Tuesday, February 14, 2006

இஸ்லாமும் - அடிமைகளும்.

அமெரிக்காவும் மேற்கத்திய தீவுகளும் கைப்பற்றப்பட்ட பின்னர் முன்னூற்று ஐம்பது ஆண்டுகள் அடிமை வியாபாரப் போக்குவரத்துக்கள் நடந்து வந்தது. ஆப்பிரிக்காவின் கடற்கரை ஓரங்களுக்கு அதன் உட்பகுதியிலிருந்து கருப்பர்கள் பிடித்து வரப்பட்டு கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்டார்கள். எனவே அந்தக் கடற்கரைகள் ''அடிமைக் கடற்கரைகள்'' என்றே அழைக்கப்பட்டன.

ஒரே ஒரு நூற்றாண்டிற்குள் (1680லிருந்து 1786வரை) குடியேற்ற நாடுகளுக்காக பிரிட்டானியர் அடிமைப்படுத்திய மனிதர்களின் எண்ணிக்கை, ஆங்கிலேய நூலாசிரியர்களின் கணக்குப்படி இரண்டு கோடி ஆகும். ஓராண்டு காலத்தில் 1790ல் மட்டும் 75,000.

அந்த அடிமைகளை ஏற்றுமதி செய்ய பயன்படுத்தப்பட்ட கப்பல்கள் சிறியதாகவும், அசுத்தமானவையாகவும் இருந்தன. அந்த ஆப்பிரிக்க மக்கள் கப்பலில் சரக்கு வைக்கப்படும் பகுதியில் ஆடு மாடுகளைப் போல் அடைக்கப்பட்டார்கள். அவ்வறைகளின் கூரையைத் தொடுமளவிற்கு ஒருவர் மீது ஒருவராகத் திணிக்கப்பட்டார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் மரத்தாலான சிறு அறைகளில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார்கள். அதில் அவர்களால் அசையக்கூட முடியாது. ஏனென்றால் அச்சிற்றறைகளின் அகலம் 18 அங்குலம்தான். இவ்வாறு ஒருவரின் தலைக்கு மேல் இன்னொருவராக அடைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு முறையான உணவோ, நோய் அல்லது காயம் ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சைகளோ வழங்கப்படவில்லை.

அடிமைத் தொழிலுக்கும் கட்டாய வேலைக்கும் பிடிக்கப்பட்ட மனிதர்களில் 20 சதவிகிதத்தினர் ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்க கடற்கரைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே மரணமடைந்ததாக மேலை நாட்டு நூலாசிரியர்கள் சொல்லுகிறார்கள்.

அடிமை வியாபாரம் உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளால் பிடிக்கப்பட்ட மனிதர்களின் மொத்த எண்ணிக்கை பத்து கோடியாகும். என்று கணக்கிடப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அடிமை முறையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்று ஓயாது வாய்கிழிய அவதூறு பேசுவோரின் வரலாறுதான் இது.

''உலகில் அடிமை முறையை ஒழித்தவர்கள் நாங்கள் தாம்'' என்று மேலை நாட்டினர் பெருமைபட்டுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு இந்த எண்ணம் தோன்றியது சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான். அதற்கு முன்னால் மேற்கத்திய வல்லரசுகள் ஆப்பிரிக்காவில் பெருமளவில் நுழைந்து அங்கு வாழ்ந்த சுதந்நிர மனிதர்களைப் பிடித்து அடிமைப்படுத்தி தங்கள் புதிய குடியேற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள் என்பதை நினைவு கூர்ந்து இனி இஸ்லாத்தின் பார்வையில் அடிமைகளைப் பார்ப்போம்.

இஸ்லாத்தின் பார்வையில் அடிமைகள்.

//அடிமைகளை வைத்துக் கொள்,அடிமை முறை இருக்கட்டும் ஆனால் அழைக்கும் போது அடிமை என்று அழைக்காதே என்பது அடிமை முறையை அழிக்க உதவுமா. யாரும் யாருக்கும் அடிமை இல்லை, அனைவரும் சம உரிமை படைத்தவர்கள், அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறுவதுதானே சரியானதாக இருக்கும்.இஸ்லாம் அடிமை முறைக்கு முற்றிலும் எதிரானது அல்ல என்றும் ஒரு வாதம் இருக்கிறது.//

இஸ்லாம்தான் உலகில் அடிமை முறையை உருவாக்கியது என்பது தவறானக் கருத்தாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யத் துவங்கிய காலத்தில் அந்த மக்களிடையே அடிமை வழக்கமிருந்தது. அதற்கும் முன்னும் இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களின் காலத்திலும் அடிமை முறைகள் இருந்திருக்கிறது என்றும் வரலாற்றில் பார்க்க முடிகிறது.

ஆகவே அடிமை முறையை இஸ்லாம் உருவாக்கவில்லை என்பது தெளிவு. ஏற்கெனவே இருந்த அடிமை வழக்கத்தை இஸ்லாம் அங்கீகரித்து - அடிமைகளை விடுதலை செய்வதை வலியுறுத்தி - அம்முறையைப் படிப்படியாக குறைக்கத் தூண்டியது. எந்த அளவுக்கு தூண்டியது என்றால் - அடிமைகளை விலை கொடுத்து வாங்க வசதிபெற்ற - நபித்தோழர்கள் விலை கொடுத்து வாங்கி பிறகு விடுதலை செய்து, அடிமைகளை சுதந்திர மனிதர்களாக ஆக்கினார்கள். எனவே அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் இஸ்லாத்தில் கருத்து வேறுபாடு இல்லை.

தவிர்க்க முடியாத காரணத்தினாலேயே போர் கைதிகளை மட்டும் அடிமைகளாக்கிக் கொள்வதை இஸ்லாம் அனுமதித்திருக்கிறது. போரில் சிறைப் பிடித்தக் கைதிகளை அடிமைகளாக்கிக் கொள்வது அன்றைய சமூகங்களின் வழக்கமாகவும் இருந்தது. போரில் பிடிபட்ட கைதிகள் விஷயத்தில் நான்கு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

1. பிடிபட்டக் கைதிக்குப் பகரமாக பணயத்தொகைப் பெற்றுக்கொண்டு அந்த கைதியை விடுதலை செய்தார்கள்.
2. போர் கைதிக்கு பகரமாக போர்கைதியை மாற்றிக்கொண்டார்.
3. போர் கைதிகளை அடிமைகளாக - அடிமைச் சந்தையில் விற்று விடுவார்கள்.
4. போர் கைதிகளிடம் வேலையை வாங்கிக்கொண்டு அதற்கு பகரமாக அவர்களை பராமறித்துக் கொண்டார்கள்.

இதுதான் அன்றையப் போர்களில் பிடிபட்ட கைதிகளின் நிலையாக இருந்தது. இதில் முஸ்லிம்கள் மட்டும் பிடிபட்ட போர் கைதிளை .//யாரும் யாருக்கும் அடிமை இல்லை, அனைவரும் சம உரிமை படைத்தவர்கள், அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும்// என்று சொல்லியிருக்க வேண்டும் என்பது கவ்வைக்குதவாத, வாதமட்டுமல்ல, முஸ்லிம்களை கருவறுக்கச் செய்யும் வழியுமாகும்.

எதிரிகள் மட்டும் போர் கைதிகளை அடிமையாக்கிக் கொள்ளலாம், ஆனால் முஸ்லிம்கள் பிடிபட்டப் போர் கைதிகளை ''நீயும் நானும் சமம்'' என்று விடுதலை செய்தால், விடுதலைப் பெற்றவன் மீண்டும் போருக்கு வரத்தான் செய்வான். இப்படி ஒரு படுபாதக நிலை இருப்பதோடு, ''நீயும் நானும் சமம்'' என்று போர் கைதிகளை உட்கார வைத்து விருந்தும் போட முடியாது. இப்படி நியாயமான காரணங்களால் போர் கைதிகளை அடிமையாக்கிக் கொள்வதை மட்டும் இஸ்லாம் அனுமதிக்கிறது.

சுதந்திரமான தனி மனிதனின் உரிமையில் தலையிட்டு, அவனின் உரிமையை நசுக்கி அடிமையாக்கி தொழில் செய்வதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை மாறாக, அதை வன்மையாகக் கண்டிக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
''மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்' என்று அல்லாஹ் கூறுகிறான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்து விட்டு அதில் மோசடி செய்தவன். இன்னொருவன்,
சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்..
மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக்கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்'' (நபிமொழி புகாரி 2227)

அடிமைகள் பற்றி திருக்குர்ஆன் இரு வசனங்கள்:.

4:36.மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள். அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்.
நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.

24:32.இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான .உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.

//இஸ்லாம் அடிமை முறைக்கு முற்றிலும் எதிரானது அல்ல என்றும் ஒரு வாதம் இருக்கிறது.//

அடிமைகள் பற்றிய வாதம் மட்டுமிருந்தால் இப்பதிவில் பின்னூட்டலாம் நன்றி!

5 comments:

சிறில் அலெக்ஸ் said...

அடிமைகளை வைத்திருப்பதும் சில இனத்தினரையே அடிமைகளாக நடத்துவதும்(இந்தியாவில்) எல்லா அமூகங்களிலும் இருந்து வந்த ஒரு வழக்கமாகத்தான் தெரிகிறது.

பைபிளிலும் அடிமைகளை அன்பாக நடத்துங்கள் எனக் கூறப்பட்டிருக்கிறதே தவிர அதைக் களையுங்கள் எனக் கூறப்படவில்லை.

மத நூல்களும், வரலாறும் கால கட்டத்திற்கு ஏற்ப விவரிக்கவும், பொருளாக்கப்படவும் வேண்டும். வெறும் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளைக் கொண்டு அர்த்தம் கற்பிப்பது பலனலிக்காது.

பைபிளில் அடிமைத்தனம் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது? சுட்டி கேழே.

http://www.religioustolerance.org/sla_bibl2.htm

ரவி ஸ்ரீநிவாஸ் said...

http://www.brandeis.edu/projects/fse/Pages/islamandslavery.html

அபூ முஹை said...

திரு ரவி சிரினிவாஸ்
நான் எந்த மொழிக்கும் எதிரானவன் இல்லை. நீங்கள் சொல்லவரும் கருத்தை - விளக்கத்தை தமிழில் எழுதுவதை விரும்புகிறேன். இதை ஒரு வேண்டுகோளாக எடுத்துக் கொள்ளுங்கள்.

தமிழில் தட்டச்சுவதற்கு சமயம் கிடைக்கும் போது தமிழில் உங்கள் விளக்கத்தை வையுங்கள் அவசரமில்லை நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

நல்லடியார் said...

//The Qur’an does not explicitly condemn slavery or attempt to abolish it.//

ரவி ஸ்ரீனிவாஸ்,

உங்களுக்கு தெளிவான ஞானமில்லாத விசயங்களை மேற்கோள் காட்டும் முன், மேற்கோள் காட்டப்படும் செய்தி உண்மையா என்பதை சற்று உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் சுட்டியுள்ள தளத்தில் இஸ்லாம் அடிமைகளை விடுவிப்பதை ஊக்குவிக்கவில்லை என்பது போல் சொல்லப்பட்டுள்ளது. இது எந்தளவு உண்மை என்பதை அறிய குர்ஆனை தீர்க்கமாக ஆராய வேண்டியதில்லை. குறைந்தபட்ச உலக அறிவு இருந்தாலே போதும்.

எந்த இஸ்லாமிய நாட்டிலாவது அடிமைகளை வைத்துக் கொள்வதை குர்ஆன் அங்கீகரிக்கிறது என்றோ அல்லது இன்றும் முஸ்லிம்கள் அடிமைகளை வைத்திருக்கிறார்களா என்று பார்த்தாலே போதும்.

மேலும், ஜகாத் கொடுக்கப்படும் பணத்தை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைப் பார்க்கும் போது அதில் "அடிமைகளை விடுதலை செய்வதற்காக" என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

9:60 (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும் கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன்; மிக்க ஞானமுடையோன்.

இதுவன்றி, ஒருவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டு அதை முறித்தாலோ, அல்லது நோன்பை முறித்தாலோ இது போன்ற குற்றங்களுக்குப் பரிகாரமாக வசதியுள்ளவர்கள் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டினார்கள்.

ஒப்பந்த அடிப்படையில் ஃடிமைகள் விடுதலையாவதற்கும் ஏற்பாடு செய்தார்கள். உன்னை நான் விடுதலை செய்கிறேன். நீ உழைத்து சிறிது சிறிதாக எனது கடனை அடைக்க வேண்டும் என்று எஜமானர்கள் அடிமைகளிடம் உடன்படிக்கை செய்து விடுக்க ஆர்வமூட்டினார்கள்.

யாரேனும் அடிமையை விடுதலை செய்தால் அந்த அடிமை பிற்காலத்தில் சம்பாதிப்பவைகளுக்கு அவனது எஜமான் வாரிசாவார் என்று சட்டம் கொண்டு வந்து அடிமைகளை விடுவிக்கத் தூண்டினார்கள்.

பொதுவாக மனிதன் செய்யும் நல்லறங்களில் அடிமைகளை விடுவித்தல் சிறப்பானது எனவும் ஆர்வமூட்டினார்கள். தமது வாழ் நாளில் கணிசமான அளவுக்கு அடிமைகளின் எண்ணிக்கையைக் குறைத்தார்கள். (பார்க்க திருக்குர்ஆன் 4:3, 4:24,25, 4:36, 16:71, 23:6, 24:31, 24:33, 24:58, 33:50, 33:52, 33:55, 70:30)

//the status of each Muslim as a slave before God is a slavery that can never be abolished. //

இஸ்லாத்தின் பார்வையில் ஒவ்வொரு மனிதனும் "அல்லாஹ்வின் அடிமை" என்று சொல்லப்பட்டுள்ளதால், அடிமைத்தனத்தை இஸ்லாத்தில் ஒழிக்க முடியாது என்று சொல்லியுள்ள கட்டுரையாளரின் ஆராய்ச்சியை எண்ணி சிரிக்கத்தான் முடிகிறது.

நல்ல நகைச்சுவையான சுட்டி கொடுத்துள்ளீர்கள்.

அபூ முஹை said...

சிறில் அலெக்ஸ், உங்கள் வருகைக்கு நன்றி.

//பைபிளிலும் அடிமைகளை அன்பாக நடத்துங்கள் எனக் கூறப்பட்டிருக்கிறதே தவிர அதைக் களையுங்கள் எனக் கூறப்படவில்லை.//

அடிமை முறைகள் என்பது எல்லாக் காலங்களிலும் இருந்திருக்கின்றன. மதங்களால் அடிமை முறையைக் குறைக்கவும், அடிமைகளை நல்ல முறையில் நடத்தவும் தான் வழிகாட்ட முடிந்தது, அடிமை முறையை முற்றாக ஒழிக்க வழிகாட்டப்படவில்லை, காட்டவும் முடியாது. கடைபிடிக்க முடியாத ஒன்றை மதம் என்ற பெயரால் இஸ்லாம் மக்கள் மீது எப்போதும் திணித்ததில்லை.

//மத நூல்களும், வரலாறும் கால கட்டத்திற்கு ஏற்ப விவரிக்கவும், பொருளாக்கப்படவும் வேண்டும். வெறும் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளைக் கொண்டு அர்த்தம் கற்பிப்பது பலனலிக்காது.//

மன்னிக்கவும், இந்த உங்களின் கருத்தில் நான் உடன்படவில்லை, அடிமை முறைகள் அடிமைகள் என்ற பெயரிலேயே முற்காலங்களில் அடையாளப்படுத்தப்பட்டது. இப்போதும் அடிமைகள் இருக்கிறார்கள் வேறு பெயர்களில்.

தற்காலத்தில் போரில் ஈடுபட்ட இருநாடுகளுக்கிடையே போர் நிலை முடிவுக்கு வந்துவிட்டால். போர்க் கைதிகளை சண்டை போட்ட நாடுகள் பறிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் இந்த முறையை ஆரம்ப காலத்திலிருந்தே பின்பற்றி வந்திருக்கிறார்கள். எப்போது எதிரிநாடு போர்க் கைதிகளை இருதரப்பிலும் மாற்றம் செய்து கொள்ள முடிவு செய்கிறதோ அப்போதே எவ்வித தாமதமும் செய்யாமல் பறிமாற்றம் நிறைவேற்றப்படும் இது ஒருமுறை.

யுத்தத்தில் காணப்படும் இன்னொரு நிலை, ஒரு அரசாங்கம் வேரோடு அழிக்கப்பட்டால் வென்ற அரசின் கை மேலோங்குகிறது. போரில் தோல்வி கண்ட அரசுக்கு போர்க் கைதிகளை விடுவிக்க முடியாமல் போகிறது. இத்தகைய நிலைகளில் அவர்கள் அடிமைகளைவிட மோசமாக நடத்தப்படுகிறார்கள். ஆனால் அடிமைகள் என்று சொல்லிக் கொள்வதில்லை, போர்க் கைதிகள் என்று கெளரவமாகச் சொல்லப்படுகிறது அவ்வளவுதான்.

இரண்டாம் உலகப் போரில் தோற்ற ஜெர்மன் மற்றும் ஜப்பான் ராணுவங்களிலிருந்து ரஷ்யா சிறைப்பிடித்த ஆயிரக் கணக்கான போர்க் கைதிகளின் கதி என்ன ஆனது என்று யாரும் நமக்குச் சொன்னார்களா, அவர்களின் நிலைபற்றி விபரங்கள் இதுவரை யாரும் சொன்னதில்லை. அவர்களில் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள், எத்தனை ஆயிரம் பேர் ரஷ்யா சித்ரவதை முகாம்களின் கொடுமை தாங்காமல் மடிந்து போனார்கள் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. கட்டாயப்படுத்தி அவர்களிடம் வாங்கப்பட்ட வேலைகள், அடிமைகளிடம் வாங்கப்படும் வேலைகனைவிடக் கொடியவையாக இருந்தன.

முற்காலத்தில் எகிப்தில் ஆட்சி புரிந்தவர்கள் பிரமிடுகளைக் கட்டுவதற்காக அடிமைகளைக் கொடுமைப்படுத்தி வேலை வாங்கியதைவிட மிகவும் மோசமானதாக இருந்தது. அப்போர்க் கைதிகள் சைபீரியாவையும் மற்ற பின்தங்கிய பகுதிகளையும் வளப்படுத்துவற்காக நிர்ப்பந்தமாக வேலை வாங்கப்பட்டார்கள். இரத்தத்தை உறையவைக்கும் ஜீரோ டிகிரிக்கும் கீழான சீதோஷ்ண நிலையில், உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றி மேற்பார்வையாளர்களின் மிருகத்தனமான கொடுமைகளுக்கிடையில் நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை வாங்கப்பட்டது.

வன்கொடுமையாகக் கட்டாய வேலை வாங்கப்பட்ட இவர்கள் போர்க் கைதிகளா? அடிமைகளா?

எல்லாக் காலங்களிலும் போர்கள் நடந்து கொண்டுதானிருக்கும். போர்க் கைதிகளை பறிமாறிக் கொண்ட பின்னும் மீட்க முடியாத போர்க் கைதிகள் எதிரி நாட்டின் சிறையில் - சித்ரவதை முகாமில் அடைக்கப்படுவார்கள். மேற்பார்வையாளர்களின் கண்காணிப்பில் கட்டாயமாக வேலை வாங்கப்படுவார்கள். அவர்கள் போர்க் கைதிகள் என்று சும்மா சொல்லிக் கொண்டாலும் செயல் ரீதியாக சுதந்திரத்தை எதிர் நோக்கிய - சுதந்திர உரிமை இல்லாத அடிமைகளே!

தனி மனித சுதந்திர உரிமையில் தலையிட்டு மனிதனை, மனிதன் கடத்திச் சென்று வேறு மாநிலங்களில் விற்று விடுகிறான்.- நாம் அன்றாடம் செய்திகளாகக் கேட்கும் - பார்க்கும் சம்பவங்கள் - இது நாளையும் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.

சுதந்திரமான மனிதனை பலவந்தமாக விற்று, அந்த விலையை உண்ணுபவனை இஸ்லாம் வன்மையாகக் கண்டிப்பது, செயல் ரீதியாகவும் இக்காலத்திற்கு பொருந்தமாகவே இருக்கிறது. ஆகவே வார்த்தைகளைக் கொண்டு நாம் அர்த்தம் கற்பிக்கவில்லை, நீங்கள்தான் புரிந்துணர மறுக்கிறீர்கள்.

அன்புடன்,
அபூ முஹை