெளியிட்டது. இதன் முதல் பதிப்பு 1982ம் ஆண்டு (அரபியில்) வெளியிடப்பட்டது, இதன் ஆசிரியர்கள்:

டாக்டர். அப்துல் அல் சலாம் மக்ரெம் (Dr. Abdal'al Salem Makrem)
டாக்டர். அஹமத் மொக்தார் ஒமர் (Dr. Ahmed Mokhtar Omar)

இவர்கள் இருவரும் குவைத் பல்கலைக் கழகத்தில் அரபி மொழி பேராசிரியர்களாக இருக்கிறார்கள்.
புத்தக பதிப்பாளர்: ஜத் அல்சலாசல்-குவைத் (Zat Alsalasel – Kuwait)

முன்னுரை:

உத்மான் இபின் அஃபான் காலம் வரைக்கும் பல குர்‍ஆன்கள் [massahif] எழுதப்பட்டது. இவர் இதர குர்‍ஆன்களை எரித்துவிட்டார் மற்றும் ஒரு குர்‍ஆனை ஆதிகாரபூர்வமான பிரதி என்று வைத்துக்கொண்டார்.

உதாரணத்திற்கு, கீழ்கண்ட குர்‍ஆன் வகைகள்:

1. அலி பின் அபி தலிப் என்பவரின் படி குர்‍ஆன் (Quran according to Ali bin abi talib)
2. இபின் மஸூத் என்பவரின் படி குர்‍ஆன் (According to Ibn Mass'oud)
3. அபி பின் கப் என்பவரின் படி குர்‍ஆன் (According to Aobi bin ka'ab)

இதன் பொருள் இவர்கள் குர்‍ஆனை எழுதினார்கள் என்று பொருளில்லை; இதன் பொருள் அவர்கள் குர்‍ஆனை எப்படி படிக்கவேண்டும் என்ற விவரங்களை கொண்டு இருந்தனர்.

குர்‍ஆனை 7 வகையில் படிக்கலாம்(ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்‍ஆன் வசனத்தின் படி [alssib' ailmithani]) + 3 இதர வழிகள் (mokimila) + 4 கூடுதலான வழிகள், இதை இயல்புக்கு மாறான முறை[shaza] என்பார்கள்.

ஏழு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:

1. நஃபா: கலன் + வர்ஷ் (Nafaa': Qalon + Warsh)
2. இபின் கதிர்: அல்பிஜி + கோன்பில் (Ibn Kathir: Albizi + Qonbil)
3. அபி அம்ரொ: அல்தோரி + அல்சோசி (Abi amro: Aldori + Alsosi)
4. இபின் அமிர்: இபின் அபன் + இபின் த்வான் (Ibn Amer: Ibn Aban + Ibn Thkwan)
5. அச்செம்: அபோ பைகர் + ஹஃபஸ் (Assemm: Abo Biker + Hafas)
6. அல் கெஸ்ஸய்: அலித் + அல்தோரி (Alkessa'i: Allith + Aldori)
7. ஹம்ஜா: அல்பிஜாஜ் + அபோ ஈஸா அல்சிர்பி (Hamza: Albizaz + Abo Isa Alsirfi)


இங்கு பதிவு செய்துள்ள குழப்பமான கருத்துகளில் பிறமத நண்பர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று முழுதும் புரியவில்லை என்றாலும் ''குர்ஆன் ஒன்றல்ல, ஏழு வகையான குர்ஆன் உள்ளது'' என்று சொல்கின்றனர் என்று விளங்குகிறது. எடுத்து வைக்கும் சான்றுகளில் இவர்களுக்கே நம்பிம்கையில்லை என்பதை இவர்களின் தடுமாற்றம் தெளிவுபடுத்துகிறது. இவர்கள் பதியும் கருத்துக்கள் இவர்களுக்கேப் புரியாமல் போய் விடுகிறது என்பதை அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்,

//நான் இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்பது மிகவும் தெளிவாக உள்ளது; அதாவது ஒரே ஒரு குர்‍ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்லமுடியாது.//


தெளிவில்லாத விமர்சனத்தைப் பதிவு செய்கிறோம் என்பது அவர்களுக்கே உறுத்தலாக இருப்பதால் ''மிகவும் தெளிவாக உள்ளது'' என்று சான்றிதழ் வழங்கிக் கொள்கிறார்கள்.

நண்பர்களே! உலகில் ஒரே ஒரு குர்ஆன் உள்ளதாக யாரும் சொல்ல மாட்டார்கள்! உலகம் முழுதும் உள்ள குர்ஆன் பிரதிகளை கணக்கிட்டால் பல கோடி குர்ஆன் பிரதிகளை கண்டெடுக்கலாம். விஷயத்துக்கு வருவோம்,

வட்டார மொழி

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாநில மக்களும் பேசுவது தமிழ் என்றாலும் ஒவ்வொரு இடத்திலும் பேசும் தமிழில் வித்தியாசமிருக்கும். இதை வட்டார மொழி என்று சொல்வார்கள். பேசு பொருள் ஒன்றாக இருந்தாலும் பேசும் ஒலியில் ஏற்ற இறக்கமிருக்கும். ஒருவர் தமிழ் பேசுவதை வைத்தே அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறிவிடலாம். இதில் இலங்கைத் தமிழ் வித்தியாசமான தனித் தமிழ் பேச்சாக இருக்கும். பயிற்சி எடுத்தாலே தவிர ஒரு வட்டாரப் பேச்சை இன்னொரு வட்டாரத்தைச் சேர்ந்தவர் பேசுவது கடினம். அந்த அளவுக்கு வட்டார மொழி ஒருவரின் பேச்சில் ஊறிப்போனதாகும்.

''ஒரேயொரு (வட்டார) மொழிவழக்குப்படி ஜிப்ரீல்(அலை) அவர்கள் (குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத்தந்தார்கள். அதை இன்னும் பல(வட்டார) மொழிவழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத்தருமாறு அவர்களிடம் நான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க) எனக்கு அவர்கள் அதிகப்படுத்திக்கொண்டே வந்து இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறால்கள். (புகாரி, 3219, 4991)

திருக்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டது. அரபு மொழியில் ஏழு வட்டார மொழியில் ஓதுவதையே பிரபலமான ''ஏழு கிராஅத்துகள்'' - ஏழு வகையான ஓதும் முறைகள் - என்று சொல்வார்கள்.

ஏழு வகையான ஓதும் முறைகளையே மாறுபட்ட ஏழு வகையான குர்ஆன்கள் இருக்கின்றன என்று புரிந்து கொண்டு, //''ஒரே ஒரு குர்‍ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்லமுடியாது.''// என்ற தவறான விமர்சனத்தை வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வைத்துள்ள ஆதாரங்கள் மறு ஆய்வுக்குரியவை என்பதை இங்கு கூறிக்கொள்கிறேன்.

ஏழு வகையான ஓதுதல்

''இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம்(ரலி) 'அல்ஃபுர்கான்' எனும் (25 வது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை செவியுற்றேன். அவரின் ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்டபோது எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அதை அவர் ஓதிக்கொண்டிருந்தார். தொழுகையில் வைத்தே நான் அவரைத் தண்டிக்க முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும்வரை பொறுத்துக் கொண்டேன்.

(அவர் தொழுது முடித்த) பிறகு அவரின் மேல் துண்டைக் கழுத்தில் போட்டுப் பிடித்து, 'நீர் ஓதியபோது நான் செவியுற்ற இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக் காண்பித்தது யார்?' என்று கேட்டேன். அவர், 'இதை எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் ஒதிக் காண்பித்தார்கள்' என்று பதிலளித்தார். உடனே நான், 'நீர் பொய் சொல்லிவிட்டீர்! ஏனெனில், நீர் ஓதியதற்கு மாற்றமாகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை எனக்கு ஓதிக்கொடுத்தார்கள்' என்று கூறியபடி அவரை இழுத்துக் கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்களிடம், '(இறைத்தூதர் அவர்களே!) தாங்கள் எனக்கு ஓதிக்கொடுக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் 'அல்ஃபுர்கான்' அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன்' என்று சொன்னேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவரை விடுங்கள்!' என்று கூறிவிட்டு (ஹிஷாம் அவர்களை நோக்கி), 'ஹிஷாமே, நீங்கள் ஓதுங்கள்!' என்றார்கள். அவர் என்னிடம் ஓதியது போன்றே நபி(ஸல்) அவர்களுக்கு முன்னாலும் ஓதிக் காட்டினார். (இதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது' என்று கூறினார்கள்.

பிறகு (என்னைப் பார்த்து), 'உமரே, ஓதுங்கள்!' என்று கூறினார்கள். எனக்கு அவர்கள் ஓதிக்கொடுத்திருந்த முறைப்படி நான் ஓதினேன். (அதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது. இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள்.'' என்று உமர் பின் கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, 4992, 5041, 6936, 7550)

நபி (ஸல்) அவர்களின் காலத்தில், இரு நபித்தோழர்கள் குர்ஆனை இரு வகையாக ஓதியிருக்கிறார்கள். இரு ஓதலையும் நபி (ஸல்) அவர்கள் சரி என அங்கீகரித்துள்ளார்கள் என்றால் இருவரும் குர்ஆன் வசனங்களை மாற்றி ஓதினார்கள் என்று பொருள் கொள்ள முடியுமா? என்றால் இல்லை. உதாரணமாக:

நபித்தோழர் ஹிஷாம் (ரலி) அவர்கள் திருக்குர்ஆனில் அல்ஃபுர்கான் எனும் 25வது - அத்தியாயத்தை ஓதியதாக அறிவிப்பில் உள்ளது. ஃபுர்கான் அத்தியாயத்தின் தொடக்க வசனம்:

''(சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியவான்'' என்று கூறுகிறது. தொழுகையில் முன்னின்று ஓதும் இமாம் இதை பிழையாக ஓதினாலோ, அல்லது மறதியாக ஒரு வார்த்தையை விட்டுவிட்டாலோ, அவருக்குப் பின்னின்று தொழுபவர்கள் தவறைத் திருத்தியும், மறந்த வசனத்தை நினைவு படுத்தியும் எடுத்துச் சொல்வார்கள்.

இந்த அடிப்படையில், ஹிஷாம் (ரலி) அவர்கள் அல்ஃபுர்கான் அத்தியாய வசனங்களை மாற்றியோ, தவறாகவோ ஓதியிருந்தால் தொழுகையிலேயே அவர் திருத்தப்பட்டிருப்பார். ஹிஷாம் (ரலி) அவர்களின் குர்ஆன் ஓதலை, பின்னின்று தொழுத மற்ற நபித்தோழர்கள் ஆட்சேபிக்கவில்லை. உமர் (ரலி) அவர்களும் அவர் ஓதி முடிக்கும் வரை ஆட்சேபிக்கவில்லை என்பதிலிருந்து ஹிஷாம் (ரலி) அவர்கள் குர்ஆன் வசனங்களை சரியாகவே ஓதியுள்ளார்கள் என்பது தெளிவு!

ஹிஷாம் (ரலி) அவர்கள் சரியாக ஓதியிருந்தால் அதை உமர் (ரலி) அவர்கள் ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு, ஓதிய வகையில் மாற்றமிருந்தது. அதாவது ஓதிய வட்டார மொழி வித்தியசமாக இருந்ததால் உமர் (ரலி) அவர்களுக்கு அது குர்ஆன் ஓதும் முறையாக இல்லையே என்று தோன்றியிருக்கிறது, குர்ஆனை மாற்றி வேறு முறையில் ஓதிவிட்டதாகக் கருதி, அதைக் கண்டிப்பதற்காக ஹிஷாம் (ரலி) அவர்களின் கழுத்தில் துண்டைப் போட்டு இழுத்து, நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படுகிறார்.

நபி (ஸல்) அவர்கள், இருவரும் ஓதியது சரிதான் என்று கூறிய பின் உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொண்டதிலிருந்து, ஹிஷாம் (ரலி) அவர்கள் குர்ஆனை ஓதிய முறையும் நபி (ஸல்) அவர்களால் அங்கீகரிக்கப்பட முறைதான் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருந்தது. தெரிந்த பின் ஏற்றுக்கொண்டார்கள் என்று விளங்கலாம்.

குர்ஆன் ஓதும் முறை

''குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக!'' (திருக்குர்ஆன், 073:004)

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ''குர்ஆனை எனக்கு ஓதிக்காட்டுங்கள்'' என்று சொன்னார்கள். நான் ''தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க , தங்களுக்கு நான் ஓதிக்காட்டுவதா?'' என்று கேட்டேன். அவர்கள் ''பிறரிடமிருந்து அதை நான் செவியேற்க விரும்புகிறேன்'' என்று சொன்னார்கள். என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, 5049)

நபி (ஸல்) அவர்களின் ஓதுதல் முறை எப்படி இருந்தது என்று கேட்டேன். அதற்கவர்கள், ''நீட்டி ஓதுதலே அவர்களின் வழக்கம் என்று கூறிவிட்டு பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் எப்பதில் ''பிஸ்மில்லா...ஹ் என நீட்டுவார்கள், அர்ரஹ்மா...ன் என்றும் நீட்டுவார்கள், அர்ரஹீ...ம் என்றும் நீட்டுவார்கள்'' என்று பதிலளித்தார்கள். (புகாரி, 5046)

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் (தமது ஒட்டகத்தின் மீதர்ந்தபடி) 'அல்ஃபதஹ் (48வது) அத்தியாத்தைத் 'தர்ஜீவு' செய்து (ஓசை நயத்துடன்) ஓதிக்கொண்டிருந்தார்கள். (புகாரி, 4281, 4835)

''தர்ஜீவு'' என்பதற்கு மீட்டுதல் என்று பொருளாகும். ஒரு எழுத்தைத் திரும்பத் திரும்ப தொண்டைக்குக்கொண்டு வந்து ஓசை எழுப்பி ஓதுவதாகும். ஆ எழுத்தை ஆ ஆ ஆ என்று இழுத்து ஓதும்போது ஒரே எழுத்தின் ஒலி நீண்டு ஓசை நயத்துடன் ஓதும் முறைக்கு தர்ஜீவு எனப்படும்..

பாங்கொலியில் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்... தொழுகையின் அழைப்பை குரல் வளமிக்கவர் நன்றாக நீட்டிச் சொல்லும் போது கேட்க இனிமையாக இருக்கும். எடுத்துக்காட்டாக: நாகூர் ஹனீஃபா என்ற முஸ்லிம் பாடகர் ஒரு பாடலில் பாங்கு சொல்லியிருப்பார் அவரின் கனத்த குரலுக்கு நீட்டி நிறுத்தி சொல்லியிருக்கும் பாங்கை தர்ஜீவு என்று சொல்லலாம்.

குர்ஆனை மனனம் செய்தவர்கள் வெவ்வேறு முறைகளில் நீட்டி இழுத்து ஓதியிருக்கிறார்கள். ''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்'' என்ற தொடக்க வசனத்தை ஓதி நிறுத்திவிட்டு பின்னர் அல்ஹம்துலில்லாஹி... என்று தொடங்குவது ஒருவகை ஓதல்.

''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீமில்ஹம்துலில்லாஹி...'' என்று ஒன்றாகச் சேர்த்து நீட்டி இழுத்து ஓதுவதும் ஒருவகை ஓதல்.

ஒரு வசனத்தையே திரும்பத் திரும்ப ஓதுவதும் ஒருவகை. குரல் வளமிக்கவர்கள் குரலை உயர்த்தி, தாழ்த்தி நீட்டி நிறுத்தி வெவ்வேறு வகையிலும் ஓதிக்கொள்ளலாம் என்பதே பல வகையான ஓதுதல் எனப்படும். ஏழுவகையான ஓதுதல் என்பது ஓர் அளவுதானே தவிர குர்ஆனை இனிமையாக ஓத முடியுமென்றால் ஏழு முறைக்கும் அதிகமான வட்டார மொழியில் ஓதலாம். அதற்கு தடையேதும் இல்லை. குர்ஆன் இனிமையாக ஓதப்பட்டால் செவி தாழ்த்திக் கேட்பவர்களை அது ஊக்கப்படுத்தும்.

இதற்கு உதாரணமாக: 12 வயது எகிப்து சிறுமி சுமையா, இன்று தன் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதில் சிறப்புப் பெற்று வருகிறார். இவருடைய ஓதல், அப்படியே குர்ஆன் ஓதுவதில் பிரபல்யமான அப்துல் பாசித் அவர்களின் ஓதலை நினைவூட்டுகிறது. சுமையாவின் குர்ஆன் ஓதலைக் கேட்பதற்காக மக்கள் திரளாக வந்து கண்ணியத்துடன் காத்திருக்கிறார்கள் என்றால் ராகத்துடன் ஓதும் சுமையாவின் இனிமையான குரல் மக்களை ஈர்க்கிறது.

ஏழு வட்டார மொழி

நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட ஏழு வட்டார மொழி இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்ல எந்த ஆதாரமும் இல்லை. ஒலியைப் பதிவு செய்ய முடியாத காலத்தில் இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்தது என்பதால் அன்று குர்ஆனை ராகமிட்டு ஓதிய முறை இது என்று தீர்க்கமாக சொல்ல இயலாது. குர்ஆனை ஓதும் முறை பற்றி வசனத்திலும் சில அறிவிப்புகளிலும் ஆதாரங்கள் இருப்பதால் குர்ஆனை இனிமையாக ராகமிட்டு ஓதலாம் என்கிறோம்.

ஏழு வட்டார மொழியை பிரபல்யமான ஏழு வகையான கிராஅத் - ஓதல் என்று சொன்னாலும் அறிஞர்களிடையே ஏழு வட்டார மொழி குறித்து கருத்து வேறுபாடுகள் உண்டு. இவற்றை அறிஞர்களின் கருத்தாகவே கொள்ளலாமே தவிர அறிஞர்களின் கருத்துக்களை வலுசேர்க்க நபிவழி அறிவிப்புகளில் சான்று எதுவும் இல்லை.

குர்ஆனை இனிமையாக பல ராகத்துடன் ஓதிக்கொள்ளலாம் என்பதையே ஏழு வட்டார மொழி வழக்கு என்ற அறிவிப்பு அனுமதிக்கிறது. குர்ஆன் வசனங்களை ஏழு விதமாக மாற்றி ஓதினார்கள் என்பதைக் குறிப்பிடவில்லை. இதற்கு மேற்கண்ட உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பில் தக்க சான்றுகள் உள்ளன.

மேலும்,

''நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள்'' (திருக்குர்ஆன், 073:020)

''இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்'' (மேற்கண்ட உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பு, புகாரி, 4992, 5041, 6936, 7550)

குர்ஆனில் சுலபமானதை ஓதுங்கள் என்று - (கூட்டுத் தொழுகையில் முன்னின்று தொழ வைப்பவர் அல்லாத) - ஒருவர் குர்ஆனை நீட்டியும் ஓதலாம், சுருக்கியும் ஓதலாம் என்பதை அனுமதிக்கிறது. ''உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்'' என்பதும் ஒரே ஒரு குர்ஆனையேக் குறிப்பிடுகிறது. ஏழு வகையான குர்ஆனைக் குறிப்பிடவில்லை.

எம்மிடம் உள்ளது இதுவே!

இனி...

குர்‍ஆனை 7 வகையில் படிக்கலாம்(ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்‍ஆன் வசனத்தின் படி [alssib' ailmithani]) + 3 இதர வழிகள் (mokimila) + 4 கூடுதலான வழிகள், இதை இயல்புக்கு மாறான முறை[shaza] என்பார்கள்.


ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தின்... என்று விளக்கியிருக்கும் பிறமத நண்பர்களே!

ஏழு வித்தியசாமான குர்ஆன்கள் உண்டு என்ற உங்களின் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, வித்தியாசப்பட்ட குர்ஆன் வசனங்களை சான்றுகளுடன் களத்தில் வையுங்கள்!

அதாவது, ''ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தின் படி'' இந்த ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தையும், +3 +4 இதர மற்றும் கூடுதலான, இதில் இயல்புக்கு மாறான முறை என்ன? என்பதையெல்லாம் சற்று விளக்கிச் சொல்வீர்களாயின் முஸ்லிம்களும் புரிந்து கொள்வார்கள், விளக்குவீர்களா...?

சம்பந்தப்பட்ட பதிவில், நீங்கள் சரித்திரங்களைத் திரித்துள்ளீர்கள். ஆதாரங்களுடன் அடுத்து சந்திப்போம்.

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Wednesday, September 10, 2008

இது துவக்க அடிதான்!



அடிமேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும் என்பார்கள். தினச் செய்தியை மக்களின் கவனத்திற்கு வைக்கும் ஒரு நாளேடு உண்மைச் செய்திகளை மட்டும் அச்சிலேற்ற வேண்டும். செய்திகள் என்ற பெயரில் விஷமத்தை விளம்பரப்படுத்திய தினமலரின் பாஸிசக் கொள்கைக்கு விழுந்த முதல் அடி இது.

- அபூ முஹை

*****

தினமலருக்கு முதல் அடி!

புதன், 10 செப்டம்பர் 2008

கடந்த 01.09.2008 அன்று தினமலரின் வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம் பதிப்புகளில் இலவச இணைப்பாக வெளியிடப் பட்ட கம்ப்யூட்டர் மலரில், உலக முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும், அவர்களின் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து டென்மார்க்கின் யூல்லண்ட் போஸ்ட்டன் வெளியிட்டிருந்த கேலிச் சித்திரத்தை வெளியிட்டிருந்தது.

கொதித்தெழுந்த முஸ்லிம்கள், தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கள் எதிர்ப்புகளைக் காட்டத் தொடங்கினர்.

இது குறித்து விபரமாக இரு தினங்களுக்கு முன்னர் (08.09.2009) தலையங்கம் எழுதி இருந்தோம்.

அத்தலையங்கம், "உப்புப் போட்டுச் சோறு தின்னும் ஒவ்வொரு முஸ்லிமும் இனி, தினமலரை ஒழித்துக் கட்டுவதற்குத் தன்னால் எதுவெல்லாம் சாத்தியமோ அதையெல்லாம் செய்வான்" என்று முடிந்திருந்தது.

உப்புப் போட்டுத்தான் முஸ்லிம் சோறு தின்னுகிறான் என்பதை உறுதிப் படுத்தும் விதமாக இன்று தினமலருக்கு முதல் அடி விழுந்திருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகங்களில் தினமலரின் இணைய தளம் இன்று முதல் தடை செய்யப் பட்டுள்ளது. தினமலர் விதைத்த வினைகளின் அறுவடையைத் தான் தடை செய்யப் பட்டப் படத்தில் பார்க்கின்றீர்கள்.

இது தொடக்கம்தான் ...

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Monday, September 08, 2008

மத பயங்கரவாத நாளேடு!

திருந்தாத தினமலர் இருந்தென்ன..?

திங்கள், 08 செப்டம்பர் 2008

"ஏழை மக்களுக்கு சுகாதாரக் காப்பீடு" என்ற தலைப்பில் கடந்த ஆண்டு 06.10.2007இல் தினமலர் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அச்செய்திக்கு எவ்விதத் தொடர்புமின்றி அச்செய்தியோடு ஒரு படம் இணைக்கப் பட்டிருந்தது. அது, சர்ச்சைக்குரிய டென்மார்க்கின் யூல்லண்ட் போஸ்ட்டன் இதழில் வெளியான கேலிச்சித்திரங்களில் ஒன்றாகும். டென்மார்க் கேலிச்சித்திரங்கள் அப்போது அதிகம் அறியப் படாததால் அது கவனம் பெறாமல் போயிற்று. தினமலரின் இந்தத் திட்டமிட்ட எழுத்து வேசித்தனம் நடந்தது கடந்த ஆண்டின் ரமளானில் என்பது இங்கு நினைவு கூரத் தக்கது.

முஸ்லிம்கள் இவ்வாண்டின் புனித மாதமான ரமளானை மகிழ்வுடன் தொடங்க முயன்றபோது அவர்களது மகிழ்ச்சியைக் குலைத்து அவர்களுக்கு வருத்தத்தையும் சீற்றத்தையும் ரமளான் பரிசாக அளித்திருக்கிறது தினமலர் நாளிதழ்.

முஸ்லிம்கள் ரமளான் நோன்பைத் தொடங்கிய 01.09.2008 நாளிட்ட தினமலரின் வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம் பதிப்புகளில் இலவச இணைப்பாக வெளியிடப் பட்ட கம்ப்யூட்டர் மலரில், முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் அவர்களின் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து டென்மார்க்கின் யூல்லண்ட் போஸ்ட்டன் வெளியிட்டிருந்த இன்னொரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டது.

கொதித்தெழுந்த முஸ்லிம்கள், தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கள் எதிர்ப்புகளைக் காட்டத் தொடங்கினர்.

கேலிச் சித்திரம் வெளியான அன்று மாலை வேலூரை அடுத்த மேல்விஷாரத்தில் முஸ்லிம்கள் மறியல் செய்தனர். தொடர்ந்து, வேலூரில் உள்ள தினமலர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்ததால் வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வேலூர் தினமலர் அலுவலகம் முன்பு 02.09.2008 காலையில் குவிந்து போராட்டத்தைத் துவக்கினர்.

காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேலூர்-பெங்களூர் சாலைப் போக்குவரத்து முற்றிலும் சீர்குலைந்தது.

"கோடிக்கணக்கான முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் நபிகள் நாயகம் பற்றிக் கேலிச் சித்திரம் வெளியிட்டவர்களைக் கைது செய்ய வேண்டும்" என்றும் "இந்து-முஸ்லிம் இடையே பகையைத் தூண்டிவிடும் தினமலர் ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும்" என்றும் ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லிம்கள் கோஷமிட்டனர்.



வேலூர் மாவட்ட ஆட்சியர் தர்மேந்திர பிரதாப் யாதவ், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி, மேலாளர் அறிவுச்செல்வம், வட்டாட்சியர் சுகந்தி, மாவட்டக் காவல்துறை துணை மேலாளர் ராமதாஸ் ஆகியோர் அங்கு வந்து, போராட்டம் நடத்தியவர்களைக் கலைந்து போகச் சொன்னார்கள். ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம்கள் மறுத்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தடியடியில் பலர் காயமடைந்தனர்.

"முஸ்லிம்களை இழிவுபடுத்தும் நோக்கில் திட்டமிட்டுக் கேலிச் சித்திரம் வெளியிட்ட"தைக் கண்டித்து, சேலத்தில் தமுமுகவினர் 02.09.2008 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். "தினமலர் பத்திரிகையைத் தடை செய்ய வேண்டும்" என்று அவர்கள் கோஷமிட்டனர். தமுமுக தலைமையேற்று சேலத்தில் நடத்திய தினமலர் எதிர்ப்புப் போராட்டத்தில், 28 பெண்கள் 294 கைது செய்யப் பட்டனர்.

மதுரையில் மனிதநீதிப் பாசறையும் தமுமுகவும் இணைந்து போராட்டத்தில் குதித்தனர். தங்களின் எதிர்ப்பைக் காட்டும் முகமாக தினமலர் நாளிதழை முஸ்லிம்கள் தீயிலிட்டுப் பொசுக்கினர். ததஜவினர் 04.09.2008 இல் மதுரையிலும் சென்னையிலும் 06.09.2008 இல் கோவையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சியில் தமுமுக தினமலரை எதிர்த்து முற்றுகைப் போராட்டத்தை நடத்தியது. தமுமுக, மனிதநீதிப் பாசறை, ஜாக், சிறுபான்மை உதவி அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து 04.09.2008 இல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இவ்வளவும் நடந்து முடிந்த பின்னர் முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டத்துக்கும் போராட்டத்துக்கும் அறவே தொடர்பில்லாத சில சங்கங்களின் தலைவர்களை தினமலர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து, அமர வைத்து வெறும் ஒரு 'வருத்தத்தை' மட்டும் தெரிவித்து, பிரச்சினை முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் தினமலர் ஆசிரியர்.

ஒன்று இரண்டு என்றில்லாமல் பல திக்குகளிலிருந்தும் தினமலருக்கு ஆப்புகள் சீவப் படும் வேலை மும்முரமாகத் தொடங்கி விட்டது.

அரிப்பெடுக்கும்போது தலையைக் கொள்ளிக்கட்டையால் சொரிந்து கொள்ளும் முட்டாள் குரங்கைப் பற்றி உவமை கேள்விப் பட்டிருக்கிறோம். இதே கேலிச் சித்திரம், டென்மார்க் என்ற ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே அசைத்துப் போட்டிருக்கும்போது, ஓர் அற்ப நாளிதழான நாம் எம்மாத்திரம்? என்பதைக் கொள்ளிக்கட்டையைக் கையிலெடுக்கும் முன்னர் தினமலர் யோசித்திருக்க வேண்டும்.

முஸ்லிம் விரோதப் போக்கை முழுதுமாக விட்டொழித்து முற்றாகத் திருந்தாதவரை உப்புப் போட்டுச் சோறு தின்னும் ஒவ்வொரு முஸ்லிமும் இனி, தினமலரை ஒழித்துக் கட்டுவதற்குத் தன்னால் எதுவெல்லாம் சாத்தியமோ அதையெல்லாம் செய்வான். முடிவு தெரியும்போது அதை வேறு நாளிதழ்களில்தான் தேடவேண்டியிருக்கும்.

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Sunday, September 07, 2008

தினமலரைப் புறக்கணிப்போம்!



சமூக நல ஆர்வலர்களுக்கு அன்பான வேண்டுகோள்!

இந்தியா சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இந்திய இறையாண்மைக்கும் பன்முக சகிப்புத்தன்மைக்கும் கேடு விளைவித்து, மக்கள் ஒற்றுமைக்கு உலை வைக்கும் விதமாக மதசார்பற்ற நாட்டில் வர்ண ஆட்சியை அமைக்கும் சூழ்ச்சியோடு சங்கபரிவாரம் தேச விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கு அரசு, அதிகாரம், காவல், இராணுவம், ஊடகம் என அனைத்துத் துறைகளிலும் காங்கிரஸ் முதலான அனைத்து கட்சிகளிலும் ஊடுருவியுள்ள சங்கபரிவாரத்தினர் பலவகைகளிலும் உறுதுணை புரிந்து வருகின்றனர். இதற்காக நாடு முழுவதும் மதவெறியைத் தூண்டிவிட்டு கலவரங்களை ஏற்படுத்தி மக்களிடம் நிலவும் மனிதநேயத்தைச் சீர்குலைத்து வருகின்றனர்.

1995 -க்கு முன்பு வரை இந்தியாவின் வட மாநிலங்களில் மட்டும் மையம் கொண்டிருந்த இந்தப் பார்ப்பன மதவெறி செயல்பாடுகள் தற்பொழுது தென்னகத்திலும் குறிப்பாக தமிழகத்திலும் படுவேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளன. இதற்கான அடையாளமாக கோயம்புத்தூர் படுகொலைகள், தென்காசி குண்டுவெடிப்புகளைக் கூறலாம். இதற்காகச் சங்கபரிவாரத்தின் அறிவிக்கப்படாத தமிழக ஏஜண்டாக ஊடகத்துறையில் தினமலர் எனும் பார்ப்பன தினசரி ஈடுபட்டு வருகிறது.

எங்காவது ஒரு மூலையில் காவல்துறையால் அநியாயமாகப் பழி சுமத்தப்பட்டு ஒரு முஸ்லிம் கைது செய்யப்பட்டு விட்டால், ஊசி, நூல், வயர் துண்டு, சுத்தியல், ஆணி போன்ற அதி பயங்கர ஆயுதங்களின் பட்டியலை முகப்புப் பக்கத்தில் பிரசுரித்து "இஸ்லாமிய தீவிரவாதி" என்ற பதத்தைத் தமிழக மக்களின் மனதில் ஆழப்பதிய வைத்தப் பெருமை தினமலருக்கு உண்டு. பிள்ளையார் ஊர்வலம் நடக்கும் வேளைகளில் சமூக விரோதிகளால் திட்டமிட்டுச் செய்யப்படும் கலவரங்களைக் கூட, காவல்துறையும் பதிவு செய்யாத "அருகிலுள்ள பள்ளிவாசலில் இருந்து கல் வீசப் பட்டதால் பதட்டம் ஏற்பட்டது" என திரித்து முஸ்லிம் சமுதாயத்தை மக்கள் மத்தியில் மோசமான சமுதாயமாகச் சித்தரிப்பதற்குத் தினமலரால் மட்டுமே இயலும்.

இவ்வாறு பல ஆண்டுகாலமாக தினமலர் நாளிதழ் செயல்பட்டு வந்தமையைச் சகித்துக் கொண்ட முஸ்லிம் சமுதாயத்தின் நெஞ்சில் சுடுகனலை வைப்பது போன்று, தங்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் இறைத்தூதரைக் கேலி செய்யும் விதமாக டென்மார்க் பத்திரிக்கை வெளியிட்டு உலகில் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்த கேலிச்சித்திரத்தைச் சம்பந்தமே இல்லாமல் தனது கணினிமலரில் வெளியிட்டுள்ளது. இது ஏதேச்சையாக நடந்த சம்பவம் என்று ஒதுக்கிவிட இயலாது. உலக முஸ்லிம்களின் புனித மாதமாகிய ரமதான் மாதத் துவக்கத்தில் இந்த மதவெறி தாக்கதலை திட்டமிட்டே தினமலர் அரங்கேற்றியுள்ளது.

எதையும் தாங்கும் முஸ்லிம்கள் தங்களின் இறைத்தூதர் இகழப்படுவதை மட்டும் ஒருபோதும் சகிக்க மாட்டார்கள். இதனை நன்றாக உணர்ந்தே இந்நாழிதழ் இத்தகைய கீழ்தரமான செயலில் ஈடுபட்டது. எதிர்ப்பு வந்தபொழுது தவறுதலாக நடந்தது எனக் கூறி தன் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ள மட்டுமே முயல்கின்றது. அதற்காகப் பகிரங்க மன்னிப்புக் கேட்கவோ இனி இதுபோன்ற செயல் தன்பக்கமிருந்து நடைபெறாது என்பதற்கு உத்தரவாதமோ அது கொடுக்கவில்லை. தவறு கூட ஒரு பிரசுரத்தில் நிகழ்ந்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரே நேரத்தில் நான்கு பிரசுரங்களில் அது பிரசுரிக்கப்பட்டது தவறுதலாக நடந்தச் சம்பவமாகப்படவில்லை.

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், சுமூகமாக வாழும் சமூகத்தில் கலகம் விளைவித்து அதன் மூலம் இலாபம் பெற வேண்டும் என்ற சங்கபரிவாத்தின் செயல்திட்டத்தை வலுவான ஊடகம் மூலம் பரப்ப முனையும் தினமலர் பத்திரிக்கையை மேலும் தமிழகத்தில் வளரவிடுவது, தமிழகத்தின் எதிர்காலத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கும்.

செய்த தவறுக்கு நிர்வாகம் காரணமல்ல என்று கூறி வருத்தம் தெரிவித்து நழுவுவது தினமலரின் நிர்வாகச் சீர்கேட்டை பறைசாற்றுகிறது. தினமலரின் மதவெறி செயல்பாட்டை ஒழிக்க, மனித நேயத்தை வளர்க்க சமூக ஆர்வலர்களே முஸ்லிம் சமூகத்தின் இந்த எதிர்ப்புக் குரலுக்கு ஆதரவை அளியுங்கள்.

ஒன்றிணைந்து எதிர்ப்போம், மதவெறியை ஒழிப்போம், மனித நேயம் வளர்ப்போம்!