Tuesday, September 26, 2006

ஹிந்த்(ரலி)பற்றிய உண்மைச் செய்திகள்.

ஹிந்த் (ரலி) அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை தழுவிய நிகழ்ச்சி திரிக்கப்பட்டிருந்தது. இது பற்றி சென்ற பதிவில் எழுதியிருந்தோம். ஹிந்த் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய செய்தி அவர் தனியொருவராக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நிகழ்ச்சியல்ல. மாறாக, நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்டபோது மக்காவாசிகள் இஸ்லாம் மார்க்கமே உண்மை மார்க்கம் எனப் புரிந்து இஸ்லாத்தைத் தழுவினார்கள். அந்த செய்தியின் உண்மை நிலை இதுதான்...

அல்லாஹ் இஸ்லாமை ஓங்கச் செய்து, நபியும் முஸ்லிம்களும் மக்காவை வெற்றி கொள்ளும்படி செய்தான். இதைப் பார்த்த மக்காவாசிகள் இஸ்லாமே உண்மை மார்க்கம், வெற்றி பெற இஸ்லாமைத் தவிர வேறு வழியில்லை என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டனர். எனவே, இஸ்லாத்தை ஏற்று நபி(ஸல்) அவர்களிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் (பைஆ) செய்வதற்கு ஒன்று கூடினர்.

நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலைக் குன்றுக்கு மேல் அமர்ந்து கொண்டு இதற்காக தயாரானார்கள். கீழே உமர் (ரலி) அவர்கள் அமர்ந்து கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்களிடமிருந்து இஸ்லாமிய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். தங்களால் இயன்ற அளவு செவி மடுப்போம் கட்டுப்படுவோம் என மக்கள் ஓப்பந்தம் செய்தனர்.

'அல்மதாரிக்' என்ற நூலில் வருவதாவது: நபி (ஸல்) அவர்கள் ஆண்களிடம் ஒப்பந்தம் பெற்ற பின்பு, பெண்களிடம் வாங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஸஃபாவின் மீதும், அதற்குக் கீழே உமர் (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தனர். நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு விஷயமாகக் கூற அதனை உமர் (ரலி) அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்நேரத்தில் அபூ ஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்தார் உஹத் போரில் வீரமரணம் எய்திய ஹம்ஸா (ரலி) அவர்களின் உடலை சின்னா பின்னமாக்கிய தனது செயலுக்கு நபி (ஸல்) அவர்கள் என்ன செய்வார்களோ என்று அஞ்சியதால் தன்னை முழுதும் மறைத்துக் கொண்டு வந்தார்.

நபி (ஸல்) அவர்கள் ''நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டீர்கள் என்று எனக்கு வாக்குத் தர வேண்டும்'' என்று கூற, உமர் (ரலி) அவர்கள் பெண்களுக்கு அதை எடுத்துரைத்தார்கள். அடுத்து, ''நீங்கள் திருடக் கூடாது என்றார்கள். அதற்கு ''அபூ ஸுஃப்யான் ஒரு கஞ்சன் நான் அவருடைய பொருளில் கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாமா?'' என்று ஹிந்த் (ரலி) வினவினார். ''நீ எதனை எடுத்துக் கொண்டாயோ அது உனக்கு ஆகுமானதே'' என்று அபூ ஸுஃப்யான் கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் இவர்களின் உரையாடலைக் கேட்டு புன்னகை புரிந்து ''கண்டிப்பாக நீ ஹிந்த் தானே'' என்றார்கள். அதற்கவர் ''ஆம்! நான் ஹிந்த் தான் சென்று போன என்னுடைய பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வும் தங்களைப் பொறுத்துக் கொள்வான்'' என்று கூறினார்.

நபி (ஸல்): ''நீங்கள் விபச்சாரம் செய்யக்கூடாது''

ஹிந்த் (ரலி): ''ஒரு சுதந்திரமானவள் விபச்சாரம் செய்வாளா?''

நபி (ஸல்): ''உங்கள் பிள்ளைகளை நீங்கள் கொல்லக்கூடாது''

ஹிந்த் (ரலி): நாங்கள் எங்கள் பிள்ளைகளை நன்றாக வளர்த்தோம், அவர்கள் பெரியவர்களானதும் நீங்கள் அவர்களைக் கொன்று குவித்தீர்களே! என்ன நடந்தது என்று உங்களுக்கும் அவர்களுக்கும் தான் தெரியும்''

உமர் (ரலி) அவர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து மல்லாந்து விழுந்தார். அதைக்கண்டு நபி (ஸல்) அவர்களும் புன்னகைத்தார்கள். ஹிந்த் (ரலி) இவ்வாறுக் கூறக் காரணம்: பத்ரு படைக்களத்தில் அவருடைய மகன் ஹன்ளலா இப்னு அபூ ஸுஃப்யான் கொல்லப்பட்டிருந்தார். அடுத்து..

நபி (ஸல்): ''நீங்கள் அவதூறு கூறலாகாது''

ஹிந்த் (ரலி): ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவதூறு கூறுவது மிகக் கெட்ட பண்பாகும். நீங்கள் நல்லவற்றையும் நற்குணங்களையுமே எங்களுக்கு கூறுகிறீர்கள்''

நபி (ஸல்): ''நீங்கள் நல்ல விஷயங்களில் எனக்கு மாறு செய்யக் கூடாது''

ஹிந்த் (ரலி): ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! தங்களுக்கு மாறுபுரியும் எண்ணத்தில் நாங்கள் இங்கு அமர்ந்திருக்கவில்லை''

இந்நிகழ்ச்சிக்குப் பின் வீடு திரும்பிய ஹிந்த் (ரலி) வீட்டினுள் வைத்திருந்த சிலைகளைப் பார்த்து ''நாங்கள் இதுவரை உங்களால் ஏமாற்றப்பட்டிருந்தோம்'' எனக் கூறியவாறு அவற்றை உடைத்தெறிந்தார். (மதாரிகுல் தன்ஜீல் என்ற நூலிலிருந்து, ரஹீக்)

(மேலான செய்தி, பத்ரு போர்க் களத்தில் ஹிந்த் (ரலி) அவர்களின் தந்தை உத்பாவும் கொல்லப்பட்டிருந்தார்)

மேற்கண்ட செய்தியைப் படிக்கும் எவருக்கும், ஹந்த் (ரலி) அவர்கள் பலவந்தமாக இஸ்லாத்தில் சேர்க்கப்பட்டார் என்பதற்கோ, வேறு வழியில்லாமல் நிர்ப்பந்தமாக இஸ்லாத்தைத் தழுவினார் என்பதற்கோ எள்ளளவும், எள் முனையளவும் சந்தேகம் ஏற்படாது, அறியாமை நிறைந்தவர்களைத் தவிர.

ஹிந்த் (ரலி) அவர்கள் கூறிய ஒவ்வொரு வாசகங்களும், இஸ்லாத்தை களங்கப்படுத்தி விடலாம் என தனது விமர்சனத்தில் கயமைத்தனத்தை மேற்கொள்பவர்களின் செவிட்டில் அறைந்தாற் போல் அமைந்தள்ளது. நபி (ஸல்) அவர்களிடம் உறுதி பெற்று தம்மை இஸ்லாத்தின் இணைத்துக் கொண்ட ஹிந்த் (ரலி) அவர்கள் வீடு சென்றதும் வீட்டிலிருந்த சிலைகளை உடைத்தெறிந்தது அவர் ஓரிறைக் கொள்கையை மனப்பூர்வமாகவே ஏற்று இஸ்லாத்தைத் தழுவினார் என்பதைப் பறைசாற்றுகிறது.

இந்த உண்மையான செய்தியை தனது கற்பனையையும், கயமைத்தனத்தையும் கலந்து, நேசகுமார் இப்படித் திரித்து எழுதியிருக்கிறார்...

//இதில், தமக்கு அங்கீகாரம் கிட்டவேண்டும் என்பதற்காக முந்தய நபிமார்களின் வழியில் தாம் வருவதாக தெரிவித்தார், அப்போதைய சிந்தனாவாதிகள் மத்தியில் ஏற்பட்டிருந்த சில கருத்துக்களை தாம் உள்வாங்கி அதை கடவுளின் கருத்தாக முன்வைத்தார், அங்கீகாரம் வேண்டி சமூக ஒழுங்கீணங்களுக்கெதிராக பிரச்சாரம் செய்தார். இதன் நல்ல உதாரணம் - ஹிந்தாவுடன் அவருக்கு நிகழ்ந்த உரையாடல். அபூ சு·பியானின் மனைவியான ஹிந்தா, மக்கா நகரை முஸ்லிம் படை கைப்பற்றியவுடன் வேறு வழியின்றி முஸ்லிமாக மாற நேர்ந்தது. அப்போது முஸ்லிமாவதற்கு இந்திந்த உறுதிமொழிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முகமது சொல்வார். விபச்சாரம் செய்யக் கூடாது என்றவுடன் ஹிந்தா கேட்பார் - சுதந்திரமான எந்தப் பெண்ணாவது விபச்சாரம் செய்வாளா என்று. குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்றவுடன் - என் குழந்தைகளையெல்லாம்தான் நீங்கள் கொன்றுவிட்டீர்களே என்று முகமதுவிடம் வேதனையுடன் சொல்வார்(இப்படி அவர் சொல்லும்போது சஹாபாக்கள் (நபித்தோழர்கள்) எக்காளமாகச் சிரிப்பர்).// -

- நடந்த சம்பவம், எப்படித் திரிப்பட்டிருக்கிறது என்பது வாசகர்கள் கவனத்திற்கு.
********************************

நபி (ஸல்) அவர்களை, இறைத்தூதர் என்ற அந்தஸ்தில் வைத்து, ஹிந்த் (ரலி) வழங்கி வந்த மேலானக் கண்ணியம் பற்றி கீழ்காணும் செய்தியில் விளங்கலாம்.

ஹிந்த் பின்த் உத்பா, (நபி (ஸல்) அவர்களிடம்) வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (நான் இஸ்லாத்தை எதிர்த்து வந்த பொழுது) பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் இழிவடைவதையும் விட உங்கள் வீட்டார் இழிவடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்து வந்தது. (நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட) பிறகு இன்று பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் கண்ணியம் பெறுவதையும் விட உங்கள் வீட்டார் கண்ணியம் பெறுவதே எனக்கு அதிக விருப்பமானதாக மாறிவிட்டது' என்று கூறினார்கள்.

(இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (இந்த உன்னுடைய விருப்பம்) இன்னும் (அதிகமாகும்)'' என்று பதிலளித்தார்கள். ஹிந்த் பின்த் உத்பா, 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் மிகவும் கருமியான ஒருவர். எனவே, அவருக்குரிய பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல் எடுத்து) எங்கள் பிள்ளை குட்டிகளுக்கு நான் உண்ணக் கொடுத்தால் என் மீது குற்றமாகுமா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நியாயமான அளவிற்கு எடுத்(து உண்ணக் கொடுத்)தால் குற்றமில்லை'' என்று பதிலளித்தார்கள். (புகாரி, 3825)

அன்புடன்,
அபூ முஹை

3 comments:

இப்னு பஷீர் said...

தெளிவான விளக்கத்திற்கு நன்றி அபூமுஹை அவர்களே! ஹிந்த்(ரலி) இஸ்லாமை தழுவிய இந்தச் சம்பவம் 'ரஹீக்' என்னும் நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நூலிலும் இடம் பெற்றிருக்கிறது.

சவூதி தமிழன் said...

அழகான விளக்கங்கள் சகோ அபூமுஹை.

//மேற்கண்ட செய்தியைப் படிக்கும் எவருக்கும், ஹந்த் (ரலி) அவர்கள் பலவந்தமாக இஸ்லாத்தில் சேர்க்கப்பட்டார் என்பதற்கோ, வேறு வழியில்லாமல் நிர்ப்பந்தமாக இஸ்லாத்தைத் தழுவினார் என்பதற்கோ எள்ளளவும், எள் முனையளவும் சந்தேகம் ஏற்படாது, அறியாமை நிறைந்தவர்களைத் தவிர.//

வேசம் போடும் அந்த நபர் அறியாமையினால் எல்லாம் இப்படி எழுதவில்லை, தமக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்றுகிறார். இன்னும் சில காலம் 'உள்வாங்கு'வார். மீண்டும் பழைய குருடி கதையாய் கடைச்சரக்கை விரிப்பார்.

இறைவனின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு ஈமானின் உறுதி அதிகரிக்கவே செய்யும்.

இந்த போலிகளை மேன்மேலும் அடையாளம் காட்டுங்கள். நன்றி!

வாசகன் said...

முஸ்லிம்கள் தம் வரலாற்றை முழுமையாக அறிந்துக்கொள்ளாமல் இருப்பதும், ஒரு சமூகமே அவதூறுகளுக்கு ஆளாக்கப்படும் போதும் மவுனமாக இருப்பதும், எதையும் தன்னிச்சைப்படி களங்கப்படுத்தி, சமூக நீரோட்டத்தை குழப்பி(ஆதாய)நீரருந்த நினைக்கிறவர்களுக்கு வசதியாகிவிடுகிறது.

அவர்களின் கெட்ட எண்ணத்தில் உங்களுடைய அருமையான விளக்கங்கள் 'மண்ணை'ப்போட்டு விடுகின்றன. தொடருங்கள். நன்றி.