Monday, July 30, 2007

கலாச்சார கேடுகள்.

மேற்கத்தைய கலாச்சாரம் பல நாடுகளை நாள்தோறும் சுரண்டிக்கொண்டே இருக்கிறது அத்தகைய நாடுகளில் துபாயும் ஒன்றாக மாறி விட்டதோ..? என்ற கவலையானது இங்கு இருக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கிறது. அத்துடன் விஞ்ஞான வளர்ச்சியினை காட்டிலும் கலாச்சார சீரழிவானது மேன் மேலும் வளர்ச்சியினை கண்டு விட்டது இந்நாட்டில், என்பது குறிப்பிடத்தக்கது. இது தான் என்று இல்லை மேற்கத்தைய கலாச்சார ஷைத்தான்கள் வார்த்தைகளால் எழுத முடியாத வடிவிலும், சொல்லால் கூற முடியாத வடிவிலும் இங்குள்ள ஒவ்வொருவரையும் மனதால் கெடுத்துக்கொண்டு இருக்கிறான்.

மேலே குறிப்பிட்ட செய்தினை மட்டும் இல்லை, குவைத் நாட்டில் நடைபெற்ற சம்பவத்தினையும் மேற்கொள்காட்டி அதே நாளிதழ் செய்தினை ஒன்றினை தந்து உள்ளது.

குவைத் நாட்டில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் மகனை கடத்திக்கொண்டு போய் கற்பழித்தாகவும், அவர்கள் எந்த நாட்டை சார்ந்தவர்கள் என்பதினையும், கற்பழிக்கப்பட்ட நபர் எந்த நாட்டை சார்ந்த என்பதினையும் அந்த நாளிதழ் தன்னுடைய செய்தியில் குறிப்பிடவில்லை. இந்த விசயத்தினை குவைத் நாட்டு அரேபிய நாளிதழான 'அல் ராய்' வெளியிட்டு இருந்தது. 'இவர்களுக்கு தண்டனையாக அந்நாட்டின் கீழ் நீதி மன்றம் 15 ஆண்டுகள் கொடுத்தது. ஆனால் அப்பீல்ஸ் நீதி மன்றம் அதை குறைத்து 7 ஆண்டுகளாக ஆக்கி உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதனை துபாயிலிருந்து வெளிவரும் ஆங்கில செய்திப்பத்திரிகையான 'Khaleej Times' குறிப்பிட்டு இருந்தது தன்னுடைய செய்திக்குறிப்பில். 

வளைகுடாவில், குறிப்பாக துபாயில் பல இலட்சக்கணக்கான இந்தியர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இந்தியாவில் உள்ள அனைத்து மொழி பேசும் பல மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் இங்கு வேலை முடிந்து அறைகளுக்கு வந்த பின் மன ஆறுதலுக்காக தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்து தம்தம் மாநில மொழி தொலைக்காட்சி தொடர்களை பார்க்கிறார்கள். ஆனால் இத்தொடர்களை பார்ப்பதால் மன ஆறுதல் கிடைக்கிறதா என்றால் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. ஏனெனில் இத்தகைய தொடர்கள் அனைத்து மனத்திற்கு வேதனையும், மன பாரத்தினையும், மன கஷ்டத்தினையும் தருவதாக இங்குள்ளவர்கள் கருத்தினை கூறுகிறார்கள்.

வன்முறை, ஆபாசம், காதல் என்ற கருத்தினை வலியுறுத்துவதாக உள்ள அளவில் தான் இத்தகைய இந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் இருக்கின்றன என்றால் மிகையாகாது. இவற்றினை பார்க்கும் இங்குள்ள இளைய சமுதாயமானது மிக விரைவில் கெடக்கூடிய வாய்ப்பினை நிச்சயமாக தருகின்றன. துபாயில் பல அனாச்சாரங்கள் நடைபெறுவதற்கும் இத்தகைய தொடர்களும் ஒரு காரணியாக உள்ளன. கலாச்சாரம், பண்பாடு என்பதனை தூக்கி ஏறிந்து விட்டு தான் இத்தகைய தொடர்கள் உள்ளன.

சில பேர்கள் குடும்பத்துடன் இங்கு வசித்து வருகிறார்கள். அவர்களும் தம்முடைய மனைவியுடனோ, குழந்தைகளுடனோ அமர்ந்து பார்க்க முடிய அளவில் ஆபாசங்கள் அதிகமாக இந்தியத் தொலைக்காட்சித் தொடர்களில் இருப்பதாகவும் கூறுகிறார்கள். மற்றும் இங்குள்ள பல அரேபியர்கள் இந்திய மொழிகளான தமிழ், மலையாளம், இந்தி ஆகியவற்றினை கற்றவர்களாகவும், மற்றும் பேசக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களும் இத்தகைய இந்தியத் தொலைக்காட்சித் தொடர்களையும் பார்க்கிறார்கள். அவர்களின் மனத்திலும் இப்படித்தான் இந்தியாவும் இருக்கும் என்றும் எண்ணுகிறார்கள்.

அத்துடன் பல தொடர்கள் விளம்பரத்தினை மையமாகக் கொண்டுதான் இருக்கிறதே ஒழிய கதையினை மறந்தும் மறைத்தும் விடுகிறார்கள். 40 மற்றும் 50 பாகங்கள் கொண்ட தொடராக இருந்தாலும் அதில் என்ன கதை உள்ளது என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் ஒன்றும் இல்லை எனலாம். மற்றும் எல்லா தொடர்களும் கூடுமான வரையில் ஒரே கருத்தினை தான் மையமாகக்கொண்டு இருக்கிறது. பார்க்கக்கூடியவர்களை எரிச்சல் உண்டு பண்ணக்கூடிய அளவில் தான் நம்முடைய நாட்டின் தொலைக் காட்சித் தொடர்கள் உள்ளன. எந்த அலை வரிசையை பார்த்தாலும் அத்தகைய எண்ணம் தான் வரும்.

வளைகுடாவில் இருந்துக்கொண்டு இந்தியா தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு தொலைபேசியிலும், கடிதம் மூலமாகவும், Message மூலமாகவும் பணத்தினை வீண் விரயம் செய்த எத்தனையோ பேர்களை நாம் கண் கூடாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். இவற்றிற்கு தமிழ் சகோதரர்கள் மட்டும் அல்ல, மற்ற மாநில சகோதரர்களும் அடிமையாகி விட்டார்கள் என்ன செய்வது.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு சில நல்ல விசயங்கள் இருந்தாலும்; மட்டரகமாக வரும் தொலைக்காட்சி தொடரினால் அத்தகைய நல்ல விசயங்களும் அழிந்து போய் விடுகிறது. மேலைநாட்டு ஆதிக்கம் ஊடகத்துறையில் அதாவது முக்கியமாக தொலைக்காட்சியினை அதிகமாக ஆதிக்கம் செய்து விட்டதால் இத்தகைய மனத்தினை கெடுக்கும் நிகழ்ச்சிகளும் சரியே, மற்றும் தொடர்களும் குறைவே குறையாது.

வன்முறை, ஆபாசம் என்பது தொலைக்காட்சியினை மட்டும் விட்டு வைக்காமல் இந்திய திரைப்படத்துறையையும் ஆக்கிரமிப்பு செய்து விட்டது என்பதற்கு அண்மையில் மலேசியாவில் நடந்த சின்ன ஒரு நிகழ்ச்சியே சான்றாகும். வேகமாக சென்று கொண்டிருந்த ரயில் முன்பாக பெண்மணி ஒருவர், தனது நான்கு குழந்தைகளுடன் பாய்ந்ததினை மேற்கொள்காட்டி, மலேசியாவில் சிறுபான்மையாக வாழ்ந்து வரும் தமிழர்கள், திரைப்படங்களை பார்த்து காப்பியடித்து தற்கொலை செய்வது சமீபகாலமாக மலேசியாவில் அதிகரித்து வருவது குறித்து மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ஜி.பழனிவேல் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இந்திய திரைப்படங்களில் தற்தொலை காட்சிகள் நீக்கப்பட வேண்டும் கோரியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பல்கலைக்கழகத்தில் உளவியல் துறைப்பேராசிரியராக பணிபுரியும் டாக்டர். மணியம் அவர்களும் இத்தகைய சம்பத்தினை பற்றி கண்டித்து, இந்திய திரைப்படத் துறையினை சார்ந்தவர்கள் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், நல்ல திரைப்படங்களை மக்களுக்கு தரவேண்டுமென்றும் வலுயிறுத்தி உள்ளார்.

இனிவரும் காலத்திலாவது தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளார்ளும், திரைப்பட தயாரிப்பாளர்களும் கவனம் மேற்கொண்டால் நம்முடைய சந்ததியினரை இது போல் உள்ள ஷைத்தானை விட்டு பாதுகாத்துக்கொள்ளலாம்.

நன்றி: இதுதானிஸ்லாம்.காம்

No comments: