Thursday, June 21, 2007

அமெரிக்க ஜனநாயகத்தின் அறுவடைகள்.

அமெரிக்க ஜனநாயகத்தின் அறுவடைகள் ஈராக்கிய அகதிப் பெண்கள் பாலியல்
தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ள அவலம் கத்தரின் ஸோப்வ் - மே 29 2007. உம்மு ஹிபாவின் 16 வயது மகள் பக்தாதில் இருந்த போது அதிகாலையில் எழுந்து காலைத் தொழுகையை நிறைவேற்றி தனது அன்றைய பாடங்களை ஆர்வத்துடன் மீட்டும் ஒரு துடிப்பான மங்கை. ஹிஜாப் அணிந்து பாடசாலைக்கு செல்லும் அந்தப் பெண்ணின் கல்வி ஆர்வமும் எதிர்காலக் கனவுகளும் இன்று அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களால் சிதறடிக்கப்பட்டு விட்டன.

மராபா டமஸ்கசின் ஒரு புறநகர்ப் பகுதி. இரவு விடுதிகள், சூதாட்ட கிளப்புகளுக்கு பேர்போன இடம். இன்றைய சிரியாவில் விபச்சாரத்தின் கேந்திர நிலையமாக வேகமாக மாறி வருகிறது. அமெரிக்க ஆக்கிரமிப்பின் நெருக்கு வாரங்கள் மென்மேலும் அதிகரித்து உயிர் வாழ்வதே கேள்விக்குறியான போது பக்தாதை விட்டுப் புலம் பெயர்ந்து டமஸ்கசை நோக்கி வந்தவர்கள் தாம் உம்மு ஹிபா குடும்பத்தார். முற்றிய நீரிழிவு நோயாளியான வயதான தந்தை தாயுடன் உடைந்து நொறுங்கிய தனது எதிர்காலக் கனவுகளுடனும் ஹிபா இங்கே தஞ்சமடைந்திருக்கிறாள்.

கையறுநிலையிலிருக்கும் அவர்களுக்கு 'கைகொடுக்க' வந்த ஒருவர் ஹிபாவை மராபா நகரின் விபச்சாரத்துக்கு பேர் போன நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் இரவு விடுதி ஒன்றில் சேர்த்துவிடப் போவதாகக் கூறினார். 'நாங்கள் பெருமை மிக்க பாரம்பரியத்தை உடையவர்களாக இருந்தோம்'. ஹிபாவின் குரல் அந்த கிளப்பின் அதிரும் ஒலிபெருக்கிகளினூடாக பரிதாபமாக ஒலிக்கிறது. மெல்லிய இளஞ்சிவப்பு நிற அரைகுறை ஆடை உடலை இறுகத் தழுவியிருக்க துவண்டு வெளியில் தெரியும் அவளது தோள்கள் மீது மேடை மீதெறியும் வண்ண விளக்குகள் ஒளியைப் பாய்ச்ச அந்த 16 வயதான பருவ மங்கை ஹிபா டசின் கணக்கான அவள் போன்ற பெண்களுடன் ஆடிக்கொண்டிருக்கிறாள். கீழிருந்து உம்முஹிபா (தாய்) செய்வதறியாது பார்த்திருக்க, பெருந்திரளான பார்வையாளர்களுக்கு மத்தியிலிருந்து நடுத்தர வயதுடைய ஒருவன் பாய்ந்து மேடையேறி அவர்களுடன் கலந்து ஆடுகிறான். அசிங்கமான களியாட்டம் தொடர்கிறது. 'போர் எல்லாவற்றையும் எங்களிடமிருந்து பறித்தெடுத்துவிட்டது'. 'எங்கள் மானத்தையும் சேர்த்துத் தான்'. அவளது தாய் உம்மு ஹிபாவின் குரல் கம்மியபடி வெளிவருகிறது.

டமஸ்கசில் வசிப்போருக்கு ஈராக்கிய பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுவது இனிமேலும் மறைத்துவைக்க முடியாத ஒரு விடயமாக மாறி வருகிறது. மத்திய டமஸ்கசில் கூட பாதையோர பழரச, சன்விச் கடைகளுக்கருகில் கூடி நிற்கும் கும்பல்களுக்கிடையில் நடமாடும் 'தரகு'முகவர்கள் சமயத்தில் 'தேவையுடையோரை' அணுகி சர்வ சாதாரணமாக 'ஆள் பிடிப்பது' நடக்கிறது. அரபுக்களின் கலாசாரத்தில் நினைத்துப் பார்க்கவும் முடியாத விடயங்கள் இன்று சாதாரணமாக மாறிவிட்டன. கன்னி மரியாளின் அருள் அற்புதங்கள் தெரிந்ததாக நம்பப்படும், கிறிஸ்தவர்களை மட்டுமன்றி முஸ்லிம் யாத்திரிகர்களையும் கவரும் வரலாற்றுப் புகழ் பெற்ற கிறிஸ்தவ மடாலயம் அமைந்துள்ள ஸயித்நயா நோக்கிச் செல்லும் சாலை இந்த மராபா பிரதேசத்தினை ஊடறுத்துச் செல்கிறது.
யாத்திரைக்கான இந்நெடுஞ்சாலை ஈராக் பெண்களின் பாலியல் தொழில் பேட்டையாக வேகமாக மாறிவருவதாக டமஸ்கசைச் சேர்ந்த டாக்சி டிரைவர்கள் சொல்கின்றனர்.

விபசாரத்தில் ஈடுபடும் பெண்களில் டீன்ஏஜ் வயதினரும் உள்ளனர். அனைவரும் ஆக்கிரமிக்கப்பட்ட ஈராக்கிலிருந்து அகதிகளாக இடம் பெயர்ந்து வந்தவர்கள். வேறு தொழில்கள் கிடைக்குமென்ற ஆவலில் வந்து வஞ்சிக்கப்பட்டு இந்த படுகுழியில் விழுந்தோர் கணிசமாக உள்ளனர். பெரும்பாலானோரின் வாக்குமூலம் இப்படித்தான் உள்ளது. 'எமது குடும்பங்களை வாழவைக்க வேறு தொழில் மார்க்கங்கள் இங்கு இல்லை'. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஈராக்கை அடுத்துள்ள சிரியா போன்ற நாடுகளில் நிதர்சனமாக வெம்பி வெடித்து நாறும் சமூக அவலங்களின் சாட்சிகளாக இந்தப் பெண்கள் இருக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் தானிகரின் அறிக்கையின்படி சுமார் 1.2 மில்லியன் ஈராக் அகதிகள் சிரியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். சிரிய அரசாங்கத் தகவல்களின்படி இத் தொகை 1.2 மில்லியனை விடவும் அதிகமாகும். ஈராக் அகதிகளின் படு மோசமான பொருளாதார நிலை பற்றி மேலும் விளக்கும் ஐ.நா. அறிக்கை 'பெண்களின் குறிப்பாக கட்டிளமைப் பருவத்தினரின் பொருளியல் கையறு நிலையும் பட்டினியும் அவர்களை இரகசியமாகவோ அல்லது ஏனைய குடும்ப அங்கத்தவரின் அனுசரணையுடனோ பாலியல் தொழிலாளர்களாக மாற்றியுள்ளது' எனத் தெரிவிக்கிறது. பெரும்பாலும் குடும்பத்திலுள்ள மூத்தோர் தமது பொறுப்பிலுள்ள 'பாலியல் பண்டத்தின்' தரகர்களாய் மாறியுள்ள அவலத்தையும் விபரித்துச் செல்கிறது அறிக்கை.

அரச சார்பற்ற நிறுவனங்களின் நிவாரணப் பணியாளர்கள் இடம் பெயர்ந்து வந்துள்ள ஆயிரக் கணக்காக ஈராக்கியப் பெண்கள் சிரியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகின்றனர். தொடராகவும் தீவிரமாகவும் ஈராக்கில் அதிகரித்து வந்துள்ள வன்முறைகள் பெண்கள் தலைமையிலான பெருமளவிலான குடும்பங்களையும் மற்றும் ஆண் துணையின்றி கைவிடப்பட்ட ஏராளம் பெண்களையும் சிரியாவில் குவித்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. 'சிரியாவில் தஞ்சமடைவோரில் அனேகம் பெண்கள். தாமே குடும்பப் பாரத்தைச் சுமக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் அவர்களது குடும்பத்திலுள்ள ஆண்கள் பெரும்பாலும் கொல்லப்பட்டுவிட்டனர் அல்லது கடத்திச் செல்லப்பட்டு விட்டனர்'. என்று கூறுகிறார் இந்த அகதிகளைப் பராமரிக்கும் பணியில் இருக்கும் டமஸ்கஸ் திருக்குடும்ப கன்னியர் மடத்தைச் சேர்ந்த அருட்சகோதரி மேரி க்ளோட்.

மேலும் அவர் கூறுகையில் 'மசாகென் பர்சஹ் என்ற டமஸ்கஸ் புறநகர் பகுதியில் தமது கொன்வன்ட் நடத்திய ஆய்வு ஒன்றில் சிறிய அளவிலான அந்த சுற்றுவட்டாரத்தில் பெண்களை குடும்பத் தலைவர்களாகக் கொண்ட 119 குடும்பங்கள் வசிக்கின்றன. பிழைப்பதற்கான தொழிலொன்றைத் தேடி வாழ்நாளில் முதன் முதலாக வெளியே வரும் பெண்களாக அவர்கள் இருக்கின்றனர். ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டத்தின் விகிதம் மிக அதிகம் இருக்கும் ஒரு நாட்டில் அவர்களது உடலை விற்பதைத் தவிர வேறு எந்த வேலை வாய்ப்பையும் அவர்களால் பெற முடியாதிருப்பது கசப்பான உண்மையாகும். 'ஒன்றாக வாழும் மூன்று மைத்துனிகளை (ஈராக்கில் உயிரிழந்த மூன்று சகோதரர்களின் மனைவியர்)சமீபத்தில் நான் சந்திக்க நேர்ந்தது. ஒருவர் மாறி ஒருவராக அவர்கள் இரவில் 'தொழிலுக்கு' செல்கின்றனர். கிடைப்பதை தமக்கிடையில் பகிர்ந்து கொண்டு தமது குழந்தைகளை வளர்க்கின்றனர். இவ்வாறு அவர்களின் அவலங்கள் முடிவின்றித் தொடர்கின்றன. அமெரிக்கா ஈராக்கை 2003ல் ஆக்கிரமித்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் விபச்சாரம், குறிப்பாக ஈராக்கிய பெண்களை வைத்து நடத்தப்படும் விபச்சாரம் சிரியாவில் இன்னும் 'பேசப்பட முடியாத' விடயமாகவே இருக்கின்றது.

போதைப் பொருள் பாவனையைப் போல பாலியல் தொழிலும் பேசுபொருளாக முடியாதவாறு சிரிய அரசின் பொது பண்பு நல சட்டங்கள் கட்டுப்பாடு விதித்திருந்தன. ஊடகங்களும் இவ்வாறான விடயங்களை அடக்கி வாசிக்க வேண்டியிருந்தது. நிலைமை விபரீதமாகப் போய்க்கொண்டு இருப்பதால் இறுதியில் அரசாங்கமும் தனது மௌனத்தைக் கலைக்க வேண்டி ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறார் திருமதி டியட்ரன் குன்தார் என்ற யு.என்.எச்.சீ.ஆர் டமஸ்கஸ் அலுவலக அதிகாரி.

பெண்கள் - குறிப்பாக பாடசாலை செல்லும் வயதுடைய சிறுமிகள் தொடர்பாக நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். பலவந்தமாக அவர்கள் இந்த சகதியில் வீழ்த்தப்படுகின்றனர். சிலர் இதற்காகவே சிரியாவுக்குள் கடத்தி வரப்படுகின்றனர். இப்போது அதிகாரிகள் காட்டும் வெளிப்படையான சிரத்தையை இது விடயத்தில் ஒரு பாரிய முன்னேற்றமாகவே கருதவேண்டியுள்ளது என்கிறார் அவர்.

பெண்கள் உரிமைக்காக குரலெழுப்பும் சிரியாவைச் சேர்ந்த மவூனா அஸாத் எனும் வழக்கறிஞர் 'இராக்கிய அகதிகள் விடயத்தில் சிரிய அரசாங்கம் போதிய அக்கறை காட்டுவது போலத் தெரியவில்லை. இருந்தும் முடியுமானதைச் செய்வதற்கு சிரிய அரசு தயாராகவே உள்ளது. அரபு நாடுகளிலிருந்து சிரியாவுக்குள் பிரவேசிக்கும் அரபுக்களுக்கு வீசா தேவையில்லை. இருந்தும் 19 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட சிரியா சடுதியாக வந்து குவியும் இலட்சக் கணக்கானோரின் விவகாரங்களைக் கையாள்வது என்பது சிரம சாத்தியமான விடயம்தான் என்கிறார்.

'பாலியல் தொழில் மட்டுமல்ல இங்குள்ள பிரச்சினை. எங்கள் பாடசாலைகள் நிரம்பி வழிகின்றன. உணவுப் பொருட்கள், போக்குவரத்து, மற்றும் சேவைகளுக்கு முன்பை விட அதிகம் செலவிட வேண்டியுள்ளது. இந்த நெருக்கடியைக் கையாள்வதற்கான கட்டமைப்பு வசதிகள் இன்றி நாம் திண்டாடுகிறோம். இப்பெண்களை அனுப்பி வைப்பதற்கான சுகாதார மற்றும் மகளிர் நலன்புரி நிலையங்கள் பற்றாக்குறையாக இருக்கின்றன. ஈராக் மென்மேலும் மோசமடைந்து வரும் நிலையில் இருப்பதால் இந்த பெண்களை அங்கு திருப்பி அனுப்புவதை எண்ணிப் பார்க்கவும் முடியாதிருக்கின்றது'.புறநகர்ப் பிரதேசங்களில் பெரும்பாலும் கசினோக்களிலேயே பாலியல் தொழில் நடைபெறுகிறது. சூதாட்டம் பெரிதாக இல்லாதிருப்பதால் கசினோ என்ற 'இடக்கரடக்கலில்' பாலியல் வியாபாரம் களை கட்டுகிறது.

அல்ஹாமியில் இருக்கும் அல்ரவாபி என்ற கிராக்கியான இரவு விடுதியில் ஈராக்கிய பாணியிலான (தீம் ஷோ) காட்சிகள் அரங்கேறுகின்றன. வாடிக்கையாளர்கள் கொறிக்கும் பதார்த்தங்களை பரிமாறுவோர் சுமந்து திரிய, பத்து பேர் கொண்ட இசைக்குழு தனது வாத்தியங்களோடு களத்தில் இறங்க, கிளர்ச்சியைத் தூண்டும் குரலில் அரபியில் ஒருவர் அறிமுகப் படலத்தைத் தொடங்குகிறார். 'எல்லா மேடைகளிலும் பாயும் தேனருவி எல்லா இதயங்களையும் திருடுபவள் - கவர்ச்சித் தாரகை மரியா இதோ உங்கள் முன்னால்'. வாளிப்பான உடலுடைய ஒரு இளம் பெண் மேடையேறி சோக கீதம் இசைக்கிறாள்! 'ஈராக்கை விட எனக்கு வேறு தாயகம் இல்லை. நான் எனது முழங்கால்களால் ஊர்ந்து சென்றாவது ஈராக்கினை அடைவேன்'. மற்றும் நால்வர் தமது கூந்தல்கள் சுழலும் வண்ணம் தலையை சுழல வைத்து ஆடியபடி மேடையை சுற்றி வருகின்றனர். மேடையை நோக்கி பொருத்தப்பட்டிருக்கும் உமிழ் ஒளி அவர்களது அலங்காரங்களை பல வர்ணங்களில் காட்டுகிறது.

அல் ரவாபியின் வாடிக்கையாளர்கள் மரியாவை சலனமின்றி நோக்கியபடி கறுப்பு லேபல் விஸ்கியை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றனர். பாரம்பரிய பைப்பிலிருந்து இழுத்து அவர்கள் ஊதும் புகையினால் அந்த பிரமாண்டமான கூடம் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மரியா பாடி முடித்ததும் யாரும் கைதட்டவில்லை. மீண்டும் அவள் மைக்கை கையிலெடுத்து ஈராக் மீதான தன் போற்றுதலுரையைத் தொடர்கிறாள். அது யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை. எல்லார் பார்வையும் அவள் உடல் மீதே பதிந்துள்ளன. அவள் பக்தாதின் தோரா மாவட்டத்தைச் சேர்ந்தவள்.

சராசரியாக இப் பெண்கள் ஒரு நாளைக்கு 50 முதல் 70 டொலர்கள் வரை சம்பாதிக்கின்றனர். 'வியாபாரம்' இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் ஒரு பெண் குறைந்த பட்சம் ஐநூறு லீராக்கள் வீட்டுக்கு கொண்டு செல்லும்படி பார்த்துக் கொள்கிறோம். தன் பெயர் ஹஸன் என அறிமுகப்படுத்திக் கொள்ளும் விடுதி முகாமையாளர் ஒருவரின் வாக்குமூலம் இது. (சுமார் 10 யு.எஸ். டொலர்களுக்கு சமமானது). நாங்கள் அந்த மக்கள் மீது அனுதாபம் கொண்டவர்களாயிருக்கிறோம். வாழ்வாதரத்துக்காக அவர்கள் படும் பாடு எமக்கு விளங்குகிறது. ஹஸனின் பெருமிதக் குரல் இது. ஹிபாவின் தாய் பார்த்திருக்க ஹிபா வழிமொழிகிறாள். மெனேஜர் மிகவும் நல்லவர். ஒவ்வொரு வாடிக்கையாளரும் தரும் பணத்தை யாரும் திருடிச்செல்ல அவர் அனுமதிப்பதில்லை. உம்மு ஹிபாவின் குரல் அழுகையாக வெடித்து ஓலமாக வெளிப்படுகிறது.

'வளைகுடா நாடுகளில் இருந்து வருவோருக்கு இரையாக்கவா எமது பிள்ளைகளைப் பொத்திப் பொத்தி வளர்த்தோம்?'சபார் ரெஸ்டுரன்ட் ஒன்றில் பணிபுரியும் ஒரு சிரிய வாலிபன். அங்கிருக்கும் க்ளப்பில்தான் ஹிபா ஆடுகிறாள். அவர்களது பிரதான வருமானம் குடிவகைகள் விற்பனையில் கிடைப்பது. இந்த ஈராக்கியப் பெண்கள் கிளப்பின் வருமானம் கருதி வாடிக்கையாளருடன் இருக்குமாறு தூண்டப்படுகிறார்கள். சமீப காலமாக மலிவாகக் கிடைக்கும் 'ஈராக்கிய பாலியல் பண்டங்கள்' மத்திய கிழக்கின் விபச்சார மையமாக சிரியாவை மாற்றியிருக்கின்றன என்ற கூற்று மிகைப்படுத்திய ஒன்றல்ல.

சபர் கூறுகிறான். எமது விடுதியின் கார் பார்க்கினை நோக்குங்கள். பாதிக்கும் மேற்பட்ட கார்கள் சவுதி அரேபிய இலக்கத் தகடுகளைக் கொண்டவை. டமஸ்கசிலிருந்து ஜோர்தான் ஊடாக சுமார் ஆறு மணித்தியாலப் பயணம்தான் சவுதி போர்டருக்கு. மதுவுக்கும் கிளப்புகளுக்கும் பெரிதாக கட்டுப்பாடுகள் இல்லாத சிரியாவில் ஈராக் பெண்களை வைத்து நடத்தும் புதிய வியாபாரமும் சேர்ந்து கொள்ள மத்திய கிழக்கின் மலிவான வார இறுதி களியாட்ட மையமாக சிரியா புதிய உருவம் எடுத்துள்ளது.

நன்றி: இதுதானிஸ்லாம்.காம்

8 comments:

உண்மைத்தமிழன் said...

மிக கொடுமையான விஷயம்.. போரோ, பயங்கரவாதமா எது தாக்கினாலும் முதலில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான். இது தொன்று தொட்டு இருந்து வரும் விஷயங்கள்.. உலக அரசியலில் முதலாளித்துவம் பெருகி அதன் விளைவாய் சிறுபான்மையினரான ஏழை மக்களை விளிம்பு நிலையையும் தாண்டி உயிரோடு புதைப்பதுதான் இன்றைய உலக அரசியல்.. இதற்கு தலைமை வகிக்கும் அமெரிக்காதான் மத்திய கிழக்கு நாடுகளின் இன்றைய அனைத்து சீரழிவுகளுக்கும் காரணம். என்ன செய்வது? அந்தந்த நாடுகளில் இருக்கும் தலைவர்களுக்குக்கூட நாளை நாம் ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்ற கொள்கைதான் பெரிதாக உள்ளது. நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக உண்மையாக உழைக்கின்ற தலைவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அனைவரும் அரசர்களாக மாறிவிட்டதால் அங்கே குடியானவர்களின் எண்ணிக்கை கூடத்தான் செய்யும்.. வேறு வழியில்லை..

நிரம்ப புதிய தகவல்களை தொகுத்தளித்துள்ளீர்கள்.. நன்றிகள்..

அபூ முஹை said...

உண்மைத் தமிழன் உங்கள் வருகைக்கும் கருத்தற்கும் நன்றி!

அடக்கு முறை கொண்ட ஆதிக்கக் கரங்கள் நீளும் இடங்களிலெல்லாம் இதே கதிதான். இதற்கு அமெரிக்காவும், ஈராக்கும் விதிவிலக்கல்ல.

Unknown said...

அரபு நாடுகளில் தங்களது அந்த அநாச்சாரத்தை விதைக்கத்தான் அமெரிக்கர்கள் காலடியெடுத்து வைத்தனர். அவர்களின் வஞ்சகக் கனவுகள் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன ஒவ்வொன்றாய். இன்னும் வெட்கமில்லாமல் அமெரிக்க ஆக்ரமிப்பை நியாயப்படுத்துவோர் இங்கு ஏராளம்.

ஒரு சிறிய நாட்டில் அளவுக்கதிகமாக அகதிகள் வந்தால் அவர்களால் மட்டும் என்ன செய்ய முடியும்.
பல புதிய தகவல்களுக்கு நன்றி. கையறு நிலை. வெறிகொண்டவர்கள் வீழ இறை துணையையே நாடுவோம்.

Anonymous said...

கையறு நிலை என்பது இது தானா?
கண்கள் கலங்குகின்றன.
கை, கால்கள் பரபரக்கின்றன.

ஆனால் என்ன செய்ய?

"ஒவ்வொரு காலகட்டத்திலும், அநியாயத்திற்கு எதிராக போராடும் ஒரு சிறு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்" என்ற நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி மட்டுமே நினைவில் வருகின்றது.

இவைகள் அனைத்திற்கும் சம்பந்தப்பட்டவர்கள், அவர்கள் அரக்க ஏகாதிபத்தியத்திற்கு துணை போகும் அரபு ஆடம்பரஜீவிகளாக இருந்தாலும் கூட நிச்சயம் பதில் சொல்லியே தீர வேண்டும்.

எம் சகோதரிகளுக்கு மனவல்லமையையும், எதிர்த்துப் போராடும் திறனையும் கொடுக்க இறைவனை வேண்டுகின்றேன்.

இறை நேசன்.

அபூ முஹை said...

சுல்தான் மற்றும் இறைநேசன் உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள்!

லொடுக்கு said...

//இதற்கு தலைமை வகிக்கும் அமெரிக்காதான் மத்திய கிழக்கு நாடுகளின் இன்றைய அனைத்து சீரழிவுகளுக்கும் காரணம். என்ன செய்வது? அந்தந்த நாடுகளில் இருக்கும் தலைவர்களுக்குக்கூட நாளை நாம் ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்ற கொள்கைதான் பெரிதாக உள்ளது. நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக உண்மையாக உழைக்கின்ற தலைவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அனைவரும் அரசர்களாக மாறிவிட்டதால் அங்கே குடியானவர்களின் எண்ணிக்கை கூடத்தான் செய்யும்.. வேறு வழியில்லை..//

உண்மைத்தமிழனை வழிமொழிகிறேன்.

அபூ முஹை said...

லொடுக்கு உங்கள் வருகைக்கு நன்றி!

பிறைநதிபுரத்தான் said...

உணர்ச்சிபூர்வமான உங்களின் ஆக்கத்திற்கு நன்றி.
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் முஸ்லிம்களின் அவல-இழி நிலைக்கு - அமெரிக்க-பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும், இஸ்ரேலையும் குறைசொல்லியே காலத்தை தள்ளப்போகிறோம்.

"ஒவ்வொரு காலகட்டத்திலும், அநியாயத்திற்கு எதிராக போராடும் ஒரு சிறு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்" என்ற நபி(ஸல்)யின் பொன்மொழி - அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளில் 'பொய்மொழி' யாகி - சிறுசிறு குழுக்களக பிரிந்து தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு கல்வியிலும்-அறிவியலிலும் 'ஏற்கனவே' பின்னடைந்து கிடக்கும் சமுதாயத்தை போட்டிபோட்டுக்கொண்டு இன்னும் பின்னுக்கு தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டுக்குள்ளேயே குழுச்சன்டைகள் பெருகிவருகிறது சமீபத்திய உதாரணம், பாலஸ்தீனத்தில் ஹமாஸ்-ஃபதா குழு மோதல். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்தானே

'உம்மத்' என்ற உணர்வு - முஸ்லிம்களிடம் எப்பொழுது வருகிறது தெரியுமா? அமெரிக்காவிடமும் - இஸ்ரேலிடமும் - அடிவாங்கிய பிறகு - குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்கும்போது மட்டும்தான். துராதிருஷ்ட வசமாக அந்த எண்ணமும் சமீபகாலங்களில் மங்கி வருகிறது.