Sunday, August 07, 2005

வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும்-4

விண்ணகத்தின் பரப்பெல்லை -4

ஏ.கே.அப்துர் ரஹ்மான்

கோள்கள், துணைக்கோள்கள், நட்சத்திரங்கள் யாவும் நீந்திச் செல்ல அவைகளின் படைப்பாளானால் வடிவமைக்கப்பெற்ற பேரண்டப் பெருவெளியே ஆகாயம். இது பூகோளத்தைப் போன்று பற்பல கோள்களையும், நிலவைப் போன்று பற்பல துணைக் கோள்களையும் கொண்டிருந்தாலும், அவை எவற்றிலும் வாழ்வதற்குரிய வசதியை இதுவரை கண்டறியாத அறிவியல் கண்களுக்கு இப்பூமியில் காணப்படும் வாழ்க்கை வசதி அளப்பறிய வியப்பை அளிக்கிறது. அத்துடன் முந்தைய பகுதிகளில் ஆய்வு செய்த குர்ஆனிய வசனங்களான,


'வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாகவும் அமைத்தோம்' (அல்-குர்ஆன் அத்தியாயம் 21 அல் அன்பியா - வசனம் 32)

'அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியை தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்..' (அல்- குர்ஆன் அத்தியாயம் 40 ஸுரத்துல் முஃமின் - வசனம் 64),

'அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்..' (அல்-குர்ஆன் அத்தியாயம் 67 ஸுரத்துல் முல்கு - 15வது வசனம்)

'..வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா?..' (அல்-குர்ஆன் அத்தியாயம் 67 ஸுரத்துல் முல்கு - 17வது வசனம்)

மேற்கண்ட வசனங்களை மெய்ப்பித்து நிற்கிறது.

ஏனைய கோள்களை, துணைக்கோள்களைப் போல பூகோளத்திலும் வாழ்க்கை வசதி அற்ற சூழ்நிலையும், அச்சூழ்நிலையை அளிப்பதில் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கும் காற்று மண்டலக் கூரையும் இல்லாத நிலை நீடித்திருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக உயிரினம் தோன்றிய பூமியில் மட்டும் அந்த வசதியும், சூழ்நிலையும் ஏற்படுத்தப் பட்டிருப்பதிலிருந்தே பூமியில் உயிரினம் வாழவேண்டும் என்ற நாட்டமும், நோக்கமும் கொண்ட ஏதோ ஒரு சக்தி செயல் பட்டிருக்கிறது எனபதை உணரலாம். அதற்கு இதுவரை கூறப்பட்டவை அசைக்க முடியாத அறிவியல் ஆதாரங்களாகும்.

அறிவியல் அபிமானிகளே! இவற்றை மறுப்பதற்குரிய அறிவியல் ஆதாரங்கள் எவற்றையேனும் உங்களால் காட்ட முடியமா?.

மானிடக் கற்பனைகளையே கடை விரித்து வேதங்களாய் அறிமுகப் படுத்தப் பட்டதைக் காலங்காலமாய்க் கண்டு வந்ததால் இறை மறுப்பில் இறுகிப்போன உள்ளங்களே! உங்கள் முன் எடுத்துக் காட்டப்படும் மெய்யான இறை வேதத்தின் தூய வசனங்களுக்கு நவீன அறிவியல் அசைக்க முடியாத சாட்சியாய் தன்னை அர்ப்பணித்து நிற்பதை காண்கிறீர்கள் அல்லவா?. எனினும் நீங்கள் கண்டு வந்த கற்பனைப் புதினங்கள் அறிவியலோடு மோதுவதால், வேதங்கள் என்றாலே இப்படித்தான் என்ற எண்ணத்தில் இறுகிப்போன உங்களில் சிலருக்குப் பரிசுத்த குர்ஆனின் அறிவியல் ஆதாரங்கள் வியப்போடு - வினாவையும் எழுப்புகின்றனவா?. உங்கள் வினாக்குறிகள் யாவற்றையும் அகற்றக் கூடிய ஆதாரங்களை - பரிசுத்த குர்ஆன் இறை வசனங்களே என்பதற்குரிய அறிவியல் சான்றுகளை - ஒவ்வொன்றாக உங்கள் முன் எடுத்துக் காட்டுகிறோம். சிந்திக்கத் தெரிந்தவர்களே! விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு அவைகளைச் சிந்தியுங்கள்.

நவீன அறிவியல் விண்ணகப் பருப்பொருட்களின் (Clestrial Bodies) சலனங்களை, வானசாஸ்திரத்தைப் (Astronomy) பற்றி என்ன கூறுகிறதோ அதை இம்மியும் பிசகாமல் 1400 வருடங்களுக்கு முன் பரிசுத்த குர்ஆன் கூறி நிற்கும் அதிசயத்தைப் பாருங்கள். பரிசுத்த குர்ஆன் பறை சாற்றுகிறது:

'நிச்சயமாக வானங்களும், பூமியும் (ஒன்றை விட்டு ஒன்று) விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கிறான்: அவை இரண்டும் விலகுமாயின், அதற்கு பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது..'(அல்-குர்ஆன் 35வது அத்தியாயம் ஸுரத்துல் ஃபா(த்)திர் 41வது வசனம்).

இந்த வசனத்தில் வானங்களும், பூமியும் விலகும் வாய்ப்பைக் கொண்டன என்றும், ஆனால் அவை விலகி விடாத ஏற்பாடு ஒன்றை அமைத்து, அவை விலகும் வாய்ப்பைத் தடுத்துக் கொண்டிருப்பதாகவும் இறைவன் கூறுகிறான்.

இந்த அற்புத வசனம் அறிவியல் வாயிலாக நிரூபிக்கப்பட வேண்டுமாயின் பூமியும், ஆகாயமும் விலகும் வாய்ப்பு இருக்கிறதா? என முதலாவதாக நாம் ஆய்வு செய்ய வேண்டும். நாம் இதைக் கூறும்போது.. என்னய்யா உளறுகிறீர்கள்?. விண்ணும் மண்ணும் விலகக் கூடியதா?. முடியாது எனக் கூறித் தாங்கள் கற்றுணர்ந்ததைக் கூடப் பொருத்திப் பார்க்காத அல்லது பொருத்திப் பார்க்க விரும்பாத கல்விமான்களை இந்த நூற்றாண்டில் கூட நாம் பார்க்கிறோம். நிலமை இவ்வாறிருக்க 1400 ஆண்டுகளுக்கு முந்திய அறியாமை காலத்தில் வாழ்ந்த எந்த மனிதனாவது இந்த அறிவியல் பேருண்மையைக் கற்பனை செய்து பார்த்திருக்க முடியுமா?. இருந்தும் அந்த மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்கிறார் என்றால் இது அவருடைய சொந்த வார்த்தை அல்ல என்றும், விண்ணும் மண்ணும் படைத்து, அவை விலகாமல் இருக்கும் செயல் முறைகளையும் அவைகளில் வடிவமைத்தவன் யாரோ, அவனுடைய வார்த்தைகளே என்றும் ஏற்பதில் தயக்கம் காட்டுவது முறைதானா?.

விண்ணும், மண்ணும் விலகிப்போகும் வாய்ப்பைக் கொண்டன எனப் பறை சாற்றியதே பரிசுத்தக் குர்ஆன், அதை நிரூபிக்கக் கூடிய அறிவியல் சான்றுகள் எவை?. இதற்கு விடைகாணும் பொருட்டு இந்தப் பரிசுத்த குர்ஆனின் வசனத்திடம் மேலும் சற்று நெருங்கிச் செல்வோம்.

முதலாவதாக இவ்வசனம் விண்ணும், மண்ணும் விலகி விடாமல் தடுக்கப்படுகிறது எனக் கூறுவதிலிருந்து மண்ணானது (பூகோளம்) ஆகாயத்தில் பொருந்தியே இருக்கிறது. அவைகளுக்கிடையில் எந்த இடைவெளியும் இல்லை எனக் கூறுகிறது. இதை வலியுறுத்தும் ஏனைய ஆதாரங்களுள் மேலும் ஒன்றைக் கவனியுங்கள்.

'ஆகாயத்தில் கிரகங்களுக்கான (கோள்களுக்கான) பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து, பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 15 ஸுரத்துல் ஹிஜ்ர் - 16வது வசனம்).

இந்த வசனமும் கோள்களைச் சுற்றி ஏதேனும் இடைவெளி இருப்பதாகவோ, அப்படிப்பட்ட இடைவெளிகளில்தான் கோள்கள் இருப்பதாகவோ கூறவில்லை. மாறாகக் கோள்கள் இருப்பது ஆகாயத்தில்தான் எனக் கூறுகிறது. இதிலிருந்து பூகோளத்திற்கு மேல் போர்த்தப் பட்டுள்ள காற்று மண்டலமும் ஆகாயத்தைச் சார்ந்த பகுதியே என்பது தெளிவாகிறது.

இந்த இடத்தில் மற்றொரு ஐயமும் எழலாம். 'ஆகாயத்தை ஒரு கூரையாக ஆக்கினான்' என்று குர்ஆன் கூறிய (40:64) வசனம், காற்று மண்டலத்தை மிகத் துல்லியமாக பிரதிபலிக்கிறதே. ஆகவே கூரையாக ஆக்கப்பட்ட இப்பகுதியை இதற்கு மேலும் நாம் ஆகாயம் என்று எடுத்துக் கொள்ளலாமா? என்பதே அந்த ஐயமாக இருக்கும். இந்த ஐயத்திற்கும் பரிசுத்த குர்ஆன் பதிலளிக்கிறது.

'இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம். பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம்?' (அல்-குர்ஆன் அத்தியாயம் 15 ஸுரத்துல் ஹிஜ்ர் - 22வது வசனம்).

இந்த வசனத்தில் மழையை அனுப்புவது ஆகாயத்திலிருந்தே எனக் கூறுகிறது குர்ஆன். மழை புறப்படும் இடம் ஆகாயம் எனக் குர்ஆன் கூறுவதால், மழை புறப்படும் இடமாகிய காற்று மண்டலம் ஆகாயத்திலிருந்து தனிமைப் படுத்தப்பட்ட பகுதியல்ல என்பதையும் பரிசுத்த குர்ஆனே விளக்குகிறது. எனவே ஆகாயம் என்ற சொல் காற்று மண்டலத்தையும் உள்ளடக்கியதே என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

மேற்கண்ட வசனங்களிலிருந்து பூகோளத்தைப் பொருத்தவரை ஆகாயத்தின் கீழ் எல்லை எது எனத் தெரிந்து விட்டது. பூகோளம் (ஏனையக் கோள்களும்) இடைவெளியின்றி ஆகாயத்தில் பொருந்தியிருப்பதால், பூகோளத்தின் மேற்பரப்பிலிருந்து ஆகாயம் பரவியிருக்கிறது என்பது தெளிவாகிறது.

ஆகாயத்தின் கீழெல்லையைக் கண்டு விட்டோம். சரி. ஆகாயத்தின் மேலெல்லையைப் பற்றி திருக்குர்ஆன் ஏதேனும் கூறுகிறதா?. நிச்சயமாக கூறுகிறது. ஆகாயத்தின் மேலெல்லையைப் பற்றி அதற்குரிய ஆதாரங்களுடன் அருள்மறை குர்ஆன் கூறவே செய்கிறது.

'நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் ஆகாயத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அலங்கரித்தோம்.' (அருள்மறை குர்ஆன் 37 வது அத்தியாயம் ஸுரத்துஸ் ஸாஃப்ஃபாத் 6வது வசனம்)

'ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?. இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.' (அருள்மறை குர்ஆன் 71வது அத்தியாயம் ஸுரத்துஸ் ஸாஃப்ஃபாத் 6வது வசனம்).

மேற்கண்ட வசனங்களிலிருந்து இத்தலைப்புக்குத் தேவையான விபரங்களை மட்டும் பார்ப்போம். ஆகாயங்கள் மொத்தம் ஏழு எனவும், பூமிக்குரிய ஆகாயமே நட்சத்திரங்களின் அழகால் அலங்கரிக்கப் பட்டுள்ளது எனவும் எல்லா ஆகாயங்களிலும் நட்சத்திரங்கள் (சூரியன்), துணைக்கோள்கள் (சந்திரன்) உள்ளடங்கியுள்ளன எனவும் குர்ஆன் கூறுகிறது.

(குறிப்பு: இவ்வசனத்தில் காணப்படும் ஆகாயத்தின் எண்ணிக்கை ஏழு என்பதை மட்டுமே அறிவியல் இதுவரை புரிந்து கொள்ளாமல் இருக்கிறது. ஏனைய விஷயங்கள் யாவற்றையும் அறிவியல் உண்மை என நிரூபித்துவிட்டது. இன்ஷா அல்லாஹ் அவைகளை நாம் இனிவரும் அதற்குரிய தலைப்புகளில் விவாதிப்போம்.)

மேற்கண்ட வசனத்தில் ஆகாயங்கள் யாவும் நட்சத்திரங்களை உள்ளடக்கி இருக்கின்றன என கூறுவதிலிருந்து, ஆகாயத்தின் மேலெல்லையும் நட்சத்திரங்களை உள்ளடக்கி நிற்கிறது எனக் காண்கிறோம்.

'நட்சத்திரங்களை உள்ளடக்கி நிற்கிறது' என்று கூறினால் என்ன பொருள்?. பிரபஞ்சம் முழுவதும் நட்சத்திரங்கள் பரவி, அந்த நட்சத்திரங்களை உள்ளடக்கும் விதத்தில் ஆகாயமும் பரவி எல்லையே இல்லாமல் ஒரே பெருவெளிதானா?. அல்லது பிரபஞ்சத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதி வரை ஆகாயமும், அதிலுள்ள நட்சத்திரங்களும் பரவி, பிரபஞ்சத்திலிருந்து தனிப்பட்ட, தனியொரு பொருளாக ஆகாயம் இருக்கிறதா? என்ற வினா இப்போது எழுகிறது. இந்த வினாவுக்கும் பரிசுத்த குர்ஆனே விடையளிக்கிறது:

'ஜின் (மற்றும்) மனித சமூகத்தினரே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளை கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்..' (அருள்மறை குர்ஆன் அத்தியாயம் 55 ஸுரத்துர் ரஹ்மான் - 33 வது வசனம்)

மேற்படி வசனம் பிரபஞ்சம் முழுவதுமே ஆகாயமன்று. ஆகாயங்களுக்கும் நிச்சயமாக ஓர்; எல்லை இருக்கிறது. எனவே ஆகாயம் எனத் தனியான ஒரு அமைப்பு இருக்கவே செய்கிறது என்பதை தெளிவாக அறிவிக்கிறது.

இதுவரை நாம் கண்ட விஷயங்களில் இருந்து பூமியின் மேற்பரப்பிலிருந்து துவங்கிக் கோள்களையும், துணைக் கோள்களையும், நட்சத்திரங்களையும் உள்ளடக்கிய அகன்ற பெருவெளியாய்ப் பரவி, அதே சமயத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கும் உட்பட்டு தனிச் சிறப்புடன் விளங்குவதே ஆகாயம் (பேரண்டம்) எனக் கண்டோம்.

விண்ணகப் பருப்பொருட்கள் யாவற்றையும் உள்ளடக்கி, நெடிதுயர்ந்து பரவிக் கிடக்கும் பேரண்டப் பெருவெளி. அதில் ஏனைய பருப்பொருட்களைப் போல் இடைவெளி ஏதுமின்றி பொருந்தி நிற்கும் பூகோளம். இந்த பூகோளம், அது பொருந்தி நிற்கும் பேரண்டப் பெருவெளியிலிருந்து விலகிச் செல்லும் வாய்ப்பைக் கொண்டதா?. ஆம் எனில் அது விலகிச் செல்கிறதா?. இல்லையெனில் அந்த விலகலைத் தடுக்கும் சக்தி ஒன்று அதற்குள் செயல்படுகிறதா?. இதுவே நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் கருப்பொருள்.

பரிசுத்த குர்ஆனின் பிரகடனத்தை, அதன் உண்மை நிலையை நமக்குக் கற்றுத்தர, அருள்மறை குர்ஆன் மேலும் கூறுகிறது:

'இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான்: (அவை) யாவும் (அவைகளுக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் செல்கின்றன.' (அருள்மறை குர்ஆன் 21வது அத்தியாயம் ஸுரத்துல் அன்பியா - 33வது வசனம்).

அற்புதம்தான்! நவீன வான சாஸ்திரத்தின் திறவுகோலையும் நமக்களித்து, நாம் தேடிச் செல்லும் கருப்பொருளின் நுழைவாயிலுக்கே நம்மை அழைத்துச் செல்கிறது ஒப்பற்ற இறை வேதத்தின் மெய்யான இந்த பரிசுத்த வசனம்.

என்ன கூறுகிறது இந்த வசனம்? விண்ணில் காணப்படும் சூரியன், சந்திரன், உள்ளிட்ட பருப்பொருட்கள் யாவும் ஒரே இடத்தில் ஓய்ந்திருக்காமல் அவைகளுக்கென்றே இருக்கும் மண்டலங்களில் அவை ஒவ்வொன்றும் பயணம் செய்கின்றன எனக் கூறுகிறது.

அற்புதமல்லவா! இது புவி மையக் கோட்பாட்டை (Earth Centre Theory) தகர்த்தெறியவில்லையா?. (இது புவி மையக் கோட்பாட்டை Earth Centre Theory என்றால் என்ன என்பதை இன்ஷா அல்லாஹ் பின்னர் விளக்குவோம்) எங்கிருக்கிறீர்கள் நண்பர்களே!. இதில் எதை நீங்கள் மறுக்கிறீர்கள்?. விண்ணகப் பருப்பொருட்களின் (Celestial Bodies) சலனத்தை மறுக்கிறீர்களா?. அல்லது அவைகளுக்குரிய மண்டலத்தை (Orbit) மறுக்கிறீர்களா?. இல்லை. இரண்டையுமே நீங்கள் ஒப்புக் கொண்டு இந்த வசனம் மெய்யான வசனமே என உங்களை அறிந்தோ - அறியாமலோ அதற்கு சாட்சியாக நிற்கிறீர்கள்.

பரிசுத்த குர்ஆனை மெய்ப்பிக்க வந்த அறிவியல், இந்த விண்ணகப் பருப்பொருட்களின் சலனத்தைப் பற்றி என்ன கூறுகிறது?.

சந்திரன் மணிக்கு 3,600 கி.மீ. வேகத்தில் செல்கிறது. பூமியானது மணிக்கு 1,08,000 கி.மீ. வேகத்தில் ஓடுகின்றது. சூரியன் மணிக்கு 9,00,000 கி.மீ. வேகத்தில் பாய்கிறது எனக் கூறுகிறது அறிவியல்.

சூரியன் மட்டும்தான் ஓடுகின்றதா? ஏனைய நட்சத்திரங்கள் ஓடவில்லையா?. ஏனில்லை?. அனைத்தும் ஓடுகின்றன. வானியல் அறிஞர்கள் நிறமாலை நோக்கிகளின் (Spectroscops) துணை கொண்டு விண்ணை ஆய்வு செய்யக் கற்றுக் கொண்ட பின் விண்ணில் எதுவும் ஓய்ந்திருக்கவில்லை: யாவும் அவைகளுக்குரிய திசைகளிலும், திசை வேகத்திலும் (Orbital Velocity) சென்று கொண்டிருக்கின்றன எனக் கூறிப் பரிசுத்த குர்ஆன் மெய்யான இறைவேதமே என்பதற்கு தன்னையே சாட்சியாக அர்ப்பணித்து நிற்கிறது.

அறிவியல் அபிமானிகளே! நாம் வசிக்கும் இந்த பூமி ஓரிடத்தில் ஓய்ந்திருக்காமல் அதன் பாட்டுக்கு மணிக்கு 1,08,000 கி. மீ. வேகத்தில் ஓட்டம் பிடித்தால் என்றேனும் ஒரு நாள் இந்த பூகோளம் பேரண்டத்தின் எல்லையை தாண்டுமா, தாண்டாதா?. அதுதான் போகட்டும் - கோடிக்கணக்கான வருடங்களாக இந்த நிகழ்ச்சிப் போக்கு நடந்து கொண்டிருக்கையில் குறைந்த பட்சம் இந்த பூமி அது உள்ளடங்கியிருக்கும் பால்வழி மண்டலத்தையாவது (Milky Way Galaxy) என்றோ தாண்டியிருக்க வேண்டாமா?. தாண்டியே சென்றிருக்க வேண்டும். ஆனால் ஏன் தாண்டவில்லை?.

ஆகாயத்திற்கு ஓர் எல்லை உண்டு என்று பரிசுத்த குர்ஆன் கூறியதையோ, அல்லது பால்வழி மண்டலம் (அதைப்போன்று பற்பலவும்) உண்டு என அதே பரிசுத்த குர்ஆன் கூறுவதையோ (இதுபற்றிய விபரம் இன்ஷா அல்லாஹ் வேறு தலைப்பில் ஆய்வு செய்வோம்) நீங்கள் மறுக்கிறீர்களா?. இல்லை. நவீன அறிவியலின் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகள் (Telescope) பேரண்டத்தின் எல்லைகளையே நமக்குக் காட்டி, இப்பேரண்டம் ஓர் எல்லைக்குட்பட்டதே என 1400 வருடங்களுக்கு முன்பே அறிவியல் பேருலகில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய பரிசுத்த குர்ஆனை மெய்ப்பித்து நிற்கையில் நீங்கள் குர்ஆனை மறுக்க முடியாது. பேரண்டத்திற்கு ஓர் எல்லை இருப்பதும் உண்மை: அந்தப் பேரண்டத்திற்குள் பூகோளமும், ஏனைய யாவும் விண்ணோட்டம் நிகழ்த்தி கொண்டிருப்பதும் மெய்யே என ஒப்புக் கொண்ட பிறகு, விண்ணோடிக் கொண்டிருக்கும் இப்பொருட்கள் என்றேனும் ஒரு நாள் அதற்குள்ளிலிருந்து விலகிச் செல்லுமா, செல்லாதா என்ற வினா எழுகிறதா இல்லையா?.

அறிவார்ந்த நண்பர்களே! மேற்கண்ட அதே வினாவை வேறு வார்த்தைகளில் கேட்டால் எப்படிக் கேட்கலாம்?. ஆகாயமும், பூமியும் விலகுவதற்குரிய வாய்ப்பு உண்டா என்று கேட்கலாம். இப்படியொரு கேள்வியைக் கேட்க வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த ஞானக் களஞ்சியமாம் பரிசுத்த குர்ஆன் (அதை மெய்ப்பிக்க வந்த அறிவியலும்) அறைந்தது: விலகாது! விலகவே விலகாது! ஏனெனில் விலகாதவாறு அவைகளைப் படைத்த அதியற்புதப் படைப்பாளனாகிய அதனுடைய படைப்பாளன்தான் அதனைத் தடுத்துக் கொண்டிருக்கிறான் என்று.

(இந்த இடத்தில் சகோதரர்கள் யாரும் அவசரப் பட வேண்டாம். இவை யாவும் ஒரு குறிப்பிட்ட தவணை (35:45) வரைதான் என்பதை வேறு தலைப்பில் நாம் விவாதிப்போம், இன்ஷா அல்லாஹ்)

விண்ணும், மண்ணும் விலகாமல் தடுக்கப்படுகிறது என்று கூறுகிறதே பரிசுத்த குர்ஆன். இதிலாவது உங்கள் எவருக்கும் ஐயம் ஏற்படுமா?. அப்படி ஏதேனும் ஐயம் ஏற்படுமேயானால் இரண்டு காரணங்களால் உங்கள் ஐயம் விலகியாக வேண்டும். முதல் காரணம் மெய்யாகவே பூகோளத்தின் விண்ணோட்டம் பேரண்டத்தின் எல்லையைத் தாண்டும் இலக்கில் அமைந்திருந்தால் தற்போது நமது பூமி பால்வழி மண்டலத்தில் இருந்திருக்க முடியாது. ஏன்?. ஏனென்றால் பூமியின் திசை வேகம் இம்மண்டலத்தை என்றோ - அதைத் தாண்டச் செய்திருக்கும். எப்படி?.

எப்படியென்பதைப் பார்ப்போம். பால்வழி மண்டலத்தின் பருமன் 10,000 ஒளியாண்டுகள் ஆகும். ஒளியாண்டு (Light year) என்பது ஒரு மூலப் பொருளிலிருந்த புறப்படும் ஒளி வருடம் முழுவதும் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தால் எவ்வளவு தொலைவை அது கடக்குமோ, அவ்வளவு தொலைவு என்பது அதன் பொருள். ஒளி ஒரு வினாடியில் செல்லும் தொலைவு (தூரம்) 3,00,000 கி. மீ. ஆகும். இதன்படி நிதானமாகக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு மணி நேர ஒளித்தூரம் என்பது 10,000 மணிநேர பூமி பயணத் தூரத்திற்கு சமமாகும். ஆகவே 10,000 ஒளி வருடப் பருமன் கொண்ட பால்வழி மண்டலத்தை பூகோளம் வெறும் 10 கோடி வருடத்திற்குள்ளாகவே கடந்து சென்றிருக்கும். ஆனால் பேரண்டத்தில் பூகோளம் உருவாகி 500 கோடி வருடங்களாக பூகோளத்தின் விண்ணோட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தும் கூட, இந்த பூகோளம் பால்வழி பெருமண்டலத்திலேயேதான் இருந்து வருகிறது. ஆகவே விண்ணும், மண்ணும் விலகாமல் தடுக்கப்படுகிறது என்று கூறும் பரிசுத்தக் குர்ஆனை நம்பித்தான் ஆக வேண்டும் என முதல் காரணத்தில் காணப்படும் அறிவியல் பேருண்மையே நம்மீது நிர்ப்பந்தம் செலுத்துகிறது.

அருமை நண்பர்களே! அறிவியல் அபிமானிகளே! அடுத்த காரணத்தைக் காண்போம்.

(வளரும் இன்ஷா அல்லாஹ்)

Wednesday, August 03, 2005

வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும்-3

ஓசோன் -3

ஏ.கே.அப்துர் ரஹ்மான்

மேல்கார்த், மோலாக், ரா, போபஸ், அப்போலோ, சமாஷ், கிசால்கோட் யாரில்..பகவான்(?)..
மேற்கண்ட பெயர்களாலும், இன்னும் மேலே குறிப்பிடப்படாத பெயர்களாலும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த மக்கள் வெள்ளத்தால் அனுதினமும் பக்தி சிரத்தையோடு கடவுளாக(?) வழிபட்டு வரபட்ட அப்பொருள்தான் சூரியன் எனும் நெருப்புக் கோளமாகும். இப்பொருள் மக்கள் எண்ணிக் கொண்டிருப்பதைப் போன்று கடவுள் இல்லை. மாறாக அது ஒரு நூறு கி.மீ. குறுக்களவைக் கொண்ட எரியும் பாறைப் பொருள்தான் என கி.மு. 434ல் கூறிய அனக்ஸாகரஸ் (Anaxagoras 500-428 B.C.)எனும் அறிவியல் சிந்தனையாளர் மூட நம்பிக்கையாளர்களால் சித்திரவதைக்குள்ளாகிய வரலாறுகள் இந்த பூமியில் நிகழ்ந்த பின்னும் சத்தியத் திருமறையாம் தூய குர்ஆன் மூட நம்பிக்கையாளர்களின் கடவுளைப்(?) பற்றித் தெள்ளத் தெளிவான குரலில் ஓங்கி ஒலிக்கிறது.

'..சூரியனையும் சந்திரனையும் அவனே படைத்தான்'. (அல்-குர்ஆன் அத்தியாயம் 21 ஸூரத்துல் அன்பியாவின் 33வது வசனத்தின் ஒரு பகுதி)

'..அவைகளில் சூரியனை விளக்காகவும், சந்திரனை பிரகாசமாகவும் ஆக்கியிருக்கிறான்;'. (அல்-குர்ஆன் அத்தியாயம் 71 ஸூரத்துந் நூஹ் - ன் 16வது வசனம்)

'..மேலும் சூரியனையும், சந்திரனையும் அவை (தவறாமல்) தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் வண்ணம் (மானிடர்களாகிய) உங்களுக்கு வசப்படுத்தி தந்துள்ளான்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 14 ஸூரத்துல் இப்ராஹிம் 33வது வசனம்)

மேற்கண்ட வசனங்கள் சூரியனைப் படைக்கப்பட்ட பொருள் எனக் கூறுவதால் சூரியன் படைப்பாளன் (கடவுள்) இல்லை: அது ஒரு படைப்பினமே எனக் கூறுகிறது. மேலும் சூரியனை விளக்கு என்று கூறுவதால் அது ஓர் எரியும் பொருள் எனக் கூறுகிறது. அத்துடன் சூரியன் தன்னுடைய இயற்பியல் விதியிலிருந்து இம்மியும் பிசகாமல் இயக்கப்படுவதால் இயற்பியல் விதிகளைப் பயன்படுத்தி வளமும் வலிமையும் பெற்றுவரும் மனித சமுதாயத்திற்குத் தான் சூரியன் வசப்படுத்தப் பட்டுள்ளதேயன்றிச் சூரியனுக்கு வசப்பட்டவர்களாக மனிதர்கள் இல்லை எனக் கூறுகிறது.

குர்ஆன் கூறுகின்ற சூரியன் சம்பந்தப்பட்ட இந்த அறிவியல் தகவல்கள் யாவும் உண்மையென்றால் இதற்குப் பிறகும் கடவுளுக்குரிய இடத்தில் சூரியனை வைத்துப் பார்ப்பது கடவுளை நிந்திக்கும் செயலாகும். அத்துடன் தமக்கு வசப்பட்டிருப்பதற்கு மட்டுமே சக்தி பெற்ற ஒன்றைத் தாமே வழிபடுவது என்பது தம்மைத்தாமே நிந்தனை செய்யும் செயலாகவும் அமைந்து விடுகிறது.

தம்மைத் தாமே நிந்தனையில் தள்ளும் ஒருவர் மதிக்கப்படல் சாத்தியமா?

நவீன வானியல் விஞ்ஞானம் சூரியன் என்பது அதற்குரிய இயற்பியல் விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் ஓர் எரியும் கோளம் எனக் கூறுவதை அறியாதோர் யாரும் இந்த நூற்றாண்டில் இருக்க மாட்டார்கள். பதின்மூன்று இலட்சத்துத் தொள்ளாயிரம் கி.மீ.விட்டமும், பூமியைப் போன்று முப்பது இலட்சத்து முப்பதாயிரம் மடங்கு எடையும் (பூமியின் எடை 5,974,000,000,000,000,000,000 டன்கள்) கொண்ட இப்பொருளின் உள்ளே நமது கடல் மட்டத்தில் காணப்படும் அழுத்தத்தைக் காட்டிலும் நூறு கோடி மடங்கு அழுத்தமும் காணப்படுகிறது.

இப்படிப்பட்ட படுபயங்கரமான அழுத்தத்தின் கீழ் சூரியனுடைய உடலின் பெரும்பகுதியாகிய ஹைட்ரஜன் (Hydrogen) அணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து ஹீலியமாக (Heleum) மாறி வெளியிடப்படுகிறது. இதன் காரணமாக சூரியனின் மையத்தில் 1.5 -, 2 ஆயிரம் கோடி சென்டிகிரேட் வெப்பமும் புறப்பரப்பின் மீது ஆறாயிரம் டிகிரி வெப்பமும் காணப்படுகிறது. இவ்வாறு ஒரு பொருள் மற்றொரு பொருளாக இரசாயண மாற்றம் அடைந்து வெப்பத்தை வெளியிடும் நிகழ்ச்சி சூரியனில் நடைபெற்று வருவதால் இயற்பியல் அடிப்படையில் சூரியன் ஓர் எரியும் பொருள் என்று கூறுகிறோம்.

இப்படிப்பட்ட பிரம்மாண்டமான அணு உலையாம் சூரியனிலிருந்து விண்ணெங்கும் பாய்ந்தோடி வரும் அதன் ஒளிக்கதிர்களில் புற ஊதாக் கதிர்கள் (Ultra Violet Rays) என்பதும் ஒன்று. இந்த ஒளிக்கதிர்கள் மனிதர்கள் மட்டுமின்றி உயிரினங்கள் அனைத்துக்குமே பெரும்கேடு விளைவிக்கக் கூடியவையாகும். இக்கதிர்கள் நேராக பூமியை அடையுமானால் இப்பூலகின் மீது மனிதர்கள் மட்டுமின்றிப் புற்பூண்டுகள் முதற்கொண்டு அழிக்கப்பட்டு உயிரின் சுவடே இல்லாத ஒரு கோளாக இந்த பூமி ஆக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த பூமியன் மீது பலகோடி வருடங்களாக அழிவைத் தரும் இக்கதிர்களால் எவ்விதப் பாதிப்புமின்றி உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன! இது எப்படி சாத்தியமாயிற்று!?.

ஒருகால்..'அந்தோ பரிதாபம்! நமது புற ஊதாக் கதிர்கள் உயிரினங்களுக்குப் பெரும் கேடு விளைவிக்கக் கூடியவை. எனவே அக்கதிர்களில் எதையும் நாம் பூமிக்கு அனுப்பக் கூடாது'. எனக் கருதி, சூரியன் தானே தன் அழிவுக்கதிர்களை பூமிக்கு அனுப்பாமல் விலகிக் கொண்டதா? அதனால்தான் மானிடர்களில் பலர் இன்னமும் இதனை கடவுளாய் வழிபட்டுக் கொண்டிருக்கிறார்களா?.

அப்படியெல்லாம் எதுவுமில்லை! ஒரு மைக்ரோ செகண்ட் (ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு) கூட ஓய்வின்றித் தன் அழிவுக் கதிர்களை நமது பூமியின் மீது வாரி வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது இந்த நெருப்புக் கோளம் எனக் கூறுகிறார்கள் நவீன அறிவியல் வல்லுனர்கள்.

அன்பார்ந்த நண்பர்களே! இந்த இடத்தில் நாம் ஒரு கணமாவது சிந்திக்கக் கடமை பட்டுள்ளோம். கணமும் தப்பாமல் சூரியனுடைய அழிவுக் கதிர்கள் மடையுடைத்த வெள்ளமாய் நம்மீது கொட்டப்படுகின்றன. ஆனால் நாமோ பல்லாயிரம் வருடங்களாக அதன்கீழ் அழிவின்றி வாழ்ந்து வருகிறோம். உண்மைநிலை இதுவென்றால் சிந்தனைத் திறனை உலகப் பேரரங்கில் அடகு வைக்காத அறிவியல் அன்பர்களே! நீங்கள் கூறுங்கள்! நம்மீது படாதவாறு தடுத்துக் கொண்டிருக்கும் அதியற்புதத் தடுப்பொன்று நமக்கு மேல் இருக்க வேண்டுமா வேண்டாமா?

சிந்தனைத் திறம் பெற்றவர்களே! அறிவுசார், அறிவியல் சார் அன்பர்களே! நம்மீது பாய்ந்து வரும் இந்த அழிவுக்கதிர்கள் நம்மீது விழா வண்ணம் தடுக்கும் கூரையொன்று நமக்கு மேல் இல்லாவிடில் நம்மால் இங்கு வாழ முடியுமா? இதற்கு மேலும் சத்தியத் திருமறையின் கூற்றாம்:

'வானத்தை நாம் பாதுகாக்கப்பட்ட கூரையாக அமைத்தோம். எனினும் அவர்கள் (நிராகரிப்போர்) அதிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணிக்கின்றார்கள்.' (அல்-குர்ஆன் 21வது அத்தியாயம் ஸூரத்துல் அன்பியா - 32வது வசனம்) எனும் ஜீவ வசனத்தை ஒருவர் மறுத்து, பூமிக்குக் கூரை கிடையாது எனக் கூறத் துணிவார்?. அப்படிக் கூறினால் குர்ஆனை மறுப்பதாக நினைத்துக் கொண்டு அவர் செய்யும் காரியத்தால் 'அவர் பத்தும் சொல்வார்;. போகட்டும்' என அவரைக் கண்டு கொள்ளாமல் அறிவியல் உலகம் விட்டுவிடும் என்பதை அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். எனவே இப்படிப்பட்ட காரியத்தை எந்த அறிவியல் வாதியும் செய்யத் துணிய மாட்டார்.

சூரியப் பேருலையிலிருந்து ஓயாது பாய்ந்து வரும் இப்புற ஊதாக் கதிர்களை எங்கள் மீது விழா வண்ணம் தடுத்துக் கொண்டிருக்கும் கூரையே! நீ எங்கிருக்கிறாய்? மெய்யான உன் படைப்பாளனின் வார்த்தைகள்தாம் குர்ஆன் என்பதற்கு நீ வழங்கிக் கொண்டிருக்கும் சாட்சியமெங்கே!?.

இதோ..! ஓசோன் (OZONE) என்பதே இக்கூரைக்கு அறிவியலாளர்கள் சூட்டியிருக்கும் பெயர். உயிரினங்களின் ஜீவகவசமாகிய இப்பொருள் நமது கூரையின் மொத்த உருவமாகிய காற்று மண்டலத்தின் ஒரு மெல்லிய கீற்று (அடுக்கு) ஆகும். இப்பொருள் நமக்கு மிகவும் அறிமுகமான பிராண வாயுவின் (Oxygen) வேறொரு வடிவமாகும். இதைச் சற்றுச் சுருக்கமாகப் பார்ப்போம்.

எந்த ஒரு பொருளையும் துண்டு துண்டாக வெட்டிக் கொண்டே சென்றால் ஒரு குறிப்பிட்ட நிலையில்; அதை வெட்ட முடியாத நிலையை அடையும். கட்புலணாகாத இப்பொருளை மூலக்கூறு (Molecule) எனக் கூறலாம். மிக நுண்மையான இப்பொருளைத் தேவையான ஆற்றல் செலுத்தி மேலும் தனித் தனிப் பொருட்களாக பிரிக்கலாம். இவ்வாறு பிரியும் அந்த மிக, மிக நுண்ணிய பொருட்கள் அணு (Atom) எனப்படும். (அதை மேலும் பிரிக்க ஏராளமான ஆற்றல் தேவை) ஒரு பொருளைத் தனித்தனி அணுக்களாகப் பிரித்து அவைகளைச் சுதந்திரமாக விட்டுவிட்டால் அவைத் தொடர்ந்து அணுக்களாகவே இருந்து விடாது. அவை உடனே மூலக் கூறுகளாக இணைந்து விடும். இப்படிப்பட்ட மூலக் கூறுகளின் தொகுப்புகளே பொருட்களாகும்.

நமது பிராணவாயு என்பதும் மூலக்கூறுகளின் தொகுப்பேயாகும். மூலக்கூறுகள் அனைத்தும் ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்களின் தொகுதிகளாகும். பிராணவாயுவைப் பொருத்தவரை அதனுடைய மூலக் கூறில் இரண்டு அணுக்கள் இருக்கும். சில காரணங்களால் பிராணவாயு அதன் மூலக் கூறில் மூன்று அணுக்களைக் கொண்டிருக்கும். இவ்வாறு பிராண வாயுவின் மூன்று அணுக்கள் அதன் மூலக் கூறில் இடம்பெற்றால் அதன் பிறகு அது பிராண வாயுவின் குணத்திலிருந்து மாறுபட்ட பொருளாக மாறும். இதுவே ஓசோனாகும். ஓசோன் என்னும் இந்த வாயுப் பொருள்தான் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களைப் பூமியின் மீது விழ விடாமல் உட்கிரகித்துப் பூமிக்கு கூரையாக செயல்பட்டு வருகிறது எனக் கூறி 20 ஆம் நூற்றாண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள் தூய குர்ஆன் மெய்யான இறைவேதம் என்பதற்கு சாட்சியாக நிற்கின்றன.

இவ்வாறு பூமிக்குக் கவசமிட்டு நிற்கும் கூரையைப் பற்றித்தான் சத்தியத் திருமறை அது ஒரு பாதுகாக்கப்பட்ட பொருள் எனக் கூறுகிறது. எனவே நமது கூரையாக செயல்படும் ஓசோன் படலத்துக்கும், ஏதோ பிரச்னை என்றும், அப்பிரச்னையிலிருந்து அது பாதுகாக்கப்பட்டு வருகின்றது என்றும் இந்த வசனத்திலிருந்து முன்போல் (முந்தைய கட்டுரையில் கண்டதுபோல்) இப்போதும் விளங்குகிறது. அப்படியானால் ஓசோனுக்கும் பிரச்னையுண்டா?.

ஓசோனுக்கும் பிரச்னையுண்டு எனக் கூறுகிறார்கள் அறிவியலாளர்கள். ஓசோன் என்பது பிராணவாயுவின் இரண்டு அணுக்களுக்குப் பதிலாக (O2) அதன் மூன்று அணுக்களால் (O3) ஆன மூலக்கூறு எனக் கண்டோம். அதே நேரத்தில் மூலக்கூறு (O2) ஓசோனாக (O3) மாற்றம் அடையும் போது பிராண வாயுவைப் போன்று (O2) நீடித்து நிற்கும் (Stability) தன்மையை இழந்து விரைவில் சிதைந்து தனித் தனி அணுக்களாக மாற்றமடைந்து மீண்டும் பிராணவாயுவாக (O2) ஓசோன் (O3) மாறிவிடுகிறது.

ஓசோனுடைய இந்த குறுகிய ஆயுள் காரணமாக இதைத் தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டிருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதுவே ஓசோன் படலத்தில் காணப்படும் பிரச்னை என்று கூறுகிறார்கள் அறிவியலாளர்கள்.

பிரச்னை என்றால் இஃதன்றோ பெரும் பிரச்னை! எங்கள் இறைவா! என்னென்ன பிரச்னைகள் எங்களைச் சூழந்து நிற்கின்றன! கோடிக்கணக்கான வருடங்களாய் உயிரினங்கள் வாழ்ந்து வரும் இப்பூவுலகுக்குக் கூரையாய் அமைந்து நிற்கும் ஒரு பொருளுக்கு இவ்வளவு அற்ப ஆயுளா? ஒரு கணமும் ஓய்வின்றி நீ எங்கள் கூரையைப் புதுப்பித்துக் கொண்டிராவிடில் நாங்கள் இங்கு உயிர் வாழ்வது எங்ஙனம்? ஆகவே நாங்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே கூரை பாதுகாக்கப்பட்டு வருகிறது என நீ கூறியதற்கு நிறைவான ஆதாரமாகும். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில்கூட சுக சுந்தரமாக நீ எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே உன்னை மறுத்துரைக்க எப்படித்தான் அறிவு இடம் கொடுக்குமோ?

சூரியனுடைய புற ஊதாக் கதிர்களை உட்கிரகித்தவாறு ஓயாமல் சிதைந்து கொண்டிருக்கும் ஓசோன் படலம் பாதுகாக்கப்பட்டு வரும் மர்மம்தான் என்ன?

அன்பார்ந்த நண்பர்களே! இதற்குரிய விடையான அண்மைக்கால அறிவியல் கண்டு பிடிப்புகளைத் தெரிந்து கொண்ட ஒருவர் இத்தூய குர்ஆனின் பக்கங்களைப் புரட்டினால் அவரை வியப்படையச் செய்யும் வசனம் ஒன்றை அவர் கண்ணுறுவார். குர்ஆன் கூறுகிறது:

'மேலும் அச்சமும் ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலை காட்டுவதும் வானத்திலிருந்து மழை பொழியச் செய்து அதைக் கொண்டு பூமியை அது இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன. நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.' (அல்-குர்ஆன் 30வது அத்தியாயம் ஸூரத்துர் ரூம் - 24வது வசனம்)

இந்த வசனத்திலிருந்து இறந்து கிடக்கும் பூமியை உயிர்ப்பிப்பதில் மழை, மின்னல் என இரு நிகழ்ச்சிகளின் செயல்பாடுகள் உள்ளடங்கியிருப்பதாக நம்மால் காண முடிகிறது. நீரின்றி உயிரினம் இல்லை என்பதால், இதில் மழையின் செயற்பாடு என்ன என்பதை நாம் எளிதில் விளங்குகிறோம். ஆனால் இந்த வசனத்தில் உயிர்பிக்கும் நிகழ்ச்சியில் மின்னலும் இடம்பெறுவதாக காண முடிகிறதே? மின்னலுக்கும் உயிரினத்திற்கும் என்ன தொடர்பு?

மின்னல் என்பது பிரதானமான ஒளி (மின் ஒளி), ஒலி (இடியோசை), மின்சாரம் என மூன்று கூறுகளை உள்ளடக்கியது. (இம்மூன்று வார்த்தைகளையும் உள்ளடக்கிய ஒரு வார்த்தையாக 'இடிப்புயல்' எனும் வார்த்தையை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர்.) இப்படிப்பட்ட இந்த மின்னல் நாம் அச்சப்படவும், ஆசைப்படவும் ஏற்றது எனவும் இந்த வசனம் கூறுகிறது. மின்னலைப் பார்த்தவுடன் நாம் கண்களை மூடுவதும், காதுக்குள் விரலூன்றுவதும் மின்னலால் நமக்கு அச்சம் எற்படுவதால்தான். எனவே மின்னல் அச்சப்படத்தக்கது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இப்படி ஆபத்தை விளைவிக்கக் கூடிய இந்த நிகழ்ச்சியில் நாம் ஆசைபடத்தக்க விஷயம் என்ன இருக்கின்றது?.

ஆனால் மின்னல், மழை, உயிர்ப்பித்தல் என இம்மூன்று விஷயங்களையும் சிந்தித்துணரும் சமூகத்தவருக்கு நிச்சயமாக அத்தாட்சிகள் இருக்கின்றன என உத்திரவாதம் தருகிறது ஒப்பற்ற இறைவேதமாம் மாமறை குர்ஆன்! எனவே நாம் இப்போது இவைகளைப் பற்றிச் சிந்திக்கும் சமூகத்தைத்தான் அணுக வேண்டியுள்ளது.

சத்தியத்திருமறையின் சட்டங்களை அறிந்தோ, அறியாமலோ செயல்படுத்திக் கொண்டிருக்கும் அறிவியல் சிந்தனையாளர்களே! உங்களுக்குத்தான் எவ்வளவு கண்ணியத்தை இந்தச் சத்தியத் திருமறை வழங்கிக் கொண்டிருக்கிறது! உங்கள் ஆய்வுகளிலிருந்து நீங்கள் சிந்தித்துணர்ந்த விஷயங்களில் மின்னலுக்கும், உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சிக்கும் ஏதேனும் தொடர்புண்டா?

ஏதேனும் தொடர்பா? ஏராளமான தொடர்பு உண்டு! உயிரினங்களை வாழ வைக்கும் ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதில்கூட மின்னல் பங்கேற்கிறது எனக்கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்கள் விஞ்ஞானிகள்!

பிராண வாயுவின் அணுக்கள் பிளக்கப்பட்டு அவை மும்மூன்று அணுக்களாக இணைந்தால்தான் ஓசோன் உற்பத்தியாக முடியும் என முன்னர் கண்டோம். இந்த நிகழ்ச்சி நடைபெற வேண்டுமானால் அதற்குத் தேவையான ஆற்றல் பெறப்பட வேண்டும். ஓசோனால் உட்கிரகிக்கப்படும் சூரியனுடைய புற ஊதாக் கதிர்களுக்கே அந்த ஆற்றல் உண்டு. எனவே ஓசோனை உற்பத்தி செய்வது சூரியனுடைய செயல்பாடுதான் என விஞ்ஞானிகள் நம்பி வந்தனர். ஆனால் தொடர்ந்து செய்யப்பட்டு வந்த ஆய்வுகள் இந்த நம்பிக்கைக்கு ஆதாரம் தரவில்லை. ஓசோன் படலத்தினுடைய செறிவு, இரவு (சூரிய ஒளி பெறப்படாத நேரம்), பகல் (சூரிய ஒளி பெறப்படும் நேரம்) என்ற வித்தியாசமின்றி பாதிக்கபட்டு வந்ததை அவர்களுடைய ஆய்வுகளில் கண்டனர். எனவே சூரியச் செயல்பாட்டுக்கும். ஓசோனுடைய பாதுகாப்புக்கும் சம்பந்தம் இல்லை என்ற முடிவுக்கு வந்த விஞ்ஞானிகளுக்கு ஓசோனுடைய உற்பத்தி ஒரு புதிராகவே காணப்பட்டது. ஆய்வுகள் தொடர்ந்து செய்யப்பட்டதன் விளைவாக அண்மையில் இப்புதிருக்கு விடை கிடைத்தது.

ஒவ்வொரு நாளும் நமது பூகோளத்தின் மீது ஒட்டு மொத்தமாக 1 கோடியே 60 லட்சம் இடிப்புயல்கள் உற்பத்தியாகி வளி மண்டலத்தில் பரவுகின்றன. ஒவ்வொரு வினாடியிலும் இப்புவி பரப்பின் மேல் குறைந்த பட்சம் 100 முறை மின்னல் மின்னும். உடனே அவ்வளவு முறை இடியோசை ஏற்படும். இதன் காரணமாக எந்த ஒரு நேரத்திலும் இப்புவியின் மொத்த பரப்பின் மேல் 1800 இடிப்புயல்கள் ஏற்பட்டு வருகின்றன. இப்படி இடைவிடாது எற்பட்டுக் கொண்டிருக்கும் இடிப்புயல்களிலிருந்து உருவாகும் அளவிடற்கரிய ஆற்றல்தான் நமது ஓசோன் படலத்தை ஓயாது புதுப்பித்துப் பாதுகாத்து வருகின்றன எனக் கூறுகின்றன அண்மைக்கால அறிவியல் கண்டு பிடிப்புகள்.

இடி, மின்னலுடன் கூடிய மழைக்குப் பின் நமது சுவாச இயக்கம் எளிதாகி விடுவதை உணர்கிறோமே அதற்குக் காரணம்கூட ஓசோன் உற்பத்தியால் வளி மண்டலம் தூய்மையடைவதே எனவும் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.

அச்சம் தரத்தக்க மின்னலில் ஆசைப்படத் தக்க காரியங்களும் இருக்கின்றன எனக் கூறிய திருமறையின் வசனத்தை மெய்ப்பித்து நிற்கும் அறிவியல் கண்டு பிடிப்புகளைப் பார்த்தீர்களா? ஓசோனை உற்பத்தி செய்யும் இடிப்புயலின் வெளியீடாகிய மின்னலில் நாம் ஆசைப்படத்தக்க காரியம் உண்டா இல்லையா?.

ஓசோன் இல்லையேல் பூமியல் உயிரினம் இல்லை எனக் கூறும் விஞ்ஞானிகள், வளி மண்டலத்தில் ஓசோன் உற்பத்தியான பிறகே உயிரினம் தோன்றியது என அறுதியிட்டுக் கூறுகிறார்கள். உயிரினத் தோற்றுவாயில் ஓசோனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் உண்டெனில் அந்த ஓசோனையே உருவாக்கும் மின்னல் உயிரினத் தோற்றுவாயின் மிக முக்கிய பங்காளியல்லவா? உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சியில் நீருடன் மின்னலையும் இணைத்துக் கூறப்பட்ட திருமறை வசனத்தை மெய்யான இறைவேதம் என நிரூபித்துக் கொண்டிருக்கும் அறிவியல் கண்டு பிடிப்புகளைப் பார்த்தீர்களா?

உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சியில் மின்னலின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வியக்கத்தகு கண்டுபிடிப்புகளும், இத்தூய திருமறையை மானிட சக்திக்கு அப்பாற்பட்ட இறைவேதம் என நிரூபிக்கும் பொருட்டு அரங்கேறியிருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் அவை வேறு தலைப்புகளில்.

அன்பார்ந்த நண்பர்களே! பூலோக வாசிகளாகிய நமக்கு ஆகாயம் ஒரு கூரையாகவும், அந்தக் கூரை பாதுகாக்கப்பட்ட பொருளாகவும் இருக்கிறது எனக் கருத்துணர்ந்த திருமறை வசனத்திற்குரிய அறிவியல் ஆதாரங்களாக நாம் இதுவரை பரிமாறிக்கொண்ட விஷயங்களை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். நவீன வானியல் விஞ்ஞானத்தில் கரை கண்ட ஒருவராலன்றி, ஆகாயம் பாதுகாக்கப்பட்ட கூரையாக இருக்கிறது எனக் கூறியிருக்க முடியுமா? நிச்சயமாக- மிக- மிக நிச்சயமாக- முடியவே முடியாது என்பதுதான் நேர்மைத் திறனுடன் பதில் தரும் ஒருவரது கூற்றாக இருக்க முடியும். அப்படியானால் இன்றிலிருந்து 1400 வருடங்களுக்கு முன் அப்படிப்பட்ட ஓர் அதிசய மனிதர்(?) இப்பூமியில் எங்கேனும் தோன்றியிருக்க இயலும் என நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?

குறைந்த பட்சம் செயற்கைத் துணைக் கோள்கள் இல்லாத காலத்தில் ஒருவர் இதைக் கூற வேண்டுமானால் அவர் இறக்கைகளுடன் பிறந்தவராக இருக்க வேண்டும். கிட்டப் பார்வைகளையும், தூரப்பார்வைகளையும் சரி, தூரப்பார்வைகளாக மாற்றும் கண் கண்ணாடிகளைக் கூடக் கண்டறியாத காலத்தில் இதை ஒருவர் கூற வேண்டுமானால் அவருடைய கண்களில் போலே மீட்டர்கள் (Bolometers) பிரிலியோ மீட்டர்கள் (Pyrheliometers) எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் (Electron Microscopes) ரேடியோ தொலை நோக்கிகள் (Radio Telescopes) போன்ற நவீன கருவிகளெல்லாம் முளைத்திருக்க வேண்டும். இப்படிக் கூடவா ஒரு மனிதர் இருந்திருக்க வேண்டும்?

நிச்சயமாக அப்படியெல்லாம் ஒருவர் இருந்திருக்க முடியாது என்பது நமது பதிலாக இருக்கும்போது குறைந்தபட்சம் இப்படிப்பட்ட ஒரு மனிதரால் மட்டுமே 1400 வருடங்களுக்கு முன்னால் கூற முடியக் கூடிய நவீன உலகின் அறிவியல் கண்டு பிடிப்புகளெல்லாம் - சத்தியத் திருமறையாம் அல்-குர்ஆனில் எப்படி இடம் பெற்றன?

நாம் சிந்திக்க வேண்டாமா?

காரண காரியங்களோடு நாம் சிந்திக்கத் தலைப்பட்டால் நமது சிந்தனை களஞ்சியங்களில் இப்பேரண்டம் ஒரு குருட்டாம்போக்கு செயல் இல்லை: மாறாக இது ஒரு பரிபூரணமான திட்டமிட்ட பணியின் (An absolute frame work) உருவம் என்பதை ஐயத்துக்கிடமின்றி தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே திட்டமிட்ட பணியின் திட்டங்களை வகுத்தளித்தவன் ஒருவன் இருக்கின்றான்: அவனுடைய திட்டமே பணிகளை நடத்துகிறது: அப்படிப்பட்டவன் யாரோ அவனிடமிருந்தே இச்சத்தியத் திருமறை வழங்கப்பட்டுள்ளதால் அது காலங்கடந்த காரியங்களையும் தன்னுள் கொண்டிலங்குகிறது என நம்மால் மிக மிக எளிதாக ஏற்றுக் கொள்ள முடிகிறது!

எனவே இத்தூய மறைக்குப் பக்கத்தில் நீங்கள் வைத்திருக்கும் முற்றுப் புள்ளிகளை காற்புள்ளிகளாக மாற்றி மேலும் உங்களுடைய சிந்தனையைத் தொடருங்கள்! உண்மை எதுவாக இருந்தாலும் அதனை ஏற்கும் பண்புடையவர்களல்லவா நீங்கள்!.

(வளரும் இன்ஷா அல்லாஹ்)

வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் -2

வாழத் தகுந்த கோள்-2



ஏ.கே.அப்துர் ரஹ்மான்.

மனித குலத்தின் விஞ்ஞான அறிவு வளர வளர அவன் உள்ளத்தில் சுண்டைக்காய் அளவாக இருந்த நட்சத்திரங்கள் மற்றும் இதர கோள்களின் அளவும் வளரத் துவங்கியது. இந்த வளர்ச்சி மேதகு விஞ்ஞானி ஐசக் நியூட்டன் (கி.பி. 1624 முதல் 1727 வரை) காலத்தில் விசுவரூபம் கொண்டு நாம் வாழும் நிலப் பரப்பைக் காட்டிலும், பெரிய நிலப் பரப்புக்கள் கொண்ட கோள்களெல்லாம் விண்ணில் இருக்கின்றன என அறியத் துவங்கினான். இந்த அறிவு மனித உள்ளத்தில் ஓர் ஆசையைத் தூண்டியது. அதாவது பூமியில் இட நெருக்கடி ஏற்பட்டால் அதைச் சமாளிக்க இதர நிலப் பரப்புகளுக்கு குடி பெயர்ந்து செல்லலாமா? என்பதே அந்த ஆசை. இந்த ஆசை நமக்கு நிறைவேறுமா?. பொருட்செலவு ஏராளமாகுமா? அல்லது அங்கு நாம் எதிரிகளை சந்திக்க நேருமா? என்கிற ஐயங்களெல்லாம் அந்த ஆசையின் உடன்பிறப்பாக அப்போதே பிறந்து விட்டன.

இவ்வய்யங்களைத் தீர்க்க பரிசுத்த குர்ஆன் ஏதேனும் கூறியுள்ளதா?. ஏனில்லை?. கூறத்தான் செய்கிறது.

'அவன்தான் பூமியை உங்களுக்கு வாழத்தகுந்த இடமாக்கியவன்..'(அல்-குர்ஆன் அத்தியாயம் 67 ஸுரத்துல் முல்க் - 15வது வசனம்).

என்ன இது? பூமியை வாழத் தகுந்த இடமாக்கினான் என்றால் வாழத் தகாத இடமாகக் கூட ஆக்க முடியுமா?. இருக்கட்டும்! வாழத் தகாத இடமாகக் கூட இருக்கலாம். இருப்பினும் பூமியை வாழத் தகுந்த இடமாக்கினான் என்றால், ஏனைய நிலப்பரப்புகள் எல்லாம் வாழத் தகாத இடங்களா?. ஏனைய நிலப் பரப்புகளையும் வாழத் தகுந்த இடமாக ஆக்கியிருந்தால் எல்லாப் பூமிகளையும் (கோள்களையும்) வாழத் தகுந்த இடமாக்கினேன் என்றல்லவா கூறியிருப்பான். ஆகவே இவ்வசனம், 'அனைத்துக் கோள்களிலும் மனிதன் வாழத் தகுந்த சூழ்நிலை உண்டு என்பது தவறு: ஆனால் பூமியில்தான் அந்தச் சூழ்நிலை உண்டு' எனப் பொருள் தருகிறது.

இது மெய்தானா?. சமீப நாட்களில் (1969 ஆம் ஆண்டு ஜுலை மாதம்) சந்திரனுக்கே சென்று வந்தார்களே! எனவே இது பற்றிய ஆய்வில் விஞ்ஞானம் கண்ட உண்மை நிலை என்ன?.

ஆனால் நிலவைப் பற்றிய ஆய்வு மனிதனின் ஆசையில் மண்ணள்ளிப் போடுவதாகவே அமைந்தது. நிலவில் மனிதன் மட்டும் இல்லை: தாவரங்கள் கூட வாழ இயலாத சூழ்நிலைதான் இருந்து வருகிறது. உயிரினங்களின் தேவையாகிய கார்பனும், நீரும் அங்கு சிறிதளவு கூட இல்லை என்பதோடு, தயாரிப்புகள் எதுவுமின்றி உயிரோடு ஒரு மனிதன் அங்கு செல்ல நேர்ந்தால், உடனே இறந்து விடுவான். ஏனெனில் நிலவில் சுவாசிப்பதற்குக் காற்று இல்லை. மேலும் அங்கு பகல் நேர வெப்பம் மனித இரத்தத்தை கொதிக்கச் செய்யும் அளவிற்கு 120 டிகிரி சென்டி கிரேடும், இரவு நேர வெப்பம் இரத்தத்தை உறையச் செய்யும் அளவிற்கு -160 டிகிரி சென்டி கிரேடு ஆகவும் இருக்கின்றன.

நிலவுதான் இப்படியென்றால், அறியப்பட்ட இதர கோள்களின் நிலையும் மனிதன் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை. பொருண்மை, விட்டம் ஆகியவற்றில் பூமிக்கு ஒப்பாக உள்ள கோள் வெள்ளி (VENUS). இதன் பகல் நேர வெப்ப நிலை 475 டிகிரி சென்டி கிரேடு ஆகவும், இரவில் 474 டிகிரி சென்டி கிரேடு ஆகவும் இருக்கிறது. பூமியொத்த மற்ற கோள் செவ்வாய். இது பூமியின் காற்று மண்டலத்தில் நூறில் ஒரு பங்கு மட்டுமே கொண்டது. அதிலும் 21 சதவீதம் ஆக்ஸிஜனும், 78 சதவீதம் நைட்ரஜனும் இருக்க வேண்டிய இடத்தில், தலா ஒரு சதவீதம் மற்றும் இரண்டரை சதவீதத்தை அளித்துவிட்டு, ஏறத்தாள 96 சதவீதம் கரியமில வாயுவே (Carnbon-di-Oxide) ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

ஏனைய கோள்களில் மெர்க்குரி (Mercury) சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் அளவுக்கு மீறிய வெப்பத்துடனும், வியாழன் (Jupitor), சனி (Saturn), யுரேனஸ் (Uranus) நெப்டியூன் (Neptune) ப்ளுட்டோ (Pluto) போன்றவை சூரியனிலிருந்து மிகுந்த தொலைவில் இருப்பதால் மிகுந்த குளிர்ச்சியாகவும் இருக்கின்றன. எனவே சூரியக் குடும்பத்தில் அறியப்பட்ட எந்தக் கோளிலும் மனித வாழ்க்கைக்கு ஏற்ற சூழ்நிலை இல்லை என்பது தெளிவாகிவிட்டது.

இதிலிருந்து சூரியக் குடும்பத்தில் பூமியைத் தவிர மேலும் பல கோள்கள் இருந்தும் அவை எதிலுமே மனிதன் வாழ்வதற்கேற்ற சூழ்நிலை ஏற்படுத்தாமல் பூமியில் மட்டும் அதற்கேற்ற சூழ்நிலை ஏற்படுத்தி வைத்துள்ளான் என்ற கருத்து உணரப்படும். குர்ஆனிய வசனங்கள் நூற்றுக்கு நூறு மெய்யென்பதற்கு நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளே சான்று பகர்கின்றன.

இவ்வளவு ஆழமாக நவீன யுகத்தின் கண்டுபிடிப்புகளைத் தீர்க்க தரிசனத்துடன் பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே படம் பிடித்துக் காட்டிய இந்த பொய்க் கலப்பற்ற ஒப்பற்ற குர்ஆனை மெய்யான இறைவேதம் என ஏற்கத் தயங்குவோரே, அது கூறுகின்ற அற்புதமான விஞ்ஞான நிரூபண உண்மையை மேலும் கவனியுங்கள்:

'அல்லாஹ்தான் இப்பூமியை உங்களுக்கொரு வீடாகவும் - ஆகாயத்தை ஒரு கூரையாகவும் ஆக்கினான்..' (அல்-குர்ஆன் அத்தியாயம் 40 ஸுரத்துல் முஃமீன் 64வது வசனம்)

இங்கே பூமியை இறைவன் ஒரு வீட்டுக்கு ஒப்பிடுகிறான். இது மனிதன் வாழ்வதற்கேற்ற இடமென்பதால் வீடு என்பது மிகப் பொருத்தமான வார்த்தை. புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஆகாயத்தை கூரையென்று கூறுகின்றானே? இதன் பொருளென்ன?

நாம் ஒரு வீட்டைக் கட்டுவதாக இருந்தால் வெயிலுக்கும் மழைக்கும் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு அதற்கோர் கூரையமைக்கிறோம். ஆனால் பூமிக்குமா ஒரு கூரை தேவை?. அப்படியே கூரையொன்று இப் பூமிக்கு இருக்குமாயின் வெயிலும், மழையும் இப்பூமியில் விழுகிறதே! இதெப்படி இயலும்?.

மேலே கூறிய வசனத்தைக் கண்டவுடன் சிலர் இப்படியும் சிந்திக்க தலைப்படலாம். ஆனால் இச் சிந்தனையில் உள்ள குறைபாடு நகைப்புக்குரியதே! பூமி வாழத் தகுந்த ஒரு வீடாக இருக்க வேண்டும் என்றாலே இங்கு வெயிலும், மழையும் விழுந்தே ஆக வேண்டும். அவ்வாறு விழாவிடில் இது வீடாக இருக்க முடியாது. இடுகாடாகத்தான் இருக்க முடியுமென்பதை விளக்கத் தேவையில்லை. ஆகவே கூரை என்பது பூமியின் மீது ஏதோ பாதிப்பு ஏற்பட, அதனைத் தடுக்கும் விதத்தில் ஆகாயம் அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான் அது கூரையாக இருக்க முடியும்! அப்படிப்பட்ட கூரை இப்பூமியின் மீது எங்கே இருக்கிறது?.

நாம் பார்த்த வரை இப்பூமி பந்தின் மீது வெளிர் நீலப் பட்டொன்று குடை விரித்தாற்போல் - மேகங்களற்ற நிர்மல வானம் காட்சியளிக்கிறது. இதுதான் ஆகாயமா?. இதுதான் அந்தக் கூரையா?. விஞ்ஞானம் என்ன கூறுகிறது?.

கடல் நீரின் மீது படும் சூரியக் கிரணங்களின் பிரதிபலிப்பைக் காற்று மண்டலம் பூமியை நோக்கி எதிரொளிப்பது தான் அந்த நீல வண்ணக் குடையேயன்றி அங்கு வேறெதுவும் இல்லை எனக் கூறுகிறது. அப்படியாயின் ஆகாயம் என்ற சொல்லே அர்த்தமற்றதா?. அப்படியொன்று மெய்யாகவே இல்லையா?. பரிசுத்த குர்ஆன் என்ன சொல்கிறது:

'நிச்சயமாக நாமே ஆகாயத்தை வல்லமை கொண்டு படைத்தோம்..' (அல்-குர்ஆன் அத்தியாயம் 51 ஸுரத்துத் தாரியாத் - 47வது வசனம்)

ஆகாயம் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. ஏனெனில் அவன் அதைத் தன் வல்லமையைக் கொண்டு நிச்சயமாகவே படைத்திருக்கிறான் எனக் கூறுகிறான்!. அப்படியாயின் நம்முடைய பூமிக்குக் கூரை அமைத்த கீற்றுகள் யாவை?. எங்கே நமது கூரை?.

(வளரும் இன்ஷா அல்லாஹ்)

Wednesday, July 27, 2005

வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் -1

கி.பி 7ம் நூற்றாண்டில் மனிதம் செத்துப்போய்விட்ட நிலையில், அரபியப் பாலைவனத்தில் ஜீவ உற்றாக எழுந்த இஸ்லாமிய மறுமலர்ச்சியால் மனிதம் மீண்டும் புத்துயிர் பெற்றது. நிலைகெட்ட மனிதர்களை நினைத்து விட்டால்.. என்ற சொல்லுக்கு அன்றைய அரபியர்கள் பொருத்தமாக இருந்தார்கள். தறிகெட்டு வாழ்ந்த அம்மக்களை ஒழுக்க சீலர்களாகவும், உன்னத நெறியைப் பேணியவர்களில் முதன்மையானவர்களாவும் மாற்றி அம்மக்களை வென்றெடுத்தது இஸ்லாம்.

இறைவனின் இறுதி வேதமாகிய திருக்குர்ஆனின் போதனைகளை ஆரம்பத்தில் மிக வன்மையாக எதிர்த்தவர்கள் - இஸ்லாத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்துவிட வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டவர்கள் - இறுதி வேதத்தை மக்களுக்குப் போதிக்க இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை பொய்யர், பைத்தியக்காரர், சூனியக்காரர் என்றெல்லாம் எள்ளியவர்கள் திருக்குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலக்கட்டத்திலேயே இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்திற்காக தங்கள் உயிர்களையும் தியாகம் செய்யவும் முன் வந்தார்கள். மிக சொற்ப நாட்களிலேயே உலக முஸ்லிம்களுக்கெல்லாம் ஆசிரியர்களாக பரிணமித்து, நபித்தோழர்கள் எனும் மிக உயரிய அந்தஸ்தைப் பெற்று அன்றும் இன்றும் உலக முடிவுநாள் வரையிலும் வரலாற்றுப் பக்கங்களில் ஜொலிப்பார்கள். இத்திருப்புமுனைக்குக் காரணம் இறைவனின் வேதமாகிய திருக்குர்ஆனின் வழிகாட்டுதல்தான்.

23 ஆண்டுகள் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாய்மொழி வழியாக இறைவன் தன் வார்த்தைகளை அருளியதுதான் திருக்குர்ஆன் எனும் வேதமாகும். திருக்குர்ஆனை முஹம்மது நபி (ஸல்) அவர்களே இயற்றினார்கள் என்று விமர்சிப்பவர்களின் கூற்றில் உண்மையிருக்குமென்றால் இறைத்தூதர் என்ற அந்தஸ்தில் இல்லாமல் தனியொரு மனிதரைப்பின் பற்ற அன்றைய மக்கள் முன் வந்திருக்க மாட்டார்கள் - முன் வந்தாலும் தொடர்ந்து அதில் நீடித்திருக்க மாட்டார்கள். என்னதான் கெட்டிக்காரத்தனமாக இருந்தாலும் ஒரேக் கொள்கையில், முரண்பாடில்லாமல் 23 ஆண்டுகளாக மக்களைத்தக்க வைப்பதென்பது தனியொரு மனிதனால் இயலாத காரியம்.

23 ஆண்டுகளாக இறைவனால், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வஹீயின் - இறைச் செய்தியின் மூலம் அருளப்பட்ட திருக்குர்ஆனில் அன்றைய மக்கள் முரண்பாடுகளைக் கண்டிருந்தால் நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே இஸ்லாத்தைப் புறக்கணித்திருப்பார்கள். நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் இஸ்லாத்தின் அடிச்சுவடுகூட அடையாளம் இல்லாமல் அழிந்து போயிருக்கும்.

மாறாக மொழி, இன வேறுபாடு எதுவுமின்றி ஆன்மீகம், அரசியல், அறிவியல், குடும்பவியல், குற்றவியல், சமூகவியல், கல்வியியல், கொள்கையியல், பொருளாதாரம் அனைத்து துறைகளிலும் - மனிதனின் பிறப்பு முதல் இறப்புவரை ஏற்படும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் - முரண்பாடற்ற - தீர்க்கமான தீர்வு கூறும் திருமறைக்குர்ஆன், உலகளாவிய நிலையில் மாந்தர்களை தம் கொள்கையின் பால் ஈர்த்திருப்பதே இது இறைவேதம் என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகளாகும்.

14 நூற்றாண்டுகளுக்கு முன், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதல்ல என்று பிரச்சாரம் செய்பவர்கள், 20ம் நூற்றாண்டின் அரிய கண்டுபிடிப்புகளாகிய அறிவியல் உண்மைகளைப்பற்றி பேசும் திருமறை வசனங்களை அறிவுப்பூர்வமாக மறுக்க கடமைப்பட்டுள்ளார்கள்.

அன்புடன்,
அபூ முஹை

விஞ்ஞான ஒளியில் என்கிற ஆய்வுக் கட்டுரை சகோதரர் ஏ. கே. அப்துல் ரஹ்மான் அவர்களால் எழுதப்பட்டது. அறிவியலும், பொருளாதாரமும் அரசாட்சி செய்யும் எல்லா வசதிகளும் கொண்ட இன்றைய இணையத்தள உலகில் - சரியானது என்று நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை பற்றி, 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு, எவ்வித வசதிகளோ, எவ்வித அறிவியல் உண்மைகளும் வெளிவர வாய்ப்புகளே இல்லாத காலகட்டத்தில் அருளப்பட்ட அருள்மறை குர்ஆன் கூறுவதை ஒப்பிடுகிறார் கட்டுரையாசிரியர்.

பேரண்டப் படைப்பின் துவக்கம் -1


நாம் வாழும் இந்தப் பூமியும், அதைச் சூழ்ந்து நிற்கும் ஆகாயமும் அதில் காணப்படும் எண்ணற்ற கோள்களும், துணைக் கோள்களும், நட்சத்திரங்களும் எப்படித் தோன்றின என்ற வியப்பும் வினாவும் மனித உள்ளத்தில் தொன்று தொட்டே அலை பாய்ந்து கொண்டிருந்தன. இதற்கு விடை கூற முற்பட்ட விஞ்ஞானிகள் ஒரு கருதுகோளை (Hypothesis) முன் வைத்தனர். 'நெபுலா' என்ற மேகத்திரளிலிருந்து, முதலாவதாக நட்சத்திரங்கள் தோன்றின என்றும், அப்படித் தோன்றிய நட்சத்திரங்களுள் ஒன்றுதான் சூரியன் என்றும் கூறினர். பின்னர் சூரியன் திடீரென வெடித்துச் சிதறிய போது அத்துண்டுகள் கோளமாயின என்றும், அக்கோள்களிலிருந்து துணைக் கோள்கள் பிரிந்து சென்றன என்றும் கூறுகின்றனர்.

இக்கூற்று பரவலாக நம்பப்பட்டு வந்த கால கட்டத்தில் தொடர்ந்து செய்யப்பட்ட ஆய்வுகள் இக்கொள்கைக்கு சாதகமாக அமையவில்லை. கிரகங்களின் பாதைகள், அவை சூரியனை நோக்கிச் சுற்றும் திசை, சூரியனின் அச்சில் சுழற்சி (Axial Rotation) ஆகியவற்றை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தங்களின் முந்தைய கொள்கையை அடியோடு ஒதுக்கிவிட்டுப் புதிய கருதுகோள் ஒன்றை முன்வைத்தனர்.

கோள்கள் சூரியனிலிருந்து வெடித்துச் சிதறியதல்ல: மாறாக அண்டத்தில் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள், துணைக்கோள்கள் உள்ளிட்ட யாவும் ஒரே சமயத்தில் தோன்றியதாகவே இருக்க முடியும் எனக் கூறி, அண்டம் எப்போதும் உள்ளது: அதற்கு ஆரம்ப முடிவு என்பது இல்லை எனவும் கூறினர்: இக்கூற்று இயல் மாறாக் கொள்கை (Steady State Theory) என்ற கவர்ச்சிகரமான பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் விஞ்ஞான உண்மைகள் இத்துடன் திருப்திப் பட்டுக் கொள்ளவில்லை. தொடர்ந்து செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள் இக்கொள்கைக்கு பாதகமாக அமைந்து விட்டன.

அண்டத்தின் வெப்பச் சூழலைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் இயல் மாறாக் கொள்கையை ஏற்பதற்குத் தேவையான வெப்பத்தை விடக் குறைந்த வெப்பத்தையும், அண்டத்தில் எங்கு பார்த்தாலும் இருண்ட பின்னணியைத் தோற்றுவிக்கும் அளவிற்கு குறைந்த ஒளியையும் கண்டதோடு, ஆண்டொன்றுக்கு 4 க.கி.மீ. (4 Km3) ல் ஒரு ஹைட்ரஜன் அணு உற்பத்தியாவதையும், கண்டனர். எனவே 'இயல் மாறக் கொள்கை' கேள்விக் குறியோடு தன்னுடைய வாழ்வை எதிர்நோக்கி நிற்கிறது.

மேற்கூறிய குறைபாடுகள் அனைத்திலும் தப்பி அவைகளையே தனக்குச் சாதகமாக அமைத்துக் கொண்டு மிக்க செல்வாக்குப் பெற்ற கருதுகோளாகத் தற்போது விஞ்ஞானிகளிடம் புகழ் பெற்று வருவது பெரு வெடிப்புக் கொள்கை (Big Bang Theory) யாகும். இக் கொள்கை என்னவெனில், இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பூமி உள்ளிட்ட கோள்களும், துணைக் கோள்களும், நட்சத்திரங்களும், இன்னும் ஏனைய பருப் பொருட்கள் யாவும், ஏறத்தாள பூமியைவிட 318.5 மடங்கு எடை உள்ள வியாழன் (Jupitor) கிரகத்தை ஒத்து, ஆனால் மிக அடர்த்தி வாய்ந்த ஒரு பொருளுக்குள் அடக்கப்பட்டிருந்தது. அப்பொருள் ஏதோ வானியல் காரணத்தால் தூள் தூளாக வெடித்துச் சிதறி அண்டம் முழுவதும் ஒரே தூசுப் படலமாகப் பரவியது. இந்த நிகழ்ச்சி ஏறத்தாள 1800 கோடி வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்தது. இந்த நிகழ்ச்சியின் பிறகு ஒரே புகை மூட்டமாக இருந்த அந்தத் தூசுத் துகள்கள் நட்சத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பருப்பொருட்களையும் தோற்றுவித்தது.

இவ்வாறு பூமி உட்பட இருந்த கோள்களும், ஏனைய துணைக் கோள்கள், நட்சத்திரங்கள் யாவும் ஒன்றாகக் கலந்திருந்த அந்தத் தூசுப்படலத்தில் இருந்து ஏறத்தாள 500 லிருந்து 750 கோடி வருடங்களுக்கிடையில் தனித் தனியாக பிரிந்தன என இந்தப் பெரு வெடிப்புக் கொள்கை (Big Bang Theory) கூறுகிறது.

அண்டத்தின் வரலாற்றை மனிதன் தன்னுடைய நவீன விஞ்ஞான அறிவையும், கருவிகளையும், பொருளாதார வசதியையும், தீராத வேட்கையையும், விடா முயற்சியையும் பயன்படுத்தி கண்டறிந்த இந்த விஷயங்கள் தொடர்பாக, இவ்வாறான வசதிகளோ, வேட்கையோ, இல்லாமல் வெறும் புராணக் கதைகளை பேசி வந்த 14 நூற்றாண்டுக்கு முந்தைய காலக் கட்டத்தில் பரிசுத்த குர்ஆன் என்ன கூறியது எனச் சற்றே திரும்பிப் பார்ப்போம்.

'நிச்சயமாக வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவற்றை நாமே பிரித்தோம் என்பதையும் (இக்குர்ஆன் என்னுடைய வசனம் அல்ல என்று கூறி) நிராகரிப்பவர்கள் பார்க்கவில்லையா? (அல் - குர்ஆன் அத்தியாயம் 21 ஸுரத்துல் அன்பியா 30வது வசனம்)

என்ன அற்புதமான வார்த்தைகள்!. இவ்வண்டத்தில் இருக்கும் யாவும் இரண்டறக் கலந்து ஒரு புகை மூட்டத்திலிருந்து தான் உற்பத்தியாகித் தனித் தனியே பிரிந்தன என்ற நவீன விஞ்ஞானக் கொள்கையை எவ்வளவு அற்புதமாகக் குர்ஆன் படம் பிடித்துக் காட்டிவிட்டது!.

நவீன விஞ்ஞானத்தின் அபிமான நண்பர்களே! பண்டைக் காலங்களில் உழைக்காமல் சோம்பி, அடிமைப்பட்டிருந்த பாமரனின் உழைப்பையும் சுரண்டி, உண்டு கொழுத்த கொடிய குழுவோரின் கதைகளையும், நாடு துறந்து, வீடு துறந்து, காடு கண்ட மனிதர்களின் கற்பனைக் கனவுகளையும், வேதங்களாய் ஏந்தி வந்த பட்டியலில்.. அறியாமலே.. படித்து உணராமலே.. பத்தோடு பதினொன்றாக உங்களில் சிலர் அருள்மறை குர்ஆனையும் சேர்த்துப் பார்க்கின்றனர். இது அறியாமையல்லவா?. நீங்கள் மெய்யாகவே எதில் அபிமானம் கொள்கிறீர்களோ.. அந்த விஞ்ஞானமே, அருள்மறை குர்ஆன் மெய்யான வேதம் என்பதற்குச் சாட்சியாகி நிற்பதைப் பார்த்தீர்களல்லவா!. பிறகு ஏன் நீங்கள் அதை நிராகரிக்கிறீர்கள்?. நீங்கள் குர்ஆனை ஏற்க மறுத்தால், குறைந்த பட்சம் அதை உலகுக்கு போதிக்க அனுப்பப்பட்ட அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இந்த இருபதாம் நூற்றாண்டில் பிறந்து வளர்ந்தவர் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.

இப்பூலகின் அறியாமையைப் போக்கிச் சன்மார்க்கம் செழிக்க அண்ட சராசரங்கள் யாவையும் தன் வல்லமை ஒன்றைக் கொண்டே படைத்துப் பரிபாலனம் செய்து கொண்டிருக்கும் இணை, துணையில்லாத அந்த ஏக இறைவனிடமிருந்து அந்த மாநபி முஹம்மத் (ஸல்) பெற்றுத் தந்த பரிசுத்த குர்ஆன் மேலும் கூறுவதைக் கேளுங்கள்.

இவ்வண்டத்தின் படைப்பைத் துவக்குவதற்காக பூமியின் மீது இருக்க வேண்டிய, முளைக்க வேண்டிய அனைத்தையும் நிர்ணயம் செய்த.. 'பின்னர்.. ஆகாயத்தின் பால் திரும்பினான். அது ஒரு புகையாக இருந்தது..' (அல்-குர்ஆன் அத்தியாயம் 41 ஸுரத்துல் ஹாமீம் ஸஜ்தாவின் 11வது வசனம்)

இப்போது சொல்லுங்கள்!. நவீன கம்யூட்டர் யுகத்தின் கண்டுபிடிப்புகளை வரிக்குவரி பிறழாமல் 14 நூற்றாண்டுகளுக்கு முந்திய சூழ்நிலையில் ஒரு மனிதரால் கூறியிருக்க முடியுமா?. ஆனால் அப்படி கூறியிருக்கிறார் என்பது தற்போது உலகறிந்த உண்மை. இதிலிருந்து நீங்கள் எந்த முடிவுக்கு வர விரும்புகிறீர்கள்?. நாம் முன்னரே கண்டது போல் திரு நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இருபதாம் நூற்றாண்டு மனிதரென்றா?. அல்லது அவர் போதித்த இந்த அற்புதமான உண்மைகளைக் கொண்ட பரிசுத்த குர்ஆன் அண்ட சராசரங்களையும் படைத்த மெய்யான இறைவனின் வேதமென்றா?.

நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் இதில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். எல்லாம் வல்லவனும், பேரருளாளனும், இப்பரிசுத்த குர்ஆனின் ஆசிரியனும் யாரோ அவன் நம் அனைவருக்கும் நல்ல முடிவை - சரியான முடிவைத் தேர்வு செய்யத் துணை புரிவானாக!

(வளரும் இன்ஷா அல்லாஹ்)

Saturday, July 16, 2005

முஹம்மது நபி தமக்காக யாரையும் பழி வாங்கியதில்லை!

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனக்காக யாரையும் பழி வாங்கியதில்லை என்று இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்கள் கூறுகிறது. ஆரோக்கியம் என்பவர் "முகம்மது செய்த கொலைகள்'' என்ற தலைப்பில் கவ்வைக்குதவாத - இஸ்லாத்திற்கு வெளியே எழுதியதை இஸ்லாத்தின் ஆதாராமாகக் காட்ட முயற்சி செய்திருக்கிறார். இஸ்லாத்திலிருந்து ஆதாரங்களை முன் வைத்து இஸ்லாத்தை விமர்சிக்க வேண்டும் அதுதான் அறிவு சார்ந்த விமர்சனமாக இருக்கும் இது பற்றி பலமுறை முஸ்லிம்கள் வலைப்பதிவில் எழுதி விளக்கியிருக்கிறார்கள்.

டாக்டர் ஏ.என் சலீம் எழுதியதாக, முகம்மது செய்த கொலைகள் என்று அடுக்கியுள்ள ஆரோக்கியம் அவர்கள் அந்தக் கொலைகளின் செய்திகள் இடம் பெற்ற நேரடி ஹதீஸ் நூல்களின் பெயர்களைக் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், அதுவரை இது அவதூறாகவே இருக்கும்

ஒரு ஹதீஸின் விளக்கம்.

பனூ முஸ்தலிக் போரின்போது பெண் போர்க் கைதிகள் சிலர் எங்களுக்குக்கு கிடைத்தனர். அவர்களுடன் கருவுற்று விடக் கூடாதென்றும் நாங்கள் விரும்பினோம். எனவே புணர்ச்சி இடை முறிப்பு 'அஸல்'' செய்து கொள்வது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இதைச் செய்யாமலிருப்பதால் உங்களுக்கு எந்தத் தீங்கும் நேர்ந்துவிடப் போவதில்லை ஏனெனில் அல்லாஹ் மறுமை நாள்வரை நான் படைக்கவிருப்பவற்றை எழுதி முடித்துவிட்டான்'' என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பில் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: 'படைக்கப்பட உள்ள எந்த உயிரையும் அல்லாஹ் படைத்தே தீருவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர், அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) புகாரி,7409)

உடலுறவின் போது கர்ப்பம் தரிக்காமல் இருக்க உச்சக்கட்டத்தில் விந்தை வெளியேற்றுவதற்கே அரபியில் ''அஸல்'' என்று சொல்லப்படும். இப்படிச் செய்யலாமா? இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? என்று நபித்தோழர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கிறார்கள். ''நீங்கள் அஸல் செய்தாலும் செய்யா விட்டாலும் கருவறையில் இறைவன் படைக்க நாடியதை படைத்தே தீருவான்'' இறைவன் படைக்க நாடியதை யாராலும் தடுக்க முடியாது இறைவன் படைக்க நாடாததை யாராலும் படைத்து விட முடியாது'' என்கிற கருத்தில் நபி (ஸல்) அவர்கள் விளக்கமளிக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு தொடர்ந்து ஆணுறையைப் பயன்படுத்தி தாம்பத்தியத்தில் ஈடுபட்டு வந்த தம்பதியருக்கு குழந்தை ஜனித்தது என்று செய்திகளில் படித்த நினைவு முழுச் செய்தியும் சரியாக நினைவில்லை இந்த செய்தியை அறிந்தவர்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி!

கரு ஏற்பட்டு விடக்கூடாது என்று எச்சரிக்கையாக இருந்தாலும் இறைவன் நாடினால், பல லட்சம் உயிரணுக்களில் ஒரேயொரு உயிரணு நீந்திச் சென்று கருவை ஏற்படுத்திவிடும் - இறைவன் நாடியதை படைத்தேத் தீருவான். இந்த ஹதீஸின் அடிப்படையிலேயே தற்காலிகக் கருத்தடையை இஸ்லாம் அனுமதிக்கிறது என்று முஸ்லிம்கள் ஆதாராமாகக் கொள்வார்கள்.
மேற்கண்ட நபிமொழிக்கு அச்சில் ஏற்றுவதற்கு கை கூசும் அளவுக்கு, ஆரோக்கியம் அவர்கள் விளக்கவுரை!? எழுதினார். கண்டு கொள்ள நாதி இல்லை!

பனூ முஸ்தலிக் போர் பற்றி நான் கண்ணியமாகவே விளக்கமளித்திருந்தேன். ''அப்புறம் ஏன்லா உங்கள் ஊரில் அங்கங்கு குண்டு வெடிக்காது? என்று ஆரோக்கியம் நாகரீகமற்ற தலைப்பை வைத்திருந்தார். கண்டு கொள்ள நாதி இல்லை!

நல்லாடியாரின் ஜுலை 15,2005ன் பதிவு சற்று நிதானமிழந்து - அவசரத்தில் பதிந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. நல்லாடியாரின் பதிவைக் கண்டித்து களமிறங்கிய நடுநிலையாளர்கள், ஆரோாக்கியம் அவர்களின் நாகரீமற்ற எழுத்தை ஏன் கண்டு கொள்ளவில்லை என்று கண்டிப்பாக நான் கேட்க மாட்டேன். இங்கே முஸ்லிம் வலைப்பதிவர்களுக்கு சொல்லிக் கொள்வது இதுதான்..

எழுதுகின்ற விஷயத்தைக் கவனியுங்கள், எழுதுபவர் யார் என்ற கவனம் வேண்டாம். வேண்டுமென்றே எழுதும் - பிறர் எழுத்துக்களில் உள்ள வன்முறையை ஊதாசீனப்படுத்துங்கள். நிதானத்தை இழந்துவிட வேண்டாம், நீங்கள் நடுநிலை சமுதாயம் என்பதை மறந்து விட வேண்டாம். இஸ்லாத்தை விமர்சிப்பவர்களுக்கு, தாமதம் ஆனாலும் தக்க ஆதாரத்தின் அடிப்படையில் விளக்கம் அளியுங்கள். தரக்குறைவான வார்த்தைகளைக் கண்டிப்பாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அவமரியாதையாகப் பேசுவது நயவஞ்சகத் தன்மையிலொன்றாக இஸ்லாம் கூறுகிறது. (எழுதியவற்றில் பிழையிருந்தால் திருத்துங்கள்.)

அன்படன்,
அபூ முஹை