Wednesday, December 04, 2013

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்!

அல்லாஹ்வின் பண்புகளுக்கு நிகராக ஒப்பிட்டு எவரையும் சொல்ல இயலாது. மனிதனின் பண்புகளோடு இறைவனின் பண்புகளையும் சமமாகக் கருதிடக்கூடாது. அன்பு, கருணை, இரக்கம், பரிவு, மன்னிக்கும் தன்மை இவை மனிதர்களுக்கும் உண்டு என்றாலும் இறைப் பண்புகளின் உயர் நிலைக்கு நிகராக இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட, அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன் என்று தமிழில் கூறுகிறோம்.

அன்பு, பாசம், கருணை, இரக்கம், பரிவு என இவ்வாசகங்களுக்கெல்லாம் நூலிழை வித்தியாமேயன்றி இவை நெருக்கமான ஓர் அர்த்தத்தைத் தரும் பல சொற்களாகும்.
 
(நபியே) நிச்சயமாக பூமியில் உள்ளவற்றையும், அவனது கட்டளைப்படியே கடலில் செல்லும் கப்பலையும் அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? தனது கட்டளையின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடாதவாறு அதனை அவனே தடுத்துக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணையாளன், நிகரற்ற அன்புடையவன். (அல்குர்அன் 022:065)

தனது அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடக்கூடாது என்று வானத்துக்குக் கட்டளையிட்டு இறைவன் தடுத்து வைத்திருக்கிறான். இவ்வாறு தடுத்து வைத்திருப்பது மனிதர்களின் மீதான அளவற்ற கருணையினாலும், நிகரற்ற அன்பினாலுமே என்று விவரித்து இறைமறை வசனங்கள் கூறகின்றன.

இவ்வசனத்தில் அன்பும், கருணையும் சேர்ந்தாற்போல் சொல்லப்பட்டாலும், கருணையைவிட அன்புக்கு ஒருபடி உயர்வுண்டு என்பதை வரும் நபிமொழிகளிலிருந்து விளங்குகிறோம்,

அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்துவிடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தன்னுடைய குட்டியைவிட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்கள்: (புகாரி 6000, முஸ்லிம் 5310, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத், தாரமீ)

தாயின் கால்களுக்கிடையில் விளையாடும் குட்டியை மிதித்து விடுவோமோ என்கிற உள்ளுணர்வில், உயிரினப் பிராணிகளும் கால்களை உயர்த்திக்கொள்வதும், தன் குஞ்சுகளுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என அன்னியப் பறவைகள் குஞ்சுகளின் அருகில் வந்தால் தாய்ப் பறவை சீறிப் பாய்ந்து போரிடுவதும் அன்பு எனும் பாசத்தினால் ஏற்படும் உள்ளுணர்வாகும். இது உயிரினங்களின் உறவினால் ஏற்படும் இயல்பு. அல்லாஹ் இரட்சகனாக இருப்பதால் மனிதர்களிடம் அன்பு செலுத்துவது இறைவனின் நியதி எனலாம்.
தாய்மையின் அன்புக்கு நிகராக எவரையும், எவற்றையும் ஒப்பிட்டுச் சொல்லிட இயலாது. தாயின் அன்பைவிட அடியார்கள் மீது அல்லாஹ் மிகுந்த அன்பு வைத்துள்ளான்:

(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது 'எங்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!' என்றார்கள். நாங்கள், 'இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது' என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப் (ரலி) நூல்கள்: புகாரி 5999 முஸ்லிம் 5315)

இறைவன் பூமியில் இறக்கிய நூறில் ஒரு பங்கு அன்பிற்கே உயிரினங்கள் உறவுகளிடம் இவ்வளவு அன்பு செலுத்துகின்றது என்றால் மீதம் தொண்ணூற்றொன்பது பங்கை தன்னிடம் வைத்திருக்கும் அல்லாஹ்வை நிகரற்ற அன்புடையவன் என்று சொல்லுவதே பொருத்தமாகும்.

கருணை

(நபியே) உம்மை அவர்கள் பொய்ப்பித்தால், ''உங்களுடைய இறைவன் விசாலமான கருணையுடையவன் என்றும், குற்றவாளிகளான கூட்டாத்தாரை விட்டும் அவனது தண்டனை தடுக்கப்பட மாட்டாது'' என்றும் நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 006:147)

''இறைவன் விசாலமான கருணையுடையவன்'' என்பதை ''இறைவன் விசாலமான அருளுக்குரியவன்'' என்றும் சொல்லலாம். அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், மிகப் பெரும் கருணையாளன் என்பதால், குற்றவாளிகளுக்கு அவன் அளிக்கவிருக்கும் தண்டனையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது என்பதையும் மேற்கண்ட வசனத்தின் வாயிலாக அறிவிக்கப்படுகின்றது. ஆகவே, குற்வாளியின் மீது நீதிபதிக்கு அன்பு ஏற்பட்டால் சட்டத்தை வளைப்பான் என்பது பூமியிலுள்ள நீதிபதிகளுக்குப் பொருந்துமேயன்றி, வானத்திலுள்ள தன்னிகரற்ற தனி நீதிபதி இறைவனுக்குப் பொருந்தாது.

...நிச்சயமாக உமது இறைவன் தண்டிப்பதில் தீவிரமானவன். மேலும், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்புடையோனுமாவான். (அல்குர்ஆன் 6:165)
பாவத்தை மன்னிப்பவனும், மன்னிப்புக் கோரலை ஏற்றுக் கொள்பவனும், தண்டிப்பதில் கடுமையானவனும், அருளுக்குரியவனுமாவான். அவனையன்றி வணங்கப்படத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை! அவனிடமே மீளுதல் உள்ளது. (அல்குர்ஆன் 040:003)

''அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்'' என்கிற இக்கருத்திலமைந்த ஏராளமான வசனங்களை இறைமறையில் காணலாம். இறைவன் தீர்ப்பளிப்பதில் மேலான நீதிபதி:
 
..தீர்ப்பளிப்போரில் நீ மிகச் சிறந்த தீர்ப்பளிப்பளிப்பவனாவாய்... (அல்குர்ஆன் 011:045) 

அல்லாஹ் தீர்ப்பளிப்போர்களிலெல்லாம் மிகச் சிறந்த தீர்ப்பளிப்பாளன் இல்லையா? (அல்குர்ஆன் 095:008)

இறைவனின் பண்புகள் அனைத்தும் அளவற்றவையே ஆனாலும் அவனது பண்புகள் அவனுடைய தீர்ப்புக்கு எவ்வித இடையூறாக அமையாது.
மனிதர்களிடையே எவ்வாறு அன்பு ஏற்படுகின்றதோ அதுபோல் மனிதர்கள் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நபிமொழி வலியுறுத்துகிறது.

''மக்கள் மீது கருணை காட்டாதவருக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) நூல்கள்: புகாரி 7376, முஸ்லிம் 4638,  திர்மிதீ, அஹ்மத்)

''என் மீது அன்பு செலுத்து''
''அல்லாஹ்வின் மீது அன்பு செலுத்துங்கள்'' என்று இஸ்லாம் எங்கும் கூறவில்லை என்பது சரியான புரிதல். ஏனெனில் ''அல்லாஹ் (எவ்வித) தேவையுமற்றவன்" (112:002) அன்பு, கருணை எதுவுமே அவனுக்குத் தேவையற்றதாக இருக்க அல்லாஹ்வின் மீது அன்பு செலுத்துங்கள் எனச் சொல்வதும் பொருத்தமாக இல்லை! - தேவையற்றவனுக்கு அன்பு தேவை இல்லை!. ஆனால் அல்லாஹ்வை நேசிக்க வேண்டும் என்று இறைமறை கூறுகின்றது:

அல்லாஹ் அல்லாதவர்களை (அவனுக்கு) இணையாளர்களாக எடுத்து அல்லாஹ்வை நேசிப்பது போன்று அவர்களை நேசிப்போரும் மனிதர்களில் உள்ளனர். ஆனால், நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் மிக உறுதியானவர்கள்... (அல்குர்ஆன் 002:165)

நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான்... (அல்குர்ஆன் 003:031)

அல்லாஹ்வை நேசித்தல் என்றால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றி இஸ்லாம் வழங்கியுள்ள வணக்க வழிபாடுகளை நிறைவேற்றி, இஸ்லாமின் வழிகாட்டல்படி வாழ்க்கை நெறியினை அமைத்துக் கொள்வதுமாகும். இவ்வாறு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவர்களை அல்லாஹ்வும் நேசிப்பான்.

விரிவஞ்சி இத்துடன் முடிக்கின்றோம்.

முழுமை பெற்ற ஆதாரம் அல்லாஹ்விடமே உள்ளது. (006:149)
(இறைவன் மிக்க அறிந்தவன்)

No comments: